<<முந்திய பக்கம்

சங்க இலக்கியம் - அருஞ்சொற்களஞ்சியம்
கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
தெ - முதல் சொற்கள்
தெங்கு
தெடாரி
தெண்
தெம்
தெய்ய
தெய்யோ
தெய்வம்
தெரியல்
தெரிவை
தெரீஇய
தெருமரல்
தெருமரு
தெருவம்
தெருள்
தெவ்
தெவ்வர்
தெவ்விர்
தெவ்வு
தெவிட்டல்
தெவிட்டு
தெவிள்
தெவு
தெவுட்டு
தெழி
தெள்
தெள்ளிதின்
தெளி
தெளிர்
தெற்றி
தெற்று
தெற்றென
தெறல்
தெறி
தெறீஇ
தெறு
தெறுவர்
தெறுவர
தெறுழ்
தென்னம்பொருப்பன்
தென்னர்
தென்னவர்
தென்னவன்
தென்னன்
தெனாஅது

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
  தெங்கு - (பெ) தென்னை, Coconut-palm, Cocos nucifera
தெங்கின்
இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நன் நாடு - புறம் 29/15,16
தென்னையின்
இளநீரை உதிர்க்கும் செல்வம் மிக்க நல்ல நாடு

 மேல்
 
  தெடாரி - (பெ) தடாரி, பார்க்க : தடாரி
தெடாரி தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி - புறம் 368/15
தடாரியினது தெளிந்த கண் ஒலிக்க இசைத்து

 மேல்
 
  தெண் - (பெ.அ) தெளிந்த, Clear, transparent, only in combin. for தெள், as in 
          தெள் + கடல் > தெண் கடல்

வல்லின, மெல்லின மெய்கள் முன்னால் வரும்போது தெள் என்பது தெண் என்றாகிறது. 
தெள் என்பது தெளிவு.

தெண் கடல் குண்டு அகழி - மது 86
செருப்பு உடை அடியர் தெண் சுனை மண்டும் - அகம் 129/13
தெண் திரை அவிர் அறல் கடுப்ப ஒண் பல் - மது 519
தெண் நீர் பசும் காய் சேறு கொள முற்ற - நெடு 26
ஆய் மலர் மழை கண் தெண் பனி உறைப்பவும் - நற் 85/1
அதரி கொள்பவர் பகடு பூண் தெண் மணி - மது 94

 மேல்
 
  தெம் - (பெ) பகை, பகைவர், enmity, enemy
தெவ் முனை என்பது தெம் முனை என்றானது. தெவ் என்பது பகை அல்லது பகைவரைக் குறிக்கும்.

தெம் முனை சிதைத்த கடும் பரி புரவி - அகம் 187/6
தெவ் முனை சிதைத்த கடும் பரி புரவி
பகைப்புலத்தைத் தொலைத்த கடிய செலவினையுடைய குதிரைகள்

 மேல்
 
  தெய்ய - (இ.சொ) ஓர் அசைநிலை, A poetic expletive;
புது வறம் கூர்ந்த செறுவில் தண்ணென
மலி புனல் பரத்தந்து ஆஅங்கு
இனிதே தெய்ய நின் காணும்_காலே - நற் 230/8-10
புதிதாய் வற்றிக்காய்ந்த வயலுக்குள், மிகவும் குளிர்ச்சியுண்டாக
மிகுந்த புனல் பாய்ந்து பரவினாற்போன்று
இன்பமாகவே இருக்கின்றது உன்னைப் பார்க்கும்பொழுதெல்லாம்

 மேல்
 
  தெய்யோ - (இ.சொ) ஓர் அசைநிலை, A poetic expletive
யாங்கு வல்லுநையோ ஓங்கல் வெற்ப
இரும் பல் கூந்தல் திருந்து இழை அரிவை
திதலை மாமை தேய
பசலை பாய பிரிவு தெய்யோ - ஐங் 231/1-4
எப்படி உன்னால்முடிகிறது? உயர்ந்த மலைகளுக்குரியவனே!
கரிய, பலவான கூந்தலும், திருத்தமான அணிகலன்களும் உடைய இந்தப் பெண்
தன் அழகுத்தேமல் படர்ந்த மாநிற மேனிய மெலிந்துவாடவும்,
பசலை பாயவும் இவளைப் பிரிந்துசெல்வதற்கு 

 மேல்
 
  தெய்வஉத்தி - (பெ) ஒருவிதத் தலையணிகலன், Women's head-ornament
பைம் தாள் குவளை தூ இதழ் கிள்ளி
தெய்வ_உத்தியொடு வலம்புரி வயின் வைத்து - திரு 22,23
பசிய தண்டினையுடைய குவளையின் தூய இதழ்களைக் கிள்ளி இட்டு,
தெய்வவுத்தி, வலம்புரி ஆகிய தலைக்கோலங்களை அதனதன் இடத்தில் வைத்து
- தெய்வவுத்தி - சீதேவி என்னும் தலைக்கோலம் என்பார் நச். தம் உரையில்.

தெய்வவுத்தியொடு செழுநீர் வலம்புரி
தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கணி
மை ஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து -சிலப்.6.கடலாடு.:106-108
என்ற இளங்கோவடிகள் கூற்றானும் அறிக - பொ.வே.சோ.உரை விளக்கம்

 மேல்
 
  தெய்வம் - (பெ) 1. இறைவன், கடவுள், God, deity
          2. தெய்வத்தன்மை, divine nature
1.
வெருவரு கடும் திறல் இரு பெரும் தெய்வத்து
உரு உடன் இயைந்த தோற்றம் போல - அகம் 360/6,7
அஞ்சத்தகும் மிக்க வலியுடைய இரு பெரும் தெய்வங்களான சிவன், திருமால் இவர்களது
செந்நிறமும் கருநிறமும் ஒருங்கு பொருந்திய தோற்றத்தைப் போல

உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம்
புனை இரும் கதுப்பின் நீ கடுத்தோள்_வயின்
அனையே ஆயின் அணங்குக என் என - அகம் 166/7-9
உயர்ந்த பலிகளையே பெறும் அச்சம்தரும் தெய்வம்
அணிந்த கரிய கூந்தலையுடையவளாகிய உன்னால் ஐயுறப்பெற்றாளுடன்
யான் புனலாடி வந்தேனாயின் என்னை வருத்துக என்று
2.
திரு முகம் அவிழ்ந்த தெய்வ தாமரை - சிறு 73
அழகிய முகம் (போல)மலர்ந்த தெய்வத் (தன்மையுடைய)தாமரையிடத்து

