|
இடப்பக்கமுள்ள சொல்லின் மேல் சொடுக்கவும்
பா - (பெ) 1. பரப்பு, expanse, பரவுதல், spreading out
2. நெசவுப்பா, பாவு நூல், warp
1.
பருவ வானத்து பா மழை கடுப்ப - பெரும் 190
மாரிக்காலத்து விசும்பிடத்தே பரவிய முகிலை ஒப்ப
பா அமை இதணம் ஏறி பாசினம்
வணர் குரல் சிறுதினை கடிய - நற் 373/7,8
பரப்பு அமைந்த பரண் மீது ஏறி, பச்சைக் கிளிகளின் கூட்டத்தை
வளைந்த கதிர்களைக் கொண்ட சிறுதினையில் படியாதவாறு ஓட்டுவதற்கு
படு மணி இரட்டும் பா அடி பணை தாள்
நெடு நல் யானையும் தேரும் மாவும் - புறம் 72/3,4
ஒலிக்கும் மணி இரு மருங்கும் ஒன்றோடொன்று மாறி இசைக்கும் பரந்த அடியினையும் பெரிய காலினையுமுடைய
உயர்ந்த நல்ல யானையினையும்தேரையும் குதிரையையும்
2.
துகில் ஆய் செய்கை பா விரிந்து அன்ன - அகம் 293/4
ஆடை ஆய்ந்து நெய்யுங்கால் பாவானது விரிந்தது போல
மேல்
பாஅய் - (வி) 1. பரப்பு, get spread
2. பரவு, spead
1.
சுடர் பூ கொன்றை தாஅய நீழல்
பாஅய் அன்ன பாறை அணிந்து - மது 277,278
ஒளிவிடும் பூக்களுடைய கொன்றை பரந்த நிழலில்,
பரப்பினாற் போன்ற பாறை அழகுபெற்று,
செல்லிய முயலி பாஅய சிறகர்
வாவல் - ஐங் 378/1,2
பறந்து செல்வதற்கு முயன்று விரித்துப் பரப்பிய சிறகினையுடைய
வௌவால்
2.
மா கடல் முகந்து மணி நிறத்து அருவி
தாழ் நீர் நனம் தலை அழுந்துபட பாஅய் - நற் 112/6,7
கரிய கடலின் நீரை முகந்துகொண்டு, நீலமணியின் நிறத்தைக் கொண்ட அருவியிலிருந்து
கீழே விழும் நீர் அகன்ற இடமெல்லாம் புதைபடுமாறு பரவி,
அம் கலுழ் மேனி பாஅய பசப்பே - குறு 143/7
அழகு ஒழுகும் மேனியில் பரவிய பசலைநோய்
பாஅர் - (பெ) பாறை, rock
சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபய
பாஅர் மலி சிறு கூவலின் தணியும் - நற் 41/3,4
காட்டுவழியின் தொடக்கத்தில் வருந்திய வருத்தம் மெல்ல மெல்ல
பாறைகள் மலிந்த சிறிய கிணற்று நீரில் தணிந்திட,
மேல்
பாஅல் - (பெ) 1. பக்கம், side
2. கவர்ந்துகொள்ளுதல், seizing
3. பகுதி, உறுப்பு, part
4. தாய் முலையிலிருந்து சுரக்கும் வெண்மையான திரவம், milk
1.
இரு மருப்பு எருமை ஈன்றணி காரான்
உழவன் யாத்த குழவியின் அகலாது
பாஅல் பைம் பயிர் ஆரும் ஊரன் - குறு 181/3-5
பெரிய கொம்பினையுடைய எருமையாகிய அண்மையில் ஈன்ற கரிய பெண்ணெருமை
உழவனால் கட்டப்பட்டுள்ள தன் கன்றைவிட்டு அகலாமல்
பக்கத்தேயுள்ள பசிய பயிர்களை மேயும் ஊரையுடைய நம் தலைவனின்
2.
முழா இமிழ் துணங்கைக்கு தழூஉ புணை ஆக
சிலைப்பு வல் ஏற்றின் தலைக்கை தந்து நீ
நளிந்தனை வருதல் உடன்றனள் ஆகி
---------------------------- ----------------------------------
கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று நின்
எறியர் ஓக்கிய சிறு செங்குவளை
ஈ என இரப்பவும் ஒல்லாள் நீ எமக்கு
யாரையோ என பெயர்வோள் கையதை
கதுமென உருத்த நோக்கமோடு அது நீ
பாஅல் வல்லாய் ஆயினை பாஅல்
யாங்கு வல்லுநையோ வாழ்க நின் கண்ணி - பதி 52/14-27
முழவு ஒலிக்கும் துணங்கைக் கூத்தில் தழுவியாடுவோருக்குத் துணையாக,
முழங்குகின்ற வலிமையான காளையினைப் போல, முதல்கை கொடுத்து, நீ
பெண்களுடன் நெருக்கமாக நின்று சுற்றிவருவதைக் கண்டு, ஊடல்கொண்டவளாய்,
------------------------- ---------------------------------------
கரையை இடிக்கும் காட்டாற்று வெள்ளத்தில் நடுங்கும் தளிரைப் போல, கோபத்தால் மேனி நடுங்க நின்று, உன்மீது
எறிவதற்காக ஓங்கிய சிறிய செங்குவளை மலரை,
எனக்குத் தா என்று இரு கை நீட்டி வேண்டவும், சினம் குறையாதவளாய், "நீ எமக்கு
இனி யாரோ?" என்று அந்த இடத்தை விட்டு நீங்கிச் செல்பவளின் கையினில் இருந்த குவளை மலரைச்
சட்டென்று வெகுண்ட பார்வையுடன் அதனை நீ
கவர்ந்துகொள்ளுவதற்கு இயலாதவனாய் ஆகிவிட்டாய்; ஆனால் (பகைவர் மதில்களைக்) கவர்ந்துகொள்ள
எவ்வாறு உன்னால் முடிந்தது? வாழ்க! உன் தலைமாலை!
3.
பாஅல் அம் செவி பணை தாள் மா நிரை
மாஅல் யானையொடு மறவர் மயங்கி - கலி 5/1,2
பெரிய உறுப்புக்களாகிய அழகிய செவிகளையும், பருத்த கால்களையும் உடைய விலங்குக் கூட்டமான
மதம்பிடித்து மயங்கித்திரியும் யானைகளோடு, பாலைநில வேட்டுவர்களும் நெருக்கமாகத் திரிதலால்
4.
பாஅல் புளிப்பினும் பகல் இருளினும் - புறம் 2/17
பால் தன் இனிமை ஒழிந்து புளிப்பினும், ஞாயிறு தன் விளக்கம் ஒழிந்து இருளினும்
மேல்
பாக்கம் - (பெ) 1. கடற்கரை சார்ந்த ஊர், coastal village
2. ஊர், village
1.
கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென
நெடும் தேர் பண்ணி வரல் ஆனாதே - நற் 207/3,4
நிறைய மீன்களைக் கொள்பவர்கள் வசிக்கும் பாக்கம் முழுதும் ஆரவாரிக்க,
நெடிய தேரினைச் செய்துகொண்டு நம் காதலர் வருவது தடுக்கப்படமுடியாதது;
2.
நீ சிவந்து இறுத்த நீர் அழி பாக்கம்
விரி பூ கரும்பின் கழனி புல்லென - பதி 13/12,13
நீ வெகுண்டு முற்றுகையிட்டுத் தங்கிய, தம் சிறப்பு அழிக்கபெற்ற பேரூர்கள் -
விரிந்த பூக்களைக் கொண்ட கரும்பு வயல்கள் புல்லென்று தோன்ற,
மேல்
பாகம் - (பெ) சமையல், உணவு, cooking, cooked food
மாதிரம் அழல எய்து அமரர் வேள்வி
பாகம் உண்ட பைம் கண் பார்ப்பான் - பரி 5/27
திக்கெல்லாம் பற்றியெரியும்படியும் எய்து, அமரர்கள் எழுப்பிய வேள்வியின்
அவியுணவை உண்ட பசிய கண்ணையுடைய சிவபெருமான்
மேல்
பாகர் - (பெ) 1. (யானைப்)பாகன் என்பதன் பன்மை, elephant drivers, mahouts
2. குழம்பு, thickened broth, thick liquid
3. பாகு, Treacle, sweet syrup
4. தேர், car
1.
நெடும் சுழி பட்ட கடுங்கண் வேழத்து
உரவு சினம் தணித்து பெரு வெளில் பிணிமார்
விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை - மலை 325-327
பெரிய நீர்ச்சுழலில் அகப்பட்ட கொடுங்குணமுள்ள யானையின்
மிகுகின்ற சினத்தைத் தணித்து, பெரிய கம்பங்களில் கட்டுவதற்கு,
(விலங்குமொழி கலந்த)கலப்பு மொழியால் பழக்கும் யானைப்பாகருடைய ஆரவாரமும்
2.
தான் துழந்து அட்ட தீம் புளி பாகர்
இனிது என கணவன் உண்டலின் - குறு 167/4,5
தானே முயன்று துழாவிச் சமைத்த சுவையான புளித்த மோர்க்குழம்பினை
“இனிது” என்று கணவன் உண்டலின்
3.
பாகர் இறை வழை மது நுகர்பு- பரி 11/66
பாகு தங்கிய இளம் கள்ளைப் பருகி
4.
ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடை பாகரொடு - சிறு 258
ஏறிப் பார்த்து (நல்லதெனக்கண்ட)பெயர்பெற்ற, அழகிய நடையை உடைய தேரோடு,
மேல்
பாகல் - (பெ) 1. கசப்புச்சுவைக் காய், அதையுடைய ஒருவகைக் கொடி, bitter gourd creeper
2. பலா, jackfruit tree
1.
பாகல் ஆய் கொடி பகன்றையொடு பரீஇ - அகம் 156/5
பாகலின் சிறந்த கொடியைப் பகன்றைக் கொடியுடன் அறுத்து
2.
பைம் பாகல் பழம் துணரிய
செம் சுளைய கனி மாந்தி - பொரு 191,192
பசிய பாகலான பலாப்பழத்தினுள் கொத்தாகவுள்ள,
சிவந்த சுளைகளைக் கொண்ட பழத்தைத் தின்று
மேல்
பாகன் - (பெ) 1. தேர்ப்பாகன், charioteer
2. விலங்கின் மீது ஊர்பவன், a rider on an animal
3. யானைப்பாகன், elephant rider, mahout
1.
இன மணி நெடும் தேர் பாகன் இயக்க - நற் 19/6
வரிசையான மணிகள் கொண்ட நெடிய தேரினை அதன் பாகன் இயக்க
2.
செல் விடை பாகன் திரிபுரம் செற்று_உழி - பரி 23/82
விரைந்து செல்லும் எருதாகிய ஊர்தியையுடையோன் முப்புரத்தை அழித்தபோது
3.
பெரும் களிறு இழந்த பைதல் பாகன் - புறம் 220/2
பெரிய களிற்றை இழந்த வருத்தத்தினையுடைய பாகன்
மேல்
பாகு - (பெ) 1. காய்ச்சிய கரும்புச்சாறு,பதநீர் அல்லது வெல்லம், treacle, sweet syrup
2. பாக்கு, areca nut
3. பகுதி, portion
1.
பாலின் பெய்தவும் பாகின் கொண்டவும் - புறம் 381/2
பால் கலந்து செய்தனவும், வெல்லப்பாகு கொண்டு செய்தனவுமாகிய பண்ணியங்களை
2.
வால் அரிசி பலி சிதறி
பாகு உகுத்த பசு மெழுக்கின்
காழ் ஊன்றிய கவி கிடுகின்
மேல் ஊன்றிய துகில் கொடியும் - பட் 165-168
வெண்மையான அரிசியையும் பலியாகத் தூவி,
பாக்கு(வெற்றிலை) சொரிந்த, புது மெழுக்கினையுடைய,
கால்கள் நட்டு (அதன் மேல்)வைத்த கவிந்த மேற்கூரையின்
மேலே நட்டுவைத்த (வீர வணக்க)துகில் கொடிகளும்
3.
பாழ் என கால் என பாகு என ஒன்று என - பரி 3/77
பாழ் என்ற புருடதத்துவமும், கால் என்ற ஐந்து பூதங்களும், பாகு என்ற தொழிற்கருவிகள் ஐந்தும்,
ஒன்றாவதான ஓசையும்
(பாழ் = 0, zero ; கால் = 1/4, quarter; பாகு = 1/2, half)
மேல்
பாகுடி - (பெ) வெகுதூரம், long distance
நீர் அறல் மருங்கு வழிப்படா பாகுடி
பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா - பதி 21/26,27
நீர் ஒழுகும் பக்கத்தில் செல்லாமல், நீண்ட தொலைவிலிருந்து
உன்னிப்பாகப் பார்க்கும் கொக்கின் விரைவான கொத்தலுக்கு அஞ்சாத
மேல்
பாங்கர் - (பெ) 1. உகா, ஓமை, Tooth-brush tree, s. tr., Salvadora persica
2. பக்கம், அணிமை, side, neighbourhood
3. தோழமையுள்ளவர், companion
1.
