<<முந்திய பக்கம்

சங்க இலக்கியம் - அருஞ்சொற்களஞ்சியம்
கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
மு - முதல் சொற்கள்
முக்கண்செல்வன்
முக்காழ்
முக்கு
முக்கோல்
முக
முகடு
முகப்படு
முகம்செய்
முகமன்
முகவை
முகில்
முகிழ்
முகை
முச்சி
முசிறி
முசு
முசுண்டை
முஞ்சம்
முஞ்ஞை
முட்டம்
முட்டு
முட்டுப்பாடு
முடங்கர்
முடங்கல்
முடங்கு
முடந்தை
முடம்
முடலை
முடவு
முடி
முடிநர்
முடியன்
முடுக்கர்
முடுக்கு
முடுகு
முடுவல்
முடை
முண்டகம்
முண்டை
முணக்கு
முணங்கு
முணை
முத்தம்
முத்தன்
முத்தீ
முத்து
முத்தூறு
முத்தை
முதல்
முதல்வியர்
முதலாட்டி
முதற்று
முதாரி
முதியன்
முதியை
முதிர்
முதிர்ப்பு
முதிரம்
முதிரை
முதுக்குறை
முதுக்குறைமை
முதுக்குறைவி
முதுகாடு
முதுகுடி
முதுகுடுமி
முதுநீர்
முதுநூல்
முதுபாழ்
முதுமொழி
முதுர்வினள்
முதுவாய்
முதுவெள்ளிலை
முதை
முதையல்
முந்து
முந்துறு
முந்தூழ்
முந்தை
முந்நீர்
மும்மை
முய
முயக்கம்
முயக்கு
முயங்கல்
முயங்கு
முயல்
முயல்வு
முயறல
முயறி
முயால்
முயிறு
முரச்சு
முரசம்
முரசு
முரஞ்சு
முரண்
முரம்பு
முரல்
முரல்வு
முரவு
முரவை
முரற்கை
முரற்சி
முரி
முருக்கு
முருகு
முருங்கு
முருந்து
முரைசு
முல்லை
முலை
முழ
முழக்கம்
முழங்கு
முழந்தாள்
முழம்
முழவம்
முழவன்
முழவு
முழா
முழுச்சொல்
முழுநெறி
முழுமீன்
முழுமுதல்
முழை
முள்கு
முள்ளி
முள்ளூர்
முளரி
முளவு
முளவுமா
முளவுமான்
முளி 
முளிவுறு
முளை
முற்றம்
முற்றல்
முற்று
முற்றை
முறம்
முறி
முறுக்கு
முறுக்குறு
முறுகு
முறுவல்
முறை
முறைமுறை
முறையுளி
முன்கடை
முன்கை
முன்துறை
முன்ப
முன்பனி
முன்பு
முன்றில்
முன்னம்
முன்னிலை
முன்னு
முன்னை
முனாது
முனி
முனிவு
முனை

இடப்பக்கமுள்ள சொல்லின் மேல் சொடுக்கவும்
 
  முக்கண்செல்வன் - (பெ) சிவன், Lord Shiva
நான்மறை முது நூல் முக்கண்செல்வன்
ஆலமுற்றம் கவின் பெற தைஇய - அகம் 181/16,17
நான்கு வேதங்களாய பழைய நூலை அருளிய முக்கண்ணையுடைய பரமனது
ஆலமுற்றம் என்னுமிடத்தே அழகுபெற இயற்றப்பெற்ற 

 மேல்
 
  முக்காழ் - (பெ) மூன்று புரிகள் கொண்ட முத்து/மணி வடம்,
        A chain with three stands made of pearl or gems
மை படு சென்னி மழ களிற்று ஓடை போல்
கை புனை முக்காழ் கயம் தலை தாழ - கலி 86/1,2
"கருமை படர்ந்த தலையையுடைய இளம் களிற்றின் நெற்றிப்பட்டத்தைப் போல,
கையால் அழகாகச் செய்யப்பட்ட மூன்று வடங்கள் மென்மையான தலையிலிருந்து தொங்க,

 மேல்
 
  முக்கு - (வி) உணவை வாய் நிறைய இட்டு உண், eat in large mouthfuls
திரை அணல் கொடும் கவுள் நிறைய முக்கி
வான் பெயல் நனைந்த புறத்த நோன்பியர் - நற் 22/5,6
சுருக்கம்விழுந்த கன்னத்து மயிர்களையுடைய வளைந்த உள்வாய் நிறைய அமுக்கிக்கொண்டு
வானிலிருந்து விழுகின்ற மழையில் நனைந்த முதுகினையுடையவாய், நோன்பிருப்போர்

கழனி
ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர்
பாசவல் முக்கி தண் புனல் பாயும் - புறம் 63/11-13
வயலிடத்து
ஆம்பல் தண்டினால் செய்த வளையணிந்த கையையுடைய மகளிர்
செம்மையான அவலை வாய் நிறையக் கொண்டவராய் குளிர்ந்த நீரில் பாய்ந்தாடுவர்

தத்திங்கம் தத்திங்கம் கொட்டுவாளாம்
தயிரும் சோறும் தின்பாளாம்
ஆப்பம் சுட்டால் தின்னுவாளாம்
அவல் இடிச்சால் முக்குவாளாம்

என்ற இந்த நாட்டுப்புறப்பாடலை எடுத்துக்காட்டுவார் ஔவை.சு.து. அவர்கள் தம் புறநானூறு உரை விளக்கத்தில்.

 மேல்
 
  முக்கோல் - (பெ) திரிதண்டம் என்பதன் தமிழ்ச்சொல், The trident staff carried by ascetics
உறி தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும்
நெறிப்பட சுவல் அசைஇ வேறு ஓரா நெஞ்சத்து
குறிப்பு ஏவல் செயல் மாலை கொளை நடை அந்தணீர் - கலி 9/2-4
உறியில் தொங்கும் கமண்டலத்தையும், புகழ் பெற்ற முக்கோலினையும்,
முறையாகத் தோளில் சுமந்து, நன்மையைத் தவிரே வேறு ஒன்றனையும் நினைக்காத நெஞ்சத்துடன்,
ஐம்பொறிகளும் தமக்கு ஏவல் செய்தலை இயல்பாக உடைய கொள்கையையும் ஒழுக்கத்தையும் உடைய
அந்தணர்களே!

	

 மேல்
 
  முக - (வி) 1. நீரில் உள்ள மீன் போன்றவற்றை, எண்ணெயில் பொரியும் கறி/மீன் துண்டு போன்றவற்றை
         வலையால், அரிகரண்டியால் அள்ளு, மொள்ளு, draw, bail
        2. நிரம்பப்பெறு, obtain in large/full measure 
1.
வலைஞர்
-------------- --------------------- ---------------
பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு
உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும் - புறம் 249/3-7
வலையை வைத்து மீன்பிடிப்பவர்
--------------------- ------------------ --------------
பனையினது நுகும்பை ஒத்த சினை முற்றிய வரால் மீனொடு
மாறுபடும், வேல் போன்ற ஒள்ளிய கயலை முகந்துகொள்ளும்

நெடுநீர் நிறையகத்து
படு மாரி துளி போல
நெய் துள்ளிய வறை முகக்கவும்
சூடு கிழித்து வாடூன் மிசையவும் - புறம் 386/1-4
மிக்க நீர் நிறைந்த நீர்நிலையின்கண்
வீழ்கின்ற மழைத்துளி போல
நெய்யில் துள்ளி எழுந்த வறுவல்களை முகந்துண்ணவும்
சூட்டுக்கோலால் கிழித்துச் சுடப்பட்ட ஊனைத் தின்னவும்

முழங்கு கடல் முகந்த கமம் சூல் மா மழை - நற் 347/1
முழங்குகின்ற கடலிலிருந்து நீரை வாரியெடுத்ததினால் நிறைந்த கருக்கொண்ட கரிய மேகம்

நாள் வலை முகந்த கோள் வல் பரதவர் - அகம் 300/1
நாள் காலையிலே வலையினால் மீனை அள்ளிக்கொண்ட மீன் பிடித்தலில் வல்ல பரதவர்கள்
2.
கொடுஞ்சி நெடும் தேர் முகக்குவம் எனினே - புறம் 368/4
கொடுஞ்சியொடு கூடிய நெடிய தேர்களை நிறையப் பெற்றால்

 மேல்
 
  முகடு - (பெ) 1. உச்சி, top, highest part
         2. மலையுச்சி, peak, summit
         3. முகப்பு, முன்பக்கம், front side

1.
முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின்
குமரிமூத்த கூடு ஓங்கு நல் இல் - பெரும் 246,247
உச்சியைத் திறந்து உள்ளே சொரியப்பட்ட பழையவாகிய பல நெல்லினையும் உடைய,
கன்னிமையோடே முதிர்ந்த கூடுகள் உயர்ந்து நின்ற நல்ல இல்லங்களையும்;
2.
கொண்டல் ஆற்றி விண் தலை செறீஇயர்
திரை பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி
நிரைத்து நிறை கொண்ட கமம் சூல் மா மழை - நற் 89/1-3
கீழைக் காற்றினால் செலுத்தப்பட்டு, விண்ணிடத்து ஒன்றுகூடிச் செறிந்து
அலைகளின் பிசிர் போல மலையுச்சிகளில் மகிழ்ந்து ஏறி
ஒழுங்காக அமைந்து நிறைவுகொண்ட முற்றிய கருக்கொண்ட கரிய மேகங்கள்
3.
நகில் முகடு மெழுகிய அளறு மடை திறந்து
திகை முழுது கமழ - பரி 10/73,74
அவர்கள் தம் முலையின் முன்பக்கத்தில் பூசிய சந்தனத்தின் மணம், மடைதிறந்த வெள்ளம்போல்
திசைகள் முழுதும் கமழ,

துகள் தபு காட்சி அவையத்தார் ஓலை
முகடு காப்பு யாத்துவிட்டு ஆங்கு - கலி 94/42,43
குற்றமற்ற அறிவினைக்கொண்ட அவையிலுள்ளோரின் ஓலைச்சுவடிக்கட்டின்
முகப்பைக் கயிற்றினால் இறுக்கக் கட்டியதைப் போல

 மேல்
 
  முகப்படு - (வி) எதிரில் தோன்று, appear in front
முன்னும் பின்னும் நின் முன்னோர் ஓம்பிய
எயில் முகப்படுத்தல் யாவது - பதி 53/12,13
உன் முன்னோர்களுக்கு முன்னிருந்தோராலும், அவருக்குப் பின்வந்தோராலும் பேணிப் பாதுகாக்கப்பட்ட
கோட்டையின் எதிரில் நிற்பது எதற்காக?

 மேல்
 
  முகம்செய் - (வி) தோன்று, appear
முலை முகம்செய்தன முள் எயிறு இலங்கின - அகம் 7/1
முலைகள் கூம்பி நிறைந்த வளர்ச்சியுற்றன. கூரிய பற்கள் மின்னுகின்றன

 மேல்
 
  முகமன் - (பெ) புகழுரை, praise, adoration
முருகு என உணர்ந்து முகமன் கூறி - அகம் 272/13
முருகனே என்று எண்ணி, புகழுரை கூறி

 மேல்
 
  முகவை - (பெ) 1. நீர் முகக்கும் வாளி, bucket for drawing water
          2. வாளி / குடத்தில் முகக்கப்பட்ட நீர், water drawn in a bucket or pot
          3. முகந்து கொடுக்கப்படும் பொருள், anything given by a measuring vessel
          4. மிகுதியாகக் கொடுக்கப்படும் பொருள், anything given in large numbers / quantities
1.
சிரறு சில ஊறிய நீர் வாய் பத்தல்
கயிறு குறு முகவை மூயின மொய்க்கும்
ஆ கெழு கொங்கர் நாடு - பதி 22/13-15
அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிறிதளவு ஊறிய நீரைக் கொண்ட பள்ளத்தில்
கயிறுகட்டி மேலிழுத்து நீர் முகந்த பாத்திரத்தைச் சூழ்ந்துகொண்டு மொய்த்துநிற்கும்
பசுக்கள் நிறைந்த கொங்கர் நாட்டினை
2.
தெண் கண் உவரி குறை குட முகவை - அகம் 207/11
தெளிந்த உவரையுடையதாகிய குறைக்குடமாக முகக்கப்பட்ட நீரை
3.
நெடும் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில்
பழம் செந்நெல்லின் முகவை கொள்ளாள்
கழங்கு உறழ் முத்தமொடு நன் கலம்பெறூஉம் - அகம் 126/10-12
நீண்ட கொடிகள் அசையும் கள் மிக்க தெருவில்
பழைய செந்நெல்லை முகந்து தருதலைக் கொள்ளாளாகி
கழங்கினை ஒத்த பெரிய முத்துக்களுடன் சிறந்த அணிகளையும்பெறும்
4.
வேழ முகவை நல்கு-மதி - புறம் 369/27
களிறுகளாகிய மிகுந்த பரிசிலை நல்குவாயாக

 மேல்
 
  முகில் - (பெ) மேகம், cloud
கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து
உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப மலை மாலை
முற்றுபு_முற்றுபு பெய்து சூல் முதிர் முகில் - பரி 20/1-3
கடல் குறைவுபடும்படியாக முகந்துகொண்ட நீரை, பாறைகள் பிளக்க வேகமாக வீசி,
கோபங்கொண்டதைப் போல் இடியேற்றுக்கூட்டம் ஆரவாரிக்க, அடுத்தடுத்து இருக்கும் மலைகளை
நன்றாக வளைத்துக்கொண்டு மழையைப் பொழிந்தன நன்றாய்க் கருக்கொண்ட மேகங்கள்;

 மேல்
 
  முகிழ் - 1. (வி) 1. அரும்பு, மொக்குவிடு, bud
          2. குவி, fold
          3. தோன்று, appear, show up
      - 2. (பெ) 1. அரும்பு, bud
          2. தயிர் முதலியவற்றின் கட்டி, Mass, as of curds
          3. மொக்குள், நீர்க்குமிழி, bubble
1.1
முகிழ்த்து வரல் இள முலை மூழ்க பல் ஊழ்
முயங்கல் இயைவது மன்னோ - அகம் 242/16,17
அரும்பி வருதலையுடைய இளைய முலை மூழ்கிட பலமுறை
தழுவுதல் தக்கது
1.2
முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும்
இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும் - சிறு 231,232
முதியோர்க்குக் குவித்த கைகளையுடையோய்' என்றும்,
‘வீரர்க்குத் திறந்த மார்பை உடையோய்' எனவும்,
1.3
முடிந்ததும் முடிவதும் முகிழ்ப்பதும் அவை மூன்றும்
கடந்து அவை அமைந்த கழலின் நிழலவை - பரி 13/47,48
முடிந்துபோனதும், இனி முடியப்போவதும், இப்போது தோன்றியிருப்பதும் ஆகிய மூன்று காலங்களும்
கடந்து, அவை பொருந்தப்பெற்ற உன் திருவடிகளின் நிழலில் உள்ளவை;
2.1
முலையே முகிழ் முகிழ்த்தனவே தலையே
கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே - குறு 337/1,2
முலைகள் அரும்பாய் முகிழ்த்தன; தலையின்
கிளைத்த கூந்தல்கொத்துக்கள் கீழே விழுந்து தொங்குகின்றன;
2.2
ஆம்பி வான் முகை அன்ன கூம்பு முகிழ்
உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து - பெரும் 157,158
குடைக்காளானுடைய வெண்மையான முகைகளை ஒத்த குவிந்த முகைகளையுடைய
உறையினால் கெட்டியாகத் தோய்ந்த இளம் புளிப்பான தயிரைக் கடைந்து, வெண்ணையை எடுத்து,
2.3
பெயல் துளி முகிழ் என பெருத்த நின் இள முலை - கலி 56/24
மழைநீரின் எழும் மொக்குகள் என்று கூறும்படியாக, பெரியதாய் நிற்கும் உன் இளமையான முலைகள்,

 மேல்
 
  முகை - 1. (வி) மலர்வதற்காக அரும்பு, bud for blossoming
      - 2. (பெ) மலரும் நிலையிலுள்ள அரும்பு, opening bud
1.
பிள்ளை வெருகின் முள் எயிறு புரைய
பாசிலை முல்லை முகைக்கும் - புறம் 117/8,9
இளைய வெருகினது கூரிய பல்லை ஒப்ப
பசிய இலையையுடைய முல்லை அரும்பியிருக்கும்
2.
முறுவல் கொள்பவை போல முகை அவிழ்பு புதல் நந்த - கலி 119/7
புன்முறுவல் பூப்பவை போல் மொட்டுக்கள் தம் முறுக்கு அவிழ்ந்து புதர்களில் பொலிவுடன் விளங்க

 மேல்
 
  முச்சி - (பெ) 1. தலை உச்சி, crown of head
         2. உச்சிக்கொண்டை, Tuft of hair on the head
         3. மயில் கோழி முதலியவற்றின் உச்சிக்கொண்டை, சூட்டு, Peacock's crest, cock’s comb
1.
வலஞ்சுழி உந்திய திணை பிரி புதல்வர்
கயம் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ - பரி 16/7,8
வலமாகச் சுழித்துக்கொண்டு வரும் சுழியினால் உந்தப்பட்டுவர, வீட்டைவிட்டுத் தனியே வந்து நீராடும் சிறுவரின்
மெல்லிய தலையுச்சியில் இருக்கும் முஞ்சம் என்னும் அணிகலனோடு அவை சேர்ந்துகொள்ள,
2.
துவர முடித்த துகள் அறும் முச்சி
பெரும் தண் சண்பகம் செரீஇ - திரு 26,27
முற்ற முடித்த குற்றம் இல்லாத கொண்டையில்
பெரிய குளிர்ந்த சண்பகப்பூவைச் செருகி,
3.
வாகை ஒண் பூ புரையும் முச்சிய
தோகை ஆர் குரல் - பரி 14/7,8
வாகையின் ஒளிரும் பூவினைப் போன்ற கொண்டையைக் கொண்ட
மயில்களின் நிறைந்த அகவல் குரல்

 மேல்
 
  முசிறி - (பெ) மேற்கடற்கரையிலுள்ள பழைய துறைமுகப்பட்டினம்,
         Muziris, an ancient sea-port, near Cranganore
முசிறி சேர நாட்டின் துறைமுகப் பட்டினம். இது பெரியாறு கடலோடு கலக்குமிடத்தில் இருந்தது.
கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியாவைப் பற்றிய பெரிப்ளஸ் குறிப்பில் பத்தி 54-ல் இது முசிறிஸ் என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.
தாலமி (இரண்டாம் நூற்றாண்டு) என்னும் கிரேக்க மாலுமி இதனைக் குறிப்பிடுகிறார். Muziris என்பது அவர்
குறிப்பிடும் பெயர். ரோமானியர் இந்தியா வந்தபோது இந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.

இந்நகரின் வணிக முக்கியத்துவத்திற்காகப் பாண்டியன் இதனைக் கைப்பற்றினான் என்று ஓர் அகப்பாடல்
குறிப்பிடுகிறது.

கொய் சுவல் புரவி கொடி தேர் செழியன்
முதுநீர் முன்துறை முசிறி முற்றி
களிறுபட எருக்கிய கல்லென் ஞாட்பின் - அகம் 57/14-16
கொய்த பிடரிமயிரினையுடைய குதிரைகளையுடைய கொடி கட்டிய தேரினையுடைய பாண்டியன்
பழமையான கடலின் துறைமுகத்தையுடைய முசிறியை வளைத்து
யானைகள் மடியக் கொன்ற கல்லென்னும் ஒலியையுடைய போரில்

சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண் நுரை கலங்க
யவனர் தந்த வினை மாண் நன் கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ
அரும் சமம் கடந்து படிமம் வவ்விய
நெடு நல் யானை அடுபோர் செழியன் - அகம் 149/7-13
சேர அரசரது
சுள்ளியாகிய பேர் யாற்றினது வெள்ளிய நுரை சிதற
யவனர்கள் கொண்டுவந்த தொழில் மாட்சிமைப்பட்ட நல்ல மரக்கலம்
பொன்னுடன் வந்து மிளகொடு மீளும்
வளம் பொருந்திய முசிறி என்னும் பட்டினத்தை ஆரவாரம் மிக வளைத்து
அரிய போரை வென்று அங்குள்ள பொற்வாவையினைக் கவர்ந்துகொண்ட
நெடிய நல்ல யானைகளையும் வெல்லும் போரினையுமுடைய செழியனது

 மேல்
 
  முசு - (பெ) கருங்குரங்குவகை, Langur, Semnopithecus priamus
இதன் முகம் கருப்பாக இருக்கும்.

மை பட்டு அன்ன மா முக முசு கலை - குறு 121/2
மையை ஊற்றியதைப் போன்ற கரிய முகத்தைக்கொண்ட ஆண்குரங்கு

கரு முக முசுவின் கானத்தானே - அகம் 121/15

	

 மேல்
 
  முசுண்டை - (பெ) 1. கொடிவகை, Leather-berried bindweed, Rivea ornata
           2. ஒரு சங்ககாலச் சிற்றரசன்
1.1.
முசுண்டை செழிப்பான கொடியினைக் கொண்டிருக்கும்
கொழும் கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும் - சிறு 166
1.2.
இதன் கொடி அழகின்றி இருக்கும்
புன் கொடி முசுண்டை பொறி புற வான் பூ - நெடு 13
1.3.
இதன் பூ வெண்மையாக இருக்கும்.
வாலிதின் விரிந்த புன் கொடி முசுண்டை - மலை 101
1.4.
இதன் இலை செறிவாக அடர்ந்து இருக்கும்
குவை இலை முசுண்டை வெண் பூ குழைய - அகம் 94/2

குழை அமல் முசுண்டை வாலிய மலர - அகம் 264/2
தழை நிறைந்த முசுண்டையின் பூக்கள் வெள்ளியவாக மலர
1.5.
இதன் மொட்டு சுருங்கியிருக்கும்
சுரி முகிழ் முசுண்டை பொதி அவிழ் வான் பூ - அகம் 235/9

	

2.
சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில்
ஏறு முந்துறுத்து சால்பதம் குவைஇ
நெடும் தேர் களிற்றொடு சுரக்கும் கொடும் பூண்
பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என்
நல் எழில் இள நலம் - அகம் 249/6-10
சந்தனம் பூசிய உயர்ந்து அசையும் அழகிய திமிலினையுடைய
காளையினை முன்னர் நிறுத்தி மிக்க உணவினைக் குவித்து
நீண்ட தேரினை யானையுடன் சேர அளிக்கும் வளைந்த பூணையும்
பல வேற்படையையுமுடைய முசுண்டை என்பானது வேம்பி என்னும் ஊர் போன்ற
எனது நல்ல அழகிய இளமைச் செவ்வி

 மேல்
 
  முஞ்சம் - (பெ) குழந்தைகளின் உச்சியிலணியும் அணிவகை, 
         Ornament worn in the crown of head by children
பொலம் புனை அவிர் இழை கலங்கல் அம் புனல் மணி
வலஞ்சுழி உந்திய திணை பிரி புதல்வர்
கயம் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ - பரி 16/6-8
பொன்னால் செய்யப்பட்ட ஒளிரும் அணிகலன்கள், கலங்கலான அழகிய நீரைப் போன்ற சிவந்த மணிகள்,
ஆகியவை, வலமாகச் சுழித்துக்கொண்டு வரும் சுழியினால் உந்தப்பட்டுவர, வீட்டைவிட்டுத் தனியே வந்து நீராடும்
சிறுவரின்
மெல்லிய தலையுச்சியில் இருக்கும் முஞ்சம் என்னும் அணிகலனோடு அவை சேர்ந்துகொள்ள,

 மேல்
 
  முஞ்ஞை - (பெ) ஒரு மர வகை, firebrand teak, Premna mollissima, the dusky fire brand mark
முஞ்ஞை என்பது ஒரு புதர்ச்செடி. இது இப்போது முன்னை, பசுமுன்னை என்று அழைக்கப்படும்.
இது Lamiaceae குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்
இது 8 மீட்டர் வரை வளரக்கூடிய சிறிய மரமாகும் அல்லது புதர் ஆகும்.
முசுண்டைக் கொடியும் இதனிற் படரும். அதனால் இது நல்ல நிழல் தரும்; இதனடியில் பலர் சேர்ந்து
துயிலுதற்கும் உதவும்: இதன் இலைகள் சிறியன; ஒருவகையான நறுமணம் தருவன: இலைகளை ஆடும்,
முயலும் தின்பதுண்டு: ஆடு மேய்ந்தொழிந்த இவ்விலைகளை எளியோர் வரகரிசிச் சோற்றுடன் தின்பதுண்டு

இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த
குறு நறு முஞ்ஞை கொழும் கண் குற்று அடகு
புன் புல வரகின் சொன்றியொடு பெறூஉம் - புறம் 197/10-12
இடப்பட்ட முள்வேலியையுடைய தோட்டத்து, ஆட்டுக்குட்டி தின்ன ஒழிந்து நின்ற
குறிய நாற்றத்தையுடைய முஞ்ஞையது கொழுவிய கணுவில் கிளைக்கப்பட்ட குறிய இலையை
புல்லிய நிலத்தில் விளைந்த வரகினது சோற்றுடனே பெறுகின்ற

தாளி முதல் நீடிய சிறு நறு முஞ்ஞை
முயல் வந்து கறிக்கும் முன்றில் - புறம் 328/14,15
தாளி மரத்தின் அடியில் நீண்டு வளர்ந்திருக்கும் சிறிய நறிய முன்னை மரத்தை
குறு முயல்கள் வந்து மேயும் முற்றத்தையுடைய 

முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி
பந்தர் வேண்டா பலா தூங்கு நீழல் - புறம் 320/1,2
முற்றத்திலுள்ள முன்னை மரத்தோடு முசுண்டைக் கொடியும் செறிந்திருத்தலால்
வேறே பந்தல் வேண்டாது தாமே பந்தலாய்ப் பலவின் கனி தொங்கும் நீழலில்

இது ஒரு கொடிவகை என்பர் ஔவை.சு.து. அவர்கள் தம் உரையில்.

