<<முந்திய பக்கம்

சங்க இலக்கியம் - அருஞ்சொற்களஞ்சியம்
கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
தா - முதல் சொற்கள்
தா
தாது
தாதை
தாம்பு
தாமம்
தாயம்
தார்
தாரகை
தாரம்
தாலம்
தாலி
தாவல்
தாவன
தாவு
தாழ்
தாழ்ப்பி
தாழி
தாழை
தாள்
தாளாண்மை
தாளி
தாறு
தானை

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
  தா - 1. (வி) 1. கொடு,வழங்கு,அளி, give, offer
        2. பர, spread
        3. தாவு, பாய், rush, jump
     2. (பெ) 1. குற்றம், fault, blemish
        2. துன்பம், வருத்தம், distress, pain
        3. வலிமை, power, might
1.1
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய
கொடுத்து அவை தா என கூறலின்
இன்னாதோ நம் இன் உயிர் இழப்பே - குறு 349/5-7
தமக்கு இன்னல் வருமே என்று அஞ்சி, கேட்பவர் வேண்டியவற்றைக்
கொடுத்துவிட்டு, பின்னர் அவற்றைத் தா என்று கூறுவதனிலும்
இன்னாததோ நம் இனிய உயிரை இழத்தல்?
1.2
நூல் கால் யாத்த மாலை வெண்குடை
தவ்வென்று அசைஇ தா துளி மறைப்ப - நெடு 184,185
நூலால் சட்டத்தே கட்டின முத்துமாலையை உடைய கொற்றக்குடை
தவ்வென்னும் ஓசைபட்டு அசைந்து, பரக்கின்ற துளியை மறைக்க

கிழங்கு அகழ் நெடும் குழி மல்க வேங்கை
பொன் மலி புது வீ தாஅம் அவர் நாட்டு - ஐங் 208/2,3
கிழங்கிற்காகத் தோண்டிய ஆழமான குழி நிறைய, வேங்கை மரத்தின்
பொன்னிற மிக்க புதிய மலர்கள் பரவிக்கிடக்கும் அவருடைய நாட்டின்
1.3
கரும் கண் தா கலை பெரும்பிறிது உற்று என - குறு 69/1
கரிய கண்ணையுடைய தாவித்திரியும் ஆண்குரங்கு இறந்துபோனதாக
2.1.
தா இல் கொள்கை தம் தொழில் முடி-மார்
மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே - திரு 89,90
குற்றம் இல்லாத நோன்புகளையுடைய தமது தவத்தொழிலை முடிப்பாருடைய
நெஞ்சில் பொருந்தித் தோன்றுகின்ற ஒளி மிக்க நிறத்தையுடைய திருமுகங்களில்
2.2
வெம் சுடர் கரந்த கமம் சூல் வானம்
நெடும் பல் குன்றத்து குறும் பல மறுகி
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து - நற் 261/3-5
வெம்மையான ஞாயிற்றை மறைத்த நிறைந்த சூல்கொண்ட மேகங்கள்
நெடிய பலவான குன்றுகளில் சிறியதாகவும் பலவாகவும் அலைந்துதிரிந்து,
துன்பமில்லாத பெரும் மழையாகப் பெய்யத்தொடங்கிய நடுயாமத்தில்,
2.3
மா இரும் தாழி கவிப்ப
தா இன்று கழிக என் கொள்ளா கூற்றே - நற் 271/11,12
பெரிய கரிய தாழியிலிட்டுக் கவித்து மூடும்படி
வலிமையற்று இறந்தொழிக என் உயிரை எடுத்துக்கொள்ளாத கூற்றம்.

