<<முந்திய பக்கம்

சங்க இலக்கியம் - அருஞ்சொற்களஞ்சியம்
கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
அ - முதல் சொற்கள்
அஃகு
அஃதை
அக்குரன்
அக்குளு
அகடு
அகப்பா
அகரு
அகல்
அகல
அகலம்
அகலுள்
அகவர்
அகவு
அகழ்
அகளம்
அகறல்
அகறி
அகறிர்
அகில்
அகுதை
அகை
அங்காடி
அங்கி
அச்சிரம்
அசா
அசாவிடு
அசாவு
அசுணம்
அசும்பு
அசை
அசைவு
அசோகம்
அஞ்சனம்
அஞ்ஞை
அஞர்
அட்டவாயில்
அட்டில்
அடகு
அடர்
அடல்
அடார்
அடிசில்
அடியுறை
அடு
அடுக்கம்
அடுக்கல்
அடும்பு
அடை
அடைகரை
அடைச்சு
அடைந்திரு
அண்கணாளன்
அண்டர்
அண்டிரன்
அண்ணல்
அண்நா
அண
அணங்கு
அணர்
அணல்
அணவரு(தல்)
அணி
அணில்வரிக்கொடும்காய்
அணை
அத்தம்
அத்தன்
அத்தி
அத்திரி
அத்தை
அதர்
அதரி
அதலை
அதவம்
அதள்
அதிகன்
அதிரல்
அந்தணர்
அந்தரம்
அந்தி
அந்தில்
அந்துவன்
அம்பணம்
அம்பர்
அம்பல்
அம்பி
அமர்
அமரர்
அமல்
அமலை
அமளி
அமிர்து
அமை
அமையம்
அயம்
அயர்
அயறு
அயா
அயாவுயிர்
அயிர்
அயிரை
அயில்
அயிலை
அயினி
அரக்கு
அரணம்
அரந்தை
அரம்பு
அரமகள்
அரமியம்
அரலை
அரவம்
அரவிந்தம்
அரவு
அரற்று
அரா
அரி
அரிகால்
அரிநர்
அரிப்பறை
அரிமணவாயில்
அரிமா
அரியல்
அரியலாட்டியர்
அரில்
அரிவை
அருக்கு
அருகு
அருச்சி
அருத்து
அருந்ததி
அருப்பம்
அருமன்
அருவந்தை
அருவாளர்
அரை
அரைநாள்
அரையம்
அல்
அல்கல்
அல்கலும்
அல்கிரை
அல்கு
அல்குல்
அல்லங்காடி
அல்லா
அல்லி
அல்லிப்பாவை
அல
அலகை
அலங்கல்
அலங்கு
அலந்தலை
அலம்வரு(தல்)
அலமரல்
அலமரு
அலமலக்குறு
அலர்
அலரி
அலவலை
அலவன்
அலவுறு
அவல்
அவவு
அவி
அவிர்
அவினி
அவுணர்
அவை
அவைப்பு
அவையல்
அழல்
அழி
அழிசி
அழுங்கல்
அழுங்கு
அழுந்து
அழுந்துபடு
அழுந்தூர்
அழுந்தை
அழும்பில்
அழுவம்
அள்ளல்
அள்ளன்
அள்ளூர்
அளக்கர்
அளகம்
அளகு
அளறு
அளி
அளிதோ
அளியர்
அளியை
அளை
அற்கம்
அற்கு
அற்சிரம்
அற்றம்
அற்று
அறல்
அறவு
அறவை
அறிகரி
அறுகால்பறவை
அறுகை
அறுமீன்
அறுவை
அறை
அன்றில்
அன்ன
அன்னம்
அன்னி
அன்னிமிஞிலி
அனந்தர்
அனந்தல்
அனலன்
அனற்று
அனிச்சம்
அனை

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
 
அஃகு - (வி) நுண்ணியதாகு, சுருங்கு, குறை, become minute, shrink, be reduced in size, quantity etc.,
அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து
இலம் என மலர்ந்த கையர் ஆகி - மலை 551,552
பரந்த அரச உரிமையையும், குறுகிய அறிவினையும்,
'இல்லை' என்று விரித்த கையினையும் உடையோராய்

நல்லகம் நயந்து, தான் உயங்கிச்
சொல்லவும் ஆகாது அஃகியோனே - குறு 346/8
நமது நல்ல நெஞ்சத்தை விரும்பி வருந்தி
அதை நமக்குக் கூறவும் இயலாது மனம் குன்றினான்

 மேல்
 
   அஃதை (பெ) 1. கோசர் குடித் தலைவன் - ஒரு சிறந்த வள்ளல், a philanthropist
                           2. சோழமன்னனின் மகள், daughter of a chozha king
1.
இன் கடும் கள்ளின் அஃதை களிற்றொடு
நன்கலன் ஈயும் நாள்மகிழ் இருக்கை - அகம் 76/3,4
இனிய கடுங்கள்ளினையுடைய அஃதை என்பவனின், யானைகளோடு
நல்ல அணிகலன்களையும் ஈயும் அத்தாணிமண்டப அமர்வு (நாளோலக்கம்) - 

மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி - அகம் 113/4
2.
அம் கலுழ் மாமை அஃதை தந்தை
அண்ணல் யானை அடுபோர்ச் சோழர்  - அகம் 96/12,13
அழகு ஒழுகும் மாமை நிறத்தினையுடைய அஃதை என்பவளின் தந்தையாகிய
பெருமை தங்கிய யானையைக்கொண்ட, போரில் அழிக்கும் சோழர் - 

பார்க்க - அகுதை

 மேல்
 
    அக்குரன் - (பெ) 1. பாரதப்போரில் நூற்றுவருக்குத் துணைநின்றவன், 
                        a king who helped the Gauravas in Mahabharath war
                      2. ஓர் இடையெழு வள்ளள். a philanthropist
போர்தலை மிகுத்த ஈரைம்பதின்மரொடு
துப்புத் துறைபோகிய துணிவுடை ஆண்மை
அக்குரன் அனைய கைவண்மையையே - பதி 14/5-7
போரிடுவதில் மிகுந்த மேன்மையுற்ற நூற்றுவருடன்
வலிமையில் சிறந்த அஞ்சாமையுள்ள ஆண்மையினையுடைய
அக்குரன் என்பவனைப் போல வள்ளல்தன்மையுடையவனே!

 மேல்
 
    அக்குளு - (வி) கூச்சம் உண்டாக்கு, tickle, titillate
புக்கு அகலம் புல்லின் நெஞ்சு ஊன்றும்; புறம் புல்லின்
அக்குளுத்து; புல்லலும் ஆற்றேன்; - கலி 94/20
நின்னை மார்பில் தழுவினால் என்னுடைய நெஞ்சிலே அக் கூன் ஊன்றும்; முதுகிலே தழுவினால்
கூன் கூசச்செய்யும்; தழுவமாட்டேன்;

 மேல்
 
    அகடு - (பெ) நடு, உள், வயிறு, middle, interior, belly
அகடு சேர்பு பொருந்தி அளவினில் திரியாது - மலை 33
(பொல்லம் பொத்துதல்) நடுவே சேரப்பட்டுக் கண்ணுக்கினியதாய் அளவிலே மாறுபடாமல்

அகடு நனை வேங்கை வீ கண்டு அன்ன - புறம் 390/21
உள்ளிடம் நனைந்த வேங்கைப் பூவைக் கண்டாலொத்த

குருகு உடைத்து உண்ட வெள் அகட்டு யாமை - ஐங் 81/1
நாரை உடைத்து உண்ட வெண்மையான வயிற்றை உடைய ஆமை

 மேல்
 
    அகப்பா - (பெ) 1. சேரநாட்டில் ஓர் இடம், a city in cEra country
                  2. கோட்டை, அரண், fort, protective structure
1.
குட்டுவன்
அகப்பா அழிய நூறி செம்பியல்
மதில் தீ வேட்ட ஞாட்பினும் - நற் 14/3-5
பல்யானைச் செல்கெழு குட்டுவன்
அகப்பா  என்னும் நகரை அழித்து, அங்கே செம்பினால் இயன்றுள்ள 
மதிலைத் தீயிட்டு அழித்த போரில் எழுந்த ஆரவாரத்திலும்
- இங்கே குறிக்கப்பெறும் அகப்பா மலையாள மாவட்டத்து வள்ளுவ நாட்டுப்பகுதியில் இருந்து
மறைந்தது; அதன் நினைவுக்குறியாக மீப்பா, மீப்பாயூர் என்ற பெயருடன் ஒரு பகுதி நிற்கிறது.
- ஔவை.சு.து, உரை, விளக்கம்
2.
இங்கே செம்பியல் என்பதனைச் செம்பியன் என்று கொள்வார் பின்னத்தூரார். செம்பியன் என்பவன்
சோழன். எனவே இங்கு உரை முற்றிலும் மாறுபடுகிறது.
குட்டுவன்
அகப்பா அழிய நூறி செம்பியன்
மதில் தீ வேட்ட ஞாட்பினும் - நற் 14/3-5
சேரலாதனது
கழுமலத்தின் மதில் ஒருங்கழிய இடித்தொழித்து, கிள்ளிவளவன்
அற்றைப்பகலே அவ்வூரைத் தீயினவாய்ப்பெய்த போரினுங்காட்டில் 
- எனவே பின்னத்தூரார் அகப்பா என்பதைக் கழுமலம் என்று கொள்கிறார் என அறிகிறோம்.
- செம்பியன் என்பான் கிள்ளிவளவன் என்றும் அவனால் அழிக்கப்பட்ட மதில் கழுமலத்தில் இருந்தது
என்றும் பழைய  உரையாசிரியர் கூறுவர் என்கிறார் கு.வெ.பா (NCBH). இவர்கள் அகப்பா என்பதைக்
கோட்டை என்று பொருள்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், பதிற்றுப்பத்துப் பாடல் ஔவை.சு.து.அவர்களின் கூற்றுக்கு வலிமை சேர்க்கிறது
கடி மிளை குண்டு கிடங்கின்
நெடு மதில் நிரை பதணத்து
அண்ணல் அம் பெரும் கோட்டு அகப்பா எறிந்த
பொன் புனை உழிஞை வெல் போர் குட்டுவ - பதி 22/24-27
பாதுகாப்பான காவல்காடும் ஆழமான அகழியும் கொண்ட,
நெடிய மதிலில் வரிசையாய் அமைந்த உயர்ந்த மேடைகளையும் கொண்ட,
பெருமை மிக்க அழகிய பெரிய சிகரங்களைக் கொண்ட அகப்பா என்னும் கோட்டையை அழித்த
பொன்னால் செய்த உழிஞை மாலையை அணிந்த வெல்லுகின்ற போரைச் செய்யும் குட்டுவனே!

இங்குக் குட்டுவன் எனப்படுபவன் பல்யானைச்செல்கெழுகுட்டுவன். 

 மேல்
 
    அகரு - (பெ) அகில், agil, a fragrant tree, eagle-wood
அகரு வழை ஞெமை ஆரம் இனைய - பரி 12/5
அகிலும், சுரபுன்னையும், ஞெமை மரமும், சந்தன மரமும் ஆகிய இவை வருந்தும்படியாக

 மேல்
 
    அகல் - 1. (வி) 1. நீங்கு, விலகு, leave, move away
                   2. பெரிதாகு, விரி, become wider, larger
           - 2. (பெ) 1. சட்டி, a small wide-mouthed earthen pot
                    2. தகழி, almost hemispherical bowl of an oil lamp
1.1.
ஆள்வினைக்கு அகல்வாம் எனினும்
மீள்வாம் எனினும் நீ துணிந்ததுவே - நற் 103/10,11
மேற்கொண்ட பொருளீட்டும் செயலுக்காக மேலும் செல்வோம் என்றாலும்,
மீளவும் வீட்டுக்குத் திரும்புவோம் என்றாலும் நீ முடிவெடு -

புலம்பு சேண் அகல புதுவிர் ஆகுவிர் - மலை 412
வருத்தம் வெகுதூரம் போய்விட(முற்றிலும் நீங்க), புத்துணர்வுபெற்றவர் ஆவீர்
1.2.
இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த - திரு 72
கரிய சேற்றினையுடைய அகன்ற வயலில் முறுக்கவிழ்ந்து மேற்புறமும் மலர்ந்த

அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி - பெரும் 1
அகன்ற பெரிய வானில் பரந்த இருளை விழுங்கி

அறு_மீன் சேரும் அகல் இருள் நடுநாள் - அகம் 141/8
கார்த்திகையைச் சேரும் இருள் விரிந்த நடு இரவில்
2.1
கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த
இழை சூழ் வட்டம் - பெரும் 377,378
கரிய வட்டிலில் அப்ப வாணிகர் பாகுடன் பிடித்த 
நூல் போலச் சூழ்ந்துகிடக்கின்ற அப்பம் 
2.2
யவனர் இயற்றிய வினை மாண் பாவை
கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து
பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி - நெடு 101-103
யவனர் செய்த தொழில் திறத்தில் உயர்ந்த பெண்சிலையின்
கைகளில் ஏந்தியிருக்கின்ற வியப்பைத்தரும் அழகுடைய தகழி நிறைய நெய் சொரிந்து,
பருத்த திரிகளைக் கொளுத்தி, (செந்)நிறமான தழல் மேல்நோக்கி எரிகின்ற சுடரை

 மேல்
 .
    அகல - 1. (வி.அ) 1. முற்றிலும், entirely
                     2. பெரிதாக, wide
          - 2. (வி.எ) நீங்கும்படியாக, to leave   
1.1.
ஆறு செல் வருத்தம் அகல நீக்கி - பொரு 93
வழிபோன வருத்தத்தை என்னிடத்துச் சிறிதும் நில்லாமற் போக்கி
1.2
ஏழையை என்று அகல நக்கு வந்தீயாய் நீ - கலி 114/5
கோழையே' என்று பெரிதாகச் சிரித்துவிட்டு வருவாய் நீ
2.
சேண் புலம்பு அகல இனிய கூறி - மலை 167
தொலைவிலிருந்து வந்த உம் வருத்தம் நீங்க இனிய மொழிகள் கூறி

 மேல்
 
    அகலம் - (பெ) 1. மார்பு, chest
                  2. விரிவு, width
                  3. விசாலம், பரப்பு, extent expanse
                  4. பெரியதன்மை, greatness
1
தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத - நற் 235/8
குளிர்ந்த மாலை அணிந்த மார்பினில் வண்டுகள் ஒலிப்புடன் தேனருந்த
2.
அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனை கொள்ளாதி
மணி புரை செம் வாய் நின் மார்பு அகலம் நனைப்பதால் - கலி 79/7,8
பரத்தையர் மனையில் அணிந்துகொண்ட அணியோடு வந்து இங்கு எம் புதல்வனை தூக்கிக்கொள்ளவேண்டாம்,
பவழம் போன்ற அவனது சிவந்த வாயிலிருந்து ஒழுகும் நீர் உன் அகன்ற மார்பை நனைப்பதால்,
3.
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள - பரி 4/30
உனது வெளிப்பாடும், விசாலமும் கடலினிடத்தில் உள்ளன;
4.
போற்றார் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்
வலியும் தெறலும் அளியும் உடையோய் - புறம் 2/7,8
பகைவரைப் பொறுத்தலும், பொறுக்கமுடியாவிட்டால் அவரை அழிக்கச் சூழும் உசாவினது பெருமையும்
மனவலியும், அவரை அழித்தலும், அவருக்கு அருள் செய்யும் அருளும் உடையோய்

 மேல்
 
    அகலிகை - (பெ) கௌதம முனிவரின் மனைவி, the wife of saint Gauthama
இந்து தொன்மவியலின் அடிப்படையில் அகலிகை (அகல்யா) என்பவர் கௌதம முனிவரின் மனைவி
ஆவார். தேவர்களின் தலைவனான இந்திரன் இவர் மேல் ஆசை கொண்டு, சூழ்ச்சி செய்து இவருடன்
உறவுகொள்ள, அதனை அறிந்த கௌதமர் அகலிகையைக் கல்லாக மாறச் சாபமிட்டார். இவ்வாறு கல்லாக
மாறிய அகலிகை ராமனின் கால்பட்டதால் மீண்டும் மனிதவுருவம் பெற்றதாக இந்து சமய நூல்கள்
பல சொல்லுகின்றன.

இந்திரன் பூசை இவள் அகலிகை இவன்
சென்ற கவுதமன் சினன் உற கல் உரு
ஒன்றிய படி இது என்று உரைசெய்வோரும் - பரி 19/50-52
இந்திரன் இந்தப் பூனை, இவள் அகலிகை , இவன்
வெளியில் சென்ற கவுதமன், இவன் சினங்கொள்ள கல்லுருவம்
அடைந்த வகை இது என்று விளக்கிச் சொல்வோரும்,

 மேல்
 
    அகலுள் - (பெ) அகன்ற உள்புறமுள்ள வீடு, ஊர், 
                       a house or a village in which there is a broad open space in the middle

கிராமப்புறத்து வீடுகளில் சில, அகன்ற வெளியில் நான்குபக்கங்களிலும் சுவர் எழுப்பி அறைகளோ
வேறு மாட்டுக்கொட்டில், தீவனம் வைக்குமிடம் போன்ற அமைப்புகளைக் கட்டி, நடுவில்
திறந்த வெளி உள்ளவைகளாக இருக்கும். இப்படிப்பட்ட வீடுகள் அகலுள் எனப்படும். அதாவது
அகன்ற உட்புறத்தைக் கொண்டது என்ற பொருள்தரும்.
சில கிராமங்களில் நடுவே அகன்ற வெளியைவிட்டு, அதனைச் சுற்றிலும் தெருக்களும், வீடுகளும்
அமைப்பார்கள். அப்படிப்பட்ட ஊர் அகலுள் எனப்படும். 

அகலுள் ஆங்கண் கழி மிடைந்து இயற்றிய
புல்வேய்க் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர் - மலை 438, 439
அகன்ற உள்ளிடத்தையுடைய ஊர்களில் கழிகளால் செறிந்து பண்ணின
புல்லால் வேய்ந்த குடில்களில் இருக்கும் குடிகளிடந்தோறும் பெறுவீர்

 மேல்
 
     அகவர் - (பெ) - 1. ஒரு நாட்டு/ஊர் மக்கள், people of a country/city
		2. பாடல் பாடுவோர், bards
1.
கானவர் மருதம் பாட அகவர்
நீல் நிற முல்லை பல் திணை நுவல - பொரு 220,221
முல்லைநிலத்துக் கானவர் மருதப்பண்னைப் பாடவும், மருத நிலத்து உழவர்
நீல நிறமுடைய முல்லைக்கொடி படர்ந்த பலவாலிய காட்டுநிலத்தைக் கொண்டாடவும்
2.
நாள் ஈண்டிய நல் அகவர்க்கு
தேரொடு மா சிதறி - மது 223,224
விடியற்காலத்தே வந்த நல்ல பாடகர்களுக்குத்
தேருடனே, குதிரைகளையும் கொடுத்து

இந்தப் பாடகர்கள் பொருநர் என்றும் சூதர் என்றும் அழைக்கப்படுவர். இவர்கள் பொதுவாக
அரசர் முன்னிலையில் பாடிப் பரிசில் பெறுவோர். இவரில் போர்க்களப் பொருநர்,
ஏர்க்களப் பொருநர் என இருவகையுண்டு.
இவரில், பாடல்பாடும் மகளிர், அகவன்மகளிர் எனப்படுவர்.

 மேல்
 
    அகவு - (வி) மயில்போல் ஒலிஎழுப்பு, அழை, பாடு,  sound like a peacock, call, sing
கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை - நெடு 99
மகிழ்ந்த மயில்கள் ஒலியெழுப்பும் கொம்பு ஊதுதலைப் போன்ற இனிய இசை

வள்ளை அகவுவம் வா - கலி 42/9
வள்ளைப்பாட்டு பாடுவோம் வா

 மேல்
 
    அகழ் - 1. (வி) தோண்டு, dig up, excavate
          - 2. (பெ) 1. பள்ளம், ditch
                   2. அகழி, கோட்டை மதிலைச் சூழ்ந்த கிடங்கு, moat
1.
மலை அகழ்க்குவனே கடல் தூர்க்குவனே - பட் 271
மலைகளைத் தோண்டி மட்டப்படுத்துவான், கடல்களையெல்லாம் தூர்ப்பான்

உடும்பு கொலீஇ வரி நுணல் அகழ்ந்து - நற் 59/1
உடும்பைக் கொன்று எடுத்துக்கொண்டு, வரிகளையுடைய தேரையை மணலைத் தோண்டி எடுத்துக்கொண்டு
2.1
வான் மடி பொழுதில் நீர் நசைஇ குழித்த
அகழ் சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கி - பெரும் 107,108
மழை பெய்யாதிருக்கும் காலத்தில் நீரை விரும்பித் தோண்டிய
பள்ளங்களைச் சூழ்ந்த மூடுகுழிகளின் அகத்தே மறைந்து ஒதுங்கி,
2.2
அகழ் இழிந்து அன்ன கான்யாற்று நடவை - மலை 214
அகழியில் இறங்குவது போன்ற, காட்டாற்று வழித்தடம்

குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊரே - புறம் 379/18
அரணை அடுத்த ஆழ்ந்த அகழியையும் நீண்ட மதிலையும் உடைய ஊர்க்கு

 மேல்
 
    அகளம் - (பெ) யாழின் பத்தர் (குடுக்கை), body of the lute, நீர்ச்சால், large bucket
வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து - சிறு 224
வயிறு சேர்ந்து ஒழுங்குபட்ட நன்கு அமைந்த பத்தரின்

அகளத்து அன்ன நிறை சுனை புறவின் - மலை 104
நீர்ச்சாலை ஒத்த நிறைந்த சுனைகளைகளைக் கொண்ட காட்டில்



 மேல்
 
    அகறல் - (பெ) அகலுதல், நீங்குதல், leaving
புன்கண் கொண்டு இனையவும் பொருள்_வயின் அகறல்
அன்பு அன்று என்று யான் கூற - கலி 2/24,25
துன்பம் கொண்டு வருந்தவும், நீ பொருளை நாடிப் பிரிந்து செல்வது
அன்புடைய செயல் ஆகாது என்று நான் சொல்ல,

 மேல்
 
    அகறி - (வி.மு) நீங்குகிறாய், (You are) leaving - singular
குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய
ஆள்வினைக்கு அகறி ஆயின் இன்றொடு
போயின்று-கொல்லோ - நற் 205/5-7
குவளை மலர் போன்ற மையுண்ட கண்களையுடைய இவளை இங்கு விட்டுவிட்டு
பொருளீட்டச் செல்வாயானால், இன்றோடே
போய்விடும்

 மேல்
 
    அகறிர் - (வி.மு) நீங்குகிறீர், (you are) leaving - plural
அன்பு இலிர் அகறிர் ஆயின் என் பரம்
ஆகுவது அன்று இவள் அவலம் - நற் 37/7,8
அன்பு இல்லாதவராய்ப் பிரிந்துசென்றீராயின், என் பாரமாக
ஆவது அன்று இவளது அவலம்;

செல்வ சேறும் எம் தொல் பதி பெயர்ந்து என
மெல்லென கிளந்தனம் ஆக வல்லே
அகறிரோ எம் ஆயம் விட்டு என - பொரு 121-123
செல்வனே, (யாங்கள்)செல்வேம் - எம்முடைய (பழைய)சுற்றத்தாரிடம், (உம்மை)விட்டு' என்று
மெதுவாகச் சொன்னேமாக, ‘(இவ்வளவு)சீக்கிரம்
போகின்றீரோ (எம்)கூட்டத்தைவிட்டு' என்று கூற

 மேல்
 
    அகில் - (பெ) ஒரு வகை வாசனை மரம், Eagle-wood, Aquilaria agallocha
அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கிய - புறம் 337/10
அகிலின் நிறைந்த மணமுள்ள புகை மெல்லிதாகச் சென்று அடங்கிய

 மேல்
 
    அகுதை - (பெ) ஒரு வேளிர் குல அரசன், மதுரையிலிருந்த ஓர் உபகாரி என்பார் உ.வே.சா.
இந்த வேளிர் குல அரசன் வேள் மகளிரின் துன்பம் போக்கினான்.

பெருவிதுப்புற்ற பல்வேள் மகளிர்
குரூஉப் பூம் பைந்தார் அருக்கிய பூசல்
வசைவிடக்கடக்கும் வயங்கு பெருந்தானை
அகுதை களைதந்து ஆங்கு - அகம் 208/15 - 18
மிக்க விரைவுகொண்டு வந்த பல வேளிர் மகளிர்
நிறமுள்ள பூக்களாலான அழகிய மாலைகளை அழித்துவிட்டுச் செய்த அழுகை ஆரவாரத்தினை
பழிநீங்க மாற்றார் படையினை வெல்லும் விளங்கும் பெரிய சேனையையுடைய
அகுதை என்பவன் நீக்கினாற் போல - 

இன் கடும் கள்ளின் அகுதை தந்தை - குறு 298/5
இந்த அகுதை தந்தை என்பான் மேற்கூறப்பட்ட வேளிர்குலத் தலைவன். எனவே இதனை
அகுதையாகிய தந்தை எனக்கொள்லலாம்.

சீர் கெழு நோன் தாள் அகுதைக்கண் தோன்றிய
பொன்படு திகிரியின் பொய்யாயிகியர் - புறம் 233/3,4
சீர்மை பொருந்திய வலிய முயற்சியையுடைய அகுதையிடத்து உள்ளதாகிய
பொன்னாற்செய்யப்பட்ட சக்கரத்தைப் போல் பொய்யாகுக -
 
மணம் நாறு மார்பின் மறப் போர் அகுதை
குண்டு நீர் வரைப்பின் கூடல் அன்ன - புறம் 347/5,6
மணங்கமழும் மார்பினையுடைய மறம் பொருந்திய போரைச் செய்யும்
ஆழ்ந்த நீர்நிலைகளையுடைய இடமாகிய கூடல் நகரைப் போன்று -

இங்கு குறிப்பிடப்படும் கூடல் என்பது காவிரி ஆற்ரங்கரையில் உள்ள முக்கூடல் என்ற ஊரைக் குறிக்கும் என்பர்.
 
பார்க்க - அஃதை

 மேல்
 
    அகை-(வி) 1. எரி, burn
                 2. கொஞ்சம் கொஞ்சமாகக் குறை, diminish slowly,
                 3. செழி, flourish,
                 4 .தளிர், sprout
1.
எரி அகைந்து அன்ன தாமரை பழனத்து - அகம் 106/1
தீ கிளைத்து எரிந்தாற்போன்ற தாமரைப் பூக்களையுடைய வயலில்
2.
உம்பல் அகைத்த ஒண் முறி யாவும் - மலை 429
யானை முறித்த ஒள்ளிய தளிர்களையுடைய யாமரம்
3.
கொய் அகை முல்லை காலொடு மயங்கி - அகம் 43/9
கொய்யப்படும் தழைத்த முல்லை காற்றால் மயங்குதலின்
4.
கரி மரம்
கண் அகை இளம் குழை கால் முதல் கவினி - அகம் 283/9,10
கரிந்த மரங்கள் 
தம்மிடம் தளிர்க்கும் இளைய குழைகள் அடிமுதல் கிளைத்து அழகுபெற

 மேல்
 
    அங்காடி  - (பெ) கடை, கடைத்தெரு, market, market place
இந்த அங்காடி இருவகைப்படும். 
பகலில் திறந்திருக்கும் கடைத்தெரு நாளங்காடி என்றும் 
இரவில் திறக்கும் கடைத்தெரு அல்லங்காடி என்றும் அழைக்கப்பட்டன.
நாளங்காடி நனம் தலை கம்பலை - மது 430
நாளங்காடியையுடைய அகன்ற இடத்தே எழுந்த பெரிய ஆரவாரம்

அல்லங்காடி அழிதரு கம்பலை - மது 544
அந்திக்காலத்துக் கடைத்தெருவில் மிகுதியைத் தரும் ஆரவாரம்

 மேல்
 
    அங்கி  - (பெ) யாகம் செய்ய எழுப்பும் தீ, sacrificial fire 
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும் - பட் 54
ஒளிரும் சடையினையுடைய துறவிகள் தீயை எழுப்பி யாகம்செய்யும்

 மேல்
 
    அங்கை  - (பெ) உள்ளங்கை (அகம் + கை = அங்கை), palm
கோடல் குவி முகை அங்கை அவிழ - முல் 95
வெண்காந்தளின் குவிந்த மொட்டுகள் உள்ளங்கை போல மலர

	

 மேல்
 
    அச்சிரம் -- பார்க்க -- அற்சிரம்
தண் பனி வடந்தை அச்சிரம்
முந்து வந்தனர் நம் காதலோரே - ஐங் 223/4,5
குளிர்ந்த பனியோடே சேர்ந்த வாடையுடன் கூடிய முன்பனிக்காலத்தையும்
முந்திக்கொண்டு வந்துவிட்டார் நம் காதலர்.

 மேல்
 
   அசா - 1. (வி) வருந்து, be sad, grieve
         - 2. (பெ) 1. தளர்ச்சி, exhaustion
                 2. வருத்தம், sorrow
1.
பொங்கு திரை பொருத வார் மணல் அடைகரை
புன் கால் நாவல் பொதி புற இரும் கனி
கிளை செத்து மொய்த்த தும்பி பழம் செத்து
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் - நற் 35/1-5
பொங்கிவரும் அலைகள் மோதுவதினால் ஏற்பட்ட சரிவான மணலைக் கொண்டு அடைத்தகரையில்
புல்லிய அடிமரத்தையுடைய நாவல் மரத்தின் பொதியைப் போன்ற வெளிப்பகுதியையுடைய பெரிய பழத்தை
தன் இனத்தைச் சேர்ந்தது என்று எண்ணி சூழ்ந்த தும்பியைப் பழமென்று நினைத்து
பலகால்களைக் கொண்ட நண்டு பற்றிக்கொண்ட பிடிக்கு வருந்தி
மீட்டப்படாத நரம்பாய் இமிர்ந்து ஒலிக்கும் ஆரவாரத்தால்
2.1.
இரை தேர்ந்து உண்டு அசா விடூஉம் புள் இனம் இறைகொள - கலி 132/3
இரையைத் தேடியுண்டு களைப்பை ஆற்றிக்கொள்ளும் பறவைக் கூட்டம் தங்கிக்கொள்ள
2.2.
வேய் புரை பணைத்தோள் பாயும்
நோய் அசா வீட முயங்குகம் பலவே - அகம் 47/18,19
மூங்கிலைப் போன்ற பெரிய தோள்களில் பரவும்
நோயின் வருத்தம் தீரப் பலமுறை முயங்குவோம்

 மேல்
 
    அசாவிடு - (வி) 1. இளைப்பாறு, rest, relax
                    2. நீங்கு, இல்லமற்போ, leave off, cease
1.
இரை தேர்ந்து உண்டு அசாவிடூஉம் புள்_இனம் இறைகொள - கலி 132/3
இரை தேர்ந்து உண்டு இளைப்பாறியிருக்கும் பறவைக் கூட்டம் தங்கியிருக்க
2.
நலம் கேழ் அரிவை புலம்பு அசாவிடவே - குறு 338/8
பெண்மை நலம் பொருந்திய தலைவியின் தனிமைத்துயர் நீங்கும்படி -

 மேல்
 
    அசாவு - (வி) தளர்ச்சியடை, droop, get weary
சென்ற நெஞ்சம் செய்_வினைக்கு அசாவா
ஒருங்கு வரல் நசையொடு வருந்தும்-கொல்லோ - நற் 56/5,6
அவர்பால் சென்ற என் நெஞ்சம் அங்கு அவர் செய்யும் வினைக்குத் தளர்வு ஏற்படாவாறு
அவரோடே சேர்ந்து திரும்பி வரும் விருப்பத்தோடு வருந்தியிருக்குமோ?

 மேல்
 
    அசுணம் - (பெ) இசை அறியும் ஒரு விலங்கு
இரும் சிறைத் தொழுதி ஆர்ப்ப யாழ் செத்து
இரும் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும் - அகம் 88/11,12
கரிய சிறகினையுடைய வண்டின் கூட்டம் ஒலிக்க, அதனை யாழிசை என்று என்ணிப்
பெரிய குன்றின் பிளவுகள் உள்ள குகைகளில் அசுணம் உற்றுக்கேட்கும்

 மேல்
 
    அசும்பு - 1. (வி) ஒழுகு, பரவு , flow, spread 
            - 2. (பெ) சேறு, வழுக்குநிலம், mud, slippery soil
1.
அசும்பும் அருவி அரு விடர் பரந்த - பரி 21/52
  ஒழுகும் அருவி அரிய பிளவுகளில் பரவி
2.
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்
படு கடும் களிற்றின் வருத்தம் சொலிய - அகம் 8/9,10
வாழை ஓங்கி வளர்ந்த தாழ்ந்த இடத்தையுடைய சேற்றுநிலத்தில்
அகப்பட்ட கடிய களிற்றின் வருத்தம் நீங்க 

 மேல்
 
    அசை - 1. (வி) 1. ஆடு, sway
                   2. நகர், இடம்பெயர், விட்டு நீங்கு, move, shift
                   3. தங்கு, stay
                   4. கட்டு, பிணி, fasten, be fastened
                   5. வருத்து, afflict
                   6. தளர், ஓய், be weary, grow feeble
                   7. இளைப்பாறு, rest
                   8. மெல்லச்செல், go slowly
                   9. கிட, lie in a place
                   10. தட்டு, knock (at the door)
          - 2. (பெ) 1. தளர்ச்சி, weariness
                   2. மாடுகள் மீட்டுமெல்லும் இரை, cud
1.1.
அதிரல் பூத்த ஆடு கொடி படாஅர்
சிதர் வரல் அசை வளிக்கு அசைவந்து ஆங்கு - முல் 51,52
காட்டு மல்லிகை பூத்த அசைகின்ற கொடியினையுடைய புதர்கள்
துவலை தூறலுடன் வரும் அசைந்த காற்றிற்கு அசைந்தாற்போல,
1.2.
அசையா நாற்றம் அசை வளி பகர - அகம் 272/9
விட்டு நீங்காத மணத்தினை அசையும் காற்று வெளிப்படுத்த
1.3
அஞ்சு_வழி அஞ்சாது அசை_வழி அசைஇ - நற் 76/4
அஞ்சவேண்டியஇடத்தும் அஞ்சாமல், தங்கவேண்டிய நேரத்தில் தங்கி
1.4
நடுங்கு சுவல் அசைத்த கையள் - முல் 14
குளிரால் நடுங்குகின்ற தோளின்மேலே கட்டின கையளாய் நின்று

தாம்பு அசை குழவி வீங்கு சுரை மடிய - அகம் 54/7
கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்றுகள் (தம்) பெருத்த மடியைக் குடித்துக் குறைக்க

கொலை உழுவை தோல் அசைஇ கொன்றை தார் சுவல் புரள - கலி 1/11
கொலைக்குணமுடைய புலியின் தோலைக் கட்டிக்கொண்டு, கொன்றை மாலை தோளில் அசைய,
1.5
சாஅய்
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ
வயங்கு இழை உலறிய அடியின் - சிறு 16-18
ஓடியிளைத்து
வருந்துகின்ற நாயின் நாக்கினுடைய நல்ல அழகினை(த் தனதாக) வருத்தி,
ஒளிரும் அணிகலன்கள் (இல்லாது)பொலிவழிந்த அடியினையும்; 
1.6
தமனிய பொன் சிலம்பு ஒலிப்ப உயர் நிலை
வான் தோய் மாடத்து வரி பந்து அசைஇ - பெரும் 332,333
செம்பொன்னால் செய்த சிலம்புகள் ஆரவாரிப்ப, மேல்நிலையாகிய
வானத்தைத் தீண்டுகின்ற மாடத்திகண், நூலால் வரிதலையுடைய பந்தையடித்து இளைத்து
1.7
இழை அணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடும் தேர்
வரை மருள் நெடு மணல் தவிர்த்தனிர் அசைஇ
தங்கினிர் ஆயின் தவறோ தகைய - குறு 345/1-3
அணிகலன்கள் அணிந்து இயங்கிவரும் கொடுஞ்சியையுடைய நெடிய தேரை
மலையைப் போன்ற நெடிய மணற்குவியலில் நிறுத்திவைத்து, இளைப்பாறித்
தங்கியிருந்தால் அது தவறோ? தகைமையுடையவரே!
1.8
கரும் கோட்டு எருமை கயிறு பரிந்து அசைஇ
நெடும் கதிர் நெல்லின் நாள் மேயல் ஆரும் - ஐங் 95/1,2
கரிய கொம்பினையுடைய எருமை, தன்னைக் கட்டியிருக்கும் கயிற்றை அறுத்துக்கொண்டு சென்று,
நீண்ட கதிர்களையுடைய நெற்பயிரை அன்றைக்கு உணவாக மேய்ந்து வயிற்றை நிரப்பும்
- அசைஇ - சென்று - ஔவை.சு.து உரை, பொ.வே.சோ- உரை
1.9
நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை - திரு 109
செம்மைநிறம் பெற்ற ஆடையுடைய துடையின் மேலே கிடந்தது ஒரு கை

செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின்
சிதர் ஆர் செம்மல் தாஅய் மதர் எழில்
மாண் இழை மகளிர் பூண் உடை முலையின்
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ - அகம் 99/2-5
சிவந்த முகை விரிந்த முள்நிறைந்த முருக்க மலராகிய
வண்டு சூழ்ந்த வாடிய பூக்கள் பரந்து, கதிர்த்த அழகினையும்
மாண்புற்ற அணியினையுமுடைய மகளிரது பூண் அணிந்த முலையினைப் போன்ற
முகைகள் அலர்ந்த கோங்கம் பூக்களொடு கூடிக்கிடக்க
1.10
களையா நின் குறி வந்து எம் கதவம் சேர்ந்து அசைத்த கை
வளையின் வாய் விடல் மாலை மகளிரை நோவேமோ - கலி 68/8,9
உன்னைக் காணாத கலக்கத்தைக் களைந்து, நீ வரச்சொன்ன இடத்துக்கு வந்து, எம் கதவை அடைந்து
தட்டிய கைகளின்
வளையல் ஓசையால் தம் வருகையைத் தெரிவிப்பதை வழக்கமாகக் கொள்ளும் அந்தப் பரத்தையரை
நொந்துகொள்வோமோ 
2.1
மதவு உடை நாக்கொடு அசை வீட பருகி - அகம் 341/8
வலிமையுடைய நாவினால் தளர்ச்சி நீங்கக் குடித்து
2.2
வியன் புலம் படர்ந்த பல் ஆ நெடு ஏறு
மடலை மாண் நிழல் அசை விட - புறம் 339/1,2
அகன்ற புல்வெளியில் பரந்து மேய்ந்த பல ஆக்களோடு கூடிய நெடிய ஆனேறுகள்
பூக்களையுடைய மரங்கள் பயந்த பெரிய நீழலில் தங்கி அசைபோட

 மேல்
 
      அசைவு - (பெ) தளர்வு, Weariness, faintness, exhaustion
குவளை அம் பைம் சுனை அசைவு விட பருகி - மலை 251
குவளைமலர்கள் பூத்த அழகிய பசிய சுனையில் தளர்வு நீங்கப் பருகி

 மேல்
 
    அசோகம் - (பெ) ஒரு மரம், பிண்டி, Saraca indica
பொழி பெயல் வண்மையான் அசோகம் தண் காவினுள்
கழி கவின் இள மாவின் தளிர் அன்னாய் - கலி 57/12,13
பொழிகின்ற மழை போன்ற கொடையினையுடைய பாண்டியனின் அசோகமரத்துக் குளிர்ந்த சோலையில் உள்ள
மிகுந்த அழகினையுடைய இளம் மாந்தளிர் போன்றவளே


 மேல்
 
    அஞ்சனம் - (பெ) 1. மை, black ink
                     2. கண்ணுக்கு இடும் மை, Collyrium, black pigment for the eyelashes
1.
செறி இலை காயா அஞ்சனம் மலர - முல் 93
நெருங்கின இலையினையுடைய காயா அஞ்சனம்(போல்) மலர
- அஞ்சனம் - மை.
2.
ஓங்கு பூ வேழத்து தூம்பு உடை திரள் கால்
சிறு தொழு_மகளிர் அஞ்சனம் பெய்யும் - ஐங் 16/1,2
ஓங்கி உயர்ந்து நிற்கும் பூவையுடைய கொறுக்கச்சியின் உள்துளையையுடைய திரண்ட தண்டினில்
சிறுமியரான ஏவல் மகளிர் கண்மையையை இட்டுவைத்திருக்கும்

 மேல்
 
    அஞ்ஞை - (பெ) அன்னை, mother
அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே - அகம் 145/22
அமர்த்த கண்களுடைய என் அன்னையை (மகளை) அடித்த கையே

மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே - அகம் 15/19

 மேல்
 
    அஞர் - (பெ) துன்பம், grief. சோம்பல், laziness
கடும் பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே - குறு 76/6
கடும் குளிரைக்கொண்ட முன்பனிக்காலத்தில் நடுங்குகின்ற துன்பமடைய

வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்ப - பொரு 99
வலிய சோம்பலினால் உண்டான வருத்தம் பொதிந்த மனம் மகிழ்ந்து சிறக்க

 மேல்
 
    அட்டவாயில் - (பெ) ஒரு சங்ககால ஊர், a city in sangam period
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவாடனை சங்ககாலத்தில் அட்டவாயில் என்னும் பெயருடன்
விளங்கியது எனலாம்.
அட்டவாயில் என்பது போரிட்டு அழிக்கப்பட்ட வாயில் என்று பொருள்படும். ஆடு என்னும் சொல்லுக்கு
வெற்றி என்னும் பொருள் உண்டு. அட்டு ஆடு பெற்ற ஊர் ஆடனை. ஆடனை என்பது சிறப்பிக்கப்பட்டுத்
திருவாடனை ஆயிற்று. இது சங்ககாலத்தில் நெல்வளம் மிக்கு விளங்கியது.

