<<முந்திய பக்கம்

சங்க இலக்கியம் - அருஞ்சொற்களஞ்சியம்
கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
எ - முதல் சொற்கள்
எஃகம்
எஃகு
எக்கர்
எக்கி
எக்கு
எகினம்
எண்கு
எண்மை
எந்திரம்
எந்தை
எயில்
எயிற்றி
எயிறு
எயினர்
எருக்கம்
எருக்கு
எருத்தம்
எருத்து
எருந்து
எருவை
எல்
எல்லரி
எல்லி
எல்லு
எலுவல்
எவ்வம்
எவ்வை
எழிலி
எழினி
எழு
எற்றம்
எற்று
எறும்பி
எறுழ்
எறுழம்
என்றூழ்

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
  எஃகம் - (பெ) 1. வேல், lance
         2. வாள், sword
1.
ஆய் மயிர் கவரி பாய்_மா மேல்கொண்டு
காழ் எஃகம் பிடித்து எறிந்து - பதி 90/36,37
அழகிய கவரி மயிராலாகிய தலையாட்டத்தையும் உடைய பாய்ந்து செல்லும் குதிரையின் மேலேறி
காம்பையுடைய வேலினைப் பிடித்துப் பகைவர் மீது எறிந்து
2.
திண் பிணி எஃகம் புலியுறை கழிப்ப - பதி 19/4
திண்ணிதாகப் பிணிக்கப்பட்ட வாளினை அதன் புலித்தோல் உறையிலிருந்து உருவியவாறு

 மேல்
 
  எஃகு - (பெ) 1. கூர்மை, sharpness
        2. அரிவாள், வாள், garden knife, sickle, swor
        3. வேல்முனை, the front part of a lance
        4. வேல், lance
        5. இரும்பினாலான எதேனும் ஒரு கருவி, any instrumnet mede of iron
1.
சேய் அளை பள்ளி எஃகு உறு முள்ளின்
எய் தெற இழுக்கிய கானவர் அழுகை - மலை 299,300
நெடிய முழையாகிய இருப்பிடத்தில் வசிக்கும் கூர்மை பொருந்திய முள்ளுடைய
முள்ளம்பன்றி தாக்கியதால் தவறிவிழுந்த குறவருடைய அழுகையும்
2.
எஃகு போழ்ந்து அறுத்த வாள் நிண கொழும் குறை - பதி 12/16
அரிவாளால் பிளந்து அறுக்கப்பட்ட வெண்மையான ஊனின் கொழுத்த இறைச்சித்துண்டுகளையும்
3
புரை தோல் வரைப்பின் எஃகு மீன் அவிர்வர - பதி 50/9
உயர்ந்த தோலாகிய கேடகங்களுக்கு மேல்பக்கத்தில் வேல்முனைகள் மீன்களாய் மின்னியொளிர,
4.
ஒளிறு இலைய எஃகு ஏந்தி - புறம் 26/5
மின்னுகின்ற இலைப்பகுதியையுடைய வேலினை ஏந்தி
5.
எஃகு உறு பஞ்சி துய்ப்பட்டு அன்ன - அகம் 217/2
இரும்பினாலான கருவியால் கடையப்பட்ட பஞ்சு மென்மையுற்றாற்போன்று

 மேல்
 
  எக்கர் - (பெ) 1. இடுமணல், heaped up sand as by waves
         2. மணற்குன்று, sand hill
1.
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்
நுணங்கு துகில் நுடக்கம் போல கணம்_கொள - நற் 15/1,2
முழங்குகின்ற கடலலைகள் கொழித்துக் கொணர்ந்த பெரிதான மணல்மேடு
காற்றால் ஆடும் துகிலின் வளைவுகள் போலப் பெருமளவில் உருவாகும்படி
2.
அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ மணந்தக்கால் - கலி 132/16
அடும்பங்கொடிகள் படர்ந்துள்ள அழகிய மணல்மேட்டில் இவளுடன் விளையாடி நீ ஒன்றாக இருந்தபோது

