நெடுநல்வாடை

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

சொற்பிரிப்பு-மூலம் அடிநேர்-உரை

வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ
பொய்யா வானம் புது பெயல் பொழிந்து என
ஆர்கலி முனைஇய கொடும் கோல் கோவலர்
ஏறு உடை இன நிரை வேறு புலம் பரப்பி
புலம் பெயர் புலம்பொடு கலங்கி கோடல்	5
நீடு இதழ் கண்ணி நீர் அலை கலாவ
மெய் கொள் பெரும் பனி நலிய பலர் உடன்
கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க
மா மேயல் மறப்ப மந்தி கூர
பறவை படிவன வீழ கறவை		10
கன்று கோள் ஒழிய கடிய வீசி
குன்று குளிர்ப்பு அன்ன கூதிர் பானாள்
புன் கொடி முசுண்டை பொறி புற வான் பூ
பொன் போல் பீரமொடு புதல்புதல் மலர
பைம் கால் கொக்கின் மென் பறை தொழுதி	15
இரும் களி பரந்த ஈர வெண் மணல்
செம் வரி நாரையோடு எ வாயும் கவர
கயல் அறல் எதிர கடும் புனல் சாஅய்
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை
அகல் இரு விசும்பில் துவலை கற்ப	20
அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த
வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க
முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்
கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரும் குலை
நுண் நீர் தெவிள வீங்கி புடை திரண்டு	25
தெண் நீர் பசும் காய் சேறு கொள முற்ற
நளி கொள் சிமைய விரவு மலர் வியன் கா
குளிர் கொள் சினைய குரூஉ துளி தூங்க
மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்
ஆறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில்	30
படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள்
முடலை யாக்கை முழு வலி மாக்கள்
வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து
துவலை தண் துளி பேணார் பகல் இறந்து
இரு கோட்டு அறுவையர் வேண்டு வயின் திரிதர	35
வெள்ளி வள்ளி வீங்கு இறை பணை தோள்
மெத்தென் சாயல் முத்து உறழ் முறுவல்
பூ குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழை கண்
மடவரல் மகளிர் பிடகை பெய்த
செவ்வி அரும்பின் பைம் கால் பித்திகத்து	40
அம் இதழ் அவிழ் பதம் கமழ பொழுது அறிந்து
இரும்பு செய் விளக்கின் ஈர் திரி கொளீஇ
நெல்லும் மலரும் தூஉய் கைதொழுது
மல்லல் ஆவணம் மாலை அயர
மனை உறை புறவின் செம் கால் சேவல்	45
இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது
இரவும் பகலும் மயங்கி கையற்று
மதலை பள்ளி மாறுவன இருப்ப
கடி உடை வியல் நகர் சிறு குறும் தொழுவர்
கொள் உறழ் நறும் கல் பல கூட்டு மறுக	50
வடவர் தந்த வான் கேழ் வட்டம்
தென் புல மருங்கில் சாந்தொடு துறப்ப
கூந்தல் மகளிர் கோதை புனையார்
பல் இரும் கூந்தல் சில் மலர் பெய்ம்மார்
தண் நறும் தகர முளரி நெருப்பு அமைத்து	55
இரும் காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப
கை வல் கம்மியன் கவின் பெற புனைந்த
செம் கேழ் வட்டம் சுருக்கி கொடும் தறி
சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க
வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின்	60
வேனில் பள்ளி தென் வளி தரூஉம்
நேர் வாய் கட்டளை திரியாது திண் நிலை
