<<முந்திய பக்கம்

சங்க இலக்கியம் - அருஞ்சொற்களஞ்சியம்
கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
இ - முதல் சொற்கள்
இகணை
இக
இகல்
இகு
இகுளை
இங்கு
இசை
இஞ்சி
இட்டிகை
இட்டு
இடங்கர்
இட
இடர்
இடி
இடுக்கண்
இடும்பை
இடுமயிர்
இண்டு
இணர்
இத்தி
இதக்கை
இதணம்
இதல்
இதை
இப்பி
இம்பர்
இமிர்
இமில்
இமிழ்
இயம்
இயம்பு
இயவர்
இயவு
இயவுள்
இரங்கு
இரட்டு
இரலை
இரவம்
இரவலர்
இரியல்
இருப்பை
இருபிறப்பாளர்
இரும்
இருவி
இருவை
இலங்கு
இலஞ்சி
இலவம்
இலிற்று
இவர்
இவறு
இவுளி
இழி
இழிசினன்
இழிபிறப்பாளன்
இழுக்கு
இழுது
இழை
இளவேனில்
இளி
இளிவரல்
இளிவரவு
இளிவு
இளை
இற்றி
இறடி
இறவு
இறா
இறால்
இறு
இறும்பு
இறும்பூது
இறுவரை
இறை
இறைகூடு
இறைஞ்சு
இனை

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
  இகணை - (பெ) ஒரு மரம், a tree
சவுக்குமரம் என்பர்.

விசும்பு உற நிவந்த மா தாள் இகணை
பசும் கேழ் மெல் இலை அருகு நெறித்து அன்ன - அகம் 131/1,2

 மேல்
 
  இக - (வி) தாண்டு, கட, leap over, go beyond 2. நீங்கு, put away, eradicate

1.
சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி - திரு 19
தொலைதூரத்தையும் தாண்டி ஒளிறும் சினமகன்ற மேனி
2.
முனிவு இகந்திருந்த முது வாய் இரவல - சிறு 40
வருத்தம் நீங்கியிருந்த முதுமை வாய்க்கப்பெற்ற இரவலனே!

 மேல்
 
  இகல் - 1. (வி) மாறுபடு, be inimical, disgaree 
	- 2 (பெ) மாறுபாடு, பகை, enmity, disagreement
1.
பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானை - பரி 20/4
போரிட்டு மாறுபட்ட புலியைப் பிளந்த பொலிவுள்ள நெற்றியையுடைய அழகிய யானை

இரு பெரு வேந்தரும் இகலி கண்ணுற்ற
பொருகளம் போலும் தொழூஉ - கலி 105/48,49
இருபெரும் வேந்தர் தம்முள் மாறுபட்டு எதிர்ப்பட்ட
போர்க்களம் போன்று காட்சியளித்தது தொழு.
2.
இரும் செருவின் இகல் மொய்ம்பினோர் - பட் 72
பெரிய போர்த்தொழின்கண் மாறுபாடுற்ற வல்லைமையுடையோர்

இகல் அட்டு, கையது கணிச்சியொடு மழுவே - அகம் 0/4
பகையை அழித்து, கையினில் குந்தாலியுடன் மழுப்படை

 மேல்
 
  இகு - (வி) 1. தாழ்ந்துவிழு, descend 2. தாழ ஒலியெழுப்பு sound as a drum, 3. பரப்பிவிடு, spread over
1.
ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு - சிறு 13
மெல்லிதாகக் கீழே இறங்கும் மேகங்களின் அழகைக் கொண்டு 
2.
கண கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின் - அகம் 112/14
கூட்டமான மான்கள் தாழ ஒலிக்கும் மிளகுக்கொடிகள் படரும் மலைச்சாரலில்
3.
தருகணாளர் குடர் தரீஇத் தெறுவரச்
செம் செவி எருவை அஞ்சுவர இகுக்கும் - அகம் 77/11
இறந்துபட்ட வீர மறவர்களின் குடலை வெளியே இழுத்துக் குவியலாக
சிவந்த செவியையுடைய பருந்து அச்சம்தோன்றப் பரப்பிவிடும்

 மேல்
 
  இகுளை - (பெ) பெண்ணின் தோழி

வள்ளை அகவுவம் வா இகுளை நாம் - கலி 42/8
வள்ளைப்பாட்டைக் கூவிப்பாடுவோம் வா தோழியே நாம்

 மேல்
 
  இங்கு - 1. (வி) அழுந்தத் தங்கு, stay deep
	- 2. (பெ) இந்த இடம், here, this place
1.
ஆர் சூழ் குறட்டின் வேல் நிறத்து இங்க - புறம் 283/8
ஆரக் கால்கள் சூழச் செருகப்பட்டுத் தோன்றும் குடம் போல வேல் மார்பில் அழுந்தித்தங்க 
2.
இன்னம் ஆகவும் இங்கு நம் துறந்தோர் - அகம் 85/3

 மேல்
 
  இசை - 1. (வி) 1.இசைக்கருவிகளை வாசி, play musical instruments
	    2. கூறு, அறிவி, express, indicate
	- 2 (பெ) 1. இனிய ஓசை, melody 2. புகழ், praise, fame
1.1
வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி - பெரும் 182
1.2
நசையுநர்த் தடையா நன்பெரு வாயில்
இசையேன் புக்கு என் இடும்பை தீர - பொரு 67
விரும்பி வந்தார்க்குத் தடையில்லாத நல்ல பெரிய வாசலில்
கூறாமற் புகுந்து என் வறுமை தீர
2.1
இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க - திரு 240
2.2
பல்லியக் கோடியர் புரவலன் பேர் இசை
நல்லியக்கோடனை நயந்த கொள்கையொடு - சிறு 125,126
பல இசைக்கருவிகளையுடைய கூத்தரைக் காப்பவனாகிய பெரும் புகழையுடைய
நல்லியக்கோடனை விரும்பிய கருத்துடன்

 மேல்
 
  இஞ்சி - (பெ) 1. உறைப்பான கிழங்கு வகை, ginger
	   2. கோட்டை மதில் ramparts of a fort
1.
இஞ்சி மஞ்சள் பைம் கறி பிறவும் - மது 289
2.
வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி - மலை 92
மலையைப் போன்ற உயர்ச்சி கொண்ட விண்ணைத் தொடும் கோட்டைமதில்

 மேல்
 
  இட்டிகை (பெ) - செங்கல், செங்கல் கட்டுமானம்

இட்டிகை நெடும் சுவர் விட்டம் வீழ்ந்து என - அகம் 167/13
செங்கல்லாலான நீண்ட சுவரிலுள்ள விட்டம் விழுந்ததாக

நாள் பலி மறந்த நரைக்கண் இட்டிகை - அகம் 287/6
நாள்தோறும் நடைபெறும் பலியை மறந்ததினால் வெறிச்சோடிப்போன செங்கல் மேடைb

 மேல்
 
  இட்டு - (பெ) சிறுமை, ஒடுக்கம், smallness, narrowness

கல் பொளிந்து அன்ன இட்டு வாய் கரண்டை - மது 482
கல்லை உளியால் கொத்தினாற்போன்ற ஒடுங்கிய வாயையுடைய கமண்டலம்

 மேல்
 
  இடங்கர் - (பெ) முதலை வகை, estuarine crocodyle (crocodylus porosus)

கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும் - குறி 257

	

	பார்க்க : கராம்

 மேல்
 
  இட (வி) - விசைப்போடு திற, forcibly open, பிள, crack, break, இடம்பெயர், dislodge

செப்பு இடந்து அன்ன நாற்றம் தொக்கு உடன் - நற் 337/6
செம்பின் மூடியை வலியத்திறந்ததைப் போல் மணம் ஒருங்கு சேர்ந்து

