பிற-கட்டுரைகள்

முழுத்திரையில் காண, மேலே இடது பக்கம் உள்ள மூன்று கோடுகளைச் சொடுக்குக - பழைய நிலைக்கு மீண்டும் அதனையே சொடுக்குக.


1.இன்றைக்கும் வாழும் சங்க வழக்குகள்   11.பத்துப்பாட்டில் சொல்வள வளர்ச்சி வீதம் (RGV)
2.இன்றைக்கும் வாழும் சங்க வழக்காறுகள் 12.தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் - ஒரு புள்ளியியல் பார்வை
3.இன்றைக்கும் வாழும் சங்க வழக்கங்கள்  13.தொல்காப்பியமும் பிராமிப்புள்ளியும்-சங்க இலக்கிய மரபில்
4.காற்றால் கிளைக்குமா மாமரம்       14.தொல்காப்பியத்தின் கட்டமைப்பு 
5.அகலா மீனின் அவிர்வன          15.பிராமி எழுத்துகளும் தொல்காப்பியமும்-ஒரு மீள் பார்வை
6.சங்க இலக்கியத்தில் சொல்லாக்கம்      16.The axiomatic approach in tolkAppiyam
7.ஆசிரியப்பாக்களில் சீர் தளை பரவல் முறை - 17.Euclid nad tolkAppiyar
8.சங்கம்/சங்கம் மருவிய நூல்களில்       18.The Association between Sound and Meaning
  யாப்பு முறை - கணினி வழி ஆய்வு
9.வெண்பாக்களில் சீர் தளை பயின்று வரும்   19.Statistical Analysis of Some 
  முறை - ஒரு புள்ளியியல் ஆய்வு         Linguistic Features in Tamil Literature
10.திருக்குறளில் சீர்தளைக் கணக்கீட்டில்     20.Statistical study of word structure 
  சிக்கல்களும் கணினி வழித்தீர்வும்         in written Tamil

21.Mathematical Techniques in the Analysis of
   word patterns and usage using computers - Part I
22.Mathematical Techniques in the Analysis of
   word patterns and usage using computers- Part II

 
ஏதேனும் ஒரு 
தலைப்பைச் 
சொடுக்குக.
                       1.இன்றைக்கும் வாழும் சங்க வழக்குகள்	வழக்கு என்பது ஒரு சமூகத்தின் மொழி வழங்கும் முறை அல்லது சொல்லாட்சி (the usage in respect of words) எனலாம். 
இந்த வழக்குகளை இலக்கியத்திலும் பேச்சிலும் காணலாம். பேச்சில் காணப்படுவது பேச்சு வழக்கு. சங்க கால மக்கள் எவ்விதம் பேசினார்கள் என்று 
அறியமுடியாது. ஆனால் அவரின் எழுத்து வழக்கை அறியப் பல நூல்கள் இருக்கின்றன. சில வழக்குச் சொற்கள் அன்றைய சூழ்நிலையில் 
சில குறிப்பிட்ட பொருளைத் தாங்கி நிற்கின்றன. இன்றைய வழக்கில் அச் சொற்களைக் கலைச்சொற்கள் எனலாம். சங்க காலத்தில் இருந்த 
அத்தகைய சில வழக்குகள் இன்றைக்கும் வழக்கிலிருப்பதைக் காணமுடிகிறது. அவற்றில் சிலவற்றை இங்குக் காண்போம்.

 1. கூட்டாஞ்சோறு - கூட்டுணவு

	பல பேர் சேர்ந்து கூட்டாக ஆக்கி உண்ணும் சோறு என்பது இதன் பொருள். ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களில் கிராமப்புறங்களில் ஆரம்பப்பள்ளியில் 
படித்தவர்களுக்கு மிகவும் பரிச்சயமான சொல் இது. ஏதேனும் ஒரு நாளில் ஒரு வகுப்பில் உள்ள மாணவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் வீட்டிலிருந்து 
பல்வேறு சமையல் பொருள்களைக் கொண்டுவர, அவற்றை மொத்தமாகப் போட்டு ஒன்றாக ஆக்கி, அனைவரும் வட்டமாக அமர்ந்து சாப்பிடுவது 
அந்நாளையப் பள்ளிகளில் வழக்கம். ஊர்களில் ஒரே தெருவில் வசிப்பவர்களோ அல்லது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ கூட்டாஞ்சோறு ஆக்கி 
உண்பதுவும் வழக்கம்.

