|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
சூட்டு - 1. (வி) அணிவி, தரிக்கச்செய், put on, cause to wear as with flowers
2. (பெ) 1. வண்டிச் சக்கரத்தின் விளிம்பைச்சூழ அமைக்கப்பட்ட வளைவுமரம், Felloe of a wheel
2. பெண்களுக்குரிய நெற்றி அணி, forehead ornament for women
3. சுடப்பட்டது, that which is burnt and cooked
1.
எரி அகைந்து அன்ன ஏடு இல் தாமரை
சுரி இரும் பித்தை பொலிய சூட்டி - பொரு 159,160
நெருப்புத் தழைத்தாற் போன்ற, இதழ் இல்லாத (பொன்னால் ஆன)தாமரையை,
சுருண்ட கரிய மயிரில் பொலிவுபெற அணிவித்து
2.1
கொழும் சூட்டு அருந்திய திருந்து நிலை ஆரத்து - பெரும் 46
கொழுவிய வட்டைகள் தம் அகத்தே கொண்ட, திருத்தமான நிலையிலுள்ள ஆரங்களையுடைய
2.2
சூட்டும் கண்ணியும் மோட்டு வலையமும் - பரி 20/30
தலையில் சூடிக்கொள்ளும் சூட்டும், கண்ணியும், பெரிய வளையமுமாய்
2.3
தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் - பெரும் 282
பச்சை மீனைச் சுட்டதனோடு, (பசியால்)தளர்ந்தவிடத்தே பெறுவீர் -
மேல்
சூடு - 1. (வி) அணி, தரி, put on, wear as fowers
2. (பெ) 1. பெண்களின் காதணிகளில் பதிக்கும் மணி, gems inlaid in ear rings
2. அரிந்த நெற்கட்டு, Bundle of paddy sheaves
3. கடப்பட்டது, That which is heated, burnt, roasted;
4. சுடுதல், the act of heating
5. சூடுதல், அணிதல். the act of wearing or putting on
1.
நறும் பூ கண்ணி குறவர் சூட - பொரு 219
நறிய பூவால் புனைந்த கண்ணியைக் குறவர்கள் அணிந்துகொள்ளவும்
2.1
செம் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர - அகம் 86/27
சிவந்த மணிகள் பதித்த ஒள்ளிய குழை வளவிய காதின்கண் அசைய
2.2
அக வயல் இள நெல் அரி கால் சூடு
தொகு புனல் பரந்த என துடி பட ஒருசார் - பரி 7/27,28
வயலுக்குள் விளைந்து நின்ற இள நெற்பயிரை அறுத்து ஒருமுறை அடித்து வைத்த நெற்கட்டுகளின் மீது
மிகுந்த வெள்ளம் பெருகியது என்று துடியை முழக்கி ஒருபக்கமாய்ச் சிலர் அழைப்ப,
2.3
கடல் இறவின் சூடு தின்றும் - பட் 63
கடல் இறால்களின் (தசை)சுடப்பட்டதைத் தின்றும்,
2.4
சூடுறு நன் பொன் சுடர் இழை புனைநரும் - மது 512
சுடுதலுற்ற நல்ல பொன்னை விளங்கும் அணிகலன் செய்வாரும்,
2.5
சூடுற்ற சுடர் பூவின்
பாடு புலர்ந்த நறும் சாந்தின்
விழுமிய பெரியோர் சுற்றம் ஆக - மது 225-227
சூடுதலுற்ற ஒளிவிடும் வஞ்சியினையும், 225
பூசினபடியே புலர்ந்த நறிய சந்தனத்தையுமுடைய
சீரிய பெரியோரைச் சுற்றமாகக் கொண்டு,
மேல்
சூதர் - (பெ) நின்றுகொண்டு மன்னரைப் புகழ்ந்து பாடுவோர்,
Bards who praise kings standing in their presence; encomiasts
சூதர் வாழ்த்த மாகதர் நுவல - மது 670
நின்றேத்துவார் வாழ்த்த, இருந்தேத்துவார் புகழைச் சொல்ல
மேல்
சூது - (பெ) வஞ்சனை, deceit, cheating
சூது ஆர் குறும் தொடி சூர் அமை நுடக்கத்து - ஐங் 71/1
வஞ்சனை நிறைந்தவளும், குறிய வளையல்களை அணிந்தவளும், அஞ்சும்படியான அசைவுகளையுடையவளுமான
மேல்
சூர் - 1. (வி) அச்சுறுத்து, frighten, terrify
2. (பெ) 1.கொடுமை, cruelty
2. சூரபதுமன், A king of Asuras who was slain in battle by Lord Murugan
3. கொடுந்தெய்வம், வருத்தும் தெய்வம், Malignant deity
4. தெய்வமகளிர், Celestial maidens
5. அச்சம், fear
6. கடுப்பு, pungency
1.
சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின்
கழல் கண் கூகையொடு - திரு 48,49
சுழலும் விழியையுடைய பசிய கண்ணினையும், அச்சுறுத்தும் பார்வையினையும்
பிதுங்கிய கண்ணையுடைய கூகையோடு
2.1.
சூர்_அர_மகளிர் ஆடும் சோலை - திரு 41
கொடுமையுடைய தெய்வமகளிர் ஆடும் சோலையையுடைய,
2.2.
சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் - திரு 46
சூரபதுமனாகிய தலைவனைக் கொன்ற ஒளிவிடுகின்ற இலைத்தொழிலையுடைய நெடிய வேல்
2.3.
சூர்_உறு மஞ்ஞையின் நடுங்க - குறி 169
கொடுந்தெய்வம் ஏறின(பேய் பிடித்த) மயிலைப் போல் நடுங்கிநிற்க
2.4.
சூர் புகல் அடுக்கத்து பிரசம் காணினும் - மலை 239
தெய்வமகளிர் விரும்பும் அடுக்கடுக்காய் அமைந்த சரிவுகளில், தேனடையைக் கண்டாலும்
2.5.
சூது ஆர் குறும் தொடி சூர் அமை நுடக்கத்து - ஐங் 71/1
வஞ்சனை நிறைந்தவளும், குறிய வளையல்களை அணிந்தவளும், அஞ்சும்படியான அசைவுகளையுடையவளுமான
2.6.
சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல் - பரி 7/62
வண்டுகள் மொய்க்கும் கடுப்புடைய கள்ளினைத் தன் கையில் ஏந்தினாள், நீல நிற நெய்தல் போன்ற கண்களையுடையவள்
மேல்
சூர்ப்பு - (பெ) வளைவு, whirling
விறல் விளங்கிய விழு சூர்ப்பின்
தொடி தோள் கை துடுப்பு ஆக - மது 33,34
வெற்றி விளங்கிய சீரிதாக வளைவு பொருந்திய
வீரவளையல்கள் அணிந்த தோளையுடைய கைகளே துடுப்பாக
மேல்
சூரல் - (பெ) 1. இலந்தை மரவகை, Oblique leaved jujube, Zizyphus oenoplia;
2. பிரம்பு, Common rattan, cane, Calamus rotang
3. (காற்று) சுழற்றி அடித்தல், Whirling, as of wind;
1.
விரி மலர் ஆவிரை வேரல் சூரல் - குறி 71
விரிந்த பூக்களையுடைய ஆவிரம்பூ, சிறுமூங்கிற்பூ, சூரைப்பூ
2.
குரங்கின் தலைவன் குரு மயிர் கடுவன்
சூரல் அம் சிறு கோல் கொண்டு வியல் அறை
மாரி மொக்குள் புடைக்கும் நாட - ஐங் 275/1-3
குரங்குகளின் தலைவனான, நிறமுள்ள மயிரினைக் கொண்ட ஆண்குரங்கு
பிரம்பின் அழகிய சிறிய கோலினைப் பற்றிக்கொண்டு, அகன்ற பாறையில் தேங்கியிருக்கும்
மழைநீர்க் குமிழிகளை அடித்து விளையாடும் நாட்டினைச் சேர்ந்தவனே!