 மேல்
 
  எக்கி - (பெ) பீச்சாங்குழல், squirter
நெய்த்தோர் நிற அரக்கின் நீர் எக்கி யாவையும் - பரி 10/12
குருதிநிற அரக்கினைப்போன்ற நீரைப் பீய்ச்சியடிக்கும் குழல் யாவையும்,

 மேல்
 
  எக்கு - (வி) 1. எம்பு, உயர்த்து, stretch up
        2. குழலாம் பீய்ச்சு, squirt
1.
எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்க - பரி 16/45
காற்றால் எடுக்கப்பட்ட காட்டுமூங்கில் எம்பி நிமிர்ந்து உயர்ந்து தாக்கியதால்
2.
துணி பிணர் மருப்பின் நீர் எக்குவோரும் - பரி 11/57
அறுக்கப்பட்ட சொரசொரப்பான கொம்பில் நீரைப் பாய்ச்சி வீசுவோரும்,

 மேல்
 
  எகினம் - (பெ) எகின் : அன்னம், swan, கவரிமா, yak, நாய், dog

இதன் பொருள் ஆய்வுக்குட்பட்டது.
இதன் தன்மைகள்:

1. நீண்ட மயிரினைக் கொண்டது. வெண்மையான நிறத்தை உடையது.
நெடு மயிர் எகின தூ நிற ஏற்றை - நெடு 91
2. ஆட்டுக்கிடாயுடன் சுழன்று திரியும்
ஏழக தகரோடு எகினம் கொட்கும் - பெரும் 326
3. கூர்மையான பற்களைக் கொண்டது
கூர் எயிற்று எகினம் நடுங்கும் நன் நகர் - நற் 132/5
4. வெண்மையான மயிரினைக் கொண்டது. தம் துணையுடன் விளையாடி மகிழும்.
தூ மயிர் எகினம்
துணையொடு திளைக்கும் காப்பு உடை வரைப்பில் - அகம் 34/12,13

 மேல்
 
  எண்கு - (பெ) கரடி, bear
இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை - நற் 125/1
இரையைத் தேடித்திரியும் கரடியின் பிளந்த வாயையுடைய ஆணானது

 மேல்
 
  எண்மை - (பெ) எளிமை, Easiness, as of acquisition, of access
கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின்
எண்மை செய்தனை ஆகுவை நண்ணி - அகம் 288/8
கனிகள் முதிர்ந்த இந்தப் பக்கமலையில் நாங்கள் தனித்திருப்பதைக் காண்பதனால்
எங்களை எளிதாக அடைதற்குரியவர்கள் என்று நினைத்துவிட்டாய்
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல்
இக் குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும் - புறம் 43/18,19
தமக்குப் பிழைசெய்தவரைப் பொறுத்துப்போகும் தலைமைப்பண்பு
இந்தக் குடியில் பிறந்தவர்க்கு எளிதாக வருவதாகும்

 மேல்
 
  எந்திரம் - (பெ) 1. மதில்பொறி, Engine or other machinerry of war mounted over the battlements of a fort;
          2. கரும்பு ஆலை, sugarcane press
1.
எந்திர தகைப்பின் அம்பு உடை வாயில் - பதி 53/7
எந்திரப் பொறிகளும் எய்யப்படும் அம்பும் அமைக்கப்பட்ட கோட்டை வாயில்
2.
கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும் - ஐங் 55/1
கரும்பினைப் பிழியும் எந்திரமானது களிறு பிளிறும் குரலுக்கு எதிராக ஒலிக்கும்