			

	மலைகளில் வாழும் வேடவர்கள் பலர் சேர்ந்து முயல் வேட்டையாடுவது வழக்கம். அவ்வாறாகப் பலர் சேர்ந்து முயல்களை வளைத்துப் 
பிடித்து, அவற்றைக் கொன்று சமைத்து, ஒன்றாக அமர்ந்து உண்ணும் ஒரு காட்சியைப் பெரும்பாணாற்றுப்படை என்னும் பத்துப்பாட்டு நூல் 
வருணிக்கிறது. 

	நெடும் செவிக் குறு முயல் போக்கு அற வளைஇ
	கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும்
	அரும் சுரம் . . (பெரும் 115 - 117)

	நீண்ட காதுகளைக்கொண்ட சிறிய முயல்களைப் (வேறு)போக்கிடம் இல்லாதவாறு வளைத்து, 
	கடுமையான கானவர் (அக்)காட்டில் (கூட்டாஞ்சோற்றைக்) கூடியுண்ணும் 
   	அரிய வழி 

	என்பது இதன் பொருள். கூட்டாஞ்சோற்றைச் சாப்பிடுதல் இங்கு கூட்டுண்ணுதல் என்று கூறப்படுகிறது.

	இதே நூலில் மற்றோர் இடத்தில் கூட்டுணவு என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது.

	வலிக் கூட்டுணவின் வாள் குடிப் பிறந்த
	புலிப் போத்து அன்ன புல் அணல் காளை - பெரும் 137,138

	என்ற அடிகளுக்கு, ‘வலிமையால் கொண்ட கூட்டாஞ்சோற்றை உடைய, வாள்(தொழிலே செய்யும்) குடியில் பிறந்த, புலியின் போத்தை 
ஒத்த, குறுந்தாடியினையுடைய தலைவன்’ ‘ என்பது பொருள். கூட்டாஞ்சோறு என்ற பேச்சுவழக்குச் சொல் கூட்டுணவு என்று இலக்கிய வழக்கில் 
பயன்படுத்தப்பட்டுள்ளது. 

	பலர் கூடி ஒரே உணவைத் தமக்குள் பரிமாறிக்கொண்டு உண்பதை கூட்டுண்ணல் என்பது போல், பல அறிஞர் கூடித் தமது கருத்துக்களைப் 
பரிமாறிக்கொண்டு உரையாடுவதுவும் கூட்டுண்ணல் என்று இலக்கியங்களில் கூறப்படுகிறது. மதுரைக்காஞ்சியின் கீழ்க்கண்ட வரிகள் இதனை விளக்கும்.

	தொல் ஆணை நல் ஆசிரியர்
	புணர் கூட்டுண்ட புகழ் சால் சிறப்பின்
	நிலம்தருதிருவில் நெடியோன் போல (மது 759 - 763)

	தொன்மையான மரபுகளையுடைய நல்ல ஆசிரியர்களின், 
	ஒன்றுசேர்ந்த கருத்துப்பரிமாற்றத்தை நுகர்ந்த புகழ் நிறைந்த சிறப்பினையுடைய,
	நிலந்தரு திருவில் பாண்டியன் என்னும் உயர்ந்தோனைப் போன்று ’ 

