|
இடப்பக்கமுள்ள சொல்லின் மேல் சொடுக்கவும்
பூ - 1. (வி) 1. மலர், blossom, bloom, flower
2. தோன்று, appear, manifest
3. வளம்பெறு, பொலிவடை, flourish, prosper
4. மின்னு, shine
5. இருதுவாகு, மாதவிடாய் கொள், menstruate
6. சிறந்து விளங்கு, நிறைந்து விளங்கு, be excellent, be full
7. பல் பொருள், different shades of meaning
2. (பெ) 1. மலர், flower
2. பூவேலைப்பாடு, floral design
3. புகர், யானையின் நெற்றிப்புள்ளி, Spots on an elephant's forehead
4. வனப்பு, பொலிவு, Richness, fertility, flourishing condition
5. மென்மை, softness, tenderness
1.
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்
திண் தேர் பொறையன் தொண்டி - நற் 8/8,9
கண் போன்ற நெய்தல் பூ, நெற்போரில் பூத்திருக்கும்
திண்ணிய தேரைக்கொண்ட பொறையனின் தொண்டிப் பட்டினத்துச்
1.2
காழ் சோர் முது சுவர் கணம் சிதல் அரித்த
பூழி பூத்த புழல் காளாம்பி - சிறு 133,134
(ஊடு)கழிகள் (ஆக்கையற்று)விழுகின்ற பழைய சுவரிடத்தெழுந்த திரளான கரையான் அரித்துக் குவித்த
மண்துகள்களில் தோன்றின - உட்துளை(கொண்ட) காளான்:
1.3
பல் மீன் நாப்பண் திங்கள் போல
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை - பதி 90/17,18
பல விண்மீன்களின் நடுவே விளங்கும் திங்களைப் போல
வளம்பெற்ற சுற்றத்தாரோடு பொலிவுடன் திகழ்கிறாய்;
மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட
நயந்தோர் தேஎம் நன் பொன் பூப்ப - பெரும் 423,424
(தன்னை)எதிர்ப்போரின் ஊர்களிலுள்ள (மக்கள் கூடும்)பொதுவிடங்கள் பாழ்படவும்,
(தன்னிடம்)நயந்துகொண்டவர் நாடுகள் நல்ல பொன் பூத்துத் திகழவும்,
1.4
மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய
வானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல் எஞ்ஞான்றும் - பரி 16/36,37
விண்மீன்கள் முத்தாரமாய் மின்னுகின்ற அகன்ற ஆகாய கங்கை பெருக்கெடுத்தோடும்
வானம் பெயர்ந்து இங்கே பக்கத்தில் வந்தது போன்றிருப்பது எந்நாளுமே
மீன் பூத்து அவிர் வரும் அந்தி வான் விசும்பு போல் - கலி 103/13
விண்மீன்கள் தோன்றி ஒளிசிந்தும் அந்திக்காலத்து மேகத்தையுடைய சிவந்த ஆகாயம் போன்று
1.5
பூத்தனள் நீங்கு என பொய் ஆற்றால் தோழியர் - பரி 16/24
அவள் பூப்பெய்தியிருக்கிறாள், நீங்குக என்று தோழியர் பொய்யாகக் கூறினராக,
1.6
புல வரை அறியாத புகழ் பூத்த கடம்பு அமர்ந்து - பரி 19/2
அறிவின் எல்லையால் அறியப்படாத புகழ் நிறைந்த கடம்ப மரத்தில் பொருந்தி,
1.7
ஐ வளம் பூத்த அணி திகழ் குன்றின் மேல்
மை வளம் பூத்த மலர் ஏர் மழை கண்ணார்
கை வளம் பூத்த வடுவொடு காணாய் நீ
மொய் வளம் பூத்த முயக்கம் யாம் கைப்படுத்தேம்
மெய் வளம் பூத்த விழை_தகு பொன் அணி
நைவளம் பூத்த நரம்பு இயை சீர் பொய் வளம்
பூத்தன பாணா நின் பாட்டு - பரி 18/15-21
ஐந்து வளங்களும் பொலிந்து விளங்கும் அழகு பொருந்திய திருப்பரங்குன்றத்தில்,
நிரம்ப மை தீட்டப்பெற்ற, மலரின் அழகு பொருந்திய, குளிர்ச்சியையுடைய கண்களையுடைய மகளிரின்
கைநகங்கள் ஏற்படுத்திய வடுக்களைப் பார்க்கவில்லையா நீ?
