<<முந்திய பக்கம்

சங்க இலக்கியம் - அருஞ்சொற்களஞ்சியம்
கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
கை - முதல் சொற்கள்
கை
கைக்கிளை
கைதூவு
கைதை
கைந்நிறுத்து
கைந்நீவு
கைநிமிர்
கைநீவு
கைப்படுத்து
கைம்மா
கைம்மிகு
கைம்முற்று
கைம்மை
கைமிகு
கையழி
கையறவு
கையறு
கையாறு
கையிக
கையிடு
கையுறை
கைவண்
கைவண்மை
கைவல்
கைவள்

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    கை - 1. (வி) 1. ஊட்டு, feed with the hand
                             2. அலங்கரி, adorn, decorate
                    - 2. (பெ) 1. மனித உறுப்பு, hand
                             2. யானையின் துதிக்கை, trunk of an elephant
                             3. கைப்பிடி, handle
                             4. உலக நடப்பு, custom, usage, way of the world
                             5. ஒழுங்கு, வரிசை, row, line
1.1
கவை முள் கருவியின் வடமொழி பயிற்றி
கல்லா இளைஞர் கவளம் கைப்ப - முல் 35,36
வைத்த முள்ளையுடைய பரிக்கோலால் குத்தி, (யானைப் பேச்சான)வடசொற்களைப் பலகாலும் சொல்லி,	35
(வேறொரு தொழிலைக்)கல்லாத இளைஞர் கவளத்தை ஊட்டிவிட
1.2
மயில் இயலோரும் மட மொழியோரும்
கைஇ மெல்லிதின் ஒதுங்கி கை எறிந்து
கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப - மது 418-420
மயிலின் தன்மையையுடையோரும்; மடப்பத்தையுடைய மொழியினையுடையோரும்;(ஆகிய மகளிர்)
(தம்மை)அலங்கரித்து, மெத்தெனெ நடந்து, கையைத்தட்டிக்
கல்லாத இளைஞருடன் சிரிப்பவராய் உண்டு துய்க்க,}	
2.1
செழும் குலை காந்தள் கை விரல் பூப்பவும் - சிறு 167
செழுமையான குலையினையுடைய காந்தள் கைவிரல் (போலப்)பூக்கவும்
2.2
தாழ் பெரும் தட கை உயர்த்த யானை - திரு 158
(நிலம் வரை)தாழ்ந்த பெரிய வளைவினையுடைய கையினையும் உடைய புகழ்பெற்ற யானையின்
2.3
நெடும் கை நவியம் பாய்தலின் நிலை அழிந்து - புறம் 36/7
நெடிய கைப்பிடியையுடைய கோடலி வெட்டுதலால் நின்ற நிலை கலங்கி
2.4
அன்னையோ மெய்யை பொய் என்று மயங்கிய கை ஒன்று
அறிகல்லாய் போறி காண் நீ - கலி 95/25,26
"அம்மாடியோ! உண்மையைப் பொய்யென்று வஞ்சிக்கும் உலக நடப்பை நீ ஒன்றும்
அறியமாட்டாய் போலும்! நீயே உணர்ந்து பார்!"
2.5
கை அமை விளக்கம் நந்து-தொறும் மாட்ட - முல் 49
ஒழுங்காய் அமைந்த விளக்குகள் அவியுந்தோறும் (நெய் விட்டுத்)தூண்டிவிட

 மேல்
 
    கைக்கிளை - (பெ) ஒருதலைக் காதல், one-sided love
இன்ன பண்பின் நின் தை_நீராடல்
மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட
கன்னிமை கனியா கைக்கிளை காம
இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல் - பரி 11/134-137
இத்தகைய சிறப்புமிக்க உனது தைநீராடலானது,
மின்னுகின்ற அணிகலன்களையும் நறுமணம் கமழும் நெற்றியையும் உடைய பெண் ஒருத்தி, தன் பெண்தன்மை மேம்பட்ட
கன்னித்தன்மை முதிராத ஒருதலைக்காதலின் காமத்தின்
இனிய தன்மையினையும், சிறந்த தேர்ச்சியினையும் கொண்ட இசையோடு கூடிய பரிபாடலே!