 மேல்
 
  எந்தை - (பெ) 1. என் தந்தை, my father
         2. என் தலைவன், my master, my lord
1.
எந்தையும் நுந்தையும் எம் முறை கேளிர் - குறு 40/2
என் தந்தையும் உன் தந்தையும் எந்த வழியில் உறவினர்?
2.
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ - குறு 176/5
எனக்குப் பற்றுக்கோடாக இருக்கும் என் காதலனாகிய தலைவன் எங்கு உள்ளானோ?
இடுக்கண் இரியல் போக உடைய
கொடுத்தோன் எந்தை கொடை மேம் தோன்றல் - புறம் 388/6.7
பசித்துன்பம் பறந்தோடிப்போக தான் உடைய பொருள்களைக்
கொடுத்தான், எங்கள் தலைவன், கொடையால் மேம்பட்ட தோன்றல்.

 மேல்
 
  எயில் - (பெ) மதில், fortress, wall, fortification
நெடு மதில் நிலை ஞாயில்
அம்பு உடை ஆர் எயில் உள் அழித்து - பதி 20/18,19
நெடிய மதில்களையும், நிலைபெற்ற கோட்டை வாயிலையும்,
அம்புகளையுடைய கடத்தற்கரிய அகமதிலையுமுடைய உள்புறத்தை அழித்து

மேல்
 
  எயிற்றி - (பெ) எயினன் என்பதன் பெண்பால், female in the desert track tribe
எயிற்றியர் அட்ட இன் புளி வெம் சோறு - சிறு 175
எயிற்றியர் ஆக்கிய இனிய புளிங்கறியிட்ட வெண்மையான சோற்றை,

 மேல்
 
  எயிறு - (பெ) 1. பல், tooth
         2. ஈறு, gums
         3. யானை, பன்றி இவற்றின் தந்தம், Tusk of the elephant, of the wild hog
1.
இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர் வாய் - ஐங் 185/2
ஒளிவிடும் முத்தினைப் போன்றிருக்கும் பற்கள் பொருந்திய சிவந்த வாயினையும்
2.
வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர் - குறு 267/4
வெண்மையான ஈறுகளில் ஊறிய குற்றமற்ற இனிய நீரையும்
3.
பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து - நெடு 117
போரிட்டு வீழ்ந்த யானையின், தானாக வீழ்ந்த கொம்புகளின் இரண்டுபுறங்களையும் சீவி,

 மேல்
 
  எயினர் - (பெ) பாலைநில மக்கள், tribe of the desert tract
இவர்கள் வில்லினை நம்பி வாழும் வேட்டுவர்கள்
கொடு வில் எயினர் பகழி மாய்க்கும் - குறு 12/3
வளைந்த வில்லையுடைய எயினர் தம் அம்புகளைத் தீட்டும்

 மேல்
 
  எருக்கம் - (பெ) எருக்கு, ஒரு வகைச் செடி, Calotropis gigantea
குவி முகிழ் எருக்கம் கண்ணியும் சூடுப - குறு 17/2
குவிந்த அரும்பினையுடைய எருக்கம்பூ மாலையையும் தலையில் சூடிக்கொள்வர்;

	

 மேல்
 
  எருக்கு - 1. (வி) 1. வெட்டு, cut, hew
          2. அழி, destroy
          3. கொல், kill
          4. அடி, strike
       2. (பெ) எருக்கம் பார்க்க - எருக்கம்
1.1.
கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில்
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி
வேட்டு புழை அருப்பம் மாட்டி - முல் 24,25,26
காட்டாறு சூழ்ந்த அகன்ற நெடிய காட்டினில்,
நெடுந்தொலையும் மணக்கும் பிடவ மலரோடு (ஏனைப்)பசிய தூறுகளையும் வெட்டி,		25
வேட்டுவரின் சிறு வாயில்களையுடைய அரண்களை அழித்து
1.2.
நாடு கெட எருக்கி நன் கலம் தரூஉம் நின் - பதி 83/7
பகைவரின் நாடுகள் கெடும்படி அழித்து, திறையாக நல்ல அணிகலன்களைக் கொண்டுவருகின்ற உன்
1.3
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின் - அகம் 57/16
யானைகள் மடியக் கொன்ற கல்லென்ற ஒலியையுடைய போரில்
1.4
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் - புறம் 237/10
மாறி மாறி வெம்மையாகத் தம் மார்பினில் அடித்துக்கொண்ட மகளிர்
2.
குவி இணர் எருக்கின் ததர் பூ கண்ணி - அகம் 301/11
குவிந்த கொத்துக்களையுடைய எருக்கினது நெருங்கிய பூக்களால் ஆன தலைமாலை