	என்பது இதன் பொருள். ஒரு சாதாரணப் பேச்சுவழக்குச் சொல், இலக்கிய வழக்குப் பெற்று, அதனினும் மேலாக, இலக்கிய நயத்துடன் 
ஒரு உருவகமாகவும் பயன்படுத்தப்பட்டிருப்பதை இங்குக் காண்கிறோம். பெரும்பாணாற்றுப்படையின் ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்னனார் 
சோழ நாட்டைச் சேர்ந்தவர். மதுரைக் காஞ்சியின் ஆசிரியர் மாங்குடி மருதனார் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர். எனவே, இச்சொல் ஒரு வட்டார 
வழக்குச்சொல்லாக மட்டும் இல்லாமல், தமிழ்நாடு முழுவதும் சங்க காலத்தில் வழக்கிலிருந்தது எனவும் காண்கிறோம். இதே சொல் இன்றளவும் 
பொருள் மாறுபாடின்றி அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்படுவதைக் காணும்போது என்றுமுள தென் தமிழ் என்ற சொல் எவ்வளவு 
உயிரோட்டமுள்ளது என உணர முடிகிறது.

 2. கால்கழுவுதல்

	கிராமப்புறங்களில், வீட்டிற்கு வெளியில் சென்று வருகிறவர்கள், ஒரு திறந்த வெளியில் வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தில் உள்ள நீரால் 
கை, கால், முகம் ஆகியவற்றைக் கழுவிய பின்னரே வீட்டிற்குள் நுழைவர். துக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருபவர்களும் அவ்வாறே செய்வர். 
இதனைப் பொதுவாகக் கால் கழுவுதல் என்று கூறுவர் (இரண்டு சொற்களுக்கும் நடுவில் இடைவெளி உண்டு). அதுபோல், கழிப்பிடம் சென்று 
வருபவர்கள் ஒரு மறைவிடத்தில் தங்களைச் சுத்தம் செய்துகொள்வதுவும் 
‘கால்கழுவுதல்' என்றே குறிப்பிடப்படும் (சொற்களுக்கு நடுவில் இடைவெளி இல்லை). 

	“வெளியே போனாயா, நன்றாகக் கால்கழுவிவிட்டு வா” என்று பெரியவர்கள் சிறியவர்களிடம் கூறுவது வழக்கம். இங்கு, 
‘வெளியே' என்பதுவும், ‘கால்கழுவு' என்பதுவும் இடக்கரடக்கலாக வேறு பொருளைக் குறிப்பதை அறிவோம். எனவே, கால்கழுவுதல் என்பது 
சுத்தப்படுத்தல் அல்லது அசிங்கங்களைக் கழுவி அகற்றுதல் என்ற கூடுதல் பொருளைப் பெறுகிறது. இப்போது இக்காட்சியைப் பாருங்கள்.

	திறந்த வெளியான ஒரு முல்லைக்காட்டில் மழை பெய்கிறது. அதனால் வெள்ளம் ஓடை	களில் பெருக்கெடுக்கிறது. அவ்வாறு வரும் 
முதல் வெள்ளம், ஓடையில் உள்ள கழிவுகளை அடித்துக்கொண்டு போகிறது. அசுத்தங்கள் அகற்றப்பெற்ற ஓடை வெள்ளம் வடிந்த பின் சுத்தமாகக் 
காட்சியளிக்கிறது. இதனைப் பார்த்த புலவர் கூறுகிறார்,

	புனல் கால்கழீஇய மணல் வார் புறவில் - மலைபடுகடாம் - 48 

	‘வெள்ள நீர் தூய்மைப்படுத்திய மணல்பரப்பு (ஆங்காங்கே) நீண்டுகிடக்கும் முல்லை நிலத்தின்கண்' என்பது இதன் பொருள். 
வெள்ள நீர் ஓடையின் அசுத்தங்களை அகற்றியது என்று கூற வந்த புலவர், இதனை, ‘வெள்ளம் ஓடைக்குக் கால்கழுவிவிட்டது' என்று கூறும் நயம் 
வியந்து போற்றற்குரியது.

	புனல் கால்கழீஇய பொழில்தொறும் - என்ற பெரும்பாணாற்றுப்படை(380) அடியிலும் இந்தப் பயன்பாட்டைக் காணலாம்.

