<<முந்திய பக்கம்

சங்க இலக்கியம் - அருஞ்சொற்களஞ்சியம்
கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
ஈ - முதல் சொற்கள்

ஈகை
ஈங்கண்
ஈங்கனம்
ஈங்கு
ஈங்கை
ஈங்ஙனம்
ஈட்டம்
ஈட்டு
ஈண்டு
ஈத்து
ஈத்தை
ஈதோளி
ஈந்து
ஈமம்
ஈயல்
ஈயல்மூதாய்
ஈர்
ஈர்க்கு
ஈர்ந்தை
ஈரணி
ஈருள்
ஈவு
ஈழம்
ஈற்று
ஈன்
ஈன்றணி
ஈனில்

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
     - 1. (வி) கொடு, வழங்கு, give, offer
         2. (பெ) ஒரு பறக்கும் பூச்சி, fly
         3. இங்கே, அருகில் , Here
1.
 என இரத்தல் இழிந்தன்று - புறம் 204/1
கொடு என்று மன்றாடிக் கேட்டல் இழிந்தது
2.
 பாய் அடு நறா கொண்டது இ யாறு என - பரி 24/58
ஈக்கள் மொய்க்கின்ற கள்ளினைக் கொண்டது இந்த ஆறு என்று
3.
 காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே - நற் 264/9
இங்கே பார், தெரிகிறது எமது சிறிய நல்ல ஊர்.

 மேல்
 
    ஈகை - (பெ) 1. கொடை, gift, grant
                 2. பொன், gold
                 3. காடைப் பறவை, quail
1.
தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி - பெரும் 460
குறையாத கொடைக்குணம் உள்ள உன் புகழ்மிக்க பெயரைப் போற்றி
2.
இயல் அணி பொலிந்த ஈகை வான் கழல் - குறி 126
இயற்கையான அழகால் பொலிவுபெற்ற பொன்னால் ஆன உயர்ந்த வீரக்கழல்
3.
ஈகை போர் கண்டாயும் போறி - கலி 95/12
காடைகளின் சண்டையைப் பார்த்தவள் போல் இருக்கிறாய்

	

 மேல்
 
    ஈங்கண் - (பெ) இந்த இடம், this place
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும் - நற் 70/7
அந்த இடத்திலுள்ள இனிய புனல் இவ்விடத்தில் வந்து பரவும்

 மேல்
 
    ஈங்கனம் - (வி.அ) இங்ஙனம், இவ்வாறு,இவ்விதம், in this manner
ஈங்கனம் செல்க தான் என - புறம் 208/4
இவ்வாறு போக தான் என்று

 மேல்
 
    ஈங்கு (வி.அ) 1. இங்கு, here 2. இப்படி,இவ்வாறு, in this manner
1.
ஈங்கு யான் அழுங்கிய எவ்வம் - குறு 140/4
இங்கு நான் பட்ட துன்பம்
2.
ஈங்கு ஆகின்றால் தோழி - நற் 378/8
இவ்வாறு ஆகிவிட்டது தோழி

 மேல்
 
    ஈங்கை (பெ) - இண்டஞ்செடி, Species of a sensitive shrub, Mimosa rubicaulis;
நிறையப் பூக்கக்கூடியது
சிறை நாள் ஈங்கை உறை நனி திரள் வீ - நற் 79/1 (வீ - பூ)

மணல்பாங்கான இடத்தில் வளரக்கூடியது
ஈங்கை/முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர் - நற் 124/4,5
ஈங்கையின் அரும்பும், காட்டுமல்லிகை மலரும் உயர்ந்த மணலால் அமைந்த மேட்டினில் உதிர்ந்து

பூக்கள் குருவிக்குஞ்சைப் போல் இருக்கும்
நெறி கிளர் ஈங்கை பூவின் அன்ன
சிறு பல் பிள்ளையொடு - நற் 181/4,5
நெறிப்பு விளங்கிய ஈங்கையின் பூவைப் போன்ற
சிறிய பலவாகிய பிள்ளைகளும் --

