புறநானூறு

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

      1 - 10             11 - 20               21 - 30             31 - 40             41 - 50            
  51 - 60              61 - 70               71 - 80             81 - 90             91 - 100        
101 - 110         111 - 120         121 - 130         131 - 140       141 - 150        
151 - 160         161 - 170         171 - 180         181 - 190       191 - 200        
201 - 210         211 - 220         221 - 230         231 - 240       241 - 250     
251 - 260         261 - 270         271 - 280         281 - 290       291 - 300        
301 - 310         311 - 320         321 - 330         331 - 340      341 - 350     
351 - 360         361 - 370         371 - 380         381 - 390      391 - 400           
தேவையான   பாடல் எண்   எல்லையைத்  தட்டுக
மூலம்

# 1 கடவுள் வாழ்த்து
கண்ணி கார் நறும் கொன்றை காமர்
வண்ண மார்பின் தாரும் கொன்றை
ஊர்தி வால் வெள் ஏறே சிறந்த
சீர் கெழு கொடியும் அ ஏறு என்ப
கறை மிடறு அணியலும் அணிந்தன்று அ கறை	5
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே
பெண் உரு ஒரு திறம் ஆகின்று அ உரு
தன்னுள் அடக்கி கரக்கினும் கரக்கும்
பிறை நுதல் வண்ணம் ஆகின்று அ பிறை
பதினெண்_கணனும் ஏத்தவும் படுமே		10
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய
நீர் அறவு அறியா கரகத்து
தாழ் சடை பொலிந்த அரும் தவத்தோற்கே
					மேல்
# 2 முரஞ்சியூர் முடிநாகராயர்
மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளி தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்று ஆங்கு			5
ஐம் பெரும் பூதத்து இயற்கை போல
போற்றார் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்
வலியும் தெறலும் அளியும் உடையோய்
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண் தலை புணரி குட கடல் குளிக்கும்		10
யாணர் வைப்பின் நன் நாட்டு பொருந
வான வரம்பனை நீயோ பெரும
அலங்கு உளை புரவி ஐவரோடு சினைஇ
நிலம் தலைக்கொண்ட பொலம் பூ தும்பை
ஈர்_ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழிய		15
பெரும் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய்
பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியா சுற்றமொடு முழுது சேண் விளங்கி
நடுக்கு இன்றி நிலியரோ அத்தை அடுக்கத்து		20
சிறு தலை நவ்வி பெரும் கண் மா பிணை
அந்தி அந்தணர் அரும் கடன் இறுக்கும்
முத்தீ விளக்கில் துஞ்சும்
பொன் கோட்டு இமயமும் பொதியமும் போன்றே
					மேல்
# 3 இரும்பிடர் தலையார்
உவவு மதி உருவின் ஓங்கல் வெண்குடை
நிலவு கடல் வரைப்பின் மண்_அகம் நிழற்ற
ஏம முரசம் இழுமென முழங்க
நேமி உய்த்த நேஎ நெஞ்சின்
தவிரா ஈகை கவுரியர் மருக			5
செயிர் தீர் கற்பின் சே_இழை கணவ
பொன் ஓடை புகர் அணி நுதல்
துன் அரும் திறல் கமழ் கடாஅத்து
எயிறு படை ஆக எயில் கதவு இடாஅ
கயிறு பிணிக்கொண்ட கவிழ் மணி மருங்கில்	10
பெரும் கை யானை இரும் பிடர் தலை இருந்து
மருந்து இல் கூற்றத்து அரும் தொழில் சாயா
கரும் கை ஒள் வாள் பெரும் பெயர் வழுதி
நிலம் பெயரினும் நின் சொல் பெயரல்
பொலம் கழல் கால் புலர் சாந்தின்			15
விலங்கு அகன்ற வியன் மார்ப
ஊர் இல்ல உயவு அரிய
நீர் இல்ல நீள் இடைய
பார்வல் இருக்கை கவி கண் நோக்கின்
செம் தொடை பிழையா வன்கண் ஆடவர்		20
அம்பு விட வீழ்ந்தோர் வம்ப பதுக்கை
திருந்து சிறை வளை வாய் பருந்து இருந்து உயவும்
உன்ன மரத்த துன் அரும் கவலை
நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் அது
முன்னம் முகத்தின் உணர்ந்து அவர்		25
இன்மை தீர்த்தல் வன்மையானே
					மேல்
# 4 பரணர்
வாள் வலம் தர மறு பட்டன
செம் வானத்து வனப்பு போன்றன
தாள் களம் கொள கழல் பறைந்தன
கொல்ல் ஏற்றின் மருப்பு போன்றன
தோல் துவைத்து அம்பின் துளை தோன்றுவ		5
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன
மாவே எறி_பதத்தான் இடம் காட்ட
கறுழ் பொருத செம் வாயான்
எருத்து வவ்விய புலி போன்றன
களிறே கதவு எறியா சிவந்து உராஅய்		10
நுதி மழுங்கிய வெண் கோட்டான்
உயிர் உண்ணும் கூற்று போன்றன
நீயே அலங்கு உளை பரீஇ இவுளி
பொலம் தேர் மிசை பொலிவு தோன்றி		
மா கடல் நிவந்து எழுதரும்			15
செம் ஞாயிற்று கவினை மாதோ
அனையை ஆகன் மாறே
தாய் இல் தூவா குழவி போல
ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே
					மேல்
# 5 நரிவெரூஉ தலையார்
எருமை அன்ன கரும் கல் இடை-தோறு
ஆனில் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும
நீ ஓர் ஆகலின் நின் ஒன்று மொழிவல்
அருளும் அன்பும் நீக்கி நீங்கா			5
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்பு-மதி
அளிதோ தானே அது பெறல் அரும்-குரைத்தே
					மேல்
# 6 காரிகிழார்
வடாஅது பனி படு நெடு வரை வடக்கும்
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கும்
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும்
கீழது மு புணர் அடுக்கிய முறை முதல் கட்டின்	5
நீர் நிலை நிவப்பின் கீழும் மேலது
ஆனிலை_உலகத்தானும் ஆனாது
உருவும் புகழும் ஆகி விரி சீர்
தெரி கோல் ஞமன்ன் போல ஒரு திறம்
பற்றல் இலியரோ நின் திறம் சிறக்க		10
செய்_வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து
கடல் படை குளிப்ப மண்டி அடர் புகர்
சிறு கண் யானை செவ்விதின் ஏவி
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து
அ எயில் கொண்ட செய்வு_உறு நன் கலம்		15
பரிசில்_மாக்கட்கு வரிசையின் நல்கி
பணியியர் அத்தை நின் குடையே முனிவர்
முக்கண் செல்வர் நகர் வலம் செயற்கே
இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே		20
வாடுக இறைவ நின் கண்ணி ஒன்னார்
நாடு சுடு கமழ் புகை எறித்தலானே
செலியர் அத்தை நின் வெகுளி வால் இழை
மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே
ஆங்க வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய	25
தண்டா ஈகை தகை மாண் குடுமி
தண் கதிர் மதியம் போலவும் தெறு சுடர்
ஒண் கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய பெரும நீ நில மிசையானே
					மேல்
# 7 கருங்குழல் ஆதனார்
களிறு கடைஇய தாள்
கழல் உரீஇய திருந்து அடி
கணை பொருது கவி வண் கையால்
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து
மா மறுத்த மலர் மார்பின்			5
தோல் பெயரிய எறுழ் முன்பின்
எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்
ஊர் சுடு விளக்கத்து அழு விளி கம்பலை
கொள்ளை மேவலை ஆகலின் நல்ல
இல்ல ஆகுபவால் இயல் தேர் வளவ		10
தண் புனல் பரந்த பூசல் மண் மறுத்து
மீனின் செறுக்கும் யாணர்
பயன் திகழ் வைப்பின் பிறர் அகன் தலை நாடே
					மேல்
# 8 கபிலர்
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுக
போகம் வேண்டி பொதுச்சொல் பொறாஅது
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப
ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகை
கடந்து அடு தானை சேரலாதனை			5
யாங்கனம் ஒத்தியோ வீங்கு செலல் மண்டிலம்
பொழுது என வரைதி புறக்கொடுத்து இறத்தி
மாறி வருதி மலை மறைந்து ஒளித்தி
அகல் இரு விசும்பினானும்
பகல் விளங்குதியால் பல் கதிர் விரித்தே		10
					மேல்
# 9 நெட்டிமையார்
ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணி உடையீரும் பேணி
தென் புலம் வாழ்நர்க்கு அரும் கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர் பெறாஅதீரும்
எம் அம்பு கடி விடுதும் நும் அரண் சேர்-மின் என	5
அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்தின்
கொல் களிற்று மீமிசை கொடி விசும்பு நிழற்றும்
எம் கோ வாழிய குடுமி தம் கோ
செம் நீர் பசும்_பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின் நெடியோன்			10
நன் நீர் பஃறுளி மணலினும் பலவே
					மேல்
# 10 ஊன் பொதி பசும் குடையார்
வழிபடுவோரை வல் அறிதீயே
பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே
நீ மெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி அ தக ஒறுத்தி
வந்து அடி பொருந்தி முந்தை நிற்பின்		5
தண்டமும் தணிதி நீ பண்டையின் பெரிதே
அமிழ்து அட்டு ஆனா கமழ் குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசை இல் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர்
மலைத்தல் போகிய சிலை தார் மார்ப		10
செய்து இரங்கா வினை சேண் விளங்கும் புகழ்
நெய்தல் அம் கானல் நெடியோய்
எய்த வந்தனம் யாம் ஏத்துகம் பலவே
					மேல்
 



