<<முந்திய பக்கம்

சங்க இலக்கியம் - அருஞ்சொற்களஞ்சியம்
கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
சா - முதல் சொற்கள்
சாகாட்டாளர்
சாகாடு
சாடி
சாடு
சாணம்
சாத்தன்
சாத்து
சாந்தம்
சாந்தாற்றி
சாந்து
சாபம்
சாம்பல்
சாம்பு
சாமரை
சாமனார்
சாய்
சாயல்
சார்த்து
சாரல்
சாரிகை
சால்
சால்பு
சால
சாலகம்
சாலா
சாலாமை
சாலார்
சாலி
சாலியர்
சாலினி
சாலும்
சாலேகம்
சாலை
சாவகர்
சாவம்
சாற்று
சாறு
சான்ம்
சான்ற
சான்றவர்
சான்றவிர்
சான்றாண்மை
சான்றோர்

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    சாகாட்டாளர் - (பெ) வண்டி ஓட்டுபவர் (சாகாடு = வண்டி), cart driver
சாகாட்டாளர் கம்பலை அல்லது
பூசல் அறியா நன் நாட்டு - பதி 27/14
வண்டியை ஓட்டுபவர்கள் எழுப்பும் ஆரவார ஒலியை அன்றி
வேறே போரினால் ஏற்படும் ஆரவார ஒலியை அறியாத நல்ல நாட்டின்

 மேல்
 
    சாகாடு - (பெ) வண்டி, bullock cart
கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின்
ஆய் கரும்பு அடுக்கும் - அகம் 116/3,4
கள்ளைக் கொண்டு பலகாலும் திரியும் வண்டி சேற்றில் படிந்தால்
அதனைப் போக்க, சிறந்த கரும்புகளை அடுக்கி வழி செய்துகொடுக்கும்

 மேல்
 
    சாடி - (பெ) ஒரு பாத்திரம், குடுவை, Jar
கலி மடை கள்ளின் சாடி அன்ன எம்
இள நலம் இல்_கடை ஒழிய - நற் 295/7,8
செருக்குத்தரும் உணவான கள் இருக்கும் சாடியைப் போன்ற எமது
இளமை நலம் வீட்டுக்குள் அடங்கி ஒழிய

 மேல்
 
    சாடு - 1. (வி) 1. மேலே விழுந்து அடி, fall on and beat up
                  2. குத்திக்கிழி, gore
           2. (பெ) வண்டி, சாகாடு என்பதன் திரிபு, bullock cart
1.1
கொல் ஏறு சாட இருந்தார்க்கு எம் பல் இரும்
கூந்தல் அணை கொடுப்பேம் யாம் - கலி 101/41,42
கொல்லுகின்ற தன்மையுள்ள காளையை அடக்குபவர்களுக்கு, எமது நிறைந்த கரிய
கூந்தலுடையாளை மணமுடித்துக்கொடுப்போம் நாம்;
1.2
முறம் செவி மறை பாய்பு முரண் செய்த புலி செற்று
----------------------
நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை - கலி 52/1-4
தன் முறம் போன்ற செவியின் மறைவிடத்தில் பாய்ந்து தாக்கிய புலியைச் சினந்து,
-----------------------
மருமத்தைக் கிழித்துத் தன் பகையைத் தீர்த்துக்கொண்ட நீண்ட கொம்புகளையுடைய அழகிய யானை,
2.
குறும் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி - பெரும் 188
சிறிய வண்டியின் சக்கரத்தோடு,கலப்பையையும் சார்த்திவைத்து

 மேல்
 
    சாணம் -  (பெ) தழும்பு, scar 
சாணம் தின்ற சமம் தாங்கு தட கை - மது 593
(போர்க்கலன்களைப் பலகாலும் கையாளுவதால்) தழும்பேறிப்போன போரைத்தாங்கும் பெரிய கை

 மேல்
 
    சாத்தன் - (பெ) 1. கீரஞ்சாத்தன், ஒரு குறுநில மன்னன், a chieftain with the name keeranjsaaththan
                   2. பாண்டியநாட்டுப் பெருஞ்சாத்தன், வள்ளல்,
                    a philanthropist of Pandiya country in sangamperiod
	       3. சோழநாட்டுப் பெருஞ்சாத்தன், வள்ளல்,
                    a philanthropist of chozha country in sangamperiod
1.
இவன் முழுப்பெயர் பாண்டியன் கீரஞ்சாத்தன். இவன் முடிவேந்தன் அல்லன் என்பார் ஔ.சு.து.தம் உரை
முன்னுரையில். இவன் பாண்டிவேந்தர்க் கீழ் இருந்த குறுநிலத் தலைவன். கீரன் என்பானின் மகன். ஆவூர்
மூலங்கிழார் இவனைப் பாடியுள்ளார் (புறம் 178)

