<<முந்திய பக்கம்

சங்க இலக்கியம் - அருஞ்சொற்களஞ்சியம்
கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
கோ - முதல் சொற்கள்
கோ
கோகுலம்
கோங்கம்
கோங்கு
கோசர்
கோட்டம்
கோட்டுமா
கோட்டுமீன் 6
கோடல்
கோடி
கோடியர்
கோடு
கோடை
கோணம்
கோத்தை
கோது
கோதை
கோதைமார்பன்
கோப்பு
கோப்பெருஞ்சோழன்
கோபம்
கோய்
கோலு
கோவம்
கோவல்
கோவலர்
கோவலூர்
கோவை
கோழ்
கோள்
கோள்மா
கோள்மீன்
கோளாளர்
கோளி
கோன்

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    கோ - 1. (வி) 1. மணி முதலியவற்றில் ஊடு நூலைப்புகுத்தி இணை, to string as beads, flowers
                 2. தரி, put on
          2. (பெ) 1. அரசன், king
               2. பசு, cow
1.1
புலி பல் கோத்த புலம்பு மணி தாலி - அகம் 7/18
பொன் சரட்டில் புலிப்பல் கோத்த ஒற்றைத் தாலியையும்
1.2
வாள் தோள் கோத்த வன்கண் காளை - நெடு 182
வாளைத் தோளில் கோத்த தறுகண்மையையுடைய காளைபோன்றவன்
2.1.
புன் கால் உன்னத்து பகைவன் எம் கோ
புலர்ந்த சாத்தின் புலரா ஈகை
மலர்ந்த மார்பின் மா வண் பாரி - பதி 61/6-8
ன்மையான அடிமரத்தையுடைய உன்ன மரத்துக்குப் பகைவனும், எமக்கு அரசனும்,
பூசப்பட்டுப் புலர்ந்துபோன சந்தனத்தையும், அப்படிப் புலர்ந்து போகாத ஈகைத்திறத்தையும்
கொண்ட அகன்ற மார்பினையுடைய பெரிய வள்ளல்தன்மையுடைய பாரி
2.2.
இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன்
கோ இனத்து ஆயர்_மகன் அன்றே ஓவான் - கலி 103/36,37
"சின்னவளே! இது ஒன்றைப் பார்! இவன் ஒருத்தன்!
பசுக் கூட்டத்தின் ஆயர்மகன் அல்லவா! இதை முடிக்காமல் போகமாட்டான்

 மேல்
 
    கோகுலம் - (பெ) குயில், cuckoo
சிகை மயிலாய் தோகை விரித்து ஆடுநரும்
கோகுலமாய் கூவுநரும் - பரி 9/64,65
தம் கூந்தலையே மயிலின் தோகைபோல் விரித்து ஆடுபவர்களும்,
குயில்களாகக் கூவுபவரும்,

 மேல்
 
    கோங்கம் - (பெ) ஒரு வகை இலவ மரம், பூ, Cochlospermum gossypium;
காட்டில் மரம் நிறையப் பூத்திருக்கும்
பல் பூ கோங்கம் அணிந்த காடே - நற் 202/11

எல்லாப் பருவத்திலும் பூக்கும்.
பருவம் இல் கோங்கம் பகை மலர் இலவம் - பரி 19/79

பூக்கள் அகல விரிந்திருக்கும்.
குருகிலை மருதம் விரி பூ கோங்கம் - குறி 73

இதன் பூந்தாது பொன் நிறத்தில் இருக்கும்.
புது மலர் கோங்கம் பொன் என தாது ஊழ்ப்ப - கலி 33/12

இது மணம் மிக்கது. மலையிலும் வளரக்கூடியது.
தண் நறும் கோங்கம் மலர்ந்த வரை எல்லாம் - கலி 42/16

	

 மேல்
 
    கோங்கு - (பெ) ஒரு வகை இலவ மரம், silk cotton tree, bombax gossipium

கோங்கு, கோங்கம் ஆகிய இரண்டும் ஒன்றே என்பர்.
புது மலர் கோங்கம் பொன் என தாது ஊழ்ப்ப - கலி 33/12
பொரி அரை கோங்கின் பொன் மருள் பசு வீ - ஐங் 367/1
என்பதால், கோங்கம், கோங்கு ஆகியவற்றின் பூக்கள் பொன் நிறத்தது எனத் தெரிகிறது.

கோங்கு என்பது silk cotton tree எனப்படுவதாலும்,
கோங்கம் எனப்படும் Cochlospermum gossypium என்ற மரம், yellow silk cotton tree
எனப்படுவதாலும், இரண்டும் ஒன்றே எனக் கொள்ளல் ஏற்புடையது எனத் தெரிகிறது.

கோங்கின் முகை இளம்பெண்களின் குவிந்த மார்பகத்துக்கு ஒப்பாகப் பலமுறை சொல்லப்படுகிறது.

தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின்
குவி முகிழ் இள முலை கொட்டி - திரு 34,35

யாணர் கோங்கின் அவிர் முகை எள்ளி
பூண் அகத்து ஒடுங்கிய வெம் முலை - சிறு 25,26

முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் - குறு 254/2

முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை என
பெயல் துளி முகிழ் என பெருத்த நின் இள முலை - கலி 56/23,24

கோங்கின்
முதிரா இள முகை ஒப்ப எதிரிய
தொய்யில் பொறித்த வன முலையாய் - கலி 117/2-4

கோங்கு முகைத்து அன்ன குவி முலை ஆகத்து - அகம் 240/11

வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
முகை வனப்பு ஏந்திய முற்றா இள முலை - புறம் 336/9,10

இது கோங்கம் பூவின் மொட்டினை ஒத்து வருகிறது.
ஆனால், கோங்கம் பூவின் மொட்டு ஒருமுறைகூட பெண்களின் மார்புக்கு ஒப்பாகக் கூறப்படவில்லை
என்பதுவும் கவனிக்கத்தக்கது.

கோங்கம் என்ற மரம் உறுதியான அடிமரத்தைக் கொண்டது.(திணி நிலை கோங்கம் - ஐங் 343/2)
ஆனால் கோங்கு என்ற மரம் பொரிந்துபோன அடிமரத்தைக் கொண்டது.
பொரி அரை கோங்கின் பொன் மருள் பசு வீ - ஐங் 367/1

கோங்கம் பூவைப்போலவே கோங்கின் பூவும் நறுமணமுள்ளது.
தண் நறும் கோங்கம் மலர்ந்த வரை எல்லாம் - கலி 42/16
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப - அகம் 317/11

கோங்கின் பொகுட்டு எலியின் காதைப்போன்றது என்கிறது புறம்.
வேனில் கோங்கின் பூம் பொகுட்டு அன்ன
குடந்தை அம் செவிய கோட்டு எலி ஆட்ட - புறம் 321/4,5

எனவே, இது மேலும் ஆய்வுக்குரியது.