 மேல்
 
  தெரியல் - (பெ) பூமாலை, garland of flowers
பனி துறை பகன்றை பாங்கு உடை தெரியல்
கழுவு_உறு கலிங்கம் கடுப்ப சூடி - பதி 76/12,13
குளிர்ந்த நீர்த்துறையில் மலர்ந்துள்ள பகன்றை மலரால் தொடுத்த அழகான மாலையை
வெளுக்கப்பட்ட வெள்ளை ஆடையைப் போல் தலையில் சூடிக்கொண்டு

 மேல்
 
  தெரிவை - (பெ) பெண், woman
நீர் விலங்கு அழுதல் ஆனா
தேர் விலங்கினவால் தெரிவை கண்ணே - குறு 256/7,8
நீரைத் துடைக்கத் துடைக்க வரும் அழுகையைக் கொண்டு
தேரைத் தடுத்துநிறுத்தின என் தலைவியின் கண்கள்

 மேல்
 
  தெரீஇய - (வி.எ) தெரிந்துகொள்ள என்பதன் மரூஉ, to know
களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
ஒளித்து இயங்கும் மரபின் வய புலி போல - அகம் 22/14,15
களிறாகிய இரையைத் தெரிந்துகொள்ளப் பார்வையினாலே ஒதுங்கி,
மறைவாக இயங்கும் வழக்கத்தை உடைய வலிய புலியைப் போல,

 மேல்
 
  தெருமந்து - (வி.எ) 1. மனம் தடுமாறி, be flurried, disconcerted
            2. மனம் வருந்து, be distressed
            3. மருண்டு, bewildered
1.
ஊறு நீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய் நீ உணல் வேட்பின்
ஆறு நீர் இல என அறன் நோக்கி கூறுவீர்
யாறு நீர் கழிந்து அன்ன இளமை நும் நெஞ்சு என்னும்
தேறு நீர் உடையேன் யான் தெருமந்து ஈங்கு ஒழிவலோ - கலி 20/11-14
"வாயில் ஊறுகின்ற நீர் அமிழ்தைப் போல் இனிக்கும் பற்களைக் கொண்டவளே! நீ குடிப்பதற்கு விரும்பினால்
அங்கே ஆற்றில் நீர் இருக்காது என்று தாகத்துக்குத் தண்ணீர் தருகின்ற அறத்தைச் செய்யமுடியாதே என்று கூறுகிறீர்,
ஆற்று நீர் சென்றுவிட்டால் அதனை மீண்டும் பெறமுடியாதது போன்ற இந்த இளமைக்காலத்தில், உம் நிலைத்த அன்பு என்னும்
தெளிவான தன்மையைக் கொண்டுள்ள நான் மனத்தடுமாறி மாண்டுபோகவோ?
- தெருமந்து - சுழன்று - நச்.உரை
- தெருமந்து - தடுமாறி - மா.இராச.உரை விளக்கம்
2.
அறத்தொடு நின்றேனை கண்டு திறப்பட
என் ஐயர்க்கு உய்த்து உரைத்தாள் யாய்
அவரும் தெரி கணை நோக்கி சிலை நோக்கி கண் சேந்து
ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து ஆறி
இருவர் கண் குற்றமும் இல்லையால் என்று
தெருமந்து சாய்த்தார் தலை - கலி 39/21-26
நான் உண்மையை உரைத்ததைக் கேட்டு, நெறிப்பட
நம் தந்தைக்கும், தமையர்க்கும் எடுத்துரைத்தாள் தாய்;
அவரும் அம்புகளைத் தெரிந்தெடுத்துப் பார்ப்பார், வில்லைப் பார்ப்பார், கண் சிவந்து
ஒரு பகல் முழுதும் சினங்கொண்டு, பின்பு தணிந்து
இருவர் மீதும் ஒரு குற்றமும் இல்லை என்று
மனம் வருந்தித் தம் தலையை ஆட்டி ஒப்புதலைத் தெரிவித்தனர்;
- தெருமந்து - அலமந்து - நச்.உரை
- தெருமந்து - மனம் கவன்று - மா.இராச்.உரை விளக்கம்; - கவல் - மனம் வருந்து - பால்ஸ் தமிழ் அகராதி
3.
மேல் ஓர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா இல்லிரே
உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு அன்னை
அடர் பொன் சிரகத்தால் வாக்கி சுடர்_இழாய்
உண்ணு நீர் ஊட்டி வா என்றாள் என யானும்
தன்னை அறியாது சென்றேன் மற்று என்னை
வளை முன்கை பற்றி நலிய தெருமந்திட்டு
அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா - கலி 51/4-11
முன்னொருநாள்
அன்னையும் நானுமாக வீட்டில் இருந்தபோது, "வீட்டிலுள்ளோரே!
உண்பதற்கு நீர் வேண்டிவந்துள்ளேன்" என்று சொல்லி வந்தவனுக்கு, அன்னை
"பொன்னாலான கலத்தில் ஊற்றிக்கொடுத்து, சுடர்விடும் அணிகலன்கள் அணிந்தவளே!
உண்பதற்கு நீரை அருந்தச் செய்து வா" என்று சொன்னாள் என்பதற்காக, நானும்
அவன் இன்னான் என்பதை அறியாமல் சென்றேன். ஆனால் அவன் எனது
வளையணிந்த முன்கையைப் பற்றி அழுத்த, மருண்டுபோய்
அன்னையே! இவன் செய்வதைப் பாரேன்" என்று கூவிவிட
- தெருமந்திட்டு - அலமந்து - நச்.உரை
- தெருமந்திட்டு - மருண்டு - மா.இராச்.உரை விளக்கம்;