 மேல்
 
  தாது - (பெ) 1. மகரந்தம், pollen
        2. தேன், honey
        3. தூள்,பொடி, நீறு, powder, dust
1.
நறும் தாது ஆடிய தும்பி பசும் கேழ்
பொன் உரை கல்லின் நன் நிறம் பெறூஉம் - நற் 25/3,4
மணமிக்க மகரந்தத்தூளில் அளைந்து ஆடிய தும்பி, பசிய நிறத்தையுடைய
பொன்னை உரைத்துப்பார்க்கும் கல்லைப் போன்று நல்ல நிறத்தைப் பெறும்
2.
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா
வண்டு ஓர் அன்ன அவன் தண்டா காட்சி - நற் 25/9,10
தேனை உண்ணும் வேட்கையினால் மலரின் தன்மையை ஆராயாமல் போய் விழுகின்ற
வண்டின் ஒரு தன்மையை ஒத்த அவனது கெடாத காட்சியை
3.
பலர் தொகுபு இடித்த தாது உகு சுண்ணத்தர் - மது 399
பலர் கூடி இடித்த துகள் பறக்கும் சுண்ணாம்பு உடையவரும்

 மேல்
 
  தாதை - (பெ) தந்தை, father
இருவர் தாதை இலங்கு பூண் மாஅல் - பரி 1/31
காமன், சாமன் ஆகிய இருவருக்குத் தந்தையே! ஒளிவிடும் பூண்களை அணிந்த திருமாலே!

 மேல்
 
  தாம்பு - (பெ) தாமணிக்கயிறு, Rope to tie cattle, tether
சிறு தாம்பு தொடுத்த பசலை கன்றின்
உறு துயர் அலமரல் நோக்கி - முல் 12,13
சிறிய தாம்புக்கயிற்றால் (காலில்)கட்டப்பட்ட பச்சிளம் கன் றின்
மிக்க துயரால் மனம் கலங்கிநின்ற நிலையைப் பார்த்து

 மேல்
 
  தாமம் - (பெ) 1. கழுத்தணி, necklace
         2. பூமாலை, wreath, garland
1.
திருமருத முன்துறை சேர் புனல்-கண் துய்ப்பார்
தாமம் தலை புனை பேஎம் நீர் வையை - பரி 7/83,84
திருமருத முன்துறை என்ற பெயர்கொண்ட துறையைச் சேரும் வையை நீரில் குளித்து இன்புறுவாரின்
கழுத்தணிகளைத் தன் தலைமேல் சூட்டிக்கொள்ளும் அச்சந்தரும் ஆழமான நீரைக்கொண்ட வையையே!
2.
சூடு நறவொடு தாமம் முகிழ் விரிய - பரி 23/55
சூடியுள்ள நறவத்தின் மொட்டுடன் பூமாலையின் மொட்டுக்களும் மலர,

 மேல்
 
  தாயம் - (பெ) 1. தந்தை வழிச் சொத்து, patrimony
         2. உரிமைப்பொருள், rightful possession 
1.
உரு கெழு தாயம் ஊழின் எய்தி - பட் 227
அச்சம் பொருந்தின தன் அரசவுரிமையை முறையாலே பெற்று
2.
தாயம் ஆகலும் உரித்தே போது அவிழ்
புன்னை ஓங்கிய கானல்
தண்ணம் துறைவன் சாயல் மார்பே - நற் 327/7-9
உரிமைப்பொருள் ஆகுதலும் உரியதேயாகும் - அரும்புகள் மலர்கின்ற
புன்னை மரங்கள் உயர்ந்து வளர்ந்த கடற்கரைச் சோலையின்
குளிர்ந்த அழகிய துறைகளைச் சேர்ந்தவனது மென்மையான மார்பு.

 மேல்
 
  தார் - (பெ) 1. மாலை, wreath,chaplet, garland
        2. கிளியின் கழுத்தில் இருக்கும் பட்டையான அமைப்பு, Neck-stripes of parrots
        3. ஒழுங்கு, orderliness
        4. முன்னணிப்படை, van of the army
        5. பிடரி மயிர், mane
        6. உபாயம், tactical move, trick

