<<முந்திய பக்கம்

சங்க இலக்கியம் - அருஞ்சொற்களஞ்சியம்
கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
நீ - முதல் சொற்கள்
நீ
நீகான்
நீடல்
நீடு
நீடூர்
நீத்தம்
நீத்து
நீந்து
நீர்
நீர்க்கோழி
நீர்நாய்
நீர்ப்பெயற்று
நீர்மை
நீர
நீல்
நீல்நிறவண்ணன்
நீலம்
நீவு
நீழல்
நீள்மொழி
நீறு
இடப்பக்கமுள்ள சொல்லின் மேல் சொடுக்கவும்
 
  நீ - 1. (வி) 1. விலகு, நீங்கு, அகலு, part from
        2. நீங்கு, be removed
        3. கைவிடு, துற, give up, renounce
    - 2. (பெ) முன்னிலை ஒருமைப்பெயர், second person singular pronoun, you
1.1.
கீழும் மேலும் காப்போர் நீத்த
வறும் தலை பெரும் களிறு போல - நற் 182/8,9
கீழும் மேலும் நடத்திச் செல்வோர் விட்டகன்ற
வறிய தலையையுடைய பெருங்களிற்றைப் போல
1.2.
நன் நுதல் நீத்த திலகத்தள் - கலி 143/3
நல்ல நெற்றியினின்றும் திலகம் நீங்கியவள்
1.3.
ஈன்றோள் நீத்த குழவி போல - புறம் 230/7
பெற்ற தாய்கைவிட்ட குழவியைப் போல
2.
நீர் நீத்த மலர் போல நீ நீப்பின் வாழ்வாளோ - கலி 5/15
நீரை விட்டு நீங்கிய மலரைப் போல, நீ பிரிந்து சென்றால் இவள் வாழ்வாளோ?

 மேல்
 
  நீகான் - (பெ) மீகான், மாலுமி, pilot of a ship
கோடு உயர் திணி மணல் அகன் துறை நீகான்
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய - அகம் 255/5,6
கரை உயர்ந்த செறிந்த மணலையுடைய அகன்ற துறையில், நாவாய் ஓட்டுவான்
மாடத்தின் மீது உள்ள ஒள்ளிய விளக்கினால் இடம் அறிந்து செலுத்த

 மேல்
 
  நீடல் - (பெ) 1. மிகுதல், increase
        2. நீட்டித்தல், extending 
1.
கோடை நீடலின் வாடு புலத்து உக்க
சிறு புல் உணவு நெறிபட மறுகி
நுண் பல் எறும்பு கொண்டு அளைச் செறித்த
வித்தா வல்சி - அகம் 377/1-4
கோடையின் வெம்மை மிக்கமையால், வறண்ட நிலத்தே உதிர்ந்த
சிறிய புல்லரிசியை ஒழுங்குபட சென்று
சிறிய பலவாய எறும்புகள் கொண்டுவந்து தம் வளையில் தொகுத்து வைத்த
விதைத்து விளைவிக்காத உணவினை
2.
செரு செய் முன்பின் குருசில் முன்னிய
பரிசில் மறப்ப நீடலும் உரியிர் - மலை 186,187
போர் செய்யும் மிக்க வலிமையையுடைய மன்னனைக் கருதிச்செல்லும்
பரிசிலை(யும்) மறக்குமளவுக்கு (உமது இருப்பை)நீட்டித்தலுக்கு உரித்தாவீர்

 மேல்
 
  நீடு - 1. (வி) 1. நீளு, அதிகரி, grow long
         2. நீட்டு, extend 
         3. மிகு, பெருகு, abound
    - 2. (பெ.அ) 1. நிலைத்திருக்கிற, lasting long
          2. நெடிய, நீளமான, long
    - 3. (பெ) 1. நெடுங்காலம், long time
         2. நீட்டித்தல், extending
1.1
வாராது அவண் உறை நீடின் நேர் வளை
இணை_ஈர்_ஓதி நீ அழ
துணை நனி இழக்குவென் - ஐங் 269/3-5
திரும்பி வராமல் அங்கேயே தங்கியிருப்பது நீண்டுசென்றால், செம்மையான வளைகளை அணிந்த
இரு பிரிவுகளையுடைய வழவழப்பான கூந்தலையுடையவளே! நீ அழும்படி
உனக்குத் துணையாக இருப்பதை மிகவும் நான் இழப்பேன்
1.2
நீடினம் என்று கொடுமை தூற்றி - ஐங் 478/1
பிரிவுக்காலத்தை நீட்டித்துக்கொண்டே செல்கிறேன் என்பதைக் கொடும் செயலாகத் தூற்றி
1.3
விசும்பு கண் அழிய வேனில் நீடி
கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின் - அகம் 189/2,3
மேகம் வானிடத்திலிருந்து ஒழிதலினால் வேனில் வெப்பம் மிக
குளங்கள் தம்மிடத்தே நீர் அற்றிருக்கும் கற்கள் உயர்ந்த இடங்களில்
2.1
நீடு பசி ஒராஅல் வேண்டின் நீடு இன்று
எழுமதி வாழி ஏழின் கிழவ - பொரு 62,63
நீடித்த நாட்களாய் இருக்கும் பசி (உன்னை)விட்டு நீங்குதலை விரும்பினால், கால நீட்டித்தல் இன்றி
எழுவாயாக, நீ வாழ்வாயாக, (நரம்பு)ஏழின் கண்ணும் உரிமை உடையோய்,
2.2
நீடு அமை விளைந்த தே கள் தேறல் - திரு 195
நெடிய மூங்கிலில் இருந்து முற்றின தேனால் செய்த கள்தெளிவை
3.1
ஈண்டு நீடு விளங்கும் நீ எய்திய புகழே - புறம் 359/18
இவ்வுலகில் நெடுங்காலம் நிலைநிற்கும் உன் ஈகையால் எய்திய புகழ்
3.2
நீடு பசி ஒராஅல் வேண்டின் நீடு இன்று
எழுமதி வாழி ஏழின் கிழவ - பொரு 62,63
நீடித்த நாட்களாய் இருக்கும் பசி (உன்னை)விட்டு நீங்குதலை விரும்பினால், கால நீட்டித்தல் இன்றி
எழுவாயாக, நீ வாழ்வாயாக, (நரம்பு)ஏழின் கண்ணும் உரிமை உடையோய்,

 மேல்
 
  நீடூர் - (பெ) ஓர் ஊர், the name of a city
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன் - அகம் 266/10
யாழ் ஒலிக்கும் தெருக்களையுடைய நீடூர் என்ற ஊரின் தலைவன்

 மேல்
 
  நீத்தம் - (பெ) 1. வெள்ளம், flood
         2. ஆழம், depth
1.
கழை நிலை பெறாஅ காவிரி நீத்தம் - அகம் 6/6
ஓடக்கோலும் நிலைத்து நில்லாத காவிரி ஆற்றின் நீர்ப்பெருக்கில்
2.
புள் ஏர் புரவி பொலம் படை கைம்_மாவை
வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு_ஊர்பு உழக்குநரும் - பரி 11/52,53
பறவை போல் விரையும் குதிரைகளையும், பொன்னாலான முகபடாம் அணிந்திருக்கும் யானைகளையும்
வெள்ள நீர் ஆழத்தினுள் மேலும் மேலும் செலுத்தி நீரைக் கலக்குவோரும்,

 மேல்
 
  நீத்து - (பெ) நீந்தக்கூடிய ஆழம், swimming depth of water
நீத்து உடை நெடும் கயம் தீ பட மலர்ந்த
கடவுள் ஒண் பூ அடைதல் ஓம்பி - பெரும் 289,290
நீந்திக்கடக்க வேண்டிய ஆழத்தையுடைய நெடிய குளத்தின்கண் நெருப்பின் தன்மையுண்டாகப் பூத்த
கடவுள் (விரும்புதற்குரிய)ஒளிரும் (தாமரைப்)பூவைப் பறித்துச் சூடுதலைச் செய்யாமல் தவிர்த்து,