போர் வாய் கதவம் தாழொடு துறப்ப
கல்லென் துவலை தூவலின் யாவரும்
தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார்	65
பகு வாய் தடவில் செம் நெருப்பு ஆர
ஆடல் மகளிர் பாடல் கொள புணர்மார்
தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை
கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ
கரும் கோட்டு சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப	70
காதலர் பிரிந்தோர் புலம்ப பெயல் கனைந்து
கூதிர் நின்றன்றால் போதே மாதிரம்
விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம்
இரு கோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு
ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து	75
நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து
ஒருங்கு உடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பின்
பரு இரும்பு பிணித்து செவ்வரக்கு உரீஇ	80
துணை மாண் கதவம் பொருத்தி இணை மாண்டு
நாளொடு பெயரிய கோள் அமை விழு மரத்து
போது அவிழ் குவளை புது பிடி கால் அமைத்து
தாழொடு குயின்ற போர் அமை புணர்ப்பின்
கை வல் கம்மியன் முடுக்கலின் புரை தீர்ந்து	85
ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை
வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக
குன்று குயின்று அன்ன ஓங்கு நிலை வாயில்
திரு நிலைபெற்ற தீது தீர் சிறப்பின்
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து	90
நெடு மயிர் எகின தூ நிற ஏற்றை
குறும் கால் அன்னமோடு உகளும் முன்கடை
பணை நிலை முனைஇய பல் உளை புரவி
புல் உணா தெவிட்டும் புலம்பு விடு குரலொடு
நிலவு பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்து	95
கிம்புரி பகு வாய் அம்பணம் நிறைய
கலிழ்ந்து வீழ் அருவி பாடு விறந்து அயல
ஒலி நெடும் பீலி ஒல்க மெல் இயல்
கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை
நளி மலை சிலம்பின் சிலம்பும் கோயில்	100
யவனர் இயற்றிய வினை மாண் பாவை
கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து
பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி
அறுஅறு காலைதோறு அமைவர பண்ணி
பல் வேறு பள்ளிதொறும் பாய் இருள் நீங்க	105
பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது
ஆடவர் குறுகா அரும் கடி வரைப்பின்
வரை கண்டு அன்ன தோன்றல வரை சேர்பு
வில் கிடந்து அன்ன கொடிய பல் வயின்
வெள்ளி அன்ன விளங்கு சுதை உரீஇ	110
மணி கண்டு அன்ன மா திரள் திண் காழ்
செம்பு இயன்று அன்ன செய்வுறு நெடும் சுவர்
உருவ பல் பூ ஒரு கொடி வளைஇ
கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல்
தசம் நான்கு எய்திய பணை மருள் நோன் தாள்	115
இகல் மீக்கூறும் ஏந்து எழில் வரி நுதல்
பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து
சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன்
கூர் உளி குயின்ற ஈர் இலை இடை இடுபு
தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்ப	120
புடை திரண்டு இருந்த குடத்த இடை திரண்டு
உள்ளி நோன் முதல் பொருத்தி அடி அமைத்து
பேர் அளவு எய்திய பெரும் பெயர் பாண்டில்