# 11 பேய்மகள் இளவெயினியார்
அரி மயிர் திரள் முன்கை
வால் இழை மட மங்கையர்
வரி மணல் புனை பாவைக்கு
குலவு சினை பூ கொய்து
தண் பொருநை புனல் பாயும்			5
விண் பொரு புகழ் விறல் வஞ்சி
பாடல் சான்ற விறல் வேந்தனும்மே
வெப்பு உடைய அரண் கடந்து
துப்பு உறுவர் புறம்பெற்றிசினே
புறம்பெற்ற வய வேந்தன்			10
மறம் பாடிய பாடினியும்மே
ஏர் உடைய விழு கழஞ்சின்
சீர் உடைய இழை பெற்றிசினே
இழை பெற்ற பாடினிக்கு
குரல் புணர் சீர் கொளை வல் பாண்_மகனும்மே	15
என ஆங்கு
ஒள் அழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூ பெற்றிசினே
					மேல்
# 12 நெட்டிமையார்
பாணர் தாமரை மலையவும் புலவர்
பூ நுதல் யானையோடு புனை தேர் பண்ணவும்
அறனோ மற்று இது விறல் மாண் குடுமி
இன்னா ஆக பிறர் மண் கொண்டு
இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே		5
					மேல்
# 13 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
இவன் யார் என்குவை ஆயின் இவனே
புலி நிற கவசம் பூ பொறி சிதைய
எய் கணை கிழித்த பகட்டு எழில் மார்பின்
மறலி அன்ன களிற்று மிசையோனே
களிறே முந்நீர் வழங்கு நாவாய் போலவும்		5
பன் மீன் நாப்பண் திங்கள் போலவும்
சுறவு_இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப
மரீஇயோர் அறியாது மைந்து பட்டன்றே
நோய் இலன் ஆகி பெயர்க தில் அம்ம	
பழன மஞ்ஞை உகுத்த பீலி			10
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்
கொழு மீன் விளைந்த கள்ளின்
விழு நீர் வேலி நாடு கிழவோனே
					மேல்
# 14 கபிலர்
கடுங்கண்ண கொல் களிற்றால்
காப்பு உடைய எழு முருக்கி
பொன் இயல் புனை தோட்டியால்
முன்பு துரந்து சமம் தாங்கவும்
பார் உடைத்த குண்டு அகழி			5
நீர் அழுவ நிவப்பு குறித்து
நிமிர் பரிய மா தாங்கவும்
ஆவம் சேர்ந்த புறத்தை தேர் மிசை
சாப நோன் ஞாண் வடு கொள வழங்கவும்
பரிசிலர்க்கு அரும் கலம் நல்கவும் குரிசில்		10
வலிய ஆகும் நின் தாள் தோய் தட கை
புலவு நாற்றத்த பைம் தடி
பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன் துவை
கறி_சோறு உண்டு வருந்து தொழில் அல்லது
பிறிது தொழில் அறியா ஆகலின் நன்றும்		15
மெல்லிய பெரும தாமே நல்லவர்க்கு
ஆர் அணங்கு ஆகிய மார்பின் பொருநர்க்கு
இரு நிலத்து அன்ன நோன்மை
செரு மிகு சேஎய் நின் பாடுநர் கையே
					மேல்
# 15 கபிலர்
கடும் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
வெள் வாய் கழுதை புல்_இனம் பூட்டி
பாழ் செய்தனை அவர் நனம் தலை நல் எயில்
புள்_இனம் இமிழும் புகழ் சால் விளை வயல்
வெள் உளை கலி_மான் கவி குளம்பு உகள		5
தேர் வழங்கினை நின் தெவ்வர் தேஎத்து
துளங்கு இயலான் பணை எருத்தின்
பாவு அடியான் செறல் நோக்கின்
ஒளிறு மருப்பின் களிறு அவர
காப்பு உடைய கயம் படியினை			10
அன்ன சீற்றத்து அனையை ஆகலின்
விளங்கு பொன் எறிந்த நலம் கிளர் பலகையொடு
நிழல் படு நெடு வேல் ஏந்தி ஒன்னார்
ஒண் படை கடும் தார் முன்பு தலைக்கொள்-மார்
நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய		15
வசை பட வாழ்ந்தோர் பலர்-கொல் புரை இல்
நன் பனுவல் நால் வேதத்து
அரும் சீர்த்தி பெரும் கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்க பன் மாண்
வீயா சிறப்பின் வேள்வி முற்றி			20
யூபம் நட்ட வியன் களம் பல-கொல்
யா பல-கொல்லோ பெரும வார்_உற்று
விசி பிணி கொண்ட மண் கனை முழவின்
பாடினி பாடும் வஞ்சிக்கு
நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே		25
					மேல்
# 16 பாண்டரம் கண்ணனார்
வினை மாட்சிய விரை புரவியொடு
மழை உருவின தோல் பரப்பி
முனை முருங்க தலைச்சென்று அவர்
விளை வயல் கவர்பு ஊட்டி
மனை மரம் விறகு ஆக			5
கடி துறை நீர் களிறு படீஇ
எல்லு பட இட்ட சுடு தீ விளக்கம்
செல் சுடர் ஞாயிற்று செக்கரின் தோன்ற
புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானை
துணை வேண்டா செரு வென்றி			10
புலவு வாள் புலர் சாந்தின்
முருகன் சீற்றத்து உரு கெழு குருசில்
மயங்கு வள்ளை மலர் ஆம்பல்
பனி பகன்றை கனி பாகல்
கரும்பு அல்லது காடு அறியா			15
பெரும் தண் பணை பாழ் ஆக
ஏம நன் நாடு ஒள் எரி_ஊட்டினை
நாம நல் அமர் செய்ய
ஒராங்கு மலைந்தன பெரும நின் களிறே
					மேல்
# 17 குறுங்கோழியூர் கிழார்
தென் குமரி வட_பெருங்கல்
குண குட கடலா எல்லை
குன்று மலை காடு நாடு
ஒன்று பட்டு வழிமொழிய
கொடிது கடிந்து கோல் திருத்தி			5
படுவது உண்டு பகல் ஆற்றி
இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழி காவல
குலை இறைஞ்சிய கோள் தாழை
அகல் வயல் மலை வேலி			10
நிலவு மணல் வியன் கானல்
தெண் கழி மிசை தீ பூவின்
தண் தொண்டியோர் அடு பொருந
மா பயம்பின் பொறை போற்றாது
நீடு குழி அகப்பட்ட				15
பீடு உடைய எறுழ் முன்பின்
கோடு முற்றிய கொல் களிறு
நிலை கலங்க குழி கொன்று
கிளை புகல தலைக்கூடி ஆங்கு
நீ பட்ட அரு முன்பின்				20
பெரும் தளர்ச்சி பலர் உவப்ப
பிறிது சென்று மலர் தாயத்து
பலர் நாப்பண் மீக்கூறலின்
உண்டாகிய உயர் மண்ணும்
சென்று பட்ட விழு கலனும்			25
பெறல் கூடும் இவன் நெஞ்சு உற பெறின் எனவும்
ஏந்து கொடி இறை புரிசை
வீங்கு சிறை வியல் அருப்பம்
இழந்து வைகுதும் இனி நாம் இவன்
உடன்று நோக்கினன் பெரிது எனவும்		30
வேற்று அரசு பணி தொடங்கு நின்
ஆற்றலொடு புகழ் ஏத்தி
காண்கு வந்திசின் பெரும ஈண்டிய
மழை என மருளும் பல் தோல் மலை என
தேன் இறைகொள்ளும் இரும் பல் யானை		35
உடலுநர் உட்க வீங்கி கடல் என
வான் நீர்க்கு ஊக்கும் தானை ஆனாது
கடு ஒடுங்கு எயிற்ற அரவு தலை பனிப்ப
இடி என முழங்கும் முரசின்
வரையா ஈகை குடவர் கோவே			40
					மேல்
# 18 குடபுலவியனார்
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇ
பரந்துபட்ட வியன் ஞாலம்
தாளின் தந்து தம் புகழ் நிறீஇ
ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல்
ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய		5
பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே
நீர் தாழ்ந்த குறும் காஞ்சி
பூ கதூஉம் இன வாளை
நுண் ஆரல் பரு வரால்
குரூஉ கெடிற்ற குண்டு அகழி			10
வான் உட்கும் வடி நீள் மதில்
மல்லல் மூதூர் வய வேந்தே
செல்லும் உலகத்து செல்வம் வேண்டினும்
ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி
ஒரு நீ ஆகல் வேண்டினும் சிறந்த			15
நல் இசை நிறுத்தல் வேண்டினும் மற்று அதன்
தகுதி கேள் இனி மிகுதியாள
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்		20
உணவு எனப்படுவது நிலத்தோடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே
வித்தி வான் நோக்கும் புன்_புலம் கண் அகன்
வைப்பு_உற்று ஆயினும் நண்ணி ஆளும்		25
இறைவன் தாட்கு உதவாதே அதனால்
அடு போர் செழிய இகழாது வல்லே
நிலன் நெளி மருங்கில் நீர்நிலை பெருக
தட்டோர் அம்ம இவண் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே			30
					மேல்
# 19 குடபுலவியனார்
இமிழ் கடல் வளைஇய ஈண்டு அகல் கிடக்கை
தமிழ் தலைமயங்கிய தலையாலம்கானத்து
மன் உயிர் பன்மையும் கூற்றத்து ஒருமையும்
நின்னொடு தூக்கிய வென் வேல் செழிய
இரும் புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய	5
பெரும் கல் அடாரும் போன்ம் என விரும்பி
முயங்கினேன் அல்லனோ யானே மயங்கி
குன்றத்து இறுத்த குரீஇ இனம் போல
அம்பு சென்று இறுத்த அரும் புண் யானை
தூம்பு உடை தட கை வாயொடு துமிந்து		10
நாஞ்சில் ஒப்ப நிலம் மிசை புரள
எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர்
எந்தையோடு கிடந்தோர் எம் புன் தலை புதல்வர்
இன்ன விறலும் உள-கொல் நமக்கு என
மூதில் பெண்டிர் கசிந்து அழ நாணி		15
கூற்று கண்ணோடிய வெருவரு பறந்தலை
எழுவர் நல் வலம் கடந்தோய் நின்
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே
					மேல்
# 20 குறுங்கோழியூர்கிழார்
இரு முந்நீர் குட்டமும்
வியன் ஞாலத்து அகலமும்
வளி வழங்கு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்று ஆங்கு
அவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியை	5
அறிவும் ஈரமும் பெரும் கணோட்டமும்
சோறு படுக்கும் தீயோடு
செம் ஞாயிற்று தெறல் அல்லது
பிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோரே
திரு_வில் அல்லது கொலை வில் அறியார்		10
நாஞ்சில் அல்லது படையும் அறியார்
திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய அ
பிறர் மண் உண்ணும் செம்மல் நின் நாட்டு
வயவு_உறு மகளிர் வேட்டு உணின் அல்லது
பகைவர் உண்ணா அரு மண்ணினையே		15
அம்பு துஞ்சும் கடி அரணால்
அறம் துஞ்சும் செங்கோலையே
புது புள் வரினும் பழம் புள் போகினும்
விதுப்பு உறவு அறியா ஏம காப்பினை
அனையை ஆகன் மாறே			20
மன் உயிர் எல்லாம் நின் அஞ்சும்மே
					மேல்
 



