பத்துப்பாட்டு-பத்துக்கட்டுரைகள்


   1.இந்திரகோபம்
   2.இருகோல் குறிநிலை
   3.நீறு ஆடிய களிறும் வெண் கோயில் மாசும்
   4.மதுரைக்காஞ்சியில் வைகை
   5.பூப்போல் உண்கண்ணில் புலம்பு முத்து


   6.மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை
   7.சிறு புன் மாலை
   8.பானாள் என்பது நள்ளிரவு மட்டுமா?
   9.நெல்கின்டா என்னும் நெற்குன்றம்
   10.கொல்லை நெடும்வழி கோபம் ஊரவும்
 
பத்துப்பாட்டு - சிறப்புக்காட்சிகள்
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
                                              8.பானாள் என்பது நள்ளிரவு மட்டுமா?

	

	பத்துப்பாட்டில் நக்கீரர் எழுதிய நெடுநல்வாடை என்னும் பாடலில் வரும் பானாள் என்ற சொல்லைப் பற்றிய ஆய்வு செய்வதே 
இக்கட்டுரையின் நோக்கம்.

	கூதிர்காலத்துப் புதுப்பெயலுடன் தொடங்கும் அப்பாடலில்,

	குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் - நெடு 11

	என்ற அடியில் காணப்படும் பானாள் என்ற சொல்லுக்கு நள்ளிரவு என்ற பொருள் கொள்ளப்படுகிறது.

	பானாள் என்பது ஒரு நாளில் பாதி என்ற பொருள் தரும். தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) இதற்கு நள்ளிரவு என்று 
பொருள் கூறுகிறது. 
	பானாள் என்ற சொல் பத்துப்பாட்டில் மொத்தம் 3 முறையே(மது-2,நெடு-1) வருகிறது. எட்டுத்தொகை நூல்களில் நான்கு நூல்களில் 
மட்டும் இது 38 முறை வருகிறது (நற்-6,குறு-8,கலி-2,அகம்-22). எனவே, இச்சொல் பெரும்பாலான நூல்களில் காணப்படவில்லை என்று தெரிகிறது. 
மேலும், அகநானூற்றில் மட்டும் இச்சொல் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது. அவற்றில் சில இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

	உரு கெழு பானாள் வருவன பெயர்தலின் - மது 542
	பானாள் கொண்ட கங்குல் இடையது - மது 631
	குன்று குளிர்ப்பு அன்ன கூதிர் பானாள் - நெடு 12
	 --- --- பானாள்/பாம்பு உடை விடர ஓங்கு மலை மிளிர - நற் 104/8,9
	கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள் - நற் 171/9
	பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள் - நற் 255/9
	ஆனா துயரமொடு வருந்தி பானாள்/துஞ்சாது உறைநரொடு உசாவா - குறு 145/3,4
	பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல் - குறு 355/4
	பாடு பெயல் நின்ற பானாள் இரவில் - கலி 90/6
	பாம்பு மதன் அழியும் பானாள் கங்குலும் - அகம் 8/4
	பானாள் கங்குலும் பகலும் - அகம் 57/18
	முளரி கரியும் முன்பனி பானாள்/குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை - அகம் 163/8,9
	பானாள் கங்குலும் பெரும் புன் மாலையும் - அகம் 297/1

	பானாள் என்பதைப் போல அரைநாள் என்ற ஒரு சொல்லும் சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது. 

	தமிழ்ப் பேரகராதி இதற்கு நடுராத்திரி என்று பொருள் கூறுகிறது. 

	இந்த அரைநாள் என்ற சொல் பத்துப்பாட்டில் 3 முறையும்(பெரும்-1,மது-1,நெடு-1), எட்டுத்தொகையில் இரண்டே நூல்களில் 
8 முறையும் (நற்-1,அகம்-7) காணப்படுகிறது. இவற்றில் நெடுநல்வாடையில் வரும் அரைநாள் என்ற ஒரேஓர் இடத்தைத் தவிர 
ஏனைய இடங்களில் எல்லாம், இச்சொல்லுக்கு நள்ளிரவு என்றே பொருள் கொள்ளப்படுகிறது.