நெடும் கொடி நுடங்கும் அட்டவாயில்
இரும் கதிர் கழனி பெரும் கவின் அன்ன - அகம் 326/5,6
நீண்ட கொடிகள் அசையும் அட்டவாயில் என்னும் ஊரிடத்தே உள்ள
நீண்ட கதிர்களையுடைய வயல்களின் பெரிய அழகினை ஒத்த

 மேல்
 
    அட்டில் - (பெ) அடுக்களை, சமையலறை, kitchen
விருந்து உண்டு ஆனா பெரும் சோற்று அட்டில் - பட் 262
(இடையறாது)விருந்தினர் உண்டு(ம்) குறையாத நிறைந்த சோற்றையுடைய அடுக்களை

 மேல்
 
    அடகு - (பெ) இலை, கீரை, edible leaves, greens
குறு நறு முஞ்ஞை கொழும் கண் குற்று அடகு
புன்_புல வரகின் சொன்றியொடு பெறூஉம் - புறம் 197/11,12
குறிய நாற்றத்தினையுடைய முன்னைக்கீரையின் கொழுவிய கண்ணில் கிளைக்கப்பட்ட குறிய இலையை
புல்லிய நிலத்தில் விளைந்த வரகினது சோற்றுடனே பெறுகின்ற

மென் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும்
அமிர்து இயன்று அன்ன தீம் சேற்று கடிகையும் - மது 531,532
மெல்லிய சுருள் விரிந்த சிறிய கொழுந்துகளையுடைய கீரைகளையும்,
அமிழ்தினால் செய்தது போன்ற இனிய சாற்றையுடைய கற்கண்டுத்துண்டுகளையும்

 மேல்
 
    அடர் - 1. (வி) 1. செறிந்திரு, be thick, be close together
                  2. தட்டி உருவாக்கு, தகடாகச்செய், mould by beating
                  3. கொல், kill
           - 2. (பெ) தகடு, thin, flat metal plate
           - 3. (பெ.அ) செறிவு மிக்க, dense
1.1
பகாஅர்
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால் - அகம் 181/23
விற்பாரது நறுமணப்பண்டங்கள் நாறுகின்ற வண்டுகள் செறிவாக மொய்க்கும் கூந்தல்

அடர் புகர்
சிறு கண் யானை செவ்விதின் ஏவி - புறம் 6/12,13
அடர்ந்த புகரினையுடைய
சிறு கண் யானையைத் தடையின்றி நேரே ஏவி

பொன் அடர்ந்து அன்ன ஒள் இணர் செருந்தி - அகம் 280/1
பொற்பூக்கள் நெருங்கியிருந்தாற் போன்ற ஒளிபொருந்திய கொத்துக்களையுடைய செருந்தி
1.2
அழல் புரிந்த அடர் தாமரை - புறம் 29/1
நெருப்பால் ஆக்கப்பட்ட தகடாகச் செய்த தாமரைப் பூவுடனே

நுண் உருக்கு_உற்ற விளங்கு அடர் பாண்டில் - மலை 4
கரைய உருக்குதலுற்ற விளங்கின தகடாகத் தட்டிய கஞ்சதாளமும்

ஐது அடர்ந்த நூல் பெய்து - புறம் 29/2
மெல்லிதாகத் தட்டிக் கம்பியாகச் செய்த நூலின்கண்ணே இட்டு
1.3
அல்லல் கூர்ந்து அழிவு_உற அணங்கு_ஆகி அடரும் நோய் - கலி 58/15
துயரம் மிக்கு, மனம் அழிய, வருத்தி என்னைக் கொல்லுகின்ற காமநோயை
2.
பொன் அடர் பூ புனை திருத்துவோரும் - பரி 12/12
பொன் தகட்டாலே செய்த பூவாகிய அணிகலன்களை அணிவோரும்

செப்பு அடர் அன்ன செம் குழை அகம்-தோறு - அகம் 9/4
செப்புத் தகட்டை ஒத்த சிவந்த தளிர்களிடந்தொறும்
3.
உள்ளுநர் உட்கும் கல் அடர் சிறு நெறி - அகம் 72/17
கடக்க எண்ணுநர் அஞ்சும் கற்செறிவையுடைய இட்டிய நெறியில்

 மேல்
 
     அடல்  - (பெ) 1. கொல்லுதல், killing
		   2. வலிமை, strength
		   3. போரிடுதல் being engaged in war
		   4. வெற்றி, victory
		   5. சோறு சமைத்தல், cooking
1.
கடல் படை அடல் கொண்டி - புறம் 382/1
கடற்படைகொண்டு பகைவரைக் கொல்லுதலால் கொண்ட பெரும்பொருள்
2.
போருள், அடல் மா மேல் ஆற்றுவேன் - கலி 141/9
போரில் வலிமையுள்ள குதிரையில் மேலிருந்து போரிடுவேன்
3.
வானவரம்பன் அடல் முனை கலங்கிய - அகம் 45/17
வானவரம்பனது போர் முனையில் கலங்கிய
4.
அடல் அரும் துப்பின் - புறம் 335/1
வெல்லுதற்கரிய வலிமையுடைய
5.
அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும் - புறம் 393/4
சோறு சமைப்பதில் உள்ள விருப்பத்தை மறந்த எம்முடைய பானையை நிமிர்த்திவைக்கும்

 மேல்
 
    அடார் - (பெ) கருங்கல் பலகையைச் சாய்வாக முட்டுக்கொடுத்து நிறுத்தி, அதன் கீழே உணவு
                 வைத்து விலங்குகளை அகப்படுத்தும் பொறி, 
                a trap for animals, placing a granite slab in a slanting position with a support
                and placing food inside   
விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி
புழை-தொறும் மாட்டிய இரும் கல் அடாஅர்
அரும் பொறி உடைய ஆறே - மலை 193-195
விளைந்த (தினைப்)புனத்தை (பன்றிகள்)சிறிது சிறிதாக அழித்து இல்லாமலாக்கிவிடுவதால், (அப்)பன்றிகளுக்குப்
பயந்து,
(அவை நுழையும்)ஒடுங்கிய வழிகள்தோறும் மாட்டிவைத்த பெரிய கல் பலகையால் செய்த அடார்
(என்னும்)சிறந்த பொறிகளை உடையன வழிகள்,

தினை உண் கேழல் இரிய புனவன்
சிறு பொறி மாட்டிய பெரும் கல் அடாஅர்
ஒண் கேழ் வய புலி படூஉம் நாடன் - நற் 119/1-3
தினையை உண்ணும் காட்டுப்பன்றி வெருண்டு ஓட, தினைப்புனத்தான்
சிறிய பொறியைப் பொருத்தி வைத்த பெரிய கல்லிலான சாய்வுப்பலகையில்
ஒளிரும் நிறமுடைய வலிமையான புலி மாட்டிக்கொள்ளும் நாட்டைச் சேர்ந்தவன்

 மேல்
 
    அடிசில் - (பெ) சோறு, boiled rice, உணவு, food
பைம் நிணம் ஒழுகிய நெய்ம் மலி அடிசில் - குறி 204
பசிய கொழுப்பு ஒழுகும் நெய் நிறைந்த சோறு

சுவைக்கு இனிது ஆகிய குய் உடை அடிசில் - புறம் 127/7
சுவைத்தற்கு இனிதாகிய தாளிப்பையுடைய உணவு

 மேல்
 
    அடியுறை - (பெ) 1. அடிதொழுது வாழ்வார், those who live in reverence to a worthy person
                     2. அடியாகிய புகலிடம், the feet (of a worthy person) as refuge.
                     3. அடிதொழுது வாழ்வது, living in reverence to a worthy person
                     4. அடிமை, slave, devoted person
1.
காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக என - பரி 1/65,66
உன்னை விரும்பும் அடியார்களோடும் சேர்ந்து உன் அடியவராம்
யாமும் பொருந்தி ஒன்றுபட்டு 'நாளும் சிறப்புற்றிருக்க
- அடியுறை - அடிக்கண் வாழ்வார் - புலியூர்க் கேசிகன் உரை
2.
காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக என - பரி 1/65,66
உன்னை விரும்பும் அடியார்களோடும் சேர்ந்து நினது திருவடியாகிய புகலிடத்தின்கண்ணே
யாமும் பொருந்தி ஒன்றுபட்டு 'நாளும் சிறப்புற்றிருக்க
- பொ.வே.சோ. உரை
3.
நய_தகு மரபின் விய_தகு குமர
வாழ்த்தினேம் பரவுதும் தாழ்த்து தலை நினை யாம்
நயத்தலின் சிறந்த எம் அடியுறை
பயத்தலின் சிறக்க நாள்-தொறும் பொலிந்தே - பரி 9/82-85
விரும்பத்தகுந்த பண்பினையுடைய வியக்கத்தக்க குமரவேளே!
உன்னை வாழ்த்துகின்றோம்! புகழ்கின்றோம்! தலைகளைத் தாழ்த்தியவராய் உன்னை நாம்
விரும்புதலினால் சிறப்புற்று விழங்கும் எமது அடிதொழுது வாழும் வாழ்வானது
நீ எமக்கு அருள்செய்வதனால் சிறந்து விளங்கட்டும் நாள்தோறும் மேலும் மேலும் அழகுபெற்று.

இருங்குன்றத்து அடியுறை இயைக என
பெரும் பெயர் இருவரை பரவுதும் தொழுதே - பரி 15/65,66
திருமாலிருஞ்சோலையின் அடியினில் வாழ்கின்ற பேறு அமைக என்று,
பெரும் புகழையுடைய கண்ணனும் பலராமரும் ஆகிய உம் அடிகளைப் போற்றித் தொழுகின்றோம்.
4.
நெடியோன்_மகன் நயந்து தந்து ஆங்கு அனைய
வடிய வடிந்த வனப்பின் என் நெஞ்சம்
இடிய இடை கொள்ளும் சாயல் ஒருத்திக்கு
அடியுறை காட்டிய செல்வேன் மடியன்-மின் - கலி 140/8-11
திருமால் மகனாகிய மன்மதன் விரும்பித் தந்ததைப் போன்று அப்படிப்பட்ட
சிறந்த உருவத்தைச் செத்துக்கியெடுத்த அழகினையுடைய, என் நெஞ்சம் என்ற அரண்
இடிந்துபோகும்படி நடுவே வந்து என்னை ஆட்கொள்ளும் சாயலையுடைய ஒருத்திக்கு
அடிமை என்பதை உலகுக்குக் காட்டுவதற்குச் செல்கிறேன், இதனை நீங்கள் வெறுக்கவேண்டாம்,

 மேல்
 
    அடு - (வி) 1. சமை, cook
               2. காய்ச்சு, boil
               3. கொல், kill
               4. அழுத்து, press down
               5. அழி, destroy
               6. அடுத்து இரு, அண்மையாகு, be next, near 
1.
மழை வீழ்ந்து அன்ன மா தாள் கமுகின்
புடை சூழ் தெங்கின் மு புடை திரள் காய்
ஆறு செல் வம்பலர் காய் பசி தீர
சோறு அடு குழிசி இளக விழூஉம் - பெரும் 363-366
மேகங்கள் விழுந்ததைப் போன்ற பெரிய தண்டினையுடைய கமுகுகளின்
பக்கத்தே சூழ்ந்த தெங்கினுடைய மூன்று புடைப்பினையுடைய திரண்ட காய்,
வழிச்செல்கின்ற புதியோருடைய மிக்க பசி தீரும்படி,
(அவர்)சோற்றை ஆக்குகின்ற பானை அசையும்படி விழுகின்ற

இல் அடு கள் இன் தோப்பி பருகி - பெரும் 142
(தமது)இல்லில் சமைத்த கள்ளுக்களில் இனிதாகிய நெல்லால் செய்த கள்ளை உண்டு,
2.
சேரி அம் பெண்டிர் சிறு சொல் நம்பி
சுடுவான் போல நோக்கும்
அடு பால் அன்ன என் பசலை மெய்யே - நற் 175/7-9
நம் சேரியிலுள்ள பெண்டிர் கூறிய இழிந்த சொற்களை நம்பிச்
சுடுவது போலப் பார்க்கிறாள் -
காய்ச்சுதற்குப் பெய்யும் பாலைப் போன்ற என் பசலை பரந்த மேனியை
3.
இரும் கேழ்
ஏறு அடு வய புலி பூசலொடு அனைத்தும்
இலங்கு வெள் அருவியொடு சிலம்பகத்து இரட்ட - மது 297-299
கரிய நிறத்தையுடைய
பன்றியைக் கொல்லும் வலிமையினையுடைய புலியின் ஆரவாரத்தோடு, எல்லா ஆரவாரமும்
விளங்குகின்ற வெள்ளிய அருவி முழக்கத்தோடே மலைச்சாரல்களில் எதிரொலிக்க
4.
தாறு அடு களிற்றின் வீறு பெற ஓச்சி - குறி 150
(பாகன்)அங்குசம் அழுத்திய ஆண்யானை போல எழுச்சியுண்டாகக் கைகளை உயர்த்தி,
5.
பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம்
நீர் அடு நெருப்பின் தணிய இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றே -  - நற் 154/8-10
பெருந்துன்பம் வந்து மோதியதால் குற்றமுள்ள நெஞ்சம்
நீர் பெய்த நெருப்பைப்போல தணியுமாறு, இன்று அவர்
வராமல் இருந்தால் நல்லது!

சிறை அடு கடும் புனல் அன்ன என்
நிறை அடு காமம் நீந்தும் ஆறே - நற் 369/10,11
அணையை உடைத்துச் செல்லும் விரைவான வெள்ளப்பெருக்கைப் போல என்
மனவுறுதியை உடைத்துச் செல்லும் காமவெள்ளத்தை நீந்திக்கடக்கும் வழி 
6.
குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊரே - புறம் 379/18
அரணை அடுத்த ஆழ்ந்த அகழினையும் நீண்ட மதிலினையும் உடைய ஊர்க்கு

 மேல்
 
    அடுக்கம் (பெ) - மலைச்சரிவு, mountain slope, பக்கமலை, smaller mountain adjacent to a larger one. 

	அடுக்கம் என்பது பக்கமலை எனப்படுகிறது. 

	அடுக்கம் என்ற பக்கமலை என்பது, ஒரு பெரிய மலைக்கு அருகில் அமைந்த சிறிய மலை என 
பால்ஸ் தமிழ் அகராதி கூறுகிறது. தமிழ்ப் பேரகராதியும் அவ்வாறே கூறுகிறது. அடுக்கம் என்ற சொல் 
சங்க இலக்கியங்களில் வரும் பெரும்பாலான இடங்களில், அங்கு மரங்கள் அடர்ந்து வளர்ந்திருக்கும் என்ற 
குறிப்பு கிடைக்கிறது.

	பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும் - அகம் 8/7
	கழை வளர் அடுக்கத்து இயலி ஆடு மயில் - அகம் 82/9
	தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு - அகம் 143/5
	வேய் பயில் அடுக்கம் புதைய கால்வீழ்த்து - அகம் 312/9
	வழை அமல் அடுக்கத்து வலன் ஏர்பு வயிரியர் - அகம் 328/1

	என்ற அடிகளால் இதனை அறியலாம். மரங்கள் அடர்ந்து வளரும் மலைப்பகுதி, ஓரளவுக்குச் 
சமதளப் பகுதியாக இருக்கவேண்டும். 
மேலும், 

	இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத
	கரும்பு எனக் கவினிய பெருங்குரல் ஏனல் - அகம் 302/9,10

	என்ற அடிகள் அடுக்கத்தில் தினைப்புனங்கள் இருந்தன என்று கூறுகின்றன. எனவே அடுக்கம் 
என்பது, உயரமான மலைகளுக்கு இடையே இருக்கும் அகன்ற வெளி என்பது பெறப்படுகிறது. இத்தகைய 
பகுதிகளில் மனிதக் குடியிருப்புகள் இருக்கும். கொடைக்கானல் மலையில், உச்சியில் இருக்கும் 
கொடைக்கானல் ஊருக்கும், அடிவாரப் பகுதியில் இருக்கும் கும்பக்கரை என்ற ஊருக்கும் இடையே அடுக்கம்
என்ற ஊர் இருக்கிறது. கொடைக்கானல் மலையின் உயரம் சுமார் 7000 அடி. இந்த அடுக்கம் கிராமம் 
4000 அடியில் அமைந்துள்ளது. இது இரண்டு பக்கங்களிலும் அமைந்த மலைச்சரிவுகளுக்கு இடையில் உள்ள 
சமதளப்பகுதியாக உள்ளது. (கீழே உள்ள பெரிய படம் அடுக்கம் மலைச் சரிவையும், அதன் உள் 
இடப்பட்டிருக்கும் சிறிய படம் அடுக்கம் என்ற ஊரையும் காட்டும்)

	

	இதைப்போன்றே, நாமக்கல் மாவட்டப்பகுதியில் கொல்லிமலையில் அடுக்கம் என்ற ஊர் 
அமைந்துள்ளது. எனவே, அடுக்கம் என்பது பெரிய மலைத்தொடர்ப் பகுதியில், மலைகளுக்கு 
இடையே அமைந்துள்ள மனிதர் வசிக்கக்கூடிய சமதளப் பகுதி என்பது தெளிவாகிறது.

 மேல்
 
    அடுக்கல் - (பெ) பார்க்க : அடுக்கம்
மலைச்சரிவில் இருக்கும் சமவெளியை அடுக்கம் என்று கண்டோம். 
இந்த அடுக்கத்திலிருந்து நேர்க் குத்தாக மலைச்சரிவில் மேலே உயரச் செல்லும் பாதையைப் 
பற்றிச் சொல்கிறது மலைபடுகடாம்.
 
அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது
இடிச்சுர நிவப்பின் இயவுக்கொண்டு ஒழுகி - மலை 19,20
அடுக்கலின் உயரத்தில் கடினம் என்று கொள்ளாது
கல்லை இடித்த வழியின் உயர்ச்சியில் வழியைக்கொண்டு நடந்து

மேலும் அடுக்கலில் உள்ள ஊருக்கு வெளியில் தினைப்புனங்கள் இருந்ததாக அறிகிறோம்.

கொடிச்சி காக்கும் அடுக்கல் பைம் தினை - நற் 22/1
அடுக்கல் நல் ஊர் அசை நடை கொடிச்சி - ஐங் 298/2
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்து_உழி - அகம் 348/10

 மேல்
 
    அடும்பு - (பெ) ஒருவகைக் கொடி அடப்பங்கொடி, Hareleaf, Ipomaea biloba
மான் அடி அன்ன கவட்டு இலை அடும்பின்
தார் மணி அன்ன ஒண் பூ கொழுதி - குறு 243/1,2
மானின் அடியைப் போன்ற கவர்த்த இலைகளைக் கொண்ட
(குதிரை)மாலையில் உள்ள மணியைப் போன்ற ஒள்ளிய பூவைக் கோதி

ஒண் பன் மலர கவட்டு இலை அடும்பின்
செம் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப - அகம் 80/8,9
ஒள்ளிய பலவாய மலர்களையுடைய கவடுபட்ட இலைகளையுடைய அடும்பினது
சிவந்த நிறமுடைய மெல்லிய கொடிகளை நின் தேர்ச்சக்கரம் அறுத்துவர

   	

இது நீர்நிலைகளை ஒட்டி வளர்வது

கொடும் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும் - நற் 349/2
அடும்பு இவர் மணல் கோடு ஊர  - குறு 248/5
அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடிய - பதி 51/7
அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ மணந்த_கால் - கலி 132/16
அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும் - அகம் 320/9

 மேல்
 
    அடை - 1. (வி) 1. சேர், arrive at, reach
                   2. நெருக்கமாக இரு, be close
                   3. சாத்து, மூடு, shut, close
                   4. அனுபவி, experience, enjoy
                   5. சேர்ந்திரு, தங்கியிரு, be full, replete, reside 
           - 2. (பெ) 1. இலை, leaf
                    2. முளை, sprout
                    3. ஒரு தின்பண்டம், an eatable, pancake
1.1
வானவரம்பன் நல் நாட்டு உம்பர்
வேனில் நீடிய வெம் கடற்று அடை முதல் - அகம் 389/16,17
வானவரம்பனது நல்ல நாட்டின் அப்பாலுள்ள
வெப்பம் மிக்க கொடிய  காட்டினை அடைந்த இடத்தே
1.2
உடும்பு அடைந்து அன்ன நெடும் பொரி விளவின் - நற் 24/2
உடும்பு செறிந்தாற் போன்ற நெடிய செதில்களையுமுடைய விளாமரத்திலிருந்து
1.3
பலர் புகு வாயில் அடைப்ப கடவுநர்
வருவீர் உளீரோ எனவும்
வாரார் தோழி நம் காதலோரே - குறு 118/3-5
பலரும் புகுவதற்குரிய வாசலை அடைக்க எண்ணி, வினாவுவோர்
உள்ளே வருவோர் இருக்கிறீர்களா என்று கேட்கவும்
வாரார் ஆயினர் நம் காதலர்.
1.4
சேறிரோ என செப்பலும் ஆற்றாம்
வருவிரோ என வினவலும் வினவாம்
யாங்கு செய்வாம்-கொல் தோழி பாம்பின்
பை உடை இரும் தலை துமிக்கும் ஏற்றொடு
நடுநாள் என்னார் வந்து
நெடு மென் பணை தோள் அடைந்திசினோரே - குறு 268
செல்கின்றீரோ என்று சொல்வதற்கும் வலிமையற்றோம்
வருவீரோ என்று கேள்விகேட்டலையும் செய்யோம்
எவ்வாறு செய்வோம்? தோழி! பாம்பின்
படத்தையுடைய பெரிய தலையைத் துண்டிக்கும் இடியோடு கூடிய
நள்ளிரவு என்று எண்ணாமல் வந்து
என் நீண்ட மென்மையான பருத்த தோள்களை அடைந்தவரை
1.5
வேலே குறும்பு அடைந்த அரண் கடந்து - புறம் 97/4
வேல்கள்தாம், குறும்பர் சேர்ந்த அரண்களை வென்று
- ஔவை.சு.து.உரை
அவன் வேல்களோ
குறும்பர் வாழும் அரண்களை வென்று
- சாலமன் பாப்பையா உரை.
2.1.
ஆம்பல் மெல் அடை கிழிய - அகம் 36/3
ஆம்பலின் மெல்லிய இலை கிழியுமாறு
2.2.
பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூ புற நல் அடை அளைஇ - பெரும் 277,278
பாம்பு வாழும் புற்றிலிருக்கும் புற்றாம்பழஞ் சோற்றை ஒக்கும்,
பொலிவுள்ள புறத்தினையுடைய நல்ல (நெல்)முளையை (இடித்து அதில்)கலந்து
2.3.
நல் வரி இறாஅல் புரையும் மெல் அடை
அயிர் உருப்புற்ற ஆடு அமை விசயம்
கவவொடு பிடித்த வகை அமை மோதகம்
தீம் சேற்று கூவியர் தூங்குவனர் உறங்க - மது 624-627
நல்ல வரிகளையுடைய தேனிறாலை ஒக்கும் மெல்லிய அடையினையும்,
கண்டசருக்கரையை வெப்பமேற்றிச் சமைத்தல் அமைந்த பாகினை(க் கூட்டிய)
உள்ளீட்டோடெ பிடித்த வகுப்பு அமைந்த கொழுக்கட்டைகளையும்,
இனிய கூழினையும் உடைய அப்ப வாணிகரும் தூங்குவனராய் உறங்க
- விசயம் ஆடு அமை என்னும் தொடரை அடைக்கு முன் கூட்டிப் பாகிலே சமைத்த அடை
என்பர் நச்சினார்க்கினியர் - பொ.வே.சோ.விளக்கம்

 மேல்
 
    அடைகரை - (பெ) நீரினை அடைத்துநிற்கும் கரை. 
நறு நீர் பொய்கை அடைகரை - சிறு 68

கான் பொழில் தழீஇய அடைகரைதோறும்
தாது சூழ் கோங்கின் பூ மலர் தாஅய் - மது 337,338

பொங்கு திரை பொருத வார் மணல் அடைகரை - நற் 35/1

குன்றத்து அன்ன குவவு மணல் அடைகரை - குறு 236/3

	

 மேல்
 
    அடைச்சு - (வி) 1. செருகு, insert
                    2. பதி, infix, inlay
1.
நெடும் தொடர் குவளை வடிம்பு உற அடைச்சி
மணம் கமழ் மனை-தொறும் பொய்தல் அயர - மது 588,589
நெடிய தொடராகவுள்ள குவளை மலர்களை வடிம்பிலே விழும்படி செருகி,
மணம் கமழும் (தம்)இல்லங்களிலெல்லாம் விளையாடுதலைச் செய்ய 
2
பகன்றை
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய
தோல் எறி பாண்டிலின் வாலிய மலர - அகம் 217/6-8
பகன்றையானது
நீலம் ஊட்டப்பெற்ற தோலின் நிறம் மறையும்படி பதித்த
கிடுகில் பதித்த வட்டக்கண்ணாடி போல வெள்ளியனவாக மலர

 மேல்
 
    அடைந்திரு - (வி) சார்ந்திரு, அடுத்திரு, be close to, be next to
புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர் - அகம் 234/15
முல்லைநிலத்தைச் சார்ந்திருந்த உறைதற்கு இனிதாலிய நல்ல ஊரின்கண்ணே

சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி - மலை 162
மலைச்சரிவை அடுத்திருந்த சிறிய ஊரை அடைந்து,

 மேல்
 
    அண்கணாளன் - (பெ) கண்ணுக்கு அண்மையில் இருப்பவன், he who is close to my eyes
அண்கணாளனை நகுகம் யாமே - அகம் 32/21
(என்)கண் முன்னே வந்து நிற்பவனை நகையாடுவோம் யாம்.
- கண் அண் ஆளனை - கண் அண்ணாளனை எனக் கூட்டுக - நாட்டார் உரை, விளக்கம்

 மேல்
 
    அண்டர் - (பெ) இடையர், cowherds, shepherds
திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின் - குறு 210/1,2
திண்ணிய தேரையுடைய நள்ளி என்பானின் காட்டினில் இடையர்களின்
பல பசுக்கள் கொடுத்த நெய்யோடு 

 மேல்
 
    அண்டிரன் - (பெ) கடையெழு வள்ளல்களில் ஒருவன். 
                           one of the seven philanthropists during the last sangam period
ஆய் அண்டிரன் எனப்படும் இவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவன். பொதியமலைச் சாரலில் உள்ள 
ஆய்க்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ஆயர் குல மன்னன் ஆவான் . இவனை 
வேள் ஆய் என்றும் அழைப்பர்.
இவன் காலத்தில், மேற்குக் கடற்கரைப் பட்டினமாயிருந்த நெற்குன்றம் என்ற பட்டினத்தை ஆய் என்ற
மன்னன் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகத்  தாலமி (Ptolemy) என்ற யவன ஆசிரியர் தன் 
Geographia என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இவரது காலம் கி.பி.90 முதல் கி.பி.168 வரை. 
எனவே இந்த அண்டிரனும் அந்தக் காலத்தைச் சேர்ந்தவனாதல் வேண்டும்.
இவனைப் பற்றிய குறிப்புகள் புறநானூறு 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 240, 241, 374, 375
ஆகிய பாடல்களில் கிடைக்கின்றன.
இவன் வீரன் என்பதையும், வள்ளல் என்பதையும் இந்தப் பாடல்கள் மூலம் அறியலாம்.

இரவலர் வரூஉம் அளவை அண்டிரன்/புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல - நற் 237/7,8
ஆஅய் அண்டிரன் அடு போர் அண்ணல் - புறம் 129/5
வழை பூ கண்ணி வாய் வாள் அண்டிரன்/குன்றம் பாடின-கொல்லோ - புறம் 131/2,3
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்/கோடு ஏந்து அல்குல் குறும் தொடி மகளிரொடு - புறம் 240/3,4
அண்டிரன் வரூஉம் என்ன ஒண் தொடி - புறம் 241/2
கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல - புறம் 374/16

 மேல்
 
    அண்ணல் - (பெ) 1. தலைவன், பெருமை மிக்கோன், chief, one of exalted worth
கொன் ஒன்று கிளக்குவல் அடு போர் அண்ணல்
கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம் - மது 207,208
மேலான ஒன்றைக் கூறுவேன், கொல்லும் போர்த்தொழில் வல்ல தலைவனே,
கேட்பாயாக, நெடிது வாழ்க, கெடுக நின் மயக்கம்,

அண்ணல் யானை அடு போர் வேந்தர் - மது 348
தலைமைச்சிறப்புடைய யானையைக் கொல்லும் -- போர்த்தொழிலை உடைய, வேந்தரை

மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ - பரி 9/7
நீல நிறக் கழுத்தினையுடைய சிவபெருமானுக்கு, மதிப்பு வாய்ந்த கார்த்திகை மகளிரிடத்தில் பிறந்தவனே! நீ

 மேல்
 
    அண்நா - (பெ) அண்ணா, உள்நாக்கு, uvula
அண்நா இல்லா அமைவரு வறு வாய் - பொரு 12
உள்நாக்கு இல்லாத (நன்றாக)அமைதல் பொருந்திய வறிய வாயினையும்

 மேல்
 
    அண - (வி) அண்ணாந்து பார், தலையை உயர்த்து, lift the head upward
நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை - குறி 35
“நெல்லைக் கொண்ட நீண்ட மூங்கிலுக்காக (துதிக்கையை நீட்டி)அண்ணாந்து பார்த்த யானை

பாம்பு அணந்து அன்ன ஓங்கு இரு மருப்பின் - பொரு 13
பாம்பு தலையெடுத்தாற் போன்ற ஓங்கிய கரிய தண்டினையும்

	

 மேல்
 
    அணங்கு  - 1. (வி) வருந்து, suffer, வருத்து, afflict
	   - 2. (பெ) வருத்தம், வருந்துதல், வருத்தும் தெய்வம், இல்லுறை தெய்வம்
கிராமப்புறங்களில் சில வீடுகளில் 'சாமி' இருப்பதாகச் சொல்வர். அது வீட்டின் ஏதாவது ஓரிடத்தில்
இருப்பதாகவும் சொல்வர். இதுவே இல்லுறை தெய்வம் எனப்படும். இது பொதுவாக வருத்தும்
தெய்வமாக இருக்கும். தீய கனா, காரணமின்றி நோய் வருதல், விபத்து நேரிடல் போன்று இந்தத்
தெய்வம் வீட்டிலுள்ளோரை வருத்தும். இதற்கான வழிபாடுகளைச் செய்து இந்த வருத்தத்தினின்றும்
தம்மைக் காத்துக்கொள்வர்.
எனவே ஒருவன் பித்துப்பிடித்ததைப் போலிருந்தால் அவனை அணங்கு தாக்கியதாகச் சொல்வர். ஒருவருக்குத்
துன்பம் நேரிட்டால் அவர் அணங்கியதாகவும் சொல்வர்.

ஆர் உயிர் அணங்கும் தெள் இசை - அகம் 214/14
அரிய உயிர்களை வருத்தும் தெள்ளிய ஓசை

அனையேன் ஆயின் அணங்குக என் என - அகம் 166/9
நான் அப்படிப்பட்டவனாயின் வருத்துவதாக என்னை என

என்ற அடிகள் அணங்கு என்பது வினையாக வருவதைக் குறிக்கும்.

அணங்கு என்பது இல்லுறை தெய்வம் என்பதைக் கீழ்க்கண்ட அடிகள் உணர்த்தும்.

அணங்கு வழங்கும் அகல் ஆங்கண் - மது 164
இல்லுறை தெய்வங்கள் உலாவும் அகன்ற உள்ளிடங்களில் 

மணம் புணர்ந்து ஓங்கிய அணங்கு உடை நல் இல் - மது 578
புதிய திருமணத்தால் உயர்ந்து நின்ற அணங்கு உடைய நல்ல இல்லங்கள்

இந்த அணங்கு மகளிர்மேல் ஏறி அவரைத் துன்புறுத்தும்.

