சிறுபாணாற்றுப்படை
முழுத்திரையில்-காண-மேலே-இருக்கும்-மூன்று-கோடுகளைத்-தட்டுக. முந்தைய-நிலைக்கு-மீண்டும்-அதனையே-தட்டுக
மணி மலை பணை தோள் மா நில மடந்தை அணி முலை துயல்வரூஉம் ஆரம் போல செல் புனல் உழந்த சேய் வரல் கான்யாற்று கொல் கரை நறும் பொழில் குயில் குடைந்து உதிர்த்த புது பூ செம்மல் சூடி புடை நெறித்து 5 கதுப்பு விரித்து அன்ன காழ் அக நுணங்கு அறல் அயில் உருப்பு அனைய ஆகி ஐது நடந்து வெயில் உருப்புற்ற வெம் பரல் கிழிப்ப வேனில் நின்ற வெம் பத வழி நாள் காலை ஞாயிற்று கதிர் கடாவுறுப்ப 10 பாலை நின்ற பாலை நெடு வழி சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇ ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு அருளி நெய் கனிந்து இருளிய கதுப்பின் கதுப்பு என மணி வயின் கலாபம் பரப்பி பல உடன் 15 மயில் மயில் குளிக்கும் சாயல் சாஅய் உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ வயங்கு இழை உலறிய அடியின் அடி தொடர்ந்து ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடி தட கையின் சேர்ந்து உடன் செறிந்த குறங்கின் குறங்கு என 20 மால் வரை ஒழுகிய வாழை வாழை பூ என பொலிந்த ஓதி ஓதி நளி சினை வேங்கை நாள் மலர் நச்சி களி சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து யாணர் கோங்கின் அவிர் முகை எள்ளி 25 பூண் அகத்து ஒடுங்கிய வெம் முலை முலை என வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின் இன் சேறு இகுதரும் எயிற்றின் எயிறு என குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த முல்லை சான்ற கற்பின் மெல் இயல் 30 மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர் நடை மெலிந்து அசைஇய நன் மென் சீறடி கல்லா இளையர் மெல்ல தைவர பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் இன் குரல் சீறியாழ் இட வயின் தழீஇ 35 நைவளம் பழுநிய நயம் தெரி பாலை கை வல் பாண்மகன் கடன் அறிந்து இயக்க இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ துனி கூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப முனிவு இகந்திருந்த முது வாய் இரவல 40 கொழு மீன் குறைய ஒதுங்கி வள் இதழ் கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை பைம் கறி நிவந்த பலவின் நீழல் மஞ்சள் மெல் இலை மயிர் புறம் தைவர விளையா இளம் கள் நாற மெல்குபு பெயரா 45 குளவி பள்ளி பாயல் கொள்ளும் குட புலம் காவலர் மருமான் ஒன்னார் வட புல இமயத்து வாங்கு வில் பொறித்த எழு உறழ் திணி தோள் இயல் தேர் குட்டுவன் வரு புனல் வாயில் வஞ்சியும் வறிதே அதாஅன்று 50 நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து அறை வாய் குறும் துணி அயில் உளி பொருத கை புனை செப்பம் கடைந்த மார்பின் செய் பூ கண்ணி செவி முதல் திருத்தி நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த 55 மகாஅர் அன்ன மந்தி மடவோர் நகாஅர் அன்ன நளி நீர் முத்தம் வாள் வாய் எருந்தின் வயிற்று அகத்து அடக்கி தோள் புறம் மறைக்கும் நல்கூர் நுசுப்பின் உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற 60 கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும் தத்து நீர் வரைப்பின் கொற்கை கோமான் தென் புல காவலர் மருமான் ஒன்னார் மண் மாறு கொண்ட மாலை வெண்குடை கண் ஆர் கண்ணி கடும் தேர் செழியன் 65 தமிழ் நிலைபெற்ற தாங்க அரு மரபின் மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று நறு நீர் பொய்கை அடைகரை நிவந்த துறு நீர் கடம்பின் துணை ஆர் கோதை ஓவத்து அன்ன உண்துறை மருங்கில் 70 கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின் வரு முலை அன்ன வண் முகை உடைந்து திரு முகம் அவிழ்ந்த தெய்வ தாமரை ஆசு இல் அங்கை அரக்கு தோய்ந்து அன்ன சே இதழ் பொதிந்த செம்பொன் கொட்டை 75 ஏம இன் துணை தழீஇ இறகு உளர்ந்து காமரு தும்பி காமரம் செப்பும் தண் பணை தழீஇய தளரா இருக்கை குண புலம் காவலர் மருமான் ஒன்னார் ஓங்கு எயில் கதவம் உருமு சுவல் சொறியும் 80 தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தட கை நாடா நல் இசை நல் தேர் செம்பியன் ஓடா பூட்கை உறந்தையும் வறிதே அதாஅன்று வானம் வாய்த்த வளம் மலை கவாஅன் கான மஞ்ஞைக்கு கலிங்கம் நல்கிய 85 அரும் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் பெரும் கல் நாடன் பேகனும் சுரும்பு உண நறு வீ உறைக்கும் நாக நெடு வழி சிறு வீ முல்லைக்கு பெரும் தேர் நல்கிய பிறங்கு வெள் அருவி வீழும் சாரல் 90 பறம்பின் கோமான் பாரியும் கறங்கு மணி வால் உளை புரவியொடு வையகம் மருள ஈர நன் மொழி இரவலர்க்கு ஈந்த அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடு வேல் கழல் தொடி தட கை காரியும் நிழல் திகழ் 95 நீல நாகம் நல்கிய கலிங்கம் ஆல் அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த சாவம் தாங்கிய சாந்து புலர் திணி தோள் ஆர்வ நன் மொழி ஆயும் மால் வரை கமழ் பூ சாரல் கவினிய நெல்லி 100 அமிழ்து விளை தீம் கனி ஔவைக்கு ஈந்த உரவு சினம் கனலும் ஒளி திகழ் நெடு வேல் அரவ கடல் தானை அதிகனும் கரவாது நட்டோர் உவப்ப நடை பரிகாரம் முட்டாது கொடுத்த முனை விளங்கு தட கை 105 துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடும் கோட்டு நளி மலை நாடன் நள்ளியும் நளி சினை நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்து குறும் பொறை நல் நாடு கோடியர்க்கு ஈந்த காரி குதிரை காரியொடு மலைந்த 110 ஓரி குதிரை ஓரியும் என ஆங்கு எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள் எழுவர் பூண்ட ஈகை செம் நுகம் விரி கடல் வேலி வியலகம் விளங்க ஒருதான் தாங்கிய உரன் உடை நோன் தாள் 115 நறு வீ நாகமும் அகிலும் ஆரமும் துறை ஆடு மகளிர்க்கு தோள் புணை ஆகிய பொரு புனல் தரூஉம் போக்கு அரு மரபின் தொல் மா இலங்கை கருவொடு பெயரிய நன் மா இலங்கை மன்னருள்ளும் 120 மறு இன்றி விளங்கிய வடு இல் வாய் வாள் உறு புலி துப்பின் ஓவியர் பெருமகன் களிற்று தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடி பிடி கணம் சிதறும் பெயல் மழை தட கை பல் இய கோடியர் புரவலன் பேர் இசை 125 நல்லியக்கோடனை நயந்த கொள்கையொடு தாங்க அரு மரபின் தன்னும் தந்தை வான் பொரு நெடு வரை வளனும் பாடி முன் நாள் சென்றனம் ஆக இ நாள் திறவா கண்ண சாய் செவி குருளை 130 கறவா பால் முலை கவர்தல் நோனாது புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில் காழ் சோர் முது சுவர் கணம் சிதல் அரித்த பூழி பூத்த புழல் காளாம்பி ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல் 135 வளை கை கிணைமகள் வள் உகிர் குறைத்த குப்பை வேளை உப்பு இலி வெந்ததை மடவோர் காட்சி நாணி கடை அடைத்து இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும் அழி பசி வருத்தம் வீட பொழி கவுள் 140 தறுகண் பூட்கை தயங்கு மணி மருங்கின் சிறு கண் யானையொடு பெரும் தேர் எய்தி யாம் அவணின்றும் வருதும் நீயிரும் இவண் நயந்து இருந்த இரும் பேர் ஒக்கல் செம்மல் உள்ளமொடு செல்குவிர் ஆயின் 145 அலை நீர் தாழை அன்னம் பூப்பவும் தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும் கடும் சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும் நெடும் கால் புன்னை நித்திலம் வைப்பவும் கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர 150 பாடல் சான்ற நெய்தல் நெடு வழி மணி நீர் வைப்பு மதிலொடு பெயரிய பனி நீர் படுவின் பட்டினம் படரின் ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்து அன்ன வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின் 155 கரும் புகை செம் தீ மாட்டி பெரும் தோள் மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து நுதி வேல் நோக்கின் நுளைமகள் அரித்த பழம்படு தேறல் பரதவர் மடுப்ப கிளை மலர் படப்பை கிடங்கில் கோமான் 160 தளை அவிழ் தெரியல் தகையோர் பாடி அறல் குழல் பாணி தூங்கியவரொடு வறல் குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுவிர் பைம் நனை அவரை பவழம் கோப்பவும் கரு நனை காயா கண மயில் அவிழவும் 165 கொழும் கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும் செழும் குலை காந்தள் கை விரல் பூப்பவும் கொல்லை நெடு வழி கோபம் ஊரவும் முல்லை சான்ற முல்லை அம் புறவின் விடர் கால் அருவி வியன் மலை மூழ்கி 170 சுடர் கால் மாறிய செவ்வி நோக்கி திறல் வேல் நுதியின் பூத்த கேணி விறல் வேல் வென்றி வேலூர் எய்தின் உறு வெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை எயிற்றியர் அட்ட இன் புளி வெம் சோறு 175 தேமா மேனி சில் வளை ஆயமொடு ஆமான் சூட்டின் அமைவர பெறுகுவிர் நறும் பூ கோதை தொடுத்த நாள் சினை குறும் கால் காஞ்சி கொம்பர் ஏறி நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து 