பிற-கட்டுரைகள்

முழுத்திரையில் காண, மேலே இடது பக்கம் உள்ள மூன்று கோடுகளைச் சொடுக்குக - பழைய நிலைக்கு மீண்டும் அதனையே சொடுக்குக.


1.இன்றைக்கும் வாழும் சங்க வழக்குகள்   11.பத்துப்பாட்டில் சொல்வள வளர்ச்சி வீதம் (RGV)
2.இன்றைக்கும் வாழும் சங்க வழக்காறுகள் 12.தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் - ஒரு புள்ளியியல் பார்வை
3.இன்றைக்கும் வாழும் சங்க வழக்கங்கள்  13.தொல்காப்பியமும் பிராமிப்புள்ளியும்-சங்க இலக்கிய மரபில்
4.காற்றால் கிளைக்குமா மாமரம்       14.தொல்காப்பியத்தின் கட்டமைப்பு 
5.அகலா மீனின் அவிர்வன          15.பிராமி எழுத்துகளும் தொல்காப்பியமும்-ஒரு மீள் பார்வை
6.சங்க இலக்கியத்தில் சொல்லாக்கம்      16.The axiomatic approach in tolkAppiyam
7.ஆசிரியப்பாக்களில் சீர் தளை பரவல் முறை - 17.Euclid nad tolkAppiyar
8.சங்கம்/சங்கம் மருவிய நூல்களில்       18.The Association between Sound and Meaning
  யாப்பு முறை - கணினி வழி ஆய்வு
9.வெண்பாக்களில் சீர் தளை பயின்று வரும்   19.Statistical Analysis of Some 
  முறை - ஒரு புள்ளியியல் ஆய்வு         Linguistic Features in Tamil Literature
10.திருக்குறளில் சீர்தளைக் கணக்கீட்டில்     20.Statistical study of word structure 
  சிக்கல்களும் கணினி வழித்தீர்வும்         in written Tamil

21.Mathematical Techniques in the Analysis of
   word patterns and usage using computers - Part I
22.Mathematical Techniques in the Analysis of
   word patterns and usage using computers- Part II

 
ஏதேனும் ஒரு 
தலைப்பைச் 
சொடுக்குக.
                       2.இன்றைக்கும் வாழும் சங்க வழக்காறுகள்


	வழக்காறு என்பது ஒரு சமூகத்தின் நடைமுறையிலிருக்கும் பழக்க வழக்கங்கள். இந்த வழக்காறுகளைக் குறிக்கத் தனிச் சொற்கள் 
உருவாக்கப்படுகின்றன. இன்றைய வழக்கில் அச் சொற்களை மரபுத் தொடர்கள் எனலாம். சங்க காலத்தில் இருந்த சில வழக்காறுகளுக்கான 
மரபுத் தொடர்கள் இன்றைக்கும் வழக்கிலிருப்பதைக் காணமுடிகிறது. அவற்றில் சிலவற்றை இங்குக் காண்போம்.

 1. அன்னதோர் புன்மை - அப்படி ஒரு வறுமை!

	அளவுக்கு அதிகமான பசியினை, ‘அப்படி ஒரு பசி' என்று விவரிக்கிறோம். ‘சொல்லால் விளக்குவதற்குக் கடினமான' என்ற 
பொருளையும் இது தரும். மிகுந்த ஏழ்மையில் வாடும் ஒருவர்க்குப் பெருந்தொகை ஒன்று பரிசாகக் கிடைக்கிறது என்றால், “நேற்று மாலை 
அப்படி ஒரு பஞ்சம், காலையில் பார்த்தால் இவ்வளவு பணம்! கனவு போல் இருக்கிறது” என்று வியப்பார் இல்லையா. இப்படித்தான் சங்கப் புலவர் 
ஒருவர் வியக்கிறார். மிகுந்த ஏழ்மை நிலையில் ஒரு பாணர் மன்னர் ஒருவரை அணுகுகிறார். மன்னரின் தாராளக் கொடையால் அவரின் நிலை 
ஒரே இரவில் தலைகீழாக மாறிவிடுகிறது. காலையில் தானிருக்கும் செல்வச் சூழ்நிலையைப் பார்த்துப் பிரமித்துப்போய் இது கனவோ என்று 
மருண்டு போய் இவ்வாறு கூறுகிறார்.