பாங்கர் மராஅம் பல் பூ தணக்கம் - குறி 85
ஓமை, மரவம்பூ, பல பூக்களையுடைய தணக்கம்பூ,
குல்லையும் குருந்தும் கோடலும் பாங்கரும்
கல்லவும் கடத்தவும் கமழ் கண்ணி மலைந்தனர் - கலி 103/3,4
கஞ்சங்குல்லைப் பூவும், குருந்தம்பூவும், செங்காந்தளும், பாங்கர்ப்பூவும் ஆகிய
மலையிலுள்ளவையும், காட்டிலுள்ளவையும் உள்ள மலர்கள் கொண்டு கட்டிய பூச்சரங்களைச் சூடியவராய்,
2.
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து
பாண் யாழ் கடைய வாங்கி பாங்கர்
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில - நற் 186/5-7
வேனில்காலத்து பச்சோந்தியின், தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் முதிய ஆணானது
பாணர்கள் யாழினை இசைக்க, அதனைக் கேட்டு, அருகிலிருக்கும்
நெடியதாய் நிற்கும் யா மரத்தில் ஏறும் தொழிலையுடையது -
தடாகம் ஏற்ற தண் சுனை பாங்கர்
படாகை நின்றன்று - பரி 9/77,78
தடாகத்தைப் போன்ற குளிர்ந்த சுனையின் பக்கத்தில்
கொடி உயர்ந்து நின்றது;
3.
பதிவத_மாதர் பரத்தையர் பாங்கர்
அதிர் குரல் வித்தகர் ஆக்கிய தாள
விதி கூட்டிய இய மென் நடை போல - பரி 10/23-25
பதிவிரதம் இருக்கும் கற்புடைய மகளிரும், பரத்தையரும், அவருக்குத் தோழியரும்,
அதிரும் குரலையுடைய, இசைவல்லுநர்கள் ஆக்கிய தாள
விதியால் கூட்டப்பட்ட, பல்வேறு இசைக்கருவிகளின் இசையும் மென்மையான நடையில் சென்றாற்போல
மேல்
பாங்கு - (பெ) 1. அழகு, beauty, fairness
2. இடம், place, location
3. பக்கம், அணிமை, side, neighbourhood
4. இணக்கம், agreeableness
5. நலம், நன்மை, goodness
1.
பனி துறை பகன்றை பாங்கு உடை தெரியல் - பதி 76/12
குளிர்ந்த நீர்த்துறையில் மலர்ந்துள்ள பகன்றை மலரால் தொடுத்த அழகான மாலையை
2.
பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன - கலி 11/21
பல்லியும் நல்ல இடத்தில் இருந்து ஒலித்து நல்வாக்குச் சொல்கிறது;
3.
பாங்கு அரும் கானத்து ஒளித்தேன் - கலி 115/15
பக்கத்திலுள்ள அழகான பூஞ்சோலைக்குள் ஓடி ஒளிந்துகொண்டேன்"
4.
ஆங்க அணி நிலை மாடத்து அணி நின்ற பாங்காம்
மட பிடி கண்டு வய கரி மால்_உற்று - பரி 10/41,42
அவ்விடத்தில், அழகிய நீரணிமாடத்தின் அருகாமையில் நின்ற இணக்கமான
இளைய பெண்யானையைக் கண்டு, இளங்களிறு ஒன்று மையல்கொண்டு,
5.
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின - அகம் 141/3
புனையப்பெற்ற தொழில்களையுடைய நல்ல மனையிலே புள் நிமித்தங்கள் நல்லனவாகின்றன.
மேல்
பாசடகு - (பெ) பச்சை இலை, வெற்றிலை-பாக்கு, green leaf, betel leaf - arecanut
பாசடகு மிசையார் பனி நீர் மூழ்கார் - புறம் 62/14
பச்சை இலையைத் தின்னாராய், குளிர்ந்த நீரின்கண் மூழ்காராய்
மேல்
பாசடும்பு - (பெ) பசிய அடும்பு, green hareleaf
ஏர் கொடி பாசடும்பு பரிய ஊர்பு இழிபு - ஐங் 101/2
அழகிய கொடிகளையுடைய பசுமையான அடும்பு அற்றுப்போகும்படி ஏறி இறங்கி
பார்க்க: அடும்பு
மேல்
பாசடை - (பெ) பசிய இலை, green leaf
பாசடை நிவந்த கணை கால் நெய்தல் - குறு 9/4
பசிய இலைகளுக்கு மேல் உயர்ந்த திரண்ட காம்பையுடைய நெய்தல்பூ
மேல்
பாசம் - (பெ) 1. கயிறு, rope, cord
2. பேய், demon, vampire
1.
பாசம் தின்ற தேய் கால் மத்தம் - நற் 12/2
தயிறு கடையும் கயிறு உராய்வதால் தேய்வுற்ற தண்டினையுடைய மத்தின்
2.
பலி கொண்டு பெயரும் பாசம் போல - பதி 71/23
பலியுணவை மட்டும் எடுத்துக்கொண்டு செல்லும் பேய் போல,
மேல்
பாசரும்பு - (பெ) இளம் மொட்டு, young tender flower bud
குளன் அணி தாமரை பாசரும்பு ஏய்க்கும் - கலி 22/15
குளத்திற்கு அழகுசெய்யும் தாமரையின் இளம் மொட்டைப் போன்ற
மேல்
பாசவர் - (பெ) இறைச்சி விற்போர், dealers in meat
விருந்து கண்மாறாது உணீஇய பாசவர்
ஊனத்து அழித்த வால் நிண கொழும் குறை - பதி 21/9,10
விருந்தினர் வேறு இடங்களுக்கு மாறிப்போகாமல் உண்ணவேண்டியும், இறைச்சி விற்போர்
இறைச்சி கொத்தும் பட்டைமரத்தில் வைத்துக் கொத்திய வெள்ளை நிற நிணத்தோடு சேர்ந்த கொழுத்த இறைச்சியை
மேல்
பாசவல் - (பெ) 1. பசிய அவல், பச்சை அவல், A preparation of rice obtained by pestling fresh paddy;
2. பசிய விளைநிலம், green field
1.
பாசவல் இடித்த கரும் காழ் உலக்கை - குறு 238/1
பச்சை அவலை இடித்த கரிய வைரம்பாய்ந்த உலக்கைகளை
பாசவல் - நெல்லை வறுத்து இடிக்காமல் பச்சையாக இடித்து இயற்றிய அவல் - பொ.வே.சோ - உரை விளக்கம்
2.
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து - புறம் 6/14
பசிய விளைநிலப் பக்கத்தையுடைய அரிய மதிலரண் பலவற்றையும் கொண்டு
மேல்
பாசறை - (பெ) பகைமேற்சென்ற படை தங்குமிடம், warcamp
பருந்து பறக்கல்லா பார்வல் பாசறை
படு கண் முரசம் காலை இயம்ப - மது 231,232
பருந்துகளும் பறக்கமுடியாத பார்வையைக் கொண்ட பாசறைகளில்
ஒலிக்கின்ற கண்ணையுடைய முரசுகள் காலையில் ஒலிப்ப
மேல்
பாசி - (பெ) 1. நீர்ப்பாசி, moss, duckweed
2. கிழக்கு, east
1.
வழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி
அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய - மலை 221,222
வழுவழுப்பான மெல்லிய ஏட்டால் (கீழுள்ள)தரையை மறைக்கும் நுண்ணிய தன்மையுள்ள பாசி
(ஊன்றிய)காலின் உறுதியைக் குலைக்கும் (=வழுக்கும்) வழுக்குநிலங்களும் உள்ளன,
2.
பாசி செல்லாது ஊசி துன்னாது - புறம் 229/9
கிழக்குத்திசையில் போகாது, வட திசையில் செல்லாது
மேல்
பாசிலை - (பெ) பசிய இலை, green leaf
பாசிலை ஒழித்த பராஅரை பாதிரி - பெரும் 4
பசிய இலைகளை உதிர்த்த பெருத்த அடிமரத்தையுடைய பாதிரியின்
மேல்
பாசிழை - (பெ) 1. புதிய அணிகலன், fresh jewels
ஆய் பொன் அவிர் தொடி பாசிழை மகளிர் - மது 579
ஆராய்ந்த பொன்னாலான ஒளிரும் தொடியினையும் பசிய(புதிய) அணியையும் (உடைய)மகளிர்
மேல்
பாசினம் - (பெ) கிளிக்கூட்டம், flock of parrots
பா அமை இதணம் ஏறி பாசினம்
வணர் குரல் சிறுதினை கடிய - நற் 373/7,8
பரப்பு அமைந்த பரண் மீது ஏறி, பச்சைக் கிளிகளின் கூட்டத்தை
வளைந்த கதிர்களைக் கொண்ட சிறுதினையில் படியாதவாறு ஓட்டுவதற்கு
மேல்
பாசுவல் - (பெ) பசிய இலை,தழை, green foliage
பாசுவல் இட்ட புன் கால் பந்தர் - புறம் 262/2
பசிய தழையாலே வேயப்பட்ட புல்லிய காலையுடைய பந்தலின்கண்
மேல்
பாட்டம் - (பெ) 1. மேகம், மழை, cloud, rain
2. தோட்டம், garden
1.
வேட்டம் பொய்யாது வலை_வளம் சிறப்ப
பாட்டம் பொய்யாது பரதவர் பகர - நற் 38/1,2
மீன்வேட்டை பொய்க்காமல், வலையினால் கிடைக்கும் வளம் சிறந்து விளங்க,
மழை காலம் தப்பாமையால் பரதவர் விலைகூறி விற்க,
2.
பாங்கு அரும் பாட்டம்-கால் கன்றொடு செல்வேம்- கலி 116/1
"பக்கத்தில் இருக்கும் உள்ளே எளிதில் போகமுடியாத தோட்டத்திற்குக் கன்றோடு செல்கின்றபோது
மேல்
பாட்டி - (பெ) 1. பாணர் மகளிர், Woman of the class of strolling singers
2. பெற்றோரின் தாய், grandmother
1.
வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்கு பாட்டி
ஆம்பல் அகல் இலை அமலை வெம் சோறு
---------------------------------------- -------------------------------
விடியல் வைகறை இடூஉம் ஊர - அகம் 196/4-7
வேட்டம் போதலை மறந்து உறங்கிக்கிடக்கும் கணவன்மார்க்கு, அவரவர் மனைவியரான பாண் மகளிர்
ஆம்பலது அகன்ற இலையில் திரண்ட விருப்பம்தரும் சோற்றை
------------------------------ ------------------
இருள் புலரும் விடியற்காலத்தே இடும் ஊரனே
பாணர் வருக பாட்டியர் வருக - மது 749
பாணர் வருவாராக, பாணிச்சியர் வருவாராக,
2.
மட நடை பாட்டியர் தப்பி தடை இறந்து
தாம் வேண்டும் பட்டினம் எய்தி - பரி 10/37,38
தளர்நடைப் பாட்டியரிடமிருந்து தப்பித்து, தடைகளை மீறிக் காதலரை எதிர்கொள்ள,
தாம் நினைக்கும் பட்டினத்தை நோக்கி வந்து
மேல்
பாடலி - (பெ) பாடலிபுத்திரம் என்னும் பண்டைய நகரம், the ancient city of Pataliputra
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்
சீர் மிகு பாடலி குழீஇ கங்கை
நீர் முதல் கரந்த நிதியம்கொல்லோ - அகம் 265/4-6
பல்வகைப்புகழும் மிக்க போரினை வெல்லும் நந்தர் என்பாரது
சிறப்பு மிக்க பாடலிபுரத்திலே திரண்டிருந்து கங்கையின்
நீரின் அடியில் மறைவுற்ற செல்வமோ
மேல்
பாடித்தை - (ஏவல் வினைமுற்று) பாடு, sing
வேய் நரல் விடர்_அகம் நீ ஒன்று பாடித்தை - கலி 40/10
மூங்கில்கள் ஒலிக்கும் மலைப் பிளவுகள் கொண்ட அவனது மலையைப் பற்றிய பாட்டை நீ பின்னர் பாடு!