மடை மாண் நுண் இழை பொலிய தொடை மாண்டு
முத்து உடை சாலேகம் நாற்றி குத்துறுத்து	125
புலி பொறி கொண்ட பூ கேழ் தட்டத்து
தகடு கண் புதைய கொளீஇ துகள் தீர்ந்து
ஊட்டுறு பல் மயிர் விரைஇ வயமான்
வேட்டம் பொறித்து வியன் கண் கானத்து
முல்லை பல் போது உறழ பூ நிரைத்து	130
மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்பட
துணை புணர் அன்ன தூ நிற தூவி
இணை அணை மேம்பட பாய் அணை இட்டு
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்து
தோடு அமை தூ மடி விரித்த சேக்கை	135
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து
பின் அமை நெடு வீழ் தாழ துணை துறந்து
நல் நுதல் உலறிய சின் மெல் ஓதி
நெடு நீர் வார் குழை களைந்தென குறும் கண்
வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின்	140
பொலம் தொடி தின்ற மயிர் வார் முன்கை
வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து
வாளை பகு வாய் கடுப்ப வணக்குறுத்து
செ விரல் கொளீஇய செம் கேழ் விளக்கத்து
பூ துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல்	145
அம் மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு
புனையா ஓவியம் கடுப்ப புனைவு இல்
தளிர் ஏர் மேனி தாய சுணங்கின்
அம் பணை தடைஇய மென் தோள் முகிழ் முலை
வம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின்	150
மெல் இயல் மகளிர் நல் அடி வருட
நரை விராவுற்ற நறு மென் கூந்தல்
செம் முக செவிலியர் கைம்மிக குழீஇ
குறியவும் நெடியவும் உரை பல பயிற்றி
இன்னே வருகுவர் இன் துணையோர் என	155
உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிக கலுழ்ந்து
நுண் சேறு வழித்த நோன் நிலை திரள் கால்
ஊறா வறு முலை கொளீஇய கால் திருத்தி
புதுவது இயன்ற மெழுகு செய் பட மிசை
திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக	160
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து
முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிது உயிரா
மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரி பனி
செ விரல் கடை கண் சேர்த்தி சில தெறியா	165
புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவைக்கு
இன்னா அரும் படர் தீர விறல் தந்து
இன்னே முடிகதில் அம்ம மின் அவிர்
ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை
நீள் திரள் தட கை நிலம் மிசை புரள	170
களிறு களம் படுத்த பெரும் செய் ஆடவர்
ஒளிறு வாள் விழுப்புண் காணிய புறம் போந்து
வடந்தை தண் வளி எறிதொறும் நுடங்கி
தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன் பல்
பாண்டில் விளக்கில் பரூஉ சுடர் அழல	175
வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு
முன்னோன் முறைமுறை காட்ட பின்னர்
மணி புறத்து இட்ட மா தாள் பிடியொடு
பருமம் களையா பாய் பரி கலி மா
இரும் சேற்று தெருவின் எறி துளி விதிர்ப்ப	180
புடை வீழ் அம் துகில் இட வயின் தழீஇ
வாள் தோள் கோத்த வன்கண் காளை
சுவல் மிசை அமைத்த கையன் முகன் அமர்ந்து
நூல் கால் யாத்த மாலை வெண்குடை
தவ்வென்று அசைஇ தா துளி மறைப்ப	185