	மனம் கவல்பு இன்றி மாழாந்து எழுந்து,
	மாலை அன்னதோர் புன்மையும், காலை
	கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும்
	கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப - பொருநராற்றுப்படை 96-98

	‘மனக்கவர்ச்சி (சிறிதும்) இல்லாமல், துயின்று (பின்னர் உணர்ந்து) எழுந்து, 
	(முந்திய) மாலையில் (என்னிடத்தில் நின்ற) அப்படி ஒரு சிறுமையும், காலையில் 
	கண்டோர் மருளுதற்குக் காரணமான வண்டுகள் மொய்க்கின்ற (புதிய)நிலையும், 
	கனவோ என்று கலங்கின என்னுடைய நெஞ்சு துணியும்படி' 

	என்பது இதன் பொருள். 

	‘அப்படி ஒரு சிறுமை' என்பதை அப்படியே இலக்கிய வழக்காக மாற்றி, ‘அன்னதோர் புன்மை' என்று கூறும் புலவரின் திறமும், 
சொல்லாட்சியின் நயமும் வியந்து பாராட்டற்குரியன. அத்தகைய வழக்காறு இன்றைக்கும் பேச்சுவழக்கில் இருப்பது மேலும் வியத்தற்குரியதன்றோ!

 2. அத்துணை நேர்வரும் - அவ்வளவு நேர்த்தி !

	‘அழகு! அழகு! அவ்வளவு அழகு!' என்று பேரழகைப் பாராட்டுவர். எத்தனை அடைமொழிகள் சேர்த்தாலும் முழுவதுமாக விவரிக்க 
முடியாத பேரழகையே ‘அவ்வளவு அழகு' என்று ஒரே சொல்லில் சொல்லிக்காட்டுகிறோம். இது இன்றைய பேச்சு வழக்கு. என்றுமுள தென் தமிழின் 
அன்றைய வழக்கில் இது எவ்வாறு சொல்லப்பட்டது எனக் காண்போம்.

	‘முத்தாலும், மாணிக்கத்தாலும், பொன்னாலும், அவ்வளவு நேர்த்தியாக அமைந்த ஒரு நகை சீர்குலைந்துபோனால் அதனை மீண்டும் 
சேர்த்துக்கட்ட முடியும்' என்ற பொருளில் வரும் குறிஞ்சிப்பாட்டு (13,14) வரிகளைப் பாருங்கள்.

	முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை
	நேர்வரும் குரைய கலம் கெடின் புணரும் - (குரைய - அசைச் சொல்)
	
	முத்தாலும் மணியாலும் பொன்னாலும் அவ்வளவு அழகாகச் செய்த அணிகலன் கெட்டுப்போனாலும் சரிசெய்யலாம் என்பது 
இதன் பொருள்.

	இன்றைக்கும்கூட சில சமூகத்தினர் அத்தனை நேர்த்தி என்று சொல்வதுண்டு. அத்தனை என்பது எண்ணிக்கைப் பொருளைத் தரும். 
இது அத்துணை நேர்த்தி என்பதன் பேச்சு வழக்கு. அத்துணை என்பது அளவுப்பொருளைத் தரும். 

	‘அவ்வளவு அழகாக அமைந்த அணிகலன்' என்ற பேச்சுவழக்கை, அதன் அழகு கெடாமல் ‘அத்துணை நேர்வரும் கலம்' என்ற இலக்கிய 
வழக்காக மாற்றியிருக்கும் புலவரின் திறத்தை வியப்பதா அல்லது அத்துணைக்கும் ஈடுகொடுக்கும் தமிழின் தொல் சிறப்பு இன்றும் நீடிக்கும் தனித் 
திறத்தை வியப்பதா எனத் தெரியவில்லை.

 3. அமைந்து உற்ற மழை - நின்று பெய்த மழை !

