|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
சுகிர் - 1. (வி) யாழ் நரம்பைத் தேய்த்து மெல்லிழையாக்கு, rub clean and smooth, as a lute string
2. (பெ) பிசிர், Small splinter or fibre rising on a smooth surface of wood or metal
1.
கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா
குரல் ஓர்த்து தொடுத்த சுகிர் புரி நரம்பின்
அரலை தீர உரீஇ - மலை 22-24
கடுகளவும் இசைச் சுருதியில் தவறு இல்லாது
ஒலிநயத்தைக் கூர்ந்து கேட்டுக்கேட்டுக் கட்டிய தேய்த்து முறுக்கேற்றப்பட்ட நரம்பினில்
கழலைகள் முற்றிலும் அகலுமாறு சிம்பெடுத்து
2.
சிதாஅர் வள்பின் சிதர் புற தடாரி
ஊன் சுகிர் வலந்த தெண் கண் ஒற்றி - புறம் 381/12,13
துண்டித்த வார்களால் கட்டப்பட்ட நைந்துபோன புறத்தையுடைய தடாரிப்பறையின்
தோலில் ஒட்டிக்கிடந்து காய்ந்து பொருக்காக இருக்கும் ஊன் பிசிர் சூழஇருக்கும் தெளிந்த முகப்பை அறைந்து
மேல்
சுடலை - (பெ) பிணத்தை எரிக்கும் இடம், the platform where dead bodies are burnt
நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணீர்
என்பு படு சுடலை வெண் நீறு அவிப்ப - புறம் 356/5,6
மனம் விரும்பும் அன்புடையோர் அழுத கண்ணீர்
எலும்பு கிடக்கும் எரியூட்டும் இடத்திலுள்ள சாம்பலை அவிக்க
மேல்
சுடுமண் - (பெ) செங்கல், burnt brick
சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின் - பெரும் 405
செங்கல்லால் செய்யப்பட்டு உயர்ந்த படைவீட்டைச் சூழ்ந்த மதிலினையும்
மேல்
சுண்ணம் - (பெ) 1. பூந்தாது, pollen dust
2. வண்ணப்பொடி, saffron mixed powder
1.
பொன் காண் கட்டளை கடுப்ப கண்பின்
புன் காய் சுண்ணம் புடைத்த மார்பின் - பெரும் 220,221
பொன்னை(உரைத்து)க் காணும் கட்டளைக்கல்லை ஒப்ப, சம்பங்கோரையின்
புல்லிய காயில் தோன்றின தாதை அடித்துக்கொண்ட மார்பினையும்,
2.
சாந்தும் கமழ் தாரும் கோதையும் சுண்ணமும்
கூந்தலும் பித்தையும் சோர்ந்தன - பரி 24/84,85
சந்தனமும்,மணங்கமழும் தாரும், கோதையும், நறுமணப் பொடிகளும்
மகளிர் கூந்தலிடத்திலிருந்து மைந்தர் பித்தையிடத்திலிருந்தும் நழுவி வீழ்ந்தன
மேல்
சுணங்கறை - (பெ) உடலுறவு, sexual union
சுணங்கறை பயனும் ஊடல் உள்ளதுவே - பரி 9/22
புணர்ச்சியின் பயனும் ஊடல் செய்வதில் உள்ளது
மேல்
சுணங்கு - (பெ) இளம் பெண்களின் மார்புப் பகுதியில் தோன்றும் மஞ்சள் நிறப் புள்ளிகள்,
a kind of colour change in the form of yellow dots in a young lady's chest
இந்தச் சுணங்கு என்பது பூப்புக்குப் பின் மகளிர் மேனியில் தோன்றும் நிறப்பொலிவு என்ற ஒரு கருத்து உண்டு.
ஆக வன முலை அரும்பிய சுணங்கின்
மாசு இல் கற்பின் புதல்வன் தாய் என - அகம் 6/12,13
என்ற அடிகளால், சுணங்கு என்பது தாய்மைப்பேறு அடைந்த பெண்ணுக்கும் வரும் என்பது தெளிவாகிறது.