1.
உருள் பூ தண் தார் புரளும் மார்பினன் - திரு 11
தேர்உருள் போலும் பூவால் செய்யப்பட்ட குளிர்ந்த மாலை அசையும் மார்பினையுடையவனும்
2.
மயில் ஓர் அன்ன சாயல் செம் தார்
கிளி ஓர் அன்ன கிளவி பணை தோள் - நற் 301/4,5
மயிலோடு ஒத்த தன்மையையுடைய சாயலையும், செந்நிறக் கழுத்துப்பட்டையைக் கொண்ட
கிளியின் தன்மையை ஒத்த சொற்களையும், பருத்த தோள்களையும்,
3.
களிறு நிலை முணைஇய தார் அரும் தகைப்பின் - பதி 64/7
களிறுகள் நிற்பதற்கு வெறுத்த, ஒழுங்காக அமைந்த உயர்ந்த கட்டுக்காவலையுடைய
4.
நனம் தலை வேந்தர் தார் அழிந்து அலற - பதி 55/17
அகன்ற இடத்தையுடைய வேந்தரின் முன்னணிப்படையினர் அழிந்து அலறும்படியாக,
5.
தார் அணி எருத்தின் வாரல் வள் உகிர்
அரி மான் வழங்கும் சாரல் - பதி 12/4,5
பிடரி மயிர் அழகுசெய்யும் கழுத்தினையும், நீண்ட கூரிய நகங்களையும் கொண்ட,
சிங்கங்கள் நடமாடும் மலைச்சாரலில்
6.
மைந்து உடை மல்லன் மத வலி முருக்கி
ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே ஒரு கால்
வரு தார் தாங்கி பின் ஒதுங்கின்றே - புறம் 80/2-4
வலிமையுடைய மல்லனது மிக்க வலிமையைக் கெடுத்து
ஒரு கால் மண்டியாகமார்பிலேமடித்துவைத்து, ஒரு கால்
அவன் செய்கின்ற உபாயத்தை விலக்கி,முதுகின்கண் வளைத்து

 மேல்
 
  தாரகை - (பெ) விண்மீன், star
சுடரொடு சூழ்வரு தாரகை மேரு
புடை வரு சூழல் - பரி 19/19,20
திங்கள் தன்னோடு சூழ்ந்துவரும் விண்மீன்களோடு மேருவின்
பக்கத்தே சுற்றிவரும் சூழலானது 

 மேல்
 
  தாரம் - (பெ) 1. அரிய பண்டம், rare / valuable thing or article
         2. மந்தாரம், தேவதாருமரம், A celestial tree
1.
இடி கலப்பு அன்ன நறு வடி மாவின்
வடி சேறு விளைந்த தீம் பழ தாரம் - மலை 512,513
(தானியங்களை)இடித்துக் கலந்துசெய்த(பொரிவிளங்காய்)உருண்டை போன்ற,(ஆனால்) மணம்மிக்க வடு மாங்காயின்
தேன் போன்ற சதைப்பற்று முதிர்ந்த இனிய பழங்களாகிய அரும்பண்டங்களும்,
2.
தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி - பரி 12/6
தகர மரம், ஞாழல் மரம், தேவதாரு மரம் ஆகியவற்றைச் சாய்த்துச் சுமந்துகொண்டு,

 மேல்
 
  தாலம் - (பெ) உண்கலம், eating plate
நறு நெய் கடலை விசைப்ப சோறு அட்டு
பெரும் தோள் தாலம் பூசல் மேவர - புறம் 120/14,15
நறிய நெய்யிலே கடலை துள்ள, சோற்றைச் சமைத்து,
பெரிய தோளையுடைய மனையாள் சாப்பாட்டுத்தட்டைக் கழுவுதலைப் பொருந்த

 மேல்
 
  தாலி - (பெ) 1. சிறுவர் கழுத்தில் அணியும் தாயத்து, Amulet tied on a child's neck
        2. சோழி, cowree
1.
புலி பல் தாலி புதல்வன் புல்லி - குறு 161/3
புலிப்பல் தாலியுடைய மகனைத் தழுவிக்கொண்டு
2.
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை
வரி வெண் தாலி வலை செத்து வெரூஉம் - ஐங் 166/1,2
பெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
வரிகளையுடைய வெண்மையான சோழிகளைக் கண்டு வலையோ என்று எண்ணி வெருளும்

 மேல்
 
  தாவல் - (பெ) வருத்தம், distress
தாவல் உய்யுமோ மற்றே தாவாது
வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர் - பதி 41/17,18
வருந்துவதிலிருந்து உய்வு பெறுமோ? - தவறாமல்
தமது சூளுரையைச் செய்து முடிக்கும் பேச்சு மாறாத வீரர்கள்

