<<முந்திய பக்கம்

சங்க இலக்கியம் - அருஞ்சொற்களஞ்சியம்
கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
ஏ - முதல் சொற்கள்

ஏக்கறு
ஏத்து
ஏதப்பாடு
ஏதம்
ஏதில்
ஏதிலன்
ஏந்தல்
ஏமம்
ஏமா
ஏமார்
ஏமுறு
ஏய்
ஏர்
ஏழகம்
ஏழில்
ஏற்றை
ஏறு
ஏனம்
ஏனல்

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
   - (பெ) 1. அம்பு, arrow
       2. பெருக்கம், abundance
       3. செருக்கு,இறுமாப்பு, pride, arrogance
1.
 உறு மஞ்ஞையின் நடுங்கி இழை நெகிழ்ந்து - முல் 84
அம்பு தைத்த மயில் போல நடுங்கி, அணிகலன்கள் நெகிழ்ந்து,
2.
கதிர் கதம் கற்ற கல் நெறி இடை - அகம் 177/8
ஞாயிற்றின் கதிர் சினத்தைப் பயின்ற பெருக்கமான கற்கள் பொருந்திய சுரநெறியில்
3.
இம்மென் பேர் அலர் இவ்வூர் நம்வயின்
செய்வோர் சொல் வாட - அகம் 323/1,2
’இம்ம்--என்று எழும் பெரிய பழிச்சொற்களை இவ்வூரில் நம்மேல்
செய்வோரின் செருக்குற்ற சொல் அழிய

 மேல்
 
  ஏக்கழுத்தம் - (பெ) இறுமாப்பு, pride, arrogance
கை புதைஇயவளை
ஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை மென் தோள்
போக்கி சிறைப்பிடித்தாள் - பரி 7/54-56
கைகளால் கண்களை மூடிக்கொண்டவளை
வெற்றியால் இறுமாந்து தன்னுடைய பொன் சரடால், கரும்பு வரையப்பட்ட அணை போன்ற மென்மையான தோள்களைக்
கட்டிச் சிறைப்பிடித்தாள்;

 மேல்
 
  ஏக்கறு - (வி) 1. ஏங்கி விரும்பு, desire with a longing
        2. நலிவடை, suffer from weariness, languish;
1.
மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து - சிறு 157
திங்கள் ஏக்கமுற்று விரும்புகின்ற களங்கமற்ற அமைதியினையுடைய முகத்தினையும்
2.
கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி
நறும் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து
வறும் கை காட்டிய வாய் அல் கனவின்
ஏற்று ஏக்கற்ற உலமரல் - அகம் 39/21-24
பக்கம் உயர்ந்த புருவங்களுடன் திரண்டு குறுகிய நெற்றியை நீவிவிட்டு,
மணமுள்ள பக்கக் கூந்தலைக் கோதிவிட்ட நல்ல நேரத்தில்
வெறுங்கையாய் ஆக்கிய அந்தப் பொய்க் கனவினின்றும்
கண்விழித்து உள்ளம் நலிவடைந்த துயரத்தை

 மேல்
 
  ஏகல் - (பெ) 1. போதல், going
        2. உயர்ச்சி, height
1.
அத்தம் நண்ணிய அம் குடி சீறூர்
சேர்ந்தனர்-கொல்லோ தாமே யாம் தமக்கு
ஒல்லேம் என்ற தப்பற்கு
சொல்லாது ஏகல் வல்லுவோரே - குறு 79/5-8
பயணவழிகள் பொருந்திய அழகிய குடிகளையுடைய சிறிய ஊரில்
தாம் தங்கிவிட்டாரோ? நாம் அவர் (பிரிந்து செல்வதாகக்)கூறுவதைப்
பொறுத்துக்கொள்ளமாட்டோம் என்று கூறிய தவறினால்
நம்மிடம் சொல்லாமல் போவதைச் செய்யக்கூடியவர்
2.
காந்தள் அம் கொழு முகை காவல் செல்லாது
வண்டு வாய் திறக்கும் பொழுதில் பண்டும்
தாம் அறி செம்மை சான்றோர் கண்ட
கடன் அறி மாக்கள் போல இடன் விட்டு
இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன் - குறு 265/1-5
காந்தளின் அழகிய கொழுவிய மொட்டை, தானாக மலரட்டும் என்று காத்திருக்காமல்
வண்டு அதன் வாயைத் திறக்கும் போது, முன்பும்
தாம் அறிந்த செம்மையுள்ளம் கொண்ட சான்றோரைக் கண்ட
கடமைகளை அறிந்த மக்கள் போல, (காந்தள்) இடம் கொடுத்து,
இதழ்களைக் கட்டவிழ்க்கும் உயர்ந்த மலைகளையுடைய தலைவன்
- ஏகல் - உயர்ச்சி - பொ.வே.சோ உரை விளக்கம்

 மேல்
 
  ஏகு - (வி) செல், போ, go
மழவர் பெருமகன் மா வள் ஓரி
கைவளம் இயைவது ஆயினும்
ஐது ஏகு அம்ம இயைந்து செய் பொருளே - நற் 52/9-11
வீரர்களின் தலைவனான, மிகுந்த வள்ளண்மையுள்ள ஓரியின்
கையிற்கிடைக்கும் பெருஞ்செல்வம் கிடைக்கப்பெறினும்
அது மிகவும் எளிமையானதாகும், உன்னுடன் கூடிப்பெறும் அப் பொருள், நீயே செல்வாய் -

மெல்லென் சேவடி மெலிய ஏக
வல்லுநள்-கொல்லோ தானே - அகம் 89/18,19
மெத்தென்றிருக்கும் சிவந்த அடி வருந்தச் செல்வதற்கு
வன்மையுடையள் ஆவாளோ?