 மேல்
 
    கோசர் - (பெ) பழைய வீரக்குடியினருள் ஒரு சாரார், An ancient caste of warriors;
	கடைச்சங்க காலத்தில், கோசர் என்றொரு வகுப்பார் மூவேந்தர்க்கும் படைத்தலைவராகவும், 
தமிழகத்தில் ஆங்காங்கு வெவ்வேறு சிற்றரசராகவும் இருந்தமை, பழந்தமிழ் நூல்களாலும் செய்யுட்களாலும் 
அறியக்கிடக்கின்றது. இவ் வகுப்பாரைப்பற்றி அறிஞரிடை பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.
     	காலஞ்சென்ற ரா. இராகவையங்கார், தம் 'கோசர்' என்னும் ஆராய்ச்சி நூலில் கோசராவார் 
காசுமீர நாட்டினின்று வேளிரையடுத்துக் கோசாம் பியைத் தலைநகராகக்கொண்ட வத்த (வத்ஸ) நாட்டு 
வழியாய்த் தமிழ்நாடு போந்தவர் என்று கூறுகிறார்.
   	கோசர் என்பவர் பண்டைக்காலத் தென்னிந்தியாவின் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள் என்றும்
இவர்கள் தொன்மையான குடியைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் துளு நாட்டிலும், கொங்கணத்திலும், 
கொங்கு நாட்டிலும் அதிகாரம் பெற்றிருந்ததோடு தமிழ் நாட்டின் வேறு பல பகுதிகளிலும் சிற்றரசர்களாக 
இருந்திருக்கின்றனர் என்றும் அறிஞர் கருதுகின்றனர். 
	இவர்கள் கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கருதப்படுகிறார்கள்.
	இவர்களைப்பற்றிச் சங்க இலக்கியங்களில் பல குறிப்புகள் கிடைக்கின்றன.
1. பழையன் என்ற மோகூர் மன்னனின் அரசவையில் இவர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.
பழையன் மோகூர் அவையகம் விளங்க
நான் மொழி கோசர் தோன்றி அன்ன - மது 508,509
பழையன் (என்னும் மன்னனின்)மோகூரிடத்து அரசவை திகழுமாறு
நான்மொழிக்கோசர் வீற்றிருந்தாற் போன்று,
2.
இவர்கள் பாண்டியன் நெடுஞ்செழியனின் அரண்மனையில் மன்னனின் ஏவலாளராக இருந்திருக்கின்றனர்.
கடந்து அடு வாய் வாள் இளம் பல் கோசர்
இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப - மது 773,774
(பகைவரை)வென்று கொல்லும் தப்பாத வாளினையுடைய இளைய பலராகிய கோசர்கள்
நடக்கின்ற நெறிமுறைமையால் உன்னுடைய மெய்ம்மொழியைக் கேட்டு நடக்க,
3.
நாலூர்க் கோசர் என்பார் பறை முழக்கி, சங்கு ஊதி, வரி வாங்கினர்
பறை பட பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன் மூதாலத்து பொதியில் தோன்றிய
நால் ஊர் கோசர் நன் மொழி போல - குறு 15/1-3
முரசு முழங்க, சங்கு ஒலிக்க, அமர்ந்து
மிகப் பழமையான ஆலமரத்துப் பொதுவிடத்தில் தோன்றும்
நான்கு ஊரிலுள்ள கோசர்களின் நன்மொழியைப் போல
4.
இவர்கள் வஞ்சினம் கூறி நன்னன் என்பானுடன் போரிட்டு அவனை வென்றதால் சொன்னதைச் செய்யும்
கோசர் எனப்பட்டனர்.
நன்னன்
நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய
ஒன்றுமொழி கோசர் போல - குறு 73/2-4
நன்னன் என்பவனின்
மணமுள்ள மா மரத்தை அழித்து நாட்டுக்குள் போக்கிய
சொல்தவறாக் கோசர் போல
5.
கோசர்களின் மூதாதையர். துளுநாட்டில் வாழ்ந்துவந்தனர். வந்தவர்களையெல்லாம் முன்பே அறிந்தவர் போன்று
வரவேற்றுப் பாதுகாக்கும் பண்பினை உடையவர்கள். எனவே இவர்கள் செம்மல் கோசர் எனப்பட்டனர்.
மெய்ம் மலி பெரும் பூண் செம்மல் கோசர்
கொம்மை அம் பசும் காய் குடுமி விளைந்த
பாகல் ஆர்கை பறை கண் பீலி
தோகை காவின் துளுநாட்டு அன்ன		5
வறும் கை வம்பலர் தாங்கும் பண்பின் - அகம் 15/2-6
மெய்மையையே நிறைந்த பெரிய கொள்கையாய்ப் பூண்ட தலைமை சான்ற கோசர்களின் -
திரண்ட பசிய காய்களின் குடுமிப்பக்கம் பழுத்த
பாகல்பழங்களை விரும்பி உண்ணும், பறை போன்ற கண்ணையுடைய பீலிகளையுடைய
மயில்கள் வாழும் சோலைகளையுடைய - துளுநாட்டைப் போன்று,
வெறுங்கையுடன் வரும் அயலவர்களை நன்கு உபசரிக்கும் பண்புடைய
6.
இவர்கள் சிறந்த போர் வீரர்கள். அதனால் இவர்கள் முகத்தில் தழும்பு இருக்கும். இதனால் இவர்கள்
கருங்கண் கோசர் எனப்பட்டனர். நியமம் என்பது அவர்களின் ஊர். அது மிகவும் செல்வம் படைத்ததாக 
இருந்தது.
யாணர்
இரும்பு இடம்படுத்த வடு உடை முகத்தர்
கருங்கண் கோசர் நியமம் - அகம் 90/10-12
எப்போதும் புதுவருவாயையுடைய,
வாளினால் ஏற்பட்ட வடுக்களையுடைய முகத்தினரான
அஞ்சாமையை உடைய கோசர்கள்வாழும் நியமம் என்ற ஊர்
7.
இவர்களின் ஒருசாரார் நெய்தலம்கானல்(செறு) என்ற ஒரு வளமான பகுதியில் இருந்திருக்கிறார்கள்.  
அவர்களுக்கு அஃதை என்பான் தலைவனாக இருந்திருக்கிறான். இவன் வள்ளலாக இருந்திருக்கிறான்.
இவர்கள் மிகப்பெரிய வேற்படையை வைத்திருந்ததினால் பல்வேல் கோசர் எனப்பட்டனர். கெட்டுப்போன
நிலையிலும், நண்பனாயின் இவர்கள் கைவிடமாட்டார்கள்