அணங்கு உறு மகளிர் ஆடுகளம் கடுப்ப - குறி 175
அணங்கு ஏறிய மகளிர் வெறியாடும் களத்தைப் போன்று 

திறந்த வெளிகளில் இந்த அணங்குகள் இருக்கும்.

அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்
மூப்பு உடை முது பதி தாக்கு அணங்கு உடைய - அகம் 7/4
சுற்றித்திரியும் தோழியருடன் எங்கேயும் போகவேண்டாம்
தொன்மைவாய்ந்த இந்த இடங்கள் தாக்கி வருத்தும் தெய்வங்களை உடையன

இந்த இல்லுறை தெய்வங்கள் மிக அழகுள்ளதாக இருக்கும்.

தெள்ளரிப் பொற்சிலம்பு ஒலிப்ப ஒள்ளழல்
தா அற விளங்கிய ஆய்பொன் அவிரிழை
அணங்கு வீழ்வு அன்ன பூந் தொடி மகளிர் - மது 444-446
தெள்ளிய உள்பரல்களையுடைய பொற் சிலம்புகள் ஒலிக்க, ஒள்ளிய நெருப்பில் இட்டு
குற்றம் இன்றி விளங்கிய அழகிய பொன் அணிகலன்களையுடைய
தெய்வ மகளிர் இறங்கி வந்ததைப் போன்ற அழகிய வளையல் அணிந்த மகளிர் - 

இந்த அணங்குகள் நள்ளிரவில் சுற்றித்திரியும்.

அணங்கு கால்கிளரும் மயங்கு இருள் நடுநாள் - நற் 319/6
அணங்கு வெளிக்கிளம்பும் மயங்கிய இருளையுடைய நள்ளிரவு

இருப்பினும் இந்த அணங்கு பேய்களினின்றும் வேறுபட்டது.

பேயும் அணங்கும் உருவு கொண்டு ஆய் கோல்
கூற்றக் கொல் தேர் கழுதொடு கொட்ப - மது 632,633
பேய்களும் அணங்குகளும் உருவங்களைக் கொண்டு, ஆராயும் செங்கோன்மையுள்ள
கூற்றம் கொல்லுகின்ற தேராகிய கழுதுடன் சுற்ற 

வருத்துகின்ற தெய்வத்துக்கான அணங்கு என்ற சொல், பின்னர் எவ்வித வருத்தத்தையும் 
குறிக்கும் சொல் ஆயிற்று.

அணங்கு என நினையும் என் அணங்கு உறு நெஞ்சே - ஐங் 363/4
வருத்தும் தெய்வம் என்று எண்ணும் என் வருந்துகின்ற என் மனம்

 மேல்
 
    அணர் - (வி) உயர், மேல்நோக்கிச்செல், rise, move upwards
புணர் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து
அணர் செவி கழுதை சாத்தொடு வழங்கும் - பெரும் 79,80
ஒத்த கனமாகச் சேர்ந்த சுமையைத் தாங்கிய, வடு அழுந்தின வலிமையான முதுகினையும்,
உயர்த்திய செவியினையும் உடைய கழுதைகளுடைய திரளோடே - செல்கின்ற

அரா அணர் கயம் தலை தம்முன் - பரி 15/19
பாம்பாய் நிமிர்ந்து நிற்கும் மெல்லிய தலைகளைக் கொண்ட ஆதிசேடனின் அவதாரமாகிய பலராமன்

 மேல்
 
    அணல் - (பெ) கழுத்து, neck, தாடி, beard
கறை அணல் குறும்பூழ் கட்சி சேக்கும் - பெரும் 205
கறைபடிந்த கழுத்தினையுடைய காடை தன் புகலிடத்தில் தங்கும்

புலி போத்து அன்ன புல் அணல் காளை - பெரும் 138
ஆண்புலியைப் போன்ற புல்லென்ற தாடியையுடைய தலைவன்

 மேல்
 
   அணவரு(தல்) - (வி) நிமிர்ந்து பார், அண்ணாந்து பார், hold the head erect, look upward
ஆயிரம் விரித்த அணங்கு உடை அரும் தலை
தீ உமிழ் திறலொடு முடி மிசை அணவர - பரி 1/1,2
ஆயிரமாய்ப் படம் விரித்த அச்சந்தரும் (ஆதிசேடனின்)  அரிய தலைகளும்
சினமாகிய தீயை உமிழ்கின்ற வலிமையுடன் உன் திருமுடியின் நிமிர்ந்துநிற்க,

குண கடல் திரையது பறை தபு நாரை
திண் தேர் பொறையன் தொண்டி முன்துறை
அயிரை ஆர் இரைக்கு அணவந்து ஆங்கு - குறு 128/1-3
கிழக்குக் கடலின் அலைகளின் அருகிலிருக்கும் சிறகுகள் மெலிந்த நாரை
திண்ணிய தேரினைக் கொண்ட சேரனின் தொண்டியின் துறைக்கு முன் உள்ள
அயிரைக் கூட்டத்தை எண்ணி தலையைத் தூக்கிப் பார்த்தாற்போல

 மேல்
 
    அணி - 1. (வி) 1  உடுத்து, பூணு, தரி, சூடு, wear, put on                
                   2. பூசு, smear
                   3. சரிசெய், ஒழுங்குபடுத்து, position, arrange, smooth out
                   4. பர, படர், spread over
                   5. அழகுறு, be beautified
                   6. அழகூட்டு, அலங்கரி, decorate, adorn, 
                   7. சூழ், surround
                   8. அருகில் இரு, be close, be near
            - 2. (பெ) 1. அழகு, beauty
                     2. படை வகுப்பு, array of army
                     3. அலங்காரம், adornment, decoration
                     4. அணிகலன், நகை, ornament, jewel
                     5. வரிசை, order, row
 
1.1
பலவிதமான அணிதல்கள்.

நறு மலர் அணிந்த நாறு இரு முச்சி
குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி - மலை 182,183
நல்ல வாசனையுள்ள மலர்களைச் சூடிய இனிய மணம் வீசும் கரிய உச்சிக்கொண்டையையுடைய
குறமகள், (தான்)ஆக்கிய அருமையாக மலர்ந்து உதிரிஉதிரியான சோற்றை

வினை வல் யானை புகர் முகத்து அணிந்த
பொன் செய் ஓடை புனை நலம் கடுப்ப - நற் 296/2,3
போர்த்தொழிலில் வல்லமையுள்ள யானையின் புள்ளிகள் நிறைந்த முகத்தில் அணிந்த
பொன்னால் செய்யப்பட்ட முகபடாத்தின் வேலைப்பாட்டின் சிறப்பைப் போன்று

ஐயவி அன்ன சிறு வீ ஞாழல்
செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்
துறை அணிந்தன்று அவர் ஊரே இறை இறந்து
இலங்கு வளை நெகிழ சாஅய்
புலம்பு அணிந்தன்று அவர் மணந்த தோளே - குறு 50
வெண்சிறு கடுகுபோன்ற சிறிய பூக்களைக்கொண்ட ஞாழல்
செம்மையான மருதமரத்தின் வாடி உதிர்ந்த மலரோடு பரவிக்கிடந்து
தலைவனின் ஊரின் நீர்த்துறையை அழகுசெய்கிறது; இறங்கும் தோள்களை விட்டு நீங்கி
ஒளிரும் தோள்வளைகள் கழலும்படி மெலிந்து
தனிமைத் துயரைப் பூண்டுநிற்கின்றன அவர் தழுவிய தோள்க

பூண் அணிந்து எழிலிய வனைந்துவரல் இள முலை - பதி 65/6
பூண்கள் அணியப்பெற்று அழகு பெற்ற, வடிவமைக்கப்பட்டதைப் போன்ற இளமையான முலைகளையுடைய

அருவி ஆர்ப்ப முத்து அணிந்தன வரை - பரி 18/46
அருவி ஆரவாரத்துடன் விழுவதால் முத்துமாலை அணிந்தது போல் இருக்கிறது உன் மலை;

மழை இல் வானம் மீன் அணிந்து அன்ன - அகம் 264/1
மேகம் இல்லாத வானம் விண்மீன்களை அணிந்து விளங்கினாற் போல

கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து - நற் 368/3
வளைந்து உயர்ந்த அல்குலில் தழையாடை உடுத்திக்கொண்டு

புலத்தோடு அளவிய புகழ் அணிந்தோரும்
நலத்தோடு அளவிய நாண் அணிந்தோரும் - பரி 23/38,39
அறிவோடு கூடிய புகழை அணிகலனாகக் கொண்டோரும்,
கற்புடைமையோடு பொருந்திய நாணத்தை அணிகலனாகக் கொண்டோரும்
1.2
வடவர் தந்த வான் கேழ் வட்டம்
குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய
வண்டு இமிர் நறும் சாந்து அணிகுவம் - அகம் 340/16-18
வடநாட்டிலுள்ளார் கொணர்ந்த வெள்ளிய நிறத்தையுடைய வட்டக்கல்லில்
குடமலையாய பொதியில்சந்தனக் கட்டையால் பிற மணப்பொருள்கலையும் கூட்டிஉண்டாக்கிய
வண்டுகள் ஒலிக்கும் நறிய சாந்தினைப் பூசுவோம்
1.3
தாழ் கதுப்பு அணிகுவர் காதலர் - கலி 4/11
அவிழ்ந்துவிழுந்த கூந்தலைச் சரிசெய்வார் காதலர்
1.4
சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை - புறம் 354/8
தேமல் பரந்து உயர்ந்த அண்ணாந்து நிற்கும் இளமுலையும்
1.5
சுடர் பூ கொன்றை தாஅய நீழல்
பாஅய் அன்ன பாறை அணிந்து - மது 277,278
ஒளிவிடும் பூக்களுடைய கொன்றை பரந்த நிழலில்,
பரப்பினாற் போன்ற பாறை அழகுபெற்று,
- அணிந்து - அழகுற்று - பொ.வே.சோ உரை விளக்கம்
1.6
களைநர் இல் நோய் செய்யும் கவின் அறிந்து அணிந்து தம்
வளமையான் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய் - கலி 58/9,10
யாராலும் களையமுடியாத நோயைச் செய்யும் உன் அழகினை அறிந்தும், அதற்கு அழகூட்டி, தம்முடைய
செல்வச் சிறப்பின் செருக்கால் உன்னைத் தெருவில் போகவிட்ட உன் வீட்டாரின் தவறு இல்லை என்பாயோ?
1.7
கரும் கால் குறிஞ்சி சான்ற வெற்பு அணிந்து
அரும் கடி மா மலை தழீஇ - மது 300,301
கரிய காலையுடைய குறிஞ்சியின் ஒழுக்கம் அமைந்த பக்கமலைகள் சூழ்ந்து,
பெறுதற்கரிய சிறப்பினையுடைய பெரிய மலைகள் தழுவி(நிற்கும் குறிஞ்சி நிலம்),
1.8
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்
திரை வந்து பெயரும் என்ப நம் துறந்து
நெடும் சேண் நாட்டார் ஆயினும்
நெஞ்சிற்கு அணியரோ தண் கடல் நாட்டே - குறு 228/2-5
கடற்கரையை ஒட்டிய சிறுகுடியின் முற்றத்தில்
அலைகள் வந்து மீண்டு செல்லும் ; நம்மைப் பிரிந்து
மிகவும் தொலைவிலுள்ள நாட்டில் இருந்தாலும்
நம் நெஞ்சிற்கு மிகவும் அருகில் உள்ளவரின் குளிர்ந்த கடலையுடைய நாட்டுக்கு

ஊர்க்கும் அணித்தே பொய்கை - குறு 113/1
ஊருக்கு அருகில் உள்ளது பொய்கை;
2.1
அணி முலை துயல்வரூஉம் ஆரம் போல - சிறு 2
அழகிய முலையின்கண் கிடந்து அசைந்துநிற்கும் முத்துமாலை போல
2.2
அஞ்சினர்க்கு அளித்தலும் வெம் சினம் இன்மையும்
ஆண் அணி புகுதலும் அழி படை தாங்கலும் - சிறு 210,211
(தனக்கு)அஞ்சியவர்க்கு அருள்செய்தலையும், கொடிய வெகுளி இல்லாமையையும்,
(பகை)மறவரின் அணியில் (அச்சமின்றிப்)புகுதலையும், தோற்ற படையினரைப் பொறுத்தலையும்
2.3
வால் இழை மகளிர் விழவு அணி கூட்டும் - குறு 386/3
தூய அணிகலன்களையுடைய மகளிர் விழாவுக்குரிய அலங்காரங்களைத் தொகுக்கின்ற
2.4
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானை
பொலன் அணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்த நின்
பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே - பதி 11/18-20
வெற்றியால் உயர்ந்த கொம்புகளையுடைய குற்றம் தீர்ந்த யானையின்
பொன்னாற் செய்த அணிகலன்களையுடைய பிடரியின் மேல் ஏறியிருந்து சிறந்து விளங்கும் உன்
பலரும் புகழும் செல்வத்தை இனிதே காண்கிறோம் 
2.5
அணி அணி ஆகிய தாரர் கருவியர்
அடு புனலது செல அவற்றை இழிவர் -  - பரி 6/31,32
வரிசைவரிசையான போரின் முன்னணிப்படையினரைப் போல, தேவையான கருவிகளுடன்,
கரையை இடிக்கும் வெள்ளத்தினூடே செல்ல, தம் அணிகலன்களைக் களைவர்;

 மேல்
 
    அணில்வரிக்கொடும்காய் - (பெ) வெள்ளரிக்காய், cucumber
அணில்வரிக்கொடும்காய் வாள் போழ்ந்திட்ட
காழ் போல் நல் விளர் நறு நெய் - புறம் 246/4,5
அணிலினது வரி போலும் வரியையுடைய வளைந்த வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்திடப்பட்ட
விதை போன்ற நல்ல வெள்ளிய நறிய நெய்

 மேல்
 
    அணை - 1. (வி) 1. பொருந்து, ஒட்டியிரு, be close
                    2. படு, lie down
                    3. சேர், be in contact with
                    4. தழுவு, embrace, hug
                    5. கட்டு, fasten, tie
                    6. பாய், flow
                    7. அணுகு, approach
             - 2. (பெ) 1. படுக்கை, bed
                     2. மெத்தை, cushion mattress
                     3. தலையணை, சாயணை, pillow, long cylindrical pillow
                     4. தடுப்பு, தடை, obstruction
1.1
கால் அணைந்து எதிரிய கணை கோட்டு வாளை - நற் 340/4
வாய்க்காலை ஒட்டிச் சென்று மடைநீரை எதிர்கொண்ட திரண்ட கொம்பினையுடைய வாளை மீன்
1.2
பொழுது கழி மலரின் புனையிழை சாஅய்
அணை அணைந்து இனையை ஆகல் - அகம் 363/4,5
பகற்பொழுது கழியவே குவியும் மலர் போல, அழகிய அணியுடையாளே, வாடி
படுக்கையில் படுத்து இத்தன்மையுடையை ஆகாதே 
1.3
வரம்பு அணைந்து
இறங்கு கதிர் அலம்வரு கழனி - புறம் 98/18,19
வரம்பைச் சேர்ந்து
வளையும் நெற்கதிர் சுழலும் கழனியொடு

மா மலை அணைந்த கொண்மூ போலவும் - பட் 95
கரிய மலையைச் சேர்ந்த மேகம் போலவும்
1.4
உவ இனி வாழிய நெஞ்சே, ----
--------------- --------------- -------
தாழ் இரும் கூந்தல் நம் காதலி
நீள் அமை வனப்பின் தோளும்-மார் அணைந்தே - அகம் 87/12-16
மகிழ்வாயாக,  இப்பொழுது, நெஞ்சே ------
------------------ -------------------------
தாழ்ந்த கரிய கூந்தலையுடைய நாம் காதலியின்
நீண்ட மூங்கில் போன்ற வனப்பினையுடைய தோளினையும் தழுவிக்கொண்டு
1.5
இணைத்த கோதை அணைத்த கூந்தல் - திரு 200
பிணைக்கப்பட்ட மாலையினையும், சேர்த்தின கூந்தலையும் உடையராய்

களிறு அணைப்ப கலங்கின காஅ - புறம் 345/1
களிறுகளைக் கட்டுவதால் அவற்றால் திமிரப்பட்டு நிலைகலங்கின சோலையிலுள்ள மரங்கள்
1.6
காவிரி அணையும் தாழ் நீர் படப்பை - புறம் 385/8
காவிரியாறு பாயும் தாழ்ந்த நிலப்பாங்கினையுடைய தோட்டங்களையும்
1.7
மலை அயல் கலித்த மை ஆர் ஏனல்
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை
அணைய கண்ட அம் குடி குறவர் - நற் 108/1-3
மலைக்கு அயலாக செழித்துவளர்ந்த கரிய நிறங்கொண்ட தினைப்புனத்தில்
தன் துணையினின்றும் பிரிந்த கொடிய யானை
அணுகுவதைக் கண்ட அழகிய குடியிருப்பின் கானவர்
2.1
பொழுது கழி மலரின் புனையிழை சாஅய்
அணை அணைந்து இனையை ஆகல் - அகம் 363/4,5
பகற்பொழுது கழியவே குவியும் மலர் போல, அழகிய அணியுடையாளே, வாடி
படுக்கையில் படுத்து இத்தன்மையுடையை ஆகாதே 
2.2
பாம்பு_அணை பள்ளி அமர்ந்தோன் ஆங்கண் - பெரும் 373
பாம்பணையாகிய படுக்கையில் துயில் கொண்டோனுடைய திருவெஃகாவிடத்து
2.2,2.3
துணை புணர் அன்ன தூ நிற தூவி
இணை அணை மேம்பட பாய் அணை இட்டு - நெடு 132,133
தம் துணையைப் புணர்ந்த அன்னச் சேவலின் தூய நிறத்தையுடைய (சூட்டாகிய)மயிரால்
இணைத்த மெத்தையை மேலாகப் பரப்பி, (அத்தூவிகளுக்கு மேலாக)தலையணைகளும் இட்டு,
- அணை இட்டு - தலையனை, சாயணை போன்றவற்றை இட்டு - ச.வே.சு.உரை

அணை மருள் இன் துயில் அம் பணை தட மென் தோள் - கலி 14/1
தலையணை தருவதைப் போன்ற இன் துயிலைத் தரும், அழகிய மூங்கில் போன்ற பெரிய மென்மையான
தோள்களையும்,
2.4
கால் அணைந்து எதிரிய கணை கோட்டு வாளை
----------------- --------------------------
பைம் கால் செறுவின் அணை முதல் பிறழும் - நற் 340/4-8
வாய்க்காலை ஒட்டிச் சென்று மடைநீரை எதிர்கொண்ட திரண்ட கொம்பினையுடைய வாளை மீன்
---------------- ----------------------------------
பசுமையான வாய்க்காலையுடைய வயல் வரப்பின் அணையினடியில் பிறழும்

 மேல்
 
    அத்தம் - (பெ) கடினமான பாதை, rough and dangerous path
சங்க அக இலக்கியங்கள், பொருளீட்டுவதற்காகத் தலைவியை விட்டுப் பிரிந்த தலைவன், கடப்பதற்கு
அரிய, ஆபத்துகள் நிறைந்த வழியில் பயணம் மேற்கொள்வதாகக் கூறுகின்றன. அத்தகைய வழிகள்
அத்தம் எனப்பட்டன.
அத்தம் செல்வோர் அலறத் தாக்கிக்
கைப்பொருள் வௌவும் களவேர் வாழ்க்கை - பெரும் 39,40
வழிச்செல்வார் அலறும்படி அவரைத் தாக்கி
அவரின் கையிலுள்ள பொருளைக் கைக்கொள்ளும் களவுள்ள வாழ்க்கை

புல் இலை ஓமைய புலி வழங்கு அத்தம்
சென்ற காதலர் - நற் 107/6,7
புல்லிய இலைகளைக் கொண்ட ஓமை மரத்தையுடையதும், புலிகள் நடமாடும் அத்தத்தில்
சென்ற காதலர்

மழை பெயல் மாறிய கழை திரங்கு அத்தம்
ஒன்று இரண்டு அல பல கழிந்து - பதி 41/14,15
மேகங்கள் பெய்வது மாறிப்போன மூங்கில்கள் காய்ந்துபோன அத்தம்
ஒன்று, இரண்டு அல்ல, பலவற்றைக் கடந்து

 மேல்
 
    அத்தன் - (பெ) தந்தை, father
நன் நலம் தொலைய நலம் மிக சாஅய்
இன் உயிர் கழியினும் உரையல் அவர் நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ - குறு 93/1-3
நல்ல பெண்மை நலம் தொலையவும், மேனியழகு மெலியவும்
இனிய உயிர் நீங்கினாலும் சொல்லவேண்டாம், அவர் நமக்கு
தாயும் தந்தையும் அல்லரோ?

 மேல்

    அத்தி - (பெ) 1. சேரர் படைத்தலைவன், குறுநில மன்னன்,
                 a chietain, one of the commanders of the chEra king.
                 2. ஆட்டன் அத்தி, சோழநாட்டு நாட்டியக்காரன், a dancer of the chOzha country
1.
நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி
துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி
பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு
அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர் - அகம் 44/7-10
நன்னனும், ஏற்றை என்பவனும், நறிய பூண்களை அணிந்த அத்தியும்,
(பகைவர்) நெருங்குதற்கரிய மிக்க வலிமையுடைய கங்கனும், கட்டியும்,
பொன் அணிகலன்கள் அணிந்த வலிய வில்லையுடைய புன்றுறையும், என்பதாக
முன்பு அவர்கள் ஒன்றுகூடியிருந்த அளத்தற்கரிய சிறப்பு வாய்ந்த பாசறையில்,

நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றிறை ஆகியோர் சேரனது படைத்தலைவர்களாயிருந்து
தத்தம் நிலப்பகுதியை ஆண்ட குறுநில மன்னர்கள். இவர்கள் அனைவரும் ஒன்றுகூடி பாசறை
அமைத்துப் போரிட்டுச் சோழர் தளபதியாகிய பழையன் என்பானைக் கொன்றனர். அதைக் கண்டு
பொறுக்காமல், இவர்களுடனும், இவர்களைச் சேர்ந்த கணையன் என்பானுடனும் கழுமலம் என்ற
இடத்தில் போரிட்டு அனைவரையும் தோற்கடித்தான் சோழன் பெரும்பூண் சென்னி.
2.
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து
காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு-மன்னோ - அகம் 376/10,11
புனலில் விரும்பி ஆடிய அத்தி என்பானது அழகினை விரும்பி
காவிரி அவனை வௌவிக்கொண்டு கடலில் ஒளித்தாற்போல

மந்தி
பனி வார் கண்ணள் பல புலந்து உறைய
அடும் திறல் அத்தி ஆடு அணி நசைஇ
நெடு நீர் காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு - அகம் 396/11-14
ஆதிமந்தி என்பாள்
நீர் ஒழுகும் கண்ணினையுடையாளாய்ப் பலவற்றையும் வெறுத்திருக்க
கடிய திறல் பொருந்திய ஆட்டன் அத்தி என்னும் அவள் காதலன் ஆடும் அழகினை விரும்பி
நீர்ப்பெருக்கினையுடைய காவிரியாறு கொண்டு மறைந்தாற்போல

ஆட்டன் அத்தி - ஆதிமந்தி ஆகியோரின் வரலாறு அகநானூறு 222, 226, 376 ஆகிய பாடல்களில்
காணப்படுகிறது.

 மேல்
 
    அத்திரி - (பெ) கோவேறு கழுதை, mule
அகவரும் பாண்டியும் அத்திரியும் ஆய் மா
சகடமும் - பரி 10/16
அழைத்தற்கரிய மாட்டுவண்டியும், கோவேறு கழுதையும், தெரிந்தெடுத்த குதிரை பூட்டிய
வண்டியும்

மேலும்,
கழி சேறு ஆடிய கணை கால் அத்திரி/குளம்பினும் சே_இறா ஒடுங்கின - நற் 278/7,8
கழி சுறா எறிந்த புண் தாள் அத்திரி/நெடு நீர் இரும் கழி பரி மெலிந்து அசைஇ - அகம் 120/10,11
கொடு நுகம் நுழைந்த கணை கால் அத்திரி/வடி மணி நெடும் தேர் பூண ஏவாது - அகம் 350/6,7

 மேல்
 
    அத்தை - (இ.சொ) முன்னிலை அசை, a poetic expletive joined to a verb in the second person
புலவர் தோழ கேளாய் அத்தை - குறு 129/2
அறிவுடையார்க்குத் தோழனே! கேட்பாயாக!

பொலிக அத்தை நின் பணை தயங்கு வியன் களம் - புறம் 373/27
விளங்குக, நின்னுடைய முரசுமுழங்கும் அகன்ற போர்க்களம்

 மேல்
 
    அதர் - (பெ) 1. வழி, path
                  2. சக்கை, பொட்டு, husk with paticles of grain used as fodder
1.
கற்களும், முட்களும் செறிந்த கரடுமுரடான காட்டுநிலத்தில், மனிதர்கள் அல்லது விலங்கினங்கள் அடிக்கடி
பயன்படுத்தியதால் ஏற்படும் இயற்கையான பாதை அதர் எனப்படுகிறது. பெரும்பாலும் விலங்கினங்களின்
நடைபாதையே அதர் எனலாம்.

மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின் - பெரும் 106
ஆன்_இனம் கலித்த அதர் பல கடந்து - புறம் 138/1
களிறு வழங்கு அதர கானத்து அல்கி - பொரு 49
புலி வழங்கு அதர கானத்தானே - ஐங் 316/5
மான் அதர் சிறு நெறி வருதல் நீயே - அகம் 168/14

என்ற அடிகளால் இதனை அறியலாம்.
2.
உழுத்து அதர் உண்ட ஓய் நடை புரவி - புறம் 299/2
உழுந்தின் சக்கையைத் தின்று வளர்ந்ததளர்ந்த நடையையுடைய குதிரை
- ஊறவைத்து அரைக்கப்பட்ட உழுந்து ஈண்டுச் சக்கை எனப்பட்டது. அதன் உமியே சக்கையெனப்பட்டது
என்றும் கூறுவர்- - ஔவை.சு.து.உரை, விளக்கம்.
- உழுத்து அதர் - உழுந்தின் பொட்டு - ச.வே.சு.உரை

 மேல்
 
    அதரி - (பெ) அதரி கொள்ளுதல் - கதிரடித்துக் கடாவிடுதல், 
                    threshing out grain by making bulls or buffalloes walk on them circularly
                    after beating the sheaves on a hard surface   
நெல்லை அறுவடை செய்து, தலையடி முடிந்தபின், நெற்கதிர்களை வட்டமாகத் தரையில் 
பரப்பி, அவற்றின் மீது பூட்டப்பட்ட எருதுகளை வட்டமாக வரச்செய்வர். எருதுகள் மிதிப்பதால் 
நெல்மணிகள் உதிரும்.
இதனைக் கடாவிடுதல் என்பர். இதுவே அதரி கொள்ளுதல்.

அதரி கொள்பவர் பகடு பூண் தெண் மணி - மது 94
கடாவிடுகின்றவர் எருதுகள் பூண்ட தெளிந்த மணியோசை

	

 மேல்
 
    அதலை - (பெ) ஒரு குன்றின் பெயர், the name of a hill
அதலை குன்றத்து அகல் வாய் குண்டு சுனை - குறு 59/2
இது அரலை என்றும் அழைக்கப்படும். இது சேலம் மாவட்டத்தில் ஓசூர்ப் பகுதியில் உள்ள அரலிகுண்டா
என்னும் மலை என்பர்.

 மேல்
 
    அதவம் - (பெ) அத்தி, country fig
இது அதவு என்றும் அழைக்கப்படும்
அதவ தீம் கனி அன்ன செம் முக
துய் தலை மந்தி வன் பறழ் - நற் 95/3,4
அத்தியின் இனிய கனி போன்ற சிவந்த முகத்தையும்,
பஞ்சுத்தலையையும் கொண்ட குரங்கின் வலிய குட்டி

	

ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போல - குறு 24/3,4
ஆற்றுப் பக்கத்தில் உயர்ந்து நிற்கும் வெள்ளைக் கிளைகளையுடைய அத்திமரத்தின்
ஏழு நண்டுகள் பற்றிக் குழைத்த ஒரு பழம் போல

 மேல்
 
    அதள் - (பெ) தோல், skin, மரப்பட்டை, bark
புலி உரி வரி அதள் கடுப்ப கலி சிறந்து
நாள்பூ வேங்கை நறுமலர் உதிர - அகம் 205/19,20
புலியின் உரியாகிய வரிகளையுடைய தோலைப் போன்று
அன்றைய பூக்களைக் கொண்ட வேங்கைமரத்தின் நறிய மலர்கள் உதிர

 மேல்
 
    அதிகன் - (பெ) சங்ககாலக் குறுநில மன்னர் வகை. a chieftain of sangam period
இந்த மன்னர் வழியில் வந்தவன் அஞ்சி எனப்படுபவன். 
இவன் அதியன், அதியமான், அதியமான் நெடுமான் அஞ்சி என்று அழைக்கப்படுவான். 
சங்கப்புலவரான ஔவையாருக்கு மிகவும் நெருங்கிய நண்பன்.
சேலம் மாவட்டம், தகடூரைத் தலைநகராகக் கொண்டவன்.

அரவக் கடல் தானை அதிகனும் - சிறு 103
அதியமான் பரிசில் பெறூஉம் காலம் - புறம் 101/5
மதி ஏர் வெண்குடை அதியர் கோமான் - புறம் 392/1
அள்ளனைப் பணித்த அதியன் - அகம் 325/8

இந்த அதியமான் பெயர் தாங்கிய ஒரு பிராமிக் கல்வெட்டு ஜம்பை என்ற இடத்தில்
கண்டுபிடிக்கப்பட்டது. ஜம்பை விழுப்புரம் மாவட்டத்தில், தென் பெண்ணை ஆற்றங் கரையில், திருக்கோயிலூர்
நகரத்துக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர். இவ்வூரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குகை
ஒன்றிலேயே இக் கல்வெட்டு அமைந்துள்ளது. குகையின் உட்பகுதியில் அமைந்துள்ளமையால் மழை, வெயில்,
காற்று போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படாமல் இன்னும் தெளிவாகவே உள்ளது. 
கிமு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கணிக்கப்பட்டுள்ள இக் கல்வெட்டு தமிழ்நாட்டு வரலாற்றைப்
பொருத்தவரை மிகவும் முக்கியத்துவம் கொண்ட ஒரு கல்வெட்டாகக் கருதப்படுகின்றது.
1981 ஆம் ஆண்டில் தமிழ்நாடு தொல்லியல்துறை ஆய்வு மாணவர் ஒருவரால் இக் கல்வெட்டு
கண்டுபிடிக்கப்பட்டது. 
இக்கண்டுபிடிப்பு அண்மைக்காலக் கல்வெட்டுக் கண்டு பிடிப்புக்களுள் முக்கியமான கண்டுபிடிப்பாக இருந்தும்
பல அறிஞர்கள் இதன் நம்பகத் தன்மை குறித்து ஐயுறவு கொண்டிருந்தனர்

	

 மேல்
 
    அதிரல் - (பெ) காட்டுமல்லிகை, wild jasmine, Jasminum angustifolium 
அதிரல் பூத்த ஆடு கொடி படாஅர் - முல் 51
காட்டு மல்லிகை பூத்த அசைகின்ற கொடியினையுடைய புதர்கள்

இதன் அரும்பு குயிலின் வாய் போல் இருக்கும்.
குயில் வாய் அன்ன கூர் முகை அதிரல் - புறம் 269/1

இது ஓர் ஆண்டில் இளவேனில் காலத்தில் பூக்கும்
முதிரா வேனில் எதிரிய அதிரல் - நற் 337/3
முற்றாத இளவேனில் காலத்தை எதிர்நோக்கிய காட்டுமல்லிகையையும்

இது ஒரு நாளில் மாலையில் மலரும்
எல்லி மலர்ந்த பைம் கொடி அதிரல் - அகம் 157/6
இரவில் மலர்ந்த பசிய அதிரல் கொடியை

	

 மேல்
 
    அந்தணர் - (பெ) 1. அறவோர், அழகிய தட்பமுடையார், Gracious one, Virtuous person
                    2. பார்ப்பனர், Brahmins
                    3. இறைவன், God
1,2
விரி நூல் அந்தணர் விழவு தொடங்க
புரிநூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப - பரி 11/78,79
விரிந்த மெய்ந்நூல்களையுணர்ந்த அறவோர் திருவிழாவைத் தொடங்கா நிற்ப
முப்புரியாகிய பூணுலையுடைய பார்ப்பனர் அவ்விழவின்கண் பொன்கலங்களை ஏந்தாநிற்ப
- விரி நூல் அந்தணர் என்றது அறவோரை.
- புரிநூல் அந்தணர் என்ரது பார்ப்பனரை
- பொ.வே.சோ.உரை, விளக்கம் 
2.
மிகப்பெரும்பாலான இடங்களில் அந்தணர் என்பது பார்ப்பனரையே குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம் - திரு 96
அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் - சிறு 204
ஓதல் அந்தணர் வேதம் பாட - மது 656
நீ என பொழியுமால் அந்தணர் அரு மறை - பரி 3/14
ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து - கலி 1/1
முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல் - கலி 126/4
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே - புறம் 1/6
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு - புறம் 361/4
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த - புறம் 397/20

யானே பரிசிலன், மன்னும் அந்தணன் - புறம் 200/13
அந்தணன் புலவன் கொண்டுவந்தனனே - புறம் 201/7
இவை, பார்ப்பனராகிய புலவர் கபிலரின் கூற்றுகள்.
3.
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ - பரி 5/22
பிரம்மதேவன் செலுத்தும் முறையை அறிந்தவனாக, குதிரையைச் செலுத்த,

இமைய வில் வாங்கிய ஈர்ம் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக - கலி 38/1,2
இமையமலையாகிய வில்லை வளைத்த, கங்கை தங்கும் சடைமுடியோனாகிய சிவன்
உமையவளோடு அமர்ந்து உயர்ந்த மலையில் இருக்கும்போது,

அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும் - கலி 99/2
அறத்தொழிலாக இன்புறுத்தும் அந்தணராகிய வியாழன், வெள்ளி ஆகிய இருவரும்

 மேல்
 
    அந்தரம் - (பெ) 1. உள்வெளி, interior space
                   2. தேவலோகம், heaven
                   3. அப்பாலுள்ள நாடு, distant country
                   4. வானம், sky
                   5. வெளி, open space
1.
அர வழங்கும் பெரும் தெய்வத்து
வளை ஞரலும் பனி பௌவத்து
குண குட கடலோடு ஆயிடை மணந்த
பந்தர் அந்தரம் வேய்ந்து
வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல் - பதி 51/13-17
பாம்புகள் நடமாடும் பெரும் தெய்வங்கள் உறையும் இமயமலை,
சங்குகள் ஒலிக்கும் குளிர்ந்த பெருங்கடல்,
கிழக்கிலும், மேற்கிலும் கடல்கள் ஆகிய இவற்றிடையே உள்ள அரசரும் சான்றோரும் கூடிச் சேர்ந்த
பந்தலின் உள்புறத்தை (நெய்தல் மாலைகளால்) அலங்கரித்தலால்
வளமை மிக்க மலர்ந்த கண்போன்ற நெய்தல் மலர்கள்
2.
பஞ்சாய் கூந்தல் பசு மலர் சுணங்கின்
தண் புனல் ஆடி தன் நலம் மேம்பட்டனள்
ஒண் தொடி மடவரால் நின்னோடு
அந்தர_மகளிர்க்கு தெய்வமும் போன்றே - ஐங் 76
பஞ்சாய்க் கோரை போன்ற கூந்தலையும், புதிய மலர் போன்ற தேமலையும் கொண்டு,
குளிர்ந்த நீர்ப்பெருக்கில் ஆடித் தன்னுடைய பெண்மை நலத்தில் மேன்மையுற்றாள்
ஒளிரும் வளையல்களையும் இளைமையையும் கொண்ட அவள், உன்னுடன் -
வானுலக மகளிர்க்குத் தெய்வமே போன்று
- குலமகளிர் தம் கற்புடைமையால் அந்தர மகளிரும் வணங்கும் பத்தினித்தெய்வமாய்
நலம் மேம்பட்டுப் பலரும் அறியத்தக்க விளக்கம் எய்துவர் - ஔவை.சு.து.விளக்கம்
3.
அந்தரத்து
அரும் பெறல் அமிழ்தம் அன்ன
கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே - புறம் 392/19-21
கடற்கு அப்புறத்ததாயுள்ள நாட்டிலுள்ள
பெறற்கரிய அமுதம் போன்ற
கரும்பை இந்நாட்டிற்குக் கொண்டுவந்தவனுடைய பெரிய வழித்தோன்றல்
- ஔவை.சு.து.உரை
4.
அந்தரத்து
இமிழ் பெயல் தலைஇய இன பல கொண்மூ - அகம் 68/14,15
வானிடத்தே
இடித்ததுடன் பெய்தலைச் செய்த கூட்டமாய பல மேகங்கள்
- நாட்டார் உரை

அந்தர பல் இயம் கறங்க - திரு 119
ஆகாயத்தினது துந்துபி ஒலிப்ப
- நச்.உரை
5.
அந்தர வான் யாற்று ஆயிரம் கண்ணினான்
இந்திரன் ஆடும் தகைத்து - பரி 24/96,97
அந்தரத்திலே உள்ள ஆகாயகங்கையில் ஆயிரம் கண்ணையுடையவனாகிய
இந்திரன் நீராடும் தன்மையையுடையது.