	ஒரு மாலை வேளையில் கருமேகங்கள் வானத்தில் சூழ்ந்து எழுகின்றன. இடி இடிக்கிறது. மின்னல் வெட்டுகிறது. ‘சட சட' வென்று 
பெரிய மழைத்துளிகள் விழ ஆரம்பிக்கின்றன. அப்போது பார்த்து ஒரு காற்று எழும்புகிறது. சுழன்று வீசுகிறது. மரங்கள் பேயாட்டம் ஆடுகின்றன. 
மேகங்கள் கலைகின்றன. வந்த மழை வேறு எங்கோ போய்விடுகிறது. மறுநாளும் அதே சூழ்நிலை உருவாகின்றது. ஆனால் அன்று காற்று 
எழவில்லை. மழை கொட்டித் தீர்க்கிறது. தெருவெல்லாம் நீர்ப்பெருக்கு. அனைவருக்கும் மகிழ்ச்சி. “மழை நன்றாக நின்று பெய்தது” என்று 
கூறிக்கொள்கின்றனர். மேகங்கள் கலையாமல் நீண்ட நேரத்திற்கு மழை நன்கு பெய்வதையே ‘மழை நின்று பெய்தது' என்று கூறுவர். இதுவே 
நடு இரவில் பெய்தால் ஊரே அடங்கிப்போய்விடும். அந்த நேரத்திலும், மதுரை நகரின் தெருக்களில் இரவுக்காவலர்கள் தங்கள் பணியைத் 
தொடர்ந்து ஆற்றிக்கொண்டிருப்பர் என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது.

	ஊர் காப்பாளர் ஊக்கு அரும் கணையினர்
	தேர் வழங்கு தெருவில் நீர் திரண்டு ஒழுக
	மழை அமைந்து உற்ற அரைநாள் அமயமும்
	அசைவிலர் எழுந்து நயம் வந்து வழங்கலின் - மது 647 - 650

	‘ஊர்க் காவலர்கள், தப்புதற்கு அரிய அம்பினையுடையவராய்; 
	தேர் ஓடும் தெருவில் நீர் திரண்டு ஒழுகும்படி, 
	மழை நின்று-பெய்த (இரவின்)நடுநாளாகிய பொழுதினும், 
	சோம்பலற்றவராய்ப் புறப்பட்டு நியதி உணர்வு தோன்ற சுற்றிவருதலால்' 

	என்பது இதன் பொருள். 

	‘மழை அமைந்துற்ற அரைநாள் அமயம்' என்ற தொடரில், ‘அமைந்துற்ற” என்ற சொல் ‘நீண்ட நேரம் நின்று பெய்த' என்ற பொருள் 
எவ்வளவு சிறப்பாகப் பொருந்துகிறது என்பதைக் கவனியுங்கள். 

 4. வகை அமை செப்பு - வகையாக அமைந்த செம்பு ! 

	மாடு வாங்க ஒரு விவசாயி சந்தைக்குப் போகிறார். நெடு நேரம் தேடியும் நல்ல மாடு கிடைக்கவில்லை. எதிரில் வந்த அவர் நண்பர் 
கேட்கிறார், “ என்ன, ஒன்றும் அமையவில்லையா?” “ஒன்றிரண்டு பார்த்தேன், வகையாக ஒன்றும் அமையவில்லை” எனப் பதிலுரைக்கிறார் இவர். 
ஒரு தச்சர் கட்டில் ஒன்று செய்கிறார். தன் தொழில் திறம் எல்லாம் காட்டி மிக அருமையாக அதனை வடிவமைக்கிறார். இறுதியில், சற்று விலகி 
நின்று, தான் செய்த பொருளைச் சிறிது நேரம் பார்த்திருந்துவிட்டுக் கூறுகிறார், “இதுவரை செய்த கட்டில்களிலெல்லாம் இதுதான் மிக 
அருமையாக அமைந்திருக்கிறது”. 

