|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தீ - 1. (வி) (பயிர் முதலியன) கருகு, வாடு, be withered or blighted, as growing crops in times of drought;
- 2. (பெ) 1. நெருப்பு, fire
2. தீமை, evil
1.
இன்பத்தின் இகந்து ஒரீஇ இலை தீந்த உலவையால்
துன்புறூஉம் தகையவே காடு என்றார் - கலி 11/10,11
வீட்டின் இன்பமான சூழ்நிலையைக் கைவிட்டுப் பிரிந்துசென்று, இலைகள் தீய்ந்துபோன உலர்ந்த மரக் கிளைகளால்
நிழலின்றித் துன்புறும் தன்மை கொண்டது பாலைக்காடு என்றார்
2.1.
மெய் உரித்து இயற்றிய மிதி அதள் பள்ளி
தீ துணை ஆக சேந்தனிர் கழி-மின் - மலை 419,420
(ஆடுகளின்)உடலை உரித்துச் செய்த (வார்)மிதித்த தோலாலான படுக்கையில்,
நெருப்பே துணையாக தங்கிப் போவீர்
2.2.
அலர் வாய் பெண்டிர் அம்பலொடு ஒன்றி
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து - நற் 36/6,7
புறங்கூறும் வாயையுடைய மகளிரின் வம்புமொழிகளோடு சேர்ந்து
உயர்வற்ற தீய சொற்களை கூறுவதற்குரிய பேச்சுக்களை மேற்கொண்டு,
மேல்
தீமடு - (வி) நெருப்புமூட்டு, ignite fire
ஐயர் அவிர் அழல் எடுப்ப அரோ என்
கையறு நெஞ்சம் கனன்று தீமடுக்கும்
இ மாலை - கலி 130/9-11
அந்தணர் செந்தழல் வளர்க்க, என்
செயலற்ற நெஞ்சம் கொதித்துக் காமத்தீயை மூட்டும்
இந்த மாலை;
மேல்
தீமூட்டு - (பெ) தீ மூட்டுவதற்குரிய பொருள், lighting material
களிறு சுவைத்திட்ட கோது உடை ததரல்
கல்லா உமணர்க்கு தீமூட்டு ஆகும் - அகம் 257/16,17
களிற்றியானை சுவைத்துப்போட்ட சக்கையாகிய மரப்பட்டைகள்
கல்லாத உப்பு வாணிகர்க்குத் தீமூட்டுவதற்கு ஆகும்.
மேல்
தீய் - (வி) (பயிர் முதலியன) கருகு, வாடு,
be withered or blighted, as growing crops in times of drought
எஞ்சாது
தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெம் சினை
வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி - குறு 211/3-5
மீதமின்றி முற்றிலுமாகத்
கருகிப்போன மராமரத்தின் ஓங்கிய வெம்பிப்போன கிளையில்
வேனிற்காலத்து ஒற்றைப் பூங்கொத்தினைத் தேனுடன் ஊதி
மேல்
தீய்ப்பு - (பெ) கருக்குவது, getting scorched
இமை தீய்ப்பு அன்ன கண்ணீர் தாங்கி - குறு 4/2
கண்ணிமைகளைக் கருக்குவது போன்ற கண்ணீரைத் தாங்கிக்கொண்டு
மேல்
தீர் - (வி) 1. செலவாகிப்போ,கரைந்துவிடு, be used up, exhausted
2. இல்லாமல்போ, be non existent, absent
3. முடிவுக்கு வா, முற்றுப்பெறு, be completed
4. கழி, be spent, pass
5. (பசி,களைப்பு முதலியன) நீங்கு, freed of
6. விட்டுச்செல், அகல், leave, quit
7. அறுதிசெய், நிச்சயி, be decided, determined
8. போக்கு, clear, remove
9. முடிவுக்கு வரச்செய், finish, complete
1.
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
இரவல் மாக்கள் உண கொள தீர்ந்து என - புறம் 333/9,10
வரகும், தினையுமாகத் தன் மனையில் உள்ளவற்றை எல்லாம்
இரவலர் உண்டதனாலும், கொண்டதனாலும் செலவாகிப்போய்விட்டனவாக
2.
திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து - திரு 70
திருமகள் வீற்றிருந்த குறைகள் இல்லாமற்போன அங்காடித் தெருவினையும்
3.
துறை பல முற்றிய பை தீர் பாணரொடு - மலை 40
துறைகள் பலவற்றையும் கற்றுத்தேர்ந்த இளநிலை முடிந்த (=அனுபவமிக்க) பாணர்களோடு
4.
