<<முந்திய பக்கம்

சங்க இலக்கியம் - அருஞ்சொற்களஞ்சியம்
கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
வை - முதல் சொற்கள்
வை
வைகம்
வைகல்
வைகல்தொறும்
வைகல்வைகல்
வைகலும்
வைகலுள்
வைகறை
வைகு
வைகுசுடர்
வைகுறு
வைகுறுமீன்
வைகை
வைந்நுதி
வைப்பு
வையகம்
வையம்
வையை

இடப்பக்கமுள்ள சொல்லின் மேல் சொடுக்கவும்
 
  வை - 1. (வி) 1. ஏசு, பழிகூறு, scold, abuse
         2. கொண்டிரு, உடைத்தாயிரு, possess, have, keep
         3. மதித்துப்போற்று, pay due regard to
         4. உயிருடன் வை, keep alive
     - 2. (பெ) 1. கூர்மை, sharpness
         2. வைக்கோல், straw or hay of paddy or aother grains
1.1.
அனையன் என்னாது அத்தக்கோனை
நினையா கூற்றம் இன் உயிர் உய்த்தன்று
பைதல் ஒக்கல் தழீஇ அதனை
வைகம் வம்மோ வாய்மொழி புலவீர் - புறம் 221/7-10
அத்தன்மையையுடையோன் என்று கருதாது, அத் தகுதியை உடையோனை
அவ்வாறு கருதாத கூற்ரம் இனிய உயிர் கொடுபோயிற்று
அதனால், பையாப்புற்ற நம்முடைய சுற்றத்தை அணைத்துக்கொண்டு,அக் கூற்றத்தை
வைவேமாக வாரீர் மெய்யுரையை உடைய புலவீர்
1.2
நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா - பதி 25/5
நீ பகைத்து மேற்சென்றவரின் பெரிய மதில்கள் காப்புகளை வைத்திருக்கமாட்டா
1.3
வையா மாலையர் வசையுநர் கறுத்த
பகைவர் தேஎத்து ஆயினும்
சினவாய் ஆகுதல் இறும்பூதால் பெரிதே - பதி 32/15-17
ஒரு பொருட்டாக மதிக்கத்தகாத இயல்பினரும், வசைமொழியே பேசுபவரும் ஆகிய உன்னால் வெகுளப்பட்ட
பகைவரின் நாட்டில் இருப்பினும்,
சினங்கொள்ளாது இருக்கிறாய்! எனக்குண்டாகும் வியப்பு பெரியது!
1.4
வையினர் நலன் உண்டார் வாராமை நினைத்தலின்
கையறு நெஞ்சினேன் கலக்கத்துள் ஆழ்ந்து - கலி 134/19,20
என்னை உயிருடன் வைத்து, என் நலனை அனுபவித்துச் சென்றவர் வராமற்போய்விட்டதை
நினைத்துக்கொண்டிருத்தலால்
செயலற்ற நெஞ்சத்தினளாய் நான் கலக்கத்தினுள் ஆழ்ந்து
- வையினர் - உயிரோடு வைத்து - மா.இரா.உரை,விளக்கம்
2.1.
வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம் - பெரும் 119
கூரிய முனை மழுங்கின புலால் நாறும் வாயையுடைய வேல்களை
2.2.
கரு வை வேய்ந்த கவின் குடி சீறூர் - பெரும் 191
கரிய (வரகு)வைக்கோலால் வேய்ந்த அழகிய குடியிருப்பினையுடைய சிறிய ஊர்களில்

 மேல்
 
  வைகம் - (வி.மு) வைவேமாக, let us abuse
அனையன் என்னாது அத்தக்கோனை
நினையா கூற்றம் இன் உயிர் உய்த்தன்று
பைதல் ஒக்கல் தழீஇ அதனை
வைகம் வம்மோ வாய்மொழி புலவீர் - புறம் 221/7-10
அத்தன்மையையுடையோன் என்று கருதாது, அத் தகுதியை உடையோனை
அவ்வாறு கருதாத கூற்ரம் இனிய உயிர் கொடுபோயிற்று
அதனால், பையாப்புற்ற நம்முடைய சுற்றத்தை அணைத்துக்கொண்டு,அக் கூற்றத்தை
வைவேமாக வாரீர் மெய்யுரையை உடைய புலவீர்