மேல்
பாடினி - (பெ) பாண்குல மகளிர், Songstress, woman of the PANar caste;
சென்மோ பாடினி நன் கலம் பெறுகுவை - பதி 87/1
செல்வாயாக பாண்மகளே! நல்ல அணிகலன்களைப் பெறுவாய்
மேல்
பாடு - 1. (வி) 1. பாடலை இசையுடன் வெளிப்படுத்து, sing, chant
2. பறவை, வண்டு முதலியன இனிமையாக ஒலியெழுப்பு, warbleas birds, hum as bees
3. புகழ், பாராட்டு, praise, speak endearingly
- 2. (பெ) 1. ஒலி, ஓசை, sound, noise
2. பூசுதல், smearing
3. வருத்தம், துன்பம், hardship, suffering
4. பக்கம், side
5. பெருமை, உயர்வு, Dignity, honour, greatness, eminence
6. உலக ஒழுக்கம், Etiquette; conventional rules of social behaviour
7. தூக்கம், sleep
8. அனுபவம், Experience; endurance; feeling; bearing
9. விழுதல், fall
10. படுக்கை நிலை, Recumbency, lying prostrate;
11. கேடு, Ruin, injury, damage, disaster, detriment;
12. கூறு, division
13. பாடுதல், singing
14. நிகழ்தல், occcurrence, happening
1.1
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்வி
கூடு கொள் இன் இயம் - சிறு 228,229
பாடும் துறைகளெல்லாம் முடியப் பாடுதற்கு, பயன் விளங்குகின்ற இசைகளைத்
சுதிசேர்த்தல் கொண்ட இனிய யாழை
1.2
தன் பாடிய தளி உணவின்
புள் தேம்ப புயல் மாறி - பட் 3,4
தன்னை(மேகத்தை)ப் பாடிய, நீர்த்துளியையே உணவாகக்கொண்ட
வானம்பாடி வருந்த மழை பெய்யாமற்போக
1.3
மை படு மால் வரை பாடினள் கொடிச்சி
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு - நற் 373/3,4
முகில் தவழும் பெரிய மலையைப் புகழ்ந்து பாடியவளாய்க் குறமகள்
ஐவனம் என்னும் மலைநெல்லைக் குற்றும் நாட்டைச் சேர்ந்த தலைவனோடு
2.1
ஒரு கை
பாடு இன் படு மணி இரட்ட - திரு 114,115
ஒரு கை
ஓசை இனிதாக ஒலிக்கின்ற மணியை மாறி மாறி ஒலிக்கப்பண்ண
பாடு இன் தெண் கிணை பாடு கேட்டு அஞ்சி - அகம் 226/15
ஓசை இனிய தெளிந்த கிணையினது ஒலியைக் கேட்டு அவனது பெருமையை உணர்ந்து அஞ்சி
2.2
பாடு புலர்ந்த நறும் சாந்தின் - மது 226
பூசினபடியே புலர்ந்த நறிய சந்தனத்தையுமுடைய
2.3
வேனில் ஓதி பாடு நடை வழலை - நற் 92/2
வேனிற்காலத்து ஓந்தியின் வருத்தமான நடையைக்கொண்ட ஆண் ஓந்தி
2.4
கழை பாடு இரங்க பல் இயம் கறங்க
ஆடு_மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று - நற் 95/1,2
குழல்கள் பக்கத்தே இசைக்க, பலவகை இன்னிசைக் கருவிகள் முழங்க,
ஆட்டக்காரியான கழைக்கூத்தி நடந்த வளைந்த முறுக்கேறிய வலிய கயிற்றில்
2.5
யாணர் ஊர நின் மாண் இழை மகளிரை
எம் மனை தந்து நீ தழீஇயினும் அவர்_தம்
புன் மனத்து உண்மையோ அரிதே அவரும்
பைம் தொடி மகளிரொடு சிறுவர் பயந்து
நன்றி சான்ற கற்பொடு
எம் பாடு ஆதல் அதனினும் அரிதே - நற் 330/6-11
புதிய வருவாயையுடைய ஊரினைச் சேர்ந்தவனே! உன்னுடைய மாண்புமிக்க அணிகலன்களை அணிந்த மகளிரை
எம்முடைய வீட்டுக்கே அழைத்து வந்து நீ அவருடன் கூடியிருந்தாலும், அவர்களின்
புல்லிய மனத்தில் இடம்பிடித்திருப்பது அரிது, அந்த மகளிரும்
பசிய தொடியணிந்த புதல்வியரொடு, புதல்வரையும் பெற்றுத்தந்து
நன்மை மிகுந்த கற்போடு
எம்மைப்போல் குலமகளிரின் பெருமையை அடைதல் அதனினும் அரிது.
2.6
நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும்
பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும்
நும்மினும் அறிகுவென்-மன்னே - நற் 160/1-3
நடுவுநிலைமை, நட்பைப் போற்றல், நாணவுணர்வு நன்றாக உடைமை,
ஈத்து உவத்தல், நற்பண்பு, உலகவழக்கை அறிந்து ஒழுகுதல் ஆகிய நற்குணங்களை
உன்னைக்காட்டிலும் நன்கு அறிவேன் உறுதியாக
2.7
நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின்
பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்
சாதலும் இனிதே - நற் 327/1-3
நம்மை விரும்பி வந்த சான்றோரான நம் தலைவரை நம்புதல் பழியைத் தருமென்றால்,
உறக்கமில்லாதனவாய்க் கண்ணீர் சொரியும் கண்களோடு மெலிவுற்று
இறந்துபோதலும் நமக்கு இனிதாகும்
2.8
கடும் சுறா எறிந்த கொடும் தாள் தந்தை
புள் இமிழ் பெரும் கடல் கொள்ளான் சென்று என
மனை அழுது ஒழிந்த புன் தலை சிறாஅர்
துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின்
பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும் - நற் 392/1-5
கொடிய சுறாமினை எறிந்து கொன்ற கடிய முயற்சியைக் கொண்ட தந்தை
பறவைகள் ஒலிக்கும் பெரிய கடலுக்குக் கூட்டிச் செல்லாமல் சென்றுவிட்டான் என்று
வீட்டில் அழுது ஓய்ந்த புல்லிய தலையை உடைய சிறுவர்கள்
கூட்டாக முயன்று பெற்ற இனிய கண்ணையுடைய நுங்கைத்
தாயின் பருத்த கதகதப்பான கொங்கையை உண்ணுவதுபோலச் சுவைத்து உண்டு மகிழும்
2.9
மயில் அடி இலைய மா குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே - குறு 138/3-5
மயிலின் அடியைப் போன்ற இலையையுடைய கரிய பூங்கொத்துக்களையுடைய நொச்சியின்
அழகுமிக்க மெல்லிய கிளைகளில் மலர்ந்த
நீல மணி போன்ற பூக்கள் உதிர்வதால் உண்டாகும் ஓசையை மிகவும் கேட்டு
2.10
அவரே கேடு இல் விழு பொருள் தரும்-மார் பாசிலை
வாடா வள்ளி அம் காடு இறந்தோரே
யானே தோடு ஆர் எல் வளை ஞெகிழ நாளும்
பாடு அமை சேக்கையில் படர் கூர்ந்திசினே - குறு 216/1-4
தலைவர், கேடில்லாத சிறந்த பொருளைக் கொணருவதற்காக, பசிய இலைகளையுடைய
வாடாத வள்ளிக்கொடி படர்ந்த அழகிய காட்டைக் கடந்துசென்றார்;
நானோ, தொகுதியான ஒளியையுடைய வளையல்கள் நெகிழ்ந்துவீழ, ஒவ்வொருநாளும்
படுத்தலுக்குரிய கட்டிலில் வருத்தமுற்று இருக்கிறேன்;
2.11
பாடு ஏற்று கொள்பவர் பாய்ந்து மேல் ஊர்பவர் - கலி 104/55
ஏறுகளின் குத்துக்களைத் தாங்கிக்கொள்பவரும், அவற்றின் மேல் பாய்ந்து ஏறிக்கொள்பவரும்
ஆடு_உறு குழிசி பாடு இன்று தூக்கி - புறம் 371/6
சமைத்தற்கு அமைந்த பானையைக் கெடாதபடி மெல்ல எடுத்துவைத்து
2.12
கடல் பாடு அழிய இன மீன் முகந்து
------------------- -------------------------------
இரந்தோர் வறும் கலம் மல்க வீசி
பாடு பல அமைத்து கொள்ளை சாற்றி - அகம் 30/2-10
கடலின் பெருமை அழிய மீன்களை முகந்து
------------------- -------------------------------
இரப்போரின் வெறும் கலன்களில் நிறையச் சொரிந்து
பல கூறுகளாகச் செய்து தாம் கொண்டவற்றை விலைகூறி விற்று
2.13
ஒள் இழை
பாடு வல் விறலியர் கோதையும் புனைக - புறம் 172/2,3
விளங்கிய அணிகலத்தையுடைய
பாடுதல் வல்ல விறலியர் மாலையும் சூடுக
2.14
பாஅல் இன்மையின் பல் பாடு சுவைத்து
முலைக்கோள் மறந்த புதல்வனொடு - புறம் 211/20,21
பால் இல்லாமையால் பல முறை சுவைத்து
முலையுண்டலை வெறுத்த பிள்ளையுடனே
மேல்
பாடுகம் - (வி.மு) பாடுவோம், let us sing or praise
பீடு கெழு நோன் தாள் பாடுகம் பலவே - புறம் 393/25
பெருமை பொருந்திய நின் வலிய தாளைப் பலபடியும் பாடுவோம்
மேல்
பாடுகோ - (வி.மு) பாடுவேனோ, won't I sing?
என்னானும் பாடு எனில் பாடவும் வல்லேன் சிறிது ஆங்கே
ஆடு எனில் ஆடலும் ஆற்றுகேன் பாடுகோ
என் உள் இடும்பை தணிக்கும் மருந்தாக
நன்_நுதல் ஈத்த இ மா - கலி 140/13-16
பாடு என்று நீங்கள் சொன்னால், எப்படியாயினும் என்னால் பாட முடியும், இங்கேயே சிறிது
ஆடு என்று சொன்னால் சிறிது ஆடவும் செய்வேன், பாடுவேனோ,
உன் உள்ளத்தில் இருக்கும் காமநோயைத் தணிக்கும் மருந்தாக
அந்த அழகிய நெற்றியையுடையவள் எனக்குத் தந்த இந்த மடல்மாவை;
மேல்
பாடுதும் - (வி.மு) பாடுவோம், we shall sing
அவன் பாடுதும் அவன் தாள் வாழிய என - புறம் 382/7
அவனையே பாடுவோம், அவனது முயர்சியால் நடைபெறும் அர்சியல் வாழ்வதாக என்று
மேல்
பாடுநர் - (பெ) பாடுபவர், those who sing
இனி பாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை - புறம் 235/17
இனிமேல் பாடுவாரும் இல்லை, பாடுவார்க்கு ஒன்று ஈவாரும் இல்லை
மேல்
பாடுவல் - (வி.மு) பாடுவேன், I will sing
பாடுவல் விறலி ஓர் வண்ணம் - புறம் 152/13
யான் பாடுவேன், விறலி, ஒரு வண்ணம்
மேல்
பாடுவி - (பெ) பாடுபவள், one who sings
இஃது ஒன்று என் ஒத்து காண்க பிறரும் இவற்கு என்னும்
தன் நலம் பாடுவி தந்தாளா நின்னை
இது தொடுக என்றவர் யார் - கலி 84/33-35
இதைப் பார்! இவனுக்கு நானும் ஒத்தவள்தான் என்று பிறரும் கண்டுகொள்க என்று
தற்பெருமை பீற்றிக்கொள்பவள் தந்தாளோ? உன்னை
இதனை அணிந்துகொள்ளச் சொன்னவர் யார்?
மேல்
பாண் - (பெ) பாணன்(ர்), an ancient class of bards and minstrels
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து
பாண் யாழ் கடைய வாங்கி பாங்கர்
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில - நற் 186/5-7
வேனில்காலத்து பச்சோந்தியின், தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் முதிய ஆணானது
பாணர்கள் யாழினை இசைக்க, அதனைக் கேட்டு, அருகிலிருக்கும்
நெடியதாய் நிற்கும் யா மரத்தில் ஏறும் தொழிலையுடையது -
மேல்
பாண்டி - (பெ) 1. மாட்டுவண்டி, bullock cart
2. எருது, மாடு, bull
1.
அகவு அரும் பாண்டியும் அத்திரியும் ஆய் மா
சகடமும் தண்டு ஆர் சிவிகையும் பண்ணி - பரி 10/16,17
அதட்டி ஓட்டத் தேவையற்ற மாட்டுவண்டிகள், கோவேறு கழுதைகள், தெரிந்தெடுத்த குதிரைகள் பூட்டிய
வண்டிகள், தண்டு மரங்களோடு கூடிய பல்லக்குகள் ஆகியவற்றைத் தயார்செய்துகொண்டு
2.
திண் தேர் புரவி வங்கம் பூட்டவும்
வங்க பாண்டியில் திண் தேர் ஊரவும் - பரி 20/16,17
அவசரத்தில் திண்ணிய தேருக்குரிய குதிரைகளை வண்டியில் பூட்டவும்,
வண்டிக்குரிய மாடுகளைப் பூட்டிக்கொண்டு திண்ணிய தேரில் செல்லவும்
மேல்
பாண்டியம் - (பெ) உழவு, agriculture
பாண்டியம் செய்வான் பொருளினும்
ஈண்டுக இவள் நலம் - கலி 136/20,21
உழவுத்தொழில் செய்கின்றவன் ஈட்டுகின்ற பொருளைக் காட்டிலும்
இவள் நலம் சிறந்து விளங்கட்டும்
மேல்
பாண்டில் - (பெ) 1. எருது, காளை, bull, bullock
2. வட்ட வடிவக் கட்டில், Circular bedstead or cot
3. வட்ட வடிவமான விளக்குத் தகழி, வட்ட அகல், dish like bowl of a lamp
4. கஞ்சதாளம், cymbals
5. வள்ளம், வட்டில், கிண்ணி, a dish for use in eating and drinking, a large cup
6. வட்டம், வட்ட வடிவப்பொருள், circle, circular object
7. தேர், chariot
8. வட்டத்தோல், Circular piece of hide used in making a shield;
9. குதிரைச்சேணம், saddle
10, வட்டக்கண்ணாடி, circular mirror or glass
1.