 மேல்
 
  நீந்து - (வி) 1. நீச்சலடி, swim
        2. நடந்து கட, across over
        3. பறந்து செல், fly across
        4. பொழுதைக்கழி, pass the time
1.
அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான்யாற்று
கரை அரும் குட்டம் தமியர் நீந்தி - நற் 144/7,8
ஓளிவிடும் நீர் நிறைந்து விரைந்து ஓடும் காட்டாற்றின்
கரை தெரியாத ஆழமான மடுக்களைத் தன்னந்தனியே நீந்தி
2.
இலங்கு அருவிய வரை நீந்தி - மது 57
விளங்குகின்ற அருவிகளையுடைய மலைகளைக் கடந்து
3.
சிறு பைம் தூவி செம் கால் பேடை
நெடு நீர் வானத்து வாவு பறை நீந்தி
வெயில் அவிர் உருப்பொடு வந்து கனி பெறாஅது - அகம் 57/1-3
சிறிய மெல்லிய சிறகுகளையும் சிவந்த கால்களையும் உடைய வௌவால் பேடை
நீண்ட தன்மையையுடைய வானத்தில் தாவித்தாவிப் பறந்து கடந்து,
வெயில் தகதகக்கும் வெம்மையோடு வந்து, (மரத்தில்) கனி பெறாது
4.
எல்லை கழிய முல்லை மலர
கதிர் சினம் தணிந்த கையறு மாலை
உயிர் வரம்பு ஆக நீந்தினம் ஆயின்
எவன்-கொல் வாழி தோழி
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே - குறு 387
பகற்பொழுது கழிய, முல்லை மலர,
ஞாயிறு தன் சினம் தணிந்த செயலற்ற இந்த மாலைப்பொழுதை
உயிரை எல்லையாகக் கொண்டு நீந்திக்கழித்தேனென்றால்,
என்ன பயன்? வாழ்க தோழியே!
இரவாகிய வெள்ளம் கடலைக்காட்டிலும் பெரியதாக இருக்குமே!

 மேல்
 
  நீர் - (பெ) 1. தண்ணீர், water
       2. கடல், sea
       3. அருவிநீர், water of the falls
       4. கண்ணீர், tears
       5. தன்மை, இயல்பு, nature
       6. இரத்தினத்தின் ஒளி, water in a gem
1.
நறு நீர் பொய்கை அடைகரை நிவந்த
துறு நீர் கடம்பின் துணை ஆர் கோதை - சிறு 68,69
நறிய நீரையுடைய பொய்கையின் (இட்டு)அடைத்த கரையில் நின்று வளர்ந்த
செறிந்த நீர்மையையுடைய கடம்பின் இணைதல் நிறைந்த மாலை,
2.
நீர் ஒலித்து அன்ன நிலவு வேல் தானையொடு - மது 369
கடல் ஒலித்ததைப் போன்ற நிலைபெற்ற வேல் படையோடே
3.
தலை நாள் விடுவிக்கும் பரிசில் மலை நீர்
வென்று எழு கொடியின் தோன்றும்
குன்று சூழ் இருக்கை நாடு கிழவோனே - மலை 580-582
(போவோம் என்ற)முதல்நாளிலேயே(தாமதிக்காமல்)வழியனுப்புவான் (தன்)பரிசிலோடே - மலையின் (அருவி)நீர்
வென்று உயரும் கொடியைப்போலத் தோன்றும்
மலைகள் சூழ்ந்த குடியிருப்புகளைக்கொண்ட நாட்டிற்கு உரிமையுடையவன்.
4.
நீர் தொடங்கினவால் நெடும் கண் - ஐங் 453/4
கண்ணீர் வரத் தொடங்கிவிட்டது என் நெடும் கண்ணில்
5.
நறு நீர் பொய்கை அடைகரை நிவந்த - சிறு 68
துறு நீர் கடம்பின் துணை ஆர் கோதை - சிறு 69
நறிய நீரையுடைய பொய்கையின் (இட்டு)அடைத்த கரையில் நின்று வளர்ந்த
செறிந்த நீர்மையையுடைய கடம்பின் இணைதல் நிறைந்த மாலை,
6.
நெடு நீர் வார் குழை களைந்தென - நெடு 139
மிகுதியாக ஒளி சிந்தும் காதணி(குண்டலங்)களை நீக்கிட