	ஓர் இடக்கரடக்கல் சொல்லைக்கூட, இலக்கிய நயம்படக் கையாளும் சங்கப் புலவர்களின் திறம் எண்ணி எண்ணிப் பாராட்டற்குரியது. 
அன்றைய இலக்கிய வழக்கும் இன்றைக்கும் தமிழ்மக்களிடையே பேச்சு வழக்காகவும் இருப்பது விந்தையான செய்தி அன்றோ!

 3. சும்மாடு

	நமது புகைவண்டி நிலையங்களில் சுமைதூக்குவோர் ஒரு பெட்டியைத் தலையில் வைப்பதற்கு முன்னர், அப்பெட்டி அவர்கள் தலையில் 
அழுத்தாத வண்ணம், தங்கள் மேல்துண்டை வட்டமாகச் சுருட்டித் தலையில் வைத்து அதன் மேல் பொருட்களை வைப்பதைப் பார்த்திருக்கிறோம். 
வீதிகளில் காய்கறிக் கூடையைத் தலையில் சுமந்துகொண்டு விற்றுவருவோர்கூட இவ்வாறு வருவதைப் பார்த்திருக்கலாம். இதுவே சும்மாடு ஆகும். 
கிராமப்புறப் பெண்களானால், தம் முதுகில் நீளமாகத் தொங்கும் முந்தானையின் நுனிப்பகுதியை இவ்வாறு சுருட்டிச் சும்மாடாக வைத்துக்கொள்வர். 
இதனைச் சும்மாடு கட்டுதல் என்பர். இந்தச் சும்மாடு பண்டைக்காலத்தில் ‘சுமடு' என்று அழைக்கப்பட்டது. மோர் விற்கும் பெண் ஒருத்தி, முதலில் 
தயிர் மத்தைக் கயிற்றால் சுழற்றித் தயிர் கடைந்து, மேலாகப் பொங்கி வரும் நுரை போன்ற வெண்ணெயை எடுத்துக்கொண்ட பின்னர், மோரினை 
ஒரு பானையில் ஊற்றித் தூக்கிச் சும்மாட்டில் வைத்து மோர் விற்கப்போகும் அழகைப் பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர் இவ்வாறு விவரிக்கிறார்.

	புலிக் குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
	ஆம்பி வான் முகை அன்ன கூம்பு முகிழ்
	உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து
	புகர் வாய்க் குழிசி பூஞ் சுமட்டு இரீஇ
	நாள் மோர் மாறும் நன் மா மேனி - பெரும் 157 - 160

	‘புலி(யின் முழக்கம் போன்ற) முழக்கத்தையுடைய மத்தினை ஆரவாரிக்கும்படி கயிற்றை வலித்து, குடைக்காளானுடைய வெண்மையான 
முகைகளை ஒத்த குவிந்த முகைகளையுடைய, உறையினால் கெட்டியாகத் தோய்ந்த இளம் புளிப்பான தயிரைக் கடைந்து, வெண்ணையை எடுத்து, 
(தயிர்)புள்ளிபுள்ளியாகத் தெரிந்த வாயையுடைய மோர்ப்பானையை மெல்லிய சுமட்டின் மேல் வைத்து, அன்றைய மோரை விற்கும், நல்ல மாமை 
நிறத்தையுடைய மேனி' என்பது இதன் பொருள். 

			

‘சுமடு' என்ற இலக்கியச் சொல்லையே இன்றைய பேச்சு வழக்கில் ‘சும்மாடு' என்று அழைக்கிறோம்.

 4. பையப்பைய

	பைய என்ற சொல்லுக்கு மெதுவாக, மெல்ல என்பது பொருள். ஆனால் இது பையப்பைய மறைந்துகொண்டுவருகிறது. பையப்பைய 
என்பது இரட்டைக்கிளவியாகவும் வழக்கில் இருக்கும் ஒரு சொல்லாகும். ஆனால், இது இதே பொருளில் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரேயே நம் 
இலக்கியங்களில் பயின்று வந்துள்ளது. பையப்பைய என்பது அன்றைக்குப் பைபய என்று வழங்கப்பட்டுள்ளது.