 மேல்
 
  தெருமரல் - 1 (வி.மு) கலங்கவேண்டாம், do not be perturbed
        - 2. (பெ) மயக்கம், மனக்கலக்கம், giddiness, perplexity
1.
தெருமரல் வாழி தோழி நம் காதலர்
பொரு முரண் யானையர் போர் மலைந்து எழுந்தவர்
செரு மேம்பட்ட வென்றியர்
வரும் என வந்தன்று அவர் வாய்மொழி தூதே - கலி 26/22-25
கலங்கவேண்டாம், வாழ்க, தோழியே!, நம் காதலர்
போரிட்டு எதிர்த்து நிற்கும் யானைப்படையுடன் போரினை எதிர்கொண்டு எழுந்துவந்த பகைவருடனான
போரில் மேலான ஆற்றல்காட்டி வெற்றிசூடியவராய்த்
திரும்பி வருகிறார் என்று வந்து கூறுகின்றனர் அவர் செய்தியைத் தாங்கிவரும் தூதுவர்.
2.
தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின்_வயின்
நீங்குக என்று யான் யாங்ஙனம் மொழிகோ - அகம் 90/7,8
மனக்கலக்கமுள்ள உள்ளத்தோடு வருந்தும் உன்னிடத்தில்
நீங்குவாயாக என்று யான் எங்ஙனம் மொழிவேன்?

 மேல்
 
  தெருமரு - (வி) மனம் கலங்கு, மருட்சியடை, be perplexed, be unnerved
பேர் அஞர் கண்ணள் பெரும் காடு நோக்கி
தெருமரும் அம்ம தானே - புறம் 247/6,7
பெரிய துன்பம் மேவிய கண்ணை உடையவளாய் புறங்காட்டைப் பார்த்து
தான் மனம்கலங்கும்

வளை முன்கை பற்றி நலிய தெருமந்திட்டு
அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா - கலி 51/10,11
வளையணிந்த முன்கையைப் பற்றி அழுத்த, மருண்டுபோய்
அன்னையே! இவன் செய்வதைப் பாரேன்" என்று கூவிவிட,

 மேல்
 
  தெருவம் - (பெ) தெரு, street
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை
பூவொடு புரையும் சீர் ஊர் பூவின்
இதழ்_அகத்து அனைய தெருவம் - பரி 30/1-3
திருமாலின் தொப்புளில் தோன்றி மலர்ந்த தாமரைப்
பூவோடு ஒத்தது அழகிய ஊர், அந்தப் பூவின்
அக இதழ்களை ஒத்தன தெருக்கள்

 மேல்
 
  தெருள் - 1. (வி) அறிந்து தெளி, be clear,lucid
      - 2. (பெ) அறிவுத்தெளிவு, knowledge, clarity of thought
1.
இருள் உறழ் இரும் கூந்தல் மகளிரோடு அமைந்து அவன்
தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் - கலி 122/12,13
இருள் போன்ற கரிய கூந்தலையுடைய தன் மனைவியருடன் மனம் விரும்பி வாழும் அவன்
நம் வருத்தத்தை அறிந்து தெளியும் குணம் இல்லாதவனாயிருப்பதை அறிவேன்.
2.
வினவுவார்க்கு ஏதில சொல்லி கனவு போல்
தெருளும் மருளும் மயங்கி வருபவள் - கலி 144/6,7
கேட்பாருக்குத் தொடர்பில்லாத பதில்களைச் சொல்லி, கனவு காண்பவள் போல் காணப்பட்டு,
சிலநேரம் தெளிந்த அறிவோடும், சிலநேரம் குழம்பிய அறிவோடும் மாறிமாறித் தோன்றுபவளிடம்,

 மேல்
 
  தெவ் - (பெ) பகை, பகைவர், enmity, enemy
தொலையா தும்பை தெவ்_வழி விளங்க - பதி 52/8
தோற்காத நிலையுள்ள தும்பைப்பூ மாலை, பகைவர் நடுவே விளங்கித் தோன்ற

 மேல்
 
  தெவ்வர் - (பெ) பகைவர், enemy
தெவ்வர் தேய்த்த செ வேல் வயவன் - நற் 260/6
பகைவரை அழித்த சிவந்த வேற்படையையுடைய வலிமையுள்ள வீரனுடைய

 மேல்
 
  தெவ்விர் - (விளி) தெவ்வர்களே! பகைவர்களே! - விளிவடிவம், vocative form of 'tevvar'
களம் புகல் ஓம்பு-மின் தெவ்விர் - புறம் 87/1
போர்க்களத்தின்கண் புகுதலைத் தவிர்ப்பீர், பகைவர்களே!

 மேல்
 
  தெவ்வு - 1. (வி) கொள், get, take, obtain
      - 2. (பெ) பகை, பகைவர், enmity, enemy
1
நீர் தெவ்வு நிரை தொழுவர் - மது 89
நீரினை முகக்கும் (ஏற்றத்தில்)வரிசையாய் நிற்கும் தொழிலாளர்கள்
2.
தெவ்வு குன்றத்து திருந்து வேல் அழுத்தி - பரி 19/102
பகைமை பொருந்திய கிரவுஞ்ச மலையில் உன் திருத்தமான வேலினைப் பாய்ச்சி

திறல் சால் வென்றியொடு தெவ்வு புலம் அகற்றி - சிறு 246
வலிமை பொருந்திய வெற்றியோடே பகைவரின் நிலத்தைக் காலிசெய்து,

 மேல்
 
  தெவிட்டல் - (பெ) 1. வாய் குதட்டுதலால் உண்டாகும் விலாழி(வாய்நுரை) நீர், 
           Foam from a horse's mouth
           2. ஒலியெழுப்புதல், making noise
1.
கால் கடுப்பு அன்ன கடும்செலல் இவுளி
பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன
வால் வெண் தெவிட்டல் வழி வார் நுணக்கம்
சிலம்பி நூலின் உணங்குவன - அகம் 224/5-8
காற்றின் வேகத்தை ஒத்த விரைந்த ஓட்டத்தினை உடைய குதிரைகளின்
பாலைக் கடையும்போது எழும் வெண்ணெயின் பெரிய மிதப்பினைப் போன்ற
மிக வெண்மையான வாயின் தெவிட்டலாய் பின்னே வழிந்திடும் மெல்லிய நுரை
சிலந்தியின் நூல் போல நுணுகுவனவாய்ச் சிதறி
2.
பாணி பிழையா மாண் வினை கலிமா
துஞ்சு ஊர் யாமத்து தெவிட்டல் ஓம்பி
நெடும் தேர் அகல நீக்கி - அகம் 360/11-13
தாளத்தை ஒத்து நடத்தல் தப்பாத மாண்புற்ற வினை வல்ல செருக்குறும் குதிரை
ஊர் துயிலும் யாமத்தில் ஒலித்தலைத் தவிர்த்து,
நீண்ட தேரினைத் தூரத்தே நீக்கி நிறுத்தி