அந்தப் பரத்தையரின் இறுகல் மிகுந்த முயக்கத்தை நாம் நன்கு அறிந்துகொண்டோம்,
மேனி மிகவும் பொலிய விரும்பத்தகுந்த பொன் அணிகலன்களை அணிந்திருப்பவனே!
நைவளம் என்னும் பண் எழுகின்ற யாழ்நரம்புக்கு இயைந்த தாளத்துடன், பொய்யை மிகுதியாய்த்
தோற்றுவிக்கிறது, பாணனே! உன் பாட்டு;
நிலம் பூத்த மரம் மிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள
நலம் பூத்த நிறம் சாய நம்மையோ மறந்தைக்க
கலம் பூத்த அணியவர் காரிகை மகிழ் செய்ய
புலம் பூத்து புகழ்பு ஆனா கூடலும் உள்ளார்-கொல் - கலி 27/9-12
நிலத்திற்கு அழகுசெய்யும் மரத்தின் மேலிருந்து நிமிர்ந்து கூவும் குயில்கள் என்னை எள்ளி நகையாட,
நலம் சிறந்த என் மேனியழகு தன் பொலிவு குன்ற, நம்மைத்தான் அவர் மறந்துவிட்டுப்போகட்டும்,
அணிகளால் அழகுபெற்ற மகளிர் கண்ணுக்கு இனிதாய்த் தோன்றி மகிழ்ச்சியூட்ட,
நாடே பொலிவுபெறுகின்ற, புகழ்ந்து முடியாத கூடல்விழாவையும் அவர் நினைத்துப்பாராரோ?
2. 1
புன் கொடி முசுண்டை பொறி புற வான் பூ
பொன் போல் பீரமொடு புதல்_புதல் மலர - நெடு 13,14
புல்லிய கொடியையுடைய முசுட்டையில் திரண்ட புறத்தையுடைய வெண்ணிறப் பூ
பொன் போன்ற (நிறமுள்ள)பீர்க்குடன் புதர்கள்தோறும் மலர,
2.2
கோபத்து அன்ன தோயா பூ துகில் - திரு 15
தம்பலப்பூச்சியின் செந்நிறத்தை ஒத்த, சாயம் தோய்க்கப்படாத பூவேலைப்பாடமைந்த கிலினையும்,
2.3
மா முக முசு கலை பனிப்ப பூ நுதல்
இரும் பிடி குளிர்ப்ப வீசி - திரு 303,304
கரிய முகத்தையுடைய முசுக்கலைகளும் நடுங்க, புகரை அணிந்த மத்தகத்தையுடைய
பெரிய பிடியானை குளிரும்படி வீசி
2.4
மயிர் குறை கருவி மாண் கடை அன்ன
பூ குழை ஊசல் பொறை சால் காதின் - பொரு 29,30
பொலிவினையுடைய மகரக்குழையின் அசைவினைப் பொறுத்தல் அமைந்ததும் ஆகிய காதினையும்,
2.5
உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து
புகர் வாய் குழிசி பூ சுமட்டு இரீஇ
நாள் மோர் மாறும் நன் மா மேனி - பெரும் 158-160
உறையினால் கெட்டியாகத் தோய்ந்த இளம் புளிப்பான தயிரைக் கடைந்து, வெண்ணையை எடுத்து,
(தயிர்)புள்ளிபுள்ளியாகத் தெரிந்த வாயையுடைய மோர்ப்பானையை மெல்லிய சுமட்டின் மேல் வைத்து,
அன்றைய மோரை விற்கும், நல்ல மாமை நிறத்தையுடைய மேனியையும்
மேல்
பூசல் - (பெ) 1. ஆரவாரம், அமளி, clamour, loud uproar
2. தகராறு, சிறுசண்டை, quarrel, dispute
3. வருத்தம், துயரம், sorrow, distress
1.
தினை விளை சாரல் கிளி கடி பூசல் - மது 291
தினை விளையும் மலைப்பக்கத்தில் கிளியை ஓட்டும் ஆரவாரமும்,
2.