மணல் மலி முற்றம் புக்க சான்றோர்
உண்ணாராயினும் தன்னொடு சூளுற்று
உண்ம் என இரக்கும் பெரும் பெயர் சாத்தன்
ஈண்டோர் இன் சாயலனே - புறம் 178/3-6
இடு மணல் மிக்க முற்றத்தின்கண் புக்க சான்றோர்
அப்பொழுது உண்ணாராயினும் தன்னுடனே சார்த்திச் சூளுற்று
உண்மின் என்று அவரை வேண்டிக்கொள்ளும் பெரிய பெயரையுடைய சாத்தன்
2.
இவன் முழுப்பெயர் ஒல்லையூர்க் கிழான் மகன் பெருஞ்சாத்தன். சாத்தனது பெருமை முற்றும் அவனது
போராண்மையிலும், தாளாண்மையிலும், கொடையாண்மையிலும் ஊன்றி நின்றது என்பார் ஔ.சு.து.

வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே - புறம் 242/5,6
வலிய வேலையுடைய சாத்தன் இறந்துபட்ட பின்பு
முல்லைய்யாய நீயும் பூக்கக் கடவையோ அவனது ஒல்லையூர் நாட்டின்கண்
3.
இவன் முழுப்பெயர் சோழநாட்டுப் பிடவூர்க்கிழான் மகன் பெருஞ்சாத்தன். இவனும் இவனைச் சார்ந்தோரும்
அந்நாளில் வேந்தர்க்கு மண்டிலமாக்களும் தண்டத்தலைவருமாய்த் துணைபுரிந்தனர் என்பார் ஔ.சு.து.

சிறுகண் யானை பெறல் அரும் தித்தன்
செல்லா நலிசை உறந்தை குணாது
நெடும் கை வேண்மான் அரும் கடி பிடவூர்
அற பெயர் சாத்தன் கிளையேம் பெரும - புறம் 395/18-21
சிறிய கண்ணையுடைய யானைகளையுடைய பெறுதற்கரிய தித்தன் என்பானுடைய
கெடாத நல்ல புகழையுடைய உறையூர்க்குக் கிழக்கே
நீண்ட கையையுடைய வேண்மானுக்குரிய அரிய காவல்  பொருந்திய பிடவூரிலுள்ள
அறத்தாலுண்டான புகழையுடைய சாத்தனுக்குக் கிணப்பொருநராவோம் பெருமானே

 மேல்
 
    சாத்து - 1. (வி) ஏதேனும் ஒன்றன் மேல் சாய்வாக நிறுத்தி வை, rest on something in a slanting position
            2. (பெ) 1. சந்தனம், sandal
                    2. வெளியூர் செல்லும் வணிகர் கூட்டம், trading caravan
1.
பருந்து பட கடக்கு ஒள் வாள் மறவர்
கரும் கடை எஃகம் சாத்திய புதவின் - மலை 489,490
பருந்துகள் (சதைகளைத் தூக்கப்)பாய்ந்திறங்க, கள வெற்றிகொள்ளும் ஒளிரும் வாளையுடைய மறவர்
(தம்)கரிய காம்பினையுடைய வேலைச் சாத்திவைத்திருக்கும் திட்டிவாசல்களையுடைய
2.1
புலர்ந்த சாத்தின் புலரா ஈகை - பதி 61/7
பூசப்பட்டுப் புலர்ந்துபோன சந்தனத்தையும், அப்படிப் புலர்ந்து போகாத ஈகைத்திறத்தையும்
2.2
சாத்து இடை வழங்கா சேண் சிமை அதர - அகம் 291/15
வாணிகக் கூட்டத்தார் வழியில் இயங்குதல் இல்லாத உயர்ந்த மலையுச்சிகளை உடைய