3.
சூரல் அம் கடு வளி எடுப்ப - அகம் 1/17
சுழற்றி அடிக்கும் கடுமையான காற்று மேலெழும்ப
மேல்
சூல் - (பெ) 1. மேகம் நீர் நிரம்பியிருத்தல், Wateriness of clouds
2. கருப்பம், pregnancy
3. முட்டை, egg
1.
கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை - திரு 7
கடலில் முகந்த நிறைத்த நீர் கொண்ட மேகங்கள்,
2.
எய்யா இளம் சூல் செய்யோள் அம் வயிற்று
ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல - பொரு 6,7
(பிறரால் நன்கு)அறியப்படாத இளைய கருவினையுடைய சிவந்த நிறமுடையவளின் அழகிய வயிற்றின்மேல்
மென்மையாகிய மயிர் ஒழுங்குபடக் கிடந்த தோற்றத்தைப்போல,
3.
ஞமலி தந்த மனவு சூல் உடும்பின் - பெரும் 132
நாய்(கடித்துக்) கொணர்ந்த சங்குமணி(போன்ற) முட்டைகளையுடைய உடும்பின்
மேல்
சூலி - (பெ) கருவுற்ற பெண், pregnant woman
விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்கு
கடனும் பூணாம் கை நூல் யாவாம் - குறு 218/1,2
பிளவுகளையும், குகைகளையும் உள்ள மலையின் சரிவிலுள்ள வலிமை பொருந்திய சூலையுடையவளுக்கு
பலிக்கடன் நேர்தலையும் செய்யோம்; காப்புநூலும் கட்டிக்கொள்ளோம்;
மேல்
சூழ் - 1. (வி) 1. சுற்றி மொய், hover around, swarm
2. சுற்றியிரு, encompass, surround
3. சுற்றிவா, go around
4. ஆராய், deliberate, examine
5. உருவாக்கு, make, construct
6. கருது, design, intend
2. (பெ) சுற்றுதல், surroundings
1.1.
சுறவு வாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல் - பெரும் 385
மகரவாயாகிய தலைக்கோலத்தைச் சேர்த்தின, சுரும்புகள் சுற்றி மொய்க்கும் ஒளியையுடைய நுதலினையும்,
1.2.
வாழ் முள் வேலி சூழ் மிளை படப்பை - பெரும் 126
உயிருள்ள முள்செடியாலான வேலியையும், சுற்றியிருக்கும் காவற்காட்டினையும் உடைய ஊர்ப்புறத்தையும்
1.3.
பணை தோள் குறு_மகள் பாவை தைஇயும்
பஞ்சாய் பள்ளம் சூழ்ந்தும் - குறு 276/1,2
மூங்கிலைப் போன்ற தோள்களையுடைய இளையவளுக்காகப் பாவையைப் பண்ணியதையும்
அதற்குப் பஞ்சாய்க் கோரை இருக்கும் பள்ளத்தைச் சுற்றிவந்ததையும்,
1.4.
அரும் கடி நீவாமை கூறின் நன்று என
நின்னொடு சூழ்வல் தோழி - கலி 54/17,18
அரிய கட்டுக்காவலை நான் மீறிக்கொண்டு செல்லாமல் இவனோடே மணம் கொள்ளுமாறு நீ செய்தால் நல்லது என்று
உன்னோடு கலந்துபேசி ஆராய விரும்புகிறேன்
1.5.
அலவன் ஆட்டியும் உரவு திரை உழக்கியும்
பாவை சூழ்ந்தும் பல் பொறி மருண்டும் - பட் 101,102
நண்டுகளை அலைக்கழித்தும், தொடர்ந்து வரும் அலைகளை மிதித்து விளையாடியும்,
(ஈர மணலில்)உருவங்களை உருவாக்கியும்; ஐம்பொறிகளால் நுகரும்பொருள்களை நுகர்ந்து மயங்கியும்,
1.6.
