<<முந்திய பக்கம்

சங்க இலக்கியம் - அருஞ்சொற்களஞ்சியம்
கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
து - முதல் சொற்கள்
துகள்
துகிர்
துகில்
துகிலிகை
துச்சில்
துஞ்சு
துஞ்சுமரம்
துடக்கல்
துடக்கு
துடரி
துடவை
துடி
துடியன்
துடுப்பு
துணங்கை
துணர்
துணி
துணியல்
துத்தி
துதி
துதை
துப்பு
தும்பி
தும்பை
துமி
துய்
துயல்
துயல்வரு(தல்)
துயல்வு
துயிற்று
துர
துரப்பு
துராய்
துரு
துருத்தி
துருவை
துரூஉ
துலங்குமான்
துலாம்
துவ்வு
துவ்வாமை
துவர்
துவர
துவரை
துவலை
துவற்று
துவன்று
துவை
துவைப்பு
துழ
துழவை
துழாய்
துழைஇ
துழைஇய
துளக்கு
துளங்கு
துளர்
துளவம்
துளவு
துளி
துளுநாடு
துளும்பு
துற்று
துறக்கம்
துறப்பு
துறு
துறுகல்
துறை
துறைப்படு
துறைபோ(தல்)
துறைவன்
துன்
துன்னம்
துன்னல்
துனி
துனை
துனைதரு(தல்)

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
  துகள் - (பெ) 1. குற்றம், fault
        2. தூசி, dust
        3. பூந்தாது, pollen
1.
துவர முடித்த துகள் அறும் முச்சி - திரு 26
முற்ற முடித்த குற்றம் இல்லாத கொண்டையில்
2.
அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப
நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர் - சிறு 200,201
தலைமைச் சிறப்புடைய யானைகளின் (மத)அருவி (எழுந்த)தூசியை அணைத்துவிடுவதால்
புழுதி அடங்கின தெருவினையுடைய, அவ்வள்ளலின் விழா நடக்கின்ற பழைய ஊர்தானும்
3.
தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி - நற் 270/2,3
பூஞ்சோலை மலர்களின் மணங்கமழும், வண்டுகள் மொய்க்கின்ற நறிய மணத்தையுடைய,
இருளைப் போன்ற கூந்தல்களில் உள்ள மிகுதியான பூந்துகள்களில் மூழ்கியெழுந்து

 மேல்
 
  துகிர் - (பெ) பவளம், red coral
சே அடி செறி குறங்கின்
பாசிழை பகட்டு அல்குல்
தூசு உடை துகிர் மேனி
மயில் இயல் மான் நோக்கின்
கிளி மழலை மென் சாயலோர் - பட் 146-150
சிவந்த பாதங்களும், செறிந்த தொடைகளும்,	
புத்தம் புதிய நகைகளும், பெரிய அல்குலும்,
தூய்மையான பஞ்சினால் நெய்த ஆடையும், பவளம் போலும் நிறமும்,
மயில்(போன்ற) மென்னயமும், மான்(போன்ற) பார்வையும்,
கிளி(போன்ற) மழலைமொழியும், மென்மையான சாயலும் உடைய மகளிர் 

 மேல்
 
  துகில் - (பெ) நல்லாடை, fine cloth
அவிர் துகில் புரையும் அம் வெள் அருவி - குறி 55
ஒளிவிடும் (வெண்மையான)ஆடையைப் போலிருக்கும் -- அழகிய வெண்ணிற அருவியில்

 மேல்
 
  துகிலிகை - (பெ) வண்ணம்தீட்டும் கோல், painter'sbrush
துகிலிகை அன்ன துய் தலை பாதிரி - நற் 118/8
வண்ணக்கோலின் தலையைப் போன்ற பஞ்சினைத் தலையில் கொண்ட பாதிரியின்

 மேல்
 
  துச்சில் - (பெ) ஓய்விடம், ஒதுக்கிடம், temporary abode, place of retreat
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம்
மா இரும் பெடையோடு இரியல் போகி
பூதம் காக்கும் புகல் அரும் கடி நகர்
தூதுணம்புறவொடு துச்சில் சேக்கும் - பட் 54-58
மினுமினுக்கும் சடையையுடைய துறவிகள் தீயில் யாகம்செய்யும்(போது எழும்பிய)
(நெய் முதலியவற்றின்)மணமுள்ள புகையை வெறுத்து, குயில்கள் தம்முடைய
கரிய பெரிய பேடைகளுடன் விரைவாக(விழுந்தடித்து)ப் பறந்தோடி,
பூதங்கள் (வாசலில்)காத்துநிற்கும் நுழைவதற்கு அரிய காவல் உள்ள (காளி)கோட்டத்தில்,
கல்லைத் தின்னும் அழகிய புறாக்களுடன் ஒதுக்குப்புறமாகத் தங்கும்

 மேல்
 
  துஞ்சு - (வி) 1. தூங்கு, sleep
        2. தலைகவிழ்ந்திரு, hang head down
        3. நிலைகொண்டிரு, abide,settle down
        4. தங்கு, stay
        5. செயலற்று இரு, be inactive
        6. சோம்பியிரு, indolent, be idle, lazy
1.
துஞ்சு புலி இடறிய சிதடன் போல - புறம் 73/7
தூங்குகின்ற புலியை இடறிய பார்வையற்றவன் போல
2.
தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச - கலி 119/6
தம் புகழைக் கேட்டவர் தலை நாணி நிற்பது போல் தலையைச் சாய்த்து மரங்கள் தூங்க
3.
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடும் கோட்டு - சிறு 106
சொட்டும் மழை (எப்போதும்)பெய்யும் (உயர்ச்சியால்)காற்று நிலைகொண்டிருக்கும் நெடிய சிகரங்களையுடைய
4.
சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர் - பெரும் 121
வில்லைச் சார்த்தி வைத்த அம்புகள் தங்கும் அகன்ற வீடுகளையும்
5.
நாடு வறம் கூர நாஞ்சில் துஞ்ச
கோடை நீடிய பைது அறு காலை - அகம் 42/5,6
நாட்டில் வறுமை மிக, கலப்பைகள் செயலற்று இருக்க
கோடை நீண்ட பசுமையற்ற காலத்தில் 
6.
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சி - புறம் 182/4
சோம்பியிருத்தலுமிலர், பிறர் அஞ்சத்தகும் துன்பத்திற்குத் தாமும் அஞ்சி

 மேல்
 
  துஞ்சுமரம் - (பெ) கணையமரம், Wooden bar to fasten a door
துஞ்சுமரம் கடுக்கும் மாசுணம் விலங்கி - மலை 261
கணையமரத்தைப் போன்ற மலைப்பாம்பினின்றும் ஒதுங்கி

 மேல்
 
  துடக்கல் - (பெ) சிக்கவைத்தல், entangling
செறி அரில் துடக்கலின் பரீஇ புரி அவிழ்ந்து
ஏந்து குவவு மொய்ம்பில் பூ சோர் மாலை - அகம் 248/11,12
நெருங்கிய புதர்கள் சிக்கவைத்தலால் அறுபட்டு, புரிகள் அவிழ்ந்து வீழ்தலால்
உயர்ந்துதிரண்ட தோளிடத்தே பூக்கள் உதிரப்பெறும் மாலையானது

 மேல்
 
  துடக்கு - (வி) 1. சிக்கவை, அகப்படுத்து, entangle, entrap 
         2. பிணி, கட்டு, bind, tie
1.
பொய் போர்த்து பாண் தலை இட்ட பல வல் புலையனை
தூண்டிலா விட்டு துடக்கி தான் வேண்டியார்
நெஞ்சம் பிணித்தல் தொழிலா திரிதரும்
நுந்தை பால் உண்டி சில - கலி 85/22-25
பொய்யாகப் போர்த்துக்கொண்ட பாணர் தொழிலை மேற்கொண்ட அந்தச் சகல கலா வல்ல இழிஞனைத்
தூண்டிலாகப் பயன்படுத்திச் சிக்கவைத்துத் தான் விரும்பியவரின்
நெஞ்சத்தைக் கவர்வதையே தொழிலாகக் கொண்டு திரியும்
உன் தந்தைக்குரிய பாலையும் கொஞ்சம் உண்பாய்!
2.
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணி பொலிந்து
மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கை
குறும் தொடி துடக்கிய நெடும் தொடர் விடுத்தது
உடன்றனள் போலும் நின் காதலி - அகம் 176/15-18
விழாவில் ஆடும் மகளிரொடு தழுவிஆடும் அணியால் பொலிவுற்று
மலரைப் போன்ற மையுண்ட கண்ணினையும் மண்புற்ற அணியினையும் உடைய நின் பரத்தை
தனது குறிய வளை அணிந்த முன்கையினால் பிணித்த நெடிய பிணிப்பினை விடுத்துச் சென்ற அளவுக்கே
வெகுண்டனள் போலும் உன் காதலி

 மேல்
 
  துடரி - (பெ) தொடரி, காட்டு இலந்தை, Ziziphus rugosa
புளி சுவை வேட்ட செம் கண் ஆடவர்
தீம் புளி களாவொடு துடரி முனையின் - புறம் 177/8,9
புளிச்சுவையை விரும்பிய சிவந்த கண்ணையுடைய ஆடவர்
இனிய புளிப்பையுடைய களாப்பழத்துடனே துடரிப்பழத்தைத் தின்று வெறுப்பின்

	