 மேல்
 
  வைகல் - 1. (பெ) 1. தங்குதல், வாழ்தல், staying, dwelling
           2. நாள், day
           3. விடியற்காலம், வைகறை, daybreak, dawn
           4. பொழுது, காலம், time, period
           5. வேளை, moment, instant
       - 2. (வி.அ) நாள்தோறும், everyday
1.1.
சேவல் அம் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே - குறு 0/5,6
சேவல் வரைந்த அழகிய கொடியையும் உடையோன் காத்து அருளுவதால்
இனிமையான வாழ்வை எய்திநிற்கின்றன உலகத்து உயிர்கள்
1.2.
மெல் இயல் அரிவை நின் நல் அகம் புலம்ப
நின் துறந்து அமைகுவென் ஆயின் என் துறந்து
இரவலர் வாரா வைகல்
பல ஆகுக யான் செலவு_உறு தகவே - குறு 137
மென்மையான இயல்புடைய நங்கையே! உன் நல்ல நெஞ்சு வருந்தும்படி
உன்னைத் துறந்து அமைந்திருப்பேனாயின், என்னை நீங்கி
இரப்போர் வராத நாட்கள்
பலவாகுக, எனது பயணத்தின் தகுதியில்
1.3.
மத்து கயிறு ஆடா வைகல் பொழுது நினையூஉ - பதி 71/16
தயிர் கடையும் மத்து கயிற்றினில் சுழலாத விடியற்காலத்தே, உன்னை நினைத்து வந்து,

சேகா கதிர் விரி வைகலில் கை வாரூஉ கொண்ட
மதுரை பெரு முற்றம் போல - கலி 96/22,23
சேவகனே! ஞாயிற்றின் கதிர்கள் விரிகின்ற விடியற்காலையில் கையால் வாரப்பெற்ற
மதுரை நகரின் பெரிய முற்றத்தைப் போல,
1.4
ஓர் இரா வைகலுள் தாமரை பொய்கையுள்
நீர் நீத்த மலர் போல நீ நீப்பின் வாழ்வாளோ	 - கலி 5/14,15
ஒரே ஒரு இரவுபொழுதுக்குள், தாமரைப் பொய்கையின்
நீரிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட மலரைப் போல, நீ பிரிந்து சென்றால் இவள் வாழ்வாளோ?
1.5
நோய் சேர்ந்த வைகலான் வாடை வந்து அலைத்தரூஉம் - கலி 29/13
பிரிவுத்துன்பம் மிகுந்திருக்கும் வேளையில் வாடைக் காற்று வந்து வருத்துகின்றதே
2.
வைகல் யாணர் நன் நாட்டு பொருநன் - புறம் 61/12
நாள்தோறும் புதுவருவாயை உடைய நல்ல நாட்டிற்கு வேந்தன்

 மேல்
 
  வைகல்தொறும் - (வி.அ) நாள்தொறும், everyday, daily
நல் இறைவன் பொருள் காக்கும்
தொல் இசை தொழில் மாக்கள்
காய் சினத்த கதிர் செல்வன்
தேர் பூண்ட மாஅ போல
வைகல்தொறும் அசைவு இன்றி
உல்கு செய குறைபடாது - பட் 120-125
நல்ல அரசனின் பொருளை (மற்றவர் கொள்ளாமல்)காக்கும்
தொன்மையான புகழையுடைய (சுங்கம் வசூலிக்கும்)தொழிலாளர்,
சுடும் சினமுடைய கதிர்களையுடைய ஞாயிற்றின்
தேர் பூண்ட குதிரைகளைப் போல,
நாள்தோறும் சோர்வின்றிச்
சுங்கம் கொள்வதில் தளர்வடையாராக -	

 மேல்
 
  வைகல்வைகல் - (வி.அ) தினந்தோறும், everyday, daily
பூ கமழ் தேறல் வாக்குபு தரத்தர
வைகல்வைகல் கை கவி பருகி - பொரு 157,158
பூ மணக்கின்ற கள்தெளிவை (மேலும்மேலும்)வார்த்துத் தரத்தர,
தினம் தினம் (வேண்டாம் வேண்டாம் எனக்)கையைக் கவிழ்க்கும் அளவிற்குக் குடித்து