	அரைநாள் வேட்டம் அழுங்கின் பகல் நாள் - பெரும் 111
	மழை அமைந்துற்ற அரைநாள் அமயமும் - மது 649
	ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து - நெடு 75
	நீர் இரங்கு அரைநாள் மயங்கி கூதிரொடு - நற் 341/8
	இரை நசைஇ பரிக்கும் அரைநாள் கங்குல் - அகம் 112/4
	குறி வரல் அரைநாள் குன்றத்து உச்சி - அகம் 138/15
	அரைநாள் யாமத்து விழு மழை கரந்து - அகம் 198/4
	கதுமென குழறும் கழுது வழங்கு அரைநாள் - அகம் 260/13
	சிதர் சினை தூங்கும் அற்சிர அரைநாள் - அகம் 294/11
	மென் பிணி அவிழ்ந்த அரைநாள் இரவு இவண் - அகம் 298/13
	கழுது வழங்கு அரைநாள் காவலர் மடிந்து என - அகம் 311/4
	
	நெடுநல்வாடை தவிர்த்த ஏனைய இடங்களில் ஐயத்துக்கு இடமின்றி அரைநாள் என்பது இரவுநேரத்தையே குறிக்கிறது. 
எனவே, அவ்விடங்களில் அரைநாள் என்பதற்கு நள்ளிரவு எனப் பொருள் கொள்ளப்படுகிறது.

	ஆனால் நெடுநல்வாடையில் குறிப்பிடப்படும் அரைநாள் பகற்பொழுதையே குறிக்கிறது.

	---------- ---------- ------------, மாதிரம்
	விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
	இருகோல் குறிநிலை வழுக்காது, குடக்கேர்பு
	ஒருதிறம் சாரா அரைநாள் அமையத்து - நெடு 72-75

	ஞாயிறானது கிழக்கிலிருந்து மேற்குப் பக்கம் வருகிற வேளையான உச்சிப்பொழுதில், இரண்டு கோல்களின் நிழல்கள் 
ஒன்றோடொன்று இணையும் தருணத்தையே புலவர் இங்கு அரைநாள் அமையம் என்கிறார். எனவே, இந்த அடிகளில் காணப்படும் 
அரைநாள் என்பது உச்சிப்பொழுதான நண்பகலைக் குறிக்கும் என்று எல்லா உரைகாரர்களும் ஒத்துக்கொள்கிறார்கள், காரணம், 
சிறிதும் ஐயத்திற்கு இடமின்றி, அந்த அடிகளில், ஞாயிற்றால் இரு குச்சிகளின் நிழல்கள் ஒன்றுசேரும் நேரமே அரைநாள் 
என்று கூறப்பட்டுள்ளது. 

	ஏனைய இடங்களிலெல்லாம் அரைநாள் என்பதற்கு நள்ளிரவு என்ற பொருள் அமைந்திருக்க, 
நெடுநல்வாடையில் வரும் அரைநாள் என்ற சொல்லுக்கு மட்டும் நண்பகல் என்ற பொருள்கொள்ளப்படுகிறது இல்லையா!. 
இதைப் போலவே, இங்கு குறிப்பிடப்படும் பானாள் என்ற சொல்லுக்கும் நண்பகல் என்று பொருள் கொள்ள இடமிருக்கிறதல்லவா?
	
	இதனை ஆயும் முன்னர், முதலில் நாள் என்பது என்ன என்று பார்ப்போம். 

	இச்சொல் பத்துப்பாட்டில் 51 முறையும், எட்டுத்தொகையில் 449 முறையும் தனிச்சொல்லாகவோ, ஒரு சொல்லின் பகுதியாகவோ 
வருகிறது. பெரும்பாலான இடங்களில் இது காலை, மாலை சேர்ந்த ஒரு முழு நாளாகவே ஆளப்பட்டிருக்கிறது. 

	அரைநாள் வேட்டம் அழுங்கின், பகல் நாள்
	பகுவாய் ஞமலியொடு பைம்புதல் எருக்கி - பெரும் 111,112

	என்ற அடிகளில், பகல் நாள் என்ற தொடரில், நாள் என்பது பொழுது என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. 
எனவே, இடத்திற்கேற்றவாறு நாள் என்பதற்குப் பொருள்கொள்ளும்போது பானாள் என்பதற்கும் இடத்திற்கேற்றவாறு பொருள்கொள்ளலாம் 
அன்றோ? பானாள் என்பதில் வரும் நாள் என்பதையும் பொழுது எனக்கொண்டு, அதைப் பாதிப்பொழுது என்று கொள்ளலாம். 
அந்தப் பொழுது பகற்பொழுதாகவோ இராப்பொழுதாகவோ இருக்கலாம் அல்லவா? பகற்பொழுதில் பாதிநாள் நண்பகல் என்றும், 
இரவுப்பொழுதில் பாதிநாள் நள்ளிரவு என்றும் இடத்துக்கேற்றவாறு பொருள் கொள்ளலாம் அல்லவா?