 மேல்
 
  துடவை - (பெ) 1. தோட்டம், விளைநிலம், garden, cultivated land
தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை - பெரும் 201
வளைவாக, விதைத்தவாறே, உழுத, (பின்னர் வளர்ந்த களைகளைக்)களைக்கொட்டுச் செத்திய தோட்டத்தை

 மேல்
 
  துடி - (பெ) உடுக்கை, A small drum shaped like an hour-glass
கடும் துடி தூங்கும் கணை கால் பந்தர் - பெரும் 124
(ஓசை)கடிதான உடுக்கையும் தொங்கும் திரண்ட காலையுடைய பந்தலையும்,

	

 மேல்
 
  துடியன் - (பெ) உடுக்கடிப்பவன், the person who plays the drum 'udukku'
துடியன் கையது வேலே - புறம் 285/2
துடிப்பறைகொட்டுவோன் கையின் உளதாயிற்று வேல்

 மேல்
 
  துடுப்பு - (பெ) 1. காந்தள் பூவின் மடல், a petal of the flower 'kAnthaL'
         2. குழைவான சோறு அல்லது களி போன்றவற்றைக் கிண்டுவதற்குப் பயன்படும் தட்டையான அகப்பை
         a flat, narrow, long piece of wood used for stirring rice or ragi pudding 
1.
காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி - மலை 336
காந்தளின், துடுப்பைப்போன்ற, கமழுகின்ற (வெட்டுவதற்குக்கூரான விளிம்புள்ள)மடலை ஓங்கிப்பாய்ச்சி
2.
துடுப்பொடு சிவணிய களி கொள் வெண் சோறு - புறம் 328/11
துடுப்பால் துழாவப்பட்ட களி அமைப்பைத் தன்னுள்கொண்ட வெண்மையான சோறு

 மேல்
 
  துணங்கை - (பெ) கைகளை முடக்கி விலாப்பக்கங்களில் சேர்த்து அடித்துக்கொண்டு அசைந்தாடும் ஒருவகைக் கூத்து,
          A kind of dance in which the arms bent at the elbows are made to strike against the sides

அடுத்து ஆடிக்கொண்டு வருவோரைத் தழுவிக்கொள்ளுதலும் உண்டு.
     
குழையன் கோதையன் குறும் பைம் தொடியன்
விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல - நற் 50/2,3
நம் தலைவன் இளந்தளிர்களையும், மாலையையும், குறிய சிறிய வளையல்களையும் கொண்டவனாய்
(சேரி)விழாவில் கொண்டாடும் துணங்கைக் கூத்தில் (பரத்தையரைத்)தழுவிக்கொள்ளுதலை கையகப்படுத்தச் சென்றபோது

முழா இமிழ் துணங்கைக்கு தழூஉ புணை ஆக - பதி 52/14
முழவு ஒலிக்கும் துணங்கைக் கூத்தில் தழுவியாடுவோருக்குத் துணையாக

பெரும்பாலும் மகளிர் ஆடுவது.

மள்ளர் குழீஇய விழவினானும்
மகளிர் தழீஇய துணங்கையானும்
யாண்டும் காணேன் மாண் தக்கோனை - - குறு 31/1-3
மறவர்கள் கூடியுள்ள சேரி விழாக்களிலும்,
மகளிர் தழுவியாடும் துணங்கைக்கூத்திலும்,
எங்குமே கண்டேனில்லை மாண்புக்குரிய தலைவனை!

ஆடும்போது பாடல் இசைப்பதும் உண்டு.

தமர் பாடும் துணங்கையுள் அரவம் வந்து எடுப்புமே - கலி 70/14
சுற்றத்தார் பாடும் துணங்கைக் கூத்துப் பாடலின் ஆரவாரம் வந்து அத் தூக்கத்தைக் கலைக்கும்;

 மேல்
 
  துணர் - 1. (வி) கொத்தாகு, cluster (as in flowers)
     - 2. (பெ) 1. பூங்கொத்து, cluster of flowers
         2. காய்,பழம் இவற்றின் குலை, bunch
1.
விரி சினை துணர்ந்த நாகு இள வேங்கையின் - புறம் 352/12
விரிந்த கிளையினில் கொத்துக்கொத்தாகப் பூத்துள்ள இளைய வேங்கை மரத்தைப்போல

மணி துணர்ந்து அன்ன மா குரல் நொச்சி - புறம் 272/1
மணிகளைக் குலையாகத் தொடுத்தது போன்ற கரிய கொத்துக்களையுடைய நொச்சியே!
2.1
வாங்கு சினை மருத தூங்கு துணர் உதிரும் - நற் 350/3
வளைந்த கிளைகளைக் கொண்ட மருதமரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் பூங்கொத்துக்கள் உதிர்கின்ற

	

2.2
1.வாகை நெற்றின் குலை
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்
ஆடு_கள பறையின் அரிப்பன ஒலிப்ப - அகம் 45/1,2
உலர்ந்த வாகைமரத்திலுள்ள விளைந்த நெற்றுக்களின் குலை
ஆடுகளத்தில் (ஒலிக்கும் கழைக் கூத்தர்களின்) பறையினைப் போல் விட்டுவிட்டு ஒலிக்கும்
2. மாங்காய்களின் குலை
நறு வடி மாவின் பைம் துணர் உழக்கி - கலி 41/14
நறிய பிஞ்சுகளைக் கொண்ட மாமரத்தின் பசிய குலைகளை உலுக்கிவிட்டு
3. பலாக்குலை
சாரல் பலவின் கொழும் துணர் நறும் பழம் - ஐங் 214/1
மலைச் சாரலிலுள்ள பலாவின் கொழுத்த குலையான நறும் பழம்
4. கொன்றைப்பழங்களின் குலை
துணர் காய் கொன்றை குழல் பழம் ஊழ்த்தன - ஐங் 458/1
குலை குலையான காய்களைக் கொண்ட கொன்றையின் குழல் போன்ற பழங்கள் பழுத்து முதிர்ந்தன
5. முருங்கைக் காய்களின் குலை
வேனில் முருக்கின் விளை துணர் அன்ன - நற் 73/1
வேனில்காலத்து முருக்க மரத்தில் நன்கு விளைந்து முற்றிய காய்களின் கொத்தினைப் போன்ற
6. மிளகுக்காய்களின் குலை
கரும் கொடி மிளகின் காய் துணர் பசும் கறி - மலை 521
கரிய கொடிகளையுடைய மிளகின் காய்க்குலைகளின் (காய்ந்துபோகாத)பச்சை மிளகும்
7. சங்குகளின் கொத்து
கோடு துணர்ந்து அன்ன குருகு ஒழுக்கு எண்ணி - நற் 159/4
சங்குகளைக் குலையாகத் தொடுத்தது போன்ற குருகுகளின் வரிசையை எண்ணி

	

மேற்கண்ட எடுத்துக்காட்டுகள், படங்கள் மூலம்,’இணர்’ என்பது தனித்தனியாக நீண்ட காம்புகள் கொண்ட 
பூக்கள் அல்லது காய்,பழங்களின் தொகுதி என்பது பெறப்படும். இந்தக் காம்புகள் தனித்தனியாக இல்லாமல்,
ஒன்றாகச் சேர்ந்திருந்தால் அது இணர் எனப்படும்.

 	பார்க்க: இணர்

 மேல்
 
  துணி - 1. (வி) 1. அஞ்சாமல் செயலில் ஈடுபடு, dare, venture
          2. வெட்டு, கூறுபடுத்து, cut, sever
      2. (பெ) 1. துண்டம், piece, slice
          2. தெளிவு, clarity
1.1
தோள் வலி துணி பிணி துறந்து இறந்து எய்தி மெய் சாய்ந்து - கலி 104/46
தன் தோள் வலிமையினால் துணிந்த பிடிப்பு நெகிழ, காளையின் கழுத்தை விட்டுக் கைகள் தள்ளப்பட உடல் தளர்ந்து
1.2
கல்லும் மரனும் துணிக்கும் கூர்மை
தொடலை வாளர் தொடுதோல் அடியர் - மது 635,636
கல்லையும் மரத்தையும் வெட்டும் கூர்மையுடைய
தொங்குதல் (உள்ள)வாளையுடையவராய்; செருப்புக்கோத்த அடியினையுடையவராய்;
2.1.
கொழு இல் பைம் துணி
வைத்தலை மறந்த துய் தலை கூகை - பதி 44/17,18
திரட்சி இல்லாத பசிய இறைச்சித் துண்டத்தை
வைத்த இடத்தை மறந்த பஞ்சுபோன்ற கொண்டையையுடைய ஆண்கூகையை
2.2
துணி நீர் அருவி நம்மோடு ஆடல் - ஐங் 224/3
தெளிவுள்ள நீரை உடைய அருவியில் நம்மோடு நீராடுதல்

 மேல்
 
  துணியல் - (பெ) துண்டம், small piece as of flesh
கொழு மீன் குறைஇய துடி கண் துணியல் - மது 320
கொழுவிய மீன்களை அறுத்த உடுக்கையின் கண் போன்ற (மீன்)துண்டங்களும்

 மேல்
 
  துத்தி - (பெ) பாம்பின் படப்பொறி, Spots on the hood of a cobra;
பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப
கை கசடு இருந்த என் கண் அகன் தடாரி - பொரு 69,70
படம் விரித்த பாம்பினது பொறியை ஒப்ப,
கை அழுக்கு இருந்த என் கண் அகன்ற உடுக்கையில்