 மேல்
 
  ஏங்கு - (வி) 1. விரும்பிய ஒன்றிற்க்கா வாடு, pine, languish
        2. குழல் போல் ஒலி, அகவு, sound as a lute, scream as a peacock
1.
கண் இனைபு கலுழ்பு ஏங்கினள்
தோள் ஞெகிழ்பு வளை நெகிழ்ந்தனள் - கலி 147/2,6
கண்கள் வருந்தக் கலங்கி ஏங்கி அழுதாள்,
தோள்கள் மெலிந்து வளைகளும் நெகிழப்பெற்றாள்
2.
ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில்
ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ - குறி 219,220
ஊதுகின்ற கொம்பு(போன்ற) ஓசையையுடைய வளைந்த வாயையுடைய அன்றில் பறவை
உயர்ந்த பெரிய பனையின்கண் உள்ள உள்மடலில் (இருந்து தம் பெடையை)அழைக்க

உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின்
இம்மென் பெரும் களத்து இயவர் ஊதும்
ஆம்பல் அம் குழலின் ஏங்கி
கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே - நற் 113/9-12
உதியன் என்பான் சினந்து சென்ற ஒலிக்கின்ற இடத்தையுடைய போர்க்களத்தில்
இம்மென்று விரைவாக பெருங்களத்துக் குழலூதுவோர் ஊதுகின்ற
ஆம்பல் குழலின் இசையைப் போல் ஏங்கி
கலங்கித் துன்பத்தை அடைவோளின் தனிமை வருத்தத்தைக் கொண்ட பார்வை

மின்னு வர
வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ அதன்_எதிர்
கான மஞ்ஞை கடிய ஏங்கும் - குறு 194/1-3
(இந்த நெஞ்சின் நிலையை)என்னவென்று சொல்வது தோழி? மின்னல்வர
முகில்கள் எழுந்து ஒலிக்கும், அதுமட்டுமோ? அதற்கு எதிராக
காட்டு மயில்கள் விரைவாக அகவும்

 மேல்
 
  ஏசு - (வி) இகழ், reproach
நல் வழி கொடுத்த நாண் உடை மறவர்
செல்லா நல் இசை பெயரொடு நட்ட
கல் ஏசு கவலை எண்ணு மிக பலவே - மலை 387-389
வெற்றியாகிய)நல்ல தீர்வைக் கொடுத்த (இறந்துபட்ட)மான உணர்வு உள்ள வீரர்களின்
அழியாத நல்ல புகழையுடைய பெயர்களோடு நட்ட
(நடு)கற்கள் புறமுதுகிட்டுப்போனவரை இகழ்கின்ற கிளைத்துச்செல்லும் வழிகள் எண்ணிக்கையில் மிகப் பலவாம்;

செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறிமார்
கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த
கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை - மலை 394-396
செல்கின்ற இடத்தின் பெயரை உலகறியும் பொருட்டு
கல்லை அகழ்ந்து அதன்கண் எழுதப்பட்டதும், நல்ல அடிமரத்தையுடைய மராமரத்தின் நிழலிலே
கடவுள்(படிமங்கள்) ஓங்கிநிற்பதால் அது பெற்றிராத ஏனைய காடுகளை இகழ்கின்ற கிளைவழிகளில்

 மேல்
 
  ஏணி - (பெ) 1. உயரே ஏறுவதற்குப்படிகளூடன் கூடிய அமைப்பு, ladder
        2. எல்லை, boundary
1.
மெல் நூல்_ஏணி பன் மாண் சுற்றினர் - மது 640
மெல்லிய நூலாற் செய்த ஏணியை (இடுப்பைச்சுற்றிப்)பல முறை சுற்றிய சுற்றினையுடையவராய்
2.
முழங்கு கடல் ஏணி மலர் தலை உலகமொடு - மது 199
முழங்குகின்ற கடலை எல்லையாகவுடைய அகன்ற இடத்தையுடைய உலகத்தாரொடு

 மேல்
 
  ஏணிப்படுகால் - (பெ) அடுக்கடுக்காய் அமைந்த ஒற் இடையணி,
                 Woman's jewelled girdle, in multiple layers
புனல் மண்டி ஆடல் புரிவான் சனம் மண்டி
தாளித நொய் நூல் சரணத்தர் மேகலை
ஏணிப்படுகால் இறுகிறுக தாள் இடீஇ - பரி 10/9-11
புதுப்புனலில் திளைத்து ஆடல்புரிவதற்கு மக்கள் கூட்டம் நெருக்கியடித்துக்கொண்டு திரண்டெழ,
காலுக்கு இதமான மென்மையான நூலினாலான மிதியடிகளை அணிந்தவராய், மேகலையாகிய
ஏணிப்படுகால் ஆகிய இடையணியை மிகவும் இறுக்கமாகக் கட்டிப் பூட்டிக்கொண்டு
- மேகலை ஏணிப்படுகால் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை, ஏணியினது படி போல ஒன்றற்கொன்று
வடம் உயர்தலான் இரு கோவை முதல் முப்பத்திரு கோவை ஈறாக அமைந்த பல்வேறு மேகலையையும்
ஏணிப்படுகால் என்றார். ஏணிப்படிகால் என்றும் வழங்குவதுண்டு.
- பொ.வே.சோ உரை விளக்கம்