மேலும், இது வெறும் பொலிவுமட்டும்தானா என்று பார்ப்போம்.
முலையே முகிழ் முகிழ்த்தனவே தலையே
கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே
செறி முறை வெண் பலும் பறிமுறை நிரம்பின
சுணங்கும் சில தோன்றினவே - குறு 337/1-4
முலைகள் முகிழாய் முகிழ்த்தன; தலையின்
கிளைத்த கூந்தல்கொத்துக்கள் கீழே விழுந்து தொங்குகின்றன;
செறிவாக அமைந்த வெள்ளைப் பற்களும் விழுந்தெழுந்து நிற்கின்றன;
தேமலும் சில தோன்றின
பருவமடைந்த ஓர் இளம்பெண்ணிடம் ஏற்படும் மாற்றங்களை இப்பாடல் குறிக்கிறது. எனினும் சுணங்கும் சில தோன்றினவே
என்ற சொற்கள், இது மாற்றம் மட்டும் அல்ல, புதிதாய் தோன்றிய தோற்றம் எனவும் தெரிவிக்கிறது.
அணி நல் ஆகத்து அரும்பிய சுணங்கே - புறம் 350/11
என்ற வரியால், இந்தச் சுணங்கு மேனியில் அரும்புவது என்பது உறுதிப்படுகிறது.
மேலும், சுணங்கு அணி ஆகம், சுணங்கு அணி இள முலை எனப் பல இடங்களில் வருவதால், இது பொதுவான
மேனி மாற்றம் அல்ல என்றும், புதிதாய்த் தோன்றிய ஓர் உறுப்பு என்றும் தெளியலாம்.
எனில், இந்த உறுப்பு எங்கே தோன்றுகிறது என்ற வினா எழுகிறது.
இந்த அடிகளைப் பாருங்கள்.
அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து - பொரு 35
ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள் - அகம் 174/12
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த - அகம் 161/12
இவற்றைப் போன்ற இன்னும் பல அடிகளைக் காணலாம். ஆகம் என்பது மார்பு. எனவே,இந்தச் சுணங்கு பெண்களின்
மார்புப் பகுதியில் தோன்றுகிறது. மார்பு என்பது கழுத்துக்குக் கீழே, வயிற்றுக்கும் மேலே உள்ள பகுதி. இந்தப் பரந்த
பரப்பில் சுணங்கு குறிப்பாக எங்கே தோன்றுகிறது என்றும் இலக்கியங்கள் கூறுகின்றன.
சுணங்கு அணி வன முலை அணங்கு கொள திமிரி - நற் 9/6
ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலை மேல் - கலி 111/16
சில் சுணங்கு அணிந்த பல் பூண் மென் முலை - அகம் 343/2
என்ற அடிகள், இந்தச் சுணங்கு, பெண்களின் முலைகளின் மேல் படர்கிறது என்று தெரிவிக்கின்றன.
இந்தச் சுணங்கு எவ்வாறு இருக்கும் என்றும் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.
பொன் பொதிந்து அன்ன சுணங்கின் - நற் 26/8
பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய - அகம் 279/4
என்ற அடிகளால், இது பொன்னிறமாக இருக்கும் என்று தெரியவருகிறது.
ஒண் பொறி சுணங்கின் ஐது பட தாஅம் - நற் 191/4
என்ற அடியால், இது புள்ளி புள்ளியாக இருக்கும் என்பதும் தெரிய வருகிறது.
தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய் - கலி 57/17
என்ற அடி, சுணங்கு என்பது வேங்கை மலர் போல் இருக்கும் என்கிறது.
எனவே, ஐயத்துக்கிடமின்றி, பெண்களின் மார்புப்பகுதியில், குறிப்பாக முலைப்பகுதியில்
மஞ்சள் நிறத்தில் புள்ளிபுள்ளியாக வேங்கை மலர் போன்று அரும்பியிருப்பதே சுணங்கு என்பது பெறப்படும்.