 மேல்
 
  துதி - (பெ) 1. தோல் உறை, sheath, scabbard
        2. நுனி, point, sharp edge
1.
துதி கால் அன்னம் துணை செத்து மிதிக்கும் - ஐங் 106/2
தோலுறை போன்ற கால்களையுடைய அன்னமானது தன் துணை என எண்ணி மேலேறும்
2.
குரும்பி வல்சி பெரும் கை ஏற்றை
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின் - அகம் 8/2,3
புற்றாஞ்சோறை உணவாகக் கொண்ட பெரிய கையை உடைய ஆண்கரடியின்
தொங்கும் தோலின் நுனியில் உள்ள பெரிய நகம் கவ்விப் பிடிப்பதால்

 மேல்
 
  துதை - (வி) 1. தோய், படி, be steeped saturated
         2. செறிந்திரு, அடர்ந்திரு, be dense, thick
         3. நெருங்கியிரு, be close
         4. கூட்டமாயிரு, be crowded
1.
தூது_உண்_அம்_புறவு என துதைந்த நின் எழில் நலம் - கலி 56/16
கல்லுண்டு வாழும் புறா என்று கூறும்படியாகத் தோய்ந்து படிந்திருக்கும் உன் எழில் நலம்
2
துதைந்த தூவி அம் புதாஅம் சேக்கும் - புறம் 391/16
செறிந்திருக்கும் தூவியையுடைய அழகிய புதா என்னும் பறவை தங்கும்
3
மருப்பில் கொண்டும் மார்பு உற தழீஇயும்
எருத்து இடை அடங்கியும் இமில் இற புல்லியும்
தோள் இடை புகுதந்தும் துதைந்து பாடு ஏற்றும் - கலி 105/30-32
கொம்புகளைப் பிடித்துக்கொண்டும், மார்பில் ஏந்தித்தாங்கிக்கொண்டும்,
கழுத்தைக் கட்டிக்கொண்டும், திமில் இற்றுப்போய்விடுமோ என்னும்படி தழுவிக்கொண்டும்,
தோள்களுக்கு நடுவே கழுத்தைப் புகவிட்டுப் பிடித்துக்கொண்டும், நெருங்கி நின்று குத்துக்களைத் தாங்கியும்,
4
துணி கய நிழல் நோக்கி துதைபு உடன் வண்டு ஆர்ப்ப - கலி 33/5
தெளிந்த குளத்து நீருக்குள் தெரியும் பூக்களின் உருவத்தைக் கண்டு, அவற்றைச் சுற்றிக் கூட்டமாய் வண்டுகள்
ஒலியெழுப்ப,

 மேல்
 
  துப்பு - (பெ) 1. வலி, vigour, strength, valour
        2. பவளம், red coral
        3. பகைமை, enmity
        4. போர்த்துறை, warfare
1.
நட்பு கொளல் வேண்டி நயந்திசினோரும்
துப்பு கொளல் வேண்டிய துணையிலோரும் - பெரும் 425,426
நட்புக் கொள்ளுதலை வேண்டி விரும்பினவர்களும்,
(அவன்)வலியை(த் துணையாக)க்கொள்ளக் கருதிய வேறோர் உதவியில்லாதவர்களும்
2.
அத்த செயலை துப்பு உறழ் ஒண் தளிர் - ஐங் 273/1
நெடுவழியில் உள்ள அசோகின் பவளம் போன்ற ஒளிவிடும் தளிரை
3
அறியாமையான் மறந்து துப்பு எதிர்ந்த நின்
பகைவர் நாடும் கண்டு வந்திசினே - பதி 15/14,15
தமது அறியாமையால் மறந்து உன் பகைமையினை எதிர்கொண்ட உன்
பகைவரின் நாடுகளையும் பார்த்துவிட்டு இங்கே வந்திருக்கிறேன்
4.
துப்பு துறைபோகிய கொற்ற வேந்தே - பதி 62/9
போர்த்துறையில் சிறப்பெய்திய வெற்றியையுடைய வேந்தனே

 மேல்
 
  தும்பி - (பெ) வண்டு, bee
கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறை தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ - குறு 2/1,2
பூந்துகளைத் தேர்கின்ற வாழ்க்கையையும் அழகிய சிறகுகளையும் உடைய தும்பியே!
உன் விருப்பத்தைச் சொல்லாமல் நீ கண்டதனை மொழிவாயாக!

 மேல்
 
  தும்பை - (பெ) 1. ஒரு செடி/பூ, white dead nettle, Leucas aspera
         2. வீரச் செயல்புரிவதன் குறியாக வீரர் போரில் அணியும் அடையாளப்பூ,
          A garland of flowers worn by warriors when engaged in battle, as a mark of their valour
         3. புறத்திணை வகைகளுள் ஒன்றான தும்பைத்திணை
	    Major theme of a king or warrior heroically fighting against his enemy;
1.
அலர் பூ தும்பை அம் பகட்டு மார்பின் - புறம் 96/1
மலர்ந்த பூவையுடைய தும்பை மாலையை அணிந்த அழகிய வலிய மார்பினையும்
2.
அமர் கடந்து மலைந்த தும்பை பகைவர் - பதி 14/8
போர்க்களங்களில் எதிர்சென்று போரிடும் தும்பைப் பூ சூடிய பகைவரின்
3.
பெருவீரச்செயல் காட்டிப் பகைவரோடு போர்செய்தலைக் கூறும் புறத்திணை வகைகளுள் ஒன்றான தும்பைத்திணை.

துப்பு துறைபோகிய வெப்பு உடை தும்பை
கறுத்த தெவ்வர் கடி முனை அலற - பதி 39/3,4
போர்த்துறை எல்லாம் முற்றவும் கடைபோகிய, வெம்மையையுடைய தும்பை சூடிப் பொரும் போரின்கண்
சினங்கொண்டு வந்த பகைவர்கள், அச்சந்தரும் போர்முனையில் அலறியோடும்படி

தன் வீரம் ஒன்றனையே பெரிது எனக் கருதி, பகைமைகொண்டு படையெடுத்துவந்த வேந்தனை,
எதிர்கொண்டு சென்று அவனுடன் போரிட்டு அவனை அழிக்கும் மன்னம் செய்யும் போர்
தும்பைப்போர் எனப்படும். இப்போர் நிகழும்போது வீரர்கள் தும்பைப் பூவைச் சூடுவர்.
இப்போர் பற்றிய பாடல்கள் தும்பைத்திணையைச் சார்ந்தவை எனப்படும். இது அகத்திணையில் உள்ள
நெய்தல்திணைக்குப் புறம் என்று கொள்வர் தொல்காப்பியர்.

தும்பை-தானே நெய்தலது புறனே
மைந்து பொருளாக வந்த வேந்தனை
சென்று தலை அழிக்கும் சிறப்பிற்று என்ப - தொல் - புறத் - 14,15

என்பது தொல்காப்பியம்.

வெட்சி நிரை கவர்தல் ; மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சியாம் ; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்

என்னும் புறப்பொருள் வெண்பாமாலைப் பாடலும் இதனை வலியுறுத்தும்

	

	பார்க்க: உழிஞை

 மேல்
 
  துமி - (வி) 1. வெட்டு, துண்டாக்கு, cut off
        2. அரத்தால் அறு, cut with a file
        3. வெட்டுப்படு, துண்டிக்கப்படு, be cut off, severed
        4. அழி, நசுக்கு, destroy, crush
        5. விலக்கு, keep off, obstruct
1.
கொடும் கால் புன்னை கோடு துமித்து இயற்றிய
பைம் காய் தூங்கும் பாய் மணல் பந்தர் - பெரும் 266,267
வளைந்த காலையுடைய புன்னைகளின் கொம்புகளை வெட்டி(க் கால்களாகக்கொண்டு) உருவாக்கிய,
(படர்ந்த கொடியில்)பச்சைக் காய்கள் தொங்கும், பரப்பப்பட்ட மணலையுடைய பந்தலில்,
2.
வேளா பார்ப்பான் வாள் அரம் துமித்த
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன - அகம் 24/1,2
வேள்வி செய்யாத பார்ப்பான் அறுக்கும் அரத்தால் துண்டாக்கி எடுத்த
வளையல்கள் போக எஞ்சிய சங்கின் தலைப்பகுதியைப் போன்ற
3.
தலை துமிந்து எஞ்சிய மெய் ஆடு பறந்தலை - பதி 35/6
தலைகள் துண்டிக்கப்பட்டதால் குறைந்துபோன முண்டங்கள் எழுந்தாடும் பாழிடமாகிய
4.
தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப
வந்தன்று பெருவிறல் தேரே - நற் 181/11,12
மாலை அணிந்த புரவி, பசுமையான பயிர்களை மிதித்து அழிக்க,
வந்தது தலைவனது தேர்,
5.
தொடீஇய செல்வார் துமித்து எதிர் மண்டும்
கடு வய நாகு போல் நோக்கி தொழு வாயில்
நீங்கி சினவுவாய் - கலி 116/5-7
தொடுவதற்காகக் கிட்டே செல்வாரை விலக்கி உக்கிரமாக எதிர்த்து நிற்கும்
மிகுந்த வலிமை கொண்ட இளம் பசுவினைப் போல என்னப் பார்த்து, தொழுவின் வாசலிலிருந்து
நீங்கிச் சென்று என்னைச் சீறுகின்றாயே!"

