<<முந்திய பக்கம்

சங்க இலக்கியம் - அருஞ்சொற்களஞ்சியம்
கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
ச - முதல் சொற்கள்
சகடம்
சங்கம்
சடை
சண்பகம்
சதுக்கம்
சந்தம்
சந்து
சமம்
சமழ்ப்பு
சரணம்
சருமம்
சலதாரி
சலம்
சவட்டு
சனம்

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
  சகடம் - (பெ) 1. வண்டி, cart
         2. உரோகிணி, The lunar asterism, represented by a cart, the fourth star
1.
மாரி குன்றம் மழை சுமந்து அன்ன
ஆரை வேய்ந்த அறை வாய் சகடம் - பெரும் 49,50
மழைக் காலத்து மலை முகிலைச் சுமந்தாற் போன்று,
(தாளிப்பனையோலையால் செய்த)பாய் வேய்ந்த, (வழியை)அறைக்கும் விளிம்புகள் கொண்ட வண்டி
2.
அம் கண் இரு விசும்பு விளங்க திங்கள்
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து - அகம் 136/4,5
அழகிய இடம் அகன்ற பெரிய வானம் களங்கமற விளங்குதலுற, திங்களை
உரோகிணி கூடிய குற்றமற்ற நன்னாள் சேர்க்கையில்

 மேல்
 
  சங்கம் - (பெ) ஒரு பேரெண், இலட்சம் கோடி, a very large number, Hundred billions
நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
மை இல் கமலமும் வெள்ளமும் நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை - பரி 2/13-15
நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம்
குற்றமற்ற தாமரை, வெள்ளம் ஆகிய பேரெண்களால்
குறிக்கப்பட்ட காலங்களின் ஈட்டங்களையும் கடந்த பின்னர்

 மேல்
 
  சடை - (பெ) சிவபெருமானின் கற்றைத் தலை மயிர், சிவனடியார்கள் வளர்த்துக்கொள்ளும் தலை மயிர்,
        Entangled locks of hair- as once worn by Siva as an ascetic, and 
        now by his devotees in imitation of him
எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை - அகம் 0/10
நெருப்பு அகைந்து எரிவதைப் போன்ற மின்னிப் பிரகாசிக்கும் முறுக்கிய சடைமுடி

தேறு நீர் சடை கரந்து திரிபுரம் தீமடுத்து - கலி 1/2
தெளிந்த நீரைக்கொண்ட கங்கையைத் தன் சடையில் அடக்கிக்கொண்டு, முப்புரங்களையும் தீயூட்டி,

அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும் புகை - பட் 54,55
மினுமினுக்கும் சடையையுடைய துறவிகள் தீயில் யாகம்செய்யும்(போது எழும்பிய)
(நெய் முதலியவற்றின்)மணமுள்ள புகை

 மேல்
 
  சண்பகம் - (பெ) ஒரு மரம், பூ, Champak, Michelia champaca
அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த
பெரும் தண் சண்பகம் போல ஒருங்கு அவர்
பொய்யார் ஆகுதல் தெளிந்தனம் - கலி 150/20-22
பெறுவதற்கு அருமையான திருவாதிரைப் பெயரையுடைய சிவபெருமான் அணிந்துகொள்வதற்காக மலர்ந்த
பெரிய குளிர்ந்த சண்பக மலர் பருவம் பொய்க்காமல் மலர்வதைப் போன்று, நாமிருவரும் ஒன்றாக, அவர்
சொன்னசொல் தவறாமல் திரும்பி வருவார் என்பதனை உணர்ந்துள்ளோம், 

	

 மேல்
 
  சதுக்கம் - (பெ) நாற்சந்தி, Junction where four roads meet
கூகை சேவல் குராலோடு ஏறி
ஆர் இரும் சதுக்கத்து அஞ்சுவர குழறும் - நற் 319/4,5
ஆண்கூகையானது தன் பெடையுடன் சென்று
நடமாட்டமில்லாத பெரிய நாற்சந்தியில் அச்சம்தோன்றக் குழறுகின்ற ஒலியை எழுப்பும்;

 மேல்
 
  சந்தம் - (பெ) சந்தனம், sandal
சந்தம் பூழிலொடு பொங்கு நுரை சுமந்து
தெண் கடல் முன்னிய வெண் தலை செம் புனல் - பதி 87/2,3
சந்தனம், அகில் ஆகியவற்றின் கட்டைகளோடு பொங்குகின்ற நுரையையும் சுமந்துகொண்டு,
தெளிந்த கடலை நோக்கிச் செல்லும், நுரையால் வெண்மையான தலையைக் கொண்ட சிவந்த புதுவெள்ளம்

 மேல்
 
  சந்து - (பெ) 1. பல வழிகள் கூடுமிடம், Crossing of many roads
        2. சந்தன மரம், sandalwood tree 
        3. மயிர்ச்சாந்து, Perfumed unguent for the hair
1.
பண்டு நற்கு அறியா புலம் பெயர் புதுவிர்
சந்து நீவி புல் முடிந்து இடு-மின் - மலை 392,393
(அந்த வழிகள்)முன்பு(எப்படி இருந்தன என்று) நன்றாக அறியாத, நாடு மாறி வரும் புதியவராகிய நீங்கள்
பல வழிகளும் கூடின அந்த சந்திகளைத் தொட்டுத்தடவிப் பார்த்து, அறிகுறியாகப் புற்களை முடிந்து வைப்பீர் -
2.
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை - அகம் 59/12
நல்லந்துவனார் பாடிய சந்தன மரங்கள் நிறைந்த உயர்ந்த மலை
3.
உரைத்த சந்தின் ஊரல் இரும் கதுப்பு - அகம் 102/3
பூசிய மயிர்ச் சாந்தினையுடைய பரந்த கரிய கூந்தல்

