|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
சொரி - 1 (வி) 1. சிதறிவிடு, shoot down
2. கொட்டு, pour down
3. மிகுதியாகக் கொடு, வழங்கு, give away in plenty
4. தொகுதியாகச் செலுத்து, shoot as arrows
5. சொட்டு, drop out
- 2 (பெ) தினவு, itching
1.1.
கம்மியர்
செம்பு சொரி பானையின் மின்னி - நற் 153/2,3
கொல்லர் கடையும்போது
செம்புப்பொறிகளைச் சிதறிவிடும் பானையைப் போல மின்னலிட்டு,
1.2.
பல் பூ கானல் முள் இலை தாழை
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ - நற் 335/4,5
பலவான பூக்களையுடைய கடற்கரைச் சோலையின் முள் உள்ள இலைகளைக்கொண்ட தாழை
சோற்றை அள்ளிக்கொட்டும் அகப்பையைப் போல கூம்பிய மொட்டு அவிழ,
1.3.
இலம்படு புலவர் ஏற்ற கை ஞெமர
பொலம் சொரி வழுதியின் புனல் இறை பரப்பி - பரி 10/126,127
இல்லாத புலவர்கள் ஏந்திநின்ற கைகள் நிரம்பும்படி
தங்கத்தை மிகுதியாக வழங்குகின்ற பாண்டிய மன்னனைப் போலவே, வையைஆறு நீரை நாடெங்கும் இறைத்துப் பரப்பி
1.4.
வில்லு சொரி பகழியின் மென் மலர் தாயின
வல்லு போர் வல்லாய் மலை மேல் மரம் - பரி 18/40,41
வில்லிலிருந்து செலுத்தப்படும் அம்புகளைப் போல் மெல்லிய மலர்களைச் சொரிந்து பரப்பின
சூதாட்டத்தில் வல்லவனே! உன் மலை மேலிருக்கும் மரங்கள்
1.5.
கண்ணீர்
சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன - கலி 82/13,14
அவளின் கண்ணீர்
சொட்டுச்சொட்டாய் வடிந்தது முத்து மாலை அறுந்து முத்துக்கள் சிந்தியது போல் இருந்தது
2.
சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து - அகம் 121/8
தினவு பொருந்திய தன் முதுகினை உராய்ந்துகொண்டதான, வழியின் பக்கத்தே உள்ள வேண்கடம்பின்
மேல்
சொரிவு - (பெ) கொட்டுதல், tha act of pouring down
பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவு_உழி - குறி 57
பளிங்கை (க் கரைத்துக்)கொட்டியதைப் போன்ற பரந்த சுனையில் மூழ்கி விளையாடுகின்றபொழுது
மேல்
சொல்மலை - (பெ) புகழ்ந்துகூறும் சொற்களின் தொகுப்பு, the concourse of words of praise
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை - திரு 263
அந்தணரின் செல்வமாயிருப்பவனே, சான்றோர் புகழும் சொற்களின் ஈட்டமாயிருப்பவனே
மேல்
சொலி - 1 - (வி) 1. உரி, பேர்த்தெடு, strip off, tear off, tear off
2. இடம்பெயர், displace
3. நீக்கு, remove, eradicate
2. (பெ) உரிக்கப்பட்ட பட்டை அல்லது மேல்தோல், Bark of a tree; the inner fibrous covering of a bamboo
1.1.
காம்பு சொலித்து அன்ன அறுவை உடீஇ - சிறு 236
மூங்கில் ஆடையை உரித்தாற் போன்றதும் ஆகிய உடையினை உடுக்கச்செய்து,
1.2.
கிளையொடு
நால் முலை பிணவல் சொலிய கான் ஒழிந்து - அகம் 248/4
தன் கூட்டத்துடன்
தொங்கும் முலையினையுடைய பெண்பன்றி இடம்பெயர, காட்டினின்றும் வெளிவந்து
1.3.
உண்ணா பிணவின் உயக்கம் சொலிய
நாள்_இரை தரீஇய எழுந்த நீர்நாய் - அகம் 336/3,4
உண்ணாமையால் வருந்திய பெண்நாயின் வருத்தத்தைப் போக்குவதற்கு
காலைப் பொழுதில் இரையினைக் கொண்டுவர எழுந்த நீர்நாய்
2.
பாம்பு உரி அன்ன வடிவின, காம்பின்
கழை படு சொலியின் இழை அணி வாரா
ஒண் பூம் கலிங்கம் - புறம் 383/9-11
பாம்பின் தோல்போன்ற வடிவினை உடையவாய் மூங்கில்
கோலின் உட்புறத்தே உள்ள தோல் போன்ற நெய்யப்பட்ட இழைகளின் வரிசை அறிய இயலாத
ஒள்ளிய பூவால் செய்யப்பட்ட ஆடை
மேல்
சொறி - (வி) தினவு நீங்கத் தேய், scratch in order to allay itching
ஓங்கு எயில் கதவம் உருமு சுவல் சொறியும்
தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தட கை - சிறு 80,81
உயர்ந்த மதிலின் கதவில் உருமேறு (தன்)கழுத்தைத் (தினவால்)தேய்க்கும்
(வானத்தே)தொங்கும் கோட்டையை அழித்த, தொடி விளங்கும் பெருமையையுடைய கையினை
மேல்
சொன்றி - (பெ) சோறு, boiled rice
குறும் தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி - பெரும் 193
குறிய தாளினையுடைய வரகின் சிறிய பருக்கைகளாகிய சோற்றை
மேல்
|
|
|