 மேல்
 
    சாந்தம் - (பெ) 1. சந்தன மரம், sandalwood tree
                  2. சந்தனம், sandal paste
1.
குறவர்
அறியாது அறுத்த சிறியிலை சாந்தம்
வறனுற்று ஆர முருக்கி - நற் 64/4-6
குறவர்கள்
அறியாமல் அறுத்த சிறிய இலைகளைக் கொண்ட சந்தனமரம்
காய்ந்துபோய் மிகவும் கெட்டு
2.
இடை சுரத்து எழிலி உறைத்து என மார்பின்
குறும் பொறி கொண்ட சாந்தமொடு
நறும் தண்ணியன்-கொல் நோகோ யானே - நற் 394/7-9
நடுவழியில் மேகங்கள் மழை பெய்ததாக, மார்பிலுள்ள
சிறிய புள்ளிகளைக் கொண்ட சந்தனத்தோடு
நறிய, குளிர்ந்த நெஞ்சத்தினனாய்த் திரும்புகின்றான் போலும். இதற்கு நோவேனோ நான்

 மேல்
 
    சாந்தாற்றி - (பெ) விசிறி (பூசிய சாந்தினை ஆற்றுவது), fan
மிசை படு சாந்தாற்றி போல - பரி 21/30
மேலே எடுத்துவைக்கப்பட்ட விசிறியைப் போல

 மேல்
 
    சாந்து - (பெ) 1. சந்தன மரம், சந்தனக் கட்டை, சந்தனக்குழம்பு; பார்க்க: சாந்தம்
                sandaleood tree, sandal wood, sandal paste
                 2. விழுது, மென்கலவை, Paste
1.
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல - நற் 1/4
சந்தனமரத்தில் சேர்த்துக்கட்டிய இனிய தேன்கூடு போல

வேங்கை அம் கவட்டு இடை சாந்தின் செய்த
களிற்று துப்பு அஞ்சா புலி அதள் இதணத்து - நற் 351/6,7
வேங்கை மரத்தின் பிரிகின்ற அழகிய கிளைகளுக்கிடையே சந்தனக் கடைகளால் செய்த
களிற்றின் வலிமைக்கும் அஞ்சாத, புலித்தோல் விரித்த பரணில்

நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின் - திரு 193
நறிய சந்தனத்தைப் பூசின நிறம் விளங்கும் மார்பினையுடைய;
2.
வடு படு மான்_மத_சாந்து ஆர் அகலத்தான் - பரி 16/44
உருக்குலைந்துபோன கத்தூரி மென்கலவை நிறைந்த மார்பினையுடைவன்

 மேல்
 
    சாபம் - (பெ) வில், bow
மாண் வினை சாபம் மார்பு உற வாங்கி - பதி 90/32
சிறந்த வேலைப்பாட்டையுடைய வில்லை மார்பினைத் தொடுமாறு இழுத்து வளைக்கும்போது

 மேல்
 
    சாம்பல் - (பெ) வாடிப்போனது (சாம்பிப்போனது), something withered
ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ - குறு 46/1,2
ஆம்பல் பூவின் சாம்பிய இதழ் போன்ற
கூம்பிய சிறகையுடைய வீட்டில் வாழும் குருவி

 மேல்
 
    சாம்பு - 1. (வி) 1.. வாடு, wither
                  2. கெட்டுப்போ, perish
                  3. ஒளிமங்கிப்போ, grow dim
            2. (பெ) படுக்கை, bed
1.1.
நீர் செறுவின் நீள் நெய்தல்
பூ சாம்பும் புலத்து ஆங்கண் - பட் 11,12
நீரையுடைய வயலில் உள்ள நீண்ட நெய்தல்
மலர் வாடும் வயல்வெளிகளில்,
1.2
இஃது ஒத்தன் தன்_கண்
பொரு களிறு அன்ன தகை சாம்பி உள்ளுள்
உருகுவான் போலும் உடைந்து - கலி 60/9-11
இவனொருத்தன் தன்னிடத்துள்ள
போரிடும் களிற்றைப் போன்ற தன்மை கெட்டு உள்ளுக்குள்
உருகுவான் போலிருக்கிறான், மனமுடைந்து
1.3
நல்கா ஒருவனை நாடி யான் கொள்வனை
பல் கதிர் சாம்பி பகல் ஒழிய பட்டீமோ
செல் கதிர் ஞாயிறே நீ - கலி 147/33-35
எனக்கு அருள்செய்யாத ஒருவனை நாடி நான் பிடித்துக்கொள்கிறேன், அது வரை
உன்னுடைய பல கதிர்கள் ஒளிமங்கிப்போய் பகல்காலம் முடிய மறைந்துவிடாதே!
சென்று சேரும் கதிர்களையுடைய ஞாயிறே நீ!
2.
கற்றை வேய்ந்த கழி தலை சாம்பின்
அதளோன் துஞ்சும் காப்பின் - பெரும் 150,151
வரகுக்)கற்றை வேய்ந்த கழிகளைத் தலையிலேயும் கொண்ட சேக்கையின்கண்,			150
தோல் பாயிலிருப்போன் தூங்கும் பாதுகாப்புள்ள இடத்தையும்