 மேல்
 
  எருத்தம் - (பெ) கழுத்து, பிடரி, neck, nape
தாழ் பெரும் தட கை உயர்த்த யானை	
எருத்தம் ஏறிய திரு கிளர் செல்வனும் - திரு 158,159
(நிலம் வரை)தாழ்ந்த பெரிய வளைவினையுடைய கையினையும் உடைய புகழ்பெற்ற யானையின்
புறக்கழுத்தில் ஏறிய திருமகளின் விளக்கமுடைய இந்திரனும்
எருத்தம் தாழ்ந்த விரவு பூ தெரியல் - மது 718
கழுத்திலிருந்து தாழ்ந்த (பல்விதமாய்)கலந்த பூக்களைத் தெரிவுசெய்து கட்டிய மாலையினையும்,

 மேல்
 
  எருத்து - (பெ) கழுத்து, பார்க்க - எருத்தம்
மயில் எருத்து உறழ் அணி மணி நிலத்து பிறழ - கலி 103/59
மயில் கழுத்தைப் போன்ற நிறத்தையுடைய அணிகலன்கள், பவழம் போன்ற சிவந்த நிலத்தில் மாறுபட்டுக் கிடக்க,

 மேல்
 
  எருந்து - (பெ) கிளிஞ்சில், Bivalve sheel fish, as mussels, oysters;
நகாஅர் அன்ன நளி நீர் முத்தம்
வாள் வாய் எருந்தின் வயிற்று அகத்து அடக்கி - சிறு 58
சிரிப்பு(ப் பல்) போன்ற செறிந்த நீர்மையுடைய முத்தினை,
வாளின் வாய் போலும் வாயையுடைய கிளிஞ்சிலின் வயிற்றுக்குள் இட்டுப்பொதிந்து,

 மேல்
 
  எருவை - (பெ) 1. பஞ்சாய்க்கோரை, Species of Cyperus.
          2. கொறுக்கச்சி, European bamboo reed
          3. தலைவெளுத்து உடல்சிவந்திருக்கும் பருந்து, a kite whose head is white and whose body is brown;
1.
கேழல் உழுது என கிளர்ந்த எருவை
விளைந்த செறுவில் தோன்றும் நாடன் - ஐங் 269/1,2
கிழங்குகளை எடுக்கக் காட்டுப்பன்றி மண்ணைத் தோண்டிவிட அதில் செழித்து வளர்ந்த கோரைப்புல்
நன்றாக விளைந்த நெல்வயலைப் போலத் தோன்றும் நாட்டினையுடையவன்,
2.
எருவை மென் கோல் கொண்டனிர் கழி-மின் - மலை 224
கொறுக்கச்சியின் மெல்லிய கோலைப் பிடித்துக்கொண்டே கடந்துசெல்லுங்கள்
3.
ஊன் பதித்து அன்ன வெருவரு செஞ்செவி
எருவை சேவல் கரிபு சிறை தீய - அகம் 51/5,6
மாமிசத்துண்டைப் பதித்து வைத்ததைப் போன்ற அச்சம்தரும் சிவந்த செவியை உடைய
ஆண் பருந்தின் சிறகுகள் கரிந்து தீய்ந்துபோக,
 
	 	