இடரிய ஏற்று எருமை நெஞ்சு இடந்து - கலி 101/25
உயிரினங்களை அழிக்கும் எருமைக்கடா மீது ஏறிவரும் கூற்றுவனின் நெஞ்சைப் பிளந்து 

உளியம்
சிதலை
ஒருங்கு முயன்றெடுத்த நனைவாய் நெடுங்கோடு
இரும்பு ஊது குருகின் இடந்து இரை தேரும் - அகம் 81/1-5
கரடியானது,
கறையான்கள்
தம் நனைந்த வாயால் சேர்ந்து வருந்திக் கட்டிய நெடிய உச்சியை
இரும்பு உலையில் ஊதும் துருத்தியைப் போல் மூச்சுவிட்டு இடம்பெயர்த்து இரைதேரும்

 மேல்
 
  இடர் - (பெ) இடையூறு, துன்பம், difficulty, distress

குன்று இடம்பட்ட ஆர் இடர் அழுவத்து - மலை 368
குன்றினிடத்தே உளவாகிய பொறுத்தற்கரிய வருத்தத்தைச் செய்யும் குழிகளிடத்தே

 மேல்
 
  இடி - 1. (வி) 1. தகர், துகளாக்கு, collapse, demolish, pound 2. இடியோசை செய், thunder
	-2. (பெ) 1. பொடிசெய்யப்பட்டது, powder 2. இடியோசை, thunder

இடி சுர நிவப்பின் இயவு கொண்டு ஒழுகி - மலை 20
கல்லை இடித்த சுரத்தின் உச்சியில் உள்ள வழியில் சென்று

கார் இடி உருமின் உரறு முரசின் - பதி 33/10
கார்காலத்தில் இடிக்கும் இடியேற்றைப் போல முழங்கும் முரசின்

இடி கலப்பு அன்ன நறு வடி மாவின் - மலை 512
பொடியான கற்கண்டின் கலப்பை ஒத்த நறிய வடுக்களையுடைய மாவினது

இடி என முழங்கும் முரசின் - புறம் 17/39
இடியைப் போல முழங்கும் முரசினது

 மேல்
 
  இடுக்கண் (பெ) - பிறரால் வரும் துன்பம், misery from others

இடுக்கண் செய்யாது இயங்குநர் இயக்கும் - மலை 18
வருத்துதலைச் செய்யாமல் வழிச்செல்வோரைப் போக்கும்

 மேல்
 
  இடும்பை - (பெ) துன்பம், suffering

நாடன், இரவின் வரூஉம் இடும்பை நாம் உய - நற் 393/8
காதலன், இரவில் வருதலாகிய துன்பத்திலிருந்து நாம் பிழைக்கவேண்டி
 
 மேல்
 
  இடுமயிர் - (பெ) கவரி மயிர், decorative hair
குதிரைகளின் தலையின் உச்சியில் இணைத்துத் தைக்கப்படும் அலங்கார முடி

கொடி படு சுவல இடுமயிர் புரவியும் - மது 391
ஒழுங்குபட்ட பிடரியினையுடைய, அணியப்பட்ட கவரி மயிரையும் உடைய குதிரையும்

 மேல்
 
  இண்டு - (பெ) கொடிவகை Eight-pinnate soap-pod, l. cl., Acacia intsiacaesia;

மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே - நற் 2/6
மானை நோக்கியபடி, இண்டங்கொடிகள் படர்ந்தேறிய ஈங்கைப் புதர்களைக் கொண்ட சுரம்
 
 மேல்
 
  இணர் - (பெ) கொத்து, குலை, bunch of flowers or fruits

நீடு இணர்க் கொன்றை கவின் பெற காடு - அகம் 364/5
நீண்ட கொத்துக்களைக் கொண்ட கொன்றையால் காடு அழகுபெற

இன மாவின் இணர்ப் பெண்ணை - பட் 18
இனமான மாமரங்களினையும், குலைகளையுடைய பனைகளையும்

	
 மேல்
 
  இத்தி - (பெ) ஒரு வகை அத்தி மரம், White fig, l.tr., Ficus infectoria;

புல் அரை இத்தி புகர் படு நீழல் - அகம் 77/13
புல்லிய அடியினையுடைய இத்தியின் புள்ளிபட்ட நிழலிலே

 மேல்
 
  இதக்கை - (பெ) பனங்காயின் தலையிலுள்ள தோடு, Integument on the top of a palmyra fruit

அத்த நடுகல் ஆளென உதைத்த
கான யானைக் கதுவாய் வள் உகிர்
இரும் பனை இதக்கையின் ஒடியும் ஆங்கண் - அகம் 365/6
காட்டு வழியிலுள்ள நடுகல்லை ஆள் என நினைத்து உதைத்த
காட்டு யானையின் சிதைந்த வளமான நகம்
பெரிய பனங்காயின் தோடு போல் பெயர்ந்து விழும் இடத்தில்

	
 மேல்
 
  இதணம் - (பெ) விளைநிலத்தில் உள்ள காவற்பரண், watch-tower in a corn-field

உயர் நிலை இதணம் ஏறிக் கை புடையூஉ - மலை 204
உயரமான இடத்தில் இருக்கும் பரணில் ஏறி, கைகளைத் தட்டி

 மேல்
 
  இதல் - (பெ) காடை, quail
இதன் காலில் உள்ள முள், செம்முல்லையின் அரும்புக்கு உவமிக்கப்படும்.

புதல் மிசை தளவின் இதல் முள் செம் நனை - அகம் 23/3
புதரின் மேல் உள்ள செம்முல்லையின் காடையின் முள் போன்ற சிவந்த அரும்புகள்

	
 மேல்
 
  இதை - (பெ) 1. பாய்மரக்கப்பலின் பாய், sail of a ship 2. புன்செய்நிலம் field for dry cultivation

1.
வால் இதை எடுத்த வளி தரு வங்கம் - மது 536
வெள்ளிய பாயை விரித்த காற்றால் தரப்பட்ட வங்கக் கப்பல்
2.
இதை புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு - அகம் 394/3
புன்செய் நிலமான புனத்தில் விளைந்த வரகின் நன்றாகக் குத்திய அரிசியோடு

 மேல்
 
  இப்பி - (பெ) சிப்பி, pealr-oyster shell

முதிர் வார் இப்பி முத்த வார் மணல் - புறம் 53/1
முற்றி நீண்ட சிப்பியின் முத்துப்போன்ற ஒழுங்குபட்ட மணலில்

 மேல்
 
  இம்பர் - (பெ) இந்த உலகம், இந்த இடம், this world, this place

வம்ப வேந்தன் தானை
இம்பர்நின்றும் காண்டிரோ வரவே - புறம் 287/14
பகை வேந்தனின் படைகளை
இங்கிருந்தே காண்பீராக அவற்றின் வரவை

 மேல்
 
  இமிர் - (வி) ரீங்காரம் செய், buzz

வண்டு வகைகளான சுரும்பு, தும்பி, ஞிமிறு ஆகியவை பறக்கும்போது எழுப்பும் ஒலி.

வண்டு இமிர் சுடர் நுதல் குறு_மகள் - ஐங் 254/3
சுரும்பு இமிர் கானம் நாம் பாடினம் பரவுதும் - கலி 106/48
தொடிமகள் முரற்சி போல் தும்பி வந்து இமிர்தர - கலி 36/4
வரி ஞிமிறு இமிரும் மார்பு பிணி மகளிர் - பதி 50/18

buzzing என்பதற்குரிய தூய தமிழ்ச்சொல் இமிர்தல்.

வீணையின் ஒரு நரம்பை இழுத்து விட்டால் ‘டொய்ங்ங்ங்ங்ங்ங்..’ என்று ஒலிக்குமே
அதுவும் இமிர்தல்தான்.