நன்று அல் காலையும் நட்பின் கோடார்
சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின்
புன் தலை மட பிடி அகவுநர் பெருமகன்
மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி
காப்பு கைந்நிறுத்த பல் வேல் கோசர்
இளம் கள் கமழும் நெய்தல் அம் செறுவின்
வளம் கெழு நன் நாடு - அகம் 113/1-7
கேடுற்ற நிலையிலும் நட்பில் மாறமாடார்,
அவரிடம் சென்று அவர் குறிப்பில் படும் மாறுபாடு இல்லாத அறிவு உள்ளவர்களாதலால்
புல்லிய தலையினையுடைய இளம் பெண்யானைகளையும் இந்தக் கூத்தரை ஆதரிக்கும் பெருமகனான
குதிரைகளையும் அள்ளிக்கொடுக்கும் வள்ளண்மையில் சிறந்த அஃதை என்பானைப் பாதுகாத்து
அவனைக் காவல் மிக்க இடத்தில் நிலைநிறுத்திய பல வேற்படையினையுடைய கோசர் என்பவரின்
புதிய கள் கமழும் நெய்தலஞ்செறு என்னும்
வளம் பொருந்திய நல்ல நாடு.
8.
ஒன்றுமொழிக்கோசர் என்பார் அன்னி ஞிமிலி என்ற பெண்ணின் தந்தையின் கண்களைக் குருடாக்கினர்.
அதனால் அன்னி ஞிமிலி அழுந்தூர் மன்னனான திதியன் என்பவனிடம் முறையிட்டு அவன் மூலமாக 
இந்தக் கோசரைப் பழிதீர்த்துக்கொண்டாள்.
தந்தை
கண்கவின் அழித்ததன் தப்பல் தெறுவர
ஒன்றுமொழி கோசர் கொன்று முரண் போகிய
கடுந்தெர்த் திதியன் அழுந்தைக் கொடுஞ்குழை
அன்னி ஞிமிலி - அகம் 196/8-12
தன் தந்தையின்
கண்ணின் பார்வையைக் கெடுத்த தவற்றுக்காக, அச்சம் உண்டாக,
ஒன்றுமொழிக் கோசர்களைக் கொன்று பழி தீர்த்துக்கொண்ட
விரைந்த தேரினையுடைய திதியனின் அழுந்தூர் என்னுமிடத்தைச் சேர்ந்த, வளைந்த காதணியையுடைய
அன்னி ஞிமிலி என்பாளைப் போல,
9.
இந்தக் கோசர்கள் வாய்மொழி தவறாதவர்களாக விளங்கினர். இவர்களின் புகழ் நெடுந்தொலைவு பரவிக் 
கிடந்தது. வளம் மிக்க இந்தக் கோசர்கள் சோழ மன்னனைப்பகைத்துக்கொண்டதால், சோழன் இவர்களை 
அழித்து வெற்றிகொண்டான்.
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை
வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி
நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி - அகம் 205/8-10
உண்மை நிலைபெற்ற நெடுந்தூரத்து விளங்கும் நல்ல புகழினையுடைய
செல்வம் மிக்க கோசர்களின் பெரும்படையை அழித்து
அவர்களின் நிலத்தைக் கைக்கொள்ள விரும்பிய பொன்னினால் ஆன பூணை உடைய சோழன்
10.
இந்தக் கோசர்களில் பல்இளம் கோசர் எனப்படுபவர் செல்லூர் என்ற ஊரைச் சார்ந்து வழ்ழ்ந்தனர். அவர்களின்
தலைவன் செல்லிக்கோமான் எனப்படும் ஆதன் எழினி. இவன் வேலெறிவதில் வல்லவன்.
பல் இளம் கோசர் கண்ணி அயரும்
மல்லல் யாணர் செல்லி கோமான்
எறிவிடத்து உலையா செறி சுரை வெள் வேல்
ஆதன் எழினி - அகம் 216/11-14
பல் இளம்கோசர் என்பார் தலையில் மாலைகட்டி விளையாடும்
மிக்க வளம் பொருந்திய செல்லூர்மன்னனாகிய
ஆதன் எழினி
11.
இந்தக் கோசர் காற்றினும் கடிது செல்லும் தேர்ப்படையைக் கொண்டிருந்தனர். அதனால் மோகூர் மன்னனுடன்
போரிட்டு அழிவை ஏற்படுத்தினர். எனினும் அந்த மன்னன் பணியாததினால், வடக்கிலிருந்த மோரியரைத்
துணைக்கு அழைத்தனர். அந்த மோரியரின் தேர்ப்படை மலைவழியே வருவதற்குப் பாதை அமைத்துக்கொடுத்தனர்.
வெல் கொடி
துனை கால் அன்ன புனை தேர் கோசர்
தொன் மூதாலத்து அரும் பணை பொதியில்
இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க
தெம் முனை சிதைத்த ஞான்றை மோகூர்
பணியாமையின் பகை தலைவந்த
மா கெழு தானை வம்ப மோரியர்
புனை தேர் நேமி உருளிய குறைத்த
இலங்கு வெள் அருவிய அறை வாய் - அகம் 251/6-14
வெல்லும் கொடியினையுடைய
விரையும் காற்றைப் போன்ற அழகு செய்யப்பட்ட தேரினையுடைய கோசர் என்பார்
மிக்க தொன்மை வாய்ந்த ஆலமரத்தின் அரிய கிளைகளையுடைய மன்றத்தில்
இனிய ஓசையையுடைய முரசம் குறுந்தடியாலடிக்கப்பெற்று ஒலிக்க,
பகைவரின் போர்முனையை அழித்தகாலத்தில், மோகூர் மன்னன்
பணிந்துவராததினால், அவன்பால் பகைகொண்டவராகிய
குதிரைகள்பொருந்திய சேனையினையுடைய புதிய மோரியர் என்பாரின்
அழகிய தேர்ச் சக்கரங்கள் உருண்டு செல்வதற்காக, உடைத்து வழியாக்கிய
விளங்கும் வெள்ளிய அருவிகளைக் கொண்ட மலைப்பாதை
12.
இளம் பல் கோசர் என்பவர் முருங்க மரக் கம்பத்தின் மீது அம்புகளைப் பாய்ச்சிப் பயிற்சி பெற்றனர்.
இளம் பல் கோசர் விளங்கு படை கன்மார்
இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின்
பெருமரக் கம்பம் போல - புறம் 169/9-11
இளைய பல கோசர் விளங்கிய படைக்கலம் கற்கும்வகையில்
மாறுபட்டவராய் எறிந்த அகன்ற இலையைக் கொண்ட முருக்க்காகிய
பெரிய மரத்தால்செய்யப்பட்ட தூணாகிய இலக்கைப் போல