 மேல்
 
  எல் - (பெ) 1. ஞாயிறு, சூரியன், sun
        2. பகற்பொழுது, daytime
	   3. இரவு, night 
        4. ஒளி, ஒளிர்வு, lustre, splendour
        5. திடம், வலிமை, Vehemence; strength
1.
முள் தாள் தாமரை துஞ்சி வைகறை
கள் கமழ் நெய்தல் ஊதி எல் பட
கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர்
அம் சிறை வண்டின் அரி கணம் ஒலிக்கும் - திரு 73 - 76
முள்ளிருக்கும் தண்டையுடைய தாமரைப் பூவில் துயில்கொண்டு, விடியற்காலத்தே,
தேன் நாறுகின்ற நெய்தல் பூவை ஊதி, ஞாயிறு வெளிப்பட
கண்ணைப்போன்று விரிந்த விருப்பம் மருவின சுனைப் பூக்களில்,					75
அழகிய சிறகையுடைய வண்டின் அழகிய திரள் ஆரவாரிக்கும் -
2.
பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி
எல் இடை கழியுநர்க்கு ஏமம் ஆக - பெரும் 65,66
பல எருதுகளையுடைய உப்புவாணிகர் ஊர்களுக்குச் செல்லுகின்ற நெடிய வழியில்
பகற்பொழுதில் வழிப்போவார்க்குப் பாதுகாவலாக இருக்க,
3.
மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு
விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய
எல்லை போகிய பொழுதின் எல் உற
பனி கால்கொண்ட பையுள் யாமத்து - நற் 241/7-10
மேகங்கள் நீங்கிச் செல்லுகின்ற விசும்பில் மாறிமாறி ஞாயிறு
விழித்து இமைப்பது போல தோன்றித்தோன்றி மறைய,
பகற்பொழுது சென்ற மாலைப்பொழுதில் இரவு வந்துசேர,
பனி பெய்யத்தொடங்கிய துன்பத்தைத் தரும் நடுயாமத்தில்,
4.
வணங்கு இறை பணை தோள் எல் வளை மகளிர் - குறு 364/5
வளைந்து இறங்கும், மூங்கிலைப் போன்ற தோள்களைக் கொண்ட ஒளியுடைய வளையணிந்த மகளிர்
5.
எல் வளி அலைக்கும் இருள் கூர் மாலை - அகம் 77/14
வலிய பெருங் காற்று அலைக்கும் இருள் மிக்க மாலை

 மேல்
 
  எல்லரி - (பெ) ஒரு வகைப் பறை, a kind of drum
கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி
நொடி தரு பாணிய பதலையும் பிறவும் - மலை 10,11
அடிக்குரல் ஓசையில் (தாளத்துடன்)ஒத்து ஒலிக்கும் வலிமையான விளிம்புப் பகுதியையுடைய சல்லியும்,	10
காலவரை காட்டுவதற்கு ஒலிக்கும் ஒருகண் பறையும், இன்னும் பிற இசைக்கருவிகளும்

	

 மேல்
 
  எல்லி - (பெ) 1. பகல், daytime
         2. இரவு, night
1.
வறன் இல் புலைத்தி எல்லி தோய்த்த
புகா புகர் கொண்ட புன் பூ கலிங்கமொடு - நற் 90/3,4
வறுமை இல்லாத சலவைப்பெண், பகலில் வெளுத்த
சோற்றின் பழுப்புநிறக் கஞ்சி இட்ட சிறிய பூக்களைக் கொண்ட ஆடையுடன்
2.
நல்கூர் சீறூர் எல்லி தங்கி - அகம் 87/4
வறுமைப்பட்ட சிறிய ஊரில் இரவில் தங்கி

 மேல்
 
  எல்லு - (பெ) பகற்பொழுது, daytime
எல்லு பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு - அகம் 264/5
பகற்பொழுதில் மழையில் வருந்திய கூட்டமான பசுக்கூட்டத்துடன்

 மேல்
 
  எலுவல் - (பெ) தோழன், male companion
யாரை எலுவ யாரே நீ எமக்கு - நற் 395/1
யார் நீ நண்பனே? யார்தான் நீ எங்களுக்கு?