 மேல்
 
    சாமரை - (பெ) கன்னச் சாமரை என்னும் குதிரை அணி, 
                 a horse ornament to be worn on the sides of the horse's face
ஞால் இயல் மென் காதின் புல்லிகை சாமரை - கலி 96/11
தொங்கும் இயல்புடைய மென்மையான காதிலிருக்கும் புல்லிகை என்னும் காதணியே கன்னத்தின் சாமரையாகவும்

 மேல்
 
    சாமனார் - (பெ) காமனின் தம்பி, Younger brother of Kama ;
காமர் நடக்கும் நடை காண் கவர் கணை
சாமனார் தம்முன் செலவு காண் - கலி 94/33,34
இந்த அழகன் நடக்கும் நடையைப் பார்!" "ஒருவரையொருவர் வசப்படுத்தும் அம்பினைக்கொண்ட
சாமனுக்கு அண்ணனான மன்மதனின் நடையழகைப் பார்!

 மேல்
 
    சாய் - 1. (வி) 1. தாழ்ந்திரு, கவிழ்ந்திரு, incline, hang down
                  2. வளை, bend
                  3. மெலிந்துபோ, grow thin
                  4. ஊறுபடு, get ruined
                  5. அழி. கெடு, destroy, mar
                  6. விழச்செய், வீழ்த்து, முறி, breakoff, fell
                  7. தாழ்த்து,கவிழ், tilt
                  8. தோல்வியடை, get defeated 
           2. (பெ) 1. சிராய், செறும்பு, splinter
                  2. தண்டான்கோரை, Sedge
                  3. சாயல், மென்மை, வனப்பு, அழகு, loveliness, gracefulness, beauty
                  4. நுண்மை, fineness
1.1
திறவா கண்ண சாய் செவி குருளை - சிறு 130
திறக்காத கண்ணையுடைய சாய்ந்த செவியினையுடைய குட்டி,
1.2
புனல் புணை அன்ன சாய் இறை பணை தோள் - குறு 168/5
நீரில் விடும் தெப்பத்தைப்போல் வளைந்து இறங்கிய பருத்த தோள்களை
1.3
வம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின் - நெடு 150
கச்சை வலித்துக் கட்டினவாய், வளைந்து மெலிந்த இடையினையும்
1.4
நோன் குறட்டு அன்ன ஊன் சாய் மார்பின்
உயர்ந்த உதவி ஊக்கலர் தம்மின் - மது 742,743
வலிய வண்டிச்சக்கர உருளையை ஒத்த ஊன் கெட்ட மார்போடே
உயர்ந்த உதவியை மேலும் முயலுதல் உடையாரைக் கொணர்மின்;
1.5
மல்லரை மறம் சாய்த்த மலர் தண் தார் அகலத்தோன் - கலி 134/1
மல்லர்களின் வீரத்தை அழித்துக் கெடுத்த, மலராலான குளிர்ந்த மாலையை அணிந்த மார்பினனாகிய திருமால்
1.6
மென் பிணி வன் தொடர் பேணாது காழ் சாய்த்து
கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும் - மது 382,383
மெல்லிய பிணிப்பையுடைய வலிய சங்கிலிகளைப் பொருட்டாக எண்ணாமல், அவை கட்டின தறியை முறித்து,
கம்பத்தை விட்டுச் சுழலும் கடாத்தையுடைய யானையும்;
1.7
பணிலம் கலி அவிந்து அடங்க காழ் சாய்த்து
நொடை நவில் நெடும் கடை அடைத்து - மது 621,622
சங்குகள் ஆரவாரம் ஒழிந்து அடங்கிக் கிடக்க, சட்டக்காலைத் தாழ்த்திப்
பண்டங்களுக்கு விலைகூறும் நெடிய கடையை அடைத்து,
1.8
இரு பெரு வேந்தரொடு வேளிர் சாய
பொருது அவரை செரு வென்றும் - மது 55,56
இரண்டு பெரிய (முடியுடைய)வேந்தருடன் குறுநிலமன்னர் பலரும் வீழ				55
பொருது அவரைப் போரில் வென்றும்,
2.1
இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன
குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் - திரு 312,313
கரிய பனையின் - (உள்ளே)வெளிற்றினையுடைய - புல்லிய செறும்பை ஒத்த
கரிய நிறத்தையுடைய மயிரினையுடைய உடம்பினையும் வளைந்த அடியினையுமுடைய கரடி
2.2
பைம் சாய் கொன்ற மண் படு மருப்பின்
கார் ஏறு பொருத கண் அகன் செறுவின் - பெரும் 209,210
பசிய கோரையை (அடியில்)குத்தி எடுத்த மண் படிந்த கொம்பினையுடைய
கரிய ஆனேறுகள் பொருத இடமகன்ற வயல்களில்,	
2.3
துவ்வா நறவின் சாய் இனத்தானே - பதி 60/12
நுகரமுடியாத நறவாகிய நறவு என்னும் ஊரில் உள்ள மென்மையான மகளிர் நடுவே
2.4
சாய் அறல் கடுக்கும் தாழ் இரும் கூந்தல் - பதி 74/3
நுண்ணிய கருமணலைப் போன்ற, தாழ்ந்து இறங்கும் கரிய கூந்தலைக் கொண்ட