# 21 ஐயூர் மூலங்கிழார்
புல வரை இறந்த புகழ் சால் தோன்றல்
நில வரை இறந்த குண்டு கண் அகழி
வான் தோய்வு அன்ன புரிசை விசும்பின்
மீன் பூத்து அன்ன உருவ ஞாயில்
கதிர் நுழைகல்லா மரம் பயில் கடி மிளை		5
அரும் குறும்பு உடுத்த கானப்பேர் எயில்
கரும் கை கொல்லன் செம் தீ மாட்டிய
இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது என
வேங்கைமார்பன் இரங்க வைகலும்
ஆடு கொள குழைந்த தும்பை புலவர்		10
பாடு துறை முற்றிய கொற்ற வேந்தே
இகழுநர் இசையொடு மாய
புகழொடு விளங்கி பூக்க நின் வேலே
					மேல்
# 22 குறுங்கோழியூர் கிழார்
தூங்கு கையான் ஓங்கு நடைய
உறழ் மணியான் உயர் மருப்பின
பிறை நுதலான் செறல் நோக்கின
பா அடியால் பணை எருத்தின
தேன் சிதைந்த வரை போல			5
மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாஅத்து
அயறு சோரும் இரும் சென்னிய
மைந்து மலிந்த மழ களிறு
கந்து சேர்பு நிலைஇ வழங்க
பாஅல் நின்று கதிர் சோரும்			10
வான் உறையும் மதி போலும்
மாலை வெண்குடை நீழலான்
வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த
ஆய் கரும்பின் கொடி கூரை			15
சாறு கொண்ட களம் போல
வேறு_வேறு பொலிவு தோன்ற
குற்று ஆனா உலக்கையால்
கலி சும்மை வியல் ஆங்கண்
பொலம் தோட்டு பைம் தும்பை			20
மிசை அலங்கு உளைய பனை போழ் செரீஇ
சின மாந்தர் வெறி குரவை
ஓத நீரின் பெயர்பு பொங்க
வாய் காவாது பரந்து பட்ட
வியன் பாசறை காப்பாள			25
வேந்து தந்த பணி திறையான்
சேர்ந்தவர் தம் கடும்பு ஆர்த்தும்
ஓங்கு கொல்லியோர் அடு பொருந
வேழ நோக்கின் விறல் வெம் சேஎய்
வாழிய பெரும நின் வரம்பு இல் படைப்பே		30
நின் பாடிய வயங்கு செந்நா
பின் பிறர் இசை நுவலாமை
ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ
மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே
புத்தேள்_உலகத்து அற்று என கேட்டு வந்து		35
இனிது காண்டிசின் பெரும முனிவு இலை
வேறு புலத்து இறுக்கும் தானையோடு
சோறு பட நடத்தி நீ துஞ்சாய் மாறே
					மேல்
# 23 கல்லாடனார்
வெளிறு இல் நோன் காழ் பணை நிலை முனைஇ
களிறு படிந்து உண்டு என கலங்கிய துறையும்
கார் நறும் கடம்பின் பாசிலை தெரியல்
சூர் நவை முருகன் சுற்றத்து அன்ன நின்
கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர்		5
கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில்
கொள் பதம் ஒழிய வீசிய புலனும்
வடி நவில் நவியம் பாய்தலின் ஊர்-தொறும்
கடி_மரம் துளங்கிய காவும் நெடு நகர்
வினை புனை நல் இல் வெம் எரி நைப்ப		10
கனை எரி உரறிய மருங்கும் நோக்கி
நண்ணார் நாண நாள்-தொறும் தலைச்சென்று
இன்னும் இன்ன பல செய்குவன் யாவரும்
துன்னல் போகிய துணிவினோன் என
ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை		15
ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட
கால முன்ப நின் கண்டனென் வருவல்
அறு மருப்பு எழில் கலை புலி_பால் பட்டு என
சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை
பூளை நீடிய வெருவரு பறந்தலை			20
வேளை வெண் பூ கறிக்கும்
ஆள் இல் அத்தம் ஆகிய காடே
					மேல்
# 24 மாங்குடி மருதனார்
நெல் அரியும் இரும் தொழுவர்
செம் ஞாயிற்று வெயில் முனையின்
தெண் கடல் திரை மிசை பாயுந்து
திண் திமில் வன் பரதவர்
வெப்பு உடைய மட்டு உண்டு			5
தண் குரவை சீர் தூங்குந்து
தூவல் கலித்த தேம் பாய் புன்னை
மெல் இணர் கண்ணி மிலைந்த மைந்தர்
எல் வளை மகளிர் தலைக்கை தரூஉந்து
வண்டு பட மலர்ந்த தண் நறும் கானல்		10
முண்டக கோதை ஒண் தொடி மகளிர்
இரும் பனையின் குரும்பை நீரும்
பூ கரும்பின் தீம் சாறும்
ஓங்கு மணல் குலவு தாழை
தீம் நீரோடு உடன் விராஅய்			15
மு நீர் உண்டு முந்நீர் பாயும்
தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய
ஓம்பா ஈகை மா வேள் எவ்வி
புனல் அம் புதவின் மிழலையொடு கழனி
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்		20
பொன் அணி யானை தொன் முதிர் வேளிர்
குப்பை நெல்லின் முத்தூறு தந்த
கொற்ற நீள் குடை கொடி தேர் செழிய
நின்று நிலைஇயர் நின் நாள்_மீன் நில்லாது
படாஅ செலீஇயர் நின் பகைவர் மீனே		25
நின்னொடு தொன்று மூத்த உயிரினும் உயிரொடு
நின்று மூத்த யாக்கை அன்ன நின்
ஆடு குடி மூத்த விழு திணை சிறந்த
வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த
இரவன் மாக்கள் ஈகை நுவல			30
ஒண் தொடி மகளிர் பொலம் கலத்து ஏந்திய
தண் கமழ் தேறல் மடுப்ப மகிழ் சிறந்து
ஆங்கு இனிது ஒழுகு-மதி பெரும ஆங்கு அது
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப தொல் இசை
மலர் தலை உலகத்து தோன்றி			35
பலர் செல செல்லாது நின்று விளிந்தோரே
					மேல்
# 25 கல்லாடனார்
மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகல
ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது
உரவு சினம் திருகிய உரு கெழு ஞாயிறு
நிலவு திகழ் மதியமொடு நிலம் சேர்ந்து ஆஅங்கு
உடல் அரும் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை		5
அணங்கு அரும் பறந்தலை உணங்க பண்ணி
பிணி உறு முரசம் கொண்ட_காலை
நிலை திரிபு எறிய திண் மடை கலங்கி
சிதைதல் உய்ந்தன்றோ நின் வேல் செழிய
முலை பொலி அகம் உருப்ப நூறி			10
மெய்ம்மறந்து பட்ட வரையா பூசல்
ஒண் நுதல் மகளிர் கைம்மை கூர
அவிர் அறல் கடுக்கும் அம் மென்
குவை இரும் கூந்தல் கொய்தல் கண்டே
					மேல்
# 26 மாங்குடி மருதனார்
நளி கடல் இரும் குட்டத்து
வளி புடைத்த கலம் போல
களிறு சென்று களன் அகற்றவும்
களன் அகற்றிய வியல் ஆங்கண்
ஒளிறு இலைய எஃகு ஏந்தி			5
அரைசு பட அமர் உழக்கி
உரை செல முரசு வௌவி
முடி தலை அடுப்பு ஆக
புனல் குருதி உலை கொளீஇ
தொடி தோள் துடுப்பின் துழந்த வல்சியின்		10
அடு_களம் வேட்ட அடு போர் செழிய
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்றம் ஆக
மன்னர் ஏவல் செய்ய மன்னிய
வேள்வி முற்றிய வாய் வாள் வேந்தே		15
நோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடு
மாற்றார் என்னும் பெயர் பெற்று
ஆற்றார் ஆயினும் ஆண்டு வாழ்வோரே
					மேல்
# 27 உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்
நூற்று இதழ் அலரின் நிறை கண்டு அன்ன
வேற்றுமை இல்லா விழு திணை பிறந்து
வீற்றிருந்தோரை எண்ணும்_காலை
உரையும் பாட்டும் உடையோர் சிலரே		5
மரை இலை போல மாய்ந்திசினோர் பலரே
புலவர் பாடும் புகழ் உடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப என்ப தம் செய்_வினை முடித்து என
கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி		10
தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்
அறியாதோரையும் அறிய காட்டி
திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்து
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்		15
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை ஆகு-மதி அருள் இலர்
கொடாஅமை வல்லர் ஆகுக
கெடாஅ துப்பின் நின் பகை எதிர்ந்தோரே
					மேல்
# 28 உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
சிறப்பு இல் சிதடும் உறுப்பு இல் பிண்டமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம்
பேதைமை அல்லது ஊதியம் இல் என		5
முன்னும் அறிந்தோர் கூறினர் இன்னும்
அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது
வட்ட வரிய செம் பொறி சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்
கானத்தோர் நின் தெவ்வர் நீயே			10
புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து அகத்தோர்
புய்த்து எறி கரும்பின் விடு கழை தாமரை
பூ போது சிதைய வீழ்ந்து என கூத்தர்
ஆடு_களம் கடுக்கும் அக நாட்டையே
அதனால் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்	15
ஆற்றும் பெரும நின் செல்வம்
ஆற்றாமை நின் போற்றாமையே
					மேல்
# 29 உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
அழல் புரிந்த அடர் தாமரை
ஐது அடர்ந்த நூல் பெய்து
புனை வினை பொலிந்த பொலன் நறும் தெரியல்
பாறு மயிர் இரும் தலை பொலிய சூடி
பாண் முற்றுக நின் நாள்_மகிழ் இருக்கை		5
பாண் முற்று ஒழிந்த பின்றை மகளிர்
தோள் முற்றுக நின் சாந்து புலர் அகலம் ஆங்க
முனிவு இல் முற்றத்து இனிது முரசு இயம்ப
கொடியோர் தெறுதலும் செவ்வியோர்க்கு அளித்தலும்
ஒடியா முறையின் மடிவு இலை ஆகி		10
நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர்
நெல் விளை கழனி படு புள் ஓப்புநர்
ஒழி மடல் விறகின் கழி மீன் சுட்டு
வெம் கள் தொலைச்சியும் அமையார் தெங்கின்	15
இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நன் நாடு
பெற்றனர் உவக்கும் நின் படை_கொள்_மாக்கள்
பற்றா_மாக்களின் பரிவு முந்துறுத்து
கூவை துற்ற நால் கால் பந்தர்
சிறு_மனை வாழ்க்கையின் ஒரீஇ வருநர்க்கு		20
உதவி ஆற்றும் நண்பின் பண்பு உடை
ஊழிற்று ஆக நின் செய்கை விழவின்
கோடியர் நீர்மை போல முறை_முறை
ஆடுநர் கழியும் இ உலகத்து கூடிய
நகை புறன் ஆக நின் சுற்றம்			25
இசை புறன் ஆக நீ ஓம்பிய பொருளே
					மேல்
# 30 உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
செம் ஞாயிற்று செலவும்
அ ஞாயிற்று பரிப்பும்v
பரிப்பு சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்று இவை		5
சென்று அளந்து அறிந்தார் போல என்றும்
இனைத்து என்போரும் உளரே அனைத்தும்
அறி அறிவு ஆக செறிவினை ஆகி
களிறு கவுள் அடுத்த எறிகல் போல
ஒளித்த துப்பினை ஆதலின் வெளிப்பட		10
யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு
மீ பாய் களையாது மிசை பரம் தோண்டாது
புகாஅர் புகுந்த பெரும் கலம் தகாஅர்
இடை புல பெரு வழி சொரியும்
கடல் பல் தாரத்த நாடு கிழவோயே		15
					மேல்
 




# 31 கோவூர்கிழார்
சிறப்பு உடை மரபின் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல
இரு குடை பின்பட ஓங்கிய ஒரு குடை
உரு கெழு மதியின் நிவந்து சேண் விளங்க
நல் இசை வேட்டம் வேண்டி வெல் போர்		5
பாசறை அல்லது நீ ஒல்லாயே
நுதி முகம் மழுங்க மண்டி ஒன்னார்
கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே
போர் எனின் புகலும் புனை கழல் மறவர்
காடு இடை கிடந்த நாடு நனி சேஎய		10
செல்வேம் அல்லேம் என்னார் கல்லென்
விழவு உடை ஆங்கண் வேற்று புலத்து இறுத்து
குண கடல் பின்னது ஆக குட கடல்
வெண் தலை புணரி நின் மான் குளம்பு அலைப்ப
வல முறை வருதலும் உண்டு என்று அலமந்து	15
நெஞ்சு நடுங்கு அவலம் பாய
துஞ்சா கண்ண வட புலத்து அரசே
					மேல்
# 32 கோவூர்கிழார்
கடும்பின் அடு கலம் நிறை ஆக நெடும் கொடி
பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ
வண்ணம் நீவிய வணங்கு இறை பணை தோள்
ஒண் நுதல் விறலியர் பூ விலை பெறுக என
மாட மதுரையும் தருகுவன் எல்லாம்		5
பாடுகம் வம்-மினோ பரிசில்_மாக்கள்
தொல் நில கிழமை சுட்டின் நன் மதி
வேட்கோ சிறாஅர் தேர் கால் வைத்த
பசு மண் குரூஉ திரள் போல அவன்
கொண்ட குடுமித்து இ தண் பணை நாடே		10
					மேல்
# 33 கோவூர்கிழார்
கான் உறை வாழ்க்கை கத நாய் வேட்டுவன்
மான் தசை சொரிந்த வட்டியும் ஆய்_மகள்
தயிர் கொடு வந்த தசும்பும் நிறைய
ஏரின்_வாழ்நர் பேர் இல் அரிவையர்
குள கீழ் விளைந்த கள கொள் வெண்ணெல்		5
முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்
தென்னம்பொருப்பன் நன் நாட்டுள்ளும்
ஏழ் எயில் கதவம் எறிந்து கைக்கொண்டு நின்
பேழ் வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை
பாடுநர் வஞ்சி பாட படையோர்			10
தாது எரு மறுகின் பாசறை பொலிய
புலரா பச்சிலை இடை இடுபு தொடுத்த
மலரா மாலை பந்து கண்டு அன்ன
ஊன்_சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும்
செம்மற்று அம்ம நின் வெம் முனை இருக்கை	15
வல்லோன் தைஇய வரி வனப்பு உற்ற
அல்லி பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப
காம இருவர் அல்லது யாமத்து
தனி மகன் வழங்கா பனி மலர் காவின்
ஒதுக்கு இன் திணி மணல் புது பூ பள்ளி		20
வாயில் மாடம்-தொறும் மை விடை வீழ்ப்ப
நீ ஆங்கு கொண்ட விழவினும் பலவே
					மேல்
# 34 ஆலத்தூர் கிழார்
ஆன் முலை அறுத்த அறன் இலோர்க்கும்
மாண் இழை மகளிர் கரு சிதைத்தோர்க்கும்
பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும்
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள என
நிலம் புடைபெயர்வது ஆயினும் ஒருவன்		5
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என
அறம் பாடின்றே ஆய்_இழை கணவ
காலை அந்தியும் மாலை அந்தியும்
புறவு கரு அன்ன புன்_புல வரகின்
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி		10
குறு முயல் கொழும் சூடு கிழித்த ஒக்கலொடு
இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து
கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி
அமலை கொழும் சோறு ஆர்ந்த பாணர்க்கு
அகலா செல்வம் முழுவதும் செய்தோன்		15
எம் கோன் வளவன் வாழ்க என்று நின்
பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின்
படுபு அறியலனே பல்_கதிர்_செல்வன்
யானோ தஞ்சம் பெரும இ உலகத்து
சான்றோர் செய்த நன்று உண்டாயின்		20
இமையத்து ஈண்டி இன் குரல் பயிற்றி
கொண்டல் மா மழை பொழிந்த
நுண் பல் துளியினும் வாழிய பலவே
					மேல்
# 35 வெள்ளைக்குடி நாகனார்
நளி இரு முந்நீர் ஏணி ஆக
வளி இடை வழங்கா வானம் சூடிய
மண் திணி கிடக்கை தண் தமிழ் கிழவர்
முரசு முழங்கு தானை மூவருள்ளும்
அரசு எனப்படுவது நினதே பெரும		5
அலங்கு கதிர் கனலி நால்_வயின் தோன்றினும்
இலங்கு கதிர் வெள்ளி தென் புலம் படரினும்
அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட
தோடு கொள் வேலின் தோற்றம் போல
ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும்		10
நாடு எனப்படுவது நினதே அத்தை ஆங்க
நாடு கெழு செல்வத்து பீடு கெழு வேந்தே
நினவ கூறுவல் எனவ கேள்-மதி
அறம் புரிந்து அன்ன செங்கோல் நாட்டத்து
முறை வேண்டு பொழுதின் பதன் எளியோர் ஈண்டு	15
உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோறே
ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ
மாக விசும்பின் நடுவு நின்று ஆங்கு
கண் பொர விளங்கும் நின் விண் பொரு வியன் குடை
வெயில் மறை கொண்டன்றோ அன்றே வருந்திய	20
குடி மறைப்பதுவே கூர் வேல் வளவ
வெளிற்று பனம் துணியின் வீற்று_வீற்று கிடப்ப
களிற்று கணம் பொருத கண் அகன் பறந்தலை
வரு படை தாங்கி பெயர் புறத்து ஆர்த்து
பொரு படை தரூஉம் கொற்றமும் உழு படை	25
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே
மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர் பழிக்கும் இ கண் அகன் ஞாலம்
அது நற்கு அறிந்தனை ஆயின் நீயும்		30
நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி
குடி புறந்தருகுவை ஆயின் நின்
அடி புறந்தருகுவர் அடங்காதோரே
					மேல்
# 36 ஆலத்தூர் கிழார்
அடுநை ஆயினும் விடுநை ஆயினும்
நீ அளந்து அறிதி நின் புரைமை வார் கோல்
செறி அரி சிலம்பின் குறும் தொடி மகளிர்
பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும்
தண் ஆன்பொருநை வெண் மணல் சிதைய		5
கரும் கை கொல்லன் அரம் செய் அம் வாய்
நெடும் கை நவியம் பாய்தலின் நிலை அழிந்து
வீ கமழ் நெடும் சினை புலம்ப காவு-தொறும்
கடி_மரம் தடியும் ஓசை தன் ஊர்
நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப		10
ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு ஈங்கு நின்
சிலை தார் முரசம் கறங்க
மலைத்தனை என்பது நாணு_தகவு உடைத்தே
					மேல்
# 37 மாறோக்கத்து நப்பசலையார்
நஞ்சு உடை வால் எயிற்று ஐம் தலை சுமந்த
வேக வெம் திறல் நாகம் புக்கு என
விசும்பு தீ பிறப்ப திருகி பசும் கொடி
பெரு மலை விடர்_அகத்து உரும் எறிந்து ஆங்கு
புள் உறு புன்கண் தீர்த்த வெள் வேல்		5
சினம் கெழு தானை செம்பியன் மருக
கராஅம் கலித்த குண்டு கண் அகழி
இடம் கரும் குட்டத்து உடன் தொக்கு ஓடி
யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம்
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி		10
செம்பு உறழ் புரிசை செம்மல் மூதூர்
வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின்
நல்ல என்னாது சிதைத்தல்
வல்லையால் நெடுந்தகை செருவத்தானே
					மேல்
# 38 ஆவூர் மூலம் கிழார்
வரை புரையும் மழ களிற்றின் மிசை
வான் துடைக்கும் வகைய போல
விரவு உருவின கொடி நுடங்கும்
வியன் தானை விறல் வேந்தே
நீ உடன்று நோக்கும் வாய் எரி தவழ		5
நீ நயந்து நோக்கும் வாய் பொன் பூப்ப
செம் ஞாயிற்று நிலவு வேண்டினும்
வெண் திங்களுள் வெயில் வேண்டினும்
வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின்
நின் நிழல் பிறந்து நின் நிழல் வளர்ந்த		10
எம் அளவு எவனோ மற்றே இன் நிலை
பொலம் பூ காவின் நன் நாட்டோரும்
செய்_வினை மருங்கின் எய்தல் அல்லதை
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்
கடவது அன்மையின் கையறவு உடைத்து என	15
ஆண்டு செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்
நின் நாடு உள்ளுவர் பரிசிலர்
ஒன்னார் தேஎத்தும் நின்னுடைத்து எனவே
					மேல்
# 39 மாறோக்கத்து நப்பசலையார்
புறவின் அல்லல் சொல்லிய கறை அடி
யானை வால் மருப்பு எறிந்த வெண் கடை
கோல் நிறை துலாஅம்_புக்கோன் மருக
ஈதல் நின் புகழும் அன்றே சார்தல்
ஒன்னார் உட்கும் துன் அரும் கடும் திறல்		5
தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின்
அடுதல் நின் புகழும் அன்றே கெடு இன்று
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து
அறம் நின்று நிலையிற்று ஆகலின் அதனால்
முறைமை நின் புகழும் அன்றே மறம் மிக்கு		10
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள்
கண் ஆர் கண்ணி கலி_மான் வளவ
யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய
வரை அளந்து அறியா பொன் படு நெடும் கோட்டு
இமையம் சூட்டிய ஏம வில் பொறி		15
மாண் வினை நெடும் தேர் வானவன் தொலைய
வாடா வஞ்சி வாட்டும் நின்
பீடு கெழு நோன் தாள் பாடும் காலே
					மேல்
# 40 ஆவூர் மூலங்கிழார்
நீயே பிறர் ஓம்பு_உறு மற மன் எயில்
ஓம்பாது கடந்து அட்டு அவர்
முடி புனைந்த பசும்_பொன் நின்
அடி பொலிய கழல் தைஇய
வல்லாளனை வய வேந்தே			5
யாமே நின் இகழ் பாடுவோர் எருத்து அடங்க
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற
இன்று கண்டு ஆங்கு காண்குவம் என்றும்
இன்சொல் எண் பதத்தை ஆகு-மதி பெரும
ஒரு பிடி படியும் சீறிடம்			10
எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே
					மேல்
 