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்
தேம் கமழ் ஐம்பால் பற்றி என் வயின்
வான் கோல் எல் வளை வௌவிய பூசல்
சினவிய முகத்து சினவாது சென்று நின்
மனையோட்கு உரைப்பல் என்றலின் - நற் 100/3-7
ஆழமான நீரில் முளைத்த ஆம்பல் பூவையுடைய குளிர்ந்த துறையையுடைய ஊரன்
இனிதாய்க் கமழும் என் கூந்தலைப் பற்றி இழுத்து, என் கையிலுள்ள
நீண்டு திரண்டு ஒளிபொருந்திய வளையல்களைக் கவர்ந்த தகராறினால்
வெளியில் கோபங்கொண்ட முகத்தோடு, உள்ளத்தில் கோபமில்லாது, சென்று உனது
மனைவிக்கு உரைப்பேன் என்று சொன்னதினால்,
3.
கண் உறு பூசல் கை களைந்த ஆங்கே - கலி 34/24
கண்ணுக்குற்ற வருத்தத்தைக் கைகள் விரைந்து சென்று துடைப்பது போல்
மேல்
பூசு - (வி) 1. நீரால் அலம்பு, wash with water
2. ஒரு பரப்பின் மேல் தடவு, besmear, anoint, rub, daub, spread on, plaster;
1.
புலாஅல் கையர் பூசா வாயர் - அகம் 265/18
புலால் நீங்காத கையினராய், கழுவாத வாயினராய்
2.
பொதிர்த்த முலை இடை பூசி சந்தனம்
உதிர்த்து பின் உற ஊட்டுவாள் விருப்பும் - பரி 21/25,26
பருத்தெழுந்த தன் முலையின்மேல் சந்தனத்தைப் பூசி, பின் காய்ந்துபோன அச் சந்தனத்தை
உதிர்த்துவிட்டு மேலும் நிறைய சந்தனத்தைப் பூசுபவளின் காம விருப்பமும்,
மேல்
பூசை - (பெ) பூனை, cat
இந்திரன் பூசை இவள் அகலிகை இவன்
சென்ற கவுதமன் சினன் உற கல் உரு
ஒன்றிய படி இது என்று உரைசெய்வோரும் - பரி 19/50,52
இந்திரன் இந்தப் பூனை, இவள் அகலிகை , இவன்
வெளியில் சென்ற கவுதமன், இவன் சினங்கொள்ள கல்லுருவம்
அடைந்த வகை இது என்று விளக்கிச் சொல்வோரும்,
மேல்
பூட்கை - (பெ) ஒரு கொள்கையை உறுதியாகப் பற்றிக்கொண்டிருத்தல்,
resolution to hold strongly some principle
ஓடா பூட்கை பிணிமுகம் வாழ்த்தி - திரு 247
பின்வாங்காத கொள்கையை மேற்கோளாகவுடைய பிணிமுகம் என்னும் யானையை வாழ்த்தி,
ஓடா பூட்கை உறந்தையும் வறிதே - சிறு 83
(தன் குடிகள் தன்னைவிட்டு)அகலோம் என மேற்கொண்ட உறுதியையும் உடைய உறந்தையும் சிறிதே
மேல்
பூட்டு - 1. (வி) 1. வண்டியில் அல்லது ஏரில் காளைகள் அல்லது குதிரைகளைப் பிணை,
attach, as horses or bullocks to a carriage or plough; to yoke
2. நகை முதலியன அணி, அணிவி, put on or make one put on, as rings jewels, garlands,
3. மாட்டு, கட்டு, lock, fasten, hook, fix
- 2. (பெ) 1. கட்டிய கயிறு, the rope that is fastened
2. தேர் அல்லது வண்டியில் குதிரை அல்லது மாடுகளைப் பூட்டியிருத்தல்
the fastening of horses or bullocks to the chariot or cart
3. நாணேற்றுதல், fixing of an arrow in the bow
1.1
பால் புரை புரவி நால்கு உடன் பூட்டி - பொரு 165
பாலை ஒத்த (நிறத்தினையுடைய)குதிரைகள் நான்கினைச் சேர இணைத்து
நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டி - பெரும் 198
நடை பயின்ற பெரிய எருதுகளை முற்றத்தே நுகத்தைப் பூட்டிக்கொண்டு சென்று
மோகூர் மன்னன் முரசம் கொண்டு
நெடுமொழி பணித்து அவன் வேம்பு முதல் தடிந்து
முரசு செய முரச்சி களிறு பல பூட்டி
ஒழுகை உய்த்தோய் - பதி 44/14-17
பகை மன்னனாகிய மோகூர் மன்னனின் முரசத்தைக் கைப்பற்றி,
அவன் கூறிய வஞ்சினத்தை முறித்து அவனைப் பணிவித்து, அவனது காவல்மரமாகிய வேம்பினை அடியோடு வீழ்த்தி
முரசு செய்வதற்காகத் துண்டுகளாக வெட்டி, யானைகள் பலவற்றை வண்டியில் பூட்டி
இழுத்துக்கொண்டு போகச் செய்தவனே
வெள் வாய் கழுதை புல்_இனம் பூட்டி
பாழ் செய்தனை அவர் நனம் தலை நல் எயில் - புறம் 15/2,3
வெளிய வாயையுடைய கழுதையாகிய புல்லிய நிரையைப் பூட்டி உழுது
பாழ் படுத்தினாய், அவருடைய அகலிய இடத்தையுடைய நல்ல அரண்களை
1.2.