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறை தொழிலே

உலகம்(எல்லாம்) குளிரும்படியாக, வலப்புறமாக வளைந்து (எழுந்திருந்து),
(பருவம்)பொய்யாத மேகம் (கார்காலத்து முதல்)மழையைப் பெய்ததாக,
(அதனால் ஏற்பட்ட)வெள்ளத்தை வெறுத்த வளைந்த கோலினையுடைய இடையர்,
காளைகளையுடைய (பல்வேறு)இனம் சேர்ந்த மந்தையை(மேடான)முல்லை நிலத்தில் மேயவிட்டு,
(தாம் பழகிய)நிலத்தை விட்டுப்போகும் வருத்தத்தினால் மனம்நொந்து, காந்தள் பூவின்		5
நீண்ட இதழ்களால் கட்டின தலையில் அணிந்த மாலை (மழை)நீர் அலைத்தலால் கலைந்துபோக,
(தம்)உடம்பில் கொண்ட மிகுந்த குளிர்ச்சி வருத்துகையினால், பலரும் கூடிக்
கையில் பிடித்த கொள்ளிக்கட்டையராய், கன்னங்களின் உட்புறம்(பற்கள்) அடித்துக்கொண்டு நடுங்க -
விலங்குகள் மேய்தலை மறந்துபோக, குரங்குகள் (குளிரால்)கூனிப்போக
(மரங்களில் தங்கும்)பறவைகள் (உறைந்துபோய் காலின் பிடியை விட்டுக் கீழே)வீழ, கறவை மாடுகள்	10
(தம்)கன்றை ஏற்றுக்கொள்ளுதலைத் தவிர்க்கக் கடுமையாய் உதைக்க,
மலையையும் குளிர்விப்பது போன்ற கூதிர்க்காலத்தின் (ஒரு)நண்பகலில் 
புல்லிய கொடியையுடைய முசுட்டையில் திரண்ட புறத்தையுடைய வெண்ணிறப் பூ
பொன் போன்ற (நிறமுள்ள)பீர்க்குடன் புதர்கள்தோறும் மலர,
இளமையான காலையுடைய கொக்கின் (அங்குமிங்கும்)மெதுவாகப் பறந்துதிரியும் கூட்டம்	15
கரிய வண்டலின் சேறு பரந்த ஈரமான வெண்மை நிற மணலில்,
சிவந்த வரிகளைக் கொண்ட நாரைகளுடன், எல்லாப் பக்கங்களிலும் (மீன்களைப்)பிடிக்க;
கெண்டை மீன்கள் சிறிதாய் ஓடும் நீரில் எதிர்த்து ஏறி வர, பெரும் நீர்ப்பெருக்கு குறைய;
மழை பெய்து ஓய்ந்த பின் மேலெழுந்த, (நுரை)பொங்குதலை(ப்போன்ற) வெண்ணிற மேகங்கள்
அகன்ற பெரிய ஆகாயத்தில் சிறு தூறலாகத் தூவ;							20
அழகிய வெளியையுடைய அகன்ற வயலில் நிறைந்த நீரால் செழித்து வளர்ந்த
வளப்பமான தாள்களையுடைய நெல்லிலிருந்து மேலெழுந்த கதிர் (முற்றி)வளைய;
பெரிய அடிப்பகுதியையுடைய பாக்கு மரத்தின் (நீல)மணியைப் போன்ற கழுத்தின்
கொழுத்த மடல்களில் (பாளை)விரிந்த திரட்சியைக் கொண்ட கொத்துக்களில்
நுண்ணிய நீர் திரளும்படியாக வீங்கிப் பக்கம் திரண்டு						25
தெளிந்த நீர் (கொண்ட)பசிய காய் இனிமை கொள்ளும்படி முற்ற;
செறிவைக் கொண்ட மேற்பகுதியையுடைய, (பலவிதமாய்க்)கலந்த பூக்களுள்ள அகன்ற பொழில்கள்
குளிர்ச்சியைக் கொண்ட கிளைகளையுடையவாய் (அவற்றினின்றும்)நிறத்தையுடைய மழைத்துளி தொங்கி நிற்க -
மாடங்கள் உயர்ந்துநிற்கும் வளப்பமுள்ள பழைய ஊரில்,
ஆறு கிடந்தால் போன்ற அகன்ற நெடிய தெருவில்,							30
பச்சிலை கலந்த தலை மாலையினையும், பருத்த அழகினையும் வலியினையும் உடைய இறுகின தோளினையும்,
முறுக்குண்ட உடம்பினையும், மிகுந்த உடற்பலமும் உடைய மிலேச்சர்
வண்டுகள் மொய்க்கும் கள்ளினை மிகுதியாக உண்டு, களிப்பு மிக்கு,
தூரலாக விழும் குளிர்ந்த துளியைப் பொருட்படுத்தாமல், பகற்பொழுதைக் கடந்து,
முன்னும் பின்னும் தொங்கவிட்ட துகிலினையுடையராய்(த் தாம்) விரும்பியவாறு திரிந்துவர -	35
வெண்சங்கு வளையல்களையும், புடைத்த இறையினை உடைய மூங்கில்(போன்ற) தோளினையும்,
மென்மையான தோற்றத்தையும், முத்தை ஒத்த பல்லினையும்,