 மேல்
 
  துய் - 1. (வி) 1. புலன்களால் நுகர், enjoy by means of the senses;
         2. அனுபவி, experience as the fruits of actions
         3. உண்ணு, தின்னு, eat
     2. (பெ) 1. கதிர் பூவிதழ் முதலியவற்றின் மெல்லிய பகுதி
         A soft part in the ears of corn, in the petals of flowers, etc.;
         2. புளியம்பழத்தின் ஆர்க்கு, Fibre covering the tamarind pulp;
         3. மென்மை, softness
         4. பஞ்சுப்பிசிர், cotton fibres
         5. சிம்பு, fibre
1.1
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் என - குறு 63/1
இரப்போருக்கு ஈதலும், இன்பத்தை நுகர்தலும், இல்லாதவருக்கு இல்லை என எண்ணி
1.2
தொல் வினை பயன் துய்ப்ப துறக்கம் வேட்டு எழுந்தால் போல் - கலி 118/3
முந்தைய நல்வினைகளின் பயன்களை அனுபவிப்பதற்கு, சுவர்க்கத்தை விரும்பிப் போவதைப் போல
1.3
அத்த இருப்பை ஆர் கழல் புது பூ
துய்த்த வாய ------------------------
-------------------------------------
வன் கை எண்கின் வய நிரை - அகம் 15/13-16
அரிய சுரத்தில் உள்ள இலுப்பை மரத்தின் ஆர்க்கு கழன்ற புதிய பூக்களைத்
தின்ற வாயையுடைய --------------------------
-----------------------------------------
வலிய கையை உடைய கரடியின் வலிமை உள்ள கூட்டம்
2.1.
துய் தலை வாங்கிய புனிறு தீர் பெரும் குரல் - குறி 37
மெல்லிய பஞ்சை நுனியில் உடைய வளைந்த பிஞ்சுத்தன்மை நீங்கிய(முற்றிய) பெரிய கதிர்களை

கடவுள் வாகை துய் வீ ஏய்ப்ப - பதி 66/15
கொற்றவை வாழும் வாகை மரத்தின் பஞ்சினைக் கொண்ட பூவைப் போல

	

2.2.
வெண் புடை கொண்ட துய் தலை பழனின் - மலை 178
வெண்மையான புடைத்த பக்கங்களைக்கொண்ட, நாரை உச்சியில் கொண்ட (புளியம்)பழத்தின்
2.3.
துய் மயிர் அடக்கிய சேக்கை அன்ன - மலை 418
மென்மையான உரோமத்தை உள்ளடக்கிய மெத்தை விரிப்பைக்கொண்ட கட்டில் போன்ற
2.4.
துய் தலை மந்தி வன் பறழ் தூங்க - நற் 95/4
பஞ்சுப்பிசிர் போன்ற தலையைக் கொண்ட குரங்கின் வலிய குட்டி தொங்க

	

2.5.
நெய் வார்ந்து அன்ன துய் அடங்கு நரம்பின்
இரும் பாண் ஒக்கல் தலைவன் - நற் 300/8,9
நெய்யை ஊற்றிவிட்டாற் போன்ற சிம்பு அடங்கிய நரம்புகளைக் கொண்ட யாழை இசைக்கும்
பெரிய பாணர் சுற்றத்தாருக்குத் தலைவனே

 மேல்
 
  துயல் - (வி) அலை, அசை, ஊசலாடு, swing, sway
துணி மழை தவழும் துயல் கழை நெடும் கோட்டு - சிறு 265
தெளிந்த முகில் தவழும் அசைகின்ற மூங்கிலையுடைய நெடிய மலையின் சிகரத்தில்

 மேல்
 
  துயல்வரு(தல்) - (வி) முன்னும் பின்னுமாக ஆடுதல், swing

1. ஓர் ஆதாரத்தைப் பற்றிக்கொண்டு கீழே தொங்குகின்ற ஒரு பொருள், 
  அசைவின்போது முன்னும் பின்னுமாக ஆடுதல்

சிறு குழை துயல்வரும் காதின் - பெரும் 161
சிறிய குழை அசைகின்ற காதினையும்

	

யானை வேகமாக நடக்கும்போது, அதன் முகத்தில் அணியப்பெற்றிருக்கும் முகபடாம்
எழுந்தும் வீழ்ந்தும் அசைதல்.

வாடா மாலை ஓடையொடு துயல்வர
படு மணி இரட்டும் மருங்கின் கடு நடை
------------------------------------------
கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு - திரு 79-82
வாடாத மாலையான பொன்னரிமாலை நெற்றிப்பட்டத்தோடு கிடந்து அசைய,
தாழ்கின்ற மணி மாறிமறி ஒலிக்கின்ற பக்கத்தினையும், கடிய நடையினையும்,	
------------------------------------------------------------
காற்று எழுந்ததைப் போன்ற (ஓட்டத்தையும் உடைய)களிற்றில் ஏறி

	

2. ஓர் ஆதாரத்தைப் பற்றிக்கொண்டு மேலே நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு பொருள், 
  அசைவின்போது முன்னும் பின்னுமாக ஆடுதல்

வளி பொர துயல்வரும் தளி பொழி மலரின் - அகம் 146/10
காற்று மோதுதலால் அசையும் மழை பெய்யப்பட்ட மலரைப் போல

	

நோன் கழை துயல்வரும் வெதிரத்து - புறம் 277/5
வலிய கழை அசைந்தாடும் மூங்கிற் புதரின் கண்

	

 மேல்
 
  துயல்வு - (பெ) அசைதல், ஆடுதல், swing, sway
திருந்து இழை துயல்வு கோட்டு அசைத்த பசும் குழை - குறு 294/6
திருத்தமான அணிகலன்கள் அசைதலையுடைய பக்கத்தில் கட்டிய பசிய தளிராகிய

 மேல்
 
  துயிற்று - (வி) தூங்கச்செய், put to sleep
தோள் துணை ஆக துயிற்ற துஞ்சாள் - அகம் 63/16
தோளை ஆதாரமாகக்கொண்டு தூங்குவிக்க, தூங்கமாட்டாள்

 மேல்
 
  துர - (வி) 1. ஓட்டிச்செலுத்து, drive with greater speed
       2. ஊக்கு, தூண்டு, urge, encourage
       3. ஆழமாக எய், எறி, shoot deeply as an arrow, spear
       4. முன்னால் தள்ளு, push forward
       5. செயல் முனைப்புக்கொள், endeavour, make efforts
1.
துனை பரி துரக்கும் செலவினர் - முல் 102
விரைந்து செல்லும் பரியைக் கடிதாகச் செலுத்தும் செலவினையுடையவரின்
2.
கலம் தரல் உள்ளமொடு கழிய காட்டி
பின் நின்று துரக்கும் நெஞ்சம் - அகம் 3/12,13
அணிகலன்கள் ஈட்டவேண்டும் என்ற எண்ணத்துடன் கடந்துசெல்வதாகக் காட்டி
பின்னால் இருந்து ஊக்கும் நெஞ்சமே!
3.
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
மேல்வரும் களிற்றொடு வேல் துரந்து - புறம் 274/2,3
மயில்பீலியால் தொடுக்கப்பட்ட கண்ணியினையுடைய பெருந்தகையாகிய மறவன்
தன் மேல்கொலைகுறித்து வந்த களிற்றின் நெற்றியிலே வேலைச் செலுத்திப் போக்கி
4.
அருவி சொரிந்த திரையின் துரந்து
நெடு மால் கருங்கை நடு வழி போந்து - பரி 20/103,104
அருவி சொரிந்த பூக்களை வையையாறு தன் நீரலைகளினால் தள்ளிக்கொண்டுவந்து,
நீண்ட பெரிய நிலத்தடி வழியாக நீரின் நடுவழியே கொண்டு சென்று
5.
குன்று பின் ஒழிய போகி உரம் துரந்து
ஞாயிறு படினும் ஊர் சேய்த்து எனாது
துனை பரி துரக்கும் துஞ்சா செலவின் - அகம் 9/14-16
குன்றுகள் பின்னிட முன்னே செல்ல, மனஉறுதியுடன் முனைப்புக்கொண்டு,
ஞாயிறு மறைந்தாலும், ஊர் வெகுதொலைவில் உள்ளது என்று சொல்லாமல்,
வேகமாக ஓடும் குதிரைகளை மேலும் முடுக்கிவிட்டுச் சோர்வின்றிப் பயணம்செய்யும்

 மேல்
 
  துரப்பு - (பெ) முடுக்கி உட்செலுத்துதல், driving in, hammer down, as a nail;
துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி - பொரு 10
(பத்தலிரண்டும் சேர்த்தற்குத் திறந்த)துளைகளின் வாய் மறைய முடுக்குதலமைந்த ஆணியினையும்

 மேல்
 
  துராய் - (பெ) அறுகம்புல்லால் திரித்த பழுதை, twisted quitch grass;
துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் - பொரு 103
அறுகம் புல் கட்டுக்களை கவ்வித்தின்ற செம்மறிக்கிடாயின் அழகிய புழுக்கப்பட்ட(இறைச்சியின்)

 மேல்
 
  துரு - (பெ) செம்மறியாடு, sheep
ஆடு தலை துருவின் தோடு தலைப்பெயர்க்கும் - நற் 169/6
ஆடுகின்ற தலையையுடைய செம்மறியாட்டின் கூட்டத்தை ஓட்டிக்கொண்டு திரும்பும்