 மேல்
 
  தாவன - (பெ) பரந்தன, spreading
தண் கார் ஆலியின் தாவன உதிரும் - அகம் 101/16
குளிர்ந்த கார்காலத்து ஆலங்கட்டி போலப் பரந்தனவாய் உதிரும்

 மேல்
 
  தாவு - (வி) 1. (பெரும்பாலும் எதிர்மறைத் தொடர்களில்) கெடு, சிதைவுறு, perish, decay
         2. பாய், leap 
1
தாவா விருப்பொடு கன்று யாத்து_உழி செல்லும்
ஆ போல் படர் தக நாம் - கலி 81/36,37
குன்றாத விருப்புடன், கன்று கட்டப்பட்டிருக்கும் இடத்துக்கு விரைந்தோடும்
பசுவைப் போல், இனி நம்மைத் தேடி வரும்படியாக.
2.
தண்டு தழுவா தாவு நீர் வையையுள் - பரி 11/106
வாழைத்தண்டைத் தழுவிக்கொண்டு பாய்ந்து வரும் நீரைக் கொண்ட வையை ஆற்றில்

 மேல்
 
  தாழ் - 1. (வி) 1. நீண்டு தொங்கு, hang down
         2. கீழ்நோக்கிவா, be low
         3. அமிழ், sink, drown
         4. தங்கு, stay, rest
         5. ஆழமாக இரு, be deep
         6. மேலிருந்து விழு, flow down
         7. வளை, droop, bend
         8. தாமதி, delay
         9. பணி, be submissive
     - 2. (பெ) தாழ்ப்பாள், bolt,latch
1.1
ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை
தாழ் பெரும் தட கை உயர்த்த யானை - திரு 157,158
நான்கு ஏந்திய கொம்புகளையும், அழகிய நடையினையும்,
(நிலம் வரை)தாழ்ந்த பெரிய வளைவினையுடைய கையினையும் உடைய புகழ்பெற்ற யானையின்
1.2
தளிர் புன்கின் தாழ் காவின் - பொரு 196
தளிரையுடைய புன்கினையும், தாழ்ந்த சோலைகளும்
1.3
கோடை நீடினும் குறைபடல் அறியா
தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும் - பெரும் 272,273
கோடைக்காலம் நீட்டித்து நின்றதாயினும் வற்றுதலை அறியாத,
தோள்களும் அமிழும் குளங்களினுடைய கரையைக் காத்திருக்கும்,
1.4
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல்
நிழல் தாழ் வார் மணல் நீர் முகத்து உறைப்ப - பெரும் 378,379
நூல் போலச் சூழ்ந்துகிடக்கின்ற அப்பம் பாலிலே கிடந்தவை போல்,
நிழல் கிடந்த வார்ந்த மணலிடத்துக் குழிகளில் நின்ற நீரிடத்தே மிக விழும்படி
1.5
குறும் கை இரும் புலி கோள் வல் ஏற்றை
பூ நுதல் இரும் பிடி புலம்ப தாக்கி
தாழ் நீர் நனம் தலை பெரும் களிறு அடூஉம் - நற் 36/1-3
குட்டையான கைகளையுடைய பெரிய புலியின் கொல்லுதலில் வல்ல ஆண்புலி
அழகிய நெற்றியையுடைய பெரிய பெண்யானை புலம்பும்படி தாக்கி
ஆழமான நீரையுடைய அகன்ற இடத்தில் பெரிய களிற்றினைக் கொல்லும்
1.6
தண் தாழ் அருவி அர_மகளிர் ஆடுபவே - கலி 40/23
குளிர்ச்சியாய் விழுகின்ற அருவியில் தேவ மகளிர் ஆடுகின்றனரே!
1.7
நறு வீ தாழ் புன்னை கீழ் நயந்து நீ அளித்த_கால் - கலி 136/13
நறிய மலர்கள் வளைந்துதொங்கும் புன்னை மரத்தின் கீழ் விருப்பத்துடன் நீ இவளிடம் அன்புசெய்தபோது
1.8
புனை புணை ஏற தாழ்த்ததை தளிர் இவை
நீரின் துவண்ட - பரி 6/68,69
"அழகாகச் செய்யப்பட்ட தெப்பத்தில் ஏறி வரும்போது தாமதமானதால் தளிரான இவை
வையையின் நீர் காரணமாகத் துவண்டன
1.9
தாழ்ந்தாய் போல் வந்து தகவு இல செய்யாது - கலி 69/22
பணிந்தவன் போல் வந்து தகுதியில்லாதவற்றைச் செய்யாதே!
2.
போர் வாய் கதவம் தாழொடு துறப்ப - நெடு 63
பொருதுகின்ற வாயுடைய(இரட்டைக்)கதவுகள் தாழிட்டுக் கிடக்க