பொலிவுள்ள காதணிகளுக்கு ஏற்ப வளைந்துயர்ந்த அழகினையும் குளிர்ச்சியையும் உடைய கண்களையும்,
பேதைமை (மிக்க)பெண்கள் -- (தம் கையிலுள்ள) பூத்தட்டுகளில் பறித்துப்போட்ட
(மலரும்)பக்குவத்திலுள்ள மொட்டுக்களின் பசிய காலினையுடைய பிச்சியின்	  		40
அழகிய இதழ்கள் கூம்புவிடும் நிலையில் மணக்கையினால், (அந்திப்)பொழுது (என)அறிந்து,
இரும்பினால் செய்த (அகல்)விளக்குகளில் (நெய் தோய்ந்த)ஈரமான திரியைக் கொளுத்தி,
நெல்லையும் மலரையும் சிதறி, (இல்லுறை தெய்வத்தை)கைகூப்பி(வணங்கி),
-- வளப்பமுள்ள அங்காடித் தெரு(வெல்லாம்) மாலைக் காலத்தைக் கொண்டாட -
வீட்டில் வாழும் புறாவின் சிவந்த காலினையுடைய சேவல்					45
(தான்)இன்பம் நுகரும் பெடையொடு நாற்சந்தியில் (இரை)தேடி உண்ணாமல்,
இரவுக்காலமும் பகற்காலமும் தெரியாமல் மயங்கி, செயலற்று,
கொடுங்கைகளைத் துயிலிடமாய்க் கொண்டு, (அவற்றிற்கிடையே)தாவிக்கொண்டிருக்க;
காவலையுடைய அகன்ற மனைகளில் சிறியராகிய குற்றேவல் வினைஞர்,
கருங்கொள்ளின் நிறத்தை ஒத்த நறுமண அம்மியில் பலவித நறுமணப்பெருள்களை அரைக்க;	50
வடநாட்டவர் கொண்டுவந்த வெண்மை நிற வட்டக்கல்
தென் நாட்டு ஓரத்து(பொதிகை மலை) சந்தனத்துடன் (பயன்படாமல்)கிடப்ப;
(தம்)தலைமயிரில் மகளிர் (குளிர்ச்சி மிகுதியால்)மாலை அணியாதவராய்,
(தம்)நிறைந்த கருமையான தலைமயிரில் (மங்கலமாக) (ஒரு)சில மலர் முடிப்பதற்காக,
குளிர்ந்த மணமுள்ள சாந்துக்கட்டையை விறகாகக்கொண்டு நெருப்பை உண்டாக்கி   		55
(அதில்)கருமையான வயிரம்பாய்ந்த அகில்கட்டையுடன் வெண்மையான கற்கண்டையும் (கூட்டிப்)புகைப்ப;
கை(வேலைப்பாட்டில்) சிறந்த கைவினைக்கலைஞன் அழகுபெறச் செய்த
சிவந்த நிறத்தையுடைய விசிறி (மூடிச்)சுருக்கிடப்பட்டு, வளைந்த முளைக்கோலில்,
சிலந்தியின் வெள்ளிய நூலால் சூழப்பட்டனவாய் தொங்கிக்கொண்டிருக்க;
விண்ணை(யே) (எட்டித்)தொடும்படி உயர்ந்துநின்ற மேல் நிலை மாடங்களில்,			60
இளவேனில் காலத்தில் (துயிலும்)படுக்கை அறைக்குத் தென்றல் காற்றைத் தரும்
நேருக்கு நேராக அமைந்த சாளரங்கள் திறக்கப்படாமல், சிக்கென்ற நிலையினையுடைய
பொருதுகின்ற வாயுடைய(இரட்டைக்)கதவுகள் தாழிட்டுக் கிடக்க;
‘கல்'லென்கிற ஓசையுடன் தூறல் (நீர்த்திவலைகளைத்)தூவுவதால், ஒருவருமே
குவிந்த வாயையுடைய செம்புகளில் தண்ணீரைக் குடியாராய்ப்	 				65
பிளந்த வாயையுடைய கணப்புச்சட்டியின் சிவந்த நெருப்பின் (வெம்மையை)நுகர;
ஆடல் மகளிர் (தாம் பாடுகின்ற)பாடலுக்குப் பொருந்த (யாழ்)நரம்பைக் கூட்டுதற்கு,
குளிர்ச்சியால் நிலைகுலைந்த இனிய குரலாகிய நரம்பை,
பெரிய எழுகின்ற முலையின் வெப்பத்தால் தடவி,
கரிய தண்டினையுடைய சிறுயாழைப் பண் நிற்கும் முறையிலே நிறுத்த;				70
கணவரைப் பிரிந்த மகளிர் வருந்த, காலமழை நன்றாக இறங்கி,
கூதிர்க்காலமாய் நிலைபெற்றது - அப்பொழுது, திசைகள்(எல்லாவற்றிலும்)
விரிந்த கிரணங்களைப் பரப்பின அகன்ற இடத்தையுடைய ஞாயிறு,
(நாட்டப்பட்ட)இரண்டு கோல்களின் நிழல்கள் ஒன்றும்வகையில், (கிழக்கிலிருந்து)மேற்கே செல்வதற்காக,
ஒரு பக்கத்தைச் சாராத (உச்சியில் இருக்கும்)நண்பகல் நேரத்தில், 					75
(கட்டிடக்கலை)நூலை அறிந்த கலைஞர் மிகச்சரியாக நூலை நேரே பிடித்து,