	

 மேல்
 
  ஏத்து - (வி) புகழ்,துதி, வாழ்த்து, praise, extol, bless
யாண்டோரும் தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய் - கலி 100/6
எந்நாட்டவரும் தொழுது போற்றும் முழங்கும் ஒலியையுடைய முரசையுடையவனே!

 மேல்
 
  ஏதப்பாடு - (பெ) ஏதம் : பார்க்க ஏதம்
ஏதப்பாடு எண்ணி புரிசை வியல் உள்ளோர் - கலி 81/25
(கள்வரால் வரும்)கேடுகளை எண்ணி, மதில் அகத்தே உள்ள ஊரின் காவலர்

 மேல்
 
  ஏதம் - (பெ) 1. குற்றம், பிழை, fault, blemish
        2. துன்பம், suffering, affliction
1.
நின்னொடு சொல்லின் ஏதமோ இல்லை-மன்
ஏதம் அன்று எல்லை வருவான் விடு - கலி 113/12,13
உன்னோடு பேசிக்கொண்டிருப்பதில் பிழையேதும் இல்லை அன்றோ?"
"பிழையொன்றும் இல்லை, நாளை வருகிறேன் விடு!"
2.
ஆதிமந்தி போல
ஏதம் சொல்லி பேது பெரிது உறலே - அகம் 236/20,21
ஆதிமந்தியைப் போல
துன்பத்தைச் சொல்லிப் பெரிதும் மயங்குதல்

 மேல்
 
  ஏதில் - (பெ.அ) 1. அந்நியமான, strange
         2. சற்றும் தொடர்பற்ற, not connected with
         3. பகையுள்ள, inimical
1.
ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப - குறு 89/2
அயலோரான அறிவிலிகள் குறைகூறுதலையும் செய்வர்
2.
ஏதில் வேலன் கோதை துயல்வரத்
தூங்குமாயின் அதூஉம் நாணுவல் - அகம் 292/5,6
இதனுடன் சற்றும் தொடர்பற்ற வேலன் தன் மார்பில் மாலை அசைந்திட
வெறி ஆடுவானாயின் அதனையும் நாணி நிற்பேன்.
3.
ஏதில் மன்னர் ஊர் கொள - அகம் 346/24
பகை மன்னரது ஊரினைப் பற்றிக்கொள்ள

 மேல்
 
  ஏதிலன் - (பெ) 1. அந்நியர், அயலார், stranger
          2. சற்றும் தொடர்பற்றவர், one who is not involved in the matter
          3. பகைவன், enemy
1.
ஏதிலார் கூறும் சொல் பொருள் ஆக மதித்தாயோ - கலி 14/13
ஊரிலுள்ள அயலார் கூறும் சொற்களை ஒரு பொருட்டாக மதித்தாயோ?
2.
ஏதிலார் தந்த பூ கொள்வாய் - கலி 111/14
யாரோ ஒருவர் கொடுத்த பூவைக் கையில் கொண்டிருக்கிறாய்,
3.
ஏதிலான் படை போல இறுத்தந்தது இளவேனில் - கலி 27/8
வேற்றுநாட்டவன் படைகள் கொஞ்சங்கொஞ்சமாய் ஆக்கிரமிப்பது போல் வந்து தங்கியது இளவேனில்

 மேல்
 
  ஏதிலாள் - (பெ) 1. அன்னியப்பெண், Strange, unfamiliar woman
                2. சக்களத்தி, cowife
1.
முதிர் பூண் முலை பொருத ஏதிலாள் முச்சி
உதிர் துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப
எதிர் வளி நின்றாய் நீ செல் - கலி 81/30-32
பூண்களையுடைய முதிர்ந்த முலைகளால் உன் மார்போடு பொருத பரத்தையின் கொண்டைமுடியிலிருந்து
உதிர்ந்த பூந்தாதுக்கள் சிந்திக்கிடக்கும் உன் ஆடை ஓசையெழுப்ப,
எதிர்காற்றில் வந்து நிற்பவனே! நீ போகலாம்!"
2.
காதலான் மார்பின் கமழ் தார் புனல் வாங்கி
ஏதிலாள் கூந்தலிடை கண்டு மற்று அது - பரி 24/34,35
ஒரு காதற்பரத்தையின் காதலன் தன் மார்பில் கிடந்த மணங்கமழும் மாலையைக் கழற்றி நீரில் விட, அதனை நீர்
இழுத்துச் செல்ல,
அவனது இல்பரத்தை அதனை எடுத்துச் சூடிக்கொள்ள, ஓர் அயலாளின் கூந்தலில் தன் காதலன் மாலையைக் கண்டு,

