<<முந்திய பக்கம்

சங்க இலக்கியம் - அருஞ்சொற்களஞ்சியம்
கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
சே - முதல் சொற்கள்
சே
சேக்கை
சேடல்
சேடு
சேண்
சேணோன்
சேதா
சேதிகை
சேப்பு
சேம்பு
சேமஅச்சு
சேமச்செப்பு
சேமம்
சேய்
சேர்ப்பன்
சேவடி
சேறல்

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
  சே - 1. (வி) 1. தங்கு, dwell, abide
        2. அடை, எய்து, get, obtain
     2. (பெ) சிவப்பு, redness
1.1
சேணோன் இழைத்த நெடும் கால் கழுதில்
கான மஞ்ஞை கட்சி சேக்கும்
கல் அகத்தது எம் ஊரே - நற் 276/5-7
உயர்ந்த பரணில் இருக்கும் தினைக்காவலன் கட்டிய உயரமான கால்களைக் கொண்ட பரணில்,
காட்டு மயில்கள் தம் இருப்பிடமாய்த் தங்கிவாழும்
மலைகளுக்கிடையே அமைந்தது எமது ஊர்;
1.2
கனவின் தொட்டது கை பிழை ஆகாது
நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை
வரு புனல் அணிக என வரம் கொள்வோரும் - பரி 8/103-105
கனவில் காதலரின் கையைத் தொட்டது பொய்யாகாமல்
நனவினிலும் கிட்டும்படி, 'உனக்குரிய செறிந்த நீரையுடைய வையை ஆறு
புதிதாய் வரும் புனலை அணிவதாக' என்று வரம் கேட்போரும்,
2.
ஏனல் காவலர் மா வீழ்த்து பறித்த
பகழி அன்ன சே அரி மழை கண் - நற் 13/3,4
தினைப் புனக் காவலர் காட்டுப்பன்றியை வீழ்த்திவிட்டுப் பறித்த
அம்பினைப் போன்ற சிவந்த வரிகளையுடைய குளிர்ச்சியான கண்களையும்

 மேல்
 
  சேக்கை - (பெ) துயிலிடம், படுக்கை, கட்டில், உறைவிடம், cot, bed, couch, dwelling place
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்து
தோடு அமை தூ மடி விரித்த சேக்கை - நெடு 134,135
கஞ்சி போட்டு வெளுக்கப்பட்ட துகிலின்
மலரிதழ்கள் வைத்து(மணமூட்டப்பட்ட)தூய மடியினை விரித்த படுக்கையின்கண்

செ வரை சேக்கை வருடை மான் மறி - குறு 187/1
செம்மையான மலையை உறைவிடமாகக்கொண்ட வருடைமானின் குட்டி

 மேல்
 
  சேடல் - (பெ) பவளமல்லிகை, Night-flowering jasmine, Nyctanthes arbor-tristis
சேடல் செம்மல் சிறுசெங்குரலி - குறி 82

	

 மேல்
 
  சேடு - (பெ) பெருமை, சிறப்பு, greatness, excellence
சேடு இயல் வள்ளத்து பெய்த பால் சில காட்டி - கலி 72/3
சிறப்பான இயல்புடைய கிண்ணத்தில் ஊற்றிய பாலைச் சிறிதளவு எடுத்துக்காட்டி

 மேல்
 
  சேண் - (பெ) 1. தூரம், சேய்மை, remoteness, distance
         2. உயரம், height, loftiness
         3. நெடுங்காலம், long span of time 
1.
ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி - திரு 3
ஒழிவு இல்லாமல் மின்னும் சேய்த்துநின்று ஒளிரும் பிரகாசமான ஒளியையுடைய
2.
சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடும் சினை - சிறு 254
மழைத்துளியில் நனைந்த முருக்க மரத்தின் மிக்க உயரத்திற்கு வளர்ந்த நீண்ட கொம்பில்
3.
திரியா சுற்றமொடு முழுது சேண் விளங்கி
நடுக்கு இன்றி நிலியரோ - புறம் 2/19,20
வேறுபாடில்லாத மந்திரிச் சுற்றத்தோடு ஒழியாது நெடுங்காலம் விளங்கி
துளக்கமின்றி நிற்பாயாக

 மேல்
 
  சேணோன் - (பெ) 1. குறிஞ்சி நிலத்தவன், inhabitant of a hilly tract
           2. உயரமான பரணில் இருப்பவன், One who is on a platform on a tree
           3. எட்டமுடியாத இடத்தில் இருப்பவன், one who is unapproachable
1.
சேணோன் அகழ்ந்த மடி வாய் பயம்பின் - மது 294
குறவன் தோண்டின, மூடின வாயையுடைய பொய்க்குழியில்
2.
சேணோன் இழைத்த நெடும் கால் கழுதில் - நற் 276/5
உயர்ந்த பரணில் இருக்கும் தினைக்காவலன் கட்டிய உயரமான கால்களைக் கொண்ட பரணில்,
3.
செல்வை ஆயின் சேணோன் அல்லன் - புறம் 103/5
நீ அவன்பால் போவாயாகின் அவன் கிட்டமுடியாதவன் அல்லன்