திசைகளைக் குறித்துக்கொண்டு, தெய்வங்களை (ஏறிட்டுப்)பார்த்து(த் தொழுது),
பெரும் புகழ்பெற்ற அரசர்க்குத் தகுந்தவகையில் (அரண்)மனையின் பாகங்களைப் பகுத்துக்கொண்டு -
ஒரு சேர இவ்விடங்களையெல்லாம் வளைத்து, உயர்ந்த நிலையையுடைய மதிலின்(உள்ளே),
பெரிய (ஆணிகளும் பட்டங்களுமாகிய)இரும்பால் கட்டி, சாதிலிங்கத்தைப் பூசி வழித்து, 		80
இரட்டையான பெரிய கதவுகளைச் சேர்த்தி, (அவை)பொருதுதல் நன்றாக அமைந்து,
நாளின் பெயர் கொண்ட கோள்(உத்தரம்) நன்றாக வடிவமைக்கப்பட்ட சிறந்த (குறுக்குக்)கட்டையைக்கொண்டு,
மொட்டாக இருந்து மலர்கின்ற குவளை (போன்ற)புதிய கைப்பிடிகளையும் அடிப்பகுதியுடன் பண்ணி,
தாழ்ப்பாழோடு சேரப்பண்ணின, பொருத்துவாய் (நன்றாக)அமைந்த சேர்க்கையுடன், 
கைத்தொழில் வல்ல தச்சன் (ஆணிகளை நன்றாக)முடுக்கியதனால் இடைவெளியற்று,	 	85
வெண்சிறுகடுகு அப்பிவைத்த நெய்யணிந்த நெடிய நிலையினையுடைய,
வெற்றிகொண்டு உயரும் கொடிகளோடு யானைகள் போய் நுழையும்படி (உயர்ந்த),
பாறைக்குன்றைச் செதுக்கியதைப் போன்ற கோபுரத்தை (மேலே)உடைய வாயில்களையும்;
செல்வம் நிலைபெற்ற குற்றமற்ற சிறப்பினையுடைய,
கொண்டுவந்த மணலைப் பாவி இறுக்கமாக்கப்பட்ட, அழகிய வீட்டின் -- முற்றத்தில்,		90
நீண்ட மயிரினையுடைய கவரிமானின் தூய நிறத்தையுடைய ஏற்றை(ஆண்)
குட்டைக் கால்களையுடைய அன்னத்துடன் தாவி விளையாடும் -- முன்வாசலையும்;(உடையதாய்)
கொட்டிலில் நிற்பதை வெறுத்த நிறைந்த பிடரிமயிரையுடைய குதிரைகள்
புல்லாகிய உணவை வாய் நிறைய மெல்லும்(போது ஏற்படும்) தனிமை (அமைதியைக்)கெடுக்கும் ஓசையோடு -
நிலாவின் பயனை அரசன் நுகரும் நெடிய வெள்ளிய நிலாமுற்றத்திலுள்ள			95
நீர்த்தூம்பின் (மீனின்)பிளந்த வாயாகப் பகுத்த உருளி நிறைகையினால்,
கலங்கி விழுகின்ற அருவியின் ஓசை(யும்) செறிந்து - (அதற்கு)அடுத்து உள்ள
தழைத்த நெடிய தோகை (ஒரு பக்கம்)ஒதுங்க, மெல்லிய இயல்பினையுடைய
செருக்கின மயில் ஆரவாரிக்கும், ஊது கொம்பின் ஓசையோ என்று எண்ணத்தோன்றும் இனிய ஓசை
அடர்ந்த மலையில்(காணப்படும்) ஆரவாரம்போல  - ஆரவாரிக்கும் கோயில்;			100
யவனர் செய்த தொழில் திறத்தில் உயர்ந்த பெண்சிலையின்
கைகளில் ஏந்தியிருக்கின்ற வியப்பைத்தரும் அழகுடைய தகளி நிறைய நெய் சொரிந்து,
பருத்த திரிகளைக் கொளுத்தி, (செந்)நிறமான தழல் மேல்நோக்கி எரிகின்ற சுடரை,
(நெய்)வற்றிப்போகும்போதெல்லாம் (நெய்வார்த்துத் திரிகளைத்) தூண்டி(ச் சரிப்படுத்தி),		
(அரண்மனையின்)பலவிதமான இடங்கள்தோறும் பரந்த இருள் நீங்கும்படி,			105
பெருமை பொருந்தின தலைமையினையுடைய மன்னனைத் தவிர
(மற்ற)ஆண்கள் கிட்டே(யும்)வராத கடும் காவலையுடைய மனைக்கட்டுக்களின்,
மலைகளைக் கண்டாற் போன்ற உயர்சியையுடையவாய், மலைகளைச் சேர்ந்து
(இந்திர)வில் கிடந்தாற்போன்ற (பல்வேறு நிறக்)கொடிகளையுடையவாய், பலவிடங்கள்தோறும்	
வெள்ளியைப் போன்ற ஒளிரும் சாந்தை வாரிப்பூசி,							110
(நீல)மணியைக் கண்டாற்போன்ற கருமையினையும் திரட்சியினையுமுடைய திண்ணிய தூண்களையுடையவாய்,
செம்பினால் பண்ணினாற்போன்ற (சிறப்பாகச்)செய்தலுற்ற நெடிய சுவரில்,
வடிவழகுகொண்ட பல பூக்களையுடைய ஒப்பில்லாத கொடியை வரைந்து,