 மேல்
 
  தெவிட்டு - (வி) 1. உவட்டு, திகட்டு, cloy, sate
          2. திரளு, assemble, collect together
          3. ஒலியெழுப்பு, make noise
1.
பணை நிலை புரவி புல் உணா தெவிட்ட - மது 660
கொட்டிலில் நிற்றலையுடைய குதிரைகள் புல்லாகிய உணவை உண்டு திகட்டி நிற்க
2.
மான் கணம் மர முதல் தெவிட்ட ஆன் கணம்
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர - குறி 217,218
மான் கூட்டம் மரத்தடிகளில் வந்து திரள, பசுக்களின் கூட்டம்
(தம்)கன்றுகளை அழைக்கும் குரலையுடையவாய் கொட்டில்கள் நிறையுமாறு நுழைய,
3.
அவல்-தொறும் தேரை தெவிட்ட - ஐங் 453/1
பள்ளங்கள்தோறும் தவளைகள் ஆரவாரிக்க,

 மேல்
 
  தெவிள் - (வி) திரளு, பெருகு, fill to the brim
முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்
கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரும் குலை
நுண் நீர் தெவிள வீங்கி புடை திரண்டு
தெண் நீர் பசும் காய் சேறு கொள முற்ற - நெடு 23-26
பெரிய அடிப்பகுதியையுடைய பாக்கு மரத்தின் (நீல)மணியைப் போன்ற கழுத்தின்
கொழுத்த மடல்களில் (பாளை)விரிந்த திரட்சியைக் கொண்ட கொத்துக்களில்
நுண்ணிய நீர் திரளும்படியாக வீங்கிப் பக்கம் திரண்டு

 மேல்
 
  தெவு - (வி) கொள், take, receive
சீர் அமை பாடல் பயத்தால் கிளர் செவி தெவி - பரி 11/69
தாளம் அமைந்த பாடல் இன்பத்தால் தமது கிளர்ச்சியையுடைய செவி தெவிட்டும்படியாக நிறைத்துக்கொள்ள

 மேல்
 
  தெவுட்டு - (வி) தெவிட்டு, பார்க்க : தெவிட்டு
சீறூர் பெண்டிர்
திரி வயின் தெவுட்டும் சேண் புல குடிஞை - அகம் 283/5,6
சிறிய ஊர்களிலுள்ள பெண்கள்
திரியுமிடத்தே ஒலியெழுப்பும் சேய்மையிடத்தே இருக்கும் பேராந்தை

 மேல்
 
  தெழி - 1. (வி) 1. அதட்டு, drive or control by shouting; to bluster, utter threats;
          2. அணிகலன்கள் உரசிக்கொள்ளும்போது கலகலவென்று ஒலியெழுப்பல்,
         make sound as jewels rub against themselves
     - 2 (பெ) வெண்ணெய் கடையும்போது ஏற்படும் ஒலிபோன்ற ஒலி
1.1.
கொடும் கோல் உமணர் பகடு தெழி தெள் விளி - அகம் 17/13
கடிய தார்க்குச்சிகளையுடைய, உப்புவணிகர் தம் காளைகளை அதட்டும் தெளிந்த குரல்கள்
1.2.
ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி - மது 666
ஒளிரும் பொன்னாலான மின்னுகின்ற (காலில் அணியும்)நகைகள் ஒலிக்க (வெளியே)வந்து

திருந்து கோல் எல் வளை தெழிப்ப நாணு மறந்து
விதுப்புறு மனத்தேம் விரைந்து அவன் பொருந்தி - குறி 167,168
சீரான உருட்சியும் பளபளப்பும் உள்ள வளையல்கள் ஒலிக்குமாறு, வெட்கத்தை விட்டு,
நடுக்கமுற்ற மனத்தினையுடையவராய், விரைந்து (ஓடி)அவனை ஒட்டிநின்று,
2.
வெண்ணெய் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி
அண்ண அணித்து ஊராயின் - கலி 108/35,36
வெண்ணெய் கடையும் ஓசை கேட்கும் அளவுக்கு, வெகு தூரம் இல்லாமல்
மிகவும் அருகிலிருக்கிறது ஊர்

 மேல்
 
  தெள் - (பெ.அ) தெளிந்த, தெளிவான, clear, fine
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி - குறு 207/3
தன் இனத்திடமிருந்து பிரிந்துவந்த பருந்தின் தனிமைத்துயரைக் காட்டும் தெளிவாகக் கேட்கும் அழைப்பொலி

வன் பரல் தெள் அறல் பருகிய இரலை - குறு 65/1
கெட்டியான பரல்கற்களிடையே தெளிவாய் ஓடும் நீரைப் பருகிய ஆண்மான்

 மேல்
 
  தெள்ளிதின் - (வி.அ) 1. நிச்சயமாக, definitely
             2. தெளிவாக, clearly
             3. எல்லாரும் அறியும்படியாக
1.
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின்
வாரார் என்னும் புலவி உட்கொளல்
ஒழிக - நற் 11/3-5
அயலார் கூறும் அலர் உரைகளை நினைத்து, நிச்சயமாக
அவர் வரமாட்டார் என்ற பிணக்கத்தைக் கொள்வதை
ஒழிப்பாயாக
2.
நம் வரவினை
புள் அறிவுறீஇயின-கொல்லோ தெள்ளிதின்
-----------------------------------------------
திதலை அல்குல் தே மொழியாட்கே - நற் 161/8-12
நம் வரவினை
புள்ளினங்கள் கரைந்து அறியும்படி தெரிவித்தனவோ? - தெளிவாக
------------------------------------------------------------------------------
மஞ்சள் புள்ளித் தேமல் படர்ந்த அல்குலையும், இனிய மொழியையும் உடைய நம் காதலிக்கு -
3.
தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல - புறம் 73/6,7
யாவரும் காணும்படியாகத் துயில்கின்ற புலியை இடறிய குருடன் போல