 மேல்
 
    சாயல் - (பெ) 1. மென்மை, tenderness
                 2. வனப்பு, அழகு, loveliness, gracefulness, beauty
                 3. மேனி, body
1.
குறும்பொறி கொண்ட நறும் தண் சாயல்
மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன் - திரு 213,214
ஒட்டியாணத்தை(யும்) கொண்டதும், நறிய, குளிர்ந்த, மென்மையுடைய
இடையில் கட்டப்பட்ட, நிலத்தளவும் தொங்குகின்ற துகிலினையுடையன்,
2
மெத்தென் சாயல் முத்து உறழ் முறுவல் - நெடு 37
மென்மையான வனப்பையும், முத்தை ஒத்த பல்லினையும்,
3
புது நிறை வந்த புனல் அம் சாயல் - மலை 61
புதுப் பெருக்காய் வந்த நீர் (போன்ற)அழகிய மேனியைக்கொண்ட,

 மேல்
 
    சார்த்து - (வி) 1. சாத்து, ஒன்றின் மேல் சாய்ந்த நிலையில் இருத்து, rest something as a slant
                  2. நிரப்பு, fill, replenish
1.
குறும் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி
நெடும் சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில் - பெரும் 188,189
குறிய சகடத்தின் உருளையோடு கலப்பையையும் சாய்த்து வைக்கப்பட்டமையால்
நெடிய சுவரிடத்தே தேய்ந்த புகை சூழ்ந்த கொட்டிலினையும் உடைய
2.
ஓங்கு நிலை தாழி மல்க சார்த்தி
குடை அடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலை - அகம் 275/1-3
உயர்ந்த நிலையினதாகிய சாடியில் நிறைய ஊற்றி நிரப்பி,
பனங்குடையால் முகந்த நீரினைச் சொரிந்து வளர்த்த
பந்தலில் படந்த வயலைக் கொடியை 

 மேல்
 
    சாரல் - (பெ) மலையின் சரிவான பகுதி, slope of a hill.
இங்கே அருவிகள் பாய்ந்து வீழும்.
பிறங்கு வெள் அருவி வீழும் சாரல் - சிறு 90

மூங்கில்கள் நெருங்கி வளர்ந்திருக்கும்.
கழை வளர் சாரல் களிற்று இனம் நடுங்க - மது 242

குறிஞ்சிப்பூக்கள் கூட்டமாய் வளரும்
சாரல்
கரும் கோல் குறிஞ்சி - குறு 3/2,3

பலாப்பழங்கள் பழுத்துத்தொங்கும்.
சாரல் பலவின் கொழும் துணர் நறும் பழம் - ஐங் 214/1

இதனைச் சீர்ப்படுத்திக் குறவர் தினை விதைத்து வளர்ப்பர்.
தினை விளை சாரல் கிளி கடி பூசல் - மது 291

ஆங்காங்கே குடிசைகள் அமைத்து வாழ்வர்
சாரல் சிறுகுடி ஈங்கு நீ வரலே - நற் 168/11

	