# 41 கோவூர் கிழார்
காலனும் காலம் பார்க்கும் பாராது
வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய
வேண்டு இடத்து அடூஉம் வெல் போர் வேந்தே
திசை இரு_நான்கும் உற்கம் உற்கவும்
பெரு மரத்து இலை இல் நெடும் கோடு வற்றல் பற்றவும்	5
வெம் கதிர் கனலி துற்றவும் பிறவும்
அஞ்சுவர_தகுந புள்ளு குரல் இயம்பவும்
எயிறு நிலத்து வீழவும் எண்ணெய் ஆடவும்
களிறு மேல் கொள்ளவும் காழகம் நீப்பவும்
வெள்ளி நோன் படை கட்டிலொடு கவிழவும்		10
கனவின் அரியன காணா நனவில்
செரு செய் முன்ப நின் வரு_திறன் நோக்கி
மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர்
புதல்வர் பூ கண் முத்தி மனையோட்கு
எவ்வம் கரக்கும் பைதல் மாக்களொடு		15
பெரும் கலக்கு_உற்றன்றால் தானே காற்றோடு
எரி நிகழ்ந்து அன்ன செலவின்
செரு மிகு வளவ நின் சினைஇயோர் நாடே
					மேல்
# 42 இடைக்காடனார்
ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின்
யானையும் மலையின் தோன்றும் பெரும நின்
தானையும் கடல் என முழங்கும் கூர் நுனை
வேலும் மின்னின் விளங்கும் உலகத்து
அரைசு தலை பனிக்கும் ஆற்றலை ஆதலின்		5
புரை தீர்ந்தன்று அது புதுவதோ அன்றே
தண் புனல் பூசல் அல்லது நொந்து
களைக வாழி வளவ என்று நின்
முனை தரு பூசல் கனவினும் அறியாது
புலி புறங்காக்கும் குருளை போல			10
மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்ப
பெரு விறல் யாணர்த்து ஆகி அரிநர்
கீழ்_மடை கொண்ட வாளையும் உழவர்
படை மிளிர்ந்திட்ட யாமையும் அறைநர்
கரும்பில் கொண்ட தேனும் பெரும் துறை		15
நீர் தரு மகளிர் குற்ற குவளையும்
வன்_புல கேளிர்க்கு வரு விருந்து அயரும்
மென்_புல வைப்பின் நன் நாட்டு பொருந
மலையின் இழிந்து மா கடல் நோக்கி
நில வரை இழிதரும் பல் யாறு போல		20
புலவர் எல்லாம் நின் நோக்கினரே
நீயே மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்து
கூற்று வெகுண்டு அன்ன முன்பொடு
மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே
					மேல்
# 43 தாமப்பல் கண்ணனார்
நில மிசை வாழ்நர் அலமரல் தீர
தெறு கதிர் கனலி வெம்மை தாங்கி
கால் உணவு ஆக சுடரொடு கொட்கும்
அவிர் சடை முனிவரும் மருள கொடும் சிறை
கூர் உகிர் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇ		5
தன் அகம் புக்க குறு நடை புறவின்
தபுதி அஞ்சி சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக
நேரார் கடந்த முரண் மிகு திருவின்
தேர் வண் கிள்ளி தம்பி வார் கோல்		10
கொடு மர மறவர் பெரும கடு மான்
கைவண் தோன்றல் ஐயம் உடையேன்
ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர் மற்று இது
நீர்த்தோ நினக்கு என வெறுப்ப கூறி		15
நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும்
நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே
தம்மை பிழைத்தோர் பொறுக்கும் செம்மல்
இ குடி பிறந்தோர்க்கு எண்மை காணும் என
காண்_தகு மொய்ம்ப காட்டினை ஆகலின்		20
யானே பிழைத்தனென் சிறக்க நின் ஆயுள்
மிக்கு வரும் இன் நீர் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே
					மேல்
# 44 கோவூர் கிழார்
இரும் பிடி தொழுதியொடு பெரும் கயம் படியா
நெல் உடை கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ
திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி
நில மிசை புரளும் கைய வெய்து_உயிர்த்து
அலமரல் யானை உரும் என முழங்கவும்		5
பால் இல் குழவி அலறவும் மகளிர்
பூ இல் வறும் தலை முடிப்பவும் நீர் இல்
வினை புனை நல் இல் இனைகூஉ கேட்பவும்
இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல்
துன் அரும் துப்பின் வய_மான் தோன்றல்		10
அறவை ஆயின் நினது என திறத்தல்
மறவை ஆயின் போரொடு திறத்தல்
அறவையும் மறவையும் அல்லை ஆக
திறவாது அடைத்த திண் நிலை கதவின்
நீள் மதில் ஒரு சிறை ஒடுங்குதல்			15
நாணு_தகவு உடைத்து இது காணும்_காலே
					மேல்
# 45 கோவூர் கிழார்
இரும் பனை வெண் தோடு மலைந்தோன் அல்லன்
கரும் சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே
ஒருவீர் தோற்பினும் தோற்ப நும் குடியே		5
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே அதனால்
குடி பொருள் அன்று நும் செய்தி கொடி தேர்
நும் ஓர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம் மலி உவகை செய்யும் இ இகலே
					மேல்
# 46 கோவூர் கிழார்
நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை
இவரே புலன் உழுது உண்-மார் புன்கண் அஞ்சி
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த		5
புன் தலை சிறாஅர் மன்று மருண்டு நோக்கி
விருந்தின் புன்கண் நோவு உடையர்
கேட்டனை ஆயின் நீ வேட்டது செய்ம்மே
					மேல்
# 47 கோவூர் கிழார்
வள்ளியோர் படர்ந்து புள்ளின் போகி
நெடிய என்னாது சுரம் பல கடந்து
வடியா நாவின் வல்லாங்கு பாடி
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி			5
வரிசைக்கு வருந்தும் இ பரிசில் வாழ்க்கை
பிறர்க்கு தீது அறிந்தன்றோ இன்றே திறப்பட
நண்ணார் நாண அண்ணாந்து ஏகி
ஆங்கு இனிது ஒழுகின் அல்லது ஓங்கு புகழ்
மண் ஆள் செல்வம் எய்திய			10
நும் ஓர் அன்ன செம்மலும் உடைத்தே
					மேல்
# 48 பொய்கையார்
கோதை மார்பின் கோதையானும்
கோதையை புணர்ந்தோர் கோதையானும்
மா கழி மலர்ந்த நெய்தலானும்
கள் நாறும்மே கானல் அம் தொண்டி
அஃது எம் ஊரே அவன் எம் இறைவன்		5
அன்னோன் படர்தி ஆயின் நீயும்
எம்மும் உள்ளுமோ முது வாய் இரவல
அமர் மேம்படூஉம்_காலை நின்
புகழ் மேம்படுநனை கண்டனம் எனவே
					மேல்
# 49 பொய்கையார்
நாடன் என்கோ ஊரன் என்கோ
பாடு இமிழ் பனி கடல் சேர்ப்பன் என்கோ
யாங்கனம் மொழிகோ ஓங்கு வாள் கோதையை
புனவர் தட்டை புடைப்பின் அயலது
இறங்கு கதிர் அலமரு கழனியும்			5
பிறங்கு நீர் சேர்ப்பினும் புள் ஒருங்கு எழுமே
					மேல்
# 50 மோசிகீரனார்
மாசு அற விசித்த வார்பு_உறு வள்பின்
மை படு மருங்குல் பொலிய மஞ்ஞை
ஒலி நெடும் பீலி ஒண் பொறி மணி தார்
பொலம் குழை உழிஞையொடு பொலிய சூட்டி
குருதி வேட்கை உரு கெழு முரசம்		5
மண்ணி வாரா அளவை எண்ணெய்
நுரை முகந்து அன்ன மென் பூ சேக்கை
அறியாது ஏறிய என்னை தெறுவர
இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும் நல் தமிழ் முழுது அறிதல்		10
அதனொடும் அமையாது அணுக வந்து நின்
மதன் உடை முழவு தோள் ஓச்சி தண்ணென
வீசியோயே வியல்_இடம் கமழ
இவண் இசை உடையோர்க்கு அல்லது அவணது
உயர்_நிலை_உலகத்து உறையுள் இன்மை		15
விளங்க கேட்ட மாறு-கொல்
வலம் படு குருசில் நீ ஈங்கு இது செயலே
					மேல்
 