 மேல்
 
  சேதா - (பெ) சிவப்புப்பசு, Tawny coloured cow
சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டு சேதா - நற் 359/1
மலைச்சரிவில் மேய்ந்த சிறிய கொம்பையுடைய சிவந்த பசு

 மேல்
 
  சேதிகை - (பெ) குதிரையின் உடலில் குத்தும் பச்சை, Coloured mark on a horse
வெதிர் உழக்கு நாழியால் சேதிகை குத்தி - கலி 96/27
மூங்கில் உழக்காகிய நாழியால் சேதிகை என்னும் பச்சை குத்தி

 மேல்
 
  சேப்பு - (பெ) சிவப்பு, redness
சிகை கிடந்த ஊடலின் செம் கண் சேப்பு ஊர - பரி 7/70
முன்னரே மீந்துபோய்க்கிடந்த ஊடலால் சிவந்திருந்த கண்களில் மேலும் சிவப்பேற

 மேல்
 
  சேம்பு - (பெ) ஒரு செடி, indian kales, Colocasia antiquorum
நீலத்து அன்ன அகல் இலை சேம்பின்
பிண்டம் அன்ன கொழும் கிழங்கு மாந்தி - அகம் 178/4,5
நீலமணியைப் போன்ற நிறத்தினையுடைய அகன்ற இலையினையுடைய சேம்பின்
பிண்டித்து வைத்தாற்போன்ற செழுமையான கிழங்கினை நிறையத் தின்று

	

 மேல்
 
  சேமஅச்சு - (பெ) அச்சு முறியும்போது போடுவதற்கான கூடுதல் அச்சு, stepney axis
கீழ் மரத்து யாத்த சேமஅச்சு அன்ன - புறம் 102/5
அச்சுமரத்தின் கண்ணே அடுத்துக்கட்டப்பட்ட கூடுதல் அச்சுப் போன்ற

 மேல்
 
  சேமச்செப்பு - (பெ) சேமித்துவைக்கும் செப்புக்குடம், copper vessel in which water is saved
அற்சிர வெய்ய வெப்ப தண்ணீர்
சேமச்செப்பில் பெறீஇயரோ நீயே - குறு 277/4,5
முன்பனிக்காலத்துக்காக விரும்பத்தக்க வெப்பத்தையுடைய நீரைச்
சேமித்துவைக்கும் செப்பில் பெறுவீராக! நீவிர்!

 மேல்
 
  சேமம் - (பெ) பாதுகாவல், protection, security
சேம திரை வீழ்த்து சென்று அமளி சேர்குவோர்
தாம் வேண்டு காதல் கணவர் எதிர்ப்பட
பூ மேம்பாடு உற்ற புனை சுரும்பின் சேம
மட நடை பாட்டியர் தப்பி தடை இறந்து - பரி 10/34-37
பாதுகாவலான திரையைச் சூழப்போட்டு தன் கணவருடன் மலர்ப்படுக்கையில் கூடிக்களிப்போருமாய்,
தாம் விரும்புகின்ற காதல் கணவர்கள் எதிர்ப்பட்டபோது,
பூவின் சிறப்பினால் அதன்மீது மொய்க்கவரும் அழகிய வண்டினைப் போல, தமக்குக் காவலாகிய
தளர்நடைப் பாட்டியரிடமிருந்து தப்பித்து, தடைகளை மீறிக் காதலரை எதிர்கொள்ள

 மேல்
 
  சேய் - (பெ) 1. சேய்மை. தூரம், remoteness, distance
        2. குழந்தை, மகன்/மகள், child
        3. சிவப்பு, redness
        4. சிவப்புக்காளை, tawny coloured bull 
1.
செல் புனல் உழந்த சேய் வரல் கான்யாற்று - சிறு 3
ஓடுகின்ற நீரால் வருந்தின, தொலைவினின்றும் வருகின்ற, காட்டாற்றின்
2.
நன்னன் சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு - மலை 64
நன்னன் மகனான நன்னனை நினைத்த உறுதிப்பாட்டுடன்
3
சேய் இறா எறிந்த சிறு_வெண்_காக்கை - நற் 31/2
சிவந்த இறால் மீனைப் பாய்ந்துபற்றித் தின்ற சிறிய கடற்காக்கை,
4.
வாலிது கிளர்ந்த வெண் கால் சேயும் - கலி 105/18
நன்றாய் உயர்ந்த வெண்மையான கால்களையுடைய சிவந்த காளையும்

 மேல்
 
  சேர்ப்பன் - (பெ) நெய்தனிலத்தலைவன், Chief of the maritime tract;
தெண் கடல் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே - நற் 49/10
தெளிந்த கடலையுடைய தலைவன் வாழும் சிறிய நல்ல ஊருக்கு

 மேல்
 
  சேவடி - (பெ) சிவந்த பாதம், red foot
தாமரை புரையும் காமர் சேவடி - குறு 0/1
தாமரை மலரைப் போன்ற அழகிய சிவந்த திருவடிகளையும்

 மேல்
 
  சேறல் - (பெ) செல்லுதல், passing, going, reaching
அரும் சுரம் சேறல் அயர்ந்தனென் யானே - அகம் 221/14
அரிய சுரநெறியில் செல்லுதலை யான் விரும்பி ஏற்றுக்கொண்டேன்

 மேல்