 மேல்
 
    கைதூவு - 1. (வி) செயலிலிருந்து விடுபட்டு ஓய்ந்திரு, stop from work and take rest
               2. (பெ) செயலிலிருந்து விடுபட்டு ஓய்ந்திருத்தல், stopping from work and take rest
1.
பரிசில் பரிசிலர்க்கு ஈய
உரவு வேல் காளையும் கைதூவானே - புறம் 334/11
பரிசில் பொருளைப்பரிசிலர்க்கு வழங்குதலில்
வலி பொருந்திய வேலையுடைய காளையாகிய அவனும் ஓய்ந்திருக்கமாட்டான்.
2.
நன் மனை நனி விருந்து அயரும்
கைதூவு இன்மையின் எய்தா மாறே - நற் 280/10
நல்ல வீட்டில் மிகுந்துவரும் விருந்தினரை உபசரிக்கும்
வேலையில் ஓய்வு இல்லாததினால் என் கண்ணில் அவன் படவில்லை.

 மேல்
 
    கைதை - (பெ) தாழை, fragrant screw pine, Pandanus odoratissimus
தோடு அமை தூவி தடம் தாள் நாரை
நலன் உணப்பட்ட நல்கூர் பேடை
கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது
கைதை அம் படு சினை புலம்பொடு வதியும் - நற் 178/2-5
தாள்தாளாக அமைந்த சிறகுகளையும், நீண்ட கால்களையும் உடைய நாரையால்
இன்பம் நுகரப்பெற்றுக் கைவிடப்பட்ட துயரத்தையுடைய பேடை
கழியின் கரையில் தான் திரியும் பக்கங்களில் சிறிய மீனைப் பிடித்து உண்ணாமல்
தாழையின் அழகிய வளைந்த கிளையில் தனிமைத்துயருடன் தங்கியிருக்கும்

	

 மேல்
 
    கைந்நிறுத்து - (வி) 1. நிலைநிறுத்து, establish
                       2. அடக்கிவை, conquer
1.
அஃதை போற்றி
காப்பு கைந்நிறுத்த பல் வேல் கோசர் - அகம் 113/4,5
அஃதை என்பானைப் பாதுகாத்து,
அவனைக் காவல்மிக்க இடத்தில் நிலைநிறுத்திய பல வேற்படையினைக் கொண்ட கோசர்
2.
கூறுவம்கொல்லோ, கூறலம்கொல் என
கரந்த காமம் கைந்நிறுக்க அல்லாது - அகம் 198/1,2
(இவளிடத்தில்) கூறுவோமோ,அல்லது கூறாமல்விடுவோமோ என்று
என்னுள் மறைத்துவைத்திருக்கும் காமத்தினை அடக்கிவைக்க முடியாமல்

 மேல்
 
    கைந்நீவு - (வி) அடங்காமல் செல், defy, disregard
கூம் கை மத_மா கொடும் தோட்டி கைந்நீவி
நீங்கும் பதத்தால் உருமு பெயர்த்தந்து - பரி 10/49,50
பிளிறுகின்ற கையுடன், மதக்களிப்பையுடைய அந்த களிறு, வளைவான அங்குசத்திற்கும் அடங்காமல்
அவ்விடத்தைவிட்டு நீங்குகின்ற பொழுதில் அதன் இடிபோன்ற முழக்கத்தை ஒழித்து,

 மேல்
 
    கைநிமிர் - (வி) அடங்காமல் செல், defy, disregard
எழில் மருப்பு எழில் வேழம் இகுதரு கடாத்தால்
தொழில் மாறி தலை வைத்த தோட்டி கைநிமிர்ந்து ஆங்கு - கலி 138/1,2
அழகிய கொம்பினைக்கொண்ட அழகிய யானை, வடிகின்ற மதத்தால்
தான் செய்யவேண்டிய தொழில்களைத் தவிர்த்து, தன்னை அடக்குகின்ற அங்குசத்திற்கு அடங்காமற் போவது போல

 மேல்
 
    கைநீவு - (வி) கைந்நீவு, பார்க்க : கைந்நீவு
தேம் பாய் கடாத்தொடு காழ் கைநீவி
வேங்கை வென்ற பொறி கிளர் புகர் நுதல் - பதி 53/17,18
தேனீக்கள் மொய்க்கும் மதநீரோடு, பாகரின் குத்துக்கோலுக்கும் அடங்காமல்,
வேங்கை மரத்தைப் புலி என்று நினைத்து அழித்த வடுக்கள் அமைந்த புள்ளிகளையுடைய நெற்றியையுடையவாய்,

 மேல்
 
    கைப்படுத்து - (வி) கையும் மெய்யுமாகப் பிடி, catch hold of with solid proof 
மை வளம் பூத்த மலர் ஏர் மழை கண்ணார்
கை வளம் பூத்த வடுவொடு காணாய் நீ
மொய் வளம் பூத்த முயக்கம் யாம் கைப்படுத்தேம் - பரி 18/16-18
நிரம்ப மை தீட்டப்பெற்ற, மலரின் அழகு பொருந்திய, குளிர்ச்சியையுடைய கண்களையுடைய மகளிரின்
கைநகங்கள் ஏற்படுத்திய வடுக்களைப் பார்க்கவில்லையா நீ?
அந்தப் பரத்தையரின் இறுகல் மிகுந்த முயக்கத்தை நாம் கையும்மெய்யுமாகப்பிடித்தோம்