 மேல்
 
    சாரிகை - (பெ) முன்னால் நகர்கை, onward movement
வெண் கிடை மிதவையர் நன் கிடை தேரினர்
சாரிகை மறுத்து தண்டா உண்டிகை - பரி 6/35,36
வெண்மையான சாரம் அமைத்த தெப்பத்தினையுடையவரும், நல்ல இருக்கைகள் கொண்ட தேரில் வருபவர்களும்,
முன்னால் செல்வதற்கு இடங்கொடாமல், குறைவில்லாத மக்கள் கூட்டம்,

 மேல்
 
    சால் - 1 (வி) 1. பொருந்தியிரு, அமைந்திரு, be constituted, comprise
                 2. மிகு, நிறைந்திரு, be abundant, full
                 3. சிறப்புடன் அல்லது பெருமையுடன் இரு, be great, noble
           2. (பெ) உழும்போது கொழு நிலத்தில் ஏற்படுத்தும் நீண்ட பள்ளம், furrow in ploughing
1.1.
திறல் சால் வென்றியொடு தெவ்வு புலம் அகற்றி - சிறு 246
வலிமை பொருந்திய வெற்றியோடே பகைவரின் நிலத்தைக் காலிசெய்து,
1.2
நெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவி - மலை 554
உயர்ந்த மலையிலிருந்து கீழேவிழுகின்ற நீர்ப்பெருக்கு நிறைந்த அருவியின்
1.3
அணங்கு சால் அரிவையை காண்குவம் - அகம் 114/15
தெய்வம் போல் சிறந்த நம் தலைவியைக் காண்போம்
2.
குடி நிறை வல்சி செம் சால் உழவர் - பெரும் 197
குடியிருப்பு நிறைந்த, உணவினையுடைய செவ்விய சாலாக உழுகின்ற உழவர்கள்

	

 மேல்
 
    சால்பு - (பெ) உயர்வு, சிறப்பு, மேன்மை, நற்பண்பு, பெருந்தன்மை, excellence of character and conduct, nobility
சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்
மாசு அற கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல் - குறி 15,16
(தமக்குரிய)நற்குணங்களின் தன்மையும், உயர்ந்த நிலையும், ஒழுக்கமும் சீர்குலைந்தால்,		15
கறை போகும்படி கழுவி பொலிவுள்ள புகழை (மீண்டும்)நிறுவுதல்,

 மேல்
 
    சால - (வி.அ) மிக, மிகவும், very, extremely
சாரல் நீள் இடை சால வண்டு ஆர்ப்ப - நற் 344/7
மலைச் சாரலின் இடைவெளியில் மிகவும் வண்டுகள் ஆரவாரிக்க

 மேல்
 
    சாலகம் - (பெ) சாளரம், பலகணி, latticed window
நீல நிரை போது உறு காற்கு உலைவன போல்
சாலகத்து ஒல்கிய கண்ணர் - கலி 83/12,13
நீல நிறத்தில் வரிசையாக நிற்கும் மலர்கள், மோதுகின்ற காற்றால் முன்னும் பின்னும் அசைவது போல்
சாளரங்களின் வழியே உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கும் மகளிர்

 மேல்
 
    சாலா - (வி.எ) அமையாத, be not suitable, inappropriate
உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து - கலி 77/10
இருக்கிறது என்பதற்கு அமையாத என் உயிர் ஒரேயடியாகப் பிரிந்துவிடும் என்று உணர்ந்தும்

 மேல்
 
    சாலாமை - (பெ) முடிவடையாமை, முற்றுப்பெறாமை, being unfinished
அவன் கை விட்டனனே
தொல் நசை சாலாமை - அகம் 356/7,8
அவன் என் கையை விட்டுவிட்டான்,
நீண்ட நாளாக வரும் விருப்பம் முற்றுப்பெறாமலேயே

 மேல்
 
    சாலார் - (பெ) சான்றோர் என்பதன் எதிர்ச்சொல், ignoble
சான்றோர்
சான்றோர்_பாலர் ஆப
சாலார் சாலார்_பாலர் ஆகுபவே - புறம் 218/5-7
சிறந்த பண்புடையோர்
சிறந்த பண்புடையோர் பக்கத்தவர் ஆவர்
சிறந்த பண்பு அற்றவர், சிறந்த பண்பு அற்றவர் பக்கத்தவர் ஆவர்

 மேல்
 
    சாலி - (பெ) செந்நெல், a superior quality of paddy
சாலி நெல்லின் சிறை கொள் வேலி - பொரு 246
செந்நெல் விளைந்துநின்ற, வரம்பு கட்டின ஒரு வேலி அளவுள்ள நிலம்,

 மேல்
 
    சாலியர் - (வி) நிறைந்திருப்பதாக, let it be full
அறம் சாலியரோ அறம் சாலியரோ - ஐங் 312/1
அறத்தால் நிறைந்திருப்பதாக! அறத்தால் நிறைந்திருப்பதாக!

