|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
கிடக்கை - (பெ) 1. நிலப்பரப்பு, long stretch of land
2. ஒரு பொருள் அமைந்திருக்கும் நிலை, being in a certain state
3. படுத்திருக்கும் நிலை, recumbent posture
1.
திரை பிறழிய இரும் பௌவத்து
கரை சூழ்ந்த அகன் கிடக்கை - பொரு 178,179
திரை முரிந்த கரிய கடலின்
கரைகள் சூழ்ந்த அகன்ற நிலப்பரப்பில்,
2.
முருகு அமர் பூ முரண் கிடக்கை - பட் 37
மணம்பொருந்திய பூக்கள் நிறத்தால் தம்முள் மாறுபட்டுக் கிடக்கும் நிலை
3.
மறி இடைப்படுத்த மான் பிணை போல
புதல்வன் நடுவணன் ஆக நன்றும்
இனிது மன்ற அவர் கிடக்கை - ஐங் 401/1-3
குட்டியினை நடுவில்போட்டுப் படுத்த ஆண்மானும், பெண்மானும் போல
தம் மகன் நடுவில் இருக்க, மிகவும்
இனிமையானது, உண்மையாகவே, அவர்கள் படுத்திருப்பது
மேல்
கிடங்கில் - (பெ) ஒரு சங்ககால ஊர், a city in sangam period.
கிடங்கில் என்பது சங்ககாலத்து ஊர்களில் ஒன்று ஆகும். இப்போதுள்ள திண்டிவனம் என்னும் ஊரின் ஒரு பகுதிதான்
கிடங்கில் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவனான ஓய்மான் நாட்டு
நல்லியக் கோடன் 'கிடங்கில் கோமான்' என்று சிறப்பிக்கப்பட்டுள்ளான். இந்த அரசனின் தலைநகர் மாவிலங்கை.
கிடங்கில் அரசர்கள் சிறந்த உழவர்களுக்குக் 'காவிதி' என்னும் விருது வழங்கிப் பாராட்டினர். அப்படிப் பாராட்டப்பட்ட
இருவர் புலவர்களாகவும் விளங்கியுள்ளனர். கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார், கிடங்கில் காவிதிப்
பெருங்கொற்றனார் ஆகியோர் காவிதி விருது பெற்ற புலவர்கள். குறுந்தொகை 252ஆம் பாடலைப் பாடிய புலவர்
குலபதி நக்கண்ணனார் இந்தக் கிடங்கில் ஊரில் வாழ்ந்தவர்.
கிளை மலர் படப்பை கிடங்கில் கோமான்
தளை அவிழ் தெரியல் தகையோர் பாடி - சிறு 160,161
கிளைகளில் பூக்களையுடைய தோட்டங்களையுடைய கிடங்கில் (என்னும் ஊர்க்கு)அரசனாகிய
அரும்பு அவிழ்ந்த மாலையையுடைய அழகுடையோனைப் பாடி
மேல்
கிடங்கு - (பெ) ஆழமான பள்ளம், அகழி, trench, moat, ditch
எழுது எழில் சிதைய அழுத கண்ணே
தேர் வண் சோழர் குடந்தை_வாயில்
மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த
பெயல் உறு நீலம் போன்றன - நற் 379/6-9
மை தீட்டிய கண்களின் அழகு குலைந்துபோகுமாறு அழுத கண்கள்,
தேர்களை இரவலர்க்கு வழங்கும் சோழரின் குடவாயில் என்னும் ஊரில் உள்ள
மழைபெய்து நிரம்பிய அகழியில் குளிர்ச்சியாக மலர்ந்த
மழைநீரை ஏற்ற நீலமலரைப் போல ஆயின;
மேல்
கிடாய் - (பெ) ஆட்டின் ஆண், male of sheep / goat
கள்ளும் கண்ணியும் கையுறையாக
நிலை கோட்டு வெள்ளை நால் செவி கிடாஅய்
நிலை துறை கடவுட்கு உளப்பட ஓச்சி
தணி மருங்கு அறியாள் யாய் அழ - அகம் 156/13-16
கள்ளினையும், மாலையையும் கையுறைப் பொருளாக,
நிமிர்ந்த கொம்பினையுடைய வெள்ளாட்டின் தொங்கும் செவிகளையுடைய கிடாயை
துறையினிடத்து நிலைபெற்ற தெய்வத்திற்கு அவற்றுடன் செலுத்தியும்
தன் மகளுக்கு உற்றநோய் தணியும் உபாயம் அறியாளாய் அழ
மேல்
கிடுகு - (பெ) கேடயம், shield
கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி - பட் 78