 மேல்
 
  தாழ்ப்பி - (வி) தாமதப்படுத்து, cause to delay
அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும் - பரி 6/75
"அருகில் உன் ஊர் இருந்தும், வைகையின் நீர்ப்பெருக்கினால் தெப்பத்தில் வருவதனால்
அது உன்னைத் தாமதப்படுத்துகின்றது,

 மேல்
 
  தாழி - (பெ) 1. வாய் அகன்ற பெரிய மண் பானை
        2. இறந்தோரை அடக்கஞ்செய்துவைக்கும் பாண்டம், burial urn
1.
கல்சேர்பு இருந்த கதுவாய் குரம்பை
தாழி முதல் கலித்த கோழ் இலை பருத்தி - அகம் 129/6,7
பாறையைச் சேர்ந்திருந்த சிதைவுற்ற குடிசையில்
தாழியில் தழைத்துவளர்ந்த கொழுவிய இலையையுடைய பருத்திச்செடி
2.
வியல் மலர் அகன் பொழில் ஈம தாழி
அகலிது ஆக வனைமோ - புறம் 256/5,6
பெரிய பரப்பினையுடைய அகன்ற பூமியிடத்துக் காட்டின்கண் முதுமக்கள் தாழியை
அகலம் அதிகமுடையதாகச் செய்வாயாக

 மேல்
 
  தாழை - (பெ) 1. தெங்கு, தென்னை மரம், coconut tree
         2. மணங்கமழும் நீண்ட மடல்களையுடைய ஒரு தாவரம், fragrant screw pine, Pandanus odoratissimus
         3. தாழை மடலிலிருந்து உரிக்கப்படும் நார், fibre made from the leavs of screw pine 
1.
வாழை முழு_முதல் துமிய தாழை
இளநீர் விழு குலை உதிர தாக்கி - திரு 307,308
வாழையின் பெரிய முதல் துணியத், தெங்கின்
இளநீரையுடைய சீரிய குலை உதிர, (அவ்விரண்டையும்)மோதி
2.
அலை நீர் தாழை அன்னம் பூப்பவும் - சிறு 146
அலையும் நீர்(கடற்கரையில் இருக்கும்)தாழை அன்னம்(போலே) பூக்கவும்
3.
வேழம் நிரைத்து வெண் கோடு விரைஇ
தாழை முடித்து தருப்பை வேய்ந்த
குறி இறை குரம்பை - பெரும் 263-265
மூங்கில்கோலை நெடு வரிசையாகச் சார்த்தி, வெண்மையான மரக்கொம்புகளை குறுக்காகப் பரப்பி,
தாழைநாரால் (இரண்டையும்)முடித்துத் தருப்பைப்புல்லை (அதன் மேல்)வேய்ந்த
குறுகிய இறப்பையுடைய குடிலின்

	