மா செலவு ஒழிக்கும் மதன் உடை நோன் தாள்
வாள் முக பாண்டில் வலவனொடு தரீஇ - சிறு 259,260
குதிரையின் செலவினைப் பின்னே நிறுத்தும் வலிமையுள்ள கால்களையும்,
ஒளியுள்ள முகத்தினையும் உடைய காளையை (அதனைச் செலுத்தும்)பாகனோடு, கொடுத்து,
2.
தசம் நான்கு எய்திய பணை மருள் நோன் தாள்
இகல் மீக்கூறும் ஏந்து எழில் வரி நுதல்
பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து
சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன்
கூர் உளி குயின்ற ஈர் இலை இடை இடுபு
தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்ப
புடை திரண்டு இருந்த குடத்த இடை திரண்டு
உள்ளி நோன் முதல் பொருத்தி அடி அமைத்து
பேர் அளவு எய்திய பெரும் பெயர் பாண்டில் - நெடு 115-123
பத்துக்கள் நான்கு(நாற்பது ஆண்டு)சென்ற, முரசென்று மருளும் வலிய கால்களையும்,
போரில் புகழ்ந்து போற்றப்படும் உயர்ந்த அழகினையும், புகர்நிறைந்த மத்தகத்தினையுமுடைய,
போரிட்டு வீழ்ந்த யானையின், தானாக வீழ்ந்த கொம்புகளின் இரண்டுபுறங்களையும் சீவி,
கனமும் செம்மையும் ஒப்ப, திறமையான தச்சன்
கூரிய சிற்றுளியால் குடைந்து செதுக்கிய, பெரிய இலைத்தொழிலை இடையே இட்டு,
தூங்கும் நிலையிலுள்ள மகளிரது புடைத்து நிற்கும் முலையை ஒப்பப்
பக்கம் உருண்டிருந்த குடத்தையுடையவாய், (குடத்திற்கும் கட்டிலுக்கும்)நடுவாகிய இடம் ஒழுக மெல்லிதாய் திரண்டு,
உள்ளியின் கெட்டியான பூண்டு(போன்ற உறுப்புக்களை)அமைத்த கால்களைத் தைத்துச் சமைத்து
அகன்ற அளவுகளைக் கொண்ட பெரும் புகழ்(பெற்ற) வட்டக்கட்டில்
3.
பாண்டில் விளக்கில் பரூஉ சுடர் அழல - நெடு 175
வட்டமான தகழியையுடைய விளக்கில் பருத்த தீக்கொழுந்து எரிய
அகல் போல் இடம் விரிந்து, ஒரு பக்கத்தே குவிந்து, சுரைபுடைத்தாய்
உள்ளே திரி செறிக்கப்பட்ட கால் விளக்கு பாண்டில் விளக்கு எனப்படும்.
இவ்விளக்கு சேலம் மாவட்டத்திலும், வட ஆற்காடு மாவட்டத்திலும்
இக்காலத்து மண்ணெண்ணெய் எரிக்கும் பேரொளி விளக்குகள் வருவதற்கு முன்
வழக்கில் இருந்தன.
மூங்கில்களை உயரமாக நட்டு அவற்றின் தலையை மூன்று வரிச்சல்களாகப் பகுத்து
அவற்றின் இடையே மட்பாண்டிலைச் செறித்துப் பருத்த திரியிட்டு எண்ணெய் பெய்து எரிப்பர்.
கூத்தாடும் களரியின் வலப்பக்கத் தொன்றும் இடப்பக்கத்து ஒன்றுமாக இரண்டு பாண்டில்கள்
நிறுத்தப்படும். திரி முழுவதும் எரிந்து போகா வண்ணம் தடுத்தற்கே கரை பயன்படும்.
நன்றி : முத்துக்கமலம் - சங்க இலக்கியத்தில் பல்வேறு வகை விளக்குகள் - முனைவர் தி. கல்பனாதேவி
நன்றி: https://dosa365.wordpress.com/tag/பாண்டில்-விளக்கு/
4.
நுண் உருக்கு_உற்ற விளங்கு அடர் பாண்டில் - மலை 4
நன்றாக உருக்கப்பட்டு ஒளிர்கின்ற தகடாகத் தட்டப்பட்ட கஞ்சதாளமும்,
5.
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் - நற் 86/3
வள்ளம் போன்ற பகன்றை மலரும்
6.
பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல் - ஐங் 310/1
பொன்னாற் செய்த புதிய வட்டவடிவக் காசுக்களை வரிசையாகக் கோத்த வடம் தவழும் அல்குலையும்
பொன் செய் பாண்டில் பொலம் கலம் நந்த
தேர் அகல் அல்குல் - ஐங் 316/1,2
பொன்னாற் செய்த வட்டக் காசுகளைக் கோத்த பொன்னணிகள் பொலிவிழக்கத்
தேர் போன்ற அகலமுடைய அல்குலில்
7.
எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவி
அலங்கும் பாண்டில் இழை அணிந்து ஈம் என - பதி 64/9,10
வேற்படையைக் கொன்று கொணரப்பட்ட, கொய்யப்பட்ட பிடரியினைக் கொண்ட குதிரைகளையும்,
அசைகின்ற தேர்களையும், அவற்றுக்குரிய அணிகளை அணிந்து கொடுங்கள் என்று கூறும்
8.
புள்ளி_இரலை தோல் ஊன் உதிர்த்து
தீது களைந்து எஞ்சிய திகழ் விடு பாண்டில் - பதி 74/10,11
புள்ளி மானின் தோலை உரித்து, அதினின்றும் ஊனை நீக்கி,
தீய பாகங்களைக் களைந்துபோட்டு, எஞ்சிய வட்டமாக அறுத்த ஒளிவிடும் தோலின்
9.
மீன் பூத்து அன்ன விளங்கு மணி பாண்டில்
ஆய் மயிர் கவரி பாய்_மா மேல்கொண்டு - பதி 90/35,36
விண்மீன் பூத்திருப்பதைப் போன்ற ஒளி விளங்கும் மணிகள் தைக்கபெற்ற சேணத்தையும்,
அழகிய கவரி மயிராலாகிய தலையாட்டத்தையும் உடைய பாய்ந்து செல்லும் குதிரையின் மேலேறி
10
பாசிலை பொதுளிய புதல்-தொறும் பகன்றை
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய
தோல் எறி பாண்டிலின் வாலிய மலர - அகம் 217/6-8
பசிய இலை நெருங்கிய புதல்தோறும், பகன்றையானது
நீலம் ஊட்டப்பட்ட தோலினது நிறம்மறையும்படி பதித்த
தோல்கேடகத்தில் பதித்த வட்டக்கண்ணாடி போல வெள்ளியனவாக மலர
மேல்
பாணர் - (பெ) யாழ் முதலியவற்றை இசைத்துப்பாடும் குலத்தவர்,
An ancient class of Tamil bards and minstrels;
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர் - நற் 172/7,8
புதியதாய் வந்த பாணரின் மெல்லிய இசைப்பாட்டுப் போல
வலம்புரியாக வெண்சங்கு ஒலிக்கும் ஒளிர்கின்ற நீரையுடைய
பாணர் நரம்பினும் இன் கிளவியளே - ஐங் 100/4
பாணரின் யாழ்நரம்பு எழுப்பும் இசையிலும் இனிய சொற்களையுடையவள்.
பாணர் முல்லை பாட சுடர் இழை
வாள் நுதல் அரிவை முல்லை மலைய
இனிது இருந்தனனே நெடுந்தகை - ஐங் 408/1-3
பாணர்கள் முல்லைப் பண்ணை யாழில் வாசிக்க, ஒளிரும் அணிகலன்களைக் கொண்ட
ஒளிபொருந்திய நெற்றியையுடைய மனைவி முல்லை மலரைச் சூடியிருக்க,
இனிமையாக இருந்தான் நெடுந்தகையாளன்
மேல்
பாணி - 1. (வி) 1. தாமதி, நிறுத்திவை, delay, stop for a while
2. தாமதப்படு, wait
- 2. (பெ) 1. சமயம், காலம், occassion, time
2. தாளம், measure of time in music
3. இசைப்பாட்டு, song, melody
4. கை, hand, arm
5. தாமதம், delay
6. செயற்பாங்கு, style, manner
1.1
என் பாணி நில் நில் எலாஅ பாணி நீ நின் சூள் - பரி 8/56
இது என்னுடைய சமயம்! கொஞ்சம் பொறு! ஏடா! நிறுத்திவை, நீ உன்னுடைய சூளுரைகளை!
1.2
சொல்லுக பாணியேம் என்றார் அறைக என்றார் பாரித்தார் - கலி 102/13
"அந்த ஏறுதழுவலை நடத்தச் சொல்லுங்கள்"; "இனி காலம் தாழ்த்தமாட்டோம்" என்றனர்;
"பறையை முழக்குங்கள்" என்றனர்; பரப்பினர்
2.1
என் பாணி நில் நில் எலாஅ பாணி நீ நின் சூள் - பரி 8/56
இது என்னுடைய சமயம்! கொஞ்சம் பொறு! ஏடா! நிறுத்திவை, நீ உன்னுடைய சூளுரைகளை!
2.2
ஒண் நுதல் விறலியர் பாணி தூங்க - பொரு 110
ஒளிவிடும் நெற்றியையுடைய விறலியர் தாளத்திற்கேற்ப ஆட
2.3
அரும் திறல் கடவுள் பழிச்சிய பின்றை
விருந்தின் பாணி கழிப்பி - மலை 538,539
அளவற்ற வலிமைகொண்ட கடவுளை வாழ்த்திய பின்னர்,
(உமக்கே உரித்தான)புதிய பாடல்களைப் பாடி
2.4
பாணி கொண்ட பல் கால் மெல் உறி
ஞெலி_கோல் கல பை அதளொடு சுருக்கி
பறி புறத்து இட்ட பால் நொடை இடையன் - நற் 142/2-4
கையில் கொண்ட பல கால்களைக் கொண்ட மென்மையான உறியுடன்,
தீக்கடைகோல் வைக்கும் பையினைத் தோலுடன் சுருட்டி,
பனையோலைப் பாயை முதுகுப்பக்கம் போட்டிருக்கும் பால் விற்கும் இடையனை
2.5
மாண் இழை நெடும் தேர் பாணி நிற்ப - அகம் 50/4
நன்கு அலங்கரிக்கப்பட்ட நீண்ட தேர் காத்துநிற்க
2.6
நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல்
நீர் செத்து அயின்ற தோகை வியல் ஊர்
சாறு கொள் ஆங்கண் விழவுக்களம் நந்தி
அரி கூட்டு இன் இயம் கறங்க ஆடுமகள்
கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல் - குறி 190-194
(நன்கு பழுத்து)கட்டு விட்டு உதிர்ந்த நறிய பழத்தில் உண்டான தெளிந்த கள்ளை
நீரென்று கருதிப் பருகிய மயில் -- அகன்ற ஊர்களில்
விழாக் கொள்ளுதற்குரிய அவ்விடங்களில் விழாக்களத்தில் மிகுதியாக
அரித்தெழும் ஓசையைக் கூட்டி ஒலிக்கும் இனிய இசைக்கருவிகள் ஒலிக்க, (கழைக்கூத்து)ஆடுகின்ற பெண்
கயிற்றில் நடக்கும் செயற்பாங்கைப் போல் -- தளர்ந்த நடை நடக்கும் மலைச்சாரல்களில்
மேல்
பாத்தரு(தல்) - (வி) படி(தல்), பரவு(தல்)
பல் குரல் ஏனல் பாத்தரும் கிளியே - ஐங் 288/4
பல கதிர்களைக் கொண்ட தினைப்புனத்தின் மேல் பரவித்திரியும் இக் கிளிகள்
மேல்
பாத்தி - (பெ) நீர் தேங்கி நிற்பதற்காக வயலில் வரப்பு கட்டி அமைக்கப்படும் சிறிய பிரிவு, garden bed, pan
கரும்பின் பாத்தி பூத்த நெய்தல் - பதி 13/3
கரும்புப் பாத்திகளில் பூத்த நெய்தல்
மேல்
பாதிரி - (பெ) 1. சிவப்புப்பூ மரவகை, Purple-flowered fragrant trumpet-flower tree, Stereospermum suaveolens;
2. வெள்ளைப்பூ மரவகை, White-flowred trumpet-flower tree, Stereospermum xylocarpum
3. பொன் நிறப்பூ மரவகை, Yellow-flowered fragrant trumpet-flower tree, Stereospermum chelonoides;
1.
பாசிலை ஒழித்த பராஅரை பாதிரி
வள் இதழ் மா மலர் வயிற்று_இடை வகுத்ததன்
உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சை - பெரும் 4-6
பசிய இலைகளை உதிர்த்த பெருத்த அடிமரத்தையுடைய பாதிரியின்
வளமையான இதழையுடைய பெரிய பூவின் வயிற்றை நடுவே பிளந்ததனுடைய
உள்ளிடத்தைப் போன்ற நிறமூட்டப்பெற்ற தோலினையும்;
2.