	பானாள், அரைநாள் என்பதை நள்ளிரவு என்று மட்டுமே பொருள்கொள்வதால் ஒரு முரண்பாடான கருத்தும் உருவாகிறது. 
ஒரு நாளின் பாதி நள்ளிரவு என்று கொண்டால், அந்த நாளின் தொடக்கம் எது? ஒரு நாளின் தொடக்கத்தை நண்பகல் என்று கொண்டால் 
மட்டுமே, பாதிநாள் என்பது நள்ளிரவு ஆகும். ஆக, இதன் அடிப்படையில், தமிழர்களுக்கு ஒரு நாளின் தொடக்கம் நண்பகலாக இருந்திருக்கலாம் 
என்ற ஒரு கருத்தை நாவலர்.சோமசுந்தர பாரதியார் தெரிவித்துள்ளார். 

	நாள் மலர் புரையும் மேனி பெரும் சுனை - நற் 301/2
	கரும் கால் வேங்கை நாள் உறு புது பூ - நற் 313/1
	நாள் மோர் மாறும் நன் மா மேனி - பெரும் 160 

	போன்ற அடிகளில் வரும் நாள் என்பது காலைப்பொழுதையே சுட்டிக்காட்டுகிறது. மேலும், நாளின் தொடக்கம் நண்பகல் 
எனக் கொண்டால், முன்நாள், வழிநாள் என்பன குழப்பத்திற்குரியதாகிவிடும். மதியம் 12 மணிக்கு நாள் தொடங்கினால், காலை 11 மணி 
என்பது முன்நாள் ஆகிவிடும்! அந்தக் காலை 11 மணிக்கு, மதியம் 1 மணி என்பது வழிநாள் ஆகிவிடும்! 
எனவே, தமிழர்களுக்கு ஒரு நாளின் தொடக்கம் காலைப்பொழுதே என்பது உறுதி. 

	பானாள், அரைநாள் என்பதைப் போலவே நடுநாள் என்ற ஒரு சொல்லும் இலக்கியங்களில் காணப்படுகிறது. 
இந்த நடுநாள் என்ற சொல் பத்துப்பாட்டில் 1 முறையும்(முல்-1), எட்டுத்தொகையில் 36 முறையும்(நற்-14,குறு-7,ஐங்-1,கலி-1,அகம்-12,புறம்-1) 
வருகிறது. தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) இதற்கு நண்பகல், நள்ளிரவு என்று இரு பொருள்களுமே உள்ளதாகக் கூறுகிறது. 
ஒரு நாளின் அளவை ஒரு நேர்கோடாக வரைந்து, அதில் பாதியிலோ, அரைப்பகுதியிலோ ஒரு புள்ளி வைத்தால், அது நடுப்புள்ளிதானே! 
எனவே, பானாள், அரைநாள், நடுநாள் என்ற மூன்றுமே நண்பகல், நள்ளிரவு என்ற இரண்டையுமே குறிக்கலாம். நடுநாள் என்பதற்கு, 
பகலின் நடுப்பகுதி அல்லது இரவின் நடுப்பகுதி என்று கூறலாம் என்பதற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன. 
அகலிருள் நடுநாள், மாலிருள் நடுநாள், அரையிருள் நடுநாள் என்று வரும் தொடர்களைக் கொண்டு இருளின் நடுநாள் போன்று 
பகலின் நடுநாள் என்றும் கூறலாம் என்ற எண்ணத்தில்தான் நடுநாள் என்ற சொல்லுக்கு நண்பகல், நள்ளிரவு என்ற இரு பொருள்களும் 
உண்டு என்று கூறியிருப்பர் எனத் தோன்றுகிறது. அதே போல் குறைந்தது ஓர் இடத்தில் அரைநாள் என்பதற்கு, நண்பகல் என்ற பொருள் 
உள்ளது என்பதால், அரைநாள் என்பதற்கும் இரண்டு பொருள்கள் உண்டு என்று கூறலாம். 

	இதன் தருக்கமுறை நீட்டிப்பாக (logical extension) பானாள் என்பதற்கும் நண்பகல், நள்ளிரவு என்ற இரு 
பொருள்களையும் கூறலாம்.
	ஆனால், பானாள் என்பதற்கு நள்ளிரவு என்ற பொருள்படும்படியாகவே சங்க இலக்கிய வழக்காறுகள் அனைத்தும் 
அமைந்துள்ளன. மேலே, முதலில் கொடுக்கப்பட்ட குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் என்ற அடிக்கு வருவோம். 