கை கவர் நரம்பின் இம்மென இமிரும் - குறி 147

இந்த அடி இமிர்தலோடு அதன் ஒலிக்குறிப்பையும் குறிப்பிடுவதைக் கவனியுங்கள். 

சில வேளைகளில் குழல், தூம்பு போன்ற துளைக் கருவிகள் மெல்லிய ஓசை எழுப்புவதுவும் 
இமிர்தல் எனப்பட்டுள்ளது.

இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு - மலை 7
கை வைத்து இமிர்பு குழல் காண்குவோரும் - பரி 19/41

 மேல்
 
  இமில் - (பெ) காளையின் திமில், Hump on the withers of an Indian bull

இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு - மலை 330
தன் கூட்டத்தை விட்டு விலகிய ஆடுகின்ற திமிலைக் கொண்ட நல்ல காளை

	

 மேல்
 
  இமிழ் - (வி) இனிதாக முழங்கு, hum, roar sweetly

இமிழ் என்பதற்கு இனிமை என்ற ஒரு பொருள் உண்டு. எனவே இமிழ் என்னும் ஓசைக்குறிப்பு 
இனிமையான ஒலிக்குறிப்பைக் குறிக்கும். 

தோற்கருவிகளில் முரசு, முழவு ஆகியவை இமிழும் என்கின்றன இலக்கியங்கள். 

ஒரு முரசை ஒரு கோல் கொண்டு ஓங்கி அறைந்தால் ‘டம்’ என்ற பேரொலி எழும்பும். 
மாறாக, இரு கைகளிலும் கோல்களை வைத்துக்கொண்டு மாறி மாறி ‘டம, டம, டம, டம’-வென்று 
உரக்கவும் இல்லாமல், மிக மெதுவாகவும் இல்லாமல் ஓசை எழுப்புவதே இமிழ்தல். 

இமிழ் குரல் முரசம் மூன்று உடன் ஆளும் - புறம் 58/12
இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணி - புறம் 99/9
பாடு இமிழ் முரசின் இயல் தேர் தந்தை - புறம் 394/8

என்ற அடிகள் முரசு இமிழ்வதைக் கூறும்.

மாலை நேரத்தில் ஒரு பெரிய ஆலமரத்தில் வந்து அடையும் பலவகைப் பறவைகள் ஒலி எழுப்புவதைக் 
கேட்டிருக்கிறீர்களா? அதுவும் இமிழ்தலே.

பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர் - குறு 320/6
எக்கர் ஞாழல் புள் இமிழ் அகன் துறை - ஐங் 143/1
யாணர் பழு மரம் புள் இமிழ்ந்து அன்ன - புறம் 173/3

ஆகிய அடிகள் கூட்டமான பறவைகள் ஒலி எழுப்புதலை இமிழ்தல் என்று குறிப்பிடுவதைக் காணலாம். 

அருவியின் பெருவெள்ளம் உயரத்திலிருந்து ‘சல்’- என்ற இரைச்சலுடன் விழுவதைக் கேட்டிருக்கிறிர்களா? 
அதுவும் இமிழ்தலே.

இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க - திரு 240
பாடு இமிழ் அருவி பாறை மருங்கின் - அகம் 352/3
எழிலி தோயும் இமிழ் இசை அருவி - புறம் 369/23

என்ற அடிகள் இதனை உணர்த்தும்.

அமைதியான நள்ளிரவில் கடற்கரையில் அமர்ந்து அந்தக் கடல் ஓசை எழுப்பதைக் கேட்டிருக்கிறீர்களா? 
மிகப் பெரும்பாலான இடங்களில் சங்க இலக்கியங்கள் இமிழ் என்ற குரலுக்குக் கடலையே குறிப்பிடுகின்றன.

பாடு இமிழ் பனி கடல் பருகி வலன் ஏர்பு - முல் 4
பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு - அகம் 334/4
தெண் நீர் பரப்பின் இமிழ் திரை பெரும் கடல் - புறம் 204/5

கடலின் அலைகள் எழுப்பும் அந்தக் காதுக்கினிய இரைச்சலைக் கேட்கும்போது அது இமிழ்கின்றது 
என்று உணர்வீர்!

யாழின் ஒரு நரம்பை இழுத்துவிட்டால் எழுவது இமிர் இசை என்று கண்டோம். 
ஆனால் யாழ் என்பது நரம்புகளின் தொகுதி அல்லவா? 
அது எழுப்பும் ஓசையும் சில நேரங்களில் இமிழ்கிறது என்கின்றன பரிபாடலும் கலித்தொகையும்.

கவர் தொடை நல் யாழ் இமிழ காவில் - பரி 22/38
யாழ் கொண்ட இமிழ் இசை இயல் மாலை அலைத்தரூஉம் - கலி 29/17

என்ற அடிகளில் யாழ் இமிழ்வதைக் காண்கிறோம். 

இனிய ஓசை எழுப்பும் இசைக்கருவிகளை இன்னியம் என்பர். இவை எழுப்பும் ஒலிகளும் இமிழ்தலே.

கயம் குடைந்து அன்ன இயம் தொட்டு இமிழ் இசை - மது 363
மத்து உரறிய மனை இன் இயம் இமிழா - பதி 26/3

என்ற அடிகள் மத்தளம் போன்ற இன்னியங்கள் இமிழ்கின்றன என உரைக்கின்றன.

கீழ்க்கண்ட பலவித ஓசைகளை உற்றுக்கேளுங்கள்.

கம்புள் சேவல் இன் துயில் இரிய,
வள்ளை நீக்கி வய மீன் முகந்து				255
கொள்ளை சாற்றிய கொடு முடி வலைஞர்
வேழ பழனத்து நூழிலாட்டு
கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை
அள்ளல் தங்கிய பகடு உறு விழுமம்
கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே			260
ஒலிந்த பகன்றை விளைந்த கழனி
வன் கை வினைஞர் அரி பறை இன் குரல்
தளி மழை பொழியும் தண் பரங்குன்றில்
கலி கொள் சும்மை ஒலி கொள் ஆயம்
ததைந்த கோதை தாரொடு பொலிய			265
புணர்ந்து உடன் ஆடும் இசையே அனைத்தும்
அகல் இரு வானத்து இமிழ்ந்து இனிது இசைப்ப - மது. 254 - 267

கம்புட்கோழி (தன்)இனிய உறக்கம் கெட்டோட,
வள்ளைக்கொடிகளை ஒதுக்கிவிட்டு வலிமையுடைய மீன்களை முகந்துகொண்டு,	255
(தாம்)கொண்டவற்றைக் கூவிவிற்கும் கொடிய முடிச்சுக்களையுடைய வலைகளையுடையோர்,
கொறுக்கைச்சிப் புல்லையுடைய வயல்மீன்களைக் கொன்றுகுவிக்கும் ஓசையும்,
கரும்பு ஆட்டும் ஆலைகளின் ஓசையும், களை பறிக்கும் ஓசையும்,
சேற்றில் மாட்டிக்கொண்ட எருதுகள் படும் வருத்தத்தை
கள்ளை உண்ணும் களமர் பெயர்க்கும் ஆரவாரமும்,				260
தழைத்த பகன்றையின் (நெல்)முற்றிய வயல்களில்
வலிய கைகளைக் கொண்ட நெல்லறுப்போரின் அரிபறை ஓசையும், இனிய ஓசையுடைய
துளிகளையுடைய முகில்கள் பெய்யும் குளிர்ந்த திருப்பரங்குன்றத்தில்
விழாக்கொண்டாடும் ஆரவாரமும், ஆரவாரத்தையுடைய மகளிர் திரள்
(தம்மிடத்து)தாழ வீழ்ந்த கோதை (தம் கணவர் மார்பின்)மாலையொடு அழகுபெறக் கூட	265
அவர்களுடன் சேர்ந்து நீராடும் ஆரவாரமும் ஆகிய அனைத்தும்
அகன்ற பெரிய வானத்தில் முழங்கி, இனிதாக இசைக்க,
ஆக, மீன்விற்போர் கூவிவிற்கும் ஓசை, கரும்பு ஆட்டும் ஓசை, வண்டியோட்டுபவர்கள் 
காளைகளை ஓட்டும் ஓசை, நெல்லறுப்போருக்கான பறையோசை, நகரின் விழாக்கொண்டாடும் 
ஆரவார ஓசை, மகளிர் கணவன்மாரொடு சேர்ந்து நீராடும் ஓசை என ஆகிய அனைத்து ஓசைகளும் 
அகன்ற பெரிய வானத்தில் எழுந்து ஆங்கு வாழ்வாருக்கு இனிதாகச் சேர்ந்து ஒலித்தன 

என்கிறது மதுரைக்காஞ்சி. 