 மேல்
 
    கைம்மா - (பெ) யானை, elephant
இலங்கு ஒளி மருப்பின் கைம்மா உளம்புநர் - கலி 23/1
பளிச்சென்று ஒளிவீசும் கொம்புகளையுடைய யானையை ஓசையெழுப்பி விரட்டுபவர்கள்

 மேல்
 
    கைம்மிகு - (வி) கட்டுமீறு, வரம்பு கட, exceed the limit
மெல்லம்புலம்பன் கண்டு நிலைசெல்லா
கரப்பவும்_கரப்பவும் கைம்மிக்கு
உரைத்த தோழி உண்கண் நீரே - நற் 263/8-10
மென்புலமான நெய்தல்நிலத்தலைவனைக் கண்டவுடன் நிலைகொள்ளாமல்,
மறைக்க மறைக்கக் கட்டுமீறிச்
சொல்லிவிட்டன தோழி! மையுண்டகண்களிலிருந்து வடிந்த கண்ணீர்.

 மேல்
 
    கைம்முற்று - (வி) முடிவுபெறு, தீர்ந்துபோ, இல்லாமலாகு, be exhausted
கைம்முற்றல நின் புகழே என்றும் - புறம் 53/8
முடிவுபெறாது உனது புகழ் எந்நாளும்

 மேல்
 
    கைம்மை - (பெ) கணவனை இழந்து வாழும் நிலை, widowhood
ஒண் நுதல் மகளிர் கைம்மை கூர - புறம் 25/12
ஒளிவிடும் நெற்றியை உடைய மகளிர் கணவனை இழந்து செய்யும் நோன்பிலே மிக

 மேல்
 
    கைமிகு - (வி) பார்க்க : கைம்மிகு 
நுந்தை வாய் மாய சூள் தேறி மயங்கு நோய் கைமிக
பூ எழில் உண்கண் பனி பரப்ப கண்படா - கலி 85/26,27
உன் தந்தையின் வாயிலிருந்து வரும் பொய்யான சூளுரைகளை நம்பி, காமநோய் மிகவே
பூப் போன்ற அழகிய மைதீட்டிய கண்கள் கண்ணீர் சொரிய, தூக்கம் இல்லாமல் இருக்கும்

 மேல்
 
    கையழி - (வி) செயலறு, be disabled, be broken-hearted
புல்லென் கண்ணர் புரவலர் காணாது
கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர்
வாடிய பசியர் ஆகி - புறம் 240/11-13
பொலிவழிந்த கண்ணினையுடையராய் தம்மை ஆதரிப்போரைக் காணாது
ஆரவாரிக்கும் கிளையுடனே செயலற்று, அறிவுடையோர்
தம் மெய் உணங்கிய பசியையுடையராய்

 மேல்
 
    கையறவு - (பெ) வருந்திச் செயலற்று இருக்கும் நிலை, anguished helplessness
பையென
வடந்தை துவலை தூவ குடம்பை
பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ
கங்குலும் கையறவு தந்தன்று - நற் 152/5-8
மெல்லென
வாடைக்காற்று மழைத்துளிகளைத் தூவ, கூட்டினில்
பெடையோடு உறவுகொள்ளும் அன்றில் பறவையின் மெலிவான குரலும் கலந்து
இரவுப்பொழுதும் செயலற்ற நிலையைத் தந்தது

 மேல்
 
    கையறு - (வி) செயலற்றுப்போ, remain helpless
பாரி மாய்ந்து என கலங்கி கையற்று
நீர் வார் கண்ணேம் தொழுது நின் பழிச்சி - புறம் 113/5,6
பாரி மன்னம் இறந்தானாக, கலங்கிச் செயலற்று
நீர் ஒழுகும் கண்ணையுடையவராய்த் தொழுது உன்னை வாழ்த்தி

 மேல்
 
    கையாறு - (பெ) செயலற்ற நிலை, feeing helpless
மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால்
கையாறு கடைக்கூட்ட கலக்கு_உறூஉம் பொழுது-மன் - கலி 31/6,7
மெய்யை நடுக்கும் பின்பனிக்காலப் பனியுடன், முன்பனிக்கால வாடையும் சேர்ந்து
நம்மைச் செயலிழக்கும் நிலைக்குத் தள்ள, நெஞ்சத்தைக் கலக்கும் இளவேனில் இது,