துகிலிகை அன்ன துய் தலை பாதிரி
வால் இதழ் அலரி - நற் 118/8,9
வண்ணக்கோலின் தலையைப் போன்ற பஞ்சினைத் தலையில் கொண்ட பாதிரியின்
வெண்மையான இதழ்களையுடைய மலர்களில்
3.
மா கொடி அதிரல் பூவொடு பாதிரி
தூ தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல் - நற் 52/1,2
கரிய கொடியையுடைய காட்டுமல்லிகைப்பூவுடனே பாதிரியின்
தூய பொன் தகடு போன்ற மலரையும் சேர எதிரெதிர் வைத்துத்தொடுத்துக்கட்டிய மலர்மாலையைச் சூடிய கூந்தலின்
அ. இந்தப் பாதிரி மலர் மிகுந்த மணமுடையது.
போங்கம் திலகம் தேம் கமழ் பாதிரி - குறி 74
கோங்கப்பூ, மஞ்சாடி மரத்தின் பூ, தேன் மணக்கும் பாதிரிப்பூ
ஆ. பாதிரி மரம் பருத்த அடிமரத்தைக்கொண்டது.
பராரை பாதிரி குறு மயிர் மா மலர் - நற் 337/4
பருத்த அடிமரத்தைக் கொண்ட பாதிரியின் நுண்ணிய மயிர்களைக் கொண்ட சிறந்த மலரையும்,
இ. பாதிரிப்பூ இளவேனில் காலத்தில் பூக்கும்.
வேனில் பாதிரி கூன் மலர் அன்ன - குறு 147/1
வேனில்காலத்துப் பாதிரியின் வளைந்த மலரைப் போன்று
வேனில் பாதிரி விரி மலர் குவைஇ - ஐங் 361/2
வேனில் பாதிரி கூனி மா மலர் - அகம் 257/1
ஈ. இதன் காம்பு சிறியதாக இருக்கும்.
புன் கால் பாதிரி அரி நிற திரள் வீ - அகம் 237/1
புல்லிய காம்பினையுடைய பாதிரியின் வரிகள்பொருந்திய நிறமுடைய திரண்ட மலர்
உ. பாதிரிப்பூ பஞ்சுபோன்ற துய்யினை உச்சியில் கொண்டிருக்கும்.
அத்த பாதிரி துய் தலை புது வீ - அகம் 191/1
பாலையிலுள்ள துய்யினை உச்சியில் கொண்ட புதிய பாதிரிப்பூவை
துகிலிகை அன்ன துய் தலை பாதிரி - நற் 118/8,9
வண்ணக்கோலின் தலையைப் போன்ற பஞ்சினைத் தலையில் கொண்ட பாதிரி
ஊ. இதன் புறவிதழ்கள் கருமையாக இருக்கும்.
கான பாதிரி கரும் தகட்டு ஒள் வீ - அகம் 261/1
காட்டிலுள்ள பாதிரியின் கரிய புறவிதழையுடைய ஒளிபொருந்திய மலர்களை
மேல்
பாந்தள் - (பெ) 1. மலைப்பாம்பு, python
2. நல்ல பாம்பு, cobra
1.
மா மடல் அவிழ்ந்த காந்தள் அம் சாரல்
இனம் சால் வய களிறு பாந்தள் பட்டு என - நற் 14/7,8
பெரிதான மடல்கள் விரிந்த காந்தள் செடிகளையுடைய அழகிய சாரலில்
தம் இனத்தில் உயர்ந்த வலிமையான ஆண்யானை மலைப்பாம்பின் வாயில் சிக்கியதாக
2.
துத்தி பாந்தள் பைத்து அகல் அல்குல் - குறு 294/5
புள்ளிகளையுடைய பாம்பின் படத்தைப் போன்ற அகன்ற அல்குலில்
மேல்
பாப்பு - (பெ) பாம்பு என்பதன் போலி, snake
படர் சிறை பல் நிற பாப்பு பகையை
கொடி என கொண்ட கோடா செல்வனை - பரி 13/39,40
விரிந்த சிறகுகளைப் பல நிறங்களில் கொண்டதும், பாம்பின் பகையுமான கருடனைக்
கொடியாகக் கொண்ட மனக்கோட்டமில்லாத செல்வனாவாய்
மேல்
பாய் - 1. (வி) 1. பரவு, spread, extend as light darkness etc.,
2. பரப்பப்படு, get spread
3. பரப்பு, spread, lay out
4. தாவு, குதி, jump, spring
5. தாவி ஓடு, gallop
6. மேலிருந்து குதி, jump down, dive
7. நீர் முதலியன வேகமாய்ச் செல், flow, rush, gush out
8. தாக்கு, attack
9. வெட்டு, cut
10. முட்டு, butt
11. பட்டு உள்ளேசெல், strike, pierce
12. தாக்கி மோது, charge, pounce upon
- 2. (பெ) 1. பாய்தல், leaping
2. காற்றின் விசை கப்பலைச் செலுத்தும் வகையில் கட்டப்படும் உறுதியான துணி, sail
3. கோரைப்புல், ஓலை முதலியவற்றால் முடைந்த விரிப்பு, mat
1.1
அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி
பகல் கான்று எழுதரு பல் கதிர் பருதி - பெரும் 1,2
அகன்ற பெரிய வானில் பரவிக்கிடந்த இருளை விழுங்கி,
பகற்பொழுதைத் தோற்றுவித்து, எழுதலைச்செய்யும் பல கதிர்களையுடைய ஞாயிறு
1.2
பைம் காய் தூங்கும் பாய் மணல் பந்தர் - பெரும் 267
(படர்ந்த கொடியில்)பச்சைக் காய்கள் தொங்கும், பரப்பப்பட்ட மணலையுடைய பந்தலில்
1.3
மை பட்டு அன்ன மா முக முசுகலை
பைது அறு நெடும் கழை பாய்தலின் - அகம் 267/9,10
மை பூசினாலொத்த கரிய முகத்தினையுடைய ஆண்குரங்கு
பசுமை அற்ற நீண்ட மூங்கிலின்மேல் தாவுதலினால்
1.4
துணை புணர் அன்ன தூ நிற தூவி
இணை அணை மேம்பட பாய் அணை இட்டு - நெடு 132,133
தம் துணையைப் புணர்ந்த அன்னச் சேவலின் தூய நிறத்தையுடைய (சூட்டாகிய)மயிரால்
இணைத்த மெத்தையை மேலாகப் பரப்பி, (அத்தூவிகளுக்கு மேலாக)தலையணைகளும் இட்டு
1.5
பகை புலம் கவர்ந்த பாய் பரி புரவி - மது 689
பகைவர் நாட்டில் கைக்கொண்ட பாய்ந்து செல்லும் குதிரைகளும்
1.6
கழை நிலை பெறாஅ குட்டத்து ஆயினும்
புனல் பாய் மகளிர் ஆட ஒழிந்த
பொன் செய் பூம் குழை மீமிசை தோன்றும் - பதி 86/9-11
ஓடக்கோல் ஊன்ற முடியாத அளவுக்கு ஆழமானது என்றாலும்,
அந்த நீரில் பாய்ந்து மகளிர் நீர்விளையாட்டு ஆட, அவர் காதிலிருந்தி விழுந்த
பொன்னாற் செய்த அழகிய குழையானது மேலே நன்றாகத் தெரியும்
1.7
பல் நீரால் பாய் புனல் பரந்து ஊட்டி - கலி 34/2
பெரும் வெள்ளமாய்ப் பாய்கின்ற நீரை எங்கும் பரப்பி உயிர்களை வாழச்செய்து,
1.8
குணில் பாய் முரசின் இரங்கும் அருவி - புறம் 143/9
குறுந்தடி தாக்கும் முரசினது ஒலிக்கும் அருவி
1.9
எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண் கூர்ந்து
பிடி கணம் மறந்த வேழம் - முல் 68,69
ஓங்கி வீசிய வாள் வெட்டுதலினால், புண் மிக்குப்
பிடித் திரளை மறந்த வேழத்தையும்; வேழத்தின்
1.10
கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்து
நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டு
சிறு கண் யானை நெடு நா ஒண் மணி - அகம் 24/11-13
காவலை உடைய கதவை முட்டுவதால் பூண் பிளந்து
கூரிய முனை மழுங்கிப்போன மொண்ணையான வெள்ளிய தந்தத்தை உடைய
சிறு கண் யானையின் நெடு நா ஒள் மணியோசையும்,
1.11
நெடு வேல் பாய்ந்த நாண் உடை நெஞ்சத்து - புறம் 288/6
மாற்றார் எறிந்த நெடிய வேல் வந்து பட்டு ஊடுறுவியதால் நாணம் உண்டாகிய நெஞ்சுடனே
1.12
கன்று அரைப்பட்ட கயம் தலை மட பிடி
வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின்
ஒண் கேழ் வய புலி பாய்ந்தென கிளையொடு
நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல் - மலை 307-310
கன்றை வயிற்றுக்குக் கீழே(கால்களுக்கிடையே) கொண்ட இளந் தலையுடைய பேதைமையுள்ள பெண்யானை,
வலிமைக்கு ஓர் எல்லை என்று கூறத்தக்க அதன் கணவன் பாதுகாத்துநிற்பதினால்,
ஒளிரும் நிறமுள்ள வலிமையுள்ள புலி பாய்ந்ததினால், (தன்)சுற்றத்தோடு,
உயர்ந்த மலையில் (மற்றவரை உதவிக்குக்)கூப்பிடும் இடியோசை போன்று முழங்கும் குரலும்;
2.1
பாய் கொள்பு
உறு வெரிந் ஒடிக்கும் சிறு வரி குருளை - அகம் 329/9,10
பாய்தல் கொண்டு
நேர்மை பொருந்திய முதுகினை நெளிக்கும் குறுகிய வரிகளையுடைய புலிக்குட்டி
2.2
மீ பாய் களையாது மிசை பரம் தோண்டாது
புகாஅர் புகுந்த பெரும்கலம் - புறம் 30/12,13
மேல் பூரிக்கப்பட்ட பாயை மாற்றாமல், அதன் மேல் பாரத்தையும் பறியாமல்
ஆற்றுமுகத்துப் புகுந்த பெரிய மரக்கலத்தை
2.3
பரல் பெய் பள்ளி பாய் இன்று வதியும்
உயவல் பெண்டிரேம் அல்லேம் - புறம் 246/9,10
பருக்கைக்கற்களால் படுக்கப்பட்ட படுக்கையின்கண் பாயும் இன்றிக் கிடக்கும்
கைம்மை நோன்பால் வருந்தும் பெண்டிருள்ளேம் அல்லேம்
மேல்
பாய்க்குநர் - (பெ) குத்துவோர், one who pierces
வடி மணி நெடும் தேர் மா முள் பாய்க்குநரும் - பரி 12/29
நன்கு வடிக்கப்பட்ட மணிகளைக் கொண்ட நெடிய தேரின் குதிரைகளை முள்கோலால் குத்தி ஓட்டுவோரும்
மேல்
பாயம் - (பெ) 1. பாலியல் வேட்கை, sexual desire
2. மனத்துக்கு உகந்தது, that which is pleasing to mind
1.
ஈர் சேறு ஆடிய இரும் பல் குட்டி
பல் மயிர் பிணவொடு பாயம் போகாது
நெல்மா வல்சி தீற்றி பல் நாள்
குழி நிறுத்து ஓம்பிய குறும் தாள் ஏற்றை - பெரும் 341-344
ஈரத்தையுடைய சேற்றை அளைத்த கரிய பலவாகிய குட்டிகளையுடைய
பலவாகிய மயிர்களையுடைய பெண் பன்றிகளோடே மனவிருப்பம் கொள்ளாமல்,
நெல்லின் உமியை மாவாக்கிய (தவிட்டு)உணவினை (வயிறு நிறைய)த் தின்னப் பண்ணிப், பலநாளும்
குழியிலே நிறுத்திப் பாதுகாத்த குறிய காலையுடைய ஆண்பன்றியின்
2.
நளி படு சிலம்பில் பாயம் பாடி - குறி 58
அடர்த்தி மிக்க மலைச்சாரலில் மனவிருப்பப்படி பாடி,
மேல்
பாயல் - (பெ) 1. உறக்கம், sleep
2. படுக்கை, bedding
1.
கண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபு
முன்னத்தின் காட்டுதல் அல்லது தான் உற்ற
நோய் உரைக்கல்லான் பெயரும்-மன் பல் நாளும்
பாயல் பெறேஎன் - கலி 37/3-6
தலைமாலையினை அணிந்து, ஒரு வில்லுடன் வருவான், என்னை நோக்கி
முகக்குறிப்பால் ஏதோ கேட்பதை அன்றி, தான் கொண்டுள்ள
காதலை என்னிடம் சொல்லாமல் சென்றுவிடுவான், இவ்வாறு பலநாளும் நடந்தது,
அவனை எண்ணி உறக்கம் கொள்ளேன்
2.