 மேல்
 
  வைகலும் - (வி.அ) 1. நாள்தோறும், everyday, daily
            2. எப்பொழுதும், all the time
1.
வைகலும் பொருந்தல் ஒல்லா
கண்ணொடு வாரா என் நார் இல் நெஞ்சே - நற் 98/11,12
நாள்தோறும் உன் வரவை எண்ணிக் கண்ணிமைகள் ஒட்டாத
கண்களும், உன்னோடு சென்றுவிட்டுத் திரும்பி வராத என் அன்பற்ற நெஞ்சமும் -
2.
இள மழை ஆடும் இள மழை ஆடும்
இள மழை வைகலும் ஆடும் என் முன்கை
வளை நெகிழ வாராதோன் குன்று - கலி 41/25-27
"இளம் மேகங்கள் உலவிக்கொண்டிருக்கும்! இளம் மேகங்கள் உலவிக்கொண்டிருக்கும்! 
இளம் மேகங்கள் எப்போதும் உலவிக்கொண்டிருக்கும்! என் முன்கையிலுள்ள
வளையல்கள் கழன்று விழும் வேளையிலும் வராமலிருப்பவனின் குன்றில்!"

 மேல்
 
  வைகறை - (பெ) விடியல், daybreak
வைகறைக் காட்சிகள்.
1.
இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த
முள் தாள் தாமரை துஞ்சி வைகறை
கள் கமழ் நெய்தல் ஊதி எல் பட
கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர்
அம் சிறை வண்டின் அரி கணம் ஒலிக்கும் - திரு 72-76
கரிய சேற்றினையுடைய அகன்ற வயலில் முறுக்கவிழ்ந்து மேற்புறமும் மலர்ந்த
முள்ளிருக்கும் தண்டையுடைய தாமரைப் பூவில் துயில்கொண்டு, விடியற்காலத்தே,
தேன் நாறுகின்ற நெய்தல் பூவை ஊதி, ஞாயிறு வீழ
கண்ணைப் போன்று விரிந்த விருப்பம் மருவின சுனைப் பூக்களில்,
அழகிய சிறகையுடைய வண்டின் அழகிய திரள் ஆரவாரிக்கும் 
2.
பொறி மயிர் வாரணம் வைகறை இயம்ப - மது 673
பொறிகளுள்ள மயிரினையுடைய கோழிச்சேவல் விடியற்காலத்தை அறிந்து கூவ,
3.
இரவு தலைப்பெயரும் ஏம வைகறை - மது 686
இராக்காலம் தன்னிடத்தினின்றும் போகின்ற (எல்லாவுயிர்க்கும்)பாதுகாவலாகிய விடியலில்,
4.
வேய் பெயல் விளையுள் தேம் கள் தேறல்
குறைவு இன்று பருகி நறவு மகிழ்ந்து வைகறை
பழம் செருக்கு உற்ற நும் அனந்தல் தீர - மலை 171-173
மூங்கில் குழாய்க்குள் பெய்தலுற்று விளைவித்ததான தேனால் செய்த கள்ளின் தெளிவைக்
குறைவு இல்லாமல் குடித்து, (அதன்)நறுமணத்தில்(=களிப்பில்) மகிழ்ந்து, விடியற்காலையில்,
பழைய களிப்பினால் அடைந்த உமது போதைமயக்கம் தீரும்படி,
5.
அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி
எஃகு உறு பஞ்சிற்று ஆகி வைகறை
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட - நற் 247/3-5
மிகுந்த மழை பொழிந்த இனிய குரலையுடைய மேகம்
இரும்பு வில்லினால் அடிக்கப்பட்ட பஞ்சைப் போல் ஆகி, விடியற்காலையில்
உச்சி உயர்ந்த நெடிய மலையில் தவழும் நாடனே
6.
திண் திமில் பரதவர் ஒண் சுடர் கொளீஇ
நடுநாள் வேட்டம் போகி வைகறை
கடல் மீன் தந்து கானல் குவைஇ - நற் 388/4-6
திண்ணிய படகுகளையுடைய பரதவர், ஒளிரும் விளக்குக்குகளைக் கொளுத்திக்கொண்டு
நள்ளிரவில் மீன்வேட்டைக்குச் சென்று, அதிகாலையில்
தாம் பிடித்த கடல் மீன்களைக் கொண்டுவந்து, கடற்கரைச் சோலையில் குவித்து
7.
குக்கூ என்றது கோழி அதன்_எதிர்
துட்கென்றன்று என் தூ நெஞ்சம்
தோள் தோய் காதலர் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே - குறு 157
குக்கூ என்று கூவியது கோழிச்சேவல்; அதைக் கேட்டு
துட்கென்றது என் தூய்மையான நெஞ்சம்;
எனது தோளைத் தழுவிக்கிடக்கும் காதலரைப் பிரிக்கும்
வாளைப் போன்ற வைகறைப் பொழுது வந்துவிட்டது என்றே!
8.
வைகறை மலரும் நெய்தல் போல - ஐங் 188/3
வைகறைப் பொழுதில் மலரும் நெய்தல் பூவைப் போல
9.
ஆரிடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்த_கால்
நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள் வைகறை
கார் பெற்ற புலமே போல் கவின் பெறும் - கலி 38/10-12
கடப்பதற்கு அரிய வழி என்று கருதாமல், கருநாகங்களுக்கும் அஞ்சாமல் நீ இவளைக் காண வந்தபோது,
நீர் இல்லாத நிலத்தில் பயிர் வாடுவதுபோல் வாடிக்கிடந்தவள், விடியற்காலையில்
மழையைப் பெற்ற நிலத்தைப் போல வனப்புறுவாள்
10
அதனால் பொதி அவிழ் வைகறை வந்து நீ குறைகூறி
வதுவை அயர்தல் வேண்டுவல் - கலி 52/22,23
அதனால், அரும்புகள் மலரும் அதிகாலையில் வந்து நீ உன் விருப்பத்தைக் கூறி
மணம் பேசி முடிக்க வேண்டும்,