	இதற்கு முன்னர் வரும் சில அடிகள்:

	மா மேயல் மறப்ப, மந்தி கூர,
10	பறவை படிவன வீழ, கறவை
	கன்று கோள் ஒழியக் கடிய வீசி,
	குன்று குளிர்ப்பு அன்ன கூதிர் பானாள் – நெடு. 9 - 12

	பாடலில், இந்த அடிக்கு முன்னர் வரும் காட்சிகளில், மா மேயல் மறப்ப, கறவை கன்றுகோள் ஒழிய என்பவை, 
பகலில் நடக்கும் காட்சிகள். இவற்றைக் கூறிவிட்டு, இப்படிப்பட்ட கூதிர்காலத்து நள்ளிரவு என்பது முரண்பாடாகத் தோன்றவில்லையா? 
நள்ளிரவில் மாடுகள் மேயுமா? கன்றுகள் பால்குடிக்குமா? மேலும், இந்த அடியினை அடுத்து வரும் காட்சிகளைப் பார்ப்போம்.

	புன் கொடி முசுண்டை பொறிப் புற வான் பூ
	பொன் போல் பீரமொடு புதல்புதல் மலர
	பை கால் கொக்கின் மென் பறை தொழுதி
	இரும் களி பரந்த ஈர வெண் மணல்
	செம் வரி நாரையோடு எ வாயும் கவர – நெடு. 13 - 17

	இந்த அடிகளில், முசுண்டையும், பீரமும் பூக்கின்றன - கொக்கும் நாரையும் பறந்துபறந்து மீன்களைக் கவர்கின்றன. 
நள்ளிரவில் இவை நடக்குமா? காட்சிகளில் ஒரு தொடர்ச்சி இல்லையே! இந்தக் கேள்வியைத் தவிர்ப்பதற்காக, 
‘கோவலர் நடுங்க, மாடுகள் மேய்ச்சலை மறப்ப, கறவைகள் கன்றுகளை உதைக்க - இந்த அளவுக்குக் குளிர் மிகுந்த கூதிர்காலத்தின் 
(ஏதோ)ஒரு நாள் நள்ளிரவில்' என்ற பொருள் கொண்டு, முந்தைய காட்சிகளுக்கும் இந்த நள்ளிரவுக்கும் தொடர்பு இல்லை என்பது போல் 
கூறிவிடுகின்றனர். மேலும், கூதிர்ப் பானாள் என்ற தொடரை, புலம்பொடு வதியும் அரிவைக்கு (166) என்ற அடியுடன் இணைத்து, 
இதற்கும், அதனை அடுத்து வரும் அடிகளுக்கும் தொடர்பில்லை என்பது போல் கூறுகிறார்கள். 

	எனவே, இங்கு ஒரு ஒடிவுப்புள்ளி (point of discontinuity)யைத் தோற்றுவிக்கிறார்கள். இந்த கூதிர்ப்பானாள் என்ற தொடருக்கும், 
அதற்கு முந்தைய, பிந்தைய காட்சிகளுக்கும் தொடர்பில்லை என்பது போல் காட்டுவது, புலவரின் ஆற்றொழுக்கான நடைக்கு 
இழுக்குச் சேர்ப்பது போல் தோன்றுகிறது. இதற்குக் காரணம் பானாள் என்பதற்கு நள்ளிரவு என்ற பொருள் கொள்ளுவதே. 
பொருந்தாத பொருளை எடுத்துக்கொண்டு, அதைச் சமாளிப்பதற்காகப் பாடலை முன்னும் பின்னும் முறுக்கி வளைக்கும் 
நச்சினார்க்கினியரின் உரை எழுதும் முறையை ஏற்றுக்கொள்ளாதவர்களும், இந்த இடத்தில் சறுக்கி, அவர் வழிக்கே போவது போல் 
தோன்றுகிறது. எனவே, இங்கு வரும் பானாள் என்பதற்கு நண்பகல் என்று கொண்டால் இவ்வாறு தடுமாற வேண்டியதில்லை. 
மேலும், அரைநாள் என்பதற்கு நண்பகல் என்ற பொருள்தரும் ஒரேஒரு நெடுநல்வாடை அடியைப் போலவே, பானாள் என்பதற்கும் நண்பகல் 
என்ற பொருள் தரும் ஒரேஒரு அடியும் நெடுநல்வாடையில்தான் உள்ளது என்ற சிறப்பையும் பெறலாம்.