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்
மலர்ந்த மார்பின் பாயல்
துஞ்சிய வெய்யள் - ஐங் 205/3-5
ஒலிக்கின்ற வெள்ளிய அருவிகளையுடைய உயர்ந்த மலை நாடனின்
அகன்ற மார்பையே படுக்கையாகக் கொண்டு
தூங்குவதில் நாட்டங்கொண்டுள்ளாள்
மேல்
பார் - 1. (வி) 1. கண்களால் நோக்கு, see
2. கவனி, உற்று நோக்கு, watch, observe
3. எதிர்பார், look for, expect
4. பரிவுடன் நோக்கு, look with compassion
-2. (பெ) 1. உலகம், பூமி, world, earth
2. கடினமான நிலம், hard soil
3. பாறை, rock, rocky layer
4. வண்டியின் அடிப்பாகத்திலுள்ள நெடும் சட்டம், long bar of the body of a cart
1.1
அமிர்து அன நோக்கத்து அணங்கு ஒருத்தி பார்ப்ப
கமழ் கோதை கோலா புடைத்து தன் மார்பில்
இழையினை கை யாத்து இறுகிறுக்கி வாங்கி
பிழையினை என்ன - பரி 12/57-60
அமிழ்தத்தைப் போன்ற இனிய பார்வையால் பெண் ஒருத்தி (தன் கணவனை)நோக்க,
மணங்கமழும் தன் மாலையைக் கழற்றி அதனைக் கோலாகக்கொண்டு அவனைப் புடைத்து, தன் மார்பின்
வடத்தைக் கழற்றி அவனது கைகளைக் கட்டி, அவனை மிகவும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டு
"தவறிழைத்தாய்" என்று சொல்ல
1.2
வய களிறு பார்க்கும் வய புலி போல - மது 643
வலிய களிற்றை (இரைகொள்ளக் கவனித்து)ப் பார்க்கும் வலிய புலியைப் போல,
1.3
பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை
பெரு நீர் போகும் இரியல் மாக்கள்
ஒரு மர பாணியில் தூங்கி ஆங்கு
தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ
செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்து - பெரும் 431-435
பொன்னைக் கொழித்துக்கொண்டு குதிக்கும் கடத்தற்கரிய கங்கையாற்றின்
பெரிய நீரைக் கடந்துபோகும் மனக்கலக்கமுள்ள மாக்கள்
ஒரேயொரு தோணி வரும் காலத்திற்காகக் காத்திருத்தலைப் போல -
கெடாத திரைப்பொருளோடு நெருங்கித் திரண்டு,
(பொருந்திய)நேரத்தை எதிர்பார்க்கும் வளவிய முற்றத்தினையுடைய;
1.4
குழவியை பார்த்து உறூஉம் தாய் போல் உலகத்து
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி - கலி 99/4,5
குழந்தையைப் பரிவுடன் நோக்கி அதற்குப் பாலூட்டும் தாயைப் போல, இந்த உலகத்தில்
மழையைப் பொழிந்து அருள்செய்து பாதுகாக்கும் நல்ல ஊழான விதியை
2.1
பலி கள் ஆர்கை பார் முது குயவன் - நற் 293/2
பலியாக இடப்பட்ட கள்ளைக் குடிக்கும் இவ் உலகத்து முதுகுடியைச் சேர்ந்த குயவன்
2.2
பார் பக வீழ்ந்த வேர் உடை விழு கோட்டு - நற் 24/1
நிலம் பிளவுபட கீழ்ச்சென்ற வேர்களையுடைய பெரிய கிளைகளையும்
2.3
பார் முதிர் பனி கடல் கலங்க உள் புக்கு
சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் - திரு 45,46
பாறைநிலம் முதிர்வு பெற்ற குளிர்ந்த கடல் நிலைகுலைய உள்ளே சென்று
சூரனாகிய தலைவனைக் கொன்ற ஒளிவிடுகின்ற இலைத்தொழிலையுடைய நெடிய வேல்
2.4
எழூஉ புணர்ந்து அன்ன பரூஉ கை நோன் பார் - பெரும் 48
(இரண்டு)கணைய மரங்களையும் சேர்த்தாற் போன்ற பருத்த கைகளையுடைய, வலிய, கோக்கும் சட்டத்தை
மேல்
பார்நடை - (பெ) மெத்தென்ற நடை, soft walk
ஊர் முது வேலி பார்நடை வெருகின் - புறம் 326/1
ஊரிலுள்ள பழையதாகிய வேலியடியில் தங்கும் மெத்தென்ற நடையையுடைய காட்டுப் பூனையாகிய
- பார்நடை - பழகிய நடை - இரையைக் கவர்தற்பொருட்டு மெத்தென்ற நடைபயின்றதாகலின் வெருகின் நடையைப்
பார்நடை என்றார் - ஔ.சு.து.உரை விளக்கம்
மேல்
பார்ப்பனன் - (பெ) பிராமணன், a brahmin
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
---------------- --------------------------
படிவ உண்டி பார்ப்பன மகனே - குறு 156/1-4
பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
------------------ ------------------------
நோன்பு உணவு உண்ணும் பார்ப்பன மகனே!
மேல்
பார்ப்பார் - (பெ) பிராமணர், Brahmins
பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக - ஐங் 4/2
பகைவர் தோற்றுப் புல்லரிசியை உண்க; பார்ப்பனர் தம் மறைகளை விடாமல் ஓதுக
மேல்
பார்ப்பான் - (பெ) பிராமணன், a brahmin
கல் தோய்த்து உடுத்த படிவ பார்ப்பான் - முல் 37
(ஆடையைக்)காவிக்கல்லைத் தோய்த்து உடுத்திய, விரதங்களையுடைய அந்தணன்
மேல்
பார்ப்பு - (பெ) 1. ஊர்ந்து செல்லும் உயிரினங்களின் இளமை, youth of the tortoise, frog, toad etc.,
2. பறக்கும் உயிரினங்களின் இளமை, fledgling
1.
ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும் - பொரு 186
இரும் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன - பெரும் 167
கரு விரல் மந்தி கல்லா வன் பார்ப்பு
இரு வெதிர் ஈர்ம் கழை ஏறி - ஐங் 280/1,2
தன் பார்ப்பு தின்னும் அன்பு இல் முதலையொடு - ஐங் 41/1
ஐம் தலை அவிர் பொறி அரவம் மூத்த
மைந்தன் அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு என
ஆங்கு இள மகளிர் மருள - பரி 19/72-74 (அரவம் = பாம்பு)
2.
நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த
விலங்கு மென் தூவி செம் கால் அன்னம்
பொன் படு நெடும் கோட்டு இமயத்து உச்சி
வான் அர_மகளிர்க்கு மேவல் ஆகும்
வளரா பார்ப்பிற்கு அல்கு_இரை ஒய்யும் - நற் 356/1-5
பறவை பார்ப்பு_வயின் அடைய - நற் 69/3
மேல் கவட்டு இருந்த பார்ப்பு_இனங்கட்கு
கல் உடை குறும்பின் வயவர் வில் இட
நிண வரி குறைந்த நிறத்த அதர்-தொறும்
கணவிர மாலை இடூஉ கழிந்து அன்ன
புண் உமிழ் குருதி பரிப்ப கிடந்தோர்
கண் உமிழ் கழுகின் கானம் - அகம் 31/6-11
தனி பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை - அகம் 240/2
மேல்
பார்வல் - (பெ) 1.கண்காணிப்பு, காவல், watch
2. பார்த்தல், பார்வை, looking, look
1.
நுதல் அணந்து எழுதரும் தொழில் நவில் யானை
பார்வல் பாசறை தரூஉம் பல் வேல்
பூழியர் கோவே - பதி 84/4-6
நெற்றியை மேலே தூக்கி அண்ணாந்து பார்த்து நடக்கத்தொடங்கும் போர்த்தொழிலில் நல்ல பயிற்சியையுடைய
யானைப்படை
கண்காணிப்புக் கூடாரத்துக்கு வந்து சேருகின்ற, பல வேற்படையினைக் கொண்ட
பூழிநாட்டவர்க்கு வேந்தனே
2.
மாரி ஆம்பல் அன்ன கொக்கின்
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு - குறு 117/1-2
மழைக்காலத்து ஆம்பல் பூவைப்போன்ற கொக்கின்
பார்வைக்கு அஞ்சிய துன்பத்தையுடைய ஈரமான நண்டு
மேல்
பார்வை - (பெ) மிருகங்களைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பழக்கிய விலங்கு, trained animal used as a decoy
பார்வை யாத்த பறை தாள் விளவின் - பெரும் 95
பார்வை மான் கட்டிய தேய்ந்த தாளினையுடைய விளாமரத்தின்
பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ
நெடும் கால் கணந்துள் அம் புலம்பு கொள் தெள் விளி - நற் 212/1,2
பழக்கிய பறவைகளைக்கொண்டு வேடன் சிக்கவைக்க விரித்திருக்கும் வலையைக் கண்டு அஞ்சி
நீண்ட கால்களையுடைய கணந்துள் பறவை தனித்துக் கத்தும் தெளிந்த அழைப்பு
மேல்
பாரம் - (பெ) 1. பொறுப்பு, கடமை, responsibility
2. பெரும் குடும்பம், large family
3. சங்க கால ஊர், நன்னன் என்பானது தலைநகரம்
4. சங்க கால ஊர், மிஞிலி என்பான் காவல்காத்து நின்றது
5. பருத்தி, indian cotton plant, Gossypium herbaceum
1.
குடி புறந்தருநர் பாரம் ஓம்பி - பதி 13/24
குடிமக்களைக் காக்கும் காணியாளர்களின் பொறுப்புகளையும் பேணிக்காத்து
2.
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி - புறம் 35/32
ஏரைப் பாதுகாப்போருடைய குடும்பங்களைப் பாதுகாத்து\
பசித்தும் வாரோம் பாரமும் இலமே - புறம் 145/4
யாம் பசித்தும் வருவேம் அல்லேம், எம்மால் பரிக்கப்படும் சுற்றமும் உடையேம் அல்லேம்
3.
பாரத்து தலைவன் ஆர நன்னன் - அகம் 152/12
பாரம் என்னுமூர்க்குத் தலைவனாகிய ஆரம் பூண்ட நன்னன் என்பானது
4.
பூ தோள் யாப்பின் மிஞிலி காக்கும்
பாரத்து அன்ன - நற் 265/4,5
பொலிவுள்ள தோளில் கச்சு மாட்டிய மிஞிலி என்பான் காவல்காக்கும்
பாரம் என்னும் ஊரைப் போன்ற
5.
பாரம் பீரம் பைம் குருக்கத்தி - குறி 92
பருத்திப்பூ, பீர்க்கம்பூ, பச்சையான குருக்கத்திப்பூ
மேல்
பாராட்டு - 1. (வி) 1. புகழ்ந்துபேசு, மெச்சு, applaud, praise
2. கொஞ்சு, சீராட்டு, caress, fondle
3. மிகுத்துரை, exaggerate, magnify
4. கொண்டாடு, celebrate
5. நலம் கூறு, commend, apprecitae
6. உரிமை கொண்டாடு, claim
- 2. (பெ) புகழ்ச்சி, praise, laudation
1.1
கண்ணும் தோளும் தண் நறும் கதுப்பும்
திதலை அல்குலும் பல பாராட்டி
நெருநலும் இவணர்-மன்னே - நற் 84/1-3
என் கண்ணையும், தோளையும், குளிர்ச்சியான நறிய கூந்தலையும்
அழகுத்தேமல் படர்ந்த அல்குலையும் பலவாறு புகழ்ந்து
நேற்றுக்கூட இவ்விடம் இருந்தார், நிச்சயமாக!
1.2
கிளி ஓர் அன்ன கிளவி பணை தோள்
பாவை அன்ன வனப்பினள் இவள் என
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி
யாய் மறப்பு அறியா மடந்தை - நற் 301/5-8
கிளியின் தன்மையை ஒத்த சொற்களையும், பருத்த தோள்களையும்,
கொல்லிப்பாவை போன்ற வனப்பையும் கொண்டவள் என் மகள் என்று
அன்புடைய நெஞ்சத்தோடு பலவாறாகக் கொஞ்சிப் பாராட்ட,
எமது தாயின் கவனத்தைவிட்டுச் சிறிதும் அகலாத மடந்தை,
1.3
மாலை நீ தகை மிக்க தாழ் சினை பதி சேர்ந்து புள் ஆர்ப்ப
பகை மிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய் - கலி 118/17,18
ஏ மாலையே! அழகு மிக்க தாழ்ந்த கிளைகளில் இருக்கும் தமது இருப்பிடத்தைச் சேர்ந்து, பறவைகள் ஆரவாரிக்க,
அவற்றைக் கண்டு பொறாமைப்படும் நெஞ்சத்தினையுடைய எங்களின் சிறுமைத்தனத்தை மிகுத்துப்பேசுகிறாய்!