 மேல்
 
  தாள் - (பெ) 1. கால்,leg, foot
        2. பூ போன்றவற்றின் அடித்தண்டு, stem, pedicle
        3. முயற்சி, effort
        4. மரம் போன்றவற்றின் அடிப்பகுதி, foot of a tree
        5. படி, stairs
        6. மூட்டுவாயின் ஊடுருவச் செறிக்கும் கடையாணி, Pin that holds a tenon in a mortise
        7. வால்மீன், comet
1.
உறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள் - திரு 4
தன்னைச்சேர்ந்தவர்களைத் தாங்குகின்ற செருக்குடைய, வலிமையான திருவடிகளையும்
2.
பைம் தாள் குவளை தூ இதழ் கிள்ளி - திரு 22
பசிய தண்டினையுடைய குவளையின் தூய இதழ்களைக் கிள்ளி இட்டு
3.
பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள்
முரசு முழங்கு தானை மூவரும் கூடி - பொரு 53,54
பெருமை பொருந்தின செல்வத்தையும், பெரும் புகழையும், வலிய முயற்சியினையும்,
முரசு முழங்கும் படையினையும் உடைய மூவேந்தர்களும் சேர்ந்து
4.
பார்வை யாத்த பறை தாள் விளவின் - பெரும் 95
பார்வை மான் கட்டிய தேய்ந்த அடிப்பகுதியையுடைய விளாமரத்தின்
5.
குண்டு கண் அகழிய குறும் தாள் ஞாயில் - பதி 71/12
ஆழமான இடத்தையுடைய அகழியையும், குறுகிய படிகளையும் கொண்ட கோட்டை முகப்பினையுடைய
6.
தனி மணி இரட்டும் தாள் உடை கடிகை
நுழை நுதி நெடு வேல் குறும் படை மழவர்
முனை ஆ தந்து - அகம் 35/3-5
தனித்த ஒரு மணி மாறிமாறி ஒலிக்கும், பொருத்துதல் உள்ள கழுத்துப்பட்டை உடைய -
கூரிய முனை கொண்ட நீண்ட வேலை உடைய சிற்றரண் மழவர்கள் (ஓட்டிச் சென்ற) -
போரிட்டு மீட்ட - பசுக்களைக் கொணர்ந்து,
7.
குள_மீனோடும் தாள் புகையினும் - புறம் 395/35
குளமீன் என்னும் விண்மீனோடு, வால்மீன்களும் புகைந்து தோன்றினும்

 மேல்
 
  தாளாண்மை - (பெ) விடாமுயற்சி, perseverance
கோளாளர் என் ஒப்பார் இல் என நம் ஆனுள்
தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கு ஒரு நாள்
கேளாளன் ஆகாமை இல்லை - கலி 101/43-45
காளையை அடக்குபவரில் என்னைப் போன்றவர் யாரும் இல்லை என்று நம் மாடுகளுக்குள்
தன் முயற்சியை எடுத்துக்கூறும் தலைவன் நமக்கு என்றேனும் ஒருநாள்
உறவினன் ஆவான்.

 மேல்
 
  தாளி - (பெ) ஒரு கொடி, Hedge bind-weed, Ipomaca sepiaria
தாளி தண் பவர் நாள் ஆ மேயும் - குறு 104/3
தாளியின் குளிர்ந்த படர்கொடியைக் காலையில் பசுக்கள் மேயும்

	

 மேல்
 
  தாறு - (பெ) 1. அங்குசம், தார்க்கோல், goad
        2. பூ அல்லது காய்களின் கொத்து, குலை, cluster of flowers or vegetables
தாறு அடு களிற்றின் வீறு பெற ஓச்சி - குறி 150
(பாகன்)அங்குசம் அழுத்திய ஆண்யானை போல எழுச்சியுண்டாகக் கைகளை உயர்த்தி
2.
தாறு படு பீரம் ஊதி - நற் 277/7
கொத்துக்கொத்தாய்ப் பூக்கும் பீர்க்கின் மஞ்சள் நிறப் பூவில் தேன்குடித்து,

 மேல்
 
  தானை - (பெ) 1.சேனை, army
         2. ஆடை, முந்தானை, cloth, the front end of a saree
1.
தெறல் அரும் தானை பொறையன் பாசறை
நெஞ்சு நடுக்கு_உறூஉம் துஞ்சா மறவர் - நற் 18/5,6
கடத்தற்கரிய சேனையையுடைய பொறையன் என்பானின் பாசறையில் இருக்கும்
நெஞ்சு நடுக்கங்கொண்டதினால் தூங்காத வீரர்கள்
2.
இரும் துகில் தானையின் ஒற்றி - பரி 16/23
நீண்ட துகிலின் முந்தானையால் நீத்துளிகளை ஒற்றியெடுக்க

 மேல்