 மேல்
 
  வைகு - (வி) 1. கிட, be lying
         2. காலம்கழி, pass the time
         3. தங்கு, இரு, stay, be
         4. நிலைகொண்டிரு, abide
         5. விடி, dawn
1.
கால் இயல் கலி_மா கதி இன்றி வைகவும் - புறம் 229/21
காற்றுப்போலும் இயலையுடைய மனஞ்செருக்கிய குதிரைகள் கதியின்றிக் கிடக்கவும்

களம் மலி குப்பை காப்பு இல வைகவும் - புறம் 230/3
களத்தின்கண் நிறைந்த நெற்பொலி காவலின்றியே கிடப்பவும்

அகன் தலை வையத்து புரவலர் காணாது
மரம் தலை சேர்ந்து பட்டினி வைகி - புறம் 371/1,2
அகன்ற இடத்தையுடைய நிலவுலகத்தின்கண் எம்மைப் பாதுகாக்கும் வேந்தரைக் காணப்பெறாமையால்
மன்றத்தின்கண் நிற்கும் மரத்தின் அடியிலே இருந்து பட்டினியால் கிடந்து
2.
கள் மாறு நீட்ட நணிநணி இருந்த
குறும் பல் குறும்பின் ததும்ப வைகி
புளி சுவை வேட்ட செம் கண் ஆடவர் - புறம் 177/6-8
கள்ளை ஒருவர்க்கொருவர் மாறுமாறாக நீட்டிட, ஒன்றற்கொன்று அணித்தாயிருந்த
குறிய பல அரணின்கண்ணே இருந்து அக்கள்ளை நிரம்ப உண்டு காலங்கழித்து
பின்னைச் செருக்கினால் விடாய் மிக்குப் புளிச்சுவையை விரும்பிய சிவந்த கண்ணையுடைய ஆடவர்
3.
நிழல் காண்-தோறும் நெடிய வைகி
மணல் காண்-தோறும் வண்டல் தைஇ - நற் 9/7,8
நிழல் கண்டவிடமெல்லாம் நெடுநேரம் தங்கி,
மணல் கண்டவிடமெல்லாம் சிறுவீடுகட்டி மகிழ்ந்து விளையாடி