	மிக்க ஒளிராது, ‘முணுக் முணுக்’ என்று எரியும் ஒரு விளக்கு விடியற்காலத்து வெள்ளி மீனைப்போல மெல்ல மெல்ல 
எரிந்துகொண்டிருக்கும் அழகைக் கூறவந்த ஒரு புலவர்,

	வைகுறு மீனின் பைபயத் தோன்றும் - பெரும் 318

	என்று கூறுகிறார். 
	
	சங்க காலப் பெண்டிர் சிலர் மனையின் பின்புறத்தில் பந்து விளையாடி மிகவும் களைத்துப்போய்விட்டார்களாம். இருப்பினும் அவர்களால் 
ஒன்றும் செய்யாமல் இருக்கமுடியவில்லை. எனவே புதுமணல் பரப்பிய முற்றத்தில் அமர்ந்து, தங்கள் கைவளையல்கள் ஒலிக்க, மிக்க மெதுவாகத் 
தட்டாங்கல் ஆடினார்களாம்.

	வான்தோய் மாடத்து வரிப்பந்து அசைஇ
	கைபுனை குறுந்தொடி தத்தப், பைபய
	முத்த வார் மணல் பொன் கழங்கு ஆடும் - பெரும் 333 - 335
	
	புதர்கள் நிறைந்த ஒரு காட்டுக்குள் ஒரு பாணர் கூட்டம் நடந்துசென்று-கொண்டிருக்கிறது. முன்னால் என்ன இருக்கிறது என்று தெரியாத 
அளவுக்கு மிக நெருக்கமாகச் செடிகொடிகள் பின்னிக்கிடக்கின்றன. எனவே அவர்கள் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு, பிடித்தபிடி விடாமல் 
புதர்களை விலக்கிக்கொண்டு மிக மிக மெதுவாக நடந்துசெல்லவேண்டும் அல்லவா? அவர்கள் எவ்வாறு செல்லவேண்டும் எனப் புலவர் கூறுகிறார்:
	
	கை பிணி விடாஅது பைபயக் கழிமின் - மலை 383

	இத்தகைய அழகு தமிழ்ப் பழஞ்சொற்கள் இனியும் மறைந்து தேய்ந்து போகாதிருக்க, அவற்றை நாமும் அன்றாட வாழ்வில் 
பயன்படுத்தவேண்டும் அல்லவா!

 5. எற்று → எத்து 

	எத்து என்றால் உதை என்று அகராதிகள் பொருள் தருகின்றன. ஆனால் இரண்டும் வெவ்வேறானவை. உதைத்தலுக்கும் எத்துதலுக்கும் 
என்ன வேறுபாடு? உதைத்தல் என்பது காலை மடக்கி, முன்பக்கம் தூக்கிப் பாதத்தால் விசையுடன் தாக்குதல். இதைப் பின்பக்கமாகவும் செய்யலாம். 
பால் கறக்கும்போது சில பசுமாடுகள் இவ்வாறு உதைக்கும். எத்துதல் என்பது காலைப் பின்பக்கம் இழுத்து காலின் முன்பகுதி அல்லது கால் 
கட்டைவிரலை ஒட்டிய பக்கவாட்டுப் பகுதியினால் விசையுடன் தாக்குதல். கால்பந்து விளையாட்டின்போது பந்தைத் தொலைதூரத்துக்கு அனுப்ப 
இவ்வாறு செய்வர்.

		

	இந்த எத்து என்பதன் இலக்கிய வழக்கு எற்று ஆகும். பாய்விரித்துச் செல்லும் ஒரு நாவாய், நடுக்கடலில் அடித்த பெருங்காற்றால் 
அலைக்கழிக்கப்படுவதை அப்படியே நம் கண்முன் கொண்டுவந்து காட்டுகிறார் மதுரைக்காஞ்சிப் புலவர் மாங்குடி மருதனார்.