மேல் 
 
    அந்தி - (பெ) 1. மாலையில் ஒளி மங்கும் நேரம், Evening twilight
                 2. சந்தியா காலம், Twilight, as joining day with night
                 3. ஊழிக்காலம், Dissolution of the universe at the end of an aeon
1.
அந்தி மாட்டிய நந்தா விளக்கின் - பட் 247
(அவர்கள்)அந்திக்காலத்தே கொளுத்தின அணையாத விளக்கினையுடைய
2.
காலை அந்தியும் மாலை அந்தியும் - புறம் 34/8
காலையாகிய அந்திப்பொழுதும், மாலையாகிய அந்திப்பொழுதும்
3.
படர் அணி அந்தி பசும்_கண்_கடவுள்
இடரிய ஏற்று எருமை நெஞ்சு இடந்து இட்டு
குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம் - கலி 101/24-26
துன்பத்தை நுகர்கின்ற அந்திக்காலமாகிய ஊழிமுடிவில் ஒருபாதி உமையின் பச்சைநிறத்தைக் காட்டும்
இறைவன்
வருத்தத்தைச் செய்யும் எருமை ஏற்றை ஏறுகின்ற கூற்றுவனின் நெஞ்சைப் பிளந்திட்டு
அவன் குடலைக் கூளிப்பேய்க்கு வயிறாரக் கொடுக்கின்றவனைப் போன்றிருக்கிறது;

 மேல்
    அந்தில் - 1. (வி.அ) அவ்விடம், there
              2. (இ.சொ) அசைச்சொல், an expletive, 
1.
வருமே சே_இழை அந்தில்
கொழுநன் காணிய அளியேன் யானே - குறு 293/7,8
வருகிறாள் செவ்விய அணிகலன்களை அணிந்த பரத்தை, அவ்விடத்தில்
தலைவனைக் காணும்பொருட்டு; இரங்கத்தக்கவள் நான்
2.
அஞ்சல் என்மரும் இல்லை அந்தில்
அளிதோ தானே நாணே - குறு 395/6,7
நீ அஞ்சற்க என்று என்னை ஆற்றுவிப்பாரும் இலராயினர்
இரக்கத்தக்கதாயிருந்தது எனது நாணம்
அந்தில் - அசைநிலை - பொ.வே.சோ உரை - விளக்கம்.
1,2
பல் மீன் கூட்டம் என் ஐயர் காட்டிய
எந்தையும் செல்லும்-மார் இரவே அந்தில்
அணங்கு உடை பனி துறை கைதொழுது ஏத்தி
யாயும் ஆயமோடு அயரும் - அகம் 240/6-9
தான் அகப்படுத்த பலவாய மீன் கூட்டங்களை என் அண்ணன்மார்க்குக் காட்டுதற்கு
என் தந்தையும் இரவில் மனைக்கன் போதரும், ஆங்கே
தெய்வமுடைய குளிர்ந்த துறையில், அத் தெய்வத்தைக் கையால் வணங்கித் துதித்து
என் தாயும் ஆயத்தாருடன் அதற்குச் சிறப்புச் செய்யும்.
- அந்தில் - அசை என்னலுமாம் - நாட்டார் உரை

 மேல்
 
    அந்துவன்  - (பெ) சங்ககாலச் சான்றோர் ஒருவரின் பெயர், a sangam poet

நல்லந்துவனார் என்ற சங்க காலப் புலவர் திருப்பரங்குன்றத்தைப் பாடியுள்ளார் (பரிபாடல்-8)
அதனை மதுரை மருதனிளநாகன் என்ற சங்கப் புலவர் ஓர் அகப்பாட்டில் குறிப்பிடுகிறார்/

அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை - அகம் 59/12

அந்துவன் சாத்தன் என்ற சங்கச் சான்றோர் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்ற
பாண்டிய மன்னனுக்கு நண்பராக இருந்துள்ளார் என புறநானூறு (பாடல் 71) கூறுகிறது.

 மேல்
 
    அம்பணம் - (பெ) 1. மரக்கால், a measure for grains,
                     2. நீர்செல்லும்குழாய், water pipe
1.
அம்பண அளவை உறை குவித்து ஆங்கு - பதி 71/5
மரக்கால்களை நெற்குவையில் செருகி வைத்தது போல

அம்பணத்து அன்ன யாமை ஏறி - ஐங் 43/1
மரக்காலை ஒத்த ஆமையின் முதுகின்மேல் ஏறி
2.
கிம்புரி பகு வாய் அம்பணம் நிறைய - நெடு 96
மீனின் வாய்போன்று பகுக்கப்பட்ட நீர்விழும் குழாய் நிறைய

 மேல்
 
    அம்பர் - 1. (வி.அ) அங்கே, yonder, 
                    2. (பெ) ஒரு நகரம், a city 
1.
அரும் சுரம் இறந்த அம்பர் - பெரும் 117
அரிய பாலை நிலத்தைக கடந்தபின்னர், அங்கே
2.
நெல் விளை கழனி அம்பர் கிழவோன் - புறம் 385/9
நெல் விளையும் வயல்வெளிகளையுடை அம்பர் நகரத்துக் கிழவோன்

 மேல்
 
    அம்பல்  - (பெ) தலைவன், தலைவி களவு ஒழுக்கத்தைப் பற்றி ஊரில் சிலர் கூடிப்பேசும் பழிச்சொற்கள்
                      private gossip about the clandestine love affair between the hero and heroine
அலர் வாய் பெண்டிர் அம்பல் தூற்ற - அகம் 70/6
அலர் கூறும் வாயினையுடைய பெண்டிர் அம்பலாக்கித் தூற்ற

அம்பல் என்பது ஒருசிலர் தமக்குள் மறைவாகப் பேசிக்கொள்வது. இதுவே ஊர்முழுக்கப் பேச்சானால்,
அது அலர் எனப்படும். பார்க்க - அலர் - 2.2

 மேல்
 
    அம்பி - (பெ) தோணி , a small boat
இடிக்குரல் புணரிப் பௌவத்திடுமார்
நிறையப் பெய்த அம்பி காழோர்
சிறையருங் களிற்றின் பரதவர் ஒய்யும் - நற் 74/2-4
இடிமுழக்கத்தைக் கொண்ட அலைகளையுடைய பெருங்கடலில் இடும்பொருட்டு
நிறைய ஏற்றப்பட்ட தோணியை அங்குசத்தையுடையோரால்
அடக்குதற்கரிய களிற்றினைப் போல பரதவர் செலுத்த

 மேல்
 
    அமர் - 1. (வி) 1. இரு, உட்கார், abide, remain, be seated
                   2 பொருந்து, be constituted, comprise.
                   3. விரும்பு, wish, desire
                   4. போர்செய், be at war
                   5. மாறுபடு, be at strife
                   6. அடக்கமாயிரு, அடக்கு, be composed, restrain
           - 2. (பெ) 1. போர், battle, war
                    2. விருப்பம், desire, wish
1.1
ஆல்_அமர்_செல்வன் அணி சால் பெரு விறல் - கலி 81/9
ஆலமரத்தின் கீழ் இருக்கும் இறைவனின் அழகு அமைந்த மகனான முருகனை

கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி - பெரும் 75
கடம்பிடத்தே இருந்த நெடிய முருகனை ஒத்த தலைமைச்சிறப்பையும்
1.2
அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ - திரு 255
அறுவராலே பெறப்பட்ட ஆறு வடிவு பொருந்தின செல்வனே

தன்னொடு புணர்த்த இன் அமர் கானல் - நற் 267/6
தன்னோடு தலைவியைச் சந்தித்த இனிமை பொருந்திய கடற்கரைச் சோலைக்குத்
1.2,1.3
ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன்
கன்று அமர் நிரையொடு கானத்து அல்கி - பெரும் 175,176
ஒன்றாய்ப் பொருந்தின உடையினையும் உடைய, கூழை உண்ணுகிற இடைமகன்
கன்றுகளை விரும்பும் ஆனிரைகளோடே காட்டில் தங்கி,
1.3
தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே - நற் 348/6
தாம் விரும்பும் துணையோடு வண்டுகள் ஒலிக்கின்றதானது;
1.4
பேர் அமர் கண்ணி இருந்த ஊரே - குறு 131/2
பெரிய போர்செய்யும் கண்ணையுடைய தலைவி இருந்த ஊர்
 - தம்மைக் கண்டாரின் நெஞ்சோடு போர்செய்யும் கண்களையுடையாள்
- பொ.வே சோ.உரை, விளக்கம்
1.5
முருகு அமர் பூ முரண் கிடக்கை - பட் 37
மணம் பொருந்திய பூக்கள் நிறத்தால் தம்முள் மாறுபட்டுக் கிடப்பதினால்

கொடும் குழைக்கு அமர்த்த நோக்கம் - அகம் 3/17
வளைந்த குழையோடு மாறுபட்ட நோக்கமானது

அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள்
விளி நிலை கேளாள் தமியள் - அகம் 5/1,2
நாம் அளிசெய்யும் நிலையினைப் பொறாமல் மாறுபட்ட முகத்தினளாய்
நாம் அழைத்தலைக் கேளாமலேயே நாண் முதலியவற்றைத் துறந்தவளாய்
1.6
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கத்தைக் காண்க
2.1
மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து - திரு 272
மிக்குச் செல்கின்ற போர்களை முடித்த வென்று அடுகின்ற (உன்னுடைய)மார்பிடத்தே

வேத்து அமர் கடந்த வென்றி நல் வேல் - அகம் 27/15
மன்னர்களைப் போரில் வென்ற வெற்றியை உடைய நல்ல வேல்
2.2
பேர் அமர் மழை கண் கொடிச்சி - குறு 286/4
பெரிய விருப்பத்தைச் செய்யும் குளிர்ந்த கண்களையும் உடைய கொடிச்சி
- பொ.
1.6
பெண்களின் கண்களை வருணிக்கப்படும்போது அமர் என்ற சொல் பல இடங்களில்
பயன்பட்டிருப்பதைக் காண்கிறோம். உரையாசிரியர்கள் அவற்றுக்குப் பல்வேறான
பொருள்களைத் தருகின்றனர்.
அமர் கண் என்பதற்கு போரிடுதலைச்செய்யும், விருப்பத்தைச் செய்யும் என்ற பொருள்களில்
உரையாசிரியர்கள் உரை எழுதியிருப்பதைக் கண்டோம்.
பெண்களின் கண்கள்,அமர் கண் என்ற அடையுடன் காணப்படும் இடங்களைப் பொதுவாக
இரண்டாகப் பிரிக்கலாம். 
1. 
துயரமான சூழலில், கண்ணிருடன் காணப்படும் பெண்களின் கண்கள் அமர் கண் எனப்படல்.
இங்கே அமர் கண் என வரும் அடிகளும், அவற்றுக்கு உரையாசிரியர் கூறியுள்ள பொருள்களும்
கொடுக்கப்பட்டுள்ளன.

பேர் அமர் மழை கண் ஈரிய கலுழ - நற் 29/9
தன்னுடைய பெரிய மதர்த்த குளிர்ந்த கண்கள் நீர் சுரந்து சொரிய
- ஔவை.சு.து
பெரிய அமர்த்த குளிர்ச்சியையுடைய கண்கள் நீர் வடிவனவாய்க் கலுழ
- பின்னத்.

பேர் அமர் மழை கண் தெண் பனி கொளவே - நற் 391/10
பெரிய அமர்த்த குளிர்ந்த கண்கள் தெளிந்த நீர்த்துளிகளைச் சொரியவிட்டு
- ஔவை.சு.து
பெரிய அமர்த்தலையுடைய குளிர்ச்சியுற்ற கண்களிலே தெளிந்த நீர் வழியும்படி
- பின்னத்.

பேர் அமர் மழை கண் கழில தன் - ஐங் 214/4
பெரியவாய் மதர்த்துக் குளிர்ந்த கண்கள் நீர் சொரிய
- ஔவை.சு.து.
பெரிய அமர்த்த குளிர்ந்த கண்கள் கலங்கி நீர் வாரும்படி
- பொருந்தும் கண் - கண்டோர் விரும்பும் கண்ணுமாம்
- பொ.வே.சோ.

பேர் அமர் மழை கண் புலம்பு கொண்டு ஒழிய - அகம் 337/3
பெரிய அமரிய குளிர்ந்த கண்களையுடைய தலைவி தனிமையுற்றுப் பிரிந்திருக்க
- நாட்டார்

நீரொடு நிறைந்த பேர் அமர் மழை கண் - அகம் 395/3
நீரால் நிறைந்த பெரிய அமர்த்த குளிர்ந்த கண்களினின்று
- நாட்டார்

இந்த இடங்களிலெல்லாம், அமர் என்ற சொல்லுக்கு நேரான எளிய பொருளைத் தராமல்
ஆசிரியர்கள் ஏறக்குறைய அதே சொல்லைச் சொல்லிச் செல்வதால், இந்தச் சொல்லுக்குரிய
நேர்ப்பொருள் தெரியவில்லை.
ஆனால்,
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன-கொல்லோ
------------------------------------ -------------------
மாண் நலம் கையற கலுழும் என்
மாய குறுமகள் மலர் ஏர் கண்ணே - - நற் 66/7-11
சிவந்து ஒளி மழுங்கிக் கலக்கமடைந்தனவோ?
---------------------------------  --------------- -
தனது மாட்சிமைப்பட்ட அழகானது அழிந்தொழியுமாறு கலுழாநிற்கும் எனது
அழகிய இளம்புதல்வியின் மலர் போன்ற கண்கள்
- பின்னத்.
என்று வரும் இந்த இடத்தில் கண்ணீர்விடும் கண்கள் அமர்த்தன என்ற தொடருக்கு, கலக்கமடைந்தன
என்ற பொருள் பின்னத்தூராரால் கொடுக்கப்பட்டுள்ளது. இது இத்தகைய ஏனை இடங்களுக்கும்
ஒத்து வரும் எனத் தோன்றுகிறது.
இருப்பினும் இப்பொருள் எந்த அகராதியிலும் கொடுக்கப்படவில்லை. ஆனால் இதனை ஒட்டி சில பொருள்கள்
அமைகின்றன. Tamil - English Dictionary - viswanatha Pillai என்ற அகராதியில் அமர்த்தல் என்பதற்கு
அமர்த்துதல், quieting, tranquilizing, pressing down என்ற பொருள் காணப்படுகிறது. பெரிதாய் எடுத்து
அழாமல், அடக்கமாக, அமர்த்தலாய் அழுவதை இது குறிக்கலாம். இர.பாலகிருட்டிண முதலியார் தொகுத்து
தென்னிந்திய தமிழ்ச்சங்கம் வெளியிட்ட தமிழ்-ஆங்கில அகராதியில் அமர்த்தல் - அமர்த்துதல் -
tranqullize, restrain என்ற பொருள் காணப்படுகிறது. இதுவும் கண்ணீரைக் கட்டுக்குள் வைத்திருக்கும்
கண்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம். 
Vaidehi Herbert அம்மையாரும் பேர் அமர் மழைக்கண் என்பதனை your large calm moist eyes என்றே
மொழிபெயர்த்திருக்கிறார்.
2.
கண்களைப் பாராட்டும்விதமாக அமைந்த பயன்பாடுகள்.

பேர் அமர் கண்ணி இருந்த ஊரே - குறு 131/2
- பெரிய அமர்த்தலையுடைய கண்னையும்பெற்ற தலைவி
- உ.வே.சா
பெரிய போர்செய்யும் கண்ணையுடைய தலைவி இருந்த ஊர்
 - தம்மைக் கண்டாரின் நெஞ்சோடு போர்செய்யும்
- பெரிய விருப்பத்தைச்  செய்யும் கண் எனினுமாம்
- பொ..வே.சோ.

பேர் அமர் மழை கண் கொடிச்சி - குறு 286/4
பெரிய அமர்ந்த குளிர்சியையுடைய கண்களையுடைய கொடிச்சி
- உ.வே.சா
பெரிய விருப்பத்தைச் செய்யும் குளிர்ந்த கண்களையும் உடைய கொடிச்சி
- பொ..வே.சோ.

பேர் அமர் மழை கண் கொடிச்சி கடியவும் - ஐங் 282/2
பெரிய விருப்பத்தைச் செய்கின்ற குளிர்ந்த கண்களை உடைய கொடிச்சி
- பொ..வே.சோ.
பெரிய மதர்த்த கண்களையுடைய கொடிச்சி
-ஔ.

பேர் அமர் கண்ணி ஆடுகம் விரைந்தே - ஐங் 412/4
பெரியவாய் ஒன்றோடொன்று போர்செய்வன போன்று பிறழும் கண்களையுடைய
- பொ..வே.சோ.

பேர் அமர் மலர் கண் மடந்தை நீயே - ஐங் 427/1
பெரிய விருப்பம் தருவதற்குக் காரணமான மலர் போன்ற அழகிய கண்கள்
- பொ..வே.சோ.

பேர் அமர் கண்ணி நின் பிரிந்து உறைநர் - ஐங் 496/3
- கண்களைப் பாராட்டினான்
- பொ..வே.சோ.

அமர் கண்
நகை மொழி நல்லவர் - கலி 40/1,2
முகத்திற்குப் பொருந்தின கண்ணினையும்
மகிழ்ச்சியைத்தரும் மொழியினையுமுடைய நல்ல மகளிர்
- நச்.

தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண்கண் - கலி 57/9
- போரையுடைய கண்கள்
- நச்.

பேர் அமர் மழை கண் பெரும் தோள் சிறு நுதல் - அகம் 326/2
பெரிய அமர்செய்யும் குளிர்ந்த கண்களையும் பெரிய தோளினையும் சிறிய நெற்றியினையுமுடைய
- நாட்டார்.

பேர் அமர் உண்கண் நின் தோழி உறீஇய - கலி 60/16
பெரிய அமர்த்த உண்கண்ணினையுடைய நின் தோழி உறுத்தின
- நச்.

பேர் அமர் கண்ணார்க்கும் படு வலை இது என - கலி 74/14
பெருத்து அமர்த்த கண்ணினையுடைய பரத்தையர்க்கும் அவர்கள் அகப்படும் வலை இது என
- நச்.

அமர் கண் மகளிர் அலப்பிய அ நோய் - கலி 75/7
போரைச் செய்யும் கண்ணினையுடைய மகளிர் தம்மை அலைத்த அந்த நோயை
- நச்.

பல்லும் பணை தோளும் பேர் அமர் உண்கண்ணும் - கலி 108/16
பல்லும், பணை போலும் தோளும் பெரிய அமர்செய்யும் உண்கண்ணும்
- நச்.

அலமரல் அமர் உண்கண் அம் நல்லாய் நீ உறீஇ - கலி 113/2
சுழலுதலையுடைய முகத்தோடு பொருந்தின கண்ணினையும் அழகினையுமுடைய நல்லாளே
- நச்.

பேர் அமர் உண்கண் நிறை மல்க அ நீர் தன் - கலி 146/7
பெரிய அமர்த்த உண்கண் நீர் நிறைகையினாலே 
- நச்.

அமர் கண் அஞ்ஞையை அலைத்த கையே - அகம் 145/22
அமர்ந்த கண்களையுடைய என் மகளை துன்புறுத்திய கைகள்
- நாட்டார்

பேர் அமர் உண்கண் இவளினும் பிரிக - புறம் 71/6
பெரியவாய் முகத்தோடு பொருந்தின மையுண்ட கண்ணினையுடைய இவளினும் நீங்குவேனாக
- ஔவை.சு.து.

இந்த இடங்களில், பொருந்துகின்ற, போர்செய்கின்ற, விருப்பம் தருகின்ற என்ற பொருள்கள்
கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.இவை ஏற்கனவே அட்டவணைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

 மேல்
 
    அமரர் - (பெ) தேவர், celestials
அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும் - பட் 200
தேவர்களைப் போற்றியும், வேள்வியைச் செய்வித்தும்

 மேல்
 
    அமல் - (வி) நெருங்கு, நெருங்கி வளர், to be close, thickly grown
கரும்பு அமல் கழனிய நாடு வளம் பொழிய - பதி 50/3
கரும்பு நெருங்கி வளரும் வயல்வெளிகளையுடைய நாடு வளம் பொழிய

 மேல்
 
    அமலை - (பெ) 1.திரள் (சோற்றுத் திரள்), huge quantity (of boiled rice) 
                 2. தோற்ற மன்னனைச் சுற்றி வெற்றி வீரர்கள் ஆடும் ஆட்டம்,
                dance of victorius soldiers around the defeated king
1.
அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு - சிறு 194
குற்றுதலில் சிறந்த அரிசியால் ஆக்கின திரளான வெள்ளைச் சோற்றை

அத்த வேம்பின் அமலை வான் பூ - குறு 281/3
பாலை நிலத்து வேம்பின் நிறைந்த வெள்ளிய பூக்கள்
2.
ஒள்வாள் அமலை ஆடிய ஞாட்பின் - அகம் 142/14
ஒள்வாள் அமலை என்னும் வெற்றிக் கூத்தை ஆடிய போர்க்களத்தின்

 மேல்
 
    அமளி - (பெ) படுக்கை, bed, mattress
புதல்வர்,
செவிலி அம் பெண்டிர்த் தழீஇப் பால் ஆர்ந்து
அமளித் துஞ்சும் அழகு உடை நல் இல் - பெரும் 250-252
பிள்ளைகள்,
செவிலித் தாயாகிய அழகினையுடைய மகளிரிஅத் தழுவிக்கொண்டு, பாலை நிரம்ப உண்டு
படுக்கையில் துயில்கொள்ளும் அழகையுடைய நல்ல இல்லம்

 மேல்
 
    அமிர்து - (பெ) 1. இன்சுவை மிக்கதாகவும், அருந்துவோர்க்கு இறவாத்தன்மை தரக்கூடியதாகவும்
                 கருதப்படும் அமிர்தம் எனப்ப்யும் தேவர் உணவு, ambrosis, mythical food for
               celestials believed to be conferring immortality  
அமிர்து இயன்று அன்ன தீம் சேற்று கடிகையும் - மது 532
அமிழ்தினால் செய்தது போன்ற இனிய சாற்றையுடைய கற்கண்டுத்துண்டுகளையும்,

 மேல்
 
    அமை - 1. (வி) 1. நிறைவடை, be complete
                    2. உருவாகு, நிறுவப்படு, வடிவமைக்கப்படு, be formed, established, formulated
                    3. ஒரு தன்மையுடையதாக அல்லது நிலையுடையதாக ஆகு,
                     be or become or turn to be something of a given nature
                    4. பொருந்து, ஏற்புடையதாகு, be suitable, agreeable
                    5. பொருந்து, be attached, connected, joined;
                    6. நெருங்கு, crowd together, be close
                    7. இணை, பொருத்து, பதி, சேர், உள்ளீடுசெய், connect,inlay, bring together
                    8. ஆற்றியிரு, பொறு, bear with, tolerate
                    9. தங்கு, abide, remain
                    10. திருப்தியடை, be satisfied
            - 2. (பெ) கெட்டி மூங்கில், solid bamboo
1.1.
நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை - திரு 86
ஒளி தங்கி அசையும் தொழிற்கூறு அமைந்த பொன்னாலான மகரக்குழை
1.2.
மண் அமை முழவின் பண் அமை சீறியாழ் - பொரு 109
மார்ச்சனை அமைந்த முழவினோடே பண் (நன்கு)அமைந்த சிறிய யாழையுடைய
1.3.
விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல் - பொரு 114
விரல் என்னும்படி நெடுகின, ஒரே அளவு அமைந்த, (பருக்கை பருக்கையான)சோற்றையும்
1.4.
உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து - பெரும் 158
உறையினால் கெட்டியாகத் தோய்ந்த இளம் புளிப்பான தயிரைக் கடைந்து, வெண்ணையை எடுத்து,
1.5.
கை அமை விளக்கம் நந்து-தொறும் மாட்ட - முல் 49
(பாவையின்)கைகளில் அமைந்த விளக்குகள் அவியுந்தோறும் (நெய் விட்டுத்)தூண்டிவிட
1.6.
வழை அமை சாரல் கமழ துழைஇ - மலை 181
சுரபுன்னை மரங்கள் நெருங்கிநிற்கும் மலைச்சாரல் கமகமக்கும்படி கிளறி
1.7
வைகு புலர் விடியல் மெய் கரந்து தன் கால்
அரி அமை சிலம்பு கழீஇ - நற் 12/5
இரவில் தங்கியிருந்த இருள் நீங்கிய விடியற்காலத்தே, தன்னை ஒளித்துக்கொண்டு, தனது காலின்
பரற்கற்கள் பெய்யப்பட்ட சிலம்புகளைக் கழற்றி
1.8
விரை ஒலி கூந்தல் விட்டு அமைகலனே - நற் 141/12
மணமூட்டப்பெற்ற தழைத்த கூந்தலிற் கிடந்து பெறும் இன்பத்தை விட்டு நீங்கியிருத்தலை யான் ஆற்றேன்.
1.9
மறந்து அவண் அமையார் ஆயினும் - அகம் 37/1
(தலைவர்) என்னை மறந்து வெளியூரிலேயே தங்கிவிடமாட்டாரெனினும்
1.10
அரி தேர் நல்கியும் அமையான் - பெரும் 490
பொன் (வேய்ந்த)தேரைத் தந்தும் மனநிறைவு கொள்ளானாய்
2.
திருந்து அமை விளைந்த தே கள் தேறல் - மலை 522
நன்குசெய்யப்பட்ட கெட்டி மூங்கில் குழாயில், நன்கு பக்குவப்பட்ட, தேனிற்செய்த கள்ளின் தெளிவும்,

 மேல்
 
    அமையம் - (பெ) அமயம், சமயம், வாய்ப்பான நேரம்
தேஎம் மருளும் அமையம் ஆயினும் - மலை 273
திசை தடுமாறும் காலமாயினும்

 மேல்
 
    அயம் - (பெ) பள்ளத்து நீர், water in a ditch
அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன - அகம் 62/1
பள்ள நீரில் வளர்ந்த பைஞ்சாய்க் கோரையின் குருத்தினைப் போன்ற

இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறி - நற் 257/8
வழிச்செல்வோர் இல்லாத நீருள்ள பள்ளங்களுள்ள சிறிய வழி

 மேல்
 
     அயர் (வி) - 1. கொண்டாடு, அனுசரி, celebrate, observe
		2. மற , forget
		3. செலுத்து, drive
1.1
கிராமத்துப் பூசாரி, முருகன்போல் வேடமணிந்து, ஒரு திறந்த வெளியில் களம்
அமைத்து, பலியுணவு செலுத்தி, தெய்வம் தன்மீது வந்து ஏற, ஆட்டமிட்டுக்
குறிசொல்லுவது வெறி அயர்தல், முருகு அயர்தல் அல்லது அணங்கு அயர்தல் எனப்படும்

வேலன் தைஇய வெறி அயர் களனும் - திரு 222
முருகு அயர்ந்து வந்த முது வாய் வேல - குறு 362/1
அணங்கு அயர் வியன் களம் பொலிய பைய - அகம் 382/6
1.2.
ஊர்முழுக்கத் திருவிழா எடுத்து, பொங்கல் வைத்து, தெய்வ வழிபாடு செய்வர்.
அது சாறு அயர்தல் அல்லது விழவு அயர்தல் எனப்படும்.

நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர் - சிறு 201
விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல - நற் 50/3
1.3. 
மகளிர் தோழியரோடு நீரில் விளையாடுவர். இது விளையாட்டயர்தல் அல்லது
ஓரை அயர்தல் எனப்படும்
மடக்குறு மாக்களோடு ஓரை அயரும் - கலித். 82.
1.4. 
ஒரு வீட்டுக்கு விருந்தினர் வருவதாக இருந்தால், அந்த இல்லத்தலைவியும்,
ஏனையோரும் பரபரப்புடன் இயங்கி விருந்துணவு சமைப்பதில் ஈடுபடுவர். இது
விருந்து அயர்தல் எனப்படும்.
விருந்து அயர் விருப்பினள் திருந்து இழையோளே - நற் 361/9
1.5. 
ஒரு வீட்டிலுள்ளோர் முற்றத்தில் அமர்ந்து இரவில் நிலாவெளிச்சத்தில்
சில மகிச்சியான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவர். அதுவும் அயர்தலே
பல் கிளைக் குறவர் அல்கு அயர் முன்றில் - நற் 44/8
1.6. 
மாலைவேளியில் இளம்பெண்கள் நகருக்கு வேளியில் வந்து நெல்லும் மலரும்
தூவி மேற்குத்திசைநோக்கிக் கைதொழுது இறைவனைத் தொழுவர். இது
மாலை அயர்தல் எனப்படும்.
மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து
அவ்விதழ் அவிழ்பதம் கமழப் பொழுதறிந்து
இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ
நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது
மல்லல் ஆவணம் மாலை அயர - நெடு. 39-44
 
மேலும் குறவர்கள் ஆடுவது  	- குரவை அயர்தல்
மணம் நிகழ்த்துவது		- மணம் அயர்தல், வதுவை அயர்தல்
பயணம் மேற்கொள்ளல்	- செலவு அயர்தல்
2.
கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வு இல
பிடவும் கொன்றையும் கோடலும்
மடவ ஆகலின் மலர்ந்தன பலவே  - நற் 99/8-10
கார்காலம் என்று மறந்துபோன உள்ளத்துடனே அறியாதனவாய்
பிடவும், கொன்றையும் காந்தளும்
அறிவில்லாப்பொருளவாதலின் பலவாய் மலர்ந்துவிட்டன.
3.
அணி கிளர் நெடும் திண் தேர் அயர்மதி - கலி 30/19
அழகு பொலிந்த நெடிய திண்ணிய தேரைச் செலுத்துவாயாக

 மேல்
 
    அயறு - (பெ) புண் வழலை, புண்கசிவு, Excrescence resulting from a sore
அயறு சோரும் இரும் சென்னிய - புறம் 22/7
புண் வழலை வடியும் பெரிய தலையையுடையன

 மேல்
 
    அயா - (பெ) தளர்ச்சி, Languor, faintness
விண் தோய் வரை பந்து எறிந்த அயா வீட - கலி 40/22
விண்ணைத் தொடும் மலைகளில் பந்தடித்து விளையாடிய இளைப்பு போக

பகடு அயா கொள்ளும் வெம் முனை - அகம் 329/7
வண்டியிழுக்கும் எருதுகள் தளர்ச்சி கொள்ளும் கடுமையான இடம்

 மேல்
 
    அயாவுயிர் - (வி) பெருமூச்சுவிடு, sigh
கந்து பிணி யானை அயாவுயிர்த்து அன்ன - நற் 62/2
கழியில் கட்டப்பட்ட யானை பெருமூச்சுவிட்டதைப் போல

 மேல்
 
    அயிர் - 1. (வி) ஐயுறு, suspect
          - 2 (பெ) 1. அயிர்ப்பு - ஐயம் 
                  2. குறுமணல், நுண்ணிதான பொருள்
                  3. புகைக்கும் நறுமணப்பொருள்
1.
அரும் கடி வாயில் அயிராது புகுமின் - மலை 491
அரிய பாதுகாப்புள்ள வாயிலில் ஐயுறாமல் நுழையுங்கள்

நெருநையும், அயிர்த்தன்றுமன்னே நெஞ்சம் - அகம் 315/5
நேற்றும் ஐயுற்றது நெஞ்சம் நிச்சயமாக 
2.1
பாணர், அயிர்ப்பு கொண்டு அன்ன கொன்றை அம் தீம் கனி
பறை அறை கடிப்பின் அறை அறையாத் துயல்வர - நற் 46/6,7
பாணர் ஐயம் கொள்கின்றவாறு, கொன்றையின் அழகிய இனிய கனிகள்
பறையை அடிக்கின்ற குறுந்தடிபோல் பாறையில் விழுமாறு ஆட
2.2. 
அறு துறை அயிர் மணல் படு_கரை போகி - அகம் 113/20
மக்கள் நடமாட்டம் அற்ற துறையாகிய நுண்மணல் பொருந்திய கரையினைத் தாண்டி

அயிர் உருப்பு_உற்ற ஆடு அமை விசயம் - மது 625
கற்கண்டுத்தூளை  வெப்பமேற்றி சமைத்த பூரணம்
2.3.
இரும் காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப - நெடு 56
கரிய வயிரம்பாய்ந்த அகிலோடு வெள்ளிய சாம்பிராணித்தூளையும் கூட்டிப் புகைப்ப

 மேல்
 
    அயிரை - (பெ) 1. ஒரு வகைச் சிறிய மீன், Loach, sandy colour, Cobitio thermalis;
                   2. சேர நாட்டிலுள்ள ஒரு மலை, Name of a hill in the ChEra country,
1.
குண கடல் திரையது பறை தபு நாரை
திண் தேர் பொறையன் தொண்டி முன்துறை
அயிரை ஆர் இரைக்கு அணவந்து ஆங்கு - குறு 128/1-3
கிழக்குக் கடலின் அலைகளின் அருகிலிருக்கும் சிறகுகள் மெலிந்த நாரை
திண்ணிய தேரினைக் கொண்ட சேரனின் தொண்டியின் துறைக்கு முன் உள்ள
அயிரைக் கூட்டத்தை எண்ணி அண்ணாந்து பார்த்தாற்போல

	
	
2.
அயிரைமலை என்னும் சங்ககாலப் பெயர்வழக்கு அய்யனார் மலையான ஐயப்பன் மலை என மருவியுள்ளது.
நேரிமலை எனவும் இது வழங்கப்பட்டது.
அயிரை என்பது மிக உயர்ந்த மலை. அதன் முகடுகளிலிருந்து அருவிகள் இழும் என்னும் ஓசை முழக்கத்துடன்
கொட்டும்.
இழுமென இழிதரும் பறைக் குரல் அருவி
முழுமுதல் மிசைய கோடுதொறும் துவன்றும்
அயிரை நெடு வரை போல - பதி 70/24-26
இழும் என்ற ஒலியுடன் விழுகின்ற பறை முழக்கத்தைக் கொண்ட அருவியோசை
மிகப் பெரிதான உச்சியையுடைய மலைச் சிகரமெங்கும் நிறைந்து விளங்கும்
அயிரை என்னும் நெடிய மலையைப் போல.

இது பழனிக்கு மேற்காக 9 மைல் தொலைவிலுள்ள ஐவர் மலை என்றும் கூறுவர்.