இஞ்சி வீ விராய பைம் தார் பூட்டி - பதி 42/10
இஞ்சியினையும் பூவினையும் கலந்த வாடாத மாலையை அணிந்து,
ஒண் நுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டி - பதி 48/2
ஒளிவிடும் நெற்றியையுடைய விறலிகளுக்குப் பொன்னாற் செய்த மாலைகளை அணிவித்து,
1.3.
மழ விடை பூட்டிய குழாஅய் தீம் புளி - அகம் 311/10
இளைய எருதுகளின் கழுத்தில் மாட்டியுள்ள மூங்கில் குழாயிலுள்ள இனிய புளிச்சோற்றை
2.1
கவணை அன்ன பூட்டு பொருது அசாஅ
உமண் எருத்து ஒழுகை - குறு 388/3,4
கவண் கயிற்றைப் போன்ற கழுத்தில் மாட்டிய பூட்டுக்கயிறு தேய்த்தலால் வருந்தும்
உமணர்களின் காளைகள் பூட்டிய வண்டிகளின் தொகுதியை
2.2
வேட்டோர் திறத்து விரும்பிய நின் பாகனும்
நீட்டித்தாய் என்று கடாஅம் கடும் திண் தேர்
பூட்டு விடாஅ நிறுத்து - கலி 66/23-25
நீ நாட்டம்கொண்டவரிடம் செல்வதையே விரும்பிய உன் பாகனும்
இங்கே நீண்ட நேரம் இருந்துவிட்டாய் என்று செலுத்த முற்படுவான்; உன் விரைவாகச் செல்லும் திண்ணிய தேர்
அவிழ்த்துவிடாமல் நிறுத்தியுள்ளது.
2.3
நறவு உண் மண்டை நுடக்கலின் இறவு கலித்து
பூட்டு அறு வில்லின் கூட்டு முதல் தெறிக்கும் - அகம் 96/1,2
கள்ளுண்ட கலம் கழுவப்பெறுதலின் (அந்நீரையுண்ட) இறா மீன் செருக்கி
நாணேற்றுதல் அறுந்துபோன வில்லினைப் போல் நெற்கூடுகளின் அடிகளில் துள்ளிவிழும்
மேல்
பூண் - 1. (வி) 1. வண்டியில் அல்லது ஏரில் காளைகள் அல்லது குதிரைகளைப் பிணை,
attach, as horses or bullocks to a carriage or plough; to yoke
2. இறுகக்கட்டு, fasten tightly
3. அணி, put on, wear
4. (எதிர்ப்பினை)மேற்கொள், take a vow to oppose
5. கட்டுப்பாட்டுக்கு உட்படு, be fettered
6. பூசு, besmear, anoint
7. உறுதி மேற்கொள், undertake a vow
- 2. (பெ) 1. அணி, ornament, jewel
2. வளையம், ring, ferrule
1.1
பூண்க மாள நின் புரவி நெடும் தேர் - பதி 81/32
பூட்டுக! உன் புரவிகளையுடைய நெடிய தேரினை!
1.2
இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்
விரவு வரி கச்சின் பூண்ட மங்கையர் - முல் 46,47
இரவைப் பகலாக்கும், திண்ணிய கைப்பிடியையுடைய ஒளிவிடும் வாளை
விரவின நிறங்களையுடைய கச்சினால் இறுகக்கட்டிய மங்கையர்,
1.3
ஒருத்தி கணம்_கொண்டு அவை மூச கை ஆற்றாள் பூண்ட
மணம் கமழ் கோதை பரிபு கொண்டு ஓச்சி
வணங்கு காழ் வங்கம் புகும் - கலி 92/45-47
ஒருத்தி, கூட்டமாய்ச் சேர்ந்துகொண்டு வண்டுகள் மொய்க்க, கையினால் விரட்டமாட்டாதவளாய், அணிந்துள்ள
மணங்கமழும் மாலையை அறுத்துக்கொண்டு அதனை ஓங்கிக்கொண்டு
வளைந்த உறுதியான தண்டையுடைய படகுக்குள் புகுந்துகொண்டாள்;
1.4
மிகாஅ மறலிய மே வலி எல்லாம்
புகாஅ எதிர் பூண்டாரும் தாம் - பரி 23/78,79
மேருமலையை மோதித்தாக்க மிக்கு வந்து மோதிய காற்றுத்தேவனின் மேம்பட்ட வலிமை எல்லாம்
அந்த மலையில் புகாதபடி எதிர்ப்பினை மேற்கொண்டாரும் ஆதிசேடனே!