எனவே பலவித இனிமையான ஒலிகள் ஒன்றுசேர்ந்து கேட்போரை மகிழ்விக்கும் வகையில் 
ஒலிப்பதே இமிழ்தல் என இதனால் பெறப்படுகிறது.

 மேல்
 
  இயம் - (பெ) இசைக்கருவி, musical instrument(s)

பல்லியம், இன்னியம், முருகியம் என்பவை தெரிவுசெய்யப்பட்ட இயங்களின் சேர்க்கை ஆகும்.

முருகனுக்கு வெறியாட்டு அயரும்போது பலவித இசைக்கருவிகள் முழங்கும். அது பல்லியம்.

மறிக்குரல் அறுத்துத் தினைப்பிரப்பு இரீஇச்
செல் ஆற்று கவலை பல் இயம் கறங்க - குறு 263/1,2
ஆட்டின் கழுத்தை அறுத்து, தினையாகிய பலியை வைத்து
நீ ஒடும் ஆற்றின் இடைக்குறையின்கண் பல்வேறு இசைக்கருவிகள் முழங்க

இனிமையாக இசைக்கக்கூடிய இசைக்கருவிகளின் கூட்டு இன்னியம்.

கழைக்கூத்தாடியின் சிறுமி தூக்கி நிறுத்திய கழைகளுக்கு இடையே நடக்கும்போது மக்களைக்
கவர்வதற்காக இனிமையாகச் சில தோற்கருவிகளை வாசிப்பர். அது அரிக்கூட்டு இன்னியம்

அரிக் கூட்டு இன் இயம் கறங்க ஆடுமகள்
கயிறு ஊர் பாணியின் - குறி 193
அரித்தெழும் ஓசையைக் கூட்டுதலை உடைய இனிய இசைக்கருவிகள் ஒலிக்க, ஆடுகின்ற மகள்
கயிற்றில் ஏறி நடக்கும் நடையில்

முருகனுக்கு உகந்த இசைக்கருவிகள் முருகியம் என்னப்பட்டன.

குறமகள், முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க - திரு 243
குறத்தி, முருகன் உவக்கும் இசைக்கருவிகளை ஒலிக்கச் செய்து

 மேல்
 
  இயம்பு - (வி) பேசு, சொல், அழை, இவற்றைப்போல் ஒலி எழுப்பு, speak, call, sound as a musical instrument

காலைப்பொழுது விடிகிறதை சேவல் கூவித் தெரிவிப்பது இயம்புதல்

பொறி மயிர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப/பொய்கை பூ முகை மலர - புறம் 398/3,4
பொறிகளையுடைய சிறகுகளைக் கொண்ட சேவல்கோழி காலைப் பொழுது விடிந்ததை அறிந்து கூவித் தெரிவிக்க

ஒரு நாளின் காலைப்பொழுதை முரசறைந்து அறிவிக்கும்போது அது இயம்புதல் ஆகிறது

படு கண் முரசம் காலை இயம்ப - மது 232
ஒலிக்கின்ற கண்ணையுடைய முரசம் பள்ளியெழுச்சியாக காலையில் ஒலிக்க

காலையில் தம் மாடுகளை வேலைக்கு நடத்திச் செல்ல வரும் உழவர்கள் ஆசையுடன் அவற்றுடன்
சிறிதுநேரம் உரையாடுவர். அதுவும் இயம்புதல்தான்

இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப - அகம் 314/4

சில நேரங்களில் புல்லாங்குழல் ஊதுவதுவும் நம்மை அழைப்பது போலிருக்கும்.
அப்போது மலரைச் சுற்றும் தும்பிகள் எழுப்பும் குரலும் இயம்புதலே என்கிறது பரிபாடல்

ஊது சீர் தீம் குழல் இயம்ப மலர் மிசை
தாது ஊது தும்பி தவிர்பு அல இயம்ப - பரி 22/40, 41

பள்ளத்துச் சேற்றில் சிக்கிக்கொண்ட ஆண்யானையைக் காப்பாற்ற முடியாத பெண்யானை
வேதனையில் அழைப்புவிடுத்து எழுப்பும் ஒலி, மலைக் குகைகளில் சென்றொலிப்பது
இயம்புதல் என்னப்படுகிறது.

தாழ்கண் அசும்பில்
படு கடும் களிற்றின் வருத்தம் சொலிய
பிடி படி முறுக்கிய பெருமரப் பூசல்
விண் தோய் விடரகத்து இயம்பும் - அகம் 8: 9 - 12

இனிமையான அல்லது குழைவான குரலில் அழைப்பதுபோல் அல்லது அறிவிப்பதுபோல் 
ஒலித்தலே இயம்புதல்

 மேல்
 
  இயவர் - (பெ) இசைப்போர், persons playing musical instruments

இயம் என்பது இசைக்கருவி. அதனை இயக்குவோர் இயவர்.

இம்மென் பெரும் களத்து இயவர் ஊதும்
ஆம்பல் அம் குழல் - நற் 113/10,11
இம்மென்னும் ஒலியோடே பெரிய களத்தில் குழல் ஊதுவோர் ஊதுகின்ற
ஆம்பலின் அழகான குழல்

கடிப்பு கண் உறூஉம் தொடி தோள் இயவர் - பதி 17/7
கடிப்பினைக் கொண்டு முரசின் கண்ணில் அறைந்து முழக்கும் தொடியணிந்த தோளையுடைய இயவர்கள்

 மேல்
 
  இயவு - (பெ) ஆட்கள், வாகனங்கள், விலங்குகள் நடமாட்டத்தால் உருவான/உருவாக்கப்பட்ட பாதை, way

இடிச் சுர நிவப்பின் இயவு கொண்டு ஒழுகி - மலை 20
கல்லை இடித்த சுரத்தின் உச்சியில் உள்ள வழியில் நடந்து

நல் எழில் நெடும் தேர் இயவு வந்து அன்ன - மலை 323
நல்ல அழகினையுடைய நெடிய தேர்கள் வழியிலே ஓடிவந்த தன்மையாக

இரும் களிறு இயல்வரும் பெரும் காட்டு இயவின் - அகம் 298/10
பெருங்களிறு இயங்கும் பெரிய காட்டு வழியில்

	

 மேல்
 
  இயவுள் - (பெ) இறைவன், தலைவன், supreme being

பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள் - திரு 274
சான்றோர் புகழ்ந்து பாடும் பெரிய பெயரையுடைய இறைவனே!

 மேல்
 
  இரங்கு - (வி) 1. பேரொலி எழுப்பு, roar 2. கருணைகாட்டு, அனுதாபம் கொள், show sympathy or grace
1.
பேரிரைச்சலோடு கூடிய முழக்கம் இரங்குதல் எனப்படுகிறது.
 