	“பாய்மரத்தை இழுத்துக் கட்டிய வலிமையுள்ள கயிறுகளை அறுத்துப்போடுகிறது கடும் காற்று. பாய்களைப் படபடவென்று அடித்துக் 
கிழித்துப்போடுகிறது. கப்பல் நடுவில் நடப்பட்டுள்ள உயரமான பாய்மரம் அடியோடு சாய்கிற அளவுக்கு அதன் அடிப்பகுதியில் ஓங்கி ஒரு 
எத்துவிடுகிறது. இவ்வாறு சினங்கொண்ட கடுங்காற்று நாற்றிசையிலும் சுழன்று அடிக்கிறது” என்கிறார் புலவர். 

	வீங்குபிணி நோன்கயிறு அரீஇ இதைபுடையூ
	கூம்புமுதல் முருங்க எற்றிக் காய்ந்துஉடன்
	கடும்காற்று எடுப்ப - மது 376-378

	காற்று மோதிய மோதலில் பாய்மரம் அடியோடு சாய, சாய்ந்து விழுந்தது மட்டுமன்றி, ஓங்கி அடிக்கும் காற்றால் தள்ளப்பட்ட அந்தப் 
பெருமரம் சற்றுத் தள்ளிப் பறந்துபோய் விழுகிறது. இதனையே, மோதியதால் கீழே விழுந்த மரத்தைக் காற்று கால்பந்து போல எற்றித் 
தள்ளியதாகப் புலவர் கூறுகிறார். 

	மிகவும் அருமையான இந்தச் சொல் நுட்பமான பொருள் கொண்டது அல்லவா? இதனைத் தக்கவிதத்தில் பயன்படுத்தித் 
தக்கவைத்துக்கொள்வது நம் கடமை அன்றோ!

 6. அண்ணாந்து பார்

	நெடுவழியில் நடந்து செல்கிறோம். நல்ல பசி. எதிரே ஒரு மாமரம் தெரிகிறது. ஆசையுடன் அருகே சென்று ஏதாவது பழம் 
தொங்குகிறதா என்று கழுத்தைப் பின்புறம் நன்கு வளைத்து, முகத்தை மேலே உயர்த்திப் பார்க்கிறோம். “நல்லா அண்ணாந்து பார், உச்சியில 
ஒரு பழம் மாதிரி தெரியுது” என்று அடுத்தவர் சொல்கிறார். 

	இதேபோல்தான் ஒரு யானை மூங்கில்காட்டுக்குள் செல்கிறது. மூங்கில்களில் சில காலங்களில் நெல் போன்ற விதைகள் கொண்ட 
கதிர்கள் உருவாகும். இதனை நாம் மூங்கில்நெல் என்கிறோம். யானைகளுக்கு மூங்கில் நெல் என்றால் கொள்ளை ஆசை. ஆனால் 
இந்த மூங்கிலில் நெல்கதிர்கள் வெகு உயரத்தில் இருக்கின்றன. எனவே மிக அருகில் சென்று தன் துதிக்கையால் நெற்கதிர்களைப் பிடிக்க 
மிகவும் அண்ணாந்து பார்க்கிறதாம் யானை. 

	நெல்கொள் நெடுவெதிர்க்கு அணந்த யானை
	முத்துஆர் மருப்பின் இறங்குகை கடுப்பத்
	துய்த்தலை வாங்கிய புனிறுதீர் பெரும்குரல்
	நல்கோள் சிறுதினை --------- --------- - குறி 35 – 38

	இவ்வாறு அண்ணாந்து பார்த்து, துதிக்கையை நீட்டி வெகு நேரம் முன்றதால் களைத்துப்போன யானை, தன் முயற்சியைக் கைவிட்டு, 
களைத்துப்போன துதிக்கையைத் தன் கொம்புகளின்மீது போட்டு ஓய்வெடுக்கிறதாம். 