 மேல்
 
  சமம் - (பெ) 1. போர், battle
        2. ஏற்றத்தாழ்வின்மை, evenness
1.
செறுநர் தேய்த்து செல் சமம் முருக்கி - திரு 99
கோபமுடையோரை நசுக்கி, மேற்செல்லுகின்ற போரில் கொன்றழித்து
2.
யாழின் இளி குரல் சமம் கொள்வோரும் - பரி 19/42
யாழின்கண் இளிவாய்ப்பாலை, குரல்வாய்ப்பாலை ஆகியவற்றை வலியவும் மெலியவுமாகத் தாக்காது
சமனாகத் தாக்கி அதன் இன்பத்தைக் கொள்வோரும்,

 மேல்
 
  சமழ்ப்பு - (பெ) நாணம், shame
கெடு வளை பூண்டவள் மேனியில் கண்டு
நொந்து அவள் மாற்றாள் இவள் என நோக்க
தந்த கள்வன் சமழ்ப்பு முகம் காண்-மின் - பரி 20/34-36
தலைவியின் காணாமற்போனதாகச் சொல்லப்பட்ட அந்த நகைகளை அந்தப் பரத்தை மேனியில் அணிந்திருப்பதைக் கண்டு,
நொந்துபோய் தலைவியின் மாற்றாள் இவள் என்று அந்தப் பரத்தையைக் கூர்ந்து நோக்க,
அவற்றை இவளுக்குத் தந்த கள்வனாகிய தலைவனின் நாணமிக்க முகத்தைப் பாருங்கள்;

 மேல்
 
  சரணம் - (பெ) பாதம், foot
தாளித நொய் நூல் சரணத்தர் - பரி 10/10
காலுக்கு இதமான மென்மையான நூலினாலான மிதியடிகளைப் பாதத்தில் அணிந்தவராய்,

 மேல்
 
  சருமம் - (பெ) தோல், skin
தொட்டதை, தைப்பு அமை சருமத்தின் தாள் இயை தாமரை - பரி 21/3
நீ அணிந்துகொண்டது, தைப்பதற்காக அமைந்த தோலினால், உன் திருவடிக்குப் பொருந்திய
தாமரை மலர் போன்று செய்யப்பட்டது

 மேல்
 
  சலதாரி - (பெ) கங்கை நீரைத் தரித்தவன், சிவன், šiva, as having the Ganges in his locks
எரி மலர் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி
விரி சடை பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப
தணிவு_உற தாங்கிய தனி நிலை சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ - பரி 9/4-7
தீயைப் போன்று மலர்ந்திருக்கும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமதேவன் விழச்செய்த பெரு வெள்ளத்தைத்
தன் விரித்த சடையினில் பாரமாக, மலர்ந்து விழும் புதிய மலரைத் தாங்குவது போன்று,
விழுகின்ற வேகம் தணியும்படியாகத் தாங்கிய ஒப்பற்ற நிலையையுடைய சலதாரி என்னும் பெயர்கொண்ட
நீல நிறக் கழுத்தினையுடைய சிவபெருமானுக்கு, மதிப்பு வாய்ந்த கார்த்திகை மகளிரிடத்தில் பிறந்தவனே! நீ

 மேல்
 
  சலம் - (பெ) 1. பகைமை, hostility
        2. நீர், water
        3. சினம், anger
1.
சலம் புகன்று சுறவு கலித்த
புலவு நீர் வியன் பௌவத்து - மது 112,113
பகைமையை விரும்பிச் சுறாமீன்கள் செருக்கித் திரிகின்ற
புலால் (நாறும்)நீரையுடைய அகன்ற கடலிடத்தில்,
2.
தண்ணம் துவர் பல ஊட்டி சலம் குடைவார் - பரி 10/90
குளிர்ச்சியான அழகிய பத்துவகைத் துவர்களையும் தேய்த்துக்கொண்டு நீரில் முழுகுவோர் சிலர்
3.
சலம் புரி தண்டு ஏந்தினவை - பரி 15/58
சினம் பொருந்திய தண்டாகிய படைக்கலத்தைக் கொண்டிருக்கிறாய்;

 மேல்
 
  சவட்டு - (வி) 1. மெல்லு, masticate
         2. மிதித்து அழி, trample
1.
கொடும் கால் மா மலர் கொய்துகொண்டு அவண
பஞ்சாய் கோரை பல்லின் சவட்டி
புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி - பெரும் 216-218
வளைந்த காம்பினையுடைய கரிய பூவைப் பறித்துக்கொண்டு, அங்கு உண்டாகிய
பஞ்சாய்க் கோரையைப் பல்லால் சிதைத்து(க் கிழித்து)
முடிந்த நாரால் கட்டிய உருவாக்கம் இனிதான மாலையை
2.
வம்ப வடுகர் பைம் தலை சவட்டி
கொன்ற யானை கோட்டின் தோன்றும் - அகம் 375/14,15
புதிய வடுகரின் பசிய தலையை மிதித்து அழித்துக்
கொன்ற யானைகளின் கொம்பு போலத் தோன்றும்

 மேல்
 
  சனம் - (பெ) மக்கள், people
புனல் மண்டி ஆடல் புரிவான் சனம் மண்டி - பரி 10/9
புதுப்புனலில் திளைத்து ஆடல்புரிவதற்கு மக்கள் கூட்டம் நெருக்கியடித்துக்கொண்டு திரண்டெழ

 மேல்