 மேல்
 
  தெளி - 1. (வி) 1. தூவு, sprinkle as water
          2. நீர் போன்றவை கலங்கிய நிலையில் மாறி சுத்தமாகு,
          become clear, limpid, transparent, as water by the settling of sediment 
          3. நம்பு, trust 
          4. ஐயம் தீர், clear up
          5. அறி, understand, perceive
          6. உறுதியாகத் தெரிவி, affirm clearly, cause to believe
          7. தெளிவுபடுத்து, make known
      - 2. (பெ.அ) தெளிவான, clear
      - 3. (பெ) தெளிவு, clearness
1.1
நறு விரை தெளித்த நாறு இணர் மாலை - அகம் 166/5
நறுமண நீர் தூவப்பெற்ற நாறும் கொத்துக்களாலான பூமாலை
1.2
கடி சுனை தெளிந்த மணி மருள் தீம் நீர் - அகம் 368/10
விளக்கம் பொருந்திய சுனையில் உள்ள கலங்காமல் தெளிந்த, பளிங்கினைப் போன்ற இனிய நீரில் 
1.3
விளிந்தன்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே - நற் 178/10
நிலைகெட்டுப்போகிறது அவரை முற்றிலும் நம்பியிருந்த என் நெஞ்சம்.
1.4
சின்_மொழி தெளி என தேற்றிய சிறப்பு அன்றோ - கலி 132/13
கொஞ்சமாய்ப் பேசுபவளே! உன் ஐயம் தீர்வாயாக என்று அவளைத் தேற்றியதன் விளைவு அல்லவா,
1.5
இனை வனப்பின் மாயோய் நின்னின் சிறந்தார்
நில உலகத்து இன்மை தெளி நீ வருதி - கலி 108/53,54
இத்தகைய வனப்புகளைக் கொண்ட கருப்பழகியே! உன்னிலும் சிறந்தவர்கள் இந்த
உலகத்தில் இல்லை! அறிந்துகொள்! கிட்டே வா!
1.6
தாம் வர தெளித்த பருவம் காண்வர
இதுவோ என்றிசின் மடந்தை - நற் 99/4,5
தான் திரும்பி வருவேன் என்று உறுதியாகக் கூறிய பருவம் மிக்க அழகிதாக
வந்திருக்கும் இதுவோ என்று கேட்கிறாய் மடந்தையே!
1.7
ஆனா சீர் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை
தேன் ஆர்க்கும் பொழுது என தெளிக்குநர் உளர் ஆயின் - கலி 30/11,12
குன்றாத புகழையுடைய கூடல்மா நகரில் அரும்புகள் மலரும் நறிய முல்லைப் பூக்களில்
தேனீக்கள் களிப்புடன் ஆரவாரிக்கும் இன்பமான பொழுது என்று அவரிடம் தெளிவுபடுத்துவார் இருந்தால்?
2.
தெளி தீம் கிளவி யாரையோ - நற் 245/6
தெளிவான இனிய சொற்களும் உடையவளே! யாரோ
3.
குருதி கோட்டு அழி கறை தெளி பெற கழீஇயின்று - பரி 20/5
குருதி படிந்த கொம்பிலிருக்கும் மிக்க கறை தெளிவுபெற அந்த மழை கழுவிவிட்டது;

 மேல்
 
  தெளிர் - 1. (வி) 1. தெளிவாக ஒலி, sound clearly
          2. ஒளிபெறு, shine, sparkle 
      - 2. (பெ) தெளிவான ஓசை, clear sound
1.1.
நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை - அகம் 257/10
நுண்ணிய திரண்ட ஒளி பொருந்திய வளை ஒலிக்கும் முன்கை
1.2
ஒண்_தொடியார்
வண்ணம் தெளிர முகமும் வளர் முலை
கண்ணும் கழிய சிவந்தன - பரி 10/94-96
ஒளிரும் வளையலையுடைய அம் மகளிர்,
நீர்விளையாட்டினால் தம் நிறம் மேலும் ஒளிபெற்று விளங்க, அவரின் முகமும், முலைகளின்
கண்களும் மிகவும் சிவந்தன;
2.
தெண் கடல் அடைகரை தெளிர் மணி ஒலிப்ப - குறு 212/2
தெளிந்த நீரையுடைய கடலின் அடைந்தகரையில் தெளிவான ஓசையுள்ள மணிகள் ஒலிக்க

 மேல்
 
  தெற்றி - (பெ) 1. மேடை, திண்ணை, raised verandah, pial
         2. மேட்டு இடம், elevated ground, mound
         3. ஒரு மகளிர் விளையாட்டு
         4. ஒரு மரம், a tree
1.
தெற்றி உலறினும் வயலை வாடினும் - அகம் 259/13
மேடையிலுள்ள பூஞ்செடிகள் காய்ந்தாலும், வயலைக்கொடி வாடிப்போனாலும்
2.
செறி அரி சிலம்பின் குறும் தொடி மகளிர்
பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும்
தண் ஆன்பொருநை வெண் மணல் சிதைய - புறம் 36/3-5
செறிந்த உள்ளிடு பருக்கையையுடைய சிலம்பினையும், குறிய வளையினையுமுடைய மகளிர்
பொன்னால் செய்யப்பட்ட கழங்கினால் மேடை போல உயர்ந்த மணல்மேட்டின்மேல் இருந்து விளையாடும்
குளிர்ந்த ஆன்பொருநை நதியின் வெள்ளிய மணல் சிதற.
3.
தெற்றி என்பது மகளிர் விளையாடும் ஒருவகை விளையாட்டு என்றும் கொள்வர்
செறி அரி சிலம்பின் குறும் தொடி மகளிர்
பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும்
தண் ஆன்பொருநை வெண் மணல் சிதைய - புறம் 36/3-5
செறிந்த உள்ளிடு பருக்கையையுடைய சிலம்பினையும், குறிய வளையினையுமுடைய மகளிர்
பொன்னால் செய்யப்பட்ட கழங்கினால் தெற்றி என்ற விளையாட்டை ஆடும்
குளிர்ந்த ஆன்பொருநை நதியின் வெள்ளிய மணல் சிதற.