	இங்கே, ‘அமை' என்ற சொல்லுக்கு, எத்தனை விதமான பொருள் உரைத்தாலும் அதன் நேர்ப்பொருளைச் சொற்களைக்கொண்டு 
புரிந்துகொள்வதைவிட, மனத்தளவில் உணர்ந்துதான் புரிந்துகொள்ள முடியும். ‘வகையாக அமைதல்' என்பதற்கு, ‘மிகச் சிறப்பாக அமைதல், 
நினைத்தபடியே அமைதல்', ‘பொருத்தமாக அமைதல்' என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். ‘வகை அமை' என்ற சொற்றொடருக்கு, 
‘மிக நன்றாக அமையப்பெற்ற' என்ற பொருள் கொண்டு கீழ்க்கண்ட வரிகளைப் படித்துப் பாருங்கள். 

	1. நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை - திரு 86
	2. வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து - சிறு 224
	3. புடை அமை பொலிந்த வகை அமை செப்பில் - மது 421
	4. கவவொடு பிடித்த வகை அமை மோதகம் - மது 626

	இவ்வரிகள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி ஆகிய நூல்களினின்றும் எடுக்கப்பட்டவை. இவற்றின் பொருள்:

	1. ஒளி தங்கி அசையும், வகையாக அமைந்த பொன்னாலான மகரக்குழை -
	2. வயிறு சேர்ந்து ஒழுங்குபட்ட (தொழில் திறத்தில்)வகையாக அமைந்த குடத்தின் மேல் உள்ள -
	3. புடைத்தல் அமைந்து பொலிவுள்ள (வடிவத்தில்)வகையாக அமைந்த செப்புக்களில் -
	4. பூரணத்தோடு பிடித்த (ருசியில்) வகையாக அமைந்த கொழுக்கட்டைகளையும் – 

	இன்று பெரும்பாலும் கல்லா மாந்தர் பயன்படுத்தும் இந்த வழக்காறு ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் இலக்கிய வழக்காக இருந்திருக்கிறது 
என்று காணும்போது மெய்யாகவே நம் தமிழ் என்றுமுள தென்தமிழ்தான் என்பது உறுதியாகிறது இல்லையா?

 5. மூக்கு முட்டச் சாப்பாடு

	கரிகாற் சோழனின் அரண்மனைக்கு ஒரு பொருநனின் குடும்பம் செல்கிறது. ஆடிப்பாடி மன்னனை மகிழ்விக்கிறது. மகிழ்ந்துபோன மன்னன் 
அவர்களை அங்கேயே நெடுநாள் தங்கியிருக்க வேண்டுகிறான். பலவித உணவுகளை – குறிப்பாக் – புலால் சேர்த்த உணவை வேண்டுமளவு 
தருகிறான். அக் குடும்பம் அங்குத் தங்கி உண்டு களித்ததைத் தம் இயல்பான நடையில் இலக்கிய மொழியில் நகைச்சுவை ததும்பக் கூறுகிறார் 
பொருநராற்றுப்படைப் புலவர் முடத்தாமக் கண்ணியார். 

	---------- ---------- காடியின் மிதப்ப
	அயின்ற காலை, பயின்று இனிது இருந்து,
	கொல்லை உழு கொழு ஏய்ப்பப், பல்லே
	எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி,
	உயிர்ப்பிடம் பெறாஅது ஊண்முனிந்து -------- - பொரு 115-119
	
	காடி என்றால் கழுத்து அல்லது தொண்டை. அயிலுதல் என்பது உண்ணுதல். ஏய்ப்ப என்பது உவம உருபு – போல என்று பொருள். 
எல்லை என்பது பகல். 

	தொண்டையில் மிதக்கும்படி 
	உண்டபொழுதின், இடையறாது பழகி இனிதாக உடனுறைந்து, 
	கொல்லை நிலத்தில் உழுத கொழுப் போன்று, எம் பற்கள் 
	பகலும் இரவும் இறைச்சியைத் தின்று முனை மழுங்கி, 
	மூச்சு விடுவதற்கும் இடம்பெறாமையால், அவ்வுணவுகளை வெறுத்து 

	என்பது இதன் பொருள். 