மேல்
சுதை - (பெ) 1. சுண்ணாம்பு, சுண்ணாம்புக்கலவை, lime, lime mortar
2. சுண்ணாம்புக்கலவைப் பூச்சு, lime plaster
1.
வாலிய
சுதை விரிந்து அன்ன பல் பூ மராஅம் - அகம் 211/1,2
வெண்மையான சுண்ணாம்பு வெந்து விரிந்திருப்பதைப் போன்ற பலவான பூக்களைக் கொண்ட வெண்கடப்பமரம்
2.
வெள்ளி அன்ன விளங்கு சுதை உரீஇ - நெடு 110
வெள்ளியைப் போன்ற ஒளிரும் சுண்ணாம்புச்சாந்தை வாரிப்பூசி
மேல்
சும்மை - (பெ) கூட்டமாக இருப்போர் எழுப்பும் பேரொலி, Loud and persistent outcry from many people
மகிழ்ந்தோர் ஆடும் கலி கொள் சும்மை - மது 364
மகிழ்ந்தோர் ஆடும் செருக்கினைக் கொண்ட ஆரவாரம்
மேல்
சுமடு - (பெ) சும்மாடு, load-pad for the head
உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து
புகர் வாய் குழிசி பூ சுமட்டு இரீஇ - பெரும் 159
உறையினால் கெட்டியாகத் தோய்ந்த இளம் புளிப்பான தயிரைக் கடைந்து, வெண்ணையை எடுத்து,
(தயிர்)புள்ளிபுள்ளியாகத் தெரிந்த வாயையுடைய மோர்ப்பானையை மெல்லிய சும்மாடின் மேல் வைத்து
மேல்
சுரபுன்னை - (பெ) ஒரு புன்னை வகை மரம், பூ, வழை, Long-leaved two-sepalled gamboge, Ochrocarpus longifolius
கரையன சுரபுன்னையும் - பரி 11/17
மேல்
சுரம் - (பெ) வறண்ட பாலை நிலம், barren tract
புயல் துளி மாறிய போக்கு அரு வெம் சுரம் - கலி 13/9
மழைத்துளியே இல்லையாகிப்போன, போவதற்கு அரிய கொடிய பாலை வழியில்,
மேல்
சுரன் - (பெ) சுரம் என்பதன் திரிபு, பார்க்க: சுரம்
வெயில் முளி சோலைய வேய் உயர் சுரனே - ஐங் 327/3
வெயிலால் காய்ந்துபோன மரக்கூட்டத்தையுடையது மூங்கில்கள் உயர்ந்துநிற்கும் பாலைவழி
மேல்
சுரி - (வி) சுருண்டிரு, be spiral, curl
எரி அகைந்து அன்ன ஏடு இல் தாமரை
சுரி இரும் பித்தை பொலிய சூட்டி - பொரு 159,160
நெருப்புத் தழைத்தாற் போன்ற, இதழ் இல்லாத தாமரையை,
சுருண்ட கரிய மயிரில் பொலிவுபெறச் சூட்டி,
மேல்
சுரிகை - (பெ) உடைவாள், dirk, short sword
சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவு உடை - பெரும் 73
உடைவாள் செருகப்பட்ட கட்டு இறுகிய உடையினையும்
மேல்
சுரிதகம் - (பெ) ஒருவகைத்தலையணி, An ornament fastened to the hair with a screw;
கைவல் வினைவன் தையுபு சொரிந்த
சுரிதக உருவின ஆகி பெரிய
கோங்கம் குவி முகை அவிழ - நற் 86/5-7
கைவேலைப்பாட்டில் வல்லவனான கம்மியன் மணிகளைக் கோத்துச் செய்த
சுரிதகம் என்னும் அணியைப் போன்ற உருவத்தைக்கொண்டனவாகி, பெரிய
கோங்கின் குவிந்த முகைகள் மலர
மேல்
சுரியல் - (பெ) சுருண்ட மயிர், curly hair