1.4
துணை மலர் கோதையார் வைகலும் பாராட்ட
மண மனை ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே - கலி 70/9,10
துணை மாலை கொண்ட மலர் மாலை அணிந்த பரத்தையர் கொண்டாட, ஒவ்வொருநாளும் ,
மணவீடுகளில் முழங்கும் உன் மண முழவின் ஓசை வந்து அத் தூக்கத்தைக் கலைக்கும்;
1.5
மடல்_மா ஊர்ந்து மாலை சூடி
கண் அகன் வைப்பின் நாடும் ஊரும்
ஒண் நுதல் அரிவை நலம் பாராட்டி - நற் 377/1-3
பனைமடலால் செய்த குதிரையில் ஏறி வந்தும், எருக்கம்பூ மாலையைச் சூடியும்
இடம் அகன்ற உலகத்தின் நாடுகள்தோறும், ஊர்கள்தோறும்,
ஒளிரும் நெற்றியையுடை அரிவையின் அழகினைச் சிறப்பித்துக்கூறியும்,
1.6
கண்ண் தண்ண் என கண்டும் கேட்டும்
உண்டற்கு இனிய பல பாராட்டியும் - மலை 352,353
கண் குளிரக் கண்டும் (செவி குளிரக்)கேட்டும்,
உண்ணுவதற்கு இனியவை பலவற்றை உரிமையுடன் கொண்டும்,
2.
என் பால் அல் பாராட்டு உவந்தோய் குடி உண்டீத்தை என்
பாராட்டை பாலோ சில - கலி 85/32,33
எனக்குரிய பாலைக் குடிக்காமல், என் பாராட்டைக் கேட்டு உவந்தவனே! குடித்து உண்பாய் என்
பாராட்டை! அந்தப் பாலும் கொஞ்சமே!
மேல்
பாரி - 1. (வி) 1. பரப்பு, spread
2. பரவு, expand, spread
3. கா, guard, protect
- 2. (பெ) சங்ககால வேளிர் எனப்படும் குறுநில மன்னர்களில் ஒருவர், a sangam period chieftain
1.1
சொல்லுக பாணியேம் என்றார் அறைக என்றார் பாரித்தார்
மாண்_இழை ஆறு ஆக சாறு - கலி 102/13,14
"அந்த ஏறுதழுவலை நடத்தச் சொல்லுங்கள்"; "இனி காலம் தாழ்த்தமாட்டோம்" என்றனர்;
"பறையை முழக்குங்கள்" என்றனர்; பரப்பினர்
சிறந்த அணிகலன்களையணிந்தவளின் சார்பாக ஏறுகோள் விழா நடக்கும் செய்தியை;
1.2
பாரிய
பராரை வேம்பின் படு சினை இருந்த
குராஅல் கூகையும் இராஅ இசைக்கும் - நற் 218/6-8
நிழல் நீண்டு பரவிய
பருத்த அடியினைக் கொண்ட வேம்பின் பெரிய கிளைகளிருந்த
கபில நிறங்கொண்ட கூகையும் இரவில் ஒலியெழுப்பும்;
1.3
பகல் செய் மண்டிலம் பாரித்து ஆங்கு
முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும்
வேண்டுபவேண்டுப வேண்டினர்க்கு அருளி - பெரும் 442-444
பகற்பொழுதைச் செய்யும் ஞாயிறு உயிர்களைக் காப்பது போல,
(வருத்தப்பட்டு)நீதி கேட்டுவந்தவர்க்கும், (வறுமைப்பட்டுத் தம்)குறை தீர்க்கக் கேட்டோர்க்கும்
வேண்டியவற்றை எல்லாம் வேண்டினர்க்கு அருள்செய்து
2.
கடையெழு வள்ளல்களில் ஒருவர்.
பறம்பு மலையைக் கொண்ட பறம்பு நாட்டை ஆண்டவர்.
கபிலர் என்ற சங்கப் புலவருக்கு நெருங்கிய நண்பர்.
பல் குடை கள்ளின் வண் மகிழ் பாரி
பலவு உறு குன்றம் போல - நற் 253/7,8
பாரி பறம்பில் பனி சுனை தெண் நீர் - குறு 196/3
புலர்ந்த சாத்தின் புலரா ஈகை
மலர்ந்த மார்பின் மா வண் பாரி - பதி 61/8,9
மேல்
பால் - 1. (பெ) 1. குழவி குட்டி முதலியவற்றை ஊட்டத்தாய் முலையினின்று சுரக்கும்
வெண்மையான திரவப் பொருள். milk
2. வகை, class, kind
3. தானிய மணிகளில் ஆரம்ப நிலையில் காணப்படும் குழைவான திரவப்பொருள், fluid in grains
4. பக்கம், side
5. ஊழ், விதி, fate, destiny
6. ஆண், பெண் என்ற பகுப்பு, sex
7. பகுத்தல் dividing
8. தன்மை, இயல்பு, quality, nature
9. குலம், social hierarchy, caste
- 2. (இ.சொ) மீது, மேல், இடம், on, upon,over, towards
1.1.
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கு ஆங்கு - குறு 27/2
நல்ல பசுவின் இனிய பால் நிலத்தில் சிந்தியதைப் போல்
திதலை மென் முலை தீம் பால் பிலிற்ற
புதல்வன் புல்லி புனிறு நாறும்மே - நற் 380/3,4
தேமல் படிந்த மென்மையான கொங்கைகளின் இனிய பால் சுரந்து வழிய
புதல்வனை அணைத்துக்கொள்வதால் புனிற்றுப் புலவு நாறுகின்றது;
1.2.
ஐம் பால் திணையும் கவினி அமைவர
முழவு இமிழும் அகல் ஆங்கண் - மது 326,327
ஐந்துவகை நிலங்களும் அழகுபெறப் பொருந்துதல் தோன்ற -
முழவு முழங்கும் அகன்ற ஊரில்,
1.3
பால் வார்பு கெழீஇ பல் கவர் வளி போழ்பு
வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல் - மலை 114,115
பால் பிடித்து முற்றி, பலவிதமாய்க் கிளைத்து (அடிக்கும்)காற்றால் ஊடறுக்கப்பட்டு,
மிகுதியாக விளைந்தன ஐவனம் என்னும் மலைநெல்;
1.4
காமம் கடையின் காதலர் படர்ந்து
நாம் அவர் புலம்பின் நம்மோடு ஆகி
ஒரு பால் படுதல் செல்லாது ஆயிடை
----------------------- -------------------------------
வருந்தும் தோழி அவர் இருந்த என் நெஞ்சே - குறு 340
காதல் மிகும்போது காதலரை நினைத்துச் சென்று,
நாம் அவரிடத்தே வருந்தும்போது நம்மோடு ஆகி,
ஒரு பக்கமாகச் சேர்தல் இல்லாது, இரண்டு பக்கமுமாக,
----------------------------------------- -------------------------------
வருந்தும் தோழி! தலைவர் இருந்த என் நெஞ்சம்.
1.5
பால் வரைந்து அமைத்தல் அல்லது அவர்_வயின்
சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோ - குறு 366/1,2
விதியால்தான் அவளின் காதல் அமைந்தது என்பதன்றி, அவரின்
இயல்பை அளந்து அறிவதற்கு நாம் யாரோ?
1.6
புலி கொல் பெண் பால் பூ வரி குருளை - ஐங் 265/1
புலியால் கொல்லப்பட்ட பெண் இனத்தைச் சேர்ந்த பன்றியின் அழகிய வரிகள் கொண்ட குட்டியை,
1.7
பால் பிரியா ஐம்_கூந்தல் பல் மயிர் கொய் சுவல் - கலி 96/8
ஐந்து பகுப்பாகப் பிரித்துவிட்ட கூந்தலே பல மயிர்களைக் கொய்துவிட்ட பிடரி மயிராகவும்
1.8
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும் - புறம் 183/3,4
பிறப்பு ஒரு தன்மையாகிய ஒரு வயிற்றுப் பிறந்தோருள்ளும்
சிறப்பான தன்மையினால் தாயும் மனம் வேறுபடும்
1.9
கீழ் பால் ஒருவன் கற்பின்
மேல் பால் ஒருவனும் அவன்கண் படுமே - புறம் 183/9,10
கீழ்க்குலத்துள் ஒருவன் கற்றால்
மேற்குலத்துள் ஒருவனும் அவனிடத்தே சென்று வழிபடுவான்
2.
குட காற்று எறிந்த குப்பை வட பால்
செம்பொன்_மலையின் சிறப்ப தோன்றும் - பெரும் 240,241
மேற்காற்றில் (தூவித்)தூற்றின நெற்பொலி, வட திசைக்கண்(உள்ள)
சிவந்த பொன்(போன்ற மேரு) மலையினும் மாண்புடையதாகத் தோன்றும்
மேல்
பால்நிறவண்ணன் - (பெ) வெள்ளை நிறத்த பலராமன், Balaraman who is white in colour
பால்நிறவண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும் - கலி 104/8
பால் நிற வண்ணனாகிய பலராமன் போல் குற்றமற்ற வெள்ளைநிறக் காளையும்,
மேல்
பாலை - (பெ) 1. வறட்சி, aridity, barrenness
2. நீடித்த வறட்சிப்பகுதி, arid tract
3. ஒரு வகை யாழ், a kind of lute
4. ஒரு வகைப் பண், a melody type
5. குடசப்பாலை, வெட்பாலை, கருடப்பாலை போன்ற ஒரு வகை மரம், அதன் பூ,
various species of a flowering tree such as Conessi-bark, rosebay, India-rubber vine
1.
பாலை நின்ற பாலை நெடு வழி - சிறு 11
பாலைத் தன்மையாகிய வறட்சி நிலைபெற்றமையால் தோன்றிய பாலையாகிய, நீண்ட வழியையுடைய
2.
பாலை நின்ற பாலை நெடு வழி - சிறு 11
பாலைத் தன்மையாகிய வறட்சி நிலைபெற்றமையால் தோன்றிய பாலையாகிய, நீண்ட வழியையுடைய
3.
ஆறலை கள்வர் படை விட அருளின்
மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை - பொரு 21,22
வழி(ப்போவாரை) அலைக்கின்ற கள்வர் (தம்)படைக்கலங்களைக் கைவிடும்படி செய்து, அருளின்
மாறாகிய மறப்பண்பினை (அவரிடத்திலிருந்து)அகற்றுகின்ற மருவுதல் இனிய பாலை யாழை
4.
நைவளம் பழுநிய நயம் தெரி பாலை
கைவல் பாண்_மகன் கடன் அறிந்து இயக்க - சிறு 36,37
நட்டபாடை என்னும் பண் முற்றுப்பெற்ற இனிமை தெரிகின்ற பாலை என்னும் பண்ணை
இயக்குதல் வல்ல பாணனாகிய மகன் முறைமையை அறிந்து இயக்க,
5.
தில்லை பாலை கல் இவர் முல்லை - குறி 77
தில்லைப்பூ, பாலை, கல்லிலே படர்ந்த முல்லைப்பூ,
கொடிறு போல் காய வால் இணர் பாலை - நற் 107/3
பற்றுக்குறடு போன்ற காய்களையுடைய வெள்ளிய பூங்கொத்துகளையுடைய பாலை
நிரை ஏழ் அடுக்கிய நீள் இலை பாலை - பரி 21/13
நிரைபட ஏழு ஏழாக அடுக்கிய நீண்ட இலைகளையுடைய பாலை
மேல்
பாவல் - (பெ) நீராளம், (நீர் அதிகமானதால்) பரவுதல், spreading
கிணைமகள் அட்ட பாவல் புளிங்கூழ் - புறம் 399/16
கிணைமகள் சமைத்த நீர்த்துப்போய்ப் பரந்த புளிங்கூழை
மேல்
பாவு - (வி) பரவு, spread
பால் மருள் மருப்பின் உரல் புரை பாவு அடி
ஈர் நறும் கமழ் கடாஅத்து இனம் பிரி ஒருத்தல் - கலி 21/1,2
பாலைப் போன்ற வெண்மையான கொம்புகளையும், உரலைப் போன்ற பரந்த அடிகளையும்,
ஈரத்துடன் நறுமணம் கமழும் மதநீரினையும் உடைய, தன் இனத்தை விட்டுப் பிரிந்த ஒற்றையானை
மேல்
பாவை - (பெ) 1. பதுமை, உருவ பொம்மை, puppet, doll
2. பெண்சிலை, statue or image of a lady
3. பிம்பம், reflected image
4. சிறு பெண், girl
1.
செம் நீர் பசும்_பொன் புனைந்த பாவை
செல் சுடர் பசு வெயில் தோன்றி அன்ன - மது 410,411
{சிவந்த தன்மையினையுடைய பசும்பொன்னால் செய்த பதுமை
வீழ்கின்ற ஞாயிற்றின் மாலைவெயிலில் காட்சியளித்தது போன்ற
2.
யவனர் இயற்றிய வினை மாண் பாவை
கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து - நெடு 101,102
யவனர் செய்த தொழில் திறத்தில் உயர்ந்த பெண்சிலையின்
கைகளில் ஏந்தியிருக்கின்ற வியப்பைத்தரும் அழகுடைய தகளி நிறைய நெய் சொரிந்து
3.
கையும் காலும் தூக்க தூக்கும்
ஆடி பாவை போல - குறு 8/4,5
கையையும் காலையும் தூக்கத் தானும் தூக்கும்
கண்ணாடிப் பிம்பம் போல
விரும்பியவற்றைச் செய்வான் தன் மகனுடைய தாய்க்கே!