 மேல்
 
  துருத்தி - (பெ) 1. ஆற்றிடைக்குறை, ஆற்றின் நடுவில் சிறு மேடு, islet in a river
         2. கடல் நடுவே உள்ள சிறு தீவு
         3. கொல்லன் பட்டறையின் தோலால் ஆன ஊதுலைக் கருவி, bellows
1.
வீ மலி கான்யாற்றின் துருத்தி குறுகி - பரி 10/30
பூக்கள் நிறைந்த காட்டாற்றின் நடுவேயுள்ள திட்டுக்களை அடைந்து
2.
இரு முந்நீர் துருத்தியுள்
முரணியோர் தலைச்சென்று - பதி 20/2,3
கரிய கடலிலுள்ள தீவினுள் வாழ்ந்த,
அவனுடன் முரண்பட்டோரை எதிர்த்துச் சென்று
3.
கொல்லன்
விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா - அகம் 224/2,3
கொல்லன்
வலித்து இழுக்கும் துருத்தியினைப் போல வெப்பமாகப் பெருமூச்சுவிட்டு

	

 மேல்
 
  துருவை - (பெ) துரு, செம்மறியாடு, sheep
கொடு முக துருவையொடு வெள்ளை சேக்கும் - பெரும் 153
வளைந்த முகத்தையுடைய செம்மறியாட்டுடன் வெள்ளாடும் கிடக்கும்

	

 மேல்
 
  துரூஉ - (பெ) துரு, துருவை என்பதன் மரூஉ, corrupt form of the word 'turuvai'
தோப்பி கள்ளொடு துரூஉ பலி கொடுக்கும் - அகம் 35/9
நெல்லால் ஆக்கிய கள்ளோடு செம்மறியாட்டையும் பலி கொடுக்கும்

 மேல்
 
  துலங்குமான் - (பெ) (சிறந்த விலங்காகிய) சிங்கம், lion
துலங்குமான் மேல் ஊர்தி துயில் ஏற்பாய் - கலி 13/16
சிறந்த விலங்காகிய சிங்கத்தின் அமைப்பினைக் கால்களாகக் கொண்ட கட்டிலின்மேல் படுத்துத் துயில்பவளே

 மேல்
 
  துலாம் - (பெ) தராசு, நிறைகோல், balance, scales
கோல் நிறை துலாஅம்_புக்கோன் மருக - புறம் 39/3
கோலாகிய நிறுக்கப்படும் தராசின்கண்ணே துலை புக்க செம்பியனது மரபினுள்ளாயாதலால்

 மேல்
 
  துவ்வு - (வி) நுகர், உண், enjoy, eat
வறுமை கூரிய மண் நீர் சிறு குள
தொடு குழி மருங்கில் துவ்வா கலங்கல் - அகம் 121/3,4
வறுமை மிக, குளிக்கும் நீராகிய சிறிய குளத்தில்
தோண்டப்பட்ட குழியின்கண் உண்ணற்கு ஆகாத கலங்கிய நீரால்

 மேல்
 
  துவ்வாமை - (பெ) நுகராமை, non-enjoyment
சுடர் காய் சுரம் போகும் நும்மை யாம் எம்_கண்
படர் கூற நின்றதும் உண்டோ தொடர் கூர
துவ்வாமை வந்த கடை - கலி 22/20-22
ஞாயிறு காய்கின்ற காட்டுவழியைக் கடந்து போக எண்ணும் உம்மை, நான் என்னிடத்துள்ள
துன்பத்தைக் கூறி தடுத்து நிறுத்தியதும் உண்டோ? உம்முடன் கொண்ட பிணிப்பு வலிமை பெறுங்காலத்தில்
அதனை நுகரமுடியாதிருக்கும் காலம் வந்து சேர்ந்த பொழுது -
 
 மேல்
 
  துவர் - 1. (வி) 1. முழுதுமாகு, be complete
         2. புலர்த்து, dry, wipe off moisture
         3. சிவ, சிவப்பாயிரு, be red
      2 (பெ) 1. சிவப்பு, red, scrlet
          2. காவி நிறம், red ochre
          3. நாவல் அல்லது பூவந்தி, கடு, நெல்லி, தான்றி, ஆல், அரசு, அத்தி, இத்தி, 
           முத்தக்காசு அல்லது கருங்காலி, மாந்தளிர் என்ற பத்துத் துவர்ப்பு மருந்துப்பொருள்,
          Medical astringents, numbering ten
          4. துவர்ப்புச்சுவை. Astringency;
1.1
மிக்கு எழு கடும் தார் துய் தலை சென்று
துப்பு துவர் போக பெரும் கிளை உவப்ப
ஈத்து ஆன்று ஆனா இடன் உடை வளனும் - பதி 32/4,5
போர்வேட்கை மிகுந்து எழுகின்ற கடுமையான முன்னணிப்படையினர் பகைவர் நாட்டின் இறுதியெல்லை வரை சென்று
வலிமை முழுவதையும் காட்டிப் போரிட்டு, பெருங்கூட்டமான பாணரும் கூத்தருமாகிய சுற்றத்தார் மகிழும்படி,
கொடுத்து நிறைந்தும் அழியாத செல்வத்தையுடைய வளமும்
1.2
பின் இரும் கூந்தல் பிழிவனம் துவரி
உள்ளகம் சிவந்த கண்ணேம் - குறி 60,61
பின்னப்பட்ட கரிய கூந்தலைப் பிழிந்து ஈரத்தைப் புலர்த்தி,
உட்புறமெல்லாம் சிவந்த கண்ணையுடையோமாய்
1.3
அவரை ஆய் மலர் உதிர துவரின
வாங்கு துளை துகிரின் ஈங்கை பூப்ப - அகம் 243/1,2
அவரையின் அழகிய மலர் உதிரவும், சிவப்பாயிருக்கும்
வளைந்த துளையினையுடைய பவளம் போல இண்டையானது பூக்கவும்
2.1.
இலவு இதழ் புரையும் இன் மொழி துவர் வாய் - பொரு 27
இலவின் இதழை ஒக்கும் இனிய சொல்லையுடைய சிவந்த வாயினையும்,
2.2.
நிறை பெயல் அறியா குறைத்து ஊண் அல்லில்
துவர் செய் ஆடை செம் தொடை மறவர் - நற் 33/5,6
நிறைந்த மழையை அறியாத, குறைந்த உணவையுடைய இரவினில்
பழுப்பேறிய ஆடையையுடைய, செம்மையாக அம்பினைத் தொடுத்திருக்கும் மறவர்கள்
2.3.
தண்ணம் துவர் பல ஊட்டி சலம் குடைவார் - பரி 10/90
குளிர்ச்சியான அழகிய பத்துவகைத் துவர்களையும் தேய்த்துக்கொண்டு நீரில் முழுகுவோர் சிலர்
2.4
தொட்டதை தைப்பு அமை சருமத்தின் தாள் இயை தாமரை
துப்பு அமை துவர் நீர் துறை மறை அழுத்திய - பரி 21/3,4
நீ அணிந்துகொண்டது, 
தைப்பதற்காக அமைந்த தோலினால், உன் திருவடிக்குப் பொருந்திய தாமரை மலர் போன்று செய்யப்பட்டது;
செம்பவளம் போன்ற துவர்நீர்த் துறையில் முழுதும் மறையும்படி அழுத்திப் பதனிடப்பட்டது

 மேல்
 
  துவர - (வி.அ) முழுவதும், entirely
வேரொடு நனைந்து வேற்று இழை நுழைந்த
துன்னல் சிதாஅர் துவர நீக்கி - பொரு 80,81
வேர்வையால் நனைந்து, பிற (நூல்)இழைகள் உள்ளே ஒடுமாறு
தைத்தல் (உடைய)கந்தையை முழுதும் போக்கி

 மேல்
 
  துவரை - (பெ) கண்ணபிரான் ஆண்ட துவாரகை, The city Dwaraka of Lord Krishna.
உவரா ஈகை துவரை ஆண்டு - புறம் 201/10
வெறுப்பில்லாத கொடையினையுடையராய், துவராபதி என்னும்படைவீட்டை ஆண்டு

 மேல்
 
  துவலை - (பெ) 1. நீர்த்திவலை, Watery particle, drop, spray
          2. மழைத்தூவல், drizzle
          3. தேன்துளி, drop of honey
1.
நுண் பல துவலை புதல் மிசை நனைக்கும் - அகம் 262/15
நுண்ணியவான பல நீர்த்துளிகள் மலை மீது உள்ள புதர்களை எல்லாம் நனைக்கும்
2.
கல்லென் துவலை தூவலின் யாவரும்
தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார் - நெடு 64,65
‘கல்'லென்கிற ஓசையுடன் தூறல் (நீர்த்திவலைகளைத்)தூவுவதால், ஒருவருமே
குவிந்த வாயையுடைய செம்புகளில் தண்ணீரைக் குடியாராய்ப்	 
3.
மென் சிறை வண்டின் தண் கமழ் பூ துணர்
தாது இன் துவலை தளிர் வார்ந்து அன்ன - அகம் 41/13,14
மென் சிறகுடைய வண்டுகள் உள்ள குளிர்ந்த மணங்கமழும் பூங்கொத்துகளில் உள்ள
தாதுடன் கூடிய தேன்துளி தளிரில் ஒழுகியது போல