கருவோடு பெயர்பெற்ற காட்சிக்கினிய நல்ல இல் (கர்ப்பக் கிருகம் - கருவறை) - (அதனுள்ளே)
பத்துக்கள் நான்கு(நாற்பது ஆண்டு)சென்ற, முரசென்று மருளும் வலிய கால்களையும்,	  	115
போரில் புகழ்ந்து போற்றப்படும் உயர்ந்த அழகினையும், புகர்நிறைந்த மத்தகத்தினையுமுடைய,
போரிட்டு வீழ்ந்த யானையின், தானாக வீழ்ந்த கொம்புகளின் இரண்டுபுறங்களையும் சீவி,
கனமும் செம்மையும் ஒப்ப, திறமையான தச்சன்
கூரிய சிற்றுளியால் குடைந்து செதுக்கிய, பெரிய இலைத்தொழிலை இடையே இட்டு	,
தூங்கும் நிலையிலுள்ள மகளிரது புடைத்து நிற்கும் முலையை ஒப்பப்				120
பக்கம் உருண்டிருந்த குடத்தையுடையவாய், (குடத்திற்கும் கட்டிலுக்கும்)நடுவாகிய இடம் ஒழுக மெல்லிதாய் திரண்டு,
உள்ளியின் கெட்டியான பூண்டு(போன்ற உறுப்புக்களை)அமைத்த கால்களைத் தைத்துச் சமைத்து
அகன்ற அளவுகளைக் கொண்ட பெரும் புகழ்(பெற்ற) வட்டக்கட்டில் - (அதன் மேல்)
மூட்டுவாய் சிறந்துவிளங்கும் நுண்ணிய நூல் அழகுபெறும்படி, (அதனைத்)தொடுத்தல் சிறப்புற அமைந்து	
முத்துக்களை உடைய (தொடர் மாலைகளைப்)பலகணிகள்(போன்று) தொங்கவிட்டு, ஆணிகளால் தைத்து	125
புலியின் உருவம் பொறிக்கப்பட்ட பொலிவு பெற்ற நிறத்தையுடைய தட்டம் போன்ற
தகடுகளால் நடுவுவெளியான இடம் மறையும்படி கோக்கப்பட்டு, குற்றமற்று
சாயம் ஏற்றப்பட்ட பல மயிர்களை (உள்ளே)பரப்பி, அதன்மேல் சிங்க
வேட்டை(க் காட்சியைப்) பொறித்து, அகன்ற இடத்தையுடைய காட்டிடத்து
முல்லைப் போது பலவற்றுடன் கலக்கும்படி (பிற)பூக்களையும் நிரைத்து,				130
மெல்லியதாக விரிந்த மஞ்சம் - (அம்மஞ்சம்)சிறப்புற,
தம் துணையைப் புணர்ந்த அன்னச் சேவலின் தூய நிறத்தையுடைய (சூட்டாகிய)மயிரால்
இணைத்த மெத்தையை மேலாகப் பரப்பி, (அத்தூவிகளுக்கு மேலாக)தலையணைகளும் இட்டு,
கஞ்சி போட்டு வெளுக்கப்பட்ட துகிலின்
மலரிதழ்கள் வைத்து(மணமூட்டப்பட்ட)தூய மடியினை விரித்த படுக்கையின்கண்,		135
(முன்பு)முத்துமாலைகள் சுமந்த பருத்த முலையினையுடைய மார்பினில்
(இப்போது)முறுக்குப்பட்ட நெடிய வீழாகிய மங்கல நாண் (மட்டும்)வீழ்ந்துகிடக்க, அரசன் பிரிந்ததினால்,
நல்ல நெற்றியில் (கைசெய்யாமல்)பொலிவழிந்து கிடந்த சிலவாகிய மெத்தென்ற மயிரினையும்;
மிகுதியாக ஒளி சிந்தும் காதணி(குண்டலங்)களை நீக்கிட, சிறிய துளைகளில்
தாளுருவி அழுத்திய வெறுமையாகத் தொங்கும் காதினையும்;					140
(முன்பு)பொன் வளையல்கள் (அழுத்தித்)தழும்புண்டாக்கிய மயிர் ஒழுங்குபட்ட முன்கையில்
வலம்புரிச் சங்கு வளையல்களோடு காப்புக்கயிறைக் கட்டி,
வாளைமீனின் பிளந்த வாயைப் போன்ற வளைவை உண்டாக்கிச்
சிவந்த விரலில் மாட்டிய சிவந்த நிறத்தையுடைய (முடக்கு அல்லது நெளி என்னும்)மோதிரத்தையும்;(கொண்டு)
(முன்பு)பூப்போட்ட துகில் கிடந்த உயர்ந்த வளைவினையுடைய அல்குலில்			145
(இப்போது)அழகிய(கெட்ட வாசனையற்ற)அழுக்குப் படர்ந்த ஒளிரும் நூல் புடைவையுடன்
முற்றுப்பெறாத கோட்டுச் சித்திரத்தை ஒப்ப(தலைவி அமர்ந்திருக்க) - ஒப்பனை இல்லாத,
மாந்தளிரைப் போன்ற நிறத்தினையும், பரந்த அழகுத் தேமலையும்,
அழகான மூங்கில் (போலத்)திரண்ட மெல்லிய தோளினையும், (மொட்டுப்போல்)குவிந்த முலை