மொட்டுகள் சிவப்புநிறத்தில் வட்டமாகவும், பூக்கள் தலையில் பஞ்சுப்பிசிரையும் கொண்டிருக்கும்
அட்டு அரக்கு உருவின் வட்டு முகை ஈங்கை
துய் தலை புது மலர்  - நற் 193/1,2
உருக்கிய அரக்குப்போன்ற சிவந்த வட்டமாகிய மொட்டுக்களையுடைய ஈங்கையின்
பஞ்சு போன்ற தலையை உடைய புதிய மலரின்

மொட்டுகள் இரவம் விதையைப் போன்றும், பூக்கள் ஆலங்கட்டியைப் போன்று வெண்மையாகவும் இருக்கும்
இரம் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை
ஆலி அன்ன வால் வீ தாஅய் - அகம் 125/3,4
(இரம் = இரவ மரம், Mesua ferrea; காழ் = விதை, ஆலி = ஆலங்கட்டி வால் = வெண்மை)

வளைவான,நுண்மையான முட்களை உடையது
கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர் - நற் 205/9
நுண் முள் ஈங்கை செ அரும்பு ஊழ்த்த - குறு 110/5

குளிர்ச்சியாகவும் புதராகவும் வளரும்
பனி புதல் ஈங்கை அம் குழை - நற் 312/2

கிளைகள் கொடி போல் வெண்மையாகவும், செடி பசுமையாகவும் இருக்கும்
வெண் கொடி ஈங்கை பைம் புதல் அணியும் - ஐங் 456/3

மழைக்காலத்தில் தளிர்விடும்
மாரி ஈங்கை மா தளிர் அன்ன - அகம் 75/17

வளைந்த துளையினையுடைய பவளத்தைப்  போல் பூ இருக்கும்
வாங்கு துளை துகிரின் ஈங்கை பூப்ப - அகம் 243/2
துகிர் = பவளம்

  

ஈங்கை என்பதற்கு இண்டஞ்செடி என்ற பொருள் தருகிறது தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon).
ஆனால், இண்டு என்பதற்கு கொடிவகை (Acacia intsiacaesia) என்றும், sensitive plant (Mimosa) - தொட்டாற்சுருங்கி
என்றும், sensitive- tree (Mimosa rubicaulis) என்றும் மூன்று பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே - நற் 2/6

என்ற நற்றிணை அடிகளால் இண்டு, ஈங்கை என்பன வெவ்வேறானவை எனத் தெரியலாம். இண்டு இவர் என
வருவதால் இண்டு என்பது கொடிவகை என்றும், அது ஈங்கை மீது படர்வதால் அது ஒரு மரம் / செடி எனத்
தெளியலாம்.
இண்டு இவர் ஈங்கைய என்பதற்கு இண்டங்கொடியுடனே ஒருசேரப் படர்கின்ற ஈங்கையையுடைய எனப்
பொருள்கொள்வார் பின்னத்தூரார். இவர் கூற்றுப்படி இரண்டுமே கொடிவகை ஆகின்றன.
ஆனால், இதே தொடருக்கு, இண்டைக்கொடி பின்னிப்படர்ந்த ஈங்கை மரங்களையுடையவாய் எனப் பொருள்கொள்வார்
ஔவை.சு.து.அவர்கள். எனவே, ஈங்கை என்பதற்கு sensitive- tree (Mimosa rubicaulis) என்று பொருள்கொள்வதே
சிறந்தது எனத் தோன்றுகிறது.