 மேல்
 
  எவ்வம் - (பெ) துயரம், துன்பம், suffering, affliction, distress
எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம் - நற் 273/2
துன்பம் மிகுந்து மயங்கிய துயரம்

 மேல்
 
  எவ்வை - (பெ) எம் தங்கை, our younger sister
தண் துறை ஊரனை எவ்வை எம்_வயின்
வருதல் வேண்டுதும் என்ப - ஐங் 88/2,3
தண்ணிய நீர்த்துறையுள்ள ஊரைச் சேர்ந்தவனை, எமது தங்கை என்னிடத்திற்கு
வரவேண்டும் என்று கூறுகிறாள்;

 மேல்
 
  எழிலி - (பெ) மழைபெய்யும்/பெய்த நிலையிலுள்ள மேகம், cloud ready to pour down, or just after rain
ஆர் குரல் எழிலி கார் தொடங்கின்றே - ஐங் 455/2
பெருத்த முழக்கத்தையுடைய மேகம் கார்ப்பருவத்தைத் தொடங்கிவைத்தது.
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிர காலையும் - நற் 5/5,6
பெருமழையைப் பொழிந்த தொழிலையுடைய மேகங்கள்
தெற்குப்பக்கமாய் எழுந்து முழங்கும் முன்பனிக்காலத்திலும்

 மேல்
 
  எழினி - (பெ) 1. கடையெழு வள்ளல்களுளொருவன், Name of a chief noted for liberality
         2. திரை, curtain
1.
நுகம் பட கடக்கும் பல் வேல் எழினி
முனை ஆன் பெரு நிரை போல - குறு 80/5,6
நன்முறையில் வெல்லும் பெரிய வேற்படையை உடைய எழினி என்பானின்
போரில் கைப்பற்றப்பட்ட பெரிய பசுக்களின் கூட்டம்போல
2.
எழினி வாங்கிய ஈர் அறை பள்ளியுள் - முல் 64
திரைச்சீலையை வளைத்த இரு அறைகள்(கொண்ட) படுக்கைக்கண்ணே சென்று

 மேல்
 
  எழு - 1. (வி) 1. நிற்கும் நிலைக்கு வருதல், rise
         2. உயர், மேலெழும்பு, rise up
     2. (பெ) கணையமரம், கதவை உள்வாயிற்படியில் தடுக்கும் மரம், Cross-bar of wood set to a door;
     3. (பெ.அ) ஏழு என்ற எண்ணின் பெயரடை, adjectival form of the number seven
1.1.
எழு எனின் அவளும் ஒல்லாள் - நற் 159/8
எழுந்து வருக என்று அழைத்தால் அவளும் அதற்கு உடன்படமாட்டாள்;
1.2
வென்று எழு கொடியின் தோன்றும் - மலை 582
வென்று உயரும் கொடியைப்போலத் தோன்றும்
2.
எழு உறழ் திணி தோள் இயல் தேர் குட்டுவன் - சிறு 49
கணையமரத்தைப் போன்ற திணிந்த தோளினையும், கடக்கின்ற தேரினையும் உடைய குட்டுவன்
3.
கழுநீர் கொண்ட எழு நாள் அந்தி - மது 427
தீர்த்த நீரில் (திருவிழாவிற்குக் கால்)கொண்ட ஏழாம்நாள் அந்தியில்,

 மேல்
 
  எற்றம் - (பெ) மனத்துணிவு, determination
ஓஒ கடலே எற்றம் இலாட்டி என் ஏமுற்றாள் - கலி 144/63
ஓ! கடலே! மனத்தில் துணிவில்லாத இவள் எதற்காகப் பித்துப்பிடித்தவளானாள்