# 51 ஐயூர் முடவனார் ஐயூர் கிழார் எனவும் பாடம்
நீர் மிகின் சிறையும் இல்லை தீ மிகின்
மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லை
வளி மிகின் வலியும் இல்லை ஒளி மிக்கு
அவற்று ஓர் அன்ன சின போர் வழுதி
தண் தமிழ் பொது என பொறாஅன் போர் எதிர்ந்து	5
கொண்டி வேண்டுவன் ஆயின் கொள்க என
கொடுத்த மன்னர் நடுக்கு அற்றனரே
அளியரோ அளியர் அவன் அளி இழந்தோரே
நுண் பல சிதலை அரிது முயன்று எடுத்த
செம் புற்று ஈயல் போல			10
ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோரே
					மேல்
# 52 மருதன் இளநாகனார்
அணங்கு உடை நெடும் கோட்டு அளை_அகம் முனைஇ
முணங்கு நிமிர் வய_மான் முழு வலி ஒருத்தல்
ஊன் நசை உள்ளம் துரப்ப இரை குறித்து
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்து ஆங்கு
வட புல மன்னர் வாட அடல் குறித்து		5
இன்னா வெம் போர் இயல் தேர் வழுதி
இது நீ கண்ணியது ஆயின் இரு நிலத்து
யார்-கொல் அளியர் தாமே ஊர்-தொறும்
மீன் சுடு புகையின் புலவு நாறு நெடும் கொடி
வயல் உழை மருதின் வாங்கு சினை வலக்கும்	10
பெரு நல் யாணரின் ஒரீஇ இனியே
கலி கெழு கடவுள் கந்தம் கைவிட
பலி கண்மாறிய பாழ்படு பொதியில்
நரை மூதாளர் நாய் இட குழிந்த
வல்லின் நல் அகம் நிறைய பல் பொறி		15
கான வாரணம் ஈனும்
காடு ஆகி விளியும் நாடு உடையோரே
					மேல்
# 53 பொருந்தில் இளங்கீரனார்
முதிர் வார் இப்பி முத்த வார் மணல்
கதிர் விடு மணியின் கண் பொரு மாடத்து
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும்
விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற
களம் கொள் யானை கடு மான் பொறைய		5
விரிப்பின் அகலும் தொகுப்பின் எஞ்சும்
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை
கைம்முற்றல நின் புகழே என்றும்
ஒளியோர் பிறந்த இ மலர் தலை உலகத்து
வாழேம் என்றலும் அரிதே தாழாது		10
செறுத்த செய்யுள் செய் செம் நாவின்
வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன்
இன்று உளன் ஆயின் நன்று-மன் என்ற நின்
ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப
பாடுவன்-மன்னால் பகைவரை கடப்பே		15
					மேல்
# 54 கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார்
எம் கோன் இருந்த கம்பலை மூதூர்
உடையோர் போல இடை இன்று குறுகி
செம்மல் நாள்_அவை அண்ணாந்து புகுதல்
எம் அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே
இரவலர்க்கு எண்மை அல்லது புரவு எதிர்ந்து		5
வானம் நாண வரையாது சென்றோர்க்கு
ஆனாது ஈயும் கவிகை வண்மை
கடு மான் கோதை துப்பு எதிர்ந்து எழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்கும்_காலை
பாசிலை தொடுத்த உவலை கண்ணி		10
மாசு உண் உடுக்கை மடி வாய் இடையன்
சிறு தலை ஆயமொடு குறுகல் செல்லா
புலி துஞ்சு வியன் புலத்து அற்றே
வலி துஞ்சு தட கை அவன் உடை நாடே		14
					மேல்
# 55 மதுரை மருதன் இளநாகனார்
ஓங்கு மலை பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ
ஒரு கணை கொண்டு மூ எயில் உடற்றி
பெரு விறல் அமரர்க்கு வெற்றி தந்த
கறை_மிடற்று_அண்ணல் காமர் சென்னி
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல		5
வேந்து மேம்பட்ட பூ தார் மாற
கடும் சினத்த கொல் களிறும்
கதழ் பரிய கலி_மாவும்
நெடும் கொடிய நிமிர் தேரும்
நெஞ்சு உடைய புகல் மறவரும் என		10
நான்கு உடன் மாண்டது ஆயினும் மாண்ட
அற நெறி முதற்றே அரசின் கொற்றம்
அதனால் நமர் என கோல் கோடாது
பிறர் என குணம் கொல்லாது
ஞாயிற்று அன்ன வெம் திறல் ஆண்மையும்		15
திங்கள் அன்ன தண் பெரும் சாயலும்
வானத்து அன்ன வண்மையும் மூன்றும்
உடையை ஆகி இல்லோர் கையற
நீ நீடு வாழிய நெடுந்தகை தாழ் நீர்
வெண் தலை புணரி அலைக்கும் செந்தில்		20
நெடுவேள் நிலைஇய காமர் வியன் துறை
கடு வளி தொகுப்ப ஈண்டிய
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே
					மேல்
# 56 மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
# மதுரை மருதன் இளநாகனார் எனவும் பாடம்
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை
மாற்று அரும் கணிச்சி மணி மிடற்றோனும்
கடல் வளர் புரி வளை புரையும் மேனி
அடல் வெம் நாஞ்சில் பனைக்கொடியோனும்
மண்_உறு திரு மணி புரையும் மேனி		5
விண் உயர் புள் கொடி விறல் வெய்யொனும்
மணி மயில் உயரிய மாறா வென்றி
பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும் என
ஞாலம் காக்கும் கால முன்பின்
தோலா நல் இசை நால்வருள்ளும்			10
கூற்று ஒத்தீயே மாற்று அரும் சீற்றம்
வலி ஒத்தீயே வாலியோனை
புகழ் ஒத்தீயே இகழுநர் அடுநனை
முருகு ஒத்தீயே முன்னியது முடித்தலின்
ஆங்காங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும்		15
அரியவும் உளவோ நினக்கே அதனால்
இரவலர்க்கு அரும் கலம் அருகாது ஈயா
யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல்
பொன் செய் புனை கலத்து ஏந்தி நாளும்
ஒண் தொடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து		20
ஆங்கு இனிது ஒழுகு-மதி ஓங்கு வாள் மாற
அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும்
வெம்_கதிர்_செல்வன் போலவும் குட திசை
தண் கதிர் மதியம் போலவும்
நின்று நிலைஇயர் உலகமோடு உடனே		25
					மேல்
# 57 காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார்
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன
உரை சால் சிறப்பின் புகழ் சால் மாற
நின் ஒன்று கூறுவது உடையோன் என் எனின்
நீயே பிறர் நாடு கொள்ளும்_காலை அவர் நாட்டு	5
இறங்கு கதிர் கழனி நின் இளையரும் கவர்க
நனம் தலை பேரூர் எரியும் நைக்க
மின்னு நிமிர்ந்து அன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல்
ஒன்னார் செகுப்பினும் செகுக்க என்னதூஉம்
கடி_மரம் தடிதல் ஓம்பு நின்			10
நெடு நல் யானைக்கு கந்து ஆற்றாவே
					மேல்
# 58 காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார்
நீயே தண் புனல் காவிரி கிழவனை இவனே
முழு_முதல் தொலைந்த கோளி ஆலத்து
கொழு நிழல் நெடும் சினை வீழ் பொறுத்து ஆங்கு
தொல்லோர் மாய்ந்து என துளங்கல் செல்லாது
நல் இசை முது குடி நடுக்கு அற தழீஇ		5
இளையது ஆயினும் கிளை அரா எறியும்
அரு நரை உருமின் பொருநரை பொறாஅ
செரு மாண் பஞ்சவர் ஏறே நீயே
அறம் துஞ்சு உறந்தை பொருநனை இவனே
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என		10
வரைய சாந்தமும் திரைய முத்தமும்
இமிழ் குரல் முரசம் மூன்று உடன் ஆளும்
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே
பால் நிற உருவின் பனைக்கொடியோனும்
நீல் நிற உருவின் நேமியோனும் என்று		15
இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்கு
உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி
இ நீர் ஆகலின் இனியவும் உளவோ
இன்னும் கேள்-மின் நும் இசை வாழியவே
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர் இருவீரும்		20
உடன் நிலை திரியீர் ஆயின் இமிழ் திரை
பௌவம் உடுத்த இ பயம் கெழு மா நிலம்
கையகப்படுவது பொய் ஆகாதே
அதனால் நல்ல போலவும் நயவ போலவும்
தொல்லோர் சென்ற நெறியர் போலவும்		25
காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும்
ஏதில்_மாக்கள் பொதுமொழி கொள்ளாது
இன்றே போல்க நும் புணர்ச்சி வென்று_வென்று
அடு_களத்து உயர்க நும் வேலே கொடு_வரி
கோள்_மா குயின்ற சேண் விளங்கு தொடு பொறி	30
நெடு நீர் கெண்டையொடு பொறித்த
குடுமிய ஆக பிறர் குன்று கெழு நாடே
					மேல்
# 59 மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தனார்
ஆரம் தாழ்ந்த அணி கிளர் மார்பின்
தாள் தோய் தட கை தகை மாண் வழுதி
வல்லை மன்ற நீ நயந்து அளித்தல்
தேற்றாய் பெரும பொய்யே என்றும்
காய் சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும்		5
ஞாயிறு அனையை நின் பகைவர்க்கு
திங்கள் அனையை எம்மனோர்க்கே
					மேல்
# 60 உறையூர் மருத்துவன் தாமோதரனார்
முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்
உச்சி நின்ற உவவு மதி கண்டு
கட்சி மஞ்ஞையின் சுர முதல் சேர்ந்த
சில் வளை விறலியும் யானும் வல் விரைந்து	5
தொழுதனம் அல்லமோ பலவே கானல்
கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும்
ஆரை சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரன் உடை நோன் பகட்டு அன்ன எம் கோன்
வலன் இரங்கு முரசின் வாய் வாள் வளவன்		10
வெயில் மறை கொண்ட உரு கெழு சிறப்பின்
மாலை வெண்குடை ஒக்குமால் எனவே
					மேல்
 




# 61 கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரை குமரனார்
கொண்டை கூழை தண் தழை கடைசியர்
சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்
மலங்கு மிளிர் செறுவின் தளம்பு தடிந்து இட்ட
பழன வாளை பரூஉ கண் துணியல்
புது நெல் வெண் சோற்று கண்ணுறை ஆக		5
விலா புடை மருங்கு விசிப்ப மாந்தி
நீடு கதிர் கழனி சூடு தடுமாறும்
வன் கை வினைஞர் புன் தலை சிறாஅர்
தெங்கு படு வியன் பழம் முனையின் தந்தையர்
குறை கண் நெடு போர் ஏறி விசைத்து எழுந்து	10
செழும் கோள் பெண்ணை பழம் தொட முயலும்
வைகல் யாணர் நன் நாட்டு பொருநன்
எஃகு விளங்கு தட கை இயல் தேர் சென்னி
சிலை தார் அகலம் மலைக்குநர் உளர் எனின்
தாம் அறிகுவர் தமக்கு உறுதி யாம் அவன்		15
எழு உறழ் திணி தோள் வழு இன்றி மலைந்தோர்
வாழ கண்டன்றும் இலமே தாழாது
திருந்து அடி பொருந்த வல்லோர்
வருந்த காண்டல் அதனினும் இலமே
					மேல்
# 62 கழா தலையார்
வரு தார் தாங்கி அமர் மிகல் யாவது
பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டு
குருதி செம் கை கூந்தல் தீட்டி
நிறம் கிளர் உருவின் பேஎய்_பெண்டிர்
எடுத்து எறி அனந்தல் பறை சீர் தூங்க		5
பருந்து அருந்து உற்ற தானையொடு செரு முனிந்து
அறத்தின் மண்டிய மற போர் வேந்தர்
தாம் மாய்ந்தனரே குடை துளங்கினவே
உரை சால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே
பன் நூறு அடுக்கிய வேறு படு பைம் ஞிலம்		10
இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறை
களம் கொளற்கு உரியோர் இன்றி தெறுவர
உடன் வீழ்ந்தன்றால் அமரே பெண்டிரும்
பாசடகு மிசையார் பனி நீர் மூழ்கார்
மார்பு_அகம் பொருந்தி ஆங்கு அமைந்தன்றே		15
வாடா பூவின் இமையா நாட்டத்து
நாற்ற_உணவினோரும் ஆற்ற
அரும்_பெறல்_உலகம் நிறைய
விருந்து பெற்றனரால் பொலிக நும் புகழே
					மேல்
# 63 பரணர்
எனை பல் யானையும் அம்பொடு துளங்கி
விளைக்கும் வினை இன்றி படை ஒழிந்தனவே
விறல் புகழ் மாண்ட புரவி எல்லாம்
மற தகை மைந்தரொடு ஆண்டு பட்டனவே
தேர் தர வந்த சான்றோர் எல்லாம்		5
தோல் கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனரே
விசித்து வினை மாண்ட மயிர் கண் முரசம்
பொறுக்குநர் இன்மையின் இருந்து விளிந்தனவே
சாந்து அமை மார்பின் நெடு வேல் பாய்ந்து என
வேந்தரும் பொருது களத்து ஒழிந்தனர் இனியே	10
என் ஆவது-கொல் தானே கழனி
ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர்
பாசவல் முக்கி தண் புனல் பாயும்
யாணர் அறாஅ வைப்பின்
காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே		15
					மேல்
# 64 நெடும்பல்லியத்தனார்
நல் யாழ் ஆகுளி பதலையொடு சுருக்கி
செல்லாமோ தில் சில் வளை விறலி
களிற்று கணம் பொருத கண் அகன் பறந்தலை
விசும்பு ஆடு எருவை பசும் தடி தடுப்ப
பகை புலம் மரீஇய தகை பெரும் சிறப்பின்		5
குடுமி கோமான் கண்டு
நெடு நீர் புற்கை நீத்தனம் வரற்கே
					மேல்
# 65 கழாஅ தலையார்
மண் முழா மறப்ப பண் யாழ் மறப்ப
இரும் கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப
சுரும்பு ஆர் தேறல் சுற்றம் மறப்ப
உழவர் ஓதை மறப்ப விழவும்
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப			5
உவவு தலைவந்த பெரு நாள் அமையத்து
இரு சுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர்
புன்கண் மாலை மலை மறைந்து ஆங்கு
தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
புறப்புண் நாணி மற தகை மன்னன்		10
வாள் வடக்கிருந்தனன் ஈங்கு
நாள் போல் கழியல ஞாயிற்று பகலே
					மேல்
# 66 வெண்ணி குயத்தியார்
நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக
களி இயல் யானை கரிகால்வளவ
சென்று அமர் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே		5
கலி கொள் யாணர் வெண்ணி பறந்தலை
மிக புகழ் உலகம் எய்தி
புறப்புண் நாணி வடக்கிருந்தோனே
					மேல்
# 67 பிசிராந்தையார்
அன்ன சேவல் அன்ன சேவல்	
ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல்
நாடு தலையளிக்கும் ஒண் முகம் போல
கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும்
மையல் மாலை யாம் கையறுபு இனைய		5
குமரி அம் பெரும் துறை அயிரை மாந்தி
வட_மலை பெயர்குவை ஆயின் இடையது
சோழ நன் நாட்டு படினே கோழி
உயர் நிலை மாடத்து குறும்_பறை அசைஇ
வாயில் விடாது கோயில் புக்கு எம்		10
பெரும் கோ கிள்ளி கேட்க இரும் பிசிர்
ஆந்தை அடியுறை எனினே மாண்ட நின்
இன்புறு பேடை அணிய தன்
அன்பு உறு நன் கலம் நல்குவன் நினக்கே
					மேல்
# 68 கோவூர் கிழார்
உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின்
கடும்பின் கடும் பசி களையுநர் காணாது
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து_நொந்து
ஈங்கு எவன் செய்தியோ பாண பூண் சுமந்து
அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து		5
மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின்
ஆடவர் பிணிக்கும் பீடு கெழு நெடுந்தகை
புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போல
சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர்
மன்பதை புரக்கும் நன் நாட்டு பொருநன்		10
உட்பகை ஒரு திறம் பட்டு என புள் பகைக்கு
ஏவான் ஆகலின் சாவேம் யாம் என
நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப
தணி பறை அறையும் அணி கொள் தேர் வழி
கடும் கள் பருகுநர் நடுங்கு கை உகத்த		15
நறும் சேறு ஆடிய வறும் தலை யானை
நெடு நகர் வரைப்பின் படு முழா ஓர்க்கும்
உறந்தையோனே குருசில்
பிறன் கடை மறப்ப நல்குவன் செலினே
					மேல்
# 69 ஆலந்தூர் கிழார்
கையது கடன் நிறை யாழே மெய்யது
புரவலர் இன்மையின் பசியே அரையது
வேற்று இழை நுழைந்த வேர் நனை சிதாஅர்
ஓம்பி உடுத்த உயவல் பாண
பூட்கை இல்லோன் யாக்கை போல		5
பெரும் புல்லென்ற இரும் பேர் ஒக்கலை
வையகம் முழுதுடன் வளைஇ பையென
என்னை வினவுதி ஆயின் மன்னர்
அடு களிறு உயவும் கொடி கொள் பாசறை
குருதி பரப்பின் கோட்டு_மா தொலைச்சி		10
புலா களம் செய்த கலாஅ தானையன்
பிறங்கு நிலை மாடத்து உறந்தையோனே
பொருநர்க்கு ஓங்கிய வேலன் ஒரு நிலை
பகை புலம் படர்தலும் உரியன் தகை தார்
ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண்		15
கிள்ளிவளவன் படர்குவை ஆயின்
நெடும் கடை நிற்றலும் இலையே கடும் பகல்
தேர் வீசு இருக்கை ஆர நோக்கி
நீ அவன் கண்ட பின்றை பூவின்
ஆடு வண்டு இமிரா தாமரை			20
சூடாய் ஆதல் அதனினும் இலையே
					மேல்
# 70 கோவூர் கிழார்
தேஎம் தீம் தொடை சீறியாழ் பாண
கயத்து வாழ் யாமை காழ் கோத்து அன்ன
நுண் கோல் தகைத்த தெண் கண் மா கிணை
இனிய காண்க இவண் தணிக என கூறி
வினவல் ஆனா முது வாய் இரவல		5
தைஇ திங்கள் தண் கயம் போல
கொள_கொள குறைபடா கூழ் உடை வியன் நகர்
அடு தீ அல்லது சுடு தீ அறியாது
இரு மருந்து விளைக்கும் நன் நாட்டு பொருநன்
கிள்ளிவளவன் நல் இசை உள்ளி			10
நாற்ற நாட்டத்து அறு_கால்_பறவை
சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும்
கைவள் ஈகை பண்ணன் சிறுகுடி
பாதிரி கமழும் ஓதி ஒண் நுதல்
இன் நகை விறலியொடு மென்மெல இயலி		15
செல்வை ஆயின் செல்வை ஆகுவை
விறகு ஒய் மாக்கள் பொன் பெற்று அன்னது ஓர்
தலைப்பாடு அன்று அவன் ஈகை
நினைக்க வேண்டா வாழ்க அவன் தாளே
					மேல்
 