 மேல்
 
    ஈங்ஙனம் - பார்க்க  ஈங்கனம்
ஈங்ஙனம் வருபவோ தேம் பாய் துறைவ - குறு 336/2

 மேல்
 
    ஈட்டம் - (பெ) கூட்டம், தொகுதி, concourse, throng
வையைக், கரை தர வந்தன்று காண்பவர் ஈட்டம் - பரி 12/32,33
வைகையின் இருபக்கத்தில் அதன்கரையை ஒப்ப வந்தது காணவந்த மக்கள்கூட்டம்

 மேல்
 
    ஈட்டு - (வி) திரட்டு, தொகு, accumulate,hoard amass
மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப, உதிர்வன - அகம் 5/10,11
உயர்ந்த பெரிய பாறைகளில், சிறுவர் திரட்டிச் சேர்த்து வைத்திருக்கும் வட்டுக்களைப்  போல உதிர்ந்து கிடக்கும்

 மேல்
 
    ஈண்டு - (வி) 1. செறிவாக அமைந்திரு, to get to be a compact mass, as the atoms of earth;
                 2. கூடு, come together
                 3. நிறைந்திரு, மிகு, abound
            - (வி.அ)  4. இந்த இடத்தில், in this place
1.
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளம் தலைமயங்கிய நனம் தலை மறுகின் - பட் 192,193
அரியனவும்,பெரியனவுமாகிய பொருள்கள் நிலன் நெளியும்படி செறிவாகத் திரண்டு
செல்வம் தலைதெரியாது மயங்கிக் கிடக்கும் அகன்ற இடங்களையுடைய தெருவினையும்
2.
இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலி குரல் - நற் 267/10
கூட்டமாகிய மீன்களைத் தின்பதற்கு வந்து கூடுகின்ற பறவைகள் ஒலிக்கின்ற குரல்
3.
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின் - அகம் 393/15
கொத்துக்கள் நிறைந்த கொன்றையின் நிறைந்த பூந்தாது போல
4.
குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய - நற் 205/6
குவளை மலர் போன்ற மையுண்டகண்களையுடைய இவள் இவ்விடத்தில் நிற்குமாறு

 மேல்
 
    ஈத்து - (பெ) பார்க்க : ஈந்து
ஈத்து இலை வேய்ந்த எய் புற குரம்பை - பெரும் 88
ஈந்தினுடைய இலையாலே வேயப்பட்ட எய்ப் பன்றியின் முதுகுபோலும் புறத்தினையும் உடைய குடிலின்கண்

 மேல்
 
    ஈத்தை - (ஏ.வி.மு) கொடுப்பாய், hand over
ஆய்_இழாய் தாவாத எற்கு தவறு உண்டோ காவாது ஈங்கு
ஈத்தை இவனை யாம் கோடற்கு - கலி 86/29,30
"அழகிய அணிகளை அணிந்தவளே! எத் துன்பமும் செய்யாத என்மேல் தவறுண்டோ? உன்னிடம் வைத்துக்கொள்ளாமல் இங்கு
கொடு இவனை நான் கையிலெடுத்துக்கொள்வதற்கு"; 
- ஈத்தை - ஈவாயாக - நச்.உரை - பெ.பு.விளக்கம்

 மேல்
 
    ஈதோளி - (வி.அ) இவ்விடம், here
எல்லிற்று போழ்து ஆயின் ஈதோளி கண்டேனால் - கலி 117/13
இரவாகிவிட்டது பொழுதும், இவ்விடத்தில் தனிமையில் உன்னைக் கண்டேன்
- இதோளி ஈதோளி எனச் சுட்டு நீண்டு நின்றது - நச்.உரை.பெ.விளக்கம்

 மேல்
 
    ஈந்து (பெ) - ஈச்சை, பேரீச்சை மரம் Datepalm, Phoenix doctylifera;
களர் நிலத்தில்வளரக்கூடியது
களர் வளர் ஈந்தின் காழ் கண்டு அன்ன - பெரும் 130
தழைத்த கெட்டியான பகுதியை உடையது
ஒலி வல் ஈந்தின் உலவை அம் காட்டு - நற் 2/2
(ஒலி =செழி, தழை)
கரிய நிறத்தில் கனிந்த பழங்களை உடையது
கரும் களி ஈந்தின் வெண் புற களரி - நற் 126/2
திரட்சியாகவும்,குலைகுலையாகவும் காய்க்கக்கூடியது
கற்றை ஈந்தின் முற்று குலை அன்ன - நற் 174/1
காய்கள் சிவப்பாக இருக்கும்
செம் காய் உதிர்ந்த பைம் குலை ஈந்தின் - அகம் 21/20