	இப்போது பானாள் என்பதற்கு நண்பகல் என்ற பொருள் எவ்வாறு இவ்விடத்தில் பொருந்தி வருகிறது என்று காண்போம்.

	குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் என்ற தொடருக்கு ‘மலைகளைக் குளிர்ப்பிப்பது போன்ற குளிர் மிக்க கூதிர்காலத்து 
நள்ளிரவின்கண்' என்ற பொருளில்தான் எல்லா உரைகளும் அமைந்திருக்கின்றன. 

	‘உணர்ச்சியற்ற குன்றும் குளிருமாறு எனக் குளிர்ச்சியின் மிகுதியை விதந்தோதியவாறு' 

	என்று விளக்கங்களும் கூறப்படுகின்றன. குளிர்ச்சியின் மிகுதியைக் கூற, இல்லாத ஒன்றை-நடக்காத ஒன்றை-
இயற்கைக்கு மாறான ஒன்றை-புலவர் உவமித்துக் கூறியிருப்பாரா? அதுவே மிகைப்படுத்தல் ஆகாதா? இங்கு குன்று என்பதைச் 
சோலைகள் நிறைந்த மலை என்பதைவிடப் பாறைகள் நிறைந்த மலை எனலாம். பாறைகள் வெயில்காலத்தில் வெம்மையை 
உள்வாங்கிக்கொண்டு சுட்டுப்பொசுக்கும். தொட்டால் நமக்குச் ‘சுரீர்' என வலிக்கும். குளிர்காலத்தில் பாறைகள் குளிரை 
உள்வாங்கிக்கொண்டு பனிக்கட்டி போல் இருக்கும். தொட்டால் நம்மைச் ‘சுரீர்' எனச் சுண்டிவிடும். அப்படியிருக்கும்போது, 
அவையும் குளிரும் குளிர் என்பது எப்படி ஒரு நல்ல உவமம் ஆகும்?

	இப்பொழுது, பானாள் என்பதற்கு நண்பகல் எனப் பொருள்கொண்டால், நண்பகலில்தான் ஞாயிற்றின் கதிர்கள் 
கடுமையாக இருக்கும். குளிர்காலமாயினும், நண்பகலில் ஓரளவு வெப்பம் மிகுந்திருக்கும். அந்த வெப்பத்தால் பாறைகள் வெம்மை 
அடைந்திருக்கும். குளிர்காலத்துப் பாறைகள் நண்பகலில் சுட்டுப்பொசுக்காவிட்டாலும், ‘கதகத’-வென்றாவது இருக்கும். 
ஆனால், அந்த நேரத்தில்கூட பாறைகள் குளிர்ந்துகிடந்தன என்னும்போது குளிரின் கடுமை மிகுந்து தோன்றவில்லையா? 

	அடுத்து, பானாள் என்பதை, இங்கு நண்பகல் என்று கொள்வது பாடலின் தொடர்ச்சியைக் குலைக்கவில்லை. 
மாறாக, உறுதிப்படுத்துகிறது.

	வலப்புறமாக வளைத்து எழும் பருவகால மேகங்களின் காட்சியோடு பாடல் தொடங்குகிறது. வடகிழக்குப் பருவக்காற்று 
முதலில் இலங்கையை அடைந்து, பின்னர் சிறிது சிறிதாக மேலே வந்து, தென்தமிழ்நாட்டில் நிலைகொண்டு, தொடர்ந்து வடக்கு நோக்கி 
எழுந்து, வடதமிழ்நாட்டைக் கலக்கி, பின்னர் ஆந்திர, ஒரிசா மாநிலங்களில் ஆரவாரித்து மறையும். பாண்டிநாட்டுத் தலைநகராம் 
மதுரைக்குப் பருவமழை வந்துசேரும் முதல்நாள் - அப்படி ஓர் அதிகாலைக் காட்சியுடன் பாடல் ஒரு மலைச்சரிவில் தொடங்குகிறது. 
பின்னர், புலவரின் ‘காமிரா' அங்குள்ள குளிர்காய்ந்துகொண்டிருக்கும் அதிகாலைக் கோவலரைக் காட்டி, விலங்குகள், பறவைகள், கறவைகள் 
ஆகியன படும் துயரை விடியற்காலைக் காட்சிகளாகக் காட்டுகின்றது. பின்னர் உச்சிவெயிலிலும் பாறைகள் ‘சில்லிட்டுக்கிடக்கும்' 
நண்பகலைக் காட்டுகின்றது. பின்னர், பூத்துக்கிடக்கும் முசுண்டை, பீர்க்கம் பூக்களுடன், இரை மேயும் கொக்கு, நாரைகளைக் காட்டுகின்றது. 
[இங்கு ஒன்றைக் குறிப்பிடவேண்டும். இந்தக் கொக்குகளும், நாரைகளும் வடக்கு ஆசிய, ஐரோப்பிய நாடுகளிலிருந்து 
- அங்கிருக்கும் குளிருக்குப் பயந்து - இங்குவந்து பலுகிப் பெருகுவது வடகிழக்குப் பருவகாலத்தில்தான். இன்றைக்கும் இந்நிகழ்வு 
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.] பின்னர் சிறிது, உள்நாட்டுக்கு வந்து மருத நிலங்களின் வயல்களைக் காட்டுகின்றது. 
ஆனால், கரும்புகளைப் பற்றிக் கூறவில்லை. மாறாக, கமுகு மரங்களைப் பற்றியே கூறுகிறது. மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 
கமுகுகள் நின்றிருந்தன என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