# 71 ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து
அடங்கா தானை வேந்தர் உடங்கு இயைந்து
என்னொடு பொருதும் என்ப அவரை
ஆர் அமர் அலற தாக்கி தேரோடு
அவர் புறங்காணேன் ஆயின் சிறந்த		5
பேர் அமர் உண்கண் இவளினும் பிரிக
அறன் நிலை திரியா அன்பின் அவையத்து
திறன் இல் ஒருவனை நாட்டி முறை திரிந்து
மெலி_கோல் செய்தேன் ஆகுக மலி புகழ்
வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின்		10
பொய்யா யாணர் மையல் கோமான்
மாவனும் மன் எயில் ஆந்தையும் உரை சால்
அந்துவன்சாத்தனும் ஆதன்அழிசியும்
வெம் சின இயக்கனும் உளப்பட பிறரும்
கண் போல் நண்பின் கேளிரொடு கலந்த		15
இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்றோ
மன்பதை காக்கும் நீள் குடி சிறந்த
தென் புலம் காவலின் ஒரீஇ பிறர்
வன்_புலம் காவலின் மாறி யான் பிறக்கே
					மேல்
# 72 தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
நகு_தக்கனரே நாடு மீக்கூறுநர்
இளையன் இவன் என உளைய கூறி
படு மணி இரட்டும் பா அடி பணை தாள்
நெடு நல் யானையும் தேரும் மாவும்
படை அமை மறவரும் உடையம் யாம் என்று	5
உறு துப்பு அஞ்சாது உடல் சினம் செருக்கி
சிறு_சொல் சொல்லிய சினம் கெழு வேந்தரை
அரும் சமம் சிதைய தாக்கி முரசமொடு
ஒருங்கு அகப்படேஎன் ஆயின் பொருந்திய
என் நிழல் வாழ்நர் செல் நிழல் காணாது		10
கொடியன் எம் இறை என கண்ணீர் பரப்பி
குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்		15
புலவர் பாடாது வரைக என் நிலவரை
புரப்போர் புன்கண் கூர
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே
					மேல்
# 73 சோழன் நலங்கிள்ளி
மெல்ல வந்து என் நல் அடி பொருந்தி
ஈ என இரக்குவர் ஆயின் சீர் உடை
முரசு கெழு தாயத்து அரசோ தஞ்சம்
இன் உயிர் ஆயினும் கொடுக்குவென் இ நிலத்து
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது என்		5
உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே மைந்து உடை
கழை தின் யானை கால் அகப்பட்ட
வன் திணி நீள் முளை போல சென்று அவண்	10
வருந்த பொரேஎன் ஆயின் பொருந்திய
தீது இல் நெஞ்சத்து காதல் கொள்ளா
பல் இரும் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கு இடை குழைக என் தாரே
					மேல்
# 74 சேரமான் கணைக்கா லிரும்பொறை
குழவி இறப்பினும் ஊன் தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம்
மதுகை இன்றி வயிற்று_தீ தணிய			5
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இ உலகத்தானே
					மேல்
# 75 சோழன் நலங்கிள்ளி
மூத்தோர் மூத்தோர் கூற்றம் உய்த்து என
பால் தர வந்த பழ விறல் தாயம்
எய்தினம் ஆயின் எய்தினம் சிறப்பு என
குடி புரவு இரக்கும் கூர் இல் ஆண்மை
சிறியோன் பெறின் அது சிறந்தன்று-மன்னே		5
மண்டு அமர் பரிக்கும் மதன் உடை நோன் தாள்
விழுமியோன் பெறுகுவன் ஆயின் தாழ் நீர்
அறு கய மருங்கின் சிறு கோல் வெண் கிடை
என்றூழ் வாடு வறல் போல நன்றும்
நொய்தால் அம்ம தானே மை அற்று		10
விசும்பு உற ஓங்கிய வெண்குடை
முரசு கெழு வேந்தர் அரசு கெழு திருவே
					மேல்
# 76 இடைக்குன்றூர் கிழார்
ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்று இ உலகத்து இயற்கை
இன்றின் ஊங்கோ கேளலம் திரள் அரை
மன்ற வேம்பின் மா சினை ஒண் தளிர்
நெடும் கொடி உழிஞை பவரொடு மிடைந்து		5
செறிய தொடுத்த தேம் பாய் கண்ணி
ஒலியல் மாலையொடு பொலிய சூடி
பாடு இன் தெண் கிணை கறங்க காண்_தக
நாடு கெழு திருவின் பசும் பூண் செழியன்
பீடும் செம்மலும் அறியார் கூடி			10
பொருதும் என்று தன் தலை வந்த
புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க
ஒருதான் ஆகி பொருது களத்து அடலே
					மேல்
# 77 இடைக்குன்றூர் கிழார்
கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டு
குடுமி களைந்த நுதல் வேம்பின் ஒண் தளிர்
நெடும் கொடி உழிஞை பவரொடு மிலைந்து
குறும் தொடி கழித்த கை சாபம் பற்றி
நெடும் தேர் கொடிஞ்சி பொலிய நின்றோன்		5
யார்-கொல் வாழ்க அவன் கண்ணி தார் பூண்டு
தாலி களைந்தன்றும் இலனே பால் விட்டு
அயினியும் இன்று அயின்றனனே வயின்_வயின்
உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை
வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே அவரை		10
அழுந்த பற்றி அகல் விசும்பு ஆர்ப்பு எழ
கவிழ்ந்து நிலம் சேர அட்டதை
மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினும் இலனே
					மேல்
# 78 இடைக்குன்றூர் கிழார்
வணங்கு தொடை பொலிந்த வலி கெழு நோன் தாள்
அணங்கு அரும் கடும் திறல் என் ஐ முணங்கு நிமிர்ந்து
அளை செறி உழுவை இரைக்கு வந்து அன்ன
மலைப்பு அரும் அகலம் மதியார் சிலைத்து எழுந்து
விழுமியம் பெரியம் யாமே நம்மின்		5
பொருநனும் இளையன் கொண்டியும் பெரிது என
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர் புறத்தில் பெயர
ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான் ஆண்டு அவர்
மாண் இழை மகளிர் நாணினர் கழிய		10
தந்தை தம் ஊர் ஆங்கண்
தெண் கிணை கறங்க சென்று ஆண்டு அட்டனனே
					மேல்
# 79 இடைக்குன்றூர் கிழார்
மூதூர் வாயில் பனி கயம் மண்ணி
மன்ற வேம்பின் ஒண் குழை மிலைந்து
தெண் கிணை முன்னர் களிற்றின் இயலி
வெம் போர் செழியனும் வந்தனன் எதிர்ந்த
வம்ப மள்ளரோ பலரே				5
எஞ்சுவர்-கொல்லோ பகல் தவ சிறிதே
					மேல்
# 80 சாத்தந்தையார்
இன் கடும் கள்ளின் ஆமூர் ஆங்கண்
மைந்து உடை மல்லன் மத வலி முருக்கி
ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே ஒரு கால்
வரு தார் தாங்கி பின் ஒதுங்கின்றே
நல்கினும் நல்கான் ஆயினும் வெல் போர்		5
பொரல் அரும் தித்தன் காண்க தில் அம்ம
பசித்து பணை முயலும் யானை போல
இரு தலை ஒசிய எற்றி
களம் புகு மல்லன் கடந்து அடு நிலையே
					மேல்
 