	

 மேல்
 
  முட்டம் - (பெ) சிறிது சிறிதாகத் தேய்ந்து பின்னர் இல்லாமற்போகும் பாதை,
         path which disappears gradually
நூழிலும் இழுக்கும் ஊழ் அடி முட்டமும் - குறி 258
வழிப்பறி செய்வோர்)கொன்று குவிக்கும் இடங்களும், வழுக்கு நிலமும், புழங்கின தடங்களுள்ள
முட்டுப்பாதைகளும்

காட்டினுள் நடை பாதை போல் தோன்றிச் செல்லச் செல்லத்தேய்ந்து பின்னர் நெறியே காணப்படாது
மாறிவிடும் நெறியை ஊழ் அடி முட்டம் என்றார் என்பர் பொ.வே.சோமசுந்தரனார் தம் உரையில்

 மேல்
 
  முட்டு - 1. (வி) 1. மோது, dash or hit against
          2. குறைவுபடு, குன்று, be defficient, fall short
      - 2. (பெ) 1. தடை, obstacle, hindrance
          2. குறைபாடு, deficiency, shortage  
1.1
முட்டுவேன்-கொல் தாக்குவேன்-கொல்
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல் என கூவுவேன்-கொல் - குறு 28/1-3
தலையைப் பிடித்து முட்டுவேனோ! கையால் தாக்குவேனோ!
என்ன செய்வதென்று அறியேன்! நானும் ஏதாவது சாக்குவைத்து
ஆவென்றும் ஒல்லென்றும் உரக்கக் கூவுவேனோ!
1.2
முட்டாது கொடுத்த முனை விளங்கு தட கை
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடும் கோட்டு
நளி மலை நாடன் நள்ளியும் - சிறு 105-107
குறையாமல் கொடுத்தவனும், போர்முனையில் விளங்கும் பெருமையுடைய கையினையும்,
சொட்டும் மழை (எப்போதும்)பெய்யும் (உயர்ச்சியால்)காற்றுத் தங்கும் நெடிய சிகரங்களையுடைய
செறிந்த மலைநாட்டையும் உடைய நள்ளியும்;
2.1
பல் முட்டு இன்றால் தோழி நம் களவே - அகம் 122/23
பல தடைகளையுடையதாகின்றது, தோழி, நமது இந்தக் களவொழுக்கம்
2.2
மூ_ஏழ் துறையும் முட்டு இன்று போகிய
உரை சால் சிறப்பின் உரவோர் மருக - புறம் 166/8,9
இருபத்தொரு வேள்வித்துறையையும் குறை இன்றாகச் செய்து முடித்த
புகழ் அமைந்த தலைமையையுடைய அறிவுடையோர் மரபிலுள்ளானே

 மேல்
 
  முட்டுப்பாடு - (பெ) இக்கட்டு, சங்கடம், predicament
கண்ட கடவுளர் தம்முளும் நின்னை
வெறி கொள் வியன் மார்பு வேறு ஆக செய்து
குறி கொள செய்தார் யார் செப்பு மற்று யாரும்
சிறு வரை தங்கின் வெகுள்வர் செறு தக்காய்
தேறினேன் சென்றீ நீ செல்லா விடுவாயேல்
நல் தார் அகலத்துக்கு ஓர் சார மேவிய
நெட்டு இரும் கூந்தல் கடவுளர் எல்லார்க்கும்
முட்டுப்பாடு ஆகலும் உண்டு - கலி 93/29-36
நீ கண்ட கடவுள்களுக்குள், உன்னுடைய
மணங்கமழும் அகன்ற மார்பினைச் சிதைத்து
அதில் வடுக்களை உண்டாக்கியவர் யார்? சொல், அவர்களுள் எவரும்
சிறிதுநேரம்கூட நீ இங்குத் தங்கினால் கோபித்துக்கொள்வர், வெறுக்கத்தக்கவனே!
உன்னைத் தெரிந்துகொண்டேன்! நீ செல்வாயாக! ஒருவேளை நீ செல்லாமல் இருந்துவிட்டால்
உன் நல்ல மாலையையுடைய மார்பினில் ஒன்றாக ஒட்டியிருக்கும்படி பொருந்திக்கிடந்த
நீண்ட கரிய கூந்தலையுடைய அந்தக் கடவுளர் எல்லார்க்கும்
சங்கடம் ஏற்படவும் செய்யும்".

 மேல்
 
  முடங்கர் - (பெ) 1. பிள்ளைப்பேற்று நிலையில் தோன்றும் அசதி, Physical exhaustion, as in confinement
          2. முடக்கமான இடம், space with bends
1. தமிழ்ப்பேரகராதி இந்தப் பொருள் கொள்ளுகிறது. சான்றாக இந்த அடிகளைக் குறிப்பிடுகிறது..
ஊன் பொதி அவிழா கோட்டு உகிர் குருளை
மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த
துறுகல் விடர் அளை பிணவு பசிகூர்ந்து என - அகம் 147/3-5
தசையின் மறைப்பு நீங்காத வளைந்த நகத்தினையுடைய குட்டிகள்
மூன்றை ஒரு சேரப்பெற்ற அசதி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய
பாறையின் பிளப்பாகிய குகையிலுள்ளதுமாகிய பெண்புலி பசி மிக்கதாக
2.
ந.மு.வே.நாட்டார் இதே அடியின் வரும் இந்தச் சொல்லுக்கு முடக்கமான இடம் என்று பொருள் கொள்வார்.
தசையின் மறைப்பு நீங்காத வளைந்த நகத்தினையுடைய குட்டிகள்
மூன்றை ஒரு சேரப்பெற்றதும், முடக்கமான இடத்திலே ஓய்ந்த
பாறையின் பிளப்பாகிய குகையிலுள்ளதுமாகிய பெண்புலி பசி மிக்கதாக

 மேல்
 
  முடங்கல் - (பெ) முடங்கிக்கிடப்பது, that which is bent
பெரும் சே_இறவின் துய் தலை முடங்கல்
சிறு_வெண்_காக்கை நாள் இரை பெறூஉம் - நற் 358/8,9
பெரிய சிவந்த இறாமீனின் பஞ்சு போன்ற தலையையுடைய முடங்கிய உடலை
சிறிய வெண்ணிறக் கடற்காக்கை அன்றைய உணவாகப் பெறும்

இறாமீன் கால்களையும் உணரிகளையும் ஒடுக்கிக்கொண்டிருப்பது முடங்கிக்கிடப்பது போறலின் முடங்கல்
எனப்பட்டது என்பார் ஔவை.சு.து. தம் உரைவிளக்க்த்தில்.
 
	

முடங்கல் இறைய தூங்கணம்_குரீஇ - குறு 374/5
வளைவான சிறகுகளையுடைய தூக்கணங்குருவி

 மேல்
 
  முடங்கு - 1. (வி) 1. சுருண்டுகிட, lie down with a bent body
           2. வளை, bend, curve
1.1
பசி அட முடங்கிய பைம் கண் செந்நாய் - நற் 103/6
பசி வருத்துவதால் சுருண்டுகிடக்கும் பசிய கண்ணையுடைய செந்நாயின்,
1.2
மாண்ட எறித்த படை போல் முடங்கி மடங்கி
நெறித்துவிட்டு அன்ன நிறை ஏரால் என்னை
பொறுக்கல்லா நோய் செய்தாய் - கலி 94/9,10
"சிறப்பான கலப்பையில் இறுக்கப்பட்ட கொழுவினைப் போல் முடங்கியும், மடங்கியும்
சுருட்டிவிட்டதைப் போன்ற நிறைந்த அழகால், எனக்குப்
பொறுக்க முடியாத காம நோயை ஏற்படுத்தினாய்!

கடுங்கண் யானை நெடும் கை சேர்த்தி
முடங்கு தாள் உதைத்த பொலம் கெழு பூழி - அகம் 63/4,5
கடுமையான யானை தன் நீண்ட கையைச் சேர்த்து
வளைந்த காலால் உதைத்த பொன்துகள் கிளம்பும் புழுதியை

கூனலாக வளைந்திருக்கும் இறால் மீனை முடங்கு இறா என்று அழைக்கின்றன பல சங்கப்பாடல்கள்.
பார்க்க : முடங்கல் - படம்

முடி வலை முகந்த முடங்கு இறா பாவை - நற் 49/3
முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை - நற் 211/5
முள் கால் இறவின் முடங்கு புற பெரும் கிளை - குறு 109/1
முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும் - அகம் 220/17
துய் தலை முடங்கு இறா தெறிக்கும் பொற்பு உடை - அகம் 376/16

 மேல்
 
  முடந்தை - (பெ) வளைந்தது, anything bent
முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு - அகம் 284/3
வளைந்து கிடக்கும்வரகினது பருத்த குருத்தினைத் தின்று

முடந்தை நெல்லின் கழை அமல் கழனி - பதி 32/13
வளைந்த நெல்லின் மூங்கிலைப் போன்ற தாள் செறிவாக இருக்கும் வயல்வெளிகளையுடைய

	

 மேல்
 
  முடம் - (பெ) 1. கை, கால் மடங்கிச் செயலிழந்த நிலை, leg or arm being bent and crippled
         2. வளைவு, bend, curve
1.
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு கால் பட்டத்து
இன்னா ஏற்றத்து இழுக்கி முடம் கூர்ந்து
ஒரு தனித்து ஒழிந்த உரன் உடை நோன் பகடு - அகம் 107/13-15
இடிந்து விழும் மண்ணின் இடையூற்றினை அஞ்சுவதான ஒரே துறையினையுடைய ஓடையிலுள்ள
இன்னாததாகிய ஏற்றங்கொண்ட நெறியில் வழுக்கி விழுந்து முடம்பட்டு
தன்னந்தனியே ஒழிந்து கிடக்கும் உடல்வலி வாய்ந்த தன்மையுடையன பொறுக்கும் பகட்டினை

	
2.
ஒரு சில மரங்களின் அடிப்பகுதி நேராக மேல்நோக்கிச் செல்லாமல், வளைந்து பக்கவாட்டில் செல்லும். அத்தகைய
மரங்களை முடமான மரங்கள் என்கின்றன இலக்கியங்கள். 

முடம் முதிர் மருதத்து பெரும் துறை - ஐங் 31/3
முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும் - அகம் 91/16
முட காஞ்சி செம் மருதின் - பொரு 189
பெரும் களிறு தொலைத்த முட தாள் ஓமை - நற் 137/7
களரி ஓங்கிய கவை முட கள்ளி - நற் 384/2
கடற்றில் கலித்த முட சினை வெட்சி - குறு 209/5
நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முட தாழை - கலி 133/4
படப்பை நின்ற முட தாள் புன்னை - அகம் 180/13
தொகு முகை விரிந்த முட கால் பிடவின் - அகம் 344/3
முட பனையத்து வேர் முதலா - புறம் 229/3

 மேல்
 
  முடலை - (பெ) முறுக்கு, திருக்கு, twist in the fibre
முடலை யாக்கை முழு வலி மாக்கள் - பெரும் 61
முறுக்குண்ட உடம்பினையும் நிரம்பிய மெய்வலியினையுமுடைய மாக்கள்

	

 மேல்
 
  முடவு - (பெ) முடம், வளைவு, bend
முடவு முதிர் புன்னை தடவு நிலை மா சினை - அகம் 10/3
முடம்பட்ட முதிர்ந்த புன்னை மரத்தின் பெரிய நிலையையுடைய கரிய சினையில்

முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் - அகம் 352/1
வளைதல் மிக்க பலாமரத்தின் குடம் போன்ற பெரிய பழத்தினை

	

 மேல்
 
  முடி - 1. (வி) 1. நிறைவேறு, be accomplished
         2. நிறைவேற்று, accomplish
         3. முடிச்சுப்போடு, கட்டு, tie, fasten, make into a knot
         4. சூடு, அணி, put on, adorn
         5. இறுதிநிலை அடை, முற்றுப்பெறு, end, come to a close, terminate
     - 2. (பெ) 1. நாற்றுக்கட்டு, bundle of (paddy) seedlings for transplantation
         2. முடிச்சு, knot
         3. கிரீடம், crown
         4. முடிச்சுப்போடுதல், fastening into a knot
         5. மயிர், hair
1.1
இன்னா அரும் படர் தீர விறல் தந்து
இன்னே முடிக தில் அம்ம ---------
------------------------------------ ---------------------------
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறை தொழிலே - நெடு 167-188
தீதாக இருக்கின்ற ஆற்றுதற்கரிய துயரம் தீரும்படி, வெற்றியைக் கொடுத்து
இப்பொழுதே முடிவதாக -------------
----------------------------------- ------------------------
நள்ளென்னும் ஓசையையுடைய நடுயாமத்திலும் பள்ளிகொள்ளாதவனாய்,
ஒருசில வீரரோடு திரிதலைச் செய்யும் அரசன்,
பலரோடு மாறுபட்டுப் பொருகின்ற பாசறையிடத்துப் போர்த்தொழில்
1.2
அதனால் செல்-மின் சென்று வினை முடி-மின் சென்று ஆங்கு
அவண் நீடாதல் ஓம்பு-மின் - நற் 229/5,6
அதனால் செல்லுங்கள், சென்று பொருளீட்டும் வினையை முடியுங்கள், சென்றபின் அங்கு
அவ்விடத்திலேயே நீண்டநாள் தங்காமல் காத்துக்கொள்ளுங்கள்
1.3
துவர முடித்த துகள் அறும் முச்சி
பெரும் தண் சண்பகம் செரீஇ - திரு 26,27
முற்ற முடித்த குற்றம் இல்லாத கொண்டையில்
பெரிய குளிர்ந்த சண்பகப்பூவைச் செருகி
1.4
இணைத்த கோதை அணைத்த கூந்தல்
முடித்த குல்லை இலை உடை நறும் பூ - திரு 200,201
பிணைக்கப்பட்ட மாலையினையும், சேர்த்தின கூந்தலையும் உடையராய்,
தலையிலே அணிந்த கஞ்சங்குல்லையினையும், இலையையுடைய நறிய பூங்கொத்துக்களையும்,
1.5
முடிந்ததும் முடிவதும் முகிழ்ப்பதும் அவை மூன்றும்
கடந்து அவை அமைந்த கழலின் நிழலவை - பரி 13/47,48
முடிந்துபோனதும், இனி முடியப்போவதும், இப்போது தோன்றியிருப்பதும் ஆகிய மூன்று காலங்களும்
கடந்து, அவை பொருந்தப்பெற்ற உன் திருவடிகளின் நிழலில் உள்ளவை;
2.1
கார் ஏறு பொருத கண் அகன் செறுவின்
உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர்
முடி நாறு அழுத்திய நெடு நீர் செறுவில் - பெரும் 210-212
கரிய ஆனேறுகள் பொருத இடமகன்ற வயல்களில்,
(தம்மால்)உழப்படாத (அந்த)நுண்ணிய சேற்றை(க் காலால் சமப்படுத்திய)உழவர்
முடி(யாக வீசிய)நாற்றை அழுத்தி நட்ட நீண்டநாள் நிற்கும் நீரையுடைய வயலில்
2.2
தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும்
கொடு முடி வலைஞர் குடி வயின் சேப்பின் - பெரும் 273,274
தோள்களும் அமிழும் குளங்களினுடைய கரையைக் காத்திருக்கும்,
வளைந்த முடிச்சுகளையுடைய வலைகளையுடையோருடைய குடியிருப்பில் தங்குவீராயின் -
2.3
கடி அரண் தொலைத்த கதவு கொல் மருப்பின்
முடி உடை கரும் தலை புரட்டும் முன் தாள்
உகிர் உடை அடிய ஓங்கு எழில் யானை - பட் 229-231
காவலையுடைய அரண்களைப் பிடித்த (கோட்டைக்)கதவை முறிக்கும் கொம்பினையும்,
கிரீடங்களையுடைய கரிய தலைகளை உருட்டும் முன்காலின்
நகமுடைய அடிகளையும் கொண்ட உயர்ந்த அழகினையுடைய யானை,
2.4
முடி முதிர் பரதவர் மட மொழி குறு_மகள் - நற் 207/9
வலையை முடிதலில் திறமைகொண்ட பரதவரின் மடப்பமுள்ள மொழியையுடைய இளமகள்
2.5
வெறி கமழ் துறு முடி தயங்க நல் வினை
பொறி அழி பாவையின் கலங்கி - நற் 308/6,7
மணங்கமழும் அடர்ந்த கூந்தல் அசைய, நல்ல வேலைப்பாடான,
செலற்றுப்போன பாவையைப் போலக் கலங்கி

 மேல்
 
  முடிநர் - (பெ) 1. செய்து முடிப்பவர், one who accomplishes
         2. முடிச்சுப்போடுபவர், one who knots
1.
யாண்டு உளர்-கொல்லோ வேண்டு வினை முடிநர் - குறு 195/3
எங்கு இருக்கின்றாரோ? வேண்டிய செயலை முடிக்கச் சென்றவர்,
2.
செம்பு நிறை கொண்மரும் வம்பு நிறை முடிநரும்
பூவும் புகையும் ஆயும் மாக்களும் - மது 514,515
செம்பை நிறுத்துக் கொள்வாரும், கச்சுக்களை நிறைவாக முடிவாரும்,
பூக்களையும் சாந்தினையும் நன்றாக ஆய்ந்து விற்பாரும்

 மேல்
 
  முடியன் - (பெ) சங்க காலச் சிற்றரசன்/வள்ளல், a chieftain/philanthropist of sangam period
வரை போல் யானை வாய்மொழி முடியன்
வரை வேய் புரையும் நல் தோள்
அளிய தோழி தொலையுந பலவே - நற் 390/9-11
மலை போலத் தோன்றும் யானைகளையும், வாய்மையான சொற்களையும் உடைய முடியன் என்பானின்
மலையில் உள்ள மூங்கிலைப் போன்ற பிற பெண்களின் நல்ல தோள்கள்
இரங்கத்தக்கன தோழி, தம் அழகினையும் இழப்பன மிகப் பல.

இந்த முடியன் தென்னார்க்காடு மாவட்டத்துத் திருக்கோவலூர் வட்டத்தின் தென் பகுதியில் வாழ்ந்த ஒரு வள்ளல்
என்பார் ஔவை.சு.து, தம் உரை விளக்கத்தில். இவன் பெயரைத் தாங்கிய முடியனூர் என்னும் ஊர் இன்றும்
உள்ளது. இம் முடியனுக்குரிய மலைகள் கள்ளக்குறிச்சிப் பகுதியில் உள்ளன.

 மேல்
 
  முடுக்கர் - (பெ) 1. நீர்நிலைக்கரையில் நீர் அரித்த இடம்,
          place where water presses against the bank and erodes
          2. குறுகலானதும் கோணியதுமான இடம், narrow winding space
1.
குமிழி சுழலும் குண்டு கய முடுக்கர்
அகழ் இழிந்து அன்ன கான்யாற்று நடவை - மலை 213,214
நீர்க்குமிழிகள் சுழன்று வருகின்ற ஆழமான பொய்கையின் நீர் அரித்த கரையின்(மறுபக்கத்தில்),
அகழியில் இறங்குவது போன்ற, காட்டாற்று வழித்தடம்
2.
இரவு குறும்பு அலற நூறி நிரை பகுத்து
இரும் கல் முடுக்கர் திற்றி கெண்டும்
கொலை வில் ஆடவர் போல - அகம் 97/4-6
இரவிலே காட்டரண்களிலுள்ளோர் அலற அவர்களைக் கொன்று, தாம் கொண்ட ஆநிரைகளைப் பகுத்துக்கொண்டு
பெரிய கற்பாறையின் முடுக்கிலே தசையினை அறுத்துத்தின்னும்
கொலைத்தொழில் வல்ல வில்லினையுடைய வெட்சி வீரர் போல

 மேல்
 
  முடுக்கு - (வி) 1. ஆணி, திருகாணி முதலியவற்றை உட்செலுத்து, drive in as a screw or nail
          2. தூண்டு, urge, induce
          3. இயக்கத்தைத் தூண்டு, drive
1
கைவல் கம்மியன் முடுக்கலின் புரை தீர்ந்து
ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை - நெடு 85,86
கைத்தொழில் வல்ல தச்சன் (ஆணிகளை நன்றாக)முடுக்கியதனால் இடைவெளியற்று,
வெண்சிறுகடுகு அப்பிவைத்த நெய்யணிந்த நெடிய நிலையினையுடைய

இலங்கு துளை செறிய ஆணி முடுக்கி
புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து - மலை 27,28
மின்னுகின்ற துளைகள் முற்றிலும் அடையுமாறு ஆணிகளை இறுகப் பதித்து,
புதுமையான உருவாக்கமாக தந்தத்தை யாப்பாக(பத்தரின் மேல் குறுக்குக்கட்டையாக) அமைத்து
2
பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ - மலை 177
பெண் நாயை விரட்டிக் கடிக்கவிட்டுக்கிடைத்த (உடும்பின்)பருமனான தசைத்துண்டோடு கலந்து,
3
காரிகை நீர் ஏர் வயல் காம களி நாஞ்சில்
மூரி தவிர முடுக்கு முது சாடி - பரி 20/53,54
பெண்ணின் தன்மையைக் கொண்ட அழகு என்னும் வயலில், காமவெறியாகிய கலப்பையைக் கட்டி
எம் தலைவரான எருமையைச் சோம்பிக்கிடக்காமல் முடுக்கிவிட்டு உழுகின்ற பலமுறை உழப்படும் உழவே

 மேல்
 
  முடுகு - 1. (வி) விரைந்து செல், hasten, move quickly
      - 2. (பெ) விரைவான இயக்கம், quick movement
1.
முயல் வேட்டு எழுந்த முடுகு விசை கத நாய் - நற் 252/10
முயல் வேட்டைக்காகப் புறப்பட்டு விரைவாகும் வேகங்கொண்ட சினமுள்ள நாயின்

குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக - குறு 189/2
குன்றிலிருந்து விழும் அருவியைப் போல வெள்ளிய தேர் விரைந்து செல்க;
2.
பரி முடுகு தவிர்த்த தேரன் எதிர்மறுத்து
நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கி
சென்றோன் மன்ற அ குன்று கிழவோனே - அகம் 48/20-22
தன் தேரின் குதிரைகளின் வேகத்தைத் தடுத்தவன், எதிர்நோக்கலாக
நின் மகளின் மையுண்ட கண்களைப் பலமுறை நோக்கிச்
சென்றான், அந்தக் குன்றுக்கு உரியவன்;

 மேல்
 
  முடுவல் - (பெ) பெண் நாய், female dog
முடுவல் தந்த பைம் நிண தடியொடு - மலை 563
பெண்நாய் (கடித்துக்)கொண்டுவந்த இளங்கொழுப்புள்ள தசைகளும்,

 மேல்
 
  முடை - (பெ) 1. கெட்ட மணம், offensive odour
         2. புலால், மாமிசம், flesh
1.
கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை - திரு 53
கண்களைத் தோண்டி உண்ணப்பட்ட மிக்க முடை நாற்றத்தையுடைய கரிய தலையை
2.
வளை வாய் பருந்தின் வள்ளுகிர் சேவல்
கிளை தரு தெள் விளி கெழு முடை பயிரும் - அகம் 363/13,14
வளைந்த வாயினையும் கூரிய நகத்தினையும் உடைய பருந்தின் சேவல்
தன் கிளையினைத் தருகிற்கும் தெளிந்த குரலால் ஆண்டுப் பொருந்திய ஊன் உண்ணற்கு அழைக்கும்

 மேல்
 
  முண்டகம் - (பெ) 1. கழிமுள்ளி, indian nightshade, Acanthus ilicifolius
1.
கூன் முள் முண்டக கூர்ம் பனி மா மலர் - குறு 51/1
வளைந்த முட்களையுடைய கழிமுள்ளியின் நடுக்கும் பனிக்காலத்து கரும் மலர்

அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து
மணி கேழ் அன்ன மா நீர் சேர்ப்ப - குறு 49/1,2
அணிலின் பல்லைப்போன்ற பூந்தாதுக்கள் முதிர்ந்திருக்கும் கழிமுள்ளிச்செடியுள்ள
நீலமணியின் நிறம் போன்ற பெரிய கழியினுக்கு உரிமையாளனே!

அணில் பல் முண்டகத்தின் முள்ளுக்கு உவமை. முண்டகம் - கழிமுள்ளிச்செடி - உ.வே.சா - உரை விளக்கம்

கடும் சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும் - சிறு 148
முதல் சூலையுடைய கழிமுள்ளி ஒளியையுடைய நீலமணிபோலப் பூக்கவும்

முண்டகம் வேய்ந்த குறி இறை குரம்பை - நற் 207/2
கழி முள்ளிகளால் மேலே வேயப்பட்ட குறுகிய கூரையையுடைய வீடு

இம் முள்ளி வகை கழிக்கரையிலும் கடற்கரையிலும் காடுபோல் வளர்ந்திருக்கும். இவற்றை அறுத்து ஆண்டு
வாழும் நுளையர் தம் வீடுகட்குக் கூரையாகவேய்வது இயல்பு - ஔவை.சு.து. உரை விளக்கம்.

சங்க இலக்கியங்களில், மருதத்திணை சார்ந்து குறிப்பிடுகையில் நீர்முள்ளி செடிகள் ''முள்ளி'' எனவும், 
நெய்தற்திணை சார்ந்து குறிப்பிடுகையில் கழிமுள்ளி செடிகள் ''முண்டகம்'' எனவும் வழங்கப்பட்டுள்ளன.
மருதத்திணையின் நன்னீர்நிலைகளில் வளரக் கூடிய நீர்முள்ளியும் [Hygrophila auriculata], அதனையடுத்துள்ள
நெய்தற்திணையின் உப்பங்கழி ஓரங்களில் வளரக்கூடிய கழிமுள்ளியும் [Acanthus ilicifolius] 
''அக்காந்தேசி'' [Acanthaceae] எனும் ஒரே தாவரவியல் குடும்பதைச் சேர்ந்தவை.
இவ்விரு தாவரங்களும் முட்களைப் பெற்றுள்ளதோடு, நீலநிறப் பூக்களையும் கொண்டுள்ளன.

இது ஐந்தடி வரை நிமிர்ந்தும் அடர்ந்தும் வளரக் கூடிய முட்புதற்செடி. இலைப்பரப்பு வளைந்தும் நெளிந்தும்
பிளவுற்றும், விளிம்பில் முட்களையும் பெற்றுள்ளது. நுனியிலும் இலைக்கோணத்திலும் பெரிய அளவில்
நீலநிறப் பூக்களை தோற்றுவிக்கும். கடலும் கடல்சார்ந்த பகுதியாகிய நெய்தற்திணையில் உப்பங்கழியின்
ஓரங்களில் முண்டகம் வளர்கின்றன. 

சங்க இலக்கியங்களில் கண்டுள்ளவாறு இதன் பண்புகள்

1. உப்பங்கழியில் வளர்தல்
2. உப்பங்கழியில் கண்டல் மரங்களுடன் காணப்படுதல்
3. உப்பங்கழியில் தில்லை மரங்களுடன் வளர்தல்
4. அணில் பற்களை போன்று முட்களைப் பெற்றிருத்தல்
5. நீலநிற மணிகளைப் போன்று மலர்கள் பெற்றிருத்தல்
6. மீன் முட்களைப் போன்று முட்கள் கொண்டிருத்தல்
7. வளைந்த முட்கள் [கூன் முள்] கொண்டிருத்தல்

பயன்பாடுகள்

1. முண்டகச் செடிகளைக் கூரை வேய்தல்
2. முண்டக மலர்களை மகளிர் சூடுதல்

	

 மேல்
 
  முண்டை - (பெ) முட்டை, egg
அம் சேறு அமைந்த முண்டை விளை பழம் - பதி 60/6
அழகிய குழைவான சதைப்பற்று அமைந்த முட்டை போன்ற முதிர்ந்த பழங்கள்

 மேல்
 
  முணக்கு - (வி) புதை, அடக்கம் செய், bury
வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும்
பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும்
மறுகு-தொறு புலாவும் சிறுகுடி அரவம் - நற் 114/1-3
வெண்மையான கொம்பினை வெட்டி எடுத்து அகன்ற பாறைகளில் வைக்கவும்,
பசிய ஊனைத் தோண்டியெடுத்து பெரிய நகத்தினைப் புதைத்துவைக்கவும்,
தெருக்கள்தோறும் புலால் நாற்றம் கவியும் சிறுகுடியில் எழும் ஆரவாரத்தை

 மேல்
 
  முணங்கு - (பெ) சோம்பல் முறித்தல், shaking of drowsiness or lazyness by stretching ones limbs
இது முணங்கு நிமிர்தல் எனப்படுகிறது. இதனை மூரி நிமிர்தல் என்றும் அழைப்பர்.

தட மருப்பு யானை வலம் பட தொலைச்சி
வியல் அறை சிவப்ப வாங்கி முணங்கு நிமிர்ந்து
புலவு புலி புரண்ட புல் சாய் சிறு நெறி - அகம் 357/4-6
பெரிய கோட்டினையுடைய யானையை வலப்பக்கத்தே விழக் கொன்று
அகன்ற பாறைகள் குருதியால் சிவக்கும்படி கிழித்திழுத்து வந்து சோம்பல் முறித்து
புலால் நாறும்புலி கிடந்து புரண்டதால் புற்கள் சாய்ந்துகிடக்கும் சிறிய நெறிகள்.

அணங்கு அரும் கடும் திறல் என் ஐ முணங்கு நிமிர்ந்து
அளை செறி உழுவை இரைக்கு வந்தன்ன - புறம் 78/2,3
வருந்துதற்கரிய மிக்கவலியையுடைய என் இறைவன் மூரி நிமிர்ந்து
முழையின்கண் கிடந்த புலி தான் விரும்பியதோர் இரையை நோக்கி வந்தாற்போன்ற

முணங்கு நிமிர்தல் - மூரி நிமிர்தல். அஃதாவது தூங்கி எழுந்தவுடன் கைகளையும் உடம்பையும் நீட்டித்
திமிர்விட்டுச் சோம்பலைப் போக்குதல் என்பார் ஔவை.சு.து. தம் உரை விளக்கத்தில்.