180 புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல் வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை முள் அரை தாமரை முகிழ் விரி நாள் போது கொங்கு கவர் நீல செம் கண் சேவல் மதி சேர் அரவின் மான தோன்றும் 185 மருதம் சான்ற மருத தண் பணை அந்தணர் அருகா அரும் கடி வியல் நகர் அம் தண் கிடங்கின் அவன் ஆமூர் எய்தின் வலம் பட நடக்கும் வலி புணர் எருத்தின் உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை 190 பிடி கை அன்ன பின்னு வீழ் சிறு புறத்து தொடி கை மகடூஉ மகமுறை தடுப்ப இரும் காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு கவை தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர் 195 எரி மறிந்து அன்ன நாவின் இலங்கு எயிற்று கருமறி காதின் கவை அடி பேய்மகள் நிணன் உண்டு சிரித்த தோற்றம் போல பிணன் உகைத்து சிவந்த பேர் உகிர் பணை தாள் அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப 200 நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர் சேய்த்தும் அன்று சிறிது நணியதுவே பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும் அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் கடவுள் மால் வரை கண்விடுத்து அன்ன 205 அடையா வாயில் அவன் அரும் கடை குறுகி செய்ந்நன்றி அறிதலும் சிற்றினம் இன்மையும் இன் முகம் உடைமையும் இனியன் ஆதலும் செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த அஞ்சினர்க்கு அளித்தலும் வெம் சினம் இன்மையும் 210 ஆண் அணி புகுதலும் அழி படை தாங்கலும் வாள் மீக்கூற்றத்து வயவர் ஏத்த கருதியது முடித்தலும் காமுறப்படுதலும் ஒரு வழி படாமையும் ஓடியது உணர்தலும் அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த 215 அறிவு மடம்படுதலும் அறிவு நன்கு உடைமையும் வரிசை அறிதலும் வரையாது கொடுத்தலும் பரிசில் வாழ்க்கை பரிசிலர் ஏத்த பல் மீன் நடுவண் பால் மதி போல இன் நகை ஆயமோடு இருந்தோன் குறுகி 220 பைம் கண் ஊகம் பாம்பு பிடித்து அன்ன அம் கோட்டு செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவின் மணி நிரைத்து அன்ன வனப்பின் வாய் அமைத்து வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து கான குமிழின் கனி நிறம் கடுப்ப 225 புகழ் வினை பொலிந்த பச்சையொடு தேம் பெய்து அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்கு புரி நரம்பின் பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்வி கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக நூல் நெறி மரபின் பண்ணி ஆனாது 230 முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும் இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும் ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும் தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும் நீ சில மொழியா அளவை மாசு இல் 235 காம்பு சொலித்து அன்ன அறுவை உடீஇ பாம்பு வெகுண்டு அன்ன தேறல் நல்கி கா எரியூட்டிய கவர் கணை தூணி பூ விரி கச்சை புகழோன் தன்முன் பனிவரை மார்பன் பயந்த நுண் பொருள் 240 பனுவலின் வழாஅ பல் வேறு அடிசில் வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த இளம் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து விளங்கு பொன் கலத்தில் விரும்புவன பேணி ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி 245 திறல் சால் வென்றியொடு தெவ்வு புலம் அகற்றி விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி நயவர் பாணர் புன்கண் தீர்த்த பின் வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு பருவ வானத்து பால் கதிர் பரப்பி 250 உருவ வான் மதி ஊர்கொண்டு ஆங்கு கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடும் சினை ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல 255 உள் அரக்கு எறிந்த உருக்குறு போர்வை கரும் தொழில் வினைஞர் கைவினை முற்றி ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடை பாகரொடு மா செலவு ஒழிக்கும் மதன் உடை நோன் தாள் வாண் முக பாண்டில் வலவனொடு தரீஇ 260 அன்றே விடுக்கும் அவன் பரிசில் மென் தோள் துகில் அணி அல்குல் துளங்கு இயல் மகளிர் அகில் உண விரித்த அம் மென் கூந்தலின் மணி மயில் கலாபம் மஞ்சு இடை பரப்பி துணி மழை தவழும் துயல் கழை நெடும் கோட்டு 265 எறிந்து உரும் இறந்த ஏற்று அரும் சென்னி குறிஞ்சி கோமான் கொய் தளிர் கண்ணி செல் இசை நிலைஇய பண்பின் நல்லியக்கோடனை நயந்தனிர் செலினே |