 மேல்
 
    சாலினி - (பெ) 1. ஆவி பிடித்த நிலையில் இறைவாக்கு உரைக்கும் பெண், 
                 woman who pronounces oracles under the influence of sprit
                   2. அருந்ததி, Wife of Vasiṣṭha 
1.
கடும் சூல் மகளிர் பேணி கைதொழுது
பெரும் தோள் சாலினி மடுப்ப - மது 609,610
முதிர்ந்த சூல்கொண்ட மகளிரைக் காத்து, கைகுவித்துத் தொழுது,
பெரிய தோளினையுடைய இறைவாக்குப்பெண் மடைகொடுக்க
2.
வட_வயின் விளங்கு ஆல் உறை எழு_மகளிருள்
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய
அறுவர் மற்றையோரும் அ நிலை அயின்றனர் - பரி 5/43-45
வானத்தில் வடக்குத்திசையில் ஒளிவிட்டுத் திகழும் கார்த்திகை மீனாய் இருக்கும் ஏழு மகளிருள்
கடவுள் கற்பினையுடைய ஒரு மீனாகிய அருந்ததி ஒழிய
அறுவராகிய ஏனையோரும் அப்பொழுதே உண்டனர்;

 மேல்
 
    சாலும் - (வி.மு) 1. போதுமானது, it is enough
                     2. அமைந்திருக்கிறது, It so happens to be 
1.
நசை தர
வந்தது சாலும் வருத்தமும் பெரிது என - மலை 545,546
(என்மீதான)விருப்பம் (உம்மைக்)கொண்டுவந்துசேர்க்க
(நீர்)வந்ததே போதும், (வேறு புகழ்மொழி வேண்டாம்)(வழிவந்த)வருத்தமும் பெரியது' என,
2.
நகை அமர் காதலரை நாள்_அணி கூட்டும்
வகை சாலும் வையை வரவு - பரி 6/12,13
மகிழ்ச்சி பொருந்திய தம் காதலரை நீர் விளையாட்டுக்குரிய நாளணிகளை அணியச்செய்விக்கும்
வகையில் அமைந்திருக்கிறது வையையில் நீர் வரவு;

 மேல்
 
    சாலேகம் - (பெ) சாளரம், பலகணி, பார்க்க : சாலகம்
முத்து உடை சாலேகம் நாற்றி - நெடு 125
முத்துக்களை உடைய (தொடர் மாலைகளைப்)பலகணிகள்(போன்று) தொங்கவிட்டு

 மேல்
 
    சாலை - (பெ) 1. வேள்விச்சாலை, sacrificial hall
                  2. கூடம், கொட்டில், cow shed
1.
பல்_சாலை_முதுகுடுமியின் - மது 759
(பலவாகிய வேள்விச் சாலைகளைக் கண்ட பாண்டியன்)பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போன்று
2.
பகட்டு எருத்தின் பல சாலை - பட் 52
பெரிய எருதுகளுக்கான (அவற்றிற்கு வைக்கோல் இடும்)பல சாலைகளையும்

 மேல்
 
    சாவகர் - (பெ) சமணரில் விரதம் காக்கும் இல்லறத்தார், jains in domestic life following holy practices
வண்டு பட பழுநிய தேன் ஆர் தோற்றத்து
பூவும் புகையும் சாவகர் பழிச்ச - மது 475,476
வண்டுகள் படியும்படி பருவம் முதிர்ந்த தேன் நிறைந்த தோற்றத்தையுடைய
பூக்களையும், புகையினையும் (ஏந்தி)விரதங்கொண்டோர் வாழ்த்திநிற்ப

 மேல்
 
    சாவம் - (பெ) சாபம், வில், பார்க்க: சாபம்
சாவம் தாங்கிய சாந்து புலர் திணி தோள் - சிறு 98
வில்லை எடுத்த சந்தனம் பூசிப் புலரும் திண்ணிய தோளினையும்,