	

 மேல்
 
  முணை - (வி) முணவு, வெறு, be averse, hostile
வங்கா வரி பறை சிறு பாடு முணையின்
செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்
விளையாடு இன் நகை அழுங்கா பால் மடுத்து - நற் 341/1-3
வங்கா எனும் வீட்டுப்பறவையை ஓடவிட்டும், பறக்கவிட்டும் விளையாடி சிறிதுபோது இருத்தலை வெறுத்தலால்
சிவந்த புள்ளிகளையுடைய அரக்கினால் செய்யப்பட்ட வட்டு எனும் விளையாட்டுக் கருவியை நாவில் தேய்த்து
விளையாட்டாக இனிய நகை குறையாமல், பாலைக் குடித்து,

வேம்பின் ஒண் பழம் முணைஇ இருப்பை
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ
வைகு பனி உழந்த வாவல் - நற் 279/1-3
வேம்பின் ஒள்ளிய பழத்தை உண்டு வெறுத்து, இருப்பையின்
தேனுள்ள, பால் வற்றிய இனிய பழத்தை விரும்பி,
நிலைகொண்டிருக்கும் பனியில் வருந்திய வௌவால்

பணை நிலை முணைஇய வய_மா புணர்ந்து
திண்ணிதின் மாண்டன்று தேரே - ஐங் 449/2,3
கொட்டகையில் நிற்பதை வெறுத்த வலிய குதிரைகள் பூட்டப்பெற்று,
திண்மையாக ஆயத்தமாக்கப்பட்டுள்ளது தேர்;

 மேல்
 
  முத்தம் - (பெ) முத்து, pearl
முழங்கு கடல் தந்த விளங்கு கதிர் முத்தம் - மது 315
ஒலிக்கும் கடல் தந்த விளங்குகின்ற ஒளியினையுடைய முத்துக்களும்

 மேல்
 
  முத்தன் - (பெ) பாவைத் திருமணத்தில் வரும் ஆண்பாவை,
         the puppet bridegroom in children's marriage play
நோய் இலை இவட்கு என நொதுமலர் பழிக்கும்_கால்
சிறு முத்தனை பேணி சிறு சோறு மடுத்து நீ
நறு நுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ - கலி 59/19-21
வருத்தம் இல்லை இவளுக்கு என்று அயலார் உன்னைப் பழிக்கும்போது
ஒரு பாவைப்பிள்ளையைச் செய்து, அதனைப் பேணி, அதற்கு மணமுடிக்க விளையாட்டாகச் சோறு சமைத்து, நீ 
நறிய நெற்றியையுடைய தோழியருக்கு மகிழ்ந்து பரிமாறும் நோன்பின் பயன் உனக்கு வந்து பொருந்துமோ?

இதனைச் சிறுமுத்தன் என்று அழைப்பர்.

 மேல்
 
  முத்தீ - (பெ) காருகபத்தியம், ஆகவனீயம், தட்சிணாக்கினி என்ற மூவகை வேள்வித்தீ,
        The three sacrificial fires, viz., kārukapattiyam, ākava-ṉīyam, taṭciṇākkiṉi
ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை
மூன்று வகை குறித்த முத்தீ செல்வத்து
இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல - திரு 180-182
(மெய்ந்நூல் கூறும்)நெறியால் கழித்த, அறத்தை எப்பொழுதும் கூறுகின்ற கோட்பாட்டினையும்,
மூன்று வகையைக் கருதின மூன்று தீயாலுண்டாகிய செல்வத்தினையும் உடைய
இருபிறப்பினையுடைய அந்தணர், காலம் அறிந்து வாழ்த்துக்கூற -

 மேல்
 
  முத்து - 1. (வி) முத்தமிடு, kiss
      - 2. (பெ) 1. சிப்பியிலிருந்து கிடைப்பது, Pearl
          2. கண்ணீர்த்துளி, tears
1.
புதல்வர் பூ கண் முத்தி மனையோட்கு
எவ்வம் கரக்கும் பைதல்மாக்களொடு - புறம் 41/14,15
தம் பிள்ளைகளுடைய பூப்போலும் கண்ணை முத்தங்கொண்டு, தம் மனைவியர்க்குத்
தமது வருத்தம் தோன்றாமல் மறைக்கும்துன்பத்தையுடைய ஆடவரோடு
2.1
முத்து படு பரப்பின் கொற்கை முன்துறை - நற் 23/6
முத்துக்கள் விளையும் கடற்பரப்பினையுடைய கொற்கை நகரத்துத் துறையின் முன்
2.2
பூ போல் உண்கண் புலம்பு முத்து உறைப்ப - முல் 23
பூப்போலும் மையுண்ட கண்கள் (தாரையாகச் சொரியாது)தனித்த கண்ணீர் முத்து துளிப்ப

 மேல்
 
  முத்தூறு - (பெ) பாண்டியநாட்டின் ஒரு பிரிவு,
         a tract of land annexed by the Pandiya king from the vELir class
பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்
குப்பை நெல்லின் முத்தூறு தந்த
கொற்ற நீள் குடை கொடி தேர் செழிய - புறம் 24/21-23
பொன் அணிந்த யானையையுடைய பழைய முதிர்ந்த வேளிரது
திரண்ட நெல்லினையுடைய முத்தூற்றுக் கூற்றத்தைக் கொண்ட
வெற்றி பொருந்திய உயர்ந்த குடையினையும் கொடியால் பொலிந்த தேரினையும் உடைய செழியனே!

இந்த முத்தூறு இப்போதுள்ள திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஊர்.
இந்த ஊரில் நெல் விளைச்சல் அதிகம். வேளிர் குடி மக்கள் இவ்வூரில் வாழ்ந்துவந்தனர். இவர்கள் இந்த ஊரில்
தொன்றுதொட்டு வாழ்ந்துவருவதால் ‘தொன்முதிர் வேளிர்’ எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.
மிழலை நாட்டைக் கைப்பற்றிய தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மிழலை நாட்டை
வென்றபின் முத்தூறு நாட்டையும் கைப்பற்றினான். 
மிழலை என்பது இக்காலத்தில் திருவீழிமிழலை என வழங்கப்படுகிறது.
மாங்குடி கிழார் (மாங்குடி மருதனார்) என்னும் புலவர் இந்த வெற்றியைப் பாடியுள்ளார்.
சங்ககாலத்தில் வேளிர் முத்தூற்றுக் கூற்றத்துத் துவரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தனர்.

 மேல்
 
  முத்தை - (பெ) முன்பகுதி, front
ஒன்னா பூட்கை சென்னியர் பெருமான்
இட்ட வெள் வேல் முத்தை தம் என - பதி 85/3,4
எம்மோடு ஒன்றிவராத கொள்கையையுடைய சோழர்களின் வேந்தன்
கீழே எறிந்த வெண்மையான வேலினை என் முன்னே கொண்டுவருவீராக என்ற சொல் கேட்டவுடன், 

 மேல்
 
  முதல் - (பெ) 1. அடிப்பாகம், base, foot, bottom
         2. முதல்வன், தலைவன், chief, head
         3. தொடக்கம், beginning
         4. வேர், கிழங்கு, root
1.
மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து
எய்யா நல் இசை செ வேல் சேஎய் - திரு 60,61
மாமரத்தின் அடியை வெட்டின குற்றம் இல்லாத வெற்றியினையும்,	
அளந்தறியமுடியாத நல்ல புகழினையும், செவ்விய வேலையும் உடைய முருகக்கடவுளின்

சென்ற ஞாயிறு நன் பகல் கொண்டு
குட முதல் குன்றம் சேர குண முதல்
நாள் முதிர் மதியம் தோன்றி நிலா விரிபு - மது 546-548
(மேற்றிசையில்)சென்ற ஞாயிறு நல்ல பகற்பொழுதைச் சேரக்கொண்டு,
மேற்கு அடிவானத்தில் மலையினைச் சேர, கிழக்கில் அடிவானத்தில்
(பதினாறு)நாள் முதிர்ந்த (நிறை)மதி எழுந்து, நிலவுக்கதிர் பரவுகையினால்,

ஏமம் ஆகும் மலை முதல் ஆறே - நற் 192/12
பாதுகாப்பானது இந்த மலையின் அடிவாரத்தில் இருக்கும் வழி.
2.
சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் - திரு 46
சூரனாகிய தலைவனைக் கொன்ற ஒளிவிடுகின்ற இலைத்தொழிலையுடைய நெடிய வேல்
3.
சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇ - சிறு 12
காட்டு நிலத்தின் தொடக்கத்திலுள்ள (கடப்ப)மரத்தின் கோடுகோடான நிழலில் தங்கி 
4.
முதல் சேம்பின் முளை இஞ்சி - பட் 19
கிழங்கையுடைய சேம்பினையும், முளையினையுடைய இஞ்சியினையும் உடைய 

 மேல்
 
  முதல்வியர் - (பெ) முதிய பெண்டிர், old women
முனி துறை முதல்வியர் முறைமை காட்ட - பரி 11/82
சடங்குகளை அறிந்த முதுபெண்டிர் நோன்பு செய்யும் முறையினைக் காட்ட

 மேல்
 
  முதலாட்டி - (பெ) முதன்மையானவள், the first lady
யாய் ஆகியளே விழவு முதலாட்டி - குறு 10/1
தாய் போன்ற இயல்பினள் ஆயினள், (வீட்டின்)விழாக்களுக்கு முதலானவள்!

 மேல்
 
  முதற்று - (வி.மு) முதலாகக் கொண்டது, has (this) as first
உண்டி முதற்றே உணவின் பிண்டம் - புறம் 18/20
உணவை முதலாக உடையது அவ்வுணவால் உள்ளதாகிய உடம்பு

அற நெறி முதற்றே அரசின் கொற்றம் - புறம் 55/12
அறநெறியை முதலாகவுடைத்து வேந்தரது வெற்றி

 மேல்
 
  முதாரி - (பெ) முதுமையையுடையது, one which is old
சிதாஅர் உடுக்கை முதாஅரி பாண - புறம் 138/5
சிதாராகிய உடையையுடைய மூத்த பாணனே!

 மேல்
 
  முதியன் - (பெ) முதியவன், old man
செல்வு_உழி எழாஅ நல் ஏர் முதியன் - புறம் 389/12
செல்லுமிடமெல்லாம் சேறற்கு எழாத நல்லேர் முதியனேன்

 மேல்
 
  முதியை - (மு.ஒ.வி.மு) முதியவனாயிருக்கிறாய், you are elder
புதை இருள் உடுக்கை பொலம் பனைக்கொடியோற்கு
முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும் - பரி 2/22,23
எதனையும் மறைக்கும் இருள் நிற ஆடையை உடைய, பொன்னாலான பனைக்கொடியானாகிய பலதேவனுக்கு
முற்பட்டவன் ஆவாய் என்போர்க்கு முதியவனாக இருப்பதுவும்

 மேல்
 
  முதிர் - (வி) 1. முதிர்ச்சியடை, grow old
         2. பழு, முற்று, பக்குவமடை, become ripe, mature
         3. நன்கு வளர்ந்திரு, full-grown
1.
பார் முதிர் பனி கடல் கலங்க உள் புக்கு
சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் - திரு 45,46
பாறைநிலம் முதிர்வு பெற்ற குளிர்ந்த கடல் நிலைகுலைய உள்ளே சென்று,
சூரனாகிய தலைவனைக் கொன்ற ஒளிவிடுகின்ற இலைத்தொழிலையுடைய நெடிய வேல் -
2.
பழம் முதிர் சோலை மலை கிழவோனே - திரு 317
பழம் முற்றின சோலைகளையுடைய மலைக்கு உரிமையை உடையோனாகிய முருகப்பெருமான்
3.
நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து - சிறு 51
தேனை(ப் பூக்கள் தம்மிடத்திலிருந்து)துளிக்கும் இளமை முதிர்ந்த நுணா மரத்தின்

 மேல்
 
  முதிர்ப்பு - (பெ) முதிர்ச்சி, நிறைவான நிலை, advanced stage (of confinement)
சினை பசும்பாம்பின் சூல் முதிர்ப்பு அன்ன
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ - குறு 35/2,3
கருவுற்ற பச்சைப்பாம்பின் சூல் முதிர்ச்சி போன்ற
பருத்த கரும்பின் குவிந்த அரும்பு மலரும்படி

 மேல்
 
  முதிரம் - (பெ) ஒரு மலை, a hill
அதிரா யாணர் முதிரத்து கிழவ
இவண் விளங்கு சிறப்பின் இயல் தேர் குமண - புறம் 158/25,26
தளராத புது வருவாயையுடைய முதிரமென்னும் மலைக்குத் தலைவனே
உலகம் முழுவதிலும் விளங்குகின்ற தலைமையினையும் இயற்றப்பட்ட தேரினையுமுடைய குமணனே!

இன்றைய முதுமலைக்குரிய சங்க காலப்பெயர் முதிரமலை. குமணன் என்னும் வள்ளல் சங்ககாலத்தில்
இதன் அரசன். 

 மேல்
 
  முதிரை - (பெ) அவரை, துவரை முதலியன, pulse
செ ஊன் தோன்றா வெண் துவை முதிரை
வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை - பதி 55/7,8
தன்னில் கலந்த சிவந்த இறைச்சி வெளியில் தெரியாதவாறு அரைத்த வெண்மையான துவரைச் துவையலையும்,
வெண்மையான நிணம் கலந்த ஊன்சோற்றினையும் உணவாகக் கொண்ட மழவர்களின் கவசம் போன்றவனே!

 மேல்
 
  முதுக்குறை - (வி) அறிவு முதிர், become ripe in wisdom
முதுக்குறை குரீஇ முயன்று செய் குடம்பை - நற் 366/9
அறிவு முதிர்ந்த குருவி முயன்று செய்த கூட்டை

 மேல்
 
  முதுக்குறைமை - (பெ) அறிவு முதிர்ச்சி, ripened wisdom
சுடர் தொடீ போற்றாய் களை நின் முதுக்குறைமை போற்றி கேள் - கலி 62/9
ஒளிவிடும் வளையணிந்தவளே! கைவிடுவாயாக உன் அறிவு முதிர்ச்சியை, கவனமாகக் கேள்,

 மேல்
 
  முதுக்குறைவி - (பெ) அறிவு முதிர்ந்தவள், lady with ripened wisdom
சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி - அகம் 17/9
சிறிய அறிவுசான்ற மகளின் சிலம்பு ஒலிக்கும் சிறிய அடிகள்

 மேல்
 
  முதுகாடு - (பெ) சுடுகாடு, இடுகாடு, cremation or burial ground
ஈம விளக்கில் பேஎய் மகளிரொடு
அஞ்சு வந்தன்று இ மஞ்சு படு முதுகாடு - புறம் 356/3,4
பிணம் சுடு தீயாகிய விளக்காலும், பேய் மகளிராலும்
காண்பார்க்கு அச்சம் வரப்பண்ணுகிறது இந்தப் புகை தவழும் சுடுகாடு

 மேல்
 
  முதுகுடி - (பெ) தொன்றுதொட்டு வரும் பெருமைக்குரிய குடி, ancient and respected family
அரைசு பட கடந்து அட்டு ஆற்றின் தந்த
முரைசு கெழு முதுகுடி முரண் மிகு செல்வற்கு - கலி 105/1,2
பகையரசர்கள் தோல்வியுறும்படி அவர்களை வென்று, கொன்று, அந்த வழியில் கொணர்ந்த
மும்முரசுகளுக்கு உரிமைபூண்ட முதுமையான குடியில் வந்த பகைமையுணர்வு மிக்க பாண்டியர்க்கும்

 மேல்
 
  முதுகுடுமி - (பெ) ஒரு பாண்டிய மன்னன், a Pandiya king
பல்_சாலை_முதுகுடுமியின்
நல் வேள்வி துறைபோகிய - மது 759,760
(பலவாகிய வேள்விச் சாலைகளைக் கண்ட பாண்டியன்)பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போன்று,
நல்ல வேள்வித்துறைளில் முற்றும் தேர்வாயாக,

இவன் கடைச்சங்க காலத்துக்கும் முற்பட்ட முற்காலப் பாண்டியருள் ஒருவன் என்பார் சிலர்.
குடுமி என்ற இயற்பெயரைக் கொண்ட இவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வழியில் வந்தவனாவான்.
மூத்த குடும்பன் என்பதனால் முதுகுடுமி என அழைக்கப்பட்டான். பல யாகங்களை நடத்திய காரணத்தினால்
பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பட்டத்தினைப் பெற்றவனாகவும் இருந்தான்
வழுதி என்ற பாண்டியர்களின் குடிப்பெயரையும் பெற்றிருந்த இவன் நெடியோன் என்ற சிறப்புப்பெயரையும்
பெற்றிருந்தான்.
இவனை நெட்டிமையார் (புறம் 9,12,15), காரிகிழார் (புறம் 6), நெடும்பல்லியத்தனார் (புறம் 64) ஆகிய புலவர்கள்
பாடிய பாடல்கள் புறநானூற்றில் உள்ளன.

 மேல்
 
  முதுநீர் - (பெ) கடல், sea
கொய் சுவல் புரவி கொடி தேர் செழியன்
முதுநீர் முன்துறை முசிறி முற்றி
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின் - அகம் 57/14-16
கொய்த பிடரி மயிர்க் குதிரைகளையுடைய, கொடி கட்டிய தேரையுடைய பாண்டியன்
பழமையான கடலின் துறைமுகத்தையுடைய முசிறியை வளைத்து,
யானைகளைக் கொன்ற பலத்த ஒலியையுடைய போரில்

 மேல்
 
  முதுநூல் - (பெ) பழைமையான வேதம், the ancient vedas
ஒன்று புரிந்த ஈர் இரண்டின்
ஆறு உணர்ந்த ஒரு முதுநூல்
இகல் கண்டோர் மிகல் சாய்-மார் - புறம் 166/3-5
அறம் ஒன்றையே மேவிய நான்கு கூற்றையுடைத்தாய்
ஆறு அங்கத்தாலும் உணரபட்ட ஒரு பழைய நூலாகிய வேதத்துக்கு
மாறுபட்ட நூல்களைக் கண்டோரின் மிகுதியைச் சாய்க்கவேண்டி

 மேல்
 
  முதுபாழ் - (பெ) முதுநிலம், வரண்ட பாழ் நிலம், barren tract, waste land
உயவு நடை பேடை உணீஇய மன்னர்
முனை கவர் முதுபாழ் உகு நெல் பெறூஉம் - நற் 384/4,5
வருத்தமிக்க நடையைக் கொண்ட பெண்புறா உண்பதற்காக, அரசர்
போர் முனையில் கவர்ந்ததால் முதிரப் பாழ்பட்டுப்போன நிலத்தில் சிந்திக்கிடக்கும் நெல்மணியைக் 
கொத்திக்கொணரும்

வெய்துற
இடி உமிழ் வானம் நீங்கி யாங்கணும்
குடி பதிப்பெயர்ந்த சுட்டு உடை முதுபாழ் - அகம் 77/4-6
வெம்மை மிக
இடிகளை உமிழும் மேகம் நீங்கி எவ்விடத்தும்
குடிகள் தத்தம் பதிகளிலிருந்து பெயர்ந்து போகறு ஏதுவாக பலரும் சுட்டிக்கூறும் மிக்க பாழிடமாகிய பாலையில்

 மேல்
 
  முதுமொழி - (பெ) வேதம், the vedas
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ - பரி 3/42
பதினாயிரம் கைகளைக் கொண்ட வேத முதல்வனே!

 மேல்
 
  முதுர்வினள் - (பெ) வயதில் முதிர்ந்தவள், old aged woman
முன்றில் போகா முதுர்வினள் யாயும் - புறம் 159/5
கண் மறைந்துமுற்றத்திடத்துப்புறப்படமாட்டாத மூப்பையுடைய தாயும்

 மேல்
 
  முதுவாய் - (பெ.அ) அறிவு வாய்க்கப்பெற்ற, possessing intelligence
பெரு வரை மிசையது நெடு வெள் அருவி
முதுவாய் கோடியர் முழவின் ததும்பி - குறு 78/1,2
பெரிய மலையின் உச்சியிலுள்ளதாகிய நெடிய வெள்ளிய அருவியானது
அறிவு வாய்த்தலையுடைய கூத்தரது முழவைப் போல ஒலித்து

அறிவு முதிர்ந்த வாய்மையையுடைய எனலும் ஆம்.- உ.வே.சா விளக்கம்

 மேல்
 
  முதுவெள்ளிலை - (பெ) ஒரு சங்ககாலத்துத் துறைமுகப்பட்டினம், a port city during sangam period
கல் காயும் கடு வேனிலொடு
இரு வானம் பெயல் ஒளிப்பினும்
வரும் வைகல் மீன் பிறழினும்
வெள்ளம் மாறாது விளையுள் பெருக
நெல்லின் ஓதை அரிநர் கம்பலை
புள் இமிழ்ந்து ஒலிக்கும் இசையே என்றும்
சலம் புகன்று சுறவு கலித்த
புலவு நீர் வியன் பௌவத்து
நிலவு கானல் முழவு தாழை
குளிர் பொதும்பர் நளி தூவல்
நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை
இரும் கழி செறுவின் வெள் உப்பு பகர்நரொடு
ஒலி ஓவா கலி யாணர்
முதுவெள்ளிலை மீக்கூறும்
வியன் மேவல் விழு செல்வத்து
இரு வகையான் இசை சான்ற
சிறு குடி பெரும் தொழுவர்
குடி கெழீஇய நால் நிலவரொடு
தொன்று மொழிந்து தொழில் கேட்ப - மது 106-124
பாறைகள் சூடேறும் கடுமையான வேனிலால்
பெரிய மேகம் மழையை மறைத்துக்கொண்டாலும்,
(நாள்தோறும் முறையாக)வரும் விடியற்காலத்து வெள்ளி (தன் திசையில்)மாறினாலும்,
மிகுந்த நீர் மாறாது (வருகையினால்)விளைச்சல் பெருக,
நெற்கதிரின் ஓசையும், (அதனை)அறுப்பாரின் ஓசையும்,						110
பறவைகள் ஆரவாரித்து ஒலிக்கும் ஓசையும், என்றும்
பகைமையை விரும்பிச் சுறாமீன்கள் செருக்கித் திரிகின்ற
புலால் (நாறும்)நீரையுடைய அகன்ற கடலிடத்தில்,
நிலாப்போலும் மணலையுடைய கரையினில் குடமுழா(ப்போலும் காயையுடைய) தாழையைக்கொண்ட
குளிர்ந்த சோலையின் செறிந்த நீர்திவலையின் ஓசையும்,						115
வரிசையாக வருகின்ற படகின் மீன்பிடிப்போர் கரையில் இறங்கும் ஓசையும்,
பெரிய கழியின் பாத்திகளில் விளைந்த வெள்ளை உப்பை விற்போரின் ஒலியோடு,
முழங்குதல் ஓயாத முழக்கத்தோடே புது வருவாயையுடைய
முதுவெள்ளிலை (என்னும் ஊரில் வாழும்) - புகழப்படுகின்ற
மிகுதியாய் விரும்பப்படும் சிறந்த செல்வமாகிய,							120
(கல்வி, கேள்வி என்னும்)இரண்டு வகையாலும் புகழ் நிறைந்த	
சிறிய ஊர்களின் பெரிய ஊழியர்கள்,
குடிகள் மிக்க நான்கு நிலங்களிலும் வாழ்வாரோடு
பழைமையைக் கூறி ஏவல் கேட்டுநிற்க;

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துப் போரில் வெற்றி
பெற்றதை முதுவெள்ளிலை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இவ்வூரில் மீன் நிற்கும் கோள்நிலை மாறினும் மழை பொழிந்து வெள்ளம் வரும்.
நெல் அறுப்போர் அறுவடைப் பாட்டோடு புள்ளினங்களின் பாட்டும் சேர்ந்து ஒலிக்கும்.
இவ்வூர் மக்கள் கடலில் மீன் பிடிக்கத் திமிலில் செல்வார்கள். உப்புக் காய்ச்சுவார்கள்.

எனவே, இது ஒரு பாண்டியநாட்டுத் துறைமுகப் பட்டினம் என்பது பெறப்படும்.
இது இன்றைய தூத்துக்குடி என்று சொல்வர்.

 மேல்
 
  முதை - (பெ) பழமை, oldness
முதை படு பசும் காட்டு அரில் பவர் மயக்கி
பகடு பல பூண்ட உழவுறு செம் செய் - அகம் 262/1,2
பழமை மேவிய பசிய காட்டிலே பின்னிய கொடிகளை உழக்கி
எருதுகள் பூண்ட பல ஏரால் உழவினைப் பொருந்திய சிவந்த புன்செய் நிலத்தில்

இந்த முதை என்ற சொல் பெரும்பாலும் சுவல் அல்லது புனம் என்ற சொல்லுக்கு அடையாக வருகிறது.
சுவல் என்பது மேடான நிலம்.

முதை சுவல் கிளைத்த பூழி மிக பல - நற் 389/9
முதை சுவல் கலித்த முற்றா இளம் புல் - குறு 204/3
முதை சுவல் கலித்த மூரி செந்தினை - அகம் 88/1
முதை சுவல் மூழ்கிய கான் சுடு குரூஉ புகை - அகம் 359/14
முதை சுவல் கலித்த ஈர் இலை நெடும் தோட்டு - அகம் 393/4

முதைப்புனம் என்பது நெடுங்காலம் பயன்பாட்டில் உள்ள நிலம்.

முதை புனம் கொன்ற ஆர் கலி உழவர் - குறு 155/1
முதை புனம் காவலர் நினைத்திருந்து ஊதும் - அகம் 94/10

 மேல்
 
  முதையல் - (பெ) பழங்காடு, ancient dry land
விதையர் கொன்ற முதையல் பூழி
இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின் - நற் 121/1,2
விதை விதைப்பவர்கள் உழுது புரட்டிப்போட்ட பழமையான கொல்லையின் புழுதியில்
இடுகின்ற முறைப்படி விதைக்கப்பட்ட ஈரப்பசையுள்ள இலைகளையுடைய வரகின்

முளிந்த ஓமை முதையல் அம் காட்டு
பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி - அகம் 5/8,9
உலர்ந்துபோன ஓமை மரங்களுள்ள பழமையான (அழகிய) காட்டில்
பளிங்கைப் போன்று பல காய்களைக் காய்க்கும் நெல்லிமரங்கள்

 மேல்
 
  முந்து - 1. (வி) சிறந்திரு, surpass, excel
      - 2. (பெ) 1. முன்பான நிலை, front position
          2. முதல் நிலை, first position
          3. முன்னிலை, being ahead
          4. முன்னர், பண்டைக் காலம், olden days
1.
வாய் பறை அசாஅம் வலி முந்து கூகை - நற் 83/4
ஓயாது ஒலிக்கும் வாயினால் பிறரை வருத்தும், வலிமையிற் சிறந்த கூகையே!
2.1.
முந்து நீ கண்டு_உழி முகன் அமர்ந்து ஏத்தி
கை தொழூஉ பரவி கால் உற வணங்கி - திரு 251,252
முன் அப்பெருமானைக் கண்ட பொழுது, முகத்தால் விரும்பி நோக்கி, வாயால் வாழ்த்தி,
கையால் தொழுது, புகழ்ந்து, அவன் அடிகளில் வீழ்ந்து வணங்கி,
2.2.
கொடிச்சி காக்கும் அடுக்கல் பைம் தினை
முந்து விளை பெரும் குரல் கொண்ட மந்தி - நற் 22/1,2
குறமகள் காக்கும் மலைச் சரிவிலுள்ள பசிய தினையின்
முதலில் விளைந்த பெரிய கதிரினைக் கவர்ந்துகொண்ட பெண்குரங்கு

நேரார் ஆர் எயில் முற்றி
வாய் மடித்து உரறி நீ முந்து என்னானே - புறம் 298/4,5
பகைவருடைய கொள்ளற்கரிய அரனைச் சூழ்ந்து
வாயிதழைக் கடித்து உரப்பி நீ முற்படச் செல் ஏவானாதலால்
2.3.
தண் பனி வடந்தை அச்சிரம்
முந்து வந்தனர் நம் காதலோரே - ஐங் 223/4,5
குளிர்ந்த பனியோடே சேர்ந்த வாடையுடன் கூடிய முன்பனிக்காலத்தையும்
முந்திக்கொண்டு வந்துவிட்டார் நம் காதலர்.