பாம்பு எறி கோலின் தமியை வைகி
தேம்புதி-கொல்லோ நெஞ்சே - அகம் 322/5,6
கோலால் எறியப்பட்ட பாம்பினைப் போல வேறு துணையின்றி இருந்து
வாடுகிறாயோ! நெஞ்சே!
4.
பெயலொடு வைகிய வியன் கண் இரும் புனத்து - மலை 99
மழையோடு (எப்போதும்)நிலைகொண்ட அகன்ற இடமாகிய பெரிய கொல்லை நிலத்தில்
5.
கான யானை வெண் கோடு சுட்டி
மன்றோடு புதல்வன் புன் தலை நீவும்
அரு முனை பாக்கத்து அல்கி வைகு உற - அகம் 245/11-13
(வீட்டிலிருக்கும்) காட்டுயானையின் வெள்ளிய கொம்பை எடுத்து வருதல் குறித்து
மன்றின்கண் ஓடிவிளையாடும் புதல்வனுடைய புல்லிய தலையைத் தடவி ஏவும்
அரிய போர்முனைகளையுடைய பாக்கத்திடத்தே தங்கி, இருள் கழியும் விடியல் தோன்ற
- நாட்டார் உரை
- வைகு உற என்பதற்கு வைகுதல் உற என்று பொருள்கொள்வார் ஔவை.சு.து.- புறம் 233- உரை

 மேல்
 
  வைகுசுடர் - (பெ) விடிவிளக்கு, Light that burns all night; 
வைகுசுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர் - அகம் 87/13
விடிவிளக்கு விளங்குகின்ற வானளாவிய நம் பெரிய மாளிகையின்கண்
- விடிவிளக்கு - விடியுமளவும் எரியும்விளக்கு, 

 மேல்
 
  வைகுறு - 1. (வி) 1. இருள்தங்கு, darkness remain
           2. வைகுதலுறு, (dawn) that stays
           3. மறை, set
           4. விடி, dawn
       - 2. (பெ) வைகறைப்பொழுது, early dawn
1.1.
தண் புலர்
வைகுறு விடியல் போகிய எருமை - அகம் 100/15,16
தண்ணென்று புலர்ந்திடும்
இருள்தங்கிய விடியற்காலத்தே போகிய எருமை
- நாட்டார் உரை
1.2.
வைகுறு விடியல் இயம்பிய குரலே - புறம் 233/8
வைகுதலுற்ற விடியற்காலத்துச் சொல்லிய வார்த்தை
1.3
வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடும் சுடர்
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று
வைகுறு வனப்பின் தோன்றும் - நற் 163/10,11
ஆகாயத்திலே சென்ற, விளங்கிய ஒளியையுடைய, நெடிய சுடரையுடைய 
கதிரினாலே இருளைப் போக்கி எழுந்து உள்ளே கொதித்து, ஆதித்தனது
பாடுசாய்கின்ற அழகுபோலத் தோன்றும்
- பின்னத்தூரார் உரை
1.4.
வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடும் சுடர்
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று
வைகுறு வனப்பின் தோன்றும் - நற் 163/9-11
ஒளிவிளங்கும் நெட்ய சுடர்களைக் கொண்ட
கதிர்களைக் காய்ந்தபடியே வானத்தே மூழ்கிக்கிடந்த இருளினது செறிவைக்கண்டு உள்ளே கொதித்து 
விடியற்காலை வேளையிலே அதனைப் போக்குவதற்கு எழுகின்ற
வைகறைப்போதின் வனப்பினோடும் கலந்து தோன்றும்
- வைகுறு - விடியல் - புலியூர்க்கேசிகன் உரை, விளக்கம்
- வைகுறு வனப்பின் தோன்றும் - appears like splendid daybreak - வைதேகி ஹெர்பெர்ட் மொழிபெயர்ப்பு
2.
புல் இதழ் கோங்கின் மெல் இதழ் குடை பூ
வைகுறு மீனின் நினைய தோன்றி
புறவு அணிகொண்ட பூ நாறு கடத்திடை - நற் 48/3-5
புல்லிய புறவிதழையுடைய கோங்கினுடைய மெல்லிய இதழ் மிக்க குடை போன்ற மலர்கள் எல்லாம்
வைகறைபொழுதிலே விசும்பின்கண் விளங்குகின்ற மீன்களாம் எனக் கருதும்படி தோன்றாநின்று
காடெங்கும் அழகமைந்த மலர் மணம்வீசும் கண்ணெறியிலே
- பின்னத்தூரார் உரை