	காய்ந்த மாடு கம்புல விழுந்த மாதிரி என்பார்கள். காய்ந்த மாடு என்பது பட்டினி கிடந்து வயிறு காய்ந்துபோன மாடு. கம்பு என்பது 
கம்பங்கொல்லை. ஒன்றுமே கிடைக்காமல் ஒரேயடியாகப் பட்டினி கிடந்த மாடு, திடீரென்று தன் முன்னர், பச்சைப்பசேல் என்று விரிந்துகிடக்கும் 
கம்புப் பயிரைக் கண்டால் எத்துணை விருப்பத்துடன் ‘அவக்அவக்'கென்று மேய்ந்து தின்னுமோ, அதைப் போல, கூழுக்கும் விதியற்றுப்போய் இருந்த 
பொருநன் குடும்பத்தினருக்குக் கரிகாலன் அரண்மனையில் கறியும் சோறும் வேண்டுமளவு கிடைக்க, சோற்றைத் தள்ளிவிட்டு, கறியாகப் பொறுக்கி, 
வாய் வலிக்கும் அளவுக்கு மென்றுமென்று சாப்பிடும் காட்சியை அப்படியே நம் மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் புலவர்.

	திருமண வீட்டில் சாப்பிட்டுவிட்டு வருவோரை, மணவீட்டார், ‘என்ன, நல்லாச் சாப்டீங்களா?' என்று விசாரிக்க, விருந்தினர், தன் 
பெருவிரலையும், சுட்டுவிரலையும் சேர்த்துக் கழுத்தை இலேசாகப் பிடித்துக் காண்பித்துத் தலையை ஆட்டும் காட்சியைப் பார்த்திருப்பீர்கள். 
சாப்பிட்டது தொண்டை வரைக்கும் நிற்கிறதாம்! காடி என்பது கழுத்து. காடியின் மிதப்ப என்ற புலவரின் கூற்று இந்தக் காட்சியைக் கண்முன்னே 
கொண்டுவரவில்லையா? அயில் என்பது வேண்டும் அளவுக்கு மேலேயே உண்ணுதல். பழுத்து விழுந்த பலாக்கனியினின்றும், தெறித்துச் சிதறிய 
சுளைகளிலிருந்து, வழிந்து ஒழுகும் தீஞ்சுவைச் சாறை, அயின்று முடித்த காடுவாழ் மயில், ஆடுநடையில் போதையுடன் செல்லும் காட்சியைக் 
குறிஞ்சிப்பாட்டு விவரிக்கும். இன்றைய வழக்கில் ‘ஒரு பிடிபிடித்தல்'. கொல்லை என்பது ஊருக்குப் புறம்பே உள்ள வானம் பார்த்த பூமி. புன்செய்க் 
காடு. அதனை உழுகின்ற உழவர்கள், ஏரை நன்கு அழுத்தி, கொழுவைக் கட்டாந்தரையில் நன்கு பாய்ச்சி உழுவார்கள். எனவே, கூர்மையான கொழு 
சீக்கிரம் மழுங்கிப்போய்விடும். இந்தக் கொழுவைப் போல பொருநன் பற்களும் இறைச்சியை மென்று மென்று மழுங்கிப்போய்விட்டனவாம்! எந்த 
நேரமும் ஏதாவது ஒன்றைத் தின்று கொண்டே இருப்பவர்களைப் பார்த்து, ‘ஏன்டா, எப்பவும் என்னத்தயாவது அரச்சுகிட்டே இருக்க?' என்று நாம் 
கூறுவதில்லையா? சில வேளைகளில், ‘என்னத்தப்போட்டு இப்படி உழுதுகிட்டே இருக்க?' என்றும் கேட்பதும் உண்டே. ‘கொஞ்ச நேரம் வாய்க்கு 
ரெஸ்ட் கொடுடா, பல்லு தேஞ்சிறப் போகுது' என்றும் சொல்வோமே! இதையேதான் புலவர் இலக்கிய மொழியில் இங்குக் கூறுகிறார்.