அரும் பனி அளைஇய கூதிர்
பெரும் தண் வாடையின் முந்து வந்தனனே - ஐங் 252/4,5
பொறுத்தற்கரிய குளிரையும் கலந்து, கூதிர்காலத்தின்
பெரிதான குளிர்ந்த வாடைக் காற்று வருவதற்கு முன்னர் திரும்பி வந்துவிட்டான்.
2.4
மன்பதை மருள அரசு பட கடந்து
முந்து வினை எதிர்வர பெறுதல் காணியர் - பதி 42/16,17
மக்களெல்லாம் வியப்படையுமாறு அரசர்கள் பலரை வென்று,
முன்னால் செய்த போரை, அடுத்தும் எதிர்வரப் பெறுவதைக் காணும்பொருட்டாக 

முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்
ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே - பரி 13/17,18
முன்னர் நாம் கூறிய ஐந்தனுள்ளும்
முதற்புலனாகிய ஓசையினால் உணரப்படும் வானமும் நீயே!

 மேல்
 
  முந்துறு - (வி) 1. முன்னால் இரு, be in front
          2. முன்னால் செலுத்து, முற்பட விடு, drive in front
          3. முற்படு, be first, precede
          4. முன்னால் செல், go in front
          5. முன்னால் நிறுத்து, place in front
          6. தோற்றுவி, cause to appear
          7. வெளிப்படுத்து, disclose
          8. முன்னிடு, நோக்கமாகக்கொள், bear in mind
1.
எறி படை மயங்கிய வெருவரு ஞாட்பின்
கள் உடை கலத்தர் உள்ளூர் கூறிய
நெடுமொழி மறந்த சிறு பேராளர்
அஞ்சி நீங்கும்_காலை
ஏமம் ஆக தான் முந்துறுமே - புறம் 178/7-11
(பகைவர்)எறியும் படைக்கலம் தம்மில் கலந்த அஞ்சத்தக்க போரின்கண்
கள் உள்ள கலத்தை ஏந்தியவராய் ஊர்க்குள்ளே கூறிய
வீரம் மேம்பட்ட வார்த்தையைப் போரின்கண் மறந்த சிறிய பேராண்மையுடையோர்
போர்க்கலத்து அஞ்சிப் புறங்கொடுத்து ஓடுங்காலத்து
அவர்க்கு அரணாக தான் முன்னால் இருப்பான்.
2.
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை
பரும யானை அயா உயிர்த்து ஆஅங்கு
இன்னும் வருமே தோழி வாரா
வன்கணாளரோடு இயைந்த	
புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்தே - நற் 89/7-11
நாள்தோறும் நம்மைத் துன்புறுத்தும் அன்பில்லாத வாடைக்காற்று,
மேல் அலங்காரம் கொண்ட யானை அயர்ந்து பெருமூச்சு விட்டதைப் போன்று
இப்பொழுதும் வருகின்றதே! தோழி! இதுவரை வராதிருந்த
வன்கண்மையாளரான தலைவரோடு ஒத்த பண்புடைய
துன்பம் நிறைந்த மாலைப்பொழுதையும், தனிமைத்துயரையும் தன் முன்னால் செலுத்திக்கொண்டு
3.
திவவு மெய்நிறுத்து செவ்வழி பண்ணி
குரல் புணர் நல் யாழ் முழவோடு ஒன்றி
நுண் நீர் ஆகுளி இரட்ட பல உடன்
ஒண் சுடர் விளக்கம் முந்துற மடையொடு
நன் மா மயிலின் மென்மெல இயலி
கடும் சூல் மகளிர் பேணி கைதொழுது - மது 604-609
வார்க்கட்டினைச் சரியாகச்செய்து செவ்வழி என்ற பண்ணை வாசித்து,
குரல் என்னும் நரம்பு கூடின நல்ல யாழுடன் முழவும் பொருந்தி,
நுண்ணிய தன்மையுள்ள சிறுபறை ஒலிப்ப, பல பொருள்களோடு,
ஒளிரும் சுடரையுடைய (நெய்)விளக்கு முற்பட, உண்டிகளோடு,
நல்ல பெரிதான மயில் போல மெள்ள மெள்ள நடந்து,
முதிர்ந்த சூல்கொண்ட மகளிரைக் காத்து, கைகுவித்துத் தொழுது
4.
உண்டற்கு இனிய பழனும் கண்டோர்
மலைதற்கு இனிய பூவும் காட்டி
ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற - மலை 282-284
உண்பதற்கு இனிமையான பழங்களையும், பார்த்தவர்கள்
சூடுவதற்கு மகிழ்ச்சிதரும் பூக்களையும், காட்டி
தீமைகள் மிகுந்த பாதையில் அவர் முன்னேசெல்ல,
5.
சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில்
ஏறு முந்துறுத்து சால் பதம் குவைஇ - அகம் 249/6,7
சந்தனம் பூசிய உயர்ந்து அசையும் அழகிய திமிலினையுடைய
காளையினை முன்னர் நிறுத்தி, மிக்க உணவினைக் குவித்து
6..
ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழி படர்ந்து
உள்ளியும் அறிதிரோ எம் என யாழ நின்
முள் எயிற்று துவர் வாய் முறுவல் அழுங்க
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல் - அகம் 39/1-4
செய்யலாகாது என்று ஒழித்த கொள்கையைப் பழித்த நெஞ்சமோடு, பயணம் மேற்கொண்டு
நினைத்தும் அறிந்தீரோ என்னை என்று, உன்	
கூரிய பற்களை உடைய சிவந்த வாயின் முறுவல் அழிய
நோவினை ஏற்படுத்தி அன்பற்றவற்றைப் பேசாதே
7.
தொழு_தகு மெய்யை அழிவு முந்துறுத்து
பன் நாள் வந்து பணிமொழி பயிற்றலின் - அகம் 310/3,4
பிறர் வணங்கத்தக்க தோற்றத்தினையுடையவனாகிய நீ மனச்சிதைவை வெளிப்படுத்தி
பல நாளும் வந்து பணிந்த மொழிகளைப் பலகாலும் கூறலின்
8.
நின் படைகொள் மாக்கள்
பற்றா_மாக்களின் பரிவு முந்துறுத்து
கூவை துற்ற நால் கால் பந்தர்
சிறு மனை வாழ்க்கையின் ஒரீஇ வருநர்க்கு
உதவி ஆற்றும் நண்பின் பண்புடை
ஊழிற்றாக நின் செய்கை - புறம் 29/17-22
நின்னுடைய படைக்கலம் பிடித்த மாந்தர்
நின்னுடைய பகைவரைப் போல் இரக்கத்தை முன்னிட்டுக்கொண்டு
கூவை இலையால் வேயப்பட்ட நான்கு கால்களையுடைய பந்தராகிய
சிறிய இல்லின்கண் வாழும் வாழ்க்கையினின்று நீங்கி நின்பால் வருவார்க்கு
உதவி செய்யும் நட்போடு கூடிய குணத்தையுடைய
முறைமையுடைத்தாக நினது தொழில்

 மேல்
 
  முந்தூழ் - (பெ) மூங்கில், spiny bamboo
தொடி நெகிழ்ந்தனவே தோள் சாயினவே
---------------------- -------------------------- ----------------------
முந்தூழ் வேலிய மலை கிழவோற்கே - குறு 239/1-6
வளையல்கள் கழன்றி வீழ்ந்தன, தோள்கள் மெலிந்துபோய்விட்டன,
-------------------- ------------------------ --------------------
மூங்கில் வேலியை உடைய மலைகளையுடைய நம் தலைவனுக்காக

 மேல்
 
  முந்தை - 1. (பெ) முற்பட்டது, முதலில்வருவது, that which comes first
       -2. (வி.அ) முன், in front of
1.
மன்றுதொறும் நின்ற குரவை சேரிதொறும்
உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ
வேறுவேறு கம்பலை வெறி கொள்பு மயங்கி
பேர் இசை நன்னன் பெரும் பெயர் நன்னாள்
சேரி விழவின் ஆர்ப்பு எழுந்து ஆங்கு
முந்தை யாமம் சென்ற பின்றை - மது 615-620
மன்றுகள்தோறும் நின்ற குரவைக்கூத்தும் - குடியிருப்புகள்தோறும் (நின்ற)
புனைந்துரைகளும் பாட்டுக்களும் (பலவகைப்பட்ட)கூத்துக்களும் (தம்முள்)கலந்து,
வேறு வேறான ஆரவாரம் ஆவேசம்கொண்டு கலந்து,
பெரிய புகழையுடைய நன்னனுடைய பிறந்தநாளில்,
சேரிகளில் உள்ளார் விழவின்கண் ஆரவாரம் எழுந்தாற்போன்ற ஆரவாரத்தோடே
முற்பட்ட (முதல்)யாமம் நிகழ்ந்த பின்னர் 	
2.
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர் - நற் 355/5,6
முன்னதாக இருந்து நண்பர்கள் கொடுத்தால்
நஞ்சையும் உண்பர் மிகுந்த நாகரிகத்தையுடையவர்காள்

 மேல்
 
  முந்நீர் - (பெ) 1. ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்ற மூன்று நீர்களை உடையது, கடல், 
        Sea, as consisting of three waters, viz., river water, spring water and rain water.
         2. பூமியை ஆக்கல், அளித்தல், அழித்தல் என்ற மூன்று தன்மைகளையுடையது,
         Sea, as having the three qualities of forming, protecting and destroying the earth
1. 
இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து - திரு 293
இருண்ட நிறத்தையுடைய கடலால் சூழப்பட்ட (இந்த)உலகத்தில்
2.
வான் இயைந்த இரு முந்நீர்
பேஎம் நிலைஇய இரும் பௌவத்து - மது 75,76
வானவெளியோடு ஒன்றுபட்டுத் தோன்றும் பெரிய மூன்று தன்மையுடைய
அச்சம் நிலைபெற்ற கரிய கடலில்,

 மேல்
 
  மும்மை - (பெ) மூன்றாயிருக்குந் தன்மை, The state of being three
தெரி மாண் தமிழ் மும்மை தென்னம்பொருப்பன்
பரி_மா நிரையின் பரந்தன்று வையை - பரி 26/1,2
ஆராய்ந்தெடுத்த மாட்சிமைக்குரிய தமிழ் மூன்றினையும் கொண்ட தெற்குமலைக்குத் தலைவனான பாண்டியனின்
குதிரைகள் வரிசையாக பரந்து வருவதைப் போன்று பரவி வருகிறது வையை

 மேல்
 
  முய - (வி) நெருங்கியிரு, be close
முய பிடி செவியின் அன்ன பாசடை
கய கண கொக்கின் அன்ன கூம்பு முகை
கணை கால் ஆம்பல் அமிழ்து நாறு தண் போ - நற் 230/1-3
நெருக்கமாய்க்கிடக்கும், பெண்யானையின் காதைப் போன்ற பசிய இலைகளையும்,
குளத்தில் கூட்டமாய் நிற்கும் கொக்குகளைப் போன்ற குவிந்த மொட்டுக்களையும்
திரட்சியான தண்டினையும் உடைய ஆம்பலின் தேன் மணக்கும் குளிர்ந்த விரிநிலை மலரானது

முயத்தல் - நெருங்கல். முயா என்னும் குறியதன் இறுதிச் சினை கெட்டு உகரம் பெறாது நின்றது. - 
பின்னத்தூரார் உரை விளக்கம்.

 மேல்
 
  முயக்கம் - (பெ) தழுவல், embrace
மெய் புகு அன்ன கை கவர் முயக்கத்து
ஓர்_உயிர்_மாக்களும் புலம்புவர் மாதோ - அகம் 305/7,8
ஒருவர் மெய்யில் ஒருவர்மெய் புகுவது போலும் கை விரும்பும் முயக்கத்தால்
ஈருடம்பிற்கு ஓர் உயிர் எனத்தகும் காதலர்களும் வருந்துவரன்றோ

 மேல்
 
  முயக்கு - (பெ) தழுவல், பார்க்க : முயக்கம்
வெய்யாரும் வீழ்வாரும் வேறு ஆக கையின்
முகை மலர்ந்து அன்ன முயக்கில் தகை இன்றே - கலி 78/25,26
உன்னை விரும்புபவரும், நீ விரும்புவரும் ஆகிய பரத்தையர் வெறுத்து மனம் மாறும்படியாக! கையினால்
மலரச்செய்த மொட்டினைப் போன்ற தழுவலில் சிறப்பு இல்லை,

 மேல்
 
  முயங்கல் - (பெ) தழுவுதல், embracing
குளவியொடு
கூதளம் ததைந்த கண்ணியன் யாவதும்
முயங்கல் பெறுகுவன் அல்லன்
புலவி கொளீஇயர் தன் மலையினும் பெரிதே - நற் 119/8-11
காட்டு மல்லிகையுடனே
கூதளத்து மலரையும் நெருக்கமாய்ச் சேர்த்துக்கட்டிய தலைமாலையை உடையவன் ஒருபோதும்
என்னுடைய தழுவுதலைப் பெறமாட்டான்
என்மீது பிணக்குக் கொண்டாலும் கொள்ளட்டும், தன் மலையைக் காட்டிலும் பெரிதாக

 மேல்
 
  முயங்கு - (வி) தழுவு, அணை, embrace, cuddle with, hug
பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ
அன்னை முயங்க துயில் இன்னாதே - குறு 353/6,7
பின்னல் தாழ்ந்த முதுகைத் தழுவி
அன்னை அணைத்திருக்க தூக்கம் இன்னாததாகும்

 மேல்
 
  முயல் - 1. (வி) முனைப்புடன் ஒன்றைச் செய், முயற்சி செய், விடாது ஊக்கத்துடன் செயல்புரி
       strive, try hard, endeavour
       2. ஒரு சிறுவிலங்கு, rabbit, hare 
1.
முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ என கேட்பின்
பனிய கண்படல் ஒல்லா படர் கூர்கிற்பாள்-மன்னோ - கலி 10/12,13
மிக்க வருத்தமின்றி ஊக்கத்துடன் ஈட்டமுடிகின்ற பொருளுக்காகப் போகிறாய் நீ என்று கேள்விப்பட்டால்
நீர் நிறைந்த கண்கள் உறக்கம் கொள்ளாமல் துன்பம் மிகுவாள் அன்றோ

கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை - அகம் 365/7
வன்கண்மையுடைய ஆறலைப்போர் அம்பு எய்ய முயற்சிசெய்து பதுங்கியிருத்தற்கண்

செல்லிய முயலி பாஅய சிறகர்
வாவல் உகக்கும் மாலை யாம் புலம்ப - ஐங் 378/1,2
பறந்து செல்வதற்கு முயன்று விரித்துப் பரப்பிய சிறகினையுடைய
வௌவால் வானுக்கு உயர்ந்து செல்லும் மாலை நேரத்தில் நாம் தனித்து வருந்த,
2.
முயலைப்பற்றிய சில வருணனைகள்:

நெடும் செவி குறு முயல் போக்கு அற வளைஇ - பெரும் 115

குறு விழி கண்ண கூரல் அம் குறு முயல் - அகம் 284/2

பெரும் கண் குறு முயல் கரும் கலன் உடைய - புறம் 322/5

கரும் பிடர் தலைய பெரும் செவி குறு முயல்
உள்ளூர் குறும் புதல் துள்ளுவன உகளும் - புறம் 333/3,4

தூ மயிர் குறும் தாள் நெடும் செவி குறு முயல் - புறம் 334/2

 மேல்
 
  முயல்வு - (பெ) முயலுதல், Endeavouring, persevering; exercising
ஆற்றல் நோய் அட இவள் அணி வாட அகன்று நீ
தோற்றம் சால் தொகு பொருள் முயறி-மன் முயல்வு அளவை
நாற்றம் சால் நளி பொய்கை அடை முதிர் முகையிற்கு
கூற்று ஊழ் போல் குறைபடூஉம் வாழ்நாளும் நிலையுமோ - கலி 17/9-12
ஆற்றல் மிக்க காம நோய் இவளை வருத்த, இவளின் அழகு வாடிப்போக, இவளை விட்டுப் பிரிந்து நீ
பெருமை தரும் தோற்றம் கொண்ட அரச செல்வத்தைப் பெற முயலுகின்றாய்! உன் முயலுதல் தொடரும்வரை
மணம் மிக்க, நீர் நிறைந்த குளத்தில் இலைகளுக்கு மேல் உயர்ந்து நிற்கும் மொட்டுகளுக்கு
மலர்ச்சியே அதற்குக் கூற்றமாக இருப்பது போல், குறைந்துகொண்டுவரும் இவள் கற்பு வாழ்க்கை நிலைபெறுமோ?

 மேல்
 
  முயறல் - (பெ) முயலுதல், trying hard
பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து
உரவு களிறு போல் வந்து இரவு கதவு முயறல்
கேளேம் அல்லேம் கேட்டனெம் பெரும - குறு 244/1-3
பலரும் தூங்கும் நள்ளென்னும் நடு இரவில்
வலிமையுடைய ஆண்யானை போல வந்து இரவில் கதவைத் திறக்க முயன்றதை
நான் கேட்காமல் இல்லை, கேட்டேன், தலைவனே!

 மேல்
 
  முயறி - (மு.ஒ.வி.மு) முயல்கிறாய், you are trying
ஆற்றல் நோய் அட இவள் அணி வாட அகன்று நீ
தோற்றம் சால் தொகு பொருள் முயறி-மன் முயல்வு அளவை
நாற்றம் சால் நளி பொய்கை அடை முதிர் முகையிற்கு
கூற்று ஊழ் போல் குறைபடூஉம் வாழ்நாளும் நிலையுமோ - கலி 17/9-12
ஆற்றல் மிக்க காம நோய் இவளை வருத்த, இவளின் அழகு வாடிப்போக, இவளை விட்டுப் பிரிந்து நீ
பெருமை தரும் தோற்றம் கொண்ட அரச செல்வத்தைப் பெற முயலுகின்றாய்! உன் முயலுதல் தொடரும்வரை
மணம் மிக்க, நீர் நிறைந்த குளத்தில் இலைகளுக்கு மேல் உயர்ந்து நிற்கும் மொட்டுகளுக்கு
மலர்ச்சியே அதற்குக் கூற்றமாக இருப்பது போல், குறைந்துகொண்டுவரும் இவள் கற்பு வாழ்க்கை நிலைபெறுமோ?

 மேல்
 
  முயால் - (வி.வே) முயலே! Oh! rabbit!
திங்களுள் தோன்றி இருந்த குறு முயால்
எம் கேள் இதன் அகத்து உள்_வழி காட்டீமோ - கலி 144/18,19
திங்களுக்குள் தோன்றியிருக்கும் சின்ன முயலே!
என் காதலன் இந்த உலகத்தில் இருக்கும் இடத்தைக் காட்டுவாயா?

 மேல்
 
  முயிறு - (பெ) முசுறு என்னும் ஒருவகை எறும்பு, செந்நிறமுள்ள எறும்பு வகை, Red ant, Formica smaragdina
பழன பாகல் முயிறு மூசு குடம்பை
கழனி நாரை உரைத்தலின் செந்நெல்
விரவு வெள் அரிசியின் தாஅம் - நற் 180/1-3
வயலருகே இருக்கின்ற பலாமரத்தில் முயிறு எனப்படும் சிவந்த பெரிய எறும்புகள் மொய்த்திருக்கும் கூட்டினை
கழனியில் இரைதேடிவந்த நாரை தேய்த்துச் சிதைத்ததால், செந்நெல்
கலந்த வெள்ளை அரிசியைப் போல் எறும்புகளும் அவற்றின் முட்டைகளும் பரந்துகிடக்கும்

பழன பாகல் முயிறு மூசு குடம்பை
கழனி எருமை கதிரொடு மயக்கும் - ஐங் 99/1,2
நீர்நிலைகளை ஒட்டிப் படர்ந்திருக்கும் பாகல் கொடியில், முசுற்றெறும்புகள் மொய்த்திருக்கும் கூட்டினை
வயல்வெளிகளில் மேயும் எருமை, நெற்கதிரோடு சேர்த்து உழப்பிவிடும்

இந்த முசிற்றெறும்புகள் கூட்டம் கூட்டமாக வாழும். பெரிய இலைகலையுடைய மா, பலா ஆகிய மரங்களில்
அதன் இலைகளை ஒன்றுசேர்த்துக் கூடுகட்டி முட்டையிட்டு வாழும்.
இங்கே வயல்வெளி ஓரங்களில் படர்ந்து கிடக்கும் பாகற்கொடியின் இலைகலைச் சேர்த்து அவை கூட்டுகட்டுவதாகப்
புலவர் கூறுகிறார்.

	

 மேல்
 
  முரச்சு - (வி) முற்றுவி, ஒரு செயலை முடி, நிறைவேற்று, accomplish, finish
மோகூர் மன்னன் முரசம் கொண்டு
நெடுமொழி பணித்து அவன் வேம்பு முதல் தடிந்து
முரசு செய முரச்சி களிறு பல பூட்டி
ஒழுகை உய்த்தோய் - பதி 44/14-17
பகை மன்னனாகிய மோகூர் மன்னனின் முரசத்தைக் கைப்பற்றி,
அவன் கூறிய வஞ்சினத்தை முறித்து அவனைப் பணிவித்து, அவனது காவல்மரமாகிய வேம்பினை அடியோடு
வீழ்த்தி
முரசு செய்வதற்காகத் துண்டுகளாக வெட்டி, யானைகள் பலவற்றை வண்டியில் பூட்டி
இழுத்துக்கொண்டு போகச் செய்தவனே!

முரசு செய முரச்சி என்றது, அவ்வேம்பினை முரசாகச் செய்யும்படி முற்றுவித்து என்றவாறு. முற்றுவித்தலாவது
ஒழுகை ஏற்றலாம்படி துண்டங்களாகத் தரிப்பித்தல் - ஔவை.சு.து. உரை விளக்கம்.

 மேல்
 
  முரசம் - (பெ) அளவில் பெரிய, அரைக்கோள வடிவிலான தோல்கருவி, பறை, a kind of drum.

இன் இசைய முரசம் முழங்க - மது 80

படு கண் முரசம் காலை இயம்ப - மது 232

மா கண் முரசம் ஓவு இல கறங்க - மது 733

பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம் - பட் 236

தழங்கு குரல் முரசம் காலை இயம்ப - ஐங் 448/1

போர்ப்பு_உறு முரசம் கறங்க ஆர்ப்பு சிறந்து - பதி 21/18

எடுத்து எறிந்த விறல் முரசம்
கார் மழையின் கடிது முழங்க - பதி 80/3,4

இடி உமிழ் முரசம் பொரு_களத்து இயம்ப - அகம் 354/2

பிணி உறு முரசம் கொண்ட_காலை - புறம் 25/7

	

 மேல்
 
  முரசு - (பெ) பார்க்க : முரசம்
அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை - முல் 79

முரசு மாறு இரட்டும் அரும் தொழில் பகை தணிந்து - ஐங் 450/1

அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப - புறம் 126/19

 மேல்
 
  முரஞ்சு - 1. (வி) முதிர், முற்று, mature, ripen
      - 2. (பெ) முதிர்வு, maturing
1.
கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்து - மலை 268
கிளைகள் பலவும் முற்றிப்போன பூவாது காய்க்கும் மரமாகிய ஆலமரத்தில்
2.
முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினை பலவே - மலை 144
முதிர்வு கொண்டு தலை வணங்கின, (மேலும் கீழும்)அசைகின்ற கிளைகளிலுள்ள பலாப்பழங்கள்

 மேல்
 
  முரண் - 1. (வி) 1. மாறுபடு, எதிராகு, பகைகொள், be at variance, be opposed, be in conflict with
          2. ஒத்திரு, be similar to
      - 2. (பெ) 1. மாறுபாடு, எதிரான நிலை, variance, opposition
           2. பகைமை, being inimical
1.1.
கருவிளை முரணிய தண் புதல் பகன்றை
பெருவளம் மலர அல்லி தீண்டி - அகம் 255/11,12
கருவிளையின் பூவினொடு மாறுபட்ட குளிர்ந்த பகன்றைச் செடியின்
மிக்க செழுமையுடைய மலர்களின் அகவிதழை அசைத்து

வேந்தனும் வெம் பகை முரணி ஏந்து இலை
விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை - அகம் 214/5,6
அரசனும் மிக்க பகையொடு மாறுபட்டு, நிமிர்ந்த இலையினையுடைய
ஒளி விடுகின்ற நீண்ட வேல் மின்னும் பாசறைக்கண்ணேயிருந்து

சிறு கிளி முரணிய பெரும் குரல் ஏனல் - நற் 389/6
சிறு கிளிகள் கொத்தியழிக்கும் பெரிய கதிர்களையுடைய தினைப்புனத்தின்
முரணுதல் - மாறுகொண்டழித்தல் - பின்னத்தூரார் உரை விளக்கம்.

செருவேட்டு
இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணி
சென்று அமர் கடந்து நின் ஆற்றல் தோற்றிய - புறம் 99/8-10
போரை விரும்பி
ஒலிக்கும் ஓசை பொருந்திய முரசினையுடைய ஏழு அரசரோடு பகைத்து
மேற்சென்று போரின்கண் வென்று நின் வலியைத் தோற்றுவித்த
1.2
பொரு கயல் முரணிய உண்கண் - குறு 250/5
ஒன்றை ஒன்று எதிர்ந்த இரண்டு கயல்களை ஒத்த மையுண்ட கண்களையும்
முரணிய - உவம வாசகம் - உ.வே.சா உரை, விளக்கம்.
2.1.
முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி - திரு 84
முடியோடு விளங்கிய (ஒன்றற்கொன்று)மாறுபாடு மிகும் அழகினையுடைய மணிகள்

முது மரத்த முரண் களரி - பட் 59
பழைமையான மரத்தின் (கீழான) மற்போர் (செய்யும்) களங்கள் (கொண்ட பட்டினம்) 
2.2
மறம் கொள் இரும் புலி தொன் முரண் தொலைத்த
முறம் செவி வாரணம் - கலி 42/1,2
"வீரங்கொண்ட பெரிய புலியுடனான தன் பழம் பகையைத் தீர்த்துக்கொண்ட
முறம் போன்ற காதுகளைக் கொண்ட யானை

 மேல்
 
  முரம்பு - (பெ) பருக்கைக்கற்கள் நிறைந்த மேட்டு நிலம், hard rough ground having mounds of gravel
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி - அகம் 133/3
சிவந்த பரல்கள் மிக்க வன்னிலத்தில் கிளறிப்போகட்ட புழுதியில்

முரம்பு கண் உடைந்த பரல் அவல் போழ்வில் - மலை 198
சரளைமேடுகளில் மேற்பரப்பு வெடித்து(உண்டான),கூழாங்கல்(நிறைந்த) ஆழமற்ற பள்ளங்கள்(உள்ள)பிளவுகளில்

 மேல்
 
  முரல் - (வி) 1. ஒலி, கத்து, பாடு, இசை, sound, cry, sing
1.1
ஆண்புறா தன் துணையைச் சேர்ந்துகொள்ள அழைக்கும் ஒலி.

வண்ண புறவின் செம் கால் சேவல்
வீழ் துணை பயிரும் கையறு முரல் குரல் - நற் 71/8,9
அழகிய புறாவின் சிவந்த கால்களையுடைய ஆண்புறா
தான் விரும்பும் தன் துணையைச் சேர்ந்துகொள்ள அழைக்கச் செயலற்றுப்போய் ஒலிக்கும் ஓசையை
1.2
போர்க்களத்தில் ஊதும் சங்கின் ஒலி.