 மேல்
 
    கோட்டம் - (பெ) 1. சரியான நிலையிலிருந்தும் மாறுபடுதல்
                    2. வளைவான இடம், bend
                    3. கோவில், temple
1.
வேறு உணர்ந்து
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி - நற் 47/7,8
என் நிலையை வேறுவிதமாக உணர்ந்து
தெய்வம் வருத்தியதோ என அறியத்தக்க கழங்குகளின் மாறுபாடான நிலையைக் காட்டியதால்
2.
மர கோட்டம் சேர்ந்து எழுந்த பூ கொடி போல - கலி 94/23
மரத்தின் வளைவான இடத்தைப் பற்றி எழுந்த பூங்கொடியைப் போல
3.
புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு
புக்க_வழி எல்லாம் கூறு - கலி 82/4,5
தேவர்களின் கோவிலை வலம்வந்து பின்னர் என் மகனாகிய இவனோடு
நீ சென்ற இடங்களையெல்லாம் சொல்வாயாக";

 மேல்
 
    கோட்டுமா - (பெ) கொம்புகளையுடைய விலங்கு (காட்டுப்பன்றி, யானை. எருமை) boar, elephant. buffallo
கொடு வில் கானவன் கோட்டுமா தொலைச்சி
பச்சூன் பெய்த பகழி போல - நற் 75/6,7
வளைந்த வில்லையுடைய வேட்டுவன் கொம்புகளையுடைய பன்றியைக் கொன்று
அதன் பசிய ஊனில் பாய்ந்த அம்பினைப் போல

கோட்டுமா வழங்கும் காட்டக நெறியே - ஐங் 282/5
கொம்புகளையுடைய யானைகள் நடமாடும் காட்டுக்குள்ளான வழியில்

 மேல்
 
    கோட்டுமீன் - (பெ) சுறாமீன், shark
கொடும் திமில் பரதவர் கோட்டுமீன் எறிய - குறு 304/4
வளைந்த திமிலையுடைய பரதவர் கொம்புடைய சுறாமீனைப் பிடிக்க,

 மேல்
 
    கோடல் - (பெ) வெண்காந்தள், White species of Malabar glory-lily, gloriosa superba
ஊழ்_உறு கோடல் போல் எல் வளை உகுபவால் - கலி 48/11
உதிர்ந்துவிழும் காந்தள் போல் ஒளிவிடும் வளைகள் கழன்று விழுகின்றனவே!

	

 மேல்
 
    கோடி - (பெ) 1. தனுஷ்கோடி, திரு அணைக்கரை, dhanushkodi, sEthu
                 2. புதிய ஆடை, newly purchased cloth
                 3. ஓர் எண், நூறு இலட்சம், ten million
                 4. ஒரு பெரிய தொகை, எண்ணின் மிகுதி, large number
1.
வென் வேல் கவுரியர் தொன் முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை
வெல் போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல் வீழ் ஆலம் போல - அகம் 70/13-16
வெற்றி வேலினையுடைய பாண்டியரது மிக்க பழமையுடைய திருவணைக்கரையின் அருகில்
முழங்கும் இயல்பினதான பெரிய கடலின் ஒலிக்கின்ற துறைமுற்றத்தில்
வெல்லும் போரினில் வல்ல இராமன் அரிய மறையினை ஆய்தற்பொருட்டாகப் புள்களின் ஒலி இல்லையாகச்
செய்த
பல விழுதுகளைக் கொண்ட ஆலமரம் போல
2.
கொடும் புறம் வளைஇ கோடி கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ- அகம் 86/21,22
முதுகினை வளைத்து புத்தம்புதிய புடவைக்குள்
ஒடுங்கிக்கிடந்த இடத்தினைச் சார்ந்து
3.
ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய - புறம் 18/5
ஒன்றைப் பத்துமுறையாக அடுக்கப்பட்டதாகிய கோடி என்னும் எண்ணிகைக் கடை எண்ணாக இருத்திய
- ஔ.சு.து.உரை
4.
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடு பெரிது நந்தும் - புறம் 184/5,6
அறிவுடைய அரசன் இறைகொள்ளும் நெறியை அறிந்து கொள்ளின்
கோடிப் பொருளினை ஈட்டிக்கொடுத்துத் தானும் மிகவும் தழைக்கும்.

கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய - புறம் 202/7
பல கோடியாக அடுக்கப்பட்ட பொன்னை நுங்களுக்கு உதவிய

 மேல்
 
    கோடியர் - (பெ) கூத்தர், Professional dancers;
விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண்
கோடியர் முழவின் முன்னர் ஆடல்
வல்லான் அல்லன் - பதி 56/1-3
விழா நடைபெறுகின்ற அகன்ற உள்ளிடத்தைக் கொண்ட ஊரில்
கூத்தரின் முழவுக்கு முன்னால் ஆடுவதில்
வல்லவன் அல்லன்

 மேல்
 
    கோடு - 1. (வி) 1. வளை, bend, be crooked
                   2. நெறிதவறு, நடுவுநிலைமை தவறு, go astray, deviate, be partial, biassed;
           - 2. (பெ) 1. ஊதுகொம்பு, Blowing-horn
                    2. யானைத்தந்தம், tusk
                    3. மரக்கொம்பு, கிளை, branch of a tree
                    4. மலை, mountain
                    5. நீர்க்கரை, Bank of a river, bund of a tank or well
                    6. சங்கு, Chank, conch
                    7. விலங்குகளின் கொம்பு, horn
                    8. உச்சி, மலையுச்சி, சிகரம், top, Summit of a hill, peak
                    9. (பிறைநிலவின்) முனை, Cusp, horn, as of the crescent moon
                    10. மேடு, high ground, elevation
                    11. பக்கம், side
                    12. கோல். stick
                    13. வரி, கீற்று, stroke, small line segment, stripe
                    14. கொடுமை,  hardship, oppression
                    15. களைக்கொட்டு, Weeding-hook, grass-hoe, 
                     small iron pick with broad blade and wooden handle;
                    16. மண் அடுப்பின் மேலுள்ள குமிழ், the projections on the earthen oven
                    17. வளைவு, flexure
                    18. யாழின் தண்டு, horn like part of the lute
                    19. நீரைப் பீய்ச்சியடிக்கும் கொம்பு, 
                     A horn-like contrivance used for discharging water in jets;
                    20. முடிச்சுருள், Coil of hair

1.1.
தோடு இடம் கோடாய் கிளர்ந்து
நீடினை விளைமோ வாழிய தினையே - நற் 251/10,11
தோடு போர்த்த கதிர் தலைசாயாய், நிமிர்ந்து
உடனே விளையாது நீட்டித்து விளைவாயாக தினையே
1.2.
கொலை அஞ்சா வினைவரால் கோல் கோடியவன் நிழல்
உலகு போல் உலறிய உயர் மர வெம் சுரம் - கலி 10/6,7
கொலைக்கு அஞ்சாத கொடிய அமைச்சரால் தனது நல்லாட்சியில் பிறழ்ந்த அரசனின் ஆட்சியின் கீழ் வாழும்
நாட்டு மக்களின் உள்ளங்களைப் போல் வற்றிக் காய்ந்துபோன உயர்ந்த மரங்களைக் கொண்ட கொடிய பாலை
வழியில்

நன்று அல் காலையும் நட்பின் கோடார் - அகம் 113/1
நட்டார் ஆக்கமின்றிக் கேடுற்ற காலையும், நட்புத்தன்மையில் திரியாராய்