 மேல்
 
  நீர்க்கோழி - (பெ) வெள்ளை நெஞ்சு நீர்க்கோழி, கம்புள் கோழி, சம்புக்கோழி
          white-breasted waterhen, Amaurornis phoenicurus
கானக்கோழி கவர் குரலோடு
நீர்க்கோழி கூய் பெயர்க்குந்து - புறம் 395/10,11
காட்டுக்கோழி தன் கவர்த்த குரலை எடுத்தும்
நீரில் வாழும் நீர்க்கோழி தன் குரலை எடுத்தும் கூப்பிடுதலைச் செய்யும்.

	

 மேல்
 
  நீர்நாய் - (பெ) நீரில் வாழும் ஒருவகைப் பாலூட்டி விலங்கு, otter
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்
முள் அரை பிரம்பின் மூதரில் செறியும் - அகம் 6/18,19
வாளைமீனைத் தின்ற கூரிய பற்களை உடைய நீர்நாய்
முட்கள் கொண்ட தண்டினை உடைய பிரம்பின் பழைய புதரில் தங்கும்,

	

 மேல்
 
  நீர்ப்பெயற்று - (பெ) நீரின் பெயரைக்கொண்டது, a port city
நீர்ப்பெயற்று எல்லை போகி - பெரும் 319
நீரின் பெயர்கொண்ட நீர்ப்பாயல்துறை என்னும் ஊரின் எல்லையிலே சென்று

இதனைக் கடல்மல்லைத் தல சயனம் என்று வைணவர் வழங்குவர். சல சயனம் என்பதே தல சயனம்
என்றானது என்பர். சல சயனம் என்பதற்கு நீர்ப்பாயல் என்பது நேரான தமிழ்ச்சொல் ஆகும். இந்தக் கடல் மல்லை
என்பதுவே மல்லை, மாமல்லை, மாமல்லபுரம் என படிப்படியாய் மருவி இன்றைய மகாபலிபுரம் என்று ஆயிற்று
என்பர்.

 மேல்
 
  நீர்மை - (பெ) 1. தன்மை, இயல்பு, nature, inherent quality
         2. இன்சொல், affability
         3. இனிய குணம், goodness 
         4. நிலைமை, state, condition 
1.
கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை
மயில் எருத்து வண்ணத்து மாயோய் - கலி 108/37,38
கண்களைக் கூசவைக்கும் பேரழகு பெற்ற பெண்ணியல்பையும்,
மயில் கழுத்தின் நிறத்தையுமுடைய மாநிறத்தவளே
2.
நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி நேர்_இழாய் - பரி 8/73
நீர் சொல்வது இன்சொல் இல்லாத சூள்' என்கிறாய்! நேரிய இழைகளை அணிந்தவளே!
3.
கடும் தேர் இளையரொடு நீக்கி நின்ற
நெடுந்தகை நீர்மையை - அகம் 310/1,2
விரைந்து செல்லும் தேரினை ஏவலாளருடன் சேய்மைக்கண் நிறுத்தி இங்கு வந்து நிற்கும்
பெருந்தன்மையாகிய இனிய குணத்தினை உடையவன் ஆகின்றாய்
4.
விழவின்
கோடியர் நீர்மை போல முறை_முறை
ஆடுநர் கழியும் இவ் உலகத்துக் கூடிய
நகைப்புறனாக நின் கொற்றம் - புறம் 29/22-25
விழவின்கண் ஆடும் கூத்தரது கோலத்தைப் போல, அடைவடைவே தோன்றி
இயங்கி இறந்துபோகின்ற இவ்வுலகத்தின்கண் பொருந்திய
மகிழ்ச்சியிடத்ததாக நின்னுடைய கிளை