மணிகளையுடைய மலையே மூங்கில்(போன்ற) தோள்களாகவுள்ள பெரிய நிலமகளின் அழகிய முலையின்கண் கிடந்து அசைந்துநிற்கும் முத்துமாலை போல, ஓடுகின்ற நீரால் வருந்தின, தொலைவினின்றும் வருகின்ற, காட்டாற்றின் இடிந்த கரையில் உள்ள மணமிக்க பொழிலிடத்தே குயில்கள் (அலகால்)குடைந்து உதிர்த்த புதிய பூக்களாகிய வாடலைச் சூடி, (தம்)இடமெல்லாம் அறல்பட்டு, 5 மயிர் விரித்ததை ஒத்த கருநிறத்தைக் கொண்ட நுண்ணிய கருமணல், இரும்பின் வெப்பம் போன்ற தன்மைத்தாகி, மெல்ல நடந்து சென்று, வெயிலின் வெப்பம் ஏறிய வெவ்விய பரல்கள் கால்களைக் கிழிப்ப, இளவேனிற்பருவம் நிலைபெற்ற வெம்மையான நிலைக்கு அடுத்த(முதுவேனிற்)காலத்தில் காலை ஞாயிற்றின் கதிர் வெம்மையைச் செலுத்துதலால், 10 பாலைத் தன்மை நிலைபெற்றமையால் தோன்றிய பாலையாகிய, நீண்ட வழியையுடைய, காட்டு நிலத்தின் தொடக்கத்திலுள்ள (கடப்ப)மரத்தின் கோடுகோடான நிழலில் தங்கி - மெல்லிதாய் வீழ்ந்து தாழ்கின்ற மழையின் எழிலினைக்கொண்டு, மருட்சியடைந்து, எண்ணெயினால் குழைந்து இருண்ட கூந்தலினையும்; கூந்தலைப் போன்று, (நீல)மணி போன்ற கண்களையுடைய தோகைகளை விரித்து, பலவும் ஒருசேர்ந்த 15 மயில்கள் - அம்மயில்கள் (நாணி)மறைந்துகொள்ளும் மென்மையினையும்; ஓடியிளைத்து வருந்துகின்ற நாயின் நாக்கினுடைய நல்ல அழகினை(த் தனதாக) வருத்தி, ஒளிரும் அணிகலன்கள் (இல்லாது)பொலிவழிந்த அடியினையும்; அடியினோடே தொடர்புடைத்தாய், இழுக்கப்பட்டு நிலத்தில் படியும் கரிய பெண்யானையின் பெரிய கையைப் போல திரண்டு, ஒருங்கே நெருங்கி இணைந்த தொடைகளையும்; தொடை போன்று 20 பெருமையையுடைய மலையில் வளரும் வாழை - அவ்வாழையின் பூவைப்போல் பொலிவு பெற்ற மயிர்முடிப்பினையும்; அம் மயிரினில்(சூடுகின்ற) செறிந்த கிளைகளையுடைய வேங்கை மரத்தின் அன்றைய மலர் (என நினைத்து)விரும்பி, கிளர்ச்சியுற்ற வண்டுகள் ஒலிக்கும் பூந்தாது போன்ற தேமல்களையும்; அப் பூந்தாதுகள் சிதறிக்கிடக்கும் புதிதாய்ப் பூத்தலையுடைய கோங்கின் ஒளிரும் மொட்டுக்களை இகழ்ந்து, 25 அணிகளுக்குள் ஒடுங்கிக்கிடக்கும் வெம்மையான முலைகளையும்; (அம்)முலைகளைப் போன்ற பெரிய குலையினையுடைய பனை வளர்த்த நுங்கில் உள்ள இனிய சுவைநீர் (தன் சுவையால்)தாழ்ந்துபோகும் (ஊறலையுடைய)பற்களையும்; அப்பற்களைப் போல (கஞ்சங்)குல்லையாகிய அழகிய முல்லை நிலத்தில் குவிந்த அரும்புகள் மலர்ந்த முல்லை சூடுதற்கமைந்த கற்புடைமையும்; மெல்லிய இயல்பினையும்; 30 மடப்பத்தையுடைய மான்(போலும்) பார்வையையும்; ஒளியுள்ள நெற்றியையும் (உடைய)விறலியரின் நடையால் இளைத்து ஓய்ந்த நல்ல மெல்லிய சிறிய அடியினை கல்வி நிரம்பாத இளைஞர் மெத்தென்று வருடிநிற்க, பொன்னை வார்த்த (கம்பியினை)ஒத்த முறுக்கு அடங்கின நரம்பின் இனிய ஓசையையுடைய சிறிய யாழை இடப்பக்கத்தே தழுவி, 35 நட்டபாடை என்னும் பண் முற்றுப்பெற்ற இனிமை தெரிகின்ற பாலை என்னும் பண்ணை இயக்குதல் வல்ல பாணனாகிய மகன் முறைமையை அறிந்து இயக்க, (புரவலர் இல்லாததால் பரிசிலர்)இயங்காத உலகத்தில் புரவலரை விரும்பி, (தன்னை)வெறுத்தல் மிக்க வருத்தத்தோடு கூடின வறுமை உன்னைக் கொண்டு போகையால், (வழி)வருத்தம் தீர்ந்திருந்த பேரறிவு வாய்க்கப்பெற்ற இரவலனே, 40 கொழுத்த மீன் வெட்டுப்படும்படி நடந்து, வளவிய இதழையுடைய செங்கழுநீர்ப்பூவைத் தின்ற பெரிய வாயையுடைய எருமை பசிய மிளகுக் கொடி படர்ந்த பலாமரத்தின் நிழலில், மஞ்சளின் மெல்லிய இலை தனது மயிரையுடைய முதுகினைத் தடவிநிற்ப, முற்றாத இளைய தேன் மணக்கும்படி, மென்றவாறு நடந்து, 45 காட்டு மல்லிகையாகிய பள்ளியில் துயில்கொள்ளும் மேற்றிசைக்கண்ணுள்ள நிலத்தைக் காக்கும் சேரர் குடியிலுள்ளோன் - பகைவருடைய வட நாட்டு இமயமலையின் மேல் வளைந்த வில்(சின்னத்தைப்) பொறித்த கணையத்திற்கு மாற்றான திணிந்த தோளினையும், கடக்கின்ற தேரினையும் உடைய குட்டுவனுடைய (பெருகி)வரும் நீரும் (கோபுர)வாயிலும் உடைய வஞ்சியை(யே) தரும் பரிசிலும் சிறிதாயிருக்கும்; அதுவன்றியும் 50 தேனை(ப் பூக்கள் தம்மிடத்திலிருந்து)துளிக்கும் இளமை முதிர்ந்த நுணா மரத்தின் வெட்டுண்ட வாயையுடைய குறிய மரக்கட்டையை கூர்மையான உளிகள் (உள்ளேசென்று)குடைந்த கைத்தொழில் திறத்தால் செம்மைசெய்து கடைந்த (மாலையணிந்த)மார்பினையுடையதும், (நெட்டி என்ற தாவரத்தின் தண்டால்)செய்த பூவின் மாலையை செவியடியில் (நெற்றிமாலையாகச்) சூட்டப்பட்டதும், வலிமையுள்ள எருதுகளையுடைய உப்பு வாணிகரின் வண்டி ஒழுங்கோடு வந்ததும், 55 (அவர்களின்)பிள்ளைகளைப் போன்றதும் ஆன மந்தி, மடப்பத்தையுடைய மகளிர் சிரிப்பு(ப் பல்) போன்ற செறிந்த நீர்மையுடைய முத்தினை, வாளின் வாய் போலும் வாயையுடைய கிளிஞ்சிலின் வயிற்றுக்குள் இட்டுப்பொதிந்து, தளர்ந்த இடையினையுடைய, தோளையும் முதுகையும் மறைக்கின்ற அசைகின்ற இயல்புடைய ஐந்து பகுதியாகிய கூந்தலினையுடைய உப்பு வாணிகத்தியர் பெற்ற, 60 விளங்குகின்ற அணிகலன்களையுடைய, பிள்ளைகளுடன் கிலுகிலுப்பையாக்கி விளையாடும் தத்திவரும் நீரை(த் தனக்கு) எல்லையாகவுடைய கொற்கை அரசனும்; தென்னாட்டின் காவலருடைய குடியிலுள்ளானும்; பகைவருடைய நிலத்தை மாறுபாட்டால் கைக்கொண்ட, (முத்து)மாலை அணிந்த வெண்கொற்றக்குடையினையும், கண்ணுக்கு அழகான கண்ணியினையும் உடையானும் ஆகிய கடிய தேரினையுடைய பாண்டியனின், 65 தமிழ் வீற்றிருந்த, (தானே)தாங்க முடியாத பாரம்பரியத்தையுடைய, மகிழ்ச்சியைத் தோற்றுகின்ற தெருவினையுடைய மதுரை(யைத் தரும் கொடை)யும் சிறிதே; அதுவன்றியும், நறிய பொய்கையின் (இட்டு)அடைத்த கரையில் நின்று வளர்ந்த செறிந்த நீர்மையையுடைய கடம்பின் இணைதல் நிறைந்த மாலை, ஓவியம் போன்ற (அழகுடைய)(நீர்)உண்ணும் துறையின் பக்கத்தே 70 (சிவப்புச் சாயமாகப் பயன்படுத்தும்)தம்பலப்பூச்சியை ஒத்த தாதுக்கள் சேர்ந்து உதிர்தலால், எழுகின்ற (பெரிய)முலையை ஒத்த வளவிய முகை நெகிழ்ந்து, அழகிய முகம் (போல)மலர்ந்த தெய்வத் (தன்மையுடைய)தாமரையிடத்து, அழுக்கில்லாத உள்ளங்கையில் சாதிலிங்கம் தோய்ந்ததைப் போன்ற சிவந்த இதழ் சூழ்ந்த செம்பொன்(னால் செய்ததைப்போன்ற) பொகுட்டின்மிசை, 75 (தன் உயிர்க்குக்)காவலாகிய இனிய பெடையைத் தழுவி, சிறகுகளை அசைத்துக்கொண்டு, விருப்பம் மருவின தும்பி சீகாமரம் (என்னும் பண்ணை)இசைக்கும் குளிர்ந்த வயலையுடைய மருத நிலம் சூழ்ந்த சோர்வுறாத குடியிருப்பினையுடைய கிழக்கு நாடுகளின் காவலருடைய குடியிலுள்ளான் - பகைவரின் உயர்ந்த மதிலின் கதவில் உருமேறு (தன்)கழுத்தைத் (திணவால்)தேய்க்கும் 80 (வானத்தே)தொங்கும் கோட்டையை அழித்த, தொடி விளங்கும் பெருமையையுடைய கையினையும், (தான்)விரும்பித் தேடாத நல்ல புகழினையும், நல்ல தேரினையும் உடைய சோழன் - அவனது (தன் குடிகள் தன்னைவிட்டு)அகலோம் என மேற்கொண்ட உறுதியையும் உடைய உறந்தையும் சிறிதே; அதுவன்றியும், மழை பொய்க்காத செல்வத்தையுடைய மலைப்பக்கத்துக் காட்டு மயிலுக்குத் தன் போர்வையைத் தந்த 85 அரிய வலிமையுடைய வடிவமுள்ள ஆவியர் குடியிற் பிறந்த பெருமகன், பெரிய மலை நாட்டையுடைய பேகனும்; வண்டுகள் உண்ணும்படி நறிய பூக்கள் (தேனைத்)துளிக்கும் சுரபுன்னை(யை உடைத்தாகிய) நெடிய வழியிலிருந்த சிறிய பூக்களையுடைய முல்லைக் கொடிக்குத் தனது பெரிய தேரினைக் கொடுத்த, மிகுகின்ற வெள்ளிய அருவி குதிக்கும் மலைச்சரிவுகளையுடைய 90 பறம்பின் அரசன் பாரியும்; ஒலிக்கும் மணியினையும், வெள்ளிய தலைச்சிறகுகளையும் உடைய குதிரையோடு, (தன்)நாட்டையும், (ஏனையோர்)வியக்கும்படி அருளினையுடைய நன்றாகிய மொழியினால் இரவலர்க்குக் கொடுத்தருளியவனும் கொற்றவை வீற்றிருக்கும் அச்சந்தோன்றும் நெடிய வேலினையும் இறுக்குகின்ற தொடி(யினை அணிந்த), பெருமை மிக்க கையினையும் உடைய காரியும்; ஒளி விளங்கும் 95 நீலமணியினையும், தனக்கு நாகம் கொடுத்த ஆடையினையும், ஆலின் கீழ் இருந்த இறைவனுக்கு விரும்பியவனாய் கொடுத்தவனும், வில்லை எடுத்த சந்தனம் பூசிப் புலரும் திண்ணிய தோளினையும், ஈடுபாடுள்ள நல்ல சொல்(லினையும் உடைய) ஆய் என்னும் வள்ளலும்; பெருமையுடைய மலையில் கமழும் பூக்களையுடைய பக்க மலையில் (நின்று)அழகுபெற்ற நெல்லியின் 100 அமிழ்தின் தன்மைகொண்ட இனிய பழத்தை ஔவைக்குக் கொடுத்தவனும், எப்பொழுதும் மாறாத சினம் நின்றெரியும், ஒளியால் விளங்கும் நெடிய வேலினையும், ஆரவாரமுள்ள கடல்(போலும்) படையினையும் உடையவனும் ஆகிய அதிகமானும்; மறையாமல், நட்புச் செய்தோர் மனமகிழும்படி, வாழ்க்கையை நடத்த வேண்டுவனவற்றைக் குறையாமல் கொடுத்தவனும், போர்முனையில் விளங்கும் பெருமையுடைய கையினையும், 105 சொட்டும் மழை (எப்போதும்)பெய்யும் (உயர்ச்சியால்)காற்றுத் தங்கும் நெடிய சிகரங்களையுடைய செறிந்த மலைநாட்டையும் உடைய நள்ளியும்; செறிந்த