அதனால் நமர் என கோல் கோடாது
பிறர் என குணம் கொல்லாது - புறம் 55/13,14
அதனால், இவர் நம்முடையவர் எனச் செங்கோல் வளையாது (நடுவுநிலைமை தவறாது)
இவர் நமக்கு அயலார் என அவர் நற்குனங்களைக் கெடாது
2.1
கோடு வாய்வைத்து கொடு மணி இயக்கி - திரு 246
கொம்புகளை ஊதி, வளைவுடைய மணியை ஒலிப்பித்து
2.2
இரும் பிடி குளிர்ப்ப வீசி பெரும் களிற்று
முத்து உடை வான் கோடு தழீஇ - திரு 304,305
பெரிய பிடியானை குளிரும்படி வீசி, பெரிய ஆண்யானையின்
முத்தை உடைய வெண்மையான கொம்புகளை உள்ளடக்கி
2.3
குல்லை கரியவும் கோடு எரி நைப்பவும் - பொரு 234
கஞ்சங் குல்லை தீயவும், மரங்களின் கொம்புகளை நெருப்புத் தின்னவும்
2.4
கூனி குயத்தின் வாய் நெல் அரிந்து
சூடு கோடு ஆக பிறக்கி - பொரு 242,243
குனிந்துநின்று, அரிவாளின் வாயால் நெல்லை அறுத்துச்,
சூட்டை மலையாக அடுக்கி
2.5
தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும்
கொடு முடி வலைஞர் குடி வயின் சேப்பின் - பெரும் 273,274
தோள்களும் அமிழும் குளங்களினுடைய கரையைக் காத்திருக்கும்,
வளைந்த முடிகளையுடைய வலைஞருடைய குடியிருப்பில் தங்குவீராயின்
2.6
நீடு கொடி இலையினர் கோடு சுடு நூற்றினர் - மது 401
நீண்ட கொடி(யில் விளையும்) வெற்றிலையை உடையவரும், சங்கு சுட்டு(ப் பொடித்த)
சுண்ணாம்பையுடையவரும்,
2.7
பாடு ஏற்றவரை பட குத்தி செம் காரி
கோடு எழுந்து ஆடும் கண மணி காணிகா - கலி 105/39,40
குத்துக்களை மார்பினில் ஏற்றுக்கொண்டவரை, அவர் சாகும்படி குத்திய சிவப்பும் கருமையும் கலந்த
காளையின்
கொம்புகள் மேலே எழும்போது ஆடுகின்ற கொத்தான மணிகளைப் பார்!

சினை சுறவின் கோடு நட்டு - பட் 86
சினைப்பட்ட சுறா மீனின் கொம்பை நட்டு,
2.8
கோடு உயர் பிeறங்கல் மலை கிழவோனே - நற் 28/9
உச்சியையும் உயர்ந்த முடிகளையுமுடைய பெரிய மலைக்குரியனாகிய தலைமகன்

சிதலை செய்த செம் நிலை புற்றின்
மண் புனை நெடும் கோடு உடைய வாங்கி - அகம் 112/2,3
கறையான் எடுத்த சிவந்த நிலையினையுடைய புற்றினது
மண்ணாற் புனைந்த நீண்ட உச்சி உடைந்திடப் பெயர்த்து
2.9
கோடு கூடு மதியம் இயல்_உற்று ஆங்கு - பதி 31/12
பிறைநிலவின் கொம்புகள் கூடிநிற்கும் முழுமதி வானத்தில் ஊர்ந்துவந்தாற் போன்று
2.10
நிலவு தவழ் மணல் கோடு ஏறி செலவர - நற் 163/5
நிலவொளி போன்ற ஒளிதவழும் மணல் மேட்டின் உச்சியில் ஏறிப் போய்வர
2.11
கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை - நற் 198/6
பக்கம் உயர்ந்த அல்குலையும் மெல்லியவாய்த் தோன்றிய திதலையையும்
ஔ.சு.து.உரை
2.12
அன்னை தந்த அலங்கல் வான் கோடு
உலைந்து ஆங்கு நோதல் அஞ்சி - நற் 372/8,9
அன்னை (மீன் உணங்கலைக் கவர வரும் புள்ளினத்தை ஓட்டுவதற்குத்) தந்த அசைகின்ற மெல்லிய கோல்
வளைந்து ஒடிந்ததற்கு வருந்துதலை அஞ்சி,
ஔ.சு.து.உரை
2.13
வீங்கு இழை நெகிழ விம்மி ஈங்கே
எறி கண் பேது உறல் ஆய் கோடு இட்டு
சுவர் வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க
வருவேம் என்ற பருவம் உது காண் - குறு 358/1-4
இறுக்கமான அணிகலன்கள் நெகிழ்ந்துபோக, அழுது இங்கே
நீரொழுகும் கண்களால் வருத்தமடையாதே! ஆய்ந்து எண்ணும் கோடுகளை இட்டு
சுவரைப் பிடித்துக்கொண்டிருக்கும் நின் துயரம் முற்றிலும் நீங்க
வருவேன் என்று சொன்ன பருவம் இதோ நெருங்கிவிட்டது பார்!

மரம் கோள் உமண் மகன் பெயரும் பருதி
புன் தலை சிதைத்த வன் தலை நடுகல்
கண்ணி வாடிய மண்ணா மருங்குல்
கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து - அகம் 343/4-7
வண்டியினைக் கொண்ட உப்புவாணிகனது பெயர்ந்து செல்லும் சக்கரம்
பொலிவில்லாத பூண் சிதையச் செய்த வலிய பாறையிலுள்ள நடு கல்லின்
இடப்பெற்ற மாலை வாடியதும் நீராட்டப்பெறாததுமான இடத்தில்
கூரிய உளியால் செதுக்கப்பட்ட கீற்றுக்கள் மறைந்த எழுத்துக்கள்
2.14
தொல் நிலை சிறப்பின் நின் நிழல் வாழ்நர்க்கு
கோடு அற வைத்த கோடா கொள்கையும் - பதி 37/10,11
பழமையான நிலைபெற்ற சிறப்பினையுடைய உன் ஆட்சியின் கீழ் வாழ்பவர்க்கு இணையாக,
அவரின் மனத்திருந்த கொடுமை தீர்ந்துபோகுமாறு திருத்தி வைத்த மனக்கோட்டமற்ற கோட்பாட்டையும்
2.15
கோடு உடை கையர் துளர் எறி வினைஞர் - அகம் 184/13
களைக்கொட்டினையுடைய கையினராய் களையினை வெட்டியெறியும் தொழிலையுடையவர்கள்
- நாட்டார் உரை
2.16
ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின் - புறம் 164/1
அடுதலை மிகவும் மறந்த புடை ஓங்கிய அடுப்பின்கண்
- அடுதலை மிகவும் மறத்தலால் தேய்வின்றி உயர்ந்த அடுப்பு என்றாராம் - ஔ.சு.து.உரை, விளக்கம்
2.17
இரு கோட்டு அறுவையர் வேண்டு வயின் திரிதர - நெடு 35
இரண்டு பக்கமும் வளைவாகத் தொங்கவிட்ட துகிலினையுடையராய்(த் தாம்) விரும்பியவாறு திரிந்துவர
2.18
கரும் கோட்டு சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப - நெடு 70
கரிய தண்டினையுடைய சிறுயாழைப் பண் நிற்கும் முறையிலே நிறுத்த
2.19
நெய்ம் மாண் சிவிறியர் நீர் மண கோட்டினர் - பரி 6/34
நெய்பூசிச் சிறப்படைந்த துருத்தியை உடையோரும், உள்ளே மணக்கும் நீர் கொண்ட கொம்பினையுடையோரும்,
2.20
அறிவு உடை அந்தணன் அவளை காட்டு என்றானோ
களி பட்டார் கமழ் கோதை கயம் பட்ட உருவின் மேல்
குறி பெற்றார் குரல் கூந்தல் கோடு உளர்ந்த துகளினை - கலி 72/18-20
அறிவுடையோனாகிய அந்தணன் அவளுக்குக் காட்டு என்று சொன்னானோ -
உன்னுடன் கூடிக் களித்த பரத்தையரின் மணங்கமழும் மாலை அழுந்தியதால் ஏற்பட்ட சுவட்டின் மேல்
நீ குறித்த இடத்தில் வந்து கூடிய பரத்தையின் முடித்த கூந்தலின் சுருளை நீ கோதிவிட்டபோது உதிர்ந்த
பூந்துகளை?