ஒரு மகள் உடையேன்-மன்னே அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு
பெரு மலை அரும் சுரம் நெருநல் சென்றனள்
இனியே தாங்கு நின் அவலம் என்றிர் அது மற்று
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே
உள்ளின் உள்ளம் வேமே உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்று அன்ன என்
அணி இயல் குறு_மகள் ஆடிய
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே - நற் 184
ஒரே ஒரு மகளை உடையவள் நான்; அவளும்
போர்க்களத்தில் மிக்குச் செல்லும் வலிமையையுடைய கூரிய வேலையுடைய காளையோடு
பெரிய மலைகளினூடே செல்லும் அரிய வழியில் நேற்றுச் சென்றுவிட்டாள்;
இப்பொழுது தாங்கிக்கொள் உன் வருத்தத்தை என்று சொல்கிறீர்! அது
எப்படிச் சாத்தியமாகும்? அறிவுள்ள மக்களே!
நினைத்துப்பார்த்தால் நெஞ்சம் கொதிக்கிறது - மையுண்ட கண்களின்
மணிகளில் வாழும் பாவையானது வெளியில் வந்து நடக்கக் கற்றுக்கொண்டதைப் போல என்
அழகிய சாயலையுடைய சிறுமகள் விளையாடிய
நீல மணி போன்ற நொச்சியையும் தெற்றிக்காயையும் கண்டு 

(இது இக்காலத்துப் பாண்டி விளையாட்டு எனப்படும் என்பர்- பொன் கழங்குக்குப் பதிலாக, இன்று 
மண் ஓட்டாலான சில்லுவைப் பயன்படுத்துவர்)

	

இந்தத் தெற்றி விளையாட்டை, மகளிர் மாடத்திலும் விளையாடுவர். 

கதிர்விடு மணியின் கண் பொரு மாடத்து
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும் - புறம் 53/2,3
ஒளிவிடுகின்ற மணிகளால் கண்ணைக்கூசவைக்கும் மாடத்தில்
விளங்கிய வளையையுடைய மகளிர் தெற்றி என்னும் விளையாட்டை ஆடும்

இந்தத் தெற்றியை, சிறுவர் விளையாடும் கிச்சுக்கிச்சுத் தாம்பாளம் என்ற விளையாட்டு என்றும் கூறுவர்.
முதலில் மணலை நீளமாகக் குவிக்கவேண்டும், ஒருவர். ஒரு சிறுகயிற்றுத்துண்டை முடிச்சுப்போட்டு, 
வலதுகை இருவிரல்களுக்குள் அதைப் பிடித்துக்கொண்டு, இடது கை விரல்களையும் வெறுமனே 
அதேபோல் பிடித்து, மணல் குவியலின் இரு பக்கங்களிலும் நுழைத்து நுழைத்துச் செல்வார். அப்போது,
மணலுக்குள் ஓரிடத்தில் அந்த முடிச்சை ஒளித்து வைத்துவிட்டு, விரல்களை வெளியே எடுப்பார்.
அடுத்தவர், இரு கைகளையும் கோர்த்து மணல் குவியலில் ஏதாவது ஓரிடத்தில் கைகளை வைத்து
மூடுவார். முதலாமவர், சிறிது சிறிதாக அந்த மணலைத் தோண்டி அந்த முடிச்சினை எடுக்கவேண்டும்.
எடுத்தால் அவருக்கு வெற்றி. இல்லாவிட்டால் மூடியவருக்கு வெற்றி.
இத்தகைய விளையாட்டும் மணல் பரப்பில் விளையாடப்படும்.

தெறுவர
தெற்றி பாவை திணி மணல் அயரும்
மென் தோள் மகளிர் - புறம் 283/9-11
வெகுட்சி தோன்ற தெற்றிப்பாவையைத் திணிந்த மணலில் வைத்து விளையாடும்
மெல்லிய தோளையுடைய மகளிர்

என்ற அடிகள் இந்த விளையாட்டைக் குறிக்கும் எனலாம். கிச்சுக்கிச்சுத்தாம்பாளத்தின் முடிச்சு, 
இங்கே பாவை எனப்படுகிறது எனலாம்.

இப்படி, ஒரு புன்னைக்காயைக் கொண்டு விளையாடிய ஒரு சிறுமி, பின்னர் அதை மறந்துவிட,
அந்தக் காய் வளர்ந்து பெரிய மரம் ஆகி,அவளுக்குத் தங்கை ஆனது என நற்றிணைப்பாடல் 172 குறிக்கிறது.

விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே - நற் 172/1-54.
தெற்றி உலறினும் வயலை வாடினும் - அகம் 259/13 என்ற அடியில் காணப்படும் தெற்றி
ஒருவகை மரம் என்று தமிழ்ப் பேரகராதி கூறும்.

 மேல்
 
  தெற்று - 1. (வி) 1. அலை, உலுக்கு, shake, disturb
          2. தடைப்படுத்து, obstruct 
      - 2. (பெ) தேற்றம், உறுதி, certainty
1.1.
குன்று என குவைஇய குன்றா குப்பை
கடும் தெற்று மூடையின் இடம் கெட கிடக்கும்
சாலி நெல்லின் - பொரு 244-246
மலை என்னும்படி குவித்த குறையாத நெற்பொலி
உலுக்கிக் குலுக்கிக் கட்டிய மூடைகள் வெற்றிடம் இல்லையாகும்படி (எங்கும்)கிடக்கும்,
செந்நெல் விளைந்துநின்ற
1.2
இமையாது
இரை நசைஇ கிடந்த முது வாய் பல்லி
சிறிய தெற்றுவது ஆயின் பெரிய
ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும்
நின்று ஆங்கு பெயரும் கானம் - அகம் 387/15-19
கண்ணிமையாது
உணவை வேட்டுக்கிடந்த முதுமை வாய்ந்த பல்லி
சிறிய அளவில் தடைப்படுத்துவதாயின், பெரிய
நெற்றிப்பட்டம் அணிந்த யானையில் செல்லும் அரசராயிருப்பினும்
மேற்செல்லாமல் திரும்பிச் செல்லும் கானம்
2.
இனிதின் இயைந்த நண்பு அவர் முனிதல்
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம் ஆயின் - அகம் 328/7,8
இனிமையாகப் பொருந்திய நட்பினை அவர் பின் வெறுத்தல்
உறுதியாவதை நாம் நன்கு உணர்வேமாயின்