கொம்புகளிடத்தே நறிய பூக்கள் நெருக்கமாக அமைந்த இளமை முதிர்ந்த சுரபுன்னையையும், சிறிய குன்றுகளையும் உடைய நல்ல நாடுகளைக் கூத்தர்களுக்குக் கொடுத்தவனும், காரியென்னும் குதிரையையுடைய காரியோடு போர்செய்தவனும் , 110 ஓரியென்னும் குதிரையையுடைய ஓரியும்; என்று கூறப்பட்ட அக்காலத்தே, (தம்)மேலே வருகின்ற போர்களைக் கடந்த கணையத்துக்கு மாற்றான திணிந்த தோளினையுடைய எழுவரும், மேற்கொண்ட கொடையாகிய செவ்விய பாரத்தை, பரந்த கடலாகிய வேலியை உடைய உலகம் (எல்லாம்)விளங்கும்படி ஒருவனாகத் தானே(தனியொருவனாகப்) பொறுத்த வலிமையையுடைய முயற்சியினையுடையவனும், 115 நறிய பூக்களையுடைய சுரபுன்னையையும், அகிலையும் சந்தனத்தையும் (நீராடும்)துறையில் குளிக்கும் மகளிருடைய தோள்களுக்குத் தெப்பமாகும்படி (கரையை)மோதுகின்ற நீர் கொணர்ந்து தருகின்ற அழித்தற்கு அரிய முறைமையினையுடைய, பழைய, பெருமை மிக்க இலங்கையின் பெயரை (தான்)தோன்றிய காலத்திலேயே (தனக்குப்)பெயராகவுடைய நல்ல பெருமையையுடைய இலங்கை(யை ஆண்ட) அரசர் பலருள்ளும், 120 குற்றமின்றி விளங்கிய, பழி இல்லாத, (தன் தொழில் நன்கு)வாய்க்கும் வாளினையுடைய மிக்க புலி(போன்ற) வலிமையினையும் உடைய ஓவியர் குடியில் தோன்றியவனும், யானை(யைச் செலுத்துதலால் உண்டான) தழும்பு கிடந்த, வீரக்கழல் அலையாடும், திருத்தமான அடியினையும், பிடியானைத் திரளை(ப் பலர்க்கும்)வழங்கும் (ஓயாது)பெய்தலையுடைய மழை (போன்ற)பெரிய கையினையும் உடையவனும், பல்வேறு இசைக்கருவிகளையுடைய கூத்தரின் புரவலனும் ஆகிய பெரிய புகழையுடைய 125 நல்லியக்கோட(ன் என்னும் மன்ன)னைக் காண்பதற்கு விரும்பிய கொள்கையுடன் (பிறரால்)பொறுத்தற்கரிய (குடிப்பிறந்தோர்க்குரிய)முறைமையினையுடைய தன்னையும், (அவன்)தந்தையுடைய வானத்தைத் தொடும் நெடிய மலையின்கண் உள்ள செல்வத்தையும் பாடி, சில நாட்களுக்கு முன்னே யாம் சென்றேமாக - இன்று, திறக்காத கண்ணையுடைய சாய்ந்த செவியினையுடைய குட்டி, 130 கறக்கப்படாத பாலினையுடைய முலையை உண்ணுதலை(த் தன் பசி மிகுதலால்) பொறுத்தலாற்றாது, ஈன்றணிமையையுடைய நாய் ஒலியெழுப்பும் புன்மையுடைய அடுக்களையில், (ஊடு)கழிகள் (ஆக்கையற்று)விழுகின்ற பழைய சுவரிடத்தெழுந்த திரளான கரையான் அரித்துக் குவித்த மண்துகள்களில் பூத்தன - உட்துளை(கொண்ட) காளான்: மெலிவடையச்செய்யும் பசியால் வருந்திய, ஒடுங்கி ஒட்டிப்போன, வயிற்றினையும், 135 வளையல்(அணிந்த) கையினையும் உடைய கிணைமகள் பெரிய நகத்தால் கிள்ளின குப்பை(யில் முளைத்த) கீரை உப்பில்லாமல் வெந்ததை, புறங்கூறுவோர் காணுதற்கு நாணி, தலை வாயிலை அடைத்து, கரிய பெரிய சுற்றத்துடன் ஒன்றாக இருந்து தின்னும், அழிக்கின்ற பசியின் வருத்தங்கள் கெடுமாறு; (மதம்)வீழ்கின்ற கதுப்பினையும், 140 கடுகக் கொல்லுதலை மேற்கோளாகக் கொண்டதும், அலையாடும் மணியை உடைய பக்கத்தினையும் சிறிய கண்ணையும் உடைய யானையுடன் பெரிய தேரையும் பெற்று யாம் அவ்விடத்தினின்றும் வருகின்றோம், நீங்களும் இவ்விடத்தே உம்மை விரும்பி இருக்கின்ற கரிய பெரிய சுற்றத்தோடேயும், பெருமை(கொண்ட) நெஞ்சோடேயும் (அவ் வள்ளல்பால்)செல்வீராயின், 145 அலையும் நீர்(கடற்கரையில் இருக்கும்)தாழை அன்னம்(போலே) பூக்கவும், (இளவேனிற்காலத்தின்)முதல் நாளில் செருந்தி (பூத்து)பொன்னோ என்று மருளப் பண்ணவும், முதல் சூலையுடைய கழிமுள்ளி ஒளியையுடைய நீலமணிபோலப் பூக்கவும், நெடிய தாளையுடைய புன்னை நித்திலம் (போல அரும்புகள்) வைக்கவும், கரையிடத்துள்ள வெண்மையான மணற்பரப்பில் கடல் பரந்து ஏற, 150 (புலவர்)பாடுதற்கு அமைந்த நெய்தல் நிலத்தே கிடந்த நீண்ட வழியில், (நீல)மணி (போலும்)கழி (சூழ்ந்த)ஊர்களையுடையதும், மதிலின் பெயர்கொண்ட, குளிர்ந்த நீர் மிக்க குளங்களையுடைத்தாகிய, (எயில்)பட்டினத்தே செல்வீராயின் - உயர்ந்து நிற்றலையுடைய ஒட்டகம் (படுத்து)உறங்கிக் கிடந்ததைப் போல, மிகுகின்ற அலை கொண்டுவந்த மணத்தையுடைய (அகில்)மர விறகால் 155 கரிய புகையையுடைய சிவந்த நெருப்பை மூட்டி, பெரிய தோளினையும், திங்கள் ஏக்கமுறுகின்ற களங்கமற்ற அமைதியினையுடைய முகத்தினையும், (கூர்)முனையுள்ள வேல்(போன்ற) பார்வையினையும் உடைய நுளைமகளால் அரிக்கப்பட்ட, பழையதாகிய (களிப்பு மிகுகின்ற)கள்ளின் தெளிவினைப் பரதவர் (கொணர்ந்து உம்மை)ஊட்ட, கிளைகளில் பூக்களையுடைய தோட்டங்களையுடைய கிடங்கில் (என்னும் ஊர்க்கு)அரசனாகிய 160 அரும்பு அவிழ்ந்த மாலையையுடைய