1.5
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்
மூப்பு உடை முது பதி தாக்கு அணங்கு உடைய
காப்பும் பூண்டிசின் கடையும் போகலை - அகம் 7/3-5
சுற்றித்திரியும் விளையாட்டுத் தோழியருடன் எவ்விடத்தும் செல்லாதிருப்பாய்,
மிகப் பழமை வாய்ந்த இந்த மூதூர் வருத்தும் தெய்வங்களை உடையது.
(எனவே நீ)காவலுக்கு உட்பட்டிருக்கவேண்டும், வீட்டின் வெளி வாசல் வரைக்கும் போகக்கூடாது.
1.6
பூணா_ஐயவி தூக்கிய மதில - பதி 16/4
பூசிக்கொள்ளும் ஐயவி அல்லாத ஐயவித்துலாம் என்னும் மரம் தொங்கவிடப்பட்டிருக்கும் உள் மதிலில் உள்ள
1.7
நிலை உயர் கடவுட்கு கடம் பூண்டு தன் மாட்டு
பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக - கலி 46/16,17
உயர்நிலைத் தெய்வங்களுக்கு நேர்ந்துகொள்ளும் உறுதியினை மேற்கொண்டு, அவனுக்காகப்
பலவாறாக சிந்தனைகளை ஓடவிடும் மனத்தோடு காத்திருந்து வருந்தினேன் நான் அன்றோ!
2.1
பொலம் கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை - அகம் 16/9
பொன் அணிகலன்களைச் சுமந்த, பூண்கள் தாங்கிய தன் இளம் கொங்கைகளில் -
போர் வல் யானை பொலம் பூண் எழினி - அகம் 36/16
போரில் வல்ல யானையை உடைய பொன் அணிகள் அணிந்த எழினி,
2.2
பூண் வனைந்து அன்ன பொலம் சூட்டு நேமி - குறு 227/1
புதிய வளையத்தைப் பதித்ததைப் போன்ற பொன் விளிம்பினையுடைய சக்கரங்களின்
மேல்
பூதம் - (பெ) 1. நில, நீர் தீ, காற்று, வானம் ஆகிய பஞ்சபூதம், five elements of nature.
2. பெரிய உருவமுடைய ஒன்று, anything that is huge or monstrous
3. பஞ்சபூதங்களின் கடவுள், presiding deities of the five elements
1.
வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம்
வெம் வாய் பெய்த பூத நீர் சால்க என
புலவு களம் பொலிய வேட்டோய் - புறம் 372/10-12
திருமண விழாவில் நிகழ்த்துவது போல் விருந்தினக்கு எல்லாம்
வெவ்விய வாய் வழியாகப் பெய்த பூதங்களின் பொருட்டான நீர் அமைவதாக என்று சொல்லி நீரைத் தெளித்து
புலால் நாறும் போர்க்களம் விளங்க களவேள்வி செய்தவனே
வேதத்து மறை நீ பூதத்து முதலும் நீ - பரி 3/66
வேதங்களுள் மந்திரச் சொல் நீ! பூதங்களுள் முதன்மையான வானமும் நீ!
2.
துணங்கை அம் பூதம் துகில் உடுத்தவை போல் - பெரும் 235
துணங்கைக் கூத்தில் அழகிய பூதங்கள் (வெண்மையான)ஆடையை உடுத்தி நின்றவை போல
3.