கலப்போடு இயைந்த இரவு தீர் எல்லை - பரி 19/9
புணர்ச்சியின்பத்தோடு பொருந்திய இரவு முடிந்த எல்லையாகிய அதிகாலையிலே
5.
கண்ணின் நோக்கி
முனியாது ஆட பெறின் இவள்
பனியும் தீர்குவள் செல்க என்றோளே - நற் 53/9-11
கண்ணுக்கினிய காட்சிகளைக் கண்டு
வெறுப்பின்றி நீராடினால், இவளின்
நடுக்கமும் நீங்கும், செல்வீர்களாக என்ற நம் அன்னை
6.
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி - குறு 207/3
தன் இனத்திடமிருந்து பிரிந்துவந்த பருந்தின் தனிமைத்துயரைக் காட்டும் தெளிந்த அழைப்பொலி
7.
ஈர நன் மொழி தீர கூறி - குறி 234
கனிவான நல்ல மொழிகளை நிச்சயித்துக் கூறி,
8.
துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்
இனிதே - நற் 216/1,2
ஊடலைப் போக்கிக் கூடலுடன் பொருந்தி என்னை நெருங்காராயினும்,
இனியதே
9.
அரும் துயர் அவலம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே - நற் 140/10,11
நமது நீக்கமுடியாத அரிய துயரத்தின் அவலத்தை முடிக்கும்
மருந்து வேறு இல்லை, நான் உற்ற நோய்க்கு
மேல்
தீர்கை - (பெ) நீங்குதல், leaving
ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேரொக்கல்
தீர்கை விடுக்கும் பண்பின - புறம் 391/8,9
இங்கே வந்து தங்கிய என் மிகப்பெரிய சுற்றம்
இந்நாட்டினின்றும் நீங்குதலைக் கைவிடும் பண்பினையுடையவராய்
மேல்
தீர்வு - (பெ) (பிணக்கு போன்றவை) முடிவுக்கு வருதல், be settled as quarrel
அன்பன்
சேறு ஆடு மேனி திரு நிலத்து உய்ப்ப சிரம் மிதித்து
தீர்வு இலது ஆக செரு உற்றாள் செம் புனல் - பரி 7/73-75
தலைவன்
சந்தனம் பூசிய தன் மேனியை அழகிய நிலத்தில் கிடத்தி வணங்க, அவனுடைய தலையை மிதித்து
(தன் சினம்) முடியப்பெறாதவளாக ஊடல் கொண்டாள்
மேல்
தீர்வை - (பெ) கீரி, Mongoose
அரவு குறும்பு எறிந்த சிறு கண் தீர்வை - மலை 504
பாம்பின் வலிமையை அழித்த சிறிய கண்களையுடைய கீரியும்
மேல்
தீர - (வி.அ) முற்றிலும், entirelu, absolutely
தீர தறைந்த தலையும் தன் கம்பலும் - கலி 65/6
முற்றிலும் மொட்டையான தலையும், மேலே பொத்திய துணியும் உடையவனாய்
மேல்
தீரம் - (பெ) கரை, shore, bank
தீரமும் வையையும் சேர்கின்ற கண் கவின் - பரி 22/35
கரையிலும் வையையிலும் சேர்கின்ற கண்ணுக்குப்புலனாகும் அழகு
மேல்
தீவிய - (பெ) இனிமையானவை(பெரும்பாலும் சொற்கள்), sweet (words)
புன் காழ் நெல்லி பைம் காய் தின்றவர்
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி - அகம் 54/15,16
புல்லிய விதைகளையும் கொண்ட நெல்லியின் பசுங்காயைத் தின்றவர்
நீர் குடிக்கும்போது பெறும் சுவையைப் போல, இனிய மொழிகளைக் கூறி,
மேல்
தீற்று - (வி) உண்பி, feed
ஈர் சேறு ஆடிய இரும் பல் குட்டி
பல் மயிர் பிணவொடு பாயம் போகாது
நெல்மா வல்சி தீற்றி
குழி நிறுத்து ஓம்பிய குறும் தாள் ஏற்றை - பெரும் 341-344
ஈரத்தையுடைய சேற்றை அளைத்த கரிய பலவாகிய குட்டிகளையுடைய
பலவாகிய மயிர்களையுடைய பெண் பன்றிகளோடே மனவிருப்பம் கொள்ளாமல்,
நெல்லின் உமியை மாவாக்கிய (தவிட்டு)உணவினை (வயிறு நிறைய)த் தின்னப் பண்ணிப், பலநாளும்
குழியிலே நிறுத்திப் பாதுகாத்த குறிய காலையுடைய ஆண்பன்றியின்
மேல்
|
|
|