 மேல்
 
    கையிக - (வி) கட்டுப்பாட்டை மீறு, beyond control
எஃகு உடை எழில் நலத்து ஒருத்தியொடு நெருநை
வைகு புனல் அயர்ந்தனை என்ப அதுவே
பொய் புறம் பொதிந்து யாம் கரப்பவும் கையிகந்து
அலர் ஆகின்றால் - அகம் 116/9-12
நுண்ணிய நலத்தினையுடைய ஒரு பரத்தையோடு நேற்று
இடைவிடாமல் ஒழுகும் புனலில் விளையாட்டு அயர்ந்தாய் எனப் பலரும் கூறுவர், அதுதான்
பொய் என்று புறத்தே மூடி நாம் மறைக்கவும் எம் செயலினைக் கடந்து
அலராகிநின்றது.

 மேல்
 
    கையிடு - (வி) கையால் குறிசெய், show a hand signal
முள் புற முது கனி பெற்ற கடுவன்
துய் தலை மந்தியை கையிடூஉ பயிரும் - புறம் 158/23,24
முள்ளைப் புறத்தேயுடைய முதிர்ந்த பலாப்பழத்தைப் பெற்ற கடுவன்
பஞ்சு போலும் மயிரையுடைத்தாகிய தலையையுடைய மந்தியைக் கையால் குறிசெய்து அழைக்கும்
- ஔ.சு.து.உரை

 மேல்
 
    கையுறை - (பெ) 1. காணிக்கைப் பொருள், offering
                     2. அன்பளிப்பு, நன்கொடை, present
1.
கள்ளும் கண்ணியும் கையுறை ஆக
நிலைக்கோட்டு வெள்ளை நால் செவி கிடாஅய்
நிலைத்துறை கடவுட்கு உளப்பட ஓச்சி - அகம் 156/13-15
கள்ளினையும் மாலையையும் காணிக்கைப் பொருளாகவும்,
நிமிர்ந்த கொம்பையுடைய வெள்ளாட்டின் தொங்குகின்ற செவியையுடைய கிடாயையும்
துறையில் நிலைபெற்ற கடவுளுக்கு சேர்த்துச் செலுத்தி,
2.
அடக்கம் இல் போழ்தின்_கண் தந்தை காமுற்ற
தொடக்கத்து தாய் உழை புக்காற்கு அவளும்
மருப்பு பூண் கையுறை ஆக அணிந்து
பெருமான் நகை முகம் காட்டு என்பாள் - கலி 82/10-13
ஓரிடத்தில் நில்லாது ஓடித்திரிந்த நேரத்தில், இவனது தந்தை விரும்பி ஆசைகொண்ட
தொடக்க காலத்துத் தாய் ஒருத்தியின் வீட்டிற்குச் சென்றான், அவளும்
கொம்புள்ள இடபம் பொறித்த மோதிரத்தை அன்பளிப்பாக அணிந்து
'பெருமானே! சிறிது சிரித்துக் காட்டு' என்றாள்.

 மேல்
 
    கைவண் - (பெ.அ) வள்ளல்தன்மையுடைய, having munificence
இழை அணி நெடும் தேர் கைவண் செழியன் - அகம் 47/15
அணிகலன்கள் பூண்ட நீண்ட தேரினையும் வள்ளல்தன்மையும் கொண்ட செழியன்

 மேல்
 
    கைவண்மை - (பெ) வள்ளல்தன்மை, வள்ளண்மை, munificence
வளனும் ஆண்மையும் கைவண்மையும்
மாந்தர் அளவு இறந்தன - பதி 73/15,16
செல்வமும், வீரமும், வள்ளல்தன்மையும்
மக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாயின

 மேல்
 
    கைவல் - (பெ.அ) தொழில்திறம் மிக்க, efficient in handiworks
கைவல் கம்மியன் கவின் பெற புனைந்த
செம் கேழ் வட்டம் - நெடு 57,58
கைவேலைப்பாட்டில் சிறந்த கைவினைக்கலைஞன் அழகுபெறச் செய்த
சிவந்த நிறத்தையுடைய விசிறி 

 மேல்
 
    கைவள் - (பெ.அ) வள்ளல்தன்மையுடைய, பார்க்க : கைவண்
கைவள் ஈகை பண்ணன் சிறுகுடி - புறம் 70/13
வள்ளண்மையுடன் கொடுத்தலையுடைய பண்ணன் என்பானின் சிறுகுடி என்னும் ஊர்

 மேல்