இடி எதிர் கழறும் கால் உறழ்பு எழுந்தவர்
கொடி அறுபு இறுபு செவி செவிடு படுபு
முடிகள் அதிர படிநிலை தளர
நனி முரல் வளை முடி அழிபு இழிபு - பரி 2/37-40
இடிக்கு எதிராய் முழங்கும் முழக்கத்தோடு, காற்றைப் போன்ற வலிமையுடன் போருக்கு எழுந்தவரின்
கொடிகள் அற்று விழவும், செவிகள் செவிடாகிப் போகவும்,
மணிமுடிகள் அதிரவும், அவர்கள் நின்ற நிலை தளர்ந்துபோகுமாறு
மிகுந்து ஒலிக்கின்ற சங்கினால், தலைகள் வலிமை அழிந்து கீழே விழுந்து
1.3
மலரைச் சுற்றிப்பறக்கும் தும்பி எழுப்பும் ஒலி. அது குழலோசையை ஒத்திருக்கும். விரைந்து செல்லும் அம்பின்
ஓசையையும் ஒத்திருக்கும்.

விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப
முரல் குரல் தும்பி அவிழ் மலர் ஊத - பரி 21/33,34
விரலால் மூடியும் திறந்தும் குழலின் காற்றுவிடும் துளையினின்றும் எழும் இசையைப் போல
இசைபாடும் குரலையுடைய தும்பி கட்டவிழ்கின்ற மலரின் மீது பாடிக்கொண்டு பறக்க

விரி இணர், தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப
பரியினது உயிர்க்கும் அம்பினர் - அகம் 291/10,11
விரிந்த பூங்கொத்துக்களில் பூந்துகளை உண்ணும் வண்டுகள் ஒலிக்கும் இசையைப் போல
விரைந்து செல்வதாய் ஒலிக்கும் அம்பினையுடையவரும்
1.4
யாழ் நரம்பினை மீட்டும் ஒலி.

ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும் - கலி 9/18,19
ஏழு நரம்பால் கூட்டி எழுப்பிய இனிய ஓசைகள், இசைப்பவர்க்கன்றி
அவை யாழினுள்ளே பிறந்தாலும் யாழுக்கு அவை தாம் என்ன செய்யும்

குழல் அகவ யாழ் முரல
முழவு அதிர முரசு இயம்ப - பட் 156,157

நரம்பின் முரலும் நயம் வரு முரற்சி
விறலியர் வறும் கை குறும் தொடி செறிப்ப - மது 217,218
(யாழ்)நரம்பைப் போல் பாடும் நயப்பாடு தோன்றும் பாட்டினையுடைய
விறலியரின் வெறுமையான கைகளில் குறிய வளைகளைச் செறித்துச்சேர்க்க
1.5
கூகையும் குராலும் எழுப்பும் ஒலி.

குடுமி கூகை குராலொடு முரல - மது 170
கொண்டையையுடைய கூகைச்சேவல் தன் பெடையோடே ஒலிஎழுப்ப
1.6
முழவுகளும், பெரும் முரசுகளும் எழுப்பும் ஒலி.

உழவர் களி தூங்க முழவு பணை முரல - பரி 7/16
உழவர்கள் மகிழ்ச்சியால் கூத்தாட, முழவுகளும், பெரும் முரசுகளும் முழங்க,
1.7
கின்னரம் என்னும் பரவைகள் எழுப்பும் ஒலி.

கின்னரம் முரலும் அணங்கு உடை சாரல் - பெரும் 494
கின்னரம் என்னும் பறவைகள் பாடும் தெய்வங்கள் உறையும் சாரலிடத்தே
1.8
கார்கால மேகங்கள் இலேசான இடியுடன் தொலைவில் எழுப்பும் ஒலி

கால மாரி மாலை மா மலை
இன் இசை உருமின முரலும் - குறு 200/5,6
கார்ப்பருவத்து மழை மாலையில் பெரிய மலையில்
இனிய ஓசையுடைய இடியுடன் முழங்கும்
1.9
பாலைப் பண்ணை யாழில் மீட்டும் ஒலி

வல்லோன் தைவரும் வள் உயிர் பாலை
நரம்பு ஆர்த்து அன்ன வண்டு_இனம் முரலும் - அகம் 355/4,5
யாழ் வல்லோன் தடவும் நரம்பு இனிய இசைகொண்ட பாலைப்பண்ணை
யாழ் நரம்புகள் ஒலித்தாலொத்த இசையுடன் வண்டின் கூட்டங்கள் ஒலிக்கும்

ஒருதிறம் பாடினி முரலும் பாலை அம் குரலின் - பரி 17/17
ஒருபக்கம் பாடினி பாடுகின்ற பாலைப் பண்ணாகிய வாய்ப் பாட்டின் கூறுபாடுகள்
1.10
விடியற்காலையில் அந்தணர் வேதம் ஓதும் ஒலி

போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கை
தாது உண் தும்பி போது முரன்று ஆங்கு
ஓதல் அந்தணர் வேதம் பாட - மது 654-656
பூக்கள் தளையவிழ்ந்த (மணம்)கமழுகின்ற நறிய பொய்கைகளில்,	
தாதை உண்ணும் தும்பிகள் (அப்)பூக்களில் பாடினாற் போன்று,
ஓதுதல் (தொழிலையுடைய)அந்தணர் வேதத்தைப் பாட,

 மேல்
 
  முரல்வு - (பெ) இசை, மெல்லோசை, music, soft sound
தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு - பரி 8/36
தலைவியரால் தூதாக ஏவிவிடப்பட்ட வண்டுக் கூட்டத்தின் இனிய இசை

 மேல்
 
  முரவு - (பெ) 1. முறிவு, உடைபாடு, break, as of the mouth of a mud pot
         2. முழக்கம், அதிர்வொலி, reverberation, resonance
1.
முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி - பெரும் 99
விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான வாயையுடைய பானையில் வார்த்த உலையை முரிந்த அடுப்பிலே ஏற்றி
முரவு வாய் - இதனை ஒறுவாய்ப்போன பானை என்பர் நச்சினார்க்கினியர். இக்காலத்தார்
மூளிப்பானை என்று வழங்குப - பொ.வே.சோ. விளக்கம்

	
2.
முது மரத்து உறையும் முரவு வாய் முது புள் - அகம் 260/12
முதிய மரத்தின்கண் எப்போதும் நீங்காது தங்கும், முழக்கத்தையுடைய வாயையுடைய பேராந்தை

 மேல்
 
  முரவை - (பெ) தீட்டப்படாத அரிசியிலுள்ள வரி, streaks in unpolished rice
முரவை போகிய முரியா அரிசி - பொரு 113
(தீட்டப்படாத அரிசியிலுள்ள)வரி நீக்கப்பெற்ற(தீட்டிய) உடையாத(முழு) அரிசியின்

	

 மேல்
 
  முரற்கை - (பெ) 1. முரல் என்ற சொல்லின் அடியாகப் பிறந்த பெயர்ச்சொல், முரலுதல், பார்க்க : முரல்
          2. தாள வகை, a time-measure
1.
புதல்வன் கவைஇய தாய் புறம் முயங்கி
நசையினன் வதிந்த கிடக்கை பாணர்
நரம்பு உளர் முரற்கை போல
இனிதால் அம்ம பண்பும்-மார் உடைத்தே - ஐங் 402
புதல்வனை அணைத்துக்கொண்டிருக்கும் தாயின் முதுகைத் தழுவிக்கொண்டு
ஆசையுள்ளவனாகப் படுத்திருந்த படுக்கைநிலை, பாணர்
யாழின் நரம்புகளை மீட்டும் இனிய இசையினைப் போல
இனிமையானது, இதுதான் இல்லறத்தின் இயல்பும் ஆகும்.
2.
இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆக
தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்து துனைமின் - மலை 390,391
கேட்போர்)மகிழ்ச்சி அடையும் தாளக்கட்டுடைய உம்முடைய பாட்டு (நடுகல் வீரருக்கு)விருப்பமாய் அமைய
தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கும் வழக்கத்தில் உம்முடைய கொம்பை(யும்) வாசித்து விரைவீராக -

 மேல்
 
  முரற்சி - (பெ) 1. முரல் என்ற ஒலிப்பின் அடியாக வந்த பெயர்ச்சொல், ஒலி, பாட்டு, sound, song,
           பார்க்க : முரல்
          2. கயிறு, கயிறாகத்திரித்தல், cord, twisting into a rope
1.
நரம்பின் முரலும் நயம் வரு முரற்சி
விறலியர் வறும் கை குறும் தொடி செறிப்ப - மது 217,218
(யாழ்)நரம்பைப் போல் பாடும் நயப்பாடு தோன்றும் பாட்டினையுடைய
விறலியரின் வெறுமையான கைகளில் குறிய வளைகளைச் செறித்துச்சேர்க்க

தொடி_மகள் முரற்சி போல் தும்பி வந்து இமிர்தர - கலி 36/4
வளையணிந்த விறலியின் வாய்ப்பாட்டு போல தும்பிகள் மலரைச் சுற்றி ரீங்காரிக்கவும்
2.
கரும் கால் வேங்கை செம் வீ வாங்கு சினை
வடு கொள பிணித்த விடு புரி முரற்சி
கை புனை சிறு நெறி வாங்கி - நற் 222/1-3
கருமையான அடிமரத்தையுடைய வேங்கையின் செம்மையான மலர்களையுடைய வளைந்த கிளையில்,
தழும்பு உண்டாகுமாறு இறுகக் கட்டிய சற்றுத்தளர்ந்த முறுக்கினைக் கொண்ட கயிற்றாலாகிய
கையால் செய்யப்பட்ட சிறிய வளைவைக் கொண்ட ஊஞ்சலை இழுத்து

வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன்
கூந்தல் முரற்சியின் கொடிதே - நற் 270/9,10
பகைவரை ஓட்டிய ஏந்திய வேற்படையை உடைய நன்னன்
பகைவரின் உரிமைமகளிரின் கூந்தலைக் கயிறாகத் திரித்த கொடுமையினும் கொடியது

 மேல்
 
  முரி - (வி) 1. ஒடி, முறி, break off, snap off
        2. வளைவு, கூனல், bend 
1.
முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி - பெரும் 99
விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான வாயையுடைய பானையில் வார்த்த உலையை முரிந்த அடுப்பிலே ஏற்றி

நல்ல அடுப்பில் வாய்ப்பகுதியில் மூன்று குமிழ்கள் இருக்கும். நாளாக ஆக, அந்தக் குமிழ்கள் தேய்ந்தும் உடைந்தும்
போகும். அவ்வாறான அடுப்பே முரி அடுப்பு எனப்படும்.
2.
போ சீத்தை மக்கள் முரியே நீ மாறு இனி - கலி 94/22
"போ! சீச்சீ! குறைபட்ட மக்கள் வடிவே! இனி நீ இந்நிலையைக் கைவிடு!

	

 மேல்
 
  முருக்கு - 1. (வி) 1. கொல், kill
           2. அழி, சிதை, ruin, destroy, crush
           3. முறி, துண்டாக்கு, break into pieces
      - 2. (பெ) புரச மரம், palas tree, Butea Monosperma
1.1.
செறுநர் தேய்த்து செல் சமம் முருக்கி
கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒரு முகம் - திரு 99,100
கோபமுடையோரை அழித்து, செல்லுகின்ற போரில் கொன்றழித்து,
வெகுளி கொண்ட நெஞ்சத்தோடு களவேள்வியைச் செய்யும்; ஒரு முகம்
1.2.
விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி
நயவர் பாணர் புன்கண் தீர்த்த பின் - சிறு 247,248
வெற்றி (தரும்)வேலினையுடைய வேந்தரின் உயர்ந்த அரண்களை அழித்து,
விரும்பிவந்தவர், பாணர் முதலியோரின் வறுமையையும் போக்கி,
1.3.
புலி பொர சிவந்த புலால் அம் செம் கோட்டு
ஒலி பன் முத்தம் ஆர்ப்ப வலி சிறந்து
வன் சுவல் பராரை முருக்கி கன்றொடு
மட பிடி தழீஇய தட கை வேழம் - நற் 202/1-4
புலியுடன் போரிட்டதால் சிவந்துபோன புலால் நாறும் அழகிய செம்மையான கொம்புகளில்
உண்டாயிருக்கும் பலவான முத்துக்கள் ஒலிக்க, வலிமை மிக்கு,
கட்டாந்தரையான மேட்டுநிலத்தில் உள்ள பருத்த அடியினைக் கொண்ட வேங்கையை முறித்து, கன்றோடு
தன் இளைய பெண்யானைத் தழுவிக்கொண்ட நீண்ட கைகளையுடைய ஆண்யானை 
2.
செம் பூ முருக்கின் நன் நார் களைந்து - குறு 156/2
சிவந்த பூக்களைக்கொண்ட புரச மரத்தின் கொப்பின் பட்டையை உரிந்து

கரு நனை அவிழ்ந்த ஊழ்_உறு முருக்கின்
எரி மருள் பூ சினை இன சிதர் ஆர்ப்ப - அகம் 41/2,3
பெரிய அரும்புகள் தம் பிணியவிழ்ந்த மலர்ச்சியடைந்த முருக்கமரத்தின்
நெருப்பைப் போன்ற பூக்களைக் கொண்ட கிளைகளில் வண்டினம் மிக்கு ஒலிக்க,

	

 மேல்
 
  முருகு - (பெ) 1. முருகக்கடவுள், Lord Murugan
         2. நறுமணம், fragrance
         3. முருக வழிபாடு, வேலன் வெறியாட்டு, worship of Murugan, dancing of the priest under
          possession by Murugan
         4. வேள்வி, sacrifice
1.
குருதி செம் தினை பரப்பி குறமகள்
முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர் - திரு 242-244
குருதி அளைந்த சிவந்த தினையினையும் பரப்பி, குறமகள்
முருகன் உவக்கும் இசைக்கருவிகளை ஒலிக்கச்செய்து, முரண்பட்டோர் அஞ்சும்படியாக,
முருகக்கடவுள் வரும்படி வழிப்படுத்தின அச்சம் பொருந்தின அகன்ற நகரின்கண்ணே
2.
முருகு அமர் பூ முரண் கிடக்கை
வரி அணி சுடர் வான் பொய்கை - பட் 37,38
மணம்பொருந்திய பூக்கள் நிறத்தால் தம்முள் மாறுபட்டுக் கிடப்பதினால்
பல நிறங்களைக் கொண்டு ஒளிரும் அழகிய பொய்கைகளையும்
3.
அன்னை அயரும் முருகு நின்
பொன் நேர் பசலைக்கு உதவா மாறே - நற் 47/10,11
அன்னையானவள் எடுப்பித்த முருகவழிபாடு உன்
பொன்னைப் போன்ற பசலைக்கு பயன்படாத நிலையை
4.
தொடி தோள் கை துடுப்பு ஆக
ஆடுற்ற ஊன் சோறு
நெறி அறிந்த கடி வாலுவன்
அடி ஒதுங்கி பின் பெயரா
படையோர்க்கு முருகு அயர - மது 34-38
வீரவளையல்கள் அணிந்த தோளையுடைய கைகளே துடுப்பாக
துழாவிச் சமைத்த ஊனாலாகிய சோற்றை,
இடும்முறை அறிந்த பேய் மடையன் (சமையல் செய்வோன்)
(இட்ட)அடியை வாங்கிப் பின்போகாத
வீரர்க்கு வேள்விசெய்யும்படி

 மேல்
 
  முருங்கு - (வி) 1. அழி, சிதைந்துபோ, perish, be ruined
          2. முறி, break
          3. கசங்கு, be crumpled 
1.
ஓரி முருங்க பீலி சாய
நன் மயில் வலைப்பட்டு ஆங்கு யாம்
உயங்கு-தொறும் முயங்கும் அறன் இல் யாயே - குறு 244/4-6
தலைக்கொண்டை சிதையும்படியும், தோகை மெலியும்படியும்,
நல்ல மயில் வலையில் அகப்பட்டதைப் போல், நாம்
வருந்திப் புரளும்தோறும் தழுவிக்கொள்கிறாள் அறப்பண்பு இல்லாத எம் அன்னை
2.
பனைமீன் வழங்கும் வளை மேய் பரப்பின்
வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ இதை புடையூ
கூம்பு முதல் முருங்க எற்றி காய்ந்து உடன்
கடும் காற்று எடுப்ப கல் பொருது உரைஇ
நெடும் சுழி பட்ட நாவாய் போல - மது 375-379
பனைமீன்கள் உலாவும் சங்கு மேய்கின்ற கடலிடத்தில்,
இறுகும் பிணிப்பினையுடைய வலிமையான (பாய் கட்டின)கயிற்றை அறுத்துப், பாயையும் பீறிப்
பாய்மரம் அடியில் முறியும்படி மோதி வெகுண்டு ஒருசேரக்
கடிய காற்று எடுக்கையினால் பாறைக் கற்களில் மோதி உராய்ந்து,
நெடிய சுழற்காற்றில் அகப்பட்ட மரக்கலத்தைப் போல
3.
முருங்கா கலிங்கம் முழுவதும் வளைஇ - அகம் 136/20
கசங்காத புத்துடையால் உடல் முழுவதும் போர்த்தியதால்

 மேல்
 
  முருந்து - (பெ) 1. மயிலிறகின் அடியிலுள்ள வெண்குருத்து, the white tender bottom of a quill
          2. குருத்து, the white soft bottom of the stem of grass plants
1.
முருந்து என திரண்ட முள் எயிற்று துவர் வாய் - அகம் 179/11
மயிலிறகின் அடியெனத் திரண்ட முள் போலும் கூரிய பற்களையும், சிவந்த வாயினையும்
2.
அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் - அகம் 62/1,2
பள்ளத்துநீரில் வளரும் பைஞ்சாய்க் கோரைத் தண்டின் அடிப்பகுதியை ஒத்த
ஒளி சிறந்துவிளங்கும் பற்கள் பொருந்திய பவளம் போன்ற வாயினையும்

	

 மேல்
 
  முரைசு - (பெ) பார்க்க :முரசு
முரைசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ
அரைசு பட கடக்கும் ஆற்றல்
புரை சால் மைந்த - பதி 34/10-12
முரசை முழக்கிச் செய்யும் பெரிய போர் உருக்குலைந்துபோவதனாலும், ஆரவாரம் உண்டாக,
பகை மன்னர் பலரை வெல்லும் ஆற்றலையுடைய
சிறப்பு மிக்க வலிமையினை உடையவனே!

 மேல்
 
  முல்லை - (பெ) 1. ஒரு சிறிய வெண்ணிறப்பூ, a kind of jasmine
          2. காடும் காடு சார்ந்த இடமும், pastoral region
          3. கணவன் பிரிந்து சென்றபோது இல்லிருந்து நல்லறஞ்செய்து ஆற்றியிருக்கும் தன்மையான
           ஒழுக்கம், patient endurance of the akam heroine during the separation of the hero.
          4. ஒரு பண், a primary melody type
1.
வெருக்கு பல் உருவின் முல்லையொடு கஞலி - குறு 240/3
காட்டுப்பூனையின் பல் போன்ற தோற்றமுடைய முல்லைப்பூவுடன் கலக்கும்படியாக
2.
முல்லை வியன் புலம் பரப்பி கோவலர்
குறும் பொறை மருங்கின் நறும் பூ அயர
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன் - அகம் 14/7-9
முல்லை ஆகிய அகன்ற புலத்தில் பரவலாக விட்டு, கோவலர்கள்
சிறிய குன்றுகளின் பக்கங்களில் உள்ள நறிய பூக்களைப் பறித்துச் சூடிக்கொள்ள,
அறுகம்புல் மேய்ச்சலில் உணவருந்திய செருக்கிய நடையுடைய நல்ல ஆனினங்கள்
3.
முல்லை சான்ற முல்லை அம் புறவின் - சிறு 169
முல்லை ஒழுக்கம் பொருந்திய முல்லை(க்கொடி படர்ந்த)அழகிய காட்டில்
4.
பாணர் முல்லை பாட சுடர் இழை
வாள் நுதல் அரிவை முல்லை மலைய - ஐங் 408/1,2
பாணர்கள் முல்லைப் பண்ணை யாழில் வாசிக்க, ஒளிரும் அணிகலன்களைக் கொண்ட
ஒளிபொருந்திய நெற்றியையுடைய மனைவி முல்லை மலரைச் சூடியிருக்க,

 மேல்
 
  முலை - (பெ) 1. பெண்ணின் மார்பகம், woman's breast
         2. பெண் விலங்கின் பால் சுரக்கும் மடி, beast's dug
1.
கூழையும் குறு நெறி கொண்டன முலையும்
சூழி மென் முகம் செப்புடன் எதிரின - அகம் 315/1,2
தலை மயிரும் குறுகிய நெறிப்பினைக் கொண்டன, முலைகளும்
உச்சியிலுள்ள மெல்லிய முகத்தால் சிமிழுடன் மாறுபட்டன
2.
கவை முலை இரும் பிடி கவுள் மருப்பு ஏய்க்கும்
குலை முதிர் வாழை கூனி வெண் பழம் - பெரும் 358,359
கவைத்த முலையையுடைய குறிய பெண்யானையின் கடைவாயின் கொம்புகளை ஒக்கும்,
குலையில் முதிர்ந்த வாழையின் வளைந்த வெளுத்த பழத்தையும்,

கரும் கோட்டு எருமை செம் கண் புனிற்று ஆ
காதல் குழவிக்கு ஊறு முலை மடுக்கும் - ஐங் 92/1,2
கரிய கொம்பினையுடைய எருமையின் சிவந்த கண்ணையுடைய அண்மையில் ஈன்ற பெண்ணெருமை
தன் அன்புக்குரிய கன்றினுக்குப் பால் சுரக்கும் தன் முலையைத் தந்து ஊட்டிவிடும்

குறு முலைக்கு அலமரும் பால் ஆர் வெண்மறி - புறம் 383/18
குறுகிய முலையை உண்டற்குத் தாயைச் சுற்றித்திரியும் பாலுண்ணும் ஆட்டுக்குட்டி

 மேல்
 
  முழ - (பெ) பார்க்க : முழவு
மண மனை ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே - கலி 70/10
மணவீடுகளில் முழங்கும் உன் மண முழவின் ஓசை வந்து அத் தூக்கத்தைக் கலைக்கும்;

 மேல்
 
  முழக்கம் - (பெ) பேரொலி, shout, roar, rumble, thunder
எந்த வகைப் பேரொலிகளைச் சங்க இலக்கியங்கள் முழக்கம் என்கின்றன என்று பார்ப்போம்.

1. கரைகளை இடித்துச்செல்லும் வைகைப் பெருவெள்ளம் - இடியேற்றின் ஒலி
பொருது இழி வார் புனல் பொற்பு அஃது
உரும் இடி சேர்ந்த முழக்கம் புரையும் - பரி 7/81,82
(வைகை) கரைகளை இடித்து ஓடுகின்ற புதுப்புனலின் அழகிய ஆரவாரம்
உருமேறாகிய இடியோடு சேர்ந்த முகிலின் முழக்கத்தைப் போன்று ஒலிக்கும்

2. யானையின் பிளிறல் - மேகங்களின் இடிக்குரல்
முதல்வ நின் யானை முழக்கம் கேட்ட
கதியிற்றே காரின் குரல் - பரி 8/17,18
முதல்வனே! உன் ஊர்தியாகிய யானை பிளிறும் ஒலியின் முழக்கத்தைக் கேட்ட
தன்மையது முகிலின் இடிக்குரல்;

3. கூத்தரின் முழவு ஒலி - மேகங்களின் இடிக்குரல்
வழை அமல் அடுக்கத்து வலன் ஏர்பு வயிரியர்
முழவு அதிர்ந்து அன்ன முழக்கத்து ஏறோடு
உரவு பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து - அகம் 328/1-3
சுரபுன்னை மரங்கள் நிறைந்த மலைச்சாரலில் மேகமானது வலமாக எழுந்து
கூத்தரது முழவம் அதிர்ந்தாற் போன்ற முழக்கத்தினையுடைய இடியேறுகளுடன் கூடி
மிக்க பெயலைச் சொரிந்த நள்ளென்னும் ஒலியினையுடைய நடு இரவில்.

4. கடல் அலைகளின் ஆரவாரம்
பெரும் திரை முழக்கமொடு இயக்கு அவிந்து இருந்த
கொண்டல் இரவின் - அகம் 100/5,6
பெரிய அலையின் முழக்கத்தோடு அதன் அலைவும் ஓய்ந்திருந்த
மேகம் சூழ்ந்த இரவில்

5. மேகங்களின் இடிக்குரல் - முரசு ஒலி
உரும் மிசை முழக்கு என முரசும் இசைப்ப - புறம் 373/1
இடியினது ஓசையைத் தன்பால் உடைய முரசு முழங்க

 மேல்
 
  முழங்கு - (வி) பேரொலி எழுப்பு, make a loud noise, roar, thunder, பார்க்க : முழக்கம்
பிடி புணர் பெரும் களிறு முழங்க - மது 676

பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம்
மா கண் அகல் அறை அதிர்வன முழங்க - பட் 237,238

அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை - முல் 79

பெரும் கடல் முழங்க கானல் மலர - நற் 117/1

அலமரல் யானை உரும் என முழங்கவும் - புறம் 44/5

தழங்கு குரல் ஏறொடு முழங்கி வானம்
இன்னே பெய்ய மின்னுமால் தோழி - நற் 7/5,6

மா கடல் திரையின் முழங்கி வலன் ஏர்பு
கோள் புலி வழங்கும் சோலை - குறு 237/5,6

கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை - மலை 324

முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல் - கலி 25/6

களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம் - அகம் 227/11

 மேல்
 
  முழந்தாள் - (பெ) முழங்கால், knee
முழந்தாளைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் வரும் நான்கு குறிப்புகளிலும், அது பெண்யானையின்
முழந்தாளைப் பற்றியதாகவே காணப்படுகிறது. இது ஆய்வுக்குரியதாகும்.

முளை எயிற்று இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும்
துளை அரை சீறுரல் - பெரும் 53,54
(மூங்கில்)முளை(போன்ற) கொம்பினையுடைய கரிய பிடியின் முழந்தாளை ஒக்கும்,
துளையைத் தன்னிடத்தேயுடைய சிறிய உரலை

வயவு பிடி முழந்தாள் கடுப்ப குழி-தொறும்
விழுமிதின் வீழ்ந்தன கொழும் கொடி கவலை - மலை 127,128
வலிமையுள்ள பெண்யானையின் முழங்காலைப் போன்று, குழிகள்தோறும்,
சிறந்த நிலையில் (நிலத்தடியில்)வளர்ந்தன, செழுமையான கொடியையுடைய கவலை எனும் கிழங்கு;

முழந்தாள் இரும் பிடி கயம் தலை குழவி - குறு 394/1
முழந்தாளையுடைய கரிய பெண்யானையின் மெல்லிய தலையையுடைய கன்று

வாங்கு கோல் நெல்லொடு வாங்கி வரு_வைகல்
மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி - கலி 50/1,2
மூங்கிலின் வளைகின்ற கழையை நெல்லோடு வளைத்து, விடியற்காலத்தில்,
அதனைத் தின்ற முழந்தாளையுடைய கரிய பெண்யானை

இங்கு வரும் முதலிரண்டு குறிப்புகள், பெண்யானையின் முழந்தாளை உவமைகளாகக் கையாள்கின்றன. ஆனால்
அடுத்துவரும் இரண்டு குறிப்புகளும், முழந்தாள் இரும்பிடி என்று முழந்தாளைப் பெண்யானைக்கு
அடைச்சொல்லாகக் கொள்கின்றன. முழந்தாளையுடைய இரும்பிடி என்றால், மற்ற விலங்குகளுக்கு முழந்தாள்
இல்லையா? அல்லது ஆண்யானைக்கு முழந்தாள் இல்லையா என்ற கேள்வி எழும்.
கலித்தொகையில் வரும் முழந்தாள் இரும்பிடி என்ற சொல்லுக்கு, உரையாசிரியர் இராசமாணிக்கனார்,
முழவு போல் பருத்த கால்களையுடைய பெண்யானை என்று பொருள் கொள்வார். இங்கு இவர் முழந்தாள் என்பதை
முழ தாள் என்ற இருசொற்களின் சேர்க்கையாகக் கொள்வார். முழ எனில் முழவு என்ற பொருளுண்டு.