 மேல்
 
  எற்று - 1. (வி) 1. (காலால்) வேகமாக முன்னே தள்ளு, மோது, kick, dash against
        2. பரிவுகாட்டு, be compassionate
        3. நினை, think of
      2. எத்தன்மையது, of what sort 
1.1.
வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ இதை புடையூ
கூம்பு முதல் முருங்க எற்றி - மது 376,377
இறுகும் பிணிப்பினையுடைய வலிமையான (பாய் கட்டின)கயிற்றை அறுத்துப், பாயையும் பீறிப்
பாய்மரம் அடியில் முறியும்படி மோதித்தள்ளி,
1.2.
தம்மோன் கொடுமை நம்_வயின் எற்றி
நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது - நற் 88/6,7
தனது தலைவன் நமக்குச் செய்த கொடுமைக்காக நம்மேல் பரிவுகாட்டி
நம்மீது அன்பு மிகவும் உடையதால், தன் வருத்தத்தைத் தாங்கிக்கொள்ளமாட்டாமல்
1.3.
கானல் அம் சேர்ப்பன் கொடுமை எற்றி
ஆனா துயரமொடு வருந்தி - குறு 145/2,3
கடற்கரைச் சோலையையுடைய தலைவனது கொடுமையை எண்ணி
அடங்காத் துயரமொடு வருந்தி
2.
வார் கோல் எல் வளை உடைய வாங்கி
முயங்கு என கலுழ்ந்த இ ஊர்
எற்று ஆவது-கொல் யாம் மற்றொன்று செயினே - நற் 239/10-12
நீண்ட திரட்சியான ஒளிவிடும் வளைகள் உடைந்துபோகுமாறு இறுக வளைத்துத்
தழுவினாய் என்று கண்ணீர்விட்ட இந்த ஊர் மக்கள்
எத்தன்மையர் ஆவார்கள்? நாம் உடன்போக்கு மேற்கொள்ளுதலான வேறொன்றைச் செய்துவிட்டால்.

 மேல்
 
  எறும்பி - (பெ) எறும்பு, ant
எறும்பி அளையின் குறும் பல் சுனைய - குறு 12/1
எறும்பின் வளைகளைப் போன்ற சிறிய பல சுனைகளையுடைய

 மேல்
 
  எறுழ் - (பெ) வலிமை, strength, prowess
படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் - பெரும் 60
தழை விரவின மாலையையும், பருத்த அழகினையும், வலிமையினையும் உடைய இறுகின தோளினையும்

 மேல்
 
  எறுழம் - (பெ) செந்நிறப்பூவுடைய குறிஞ்சிநிலத்து மரவகை, A hill tree with red flowers;
              Paper flower climber, calycopteris floribunda 
எரி புரை எறுழம் சுள்ளி கூவிரம் - குறி 66
நெருப்பை ஒத்த எறுழம்பூ, மராமரப்பூ, கூவிரப்பூ

	

 மேல்
 
  என்றூழ் - (பெ) 1. சூரியன், sun
          2. வெயில், sunshine
          3. வெம்மை, heat
          4. கோடை, summer  
1.
சுடரும்
என்றூழ் மா மலை மறையும் - குறு 215/1,2
ஒளிவிடும்
ஞாயிறும் பெரிய மலையில் சென்று மறையும்
2.
என்றூழ் நின்ற புன் தலை வைப்பில் - அகம் 21/14
வெயில் நிலைபெற்ற புல்லிய இடத்தையுடைய ஊர்களில்
3.
உள் இல்
என்றூழ் வியன் குளம் நிறைய வீசி - அகம் 42/9
உள்ளே நீர் அற்ற
வெப்பமுடைய அகன்ற குளம் நிறையும்படி மிகுதியாகக் கொட்டி
4.
என்றூழ் நீடிய குன்றத்து கவாஅன் - நற் 43/2
கோடை நீடிய மலையின் உச்சிச் சரிவில்

 மேல்