 மேல்
 
  ஏதிலாளன் - (பெ) அன்னியன், stranger
ஏதிலாளன் கவலை கவற்ற - நற் 216/8
அயலான் ஒருவன் ஏற்படுத்திய கவலை உள்ளத்தை வருத்த,

ஓர் ஊர் வாழினும் சேரி வாரார்
சேரி வரினும் ஆர முயங்கார்
ஏதிலாளர் சுடலை போல
காணா கழிப-மன்னே - குறு 231/1-4
ஒரே ஊரில் இருந்தாலும் நம் தெருப்பக்கம் வாரார்;
அப்படியே நம் தெருப்பக்கம் வந்தாலும் நம்மை ஆரத்தழுவுவாரில்லை;
யாரோ ஒருவருடைய சுடுகாட்டைக் கண்டு செல்வார் போல
கண்டும் காணாததுபோலச் செல்கிறார்.

 மேல்
 
  ஏதிலான் - (பெ) அன்னியன், stranger, வேறுநாட்டவன், person of another country
பெய் போது அறியா தன் கூழையுள் ஏதிலான்
கை புனை கண்ணி முடித்தாள் என்று யாய் கேட்பின்
செய்வது இல ஆகுமோ மற்று - கலி 107/14-16
"மலர்சூடி அறியாத இவளின் கூந்தலுக்குள், யாரோ ஒருவன்
கையால் செய்த மாலையை முடிந்துகொண்டாள் என்று தாய் கேட்டால்
நாம் ஏதாவது செய்யவேண்டாமோ?"

பேதையோன் வினை வாங்க பீடு இலா அரசன் நாட்டு
ஏதிலான் படை போல இறுத்தந்தது இளவேனில் - கலி 27/7,8
அறிவற்ற அமைச்சன் ஆலோசனை கூற ஆளுகின்ற, தன் பெருமை குன்றிய அரசனின் நாட்டுக்குள்
வேற்றுநாட்டவன் படைகள் கொஞ்சங்கொஞ்சமாய் ஆக்கிரமிப்பது போல் வந்து தங்கியது இளவேனில்;

 மேல்
 
  ஏது - (பெ) 1. யாது, which, what
        2. எவ்வளவு, how much
        3. காரணம், cause, reason
        4. இயைபு, பொருத்தம், harmony
        5. ஒரு செயல் நிகழ்வதற்கான வசதி, that which facilitates
1.
போது ஏர் உண்கண் கலுழவும் ஏது இல்
பேதை நெஞ்சம் கவலை கவற்ற - நற் 144/3,4
பூப் போன்ற அழகிய மையுண்ட கண்கள் கலங்கிக் கண்ணீர் சொரியவும், யாதும் இல்லாத
பேதை நெஞ்சம் கவலையால் வருந்தவும்
- பின்னத்தூரார் உரை
2.
பல் ஊழ்
புன் புற பெடையொடு பயிரி இன் புறவு
இமை கண் ஏது ஆகின்றோ - குறு 285/4-6
பலமுறை
புல்லிய முதுகையுடைய பெடையை அழைத்து, இனிய ஆண்புறா
இமைப்பொழுதில் எவ்வளவு இன்பத்தை அடைகின்றது!
3.
போது ஏர் உண்கண் கலுழவும் ஏது இல்
பேதை நெஞ்சம் கவலை கவற்ற - நற் 144/3,4
பூப் போன்ற அழகிய மையுண்ட கண்கள் கலங்கிக் கண்ணீர் சொரியவும், காரணம் இல்லாத
பேதை நெஞ்சம் கவலையால் வருந்தவும்
- தான் செய்யும் செயற்குரிய ஏது ஒன்றும் காணுதல் இல்லாத ஏழை நெஞ்சம் -
கண் கலுழ்தலை நிறுத்தவும், கவலை நீங்குதற்குரிய காரணம் கண்டு அதனை விலக்கவும் மாட்டாது
நெஞ்சம் கவலைகளின் வழிநின்று வருந்தினமையின் ஏதில பேதை நெஞ்சம் என்றும் ---
- ஔவை.சு.து.உரை, விளக்கம்.