	

 மேல்
 
  முழம் - (பெ) முழங்கால், முழங்கை (?), knee, elbow (?)
உணீஇய மண்டி
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை - அகம் 119/17,18
நீர் உண்டற்கு விரைந்து சென்று
மண்ணில் முழங்காலை மடித்தூன்றிய நெடிய நல்ல யானை

 மேல்
 
  முழவம் - (பெ) பார்க்க : முழவு
நாறு கமழ் வீயும் கூறும் இசை முழவமும் - பரி 8/99
மணங்கமழும் பூக்களும், இசையை எழுப்பும் முழவுகளும்

 மேல்
 
  முழவன் - (பெ) முழவை இயம்புவோன், the person who beats the drum called 'muzhavu'
முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்
பல் கிளை தலைவன் கல்லா கடுவன்
பாடு இமிழ் அருவி பாறை மருங்கின்
ஆடு மயில் முன்னது ஆக கோடியர்
விழவு கொள் மூதூர் விறலி பின்றை
முழவன் போல அகப்பட தழீஇ
இன் துணை பயிரும் குன்ற நாடன் - அகம் 352/1-7
வளைதல் மிக்க பலாமரத்தின் குடம் போன்ற பெரிய பழத்தினை
பல சுற்றத்திற்குத் தலைவனாகிய கல்லாத ஆண்குரங்கு
மிக ஒலிக்கும் அருவியையுடைய கற்பாறையிடத்தே
ஆடுகின்ற மயில் ஒன்று தனக்கு முன்னே நிற்க, கூத்தர்
விழாவினைக்கொண்டாடும் முதிய ஊரில் விறலியின் பின்பு நிற்கும்
முழவு இயம்புவோன் போலத் தன்னகத்தே பொருந்தத் தழுவிக்கொண்டு
இனிய துணையாய பெண்குரங்கினை அழைக்கும் மலைநாட்டையுடைய நம் தலைவன்

எனவே முழவு என்பது பலாப்பழத்தைப் போன்றது என்பது பெறப்படும்.

	

 மேல்
 
  முழவு - (பெ) ஒரு தோல் இசைக்கருவி, a kind of drum
1. மாட்டு வண்டியின் உருளி, இந்த முழவைப் போன்றது.
கொழும் சூட்டு அருந்திய திருந்து நிலை ஆரத்து
முழவின் அன்ன முழு மர உருளி - பெரும் 46,47
கொழுவிய வட்டைகள் தம் அகத்தே கொண்ட, திருத்தமான நிலையிலுள்ள ஆரங்களையுடைய,
மத்தளம் போன்று முழுமர(த்தால் கடைந்த) உருளியினையும்,

வட்டை என்பது ஒரு சக்கரத்தை வடிவமைக்கப் பயன்படுத்தப்படும் வளைந்த அமைப்பு. இது felloe of a wheel
எனப்படும். ஆறு வட்டைகள் ஒரு சக்கரத்தை வடிவமைக்கும். உருளி என்பது குடம். இது ஆரக்கால்களை
வட்டையுடனும் அச்சுடனும் இணைக்கும் பகுதி. இது முழுமரத்தைக் கடைந்து செய்யப்படுவது. 
இந்த உருளி முழவினைப் போன்றது.

	

2. பழுத்துத் தொங்குகின்ற பலாப்பழங்கள், கோடியர் தூக்கிச்செல்லும் முழவினைப் போன்றது.
சுரம் செல் கோடியர் முழவின் தூங்கி
முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினை பலவே - மலை 143,144
வழியே செல்லும் கூத்தருடைய மத்தளங்களைப் போன்று தொங்கி,
முதிர்வு கொண்டு தலை வணங்கின, (மேலும் கீழும்)அசைகின்ற கிளைகளிலுள்ள பலாப்பழங்கள்;

	

3. இந்த முழவுகளின் இரு முகப்புகளும் வெவ்வேறான அளவுள்ளவையாக இருந்திருக்கக்கூடும். அவை முழவின்
தலை எனப்பட்டன. அவற்றில் பூச்சுற்றி வைத்திருப்பார்கள். அவற்றுள்பெரிய முகப்பு நோன்தலை எனப்பட்டது.
இது பெண்கள் வைத்திருக்கும் பூக்குடையைப் போன்றது என்கிறது மதுரைக்காஞ்சி.
பூ தலை முழவின் நோன் தலை கடுப்ப
பிடகை பெய்த கமழ் நறும் பூவினர் - மது 396,397
பூவைத் தலையில் கொண்ட முழவின் வலிய கண்ணைப் போன்ற
கூடைகளில் இட்டுவைத்த கமழ்கின்ற நறிய பூவினையுடையவரும்,

4. முழவை ஒரு குறுந்தடிகொண்டு அடுத்து இசையை எழுப்புவர். முழவின் முகப்பில் மார்ச்சனை என்ற கரிய சாந்து
பூசுவர்.
மண் கனை முழவின் தலைக்கோல் கொண்டு
தண்டு கால் ஆக தளர்தல் ஓம்பி
ஊன்றினிர் கழிமின் ஊறு தவ பலவே - மலை 370-372
(தோலில் பூசப்பட்ட கரிய)சாந்து நிறைந்த முழவின் (அதை எடுத்துச்செல்லக் கட்டிய)காவுமரத்தைக் கையில் பிடித்து
(முழவை அடிக்கும்)குறுந்தடியை (மூன்றாவது)காலாக (ஊன்றிக்)கொண்டு, தடுமாறுதலினின்றும் (உம்மைக்)காத்து,
(தடியை)ஊன்றினராக(வே) கடந்து செல்லுங்கள் - இடையூறுகள் மிகப் பலவாம்,

5. முழவின் முகப்புகளில் உள்ள தோல் பரப்பு, வார்களினால் இழுத்துக் கட்டப்பெற்றிருக்கும்.
வாருற்று
விசி பிணி கொண்ட மண் கனை முழவின் - புறம் 15/22,23
வார் பொருந்தி வலித்துக் கட்டுதலைப் பொருந்திய மார்ச்சனை செறிந்த முழவினையுடைய

6. முழவு ஒருவரின் பருத்த கைகளுக்கு உவமையாகக் கொள்ளப்பட்டது.
முழவு உறழ் தட கையின் இயல ஏந்தி - திரு 215
முழவுக்கு மாற்றான பெருமையுடைய கைகளில் பொருந்தத் தாங்கி

7. முழவு ஒருவரின் திண்ணிய தோள்களுக்கு உவமையாகக் கொள்ளப்பட்டது.
முழவு உறழ் திணி தோள் நெடுவேள் ஆவி - அகம் 61/15
முழவைப் போன்ற திணிந்த தோள்களையுடைய நெடுவேளாகிய ஆவி என்பானின்

8. மரங்களின் தடிமனான அடிப்பகுதிக்கு முழவை உவமிப்பர்.
இறை பட வாங்கிய முழவு முதல் புன்னை - நற் 307/6
நம் வீட்டுக் கூரையின் சாய்ப்பில் படுமாறு வளைந்த முழவு போன்ற அடியையுடைய புன்னையின்

முழவு முதல் அரைய தடவு நிலை பெண்ணை - குறு 301/1
முழவைப் போல அடிமரத்தையுடைய வளைந்து நிற்கும் பனையின்

முதிர் இணர் ஊழ் கொண்ட முழவு தாள் எரிவேங்கை - கலி 44/4
முற்றிய பூங்கொத்துக்களைத் தீயைப் போல் வரிசையாகக் கொண்ட, முழவினைப் போன்ற அடிமரத்தையுடைய
வேங்கை,

9. தாழையின் காயும் பழமும் முழவுக்கு உவமிக்கப்பட்டன.
நிலவு கானல் முழவு தாழை - மது 114
நிலாப்போலும் மணலையுடைய கரையினில் குடமுழா(ப்போலும் காயையுடைய) தாழையைக்கொண்ட

	

10. விழாக்காலங்களில் ஊர்களில் முழவு இடைவிடாமல் இசைக்கப்பட்டது.
விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர் - பதி 15/18
முழவு இமிழ் மூதூர் விழவு காணூஉ பெயரும் - பதி 30/20
முழவு முகம் புலரா விழவு உடை வியல் நகர் - அகம் 206/11
முழவு கண் புலரா விழவு உடை ஆங்கண் - நற் 220/6
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின் - அகம் 336/16
விழவும் மூழ்த்தன்று முழவும் தூங்கின்று - நற் 320/1

11. வீட்டுச் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் முழவு இசைக்கப்பட்டது.
உழவர் களி தூங்க முழவு பணை முரல - பரி 7/16
படு மண முழவொடு பரூஉ பணை இமிழ - அகம் 136/7
முழவு இமிழ் இன் இசை மறுகு-தொறு இசைக்கும் - ஐங் 171/2
இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனை - அகம் 66/22

 மேல்
 
  முழா - (பெ) முழவு, பார்க்க : முழவு
முழா இமிழ் துணங்கைக்கு தழூஉ புணை ஆக - பதி 52/14
முழவு ஒலிக்கும் துணங்கைக் கூத்தில் தழுவியாடுவோருக்குத் துணையாக,

 மேல்
 மேல்
 
  முழுநெறி - (பெ) பூவில், புறவிதழ் ஒடித்த முழுப் பூ / இதழ் ஒடியாத முழுப் பூ,
          entire flower with the calyx removed / with the calyx not removed
கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சி - குறு 80/1
கூந்தலில் ஆம்பலின் புறவிதழை ஒடித்த முழுப்பூவைச் செறுகி
முழுநெறி - புறவிதழ் ஒடித்த முழுப்பூ, இதழொடியாத பூவெனினுமாம் - உ.வே.சா உரை, விளக்கம்.

கழனி ஆம்பல் முழுநெறி பைம் தழை - அகம் 156/9
கழனியில் பூத்த ஆம்பலின் இதழ் ஒடியாத பூவுடன் கூடிய பசிய தழையுடை
முழுநெறி - இதழ் ஒடிக்கப்படாத முழுப்பூ - நாட்டார் உரை, விளக்கம்.

தீ நீர் பெரும் குண்டு சுனை பூத்த குவளை
கூம்பு அவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல் - புறம் 116/1,2
இனிய நீரையுடைய பெரிய ஆழ்ந்த சுனைக்கண் பூத்த செங்கழுநீரினது
முகை அவிழ்ந்து புறவிதழ் ஒடித்த முழுப்பூவாற் செய்யப்பட்ட தழை அசையும் அல்குலையும்
செங்கழுநீரின் முகை அவிழ்ந்து புறவிதழ் ஒடிக்கப்பட்ட பூ ஈண்டு முழுநெறி எனப்பட்டது. இனி,
அடியார்க்கு நல்லார், ‘முழுநெறிக் குவளை (சிலப்.2,14) என்றதற்கு இதழ் ஒடிக்கப்படாத குவளை என்ற பொருள்பட,
‘இதழொடிக்கப்படாதெனவே செவ்வி கூறிற்று’ என்று கூறி இவ்வடிகளை எடுத்துக்காட்டினார் - 
- ஔவை.சு.து.உரை, விளக்கம் 

 மேல்
 
  முழுமீன் - (பெ) முதிர்ந்த மீன்
முதலை போத்து முழுமீன் ஆரும் - ஐங் 5/4
ஆண் முதலையானது முற்ற வளர்ந்த மீன்களை நிறைய உண்ணும்
முழுமீன், இனி வளர்ச்சி இல்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன். - ஔவை.சு.து.உரை, விளக்கம்

 மேல்
 
  முழுமுதல் - (பெ) (மரத்தின்) அடிப்பகுதி, stem (as of a tree)
ஆர முழு_முதல் உருட்டி - திரு 297
வாழை முழு_முதல் துமிய - திரு 307
தடவு நிலை பலவின் முழு_முதல் கொண்ட - பெரும் 77
முழு_முதல் கமுகின் மணி உறழ் எருத்தின் - நெடு 23
முழு_முதல் கொக்கின் தீம் கனி உதிர்ந்து என - குறி 188
புன்னை, நல் அரை முழு_முதல் அ வயின் தொடுத்த - நற் 354/5,6
செயலை முழு_முதல் ஒழிய - குறு 214/5
யாஅத்து, பொரி அரை முழு_முதல் உருவ குத்தி - குறு 255/1,2
அணங்கு உடை கடம்பின் முழு_முதல் தடிந்து - பதி 88/6
போந்தை முழு_முதல் நிலைஇய - அகம் 238/16
முழு_முதல் தொலைந்த கோளி ஆலத்து - புறம் 58/2

குழுமு நிலை போரின் முழு_முதல் தொலைச்சி - பெரும் 237
(பலவாகத்)திரண்ட தன்மையையுடைய (நெற்)போர்களின் பெரிய அடியைப் பிரித்து விரித்து

காலை வந்த முழு_முதல் காந்தள் - குறு 361/4
காலையில் வந்த முழுச்செடியான காந்தளை

முள் அரை தாமரை முழு_முதல் சாய்த்து - கலி 79/2
முள்ளைத் தண்டிலே கொண்டிருக்கும் தாமரை மலரை அடியோடு சாய்த்து

இழுமென இழிதரும் பறை குரல் அருவி
முழு_முதல் மிசைய கோடு-தொறும் துவன்றும் - பதி 70/24,25
இழும் என்ற ஒலியுடன் விழுகின்ற பறை முழக்கத்தைக் கொண்ட அருவியோசை
அடிப்பக்கம் மிக அகண்ட உச்சியையுடைய மலைச் சிகரமெங்கும் நிறைந்து விளங்கும்

நானிலம் துளக்கு அற முழு_முதல் நாற்றிய
பொலம் புனை இதழ் அணி மணி மடல் பேர் அணி
இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி - பரி 13/35-37
இம் மண்ணுலகத்து மக்களின் நடுக்கம் தீர, பெரிய அடிப்பகுதிவரை சென்று நாட்டிய
பொன்னாலான மலரால் அழகிய மணிகளையுடைய மடலையுடைய பெரிய குமிழ் போன்ற பூணினைக் கொண்ட
பிரகாசமாய் ஒளிவிடும் கொம்புகளையுடைய ஆண்பன்றியும் ஆகி

 மேல்
 
  முழை - (பெ) குகை, Large mountain cave, cavern, den
வாள் வரி வய புலி கல் முழை உரற - அகம் 168/12
வாள் போன்ற வரியையுடைய வலிய புலி மலையின் குகையிடத்தே முழங்க

 மேல்
 
  முள்கு - (வி) 1. முயங்கு, தழுவு, embrace
         2. உட்செல், நுழை, enter, pierce
1.
தாழ் நறும் கதுப்பில் பையென முள்கும்
அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது - நற் 337/8,9
தாழ்ந்து இறங்கும் நறிய கூந்தலில் துயின்று மெல்ல முயங்கும்
அரிதாய்க் கிடைக்கும் பெரிய பயனைக் கொள்ளாது
2.
அமர் கண் ஆமான் அரு நிறம் முள்காது
பணைத்த பகழி போக்கு நினைந்து கானவன் - நற் 165/1,2
மருண்ட பார்வையையுடைய காட்டுப்பசுவின் அரிய மார்பினில் பாயாது
குறிதப்பிய அம்பின் போக்கை நினைத்துப்பார்த்த கானவன்,

விரை பரி
புல் உளை கலிமா மெல்லிதின் கொளீஇய
வள்பு ஒருங்கு அமைய பற்றி முள்கிய
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப - அகம் 234/3-6
விரைந்த செலவினையுடைய
புல்லிய பிடரி மயிரினையுடைய செருக்கு வாய்ந்த குதிரைகளை மென்மையுறப் பூட்டிய
கடிவாள வாரினை ஒரு பெற்றியமையப் பற்றி நிலத்தே பதிந்த
பல ஆரங்களையுடைய உருளை மென்னில வழியை அறுத்தே

 மேல்
 
  முள்ளி - (பெ) 1. நீர்முள்ளி, Asteracantha Longifolia, Hygrophila spinosa
         2. முட்செடி, thorny plant, 
1. இது நீர்வளம் மிக்க மருத நிலத்தில் காணப்படுவது. தண்டுகளில் முள் உள்ளது.
பூக்களின் இதழ்கள் முன்பக்கம் மடங்கியிருக்கும். பூக்கள் நீல நிறத்தில் இருக்கும்.
முள் சினை
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளி
கொடும் கால் மா மலர் கொய்து கொண்டு - பெரும் 214-216
முள்ளையுடைய கொம்புகளையுடைய
அரும்புகள் சூழ்ந்த இதழ்களையுடைய மறிந்த வாயையுடைய முள்ளியின்
வளைந்த காம்பினையுடைய கரிய பூவைப் பறித்துக்கொண்டு, 

	

முள்ளி நீடிய முது நீர் அடைகரை - ஐங் 21/1
முள்ளிச் செடிகள் உயரமாக வளர்ந்துள்ள பழமையான நீரினைக் கொண்ட திண்ணிய கரையில்

அள்ளல் ஆடிய புள்ளி களவன்
முள்ளி வேர் அளை செல்லும் ஊரன் - ஐங் 22/1,2
சேற்றில் துளாவித் திரிந்த புள்ளிகளையுடைய நண்டு
முள்ளிச் செடியின் வேர்ப்பகுதியில் உள்ள வளையில் சென்று தங்கும் ஊரினைச் சேர்ந்த தலைவன்

கூன் முள் முள்ளி குவி குலை கழன்ற
மீன் முள் அன்ன வெண் கால் மா மலர்
பொய்தல் மகளிர் விழவு அணி கூட்டும் - அகம் 26/1-3
வளைவான முள்ளை உடைய முள்ளிச் செடியின் குவிந்த குலையிலிருந்து கழன்று விழுந்த
மீனின் முள்ளைப் போன்ற வெண்ணிற காம்புகளையுடைய கரிய மலர்களை,
விளையாட்டு மகளிர் தமது திருவிழா ஆட்டத்துக்கு அழகுசெய்ய எடுத்துச் சேர்க்கும் 
2.
கள்ளி ஏய்ந்த முள்ளி அம் புறங்காட்டு
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண் - புறம் 363/10,11
கள்ளிகள் பரந்து மூடிய முட்செடிகள் நிறைந்த முதுகாட்டில்
வெள்ளிடையே ஓங்கிய அகன்ற இடத்தின்கண்

 மேல்
 
  முள்ளூர் - (பெ) ஒரு சங்ககாலத்து ஊர், a city in sangam period
முள்ளுரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன் மலையமான் திருமுடிக்காரி என்னும் காரி. இவன் பெண்ணை அம்
படப்பை நாடு கிழவோன் எனப் புறப்பாடல் 126 குறிக்கிறது. எனவே முள்ளூர் பெண்ணையாற்றுப் படுகையிலுள்ளது
எனப்பெறப்படும்.
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்
பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது
ஒரு வேற்கு ஓடி ஆங்கு - நற் 170/6-8
ஆரியர்கள் ஒன்று கூடிய பெரும் புகழ் படைத்த முள்ளூர்ப் போர்க்களத்தில்
பலருடன் உருவிய வாளுடன் வந்த ஒளிவிளங்கும் வாட்படை, மலையனது
ஒரு வேற்படைக்குத் தோற்றோடியதைப் போல

 மேல்
 
  முளரி - (பெ) 1. விறகு, firewood
         2. முள்ளுள்ள சுள்ளி, thorny twig (used by birds in building nests)
         3. தாமரை, Lotus
         4. காடு, jungle
1.
தண் நறும் தகர முளரி நெருப்பு அமைத்து - நெடு 55
குளிர்ந்த மணமுள்ள சாந்துக்கட்டையை விறகாகக்கொண்டு நெருப்பை உண்டாக்கி
2.
முளரி அம் குடம்பை ஈன்று இளைப்பட்ட
உயவு நடை பேடை உணீஇய - நற் 384/3,4
முட்களைக்கொண்ட சுள்ளிக்குச்சியால் கட்டப்பட்ட அழகிய கூட்டில் குஞ்சுபொரித்து இளைத்துப்போன
வருத்தமிக்க நடையைக் கொண்ட பெண்புறா உண்பதற்காக
3.
முளரி கரியும் முன்பனி பானாள் - அகம் 163/8
தாமரை மலர் கரிந்திடும் முன்பனிக் காலத்துப் பாதியிரவில்
4.
முளரி தீயின் முழங்கு அழல் விளக்கத்து - அகம் 301/13
காட்டுத் தீயில் எழுந்த ஒலிக்கும் தீயின் ஒளியில்

 மேல்
 
  முளவு - (பெ) முள்ளம்பன்றி, Porcupine, Hystrix leucura
முளவு_மா வல்சி எயினர் தங்கை - ஐங் 364/1
முள்ளம்பன்றியை உணவாகக் கொண்ட எயினரின் தங்கையான

 மேல்
 
  முளவுமா - (பெ) பார்க்க : முளவு
முளவுமா தொலைச்சிய பைம் நிண பிளவை - மலை 176
முள்ளம்பன்றியைக் கொன்ற மின்னுகின்ற கொழுப்பையுடைய பிளக்கப்பட்ட தசைத்துண்டுகளை

 மேல்
 
  முளவுமான் - (பெ) பார்க்க : முளவு
கானவன் எய்த முளவு_மான் கொழும் குறை - நற் 85/8
வேட்டுவன் எய்த முள்ளம்பன்றியின் கொழுத்த தசை

 மேல்
 
  முளி - 1. (வி) 1. காய்ந்துபோ, உலர், வற்று. dry
         2. முற்று, உறை, தோய், mature, curdle
         3. வேகு, கருகு, தீய், burn, be scotched
1.
முளி கழை இழைந்த காடு படு தீயின் - மலை 248
(முற்றிக்)காய்ந்துபோன மூங்கில்கள் (ஒன்றோடொன்று)உரசிக்கொண்டதால் காட்டில் உண்டான தீயில்

முளி கொடி வலந்த முள் அரை இலவத்து - நற் 105/1
காய்ந்த கொடிகள் வலப்பக்கமாய்ச் சுற்றி வளைத்த முள்ளுள்ள அடிமரத்தைக்கொண்ட இலமரத்தின்

பயம் கெழு மா மழை பெய்யாது மாறி
கயம் களி முளியும் கோடை ஆயினும் - புறம் 266/1,2
பயன் பொருந்திய பெரிய முகில் பெய்யாதொழிதலால்
நீர்நிலைகள் களியாய் வற்றிப்போகும் கோடைக்காலமாயினும்
2.
கொல் வினை பொலிந்த கூர் வாய் எறி_உளி
முகம் பட மடுத்த முளி வெதிர் நோன் காழ் - குறு 304/1,2
கொல்லன் தொழிலால் பொலிவுபெற்ற கூரிய வாயையுடைய எறியுளி
முகத்தில் படும்படி கட்டப்பட்ட முற்றிய மூங்கிலின் வலிமையுள்ள கழியை

முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் - குறு 167/1
முற்றிய தயிரைப் பிசைந்த காந்தள் போன்ற மெல்லிய விரல்களை
3.
நெடும் கழை முளிய வேனில் நீடி - ஐங் 322/1
உயர்ந்த மூங்கில்கள் கருகிப்போகுமாறு வேனல் நீண்டு

மூ வகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய
மாதிரம் அழல எய்து - பரி 5/25,26
பொன், வெள்ளி, இரும்பு ஆகிய மூன்று வகையான கடத்தற்கரிய திரிபுரக் கோட்டைகளை ஒரு தீக்கணையால்
வேகும்படியும்,
திக்கெல்லாம் பற்றியெரியும்படியும் எய்து

 மேல்
 
  முளிவுறு - (வி) காய், உலர், become dry
முளிவுற வருந்திய முளை முதிர் சிறுதினை - கலி 53/22
காய்ந்து உலர்ந்து போய் வாடி நிற்கிற முளைவிட்டுப் பயிராகி நிற்கும் சிறுதினைப் பயிர்

 மேல்
 
  முளை - 1. (வி) எழு, தோன்று, உதி, rise, appear, come to light
      - 2. (பெ) 1. மூங்கில் போன்ற தாவரங்களின் கணுக்களினின்றும் வெளிப்படும் மென்மையான பகுதி,
           tender shoot of trees or plants 
          2. விதை, கிழங்கு ஆகியவற்றினின்றும் வெளிப்படும் மென்மையான பகுதி
          sprout, seed-leaf 
1.
வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல் - பொரு 72
வெள்ளி எழுந்த செறிந்த இருளையுடைய விடியற்காலத்தே
2.1
இரு வெதிர் ஈன்ற வேல் தலை கொழு முளை - நற் 116/4
பெரிய மூங்கிலில் முளைத்த வேல்முனையைப் போன்ற தலையைக் கொண்ட கொழுத்த முளைகளை

முளை எயிற்று இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும் - பெரும் 53
(மூங்கில்)முளை(போன்ற) கொம்பினையுடைய கரிய பிடியின் முழந்தாளை ஒக்கும்
2.2
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய - நற் 172/1,2
விளையாட்டுத் தோழியருடன் வெள்ளையான மணலில் ஊன்றிவைத்துப்
பின்னர் மறந்தவராய் விட்டுப்போன விதையினின்றும் முளை தோன்ற

சேம்பின், முளை புற முதிர் கிழங்கு ஆர்குவிர் - பெரும் 361,362
சேம்பின், முளையைப் புறத்தேயுடைய முதிர்ந்த கிழங்குகளைத் தின்பீர்

 மேல்
 
  முற்றம் - (பெ) 1. வீட்டின் எல்லைக்குள், வீட்டின் முன்பக்கமுள்ள திறந்தவெளிப் பகுதி, courtyard of a house
          2. தெருக்கள் சந்திக்குமிடத்திலுள்ள திறந்தவெளி, open space in a street junction
          3. ஊரின் வெளியே உள்ள திறந்த வெளி, esplanade
          4. பரப்பு, expanse
1.
பெய்ம் மணல் முற்றம் கவின் பெற இயற்றி - ஐங் 248/1
புதுமணல் பரப்பிய முற்றத்தை அழகு பெற நிறுவி,

தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து - நற் 143/2
கொண்டுவந்த மணலை, தலைசுற்றிப் பரப்பிய வளமிக்க மனைகளின் முற்றத்தில்

	
2.
படு நீர் புணரியின் பரந்த பாடி
உவலை கூரை ஒழுகிய தெருவில்
கவலை முற்றம் காவல் நின்ற
தேம் படு கவுள சிறு கண் யானை - முல் 28-31
ஒலிக்கின்ற கடலலை போல் பரந்த பாசறையில் -
தழைகளால் வேய்ந்த கூரை ஒழுங்குபட்ட தெருவிடத்து,
நாற்சந்தியான முற்றத்தில் காவலாக நின்ற
மதம் பாய்கின்ற கதுப்பினையும் சிறிய கண்ணையும் உடைய யானை
3.
குரு மணி யானை இயல் தேர் பொருநன்
திருமருத முன்துறை முற்றம் குறுகி - பரி 24/71,72
நிறமிக்க மணிகள் பூட்டிய யானைகளையும், அழகிய தேர்களையும் உடைய பாண்டியனின்
திருமருத முன்துறை முற்றத்தை அணுக,
4.
பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய
மென் முலை முற்றம் கடவாதோர் என - அகம் 279/4,5
பொன் என விளங்கும் சுணங்கினைக் கொண்டு நெருங்கப் பணைத்த
மெல்லிய முலைப் பரப்பினை விட்டு நீங்காத நெஞ்சினர்

 மேல்
 
  முற்றல் - (பெ) முதுமை, முதிர்ச்சி, old age, maturity
இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல்
அள்ளல் ஆடிய புள்ளி வரி கலை - நற் 265/1,2
காய்ந்து இறுகிப்போன கொல்லையில் மேய்ந்த, உதிர்ந்த கொம்பினையுடைய, முதிர்ச்சியையுடைய
சேற்றில் குளித்தெழுந்த, புள்ளியையும் வரியையும் கொண்ட கலைமானை

 மேல்
 
  முற்று - 1. (வி) 1. முதிர், கனி, ripen, mature
          2. முழுவளர்ச்சி பெறு, be fully grown
          3. மிகு, பெருகு, increase, abound
          4. மரம் போன்றவற்றின் உட்பகுதி உறுதிப்படு, become hardened as the core of a tree or plant
          5. முடி, come to end, be finished
          6. செய்து முடி, finish, complete
          7. சூழ், encircle, surround
          8. முற்றுகையிடு,வளை, besiege
          9. தேர்ந்த திறம்பெறு, become skilled, be adept
          10 நோய் குணப்படுத்த முடியாத நிலையை அடை, get to an advanced stage as a disease
       - 2. (பெ) 1. முழுமை, பூரணம், completeness, perfection
           2. முதிர்ச்சி, ripeness, maturity
           3. முற்றுகை, siege
           4. சூழ்ந்திருத்தல், encircling
1.1
குயில் கண் அன்ன குரூஉ காய் முற்றி
மணி காசு அன்ன மால் நிற இரும் கனி - அகம் 293/6,7
குயிலின் கண்ணைப் போன்ற விளங்கும் காய் முதிர்ந்து
அழகிய பொற்காசு போன்ற பெருமை பொருந்திய நிறத்தினையுடைய பெரிய கனி
1.2
முகை முற்றினவே முல்லை முல்லையொடு
தகை முற்றினவே தண் கார் வியன் புனம் - குறு 188/1,2
முழுதும் வளைச்சியுற்றன முல்லையின் அரும்புகள்; முல்லையோடு
முற்றும் அழகுகொண்டன குளிர்ந்த கார்ப்பருவத்தின் அகன்ற தினைப்புனங்கள்
1.3
முகை முற்றினவே முல்லை முல்லையொடு
தகை முற்றினவே தண் கார் வியன் புனம் - குறு 188/1,2
முதிர்ந்துவிட்டன முல்லையின் அரும்புகள்; முல்லையோடு
முற்றும் அழகுகொண்டன குளிர்ந்த கார்ப்பருவத்தின் அகன்ற தினைப்புனங்கள்
1.4
முற்றா மஞ்சள் பசும் புறம் கடுப்ப - நற் 101/1
முதிராத இளம் மஞ்சள்கிழங்கின் பசிய மேற்புறத்தைப்போலச்
1.5
செய்_பொருள் முற்றும் அளவு என்றார் ஆய்_இழாய் - கலி 24/12
பொருளீட்டும் பணி முற்றுப்பெறும் வரை" என்று குழறினார்; அழகிய அணிகலன்களை அணிந்தவளே!