 மேல்
 
    கோடை - (பெ) 1. வேனிற்காலம், Summer season        
                   2. கோடைக்காலத்து மேலைக்காற்று, West wind at the time of the summer
                   3. ஒரு மலை, a mountain
1.
கோடை நீடினும் குறைபடல் அறியா
தோள் தாழ் குளத்த - பெரும் 272,273
கோடைக்காலம் நீட்டித்து நின்றதாயினும் வற்றுதலை அறியாத,
தோள்களும் அமிழும் குளங்களினுடைய
2.
வேனில் இற்றி தோயா நெடு வீழ்
வழி நார் ஊசலின் கோடை தூக்கு-தொறும்
துஞ்சு பிடி வருடும் அத்தம் - நற் 162/9-11
வேனிற்காலத்து இத்தி மரத்தின் நிலத்தில் தோயாத நீண்ட விழுது
ஒழுகுகின்ற நாரால் கட்டப்பட்ட ஊசலைப் போலக் கோடைக்காற்று வீசித்தூக்கும்போதெல்லாம்
அதன் அடியில் தூங்குகின்ற பெண்யானையின் முதுகில் வருடிவிடும் பாலை வழியில்
3.
வெள் வீ வேலி கோடை_பொருந - புறம் 205/6
வெள்ளிய பூவை உடைத்தாகிய முல்லை வேலியையுடைய கோடை என்னும் மலைக்குத் தலைவனே
- திண்டுக்கல் மாவட்டத்தில் கோடைக்கானல் என்ற பெயரால் சிறப்புற்று விளங்கும்
மலையே இக் கோடைமலை - ஔ.சு.து.உரை விளக்கம்

 மேல்
 
    கோணம் - (பெ) தோட்டி, elephant hook
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த - மது 592
தோட்டி வெட்டின வடு அழுந்தின முகத்தை உடையனவும்,

 மேல்
    கோத்தை - (பெ) குற்றம், பழுது, Defect, blemish, flaw
கோத்தை உண்டாமோ மதுரை கொடி தேரான்
வார்த்தை உண்டாகும் அளவு - பரி 33/3
குற்றம் உடையதாகுமோ மதுரை நகரின் புகழ்? மீன்கொடியைத் தேரில் கொண்ட பாண்டியனின்
செந்தமிழ் மொழி இருக்கின்ற காலம் அளவும்.

 மேல்
 
    கோது - (பெ) சக்கை, refuse, residuum
களிறு சுவைத்திட்ட கோது உடை ததரல் - அகம் 257/16
களிறுகள் சுவைத்துவிட்டுப்போட்டுவிட்ட சக்கையாகிய சுள்ளிகள் 

 மேல்
 
    கோதை - (பெ) 1. பூச்சரம், மாலை, garland of flowers
                   2. சேர மன்னர்களின் பட்டப்பெயர், A title of the Chera kings
1.
கூந்தல் மகளிர் கோதை புனையார் - நெடு 53
(தம்)தலைமயிரில் மகளிர் (குளிர்ச்சி மிகுதியால்)மாலை அணியாதவராய்,
2.
தண் கடல் நாடன் ஒண் பூ கோதை
பெருநாள் இருக்கை விழுமியோர் குழீஇ - மது 524,525
குளிர்ந்த கடல் சேர்ந்த நாட்டையுடையனாகிய, ஒளிரும் பனந்தாரையுடைய சேரனுடைய
பெரிய நாளோலக்க இருப்பில் சீரியோர் திரண்டு

 மேல்
 
    கோதைமார்பன் - (பெ) ஒரு சேர மன்னன்,  a chEra king
சேரமான் கோக்கோதை மார்பன் என்பவன் சங்ககாலச் சேர மன்னர்களில் ஒருவன். பொய்கையார்
என்னும் சங்ககாலப் புலவர் இவனைப் பாடியுள்ளார் (புறம் 48,49) இவனது ஊர் தொண்டி. எனவே,
இவனைத் தொண்டி அரசன் என ஒருபாடலில் குறிப்பிடுகிறார்
கோதைமார்பன் என்று பெருஞ்சேரல் இரும்பொறை போற்றப்படுவதை இங்கு ஒப்புநோக்கிக்கொள்ள வேண்டும்.

இழை அணி யானை பழையன்மாறன்
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண்
வெள்ள தானையொடு வேறு புலத்து இறுத்த
கிள்ளிவளவன் நல் அமர் சாஅய்
கடும் பரி புரவியொடு களிறு பல வவ்வி
ஏதில் மன்னர் ஊர் கொள
கோதைமார்பன் உவகையின் பெரிதே - அகம் 346/19-25
இழையை அணிந்த யானையினையுடைய பழையன் மாறன் என்பானை
மாடங்கள் மிக்க தெருக்களையுடைய கூடலாகிய அங்கே
மிக்க சேனையுடன் வேற்றுப்புலத்தே போர்செய வந்து தங்கியிருந்த
கிள்ளிவளவன் நல்ல போரின்கண் சாய்த்து
கடிய செலவினையுடைய குதிரைகளுடன் பல யானைகளையும் பற்றிக்கொண்டு
பகை மன்னரது ஊரினைப் பற்றிக்கொள்ள
கோதைமார்பன் என்னும் சேரன் எய்திய மகிழ்வினும் பெரிதாக

 மேல்
 
    கோப்பு - (பெ) கோக்கப்பட்டது, string
மனவு கோப்பு அன்ன நன் நெடும் கூந்தல் - குறு 23/2
சங்குமணியைக் கோத்தது போன்ற நல்ல நெடிய கூந்தலையுடைய

 மேல்
 
    கோப்பெருஞ்சோழன் - (பெ) ஒரு சோழ மன்னன், a chOzha king
கோப்பெருஞ்சோழன் உறையூரிலிருந்து அரசாண்டு வந்த சோழர் குல மன்னன். இம்மன்னன் தாமே ஒரு 
புலவராய் இருந்ததோடு, பிசிர் ஆந்தையார், போத்தியார் ஆகிய இரு புலவரின் நெருங்கிய நட்பைப்
பெற்றிருந்தான்.