ஏது இல பெய்ம் மழை கார் என மயங்கிய - ஐங் 462/1
காலமல்லாத காலத்தில் (காரணமில்லாமல்) பெய்த மழையைக் கண்டு கார்காலம் என்று தவறாக எண்ணிய
- ஏதில - காரணமில்லாதன - மழை பெய்தற்குக் காரணமான பருவத்தைப் பெறாதனவாகிய மழை -
- பொ.வே.சோ. உரை விளக்கம்.
4.
நம் வரவினை
புள் அறிவுறீஇயின-கொல்லோ தெள்ளிதின்
காதல் கெழுமிய நலத்தள் ஏது இல்
புதல்வன் காட்டி பொய்க்கும்
திதலை அல்குல் தே மொழியாட்கே - நற் 161/8-12
மிக நெருங்கி வருகின்ற நம் வரவினை
புள்ளினங்கள் கரைந்து அறியும்படி தெரிவித்தனவோ? - தெளிவாக
காதல் பொருந்திய இயல்பினளான, இயைபு இல்லாதவற்றைப்
புதல்வனுக்குக் காட்டிப் பொய்ம்மொழி கூறும்
மஞ்சள் புள்ளித் தேமல் படர்ந்த அல்குலையும், இனிய மொழியையும் உடைய நம் காதலிக்கு
- தந்தையைக் காட்டு என்னும் புதல்வற்கு இயைபில்லாத விளையாட்டுக் கருவிகளைக் காட்டும்
- முகத்தால் பொய்யாயின கூறி அவன் கருத்தை மாற்ற முயல்வது கண்டு ஏதில புதல்வற் காட்டி
- என்றும் ---- 
- ஔவை.சு.து.உரை, விளக்கம்.
5.
அம்ம வாழி தோழி நன்றும்
எய்யாமையின் ஏது இல பற்றி
அன்பு இலன் மன்ற பெரிதே
மென்_புல கொண்கன் வாராதோனே - ஐங் 119
கேட்பாயாக, தோழியே! திருமணத்திற்குரிய நல்ல வழிகளை
அறியாமையினால், அது நிகழ்வதற்குரிய வழிகளைத் தவிர மற்ற வழிகளைப் பற்றிக்கொண்டிருப்பதால்
நம்மீது அன்பு இல்லாதவன், தெளிவாக, பெரிதும் -
மென்புலமாகிய நெய்தல் நிலத்துக்குரிய தலைவன் - நம்மை மணந்துகொள்ள இன்னும் வராதவன் -

 மேல்
 
  ஏந்தல் - (பெ) 1. தலைவன், leader
         2. சான்றோன், noble person
         3. ஏந்திப்பிடித்தல், stretching out 
1.
இரும் களிற்று இன நிரை ஏந்தல் வரின் - குறு 180/2
பெரிய களிற்றுயானைகளின் கூட்டத்துக்குத் தலைவனாகிய களிறு வந்துபுகுந்ததால்
2.
எழு கையாள எண் கை ஏந்தல் - பரி 3/38
ஏழு கைகளைக் கொண்டவனே! எட்டுக் கைகளைக் கொண்ட சான்றோனே!
3.
ஏந்தல் வெண் கோடு வாங்கி குருகு அருந்தும் - அகம் 381/3
ஏந்தலாக இருக்கும் வெண்மையான கொம்பினைக் குடைந்து பறவைகள் தின்னும்

 மேல்
 
  ஏமம் - (பெ) 1. பாதுகாவல், பாதுகாப்பு, protection, guard, safety
        2. ஆறுதல், ஆற்றுவது, consolation, solace
        3. இன்பம், களிப்பு, pleasure, delight
1.
எல்_இடை கழியுநர்க்கு ஏமம் ஆக - பெரும் 66
பகற்பொழுதில் வழிப்போவார்க்குப் பாதுகாவலாக இருக்க,
2.
நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே - நற் 133/11
நோய்மிக்க என் நெஞ்சினை ஆற்றுவதாய் இருக்கிறது ஓரளவுக்கு
3.
எவ்வ நெஞ்சிற்கு ஏமம் ஆக
வந்தனளோ நின் மட_மகள் - ஐங் 393/3,4
உன் இன்னலுற்ற நெஞ்சத்திற்கு இன்பம் உண்டாகும்படி
வருகிறாளோ உன் இளைய மகள்? -

 மேல்
 
  ஏமா - (வி) 1. மகிழ், இன்பமடை, rejoice
        2. ஆசைப்படு, desire
        3. ஏமாந்துபோ, get disppointed
        4. கலக்கமுறு, be perplexed 
1.
நின் பயம் பாடி விடிவு உற்று ஏமாக்க - பரி 7/85
உன்னால் கிடைக்கும் இன்பமான பயனைப் பாடி, துன்பம் நீங்கப்பெற்று மகிழ்வோமாக
2.
அருந்த ஏமாந்த நெஞ்சம் - புறம் 101/9
உண்ண ஆசைப்பட்ட நெஞ்சே!
3.
பெரும் தேன் கண்படு வரையில் முது மால்பு
அறியாது ஏறிய மடவோன் போல
ஏமாந்தன்று இ உலகம் - குறு 273/5-7
பெரிய தேனிறால் தங்கியிருக்கும் மலைப்பக்கத்தில், பழைய கண்ணேணியின்மேல்
அறியாமல் ஏறிய அறிவிலியைப் போல
ஏமாந்தது இந்த உலகம்
4.
நெஞ்சு ஏமாப்ப இன் துயில் துறந்து - மது 575
நெஞ்சு கலக்கமுறும்படி இனிய கூட்டத்தைக் கைவிட்டு,

 மேல்
 
  ஏமார் - (வி) 1. தடுமாறு, மனங்கலங்கு, be confused, be perplexed
         2. பாதுகாவலடை, be protected
         3. இன்பமடை, rejoice