ஐ வேறு உருவின் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி - திரு 83,84
ஐந்தாகிய வேறுபட்ட வடிவினையுடைய (முடிக்குச்)செய்யும் தொழிலெல்லாம் முற்றுப்பெற்ற
முடியோடு விளங்கிய (ஒன்றற்கொன்று)மாறுபாடு மிகும் அழகினையுடைய மணிகள்
1.6
சென்ற தேஎத்து செய்_வினை முற்றி
மறுதரல் உள்ளத்தர் எனினும் - அகம் 333/20,21
தாம் சென்றுள்ள தேயத்தே தாம் செய்யும் தொழிலை செய்து முடித்துக்கொண்டு
மீளும் எண்ணம் உடையராயினும்

வீயா சிறப்பின் வேள்வி முற்றி
யூபம் நட்ட வியன் களம் பல-கொல் - புறம் 15/20,21
கெடாத தலைமையுடைய யாகங்களைச் செய்துமுடித்து
தூண் நடப்பட்ட யாகச்சாலைகள் பலவோ?
1.7
வான் புகு தலைய குன்றம் முற்றி
அழி துளி தலைஇய பொழுதில் - நற் 347/4,5
வானத்தை ஊடுருவிச் செல்லும் உச்சிகளையுடைய குன்றுகளைச் சூழ்ந்து,
மிக்க மழையைப் பொழிந்த பொழுதில்
1.8
முதுநீர் முன்துறை முசிறி முற்றி
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின் - அகம் 57/15,16
பழமையான கடலின் துறைமுகத்தையுடைய முசிறியை வளைத்து,
யானைகளைக் கொன்ற பலத்த ஒலியையுடைய போரில்
1.9
அரும் துறை முற்றிய கரும் கோட்டு சீறியாழ்
பாணர் ஆர்ப்ப - அகம் 331/10,11
அரிய இசைத்துறைகளை முற்ற உணர்ந்த கரிய தண்டினையுடைய சிறிய யாழினையுடைய
பாணர்கள் ஆரவாரம் செய்ய
1.10
கொன்றை
ஊழ்_உறு மலரின் பாழ் பட முற்றிய
பசலை மேனி நோக்கி நுதல் பசந்து - அகம் 398/3-5
கொன்றையினது
நன்கு மலர்ந்த பூக்களைப் போல பாழ்பட முற்றிப்போன
பசலை படர்ந்த மேனியைப் பார்த்து நெற்றியும் பசலையுறப்பெற்று
2.1
முற்று இழை மகளிர் முகிழ் முலை திளைப்பவும் - பட் 296
உடல் முழுதும் அணிகலன்கள் அணிந்த மகளிரின் (தாமரை)மொட்டு(ப் போன்ற)முலைகள் அழுந்துவதாலும்
2.2
கற்றை ஈந்தின் முற்று குலை அன்ன
ஆள் இல் அத்த தாள் அம் போந்தை - நற் 174/1,2
ஈந்தின் கற்றையான முதிர்ச்சியுள்ள குலை போன்ற,
ஆளரவம் அற்ற பாலைவழியில் நிற்கும் தாளிப்பனையின்
2.3
ஒரு முற்று இருவர் ஓட்டிய ஒள் வாள்
செரு மிகு தானை வெல் போரோயே - பதி 63/11,12
ஒரு முற்றுகையில் இரு பெரும் வேந்தர்களை ஓட்டிய ஒளிரும் வாளையுடைய,
போரில் மேம்பட்ட சேனையைக் கொண்டு வெல்லுகின்ற போரினையுடையவனே!
2.4
பாண் முற்று ஒழிந்த பின்றை மகளிர்
தோள் முற்றுக நின் சாந்து புலர் அகலம் - புறம் 29/6,7
பாணர்கள் சூழ்ந்திருத்தல் ஒழிந்த பின்னர், நினது உரிமை மகளிருடைய
தோள் சூழ்வதாக நின் சாந்து புலர்ந்த மார்பும்

 மேல்
 
  முற்றை - (பெ) முன்பு, கடந்தகாலம், past, earlier times
முரம்பு தலைமணந்த நிரம்பா இயவின்
ஓங்கி தோன்றும் உமண் பொலி சிறுகுடி
களரி புளியின் காய் பசி பெயர்ப்ப
உச்சி கொண்ட ஓங்கு குடை வம்பலீர்
முற்றையும் உடையமோ மற்றே பிற்றை
வீழ் மா மணிய புனை நெடும் கூந்தல்
நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப
விருந்து அயர் விருப்பினள் வருந்தும்
திருந்து இழை அரிவை தே மொழி நிலையே - நற் 374
சரளைக் கற்கள் பரவிக்கிடந்த, சென்று முடியாத நீண்ட வழியில்,
உயர்ந்து தோன்றும் உமணர்கள் நிறைந்திருக்கும் சிறிய ஊரினரின்
களர்நிலத்துப் புளிச்சுவைகொண்டு, அவரின் வருத்தும் பசியைப் போக்க,
தலை உச்சியில் கொண்ட உயர்ந்த சோற்றுப்பொதிகளையுடைய அயலூர் மக்களே!
முன் நாளிலும் பெற்றிருக்கிறோம் - இப்பொழுது பெறப்போகும்,
விரும்பப்படும் கரிய மணியைப் போன்ற, புனையப்பட்ட நீண்ட கூந்தலையுடையவள்,
கண்ணீர் வடிந்து சொட்டுச் சொட்டாக மார்பினை நனைக்க,
நமக்கு விருந்து வைக்கும் விருப்பினளாய் தன்னை வருத்திக்கொள்ளும்
திருத்தமான அணிகலன்களை அணிந்த அரிவையாகிய இன்மொழிக்காரியின் நிலையை -

 மேல்
 
  முறம் - (பெ) தானியம் முதலியவற்றைப் புடைக்கப்பயன்படும் மூங்கில் தப்பையால் பின்னப்பட்ட தட்டு,
        winnowing pan.
சங்க இலக்கியங்களில் இச்சொல் நான்குமுறை வருகிறது. நான்குமுறையும் இது யானையின் காதுக்கு
உவமமாகவே வருகிறது.

முறம் செவி யானை தட கையின் தடைஇ - நற் 376/1
முறம் செவி வாரணம் முன் குளகு அருந்தி - கலி 42/2
முறம் செவி மறை பாய்பு முரண் செய்த புலி செத்து
----------------------------- -------------------------------------------------------
அதன், நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை - கலி 52/1-4
முறம் செவி யானை வேந்தர் - புறம் 339/12

	

 மேல்
 
  முறி - 1. (வி) 1. துண்டாகு, ஒடி, break, snap
         2. துண்டாக்கு, ஒடி, break apart, rupture
     - 2. (பெ) 1. இளந்தளிர், shoot, sprout
          2. கொழுந்து இலை, tender leaf
          3. பாதித் துண்டு, half piece, half broken bit
1.1
எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின் - புறம் 347/4
பகைவரை எறிந்து இலை முறிந்து வடுப்பட்ட வாயையுடைய வேலினையும்
1.2
பெரும் செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்து
பாசவல் இடிக்கும் இரும் காழ் உலக்கை - அகம் 141/17,18
பெரிய வயலில் விளைந்த நெல்லின் வளைந்த கதிர்களை ஒடித்து
பசிய அவலாகக்குற்றும் கரிய வயிரமாகிய உலக்கையின்
2.1
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே - குறு 62/4,5
நறுமணமுள்ள நல்லோளது மேனி,
இளந்தளிரினும் மென்மையானது, தழுவுதற்கும் மிக்க இனியது
2.2
தழலும் தட்டையும் முறியும் தந்து இவை
ஒத்தன நினக்கு என பொய்த்தன கூறி
அன்னை ஓம்பிய ஆய் நலம்
என் ஐ கொண்டான் யாம் இன்னமால் இனியே - குறு 223/4-7
கிளிகளை விரட்டும் தழலும், தட்டையும் ஆகிவற்றோடே கொழுந்தான தழையும் தந்து இவை
உனக்குப் பொருந்துவன என்று பொய்யானவற்றைக் கூறி
அன்னை பாதுகாத்த ஆய்வதற்குரிய பெண்மை நலத்தை
தலைவன் கவர்ந்துகொண்டான், நாம் இப்படியானோம் இப்பொழுது.
2.3
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர்
வாழை பூவின் வளை முறி சிதற - புறம் 237/10,11
மாறிமாறி வெய்தாக மார்பின்கண் அரைந்துகொண்ட மகளிர்,
வாழைப்பூவினைப் போல வளையல்களின் துண்டுகள் சிதற

 மேல்
 
  முறுக்கு - (வி) திருக்கு, twirl, 
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்
படு கடும் களிற்றின் வருத்தம் சொலிய
பிடி படி முறுக்கிய பெரு மர பூசல் - அகம் 8/9-11
வாழைமரங்கள் ஓங்கிய தாழ்வான இடத்திலுள்ள வழுக்குநிலத்தில்
அகப்பட்டுக்கொண்ட கடுமையான களிற்றின் துன்பத்தினைப் போக்க
பெண்யானை, படியாக அமைக்க திருக்கி ஒடிக்கும் பெரிய மரத்தின் ஓசை

 மேல்
 
  முறுக்குறு - (வி) சுழற்றுதல்செய், turn, rotate
மனையோள்
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்குறுத்த
திரிமரக் குரல் இசை கடுப்ப - அகம் 224/12
மனைவி பதமாகக் காய்ந்த அரிசியைப் பெய்து சுற்றுதல்செய்த
சுழலும் திரிகையின் குரல் ஒலி ஒக்க

	

பார்க்க : சுழல்மரம்

 மேல்
 
  முறுகு - (வி) முதிர், mature, ripen
துறுகல் சுற்றிய சோலை வாழை
இறுகு குலை முறுக பழுத்த - மலை 131,132
(பக்கத்திலுள்ள)பாறைகள் சூழ நின்ற தோட்டத்தின் வாழைமரங்களில்,
இறுகிக்கிடக்கும் குலைகள் முதிர்ந்து பழுத்தன;

 மேல்
 
  முறுவல் - (பெ) 1. புன்னகை, smile
          2. பல், tooth
1.
முல்லை, முகை முகம் திறந்து அன்ன முறுவலும் கடிகல்லாய் - கலி 118/19,20
முல்லையின், மொட்டு தம் முகத்தைத் திறந்தது போன்ற இனிய முறுவலை அழிப்பதில்லை;
2.
முளை நிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல்
குறி நீ செய்தனை என்ப அலரே - ஐங் 369/2,3
மூங்கிலின் முளை போன்ற வரிசையான பற்களுடைய ஒருத்தியை நேற்று
நீ குறிப்புக்காட்டி அழைத்தாய் என்று ஊரே பேசும் பேச்சு

 மேல்
 
  முறை - (பெ) 1. ஒழுங்கு, நியதி, தகவு, propriety, order
         2. தன்மை, விதம், செயல்பாங்கு, manner, way
         3. நீதி, justice
         4. வரிசை ஒழுங்கு, row order
         5. உறவு, relationship by blood or marriage
         6. பிறப்பு, birth
         7. தடவை, time (as once, twice)
         8. ஊழ், விதி, fate
1.
கல்லா இளைஞர் சொல்லி காட்ட
கதுமென கரைந்து வம் என கூஉய்
அதன் முறை கழிப்பிய பின்றை - பொரு 100-102
(அரச முறைமையை இன்னும்)கற்றுக்கொள்ளாத (எம்)இளைஞர் (எம் வரவைக்)கூவி எடுத்துக்கூற,
விரைவாக அழைத்து, ‘வருக வருக' என்று உரத்துச் சொல்லி,
அரசனைக் காணும் முறைகளைச் செய்து முடித்த பின்னர், 
2.
கரும் கோட்டு சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப - நெடு 70
கரிய தண்டினையுடைய சிறுயாழைப் பண் நிற்கும் முறையிலே நிறுத்த
3.
முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும்
வேண்டுபவேண்டுப வேண்டினர்க்கு அருளி - பெரும் 443,444
(வருத்தப்பட்டு)நீதி கேட்டுவந்தவர்க்கும், (வறுமைப்பட்டுத் தம்)குறை தீர்க்கக் கேட்டோர்க்கும்
வேண்டியவற்றை எல்லாம் வேண்டினர்க்கு அருள்செய்து,

அரசு முறை செய்க களவு இல் ஆகுக - ஐங் 8/2
அரசன் நீதியுடன் அரசாளுக, களவும் இல்லாதன ஆகுக
4.
காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும் - நற் 66/9
உறுதியாகக் கட்டப்பெற்ற, அல்குலின் காசுமாலையில் உள்ள காசுகள் வரிசைமாறிக் கிடப்பினும்,
5.
யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறை கேளிர் - குறு 40/1,2
என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் யார் யாரோ
என் தந்தையும் உன் தந்தையும் எந்த உறவுப்படி உறவினர்?
6.
முன் முறை செய் தவத்தின் இ முறை இயைந்தேம் - பரி 11/138
முற்பிறப்பில் செய்த தவத்தினால் இப் பிறப்பில் நாங்கள் பெற்றோம்
7.
ஒரு முறை உண்ணா அளவை பெரு நிரை
ஊர் புறம் நிறைய தருகுவன் - புறம் 258/7,8
ஒரு தடவை உண்பதன் முன்னே, பெரிய ஆனிரையை
இவ்வூர்ப்புறமெல்லாம் நிற்பக் கொடுதருவன்
8.
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல் ஆர் உயிர்
முறை வழிப்படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் - புறம் 192/8-11
கல்லை அலைத்து ஒலிக்கும் வளவிய பேரியாற்று
நீரின் வழியே போம் மிதவை போல, அரிய உயிர்
ஊழின் வழியேபடும் என்பது நன்மைக் கூறுபாடறிவோர்
கூறிய நூலானே தெளிந்தேம்

 மேல்
 
  முறைமுறை - (வி.அ) அடுத்தடுத்து, one after another, முறைப்படி, according to the order, status etc.,
வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு
முன்னோன் முறை_முறை காட்ட - நெடு 176,177
வேப்பம் பூ மாலையைத் தலையிலே கட்டின வலிய காம்பினையுடைய வேலோடே
முன்செல்கின்றவன் (புண்பட்ட வீரரை) முறைப்படி (வரிசையாகக்) காட்ட

கான் மிகு குளவிய வன்பு சேர் இருக்கை
மென் தினை நுவணை முறை_முறை பகுக்கும்
புன்_புலம் தழீஇய புறவு அணி வைப்பும் - பதி 30/23-25
மணம் மிக்க காட்டுமல்லிகை வளர்கின்ற, வலிய நிலத்தைச் சேர்ந்த, மனைகளில்
மென்மையான தினை மாவை விருந்தினருக்கு முறைப்படி பகிர்ந்தளிக்கும்
புன்செய் நிலங்களைத் தழுவிக்கிடக்கும் முல்லைநிலத்திற்கு அண்மையிலுள்ள குறிஞ்சிப் பகுதி மக்களும் -

உச்சி குடத்தர் புத்து அகல் மண்டையர்
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை_முறை தர_தர - அகம் 86/8-10
உச்சியில் குடத்தினை உடையவரும், கையினில் புதிய அகன்ற கலத்தினை உடையவரும் ஆகிய
மணத்தினைச் செய்துவைக்கும் ஆரவாரமுடைய முதிய மங்கல மகளிர்
முன்னே தருவனவும், பின்னே தருவனவும் முறைப்படி தந்திட

விழவின், கோடியர் நீர்மை போல முறை_முறை
ஆடுநர் கழியும் இ உலகத்து - புறம் 29/22-24
விழாவின்கண் ஆடும், கூத்தரது வேறுபட்டகோலம் போல, முறைப்படி (அடுத்தடுத்து)
தோன்றி, இயங்கி, இறந்து போகின்ற இவ்வுலகத்தின்கண்

 மேல்
 
  முறையுளி - (வி.அ) முறைப்படி, வரிசைப்படி, according to order
இடன் உடை பேரியாழ் முறையுளி கழிப்பி - பெரும் 462
இடப்பக்கத்தே உடைய பேரியாழை இயக்குமுறையில் இயக்கி,

 மேல்
 
  முன்கடை - (பெ) வீட்டின் முன்வாசல், front entrance of a house, porch
சிறு வளை விலை என பெரும் தேர் பண்ணி எம்
முன்கடை நிறீஇ சென்றிசினோனே - நற் 300/5,6
சிறிய வளை அணிந்தவளுக்கு இது விலையாகும் என்று பெரிய தேரை அலங்கரித்து, எமது
வீட்டின்முன் நிறுத்திச் சென்றுவிட்டான்

 மேல்
 
  முன்கை - (பெ) முழங்கை முதல் மணிக்கட்டு வரையில் உள்ள பகுதி, forearm
ஆடு அமை பணை தோள் அரி மயிர் முன்கை
நெடு வரை மிசைய காந்தள் மெல் விரல் - பொரு 32,33
அசைகின்ற மூங்கில் (போன்ற)பெருத்த தோளினையும், ஐம்மை மயிரினையுடைய முன்கையினையும்,
நெடிய மலையின் உச்சியிடத்தனவாகிய காந்தள் (போலும்)மெல்லிய விரலினையும்,

பொலம் தொடி தின்ற மயிர் வார் முன்கை
வலம்புரி வளையொடு கடிகை_நூல் யாத்து - நெடு 141,142
(முன்பு)பொன் வளையல்கள் (அழுத்தித்)தழும்புண்டாக்கிய மயிர் ஒழுங்குபட்ட முன்கையில்
வலம்புரிச் சங்கு வளையல்களோடு காப்புக்கயிறைக் கட்டி,

 மேல்
 
  முன்துறை - (பெ) 1. துறைமுகம், port, harbour
           2. ஆற்றில் இறங்குமிடம், place whereone gets into a river
1.
தீம் புகார் திரை முன்துறை
தூங்கு நாவாய் துவன்று இருக்கை - பட் 173,174
(கண்ணுக்கு)இனிதான புகாரிடத்து அலைகளையுடைய துறையின் முன்னே,
அசைகின்ற (நெருக்கமாய் நின்று காத்திருக்கும்)மரக்கலங்களின் நெருக்கமான இருப்பினில்,

முத்து படு பரப்பின் கொற்கை முன்துறை - நற் 23/6
திண் தேர் பொறையன் தொண்டி முன்துறை - குறு 128/2
நெடும் தேர் காரி கொடுங்கால் முன்துறை
பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும் - அகம் 35/15,16
முதுநீர் முன்துறை முசிறி முற்றி - அகம் 57/15
திரு மா வியல் நகர் கருவூர் முன்துறை - அகம் 93/21
புன்னை அம் கானல் புறந்தை முன்துறை - அகம் 100/13
அடு போர் வேளிர் வீரை முன்துறை - அகம் 206/13
பல் வேல் மத்தி கழாஅர் முன்துறை - அகம் 226/8
தெண் திரை பரப்பின் தொண்டி முன்துறை - அகம் 290/13
தண் புனல் வாயில் துறையூர் முன்துறை - புறம் 136/25
2.
திருமருத முன்துறை சேர் புனல் கண் துய்ப்பார் - பரி 7/83
திருமருத முன்துறை என்ற பெயர்கொண்ட துறையைச் சேரும் வையை நீரில் குளித்து இன்புறுவாரின்

 மேல்
 
  முன்ப - (வி.வே) வலிமையினையுடையவனே! Oh! powerful one
போர் பீடு அழித்த செரு புகல் முன்ப
கூற்று வெகுண்டு வாரினும் மாற்றும் ஆற்றலையே - பதி 14/9,10
போர்த்திறனின் பெருமிதத்தை அழித்த போர்மீது விருப்பம் கொண்ட வலியவனே!
கூற்றுவனே வெகுண்டு வந்தாலும் அழித்துவிடும் ஆற்றலையுடையவனே

 மேல்
 
  முன்பனி - (பெ) ஆண்டில் மார்கழி, தை ஆகிய மாதங்கள், the period during the months of margazhi and thai
பின்பனி அமையம் வரும் என முன்பனி
கொழுந்து முந்துறீஇ குரவு அரும்பினவே - நற் 224/2,3
பின்பனிக் காலம் வரப்போகிறது என்று முன்பனிக்காலத்தில்
தளிர்களை முதலில் விட்டு, குராமரங்கள் அரும்புவிடுகின்றனவே!

 மேல்
 
  முன்பு - (பெ) உடல்வலிமை, bodily strength
ஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின்
நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு - புறம் 341/12,13
கடத்தற்கரிய போரைச் செய்தற்குரிய மறத்தீக் கிளறும் வலிமையினையும்
நீண்ட இலையையுடைய வேலால் புண்ணுற்று வடுப்பட்ட உடம்போடே

 மேல்
 
  முன்றில் - (பெ) வீட்டின் முன்பகுதி, the front of a house
இது வீட்டுக்கு முன்பக்கம் தெருவரையில் உள்ள திறந்த வெளி.
முன்றில் = முன் + இல்
முன் என் கிளவி முன்னர்த் தோன்றும்
இல் என் கிளவி மிசை றகரம் ஒற்றல்! (தொல்-எழுத். புள்.மயங்:60)
'முன்' என்ற சொல்லுக்குப் பக்கத்தில் 'இல்' என்ற சொல் சேர்ந்தால், அங்கே றகரம் தோன்றும்.
1. 
இந்தத் திறந்த வெளியில் பந்தல் போட்டிருக்கும் அல்லது மரநிழல் இருக்கும்.
குறி இறை குரம்பை பறி உடை முன்றில்
கொடும் கால் புன்னை கோடு துமித்து இயற்றிய
பைம் காய் தூங்கும் பாய் மணல் பந்தர் - பெரும் 265-267

வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை - பெரும் 353,354
வளவிய தோட்டினையுடைய தென்னை மரத்தின் வற்றிய மடலினை வேய்ந்த,
மஞ்சளையுடைய முன்றிலையும் மணல் கமழ்கின்ற சுற்றுப்புறங்களையும் உடைய
2.
பலவித மரங்கள் இருக்கும்.
மன்ற புன்னை மா சினை நறு வீ
முன்றில் தாழையொடு கமழும் - நற் 49/8,9
மன்றத்துப் புன்னையின் பெரிய கிளையில் உள்ள நறு மலர்கள்
வீட்டு முன்றிலில் இருக்கும் தாழையோடு சேர்ந்து மணங்கமழும்

வளி சீத்து வரித்த புன்னை முன்றில் - நற் 159/6
காற்று துடைத்துத் தூய்மையாக்கிய வரிவரியான புன்னை மரம் உள்ள முன்றிலில்

சினை-தொறும் தூங்கும் பயம் கெழு பலவின்
சுளை உடை முன்றில் - நற் 77/5,6
கிளைகள்தோறும் தொங்கும் பழங்களையுடைய பலாவின்
சுளைகளை உடைய முன்றிலில்

தூங்கல் ஓலை ஓங்கு மடல் பெண்ணை
மா அரை புதைத்த மணல் மலி முன்றில் - நற் 135/1,2
தொங்குகின்ற ஓலைகளையும், உயர்ந்து நீண்ட மடல்களையும் கொண்ட பனைமரத்தின்
கரிய அடிமரத்தைப் புதைத்த மணல் மிகுந்துகிடக்கும் வீட்டு முன்றிலில்

வேங்கை
வீ உக வரிந்த முன்றில் - நற் 232/7,8
வேங்கையின்
மலர்கள் உதிரும்படி வரிக்கப்பட்ட முன்றில் உள்ள

நெல்லி, மரை_இனம் ஆரும் முன்றில்
புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே - குறு 235/3-5
நெல்லிக்காயை
மரைக் கூட்டங்கள் உண்ணும் முன்றிலையுடைய
புல் வேய்ந்த குடிசைகளையுடைய நல்லவளின் ஊர் 

தேம் பிழி நறவின் குறவர் முன்றில்
முந்தூழ் ஆய் மலர் உதிர - அகம் 78/7,8
இனிமையுறப் பிழிந்த கள்ளினையுடைய குறவர்களின் முன்றிலில்
மூங்கிலின் அழகிய மலர்கள் உதிரவும்

முன்றில்
தேன் தேர் சுவைய திரள் அரை மாஅத்து
கோடைக்கு ஊழ்த்த கமழ் நறும் தீம் கனி - அகம் 348/1-3
முன்றிலின்கண்ணுள்ள
தேன் எனத்தகும் சுவையினவாகிய திரண்ட அடியினையுடைய மாமரத்தின்
கோடைக்காலத்தே முதிர்ந்த நன்மணங்கமழும் இனிய கனிகளுடன்
3.
வீட்டு முன்றிலில் மகளிர் கள் காய்ச்சுவர்.
பைம் கொடி நுடங்கும் பலர் புகு வாயில்
செம் பூ தூய செதுக்கு உடை முன்றில்
கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய
வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின் - பெரும் 337-340
4.
முன்றிலில் நிலத்தில் உரலைப் பதித்துவைத்திருப்பர். அதில் அரிசி, அவல் போன்றவற்றை உலக்கையால் குற்றுவர்.
நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர்
--------------------------------- ------------------
நீழல் முன்றில் நில உரல் பெய்து
குறும் காழ் உலக்கை ஓச்சி - பெரும் 94-97
மெல்லிய புல்லரிசியை வாரியெடுத்துக்கொண்ட வெண்மையான பல்லையுடைய எயிற்றியர் 
---------------------------------------------- ---------------------------------
நிழலையுடைய முன்றிலில் நில(த்தில் குழிக்கப்பட்ட) உரலில் இட்டு,
குறிய வயிரம் பாய்ந்த உலக்கையால் குற்றி,