 மேல்
 
  துவற்று - (வி) தூவு, spray, sprinkle
தோள் அதிர்பு அகம் சேர துவற்றும் இ சில் மழை - கலி 31/16
தோள்கள் நடுங்கி மார்பில் குறுக்காக அணைத்துக்கொள்ள தூவுகின்ற இந்தத் தூறல்

 மேல்
 
  துவன்று - (வி) 1. கூடிநில், be united, join
          2. குவி, be heaped
          3. அடர்ந்திரு, be dense
          4. நிறை, fill up
1,2
கணம் கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇ
பிணம் தின் யாக்கை பேய்_மகள் துவன்றவும்
கொடும் கால் மாடத்து நெடும் கடை துவன்றி
விருந்து உண்டு ஆனா பெரும் சோற்று அட்டில் - பட் 259-262
திரட்சிகொண்ட ஆண்பேய்களுடன் மயிரைத் தாழ்த்து மெல்லநடந்து,
பிணந்தின்னும் வடிவையுடைய பேய்மகள் ஒன்றுகூடவும்;
உருண்ட(வளைவான) தூண்களையுடைய மாடத்தின் உயரமான தலைவாசலில் குவிந்து,
(இடையறாது)விருந்தினர் உண்டு(ம்) குறையாத நிறைந்த சோற்றையுடைய அடுக்களை
3.
தூ மலர் துவன்றிய கரை பொரு நிவப்பின்
மீமிசை நல் யாறு - மலை 51,52
தூய பூக்கள் அடர்ந்துகிடக்கும் கரை(யின் உச்சி)யை மோதுகின்ற (அளவுக்கு)உயர்ச்சியினையுடைய
பெரும் பெருக்குள்ள நல்ல ஆறு
4.
துவன்றிய
கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது - புறம் 137/4,5
நீர் நிறைந்த
பள்ளத்தின்கண் விதைத்த வித்து நீரின்மையால் சாவாது

 மேல்
 
  துவை - 1. (வி) 1. ஒலி, sound
          2. ஓங்கி அடி, beat harsh
          3. புகழப்படு, be praised
          4. முழக்கமிடு, roar
          5. குழை, become soft
      - 2. (பெ) துவையல், a kind of strong pasty relish
1.1.
கறங்கு மணி துவைக்கும் ஏறு உடை பெரு நிரை - மலை 573
(கழுத்தைச் சூழ்ந்த)மணிகள் ஒலிக்கும் காளைகளையுடைய பெரிய பசுக்கூட்டங்களையும்,
1.2.
வலம் படு முரசம் துவைப்ப வாள் உயர்த்து
------------------------------
போர்_களத்து ஆடும் கோவே - பதி 56/4-8
வெற்றியையுடைய முரசத்தை ஓங்கி அறைய, வாளினை உயர்த்திக்கொண்டு
-----------------------------------------
போர்க்களத்தில் ஆடுகின்ற அரசன்
1.3
துவைத்த தும்பை நனவு_உற்று வினவும் - பதி 88/23
எல்லாராலும் புகழ்ந்து சொல்லப்பட்ட , தும்பைப் போரில், மெய்யான வெற்றியை வேண்டிக்கொண்டு
1.4.
துவைத்து எழு குருதி நில மிசை பரப்ப - புறம் 370/13
முழங்கிவரும் குருதி வெள்ளம் நிலத்தின் மேல்பரவிச் செல்ல
1.5.
சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில் - பதி 45/13
சோறு வேறு ஊன் வேறு என்று பிரிக்கமுடியாதபடி ஊன் குழையச் சமைத்த உணவினை
2.
செ ஊன் தோன்றா வெண் துவை முதிரை - பதி 55/7
தன்னில் கலந்த சிவந்த இறைச்சி வெளியில் தெரியாதவாறு அரைத்த வெண்மையான துவரைச் துவையலை

அமிழ்து அன மரபின் ஊன் துவை அடிசில் - புறம் 390/17
அமிழ்து போல் சுவையுடைய ஊன் துவையலோடு கூடிய சோற்றை

 மேல்
 
  துவைப்பு - (பெ) திரும்பத்திரும்ப அடித்து மோதுதல், hitting hard repeatedly
வேல் ஈண்டு தொழுதி இரிவுற்று என்ன
கால் உறு துவைப்பின் கவிழ் கனைத்து இறைஞ்சி
குறை அறை வாரா நிவப்பின் அறையுற்று
ஆலைக்கு அலமரும் தீம் கழை கரும்பே - மலை 116 -119
வேல்களோடு நெருக்கமாக (வந்த வேற்படையாகிய)கூட்டம் தோற்றோடியதைப் போன்று,
காற்று மிகவும் அடித்து மோதுகையினால், சாய்ந்து ஆரவாரமாக ஒலித்து, தலைவணங்கி,
குட்டையாதலும் சூம்பிப்போதலும் உண்டாகாத வளர்ச்சியுடன், வெட்டப்பட்டு, 
ஆலைக்காக (அறைபடுவதற்காக)வாடியிருக்கும் இனிக்கும் கோலாகிய கரும்பு;

 மேல்
 
  துழ - (வி) 1. துழாவு, கிளறு, அளை, stir well, as with a ladle
        2. அளாவு, mix and stir
        3. ஒன்றைக் கண்டுபிடிக்க பார்வையை அங்குமிங்கும் செலுத்து, cast a searching look into, seek
1.
கூவல் துழந்த தடம் தாள் நாரை - பதி 51/4
பள்ளங்களில் மீனைத் தேடித் துழாவிய பெரிய கால்களையுடைய நாரை
2.
கிளர் இழை அரிவை நெய் துழந்து அட்ட
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி - நற் 41/7,8
பொலிவுடைய அணிகலன்களை அணிந்த பெண்ணே! நெய்யை அளாவவிட்டுச் சமைத்த
கொழுத்த தசையிலிருந்து எழும் மணமுள்ள புகை படிந்த நெற்றியில்
3.
ஆறு கொள் மருங்கின் மாதிரம் துழவும்
கவலை நெஞ்சத்து அவலம் தீர
நீ தோன்றினையே - புறம் 174/21-23
நல்ல நெறியினைக் கொண்ட பக்கத்தினையுடைய திசையெங்கும் பார்வையைச் செலுத்தும்
கவலையுற்ற மனத்தின்கண் வருத்தம்கெட
நீ வந்து தோன்றினாய்

 மேல்
 
  துழவை - (பெ) துழாவிச் சமைத்த கூழ், Porridge, as stirred with a ladle
அவையா அரிசி அம் களி துழவை
மலர் வாய் பிழாவில் புலர ஆற்றி - பெரும் 275,276
அவிக்காத(நெல்லின்) அரிசி(பச்சரிசி)யை அழகிய களி(யாகத் துழாவி அட்ட) குழைசோற்றை
அகன்ற வாயையுடைய தட்டுப் பிழாவில் உலரும்படி ஆற்றி

 மேல்
 
  துழாய் - (பெ) துளசி, Sacred basil
மண் மிசை அவிழ் துழாய் மலர் தரு செல்வத்து
புள் மிசை கொடியோனும் புங்கவம் ஊர்வோனும்
மலர் மிசை முதல்வனும் - பரி 8/1-3
இந்த மண்ணுலகத்தில் - மலர்ந்த துளசி மாலையினையும், உயிர்களுக்கு அளிக்கும் செல்வத்தினையும்,
மேலே கருடப்பறவை வரையப்பெற்ற கொடியினையும் உடைய திருமாலும், காளையின் மேல் ஏறிவரும் சிவபெருமானும்,
தாமரை மலர் மேல் அமர்ந்திருக்கும் பிரமனும்

 மேல்
 
  துழைஇ - (வி.எ) துழவி, துழாவி என்பதன் திரிபு, the changed form of the word 'tuzaavi'
வழை அமை சாரல் கமழ துழைஇ - மலை 181
சுரபுன்னை மரங்கள் வளர்ந்துநிற்கும் மலைச்சாரல் கமகமக்கும்படி கிளறி

பார்க்க : துழ

 மேல்
 
  துழைஇய - (வி.எ) துழவிய, துழாவிய என்பதன் திரிபு, the changed form of the word 'tuzaaviya'
இரும் கழி துழைஇய ஈர்ம் புற நாரை - நற் 127/1
கரிய கழியினைத் துழாவித்தேடிய ஈரமான முதுகைக் கொண்ட நாரை

பார்க்க : துழ

 மேல்
 
  துளக்கு - 1. (வி) 1. வருத்து, cause pain, afflict
          2. அசை, move, shake
      - 2. (பெ) வருத்தம், pain, affliction
1.1.
மன் உயிர் அழிய யாண்டு பல துளக்கி
மண் உடை ஞாலம் புரவு எதிர்கொண்ட
தண் இயல் எழிலி தலையாது மாறி - பதி 18/8-10
உலகத்து உயிர்கள் அழிய, பல ஆண்டுகள் வருத்தி,
மண் திணிந்த நிலவுலகத்தைக் காப்பதை மேற்கொண்ட
குளிர்ந்த இயல்பினையுடைய மேகங்கள் மழைபெய்யாமல் மாறிப்போய்,
1.2
இமயமும் துளக்கும் பண்பினை - குறு 158/5
இமயமலையையும் அசைக்கின்ற தன்மையையுடையாய்
2.
நானிலம் துளக்கு அற முழு_முதல் நாற்றிய
பொலம் புனை இதழ் அணி மணி மடல் பேர் அணி
இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி - பரி 13/35-37
இம் மண்ணுலகத்து மக்களின் நடுக்கம் தீர, பெரிய அடிப்பகுதிவரை சென்று நாட்டிய
பொன்னாலான மலரால் அழகிய மணிகளையுடைய மடலையுடைய பெரிய குமிழ் போன்ற பூணினைக் கொண்ட
பிரகாசமாய் ஒளிவிடும் கொம்புகளையுடைய ஆண்பன்றியும் ஆகி