பூதம் காக்கும் புகல் அரும் கடி நகர் - பட் 57
பூதங்கள் (வாசலில்)காத்துநிற்கும் நுழைவதற்கு அரிய காவல் உள்ள (காளி)கோட்டத்தில்
மேல்
பூரி - (வி) நிரப்பு, fill
பூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு எறிய - பரி 12/68
பூவின் மணத்தையும் அழகையும் கொண்ட, அரக்கு வண்ணமூட்டப்பட்ட நீரால் நிறைக்கப்பெற்ற, வட்டினை எறிய
மேல்
பூரிமம் - (பெ) ஒரு தெருவின் பக்கம், சிறை, side ofa street
உயர் பூரிம விழு தெருவில் - மது 18
உயர்ந்த (இரு)பக்கங்களையும் உடைய சீரிய தெருவிலிருக்கும்,
மேல்
பூரியர் - (பெ) கீழ்மக்கள், base or low people
பூரிய மாக்கள் உண்பது மண்டி - பரி 6/48
கீழ்மக்கள் உண்டு எஞ்சிய பகுதிகளும்
மேல்
பூவல் - (பெ) செம்மண், red soil
தரு மணல் தாழ பெய்து இல் பூவல் ஊட்டி - கலி 114/12
புதிதாய்த் தருவிக்கப்பட்ட மணலைக் கீழே பரப்பி, வீட்டுக்குச் செம்மண் பூசி,
மேல்
பூவன் - (பெ) பூவின்மேலிருப்பவன், நான்முகன், Lord Brahma who is on a flower
புலமும் பூவனும் நாற்றமும் நீ - பரி 1/49
வேதமும், பூவின்மேலுள்ளோனாகிய நான்முகனும், பூவின் நாற்றம் போன்ற நான்முகனின் படைப்புத்தொழிலும் நீ!
மேல்
பூவை - (பெ) 1. பெண், girl
2. நாகணவாய்ப்புள், கிளியைக்காட்டிலும் நன்கு பேசக்கூடிய பறவை, bush mynah
3. காயா என்னும் ஒரு மரவகை, Oblong cordate-leaved bilberry, Memecylon malabaricum
1,2
இது என் பாவைக்கு இனிய நன் பாவை
இது என் பைம் கிளி எடுத்த பைம் கிளி
இது என் பூவைக்கு இனிய சொல் பூவை என்று
அலமரு நோக்கின் நலம் வரு சுடர் நுதல்
காண்-தொறும் காண்-தொறும் கலங்க
நீங்கினளோ என் பூ கணோளே - ஐங் 375
இது என் பாவை போன்றவளுக்குப் பிடித்த பாவை;
இது என் பச்சைக்கிளி போன்றவளுக்குப் பிடித்த பச்சைக்கிளி;
இது என் பூவை போன்றவளுக்குப் பிடித்த பூவை என்று
சுழல்கின்ற பார்வையினையும், அழகு மிகுந்த ஒளிவிடும் நெற்றியையும் உடையவளை எண்ணி,
இவற்றைக் காணும்போதெல்லாம் மனம் கலங்குமாறு
எனைவிட்டுப் பிரிந்து சென்றாளோ என் பூப்போன்ற கண்ணையுடையவள்.
3.
எரி மலர் சினைஇய கண்ணை பூவை
விரி மலர் புரையும் மேனியை - பரி 1/6,7
எரிகின்ற நெருப்பைப்போன்ற தாமரை மலரை வென்ற கண்களையுடையவன்! காயாம்பூவின்
மலர்ந்த மலரைப் போன்ற மேனியினன்!
பறவா பூவை பூவினோயே - பரி 3/73
பறக்காத பூவையாகிய காயாம்பூவின் நிறத்தவனே!
கார் மலர் பூவை கடலை இருள் மணி
அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை - பரி 13/43,44
கருமேகம், காயாமலர், கடல், இருள், நீலமணி
ஆகிய இவை ஐந்தும் சேர்ந்த நிறத்தினை ஒத்த அழகு விளங்கும் மேனியையுடைவன்!
மணி மருள் பூவை அணி மலர் இடையிடை - அகம் 134/3
நீல மணியை ஒக்கும் காயாவின் அழகிய மலர்களின் இடையிடையே
மேல்
பூழ் - (பெ) காடை, quail
பூழ் கால் அன்ன செம் கால் உழுந்தின் - குறு 68/1
குறும்பூழ்ப் பறவையின் கால் போன்ற சிவந்த அடித்தண்டை உடைய உழுந்தின்
கரும் தாள் மிடற்ற செம் பூழ் சேவல் - அகம் 63/7
கரிய மாலை போட்டது போன்ற கழுத்தையுடைய காடையின் சேவல்
பொறி புற பூழின் போர் வல் சேவல் - புறம் 321/1
புள்ளி பொருந்திய முதுகினையுடைய குறும்பூழ்ப்பறவையின் சேவல்
மேல்
பூழி - (பெ) 1. புழுதி, dust
2. பொடி, துகள், powder
1.