அழகுடையோனைப் பாடி, தாள அறுதியை உடைய குழலோசையின் தாளத்திற்கேட்ப ஆடின மகளிரோடே, உலர்ந்த குழல்மீனைச் சுட்டதனோடு இடங்கள்தோறும் பெறுவீர்: பசிய அரும்புகளையுடைய அவரை பவழம்(போல் பூக்களை முறையே) தொடுக்கவும், கரிய அரும்புகளையுடைய (காயாக்கள்)கூட்டமான மயில்களின் (கழுத்துகளைப் போலப்)பூப்பவும், 165 கொழுவிய கொடியினையுடைய முசுட்டை கொட்டம்(போலும் பூவைத் தன்னிடத்தே) கொள்ளவும், செழுமையான குலையினையுடைய காந்தள் கைவிரல் (போலப்)பூக்கவும், கொல்லையிலுள்ள நெடிய வழியில் (இந்திர)கோபம்(என்னும் தாம்பலப்பூச்சி) ஊர்ந்து செல்லவும், முல்லை ஒழுக்கம் பொருந்திய முல்லை(க்கொடி படர்ந்த)அழகிய காட்டில், முழைஞ்சுகளில் குதிக்கும் அருவியினையுடைய பெரிய மலையில் மறைந்து, 170 ஞாயிற்றின் (ஒளிச்)சுடர்கள் மாறிப்போன அந்திக்காலத்தைப் பார்த்து, வெற்றி (தரும்)வேலின் நுனி போலப் பூத்த கேணியையுடைய வலிமை மிக்க வேலால் வெற்றி (பொருந்திய)வேலூரைச் சேரின் - மிகுகின்ற வெயிலுக்கு (உள் உறைவோர்)வருந்திய வெப்பம் விளங்குகின்ற குடி(யில் இருக்கின்ற) எயிற்றியர் ஆக்கிய இனிய புளிங்கறியிட்ட வெண்மையான சோற்றை, 175 தேமாவின் தளிர்(போலும்) மேனி(யையும்), சிலவாகிய வளை(யினையும் உடைய நும்)மகளிரின் திரளோடு ஆமானின் சூட்டிறைச்சியோடு (நும் பசி தீர)மனநிறைவடையப் பெறுகுவீர், நறிய பூக்கள் மாலை தொடுத்த(தைப் போன்று மலர்ந்துள்ள) பருவம் வாய்த்த கொம்புகளையும், குறிய தாளினையும் உடைய காஞ்சிமரத்தின் கொம்பில் ஏறி, (தான்)நிலையாக இருத்தல் அரிதாகிய குளத்தை(க் கூர்ந்து) பார்த்து, நெடும்பொழுதிருந்து 180 புலால் நாறும் கயலை(முழுகி) எடுத்த பொன்(னிறம் போலும்) வாயையுடைய (நீல)மணி(போன்ற) மீன்கொத்தியின் பெரிய நகம் கிழித்த வடு அழுந்தின பசிய இலையினுடைய முள்(இருக்கும்) தண்டினை(க்கொண்ட) தாமரையின் அரும்பு விரிந்த அன்றைய பூவின் தேனை நுகர்கின்ற நீல நிறத்தினையும் சிவந்த கண்ணையும் உடைய வண்டொழுங்கு திங்களைச் சேர்கின்ற (கரும்)பாம்பை ஒப்பத் தோன்றும், 185 மருத ஒழுக்கம் நிலைபெறுவதற்கமைந்த மருதநிலத்தின் குளிர்ந்த வயலினையுடையதும், சான்றோர்(எண்ணிக்கை) குறைவுபடாததும், அரிய காவலினையுடையதும், அகன்ற மனையை உடையதும் அழகிய குளிர்ந்த அகழியை உடையதும் ஆகிய, அவ்வள்ளலின் ஆமூரைச் சேர்திராயின் - வெற்றியுண்டாக நடக்கும், (இழுத்தற்குரிய)வலி பொருந்திய கழுத்தினால் மனஉறுதி கொண்ட வலிமையான எருத்தினையுடைய உழவரின் தங்கையாகிய, 190 பிடியின் கையை ஒத்த பின்னல் வீழ்ந்து கிடக்கின்ற சிறிய முதுகினையும் தொடி(அணிந்த) கையினையும் உடைய பெண், தாய் பிள்ளை உறவு (கொண்டு)தடுக்க, கரிய வயிரத்தையுடைய உலக்கையின் பூணினையுடைய முகத்தைத் தேயப்பண்ணின குற்றுதல் நன்கமைந்த அரிசி(யாலாக்கின) உருண்டையாக்கிய வெண்மையான சோற்றை கவைத்த காலினையுடைய நண்டின் கலவையோடு பெறுவீர், 195 தீச்சுவாலை தலைகீழானது போன்ற நாவினையும், ஒளிரும் பற்களையும், வெள்ளாட்டு(க் காதினைப்போன்ற) காதுகளையும், பிளந்த பாதங்களையும் உடைய பேய்மகள் நிணத்தை தின்று சிரிக்கின்ற தோற்றத்தைப் போன்று, பிணங்களை(க் காலால்) இடறிச் சிவந்த பெரிய நகங்களையும், பெருமையுடைய கால்களையும் உடைய தலைமைச் சிறப்புடைய யானைகளின் (மத)அருவி (எழுந்த)தூசியை அணைத்துவிடுவதால் 200 புழுதி அடங்கின தெருவினையுடைய, அவ்வள்ளலின் விழா நடக்கின்ற பழைய ஊர்தானும், தூரமானதும் அன்று, சிறிது அருகிலுள்ளதே, கிணைப்பொருநர்களுக்கோ, புலமையோர்க்கோ, அரிய மறை (கற்றுணர்ந்த)நாவினையுடைய அறிவுடையோர்க்கோ, கடவுள் - பெருமையுடைய (மேரு)மலை வாழும் - (இமைக்காமல்)கண் விழித்திருப்பதைப் போன்ற 205 மூடப்படாத வாயிலையுடைய அவனுடைய (ஏனையோர் புகுதற்கு)அரிய தலைவாயிலை அணுகி - (அவ்வள்ளலின்)செய்ந்நன்றி அறிதலையும், சிற்றினம் சேராமையும், இன்முகம் உடைமையையும், இனியன் ஆதலையும், செறிந்து விளங்குகின்ற சிறப்பினையுடைய (பல கலைகளையும்) அறிந்தோர் புகழ, (தனக்கு)அஞ்சியவர்க்கு அருள்செய்தலையும், கொடிய வெகுளி இல்லாமையையும், 210 (பகை)மறவரின் அணியில் (அச்சமின்றிப்)புகுதலையும், தோற்ற படையினரைப் பொறுத்தலையும், வாள் வலியால் மேலாகிய சொல்லையுடைய மறவர் புகழ, (தான்)எண்ணியதை முடிக்கவல்ல தன்மையையும், பிறரால் விரும்பப்படுதலையும், ஒரே ஒரு வழியில்(மட்டும்)செல்லாமையையும், (பிறர் மனங்களின்)ஓட்டத்தைப் புரிந்துகொள்ளுதலையும், செவ்வரி பொருந்தின அழகிய