 மேல்
 
    அயில் - 1. (வி) உண், பருகு
	- 2. (பெ) 1. இரும்பு, இரும்பினாலான கருவி
	        2. கூர்மை
1.
வைகிற்,பழம் சோறு அயிலும் முழங்கு நீர் படப்பை - புறம் 399/11
விடியலில், பழஞ்சோற்றை உண்ணும் முழங்குகின்ற நீரையுடைய தோட்டங்கள்

கரும்பின்,கால் எறி கடிகை கண் அயின்று அன்ன - குறு 267/3
கரும்பின், அடிமரத்தைத் துண்டித்து அதன் துண்டத்தை உண்டது போல
2.1
அயில் உருப்பு அனைய ஆகி - சிறு 7
இரும்பு வெப்பமேற்ற தன்மையது ஆகி,

அயில்வாய்க்
கூர்முகச் சிதலை வேய்ந்த - அகம் 167/18,19
வேலின் முனை போன்ற
கூரிய முகத்தினையுடைய கறையான் மூடிக்கொள்தலின்
2.2.
அறை வாய் குறும் துணி அயில் உளி பொருத - சிறு 52
வெட்டின வாயையுடைய குறிய மரக்கட்டையைக் கூர்மையான உளி குடைந்த

அயில் நுனை மருப்பின் தம் கை இடை கொண்டு என - முல் 34
கூரிய முனைகளையுடைய கொம்பினில் தம் துதிக்கையை தூக்கிப்போட்டதைப் போல்

 மேல்
 
    அயிலை - (பெ) ஒரு வகை மீன், அயிரை என்பர்
அயிலை துழந்த அம் புளி சொரிந்து - அகம் 60/5
அயிலை மீனை இட்டு ஆக்கிய அழகிய புளிக்குழம்பை ஊற்றி

கொழும் கண் அயிலை பகுக்கும் துறைவன் - அகம் 70/4
கொழுவிய கண்களையுடைய அயிலையை யாவர்க்கும் பகுத்துக் கொடுக்கும் துறைவன்

 மேல்
 
    அயினி - (பெ) உணவு, food
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின்
அயினி மா இன்று அருந்த - நற் 254/7
உப்புவணிகர்கள் உப்பினை விற்று அதற்கு விலையாகப் பெற்ற நெல்லைக் குற்றிச் செய்த
உணவை உன் குதிரை இன்று உண்ண

பால்விட்டு, அயினியும் இன்று அயின்றனனே - புறம் 77/8
பால்குடியை மறந்து, உணவும் இன்று உண்டான்

 மேல்
 
     அரக்கு - (பெ) சாதிலிங்கம், vermilion, sealing wax
       	இது சிவப்பு நிறமுடையது. 
அரக்கு உருக்கு அன்ன செம் நிலன் ஒதுங்கலின் - பொரு 43
சாதிலிங்கத்தை உருக்கிவிட்டாற்போன்ற சிவப்பு நிலத்தில் ஒதுங்குவதால்

மரத்தால் செய்யப்பட்ட பொருள்களில் இருக்கும் சிறிய சந்துபொந்துகளை அடைக்க
அரக்கை உருக்கிவிட்டு வழித்துவிடுவர்.
உள் அரக்கு எறிந்த உருக்குறு போர்வை - சிறு 256
உள்ளே சாதிலிங்கன் வழித்த உருக்கமைந்த பலகை

 மேல்
 
     அரணம் - (பெ) 1. அரண், fort, protective structures
                          2. செருப்பு, காலணி, sandal
1.
நீள் மதில் அரணம் பாய்ந்து என தொடி பிளந்து - ஐங் 444/2
பகைவரின் நீண்ட மதிலாகிய அரண்களைக் குத்திப் பெயர்த்தமையால், பூண்கள் பிளந்து
2.
அடி புதை அரணம் எய்தி படம் புக்கு - பெரும் 69
அடியை மறைக்கின்ற செருப்பைக் கோத்து, மேலங்கி உடுத்தி

 மேல்
 
    அரந்தை - (பெ) துன்பம், affliction, trouble
அரந்தைப் பெண்டிர் இனைந்தனர் அகவ - மது 166
மனக்கவலையையுடைய பெண்டிர் வருந்திக் கூப்பிட

நனம் தலை உலகம் அரந்தை தூங்க - புறம் 221/11
அகன்ற இடத்தையுடைய உலகம் துன்பமாக

 மேல்
 
    அரம்பு - (பெ) குறும்பு, Mischief, wicked deed
அரம்பு கொள் பூசல் களையுநர் காணா - அகம் 179/9
குறும்பர்கள் செய்யும் பூசலை நீக்குவாரைக் காணாத

அரம்பு வந்து அலைக்கும் மாலை - அகம் 287/13
குறும்பாக வந்து வருத்தும் மாலையில்

 மேல்
 
    அரமகள் - (பெ) தேவர் உலகத்துப் பெண், Celestial damsel
             இவர், சூர் அரமகளிர், வான் அரமகளிர், வரை அரமகளிர் எனப் பலவகைப்படுவர்.
தண் தாழ் அருவி அரமகளிர் ஆடுபவே - கலி 40/23
குளிர்ச்சியா இறங்கும் அருவியில் அரமகளிர் நீராடுவர்

சூர் அரமகளிர் ஆடும் சோலை - திரு 41
வருத்தும் தெய்வமகளிர் விளையாடும் சோலை

வான் அரமகளிர்க்கு வதுவை சூட்ட - திரு 117
வானத்தில் உறையும் தெய்வ மகளிர்க்கு மணமாலை சூட்ட

வரை அரமகளிர் புரையும் சாயலள் - ஐங் 255/2
மலையில் இருக்கும் அரமகளிர் போன்ற சாயலுடையவள்

 மேல்
 
    அரமியம் - (பெ) நிலா முற்றம், open terrace of a house
நிரை நிலை மாடத்து அரமியம்தோறும்
மழை மாய் மதியின் தோன்றுபு மறைய - மது 451,452
வரிசையாக நிற்கின்ற மாடங்களின் நிலாமுற்றங்கள்தோறும் 
மேகங்கள் மறைக்கும் திங்களைப் போல் தோன்றித்தோன்றி மறைய

 மேல்
 
    அரலை - (பெ) 1. குற்றம், fault, நரம்புகளிலுள்ள கொடுமுறுக்கு, knot in a string
	2. விதை, seed
	3. அரளி, அலரி, Oleander, l.sh., Nerium odorum;
1.
குரல் ஓர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பின்
அரலை தீர உரீஇ - மலை 23,24
ஓசையை கூர்ந்து கேட்டுக் கட்டின வடித்து முறுக்கின நரம்பில்
குற்றம் தீரத் தீற்றி
2.
புண்ணரிந்து, அரலை உக்கன நெடும் தாள் ஆசினி - மலை 139
புண்ணாகி வெடித்து, விதைகள் சிந்தப் பெற்றன நெடிய அடியை உடைய ஆசினிப்பலாமரங்கள்
3.
அரலை மாலை சூட்டி - குறு 214/6
அரளிப்பூ மாலை சூட்டி -  

மேல்
 
    அரவம் - (பெ) 1. ஒலி, ஓசை, noise, sound
                  2. பாம்பு, snake
1.
பெரும் களிறு உழுவை தாக்கலின் இரும் பிடி
கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு - நற் 144/1,2
பெரிய களிற்றினைப் புலி தாக்கியதால், அதன் கரிய பெண்யானை எழுப்பிய
திரண்டுவரும் கரிய மேகம் ஒலிப்பதைப் போன்ற முழக்கத்தைக் கேட்டு அஞ்சி
2.
உருமும் சூரும் இரை தேர் அரவமும் - குறி 255
இடியும், பிசாசுகளும், இரை தேடித்திரியும் பாம்பும்

 மேல்
 
    அரவிந்தம் - (பெ) தாமரை, lotus
அல்லி கழுநீர் அரவிந்தம் ஆம்பல் - பரி 12/78
அல்லி, செங்கழுநீர், தாமரை, ஆம்பல்

 மேல்
 
     அரவு - (பெ) 1. பாம்பு, snake 
                   2. அராவுகின்ற அரம், filing rod
1.
அரவு இரை தேரும் ஆர் இருள் நடுநாள் - நற் 285/1
பாம்புகள் இரை தேடும் நிறைந்த இருளைக் கொண்ட நள்ளிரவு
2.
அரவு வாள் வாய முள் இலை தாழை - நற் 235/2
அராவுகின்ற வாளரம் போன்ர வாயையுடைய முட்கள் பொருந்திய இலை மிக்க தாழை

மேல்
 
     அரற்று (வி) - புலம்பி அழு, அதைப்போன்ற ஒலி எழுப்பு, bewail, sound like wailing
காதல் பெறாமையின் கனவினும் அரற்றும்- புறம் 198/7

களி சுரும்பு அரற்றும் காமர் புதலின் - ஐங் 416/3
மகிழ்ச்சியுடைய வண்டுகள் ஒலிக்கும் அழகிய பூம்புதர்களினிடையே

 மேல்
 
    அரா - (பெ) பாம்பு, snake
நல்_அரா உறையும் புற்றம் போலவும் - புறம் 309/3
நல்லபாம்பு வாழும் புற்றுப் போலவும்

 மேல்
 
    அரி - 1. (வி) 1. கறையான் போன்றவை ஒரு பொருளைச் சிறிது சிறிதாகத் தின்,
                  eat away by insects like white ants
                  2. அறுத்தறுத்து ஒலி, make intermittent noise; to reverberate;
                  3. (கதிர்களை) அறு, cut away ears of paddy, grains etc.,
                  4. சல்லடை போன்றவற்றில் வடிகட்டு, filter by a sieve like object
                  5. நீக்கு, remove
                  6. நீர் அறுத்துச் செல், water flowing intermittently
                  7. வெடிக்கப்பெறு, be split
         - 2. (பெ) 1. அரியப்பட்ட நெற்கதிர், cut off ears of paddy
                  2. குழம்பினின்றும் அரித்தெடுக்கப்பட்ட மீன்துண்டங்கள், pieces of fish sieved from porridge
                  3. நார்க்கூடையால் வடிகட்டப்பட்ட கள், toddy filtered by a sieve like object
                  4. வண்டு, beetle, humming insect
                  5. மென்மை, softness
                  6. கண் வரி, (red)lines inthe white of the eye
                  7. பரல், pebbles or gems put inside an anklet
                  8. பொன், செல்வம், gold, wealth
                  9. அழகு, beauty
                  10. சிங்கம், lion
                  11. அரிசி, rice
                  12. காளை, bull
                  13. தவளை, frog
1.1
காழ் சோர் முது சுவர் கண சிதல் அரித்த
பூழி பூத்த புழல் காளாம்பி - சிறு 133,134
(ஊடு)கழிகள் (ஆக்கையற்று)விழுகின்ற பழைய சுவரிடத்தெழுந்த திரளான கறையான் அரித்துக் குவித்த
மண்துகள்களில் பூத்தன - உட்துளை(கொண்ட) காளான்
1.2
நடுவு நின்று இசைக்கும் அரி குரல் தட்டை - மலை 9
கண்களுக்கு நடுவே நின்று ஒலிக்கும் அரித்தெழுகின்ற ஓசையையுடைய கரடிகையும்
- அரிக்குரல் தட்டை என்பதற்கு தவளையினது குரலையுடைய தட்டைப்பறை எனினுமாம்.
- பகுவாய்த் தேரை, தட்டைப்பறையில் ஒலிக்கும் நாடன் - குறு 193/2,2

அரி கூடு இன் இயம் கறங்க - மது 612
அரித்தெழும் ஓசையையுடைய இனிய இசைக்கருவிகள் முழங்க,
1.3
அறை கரும்பின் அரி நெல்லின் - பொரு 193
அறைத்தலைச் செய்யும் கரும்புக் கழனிகளிடத்தும், அரிதலைச் செய்யும் நெற் கழனிகளிடத்தும்

அரி புகு பொழுதின் இரியல்_போகி - பெரும் 202
(கதிர்களை)அறுப்பதற்குச் செல்லும்போது, (ஆட்களின் அரவத்தால்)நிலைகெட்டு ஓடி,

நெல் அரி தொழுவர் கூர் வாள்_உற்று என - நற் 195/6
நெற்கதிர் அறுக்கும் உழவருடைய கூரிய அரிவாளால் அறுபட்டதனால்

கயிறு அரி எருத்தின் கதழும் துறைவன் - குறு 117/4
கயிற்றினை அறுத்துச் செல்லும் எருதைப் போல விரையும் கடற்கரைத் தலைவன் 

அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து
செறு வினை மகளிர் மலிந்த வெக்கை - பதி 71/2,3
நிறைந்து இருக்கும் ஆம்பல், நெய்தல் ஆகிய பூக்களை நெற்கதிர்களோடு அறுத்து,
வயல்வேலை செய்யும் மகளிர் மிகுந்திருக்கும் நெற்களத்தில்
1.4
நார் அரி நறவின் ஆர மார்பின் - பதி 11/15
நார்க்கூடையால் அரித்து வடிக்கப்பட்ட கள்ளினையும், ஆரங்கள் அணிந்த மார்பினையும்

கண் மடல் கொண்ட தீம் தேன் இரிய
கள் அரிக்கும் குயம் - புறம் 348/2,3
கணுவிடத்தே தோன்றும் மடலிற் கட்டப்பட்டிருந்த இனிய தேன்கூட்டிலிருந்தும் தேனீக்கள் நீங்கியதால்
தேனடையிலுள்ள தேனை வடித்துக்கொள்ளும் குயவர் சேரியும்
1.5
முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண் சோறு - மலை 465
முள்ளை நீக்கிச் சமைத்த(குழம்பினின்றும்) அரித்தெடுத்த வெண்மையான (மீன்துண்டங்களோடு)வெண்மையான
சோற்றை
1.6
மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரி பனி - நெடு 164
கறுத்த கண்ணிமைகள் சுமந்த, (அவ்விமைகள்)நிரம்பி வழியும் நிலையிலுள்ள அரித்துச்செல்லும் நீரை
அரிப்பனி - அரித்து வீழும் கண்ணீர்

கயல் புரை உண்கண் அரிப்ப அரி வார - கலி 145/5
கயல் போன்ற, மைதீட்டிய கண்களிலிருந்து ஒழுகும் நீர் முகத்தில் வடிய
1.7
புண் அரிந்து
அரலை உக்கன நெடும் தாள் ஆசினி - மலை 138,139
புண்ணாம்படி வெடிக்கப்பெற்று
உள்ளே உள்ள விதைகள் சிந்தப்பெற்றன நெடிய அடியையுடைய ஆசினிப்பலா மரங்கள்
2.1
அரி செத்து உணங்கிய பெரும் செந்நெல்லின் - பெரும் 473
அரியப்பட்ட கதிர்க்குவியல்கள் ஈரமற்றுப்போக உலரவிட்ட பெரிய செந்நெல்லினுடைய
2.2
முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண் சோறு - மலை 465
முள்ளை நீக்கிச் சமைத்த(குழம்பினின்றும்) அரித்தெடுத்த வெண்மையான (மீன்துண்டங்களோடு)வெண்மையான
சோற்றை
2.3
நடுங்கு பனி களைஇயர் நார் அரி பருகி - புறம் 304/2
நடுக்கத்தைச் செய்யும் குளிரைப் போக்குவதற்காக நாரால் வடிக்கப்பட்ட நறவை உண்டு
2.4
மெல் இலை அரி ஆம்பலொடு - மது 252
மெல்லிய இலையினையும் வண்டுகளையும் உடைய ஆம்பல்பூவோடு,
2.5
ஆடு அமை பணை தோள் அரி மயிர் முன்கை - பொரு 32
அசைகின்ற மூங்கில் (போன்ற)பெருத்த தோளினையும், ஐம்மை மயிரினையுடைய முன்கையினையும்,

அரி நரை கூந்தல் செம் முது செவிலியர் - நற் 110/6
மென்மையான நரைக்கூந்தலையுடைய செவ்விய முதுமையையுடைய செவிலியர்
2.6
அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த - சிறு 215
செவ்வரி பொருந்தின அழகிய மையுண்ட கண்ணினையுடைய மகளிர் புகழ
2.7
தெள் அரி பொன் சிலம்பு ஒலிப்ப - மது 444
தெள்ளிய உள்மணிகளையுடைய பொன்னாற் செய்த சிலம்புகள் ஒலிக்கும்படி,
2.8
அரி தேர் நல்கியும் அமையான் செரு தொலைத்து - பெரும் 490
பொன் (வேய்ந்த)தேரைத் தந்தும் மனநிறைவு கொள்ளானாய், போர்களை மாளப்பண்ணி
2.9
அம் சிறை வண்டின் அரி கணம் ஒலிக்கும் - திரு 76
அழகிய சிறகையுடைய வண்டின் அழகிய திரள் ஆரவாரிக்கும் -
2.10
அரி மான் வழங்கும் சாரல் பிற மான் - பதி 12/5
சிங்கங்கள் நடமாடும் மலைச்சாரலில், பிற விலங்குகளின்
2.11
கழை வளர் நெல்லின் அரி உலை ஊழ்த்து - மலை 180
மூங்கிலில் வளர்ந்த நெல்லின் அரிசியை உலையில் உதிர்த்து

பகர் விரவு நெல்லின் பல அரி அன்ன - மலை 413
(பண்டங்களை)விற்றுப் (பண்டமாற்றாகப்)பெற்ற கலப்பு நெல்லின் பலவாறான அரிசியைப் போல,
2.12
ஏற்றின் அரி பரிபு அறுப்பன சுற்றி - கலி 103/24
காளைகள் தமக்குப் பகையான காளைகளை விரும்பித் தாக்கின
அரி - பகையான காளை - நச்.உரை, பொ.விளக்கம்
2.13
நடுவு நின்று இசைக்கும் அரி குரல் தட்டை - மலை 9
கண்களுக்கு நடுவே நின்று ஒலிக்கும் அரித்தெழுகின்ற ஓசையையுடைய கரடிகையும்
- அரிக்குரல் தட்டை என்பதற்கு தவளையினது குரலையுடைய தட்டைப்பறை எனினுமாம்.
- பகுவாய்த் தேரை, தட்டைப்பறையில் ஒலிக்கும் நாடன் - குறு 193/2,2

மேல்
 
    அரிகால் - (பெ) அரிதாள், கதிர் அறித்த அடிக்கட்டை Stubble
அரிகால் மாறிய அம் கண் அகல் வயல் - நற் 210/1
நெல்லறுத்து நீங்கப்பெற்ற அழகிய இடம் அகன்ற வயல்

அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர் - அகம் 41/6
அரிதாளையுடைய நிலத்தைப் பிளந்து உழுத ஆய்ந்த எருதுகளைக் கொண்ட உழவர்

மேல்
 
    அரிநர் - (பெ) அரிவோர், அறுப்போர், those who cut (the paddy)
வெண்ணெல் அரிநர் பின்றை ததும்பும்
தண்ணுமை வெரீஇய தடம் தாள் நாரை - அகம் 40/13,14
வெண்ணெல்லை அறுப்போரது பின்பு நின்றொலிக்கும்
பறையொலியைக்கேட்டு அஞ்சிய நீண்ட கால்களையுடைய நாரை

 மேல்
 
    அரிப்பறை- (பெ) அரித்தெழும் ஓசையையுடைய ஒரு பறை, தட்டைப்பறை
                   drum that makes a cracking sound         
விளைந்த கழனி, வன் கை வினைஞர் அரிப்பறை - மது 262
நெல் விளைந்த கழனியில், வலிய கையைக் கொண்ட வினைஞரின் அரிப்பறை

அரிப்பறையால் புள் ஓப்பி - புறம் 395/7
அரிப்பறையால் பறவைகளை ஓட்டி

பெருமுதுச் செல்வர் பொன்னுடைப் புதல்வர்
சிறு தோள் கோத்த செவ் அரிப்பறையின்
கண் அகத்து எழுதிய குரீஇப் போல - நற் 58/1-3
முதிர்ந்த செல்வர்களின் பொன் அணிகலன்களையுடைய புதல்வர்
தம் சிறிய தோளில் மாட்டிய செம்மையாக ஒலிக்கும் அரிப்பறையின்
மேல்பக்கம் வரைந்த குருவியைப் போல

 மேல்
 
    அரிமணவாயில் - (பெ) ஓர் இடத்தின் பெயர், the name of a place
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம் என்ற ஊர்.
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவன்
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார்
நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர்
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண் - அகம் 266/10-13
யாழ் ஒலிக்கும் தெருக்களையுடைய நீடூரின் தலைவனான
வாள் வெற்றி வாய்ந்த எவ்வி என்பான், தன் ஏவலை ஏற்றுக்கொள்ளாராகிய
பசிய பொன் அணியையுடைய பகைவரது மிக்க வலிமையைக் கெடுத்த
அரிமணவாயில் உறத்தூராய அவ்விடத்தே

 மேல்
 
    அரிமா - (பெ) சிங்கம், lion
அரிமா அன்ன அணங்கு உடைத் துப்பின் - பட் 298
சிங்கத்தைப் போன்ற பகைவரை வருத்துதலையுடைய வலிமையினையும்

மேல்
 
    அரியல் - (பெ) 1. வடிக்கப்படும் கள், toddy that is filtered
                  2. தேன்,honey
                  3. பழச்சாறு, fruit juice 
1.
வெம் நீர் அரியல் விரல் அலை நறும் பிழி - பெரும் 281
வெந்நீரில்(போட்டு) இறுத்ததை விரலிடுக்கில் அலைத்துப்(பின் விரல்மூடிப்) பிழிந்த நறிய கள்ளை

இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல் - அகம் 348/5
தேனொடு கூட்டியாக்கிய வண்டு மொய்க்கும் கள்

அவிழ் நெல்லின் அரியல் ஆருந்து - புறம் 395/8
நெற்சோற்றினின்றும் இறக்கப்பட்ட வடித்த கள்ளை அருந்தும் 
2.
வண்டு மூசு நெய்தல் நெல் இடை மலரும்
அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன - நற் 190/5,6
வண்டினம் மொய்க்கும் நெய்தல் நெற்பயிர்களுக்கிடையே மலர்கின்ற,
அந்தப் பூக்களினின்றும் தேன் வழிந்தோடும் அழகிய வயல்வெளியைக் கொண்ட ஆர்க்காடு போன்ற
3.
பலா அம் பழுத்த பசும் புண் அரியல்
வாடை தூக்கும் நாடு கெழு பெரு விறல் - பதி 61/1,2
பலா மரத்தில் பழுத்து வெடித்த புதிய வெடிப்பிலிருந்து ஒழுகும் கள்போன்ற சாற்றின் மணத்தை
வாடைக்காற்று அந்த வெளியெல்லாம் பரப்பும் நாட்டினைப் பொருந்திய பெரிய திறம் படைத்தவனும்

 மேல்
 
    அரியலாட்டியர் - (பெ) கள்விற்கும் பெண்கள், women who sell toddy
வரி கிளர் பணைத்தோள் வயிறு அணி திதலை
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில் - அகம் 245/8,9
வரி விளங்கும் பருத்த தோளினையும், தேமல் அணிந்த வயிற்றினையுமுடைய
கள்விற்கும் பெண்கள் பொருந்திய மனையகத்தே

 மேல்
 
    அரில் - (பெ) 1. பின்னல், interlacing, பிணக்கம்
	2. புதர்க்காடு, Low jungle
	3. சிறுதூறு, thicket
1.
நூலின் வலவா நுணங்கு அரில் மாலை - பொரு 161
நூலால் கட்டாத நுண்மையினையும் பின்னலையும் உடைய பொன்னரிமாலை		
2.
பின்னி அன்ன பிணங்கு அரில் நுழை-தொறும் - மலை 379
பின்னிவிட்டதைப் போன்ற பிணக்கமுள்ள புதர்களில் நுழையும்போதெல்லாம்
3.
அரில் இவர் புற்றத்து அல்குஇரை நசைஇ - அகம் 257/19
சிறுதூறுகள் படர்ந்த புற்றின்கண் இரவில் உண்ணும் இரையை விரும்பி

 மேல்
 
    அரிவை - (பெ) பெண், woman, lady
அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த - சிறு 215
செவ்வரி படர்ந்த அழகிய மையுண்ட கண்களையுடைய மகளிர் வாழ்த்த

 மேல்
 
    அருக்கு - (வி) 1. அழி, destroy
                  2. மனம் இல்லாமையைக் காட்டு, விருப்பமின்றி இரு, show disinclination
1.
பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர்
குரூஉ பூ பைம் தார் அருக்கிய பூசல் - அகம் 208/15,16
மிக்க விரைவுகொண்டு வந்த பல வேளிர் மகளிர்
விளங்கும் பூக்களாலாய அழகிய மாலைகளை அழித்துவிட்டுச் செய்த அழுகை ஆரவாரத்தின்கண்
2.
தொழீஇஇ ஒருக்கு நாம் ஆடும் குரவையுள் நம்மை
அருக்கினான் போல் நோக்கி அல்லல் நோய் செய்தல் - கலி 104/70
தோழி! ஒன்றாக நாம் சேர்ந்து ஆடும் குரவைக் கூத்தில், நம்மை
இளக்காரமாகப் பார்த்து, வருத்தமுறும் நோயைச் செய்தது,

 மேல்
 
    அருகு - 1. (வி) 1. குறை, diminish, be reduced
                   2. அரிதாகு, be of uncommon occurrence
           - 2. (பெ) 1. அண்மை, சமீபம், nearness
                    2. நுனி, ஓரம், edge, border
1.1
பருகு அன்ன அருகா நோக்கமோடு - பொரு 77
(என்னைக்)கண்ணால் விழுங்குவது போன்ற குறையாத பார்வையால்
1.2
அந்தணர் அருகா அரும் கடி வியல் நகர் - சிறு 187
சான்றோர் அரிதாகிப்போகாத, அரிய காவலினையுடையதும், அகன்ற மனையை உடையதும்
2.1
விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா
வழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி
அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய - மலை 220-222
விழுந்தவரைக் கொல்லும் ஆழமான பொய்கையின் அருகே,
வழுவழுப்பான மெல்லிய ஏட்டால் (கீழுள்ள)தரையை மறைக்கும் நுண்ணிய தன்மையுள்ள பாசி
(ஊன்றிய)காலின் உறுதியைக் குலைக்கும் (=வழுக்கும்) வழுக்குநிலங்களும் உள்ளன,
2.2
பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து - நெடு 117
போரிட்டு வீழ்ந்த யானையின், தானாக வீழ்ந்த கொம்புகளின் இரண்டு ஓரங்களையும் சீவி,

 மேல்
 
    அருச்சி - (வி) கோயிலில் பூசை செய், perform worship in a temple
செய்_பொருள் வாய்க்க என செவி சார்த்துவோரும்
ஐ அமர் அடுக என அருச்சிப்போரும் - பரி 8/107,108
பொருளீட்டச் சென்ற கணவனுக்கு ஈட்டும் பொருள் வாய்க்க என்று முருகனின் செவியினைச் சேரக் கூறுவோரும்,
போர்மேற் சென்றுள்ள தலைவர் போரில் பகைவரைக் கொன்று வெற்றி சூடுக என்று அருச்சனை செய்வோரும்

 மேல்
 
    அருத்து - (வி) 1. அருந்து என்பதன் பிறவினை, உண்ணச்செய், feed
                   2. நுகரச்செய், அனுபவிக்கச்செய், cause to experience, enjoy
1. 
ஊன்_சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும்
செம்மற்று அம்ம நின் வெம் முனை இருக்கை - புறம் 33/14,15
தசையொடு கூடிய சோற்றுத்திரளையை பாண் சுற்றத்திற்கு ஊட்டும்
தலைமை உடைத்து நினது வெய்ய முனையாகிய இருப்பிடம்
2.
மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம்
அரும் பொருள் அருத்தும் திருந்து தொடை நோன் தாள் - பெரும் 67,68
மலையில் உள்ளனவும், கடலில் உள்ளனவும்(ஆன) சிறந்த பயனைக் கொடுக்கும்
அரிய பொருளை (எல்லாரும்)நுகரச்செய்யும் திருத்தமான தம் வினையில் வலிய முயற்சியினையும்

 மேல்
 
    அருந்ததி - (பெ) வசிஷ்ட முனிவரின் கற்புக்கரசியான மனைவி, அவர் பெயரிலுள்ள விண்மீன்
               Name of the wife of Vasishta, considered a paragon of chastity, a star with her name
பெரும் சின வேந்தன் அரும் தொழில் தணியின்
விருந்து நனி பெறுதலும் உரியள் மாதோ
இருண்டு தோன்று விசும்பின் உயர் நிலை உலகத்து
அருந்ததி அனைய கற்பின்
குரும்பை மணி பூண் புதல்வன் தாயே - ஐங் 442
மிக்க சினத்தையுடைய வேந்தன் தன் அரிய போர்த்தொழிலினை முடித்துக்கொண்டால்
மிகப்பெரிய விருந்தினைப் பெறுவதற்குரியவள் ஆவாள் -
கார்கால மேகங்களால் இருண்டு தோன்றும் வானத்திற்கும் உயரே உள்ள உலகத்து
அருந்ததியைப் போன்ற கற்பினையுடைய,
குரும்பை போன்ற மணிகளாலான பூணினை அணிந்திருக்கும் புதல்வனின் தாய்.

 மேல்
 
    அருப்பம் - (பெ) 1. அரண், fort
	2. கடினம், சிரமம், difficulty
1.
வேட்டுப் புழை அருப்பம் மாட்டி - முல் 26
வேடவரின் சிறுவாயில் வைத்த அரண்களை அழித்து
2.
அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது - மலை 19
மலையிடத்து மிக்க உயரத்தில் செல்லும் சிரமத்தைப் பாராது

 மேல்
 
    அருமன் - (பெ) ஒரு சங்ககால வள்ளல், a philanthropist of sangam period
கொடும் கண் காக்கை கூர் வாய் பேடை
நடுங்கு சிறை பிள்ளை தழீஇ கிளை பயிர்ந்து
கரும் கண் கருனை செந்நெல் வெண் சோறு
சூர் உடை பலியொடு கவரிய குறும் கால்
கூழ் உடை நன் மனை குழுவின இருக்கும்
மூதில் அருமன் பேர் இசை சிறுகுடி
மெல் இயல் அரிவை நின் பல் இரும் கதுப்பின் - நற் 367/1-7
வளைந்த பார்வையையுடைய காக்கையின், கூரிய வாயையுடைய பேடை
நடுங்குகின்ற சிறகுகளையுடைய தன் குஞ்சினைத் தழுவிக்கொண்டு, தன் சுற்றத்தைக் கரைந்து அழைத்து
கரிய கண்போன்ற பொறிக்கறியுடன், செந்நெல்லின் வெண்மையான சோற்றை
தெய்வத்துக்கு இடும் பலியுடன் கவர்ந்துகொள்ளும்பொருட்டு, குறிய கால் நாட்டிக் கட்டிய
உணவுடைய நல்ல வீடுகளில் கூட்டமாக இருக்கும்
பழமையான வீடுகளையுடைய அருமன் என்பவனின் பெரும்புகழ்பெற்ற சிறுகுடி என்ற ஊரைப் போன்ற
மென்மையான இயல்பையுடைய அரிவையே! உனது பலவாகிய கரிய கூந்தலில் இருப்பதைப் போன்று

கள்ளின் கேளிர் ஆத்திரை உள்ளூர்
பாளை தந்த பஞ்சி அம் குறும் காய்
ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும்
ஆதி அருமன் மூதூர் அன்ன - குறு 293/1-4
கள்குடிக்கும் விருப்பத்தையுடையவரின் பயணம், உள்ளூரில்
பாளை ஈன்ற நாரினைக் கொண்ட அழகிய சிறிய காயையுடைய
உயர்ந்த கரிய பனையின் நுங்கினை உண்டு திரும்பும்
ஆதி அருமன் என்பானின் மூதூர் போல,

இந்த இருவரும் ஒருவரே என்றுரைப்பார் பொ.வே.சோ.தம் குறுந்தொகை உரையில்

 மேல்
 
    அருவந்தை - (பெ) ஒரு சங்ககாலக்கொடை வள்ளல், a philanthropist of sangam period
காவிரிபாயும் கழனிகளையுடையவர் என்பதனால், இவர் சோழநாட்டைச் சேர்ந்தவர் எனலாம்.
காவிரி அணையும் தாழ் நீர் படப்பை
நெல் விளை கழனி அம்பர் கிழவோன்
நல் அருவந்தை வாழியர் - புறம் 385/8-10
காவிரியாறு பாயும் தாழ்ந்த நிலப்பாங்கினையுடைய தோட்டங்களையும்
நெல் விளையும் கழனிகளையும் உடைய அம்பர் என்னும் ஊர்க்கு உரியோனாகிய
நல்ல அருவந்தை என்போன் வாழ்வானாக

அகன்கண் தடாரி பாட கேட்டு அருளி
வறன் யான் நீங்கல்வேண்டி என் அரை
நிலம் தினக் குறைந்த சிதாஅர் களைந்து
வெளியது உடீஇ என் பசி களைந்தோனே - புறம் 385/4-7
என்ற அதே பாடலின் அடிகளால் இச் சான்றோர் பெரும் வள்ளல் என அறிகிறோம்.

 மேல்
 
    அருவாளர் - (பெ) செந்தமிழ்நாட்டை அடுத்த நாடு, a neighbouring country of ancient Tamilnadu
பல் ஒளியர் பணிபு ஒடுங்க
தொல் அருவாளர் தொழில் கேட்ப - பட் 274,275
பலராகிய ஒளிநாட்டார் தாழ்ந்து தம் வீரம் குறைய
பழைய அருவாள நாட்டு அரசரும் தாங்கள் செய்யும் தொழிலை வந்து கேட்ப
அருவாள நாடு என்பது அருவா நாடு எனவும் வழங்கும். இதுவும், ஒளிநாடு என்பதுவும் செந்தமிழ்
சேர்ந்த பன்னிரு நிலங்களைச் சேர்ந்தவை.
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி - தொல்.சொல்.எச்ச.4
பன்னிருநிலமாவன்: பொங்கர் நாடு, ஒளிநாடு, தென்பாண்டிநாடு, குட்டநாடு, குடநாடு, பன்றிநாடு
கற்காநாடு, சீதநாடு, பூழிநாடி, மலநாடு, அருவாநாடு,  அருவாவடதலைநாடு எனச் 
செந்தமிழ்நாட்டுத் தென்கீழ்பான் முதலாக வடகீழ்பால் இறுதியாக எண்ணிக்கொள்க- சேனாவரையம்.

 மேல் 
 
    அரை - 1. (வி) கூழாக்கு, grind, crush
            2. (பெ) 1. இடுப்பு, இடை, waist, loins
                   2. தண்டு, stem
                   3. அடிமரம், trunk
                   4. நடுப்பகுதி, mid portion
                   5. பாதி, half 
1
அரை_உற்று அமைந்த ஆரம் நீவி - அகம் 100/1
நறுமணம் கூட்டி அரைக்கப்பெற்று முடித்த சந்தனத்தைப் பூசி
2.1.
இழை மருங்கு அறியா நுழை நூல் கலிங்கம்
எள் அறு சிறப்பின் வெள் அரை கொளீஇ - மலை 561,562
இழை இருக்குமிடம் தெரியாத அளவில் நுண்ணிய நூலால் நெய்த புடைவைகளை
ஏளனம் அற்ற சிறப்பு உண்டாக உட்கூடுபாய்ந்த இடுப்பில் உடுத்தி,
2.2.
முள் அரை தாமரை முகிழ் விரி நாள்_போது - சிறு 183
முள்(இருக்கும்) தண்டினை(க்கொண்ட) தாமரையின் அரும்பு விரிந்த அன்றைய பூவின்
2.3.
பரி அரை கமுகின் பாளை அம் பசும் பூ - பெரும் 7
பருத்த அடிமரத்தையுடைய கமுகின் பாளையாகிய அழகினையுடைய இளம் பூ
2.4.
குளகு அரை யாத்த குறும் கால் குரம்பை - பெரும் 148
தழைகள் தம் நடுப்பகுதியிலே கட்டின குறுகிய கால்களையுடைய குடிலின்
2.5
உரவு உரும் உரறும் அரை இருள் நடுநாள் - நற் 68/8
வலிய இடி முழங்குகின்ற இரவின் அரைப்பாகமான நடுச்சாமத்தில்

 மேல் 
    அரைநாள் - (பெ)1.நள்ளிரவு midnight, 2. நண்பகல், midnoon
1.
அரைநாள் யாமத்து விழு மழை கரந்து - அகம் 198/4
நள்ளிரவின் யாமத்தில் மிக்க மழையில் மறைந்து
2.
மாதிரம்
விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோல் குறிநிலை வழுக்காது குடக்கேர்பு
ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து - நெடு 72-75
திசைகளில்
விரிந்த கதிர்களைப் பரப்பின அகன்ற இடத்தையுடைய ஞாயிற்றின் மண்டிலம்
இருகோல்கள் குறிக்கும் நிலைகள் மாறாமல், மேற்கில் செல்வதற்காக
ஒரு பக்கமும் சாராமல் நிற்கும் உச்சிப்பொழுதான நண்பகல் வேளையில்

தென்வடலாக நிற்கும் இரு கோல்களின் நிழல்கள் உச்சிப்பொழுதில் ஒன்றோடொன்று
சேர்ந்து விழுந்து, ஒரே நேர்கோடாகத் தெரிவதுவே ஒரு திறம் சாரா, இருகோல் 
குறிநிலை எனப்படுகிறது. ஏனைய நேரங்களில் அவை இரு கோடுகளாகத் தெரியும்

       

 மேல்
 
    அரையம் - (பெ) 1. அரசமரம், pipal tree
                    2. சங்ககாலத்து ஊர், a city in sangam period
1.
வேனில் அரையத்து இலை ஒலி வெரீஇ
போகில் புகா உண்ணாது பிறிது புலம் படரும் - ஐங் 325/1,2
வேனில் காலத்து அரசமரத்தின் இலைகள் எழுப்பும் ஒலியினைக் கேட்டு வெருண்டு
பறவைகள் தம் உணவினை உண்ணாமல், வேறிடத்துக்குப் பறந்து செல்லும்,
2.
நீடு நிலை அரையத்து கேடும் கேள் இனி - புறம் 202/8
நீடிய நிலையையுடைய அரையத்தினது கேட்டையும் இனிக் கேட்பாயாக.