கோழியோனே கோப்பெருஞ்சோழன் - புறம் 212/8
உறையூர் என்னும் படைவீட்டிலிருந்தான் கோப்பெருஞ்சோழன்

உறையூருக்குக் கோழி என்றும் பெயருண்டு.

 மேல்
 
    கோபம் - (பெ) இந்திரகோபம் என்னும் செந்நிறப்பூச்சி, வெல்வெட் பூச்சி, Trombidium grandissimum
ஓவத்து அன்ன கோப செம் நிலம் - அகம் 54/4
ஓவியம் போன்ற, இந்திரகோபம் போன்று சிவந்த, செம்மண் நிலத்தில்

	

இந்திரகோபம் மூதாய் என்றும் அழைக்கப்படுகிறது.  பார்க்க : மூதாய்

 மேல்
 
    கோய் - (பெ) கள் முகக்கும் பாத்திரம், Vessel for taking out toddy
நன் மரம் குழீஇய நனை முதிர் சாடி
பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின்
மயங்கு மழை துவலையின் மறுகு உடன் பனிக்கும் - அகம் 166/1-3
நல்ல மரங்கள் சூழ்ந்த, கள் நிறைந்த சாடியின்
பலநாட்கள் வடிக்கப்பெற்றது - அந்த முகக்கும் பாத்திரம் உடைந்துபோனால்
விரவிய மழைத்துளி போல தெருவெல்லாம் துளிக்கும். 

 மேல்
 
    கோலு - (வி) 1. வளை, enclose, envelop, encompass; to stretch round
                 2. குவி, join palms to make a cup, as though to drink water
                 3. வளைவாக உண்டாக்கு, construct in a curved form
                 4. விரி, பர, spread out
1.
வேறு பல் பெரும் படை நாப்பண் வேறு ஓர்
நெடும் காழ் கண்டம் கோலி அகம் நேர்பு - முல் 43,44
விதம்விதமான, பலவாகிய பெரிய படைக்கு நடுவே, வேறோரிடத்தே,
நெடிய குத்துக்கோலுடன் பண்ணின கண்டத்திரையை வளைத்து, (அரசனுக்குரிய)இடமாகக் கொண்டு

சிலம்பி கோலிய அலங்கல் போர்வையின் - பதி 39/13
சிலந்தி பின்னிய ஆடுகின்ற வலையைப் போல,
2.
பெரும் தேன் கண்ட இரும் கால் முடவன்
உட்கை சிறு குடை கோலி கீழ் இருந்து
சுட்டுபு நக்கி ஆங்கு - குறு 60/2-4
பெரிய தேன்கூட்டைக் கண்ட கரிய காலையுடைய முடவன்
உள்ளங்கையைச் சிறியதாகக் குடையாகக் குவித்து, தரையில் அமர்ந்தவண்ணம்
அந்தத் தேனடையை மறுகையால் சுட்டிக்கொண்டு, குடைத்த கையை நக்கியதைப் போல்
3.
தேர் செலவு அழுங்க திருவில் கோலி
ஆர் கலி எழிலி சோர் தொடங்கின்றே - ஐங் 428/1,2
தேரில் செல்லுதல் தவிர்க்கப்படவேண்டிய அளவுக்கு வானவில் வளைவாகத்தோற்றி
பெருத்த முழக்கத்துடன் மேகங்கள் மழையைச் சொரியத்தொடங்கிவிட்டன;
- கோலுதல் - வளைத்தல் - ஔ.சு.து.உரை விளக்கம்

வலாஅர் வல் வில் குலாவர கோலி - புறம் 324/6
வளாரால் செய்யப்பட்ட வில்லின் வைத்து வளைவுண்டாக வலித்து
4.
மிசை படு சாந்தாற்றி போல எழிலி
இசை படு பக்கம் இரு பாலும் கோலி
விடு பொறி மஞ்ஞை பெயர்பு உடன் ஆட - பரி 21/30-32
மேலே எடுத்துவைக்கப்பட்ட விசிறியைப் போல, மேகங்களின்
முழக்கம் எழுகின்ற திசையில் இரு சிறகுகளையும் விரித்துக்கொண்டு
ஒளிவிடும் புள்ளிகளைக் கொண்ட மயில் இடம்பெயர்ந்து ஒன்றாக ஆட

புள்ளொருங்கு
அங்கண் விசும்பின் விளங்கு ஞாயிறு
ஒண் கதிர் தெறாமை சிறகரின் கோலி
நிழல் செய்து உழறல் காணேன் யான் என - அகம் 208/9-12
பறவைகள் பலவும் கூடி
அழகிய இடத்தையுடைய வானில் விளங்கிய ஞாயிற்றினது
ஒள்ளிய கதிர் அவன் உடலைக் காய்தல் செய்யாது, தம் சிறகுகளை விரித்து
நிழலைச் செய்து சுழன்றுகொண்டிருத்தலை யான் காணேன் என்று

 மேல்
 
    கோவம் - (பெ) இந்திரகோபம், பார்க்க : கோபம்
கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின் - சிறு 71
இந்திர கோபத்தை ஒத்த தாதுக்கள் சேர்ந்து உதிர்தலால்

 மேல்
 
    கோவல் - (பெ) திருக்கோவலூர், a city called thirukOvalUr
துஞ்சா முழவின் கோவல் கோமான்
நெடும் தேர் காரி - அகம் 35/14,15
ஓயாது ஒலிக்கும் முரசை உடைய, திருக்கோவலூருக்குத் தலைவனான,
நெடிய தேரைக் கொண்ட காரி

 மேல்
 
    கோவலர் - (பெ) முல்லைநிலமக்கள், இடையர்கள், Men of the sylvan tract, herdsmen;
ஆர்கலி முனைஇய கொடும் கோல் கோவலர்
ஏறு உடை இன நிரை வேறு புலம் பரப்பி - நெடு 3,4
வெள்ளத்தை வெறுத்த வளைந்த கோலினையுடைய இடையர்,
காளைகளையுடைய (பல்வேறு)இனம் சேர்ந்த மந்தையை(மேடான)முல்லை நிலத்தில் மேயவிட்டு,

 மேல்
 
    கோவலூர் - (பெ) திருக்கோவலூர், a city called thirukOvalUr
கடையெழு வள்ளல்களில் ஒருவனான காரி சங்ககாலத்தில் இவ்வூரை ஆண்ட மன்னர்களில் ஒருவன்.
கோவலூரில் பாயும் ஆறு பெண்ணை
அதியமான் நெடுமான் அஞ்சி இந்தக் கோவலூரைப் போரிட்டு அழித்தான் என்றும், அந்த வெற்றியைப்
புலவர் பரணன் சிறப்பித்துப் பாடினார் என்றும் ஔவையார் குறிப்பிடுகிறார் (புறநானூறு 99)