தட மென் பணை தோள் மட நல்லோள்_வயின்
பிரிய சூழ்ந்தனை ஆயின் அரியது ஒன்று
எய்தினை வாழிய நெஞ்சே - நற் 137/2-4
நீண்ட மென்மையான பருத்த தோள்களை உடைய இளமையான நம் தலைவியை விட்டுப்
பிரிந்துபோக எண்ணினால், அவளைக் காட்டிலும் அரியது ஒன்றனை
எய்தினவனாவாய், வாழ்க நெஞ்சமே
2.
ஊசி போகிய சூழ் செய் மாலையன் - அகம் 48/9
ஊசியால் கோத்துச் சுற்றுதல் அமைந்த மாலையை உடையவன்
மேல்
சூழி - (பெ) 1. யானையின் முகபடாம், Ornamental covering for the elephant's face
2. உச்சி, top portion
3. நீர்நிலை, சுனை, ponds in hill
1.
சூழி யானை சுடர் பூண் நன்னன் - அகம் 15/10
முகபடாம் அணிந்த யானையினைக் கொண்ட - ஒளிர்கின்ற அணிகலன்களைப் பூண்ட - நன்னனின்
2.
கூழையும் குறு நெறி கொண்டன முலையும்
சூழி மென் முகம் செப்புடன் எதிரின - அகம் 315/1,2
தலைமயிரும் குறுகிய நெறிப்பினைக் கொண்டன, முலையும்
உச்சியிலுள்ள மெல்லிய முகத்தால் சிமிழுடன் மாறுபட்டன
3.
அலங்கு கதிர் சுமந்த கலங்கல் சூழி
நிலை தளர்வு தொலைந்த ஒல்கு நிலை பல் கால்
பொதியில் - புறம் 375/1-3
அசைகின்ற கதிர்கள் நிரம்பிக் கலங்கிக் கிடக்கும் நீர்நிலை போல
நிலைதளர்ந்து பாழ்பட்டு வெடித்துச் சீரழிந்த தரையையும் பல கால்களையும் உடைய
மன்றத்தின்
மேல்
சூள் - 1. (வி) சபதம்செய்,ஆணையிடு, சங்கற்பம்செய், vow, take an oath, declare solemnly
2. (பெ) சபதம், ஆணை, சங்கற்பம், vow, oath, pledge
1.
அறவர் அடி தொடினும் ஆங்கு அவை சூளேல் - பரி 8/68
அறவோர்களின் அடியைத் தொட்டு மொழிந்தாலும் மொழியலாம், ஆனால் மேற்கூறியவற்றைக் குறித்துச் சூளுரைக்கவேண்டாம்;
2.
மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியை
தலையினால் தொட்டு உற்றேன் சூள் - கலி 108/55,56
மலையைப் போல் அமைந்த மார்புடைய செல்வனான திருமாலின் அடியைத்
தலையினால் தொட்டுச் சொல்கிறேன், இது உறுதி"
மேல்
சூளை - (பெ) செங்கல், பானை முதலியன சுடும் காளவாசல், kiln, furnace
திரள் பரூஉப் புகை
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை
நனம் தலை மூதூர் கலம் செய் கோவே - புறம் 228/2-4
திரண்ட மிக்க புகை
அகன்ற பெரிய ஆகாயத்தின்கண் சென்று தங்கும் காளவாசலையுடைய
அகலிய இடத்தினையுடைய பழைய ஊரில் மண்கலம் வனையும் வேட்கோவே
மேல்
சூன்று - (வி.எ) அகழ்ந்து, digging out, scooping
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம்
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை - அகம் 381/5,6
எரியினைக் கக்கிச் செல்லும் அசையும் கதிர்களையுடைய ஞாயிறு
நிழலினை அகழ்ந்து உண்ட செல்லத் தொலையாத நீண்ட இடத்திலுள்ள
- கான்று, சூன்று - இலக்கண வழக்கு - நாட்டார் உரை விளக்கம்
- காலுதல் - கக்குதல்; சூலுதல்- தோண்டுதல், அகழ்தல்
மேல்
|
|
|