 மேல்
 
    சாற்று - (வி) 1. பலர் அறியக் கூறு, தெரிவி, அறிவி, declare, announce, proclaim
                 2. நிரப்பு, நிறை, fill
1.
சில்_பத_உணவின் கொள்ளை சாற்றி
பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி - பெரும் 64,65
உப்பாகிய உணவின் விலையை அறிவித்தவாறு
பல எருதுகளையுடைய உப்புவாணிகர் ஊர்களுக்குச் செல்லுகின்ற நெடிய வழி	
2.
நிவந்து செல் நீத்தம் குளம் கொள சாற்றி
களிறு மாய்க்கும் கதிர் கழனி - மது 246,247
ஓங்கிச் செல்லும் வெள்ளம் குளங்கள் கொள்ளும்படி நிறைப்ப,
யானையை மறைக்கும் அளவுள்ள கதிர்களைக் கொண்ட வயல்களிலும்,

 மேல்
 
    சாறு - (பெ) 1. விழா, festival
               2. கரும்பு, பழம் முதலியவற்றின் பிழிவு, Juice
1.
சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி - திரு 283
விழாவெடுத்த களத்தின் பொலிவுபெறத் தோன்றி,
2.
கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசை-மின் - பெரும் 262
கரும்பினது இனிய சாற்றை விருப்பமுடையீராய் பருகுவீர்

 மேல்
 
    சான்ம் - (வி.மு) சாலும் என்பதன் திரிபு, பார்க்க: சாலும்
திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என - மலை 319
திருத்தமாகச்செய்யப்பட்ட வேலையுடைய தலைவனுக்கு(நன்னனுக்கு) புதிய குடியிறையாக அமையும் என்று

 மேல்
 
    சான்ற - (வி.எ) அமைந்த, (சால் என்பதன் இறந்தகால வினையெச்சம்) பார்க்க: சால் (வி)
பாடல் சான்ற நெய்தல் நெடு வழி - சிறு 151
(புலவர்)பாடுதற்கு அமைந்த நெய்தல் நிலத்தே கிடந்த நீண்ட வழியில்,

முலை முகம்_செய்தன, முள் எயிறு இலங்கின,
தலை முடி சான்ற, தண் தழை உடையை - அகம் 7/1,2
முலைகள் கூம்பி நிறைந்த வளர்ச்சியுற்றன. கூரிய பற்கள் மின்னுகின்றன.
தலையில் கூந்தலும் சிறப்பாய் அமைந்துள்ளது. குளிர்ந்த தழையாடையையும் உடுத்தியுள்ளாய்.

சீர் சான்ற விழு சிறப்பின்
சிறு கண் யானை பெறல் அரும் தித்தன் - புறம் 395/17,18
தலைமை அமைந்த செல்வச் சிறப்பும்
சிறியகண்ணையுடைய யானைகளும் உடைய பெறுதற்கு அரிய தித்தன் என்பானின்

 மேல்
 
    சான்றவர் - (பெ) சான்றோர், the noble
தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக - கலி 39/48
தகை மிக்கவரும், மணவினைகளின் வகையை அறிந்தவருமான சான்றோர் சூழ்ந்திருக்க,

 மேல்
 
    சான்றவிர் - (பெ) சான்றோர்களே!, term addressing the noble
சான்றவிர் வாழியோ சான்றவிர் என்றும் - கலி 139/1
சான்றோர்களே, சான்றோர்களே! நீர் வாழ்க! எப்பொழுதும்

 மேல்
 
    சான்றாண்மை - (பெ) மேதகைமை, பெருமை, உயர்வு, nobility, eminence
தகவு உடை மங்கையர் சான்றாண்மை சான்றார்
இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார் - பரி 20/88,89
கற்புடைய மங்கையர் மேதகைமை மிக்க பெரியவர்,
இகழ்ந்தபோதும் கணவரை ஏற்றி வணங்குவர்,

 மேல்
 
    சான்றோர் - (பெ) அறிவும் பண்பும் மிக்கவர், men of learning and nobility
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே - நற் 210/7-9
கற்றறிந்த நல்லோர் செல்வம் என்று கூறுவது, தம்மைச் சேர்ந்தோரின்
துயரை நினைத்து அச்சம்கொள்ளும் பண்பினைக்கொண்ட
பரிவுள்ளமாகிய செல்வமே செல்வம் என்பது

 மேல்