# 81 சாத்தந்தையார்
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே
கார் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே
யார்-கொல் அளியர் தாமே ஆர் நார்
செறிய தொடுத்த கண்ணி
கவி கை மள்ளன் கைப்பட்டோரே			5
					மேல்
# 82 சாத்தந்தையார்
சாறு தலைக்கொண்டு என பெண் ஈற்று_உற்று என
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்று
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ
ஊர் கொள வந்த பொருநனொடு			5
ஆர் புனை தெரியல் நெடுந்தகை போரே
					மேல்
# 83 பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார்
அடி புனை தொடு கழல் மை அணல் காளைக்கு என்
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே
அடு தோள் முயங்கல் அவை நாணுவலே
என் போல் பெரு விதுப்பு உறுக என்றும்
ஒரு பால் படாஅது ஆகி			5
இரு பால் பட்ட இ மையல் ஊரே
					மேல்
# 84 பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்
என் ஐ புற்கை உண்டும் பெரும் தோளன்னே
யாமே புறஞ்சிறை இருந்தும் பொன் அன்னம்மே
போர் எதிர்ந்து என் ஐ போர்_களம் புகினே
கல்லென் பேர் ஊர் விழவு உடை ஆங்கண்
ஏமுற்று கழிந்த மள்ளர்க்கு			5
உமணர் வெரூஉம் துறை அன்னன்னே
					மேல்
# 85 பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்
என் ஐக்கு ஊர் இஃது அன்மையானும்
என் ஐக்கு நாடு இஃது அன்மையானும்
ஆடு ஆடு என்ப ஒருசாரோரே
ஆடு அன்று என்ப ஒருசாரோரே
நல்ல பல்லோர் இரு நன் மொழியே		5
அம் சிலம்பு ஒலிப்ப ஓடி எம் இல்
முழா அரை போந்தை பொருந்தி நின்று
யான் கண்டனன் அவன் ஆடு ஆகுதலே
					மேல்
# 86 காவல் பெண்டு காதற்பெண்டு எனவும் பாடம்
சிற்றில் நல் தூண் பற்றி நின் மகன்
யாண்டு உளனோ என வினவுதி என் மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே			5
தோன்றுவன் மாதோ போர்_களத்தானே
					மேல்
# 87 ஔவையார்
களம் புகல் ஓம்பு-மின் தெவ்விர் போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே		4
					மேல்
# 88 ஔவையார்
யாவிர் ஆயினும் கூழை தார் கொண்டு
யாம் பொருதும் என்றல் ஓம்பு-மின் ஓங்கு திறல்
ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெருமகன்
கதிர் விடு நுண் பூண் அம் பகட்டு மார்பின்
விழவு மேம்பட்ட நல் போர்			5
முழவு தோள் என் ஐயை காணா ஊங்கே
					மேல்
# 89 ஔவையார்
இழை அணி பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்
மடவரல் உண்கண் வாள் நுதல் விறலி
பொருநரும் உளரோ நும் அகன் தலை நாட்டு என
வினவல் ஆனா பொரு படை வேந்தே
எறி கோல் அஞ்சா அரவின் அன்ன		5
சிறு வல் மள்ளரும் உளரே அதாஅன்று
பொதுவில் தூங்கும் விசி_உறு தண்ணுமை
வளி பொரு தெண் கண் கேட்பின்
அது போர் என்னும் என் ஐயும் உளனே
					மேல்
# 90 ஔவையார்
உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள்
அடை மல்கு குளவியொடு கமழும் சாரல்
மற புலி உடலின் மான் கணம் உளவோ
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
இருளும் உண்டோ ஞாயிறு சினவின்		5
அச்சொடு தாக்கி பார் உற்று இயங்கிய
பண்ட சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய
விரி மணல் ஞெமர கல் பக நடக்கும்
பெருமித பகட்டுக்கு துறையும் உண்டோ
எழுமரம் கடுக்கும் தாள் தோய் தட கை		10
வழு இல் வன் கை மழவர் பெரும
இரு நில மண் கொண்டு சிலைக்கும்
பொருநரும் உளரோ நீ களம் புகினே
					மேல்
 




# 91 ஔவையார்
வலம் படு வாய் வாள் ஏந்தி ஒன்னார்
களம் பட கடந்த கழல் தொடி தட கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போர் அடு திருவின் பொலம் தார் அஞ்சி
பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி		5
நீல மணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே தொல் நிலை
பெரு மலை விடர்_அகத்து அரு மிசை கொண்ட
சிறியிலை நெல்லி தீம் கனி குறியாது
ஆதல் நின் அகத்து அடக்கி			10
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே
					மேல்
# 92 ஔவையார்
யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா
பொருள் அறிவாரா ஆயினும் தந்தையர்க்கு
அருள் வந்தனவால் புதல்வர் தம் மழலை
என் வாய் சொல்லும் அன்ன ஒன்னார்
கடி மதில் அரண் பல கடந்து			5
நெடுமான்_அஞ்சி நீ அருளல் மாறே
					மேல்
# 93 ஔவையார்
திண் பிணி முரசம் இழுமென முழங்க
சென்று அமர் கடத்தல் யாவது வந்தோர்
தார் தாங்குதலும் ஆற்றார் வெடிபட்டு
ஓடல் மரீஇய பீடு இல் மன்னர்
நோய்_பால் விளிந்த யாக்கை தழீஇ		5
காதல் மறந்து அவர் தீது மருங்கு அறும்-மார்
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி
மறம் கந்து ஆக நல் அமர் வீழ்ந்த
நீள் கழல் மறவர் செல்வு_உழி செல்க என		10
வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து
அண்ணல் யானை அடு_களத்து ஒழிய
அரும் சமம் ததைய நூறி நீ
பெருந்தகை விழுப்புண் பட்ட மாறே		15
					மேல்
# 94 ஔவையார்
ஊர் குறு_மாக்கள் வெண் கோடு கழாஅலின்
நீர் துறை படியும் பெரும் களிறு போல
இனியை பெரும எமக்கே மற்று அதன்
துன் அரும் கடாஅம் போல
இன்னாய் பெரும நின் ஒன்னாதோர்க்கே		5
					மேல்
# 95 ஔவையார்
இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டி
கண் திரள் நோன் காழ் திருத்தி நெய் அணிந்து
கடி உடை வியன் நகரவ்வே அவ்வே
பகைவர் குத்தி கோடு நுதி சிதைந்து
கொல் துறை குற்றில மாதோ என்றும்		5
உண்டு ஆயின் பதம் கொடுத்து
இல் ஆயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல் எம் கோமான் வை நுதி வேலே		
					மேல்
# 96 ஔவையார்
அலர் பூ தும்பை அம் பகட்டு மார்பின்
திரண்டு நீடு தட கை என் ஐ இளையோற்கு
இரண்டு எழுந்தனவால் பகையே ஒன்றே
பூ போல் உண்கண் பசந்து தோள் நுணுகி
நோக்கிய மகளிர் பிணித்தன்று ஒன்றே		5
விழவின்று ஆயினும் படு பதம் பிழையாது
மை ஊன் மொசித்த ஒக்கலொடு துறை நீர்
கை_மான் கொள்ளுமோ என
உறையுள் முனியும் அவன் செல்லும் ஊரே
					மேல்
# 97 ஔவையார்
போர்க்கு உரைஇ புகன்று கழித்த வாள்
உடன்றவர் காப்பு உடை மதில் அழித்தலின்
ஊன் உற மூழ்கி உரு இழந்தனவே
வேலே குறும்பு அடைந்த அரண் கடந்து அவர்
நறும் கள்ளின் நாடு நைத்தலின்			5
சுரை தழீஇய இரும் காழொடு
மடை கலங்கி நிலை திரிந்தனவே
களிறே எழூஉ தாங்கிய கதவம் மலைத்து அவர்
குழூஉ களிற்று குறும்பு உடைத்தலின்
பரூஉ பிணிய தொடி கழிந்தனவே			10
மாவே பரந்து ஒருங்கு மலைந்த மறவர்
பொலம் பைம் தார் கெட பரிதலின்
களன் உழந்து அசைஇய மறு குளம்பினவே
அவன் தானும் நிலம் திரைக்கும் கடல் தானை
பொலம் தும்பை கழல் பாண்டில்			15
கணை பொருத துளை தோலன்னே
ஆயிடை உடன்றோர் உய்தல் யாவது தடம் தாள்
பிணி கதிர் நெல்லின் செம்மல் மூதூர்
நுமக்கு உரித்து ஆகல் வேண்டின் சென்று அவற்கு
இறுக்கல் வேண்டும் திறையே மறுப்பின்		20
ஒல்வான் அல்லன் வெல் போரான் என
சொல்லவும் தேறீர் ஆயின் மெல் இயல்
கழல் கனி வகுத்த துணை சில் ஓதி
குறும் தொடி மகளிர் தோள் விடல்
இறும்பூது அன்று அஃது அறிந்து ஆடு-மினே		25
					மேல்
# 98 ஔவையார்
முனை தெவ்வர் முரண் அவிய
பொர குறுகிய நுதி மருப்பின் நின்
இன களிறு செல கண்டவர்
மதில் கதவம் எழு செல்லவும்
பிணன் அழுங்க களன் உழக்கி			5
செலவு அசைஇய மறு குளம்பின் நின்
இன நன் மா செல கண்டவர்
கவை முள்ளின் புழை அடைப்பவும்
மார்பு உற சேர்ந்து ஒல்கா
தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர்		10
தோல் கழியொடு பிடி செறிப்பவும்
வாள் வாய்த்த வடு பரந்த நின்
மற மைந்தர் மைந்து கண்டவர்
புண் படு குருதி அம்பு ஒடுக்கவும்
நீயே ஐயவி புகைப்பவும் தாங்காது ஒய்யென		15
உறு முறை மரபின் புறம் நின்று உய்க்கும்
கூற்றத்து அனையை ஆகலின் போற்றார்
இரங்க விளிவது-கொல்லோ வரம்பு அணைந்து
இறங்கு கதிர் அலம்வரு கழனி
பெரும் புனல் படப்பை அவர் அகன் தலை நாடே	20
					மேல்
# 99 ஔவையார்
அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும்
அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்
நீர் அக இருக்கை ஆழி சூட்டிய
தொல் நிலை மரபின் நின் முன்னோர் போல
ஈகை அம் கழல் கால் இரும் பனம் புடையல்		5
பூ ஆர் காவின் புனிற்று புலால் நெடு வேல்
எழு பொறி நாட்டத்து எழாஅ தாயம்
வழு இன்று எய்தியும் அமையாய் செரு வேட்டு
இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணி
சென்று அமர் கடந்து நின் ஆற்றல் தோற்றிய		10
அன்றும் பாடுநர்க்கு அரியை இன்றும்
பரணன் பாடினன்-மன்-கொல் மற்று நீ
முரண் மிகு கோவலூர் நூறி நின்
அரண் அடு திகிரி ஏந்திய தோளே
					மேல்
# 100 ஔவையார்
கையது வேலே காலன புனை கழல்
மெய்யது வியரே மிடற்றது பசும் புண்
வட்கர் போகிய வளர் இளம் போந்தை
உச்சி கொண்ட ஊசி வெண் தோட்டு
வெட்சி மா மலர் வேங்கையொடு விரைஇ		5
சுரி இரும் பித்தை பொலிய சூடி
வரி வயம் பொருத வய களிறு போல
இன்னும் மாறாது சினனே அன்னோ
உய்ந்தனர் அல்லர் இவன் உடற்றியோரே
செறுவர் நோக்கிய கண் தன்			10
சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே
					மேல்
 



# 101 ஔவையார்
ஒரு நாள் செல்லலம் இரு நாள் செல்லலம்
பல நாள் பயின்று பலரொடு செல்லினும்
தலை நாள் போன்ற விருப்பினன் மாதோ
இழை அணி யானை இயல் தேர் அஞ்சி
அதியமான் பரிசில் பெறூஉம் காலம்		5
நீட்டினும் நீட்டாது ஆயினும் யானை தன்
கோட்டு இடை வைத்த கவளம் போல
கையகத்தது அது பொய் ஆகாதே
அருந்த ஏமாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே		10
					மேல்
# 102 ஔவையார்
எருதே இளைய நுகம் உணராவே
சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே
அவல் இழியினும் மிசை ஏறினும்
அவணது அறியுநர் யார் என உமணர்
கீழ்_மரத்து யாத்த சேம அச்சு அன்ன		5
இசை விளங்கு கவி கை நெடியோய் திங்கள்
நாள் நிறை மதியத்து அனையை இருள்
யாவணதோ நின் நிழல் வாழ்வோர்க்கே
					மேல்
# 103 ஔவையார்
ஒரு தலை பதலை தூங்க ஒரு தலை
தூம்பு அக சிறு முழா தூங்க தூக்கி
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார் என
சுரன் முதல் இருந்த சில் வளை விறலி
செல்வை ஆயின் சேணோன் அல்லன்		5
முனை சுட எழுந்த மங்குல் மா புகை
மலை சூழ் மஞ்சின் மழ களிறு அணியும்
பகை புலத்தோனே பல் வேல் அஞ்சி
பொழுது இடைப்படாஅ புலரா மண்டை
மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப	10
அலத்தல் காலை ஆயினும்
புரத்தல் வல்லன் வாழ்க அவன் தாளே
					மேல்
# 104 ஔவையார்
போற்று-மின் மறவீர் சாற்றுதும் நும்மை
ஊர் குறு_மாக்கள் ஆட கலங்கும்
தாள் படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்பு உடை கராஅத்து அன்ன என் ஐ
நுண் பல் கருமம் நினையாது			5
இளையன் என்று இகழின் பெறல் அரிது ஆடே
					மேல்
# 105 கபிலர்
சே இழை பெறுகுவை வாள் நுதல் விறலி
தடவு வாய் கலித்த மா இதழ் குவளை
வண்டு படு புது மலர் தண் சிதர் கலாவ
பெய்யினும் பெய்யாது ஆயினும் அருவி
கொள் உழு வியன் புலத்து உழை கால் ஆக		5
மால்பு உடை நெடு வரை கோடு-தோறு இழிதரும்
நீரினும் இனிய சாயல்
பாரி வேள்_பால் பாடினை செலினே
					மேல்
# 106 கபிலர்
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்
புல் இலை எருக்கம் ஆயினும் உடையவை
கடவுள் பேணேம் என்னா ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்
கடவன் பாரி கைவண்மையே			5
					மேல்
# 107 கபிலர்
பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவன் புகழ்வர் செம் நா புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே
					மேல்
# 108 கபிலர்
குறத்தி மாட்டிய வறல் கடை கொள்ளி
ஆரம் ஆதலின் அம் புகை அயலது
சாரல் வேங்கை பூ சினை தவழும்
பறம்பு பாடினரதுவே அறம் பூண்டு
பாரியும் பரிசிலர் இரப்பின்			5
வாரேன் என்னான் அவர் வரையன்னே
					மேல்
# 109 கபிலர்
அளிதோ தானே பாரியது பறம்பே
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
ஒன்றே சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே
இரண்டே தீம் சுளை பலவின் பழம் ஊழ்க்கும்மே	5
மூன்றே கொழும் கொடி வள்ளி கிழங்கு வீழ்க்கும்மே
நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீது அழிந்து
திணி நெடும் குன்றம் தேன் சொரியும்மே
வான் கண் அற்று அவன் மலையே வானத்து
மீன் கண் அற்று அதன் சுனையே ஆங்கு		10
மரம்-தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்
புலம்-தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்
தாளின் கொள்ளலிர் வாளின் தாரலன்
யான் அறிகுவன் அது கொள்ளும் ஆறே
சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி		15
விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வர
ஆடினிர் பாடினிர் செலினே
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே
					மேல்
# 110 கபிலர்
கடந்து அடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நன் நாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
யாமும் பாரியும் உளமே			5
குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே
					மேல்
 