 மேல்
 
  துளங்கு - (வி) 1. அசை. அசைந்தாடு, move, shake, sway from side to side
          2. வருந்து, கலங்கு, be perturbed, 
          3. நிலைகலங்கு, be uprooted
          4. சோர்வடை,தளர்வடை, be wearied 
1.
இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு - மலை 330
(தன்)கூட்டத்தைவிட்டுப் பிரிந்துபோன (வலம் இடமாக)அசைந்தாடும் திமிலைக்கொண்ட காளையும்

துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதி தேறல் - மலை 463
(வேகும்போது கொதிப்பதால்)
பக்கவாட்டில் குலுங்கும் பானையிலிருந்து வடித்த (நெல்லின்)இளம் முளைகளாலான தெளிந்த கள்ளை
2.
துளங்கு குடி விழு திணை திருத்தி முரசு கொண்டு
ஆண் கடன் நிறுத்த நின் பூண் கிளர் வியன் மார்பு - பதி 31/13,14
வருந்துகின்ற குடிமக்களைச் சிறந்த நிலையில் நிலைநிறுத்தி, பகைவரின் முரசுகளைக் கைப்பற்றி,
வெற்றி வீரர்களுக்குப் பரிசளித்து ஆண்கடனைச் செய்துமுடித்த உன் பூண் அணிந்த பரந்த மார்பு,
3.
மணி கண்டு அன்ன துணி கயம் துளங்க
இரும்பு இயன்று அன்ன கரும் கோட்டு எருமை
ஆம்பல் மெல் அடை கிழிய - அகம் 56/2-4
பளிங்கைப் போன்ற தெளிந்த நீருள்ள குளம் அலையடித்துக் கலங்க
இரும்பினால் செய்தது போன்ற கரிய கொம்பை உடைய எருமை
ஆம்பலின் மெல்லிய இலைகள் கிழியுமாறு,
4.
தொல்லோர் மாய்ந்து என துளங்கல் செல்லாது - புறம் 58/4
தனக்கு முன்னுள்ளோர் இறந்தாராக, தான் தளராது

 மேல்
 
  துளர் - 1. (வி) களைக்கொட்டால் கொத்து, strike with a weeding hook
      2. (பெ) 1. பயிர்களின் ஊடேயுள்ள களை., weed
         2. களைக்கொட்டு, weeding hook
1.
மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய
பிறங்கு குரல் இறடி காக்கும் - குறு 214/1,2
மரங்களை வெட்டிய குறவன், அந்த நிலத்தைக் களைக்கொட்டால் கொத்தி விதைத்த
ஒளிரும் கதிரையுடைய தினையைக் காக்கின்ற
2.1.
கோடு உடை கையர் துளர் எறி வினைஞர் - அகம் 184/13
களைக்கொட்டினையுடைய கையராய், களையினை வெட்டி எறியும் தொழிலாளிகள்
2.2.
தொய்யாது வித்திய துளர் படு துடவை - மலை 122
உழாமல் விதைக்கப்பட்டு, களைக்கொட்டுகளால் கொத்தப்பட்ட தோட்டங்களில்

 மேல்
 
  துளவம் - (பெ) துளசி, sacred basil
துளவம் சூடிய அறிதுயிலோனும் - பரி 13/30
துளசி மாலை அணிந்த யோகநித்திரையில் இருப்பவனும்

 மேல்
 
  துளவு - (பெ) துளசி, sacred basil
கள் அணி பசும் துளவினவை கரும் குன்று அனையவை - பரி 15/54
தேன் துளிக்கும் பசிய துளசிமாலையை அணிந்துள்ளாய்; கரிய மலையைப் போன்றிருக்கின்றாய்

 மேல்
 
  துளி - 1. (வி) மழைபெய், rain
     - 2. (பெ) 1. சொட்டு, நீர்த்திவலை, rain drop, globule of water
         2. மழை, rain
1.
விண்டு முன்னிய கொண்டல் மா மழை
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப - அகம் 235/5,6
மலையைச் சேர்ந்த கொண்டலாகிய கரிய மேகம்
இரவில் தங்குதலுற்றுப் பொங்கி மழையினைப் பெய்ய
2.1
துவலை தண் துளி பேணார் பகல் இறந்து
இரு கோட்டு அறுவையர் வேண்டு வயின் திரிதர - - நெடு 34,35
தூரலாக விழும் குளிர்ந்த துளியைப் பொருட்படுத்தாமல், பகற்பொழுதைக் கடந்து,
முன்னும் பின்னும் தொங்கவிட்ட துகிலினையுடையராய்(த் தாம்) விரும்பியவாறு திரிந்துவர 
2.2
இன் இசை உருமொடு கனை துளி தலைஇ - அகம் 58/1
இனிய ஓசையுடன் கூடிய இடியுடன் பெரிய மழை பெய்ய,

 மேல்
 
  துளுநாடு - (பெ) தெற்குக் கன்னட நாடு, The Tulu country on the West Coast in south Karnataka
தோகை காவின் துளுநாட்டு அன்ன
வறும் கை வம்பலர் தாங்கும் பண்பின் - அகம் 15/5,6
மயில்கள் வாழும் சோலைகளையுடைய - துளுநாட்டைப் போன்று,
வெறுங்கையுடன் வரும் அயலவர்களை நன்கு உபசரிக்கும் பண்புடைய

 மேல்
 
  துளும்பு - (வி) ததும்பு, brim over, overflow; to fill, as tears in the eyes
நிறை கடல் முகந்து உராய் நிறைந்து நீர் துளும்பும் தம்
பொறை தவிர்பு அசைவிட பொழிந்தன்று வானம் - பரி 6/1,2
நீர் நிறைந்த கடலில் நீரை முகந்து வானத்தில் பரவி, நிறைவாக நீர் ததும்பும் தம்
பாரத்தை இறக்கிவைத்து இளைப்பாறும்பொருட்டு பொழிந்தன மேகங்கள்;

 மேல்
 
  துற்று - (வி) 1. குவி, நிறை, heap, fill
          2. கவ்விப்பிடி, seize with the mouth
          3. உண், தின், eat
          4. நெருங்கு, come near
1
கூவை துற்ற நால் கால் பந்தர்
சிறு மனை வாழ்க்கை - புறம் 29/19,20
கூவை இலைகள் குவித்துவைக்கப்பட்ட நான்கு கால்களையுடைய பந்தலாகிய
சிறிய இல்லின்கண் வாழும் வாழ்க்கை
2
பகு வாய் வராஅல் பல் வரி இரும் போத்து
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி - அகம் 36/1,2
பிளந்த வாயையுடைய வராலின், பல வரிகளைக் கொண்ட ஆண்மீன்
வளைந்த வாயையுடைய தூண்டில்முள்ளில் மாட்டிய இரையைக் கவ்வி,
3
துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் - பொரு 103
அறுகம் புல் கட்டுக்களைத் தின்ற செம்மறிக்கிடாயின் அழகிய புழுக்கப்பட்ட(இறைச்சியின்)
4
வெம் கதிர் கனலி துற்றவும் - புறம் 41/6
வெய்ய சுடரையுடைய ஞாயிறு நெருங்கிவரவும் (சுட்டெரிக்கவும்)

 மேல்
 
  துறக்கம் - (பெ) சுவர்க்கம், heaven
பெறற்கு அரும் தொல் சீர் துறக்கம் ஏய்க்கும் - பட் 104
பெறுவதற்கு அரிய தொன்றுதொட்ட மேன்மையுடைய சுவர்க்கத்தைப் போன்ற

 மேல்
 
  துறப்பு - (பெ) நீங்குதல், பிரிவு, parting, separation
துனி செய்து நீடினும் துறப்பு அஞ்சி கலுழ்பவள் - கலி 10/15
பொய்க்கோபம் கொண்டு மறைந்திருந்தாலும், அந்தச் சிறு பிரிவிற்கே அஞ்சி நடுங்குகின்றவளாயிற்றே

 மேல்
 
  துறு - (வி) அடர்ந்திரு, செறிவாயிரு, be thick, crowded, full
துறு நீர் கடம்பின் துணை ஆர் கோதை - சிறு 69
செறிந்த நீர்மையையுடைய கடம்பின் இணைதல் நிறைந்த மாலை

 மேல்
 
  துறுகல் - (பெ) குத்துப்பாறை, erect rock
கரும் கால் வேங்கை வீ உகு துறுகல்
இரும் புலி குருளையின் தோன்றும் காட்டு இடை - குறு 47/1,2
கரிய அடிமரத்தை உடைய வேங்கை மரத்தின் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் குத்துப்பாறை
பெரிய புலியின் குட்டியைப் போலத் தோன்றும் காட்டுவழியில்