 மேல்
 
  வைகுறுமீன் - (பெ) 1. விடிவெள்ளி, Venus as morning star
            2. அதிகாலை வானில் செவ்வாய் கோள், Mars in the morning sky
1.
வண்டல் ஆயமொடு உண்துறை தலைஇ
புனல் ஆடு மகளிர் இட்ட பொலம் குழை
இரை தேர் மணி சிரல் இரை செத்து எறிந்தென
புள் ஆர் பெண்ணை புலம்பு மடல் செல்லாது
கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த
வேள்வி தூணத்து அசைஇ யவனர்
ஓதிம விளக்கின் உயர் மிசை கொண்ட
வைகுறு மீனின் பைபய தோன்றும் - பெரும் 311-318
(சிறு வீடு கட்டும்)விளையாட்டுடைய தோழியருடன் நீருண்ணும் துறையில் கூடி
நீராடுகின்ற மகளிர் (நீரில்)நழுவவிட்டுச்சென்ற பொன்னாற் செய்த மகரக்குழையினை,
இரையைத் தேடுகின்ற (நீல)மணி(போலும்) மீன்கொத்தி (தனக்கு)இரை என எண்ணிப் பாய்ந்தெடுத்து,
பறவைகள் நிறைந்திருக்கின்ற பனைமரத்தின் தனித்த மடலுக்குச் செல்லாமல்,
நூற்கேள்வியையுடைய அந்தணர் செய்தற்கரிய கடனாகச் செய்து முடித்த
வேள்விச்சாலையின் வேள்வித்தூணின்மேல் இருக்க, (அப்பறவை)யவனரி
அன்ன(த்தைப்போன்ற தொங்கு) விளக்கைப்போலவும், (மகரக்குழை, விளக்கின் தீச்சுடர்)உயர்ந்த வானில்
இடங்கொண்ட
வைகறை வெள்ளிமீன் போலவும் மினுக்மினுக் என்று ஒளிவிட்டும் தோன்றும்
2.
புல் இதழ் கோங்கின் மெல் இதழ் குடை பூ
வைகுறு மீனின் நினைய தோன்றி
புறவு அணிகொண்ட பூ நாறு கடத்திடை - நற் 48/3-5
புல்லிய இதழையுடைய கோங்கினது மெல்லிதாய் விரிந்த உட்குடைவான பூ
விடியலில் தோன்றும் செம்மீன் என நினையுமாறு மலர்ந்து தோன்றி
காட்டிடத்து அழகுசெய்தமையால் பூவின் மணம் கமழும் கானத்தின்கண்
- ஔவை.சு.து.உரை
செம்மீன் - Mars
- ஔவை.சு.து. அவர்கள் இங்கு கோங்கு என்பதை முள்ளிலவு, Red cotton tree, Bombax ceiba எனக் கொண்டு,
அதன் பூ செந்நிறமாக இருப்பதால், அதைப்போல் தோன்றும் மீனையும் செம்மீன் என்று பொருள்-
கொண்டிருக்கிறார் எனத் தோன்றுகிறது. ஆனால் கோங்கு எனப்படும் Hopea wightiana அல்லது
Hopea ponga என்ற மரத்தின் பூ வெண்ணிறத்தில் இருப்பதைக் காணலாம். அப்படியிருப்பின் இந்த மீன்
வெள்ளி எனப்படும் சுக்கிரன் என்றே கொள்ளலாம்.

 மேல்
 
  வைகை - (பெ) வையை ஆறு, river vaigai
மலிதந்து நீத்தம்
வறாஅற்க வைகை நினக்கு - பரி 16/54,55
மிகுந்த பெருக்கினைத் தந்து வெள்ளம்
வற்றாது இருக்கட்டும் வையையே உனக்கு.