 மேல்
 
  தெற்றென - (வி.அ) 1. தெளிவாக, clearly, distinctly
            2. விரைவாக, speedily, swiftly
1.
நனி பசந்தனள் என வினவுதி அதன் திறம்
யானும் தெற்றென உணரேன் - அகம் 48/3,4
மிகவும் மெலிவடைந்துள்ளாள்’ என்று (காரணம்)கேட்கிறாய், அதன் காரணத்தை
நானும் தெளிவாக அறியேன்
2.
பெற்றவை பிறர்_பிறர்க்கு ஆர்த்தி தெற்றென
செலவு கடைக்கூட்டுதிர் ஆயின் பல புலந்து - பொரு 174,175
பெற்ற பொருளை மற்ற ஒவ்வொருவருக்கும் நிறையத் தந்து, விரைவாக
(உமது இந்த)பயணத்தை முடிவுக்குக் கொண்டுவருவீராயின்

 மேல்
 
  தெறல் - (பெ) 1. வருத்துதல், தண்டித்தல், affliction, punishing
         2. அழித்தல், ruining
         3. சினத்தல், being angry
         4. வெம்மை, heat
1.
சினனே காமம் கழி கண்ணோட்டம்
அச்சம் பொய் சொல் அன்பு மிக உடைமை
தெறல் கடுமையொடு பிறவும் இ உலகத்து
அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும் - பதி 22/1-4
கோபம், காமம், மிகுந்த உவகை,
அச்சம், பொய்சொல்லல், பொருளின் மீது மிகுந்த பற்றுக்கொள்ளல்,
தண்டிப்பதில் கடுமை ஆகிய இவற்றோடு இவை போன்ற பிறவும் இந்த உலகத்தில்
அறவழியிலான ஆட்சிக்குத் தடைக்கற்கள் ஆகும்
2.
அரும் தெறல் மரபின் கடவுள் காப்ப - அகம் 372/1
பிறரால் அழிப்பதற்கு அரிய முறைமையினையுடைய கடவுள் காத்தலின்
3.
வெம் தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும் - பெரும் 17
வெம்மையான சினத்தலைக் கொண்ட ஞாயிற்றுடன் திங்களும் வலமாகத் திரிதலைச் செய்யும்
4.
தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம் நீ - பரி 3/63
தீயினுள் சுடுகின்ற வெம்மை நீ! பூவினுள் கமழ்கின்ற மணம் நீ!

 மேல்
 
  தெறி - (வி) 1. துள்ளு, spring, leap, hop
        2. விரலால் உந்து, twang, as a bow-string with the finger and thumb
        3. துளி அல்லது பொறியாகச் சிதறு, splash
        4. (விரலால்) சுண்டிவிடு, shoot as with the finger and thumb
        5. ஒன்றில் பட்டுச் சிதறி விழு, strike and fly off 
1.
சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை - அகம் 304/8
சிறிய குட்டியைத் தழுவிக்கொண்ட துள்ளிய நடையினையுடைய இளைய பெண்மான்
2.
தினை கள் உண்ட தெறி கோல் மறவர் - அகம் 284/8
தினையினால் ஆக்கிய கள்ளினை உண்ட நாணினைத் தெறித்துவிடுக்கும் அம்பினையுடைய மறவர்கள்
3.
அம் பணை நெடு வேய்
கண் விட தெறிக்கும் மண்ணா முத்தம் - அகம் 173/13,14
அழகிய பெரிய நெடிய மூங்கிலின்
கணுக்கள் பிளக்கத் தெறித்து விழும் கழுவப்பெறாத முத்துக்கள்
4.
மட பால் ஆய்_மகள் வள் உகிர் தெறித்த
குட பால் சில் உறை போல - புறம் 276/4,5
இளமைப்பான்மையையுடைய ஆயர்குல மகள் தன் செழுமையான நகத்தினால் சுண்டிவிட்ட
ஒரு குடம் பாலில் விழுந்த சிலவாகிய பிரைமோர் போல
5.
அரி மதர் மழை கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல் - கலி 77/4
சிவந்த வரிகளும், செருக்கும், குளிர்ச்சியும் கொண்ட கண்ணின் நீர், பரந்த முலையின் மேல்
விழுந்து சிதறுவது போல்

 மேல்
 
  தெறீஇ - (வி.எ) தெறு = குவி என்பதன் வினை எச்சத்தின் மரூஉ
கவட்டு அடி பொருத பல் சினை உதிர்வை
அகன் கண் பாறை செம் வயின் தெறீஇ - அகம் 393/6,7
மாடுகளின் கவர்த்த குளம்பால் துவைக்கப்பட்ட பல கிளைகளினின்றும் உதிர்ந்த வரகினை
அகன்ற இடமுள்ள பாறையில் செவ்விய இடத்தில் குவித்து

 மேல்
 
  தெறு - (வி) 1. வருத்து, cause distress
        2. சுட்டுப்பொசுக்கு, burn, scorch
        3. வாட்டு, cause to dry, wither
        4. குவி, heap 
1.
எய் தெற இழுக்கிய கானவர் அழுகை - மலை 301
முள்ளம்பன்றி வருத்தும்படி தவறுசெய்த குறவருடைய அழுகையும்
2.
வேய் வனப்பு இழந்த தோளும் வெயில் தெற
ஆய் கவின் தொலைந்த நுதலும் நோக்கி - ஐங் 392/1,2
மூங்கிலின் வனப்பை இழந்த தோள்களையும், வெயில் பொசுக்கியதால்
அழகிய நலம் தொலைந்த நெற்றியையும் பார்த்து
3.
வறம் தெற மாற்றிய வானமும் போலும் - கலி 146/14
வறட்சி வாட்டும்படியாகப் பெய்யாமற்போன மேகத்தைப் போலவும்
4.
துடி இகுத்து
அரும் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர் - அகம் 89/14,15
உடுக்கையினைத் தாழக் கொட்டி
அரிய அணிகலன்களைத் திறையாகப்பெற்றுக் குவித்த பெரிய போர் விருப்பினையுடைய வென்றியினர்

 மேல்
 
  தெறுவர் - (பெ) பகைவர், foes, enemies
தெறுவர்
பேர் உயிர் கொள்ளும் மாதோ - புறம் 307/9,10
பகைவருடைய
மிக்க உயிர்களைக் கவர்வான்