1.
கோட்டு_மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து
எமரும் அல்கினர் ஏமார்ந்தனம் - நற் 49/5,6
சுறாமீன்களைப் பிடித்த மகிழ்ச்சியையுடையவராய், தம் வேட்டையை விடுத்து
எமது இல்லத்தோரும் மனையில் தங்கினர்; யாம் மனம் கலங்கினோம்
2.
ஆடு தலை துருவின் தோடு ஏமார்ப்ப
கடை_கோல் சிறு தீ அடைய மாட்டி - அகம் 274/4,5
அசையும் தலையினையுடைய செம்மறியாட்டின் தொகுதி பாதுகாவல் அடைய
கடையும்கோலிலிருந்துஎழுந்த சிறி தீயை வளர்ந்திட விறகினால் சேர்த்து
3.
கயம் தலை மட பிடி இனன் ஏமார்ப்ப
புலி பகை வென்ற புண் கூர் யானை - அகம் 202/2,3
மெல்லிய தலையினையுடைய இளைய பெண்யானை தன் இனத்துடன் இன்பமடைய
புலியாகிய பகையை வென்ற புண் மிக்க ஆண்யானை 

 மேல்
 
  ஏமுறு - (வி) 1. இன்பமடை, மகிழ்ச்சியடை, be glad, delighted
         2. மயக்கமுறு, be perplexed
         3. காக்கப்படு, be potected
         4. வெறிபிடி, பித்துப்பிடி, be mad
         5. வருத்தப்படு, be in sorrow
         6. அலைக்கழிக்கப்படு, be harassed
1.
ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்தே - அகம் 393/26
(உன்) இன்பம்வாய்ந்த கூட்டமாகிய இனிய துயிலினை மறந்து
2.
எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம் - நற் 273/2
துன்பம் மிக்க மயக்கம்தருகின்ற துயரத்தை
3.
ஏமுறு நாவாய் வரவு எதிர்கொள்வார் போல் - பரி 10/39
காவல்பொருந்திய நாவாயின் வரவை எதிர்கொள்ளும் வணிகர் போல,
4
எறி உளி பொருத ஏமுறு பெரு மீன் - அகம் 210/2
எறியப்பட்ட உளி தாக்கியதால் வெறிபிடித்த பெரிய மீன்
5.
கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரி பனி - நற் 30/6
கவலையினால் வருத்தப்பட்டதால் வெப்பமாக விழும் அரித்தோடும் கண்ணீருடன்,
6. 
கால் ஏமுற்ற பைதரு காலை - நற் 30/7
காற்றால் அலைக்கழிக்கப்பட்டுத் துன்புற்ற பொழுதில்

 மேல்
 
  ஏய் - (வி) 1. ஒப்பாகு, be similar to
       2. பொருந்து, be constituted, comprise
       3. பரவிக்கிட, spread out
       4. ஏவிவிடு, send forth
1.
குன்றி ஏய்க்கும் உடுக்கை - குறு 0/3
குன்றிமணியைப் போன்றிருக்கும் சிவந்த ஆடை
2.
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் - நற் 252/8
மென்மை பொருந்தி அகன்ற அல்குலையும்
3.
கள்ளி ஏய்ந்த முள்ளி அம் புறங்காட்டு - புறம் 363/10
கள்ளிகள் பரந்து மூடிய முட்செடிகள் நிறைந்த முதுகாட்டின்
4.
தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு - பரி 8/36
தலைவியரால் தூதாக ஏவிவிடப்பட்ட வண்டுக் கூட்டத்தின் இனிய இசை

 மேல்
 
  ஏர் - 1 (வி) ஒத்திரு, resemble
     2 (பெ) 1. அழகு, beauty
         2. கலப்பை, plough
1.
மதி ஏர் வெண்குடை அதியர் கோமான் - புறம் 392/1
முழுமதியைப் போன்றிருக்கும் வெண்கொற்றக்குடையைக் கொண்ட அதியர் வேந்தன்
2.1.
அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த - சிறு 215
செவ்வரி பொருந்தின அழகிய மையுண்ட கண்ணினையுடைய மகளிர் புகழ,
2.2.
நல் ஏர் நடந்த நசை சால் விளை வயல் - மது 173
நல்ல கலப்பை உழுத விரும்புதல் அமைந்த விளைகின்ற வயல்களில்

 மேல்
 
  ஏராளர் - (பெ) உழவர், Husbandmen, agriculturists, ploughmen
பல் விதை உழவின் சில் ஏராளர் - பதி 76/11
மிகுதியாக விதைப்பதற்கேற்ற உழவடையை உடைய சில ஏர்களை உடைய உழவர்கள்

 மேல்
 
  ஏரோர் - (பெ) உழவர், Husbandmen, agriculturists, ploughmen
முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும்
இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும்
ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்
தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும் - சிறு 231-234
முதியோர்க்குக் குவித்த கைகளையுடையோய்' என்றும்,
‘வீரர்க்குத் திறந்த மார்பை உடையோய்' எனவும்,
‘உழவர்க்கு நிழல்செய்த செங்கோலையுடையோய்' எனவும்,
‘தேரினையுடையோர்க்கு வெம்மைசெய்த வேலினையுடையோய்' எனவும்,