கேடயங்களை வரிசையாக அடுக்கி, வேலை ஊன்றி
மேல்
கிடை - (பெ) இறகு போல் இலையைக் கொண்ட நீர்த்தாவரம், நெட்டி, pith plant
அறு கய மருங்கின் சிறு கோல் வெண் கிடை - புறம் 75/8
வற்றிய குளத்தில் சிறிய தண்டாகிய வெண்மையான நெட்டியின்
கிடை என்று சொல்லப்படும் நெட்டி என்ற இந்தத் தாவரம் சடை , சடைச்சி , கிடைச்சி , கிடேச்சு,
கோத்திரம் என்றெல்லாம் அறியப்படும் ;
வயலுக்கு உரமாக அமைவது ; கால் நடைகளுக்கு உகந்ததல்ல; இது களையாகக் கருதப்படுகிறது ;
இதன் கரி, வெடிமருந்து தயாரிக்கப் பயன்படுகிறது; இதன் தட்டை மீன்பிடி வலைகளுக்கு
மிதவைகளாகப் பயன்படுத்தப்படுகிறது ;
மேல்
கிண்கிணி - (பெ) கால் கொலுசு, tinkling ornament for the ankle
இந்தக் கிண்கிணியில் தவளை வாயைப் போன்ற அமைப்பினையுடைய உருண்டைகள்
கோக்கப்பட்டிருக்கும். இவை காசு எனப்படும். இந்தக் காசுகளுக்குள் முத்து, மணி போன்ற
பரல்கள் போடப்பட்டிருப்பதால் நடக்கும்போது இவை ஒலி எழுப்பும்.
1.
கிண்கிணி காலில் அணிவது.
கிண்கிணி கவைஇய ஒண் செம் சீறடி - திரு 13
2.
கிண்கிணியின் குமிழ்களுக்குள் பரல்களிருக்கும், அவை நடக்கும்போது இனிமையான ஒலி எழுப்பும்
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப - நற் 250/2
அரி என்பது சலங்கைகளுக்குள் இடப்படும் முத்து, மணி போன்ற பரல்கள்.
3.
கிண்கிணி சிறுவர்கள் அணிவது.
குரும்பை மணி பூண் பெரும் செம் கிண்கிணி
பால் ஆர் துவர் வாய் பைம் பூண் புதல்வன் - நற் 269/1,2
4. கிண்கிணிச் சலங்கைகள் சற்றே திறந்த வாயை உடையன. அது தவளையின் வாய் போல் இருக்கும்.
தவளை வாஅய பொலம் செய் கிண்கிணி
காசின் அன்ன போது ஈன் கொன்றை - குறு 148/2,3
5.
கிண்கிணியைப் பெண்களும் அணிவதுண்டு.
கிண்கிணி மணி தாரோடு ஒலித்து ஆர்ப்ப ஒண் தொடி
பேர் அமர் கண்ணார்க்கும் - கலி 74/13,14
6.
கிண்கிணியைப் பொன்னாலும் செய்வார்கள்.
பொலன் செய் கிண்கிணி நலம் பெறு சேவடி - அகம் 254/3
7.
கிண்கிணியின் சலங்கைகளைப் பொடிவைத்து ஊதி ஒட்டுவார்கள்.
பொடி அழல் புறந்தந்த செய்வுறு கிண்கிணி - கலி 85/2
8.
சிறுவர்கள் பெரியவர்களானதும் கிண்கிணியைக் களைந்து கழல் பூணுவார்கள்
கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டு - புறம் 77/1
மேல்
கிணை - (பெ) ஒரு வகைப் பறை, தடாரி எனப்படும், a drum
1.
பாணர்குடியில் பெண்களும் இதனை வாசிப்பர். அவர் கிணைமகள் எனப்படுவார்.
வளை கை கிணை_மகள் - சிறு 136
2.
போர் மறவர்கள் இதனை இசைத்து மகிழ்வர்.
வெம் போர் மள்ளர் தெண் கிணை கறங்க - பதி 90/44
3.
முருகனை வணங்குவோர் இதனை இசைத்து வணங்குவர்.
கேட்டுதும் பாணி எழுதும் கிணை முருகன்
தாள் தொழு தண் பரங்குன்று - பரி 8/81,82
4.
உறுதியான தோல் வாரினால் இது இறுகக் கட்டப்பட்டிருக்கும். கோலினால் முழக்கப்படும்.
வள் வார்
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை - அகம் 249/2,3
5.
பாணர் ஊர்விட்டு ஊர் போகும்போது நடை வருத்தம் தீர மரத்தடியில் இதனை இசைத்து மகிழ்வர்
சுரம் முதல் வருத்தம் மரம் முதல் வீட்டி
பாடு இன் தெண் கிணை கறங்க - அகம் 301/9,10
6.