	உயிர்ப்பு என்பது மூச்சு. உயிர்ப்பிடம் என்பது மூச்சுவிடுமிடம் - மூக்கு. நன்கு சாப்பிட்ட பிறகு, ‘மூக்குப்பிடிக்கச் சாப்டாச்சு' என்றும், 
‘மூக்குமுட்டச் சாப்டாச்சு' என்றும் இன்றும் கூறுவதுண்டே! முடத்தாமக்கண்ணியார் பெண்பாற்புலவர் இல்லையா! வயிறு நிறைய விருந்தினருக்கு 
உணவு படைத்து, அவர்கள் முழு மனநிறைவுடன் எழுந்து செல்லும்போது, மைத்துனர் போன்றவருடன் கேலிபேசும் பேச்சை அப்படியே தம் 
பாடலுக்குள்ளும் கொண்டுவந்துவிட்டார் போலும்!

 6. அசந்துபோய் நின்றான்

	ஒரு சிறு வன்முறைக் கும்பல். நாலைந்துபேர் கொண்ட அந்தக் கூட்டம் ஒரு வணிகத்தலத்துக்குச் சென்று கப்பம் கேட்கிறது. 
தர மறுப்பவர்களை அடித்துத் துன்புறுத்துகிறது. அப்போது அங்கு வருகிறான் நாயகன். அந்தக் கும்பலை ஒவ்வொருவராக அடித்து வீழ்த்துகிறான். 
ஆரம்பத்தில் அவனை இளக்காரமாகப் பார்த்துக்கொண்டிருந்த கும்பல் தலைவன், தன் கூட்டத்தார் அடிவாங்கி ஓடுவதைக் கண்டு அப்படியே 
அசந்துபோய் நிற்கிறான். பின் அவனும் பின்வாங்கித் தலை தெறிக்க ஓடுகிறான். ‘அசந்துபோய்’ என்ற வழக்கு இன்றைக்கு எல்லாருக்கும் 
தெரிந்த ஒன்று. 

	ஏறக்குறைய இதே போன்ற ஒரு சூழலை வருணிக்கிறார் குறிஞ்சிப்பாட்டுப் புலவர் கபிலர். மலைப்பாங்கான ஒரு தினைப்புனத்தில் 
சில கன்னியர் விளையாடிக்கொண்-டிருக்கின்றனர். அப்போது ஒரு இளைஞன் அங்கு வந்து அவர்களுடன் உரையாடுகிறான். அந் நேரத்தில் 
ஒரு சினங்கொண்ட யானை மரங்களை முறித்துக்கொண்டு அவர்களை நோக்கி வருகிறது. கன்னியர் பதைபதைக்கின்றனர். இளைஞனோ சற்றும் 
அஞ்சாது யானையை எதிர்கொள்கிறான். யானையின் முகத்தில் அம்புகளை எய்து அதனைக் காயப்படுத்துகிறான். சினந்து வந்த யானை இப்போது 
அயர்ந்து நிற்கிறது. பின்னர் வந்தவழியே ஓடிப்போகிறது. 

	உடுவுறும் பகழி வாங்கிக் கடுவிசை
	அண்ணல் யானை அணிமுகத்து அழுத்தலின்
	புண்ணுமிழ் குருதி முகம் பாய்ந்து இழிதரப்
	புள்ளி வரிநுதல் சிதைய நில்லாது
	அயர்ந்து புறங்கொடுத்த பின்னர் - குறிஞ்-172-174

	அயர்ந்து புறங்கொடுத்தது என்பதைத்தான் இன்றைக்கு நாம், “அப்படியே அசந்துபோய் ஓடிவிட்டது” என்கிறோம்‼ 

	இன்றைக்கு நாம் சாதாரணமாக வழங்கும் சொல்வழக்குகள் சங்க இலக்கியத்தில் எவ்வளவு அழகுடனும், பொருத்தமாகவும் 
கையாளப்பட்டுள்ளன என்று பார்த்தீர்களா? மாற்றி யோசித்தால், அன்றைக்கு வழக்கிலிருந்த இந்த வழக்காற்றுச் சொற்கள் இன்றைக்கும் 
வழக்கிலிருப்பது தமிழின் நீண்ட பாரம்பரியத்தையும், தொன்மையையும், தொடர்ச்சியையும் குறிப்பதாய் அமைகின்றது இல்லையா?