4.
இது என் பாவைக்கு இனிய நன் பாவை - ஐங் 375/1
இது என் பாவை போன்ற மகளுக்குப் பிடித்த பதுமை
மேல்
பாவைவிளக்கு - (பெ) ஒரு வகை அகல் விளக்கு, a kind of lamp
பாவைவிளக்கில் பரூஉ சுடர் அழல - முல் 85
பாவை (ஏந்திநின்ற)தகளியில் பரிய விளக்கு நின்றெரிய
யவனர் இயற்றிய வினை மாண் பாவை
கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து - நெடு 101,102
யவனர் செய்த தொழில் திறத்தில் உயர்ந்த பெண்சிலையின்
கைகளில் ஏந்தியிருக்கின்ற வியப்பைத்தரும் அழகுடைய தகளி நிறைய நெய் சொரிந்து
மேல்
பாழ் - 1. (வி) அழிவடை, go to ruin
- 2. (பெ) 1. அழிவு, சீர்குலைந்த நிலை, ruin, dilapidated condition
2. அழிபாடு அடைந்த இடம், place in ruins
1.
ஊர் பாழ்த்து அன்ன ஓமை அம் பெரும் காடு - குறு 124/2
ஊர் பாழ்பட்டுப்போனதைப் போன்ற ஓமை மரங்களையும் கொண்ட பெரிய பாலைநிலம்
2.1
அரும் கடி வரைப்பின் ஊர் கவின் அழிய
பெரும் பாழ் செய்தும் அமையான் - பட் 269,270
அரிய காவலையுடைய மதிலையுடைய பகைவரின் படைவீடுகள் அழகு அழியவும்,
பெரும் அழிவைச் செய்தும் மனநிறைவடையானாய்
2.2.
வாழ்வோர் போகிய பேர் ஊர்
பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே - நற் 153/9,10
குடிமக்கள் விட்டு ஓடிப்போன பெரிய ஊரில்
பாழ்பட்ட இடங்களைக் காவல்புரிந்து நிற்கும் தனி மகனைப் போல
மேல்
பாழ்படு - (வி) 1. அழிவுறு, கேடுறு, be ruined, become dilapidated
2. ஒளி மங்கு, lose lustre
1.
மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட
நயந்தோர் தேஎம் நன் பொன் பூப்ப - பெரும் 423,424
(தன்னை)எதிர்ப்போரின் ஊர்களிலுள்ள (மக்கள் கூடும்)பொதுவிடங்கள் கேடுறவும்,
(தன்னிடம்)நயந்துகொண்டவர் நாடுகள் நல்ல பொன் பூத்துத் திகழவும்,
2.
ஆள்பவர் கலக்கு_உற அலைபெற்ற நாடு போல்
பாழ்பட்ட முகத்தோடு பைதல் கொண்டு அமைவாளோ - கலி 5/12,13
நாட்டை ஆள்பவர் அழிவு பல செய்ய, அவரால் அலைக்கழிக்கப்பட்ட நாட்டு மக்கள் போல
ஒளியிழந்த முகத்தோடு பரிதவித்து இருப்பாளோ
மேல்
பாழி - (பெ) சங்க காலத்து ஓர் ஊர், a city in sangam period
1.
பாழி என்பது ஏழில்மலைப்பகுதியை ஆண்ட கொண்கான நன்னன் என்பானது ஊரில் இருந்த நகரம்.
ஏழில் நெடு வரை பாழி சிலம்பில் என்ற அடியால், இது ஏழில்மலையில் இருந்த ஒரு கோட்டை நகரம்
என்பது பெறப்படும்.
பாழி அன்ன கடி உடை வியல் நகர் - அகம் 15/11
கறை அடி யானை நன்னன் பாழி - அகம் 142/9,10
ஏழில் நெடு வரை பாழி சிலம்பில் - அகம் 152/13
அளி இயல் வாழ்க்கை பாழி பறந்தலை - அகம் 208/6
நன்னன் உதியன் அரும் கடி பாழி - அகம் 258/1
அணங்கு உடை வரைப்பின் பாழி ஆங்கண் - அகம் 372/3
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண்
அஞ்சல் என்ற ஆஅய் எயினன்
இகல் அடு கற்பின் மிஞ்லியொடு தாக்கி
தன் உயிர் கொடுத்தனன் சொல்லியது அமையாது - அகம் 396/3-6
நன்னன் என்பானுக்காக ஆஅய் எயியன் பாழியின்கண் மினிலியொடு பொருது உயிர் துறந்தான் என்பது
இதனால் பெறப்படும்.
எழாஅ திணி தோள் சோழர் பெருமகன்
விளங்கு புகழ் நிறுத்த இளம்பெரும் சென்னி
------------------- ---------------------
செம்பு உறழ் புரிசை பாழி நூறி - அகம் 375/10- 13
என்ற அடிகளால் இந்தக் கோட்டை நகரம் சோழன் இளம்பெரும் சென்னியால் வென்று அழிக்கப்பட்டது
என்பது பெறப்படும்.
மேல்
பாளை - (பெ) 1. தெங்கு முதலியவற்றின் பூவை உள்ளடக்கிய மடல், Spathe of palms
1.
கமுகின் பாளை
பரி அரை கமுகின் பாளை அம் பசும் பூ - பெரும் 7
பருத்த அடிமரத்தையுடைய கமுகின் பாளையாகிய அழகினையுடைய இளம் பூ
பனம்பாளை
பாளை தந்த பஞ்சி அம் குறும் காய்
ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும் - குறு 293/2,3
பாளை ஈன்ற நாரினைக் கொண்ட அழகிய சிறிய காயையுடைய
உயர்ந்த கரிய பனையின் நுங்கினை உண்டு திரும்பும்
மூங்கில்பாளை
நுண் பொறி மான் செவி போல வெதிர் முளை
கண் பொதி பாளை கழன்று உகும் பண்பிற்றே - கலி 43/16,17
"நுண்ணிய புள்ளிகளைக் கொண்ட மானின் காதினைப் போல மூங்கில் முளையின்
கணுவை மூடியிருக்கும் தோடு கழன்று உகுந்துகிடக்கும் தன்மையது,
மேல்
பாற்படு - (வி) ஒழுங்குடன் இரு, be well arranged
ஆங்கு அ பன்னிரு கையும் பாற்பட இயற்றி - திரு 118
அப்படியே, அந்தப் பன்னிரண்டு கையும் (ஆறு முகங்களின்)பகுதியில் பொருந்தத் தொழில்செய்து
மேல்
பாற்று - (வி.மு) 1. வழிப்படு, be on the way
2. ஊழினையுடையது, has a (good) fortune
1.
ஆறு அல்ல மொழி தோற்றி அற வினை கலக்கிய
தேறு கள் நறவு உண்டார் மயக்கம் போல் காமம்
வேறு ஒரு பாற்று ஆனது-கொல்லோ - கலி 147/1-3
"நன்னெறிகளிலுட்படாத சொற்களைச் சொல்லும்படி செய்து, அறச் செயல்களைக் கெடுக்கும்
தெளிந்த கள்ளையும், மதுவையும் உண்டவரின் மயக்கத்தைப் போல, நன்றான காம உணர்வு
வேறொரு பாதையில் சென்றுவிட்டதோ?
2.
முன்_நாள் போகிய துறைவன் நெருநை
அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த
கனி கவின் சிதைய வாங்கி கொண்டு தன்
தாழை வேர் அளை வீழ் துணைக்கு இடூஉம்
அலவன் காட்டி நல் பாற்று இது என
நினைந்த நெஞ்சமொடு நெடிது பெயர்ந்தோனே - அகம் 380/3-8
முன்னாளில் சென்ற தலைவன், நேற்று
அகன்ற இலையினையுடைய நாவல்மரம் நீர் உண்ணும் துறையில் சொரிந்த
கனியினை அதன் அழகு கெட இழுத்துக்கொண்டு சென்று, தன்னுடைய
தாழையின் வேர்ப்பக்கம் உள்ள வளையிலுள்ள அன்பு பொருந்திய பெண்ஞெண்டிற்குத் தரும்
ஆண் ஞெண்டினைக் காட்டி, இது நல்ல ஊழினையுடையது என்று கூறி
மேல்
பாறு - 1. (வி) 1. கலைந்துகிட, be in disorder
2. பரட்டையாயிரு, be unkempt, saggy, untidy
3. கிழிபடு, be torn into pieces
4. சிதறிக்கிட, be scattered
5. அழிந்துபோ, be ruined, destroyed
- 2. (பெ) 1. பருந்து, கழுகு, kite, falcon, eagle
2. கேடு, அழிவு, ruin, damage
1.1
குண்டு நீர் நெடும் சுனை நோக்கி கவிழ்ந்து தன்
புன் தலை பாறு மயிர் திருத்தும்
குன்ற நாடன் இரவினானே - நற் 151/10-12
ஆழமான நீரையுடைய நெடிய சுனையைப் பார்த்துத் தலையைக் கவிழ்த்துத் தன்
புல்லிய தலையில் குலைந்துபோன மயிரைத் திருத்தும்
மலைநாட்டினன் இரவினில் -
1.2
பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை - அகம் 21/15
பருந்து அடைகாக்கும் பரட்டைத்தலை ஓமை மரங்களையுடைய
1.3
கூதிர் பருந்தின் இரும் சிறகு அன்ன
பாறிய சிதாரேன் - புறம் 150/1,2
கூதிர்காலத்துப் பருந்தின் கரிய சிறகை ஒத்த
கிழிந்துபோன ஆடையை உடையேனாய்
1.4
கூன் முள் முண்டக கூர்ம் பனி மா மலர்
நூல் அறு முத்தின் காலொடு பாறி
துறை-தொறும் பரக்கும் பன் மணல் சேர்ப்பனை - குறு 51/1-3
வளைந்த முட்களையுடைய கழிமுள்ளியின் நடுக்கும் பனிக்காலத்து கரும் மலர்
நூல் அற்றுச் சிதறிய முத்துக்களைப் போன்று காற்றால் சிதறி
நீர்த்துறைகள்தோறும் பரவிக்கிடக்கும் நிறைந்த மணலையுடைய கடற்கரைத்தலைவனை
1.5
இரு நிலம் கூலம் பாற - புறம் 381/17
பெரிய இந்நிலவுலகத்தில் தானியங்கள் அழிந்துபோக
2.1
புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு
இறகு புடைத்து இற்ற பறை புன் தூவி - நற் 329/4,5
அண்மையில் குஞ்சு பொரித்ததால் வரிசையாகப் பருத்த புள்ளிகளையுடைய முதிய பருந்தானது
இறகுகளைத் தீவிரமாக அடித்துக்கொள்வதால் இற்று விழுந்த காற்றில் பறக்கும் புல்லிய அடி இறகுகளைத்
2.2
அச்சுவர
பாறு இறைகொண்ட பறந்தலை - புறம் 360/14,15
கண்டார்க்கு அச்சம் உண்டாகுமாறு
கேடு பொருந்தியிருத்தலால் பாழிடமாகிய
மேல்
பாறுபடு - (வி) அழிந்துபோ, கெட்டுப்போ, be destroyed
பாறுபட பறைந்த பன் மாறு மருங்கின் - புறம் 359/1
முற்றவும் தேய்ந்து அழிந்த பலமுட்கள் கிடக்கின்ற பக்கத்தில்
மேல்
பானம் - (பெ) குடிப்பதற்கான சுவைப்பொருள், beverages
அரிவையர் அமிர்த பானம்
உரிமை_மாக்கள் உவகை அமிர்து உய்ப்ப - பரி 8/120,121
அரிவையரின் இதழமுதமான பானத்தை
அவரின் உரிமைமக்களாகிய கணவன்மார் மகிழ்ச்சியோடு அமுதமாகக் கருதி உண்டு களிக்க,
மேல்
பானாள் - (பெ) நள்ளிரவு, midnight
பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல் - குறு 355/4
பலரும் துயிலும் நள்ளிரவின் இருளில்
மா மேயல் மறப்ப மந்தி கூர
பறவை படிவன வீழ கறவை
கன்று கோள் ஒழிய கடிய வீசிகுன்று குளிர்ப்பு அன்ன கூதிர் பானாள் - நெடு 10-12
விலங்குகள் மேய்தலை மறந்துபோக, குரங்குகள் (குளிரால்)கூனிப்போக
(மரங்களில் தங்கும்)பறவைகள் (உறைந்துபோய் காலின் பிடியை விட்டுக் கீழே)வீழ, கறவை மாடுகள்
(தம்)கன்றை ஏற்றுக்கொள்ளுதலைத் தவிர்க்கக் கடுமையாய் உதைக்க,
மலையையும் குளிர்விப்பது போன்ற கூதிர்க்காலத்தின் (ஒரு)நண்பகலில்
- நெடுநல்வாடையில் இவ்விடத்தில் வரும் ‘பானாள்’ என்பது நண்பகலைக் குறிக்கும் என்று
ஆதாரங்களுடன் நிறுவும் ஆசிரியரின் கட்டுரையைக் காண இங்கு சொடுக்கவும்
மேல்
|
|
|