 மேல்
 
  துறை - (பெ) 1. ஆற்றில்/கடலில் இறங்கும் இடம், place where one gets into a river/sea
         2. ஆற்றில்/கடலில் இறங்கி நீராடும் இடம், நீர்த்துறை, bathing ghat
         3. பகுதி, பிரிவு, வகைமை, branch, field, catagory
         4. துறைமுகம், port
         5. சலவைசெய்வோர் ஆற்றில் துவைக்கும் இடம், riverside where washermen wash the clothes
         6. ஆடல்துறை, faculty of dance
1.
நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும்
துறை_துறை-தோறும் பொறை உயிர்த்து ஒழுகி - பொரு 238,239
நறைக்கொடியும், நரந்தம் புல்லும், அகிலும், சந்தனமும்,
துறைகள்தோறும் துறைகள்தோறும், (தனக்குச்)சுமையானவற்றை ஒதுக்கி, இளைப்பாற நடந்து -
2.
துறை ஆடு மகளிர்க்கு தோள் புணை ஆகிய - சிறு 117
(நீராடும்)துறையில் குளிக்கும் மகளிருடைய தோள்களுக்குத் தெப்பமாகும்படி
3.
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்வி
கூடு கொள் இன் இயம் - சிறு 228,229
பாடும் துறைகளெல்லாம் முடியப் பாடுதற்கு, பயன் விளங்குகின்ற இசைகளைத்
சுதிசேர்த்தல் கொண்ட இனிய யாழை
4.
இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி
உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும்
துறை பிறக்கு ஒழிய போகி - பெரும் 349-351
இரவில் கொளுத்தின விளங்குகின்ற விளக்கு நெகிழ்ந்து
பெருநீர்ப்பரப்பாகிய கடலில் ஓடும் மரக்கலங்களை அழைக்கும்					350
துறை பின்னே கிடக்க (கடந்து) போய் 
5.
துறை செல்லாள் ஊரவர்
ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி - கலி 72/13,14
துறைக்குச் செல்லாதவளாய், ஊரினரின்
ஆடைகளை சேர்த்துக்கொண்டு வெளுக்கின்ற உன் வண்ணாத்தி
6.
காவில் தகைத்த துறை கூடு கலப்பையர் - பதி 41/5
காவடியின் இரு பக்கங்களிலும் சரியாகக் கட்டப்பட்ட, ஆடல்துறைக்கு வேண்டிய கலங்களைக் கொண்ட பையினராய்

 மேல்
 
  துறைப்படு - (வி) கடல் துறையில் அகப்படு, caught in a fishing ghat
நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல் - அகம் 196/2
விடியற்காலை வேட்டையில் துறையில் அகப்பட்ட பெரிய அகட்டினையுடைய வரால் மீனின்

 மேல்
 
  துறைபோ(தல்) - (வி) 1. முழுமையாகக் கற்றறி, learn thoroughly
             2. முழுமை பெறு, be complete
1.
நல் வேள்வி துறைபோகிய
தொல் ஆணை நல் ஆசிரியர் - மது 760,761
நல்ல வேள்வித்துறைகளில் முற்றும் தேர்ச்சியடைந்த
2.
துப்பு துறைபோகிய துணிவு உடை ஆண்மை - பதி 14/6
வலிமைபெற்றுத் திகழ்வதில் முழுமை பெற்ற அஞ்சாமை பொருந்திய ஆண்மையினையுடைய

 மேல்
 
  துறைவன் - (பெ) நெய்தனிலத் தலைவன், Chief of a maritime tract;
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு
அலரே அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை
அரிய ஆகும் நமக்கு என கூறின்
கொண்டும் செல்வர்-கொல் தோழி - நற் 4/4-7
அழகிய கண்களையுடைய முறுக்கேறிய வலைகளைக் காயவைக்கும் துறையைச் சேர்ந்த தலைவனிடம் சென்று
ஊராரின் பழிச்சொற்களை அன்னை அறிந்தால் இங்கு சந்தித்துக்கொள்ளும் நம் வாழ்க்கை
இனி அரிதாகிப்போய்விடும் என்று கூறினால்
நம்மை அழைத்துக்கொண்டு செல்வாரோ?

 மேல்
 
  துன் - (வி) துன்னு, அணுகு, approach
தொடர் நாய் யாத்த துன் அரும் கடிநகர் - பெரும் 125
சங்கிலிகளால் நாயைக் கட்டிவைத்துள்ள அணுகமுடியாத காவலையும் உடைய வீட்டினையும்

 மேல்
 
  துன்னம் - (பெ) தையல், seam, sewing
இழை வலந்த பல் துன்னத்து
இடை புரை பற்றி பிணி விடாஅ - புறம் 136/2,3
இழை சூழ்ந்த பல தையலினது
இடைக்கண் உளவாகிய புரைகளைப் பற்றி

 மேல்
 
  துன்னல் - (பெ) 1. தையல், seam, sewing
          2. நெருங்குதல், being nearor close
1.
வேரொடு நனைந்து வேற்று இழை நுழைந்த
துன்னல் சிதாஅர் துவர நீக்கி - பொரு 80,81
வேர்வையால் நனைந்து, பிற (நூல்)இழைகள் உள்ளே ஒடுமாறு
தைத்தல் (உடைய)கந்தையை முழுதும் போக்கி
2.
இரை தேர் வெண்_குருகு அல்லது யாவதும்
துன்னல் போகின்றால் பொழிலே - குறு 113/3,4
இரையைத் தேடும் வெள்ளைக் கொக்கு அன்றி, வேறு யாரும்
நெருங்கி வருதல் இல்லை அங்குள்ள சோலைக்கு

 மேல்
 
  துனி - 1. (வி) 1. வெறு, abhor
         2 வருத்து, cauise distress
         3. புலவி கொள், be sulky, variant in love-quarrel
     - 2. (பெ) 1. வெறுப்பு, abhorrence
          2. துன்பம், suffering
          3. புலவி, extended love-quarrel
1.1
காதல் செய்து அருளாது துறந்தார் மாட்டு ஏது இன்றி
சிறிய துனித்தனை துன்னா செய்து அமர்ந்தனை - கலி 122/3,4
காதலித்துப் பின்னர் இரக்கமில்லாமல் நம்மைப் பிரிந்துசென்றவருக்காகக் காரணமின்றி
முதலில் சிறிதளவு சலித்துக்கொண்டாய்! அவரின் பொருந்தாத செயல்களில் ஆழ்ந்துபோனவளாய்
1.2
அகறல் அறியா அணி இழை நல்லார்
இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர் - பரி 9/23,24
தம் துணைவர் தம்மைவிட்டு அகன்றிருத்தலையே அறியாத அழகிய அணிகலன் அணிந்த மகளிர்
தம் கணவருடன் மனவேறுபாடு கொண்டு அவரை வருத்தும் தவறினைச் செய்யமாட்டார்
1.3
ஒண் நுதல் மகளிர் துனித்த கண்ணினும் - பதி 57/13
ஒளிவிடும் நெற்றியைக் கொண்ட மகளிர் புலவியால் கோபங்கொண்டு பார்க்கும் பார்வையைக் காட்டிலும்
2.1.
துனி இல் காட்சி முனிவர் முன் புக - திரு 137
வெறுப்பு அற்ற காட்சியையுடையரும் ஆகிய முனிவர், முன்னே செல்ல
2.2.
துனி தீர் காதலின் இனிது அமர்ந்து உறையும்
பனி வார் காவின் பல் வண்டு இமிரும் - மலை 485,486
(மக்கள் தம்)துன்பம் தீர்க்கும் விருப்புடன் இன்புற்று அமர்ந்து தங்கியிருக்கும்,
குளுமை பொழியும் சோலைகளில் பல்வித வண்டுகள் ரீங்காரம்செய்யும் --
2.3.
இது மற்று எவனோ தோழி துனி இடை
இன்னர் என்னும் இன்னா கிளவி - குறு 181/1,2
இது என்ன பயனை உடையது, தோழி? புலவிக்காலத்தில்
தலைவர் இப்படிப்பட்டவர் என்னும் இனிமையற்ற சொற்கள்-

 மேல்
 
  துனை - (வி) விரை, hasten, hurry
தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்து துனை-மின் - மலை 391
தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கும் வழக்கத்தில் உம்முடைய கொம்பை(யும்) வாசித்து விரைவீராக 

 மேல்
 
  துனைதரு(தல்) - (வி) விரைந்து வரு(தல்), coming fast
மாலை தாழ் வியன் மார்பர் துனைதந்தார்
கால் உறழ் கடும் திண் தேர் கடவினர் விரைந்தே - கலி 33/30,31
மாலை தொங்கும் அகன்ற மார்பினையுடைய அவர் விரைந்து வருகிறார்,
காற்றைப் போன்று கடுமையாய் விரையும் தன் திண்ணிய தேரினைச் செலுத்திக்கொண்டு

இடன் இன்று அலைத்தரும் இன்னா செய் மாலை
துனி கொள் துயர் தீர காதலர் துனைதர
-------------------------------------------------------------------
இல் ஆகின்றால் இருள் அகத்து ஒளித்தே - கலி 120/ 20-25
ஓடி ஒளிந்துகொள்வதற்கு ஓர் இடம் இல்லாதபடி அலைத்துத் துன்பமே செய்கின்ற இந்த மாலைக் காலம்,
வெறுப்பால் வந்த துயரம் தீரும்படி, காதலன் விரைந்து வந்துசேர,
--------------------------------------------------------------------
இல்லாமல் போய்விட்டது இருளிடையே மறைந்து

 மேல்