பாறைகளுக்கு நெடுவே பாய்ந்துவரும் ஆற்று நீரை,

கல்பொருது இரங்கும் மல்லல் பேரியாற்று - புறம் 192/8

என்கிறது புறநானூறு

கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை - மலை 324
இரங்கு புனல் நெரிதரு மிகு பெரும் காவிரி - புறம் 174/8
கல் பொருது இரங்கும் கதழ் வீழ் அருவி - குறு 134/5

என்ற அடிகளும் இதனை வலியுறுத்தும்.

சிலநேரங்களில் பொங்கிவரும் அலைகளைக்கொண்டு கரைகளில் மோதிப் பேரிரைச்சலைக் கடல் 
உருவாக்கும். அப்பொழுது அதனை இரங்கு கடல் என வருணிக்கின்றன நம் இலக்கியங்கள்.

இரங்கு நீர் பரப்பின் கானல் அம் பெருந்துறை - அகம் 152/6
பாடு எழுந்து இரங்கு முந்நீர் - அகம் 400/25
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை - அகம் 70/14

என்ற அடிகளால் இதனை உணரலாம்.

முரசுகளைப் பலவிதங்களில் ஒலிக்கலாம். அதனைப் பெருமுழக்கத்தோடு ஒலிக்கும்போது அதனை 
இரங்கு முரசு என்கிறோம்.

இரங்கு முரசின் இனம் சால் யானை - புறம் 137/1
முரசு எழுந்து இரங்கும் தானையோடு தலைச்சென்று - புறம் 211/5
பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை - புறம் 388/14
இரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப - புறம் 397/5

போன்ற அடிகள் பெருமுழக்கத்தை எழுப்பும் முரசுகளை இரங்கும் முரசு என்று குறிப்பதைக் காணலாம்.

மாட்டுவண்டியில் கரடுமுரடான பாதையில் பயணம்செய்திருக்கிறீர்களா? 
கற்களின் மேலும், கற்பாறைகளின்மேலும் சக்கரம் ஏறி இறங்கும்போது ஏற்படும் பெரும் சத்தத்தையும் 
இரங்குதல் என்கின்றது அகநானூறு. 

இங்கே ஒரு குதிரை பூட்டிய தேரின் சக்கரம் எழுப்பும் ஒலியைக் கேளுங்கள்.

விடுவிசைக் குதிரை விலங்கு பரி முடுகக்
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமிக்
கார்மழை முழக்கு இசை கடுக்கும் – அகம் 14/18-20

மேகங்கள் கடமுட என்று முழங்குவதைப் போல், கற்கள் உள்ள பாதையில் விரைந்து செல்லும் 
தேரின் சக்கரங்கள் கல்லில் மோதி இரங்குகின்றன என்கிறார் புலவர்.
2.
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும்காலை இரங்குவிர் மாதோ - புறம் 195/4,5
மழுவாகிய கூர்மையான படைக்கலத்தையும், கடும் வலிமையும் கொண்ட ஒருவன் (யமன்)
கட்டிக்கொண்டு போகுங்காலத்து நீர் நிலைக்கு பரிதவிப்பீர். 

 மேல்
 
  இரட்டு - (வி) 1. மாறிமாறி ஒலி, sound alternately, 2. இரண்டிரண்டாக ஒலி, sound double

1.
படு மணி இரட்டும் மருங்கின் கடு நடை
--------------- ---------- ---------------- --------------
கால் கிளர்ந்தன்ன வேழம் - திரு 80-82
தாழ்கின்ற மணி மாறி ஒலிக்கின்ற பக்கத்தினையும்
------------- ----------- --------- ---------
காற்று எழுந்ததைப் போன்ற களிறு
2.
விரல் ஊன்று படுகண் ஆகுளி கடுப்பக்
குடிஞை இரட்டு நெடு மலை அடுக்கத்து - மலை 140,141
விரல்கள் ஊன்றிப் பதியும் முழங்கும் கண்ணையுடைய உடுக்கினைப் போல
பேராந்தை இரண்டிரண்டாய் ஒலி எழுப்பும் நீண்ட மலையின் சரிவினில்

 மேல்
 
  இரலை - (பெ) ஒரு வகை மான், கலைமான், stag

இதில் ஏறு எனப்படும் ஆண்மானைப் பற்றிய வருணனை.

பெரிய கழுத்தை உடையது - மா எருத்து இரலை - நற் 69/4
பெரிய முறுக்குண்ட கொம்புகளையுடையது - இரு திரி மருப்பின் அண்ணல் இரலை - அகம் 34/4
அஞ்சாத வலிய பார்வையை உடையது - எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை - கலி 15/5
கருமையான கொம்புகளையுடையது - கரும் கோட்டு இரலை - அகம் 74/9
முதுகு வெண்மையானது - வெண் புறக்கு உடைய திரி மருப்பு இரலை - அகம் 139/10
அறல் பட்ட கொம்புகளையுடையது - அறு கோட்டு இரலை - பட் 245
கொம்புகள் வலப்பக்கமாக முறுக்கியிருக்கும் - வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு - அகம் 304/9
பெண்மானூடன் துள்ளி விளையாடும் - திரி மருப்பு இரலையொடு மட மான் உகள - முல் 99

	

 மேல்
 
  இரவம் (பெ) - ஒரு வகை மரம், இருள்மரம், Ironwood of Ceylon, l.tr., Mesua ferrea

இதன் இலையை வீட்டு வாசலில் செருகிவைத்தால் தீயசக்திகள் வீட்டுக்குள் வாரா
என்பது பண்டையோர் நம்பிக்கை.

தீம் கனி இரவமொடு வேம்பு மனை செரீஇ - புறம் 281/1

 மேல்
 
  இரவலர் (பெ) - பரிசிலர், solicitors of gift

இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே - புறம் 119/7
பரிசில் தேடி வருவோர்க்குக் கொடுக்கும் வள்ளண்மையுடையவனின் நாடு

 மேல்
 
  இரியல் - (பெ) அலறியடித்துக்கொண்டு விரையும் ஓட்டம், bursting out

ஒரு மரத்தின் உச்சியில் அமைதியாக அமர்ந்திருக்கும் பறவைகள், திடீரென்று மிக அருகில் 
ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டால், எவ்வாறு பதறியடித்துக்கொண்டு பறந்தோடுமோ 
அதுவே இரியல். 

தொடுப்பு எறிந்து உழுத துளர்படு துடவை
அரி புகு பொழுதின் இரியல்போகி
--------------- ------------ ------------ ---------------
கறையணல் குறும்பூழ் கட்சி சேக்கும் - பெரும் 202
உழுது விதைத்த பின்னர் களையெடுத்துவிட்ட தோட்டத்தை
அறுவடைக்காக நுழையும்போது, (அது வரை அங்கு வாழ்ந்துகொண்டிருந்த காடைகள்) பயந்து ஓடி
தங்குமிடத்தில் சேரும்.

மருட்சி, வெருட்சி, பதற்றம், கலக்கம், விரைவு - எல்லாம் கலந்த ஒரு ஓட்டமே இரியல். 
ஒரு கோழியின் இரியல் இங்கு காட்டப்பட்டுள்ளது.

	
 மேல்
 
  இருப்பை - (பெ) இலுப்பை மரம், south Indian mahua

வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை - அகம் 267/6
பூனையின் அடியினை ஒத்த குவிந்த அரும்பினையுடைய இருப்பை

		

 மேல்
 
  இருபிறப்பாளர் - (பெ) அந்தணர், Brahmin

மார்பில் நூல் அணிவதற்கு முன்னர் ஒரு பிறப்பும், பின்னர் ஒரு பிறப்புமாகிய இருபிறப்பினை உடையவர்.

இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல - திரு 182
அந்தணர் தாங்கள் வழிபடும் காலம் அறிந்து வாழ்த்தி நிற்க

 மேல்
 
  இரும் - (பெ.அ) 1. கரிய, black, 2. பெரிய, large, great, vast

இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த - திரு 72
கரிய சேற்றினையுடைய அகன்ற வயலில் முறுக்கவிழ்ந்து மலர்ந்த

இரும் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன - பெரும் 167
பெரிய தொகுதியாக உள்ள நண்டின் சிறிய கருக்களை ஒத்த

 
  இருவி - (பெ) தினை முதலியவற்றின் அரிதாள், Stubble of grain especially of Italian millet;

குலவு பொறை இறுத்த கோல் தலை இருவி
கொய்து ஒழி புனமும் நோக்கி - அகம் 38/13,14
வளைந்த பாரமான கதிரை முறித்த கோலாகிய தலையையுடைய தட்டைகள் பொருந்திய
கொய்து ஒழிந்த வறும் புனத்தையும் நோக்கி

 மேல்
 
  இருவை - (பெ) பார்க்க - இருவி

சிறுதினை கொய்த இருவை வெண் கால் - ஐங் 286/1

 மேல்
 
   இலங்கு - (வி) ஒளிர், பிரகாசி, shine, glitter

   நீர் நிறைந்த ஒரு கண்மாயின் கரையில் நின்றுகொண்டு, உச்சிப்பொழுதில், அந்த நீர்ப்பரப்பைப்
பார்க்கும்போது, எழுந்துவிழும் சிறிய அலைகளின்மீது சூரிய ஒளி பட்டுத் தெறிக்கும்போது அந்த
நீர்ப்பரப்பு தகதகக்குமே, அதுதான் இலங்குதல்.
    வைரம். வைடூரியம் போன்ற நவரத்தினக் கற்கள் நிறையப் பதிக்கப்பெற்ற ஒரு தங்க அட்டிகை
பளபளவென்று மின்னுமே, அதுதான் இலங்குதல்.
   பளிச்சிடும் வெள்ளைப் பற்களை இலங்கு வெள் எயிறு என்கின்றன இலக்கியங்கள்.

   இலங்கு நீர் பரப்பின் வளை மீக்கூறும் - பெரும் 34
   இலங்கு நிலவின் இளம் பிறை போல - ஐங் 443/2
   இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர் - நற் 267/3

   
   
   பார்க்க அவிர்

 மேல்
 
   இலஞ்சி - (பெ) 1. வாவி, நீர்நிலை, tank, reservoir
           2.. கோட்டைச் சுவர், மதில், wall round a city
1.
முது நீர் இலஞ்சி பூத்த குவளை - நற் 160/8
குண்டு நீர் இலஞ்சி கெண்டை கதூஉம் - குறு 91/2
(குண்டு = ஆழம்)
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி - புறம் 37/10

 மேல்

 
   இலவம் - (பெ) இலவு, ஒரு வகை மரம், Red-flowered silk-cotton tree, Bombax malabaricum;
   
  நீண்ட நடுப்பகுதியை உடையது -
    நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த - பெரும் 83
  நடுப்பகுதி முட்களையுடையது
    முள் அரை இலவத்து ஒள் இணர் வான் பூ - ஐங் 320/1
  நடுப்பகுதி கருமையானது
    கரும் கால் இலவத்து - அகம் 309/7
  தீப்பிடித்து எரிகிற நிறத்தில் பூக்கக்கூடியது
    எரி பூ இலவத்து ஊழ் கழி பன் மலர் - ஐங் 368/1
    எரி உரு உறழ இலவம் மலர - கலி 33/10
    நிழல் பட கவின்ற நீள் அரை இலவத்து
    அழல் அகைந்து அன்ன அலங்கு சினை ஒண் பூ - அகம் 245/14,15
  பெண்களின் சிவந்த உதடுகளுக்கு இலவம்பூவின் இதழ்கள் உவமிக்கப்படுகின்றன - பார்க்க - படம்
   இலவு இதழ் புரையும் இன் மொழி துவர் வாய் - பொரு 27

   

 மேல்
 
   இலிற்று - (வி) சுர, spring (as milk from the breast, water from a fountain)

புதிதாய்ப் பிறந்த குழந்தைக்காகத் தாய்ப்பால் பொங்கிச்சுரப்பது இலிற்றுதல்.
 புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போல - புறம் 68/8

யாழினை மீட்டும்போது அதன் நரம்புகளுக்குள் பொதிந்து கிடக்கும் இசை அமுதமாய்ச் சுரக்கிறதாம்.
 அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்கு புரி நரம்பின் - சிறு 227

 மேல்


   இவர் - 1. (வி) கொஞ்சம் கொஞ்சமாக மேலே/முன்னே செல்லுதல், ascend, move forward
       2. இவன், இவள் - மரியாதைப் பன்மை, This person, used as an honorific term of reference;

1.
இரையைப் பிடிப்பதற்காக, முன்னங்கால்களை வளைத்துக்கொண்டு முதலை ஊர்ந்து போகிறதே அதுவே இவர்தல்.
 இரை தேர்ந்து இவரும் கொடும் தாள் முதலையொடு - மலை 90
பீர்க்கங்கொடிகள் நரம்புகளால் (tendrils) இறுகப்பிடித்துக்கொண்டு மேலே ஏறுகின்றனவே அதுவும் இவர்தல்.
 பீர் இவர் வேலி பாழ் மனை நெருஞ்சி - பதி 26/10
செங்குத்தான மலைப்பகுதியில் சிங்கங்கள் காலால் பற்றிக்கொண்டு ஏறுகின்றதுவும் இவர்தலே
 குன்ற இறுவரைக் கோண்மா இவர்ந்தாங்கு (கலித். 86, 32). (இறுவரை = செங்குத்தான மலைப்பகுதி)
வறண்டு கிடந்த ஆற்றில் புதிதாய்ப் பாயும் வெள்ளம் ஊர்ந்து ஊர்ந்து செல்வதுவும் இவர்தலே!
 இரும் கடற்கு ஊங்கு இவரும் யாறு என தங்கான் - பரி 16/27

   
   


 மேல்
 
  இவறு - (வி) கடல் அலைபோல் உருளு, To roll, as billows, to and fro,

இவறு திரை திளைக்கும் இடு மணல் நெடும் கோட்டு - ஐங் 177/2 (திரை = கடல் அலை)

 மேல்
 
  இவுளி - (பெ) குதிரை,horse

கால் கடுப்பு அன்ன கடும் செலல் இவுளி - அகம் 224/5
வளி நடந்து அன்ன வா செலல் இவுளியொடு - புறம் 197/1
(கால்,வளி= காற்று)

 மேல்
 
  இழி - (வி) 1. இறங்கு, descend, விழு, fall
       2. தாழ், become low in stature
1.
குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக - குறு 189/2
(குன்றிலிருந்து இறங்கும் அருவியைப் போன்று வெண்மையான தேர் விரைந்து செல்ல)

கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும் - நற் 107/5
(பாறையின் மீது விழும் அருவியைப் போன்று மிகுந்து ஒலிக்கின்ற)

 மேல்
 
  இழிசினன் - (பெ) - நாகரிகம் குறைந்தவன், uncivilized person

கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று - புறம் 82/3,4
(கட்டிலிலுக்குக் கயிறு கட்டும் இழிசினனின் கையில் உள்ள
 வாரைச் செலுத்தும் ஊசியைக் காட்டிலும் விரைவானது)