 மேல்
 
  தெறுவர - (வி.எ) 1. வருத்த, causing distress
           2. அச்சம் உண்டாக, causing fear
           3. சினம் உண்டாக, causing anger
1.
தமியே கண்ட தண்டலையும் தெறுவர
நோய் ஆகின்றே மகளை நின் தோழி - நற் 305/4,5
என் மகளின்றி நான் மட்டும் தனியே சென்று பார்த்த சோலையும் வருத்திநிற்க,
எனக்கு வருத்தம் உண்டாக்குகிறது மகளே
2.
தந்தை
கண் கவின் அழித்ததன் தப்பல் தெறுவர
ஒன்றுமொழி கோசர் கொன்று முரண் போகிய - அகம் 196/8-10
தன் தந்தையின் கண்ணின் அழகைக் கெடுத்ததாகிய தவற்றிற்காக, அச்சம் உண்டாக
நெடுமொழியினையுடைய கோசர்களை கொல்வித்து தன் மாறுபாடு தீர்ந்த
3.
நுரை முகந்து அன்ன மென் பூம் சேக்கை
அறியாது ஏறிய என்னை தெறுவர
இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை - புறம் 50/7-9
நுரையை முகந்தாற் போன்ற மெல்லிய பூவையுடைய கட்டிலின்கண்ணே
அதனை முரசு கட்டில் என்று அறியாது ஏறிப் படுத்த என்னை, சினம் உண்டாக
இரு துண்டுகள் ஆக்கும் உன்னுடைய வாளின் வீச்சை மாற்றியதாக

 மேல்
 
  தெறுழ் - (பெ) ஒரு வகைக் காட்டு மரம், a jungle tree
வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல்
நரை நிறம் படுத்த நல் இணர் தெறுழ் வீ		5
தாஅம் தேரலர்-கொல்லோ - நற் 302/4-6
வருகின்ற மழையை எதிரேற்று நிற்கும் நீல மணியின் நிறங்கொண்ட பெரிய புதரில்
வெள்ளை நிறத்தில் பூத்த நல்ல பூங்கொத்துக்களையுடைய தெறுழமரத்தின் பூக்களைக் கண்டும்
இது கார்காலம் என்று தாம் தெளிந்தாரில்லை போலும்; 

இந்தத் தெறுழம்பூ யானையின் முகத்தில் இருக்கும் புள்ளிகளைப் போல் இருக்கும்.

களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப - புறம் 119/2
களிற்று முகத்தின்கண் புகர் போல தெறுழினது மலர் பூக்க

 மேல்
 
  தென்னம்பொருப்பன் - (பெ) தெற்குமலைக்குத் தலைவனான பாண்டியன், 
              King Pandiyan, ruler of the mountain in the south
தெரி மாண் தமிழ் மும்மை தென்னம்பொருப்பன்
பரி_மா நிரையின் பரந்தன்று வையை - பரி 26/1,2
ஆராய்ந்தெடுத்த மாட்சிமைக்குரிய தமிழ் மூன்றினையும் கொண்ட தெற்குமலைக்குத் தலைவனான 
பாண்டியனின்
குதிரைகள் வரிசையாக பரந்து வருவதைப் போன்று பரவி வருகிறது வையை

 மேல்
 
  தென்னர் - (பெ) பாண்டியர், the Pandiyan kings
பொன் அணி நெடும் தேர் தென்னர் கோமான்
எழு உறழ் திணி தோள் இயல் தேர் செழியன் - அகம் 209/3,4
பொன்னால் அணியப்பெற்ற நீண்ட தேரினையுடைய பாண்டியர் பெருமானாகிய
கணைய மரத்தை ஒத்த திண்ணிய தோளினையும் நன்கு இயன்ற தேரினையும் உடைய பாண்டியன்
நெடுஞ்செழியன்

 மேல்
 
  தென்னவர் - (பெ) பாண்டியர், the Pandiyan kings
வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய
நிலன் உற நிமிர் தானை நெடு நிரை நிவப்பு அன்ன - பரி 7/6,7
வெற்றியுண்டாக முழங்கும் முரசினையுடைய பாண்டிய மன்னர் கொள்ளக் கருதிய
நாட்டைச் சேர்வதற்கு நிமிர்ந்து செல்லும் படையின் நீண்ட அணியின் எழுச்சியைப் போல

 மேல்
 
  தென்னவன் - (பெ) பாண்டியன், Pandiyan, the ruler of the South
உலகம் ஒரு நிறையா தான் ஓர் நிறையா
புலவர் புல கோலால் தூக்க உலகு அனைத்தும்
தான் வாட வாடாத தன்மைத்தே தென்னவன்
நான்மாடக்கூடல் நகர் - பரி 29/1,4
இந்த உலகத்தின் அனைத்து நகர்களின் பெருமையையும் ஒரு பக்கமும்,. மதுரை நகரை ஒரு பக்கமும்
புலவர்கள் தம் அறிவாகிய துலாக்கோலில் இட்டு சீர்தூக்கும்போது, அந்த அனைத்து நகர்களின் பெருமையும்
தாம் வாடிப்போக, வாடிப்போகாத தன்மையையுடையது, பாண்டியனின்
நான்மாடக் கூடலாகிய மதுரை.

 மேல்
 
  தென்னன் - (பெ) பாண்டியன், Pandiyan, the ruler of the South
கெடாஅ நல் இசை தென்னன் தொடாஅ
நீர் இழி மருங்கில் கல் அளை கரத்த அ
வரையரமகளிரின் அரியள் - அகம் 342/10-12
கெடாத நல்ல கீர்த்தியினைய்டையோனாகிய பாண்டியனது தோண்டப்படாத
அருவி வீழும் பொய்கையினையுடைய மலையின் குகையில் மறைந்த அந்த
வரையரமகளிர் போல அரியவள்

 மேல்
 
  தெனாஅது - (பெ) தெற்கிலுள்ளது, that which is in the south
தெனாஅது
வெல் போர் கவுரியர் நன் நாட்டு உள்ளதை - அகம் 342/3,4
தெற்கின்கண் உள்ளதாகிய
போர் வெல்லும் பாண்டியரின் நல்ல நாட்டில் உள்ளதாய

 மேல்