மன்னர் படையெடுத்துச் செல்லும்போது இதனை இசைத்துச் செல்வது வழக்கம்.
தந்தை தம்மூர் ஆங்கண்
தெண் கிணை கறங்க சென்று ஆண்டு அட்டனனே - புறம் 78/11,12
மேல்
கிம்புரி - (பெ) நீர் விழுதற்கு மகரவாய் வடிவில் அமைக்கப்பெற்ற தூம்பு, Spout shaped like the mouth of a shark
கிம்புரி பகு வாய் அம்பணம் நிறைய - நெடு 96
மீனின் வாய்போன்று பகுக்கப்பட்ட நீர்விழும் குழாய் நிறைய
மேல்
கிலுகிலி - (பெ) கிலுகிலுப்பை, children's rattle
உமணர் வண்டிகளோடு செல்லும் குரங்கு, உமணர் தம்முடன் கொண்டுசெல்லும்
முத்து உள்ள கிளிஞ்சல்களைக் கிலுகிலுப்பையாக ஆட்டி, உமணர் குழந்தைகளோடு
விளையாடுமாம்.
நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த
மகாஅர் அன்ன மந்தி மடவோர்
நகாஅர் அன்ன நளி நீர் முத்தம்
வாள் வாய் எருந்தின் வயிற்று அகத்து அடக்கி
தோள் புறம் மறைக்கும் நல்கூர் நுசுப்பின்
உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற
கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும் - சிறு 55-61
வலிமையுள்ள எருதுகளையுடைய உப்பு வாணிகரின் வண்டி ஒழுங்கோடு வந்ததும்,
(அவர்களின்)பிள்ளைகளைப் போன்றதும் ஆன மந்தி, மடப்பத்தையுடைய மகளிர்
சிரிப்பு(ப் பல்) போன்ற செறிந்த நீர்மையுடைய முத்தினை,
வாளின் வாய் போலும் வாயையுடைய கிளிஞ்சிலின் வயிற்றுக்குள் இட்டுப்பொதிந்து,
தளர்ந்த இடையினையுடைய, தோளையும் முதுகையும் மறைக்கின்ற
அசைகின்ற இயல்புடைய ஐந்து பகுதியாகிய கூந்தலினையுடைய உப்பு வாணிகத்தியர் பெற்ற,
விளங்குகின்ற அணிகலன்களையுடைய, பிள்ளைகளுடன் கிலுகிலுப்பையாக்கி விளையாடும்
மேல்
கிழக்கு - (பெ) கீழே, down
பொன் செய் வள்ளத்து பால் கிழக்கு இருப்ப - நற் 297/1
பொன்னால் செய்யப்பட்ட கிண்ணத்தில் இருக்கும் பால் கீழே இருக்க
- கிழக்கு - கீழ் - ஔவை.சு.து.விளக்கம்
கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே - குறு 337/2
கிளைத்த மயிர்க்கொத்துக்கள் கீழே தாழ்ந்தன
மேல்
கிள்ளி - (பெ) சோழமன்னருக்குரிய பெயர்களில் ஒன்று, one of the names for the chOzha kings
ஏந்து கோட்டு யானை இசை வெம் கிள்ளி - நற் 141/9,10
உயர்ந்த கோடுகளையுடைய யானைப்படை உடைய புகழே விரும்பும் சோழனான கிள்ளி
- கிள்ளி சோழனது பெயர். கிள்ளி என்ற பெயரையுடைய சோழமன்னர் பலர் இருந்திருத்தலின் இக் கிள்ளி இன்னான்
என்பது விளங்கவில்லை - ஔவை.சு.து.விளக்கம்
கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த
வயல் வெள் ஆம்பல் உருவ நெறி தழை - நற் 390/3,4
வள்ளல்தன்மை உடைய கிள்ளிவளவனின் வெண்ணி என்னும் ஊரைச் சூழவுள்ள
வயல்களிலுள்ள வெள்ளாம்பலின் அழகான மடிப்புகளையுடைய தழையை
மேல்
கிள்ளிவளவன் - (பெ) ஒரு சோழ மன்னன், a chOzha king
நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகிய சோழ மன்னரைப் பற்றிப் பாடிய புலவர்களே குளமுற்றத்துத் துஞ்சிய
கிள்ளிவளவனைப் பற்றியும் பாடியிருப்பதால், கிள்ளிவளவனும் இவர்கள் காலத்திலேயே வாழ்ந்தவனாவான்.