 மேல்
 
  இழிபிறப்பாளன் - பார்க்க - இழிசினன்

இவர்கள் மிகக் கடினமான உழைப்பாளிகளாதலால் இவர்களின் உள்ளங்கை கருத்திருக்கும்
இழிபிறப்பாளன் கரும் கை சிவப்ப - புறம் 170/5

 மேல்
 
  இழுக்கு - (வி) 1. வழுக்கி விழு, slip and fall down
         2. துன்பப்படு, suffer pain
         3. நழுவு, நழுவவிடு, தவறவிடு, lose
      - (பெ) 4. வழுக்கு நிலம், slippery ground
         5. இழிவு, களங்கம், disgrace, blemish
1.
இன்னா ஏற்றத்து இழுக்கி முடம் கூர்ந்து - அகம் 107/14
(சரியில்லாத ஏற்றமான வழியில் வழுக்கிவிழுந்து மிக்க முடமாகி)
2. 
எய் தெற இழுக்கிய கானவர் அழுகை - மலை 301
(முள்ளம்பன்றி தன் முள்களால் தாக்க, அதனால் துன்பப்பட்ட கானவரின் அழுகையும்)
3.
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவு கனி - குறு 90/4
(ஆண்குரங்கு தொட்டவுடன் நழுவிவிழுந்த பூ மணக்கும் பலாப்பழம்)
இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்றோ - புறம் 71/16
(இனிய செருக்கையுடைய மகிழ்ச்சியைத் தவறவிட்டவனாகி)
4.
நூழிலும் இழுக்கும் ஊழ் அடி முட்டமும் - குறி 258
(சிக்குள்ள கொடிகளும், வழுக்கு நிலமும், முட்டான வழிகளும்)

 மேல்
 
  இழுது - (பெ) வெண்ணெய், கொழுப்பு போன்ற மென்மையான பொருள், 
         Thick semi-liquid substance like butter, fat, grease

இழுதின் அன்ன வால் நிண கொழும் குறை - புறம் 150/9
(இழுதைப் போன்ற வெண்மையான கொழுப்புச் சேர்ந்த தசை)

 மேல்
 
  இழை - (பெ) 1. அணிகலன், அலங்காரப்பொருள்கள், Jewellery, Ornament
         2. நூல், thread

1.
இழை அணி வனப்பின் இன் நகை மகளிர் - பொரு 85
இழை அணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடும் தேர் - குறு 345/1

2.
வேரொடு நனைந்து வேற்று இழை நுழைந்த - பொரு 80
(வியர்வையில் நனைந்து, கிழிந்ததைத் தைத்ததினால் வேறு நூல் நுழைந்த)

 மேல்
 
  இளவேனில் - (பெ) கோடைக்காலத்தின் முற்பகுதி (சித்திரை, வைகாசி மாதங்கள்), 
              Early hot period (mid April to mid June)

இன் அமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான் - கலி 34/7 (இறுத்தருதல் = வந்து நிலைபெறுதல்)

 மேல்
 
  இளி - (பெ) 1. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற 
          ஏழுவகை சுரங்களில் ஐந்தாவது சுரம், the fifth note of the gammut
        2. சிறுமை, dishonour, disgrace
1.
இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு - மலை 7
(இளி என்ற ஓசையை ஒலிக்கும் குறுகிய குழாய் இசைக்கருவியான தூம்புடன்)
2.
இன்புற புணர்ந்தும் இளி வர பணிந்தும் - அகம் 330/3
(இன்பமுறக் கூடியும், சிறுமை தோன்றப் பணிந்தும்)

 மேல்
 
  இளிவரல் - (பெ) இழிவு, disgrace

இல்லத்து நீ தனி சேறல் இளிவரல் - பரி 11/44
(இல்லத்துக்கு நீ தனியே செல்லிதல் இழிவு)

 மேல்
 
  இளிவரவு - (பெ) - இழிவான நிலை, state of disgrace

இல்லது நோக்கி இளிவரவு கூறா முன் - பரி 10/87
(இல்லாமையை உணர்ந்து அவர் தம் இழிந்த நிலையைக் கூறுவதற்கு முன்)
வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு - பரி 20/71

 மேல்
 
  இளிவு - (பெ) - பார்க்க - இளிவரவு

இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு என - குறு 283/2
அரிது மன்று அம்ம இன்மையது இளிவே - நற் 262/10

 மேல்
 
  இளை (பெ) - 1. பாதுகாவல், protection
        2. காவற்காடு - jungle growth maintained as a defence of a fortified city
1.
இளை இனிது தந்து விளைவு முட்டு_உறாது - பதி 28/5
(பாதுகாவலை இனிது தந்து விளைச்சலைப் பெருக்கி)
இளை படு பேடை இரிய குரைத்து எழுந்து - அகம் 310/15
(பாதுகாவலை உடைய பேடை அஞ்சியோட ஒலித்து எழுந்து

 மேல்
 
  இற்றி - (பெ) இத்தி, ஒரு வகை அத்தி மரம், Tailed oval-leaved flg tree, White fig tree, Ficus infectoria;

குட்டையான நடுமரத்தை உடையது
பரட்டையான உச்சிப்பகுதியை உடையது
நீளமான விழுதுகளை விடுவது
குறும் கால் இற்றி புன் தலை நெடு வீழ் - அகம் 57/6

 மேல்
 
  இறடி - (பெ) தினை, italian millet

குரூஉ கண் இறடி பொம்மல் பெறுகுவிர் - மலை 169
(நிறம் மிகுந்த வடிவினையுடைய தினைச் சோற்றைப் பெறுவீர்)

 மேல்
 
  இறவு - (பெ) இறால்மீன், Prawn, shrimp, macroura;

இறவு அருந்திய இன நாரை - பொரு 204
இறவு புறத்து அன்ன பிணர் படு தடவு முதல் - நற் 19/1
(இறால் மீனின் முதுகினைப் போன்ற சொரசொரப்பான பெரிய அடிப்பகுதி(யை உடைய தாழை)) 
துய் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர் - நற் 111/2
(மெல்லிய பஞ்சுப்பிசிர் போன்ற தலையையுடைய இறால் மீன்களோடு திரளான மீன்களைப் பெறுவீர்)
முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும் - அகம் 220/17
(வளைந்த முதுகினையுடைய இறால் மீனுடன் பல மீன்களைக் குவிக்கும்)
முள் கால் இறவின் முடங்கு புற பெரும் கிளை - குறு 109/1
(முள்ளைப் போன்ற கால்களையுடைய இறால்மீனின் வளைந்த முதுகையுடைய பெரிய கூட்டம்)
இறவின் அன்ன கொடு வாய் பெடையொடு - குறு 160/2
(இறால்மீனைப் போன்று வளைந்த வாயை உடைய பேடையுடன்)

	

 மேல்
 
  இறா - (பெ) இறால் மீன் - பார்க்க இறவு

இறால்களில் சிவப்பு, வெள்ளை எனப் பல வகை உண்டு

சே இறா எறிந்த சிறு வெண்_காக்கை - நற் 31/2
வெள் இறா கனவும் நள்ளென் யாமத்து - அகம் 170/12

 மேல்
 
  இறால் - (பெ) தேன், தேனடை, honey, honeycomb

இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல் - அகம் 348/5
(தேனுடன் கூட்டி ஆக்கிய வண்டு மொய்க்கும் கள்)
பறவை இழைத்த பல் கண் இறாஅல்
தேன் உடை நெடு வரை - நற் 185/9,10
(வண்டுகள் செய்த பல கண்களைக் கொண்ட தேனடையில்
தேனை உடைய உயர்ந்த மலை)