சுரியல் அம் சென்னி பூ செய் கண்ணி - பதி 27/4
சுருண்ட மயிரையுடைய அழகிய தலையுச்சியில் பூவினால் தொடுத்த தலைமாலையை அணிந்து
மேல்
சுருணை - (பெ) பூண், A metal cap or band placed on a wooden pole to prevent splitting
கனை இரும் சுருணை கனி காழ் நெடு வேல் - அகம் 113/15
செறிந்த கரிய பூணையும், நெய் கனிந்த தண்டையுமுடைய நீண்ட வேல்
மேல்
சுருதி - (பெ) வேத ஒலிப்பு, vedic recitals
சுருதியும் பூவும் சுடரும் கூடி - பரி 18/52
வேத ஒலியும், மலர்களும், விளக்குகளும் கூடி
மேல்
சுரும்பு - (பெ) வண்டு, bee
பெரும் பல் குவளை சுரும்பு படு பன் மலர் - மது 566
பெரிய பலவாகிய செங்கழுநீரில் வண்டுகள் மொய்க்கும் பல பூக்களை
மேல்
சுரை - (பெ) 1. கடப்பாரை, sharp crow-bar
2. பசு முதலியவற்றின் பால் மடி, udder
3. ஒரு கொடி,காய், சுரைக்கொடி, சுரைக்காய், bottle gourd, its creeper
4. துளை, cavity
5. மூங்கிற்குழாய், bamboo tube
6. பூண், ferrule
7. குழிவு, hollow interior
1.
உளி வாய் சுரையின் மிளிர மிண்டி - பெரும் 92
உளி(போலும்) வாயைக் கொண்ட கடப்பாரையால் குத்திப் புரட்டி
2.
செ வரை சேக்கை வருடை மான் மறி
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி - குறு 187/1,2
நேர்க்குத்தான மலையில் வாழும் வருடைமானின் குட்டி
தன் தாயின் மடியிலிருந்து பொழியும் இனிய பாலை வயிறாரக் குடித்து
3.
வெண் பூ வேளையொடு பைம் சுரை கலித்து - பதி 15/9
வெண்மையான பூக்களைக்கொண்ட வேளைக்கொடியுடன், பசுமையான சுரைக்கொடிகள் தழைத்துப் படர,
4
சுரை அம்பு மூழ்க சுருங்கி - கலி 6/3
காம்பு செருகும் துளையை உடைய அம்பு தைத்தலினால் உடல் தளர்ந்து
5.
அல்கு வன் சுரை பெய்த வல்சியர் - அகம் 113/11
மிக்க வலிய மூங்கில் குழாயில் பெய்த உணவினையுடையவர்
6.
மடை அமை திண் சுரை மா காழ் வேலொடு - அகம் 119/13
மூட்டுவாய் அமைந்த திண்ணிய பூணினையும் கரிய தண்டினையுமுடைய வேலுடன்
7.
உரல் முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை - அகம் 393/12
உரலில் பெய்து தீட்டிய உரலின் குழி நிறைந்த அரிசியை
மேல்
சுவல் - (பெ) 1. மேட்டுநிலம், elevated land
2. தோள், shoulder
3. கழுத்து, பிடரி, nape of the neck
4. குதிரையின் கழுத்து மயிர், horse's mane
1.
சுவல் விளை நெல்லின் செ அவிழ் சொன்றி - பெரும் 131
மேட்டுநிலத்தில் விளைந்த நெல்லின் சிவந்த பருக்கையாகிய சோற்றை,
2.
உறி கா ஊர்ந்த மறு படு மயிர் சுவல் - பெரும் 171
உறியினையுடைய காவடிகள் (மேலே)இருந்ததனால் தழும்பு உண்டான மயிருடைய தோளினையும்
3.