 மேல்
 
  நீர - (பெ) 1. தன்மையைக் கொண்டுள்ளது/கொண்டுள்ளவர்/கொண்டுள்ளவள்,
       that which has the property or nature
       2. நீரிலுள்ளது / நீரைக்கொண்டது, that which is in water, which has water
மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும்
பல் வேறு திரு மணி முத்தமொடு பொன் கொண்டு - மது 504,505
மலையிடத்தனவும், நிலத்திடத்தனவும், நீரிடத்தனவும் பிற இடத்தனவுமாகிய
பல் வேறான அழகிய மணிகளையும், முத்துக்களையும், பொன்னையும் வாங்கிக்கொண்டு
1.2
அன்பு பெரிது உடைமையின் அளித்தல் வேண்டி
பகலும் வருதி பல் பூ கானல்
இ நீர ஆகலோ இனிதால் - நற் 223/2-4
அன்பு பெரிதாக உடைமையினாலே இவளுக்குக் கருணைகாட்டல் வேண்டி
பகலிலும் வருகிறாய்; பலவான பூக்களைக் கொண்ட இந்தக் கடற்கரைச் சோலையில்
இத்தன்மையராக இருத்தல் இனிதே
1.3
நறும் தண் நீரள் ஆர் அணங்கினளே - குறு 70/2
நறிய மணமும் குளிர்ச்சியும் உடைய தன்மையள்; நிறைந்த வருத்தத்தைச் செய்பவள்;
2.1
நீர
நீல பைம் போது உளரி - குறு 110/2,3
நீரிலுள்ள
நீலக்குவளையின் இளம் மொட்டைத் தடவிக்கொடுத்து
2.2
மலர் தாய பொழில் நண்ணி மணி நீர கயம் நிற்ப - கலி 35/5
மலர்கள் நிறைந்த பூஞ்சோலையை அடுத்துப் பளிங்கு போன்ற நீரைக்கொண்ட குளங்கள் நிறைந்திருக்க,

 மேல்
 
  நீல் - (பெ) 1. நீலம், Blue
        2. கருப்பு, black
        3. கருங்குவளை மலர், Blue nelumbo
1.
நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண் - புறம் 144/4
நீல நறு நெய்தல் போன்று பொலிந்த மையுண்ட கண்கள்
2.
நீல் நிற விசும்பின் மீனொடு புரைய - நற் 199/9
கருநிற விசும்பின் விண்மீன்களைப் போல்
3.
நீல் இதழ் உண்கணாய் - கலி 33/28
கருங்குவளை மலரின் இதழ் போன்று மைதீட்டிய கண்களையுடையவளே!

 மேல்
 
  நீல்நிறவண்ணன் - (பெ) திருமால், Lord Krishna
பால் மதி சேர்ந்த அரவினை கோள் விடுக்கும்
நீல்நிறவண்ணனும் போன்ம் - கலி 104/37,38
பால் போன்ற திங்களைக் கவ்விய பாம்பினை, அதன் பிடியிலிருந்து விடுவிக்கும்
நீல நிறத்தவனான திருமாலைப் போன்றிருக்கிறது;

 மேல்
 
  நீலம் - (பெ) 1. நீல நிறம், Blue colour
        2. கருப்பு நிறம், black
        3. நீலப்பூ, கருங்குவளை, Blue nelumbo
        4. நீலமணி, sapphire
1.
நிறம் கவர்பு புனைந்த நீல கச்சினர் - மது 639
நிறத்தை வாங்கிப் புனைந்த(தைப் போன்ற) நீலநிறக் கச்சினையும் உடையவராய்;
2.
நெறி மருப்பு எருமை நீல இரும் போத்து - ஐங் 91/1
அலையலையாய் வளைந்திருக்கும் கொம்பினையுடைய எருமையின் கரிய பெரிய கடாவானது
3.
அரக்கு இதழ் குவளையொடு நீலம் நீடி - பெரும் 293
சாதிலிங்கம் (போன்ற)இதழையுடைய குவளைப் பூவோடே நீலப்பூவும் வளர்ந்து
4.
நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின் - அகம் 358/1
நீல மணியைப் போன்ற நிறம் விளங்கும் கழுத்தினையும்