மையுண்ட கண்ணினையுடைய மகளிர் புகழ, 215 அறிவு குறைந்தோர் முன்னே அறிவு குறைவுபடுதலையும், (அறிஞர் மாட்டு)அறிவு நன்குடைமையும், (புலவரின்)சிறப்பை அறிதலையும், குறையாமல் கொடுத்தலையும்(உள்ள அவனை) பரிசில் (பெற்று வாழும்)வாழ்க்கையையுடைய பரிசிலர் புகழ்ந்துசொல்ல, பல விண்மீன்களுக்கு நடுவிலிருந்த பால்(போலும் ஒளியை உடைய) திங்கள் போன்று, இனிய மகிழ்ச்சியைச் செய்யும் குழாமில் இருந்தவனை அணுகி - 220 பசிய கண்களையுடைய கரிய குரங்கு பாம்பு(த் தலையைப்) பிடித்தாற் போன்று, அழகிய தண்டினிடத்தே செறியச் சுற்றின நெகிழ்ந்தும் இறுகியும் உள்ள வார்க்கட்டினையும்; மணியை நிரைத்து வைத்ததைப் போன்ற அழகினையும்; பொருந்தச் செய்து, வயிறு சேர்ந்து ஒழுங்குபட்ட (தொழில்)வகை அமைந்த குடத்தின் மேல் உள்ள, காட்டுக் குமிழின் பழத்தின் நிறத்தை ஒப்ப, 225 புகழப்படும் தொழில்வினை சிறந்து விளங்கும் போர்வையோடு; தேன் (போன்ற தன்மையைப்)பெய்துகொண்டு, அமிழ்தத்தைப் பொதிந்து துளிக்கின்ற முறுக்கு அடங்கின நரம்பையும் உடைய பாடும் துறைகளெல்லாம் முடியப் பாடுதற்கு, பயன் விளங்குகின்ற இசைகளைத் சுதிசேர்த்தல் கொண்ட இனிய யாழை, (பாலை யாழின்)குரலையே(செம்பாலையை) குரலாகக் கொண்டு இசைநூல் கூறுகின்ற முறையால் இயக்கி, ‘பலகாலும் 230 முதியோர்க்குக் குவித்த கைகளையுடையோய்' என்றும், ‘வீரர்க்குத் திறந்த மார்பை உடையோய்' எனவும், ‘உழவர்க்கு நிழல்செய்த செங்கோலையுடையோய்' எனவும், ‘தேரினையுடையோர்க்கு வெம்மைசெய்த வேலினையுடையோய்' எனவும், நீ சில (புகழினைக்)கூறி முடிக்காத அளவில் - மாசில்லாததும், 235 மூங்கில் ஆடையை உரித்தாற் போன்றதும் ஆகிய உடையினை உடுக்கச்செய்து, பாம்பு சீறியெழுவதைப் போல் (உண்டவரைத் துள்ளி எழச்செய்யும்)கள்ளின் தெளிவைக் கொடுத்து, (காண்ட)வனத்தை நெருப்புண்ணச்செய்த கவர்த்த கணையைக் கொண்ட அம்பறாத்தூணியையுடைய, பூத்தொழில் பரந்த கச்சையினையுடைய புகழ்வாய்ந்தவன்(அருச்சுனன்) அண்ணனும், பனி மலை (இமயம்)(போன்ற)மார்பையுடையவனும் ஆகிய வீமசேனனின் நுணுகிய பொருளையுடைய, 240 மடைநூல் (நெறியில்)தப்பாத பலவிதமான அடிசிலை, ஒளியையுடைய (நீல நிற)வானத்தின்கண் கோளாகிய மீன்கள் சூழ்ந்த இள வெயில் (தரும்)ஞாயிற்றை எள்ளி நகையாடும் தோற்றமுடைய, விளங்குகின்ற பொன்(னாற்செய்த) (உண்)கலத்தில் (நீ)விரும்புவனவற்றை அன்புடன் கொடுத்து, குறைவுபடாத விருப்பத்தால் தானே நின்று உண்ணச்செய்து, 245 வலிமை பொருந்திய வெற்றியோடே பகைவரின் நிலத்தைக் காலிசெய்து, வெற்றி (தரும்)வேலினையுடைய வேந்தரின் உயர்ந்த அரண்களை அழித்து, விரும்பிவந்தவர், பாணர் முதலியோரின் வறுமையையும் போக்கி, (அதன்)பின்னர், (தன்)படைத்தலைவர் கொண்டுவந்த நல்ல நிறத்தினையுடைய பொருள் குவியலோடு, கூதிர்க் காலத்து வானில் பால் (போலும்)ஒளியைப் பரப்பி, 250 (முழு)உருவ அழகுத் திங்கள் ஒளிவட்டம் கொண்டாற் போல, கூரிய சிற்றுளிகள் சென்று செத்திய உருவங்கள் அழுந்தின, வலிமையான, அச்சுக்குடத்தில் (பொருத்திய)ஆரக்கால்களைச் சூழ்ந்த இரும்புப்பட்டையை மேற்புறம் கொண்ட சக்கரத்துடன், மழைத்துளியில் நனைந்த முருக்க மரத்தின் மிக்க உயரத்திற்கு வளர்ந்த நீண்ட கொம்பில் பூங்கொத்து முறுக்கு நெகிழ்ந்த காட்சியைப் போல, 255 உள்ளே சாதிலிங்கம் வழித்த உருக்கமைந்த (மேற்)பலகையினையும், வன் தொழில் செய்யும் தச்சரின் செயல்திறம் நிறைந்து, ஏறிப் பார்த்து (நல்லதெனக்கண்ட)பெயர்பெற்ற, அழகிய நடையை உடைய தேரோடு, குதிரையின் செலவினைப் பின்னே நிறுத்தும் வலிமையுள்ள கால்களையும், ஒளியுள்ள முகத்தினையும் உடைய காளையை (அதனைச் செலுத்தும்)பாகனோடு, கொடுத்து, 260 அன்றே விடுப்பான் அவனுடைய பரிசில் - மெல்லிய தோளினையும், துகில் சூழ்ந்த அல்குலினையும், அசைந்த சாயலினையும் உடைய மகளிர் அகிற்புகையை ஊட்டுதற்கு விரித்த, அழகும் மென்மையும் உடைய, கூந்தலைப் போல் (நீல)மணி (நிறமுடைய)மயிலின் தோகையை வெண்மஞ்சின் இடையே (அணையாக)விரித்து, தெளிந்த முகில் தவழும் அசைகின்ற மூங்கிலையுடைய நெடிய மலையின் சிகரத்தில், 265 உரும் (தான் சேறற்கு)இடித்துச் சென்ற (பிறர்)ஏறுதற்கு அரிதாகிய உச்சியை உடைய, மலைகள் மிக்க நிலத்திற்குத் தலைவனாகியவனான - கொய்யப்பட்ட தளிர் விரவின மாலையினையும், (பிறர்பால் நில்லாதே)போகின்ற புகழ் (தன்னிடத்தே)நிலைபெறக் காரணமான குணத்தையும் உடைய - நல்லியக்கோடனை நீயிர் விரும்பியவராய்ச் செல்வீராயின். |