கடுங்கண் யானை நெடும் கை சேர்த்தி
முடங்கு தாள் உதைத்த பொலம் கெழு பூழி - அகம் 63/4,5
கடுமையான யானை தன் நீண்ட கையைச் சேர்த்து
வளைந்த காலால் உதைத்த பொன்துகள் கிளம்பும் புழுதியை,
2.
விசையம் கொழித்த பூழி அன்ன
உண்ணுநர் தடுத்த நுண் இடி நுவணை - மலை 444,445
சர்க்கரையை(ச் சுளகில்) கொழித்து (குருமணல் போன்ற பகுதியை நீக்கி ஒதுக்கிய)பொடியைப் போல,
(திகட்டலால்)உண்பாரைத் தடுக்கும் நுண்ணிதாக இடிக்கப்பட்ட தினைமாவையும் (பெறுவீர்);
மேல்
பூழியர் - (பெ) பூழி நாட்டைச் சேர்ந்தவர், the people of a country called pUzhi
மரம் பயில் சோலை மலிய பூழியர்
உருவ துருவின் நாள் மேயல் ஆரும் - நற் 192/3,4
மரங்களடர்ந்த சோலை நிரம்பப் பூழியரின்
நல்ல நிறங்கொண்ட செம்மறிஆட்டு மந்தையைப் போல அன்றைக்குரிய இரையைத் தேடி உண்ணும்
யார் அணங்கு உற்றனை கடலே பூழியர்
சிறு தலை வெள்ளை தோடு பரந்து அன்ன - குறு 163/1,2
யாரால் பயந்துபோயிருக்கின்றாய்! கடலே! பூழியரின்
சிறிய தலைகளைக் கொண்ட வெள்ளாட்டுக்கூட்டம் பரவியதைப் போன்று
வேழ வெண் புணை தழீஇ பூழியர்
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்து ஆங்கு - அகம் 6/8,9
வேழக் கரும்பினாலான வெண்மையான தெப்பத்தில் ஏறி, பூழியரின்
குளத்தை நாடிச் செல்லும் யானையைப் போன்று முகமலர்ச்சியுற்று,
கல் உயர் கடத்து இடை கதிர் மணி பெறூஉம்
மிதி அல் செருப்பின் பூழியர் கோவே - பதி 21/22,23
கற்கள் உயர்ந்த காட்டுவெளியில் கதிர்விடும் மணிகளைப் பொறுக்கியெடுக்கின்ற
மிதிக்கும் செருப்பு அல்லாத செருப்பு என்னும் மலையினையுடைய பூழியரின் அரசே!
புகாஅர் செல்வ பூழியர் மெய்ம்மறை - பதி 73/12
பூழியர் கோவே பொலம் தேர் பொறைய - பதி 84/6
எழாஅ துணை தோள் பூழியர் மெய்ம்மறை - பதி 90/27
ஊழி வாழி பூழியர் பெருமகன் - புறம் 387/28
பூழிநாடு என்பது மேலைக்கடற்கரைப்பகுதியைச் சேர்ந்த ஒரு நாடு.
மலபார் மாவட்டத்தில் பொன்னானி தாலூகாவின் தென் பகுதி இன்றும் பூழி நாடு எனப்படுகிறது.
பூழியர் என்பவர் சங்ககால இடையர் குல மக்களில் ஓர் பிரிவு ஆவர்.
பூழியர் செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் மேய்த்துவந்தனர்.நற் 192,குறு 163
அத்துடன் யானைகளைப் பழக்கும் தொழிலையும் செய்துவந்தனர்.அகம் 6
பூழிநாட்டுச் செருப்புமலைப் பாதையில் வயிரக்கற்கள் கிடைக்கும் பதி 21/23
பல்யானைச் செல்கெழு குட்டுவன் [பதி 21], களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் [பதி-பதிகம் 4]
செல்வக் கடுங்கோ வாழியாதன் [புறம் 387/28] பெருஞ்சேரல் இரும்பொறை [பதி-73/13],
இளஞ்சேரல் இரும்பொறை [பதி-84,90] ஆகியோர் பூழிநாட்டைக் கைப்பற்றி ஆண்ட சேரமன்னர்கள்
எனத் தெரியவருகின்றனர்.