 மேல்
 
  இறு - (வி) 1. முறி, ஒடி, snap, break
        2. வரி, கப்பம் முதலியன செலுத்து, pay as tax, debt.,
        3. தங்கு, stay
        4. சடங்குகளைச் செய், observe (religious) rites
        5. அம்பு முதலியன தை, pierce through, gore

1.
மடக்கிளி எடுத்தல் செல்லா தடக்குரல்
குலவு பொறை இறுத்த கோல் தலை இருவி - அகம் 38/12,13
(இளமையான கிளிகள் தூக்கிச் செல்லமுடியாத அளவுக்குப் பெரிய கதிராகிய
வளைந்த பாரத்தை முறித்த கோலாகிய தலையையுடைய தட்டைகள்
2.
பெரும் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும்
அறன் இல் வேந்தன் ஆளும் - அகம் 109/13,14
(பெரிய களிற்றின் கொம்போடு புலியின் வரிவரியான தோலை இறையாகச் செலுத்தச்செய்யும்
அறனில்லாத அரசன் ஆளுகின்ற)
3.
கரும் கால் யாத்து பருந்து வந்து இறுக்கும் - அகம் 397/13
(கரிய அடிப்பகுதியை உடைய யா மரத்தில் பருந்து வந்து தங்கும்)
4.
அந்தி அந்தணர் அரும் கடன் இறுக்கும் - புறம் 2/22
(மாலைப் பொழுதில் அந்தணர்கள் தம் மாலை சடங்குகளைச் செய்யும்)
5.
அம்பு சென்று இறுத்த அறும் புண் யானை - புறம் 19/9
(அம்பு சென்று தைத்த பொறுத்தற்கரிய புண்ணையுடையயானை)

 மேல்
 
  இறும்பு - (பெ)குறுங்காடு, thicket

மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின் - பெரும் 495
(மயில்கள் ஆடித்திரியும் மரங்கள் நிறைந்த குறுங்காட்டில்)

 மேல்
 
  இறும்பூது - (பெ) 1. அதிசயம், வியப்பு, wonder, amazement 2.மகிழ்ச்சி, happiness 3. பெருமிதம், a sense of pride
1.
இறும்பூது கஞலிய ஆய் மலர் நாறி - அகம் 152/18
(வியப்பு மிக்க அழகிய மலர் பலவும் மணம்பரப்பி)

 மேல்
 
  இறுவரை - (பெ) செங்குத்தான மலைப்பகுதி, cliff

குன்ற இறுவரை கோள்_மா இவர்ந்து ஆங்கு - கலி 86/32
	பார்க்க - இவர்
   

 மேல்
 
  இறை - (பெ) 1. குடிசை வீட்டுக் கூரையின் சாய்வான பக்கம், sloping roof
        2. நீட்டிக்கொண்டிருக்கும் கூரையின் உட்பக்கம், eaves of a roof
        3. தோளிலிருந்து இரண்டு பக்கமும் இறங்கும் பகுதி, that part of the body that descends from the shoulders.
        4. அரசுக்குச் செலுத்துவது, share of the produce accruing to the king as rent;
        5. அரசன், தலைவன், king, master, chief
        6. சிறிதளவு, an insignifican quantity
        7. முன்கை, forehand
        8. தங்குதல், abiding
        9. கடவுள், supreme god
        10. மரத்தின் தாழ்வான பகுதி, lower part of a tree
        11. உயரம், height

1.
குறி இறை குரம்பை பறி உடை முன்றில் - பெரும் 265
ஒடுக்கமாக இறங்கும் கூரையினையுடைய குடிசையின் பறியையுடைய முன்பக்கம்
2.
இறை உறை புறவின் செம் கால் சேவல் - பெரும் 439
இறங்கிய கூரையின் நீட்டிய பாகத்தின் உட்பக்கத்தில் தங்கும் புறாவின் சிவந்த காலையுடைய சேவல்
3.
நேர் இறை முன்கை பற்றி நுமர் தர - குறி 231
அழகிதாக இரண்டுபக்கமும் இறங்கும் முன்கையைப் பிடித்து உம் வீட்டார் தர
4.
திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என - மலை 319
திருத்தமான வேலினை உடைய அரசனுக்குப் புதிதாக அளிக்கும் பொருளாக இருக்கும் என்று 
5.
அஞ்சல் என்ற இறை கைவிட்டு என - நற் 43/8
அஞ்சவேண்டாம் என்ற அரசன் கைவிட்டான் என்று
6.
உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர் சினை - நற் 113/1
மான்கள் அண்ணாந்து உண்டதால் சிறிதளவே வளைந்த உயர்ந்த கிளைகள்
7.
இறை ஏர் எல் வளை குறு_மகள் - நற் 167/10
முன்கையிலுள்ள அழகிய ஒளிவிடும் வளையல்கள் அணிந்த சிறுபெண்
8.
இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த - குறு 92/3
தங்கும்படியாக உயர்ந்த வழியை அடுத்துள்ள மரத்தில்
9.
சுடும் இறை ஆற்றிசின் அடி சேர்ந்து சாற்றுமின் - பரி 8/79
தண்டிக்கின்ற இறைவனை ஆற்றுங்கள், அவன் அடியினைச் சேர்ந்து புகழுங்கள்.
10.
இறை நிழல் ஒரு சிறை புலம்பு அயா உயிர்க்கும் - அகம் 103/9
கிளைகள் தழ்ழ்ந்திருக்கும் நிழலின் ஒரு பக்கத்தில் தனிமைத் துயரோடு பெருமூச்செறியும்
11.
ஏந்து கொடி இறை புரிசை - புறம் 17/27
ஏந்திய கொடிகளும்,உயர்ந்த கோட்டைமதிலும்

 மேல்
 
  இறைகூடு - (வி) அரசாள், rule over

ஈரும் பேனும் இருந்து இறைகூடி - பொரு 79
ஈரும் பேனும் தங்கியிருந்து அரசாளும்

 மேல்
 
  இறைஞ்சு - (வி) 1. தாழ், கவிழ், hang low
         2. கெஞ்சு, மன்றாடு, plead, implore
         3. வளை, bend low
         4. வணங்கு, pay reverence;

1.
நலம் கெழு திரு முகம் இறைஞ்சி - அகம் 299/13
நலம் பொருந்திய அழகிய முகத்தைக் கவிழ்த்து
2.
இனிது அமர் காதலன் இறைஞ்சி தன் அடி சேர்பு - கலி 71/5
இனிதாக அமர்ந்த காதலன் மன்றாடி, தன் அடிகளில் விழுந்து
3.
பசிப் பிணிக்கு இறைஞ்சிய பரூஉப் பெரும் ததரல் - குறு 213/3
பசிநோயைத் தீர்க்கும்பொருட்டு வளைத்த பரிய பெரிய மரப்பட்டையினை
4.
இறைஞ்சுக பெரும நின் சென்னி - புறம் 6/19
வணங்குக, அரசனே உன் தலை.

 மேல்
 
  இனை - (வி) 1. வருந்து, grieve, வருத்து, cause grief
       (பெ) 2.. துன்பம், grief
       (பெ.அ) 3. இன்ன வகையான, of this degree
1.
இனை நோக்கு உண்கண் நீர் நில்லாவே - கலி 7/12
வருந்துகின்ற பார்வையையுடைய இவளின் மையுண்ட கண்களில் கண்ணீர் விடாமல் சொரிகின்றது
இனை வனப்பின் மாயோய் - கலி 108/53
வருத்துகின்ற அழகினையுடைய மாநிறத்தவளே!
2.
இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும் - குறு 48/4
இத்தகைய தன்மையோடேதுன்பம் பெரிதும் எய்தும்
3.
இனை நலம் உடைய கானம் சென்றோர் - கலி 11/19
இத்தகைய நல்ல தன்மைகள் உடைய காட்டில் சென்றார்

 மேல்