		

	அண்ணாந்த யானை என்பதே இங்கு அணந்த யானை எனப்படுகிறது. இன்னும் சாதாரணமாக நாம் பயன்படுத்தும் இச் சொல் ஈராயிரம் 
ஆண்டுகட்கு முன்னர் இலக்கிய வழக்கில் இருந்துள்ளது என்று அறியும்போது நம் தமிழ் என்றும் கன்னித்தமிழே என்று உறுதியுடன் கூறத் 
தோன்றுகிறது அல்லவா!

 7. குலவு

	எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே என்றார் பாரதியார். குலாவு என்பது அன்றைக்குக் குலவு எனப்பட்டது. 
நெருங்கி உறவாடு என்பது இதன் பொருள். பொய்யாகச் சண்டைபோடும் இரண்டு குட்டியானைகள் தம் துதிக்கைகளைப் பின்னிக்கொண்டு 
விளையாடும். அதைப் போலப் பின்னிக்கொண்டு கிடக்கின்றனவாம் விளைந்து முதிர்ந்த வரகுக் கதிர்கள்.	

	பொய்பொரு கயமுனி முயங்குகை கடுப்பக்
	கொய்பதம் உற்றன குலவுக்குரல் ஏனல்

	என்கிறது மலைபடுகடாம் (107-108). குரல் என்பது கதிர். ஏனல் என்பது வரகு. இந்த வரகுக் கதிர்கள் ஒன்றோடொன்று 
உரசிக்கொண்டும் பின்னிக்கொண்டும் இருப்பதை, அவை குலவிக்கொண்டு இருப்பதாகப் புலவர் நயத்துடன் கூறுகிறார். சங்க இலக்கியங்களோடு 
கூர்ந்து குலவினால் இது போன்ற எத்தனையோ சொற்கள் நம்முடன் கொஞ்சிக் குலாவும். 

		

 8.சுரித்த முகிழ்

	சுரி என்பது சுருங்கு அல்லது சுருக்கம் கொள் என்ற பொருள் தரும். யாராவது, முகத்தை வேண்டா வெறுப்பாக வைத்திருந்தால், 
“ஏன், மொகத்த சுரிச்சுகிட்டு வச்சிருக்க?” என்று பேசுவது இன்றும் வழக்கம். எப்போதும் முகத்தை அவ்வாறு வைத்துக்கொண்டிருக்கும் 
பெண்களைப் பற்றிக் கூறும்போது, “அந்த சுரிச்ச மூஞ்சிக்காரியா?” என்பதுவும் நம் வழக்கம்.

	மல்லிகை, முல்லை போன்ற மலர்களின் முகிழ் நிலை மொட்டுகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால், முசுண்டையின் 
மொட்டு சுருங்கிப்போய் இருக்கும். 

	சுரிமுகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய்
	
	என்கிறது மதுரைக்காஞ்சி (281). புலவரின் கூற்று எவ்வளவு உண்மை என்பதைப் படத்தில் காணலாம். 

		

 9. கொள்ள மீன் பிடிச்சேன் 

	நீர் வற்றிக் கண்மாய் அழியும் நேரத்தில் சகதியை அளைந்து மீன் பிடிப்பர். அப்போது மடி கொள்ளா அளவுக்கு மீன் பிடித்தோர், 
“இன்னக்கிக் கொள்ள மீன் பிடிச்சேன்” என்பார்கள். ஒரு பொருள் மிகுதியாக இருப்பின் அதனைக் கொள்ளை என்கிறது சங்க வழக்காறு.

	கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ - நற் 175/2
	வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி – பட். 26
	கோடு கடைந்தன்ன கொள்ளை வான்பூ – அகம் 331/2

	என்ற தொடர்களில் காணப்படும் கொள்ளை என்ற சொல் மிகுதியான, மிகுதி என்ற பொருளிலேயே கையாளப்பட்டுள்ளது. 
இந்த வழக்கு இன்றைக்கும் தமிழ் மக்களின் பேச்சு வழக்கில் காணப்படுவது தமிழின் இளமையைப் பறைசாற்றி நிற்கின்றதல்லவா!