 மேல்
 
  நீவு - (வி) 1. தடவிக்கொடு, gently rub
       2. கோதிவிடு, run the fingers through
       3. பூசு, smear
       4. மீறிச்செல், transgress
       5. அடங்காமல் செல், breach
       6. அறுத்துக்கொண்டு / உடைத்துக்கொண்டு செல், break, cut off
       7. நிறுத்திக்கொள், cease, discontinue
       8. மேலே செல், go beyond

1.
உண்ணு நீர் விக்கினான் என்றேனா அன்னையும்
தன்னை புறம்பு அழித்து நீவ மற்று என்னை
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகை கூட்டம்
செய்தான் அ கள்வன் மகன் - கலி 51/13-16
"நீர் உண்ணும்போது விக்கினான்" என்று சொல்ல, அன்னையும்
அவனது முதுகைத் தடவிக்கொடுக்க, என்னைக்
கடைக்கண்ணால் கொல்வது போல் பார்க்க, இவ்வாறு மகிழ்ச்சியான குறும்புச் செயலைச்
செய்தான் அந்த திருட்டுப்பயல்.
2.
எம் இல் வருகுவை நீ என
பொம்மல் ஓதி நீவியோனே - குறு 379/5,6
எமது இல்லத்துக்கு வருவாய் நீ என்று
பொங்கிவரும் கூந்தலைக் கோதிவிட்டவன்.
3.
பாறு மயிர் குடுமி எண்ணெய் நீவி
ஒரு மகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கி செல்கென விடுமே - புறம் 279/9-11
உலறிய மயிர் பொருந்திய குடுமியில் எண்ணெயைப் பூசி
இந்த ஒரு மகனை அல்லது இல்லாதவளேயாயினும்
போர்க்களம் நோக்கிச் செல்வாயாக எனச் சொல்லித் தன் மகனை விடுக்கின்றாள்
4.
நெடும் தேர் எந்தை அரும் கடி நீவி
இருவேம் ஆய்ந்த மன்றல் இது என - குறி 20,21
நெடிய தேரையுடைய என் தந்தையின் அரிய காவலை(யும்) மீறி,
தலைவனும் யானுமே ஆய்ந்துசெய்த மணம் இது என்று
5.
ஏந்து கை சுருட்டி தோட்டி நீவி
மேம்படு வெல் கொடி நுடங்க
தாங்கல் ஆகா ஆங்கு நின் களிறே - பதி 53/19-21
ஏந்திய கையைச் சுருட்டிக்கொண்டு, மேலிருப்போர் வழிநடத்தும் அங்குசத்திற்கும் அடங்காமல்,
உயர்ந்து நிற்கும் வெற்றிக்கொடிஅசைந்தாட,
அடக்கமாட்டாமற் செல்லும் அங்கு உன் களிறு
6.
கார் மழை முழக்கினும் வெளில் பிணி நீவி
நுதல் அணந்து எழுதரும் தொழில் நவில் யானை - பதி 84/3,4
கார்காலத்து மேகங்களின் முழக்கத்தைக் கேட்டாலும், கட்டிவைக்கப்பட்டிருக்கும் தறியின் பிணிப்பினை
அறுத்துக்கொண்டு
நெற்றியை மேலே தூக்கி அண்ணாந்து பார்த்து நடக்கத்தொடங்கும் போர்த்தொழிலில் நல்ல 
பயிற்சியையுடைய யானை
7.
செக்கர் கொள் பொழுதினான் ஒலி நீவி இன நாரை - கலி 126/3
செக்கர் வானத்தைக் கொண்ட அந்திக் காலத்தில் ஒலித்தலை நிறுத்திக்கொண்ட கூட்டமான நாரைகள்,
8.
நீர் நீவி கஞன்ற பூ கமழும்_கால் நின் மார்பில்
தார் நாற்றம் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே - கலி 126/10,11
நீர் மட்டத்திற்கும் மேலே நெருக்கமாய் மலர்ந்திருக்கும் பூக்கள் மணம் பரப்பும் போது, அதை உன் மார்பின்
மாலையிலிருந்து வரும் மணம் என்று இவள் நினைப்பாள்