மேல்
பூழில் - (பெ) அகில், eaglewood
சாந்த மரத்த பூழில் எழு புகை - ஐங் 212/1
சந்தனமரக் காட்டிலுள்ள அகில் கட்டைகளை எரிக்கும்போது எழுகின்ற புகை
மேல்
பூளை - (பெ) 1. இலவம்பஞ்சு, red silk cotton
2. ஒரு செடி வகை, அதன் பூ, Javanese wool plant, Aerua javanica
ஒருவர் நோயுற்ற கண்ணினராக இருந்தால், தூங்கும்போது அவரின் கண்களில் ஒருவித
வெண்மையான பசை சுரக்கும். அது கண்களின் ஓர இடுக்குகளின் வழியாகப் பிதுக்கிக்கொண்டு
ஒரு சிறு வெண்மையான உருண்டையாகத் தெரியும். அதனை இப்போது பீளை என்பர்.
அதுவே பூளை எனப்படும்.
முற்றின இலவங்காய் வெடித்து, அந்த வெடிப்புகளின் வெளியே வெண்பஞ்சு உருண்டையாக
பிதுக்கிக்கொண்டு தெரியவரும். அதனை இங்கு பூளை என்கிறார் பெரும்பாணாற்றுப் புலவர்.
1.
நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த
பூளை அம் பசும் காய் புடை விரிந்து அன்ன
வரி புற அணில்லொடு கருப்பை ஆடாது - பெரும் 83-85
நீண்ட தாளினையுடைய இலவமரத்தின் அசைகின்ற கொம்பு காய்த்த
பஞ்சினையுடைய அழகிய பசிய காயின் முதுகு விரிந்து தோன்றினதைப் போன்ற
வரியை முதுகிலே உடைய அணிலோடு, எலியும் திரியாதபடி,
2.
wool plant, aerua எனப்படும் இந்தச் செடிவகை தமிழில் பூளை எனப்படுகிறது. கண்களின் ஓரங்களில்
படியும் பீளை என்ற ஒருவித வெண்ணிறக் கழிவுப்பொருளே பூளை. இது பூளைப்பூவைப் போல் இருப்பதால்
இப்பெயர் பெற்றது எனலாம்.
பொங்கல் திருவிழாவின்போது இது காப்புக் கட்டவும், வீடுகளுக்கும் மாடுகளுக்கும் தோரணம் கட்டவும்
இக்காலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
இந்தப் பூ சிறுசிறு உருண்டைகளால் ஆனது. ஒவ்வொரு உருண்டையும் மிகச்சிறிய வெண்மையான
கடுகுபோன்ற பொருளால் ஆனது. எனவே இதனை வரகரிசிச் சோறுக்கு உவமிக்கிறார்
பெரும்பாணாற்றுப்படைகாரார்
நெடும் குரல் பூளை பூவின் அன்ன
குறும் தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி - பெரும் 192,193
நெடிய கொத்தினையுடைய சிறு பூளையின் பூவை ஒத்த
குறிய தாளினையுடைய வரகின் சிறிய பருக்கைகளாகிய சோற்றை
இதன் சிறுதன்மையை நோக்கி, இதனைக் குரீஇப்பூளை என்கிறது மதுரைக்காஞ்சி (அடி 72)
பகைவரின் கோட்டை மதிலை வளைத்துப் போரில் ஈடுபடுவோர் உழிஞைப் பூவோடு
பூளைப் பூவையும் சேர்த்துக் கட்டி அணிந்துகொள்வர் என்கிறது பட்டினப்பாலை.
வேறு பல் பூளையொடு உழிஞை சூடி
------------------------- ------------------------------------
முனை கெட சென்று முன் சமம் முருக்கி - பட் 235-238
(சிறுபூளை,பெரும்பூளையாகிய)பலவாகிய பூளைகளோடே, உழிஞையைச் சூடி,
---------------------------------------- ------------------------------------------------------
பகைப்புலம் கெடும்படி சென்று, முன்னால் நிற்கும் தூசிப்படையை அழித்து
இது வறண்ட வெட்டவெளியில் வளரும் என்கிறது புறநானூறு.
பூளை நீடிய வெருவரு பறந்தலை - புறம் 23/20
வேறு பல் பூளையொடு உழிஞை சூடி - பட் 235
என்கிற அடியால் பூளையில் பல்வேறு வகை உண்டு என அறிகிறோம். அவற்றைப் படத்தில் காண்க.
மேல்
|
|
|