 மேல்
 
  ஏல் - (1) 1. ஏற்றுக்கொள், பெற்றுக்கொள், receive
       2. எதிர், oppose
       3. இர, stretch out in supplication, beg
       4. கிரகி, absorb
1.
எய்திய கனை துயில் ஏல்-தொறும் திருகி
மெய் புகு அன்ன கை கவர் முயக்கின்
மிகுதி கண்டன்றோ இலனே - அகம் 379/14-16
பொருந்திய மிக்க துயிலை ஏற்குந்தோறும் மாறுபட்டு
மெய்யினுள் மெய் புகுதலொத்த கைகளால் விரும்பிக்கொள்ளும் முயக்கத்தினும்
மேம்பட்ட பொருளை யான் கண்டதில்லை
2.
திருந்து அடி தோய திறை கொடுப்பானை
வருந்தல் என அவற்கு மார்பு அளிப்பாளை
குறுகல் என்று ஒள் இழை கோதை கோல் ஆக
இறுகிறுக யாத்து புடைப்ப
ஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏல
இருவர் வான் கிளி ஏற்பில் மழலை - பரி 9/37-42
அவளின் திருத்தமான அடிகளில் படும்படியாகப் பணிந்து அவளுக்குத் தன் வணக்கமாகிய திறைப்பொருளைக் கொடுக்க,
"வருந்தவேண்டாம்" என்று என்று ஆறுதல் கூறி அவனுக்குத் தன் மார்பினைத் தேவசேனை கொடுக்க,
"அவளிடம் நெருங்கிச் செல்லாதே" என்று ஒளிரும் அணிகலன்களையுடைய வள்ளி, தன் மாலையையே கோலாகக் கொண்டு
முருகனின் கைகளை மிகவும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, அடிக்க, 
ஒருவரின் மயில் ஒருவரின் மயிலோடு போர்தொடங்க,
அந்த இருவருடைய உயர்ந்த கிளிகளும் தம் மழலைக் குரலால் ஏசத்தொடங்க,
3.
ஞால மீமிசை வள்ளியோர் மாய்ந்து என
ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை - புறம் 179/1,2
உலகத்தின் மேல் வண்மையுடையோர் இறந்தாராக
பிறர்பால் ஏலாது கவிழ்ந்த எனது இரத்தைஅலியுடைய மண்டையை
- மண்டை - உண்கலம். அடிகுவிந்து வாய் விரிந்திருப்பதனாலும், ஏற்கும்போது அதன் வாய் தோன்ற ஏந்துவதும்,
- ஏலாப்போது கவிழ்ந்து வைப்பதும் இயல்பாதல் பற்றி ஏலாது கவிழ்ந்த மண்டை என்றார்.
- ஔவை.சு.து.உரை, விளக்கம்
4.
பிறந்த தமரின் பெயர்ந்து ஒரு பேதை
பிறங்கல் இடையிடை புக்கு பிறழ்ந்து யான்
வந்த நெறியும் மறந்தேன் சிறந்தவர்
ஏஎ ஓஒ என விளி ஏற்பிக்க
ஏஎ ஓஒ என்று ஏலா அ விளி
அ இசை முழை ஏற்று அழைப்ப அழைத்து_உழி
செல்குவள் ஆங்கு தமர் காணாமை
மீட்சியும் கூஉ_கூஉ மேவும் மடமைத்தே - பரி 19/58-65
தான் பிறந்த சுற்றத்தாரினின்றும் பிரிந்து ஓர் அறியா இளம்பெண்
செறிவான பாறைக்கற்களுக்கு இடையிடையே புகுந்து, வழிதவறி, நான்
வந்த வழியை மறந்துவிட்டேன் என்று தன் பெற்றோரை,
"ஏஎ ஓஒ" என்று தன் அவர் கேட்கும்படி செய்ய,
"ஏஎ ஓஒ" என்பதைக் கேட்காமல், அந்தக் கூவலின்
ஒலியைமட்டும் மலையின் பிளவுகள் ஏற்று எதிரொலிக்க, அந்த அழைப்பொலியைக் கேட்டு
அங்குச் சென்றவள், அங்கே தன் சுற்றத்தைக் காணாமல்
மீண்டும் மீண்டும் கூவுதலை மேற்கொள்ளும் மடமையை உடையது

 மேல்
 
  ஏலா - (இ.சொ) தோழன் / தோழியரை விளிக்கும் சொல்,
         A term address to a male / female companion
குறவன்_மகள் ஆணை கூறு ஏலா கூறேல் - பரி 8/69
(முருகனின் துணைவி) குறவன்மகளாகிய வள்ளிமீதும் ஆணைகூறத்துணிகின்றவனே! அடே! அவ்வாறு கூறவேண்டாம்!