 மேல்
 
  நீழல் - (பெ) 1. பார்க்க : நிழல்-(பெ)
	    1. ஒளிமறைவு, shade
          2. ஒளிமறைப்பினால் ஏற்படும் உருவம், பிம்பம், shadow
          3. பிரதி பிம்பம், image, reflection
          4. அருள், grace, favour, benignity
        2. எவ்வி என்ற மன்னனின் ஊர், a city belonging to the monarch Evvi.

1.1.
பைம் கறி நிவந்த பலவின் நீழல் - சிறு 43
பசிய மிளகுக் கொடி படர்ந்த பலாமரத்தின் நிழலில்
1.2.
கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி - புறம் 260/5
கள்ளி மரத்தின் நிழலில் உள்ள தெய்வத்தை ஏத்தி
1.3.
புழல் கால் ஆம்பல் அகல் அடை நீழல்
கதிர் கோட்டு நந்தின் கரி முக ஏற்றை
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம் - புறம் 266/3-5
துளையுள்ள தாளையுடைய ஆம்பலின் அகன்ற இலையின் நிழலில்
கதிர் போலும் கோட்டையுடைய நத்தையி சுரி முகத்தையுடைய ஏற்றை
நாகாகிய இளைய சங்குடனே பகற்காலத்தின் மணம் கூடும்
1.4.
பண்பு உடை நன் நாட்டு பகை தலை வந்து என
அது கைவிட்டு அகன்று ஒரீஇ காக்கிற்பான் குடை நீழல்
பதி படர்ந்து இறைகொள்ளும் குடி போல - கலி 78/4-6
பண்பட்ட நல்ல நாட்டில் பகைவரின் படை நுழைந்ததாக,
அந்நாட்டைக் கைவிட்டு அகன்றுபோய் தம்மைக் காக்கின்றவனுடைய ஆட்சியின் அருளையுடைய
வேற்று நாட்டில் குடியேறி வசிக்கும் குடிமக்களைப் போல
2.
பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன - அகம் 366/12
பொன்னாலான பூண் அணிந்த எவ்வி என்பானது நீழல் என்னும் ஊர் போன்ற

 மேல்
 
  நீள்மொழி - (பெ) நெடுமொழி, சூளுரை, வஞ்சினம், vow
நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த
வாள் மின் ஆக - புறம் 369/3,4
வஞ்சின உரைகளையுடைய வீரர்கள் பகைவர்மேல் எறிவதற்காக ஏந்திய
வாள் மின்னலாக

 மேல்
 
  நீறு - (பெ) 1. புழுதி, dust
        2. சாம்பல், ashes
        3. துகள், பொடி, powder
1.
நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர் - சிறு 201
புழுதி அடங்கின தெருவினையுடைய, அவ்வள்ளலின் விழா நடக்கின்ற பழைய ஊர்தானும்
2.
மண்டு அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து - கலி 1/8
மிக்குச் செல்கிற போர்கள் பலவற்றையும் வென்று, அதன் வலிமையால் பகைவர் வெந்த சாம்பலை அணிந்து
3.
அ யானை தான் சுண்ண நீறு ஆடி நறு நறா நீர் உண்டு - கலி 97/10
அந்த யானைதான் சுண்ணப்பொடி பூசி நறுமணமிக்க மதுநீர் உண்டு,

 மேல்