முரண் மிகு கோவலூர் நூறி - புறம் 99/13
மாறுபாடு மிக்க கோவலூரை அழித்து வென்று

 மேல்
 
    கோவை - (பெ) கோத்த வடம், String of ornamental beads for neck or waist;
உடுத்தவை கைவினை பொலிந்த காசு அமை பொலம் காழ் மேல்
மை இல் செம் துகிர் கோவை அவற்றின் மேல்
தைஇய பூ துகில் - கலி 85/2-4
உடுத்தியிருப்பவை, கைவேலைப்பாடு மிகுந்த பொற்காசுகளைக் கோத்த பொன்னாலாகிய வடத்தின் மேல்
களங்கமில்லாத சிவந்த பவளச் சரம் ஆகிய இவை இரண்டிற்கும் மேலே
உடுத்தின மென்மையான துகில்

 மேல்
 
    கோழ் - (பெ) 1. கொழுமை, கொழுப்புள்ளது, fat, oily
                 2. செழுமை, luxurious, rich
1.
காழின் சுட்ட கோழ் ஊன் கொழும் குறை - பொரு 105
இரும்புக் கம்பியில் (கோத்துச்)சுடப்பட்ட கொழுத்த இறைச்சிகளாகிய பெரிய தசைத் துண்டுகளை
2
கோழ் இலை வாழை கோள் முதிர் பெரும் குலை - அகம் 2/1
செழுமையான இலைகளைக் கொண்ட வாழையின், அடுக்குகள் முற்றிய பெரிய குலையின்

 மேல்
  
     கோள் - (பெ) 1. பிடித்துக்கொள்ளுதல், holding
                  2. முகந்து கொள்ளுதல், taking
                  3. பெற்றுக்கொள்ளுதல், receiving
                  4. செய்துகொள்ளுதல், making
                  5. உயிரைக் கொள்ளுதல், seizing
                  6, கொத்து, குலை, bunch, cluster
                  7. பாம்பு, serpent
                  8. விண்மீன், star
                  9. கிரகம், planet
                  10. இடையூறு, impediment, danger
                  11. இயல்பு, தன்மை, nature
1.
முலை கோள் விடாஅ மாத்திரை ஞெரேரென
தலை கோள் வேட்டம் களிறு அட்டு ஆங்கு - பொரு 141,142
முலையைப் பிடித்து உண்டலைக் கைவிடாத அளவிலே(யே) கடுகப் பாய்ந்து,					
(தன்)கன்னிவேட்டையிலேயே களிற்றியானையைக் கொன்றாற் போன்று,
2
கருவி வானம் கடல் கோள் மறப்பவும் - பொரு 236
கூட்டமான மேகங்கள் கடலிடத்தே நீர் முகத்தலை மறக்கவும்,
3.
கார் கோள் பலவின் காய் துணர் கடுப்ப - மலை 12
கார்காலத்தே கொள்ளப்படும் பலாவின் காய்களைக்கொண்ட கொத்தைப் போல,
4.
வல்லோன்
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை - நற் 77/8,9
வளைசெய்வதில் வல்லவன்
தன் வாள் போன்ற அரத்தால் அராவிச் செய்துகொள்ளுதல் நன்றாக அமைந்த ஒளிமிகுந்த வளையலையும்,
5
உறல் முறை மரபின் கூற்றத்து
அறன் இல் கோள் நன்கு அறிந்திசினோரே - குறு 267/7,8
நிகழ்த்தும் முறைமைகொண்ட வழக்கத்தையுடைய கூற்றுவனின்
அறமற்ற உயிர்வாங்கும் தொழிலை நன்கு அறிந்தவர்கள்.
6.
கோள் தெங்கின் குலை வாழை - பொரு 208
கொத்துக்கொத்தான (காய்களைக் காய்க்கும்)தெங்கினையும், குலையினையுடைய வாழையினையும்,
7
குழவி திங்கள் கோள் நேர்ந்து ஆங்கு - பெரும் 384
இளைய திங்களைச் பாம்பு தீண்டினாற் போன்று
8.
நாளொடு பெயரிய கோள் அமை விழு மரத்து - நெடு 82
நாளின் பெயர் கொண்ட கோள்(உத்தரம்) நன்றாக வடிவமைக்கப்பட்ட சிறந்த (குறுக்குக்)கட்டையைக்கொண்டு
9.
நாள் கோள் திங்கள் ஞாயிறு கனை அழல் - பதி 14/3
நாள்மீன்களும், கோள்மீன்களும், திங்களும், ஞாயிறும், மிகுந்த நெருப்பும்
10.
குறும் பொறை மருங்கின் கோள் சுரம் நீந்தி - அகம் 271/5
குன்றுகளின் பக்கத்திலுள்ள ஊறு பொருந்திய சுரத்தினைக் கடந்து
11.
வெண் கோள் தோன்றா குழிசியொடு - புறம் 257/12
வெண்மை நிறத் தன்மை தோன்றாத பானையுடன்

 மேல்
 
    கோள்மா - (பெ) சிங்கம், புலி, lion, tiger
குன்ற இறு வரை கோள்மா இவர்ந்து ஆங்கு - கலி 86/32
குன்றின் செங்குத்தான பகுதி மீது சிங்கம் ஊர்ந்து ஏறுவது போல்

கொடுவரி
கோள்மா குயின்ற சேண் விளங்கு தொடு பொறி - புறம் 58/29,30
வளைந்த வரிகளையுடைய
புலிவடிவாகச் செய்யப்பட்ட தொலைவுக்கும் விளங்குகின்ற தோண்டிய இலாஞ்சனை

 மேல்
 
    கோள்மீன் - (பெ) கிரகம், planet
வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த
இளம் கதிர் ஞாயிறு - சிறு 242,243
ஒளியையுடைய (நீல நிற)வானத்தின்கண் கோளாகிய மீன்கள் சூழ்ந்த
இள வெயில் (தரும்)ஞாயிற்றை

 மேல்
 
    கோளாளர் - (பெ) கொள்பவர், one who seizes
கோளாளர் என் ஒப்பார் இல் - கலி 101/43
காளையை அடக்குபவரில் என்னைப் போன்றவர் யாரும் இல்லை

 மேல்
 
    கோளி - (பெ) பூக்காமல் காய்க்கும் மரம், Tree bearing fruit without outwardly blossoming
கொழு மென் சினைய கோளியுள்ளும்
பழம் மீக்கூறும் பலாஅ போல - பெரும் 407,408
கொழுவிய மெல்லிய கொம்புகளையுடைனவாகிய, (பூவாமல் காய்க்கும்)கோளியாகிய மரங்களினுள்ளும்,
பழத்தால் மேலாகச் சொல்லும் பலாமரத்தைப் போன்று,

 மேல்
 
    கோன் - (பெ) அரசன், king
கொற்றவர்_தம் கோன் ஆகுவை - மது 74
மன்னர்க்கும் மன்னர் ஆவாய்

 மேல்