 மேல்
 
  ஏலாவெண்பொன் - (பெ) வெள்ளி, சுக்கிரன், Planet Venus
கயம் களியும் கோடையாயினும்
ஏலாவெண்பொன் போகு_உறு_காலை - புறம் 389/3,4
நீர்நிலை வற்றிப் பிளவுற்றுக்கிடக்கும் கோடைக்காலமாயினும்
வெள்ளியாகிய மீன் தெற்கின்கண் சென்று வறம்செய்யும் காலையாயினும்
- ஏலா வெண்பொன் என்றது வெள்ளியாகிய மீனுக்கு வெளிப்படை -
- ஔவை.சு.து.உரை, விளக்கம்

 மேல்
 
  ஏழகம் - (பெ) ஆடு, sheep, ram
ஏழக தகரோடு எகினம் கொட்கும் - பெரும் 326
ஆட்டுக்கிடாயுடன் எகினம் சுழன்று திரியும்

 மேல்
 
  ஏழில் - (பெ) நன்னன் என்னும் மன்னது மலை, 
        Name of a hill which belonged to Nannan, an ancient chief of the Tamil country
இன மழை தவழும் ஏழில் குன்றத்து - அகம் 345/7
கூட்டமான மேகங்கள் தவழும் ஏழில்குன்றத்தில்

 மேல்
 
  ஏற்றை - (பெ) ஆற்றலோடுகூடிய ஆண்பால் விலங்கு, Male of any animal remarkable for physical strength;
கூர் உகிர் ஞமலி கொடும் தாள் ஏற்றை
ஏழக தகரோடு உகளும் முன்றில் - பட் 140,141
கூரிய நகங்களையுடைய நாயின் வளைந்த பாதங்களையுடைய ஆணானது			140
ஆட்டுக் கிடாயுடன் குதிக்கும் (பண்டசாலையின்)முற்றத்தையும்

 மேல்
 
  ஏறு - 1. (வி) 1. மேலேசெல், climb
     2. (பெ) 1. காளை, bull
         2. இடி, thunderbolt
         3. எருமை, பன்றி போன்ற விலங்குகளின் ஆண், male of animals suchas pig, buffalo etc.,
1.
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து		5
பாண் யாழ் கடைய வாங்கி பாங்கர்
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில - நற் 186/5-7
வேனில்காலத்து பச்சோந்தியின், தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் முதிய ஆணானது
பாணர்கள் யாழினை இசைக்க, அதனைக் கேட்டு, அருகிலிருக்கும்
நெடியதாய் நிற்கும் யா மரத்தில் ஏறும் தொழிலையுடையது
2.1
ஏறு உடை இன நிரை வேறு புலம் பரப்பி - நெடு 4
காளைகளையுடைய (பல்வேறு)இனம் சேர்ந்த மந்தையை(மேடான)முல்லை நிலத்தில் மேயவிட்டு
2.2
நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும் - பெரும் 135
நீல நிற மேகத்தில் வலிய உருமேறு இடித்தாலும்,
2.3
திரி மருப்பு இரலை அண்ணல் நல் ஏறு
அரி மட பிணையோடு அல்கு நிழல் அசைஇ - குறு 338/1,2
முறுக்கேறிய கொம்புகளையுடைய இரலையாகிய தலைமைப்பண்புள்ள நல்ல ஆண்மான்
மென்மையையும் மடப்பத்தையும் கொண்ட பெண்மானோடு தங்குதற்குரிய நிழலில் ஓய்வெடுத்து

 மேல்
 
  ஏறை - (பெ) குறிஞ்சிநிலத் தலைவன், a chief of the hilly tract
இவன் குறிஞ்சி நிலத்துக் குறவர்க்குத் தலைவன். வெல்லும் வேலும் வல்லவன். தனக்குரியோர் 
பிழைசெய்யின் அதனைப் பொறுத்தலும், பிறர்க்குண்டான வறுமை கண்டு நாணுதலும், படையாளுமிடத்துப்
பழிபடாமையும், வேந்தர் அவைக்களத்துப் பெருமிதமுற்று விளங்குதலும், இவனது சீரிய பண்புகளாம்.
இவன் ஏறைக்கோன் எனப்படுவான்.
இவனைக் குறமகள் இளவெயினி என்பார் ஒரு புறப்பாட்டால்சிறப்பிக்கின்றார்.

பெரும் கல் நாடன் எம் ஏறைக்கு தகுமே - புறம் 157/13
பெரிய மலைநாடனாகிய எம்முடைய ஏறைக்கோனுக்குப் பொருந்தும்.

 மேல்
 
  ஏனம் - (பெ) பன்றி, pig, wild hog, boar
வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும் - பெரும் 110
வளைந்த கொம்பினையுடைய பன்றியின் வரவைப் பார்த்து நிற்கும்

	

 மேல்
 
  ஏனல் - (பெ) தினை, a millet
கொய் பதம் உற்றன குலவு குரல் ஏனல் - மலை 108
கொய்யப்படும் பக்குவம் பெற்றன பிணைந்துகிடக்கும் கதிர்களையுடைய தினை

 மேல்
 
  ஏனாதிப்பாடி - (பெ) பரத்தையர் வாழுமிடம், place where prostitutes live
எல்_இழாய் சேய் நின்று நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து ஆங்கே
வாய் ஓடி ஏனாதிப்பாடியம் என்று அற்றா - கலி 81/17
ஒளிரும் அணிகளை அணிந்தவளே! தொலைவிலிருந்து நாம் கொண்டுவந்த பாணன், நெறி கெட்டு
வாய்தவறி, 'பரத்தையர் வாழும் ஏனாதிப்பாடியத்தில் இருக்கிறோம்' என்று சொன்னதைப் போல்
- ஏனாதிப்பாடு - ஏனாதிப் பட்டம் கட்டினான் ஒருவன் ஏற்றிய பரத்தையர் சேரி.
- நச்.உரை விளக்கம்.

 மேல்