புது வை வேய்ந்த கவி குடில் முன்றில்
அவல் எறி உலக்கை பாடு விறந்து - பெரும் 225,226
புதிய வைக்கோலால் வேய்ந்த கவிந்த குடிலின் முன்றிலில்
அவலை இடிக்கும் உலக்கையின் ஓசை செறிகையினால்,
5
முன்றிலில் முளையினை அறைந்து அதில் ஆட்டுக்குட்டிகளைக் கட்டிவைத்திருப்பர்.
நெடும் தாம்பு தொடுத்த குறும் தறி முன்றில்
கொடு முக துருவையொடு வெள்ளை சேக்கும் - பெரும் 152,153
நெடிய தாம்புகள் கட்டப்பட்ட குறிய முளைகளையும் உடைய முன்றிலில்,
வளைந்த முகத்தையுடைய செம்மறியாட்டுடன் வெள்ளாடும் கிடக்கும்
6.
முன்றிலில் தானியங்களைச் சேர்த்துவைக்கும் குதிர்கள் கட்டியிருப்பர். முன்றிலில் பந்தலிட்டு அதன் நிழலில்
தானியங்களை அரைக்கும் திரிகையை வைத்திருப்பர்.
பிடி கணத்து அன்ன குதிர் உடை முன்றில்
களிற்று தாள் புரையும் திரி மர பந்தர் - பெரும் 186,187
பிடித்திரள் நின்றாற்போன்று (தானியங்கள் சேமிக்கும்)குதிர்களையுடைய முன்றிலையும்,
யானையினது காலை ஒக்கும் (தானியங்கள் திரிக்கும்)திரிகை மரம் நிற்கும் பந்தலினையும்,
7.
முன்றிலில் மஞ்சள் கிழங்கு நட்டுவைத்திருப்பர்.
வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை - பெரும் 353,354
வளவிய தோட்டினையுடைய தென்னை மரத்தின் வற்றிய மடலினை வேய்ந்த,
மஞ்சளையுடைய முன்றிலினையும் மணல் கமழ்கின்ற சுற்றுப்புறங்களையும் உடைய
8.
அரசனுடைய அரண்மனை முன்றிலில் மந்திகள் செத்தைகளை அகற்றும், விலங்குகள் துயிலும், முனிவர்கள்
வேள்வி செய்வர்.
மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில்
செம் தீ பேணிய முனிவர் வெண் கோட்டு
களிறு தரு விறகின் வேட்கும்
ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோனே	 - பெரும் 497-500
மந்திகள் செத்தைகளை அகற்றும் விலங்குகள் துயில்கொள்ளும் முன்றிலில்,
சிவந்த தீயைக் கைவிடாமல் காத்துப்போந்த முனிவர்கள், வெண்மையான கொம்பினையுடைய
eகளிறுகள் முறித்துக் கொண்டுவந்த விறகால் வேள்வியைச் செய்யும்,
ஒளிறுகின்ற விளங்கும் அருவிகளையுடையவாகிய மலையை ஆளும் உரிமையுடையோன்
9.
பரதவர் குடிசைகளின் முன்புள்ள முன்றிலில் மீன் பிடிக்கும் வலையைக் காயப்போட்டிருப்பர்.
குறும் கூரை குடி நாப்பண்
நிலவு அடைந்த இருள் போல
வலை உணங்கும் மணல் முன்றில் - பட் 81-83
குறுகிய கூரைச்சரிவுகளையுடைய குடியிருப்புகளின் நடுவில்,
நிலவின் நடுவே சேர்ந்த இருளைப் போல
வலைகிடந்து உலரும் மணலையுடைய முன்றிலைக்கொண்ட இல்லங்களில்
10.
பண்டகசாலைகளின் முன்றிலில் பொதிமூட்டைகளின் மீதேறி நாயும் ஆட்டுக்கிடாயும் விளையாடும்.
மதி நிறைந்த மலி பண்டம்
பொதி மூடை போர் ஏறி
மழை ஆடு சிமைய மால் வரை கவாஅன்
வரை ஆடு வருடை தோற்றம் போல
கூர் உகிர் ஞமலி கொடும் தாள் ஏற்றை
ஏழக தகரோடு உகளும் முன்றில் - பட் 136-141
மதிப்பு மிக்க ஏராளமான பண்டங்கள்	
பொதிந்த பொதிகளை அடுக்கிவைத்த குவியலின்மீது ஏறி,
மழை விளையாடும் சிகரத்தையுடைய உயர்ந்த மூங்கில்கள் வளர்ந்த சரிவுகள் உள்ள
மலையில் துள்ளி விளையாடும் வருடைமானின் காட்சி போல,
கூரிய நகங்களையுடைய நாயின் வளைந்த பாதங்களையுடைய ஆணானது
ஆட்டுக் கிடாயுடன் குதிக்கும் (பண்டசாலையின்)முன்றிலினையும் - (கொண்ட பட்டினம்),
11.
மீனவர் சேரிகளில் முன்றிலில் மீனை அறுத்து வெடுக்கு நீக்கி, அதனை எண்ணெயில் பொரிப்பர்.
மீன் தடிந்து விடக்கு அறுத்து
ஊன் பொரிக்கும் ஒலி முன்றில் - பட் 176,177
மீனை வெட்டி, (அதனுள் இருக்கும்)வேண்டாத பகுதிகளை நீக்கி,
(அதன்)தசையினைப் பொரிக்கும் ஓசையெழும்பும் முன்றிலினையும்
12.
மீன் பிடிப்பவர் பிடித்த மீனை முன்றிலில் கூடையில் வைத்திருப்பர்.
வலைஞர் முன்றில் மீன் பிறழவும் - பட் 197
வலைஞர் முன்றிலில் மீன் பிறழ்ந்து திரியும்படியாகவும்,
13
மலைவாழ் மக்களின் தினைப்புனத்தில் கதிர் அறுக்க வரும் குறவர், இரவில் தம் குடும்பத்துடன் முன்றிலில்
படுத்திருப்பர்.
புனத்த
நீடு இலை விளை தினை கொடும் கால் நிமிர
கொழும் குரல் கோடல் கண்ணி செழும் பல
பல் கிளை குறவர் அல்கு அயர் முன்றில் - நற் 44/5-8
தினைப்புனத்தில்
நீண்ட இலையையுடைய நன்கு விளைந்த தினையின் வளைந்த தாள் நிமிரும்படி
கொழுமையான கதிர்களைக் கொய்வதைக் கருதி, திரண்ட பல
பெருத்த கூட்டமான குறவர்கள் இராத்தங்கி இன்பமாய்ப் பொழுதுபோக்கும் முன்றிலிலுள்ள
14.
வீட்டுக்குள் புழுக்கம் மிகுந்திருந்தால், முன்றிலில் காற்றாட அமர்ந்திருப்பர்.
நோயும் கைம்மிக பெரிதே மெய்யும்
தீ உமிழ் தெறலின் வெய்து ஆகின்றே
ஒய்யென சிறிது ஆங்கு உயிரியர் பையென
முன்றில் கொளினே நந்துவள் பெரிது என
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு
உரை இனி வாழி தோழி புரை இல்
நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து
அண்ணல் நெடு வரை ஆடி தண்ணென
வியல் அறை மூழ்கிய வளி என்
பயலை ஆகம் தீண்டிய சிறிதே - நற் 236
என் காதல் நோயும் கைமீறிப் பெரிதாகிவிட்டது; உடம்பும்
நெருப்பு வெளிவிடும் வெம்மையைக்காட்டிலும் சூடானதாய் உள்ளது;
விரைவாக, நான் சிறிதாகிலும் உயிர்த்திருக்க, "மெல்ல
முன்றிலில் இவளை இருத்தினால் நலம்பெறுவாள் பெரிதும்" என்று
உள்ளிருப்போரை வெளிவிடாத நரகக் காவலர் போன்ற நெஞ்சத்தையுடைய அன்னைக்கு அறிவுறுத்தி, அங்கு
உரைப்பாயாக இனியே, வாழ்க தோழி நீ! குற்றமற்ற
நுண்ணிய நேரிய ஒளிபொருந்திய வளைகளை நெகிழச்செய்தவனின் குன்றத்து
மிகப்பெரிய உயர்ந்த கொடுமுடியில் தவழ்ந்து, குளிர்ச்சியுடன்
நம் மலையின் அகன்ற பாறைகளில் நிரம்பியுள்ள காற்று எனது
பசலை பாய்ந்த மார்பினைத் தீண்டுவதற்காக, சிறிதேனும்
15.
பரதவர் வீட்டு முன்றிலில் நண்டுகள் ஓடித்திரியும்.
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்
காமர் சிறுகுடி செல் நெறி வழியின் - நற் 239/4,5
நண்டுகள் ஓடித்திரிந்த புலால்நாறும் மணல் பரப்பிய முன்றிலையுடைய
கண்டோர் விரும்பும் சிறுகுடிக்குச் செல்லும் ஒழுங்குபட்ட வழியில்
16.
வீட்டு முன்றிலில் பெண்கள் கள்ளுண்டு குரவைக்கூத்து ஆடுவர்.
சேந்தனை செல்-மதி நீயே பெரு மலை
வாங்கு அமை பழுனிய நறவு உண்டு
வேங்கை முன்றில் குரவையும் கண்டே - நற் 276/8-10
எம் ஊரில் தங்கிச் செல்வாயாக நீயே! பெரிய மலையில் உண்டான
வளைந்த மூங்கிலாலான குப்பிகளில் விளைந்த கள்ளினை உண்டு
வேங்கை மரங்கள் இருக்கும் முன்றிலில் நாங்கள் ஆடும் குரவைக்கூத்தையும் கண்டுவிட்டு 

வேங்கை முன்றில் குரவை அயரும் - புறம் 129/3
17.
வீட்டு முன்றிலில் தானியங்களைக் காயப்போட்டிருப்பர்.
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ
முன்றில் உணங்கல் மாந்தி - குறு 46/2,3
கூம்பிய சிறகையுடைய வீட்டில் வாழும் குருவி
முன்றிலில் காயும் தானியங்களை வயிறார உண்டு
18.
முன்றிலின் எல்லையிலுள்ள குத்துக்கல்லில் தெருவில் செல்லும் விலங்குகள் முதுகைத்தேய்த்துச் செல்லும்.
குறவர் முன்றில் மா தீண்டு துறுகல் - ஐங் 277/1
குறவரின் வீட்டு முன்றிலில் இருக்கும் விலங்குகள் தம் முதுகைத் தேய்த்துக்கொள்ளும் குத்துக்கல்லில்
19.
மாலை நேரத்தில் முன்றிலில் கட்டில் போட்டு கணவனும் மனைவியும் குழந்தையுடன் இனிமையாகப் பொழுதைக்
கழிப்பர்
மாலை முன்றில் குறும் கால் கட்டில்
மனையோள் துணைவி ஆக புதல்வன்
மார்பின் ஊரும் மகிழ் நகை இன்ப
பொழுதிற்கு ஒத்தன்று-மன்னே
மென் பிணித்து அம்ம பாணனது யாழே - ஐங் 410
மாலைநேரத்தில், வீட்டு முன்றிலில், குட்டையான கால்களையுடைய கட்டிலில்,
மனைவியானவள் பக்கத்தில் இருக்க, புதல்வன்
மார்பினில் தவழும் மகிழ்ந்த சிரிப்பின் இன்பமான
நேரத்திற்கு ஒப்பானது -
மென்மையாக உள்ளத்தைப் பிணிக்கும் பாணனது யாழிசை
20.
இடையர்கள் முன்றிலில் தயிர் கடைந்து, மத்தினை அங்குத் தொங்கவைத்திட, அங்குக் கட்டியிருக்கும் கன்றுக்குட்டி
அதனை வாயால் நக்கும்.
தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம்
கன்று வாய் சுவைப்ப முன்றில் தூங்கும் - அகம் 87/1,2
இனிய தயிரைக் கடைந்த திரண்ட தண்டினையுடைய மத்து
கன்று தன் வாயால் சுவைத்திட முன்றிலில் தொங்கும்
21.
முல்லை நில வீடுகளுக்கு வெளியேயுள்ள புலத்தில் மேய்ந்த முயல்கள், வீட்டு முன்றிலுள்ள சிறிய கலங்களிலுள்ள
நீரைப் பருகும்.
குறு விழி கண்ண கூரல் அம் குறு முயல்
முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு
குடந்தை அம் செவிய கோள் பவர் ஒடுங்கி
இன் துயில் எழுந்து துணையொடு போகி
முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும் - அகம் 284/2-6
குறிய விழி பொருந்திய கண்களையும், கூரிய மயிரினையுமுடைய குறிய முயல்கள்
வளைந்து கிடக்கும் வரகினது பருத்த குருத்தினைத் தின்று
வளைந்த அழகிய செவியினவாகி, காய்களைக் கொண்ட கொடிகளுள் புகுந்து
இனிய துயிலினின்றும் எழுந்து, தம் துணையோடு போகி
வீட்டு முன்றிலிலுள்ள சிறிய சால்களிலுள்ள நீரைக் கண்டு பருகும்
22.
பாலைநிலத்துச் சீறூர்களில் வீட்டு முன்றிலில் பூனை குட்டியுடன் படுத்திருக்கும்.
ஈர் முள் வேலி புலவு நாறு முன்றில்
எழுதி அன்ன கொடி படு வெருகின்
பூளை அன்ன பொங்கு மயிர் பிள்ளை
மதி சூழ் மீனில் தாய்வழிப்படூஉம், சிறுகுடி - அகம் 297/12-16
ஈர்கின்ற முள்வேலியினையுடைய புலால் நாறும் முன்றிலில்
ஓவியத்து எழுதினாற் போன்று மெலிந்து நீண்ட பூனையின்
பூளைப் பூவினைப் போன்ற விளங்குகின்ற மயிரினையுடைய குட்டிகள்
திங்களைச் சூழ்ந்துள்ள விண்மீன்கள் போலத் தம் தாயின் பின் சூழ்ந்திருக்கும், சீறூர்
23.
பாலைநிலத்துச் சீறூர்களில் வீட்டு முன்றிலில் புழுக்கிய ஊனைத் தேக்கிலையில் குவித்து உண்ணுவர்
சேக்குவள்-கொல்லோ தானே தேக்கின்
அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை
ஊன் புழுக்கு அயரும் முன்றில்
கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே - அகம் 315/15-18
தங்கியிருப்பாளோ அவள், தேக்கமரத்தின்
அகன்ற இலையில் குவிக்கப்பெற்ற, புதர் போலும் குடிசையின்
முன்றிலில் புழுக்கிய ஊனினை உண்ணும்
காட்டில்பொருந்திய வாழ்க்கையினையுடையாரது சீறூரின்கண்
24.
எளியோரின் வீட்டு முன்றிலில் பசுமாடு கட்டிக்கிடக்கும்.
நல்கூர் பெண்டின் புல்வேய் குரம்பை
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில் - அகம் 369/23,24
வறுமையுற்ற பெண்டினது புல்வேய்ந்த குடிலாய
ஒரு பசு கட்டியுள்ள ஒற்றைத் தூண் கொண்ட முன்றிலில்
25.
முன்றில் முள்வேலியால் அடைக்கப்பட்டிருக்கும். 
முள் மிடை வேலி
பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண் - புறம் 116/4-6
முள்ளால் நெருங்கிய வேலியையும்
பஞ்சு பரந்த முன்றிலையுமுடைய சிறிய மனையிடத்தின்கண்
26.
முன்றிலைச் சுற்றியுள்ள நெல்லி மரங்களே அதற்கு வேலியாக இருக்கும்.
மரை பிரித்து உண்ட நெல்லி வேலி
பரல் உடை முன்றில் அம் குடி சீறூர் - புறம் 170/1,2
மரையாவால் பிரித்துண்ணப்பட்ட நெல்லியாகிய வேலியையுடைத்தாய்
அதனது விதையாகிய பரல் உடைத்தாகிய முன்றிலினையுடைய அழகிய குடியையுடைய சிறிய ஊரின்கண்
27,
மரத்தின் கழிகளாலும், இலைதழைகளாலும் செய்யப்பட்ட படல் முன்றிலைச் சுற்றி இருக்கும்.
உடும்பு இழுது அறுத்த ஒடுங்காழ் படலை
சீறில் முன்றில் கூறுசெய்திடும்-மார் - புறம் 325/7,8
அறுத்தெடுத்த உடும்பின் தசையை, ஒடு மரத்தின் வலிய கழிகளால் செய்யப்பட்ட படல் சார்த்தப்பட்ட
சிறிய மனை முன்றிலில் பகுத்தளித்தற்பொருட்டு

படலை முன்றில் சிறுதினை உணங்கல் - புறம் 319/5

மேற்கண்ட கூற்றுகளினின்றும் நாம் பெறுவது : முன்றில் என்ற வீட்டு முன் பகுதி வீட்டுப் புழக்கத்தில் உள்ள பகுதி.
எனவே, வீட்டின் பல அன்றாடச் செயல்கள் அங்கு நடைபெறும். வீட்டுப் பொருள்களும் அங்கு இருக்கும். எனவே,
இப்பகுதி பாதுகாப்பான ஒரு வேலியைக் கொண்டிருக்கும் என்பது உறுதி. மேலே காணப்படும் எடுத்துக்காட்டுகள்
25,26,27 ஆகியவை இதனை உறுதிப்படுத்தும். இதுவே முன்றிலை, வீட்டு முற்றத்தினின்றும் வேறுபடுத்திக்
காட்டுவதாகும்.

 மேல்
 
  முன்னம் - (பெ) 1. கருத்து, எண்ணம், thought, intention
          2. குறிப்பு, sign, gesture
1.
நின் நசை வேட்கையின் இரவலர் வருகுவர் அது
முன்னம் முகத்தின் உணர்ந்து அவர்
இன்மை தீர்த்தல் வன்மையானே - புறம் 3/24-26
நின்பால் நச்சிய விருப்பத்தால் இரப்போர் வருகுவர், அங்ஙனம் வருவது
அவர் மனக்குறிப்பை அவர் முகத்தால் அறிந்து அவருடைய
வறுமையைத் தீர்த்தலை வல்ல தன்மையான்
2.
எல்லா நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய் போல் காட்டினை - கலி 61/7
"ஏடா! நீ உன் குறிப்பினால் ஏதோ ஒன்றைக் கூறவிரும்புவது போல் காட்டிக்கொள்கிறாய்!

 மேல்
 
  முன்னிலை - (பெ) 1. முன்னால் நிறுத்துவது, that which can be placed in front of you (as equal)
            2. முன்னால் நிற்றல், standing in the front
            3. படைகளின் முன்பகுதி, தூசிப்படை, the forefront of an army
1.
வாணன் வைத்த விழு நிதி பெறினும்
பழி நமக்கு எழுக என்னாய் விழு நிதி
ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே
அன்னாய் நின்னொடு முன்னிலை எவனோ - மது 203-206
வாணன் எனும் சூரன் வைத்த சீரிய பெரும்செல்வத்தைப் பெற்றாலும்,
பழி நமக்கு வரட்டும் என்றுகூறாய், (மாறாக)சீரிய செல்வப் பெருக்கை
வழங்கும் எண்ணத்துடன் புகழைமட்டும் விரும்புவாய்;
அத்தன்மையுடையாய், உன்னோடு முன்னிலையாக வைத்துக்கூறுவதற்கு யாதுளது?
2.
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த
பெரு வள கரிகால் முன்னிலை செல்லார் - அகம் 125/17,18
அச்சந்தரும் சேனையுடன் தான் விரும்பும் புலத்தில் தங்கிய 
பெரிய வளத்தையுடைய கரிகால் வளவன் முன் நிற்றலை ஆற்றாராய்
3.
ஒன்னார் முன்னிலை முருக்கி பின் நின்று
நிரையொடு வரூஉம் என் ஐ - புறம் 262/4,5
பகைவரது தூசிப்படையை முறித்து, பெயர்ந்து போகிறபோது தனது படைக்குப் பின்னே நின்று
நிரையுடனே வருகின்ற என் இறைவனுக்கு

 மேல்
 
  முன்னு - (வி) 1. கருது, think, contemplate
         2. அடை, சேர், reach, arrive at
         3. அணுகு, அருகில் செல், approach, go or come near
         4. எழு, பொங்கு, rise, swell
1.
இன்னே பெறுதி நீ முன்னிய வினையே - திரு 66
இப்பொழுதே பெறுவாய், நீ கருதிய வினையின் பயனை;
2.
வானத்து அன்ன வளம் மலி யானை
தாது எரு ததைந்த முற்றம் முன்னி - மலை 530,531
மழைமேகங்களைப் போன்ற செழுமை மிகுந்த யானைகள்(இருக்கும்),
(காய்ந்த)சாணத் துகள்கள் (யானை மிதிப்பதால்)சிதறிக்கிடக்கும் முற்றத்தை அடைந்து,
3.
பல் கனி நசைஇ அல்கு விசும்பு உகந்து
பெரு மலை விடர்_அகம் சிலம்ப முன்னி
பழன் உடை பெரு மரம் தீர்ந்து என கையற்று
பெறாது பெயரும் புள்ளினம் போல - புறம் 209/7-10
பல பழத்தையும் நச்சி, தாம் வாழ்வதற்கிடமாகிய ஆகாயத்தின்கண்ணே உயரப் பறந்து
பெரிய மலையின் முழை எதிரொலி முழங்கச் சென்று
அவ்விடத்துப் பழமுடைய பெரிய மரம் பழுத்து மாறிற்றாக வருந்தி
பழம் பெறாதே மீளும் புள்ளினத்தை ஒப்ப
4.
நளி கடல் முன்னியது போலும் தீம் நீர்
வளி வரல் வையை வரவு - பரி 12/7,8
செறிந்த நீரையுடைய கடல் பொங்கி வருவதைப் போன்றிருக்கிறது - இனிய நீரையுடைய
காற்றோடு கலந்து வரும் வையையின் வரவு;

 மேல்
 
  முன்னை - (பெ) 1. முற்காலம், பழமை, former times, antiquity
          2. முன்பக்கம், opposite side
1.
முன்னை மரபின் முதுமொழி முதல்வ - பரி 3/47
அநாதிக் காலமாய் வரும் மரபினையுடைய வேதத்திற்கு முதல்வனே!
2.
பாங்கு அரும் பாட்டம்_கால் கன்றொடு செல்வேம் எம்
தாம்பின் ஒரு தலை பற்றினை ஈங்கு எம்மை
முன்னை நின்று ஆங்கே விலக்கிய எல்லா நீ - கலி 116/1-3
"பக்கத்தில் இருக்கும் உள்ளே எளிதில் போகமுடியாத தோட்டத்திற்குக் கன்றோடு செல்கின்றபோது எம்
தாம்புக்கயிற்றின் ஒரு முனையைப் பிடித்துக்கொண்டவனாய், இங்கு எம்மை
முன்னால் நின்று தடுத்து நிற்பவனே! நீ

 மேல்
 
  முனாது - (பெ) முன்னே உள்ளது, that which is in front
எழு இனி வாழி என் நெஞ்சே முனாது
குல்லை கண்ணி வடுகர் முனையது
வல் வேல் கட்டி நன் நாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவர்_உடை நாட்டே - குறு 11/4-8
செல்ல)எழுவாயாக, இனியே! வாழ்க என் நெஞ்சே! முன்னே உள்ள
கஞ்சங்குல்லையைக் கண்ணியாக அணிந்த வடுகரின் இடத்ததாகிய
வலிய வேலையுடைய கட்டி என்பவனின் நல்ல நாட்டுக்கும் அப்பால்
மொழி வேறுபட்ட நாட்டில் உள்ளவராயினும்
(அங்குச்)செல்வதை எண்ணினேன் அவருடைய நாட்டினிடத்துக்கு

 மேல்
 
  முனி - (வி) 1. வெறு, hate, dislike
        2. சினம்கொள், be angry
1.
கந்து முனிந்து உயிர்க்கும் யானையொடு பணை முனிந்து
கால் இயல் புரவி ஆலும் ஆங்கண் - புறம் 178/1,2
கம்பத்தை வெறுத்து நெட்டுயிர்ப்புக்கொள்ளும் யானயோடு, பந்தியை வெறுத்து
காற்றுப்போலும் இயல்புடைய குதிரை ஆலிக்கும் அவ்விடத்து
2.
மகளிரை மைந்து உற்று அமர்பு_உற்ற மைந்தர்
அகலம் கடிகுவேம் என்பவை யார்க்கானும்
முடி பொருள் அன்று முனியல் முனியல் - பரி 20/91-93
மகளிர்மேல் காமமயக்கம் கொண்டு அவரை விரும்பிச் சென்ற ஆடவரின்
மார்பினைக் கடிந்து ஒதுக்குவோம் என்று சொல்வது குலமகளிர் யாருக்கேனும்
முடிந்த முடிவு அன்று, சினங்கொள்ளவேண்டாம்,

 மேல்
 
  முனிவு - (பெ) 1. வெறுப்பு, dislike, aversion
          2. கோபம், anger
          3. வருத்தம், suffering
          
1.
வாழ்தல், இனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னாது என்றலும் இலமே - புறம் 192/4-6
வாழ்தலை இனிது என்று உவந்ததும் இலம், ஒரு வெறுப்பு வந்தவிடத்து
இன்னாதென்று இருத்தலும் இலம்
2.
முனிவு இல் பரத்தையை என் துறந்து அருளாய் - நற் 230/6
உன்மேல் கோபம் இல்லாத உன் பரத்தைக்கு, என்னைத் துறந்து, அருள்செய்வாய்!
3.
முனிவு இகந்திருந்த முது வாய் இரவல - சிறு 40
(வழி)வருத்தம் தீர்ந்திருந்த பேரறிவு வாய்க்கப்பெற்ற இரவலனே,

 மேல்
 
  முனை - 1. (வி) 1. வெறு, dislike, hate
          2. வீசு, blow as a wind
      - 2. (பெ) 1. போர்முனை, warfront
           2. பகைவர் நாடு, enemy country
           3. ஊர் அல்லது தெருவின் இறுதி, either end of a village or street
           4. பகை, enmity
1.1.
கொண்டல் இடு மணல் குரவை முனையின்
வெண் தலை புணரி ஆயமொடு ஆடி - அகம் 20/7,8
கீழ்க்காற்று கொணர்ந்த மணலில் குரவைக்கூத்து ஆடி, அது வெறுத்துப்போய்,
வெள்ளிய நுரையைத் தலையில் கொண்ட கடல் அலைகளில் தோழியரோடு ஆடி,

ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம்
மா இரும் பெடையோடு இரியல் போகி - பட் 55,56
(நெய் முதலியவற்றின்)மணமுள்ள புகையை வெறுத்து, குயில்கள் தம்முடைய
கரிய பெரிய பேடைகளுடன் விரைவாக(விழுந்தடித்து)ப் பறந்தோடி,

பணை நிலை முனைஇய பல் உளை புரவி - நெடு 93
கொட்டிலில் நிற்பதை வெறுத்த நிறைந்த பிடரிமயிரையுடைய குதிரைகள்
1.2
வரை மிசை இழிதரும் அருவியின் மாடத்து
வளி முனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில் - பதி 47/3,4
மலைமேலிருந்து விழும் அருவியினைப் போல, மாடங்களின் மேலிருந்து
காற்று வீசி அசையும் கொடிகள் ஆடி அசையும் தெருவில்
(ச.வே.சு.உரை)
2.1
முட்டாது கொடுத்த முனை விளங்கு தட கை - சிறு 105
குறையாமல் கொடுத்த, போர்முனையில் விளங்கும் பெருமையுடைய கையினையும்
2.2
முனை பாழ்படுக்கும் துன் அரும் துப்பின் - குறி 128
-பகைவர் நாட்டைப் பாழாக்கும் நெருங்குவதற்கு முடியாத வலிமையையுடைய,
2.3
முனை ஊர்
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்
தேர் வண் மலையன் - நற் 100/7-9
ஊர் முனையிலுள்ள
பல பசுக்களின் நீண்ட வரிசையை வில்லினால் போரிட்டுக் கவர்ந்து செல்லும்
தேர்களைக் கொடையாகக் கொடுக்கும் மலையன்
2.4
முனை எழ
தெவ்வர் தேய்த்த செ வேல் வயவன்
மலி புனல் வாயில் இருப்பை அன்ன - நற் 260/5-7
பகை மிகுதலாலே
ஆண்டு வந்த பகைவரை அழித்த சிவந்த வேற்படையையுடைய வீரனாகிய விரான் என்பவனது
நிறைந்த புனல்வாயிலை அடுத்து இருப்பையூர் போன்ற
(பின்னத்தூரார் உரை)

 மேல்