	புள்ளணி கழனியும், பொழிலும் பொருந்தி
	வெள்ள நீர்ப்பண்ணையும் விரிநீர் ஏரியும்
	காய்க்குலைத் தெங்கும் வாழையும் கமுகும்
	வேய்த்திரள் பந்தரும் விளங்கிய இருக்கை – சிலம்பு-புறஞ்சேரி-191-194 

	என்ற சிலம்பின் அடிகளில், மதுரையை நெருங்கும் கவுந்திஅடிகள், கோவலன், கண்ணகி ஆகியோர் எதிர்கொள்ளும் காட்சிகளாக 
வருணிக்கிறார் புலவர் இளங்கோ. இவௌ நெடுநல்வாடைப் புலவர் நக்கீரர் நமக்குக் காட்டும் காட்சியை வெகுவாக ஒத்து வருவதைக் காணலாம். 
எனவே அவர் காட்டும் கயல் அறல் எதிர்வதும், கடும்புனல் சாய்வதும், இருங்களி பரந்த ஈர வெண்மணலில் பைங்கால் கொக்குகளும், 
செவ்வரி நாரைகளும் மேய்வதுவும் மதுரைக்கு மேற்கிலிருக்கும் மலையடிவாரம் வழியாக மதுரைக்கு வரும் வைகை ஆற்றுக் காட்சிகளே 
என்பது தெளிவாகும்.

	இவ்வாறாக அலைந்துவரும் புலவரின் ‘காமிரா', மாடம் ஓங்கிய மல்லல் மூதூரான மதுரைக்கு மாலைநேரத்தில் வந்துசேர்கிறது. 
அங்குள்ள அகல் நெடும் தெருக்களையும், அங்கு, முழுவலி மாக்கள் வேண்டுவயின் திரிதருதலையும் காட்டி, பூவேந்திய பெண்டிர் 
மல்லல் ஆவணம் மாலை அயர்வதைக் காட்டி, அதைத் தொடர்ந்து, பகுவாய்த் தடவில் செந்நெருப்பு ஆரும் முன்னிரவுக் காட்சியுடன், 
ஆடல் மகளிர் பாடல்கொள, காதலர்ப் பிரிந்தோர் புலம்ப, கூதிர் நின்றன்றால் போதே (72) என்ற அடியுடன் முடிகிறது. 

	இந்தத் தொடர்ச்சியான காட்சி அமைப்பு, 12-ஆம் அடியில் பானாள் என்பதற்கு நண்பகல் எனப் பொருள் கொண்டாலே அமையும்.
	
	பார்வை:

	பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும் - டாக்டர் வே.சாமிநாதையரவர்கள், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1986
	பத்துப்பாட்டு - மூலமும் உரையும், பொ.வே.சோமசுந்தரனார், தி.சை.நூ.கழகம், First edition, Oct, 1956.
	பத்துப்பாட்டு ஆராய்ச்சி – மா.இராசமாணிக்கனார், சாகித்திய அகாதெமி, 2012. – பக் 31.
	The Papers of Dr.Navalar Somasundara Bharathiyar, ed. Sambasivan S,  Navalar Puthaka Nilayam, Pasumalai, Madurai-4, First Ed. Dec 1967.