	

 மேல்
 
    ஈமம் - (பெ) சுடுகாடு, பிணஞ்சுடுதற்கு அடுக்கும் விறகடுக்கு, burning ground, funeral pyre
பெரும் காட்டு பண்ணிய கரும் கோட்டு ஈமம் - புறம் 246/11
சுடுகாட்டில் உண்டாக்கிய கரிய விறகுக்கடைகளால் ஆன பிணப்படுக்கை
வியல் மலர் அகன் பொழில் ஈம தாழி - புறம் 256/5
பெரிய பரப்பினையுடைய அகன்ற பூமியில் முதுமக்கள் தாழியை

 மேல்
 
    ஈயல் - (பெ) ஈசல், Winged white ant, Termes bellicosus
புற்றுகளில் இருக்கும்
நெடும் கோட்டு புற்றத்து ஈயல் கெண்டி - நற் 59/2
இதைப் பிடித்து, சிறகை உதிர்த்து,  காயப்போட்டு, உண்பர்
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெம் சோறு - அகம் 394/5

	

 மேல்
 
    ஈயல்மூதாய் - (பெ) வெல்வெட் பூச்சி, Trombidium grandissimum
அரக்கு நிற உருவின் ஈயல்மூதாய் - அகம் 139/13
இது இலக்கியங்களில் மூதாய் என்றும் அழைக்கப்படுகிறது.
மூதாய் என்ற சொல்லின் கீழ் விரிவாக விளக்கப்படும்.

பார்க்க: மூதாய்
.
	

 மேல்
 
    ஈர் - (வி) 1. அறு, saw
               2. இழு, pull
         (பெ) 3. நெய்ப்பு, எண்ணெய்ப்பசை, பளபளப்பு, oiliness, glossiness
              4. பேனின் முட்டை அல்லது குஞ்சு, nit
        - (பெ.அ) 5. ஈரமான, wet
        -        6. இரண்டு, adjectival form of TWO
        -        7. பெரிய, large
1.
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த - குறு 31/5
சங்கை அறுத்துச் செய்த ஒளிவிடும் வளையல்களை நெகிழச்செய்த
2.
பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும் - அகம் 8/7
பலாமரங்கள் செறிந்த மலைப்பகுதியில் புலால் நாற இழுத்துச் செல்லும்
3.
துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதி - திரு 20
தோழியர் ஆராய்ந்த நெய்ப்பின்னையுடைய மயிர்
4.
ஈர் உடை இரும் தலை ஆர சூடி - பெரும் 219
ஈரை உடைய பெரிய தலையில் நிறையச் சூடி
5.
ஈர் சேறு ஆடிய இரும் பல் குட்டி - பெரும் 341
ஈரமான சேற்றில் ஆடிய கரியநிற பலவான குட்டிகள்
6.
எழினி வாங்கிய ஈர் அறை பள்ளியுள் - முல் 64
திரையால் வளைக்கப்பட்ட இரண்டாகிய அறையினுள்
7.
மயிர் கால் எண்கின் ஈர் இனம் கவர - அகம் 267/8
மயிர் உள்ள கால்களையுடைய கரடிகளின் பெரிய கூட்டம் கவர்ந்து உண்ண

 மேல்
 
    ஈர்க்கு - (பெ) தென்னை ஓலையின் நடுவிலுள்ள நீளமான காம்பு, rib of palm leaf
ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலை - பொரு 36
ஈர்க்கங்குச்சியும் இடையில் போக முடியாத அளவுக்கு எழுச்சியும் இளமையும் உள்ள அழகிய மார்புகள்