வலையோர் தந்த இரும் சுவல் வாளை - மலை 455
வலைகொண்டு மீன்பிடிப்போர் கொண்டுவந்த பெரிய கழுத்தையுடைய வாளைமீன்
4.
பொலம் படை பொலிந்த கொய் சுவல் புரவி - மலை 574
அழகிய சேணம் முதலியவற்றால் பொலிவுற்ற, கத்தரிக்கப்பட்ட பிடரிமயிரைக்கொண்ட குதிரை
மேல்
சுழல்மரம் - (பெ) திரிகை, மரத்தால் ஆனது, handmill, quern
சுழல்மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ் - அகம் 393/10
திரிகையில் தேய்த்த சுளகினால் கொழிக்கப்பெற்ற வெள்ளையான அரிசியை
மேல்
சுழி - (பெ) 1. நீர்ச்சுழல், whirlpool
2. வளைப்பு, bending
1.
நெடும் சுழி பட்ட நாவாய் போல - மது 379
நெடிய நீர்ச்சுழலில் அகப்பட்ட மரக்கலத்தைப் போல
2.
புலியொடு பொருத புண் கூர் யானை 5
நல் கோடு நயந்த அன்பு இல் கானவர்
வில் சுழி பட்ட நாம பூசல் - நற் 65/5-7
புலியுடன் போரிட்ட புண்ணுற்று வருகின்ற யானையின்
நல்ல தந்தங்களை விரும்பிய அன்பு இல்லாத கானவர்களின்
வில்லின் வளைப்புக்கு இலக்கான யானையின் அச்சந்தரும் பேரொலி
மேல்
சுள்ளி - (பெ) 1. ஒரு மரம், பூ, 1. Ceylon ebony, Disopyros ebenum; 2. Porcupine flower, Barieria Prionitis
2. சேரநாட்டிலுள்ள ஓர் ஆறு
1.எரி புரை எறுழம் சுள்ளி கூவிரம் - குறி 66
2.
சுள்ளி அம் பேரியாற்று வெண் நுரை கலங்க - அகம் 149/8
சுள்ளியாகிய பெரிய ஆற்றின் வெள்ளிய நுரை சிதற
மேல்
சுளகு - (பெ) சிறிய முறம், A kind of winnowing fan for separating chaff from grain, bran from flour
சுழல்மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ் - அகம் 393/10
திரிகையில் தேய்த்த சுளகினால் கொழிக்கப்பெற்ற வெள்ளையான அரிசியை
மேல்
சுறவம் - (பெ) சுறாமீன், பார்க்க : சுறா
திருந்து வாய் சுறவம் நீர் கான்று ஒய்யென
பெரும் தெரு உதிர்தரு பெயல் - நற் 132/2,3
திருத்தமான வாயையுடைய சுறாமீன் நீரைக் கக்குவதால் ஒய்யென்ற ஒலியுடன் விரைவாக
பெரிய தெருவில் உதிர்ந்துவிழும் மழைத்தூறலை
மேல்
சுறவு - (பெ) சுறாமீன், பார்க்க : சுறா
சுறவு கோட்டு அன்ன முள் இலை தாழை - நற் 19/2
சுறாமீனின் கூரிய கொம்பைப் போன்ற முட்களைக் கொண்ட இலையையுடைய தாழையின்
மேல்
சுறா - (பெ) பற்களைக் கொண்ட கடல்மீன், மகரமீன், shark
கோள் சுறா கிழித்த கொடு முடி நெடு வலை - அகம் 340/21
கொலைத்தொழிலையுடைய சுறாமீன் கிழித்த வளைந்த முடிகளைக் கொண்ட நீண்ட வலை
மேல்
சுனை - (பெ) மலை ஊற்று, Mountain pool or spring
குவளை அம் பைம் சுனை அசைவு விட பருகி - மலை 251
குவளை மலரால் அழகுபெற்ற புதிய நீர் கொண்ட சுனையில் களைப்பு நீங்கக் குடித்து
மேல்
|
|
|