 மேல்
 
  வைந்நுதி - (பெ) அங்குசம், தோட்டி, Elephant hook or goad
வைந்நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் - திரு 78
கூரிய நுனி(யையுடைய தோட்டி) வெட்டின வடு அழுந்தின புகரையுடைய நெற்றியில்

 மேல்
 
  வைப்பு - (பெ) 1. ஊர், city
         2. செல்வம், treasure-trove
         3. நிலம், land
1.
என்றூழ் நின்ற புன் தலை வைப்பில் - அகம் 21/14
வெப்பம் நின்று காயும் புல்லிய இடங்களில் உள்ள ஊர்களையுடைய
2..
மருந்து எனின் மருந்தே வைப்பு எனின் வைப்பே - குறு 71/1
என் காம நோய்க்கு மருந்து வேண்டும் எனின் அது அவளே; எனக்குச் செல்வமும் அவளே
3.
வித்தி வான் நோக்கும் புன் புலம் கண் அகல்
வைப்பிற்று ஆயினும் நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே - புறம் 18/24-26
விதைத்தபின் மழையைப் பார்த்திருக்கும் புல்லிய நிலம், இடம் அகன்ற
நிலத்தையுடைத்தாயினும் அது பொருந்தி ஆளும் அரசனது முயற்சிக்குப் பயன்படாது

 மேல்
 
  வையகம் - (பெ) பூமி, உலகம், earth, world
வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ
பொய்யா வானம் புது பெயல் பொழிந்து என - நெடு 1,2
உலகம்(எல்லாம்) குளிரும்படியாக, வலப்புறமாக வளைந்து (எழுந்திருந்து),
(பருவம்)பொய்யாத மேகம் (கார்காலத்து முதல்)மழையைப் பெய்ததாக,

வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள்
பொய்யா எழினி - புறம் 230/5,6
உலகத்தார் புகழ்ந்த விளங்கிய போரைச் செய்யும் ஒள்ளிய வாளினையும்
தப்பாத மொழியினையுமுடைய எழினி

 மேல்
 
  வையம் - (பெ) 1. வையகம், பூமி, உலகம், earth, world
          2. குதிரை பூட்டிய தேர், Chariot drawn by horses
          3. கூடார வண்டி, covered cart
1.
வையம் காவலர் வளம் கெழு திரு நகர் - புறம் 261/6
உலகத்தைக் காக்கும் வேந்தருடைய செல்வம் மிக்க திருநகரின்கண்
2.
தச்சன் செய்த சிறு மா வையம் - குறு 61/1
தச்சன் செய்த சிறிய குதிரைகளையுடைய தேரினை
3.
மெய்யாப்பு மெய் ஆர மூடுவார் வையத்துக்கு
ஊடுவார் ஊடல் ஒழிப்பார் உணர்குவார் - பரி 24/19,20
மகளிர் தம் மெய்யாப்பால் தம் மெய்முழுக்க மூடுவார், வண்டிக்குள் இருக்கும் பெண்கள் தம் கணவருடன்
ஊடல் கொள்வார், கணவர் ஊடலை ஒழிப்பார், அதனை உணர்ந்து ஊடல் தீர்வார்,
- வையத்துக்கு - வேற்றுமை மயக்கம் - பொ.வே.சோ.உரை விளக்கம்.

 மேல்
 
  வையை - (பெ) வைகை ஆறு, river vaigai
வையை அன்ன வழக்கு உடை வாயில் - மது 356
வைகை போன்று (மக்களின் இடையறாத)போக்குவரத்தை உடைய வாயில்

கனவின் தொட்டது கை பிழை ஆகாது
நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை
வரு புனல் அணிக என வரம் கொள்வோரும் - பரி 8/103-105
கனவில் காதலரின் கையைத் தொட்டது பொய்யாகாமல்
நனவினிலும் கிட்டும்படி, 'உனக்குரிய செறிந்த நீரையுடைய வையை ஆறு
புதிதாய் வரும் புனலை அணிவதாக' என்று வரம் கேட்போரும்,

 மேல்