 மேல்
 
    ஈர்ந்தை - (பெ) ஈர்ந்தூர் எனப்படும் சங்க கால ஊர், an ancient city called IrnthUr
ஈர்ந்தையோனே பாண் பசி பகைஞன் - புறம் 180/7
ஈர்ந்தை என்னும் ஊரின்கண் இருந்தான் பாணரது பசிக்குப் பகைவனாயவன்

ஈர்ந்தூர்க் கிழான் கோயமான் என்பவனைப் பற்றிக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்
பாடிய பாடலில் இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈர்ந்தூர் என்பது இக்காலத்தே கொங்குநாட்டில் ஈஞ்சூர் என வழங்குகிறது என்பார் ஔவை.சு.து.அவர்கள்

 மேல்
 
    ஈரணி - (பெ) புனலாடும் மகளிர் அணியும் ஆடை, bathig garment
விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர - பரி 7/61

 மேல்
 
    ஈருள் - (பெ) ஈரல், கல்லீரல், liver, spleen
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர - அகம் 294/8
இரண்டாகப் பிளந்த ஈரல் போல ஈரமுள்ளவையாய் அசைந்திட

 மேல்
 
    ஈவு - (பெ) உதவுதல், கொடுத்தல், giving
பிறர்க்கு ஈவு இன்றி தம் வயிறு அருத்தி - புறம் 127/8
மற்றவர்க்குக் கொடுத்தல் இல்லாமல் தம் வயிற்றை நிறைத்து

 மேல்
 
    ஈழம் - (பெ) இலங்கை, Sri Lanka
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் - பட் 191
இலங்கையில் உண்டான பொருளும் கடாரத்தில் உண்டான பொருளும்

 மேல்
 
    ஈற்று - 1. (பெ) பிள்ளை பெறுதல், விலங்குகள் கன்றினை ஈனுதல்
            2. (பெ.அ) பிள்ளை பெற்ற, கன்றினை ஈன்ற
1.
சாறு தலைக்கொண்டு என பெண் ஈற்று உற்று என - புறம் 82/1
ஊரில் விழா தொடங்கிற்றாக, தன் மனைவி பிள்ளை பெறுதலை உற்றவளாக
2.
ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும் - பொரு 186
குஞ்சு பொரித்த ஆமை, தன் குஞ்சுகளைப் பாதுகாக்கவும்

 மேல்
 
    ஈன் - 1. (வி) பிள்ளைபெறு, கன்றுபோடு, குஞ்சுபொரி, குட்டிபோடு, முட்டையிடு, bring forth an offspring
         2. (பெ) இவ்வுலகம், this world
1.
புதல்வனை ஈன்ற எம் மேனி - ஐங் 65/3
பகட்டு ஆ ஈன்ற கொடு நடை குழவி - பெரும் 243
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை - குறு 38/1 (அறை = பாறை)
பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கின - அகம் 229/16
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை - நற் 225/3
2.
ஈனும் உம்பரும் பெறல் அரும்-குரைத்தே - ஐங் 401/5
இந்த உலகமும், மேலுலகமும் பெறுவதற்கு அரியது

 மேல்
 
    ஈன்றணி - (பெ.அ) அண்மையில் ஈன்ற, that which gave birth to an offspring recently
இரு மருப்பு எருமை ஈன்றணி காரான் - குறு 181/3
கரிய கொம்புகளையுடைய அண்மையில் ஈன்ற கரிய பெண்ணெருமை

 மேல்
 
    ஈனில் - (பெ) பிரசவிக்கும் இடம், Lying-in-chamber, maternity home
சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழையியர் - குறு 85/3
கருவுற்று முதிர்ந்த நிலையிலிருக்கும் தன் பெட்டைக்குருவிக்கு முட்டையிடும்கூடு செய்வதற்காக

 மேல்