அரையம் என்பது இருங்கோவேள் என்ற மன்னனுக்குரியது. இருங்கோவேள் மரபினர் இப்போது
பாண்டிநாட்டில் கொற்கையைச் சூழ்ந்த ஊர்களில் வாழ்கின்றனர் என்பர் ஔவை.சு.து. அவர்கள்
தம் புறப்பாட்டு 202 உரை விளக்கத்தில். 
அரையம் என்னும் ஊர் அழிந்தது பற்றிக் கபிலர் இங்குக் குறிப்பிடுகிறார் .இதனை “இருபாற் பெயரிய 
உருகெழு மூதூர்” என்று அவர் விளக்குகிறார். புறநானூற்றுப் பழைய உரை இதனைச் சிற்றரையம்,
பேரரையம் எனக் குறிப்பிடுகிறது. இவ்வூர் கோடிபல அடுக்கிய சொல்வத்தை புலிகடிமால் என்னும்
இருங்கோவேள் மன்னனுக்கு வழங்கியதாம். இந்த இருங்கோவேளின் முன்னோர்களில் ஒருவன்
கழாத்தலையார் என்னும் புலவரை இகழ்ந்தானாம். அதன் விளைவால் இந்த ஊருக்குக் கேடு வந்தது
என்கிறார் கபிலர் 

 மேல்
 
    அல் - (பெ) 1. இரவு, night
               2 அல்லாதது, that  which is no more, that which is not
1.
அல்_அங்காடி அழிதரு கம்பலை - மது 544
இரவுக்காலத்துக் கடையில் மிகுதியைத் தருகின்ற ஆரவாரம்

அன்று அவண் அசைஇ அல் சேர்ந்து அல்கி - மலை 158
அன்று அவ்விடத்தில் இளைப்பாறி, இரவிலும் (அவர்களுடன்)சேர்ந்து தங்கி
2.
இல் ஆகியரோ காலை மாலை
அல் ஆகியர் யான் வாழும் நாளே - புறம் 232/1,2
இனி இல்லை ஆகுக காலையும் மாலையும்
அல்ல ஆக்குக யான் உயிர் வாழும் நாளும்

மிதி அல் செருப்பின் பூழியர் கோவே - பதி 21/23
மிதிக்கும் செருப்பு அல்லாத செருப்பு என்னும் மலையினையுடைய பூழியரின் அரசே
பூழியரின் ஊர் செருப்பு. ஆனால் காலில் அணிவதும் செருப்பு. எனவே காலில் அணியாத
செருப்பு என்பது பூழியர் நகரமாயிற்று.

 மேல்
 
    அல்கல் - (பெ) 1. இரவு, night
	2. தங்குதல், staying
1.
அளிதோ தானே தோழி அல்கல்
வந்தோன் மன்ற குன்ற நாடன் - நற் 114/5,6
இரங்கத்தக்கவன் தோழி! இரவில்
வந்தோன் அந்தக் குன்றினைச் சேர்ந்தவன்
2.
இரவில் புணர்ந்தோர் இடை முலை அல்கல், புரைவது - பரி 6/54
இரவில் சந்தித்தோர் மார்பிடையே தங்குதல், உயர்வானது

 மேல்
 
    அல்கலும் - (வி.அ) நாள்முழுதும், நாள்தோறும், throughout the day, every day
அறு குளம் நிறைக்குந போல அல்கலும்
அழுதல் மேவல ஆகி - அகம் 11/13,14
நீரற்ற குளத்தை நிறைப்பவள் போல நாள்முழுதும்
அழுதலைப் பொருந்தாவாகி

அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர் - மலை 443
இளைப்பாறிச் சிலநாள் தங்கினால் நாள்தோறும் பெறுவீர்கள்

 மேல்
 
    அல்கிரை - (பெ) அல்கு இரை, அடுத்தவேளைக்கு என வைத்து உண்ணும் உணவு, இரவு உணவு
                     food that is saved and kept for future use, night meal
பிள்ளை வெருகிற்கு அல்கிரை ஆகி - குறு 107/4
குட்டிப்பூனைக்கு இட்டு வைத்துண்ணும் இரையாக அகப்பட்டு

அரில் இவர் புற்றத்து அல்கிரை நசைஇ - அகம் 257/19
சிறுதூறுகள் படர்ந்த புற்றில் இராப்பொழுதில் உண்ணும் இரையினை விரும்பி

 மேல்
 
    அல்கு - 1. (வி) 1. தங்கு
	       - 2. சுருங்கு, குறைவாகு
	-2 (பெ.அ) மிகுந்த
	-3. (பெ) இரவு
1.1
அரும் சுரம் செல்வோர்க்கு அல்கு நிழல் ஆகும் - நற் 137/8
அரிய பாலைநிலத்தில் செல்வோருக்குத் தங்குவதற்கான நிழலாகும்

ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும் - நற் 131/1
விளையாடிய விளையாட்டுக்களையும், தங்கிய சோலைகளையும்
1.2.
அல்குறு வரி நிழல் அசைஇ - அகம் 121/9
சுருங்கிய வரிவரியாக உள்ள நிழலில் இளைப்பாறி
2
அல்கு படர் உழந்த அரி மதர் மழை கண் - நற் 8/1
மிக்க துன்பம் உழந்த செவ்வரி பரந்த மதர்த்த குளிர்ந்த கண்கள்
3
அல்குறு பொழுதில் தாது முகை தயங்க - குறு 273/1
இரவாகும் வேளையில் தாதையுடைய முகைகள் மலர்ந்து திகழும்படி

 மேல்
 
    அல்குல் - (பெ) பெண்களின் இடைக்குக் கீழே, தொடைக்கு மேலே உடலைச் சுற்றிலும் இருக்கும்
		பகுதி. பெரும்பாலும் பிட்டப்பகுதி.

		ஒரு உயரமான நெற்குதிருக்கும், இத்தகைய பகுதியை இது குறிக்கும்.
பகட்டு ஆ ஈன்ற கொடுநடைக் குழவி
கவைத் தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல்
ஏணி எய்தா நீள் நெடு மார்பின் --------------------
குமரி மூத்த கூடு ஓங்கு நல் இல்- பெரும் 243-247
எருதுகளோடு கூடிய பசு ஈன்ற வளைந்த காலால் நடக்கும் நடையைக் கொண்ட கன்றின்
கவைத்த தாம்புக்கயிறு கட்டிய சிறு கழி ஊன்றிய இடைப்பகுதியையும்
ஏணிவைத்தாலும் எட்டாத நீண்ட நெடிய மார்பினையும், --------- கொண்ட
குமரித்தன்மை முதிர்ந்த கூடுகள் உயர்ந்து நிற்கும் நல்ல இல்லங்கள்.

இது தானியங்கள் சேர்த்துவைக்கும் குதிர். அதற்கு அடிப்பக்கத்தில் ஒரு சிறு தறியில் ஒரு
இளங்கன்று கட்டப்பட்டிருக்கிறது. இக் குதிருக்குக் கால்கள் கிடையா அல்லவா! எனவே 
இதன் தரையை ஒட்டிய பகுதியையே இதன் அல்குல் என்கிறார் புலவர்.

பெரும்பாலும் இது பெண்களின் இடைக்குச் சற்றுக் கீழே உள்ள பகுதியையே குறிக்கும்.

பல் பூ பகை தழை நுடங்கும் அல்குல் - நற் 8/2
பல பூக்களை மாறுபடத் தொடுத்த தழையுடை அசையும்படி உடுத்த அல்குல்.

பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் - திரு 16
பலமணிகள் கோத்த வடமாகிய மேகலையை அணிந்த அல்குல்

மென்தோள், துகில் அணி அல்குல் துளங்கு இயல் மகளிர் - சிறு 262
மென்மையான தோளினையும், துகில் சூழ்ந்த அல்குலினையும், அசைந்த சாயலினையும் கொண்ட மகளிர்

அல்குலைச் சுற்றி அணியப்படுவன:

பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல் - திரு 146
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ - திரு 204
வண்டு இருப்பு அன்ன பல் காழ் அல்குல் - பொரு 39
பை விரி அல்குல் கொய் தழை தைஇ - குறி 102
பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல் - ஐங் 310/1
பூந் துகில் இமைக்கும் பொலன் காழ் அல்குல் - அகம் 387/7

அல்குல் பார்ப்பதற்கு எப்படி இருக்கும்?

கோடு ஏந்து அல்குல் - நற் 198/6
ஐது அகல் அல்குல்  - நற் 200/10
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் மை கூர்ந்து - நற் 252/8
துத்தி பாந்தள் பைத்து அகல் அல்குல் - குறு 294/5
பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல் - கலி 125/17

இதில் பாம்பின் படம்போன்று அகன்ற அல்குல் என்ற வருணனையே, பிற்காலத்தார் அல்குல்
என்பது பெண்ணுறுப்பைக் குறிப்பதாகக் கொள்ள இடம் கொடுத்தது. பார்க்க - படம்

        

 மேல்
 
    அல்லங்காடி  பார்க்க அங்காடி

 மேல்
 
    அல்லா - (வி) துன்பமுறு, suffer, be afflicted
சொல்லிய ஆறு எல்லாம் மாறுமாறு யான் பெயர்ப்ப
அல்லாந்தான் போல பெயர்ந்தான் - கலி 111/20,21
அவன் சொல்லிய சொற்களுக்கெல்லாம், மறுத்து மறுத்து நான் பதில்சொல்ல,
மனம் கலங்கியவன் போல அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்,

 மேல்
 
    அல்லி - (பெ) 1. அல்லிவட்டம், அகவிதழ், inner flower petal
                  2. பூந்தாது, pollen
                  3. பொகுட்டு, pericap of the lotus
                  4. ஆம்பல் மலர், water-lily
                  5. அல்லியரிசி, a kind of rice
1.
நாய் உடை முது நீர் கலித்த தாமரை
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்
மாசு இல் அங்கை மணி மருள் அம் வாய் - அகம் 16/1-3
நீர்நாய் உள்ள பழைய குளத்தில் செழித்து வளர்ந்த தாமரை
மலரின் அல்லிவட்டத்தில் உள்ள ஒளிவிடும் இதழைப் போன்ற
மாசற்ற உள்ளங்கையையும், பவளமணி போன்ற அழகிய வாயையும்

பெரு வளம் மலர அல்லி தீண்டி - அகம் 255/12
மிக்க செழுமையையுடைய மலர்களின் அகவிதழை அசைத்து
2.
பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறுபட
நல் இள வன முலை அல்லியொடு அப்பியும் - அகம் 389/4,5
பல இதழ்களையுடைய புதிய மலர்களைக் கிள்ளி, அவ்விதழ்களுடன் நிறம் வேறுபட
நல்ல இளைய முலைகளில் அவ்வவற்றின் பொடிகளையும் அப்பியும்
3.
மெல் இயல் மே வந்த சீறடி தாமரை
அல்லி சேர் ஆய் இதழ் அரக்கு தோய்ந்தவை போல - கலி 13/11,12
மென்மையான தன்மை பொருந்திய சின்னஞ்சிறு காலடிகள் - தாமரை மலரின்
பொகுட்டைச் சூழ்ந்திருக்கும் அழகிய இதழ்கள் செவ்வரக்குப் பூசியதைப் போல் சிவந்தவை
4.
மெல்லிய எனாஅ வெறாஅது அல்லி அம்
திரு_மறு_மார்ப நீ அருளல் வேண்டும் - பரி 1/38,39
சிறுமையுடையன் என்று வெறுக்காமல், அல்லி மலரில் வீற்றிருக்கும் அழகிய
திருமகளாகிய மறுவினை மார்பில் கொண்டவனே! நீ எமக்குத் திருவருள் புரிய வேண்டும்.

அல்லியும் ஆம்பலும் ஒன்றே என அகராதிகள் குறிப்பிட்டாலும் அவை வெவேறானவை என்று
பரிபாடல் கூறுகிறது.

மல்லிகை மௌவல் மணம் கமழ் சண்பகம்
அல்லி கழுநீர் அரவிந்தம் ஆம்பல்
குல்லை வகுளம் குருக்கத்தி பாதிரி
நல் இணர் நாகம் நறவம் சுரபுன்னை
எல்லாம் கமழும் இருசார் கரை - பரி 12/77-81
மல்லிகை, முல்லை, மணங்கமழும் சண்பகம்,
அல்லி, செங்கழுநீர், தாமரை, ஆம்பல்,
வெட்சி, மகிழம், குருக்கத்தி, பாதிரி,
நல்ல கொத்துக்களையுடைய நாகம், நறவம், சுரபுன்னை
ஆகிய எல்லாவகையான பூக்களும் கமழ்கின்ற இருபக்கக் கரைகளையும் 
5.
அல்லியரிசி எனப்படுவது ஆம்பல் மலரினின்றும் பெறப்படுவது என்பர்.
கணவனை இழந்த கைம்பெண்கள் இந்த உணவையே உண்டதாகச் சங்க இலக்கியங்கள்
கூறுகின்றன.

சிறு வெள் ஆம்பல் அல்லி உண்ணும்
கழி கல மகளிர் போல  - புறம் 280/12,13
சிறிய வெள்ளிய ஆம்பலிடத்து உண்டாகும் அல்லியரிசியை உண்ணும்
கழித்த அணிகலங்களையுடைய கைம்பெண்டிர் போல

பெரு வள கொழுநன் மாய்ந்து என பொழுது மறுத்து
இன்னா வைகல் உண்ணும்
அல்லி படூஉம் புல் ஆயினவே - புறம் 248/3-5

கூந்தல் கொய்து குறும் தொடு நீக்கி
அல்லி உணவின் மனைவியொடு இனியே
புல்லென்றனையால் - புறம் 250/4-6

என்ற அடிகளும் இதனை வலியுறுத்தும்.

 மேல்
 
   அல்லிப்பாவை - (பெ) ஆணும் பெண்ணுமாய கோலமுடைய பாவை, a transgender doll
வல்லோன் தைஇய வரி வனப்புற்ற
அல்லிப்பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப - புறம் 33/16,17
கைவல்லோனால் புனைந்து செய்யப்பட்ட எழுதிய அழகு பொருந்திய
அல்லிப்பாவை அல்லியம் என்னும் கூத்தை  ஆடும் அழகை ஒப்ப

இது இன்றைய பாவைக்கூத்தில் பயன்படுத்தப்படும் பாவையைப் போன்றது.

 மேல்
 
    அல - (வி) 1. துன்பப்படு, suffer, be afflicted
               2. வறுமைப்படு, be in want
1.
மாதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த
ஆதிமந்தி காதலன் காட்டி - அகம் 222/9,10
திசையெல்லாம் தன் காதலனைத் தேடி மதிமயங்கி வாடிய
அவன் மனையாளாகிய ஆதிமந்திக்கு
2.
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் - கலி 133/6
இல்லறம் ஆற்றுதல் என்பது வறுமைப்பட்டவர்க்கு உதவுதல்

அலந்தோர்க்கு அளிக்கும் பொலம் பூண் சேஎய் - திரு 271

 மேல்
 
    அலகை - (பெ) 1.சோழி, பலகறை, cowry
                        2. அளவு, standard measure
அலகை அன்ன வெள் வேர் பீலி - மலை 234
சோழியை ஒத்த வெள்ளிய வேரினையுடைய தோகை

அலகை தவிர்த்த எண் அரும் திறத்த - மலை 347
அளவிடுதல் முடியாத, எண்ணிப்பார்க்கமுடியாத 

 மேல்
 
    அலங்கல்  - (பெ) மேலும் கீழும் அசைதல், அவ்வாறு அசையும் ஒரு பொருள் - மாலை, தானியக்கதிர்
		movement up and down - an object that moves like that - garland, ear of corn

வெண் போழ் தைஇய அலங்கல் அம் தொடலை - நற் 169/8
வெள்ளிய பனங்குருத்தின் துண்டோடு சேர்த்துச் செய்த அசைகின்ற மாலையின் தொங்கலோடு

கழனி நெல் ஈன் கவை முதல் அலங்கல் - அகம் 13/19
வயற்பரப்பின் நெற்பயிர் ஈன்ற கவைத்த அடியைக்கொண்ட ஆடும் நெற்கதிர்

அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை - அகம் 229/18
அழகிய தளிர்களைக் கொண்ட மாமரத்தின் அசைகின்ற கிளைகளின் மேல்

 மேல்
 
    அலங்கு - (வி) அசை, ஆடு, swing
நீண்ட மெல்லிய கிளையில் அமர்ந்திருக்கும் ஒரு பறவை, தன் கால்களால் கிளையைக் கீழே அழுத்தி,
இறக்கையை விரித்து மேலே எழுந்த பின்னர், அந்தக் கிளை மேலும் கீழும் சிறிது நேரம் 
ஆடும் அல்லவா, அதுவேதான் அலங்குதல்.
கழுத்தில் முத்துமாலை அணிந்திருக்கும் ஒருவர் சற்றே குனிந்து அசையும்போது அந்த முத்துமாலை 
முன்னும் பின்னும் அல்லது இடமும் வலமும் ஆடும் அல்லவா அதுவும் அலங்குதல்தான்.

நீள் அரை இலவத்து அலங்கு சினை - பெரும் 83
நீண்ட அடிமரத்தியுடைய இலவமரத்தின் ஆடுகின்ற கிளை

அலங்கு சினை இருந்த அம் சிறை நாரை - குறு 296/2
ஆடுகின்ற கிளையில் இருந்த அழகிய சிறகுகளைக் கொண்ட நாரை

அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய - பரி 15/21
அசைந்து வீழும் அருவி மிக்க ஒலியோடு இறங்கும்

 மேல்
 
    அலந்தலை - (பெ) 1. கலக்கம், துன்பம், distress, vexation
                      2. வாடுதல், withering, fading
1.
அலந்தலை மூது ஏறு ஆண் குரல் விளிப்ப - அகம் 367/3
கலக்கமுற்ற முதிய ஏறு தன் ஆண்குரல்  தோன்ற அழைத்திட
2.
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி - அகம் 111/5
வாடிக்காய்ந்துபோன தலையினையுடைய ஞெமைமரத்தின்மீது பின்னிய சிலந்தியின் கூடானது

அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ் - அகம் 385/9
நெறியிலுள்ள ஆலமரத்தின் வாடிப்போன நெடிய விழுது

 மேல்
 
    அலம்வரு(தல்) - (வி) 1. மனக்கலக்கம் அடை, மனம்சுழல், be agitated, be pertubed
                         2. சுழல், whirl
1.
பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்து என
புன் தலை மன்றம் நோக்கி மாலை
மட கண் குழவி அலம்வந்து அன்ன - குறு 64/1-3
பசுக்கூட்டம் மேய்தலை விட்டு திரும்பும் நீண்ட வழிக்கு வந்தது என,
பொலிவிழந்த மன்றத்தைப் பார்த்து, மாலையில்
மடப்பம் பொருந்திய கண்களையுடைய கன்றுகள் எதிர்நோக்கி ஏமாறுவதைப் போல
அலம்வந்தன்ன - மனம் சுழன்றாற் போன்ற - உ.வே.சா உரை விளக்கம் 
2.
வரம்பு அணைந்து
இறங்கு கதிர் அலம்வரு கழனி - புறம் 98/18,19
வரப்பைச் சேர்ந்து
வளையும் நெற்கதிர் சுழலும் கழனியொடு

 மேல்
 
    அலமரல் - (பெ) 1. சுழற்சி, whirling, spinning around
                       2. மனச்சுழற்சி, மனக்கலக்கம், pertubation
1.
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல் - அகம் 7/3
சுழன்று திரியும் உன் தோழியருடன் எங்கேயும் போகவேண்டாம்
2.
அலமரல் வருத்தம் தீர - நற் 9/3
மனக்கலக்கத்தோடுகூடிய வருத்தம் தீர

அலமரல் மழை கண் மல்கு பனி வார - அகம் 233/1
கலக்கமுள்ள குளிர்ந்த கண்ணிலிருந்து நிறைந்த நீர் ஒழுக

 மேல்
 
    அலமரு - (வி) 1. சுழலு, to whirl 
                        2. மனம்சுழலு, வருந்து, be agitated
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண் - பதி 21/35
அழகிய முகத்தில் சுழலும் பெரிய மதர்த்த குளிர்ந்த கண்கள்

அலமரு நோக்கின் நலம் வரு சுடர் நுதல் - ஐங் 375/4
மருண்ட பார்வையும் பெண்மை நலம் வரும் சுடர்விடும் நெற்றியும்
2.
யாமத்தும் துயில் அலள் அலமரும் என் தோழி - கலி 45/18
நள்ளிரவிலும் தூக்கம்கொள்ளாள், மனம்கலங்கி வருந்தினாள் என் தோழி

 மேல்
 
    அலமலக்குறு - (வி) மனம் கலங்கு, மனம் சுழல், be agitated
அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே - குறு 43/5
துன்பத்தையுடைய நெஞ்சம் மிக்க கலக்கத்தையடையா நின்றது
- அலமலக்குறுதல் - சுழலுதல்

 மேல்
 
    அலர் - 1. (வி) 1. மலர், blossom, பெரிதாகு, become large
                 2. பழிச்சொல்கூறு, indulge in gossip
	- 2. (பெ) 1. மலர், fully blossomed flower
	        2. ஊரார் பழிச்சொல், gossip of the village-folk regarding somebody's secret love 
1.1
விண்பொரு நெடுவரைப் பரிதியின் தொடுத்த
தண் கமழ் அலர் இறால் சிதைய - திரு 299,300
விண்ணைத் தீண்டுகின்ற நெடிய மலையில் ஞாயிற்றின் மண்டிலத்தைப் போலச் சேர்த்துவைத்த
குளிர்ந்த மணக்கின்ற விரிந்த தேன்கூடு சிதைய

அரும்பு அலர் செருந்தி நெடும் கான் மலர் கமழ் - புறம் 390/3
அரும்பு மலர்ந்த செருந்தி மரங்கள் உள்ள நெடிய காட்டின் மலர்கள் கமழும்

ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து - நெடு 136
முத்து மாலையைத் தாங்கிய பருத்த முலைகளைக் கொண்ட மார்பினில்
1.2.
ஆடுமகள் போலப் பெயர்தல்
ஆற்றேன் தெய்ய அலர்க இ ஊரே - அகம் 370/16
கூத்தாடும் பெண் போல, ஊரைவிட்டுச் செல்லுதல்
இயலாதவளாகின்றேன், அலர்கூறட்டும் இவ்வூர்.
2.1.
மாரிப் பீரத்து அலர் சில கொண்டே - குறு 98/5
மழைக்காலத்து பீர்க்கின் மலர்கள் சிலவற்றை எடுத்துச் சென்று
2.2.
ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ - அகம் 383/2
ஊரிலும், தெருவிலும் ஒன்றுசேரப் பழிச்சொல் எழ

 மேல்
 
    அலரி - (பெ) 1. அப்பொழுது பூத்த பூ, fresh flower
	2. சூரியன், சூரியனின் கதிர்கள்
1.
அரும்பு அவிழ் அலரி தூஉய் கைதொழுது - முல் 10
அரும்புகள் அவிழ்ந்த பூக்களைத் தூவிக் கைதொழுது
2.
நள்ளிருள், அலரி விரிந்த விடியல் வைகினிர் கழி-மின் - மலை 196
செறிந்த இருள், ஞாயிற்றின் கதிர் விரிதலால் உண்டாகும் விடியற்காலம் வரை தங்கிப் போவீர்.

 மேல்
 
    அலவலை - (பெ) மனச்சஞ்சலம், Confusion of mind, agitation, distress
பலவும் நூறு அடுக்கினை இனைபு ஏங்கி அழுதனை
அலவலை உடையை என்றி தோழீ - கலி 122/5,6
அவர்மீது பல குறைகளை நூற்றுக்கணக்கில் அடுக்கினாய், அதற்காக வருந்தி ஏங்கி அழுகிறாய்,
மனவருத்தப்படுகிறாய், என்றெல்லாம் கூறுகிறாயே தோழி!

 மேல்
 
    அலவன் - (பெ) நண்டு, crab
கவை தாள் அலவன் அளற்று அளை சிதைய - பெரும் 208
பிளவுபட்ட காலையுடைய நண்டின் சேற்றில் இருக்கும் வளை கெடும்படி

 மேல்
 
    அலவுறு - (வி) மனம் தடுமாறு, be troubled in mind
அன்னாய் வாழி வேண்டு அன்னை ஒள் நுதல்
ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய்
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்
பரவியும் தொழுதும் விரவு மலர் தூயும்
வேறு பல் உருவின் கடவுள் பேணி
நறையும் விரையும் ஓச்சியும் அலவு_உற்று
எய்யா மையலை நீயும் வருந்துதி - குறி 1-8
‘தாயே வாழ்க, (நான் கூறுவதை)விரும்பிக்கேள், அன்னையே, பளிச்சிடும் நெற்றியையும்
செழித்து வளர்ந்த மென்மையான கூந்தலையும் உடைய என்னுடைய தோழியின் உடம்பிலுள்ள
தனிச்சிறப்புக் கொண்ட நகைகள் கழன்று விழப்பண்ணின, குணப்படுத்த முடியாத கொடிய நோய்(பற்றி)
அகன்ற உட்புறங்களையுடைய ஊரில் (அந் நோய்பற்றி)அறிந்தோரைக் கேட்டும்,
(கடவுளரை)வாயால் வாழ்த்தியும், வணங்கியும், பலவித பூக்களைத் தூவியும்,
வேறுபட்ட பல வடிவங்களையுடைய தெய்வங்களை மனத்தில் எண்ணி,
நறுமணப்புகையும் சந்தனமும் படைத்தும், மனம்தடுமாறி,
குறையாத மயக்கத்தையுடையளாய் நீயும் வருந்துகிறாய்;

 மேல்
 
    அவல் - (பெ) 1. நெல்லை இடித்துச் செய்த உணவுப்பண்டம், riceflakes
	- 2. பள்ளம், shappow depression
	- 3. விளைநிலம், cultivated land
1.
அவல் எறி உலக்கை பாடு விறந்து, அயல
கொடுவாய்க் கிள்ளை படுபகை வெரூஉம் - பெரும் 226, 227
அவலை இடிக்கும் உலக்கையின் ஓசி மிகுவதனால், அருகிலுள்ள
வளைந்த வாயையுடைய கிளிகள் தமக்குப் பகையாகக் கருதி அஞ்சும்
2.
ஏறு உடை பெரு மழை பொழிந்து என அவல்தோறு
ஆடுகள பறையின் வரி நுணல் கறங்க - அகம் 364/2,3
இடியையுடைய பெரிய மழை பெய்ததாகப் பள்ளங்கள்தோறும்
ஆடுகளத்தில் ஒலிக்கும் பரைபோன்று வரியையுடைய தேரைகள் ஒலிக்க
3.
புல் அரைக் காஞ்சிப் புனல்பொரு புதவின்
மெல் அவல் இருந்த ஊர்தொறும் - மலை 449,450
புல்லிய அடிமரத்தையுடைய காஞ்சிமரங்களும், நீர்வந்து மோதும் மதகுகளும்,
மென்மையான விளைநிலங்களும் இருந்த ஊர்கள்தோறும்

 மேல்
 
     அவவு (பெ) - மிக்க ஆர்வம், அவா, extreme interest , avidity
அவவுக் கொள் மனத்தேம் ஆகிய நமக்கே - நற் 212/10
ஆசைகொள்ளுகிற மனத்தையுடையேமாகிய நமக்கு

அவவு உறு நெஞ்சம் கவவு நனி விரும்பி - ஐங் 360/3
மிகுந்த வேட்கை கொண்ட எம் நெஞ்சம் உனது முயக்கத்தைப் பெரிதும் விரும்பி

 மேல்
 
    அவி - 1. (வி) 1. அடங்கு, ஒடுங்கு, become subdued
                  2. பணி, bow, be humble
                  3. ஓய், cease, desist from action
                  4. அற்றுப்போ, அழி, perish, cease to exist
                  5. அணைந்துபோ, become extinguished
                  6. அடக்கு, suppress, repress, subdue
                  7. அழி, கெடு, destroy
                  8. இல்லாமற்செய், make extinct
           - 2. (பெ) 1. வேள்வித்தீயில் தேவர்க்குப் படைக்கும் உணவு, 
                     offerings made to god in sacrificial fire
                   2. வேகவைத்தது, food that is boiled
1.1
பாடு ஆன்று அவிந்த பனி கடல் புரைய - மது 629
ஒலி நிறைந்து அடங்கிய குளிர்ந்த கடல் போல

பாம்பு பை அவிந்தது போல கூம்பி - குறு 185/5
பாம்பின் படம் ஒடுங்கியதைப் போல் குவிந்து
1.2
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கை - புறம் 191/6
நற்குணங்களால் அமைந்து பணிய வேண்டுமிடத்துப் பணிந்து ஐம்புலனும் அடங்கிய கோட்பாட்டையுடைய
1.3
இரவு அரிவாரின் தொண்டக_சிறுபறை
பானாள் யாமத்தும் கறங்கும்
யாமம் காவலர் அவியா மாறே - குறு 375/4-6
இரவில் கதிரறுப்பாரைப் போன்று தொண்டகச் சிறுபறை
நள்ளிரவான நடுச்சாமத்திலும் ஒலித்துக்கொண்டிருக்கும் -
இரவுக்காவலர் ஓய்ந்துபோகாமலிருக்கும்பொருட்டு-
1.4
நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆரிடை - குறு 356/1
நிழல் அடங்கி அற்றுப்போன நீர் அற்ற கடக்கமுடியாத பாலைவெளியில்
1.5
ஆறு செல் வளியின் அவியா விளக்கமும் - பரி 8/98
வழியில் வீசுகின்ற காற்றால் அணைந்துபோகாத விளக்குகளும்,
1.6
தாறு அடு களிற்றின் வீறு பெற ஓச்சி
கல்லென் சுற்றம் கடும் குரல் அவித்து - குறி 150,151
பாகன்)அங்குசம் அழுத்திய ஆண்யானை போல எழுச்சியுண்டாகக் கைகளை உயர்த்தி,
கல்லென்னும் ஓசைபடக் கத்தும் நாய்களின் கடுமையான குரல்களை அடக்கி
1.7
காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது
அரி கால் அவித்து - பதி 30/14,15
பருவமல்லாத காலத்திலும் கரும்பினை அறுத்து மாளாது,
கரும்பின் வேர்க்கட்டைகளை அழித்து

சிறுகுடி குறவன் பெரும் தோள் குறு_மகள்
நீர் ஓர் அன்ன சாயல்
தீ ஓர் அன்ன என் உரன் அவித்தன்றே - குறு 95/3-5
சிறுகுடியில் இருக்கும் குறவனின் பெரிய தோள்களையுடைய இளையவளின்
நீரின் தன்மை போன்ற மெல்லிய தன்மை
தீயைப் போன்ற என் வலிமையை அழித்தது
1.8
வெல் போர் இராமன் அரு மறைக்கு அவித்த
பல் வீழ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே - அகம் 70/15-17
வெல்லும் போரினில் வல்ல இராமன் அரிய மறையினை ஆய்தற்பொருட்டாகப் பறவைகளின் ஒலி இல்லையாகச்
செய்த
பல விழுதுகளைக் கொண்ட ஆலமரம் போல
ஒலி அடங்கப் பெற்றது  இந்த ஆரவாரமுடைய ஊர்
2.1
அவி உணவினோர் புறம்காப்ப - புறம் 377/5
அவியாகிய உணவை உண்ணும் தேவர்கள் புறத்தேநின்று பாதுகாக்க
2.2
உப்பு இலாஅ அவி புழுக்கல்
கைக்கொண்டு பிறக்கு நோக்காது
இழிபிறப்பினோன் ஈயப்பெற்று - புறம் 363/12-14
உப்பின்றி வேகவைத்த சோற்றைக்
கையிற்கொண்டு பின்புறம் பாராது
இழிசினனாகிய புலையன் கொடுக்கப்பெற்று

 மேல்
 
    அவிர் - (வி) ஒளிர், glowing
மணிகளோ, உயர்ந்த கற்களோ பதிக்காத தூய தங்கத்தால் ஆன புத்தம் புதிய
தங்க நகையின் பளபளப்பை அவிர்தல் எனலாம்.

எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை - அகம் 0/10
நெருப்பு எரிவது போன்ற ஒளிர்ந்து பிரகாசிக்கும் புரியையுடைய சடை

ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி - மது 666
ஒள்ளிய பொன்னாலான ஒளிரும் அணிகலன்கள் ஒலிக்க நடந்து

            

      பார்க்க இலங்கு
 
 மேல்
  
    அவினி - (பெ) ஒரு சங்ககால மன்னனின் பெயர், The name of a king of sangam period.
வாழி ஆதன் வாழி அவினி - ஐங் 1/1

ஐங்குறுநூறு என்னும் நூலிலுள்ள முதல்பத்துப் பாடல்களும் இந்த அடியுடன்தான் தொடங்குகின்றன.
ஆதன் என்பது சேர மன்னருள் சிலருடைய குடிப்பெயர். அவினி என்பான் சேரமான்களில் ஒருவன்
என்பார் ஔவை.சு.து. அவர்கள் தம் ஐங்குறுநூறு உரையில்.
ஆனால் அவினி என்பான் ஒரு மன்னன் என்றும் ஆதன் என்பது அவனுடைய தந்தையின் பெயர்
என்றும் விக்கிப்பீடியா கூறுகிறது.
ஆதன் அழிசி, ஆதன் எழினி, ஆதனுங்கன், ஆதன் ஓரி ஆகிய சங்ககால அரசர்களின் பெயர்கள்
இங்கு ஒப்புநோக்கத் தக்கவை

 மேல்
 
    அவுணர் - (பெ) அசுரர், demons at war with gods
செம் களம் பட கொன்று அவுணர் தேய்த்த - குறு 1/1
போர்க்களம் சிவப்பாகும்படி கொன்று அசுரர்களை அழித்த

 மேல்
 
    அவை - 1. (வி) நெல் முதலியவற்றைக் குற்று, pound, thump in a mortar;
             2. (சு.பெ) அஃறிணைப் பொருள்களைச் சுட்டும் பன்மைப் பெயர், they, those
             3. (பெ) 1. அரசனின் கொலுமண்டபம், royal court
                    2. திரள், கூட்டம், a gathering
1.
அவையா அரிசி அம் களி துழவை - பெரும் 275
குற்றாத கொழியலரிசியை அழகினையுடைய களியாகத் துழாவி அட்ட கூழை
2.
ஓதல் வேட்டல் அவை பிறர் செய்தல் - பதி 24/6
மறையோதல், வேள்விசெய்தல், அவை ஒவ்வொன்றையும் பிறரைச் செய்வித்தல்
3.1
ஆரம் கண்ணி அடு போர் சோழர்
அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன - அகம் 93/4,5
ஆத்திமாலை அணிந்த அடும் போரினையுடைய சோழரது
அறம் பொருந்திய நல்ல அவையினையுடைய உறையூரை ஒத்த
3.2.
மந்தி நல் அவை மருள்வன நோக்க - அகம் 82/8
மந்திகளாய நல்ல திரள் வியப்புற்றுக் காண

 மேல்
 
    அவைப்பு - (பெ) நெல் முதலியவற்றைக் குற்றுதல், pounding, thumping in a mortar;
இரும் காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த
அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு - சிறு 193,194
கரிய வயிரத்தையுடைய உலக்கையின் பூணினையுடைய முகத்தைத் தேயப்பண்ணின
குற்றுதல் நன்கமைந்த அரிசி(யாலாக்கின) உருண்டையாக்கிய வெண்மையான சோற்றை

இதை புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு - அகம் 394/3
புதுக்கொல்லையில் விளைந்த வரகினது குத்துதல் மாட்சிமைப்பட்ட அரிசியுடன்

	

 மேல்
 
    அவையல் - (பெ) குற்றப்பட்டது, that which is pounded
ஆய் தினை அரிசி அவையல் அன்ன - பொரு 16
ஆய்ந்தெடுத்த தினை அரிசியின் குற்றலைப் போன்ற

 மேல்
 
    அழல் - 1. (வி) 1. எரி, burn, glow
                     2. காந்து, வெப்பமாக இரு, burn
          - 2. (பெ) 1. நெருப்பு, fire
                   2. தீக்கொழுந்து, flame
                   3. வெம்மை, வெப்பம், heat
                   4. அழுதல், weeping
1.1
பாவை_விளக்கில் பரூஉ சுடர் அழல - முல் 85
பாவை (ஏந்திநின்ற)தகளியில் பரிய விளக்கு நின்றெரிய
1.2
விசும்பு உற நிவந்து அழலும் விலங்கு அரு வெம் சுரம் - கலி 150/6
வானத்தில் தோயும்படியாக உயர்ந்து வெம்மையைச் செய்யும் கடப்பதற்கு அரிய கொடுமையான காட்டுவழியை

தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும் - சிறு 234
‘தேரினையுடையோர்க்கு வெம்மைசெய்த வேலினையுடையோய்' எனவும்,
2.1
கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று
அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல்
பாம்பு - திரு 148-150
நஞ்சுடன் மறைந்திருக்கும் உள்துளையுடைய வெண்மையான பல்லினையும்,
நெருப்பென்னும்படி நெட்டுயிர்ப்புக்கொள்ளும் அச்சம் தோன்றும் கடிய வலிமையினையும் உடைய,
பாம்புகள்
2.2
விளக்கு அழல் உருவின் விசி_உறு பச்சை - பொரு 5
விளக்குப் பிழம்பின் (நிறத்தை ஒத்த)நிறமுடையதும் விசித்துப் போர்க்கப்பட்டதும் ஆகிய தோல்
2.3
காடே நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த - நற் 256/3
காடோ, நிழல்தரும் அழகினை இழந்த, வேனில் வெம்மையால் கரிந்துபோன, மரங்களைக் கொண்டு,
2.4
அழல் தொடங்கினளே ஆய்_இழை - நற் 371/7
அழத் தொடங்கினாள் ஆராய்ந்த அணிகலன்களை அணிந்த தலைவி;

 மேல்
 
    அழி - 1. (வி) 1. இல்லாமற்போ, நாசமாகு, perish, be ruined
                 2. சிதைவுறு, decay, be mutilated
                 3. தோற்றுப்போ, be defeated
                 4. மனம் உடை, be disheartened
                 5. மிகு, பெருகு, increase, swell
                 6. கெடு, ruin, damage
                 7. நீக்கு, remove
                 8. இல்லாமர்செய், destroy, exterminate
          - 2. (பெ) வைக்கோல், hay, straw
1.1
கழை கவின் அழிந்த கல் அதர் சிறு நெறி - நற் 333/2
மூங்கில்களின் அழகு நாசமாகின மலைகளினூடேஅமைந்த பாதையாகிய சிறிய நெறியில்
1.2
அரசு பகை நுவலும் அரு முனை இயவின்
அழிந்த வேலி அம் குடி சீறூர் - நற் 346/3,4
இது அரசர்களின் பகையால் ஏற்பட்ட அவலம் என்பதைப் பறைசாற்றிக்கொண்டிருக்கும் அரிய போர்முனையை
அடுத்துள்ள வழியில்
சிதைவுற்ற வேலியையுடைய அழகாயிருந்த குடிகள் இருந்த சிறிய ஊரில்,
1.3
ஆண் அணி புகுதலும் அழி படை தாங்கலும் - சிறு 211
(பகை)மறவரின் அணியில் (அச்சமின்றிப்)புகுதலையும், தோற்ற படையினரைப் பொறுத்தலையும்,
1.4
திருந்துகமாதோ நும் செலவு என வெய்துயிரா
பருவரல் எவ்வமொடு அழிந்த
பெருவிதுப்பு உறுவி பேது உறு நிலையே - அகம் 299/19-21
உம் பயணம் செப்பமுறுக என்று பெருமூச்சுவிட்டு
துன்பத்தைத் தரும் வருத்தத்தால் மனம் உடைய
பெரிதும் நடுக்கமுற்றவளின் மயக்குற்ற நிலையை
1.5
அழி பசி வருத்தம் வீட பொழி கவுள் - சிறு 140
பெருகுகின்ற பசியின் வருத்தங்கள் கெடுமாறு;

ஆனா நோயொடு அழி படர் கலங்கி - அகம் 297/2
அமையாத வருத்தத்துடன் மிக்க துயரத்தால் கலங்க
1.6
மைந்து மலி சினத்த களிறு மதன் அழிக்கும்
துஞ்சு_மரம் கடுக்கும் மாசுணம் விலங்கி - மலை 260,261
மதம் மிகுந்து கோபத்துடனிருக்கும் யானையின் செருக்கை(யும்) அழிக்கக்கூடிய,	
விழுந்துகிடக்கும் மரத்தைப்போன்ற மலைப்பாம்பினின்றும் ஒதுங்கி
1.7
கயிறு பிணி குழிசி ஓலை கொண்மார்
பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின் - அகம் 77/8
கயிற்றால் பிணித்தலையுற்ற குடத்திலுள்ள ஓலையை எடுத்துக்கோடற்கு
அக்குடத்தின் மேலிட்ட இலச்சினையை  ஆய்ந்து நீக்கும் ஆவண மாந்தரைப் போன்று
1.8
சொல் பல நாட்டை தொல் கவின் அழித்த
போர் அடு தானை பொலம் தார் குட்டுவ - பதி 43/10,11
புகழ் பெற்ற பல நாடுகளின் பழமையான அழகினை அழித்த,
போரில் பகைவரைக் கொல்லும் சேனைகளையுடைய, பொன்னால் செய்யப்பட்ட மாலையினை அணிந்த
குட்டுவனே!
2.
உழுத நோன் பகடு அழி தின்று ஆங்கு - புறம் 125/7
உழுத வலிய பகடு பின் வைக்கோலைத் தின்றாற் போல

 மேல்
 
    அழிசி - (பெ) சோழநாட்டுச் சிற்றரசன், a minor king in the chozha country
காவிரிக்கரையில் உள்ள ஆர்க்காடு நாட்டை ஆண்ட அரசன் அழிசி. அவன் மகன் சேந்தன்
வெல் போர் சோழர் அழிசி அம் பெரும் காட்டு - நற் 87/3
வெற்றியுள்ள போரையுடைய சோழர் குடியினனான அழிசி என்பானின் அழகிய பெரிய காட்டின்

திதலை எஃகின் சேந்தன் தந்தை
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி - நற் 190/3,4
புள்ளிகள் படர்ந்த வேலையுமுடைய சேந்தன் என்பானின் தந்தையாகிய,
தேன் கமழ்கின்ற விரிந்த மலராலான மாலையையும், சிறப்பாகச் செய்யப்பட்ட தேரையும் உடைய அழிசி
என்பானின்

ஏந்து கோட்டு யானை சேந்தன் தந்தை
அரியல் அம் புகவின் அம் தோட்டு வேட்டை
நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன்
அழிசி ஆர்க்காடு அன்ன இவள்
பழி தீர் மாண் நலம் தொலைவன கண்டே - குறு 258/4-8
ஏந்திய கொம்புகளையுடைய யானைகளைக் கொண்ட சேந்தனின் தந்தை
கள்ளாகிய உணவையும், அழகிய விலங்குக் கூட்டங்களை வேட்டையாடுதலையும்,
வரிசைப் பட்ட ஒளிவிடும் வாளைக் கொண்ட இளைஞர்களையும் கொண்ட பெருமகனான
அழிசி என்பானின் ஆர்க்காடு போன்ற இவளின்
குற்றம் தீர்ந்த சிறந்த பெண்மைநலம் தொலைவதைக் கண்டபின்னர் 

 மேல்
 
    அழுங்கல் - (பெ) 1. துன்பம், affliction
	2. இரக்கம், compassion
	3. ஆரவாரம். uproar
அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும் - குறு 307/8
துன்பமுள்ள நெஞ்சத்தோடே முழங்கும்

கதம் பெரிது உடையள் யாய் அழுங்கலோ இலளே - நற் 150/11
சினம் பெரிது உடையவள் தாய், இரக்கமோ இல்லாதவள்.

ஒலி அவிந்தன்று இ அழுங்கல் ஊரே - அகம் 70/17
ஒலி அடங்கப்பெற்றது இந்த ஆரவாரம் மிக்க ஊர்.

 மேல்
 
    அழுங்கு - (வி) 1. வருந்து, suffer, be in distress
                   2. கெடு, be spoiled
                   3. தவிர், avoid, be dispensed with
                   4. உருவழி, be disfigured
1.
மலர்ந்த பொய்கை பூ குற்று அழுங்க
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர் - நற் 115/1,2
அகன்று விரிந்த பொய்கையின் பூக்களைப் பறித்து மேனி வருந்திச்
சோர்வடைந்த தோழியர் கூட்டம் இனிதாகக் கண்ணுறங்க
2.
கதழ் பரி நெடும் தேர் வரவு ஆண்டு அழுங்க
செய்த தன் தப்பல் அன்றியும்
உயவு புணர்ந்தன்று இ அழுங்கல் ஊரே - நற் 203/9-11
விரைந்து வரும் ஓட்டத்தையுடைய குதிரை பூட்டிய தேரின் வரவு அங்குக் கெட்டுப்போகுமாறு
செய்த தன் தவற்றோடு,
அவரைக் காணாத என் வருத்தத்திலும் சேர்ந்துகொள்கிறது இந்த இரக்கமுள்ள ஊர்

போது ஆர் கூந்தல் இயல் அணி அழுங்க
ஏதிலாளனை நீ பிரிந்ததற்கே - ஐங் 232/1,2
மலரும் நிலையிலுள்ள பூக்கள் நிறைந்த கூந்தலையுடையவளின் தகுதிவாய்ந்த அழகு குன்றிப்போக
அன்னியன் போன்ற நீ பிரிந்து சென்றதற்காக
3.
தேர் செலவு அழுங்க திருவில் கோலி
ஆர் கலி எழிலி சோர் தொடங்கின்றே - ஐங் 428/1,2
தேரில் செல்லுதல் தவிர்க்கப்படவேண்டிய அளவுக்கு வானவில் வளைவாகத் தோன்றி
பெருத்த முழக்கத்துடன் மேகங்கள் மழையைச் சொரியத்தொடங்கிவிட்டன
4.
பிணன் அழுங்க களன் உழக்கி - புறம் 98/5
பட்டோரது பிணம் உருவழியப் போர்க்களத்தை உழக்கி

 மேல்
 
    அழுந்து - 1. (வி) 1. புதைபடு, அமிழ், உள்ளிறங்கு, sink, be immersed, go down
                  2. பதி, அமுக்குண்ணு, become pressed, be impressed, press close
                  3. இறுக்கு, hold tight
                  4. அமிழ், மூழ்கு, sink, be immersed, drowned
            - 2. (வி.எ) ஆழ்ந்து, deeply 
            - 3. (பெ) கிழங்கு, root
1.1.
பல் சுரம் உழந்த நல்கூர் பரிய
முழங்கு திரை புது மணல் அழுந்த கொட்கும்
வால் உளை பொலிந்த புரவி
தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே - நற் 135/6-9
பல காடுகளைக் கடந்த வருத்தத்தினால் வலிகுன்றிய ஓட்டத்தையுடைய,
முழங்குகின்ற கடல் அலைகள் ஒதுக்கிய புது மணலில் அழுந்தியதால் சுழலும்
வெண்மையான தலையாட்டம் பொலிந்த புரவி கட்டப்பட்ட
தேரினையுடையவர் நம்மோடு சிரித்து மகிழ்வதற்கு முன்பு -
1.2.
நீர் மாண் எஃகம் நிறத்து சென்று அழுந்த
கூர் மதன் அழியரோ - அகம் 212/20,21
மாண்புற்ற நீர்மையையுடைய வேல் நின் மார்பிலே தைத்து அழுந்திட
நினது செருக்கு அழியப்பெறுவாயாக
1.3.
அவரை
அழுந்த பற்றி அகல் விசும்பு ஆர்ப்பு எழ
கவிழ்ந்து நிலம் சேர அட்டதை - புறம் 77/10-12
அவரை
இறுகப் பிடித்து பரந்த ஆகாயத்தின்கண்ணெ ஒலி எழ
கவிழ்ந்து உடலம் நிலத்தின்கண்ணேபொருந்தக் கொன்றதற்கு

பெரும் பொளி வெண் நார் அழுந்து பட பூட்டி - அகம் 83/6
பெரிதாக உரித்த வெள்ளிய நார்க்கயிற்றால் (அக் கன்றினை) அழுத்தம்பெறக் கட்டி
- நாட்டார் உரை
1.4.
மீ நீர் நிவந்த விறல்_இழை கேள்வனை
வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக என - பரி 21/40,41
நீர் மேல் எழுந்த மிகச் சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணொருத்தி, கரையில் நிற்கும் தன் கணவனை
ஒரு மூங்கிற்கழியைப் புணையாக நீரில் மூழ்கும் தன் கையில் எட்டுமாறு கொடுக்க என்று வேண்ட,
2.
அழுந்து பட வீழ்ந்த பெரும் தண் குன்றத்து
ஒலி வல் ஈந்தின் உலவை அம் காட்டு - நற் 2/1,2
ஆழமாக வேர் பதிந்துகிடக்கும், பெரிய குளிர்ந்த குன்றத்திலுள்ள
தழைத்து வளர்ந்த ஈத்த மரங்களையுடைய காற்று வீசும் பாலைநிலத்தில்
- ஆழ்ந்து என்பது அழிந்து என வந்தது - ஔ.சு.து.உரை, விளக்கம்
3.
அழுந்து பட்டு அலமரும் புழகு அமல் சாரல் - மலை 219
கிழங்கு தாழ வீழ்ந்து அசையும் மலையெருக்கு நெருங்கின பக்கமலையில்
- அழுந்து - கிழங்கு - ஆகுபெயர் - பொ.வே.சோ.உரை, விளக்கம்.

 மேல்
 
    அழுந்துபடு - (வி) 1. நீண்டகாலமாய் இரு, be long-standing
                     2. தொன்றுதொட்டு இரு, have continued for generations
                     3. மறைபடு, be hidden
1.
அழுந்துபடு விழுப்புண் வழும்பு வாய் புலரா
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்து ஆங்கு - நற் 97/1,2
நெடுங்காலம் இருக்கும் விழுப்புண்ணின் மெல்லிய மேல்தோலையுடைய வாய் காய்ந்துபோகாத
துன்பத்தையுடைய மார்பினில் வேலை எறிந்தது போல்
2.
அழுந்துபட்டு இருந்த பெரும்பாண் இருக்கையும் - மது 342
நெடுங்காலம் அடிப்பட்டிருந்த பெரும்பாணர்களின் குடியிருப்பினையும் 
அழுந்துபடுதல் - தலைமுறை தலைமுறையாக இருந்து வாழ்தல் - பொ.வே.சோ.விளக்கம்
3.
மா கடல் முகந்து மணி நிறத்து அருவி
தாழ் நீர் நனம் தலை அழுந்துபட பாஅய்
மலை இமைப்பது போல் மின்னி
சிலை வல் ஏற்றொடு செறிந்த இ மழைக்கே - நற் 112/6-9
கரிய கடலின் நீரை முகந்துகொண்டு, நீலமணியின் நிறத்தைக் கொண்ட அருவியிலிருந்து
கீழே விழும் நீர் அகன்ற இடமெல்லாம் மறைபடுமாறு பரவ,
விட்டுவிட்டு ஒளிரும் மின்னலால் மலையே இமைப்பதுபோல் மின்னி,
ஒலிக்கின்ற வலிய இடியுடன் செறிவாகக் கலந்துவந்த இந்த மழைக்கு -
- பின்னத்தூரார் உரை	

 மேல்
 
    அழுந்தூர் - (பெ) ஒரு சங்ககால ஊர், a city in sangam period
அழுந்தூர் என்ற ஊர் சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத்தலமான மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம்
வட்டத்தில் உள்ளது. இக்காலத்தில் இந்த ஊர் தேரழுந்தூர் என்னும் பெயருடன் விளங்கிவருகிறது.
கம்பராமாயணம் பாடிய கம்பர் இவ்வூரில் பிறந்தவர்.
வெண்ணிவாயில் என்னுமிடத்தில் வேந்தன் கரிகாலனை இரு பெரு வேந்தரும் 11 வேளிரும் ஒன்று கூடித்
தாக்கினர். இவர்கள் அனைவரும் போர்க்களத்திலேயே மாண்டனர். போர்களத்தில் அவர்களது முரசங்கள்
மட்டுமே எஞ்சிக் கிடந்தன. இவற்றைப் பார்த்த அழுந்தூர் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர் எனப் பரணர்
பாடுகின்றார். 

காய் சின மொய்ம்பின் பெரும் பெயர் கரிகால்
ஆர்கலி நறவின் வெண்ணிவாயில்
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின்
இமிழ் இசை முரசம் பொரு_களத்து ஒழிய
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய
மொய் வலி அறுத்த ஞான்றை
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே - அகம் 246/8-14
மிக்க சினமும்  வலியும் உடைய பெரிய புகழினைக் கொண்ட கரிகால் வளவன்
மிக்க கள் வளமுடைய வெண்ணிவாயில் என்னுமிடத்தே
சிறப்பு வாய்ந்த பகையரசர் மாறுபட்டு எழுந்த போரின்கண்
மிக்க ஓசையையுடைய வீர முரசம் போர்க்களத்தே ஒழிந்து கிடக்க
வேளிர் பதினொருவருடன் இருபெரு வேந்தரும் நிலைகெட
அவர்தம் மிக்க வலியைக் கெடுத்த நாளில்
அழுந்தூர்க்கண் எழுந்த குறையாத ஆரவாரத்தினும் பெரிது

 மேல்
 
    அழுந்தை - (பெ) அழுந்தூர், a city in sangam period : பார்க்க : அழுந்தூர்
தந்தை
கண் கவின் அழித்ததன் தப்பல் தெறுவர
ஒன்றுமொழி கோசர் கொன்று முரண் போகிய
கடும் தேர் திதியன் அழுந்தை கொடும் குழை
அன்னிமிஞிலியின் இயலும் - அகம் 196/8-12
தன் தந்தையின் கண்ணின் எழிலைக் கெடுத்ததாகிய தவற்றிற்காக, அச்சம் உண்டாக,
நெடுமொழியினையுடைய கோசர்களைக் கொல்வித்து, மாறுபாடு தீர்ந்த
விரைந்த தேரையுடைய திதியனது அழுந்தூர் என்னுமிடத்தே, வளைந்த குழையினை அணிந்த
அன்னி மிஞிலி என்பாளைப் போல களிப்புற்று நடக்கும்.

கோசர் என்பார் தன் தந்தையை அருளின்றிக் கண் களைந்தமையின் அன்னி ஞிமிலி என்பாள் சினம் கொண்டு
குறும்பியன், திதியன் என்பவர்களால் அக் கோசரைக் கொல்வித்து மாறுபாடு தீர்ந்து களிப்புற்றாள். இதனை
அகம் 262 விரிவாகப் பேசுகிறது. இங்ஙனம் நிகழ்ந்தது அழுந்தூரில் என இந்த அடிகளால் அறிகிறோம்.

 மேல்
 
    அழும்பில் - (பெ) ஒரு சோழநாட்டு ஊர், a city on chOzha country.
அழும்பிலைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் மூன்று குறிப்புகள் உள்ளன.
1.
நன்னன்,ஏற்றை, நறும் பூண் அத்தி,
துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி,
பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு
அன்று அவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர்,
பருந்து படப் பண்ணி, பழையன் பட்டென,
கண்டது நோனானாகி, திண் தேர்க்
கணையன் அகப்பட, கழுமலம் தந்த
பிணையல் அம் கண்ணிப் பெரும் பூண் சென்னி
அழும்பில் அன்ன அறாஅ யாணர்
பழம் பல் நெல்லின் பல் குடி பரவை - அகம் 44/7-16
நன்னனும், ஏற்றை என்பவனும், நறிய பூண்களை அணிந்த அத்தியும்,
(பகைவர்) நெருங்குதற்கரிய மிக்க வலிமையுடைய கங்கனும், கட்டியும்,
பொன் அணிகலன்கள் அணிந்த வலிய வில்லையுடைய புன்றுறையும், என்பதாக
முன்பு அவர்கள் ஒன்றுகூடியிருந்த அளத்தற்கரிய சிறப்பு வாய்ந்த பாசறையில்,
பருந்துகள் மேலே சுற்றுமாறு போரிட்டுப் பழையன் இறந்தானாக,
அதனைக் கண்டு பொறுக்காதவனாகி, திண்ணிய தேரையுடைய
கணையன் என்பானை அகப்படுத்தி, கழுமலம் என்ற ஊரைக் கைப்பற்றிய
பிணைப்புள்ள அழகிய கண்ணியையும், மிகுந்த அணிகலன்களையும் அணிந்த சென்னியின்
அழும்பில் என்ற ஊரை ஒத்த, குறையாத புதுவருவாயையுடைய
பழமையான பலவான நெல்லையுடைய பல குடிப் பரப்பினை உடையதும்

இவ்வடிகளால், அழும்பில் என்ற ஊர் நெல்வளம் மிக்கது என்றும், அது சோழமன்னன் சென்னியின் ஆட்சிக்கு
உட்பட்டிருந்தது என்றும் அறிகிறோம். எனினும் இப்பாடலுக்கான உரை விளக்கத்தில் அழும்பில் என்பது
பாண்டிய நாட்டு ஊர் என்ப என்று நாட்டார் குறிப்பிடுகிறார்.
2.
வாளை நீர்நாய் நாளிரை பெறூஉ
பெறாஅ உறை அரா வராஅலின் மயங்கி
மாறுகொள் முதலையொடு ஊழ்மாறு பெயரும்
அழும்பிலன் அடங்கான் தகையும் என்னும்
வலம்புரி கோசர் அவைக்களத்தானும் - புறம் 283/2-6
வாளைமீனை நீர்நாய் தன் நாட்காலை உணவாகப் பெற்றுண்டு
உணவு பெறாமல் அங்கே உறையும் பாம்புகளை வரால்மீன் எனக் கருதி மயங்கி
மாறுகொள்ளும் முதலைகளோடு முறைமுறை மாறுபட்டு நீங்கும்
அழும்பில் என்னும் ஊரையுடையோன் அடங்கானாய் எதிர்நின்று பொருவன் என்று கருதியெழும்
வெற்றிவிரும்பும் கோசருடைய அவைக்களத்தின்கண்ணும்
-இந்த அழும்பில் என்பது வேளிர்க்குரியது என்றும் சோழவேந்தர்க்குரியது என்றும் ஔவை.சு.து. அவர்கள்
தம் உரையில் குறிப்பிடுவார்.
3.
நிலனும் வளனும் கண்டு அமைகல்லா
விளங்கு பெரும் திருவின் மான விறல் வேள்
அழும்பில் அன்ன நாடு இழந்தனரும் - மது 343-345
நிலத்தையும் (அதன்)வளத்தையும் கண்டு முடிவுபோகாத
விளங்கும் பெரிய செல்வத்தினை உடைய மான விறல் வேள்(என்னும் குறுநில மன்னனுடைய)
அழும்பில் என்னும் ஊரை ஒத்த நாடுகளை இழந்தவர்களும்
- அழும்பில் என்பது வேளிருடைய ஊர் என்று தெரிகிறது. மான விறல் வெள் என்பான் அக் காலத்தே
உடனிருந்தான் போலும். புதுக்கோட்டைப் பகுதியில் இப்பொழுது அம்புக்கோயில் என வழங்கப்படும்
ஊரே அழும்பில் என்னும் ஊர் என்ப என்கிறார் உரையாசிரியர் பொ.வே.சோ அவர்கள்.

இந்த அகப்பாட்டாலும், புறப்பாட்டாலும் அழும்பில் என்ற ஊர் மிகுவளம் பொருந்தியதாக அறிகிறோம். 

 மேல்
  
    அழுவம் - (பெ) 1. பரப்பு, a vast expanse
	அ. பாலைநிலப் பரப்பு, ஆ. கடற்பரப்பு இ. போர்க்களப்பரப்பு
அ.
வாகை வெண் நெற்று ஒலிக்கும்
வேய் பயில் அழுவம் முன்னியோரே - குறு 7/5,6
வாகைமரத்தில் வெள்ளிய நெற்றுக்கள் ஒலிக்கும்
மூங்கில்கள் நிறைந்திருக்கும் பாலைநிலப்பரப்பில் செல்ல நினைத்தவர்
ஆ.
பசும்பிதிர்த், திரை பயில் அழுவம் உழக்கி உரன் அழிந்து - அகம் 210/5
பசிய திவலைகளையுடைய அலைகள் நிறைந்த கடற்பரப்பைக் கலக்கி, வலி குன்றி
இ.
கறுத்தோர், 
ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும் - அகம் 81/11,12
வெகுண்டெழுந்த பகைவரின், 
ஒளிர்கின்ற வேற்படையையுடைய போர்க்களத்தை, யானைகள் மடிய வெல்லும்

 மேல்
 
    அள்ளல் - (பெ) சேறு, சேற்றுக்குழம்பு, mud, mire
அள்ளல் ஆடிய புள்ளி வரி கலை - நற் 265/2
சேற்றில் குளித்தெழுந்த, புள்ளியையும் வரியையும் கொண்ட கலைமானை 

ஈர்ந்தண் எருமை சுவல் படு முதுபோத்து
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி - அகம் 316/3,4
மிக்க குளிர்ச்சியுற்ற முதுகினையுடைய முதிய எருமைக்கிடா
மிக்க சேற்றின் குழம்பிலே கிடந்து இரவெல்லாம் துயின்று

 மேல்
 
    அள்ளன் - (பெ) அதியனின் நண்பன், a friend of Athikamaan
ஆடு நடை பொலிந்த புகற்சியின் நாடு கோள்
அள்ளனை பணித்த அதியன் பின்றை
வள் உயிர் மாக்கிணை கண் அவிந்தாங்கு - அகம் 325/7-9
வென்றி ஒழுக்கத்தால் மேம்பட்ட ஒழுக்கத்தினால் நாட்டினைக் கொள்ளுமாறு
அள்ளன் என்பானைப் பணித்த அதியன் துஞ்சிய பின்பு
சிறந்த ஒலியினையுடைய பெரிய கிணையானது ஒலி அடங்கினாற் போல
- அள்ளன் என்பான் தனக்கு வெற்றியை அளித்தான் என்ற மகிழ்ச்சியால் அதியன்
அவனுக்குப் பரிசிலாக நாடு நல்கினன் போலும் என்பார் நாட்டார் தம் உரைக்குறிப்பில்.

 மேல்
 
    அள்ளூர் - (பெ) ஒரு சங்ககால ஊர், a city in sangam period
ஒளிறு வாள் தானை கொற்ற செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என்
ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க - அகம் 46/13-15
ஒளிவீசும் வாள்படையைக் கொண்ட வெற்றி பொருந்திய செழியனது
நெல்பொலி கொண்ட அள்ளூர் நகரைப் போன்ற, எனது
ஒளிரும் வளையணிந்த தலைவியின் அழகு குன்றினும் குன்றுக;

செழியனின் அள்ளூர் என்பதால் இது பாண்டியநாட்டைச் சேர்ந்தது என்பது பெறப்படும். இது
நெல்வளம் மிக்கது என்கிறார் பாடலாசிரியர். இவர் அள்ளூர் நன்முல்லையார் எனப்படுதலால்
இவர் தன் ஊரைப்பற்றியே பாடியுள்ளார் எனலாம்.

 மேல்
 
    அளக்கர் - (பெ) கடல், sea
அளக்கர்த் திணை விளக்கு ஆக - புறம் 229/10
கடலால் சூழப்பட்ட பூமிக்கு விளக்காக

 மேல்
 
    அளகம் - (பெ) பெண்ணின் கூந்தல், woman's hair
அளகம் சேர்ந்த திருநுதல் - நற் 377/8
கூந்தல் சேர்ந்த சிறிய நெற்றி

 மேல்
  
    அளகு - (பெ) கோழி, பருந்து ஆகியவற்றின் பெண், hen of fowl
அளகு உடை சேவல் கிளை புகா ஆர - பதி 35/5
பெடையையுடைய சேவல்பருந்தினம் இரையை உண்ண

மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர் - பெரும் 256
வீட்டில் வாழும் கோழியின் வாட்டியதைப் பெறுவீர்

 மேல்
 
    அளறு - (பெ) குழைசேறு, soft mud
மார்பு அழி சாந்தின் மணல் அளறு பட்டன்று - பரி 12/97
மார்பிலிருந்து வழித்து எறியப்பட்ட சந்தனத்தால் ஆற்றோர மணல் சேறாகிப்போனது;

 மேல்
 
    அளி - 1. (வி) 1. கொடு, give, bestow
                  2. கருணைகாட்டு, அருள்செய், be gracious, showloving kindness
                  3. அன்புடன் இரு, be kindly
                  4. கனி, ripen, become mellow
         - 2. (பெ) 1. கருணை, அன்பு, graciousness, love
                  2. காத்தல், protecting, taking care of
                  3. வண்டு, bee, beetle
                  4. குளிர்ச்சி, coolness
1.1
இன்முகம் கரவாது உவந்து நீ அளித்த
அண்ணல் யானை எண்ணின் - புறம் 130/4,5
இனிய முகத்தை ஒளியாது மகிழ்ந்து நீ கொடுத்த
தலைமையையுடைத்தாகிய யானைய எண்ணிப்பார்த்தால்
1.2
அஞ்சினர்க்கு அளித்தலும் வெம் சினம் இன்மையும் - சிறு 210
(தனக்கு)அஞ்சியவர்க்கு அருள்செய்தலையும், கொடிய வெகுளி இல்லாமையையும்
1.3
நறு வீ தாழ் புன்னை கீழ் நயந்து நீ அளித்தக்கால்
மறு_வித்தம் இட்டவன் மனம் போல நந்தியாள் - கலி 136/13,14
நறிய மலர்கள் உதிர்ந்துகிடக்கும் புன்னை மரத்தின் கீழ் விருப்பத்துடன் நீ இவளிடம் அன்புசெய்தபோது
மறுதாயம் கிட்டியவன் மனத்தைப் போல மகிழ்ந்து சிறந்தவள்,
1.4
கானல் பெண்ணை தேன் உடை அளி பழம் - நற் 372/2
கடற்கரைச் சோலையின் பனையின் தேனையுடைய மிகக் கனிந்த பழம்
2.1
அளி ஒரீஇ காதலர் அகன்று ஏகும் ஆரிடை - கலி 16/14
கொஞ்சமும் இரக்கமின்றி நம் காதலர் நம்மைப் பிரிந்து செல்லும் அரிய காட்டுவழியில்
2.2
விண் அளி கொண்ட வியன் மதி அணி கொள - பரி 13/5
வானத்திலிருந்து காத்தலை மேற்கொண்ட முழுமதியைப்போன்று அழகு கொள்ள
2.3
நல்ல கமழ் தேன் அளி வழக்கம் எல்லாமும் - பரி 10/118
நறுமணம் கமழும் தேனை உண்ணப் புறப்பட்டன வண்டினம் எல்லாம்
2.4
வெம் சுடர் ஒளியும் நீ திங்களுள் அளியும் நீ - பரி 3/67
வெம்மையான சுடராகிய ஞாயிற்றின் ஒளியும் நீ! குளிர் திங்களின் குளிர்ச்சியும் நீ!

 மேல்
 
    அளிதோ - (வி.மு) அளிது, இரங்கத்தக்கது, it is worth pitying
அளிதோ தானே பேர் இரும் குன்றே - புறம் 111/1
இரங்கத்தக்கது, பெரிய கரிய குன்றம்.

 மேல்
 
    அளியர் - (வி.மு) இரங்கத்தக்கவர், they are worth pitying
அளியரோ அளியர் என் ஆயத்தோர் என - நற் 12/8
பெரிதும் இரங்கத்தக்கவர் என் தோழியர்" என்று

 மேல்
 
    அளியை - (வி.மு) இரங்கத்தக்கவன்(ள்) (முன்னிலை), You deserve pitying
நாணு மலி யாக்கை வாள் நுதல் அரிவைக்கு
யார்-கொல் அளியை - பதி 19/14,15
நாணம் மிகுந்த உடம்பும், ஒளி திகழும் நெற்றியும் கொண்ட உன் மனைவிக்கு
நீ யாராயினாய்? நீ இரங்கத்தக்கவன்!

ஆர நீர் ஊட்டி புரப்போர்
யார் மற்று பெறுகுவை அளியை நீயே - அகம் 383/13,14
நிறைய நீரினை உண்பித்து புரப்பார்
யாரை நீ பெறுவாய்? நீ இரங்கத்தக்கவள்!.

 மேல்
 
    அளை  - 1. (வி) 1. துளாவு, stir
                           2. கல, mix
		2. (பெ) 1.. விலங்குகளின் இருப்பிடம், குகை, cave, den
		       2.. நண்டுகளின் வளை, holes of crabs
		       3.. புற்று, anthill
		       4. மோர், buttermilk

1.1
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்தி - அகம் 207/14
தேன் கலந்து துளாவிய இனிய பாலை ஏந்தி
1.2
மொய்ம்பு இறந்து திரிதரும் ஒருபெருந் தெரியல்,
மணிதொடர்ந்தன்ன ஒண்பூங்கோதை
அணி கிளர் மார்பின் ஆரமொடு அளைஇ - மது 437-439
வலியைக் கடந்து திரியும் ஒன்றாகிய பெரிய வேப்பமாலையினையும்,
மாணிக்கம் ஒழுகினாற்போன்று ஒள்ளிய செங்கழுநீர் மாலையினையும்
அழகுவிளங்கும் மார்பில் முத்துமாலையோடே கலந்து அணிந்து
2.1
குரூஉ மயிர் யாக்கைக் குடாவடி உளியம்
பெரும் கல் விடர் அளை செறிய - திரு 313,314
கரிய நிறமுள்ள மயிரினையுடைய உடம்பினையும், வளைந்த அடியினையும் உடைய கரடி
பெரிய கல்வெடித்த குகையிலே சேர,
2.2
அளை வாழ் அலவன் கண் கண்டு அன்ன - பொரு 9
வளையிலே வாழ்கின்ற நண்டின் கண்ணைப் பார்த்தாற்போன்ற
2.3
பாம்பு அளை செறிய முழங்கி வலன் ஏர்பு
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை - நற் 264/1,2
பாம்பு புற்றுக்குள் செறிந்திருக்குமாறு முழங்கி, வலப்பக்கமாக எழுந்து
மேகம் மழை பொழிந்த காண்பதற்கினிய காலை
2.4
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி - பெரும் 163
மோரை விற்ற நெல்லுணவால் சுற்றத்தார் எல்லாரையும் உண்ணப்பண்ணி

 மேல்
 
    அற்கம் - (பெ) தங்குதல், staying
பயன் நிலம் குழைய வீசி பெயல் முனிந்து
விண்டு முன்னிய கொண்டல் மா மழை
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப - அகம் 235/4-6
பயந்தரும் நிலங்கள் நெகிழப் பெய்து பின் பெய்தலை வெறுத்து
மலையைச் சேர்ந்த கொண்டலாகிய கரிய மேகம்
மீண்டும் இரவில் தங்குதலுற்றுப் பொங்கித் துளிக்க

ஆனால், அற்கம் என்பதற்கு, அடக்கம் - Self-restraint, self-control என்று பேரகராதி (Tamil Lexicon)
பொருள்தருகிறது.
முதலில் நிலம் நெகிழப் பெருமழையாய்க் கொட்டிய மேகம், பின்பு தன்னடக்கத்துடன் துளிகளாய்த் தூவியது
எனப் பொருள்கொள்ளலாம்.
ஆனால் அற்கம் என்ற சொல் அல்கு என்ற வினையினை அடியாகக் கொண்டது என்று பேரகராதி கூறுகிறது.
அல்குதல் என்பதற்கு அடங்குதல், சுருங்குதல் என்ற பொருள் இருப்பினும் தங்குதல் என்ற பொருளும் உண்டு.
அற்கம் என்பதற்கு, அல்குதல் - தங்குதல் என்றே பொருள்கொள்கிரார் ச.சே.சு அவர்கள் தம் உரையில்.

 மேல்
 
    அற்கு - (வி.அ) அல்லுக்கு, இராக்காலத்துக்கு, for the night
அற்கு இடை கழிதல் ஓம்பி ஆற்ற நும்
இல் புக்கு அன்ன கல் அளை வதிமின் - மலை 254,255
இரவிற்கு இடைவழிகளில் காலத்தைப் போக்குவதைத் தவிர்த்து, வழியிலுள்ள, உமது(சொந்த)
வீட்டிற்குள் நுழைவதைப்போன்ற(உயரமான நுழைவிடம் கொண்ட) கல்குகைகளில் தங்குவீராக 

 மேல்
 
    அற்சிரம் - (பெ) முன்பனிக்காலம், early dew season,
	மார்கழி, தை ஆகிய இருமாதங்களும் முன்பனிக்காலமாகும்
	சிலவேளைகளில் இது பின்பனிக்காலத்தையும் குறிக்கும்.
 
	கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்ற 
ஆறு பருவங்களையுடையது தமிழர் ஆண்டுக்கணக்கு. இது ஆவணியில் தொடங்கி
இரண்டிரண்டு மாதங்களாகச் செல்லும்.