இங்குக் குறிப்பிடப்படும் கிள்ளிவளவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண்
கிள்ளிவளவன் படர்குவை ஆயின் - புறம் 69/15,16
ஒள்ளிய எரியை ஒக்கும் நிறம் பொருந்திய பசும்பொன்னால் செய்யப்பட்ட பூணினையுமுடைய
கிள்ளிவளவனிடத்தே செல்குவையாயின்
மேல்
கிள்ளை - (பெ) கிளி, parrot
கிள்ளை
வளை வாய் கொண்ட வேப்ப ஒண் பழம் - குறு 67/1,2
கிளியானது
தன் வளைந்த அலகில் கொண்டிருக்கும் வேம்பின் ஒளிவிடும் பழம்
மேல்
கிள - (வி) தெளிவாகக் கூறு, குறிப்பாகக் கூறு, state clearly, state specifically
கொன் ஒன்று கிளக்குவல் அடு போர் அண்ணல்
கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம்
கெடாது நிலைஇயர் நின் சேண் விளங்கு நல் இசை - மது 207-209
மேலான ஒன்றைக் கூறுவேன், கொல்லும் போர்த்தொழில் வல்ல தலைவனே,
கேட்பாயாக, நெடிது வாழ்க, கெடுக நின் மயக்கம்,
கெடாமல் நிலைபெறுக உனது தொலைதூரத்தும் சிறந்து விளங்கும் நல்ல புகழ் -
மேல்
கிளர் - (வி) 1. ஒளிவிடு, shine, to be conspicuous, resplendent
2. பொங்கியெழு, swell upwards
3. மிகு, be intense, abundant, increase
4. உயர், மேலெழு, spring up
5. வளர், shoot up
1.
கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும் - சிறு 61
ஒளிவிடுகின்ற அணிகலன்களையுடைய, பிள்ளைகளுடன் கிலுகிலுப்பையாக்கி விளையாடும்
2.
கடல் கிளர்ந்து அன்ன கட்டூர் நாப்பண் - புறம் 295/1
கடல் பொங்கி எழுந்ததைப் போன்ற பாசறையின் நடுவில்
3
புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவைக்கு - நெடு 166
தனிமையொடு கிடக்கும் அன்பு மிகுகின்ற இளம்பெண்ணுக்கு
4.
அரவு கிளர்ந்து அன்ன விரவு_உறு பல் காழ்
வீடு உறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்
திருந்து_இழை அல்குல் - நற் 366/1-3
பாம்பு படமெடுத்து உயர்ந்ததைப் போன்ற, வேறுபட்ட பலவான மணிகளைக் கோத்து
நெகிழ உடுக்கப்பட்ட நுண்ணிய ஆடை இடையிடையே வந்து பளிச்சிடும்
திருத்தமான அணிகலன் அணிந்த அல்குலையும்
5.
கேழல் உழுது என கிளர்ந்த எருவை - ஐங் 269/1
கிழங்குகளை எடுக்கக் காட்டுப்பன்றி மண்ணைத் தோண்டிவிட அதில் செழித்து வளர்ந்த கோரைப்புல்
மேல்
கிளவி - (பெ) 1. சொல், word
2. பேச்சு, கூற்று, speech,
1.
நாம் உறு துயரம் செய்யலர் என்னும்
காமுறு தோழி காதலம் கிளவி
இரும்பு செய் கொல்லன் வெம் உலை தெளித்த
தோய் மடல் சில் நீர் போல
நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே - நற் 133/7-11
நாம் படும் துன்பத்தை நம் தலைவர் செய்யமாட்டார் என்னும்
என்பால் விருப்பமிக்க தோழியே! உன் அன்புமிக்க இச் சொல்லானது
இரும்புவேலை செய்கின்ற கொல்லனின் வெப்பமான உலையில் தெளித்த
பனைமடலில் தோய்த்த சிறிதளவு நீரைப் போல
நோய்மிக்க என் நெஞ்சினை ஆற்றுவதாய் இருக்கிறது ஓரளவுக்கு.
2.
அம் தீம் கிளவி தான் தர எம் வயின்
வந்தன்று மாதோ காரே - ஐங் 490/1,2
அழகும் இனிமையுமுள்ள பேச்சினையுடயவளை எம்மிடத்தில் தருவதற்கு
வந்துவிட்டது கார்காலம்
மேல்
கின்னரம் - (பெ) இசையெழுப்பும் பறவை, A sweet-voiced bird credited with musical powers
இன் சீர்
கின்னரம் முரலும் அணங்கு உடை சாரல் - பெரும் 493,494
இனிய தாளத்தில்,
கின்னரம் என்னும் பறவைகள் பாடும் தெய்வங்கள் உறையும் சாரலிடத்தே
மேல்
|
|
|