கச்சை வலித்துக் கட்டினவாய், வளைந்து நெளியும் இடையினையும்,				150
மென்மையான தன்மையினையும் உடைய சேடியர் (தலைவியின்)நல்ல அடியை வருடிக்கொடுக்க,
நரை கலத்தலுற்ற நறிய மெல்லிய மயிரினையுடைய
சிவந்த முகத்தையுடைய செவிலித்தாயர் அளவுக்குமீறித் திரண்டு,
சிற்சில சொற்களாலும், நீண்ட மொழிகளாலும் (ஆறுதல்)உரைகள் பலவற்றையும் திரும்பத்திரும்பக் கூறி,
‘இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் (உன்)இனிய துணைவர்' என்று			155
(அவள் மனத்துக்கு)ஏற்ற சொற்களைக் கூறவும் (அதனை)ஏற்காதவளாய் மிகவும் கலங்கி -
நுண்ணிய கூழ்(சாதிலிங்கம்)பூசின, உறுதியாக நிற்றலையுடைய திரண்ட கால்களை,
குடங்களைக் கடைந்து தைத்த கட்டிற்கால்களுக்கு அருகாக நிற்கும்படிபண்ணி, அதனிடத்தே கட்டி,
புதிதாகச் செய்த, மெழுகு வழித்த (துணியாலான)மேல்விதானத்தின் மேல்,
திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேடராசியை முதலாகக்கொண்டு,		160
விண்ணில் ஊர்ந்து திரிதலைச்செய்யும் மிகுந்த ஓட்டத்தையுடைய ஞாயிற்றோடு
மாறுபாடு மிகுந்த சிறப்பைக்கொண்ட திங்களொடு நிலைநின்ற
உரோகிணியை நினைத்தவளாய்(அவற்றைப்) பார்த்து நெடு மூச்சு விட்டு,
கறுத்த கண்ணிமைகள் சுமந்த, (அவ்விமைகள்)நிரம்பி வழியும் நிலையிலுள்ள முத்து(ப்போன்ற) நீரை, 
(தன்)சிவந்த விரலால் கடைக்கண்ணில் கொண்டு சேர்த்து (விரலில் மீந்த)சிலவற்றைச் சுண்டிவிட்டு, 	165
தனிமையொடு கிடக்கும் அன்பு மிகுகின்ற இளம்பெண்ணுக்குத்
தீதாக இருக்கின்ற ஆற்றுதற்கரிய துயரம் தீரும்படி, வெற்றியைக் கொடுத்து
இப்பொழுதே முடிவதாக - ஒளி மின்னும்
நெற்றிப்பட்டத்தோடு பொலிவு பெற்ற போர்த்தொழிலைப் பயின்ற யானையின்
நீண்ட திரண்ட பெரிய தும்பிக்கை (வெட்டுண்டு) நிலத்தின் மேல் புரளும்படி,			170
யானையை (முன்னர்)க் கொன்ற பெரும் செயலையுடைய வீரரின்,
சுடர்விடும் வாளினால் ஏற்பட்ட விழுப்புண்ணைக் காண்பதற்காக (பாசறையைவிட்டு)வெளியில் வந்து,
வாடையின் குளிர்ந்த காற்று அடிக்குந்தோறும் நெளிந்து அசைந்து,
தெற்கு நோக்கி எழுந்து சாய்ந்த தீச்சுடரையுடையவாய், நன்றாகிய பலவான			
பாண்டில் விளக்கில் பருத்த தீக்கொழுந்து எரிய,							175
வேப்பம் பூ மாலையைத் தலையிலே கட்டின வலிய காம்பினையுடைய வேலோடே
முன்செல்கின்றவன் (புண்பட்ட வீரரை) ஒவ்வொருவராகக் காட்ட, பின்னாக
மணிகளை முதுகில் இட்ட பெரிய கால்களையுடைய பெண்யானைகளோடு,  
சேணம் களையப்பெறாத பாயும் ஓட்டத்தையுடைய செருக்கின குதிரைகள்				
கரிய சேற்றையுடைய தெருவில் (தம்மேலே)வீசும் துளிகளை உடல் குலுக்கி உதற,		180
பக்கவாட்டில் (நழுவி)வீழ்ந்த அழகிய மேல் துண்டை இடப்பக்கத்தே அணைத்துக்கொண்டு,
வாளைத் தோளில் கோத்த தறுகண்மையையுடைய காளைபோன்றவன்
மேல்தோளின் மீது வைத்த வலக்கையை உடையவனாய், (அகமலர்ச்சி தோன்ற)முகம் பொருந்தி,
நூலால் சட்டத்தே கட்டின முத்துமாலையை உடைய கொற்றக்குடை
தவ்வென்னும் ஓசைபட்டு அசைந்து, பரக்கின்ற துளியை மறைக்க,					185
நள்ளென்னும் ஓசையையுடைய நடுயாமத்திலும் பள்ளிகொள்ளாதவனாய்,
ஒருசில வீரரோடு திரிதலைச் செய்யும் அரசன்,
பலரோடு மாறுபட்டுப் பொருகின்ற பாசறையிடத்துப் போர்த்தொழில் (168-இப்பொழுதே முடிவதாக).