வாடை தூக்கும் வரு பனி அற்சிரம் - அகம் 78/10
வாடைக் காற்று வீசும் வருகின்ற பனியைக் கொண்ட முன்பனிக்காலம்

அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில் - அகம் 97/17
பின்பனிக்காலம் நீங்கிய அரிய பதமான இளவேனில்

 மேல்
 
    அற்றம் - (பெ) 1. சமயம், பொழுது, occassion, opportunity
                  2. வருத்தம், suffering
1. 
அற்றம் பார்த்து அல்கும் கடுங்கண் மறவர் - கலி 4/3
சரியான சமயத்தை எதிர்நோக்கிக் காத்துக்கிடக்கும் கொடிய மறவர்கள்
2.
இரந்தோர் அற்றம் தீர்க்கு என விரைந்து இவண்
உள்ளி வந்தனென் யானே - புறம் 158/19,20
இரந்தோரது துன்பத்தைத் தீர்க்கக்கடவேன் யான் என்று நீ இருத்தலால் விரைந்து இவ்விடத்தே
பரிசில்பெற நினைந்து வந்தேன் யான்

 மேல்
 
    அற்று - 1. (வி.மு) 1. அது போன்றது, Is like, of the same kind
                       2. அத்தன்மையது, is of such nature or quality
            2. (வி. அ) இல்லாமல், without
1.1.
படு மழை பொழிந்த சாரல் அவர் நாட்டு
குன்றம் நோக்கினென் தோழி
பண்டை அற்றோ கண்டிசின் நுதலே - குறு 249/3-5
ஒலிக்கின்ற மழை பொழிந்த மலைச்சரிவையுடைய அவரின் நாட்டுக்
குன்றத்தை நோக்கினேன், தோழி!
(பசப்பூர்ந்த என் நெற்றி) முன்பு இருந்ததைப் போல் ஆனதோ, உற்றுப்பார் என் நெற்றியை
1.2.
உரும் இசை புணரி உடைதரும் துறைவற்கு
உரிமை செப்பினர் நமரே விரி அலர்
புன்னை ஓங்கிய புலால் அம் சேரி
இன் நகை ஆயத்தாரோடு
இன்னும் அற்றோ இ அழுங்கல் ஊரே - குறு 351/4-8
இடியோசை போன்ற முழக்கத்தையுடைய அலைகள் உடைக்கும் கடல்துறைத் தலைவனுக்கு
உன்னை உரிமையாகக் கூறினர் நம் இல்லத்தார்; விரிந்த பூக்களைக் கொண்ட
புன்னை மரங்கள் உயர்ந்து வளர்ந்த புலவு நாறும் சேரியிலுள்ள
இனிய சிரிப்பையுடைய மகளிர்கூட்டத்தோடு
இன்னும் அத்தன்மையுடையதோ (முன்புபோல் பழிச்சொற்கள் கூறுமோ), இந்த ஆரவாரமுள்ள ஊர்?
2.
செறுவும் வாவியும் மயங்கி நீர் அற்று
அறு கோட்டு இரலையொடு மான் பிணை உகளவும் - பட் 244,245
வயலும், குளங்களும், தம்மில் ஒன்றாகி, நீர் இல்லாமல்,
நெளிவுள்ள கொம்புகளையுடைய கலைமான்களோடு பெண்மான்கள் துள்ளிவிளையாடவும்

 மேல்
 
    அறல் - (பெ) 1. நெளிவு நெளிவான கருமணல், black sand with curls
                 2. அரித்தோடும் நீர், flowing water
                 3. கூந்தலின் நெறிப்பு, curl in hair
1.
அறல் போல் கூந்தல் பிறை போல் திரு நுதல் - பொரு 25
(ஆற்றின்)அறல் போலும் கூந்தலினையும், பிறை போல் அழகிய நுதலினையும்
- அறல் - யாற்றின்கண் நீரோட்டத்தால் வரிவரியாக அமைந்த நுண்ணிய கருமணல்
 - பொ.வே.சோ உரை விளக்கம்
	
கதுப்பு விரித்து அன்ன காழ் அக நுணங்கு அறல் - சிறு 6
மயிர் விரித்ததை ஒத்த கருநிறத்தைக் கொண்ட நுண்ணிய கருமணல்

	
2.1
ஆற்றில் அரித்தோடும் நீர்.
கயல் அறல் எதிர கடும் புனல் சாஅய் - நெடு 18
கெண்டை மீன்கள் சிறிதாய் ஓடும் நீரில் எதிர்த்து ஏறி வர, பெரும் நீர்ப்பெருக்கு குறைய

	

2.2
கன்னங்களில் அரித்தோடும் கண்ணீர்
நறவின்
சே இதழ் அனைய ஆகி குவளை
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை
உள்ளகம் கனல உள்ளு-தொறு உலறி
பழங்கண் கொண்ட கலிழ்ந்து வீழ் அவிர் அறல்
வெய்ய உகுதர வெரீஇ - அகம் 19/9-14
நறவம்பூவின்
சிவந்த இதழ் போன்றவை ஆகி - (முன்பு)குவளையின்
கரிய இதழைப் போன்ற மிகுந்த நீரைக்கொண்ட, ஈரமான இமைகள் -
உள்ளம் கொதிப்பதால் நினைக்கும்போதெல்லாம் காய்ந்துபோக -
துன்பம் கொண்டு விரைந்து விழுகின்ற பளபளக்கும் நீர்த்துளிகள்
வெம்மையுடன் கீழே விழ, (அதனால்) அஞ்சி,

	
3.
அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல் - மலை 304
(ஆற்றுக் கருமணல் போல் அலை அலையான)நெறிப்பு உள்ள மயிரினையுடைய (மலை)இடைச்சியர்
பாடலோசையும்
- அறல் - கூந்தலின்கண் வரிவரியாய் அமைந்த வடு - பொ.வே.சோ உரை விளக்கம்

 மேல்
 
    அறவு - (பெ) இல்லையாதல், cessation
கோள் அறவு அறியா பயம் கெழு பலவின் - அகம் 162/19
காய்த்தல் இல்லையாதல் அறியாத பயனுடைய பலாமரத்தினோடு

 மேல்
 
    அறவை - (பெ) தருமநெறி, righteousness
அறவை நெஞ்சத்து ஆயர் - புறம் 390/1
தருமநெறியின்பாற்பட்ட நெஞ்சினையுடைய ஆயர்களும்

 மேல்
 
    அறிகரி - (பெ) நேரடி சாட்சி, Eye-witness, one who has personal knowledge
அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை - குறு 184/1
தாம் அறிந்ததனை மறைத்துப் பொய்கூறுதல் சான்றோர்க்கு இயல்பில்லை;

 மேல்
 
    அறுகால்பறவை - (பெ) வண்டு, bee, beetle
நாற்ற நாட்டத்து அறுகால்பறவை
சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும் - புறம் 70/11,12
மணத்தை ஆராயும் ஆராய்ச்சியையுடைய வண்டு
சிறிய வெளிய ஆம்பலின் மீதே ஊதும்

 மேல்
 
    அறுகை - (பெ) 1. அறுகம்புல், Harialli grass, Cynodon dactylon;
                   2. ஒரு சங்ககால அரசன், a king of sangam period
1.
மணி வார்ந்து அன்ன மா கொடி அறுகை
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி - குறு 256/1,2
நீல மணியின் கதிர்களை வரிசையாய் வைத்தாற்போன்ற கரிய கொடிகள் படர்ந்த அறுகம்புல்
செறிவாகப் பின்னிக்கிடந்ததை, மெல்லிய கொம்புகள் உள்ள தன் பெண்மானோடு உண்டு
2.
அறுகை என்பவன் ஓர் அரசன். அவன் 5-ஆம் பதிற்றுப்பத்துப் பாட்டுடைத் தலைவன் கடல் பிறக்கு ஓட்டிய
செங்குட்டுவனுக்குக் 'கேளிர்' என்று குறிப்பிடப்படுகிறான்
நுண் கொடி உழிஞை வெல் போர் அறுகை
சேணன் ஆயினும் கேள் என மொழிந்து - பதி 44/10,11
நுண்ணிய கொடியையுடைய உழிஞையின் பூவைச் சூடிய, வெல்லுகின்ற போரைச் செய்யும் அறுகை என்பவன்
தோலைவில் இருந்தாலும் உன்னை நண்பன் என்று கூறிக்கொண்டு,

 மேல்
 
    அறுமீன் - (பெ) கார்த்திகை, the star karthigai, Pleiades, as containing six stars
அறுமீன் பயந்த அறம் செய் திங்கள் - நற் 202/9
கார்த்திகை மீன்களோடு கூடிய அறம்செய்வதற்கான முழுத்திங்கள் நாளில்

மழை கால் நீங்கிய மாக விசும்பில்
குறு முயல் மறு நிறம் கிளர மதி நிறைந்து
அறுமீன் சேரும் அகல் இருள் நடுநாள்
மறுகு விளக்கு_உறுத்து மாலை தூக்கி
பழ விறல் மூதூர் பலருடன் துவன்றிய
விழவு உடன் அயர வருக தில் அம்ம - அகம் 141/6-11
மழை பெய்தல் ஒழிந்த வானின்கண்ணே
குறிய முயலாகிய மறுவின் நிறம் விளங்க, மதி நிறைவுற்று
கார்த்திகையைச் சேரும் இருளகன்ற நடு இரவில்
தெருக்களில் விளக்குகளை நிரல்பட ஏற்றி மாலைகளைத் தொங்கவிட்டு
பழமையான வென்றியுடைய ஊரின்கண் பலருமொருங்கு சேர்ந்த
விழவினை நம்முடன் கொண்டாட வருவாராக

 மேல்
 
     அறுவை (பெ) - ஆடை, வேட்டி , cloth, garment
அரவு உரி அன்ன அறுவை நல்கி - பொரு 83
பாம்புச் சட்டைபோன்ற ஆடைகளைத் தந்து

புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை
தாது எரு மறுகின் மாசுண இருந்து - புறம் 311/2,3
சலவைப்பெண் துவைத்த தூய வெள்ளையான வேட்டி
சாணம் மெழுகிய தெருவில் தூசுபட அமர்ந்து

 மேல்
 
    அறை - 1. (வி) 1. அறு, வெட்டு, நறுக்கு, cut
                   2. ஒலி, sound
                   3. அடி, beat, as a drum
                   4. தெரிவி, declare
           - 2. (பெ) 1. வெட்டுதல், cutting
                    2. அறுகை, ஒழிதல், இல்லாதுபோதல், ceasing, disappearing
                    3. பாத்தி, garden plot
                    4. வீட்டில் தடுப்புப் பகுதி, room
                    5. பாறை, rock
                    7. பாசறை, war camp
                    8. (மாலை)சாற்றுதல், tying around (a garland)

1.1
அறை கரும்பின் அரி நெல்லின்
இன களமர் இசை பெருக - பொரு 193,194
அறுக்கின்ற கரும்புக் கழனிகளிடத்தும், அரிகின்ற நெற் கழனிகளிடத்தும்,
திரண்ட உழவருடைய பண்ணொலி மிகுதியாய் ஒலிப்பதால்

பொன் அறைந்து அன்ன நுண் நேர் அரிசி - மலை 440
பொன்னை நறுக்கினாலொத்த நுண்ணிய ஒத்த அரிசியை
1.2.
ஆரை வேய்ந்த அறை வாய் சகடத்து - அகம் 301/7
பாயால் வேயப்பெற்ற ஒலியினைச்செய்யும் வாயினையுடைய வண்டியில் செல்லும்
- நாட்டார் உரை
1.3.
விழு கடிப்பு அறைந்த முழு குரல் முரசம் - புறம் 366/1
பெரிய குறுந்தடி அடித்த பெரு முழக்கத்தையுடைய முரசம்
1.4.
அறம் பொருள் இன்பம் என்று அ மூன்றின் ஒன்றன்
திறம் சேரார் செய்யும் தொழில்கள் அறைந்தன்று - கலி 141/3,4
அறம் பொருள் இன்பம் ஆகிய இந்த மூன்றினில் ஒன்றாகிய அறத்தின்
வழியே சேராதார், இப்பிறப்பில் செய்யும் தொழில்களில் ஒன்றாக நூல்கள் தெரிவிக்கின்றன
2.1
குறை அறை வாரா நிவப்பின் அறை_உற்று
ஆலைக்கு அலமரும் தீம் கழை கரும்பே - மலை 118,119
குறைந்துபோதலும், அற்றொழிதலும் உண்டாகாத வளர்ச்சியுடன், வெட்டுதலுற்று, 
ஆலைக்காக (அறைபடுவதற்காக)அசைந்துகொண்டிருக்கும் இனிக்கும் கோலாகிய கரும்பு;
2.2
குறை அறை வாரா நிவப்பின் அறை_உற்று
ஆலைக்கு அலமரும் தீம் கழை கரும்பே - மலை 118,119
குறைந்துபோதலும், அற்றொழிதலும் உண்டாகாத வளர்ச்சியுடன், வெட்டப்பட்டு, 
ஆலைக்காக (அறைபடுவதற்காக)அசைந்துகொண்டிருக்கும் இனிக்கும் கோலாகிய கரும்பு;
- குறை - நட்ட கரும்புகள் வளம்பட வளராது தேய்ந்திருத்தல்
- அறை - நட்ட கரும்புகள் உயிரற்று அழிதல்
- பொ.வே.சோ.உரை, விளக்கம்
2.3
குறை அறை வாரா நிவப்பின் அறை_உற்று
ஆலைக்கு அலமரும் தீம் கழை கரும்பே - மலை 118,119
பாத்தி குறைவுபடாத வளர்ச்சியோடே வெட்டுதலுற்று
ஆலைக்குப் பயன்படுதற்கு அசைந்துகொண்டு நிற்கும் இனிய கோலாகிய கரும்பு
- அறை குறை வாரா - பாத்தி குறைவுபடாத - நச். உரை
2.4
எழினி வாங்கிய ஈர் அறை பள்ளியுள் - முல் 64
திரைச்சீலையை வளைத்த இரு அறைகள்(கொண்ட) படுக்கைக்கண்ணே சென்று
2.5
வான் கண் கழீஇய அகல் அறை குவைஇ - குறி 98
மழை (பெய்து)தன்னிடத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தின அகன்ற பாறையில் குவித்து
2.6
பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம்
மா கண் அகல் அறை அதிர்வன முழங்க - பட் 236,237
பேயின் கண்ணை ஒத்த, முழங்குகின்ற காவலையுடைய முரசம்
பெருமைகொள்ளும் இடத்தையுடைய பாசறையில் நடுங்குவனவாய் முழங்க
2.7
திணி நிலை கடம்பின் திரள் அரை வளைஇய
துணை அறை மாலையின் கை பிணி விடேஎம் - குறி 176,177
திண்ணிய நிலையினையுடைய கடம்பினது திரண்ட முதலை நெருங்கச் சுழ்ந்த
மகளிர் ஒழுங்கிற்கு ஒப்புச் சாற்றுதலையுடைய மாலைபோன்ற கைகோத்தலை விடேமாய்
- நச். உரை

 மேல்
 
    அன்றில்  - (பெ) ஒரு பறவை, a bird
சங்க இலக்கியங்களில் 17 முறை இப்பறவை குறிப்பிடப்பட்டுள்ளது. 
பத்துப்பாட்டு நூல்களுள், குறிஞ்சிப்பாட்டில் (அடி 219) இது குறிப்பிடப்பட்டுள்ளது
எட்டுத்தொகை நூல்களுள்,
நற்றிணையில் 5 முறையும் (பாடல்கள்:124,152,218,303,335)
குறுந்தொகையில் 3 முறையும் (பாடல்கள் 160,177,301)
கலித்தொகையில் 3 முறையும் (பாடல்கள் 129,131,137)
அகநானூற்றில் 5 முறையும் (பாடல்கள் 50,120,260,305,360)
இப் பறவை குறிப்பிடப்பட்டுள்ளது.

இக் குறிப்புகளின்படி, 
1. 
இப்பறவை மிகப்பெரும்பாலும் ஆண்-பெண் என்று இணையாகவே வாழும்
ஒரு தனி அன்றில் உயவு குரல் கடைஇய - அகம் 305/13
2. 
இப்பறவைகள் மிகப்பெரும்பாலும் பெண்ணை என்ற பனைமரத்தில் தங்கும்.
மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில் - அகம் 50/11
3.
இவை வளைந்த வாயை (அலகுகளை)க் கொண்டிருக்கும்.
எனவே இவை மடிவாய் அன்றில் , கொடுவாய் அன்றில் என அழைக்கப்படுகின்றன

4.
கொம்பு ஊதுவதைப் போன்ற ஒலியை எழுப்பும். இதனை நரலுதல் என்போம்.
ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில்
ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ - குறி 219,220

அன்றிலும் பையென நரலும் - குறு 177/4
5.
இவை இரவில் கூவமாட்டா
இன் துணை அன்றில் இரவின் அகவாவே - கலி 131/28
6.
இவற்றின் கால்கள் கருமையாக இருக்கும்
எனவே இவை கருங்கால் அன்றில் (குறு 301/3) எனப்படுகின்றன.
7.
மாலையில் இவை துணையுடன் புணரும்
செக்கர் தோன்ற துணை புணர் அன்றில்
எக்கர் பெண்ணை அக மடல் சேர - அகம் 260/6,7
8
இப்பறவையில் இருவகை உண்டு என்பர். 
ஒருவகைக்குத் தலை சிவப்புநிறமாக இருக்கும்.
நெருப்பின் அன்ன செம் தலை அன்றில்
இறவின் அன்ன கொடு வாய் பெடையொடு - குறு 160/1,2
இது Red-naped ibis அல்லது Pseudibis papillosa எனப்படும்.
முழுதும் கருப்பான அடுத்தவகை
Plegadis falcinellus எனப்படும்.

     

 மேல்
 
    அன்ன - 1. (வி.மு) அத்தன்மையானவை, அதனைப் போன்றவை, 
                     Are of the same kind, are similar
             2. (இ.சொ) ஓர் உவம உருபு, a comparison marker
             3. (பெ.அ) அன்னத்தின் என்பதின் கடைக்குறை, swan's
1.
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்று ஓர் அன்ன - புறம் 192/2,3
கேடும் ஆக்கமும் தாமேவரினல்லது பிறர் தர வாரா
நோதலும் அது தீர்தலும் அவற்றை ஒப்பத் தாமே வருவன.
2.
பரி அரை கமுகின் பாளை அம் பசும் பூ
கரு இருந்து அன்ன கண்கூடு செறி துளை
உருக்கி அன்ன பொருத்துறு போர்வை
சுனை வறந்து அன்ன இருள் தூங்கு வறு வாய்
பிறை பிறந்து அன்ன பின் ஏந்து கவை கடை
நெடும் பணை திரள் தோள் மடந்தை முன்கை
குறும் தொடி ஏய்க்கும் மெலிந்து வீங்கு திவவின்
மணி வார்ந்து அன்ன மா இரு மருப்பின்
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின்
தொடை அமை கேள்வி இட வயின் தழீஇ - பெரும் 7-16
பருத்த அடிமரத்தையுடைய கமுகின் பாளையாகிய அழகினையுடைய இளம் பூ
(விரியாமல்)கருவாய் இருந்ததைப் போன்ற (இரண்டு)கண்ணும் கூடின செறிந்த துளையினையும்;
உருக்கி (ஒன்றாக வார்த்ததைப்)போன்ற (தோல் வேறுபாடு தெரியாமல்)பொருத்தப்பட்ட உறையினையும்;
சுனை வற்றியதைப் போன்ற இருள் செறிந்த உள்நாக்கில்லாத வாயினையும்;
பிறை பிறந்ததைப் போன்று பின்புறம் ஏந்தியிருக்கின்ற பிளவுபட்ட கடையினையும்;
நீண்ட மூங்கில் (போன்ற)திரண்ட தோளினையுடைய பெண்ணின் முன்கையில்(உள்ள)
குறிய தொடியைப் போன்ற, நெகிழ்ந்தும் இறுகியும் உள்ள வார்க்கட்டினையும்;
நீலமணி (நீரைப்போல்)ஒழுகினாற் போன்ற கருமை நிறத்தையுடைய பெரிய தண்டினையும்;
பொன் (உருக்கப்பட்டுக் கம்பியாக)வார்த்ததைப் போன்ற முறுக்கு அடங்கின நரம்பினையும் உடைய
கட்டமைந்த யாழை இடத்தோளின் பக்கத்தே அணைத்து,
3.
துணை புணர் அன்ன தூ நிற தூவி
இணை அணை மேம்பட பாய் அணை இட்டு - நெடு 132,133
தம் துணையைப் புணர்ந்த அன்னச் சேவலின் தூய நிறத்தையுடைய (சூட்டாகிய)மயிரால்
இணைத்த மெத்தையை மேலாகப் பரப்பி, (அத்தூவிகளுக்கு மேலாக)தலையணைகளும் இட்டு

 மேல்
 
    அன்னம் - (பெ) ஒரு பறவை, swan
அன்னத்தைப் பற்றிச் சங்க இலக்கியத்தில் பல குறிப்புகள் உள்ளன.
1.
இந்த அன்னத்தின் கால்கள் சிவப்பாய் இருக்கும்.
செம் கால் அன்னத்து சேவல் அன்ன - மது 386
2.
இந்த அன்னங்கள் வானத்தில் கூட்டமாகப் பறந்து செல்லும்
அம் கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து
ஒண் கதிர் ஞாயிற்று ஊறு அளவா திரிதரும்	
செம் கால் அன்னத்து சேவல் அன்ன
குரூஉ மயிர் புரவி உராலின் பரி நிமிர்ந்து
கால் என கடுக்கும் கவின் பெறு தேரும் - மது 384-388
அழகிய இடத்தையுடைய பெரிய வானம் மறையும்படி, காற்றைப் பிளந்துகொண்டு
ஒள்ளிய கதிரையுடைய பகலவனைச் சேரும் அளவாகக் கொண்டதுபோல் பறக்கும்
சிவந்த காலையுடைய அன்னத்தினது சேவலை ஒத்த,
நிறமிக்க மயிரினையுடைய குதிரைகள் ஓடுதலாலே, ஓட்டம் மிக்கு,
காற்றுப்போல் விரையும் அழகிய தேரும்,
3.
வானத்தில் கூட்டமாகச் சென்றாலும் ஓர் ஒழுங்கு வரிசையில் செல்லும்
நிரை பறை அன்னத்து அன்ன விரை பரி
புல் உளை கலிமா - அகம் 234/3,4
வரிசையாகப் பறத்தலையுடைய அன்னப்பறவையை ஒத்த, விரைந்த செலவினையுடைய
புல்லிய பிடரி மயிரினையுடைய செருக்குவாய்ந்த குதிரைகளை

வானின்
வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப
நால்கு உடன் பூண்ட கால் நவில் புரவி
கொடிஞ்சி நெடும் தேர் - அகம் 334/9-12
வானத்தின்கண் விளங்கும் சிறகினையுடைய அன்னத்தின் கூட்டம் பறந்து செல்லலை ஒப்ப
வேகத்தால் காற்று என்று கூறப்பெறும் குதிரைகள் நான்கு ஒருசேரப் பூட்டப்பெற்ற
கொடிஞ்சியினையுடைய நீண்ட தேரின்
4.
அன்னம் வெள்ளை நிறத்தில் இருக்கும். அதன் கால்கள் குட்டையாக இருக்கும்.
அலை நீர் தாழை அன்னம் பூப்பவும் - சிறு 146
அலையும் நீர்(கடற்கரையில் இருக்கும்)தாழை அன்னம்(போலே) பூக்கவும்

நெடும் கரை இருந்த குறும் கால் அன்னத்து
வெண் தோடு இரியும் வீ ததை கானல் - குறு 304/5,6
நீண்ட கடற்கரையில் இருந்த குறிய கால்களையுடைய அன்னத்தின்
வெளுத்த தொகுதி வெருண்டு பறக்கின்ற பூக்கள் செறிந்த கடற்கரைச்சோலையினையும்

	
5.
துணையைப் புணர்ந்த அன்னச்சேவலின் சூட்டு மயிர் மிக மென்மையாக இருப்பதால் அதனை
மெத்தைக்கும், தலையணைக்கும் வைப்பர்.
துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇ - கலி 72/2
துணையோடு சேர்ந்த அன்னத்தின் தூவியால் செய்த மென்மையான தலையணையில் சாய்ந்துகொண்டு

துணை புணர் அன்ன தூ நிற தூவி
இணை அணை மேம்பட பாய் அணை இட்டு - நெடு 132,133
தம் துணையைப் புணர்ந்த அன்னச் சேவலின் தூய நிறத்தையுடைய (சூட்டாகிய)மயிரால்
இணைத்த மெத்தையை மேலாகப் பரப்பி, (அத்தூவிகளுக்கு மேலாக)தலையணைகளும் இட்டு
6.
அன்னம் ஒலி எழுப்புதல் கரைதல் எனப்படுகிறது.
அன்னம் கரைய அணி மயில் அகவ - மது 675
7.
அன்னம் என்பன வலசைப் பறவைகள். தக்க பருவத்தில் தமிழ்நாட்டுக்கு வந்து, பின்னர் மீண்டும்
பறந்து சென்றுவிடும். அவை, வடக்கிலிருந்து வருவதால், இமயமலையில் உறைவதாக சங்க மக்கள்
எண்ணினர்.
விலங்கு மென் தூவி செம் கால் அன்னம்
பொன் படு நெடும் கோட்டு இமயத்து உச்சி
வான் அர_மகளிர்க்கு மேவல் ஆகும்
வளரா பார்ப்பிற்கு அல்கு_இரை ஒய்யும்
அசைவு இல் நோன் பறை போல - நற் 356/2-6
ஒன்றற்கொன்று விலகிய மென்மையான இறகினையும், சிவந்த கால்களையுமுடைய அன்னங்கள்,
பொன்னாய் மின்னும் நெடிய சிகரங்களைக் கொண்ட இமயத்து உச்சியில்
தேவருலகத்துத் தெய்வ மகளிர்க்கு மிகவும் விருப்பமாக இருக்கும்
வளராத இளம் குஞ்சுகளுக்கு வைத்துண்ணும் உணவைக் கொடுப்பதற்குத்
தளர்ச்சியற்ற வலிய பறத்தலை மேற்கொள்வதைப் போல
8.
அன்னத்தின் கால்கள் தோலுறை பூண்டிருக்கும்.
துதி கால் அன்னம் துணை செத்து மிதிக்கும் - ஐங் 106/2
- அன்னத்தின் கால் மயிரடர்ந்து நுனி குவிந்து தோலுறை போறலின் துதிக்கால் அன்னம் என்றார்.
துதி - தோற்பை - ஔவை.சு.து.உரை, விளக்கம்



 மேல்
 
    அன்னி - (பெ) சங்ககாலக் குறுநில மன்னன்.  a chieftain of sangam period
இந்த அன்னி என்பவன் குறுக்கைப் பறந்தலை என்ற இடத்தில் திதியனொடு போரிட்டுத் திதியனின்
காவல் மரமான புன்னையை வெட்டிச் சாய்த்தான்.

அன்னி குறுக்கை பறந்தலை திதியன்
தொல் நிலை முழு முதல் துமியப்பண்ணி
புன்னை குறைத்த ஞான்றை வயிரியர்
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே - அகம் 45/9-12
அன்னி என்பவன், குறுக்கை என்னும் போர்க்களத்தில், திதியன் என்பானின்,
நெடுங்காலம் நின்றிருக்கும் அடிமரத்தை வெட்டச் செய்து,
அந்தப் புன்னை மரத்தை மொட்டையாக்கிய போது, கூத்தர்கள்
(எழுப்பிய) இன்னிசையின் ஆரவாரத்தினும் பெரிதே

இதே கருத்தை இன்னொரு அகப்பாடலும் கூறுகிறது.

பெரும் சீர்
அன்னி குறுக்கை பறந்தலை திதியன்
தொல் நிலை முழு முதல் துமியப்பண்ணிய
நன்னர் மெல் இணர் புன்னை போல - அகம் 145/10-13
பெரிய புகழையுடைய
அன்னியானவன் குறுக்கைப்பறந்தலை என்னும் போர்க்களத்திலே திதியன் என்பானது
பழைமை பொருந்திய பரிய அடியுடன் துணித்திட்ட
நன்றாகிய மெல்லிய பூங்கொத்துக்களையுடைய புன்னை மரம் போல

ஆனால் இப்போரில் அன்னி மாண்டான்.

பயங்கெழு வைப்பின் பல்வேல் எவ்வி
நயம்புரி நன்மொழி அடக்கவும் அடங்கான்
பொன் இணர் நறு மலர் புன்னை வெஃகி
திதியனொடு பொருத அன்னி போல
விளிகுவை கொல்லோ நீயே - அகம் 126/13-17
வளம் மிக்க ஊர்களையுடைய பல வேற்படைகளையுடைய எவ்வி என்பான்
நீதியை உட்கொண்ட சிறந்த மொழிகளைக் கூறித் தணிக்கவும் தணியானாகி
பொன் போலும் கொத்துக்களாகிய நறிய மலர்களையுடைய காவல் மரமான புன்னையைக் குறைக்க விரும்பி
திதியன் என்பானொடு போரிட்டு இறந்த அன்னி என்பானைப் போல
நீ இறந்துபடுவை போலும்

 மேல்
 
    அன்னிமிஞிலி - (பெ) ஒரு சங்ககாலப் பெண், a lady of sangam period
தந்தை
கண் கவின் அழித்ததன் தப்பல் தெறுவர
ஒன்றுமொழி கோசர் கொன்று முரண் போகிய
கடும் தேர் திதியன் அழுந்தை கொடும் குழை
அன்னிமிஞிலியின் இயலும் - அகம் 196/8-12
தன் தந்தையின் கண்ணின் எழிலைக் கெடுத்ததாகிய தவற்றிற்காக, அச்சம் உண்டாக,
நெடுமொழியினையுடைய கோசர்களைக் கொல்வித்து, மாறுபாடு தீர்ந்த
விரைந்த தேரையுடைய திதியனது அழுந்தூர் என்னுமிடத்தே, வளைந்த குழையினை அணிந்த
அன்னி மிஞிலி என்பாளைப் போல களிப்புற்று நடக்கும்.

பாசிலை அமன்ற பயறு ஆ புக்கு என
வாய்மொழி தந்தையை கண் களைந்து அருளாது
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்
கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள்
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்
மறம் கெழு தானை கொற்ற குறும்பியன்
செரு இயல் நன் மான் திதியற்கு உரைத்து அவர்
இன் உயிர் செகுப்ப கண்டு சினம் மாறிய
அன்னிமிஞிலி போல மெய்ம் மலிந்து
ஆனா உவகையேம் ஆயினெம் - அகம் 262/4-13

அன்னி மிஞிலி என்பவள் கோசர் குடிமகள். இவள் வாழ்ந்த ஊர் அழுந்தை
இவளது தந்தை ஆனிரை மேய்த்துக்கொண்டிருந்தான். அப்போது அவன் சற்றே கண்ணயர்ந்துவிட்டான். அப்போது
அவனது பசு ஒன்று அருகில் பயறு விளைந்திருந்த வயலில் நுழைந்து மேய்ந்துவிட்டது. ஒன்றுமொழிக் கோசர்
மன்றத்தில் கூடிக், கண் அயர்ந்த குற்றத்துக்காக அவனது கண்ணைத் தோண்டி எடுத்துவிட்டனர். அன்னிமிஞிலி
கோசரைப் பழிவாங்க உறுதி பூண்டாள். உண்ணாமலும், நீராடி உடை மாற்றாமலும் படிவம் மேற்கொண்டாள்.
திதியனிடம் முறையிட்டாள். திதியன் கொடுமைப் படுத்திய ஒன்றுமொழிக் கோசரைக் கொன்றான். இந்த
மகிழ்ச்சியில் திளைத்த அன்னிமிஞிலி தன் அழுந்தூர்த் தெருவில் பெருமிதத்தோடு நடந்து சென்றாள்

 மேல்
 
    அனந்தர் - (பெ) கள்ளுண்ட மயக்கம், மனத்தடுமாற்றம், stupor, drowsiness, bewilderment
அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும்
மனம் கவல்பு இன்றி மாழாந்து எழுந்து - பொரு 94,95
கள்ளின் செருக்காலுண்டான மெய்நடுக்கமல்லது வேறு
மனக்கவர்ச்சி (சிறிதும்)இல்லாமல், துயின்று (பின்னர் உணர்ந்து)எழுந்து

 மேல்
 
    அனந்தல் - (பெ) 1. கள்ளுண்ட மயக்கம் : பார்க்க : அனந்தர்
                    2. மந்த ஒலி, low tone
1.
பழம் செருக்கு உற்ற நும் அனந்தல் தீர - மலை 173
பழைய களிப்பினால் அடைந்த உமது போதைமயக்கம் தீரும்படி
2.
நிறம் கிளர் உருவின் பேஎய் பெண்டிர்
எடுத்து எறி அனந்தல் பறை சீர் தூங்க - புறம் 62/4,5
நிறம் மிக்க வடிவையுடைய பேய் மகளிர்
மேன்மேலும் கொட்டுகின்ற மந்தமான ஓசையையுடைய பறையினது தாளத்தே ஆட

 மேல்
 
    அனலன் - (பெ) தீக்கடவுள், God of fire
அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து - பரி 5/57
துன்பமில்லாத தீக்கடவுள் தன் உடலிலிருந்து பிரித்து

 மேல்
 
    அனற்று - (வி) சூடாக்கு, வெம்மைப்படுத்து, heat
வையை உடைந்த மடை அடைத்த_கண்ணும்
பின்னும் மலிரும் பிசிர் போல இன்னும்
அனற்றினை - பரி 6/82-84
வையையில் உடைந்த மடையை அடைத்தபோதும்,
மீண்டும் ஒழுகும் கசிவுநீர் போல, இங்கு வந்த பின்னும்
அவரை வெம்மையுறச் செய்தாய்!

 மேல்
 
    அனிச்சம் - (பெ) ஒரு மென்மையான மலர், a delicate flower, Anagallis arvensis, Scarlet pimpernel)
இது முகர்ந்ததும் வாடிவிடும் என்பர்.
மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் ஒன்றாகக் குறிஞ்சிப்பாட்டு நூல் குறிப்பிடுகிறது.
நீலம், அல்லி, அனிச்சம், முல்லை, நறவு ஆகிய மலர்களைக் தலையில் அணியும் கண்ணியாகவும்,
கழுத்தில் அணியும் மாலையாகவும் தொடுத்து அணிந்துகொண்டனர் என்று கலித்தொகை குறிப்பிடுகிறது

ஒண் செம்_காந்தள் ஆம்பல் அனிச்சம் - குறி 62

அரி நீர் அவிழ் நீலம் அல்லி அனிச்சம்
புரி நெகிழ் முல்லை நறவோடு அமைந்த
தெரி மலர் கண்ணியும் தாரும் - கலி 91/1-3

		

 மேல்
 
    அனை - 1. (சு.பெ) அந்த, that
           - 2. (பெ.அ) அவ்வளவு, அத்துணை, அத்தனை, so much, so many
           - 3. (பெ) அன்னை என்பதன் இடைக்குறை, an abbreviation of அன்னை
1.
கனவின் வந்த கானல் அம் சேர்ப்பன்
நனவின் வருதலும் உண்டு என
அனை வரை நின்றது என் அரும் பெறல் உயிரே - கலி 128/24-26
கனவில் வந்த அந்த கடற்கரைச் சோலையின் தலைவன்
நனவிலும் வருவான் என்று
அந்த (நம்பிக்கையின்) எல்லையில் நிற்கின்றது அரிதாக எனக்குக் கிட்டியிருக்கும் என் உயிர்
2.
நினைந்து
மருண்டனென் அல்லெனோ உலகத்து பண்பே
நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை
இறைத்து உண சென்று அற்று ஆங்கு
அனை பெரும் காமம் ஈண்டு கடைக்கொளவே - குறு 99/2-6
பெரிதும் நினைத்து
மயங்கினேன் அல்லவா! இது உலகத்து இயற்கை;
உயர்ந்த மரத்தின் உச்சிக் கிளைகளைத் தொட்டுக்கொண்டு சென்ற பெருவெள்ளம்
இறைத்து உண்ணும் அளவுக்குக் குறைந்து அற்றுப்போய்விடுவது போல
அவ்வளவு பெரிய காமம் (உன்னைக் கண்டவுடன்) இங்கு வடிந்துவிடுதலை -

காமம் தாங்கு-மதி என்போர் தாம் அஃது
அறியலர்-கொல்லோ அனை மதுகையர்-கொல் - குறு 290/1,2
காம நோயைப் பொறுத்துக்கொள்க என்போர், தாம் அதனைப் பற்றி
அறியமாட்டாரோ? அல்லது, அத்துணை வன்மை உடையவரோ?

எனை நாள் தங்கும் நும் போரே அனை நாள்
எறியார் எறிதல் யாவணது - புறம் 301/7,8
எத்தனை நாட்கள் நும்முடைய போர் இங்கேநிகழும், அத்தனை நாளும்
தன் மேல் படையெறிந்து போர்தொடுக்காதவரைத் தான் எறிவது யாங்குளது
3.
கறி வளர் சிலம்பின் கடவுள் பேணி
அறியா வேலன் வெறி என கூறும்
அது மனம் கொள்குவை அனை - ஐங் 243/1-3
மிளகுக் கொடிகள் வளர்ந்திருக்கும் மலைச் சரிவிலிருக்கும் கடவுளைத் தொழுது
உண்மையை அறியாத வேலன் இதனைத் தீயசக்தியின் தாக்கம் என்று கூறுவான்;
அதனையே உண்மையென்று உன் மனத்தில் கொள்கிறாய் அன்னையே!

 மேல்