 



# 111 கபிலர்
அளிதோ தானே பேர் இரும் குன்றே
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே
நீலத்து இணை மலர் புரையும் உண்கண்
கிணை_மகட்கு எளிதால் பாடினள் வரினே
					மேல்
# 112 பாரி மகளிர்
அற்றை திங்கள் அ வெண் நிலவில்
எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார்
இற்றை திங்கள் இ வெண் நிலவில்
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே		5
					மேல்
# 113 கபிலர்
மட்டு வாய் திறப்பவும் மை விடை வீழ்ப்பவும்
அட்டு ஆன்று ஆனா கொழும் துவை ஊன்_சோறும்
பெட்டு ஆங்கு ஈயும் பெரு வளம் பழுனி
நட்டனை-மன்னோ முன்னே இனியே
பாரி மாய்ந்து என கலங்கி கையற்று		5
நீர் வார் கண்ணேம் தொழுது நின் பழிச்சி
சேறும் வாழியோ பெரும் பெயர் பறம்பே
கோல் திரள் முன்கை குறும் தொடி மகளிர்
நாறு இரும் கூந்தல் கிழவரை படர்ந்தே
					மேல்
#114 கபிலர்
ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும் சிறு வரை
சென்று நின்றோர்க்கும் தோன்றும் மன்ற
களிறு மென்று இட்ட கவளம் போல
நறவு பிழிந்து இட்ட கோது உடை சிதறல்
வார் அசும்பு ஒழுகும் முன்றில்			5
தேர் வீசு இருக்கை நெடியோன் குன்றே
					மேல்
# 115 கபிலர்
ஒருசார் அருவி ஆர்ப்ப ஒருசார்
பாணர் மண்டை நிறைய பெய்ம்-மார்
வாக்க உக்க தே கள் தேறல்
கல் அலைத்து ஒழுகும்-மன்னே பல் வேல்
அண்ணல் யானை வேந்தர்க்கு			5
இன்னான் ஆகிய இனியோன் குன்றே
					மேல்
# 116 கபிலர்
தீம் நீர் பெரும் குண்டு சுனை பூத்த குவளை
கூம்பு அவிழ் முழு_நெறி புரள்வரும் அல்குல்
ஏந்து எழில் மழை கண் இன் நகை மகளிர்
புன் மூசு கவலைய முள் மிடை வேலி
பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண்			5
பீரை நாறிய சுரை இவர் மருங்கின்
ஈத்து இலை குப்பை ஏறி உமணர்
உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ
நோகோ யானே தேய்கமா காலை
பயில் பூ சோலை மயில் எழுந்து ஆலவும்		10
பயில் இரும் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும்
கலையும் கொள்ளா ஆக பலவும்
காலம் அன்றியும் மரம் பயம் பகரும்
யாணர் அறாஅ வியல் மலை அற்றே
அண்ணல் நெடு வரை ஏறி தந்தை		15
பெரிய நறவின் கூர் வேல் பாரியது
அருமை அறியார் போர் எதிர்ந்து வந்த
வலம் படு தானை வேந்தர்
பொலம் படை கலி_மா எண்ணுவோரே
					மேல்
# 117 கபிலர்
மைம்_மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
வயல்_அகம் நிறைய புதல் பூ மலர
மனை தலை மகவை ஈன்ற அமர் கண்
ஆமா நெடு நிரை நன் புல் ஆர			5
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி
பெயல் பிழைப்பு அறியா புன்_புலத்ததுவே
பிள்ளை வெருகின் முள் எயிறு புரைய
பாசிலை முல்லை முகைக்கும்
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே		10
					மேல்
# 118 கபிலர்
அறையும் பொறையும் மணந்த தலைய
எண் நாள் திங்கள் அனைய கொடும் கரை
தெண் நீர் சிறு குளம் கீள்வது மாதோ
கூர் வேல் குவைஇய மொய்ம்பின்
தேர் வண் பாரி தண் பறம்பு நாடே		5
					மேல்
# 119 கபிலர்
கார் பெயல் தலைஇய காண்பு இன் காலை
களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப
செம் புற்று ஈயலின் இன் அளை புளித்து
மென் தினை யாணர்த்து நந்தும்-கொல்லோ
நிழல் இல் நீள் இடை தனி மரம் போல		5
பணை கெழு வேந்தரை இறந்தும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே
					மேல்
# 120 கபிலர்
வெப்புள் விளைந்த வேங்கை செம் சுவல்
கார் பெயல் கலித்த பெரும் பாட்டு ஈரத்து
பூழி மயங்க பல உழுது வித்தி
பல்லி ஆடிய பல் கிளை செவ்வி
களை கால் கழாலின் தோடு ஒலிபு நந்தி		5
மென் மயில் புனிற்று பெடை கடுப்ப நீடி
கரும் தாள் போகி ஒருங்கு பீள் விரிந்து
கீழும் மேலும் எஞ்சாமை பல காய்த்து
வாலிதின் விளைந்த புது வரகு அரிய
தினை கொய்ய கவ்வை கறுப்ப அவரை		10
கொழும் கொடி விளர் காய் கோள் பதம் ஆக
நிலம் புதை பழுனிய மட்டின் தேறல்
புல் வேய் குரம்பை குடி-தொறும் பகர்ந்து
நறு நெய் கடலை விசைப்ப சோறு அட்டு
பெரும் தோள் தாலம் பூசல் மேவர		15
வருந்தா யாணர்த்து நந்தும்-கொல்லோ
இரும் பல் கூந்தல் மடந்தையர் தந்தை
ஆடு கழை நரலும் சேண் சிமை புலவர்
பாடி ஆனா பண்பின் பகைவர்
ஓடு கழல் கம்பலை கண்ட			20
செரு வெம் சேஎய் பெரு விறல் நாடே
					மேல்
 




# 121 கபிலர்
ஒரு திசை ஒருவனை உள்ளி நால் திசை
பலரும் வருவர் பரிசில்_மாக்கள்
வரிசை அறிதலோ அரிதே பெரிதும்
ஈதல் எளிதே மா வண் தோன்றல்
அது நற்கு அறிந்தனை ஆயின்			5
பொதுநோக்கு ஒழி-மதி புலவர் மாட்டே
					மேல்
# 122 கபிலர்
கடல் கொளப்படாஅது உடலுநர் ஊக்கார்
கழல் புனை திருந்து அடி காரி நின் நாடே
அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே
வீயா திருவின் விறல் கெழு தானை
மூவருள் ஒருவன் துப்பு ஆகியர் என		5
ஏத்தினர் தரூஉம் கூழே நும் குடி
வாழ்த்தினர் வரூஉம் இரவலரதுவே
வட_மீன் புரையும் கற்பின் மட மொழி
அரிவை தோள் அளவு அல்லதை
நினது என இலை நீ பெருமிதத்தையே		10
					மேல்
# 123 கபிலர்
நாள்_கள் உண்டு நாள்_மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே
தொலையா நல் இசை விளங்கு மலயன்
மகிழாது ஈத்த இழை அணி நெடும் தேர்
பயன் கெழு முள்ளூர் மீமிசை			5
பட்ட மாரி உறையினும் பலவே
					மேல்
# 124 கபிலர்
நாள் அன்று போகி புள் இடை தட்ப
பதன் அன்று புக்கு திறன் அன்று மொழியினும்
வறிது பெயர்குநர் அல்லர் நெறி கொள
பாடு ஆன்று இரங்கும் அருவி
பீடு கெழு மலையன் பாடியோரே			5
					மேல்
# 125 வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார்
பருத்தி_பெண்டின் பனுவல் அன்ன
நெருப்பு சினம் தணிந்த நிணம் தயங்கு கொழும் குறை
பரூஉ கள் மண்டையொடு ஊழ் மாறு பெயர
உண்கும் எந்தை நின் காண்கு வந்திசினே
நள்ளாதார் மிடல் சாய்ந்த			5
வல்லாள நின் மகிழ் இருக்கையே
உழுத நோன் பகடு அழி தின்று ஆங்கு
நல் அமிழ்து ஆக நீ நயந்து உண்ணும் நறவே
குன்றத்து அன்ன களிறு பெயர
கடந்து அட்டு வென்றோனும் நின் கூறும்மே		10
வெலீஇயோன் இவன் என
கழல் அணி பொலிந்த சேவடி நிலம் கவர்பு
விரைந்து வந்து சமம் தாங்கிய
வல் வேல் மலையன் அல்லன் ஆயின்
நல் அமர் கடத்தல் எளிது-மன் நமக்கு என		15
தோற்றோன் தானும் நின் கூறும்மே
தொலைஇயோன் இவன் என
ஒரு நீ ஆயினை பெரும பெரு மழைக்கு
இருக்கை சான்ற உயர் மலை
திரு தகு சேஎய் நின் பெற்றிசினோர்க்கே		20
					மேல்
# 126 மாறோக்கத்து நப்பசலையார்
ஒன்னார் யானை ஓடை பொன் கொண்டு
பாணர் சென்னி பொலிய தைஇ
வாடா தாமரை சூட்டிய விழு சீர்
ஓடா பூட்கை உரவோன் மருக
வல்லேம் அல்லேம் ஆயினும் வல்லே		5
நின்_வயின் கிளக்குவம் ஆயின் கங்குல்
துயில் மடிந்து அன்ன தூங்கு இருள் இறும்பின்
பறை இசை அருவி முள்ளூர் பொருந
தெறல் அரு மரபின் நின் கிளையொடும் பொலிய
நில மிசை பரந்த மக்கட்கு எல்லாம்		10
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்
இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி
பரந்து இசை நிற்க பாடினன் அதன் கொண்டு
சினம் மிகு தானை வானவன் குட கடல்
பொலம் தரு நாவாய் ஓட்டிய அ வழி		15
பிற கலம் செல்கலாது அனையேம் அத்தை
இன்மை துரப்ப இசை தர வந்து நின்
வண்மையின் தொடுத்தனம் யாமே முள் எயிற்று
அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப
அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய	20
அரும் சமம் ததைய தாக்கி நன்றும்
நண்ணா தெவ்வர் தாங்கும்
பெண்ணை அம் படப்பை நாடு கிழவோயே
					மேல்
# 127 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
களங்கனி அன்ன கரும் கோட்டு சீறியாழ்
பாடு இன் பனுவல் பாணர் உய்த்து என
களிறு இல ஆகிய புல் அரை நெடு வெளில்
கான மஞ்ஞை கணனொடு சேப்ப
ஈகை அரிய இழை அணி மகளிரொடு		5
சாயின்று என்ப ஆஅய் கோயில்
சுவைக்கு இனிது ஆகிய குய் உடை அடிசில்
பிறர்க்கு ஈவு இன்றி தம் வயிறு அருத்தி
உரை சால் ஓங்கு புகழ் ஒரீஇய
முரைசு கெழு செல்வர் நகர் போலாதே		10
					மேல்
# 128 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
மன்ற பலவின் மா சினை மந்தி
இரவலர் நாற்றிய விசி கூடு முழவின்
பாடு இன் தெண் கண் கனி செத்து அடிப்பின்
அன்ன சேவல் மாறு எழுந்து ஆலும்
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்		5
ஆடு_மகள் குறுகின் அல்லது
பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே
					மேல்
# 129 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
குறி இறை குரம்பை குறவர் மாக்கள்
வாங்கு அமை பழுனிய தேறல் மகிழ்ந்து
வேங்கை முன்றில் குரவை அயரும்
தீம் சுளை பலவின் மா மலை கிழவன்
ஆஅய் அண்டிரன் அடு போர் அண்ணல்		5
இரவலர்க்கு ஈத்த யானையின் கரவு இன்று
வானம் மீன் பல பூப்பின் ஆனாது
ஒரு வழி கரு வழி இன்றி
பெரு வெள் என்னில் பிழையாது-மன்னே
					மேல்
# 130 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
விளங்கு மணி கொடும் பூண் ஆஅய் நின் நாட்டு
இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ
நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு
இன்முகம் கரவாது உவந்து நீ அளித்த
அண்ணல் யானை எண்ணின் கொங்கர்		5
குட கடல் ஓட்டிய ஞான்றை
தலைப்பெயர்த்து இட்ட வேலினும் பலவே
					மேல்
 




# 131 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
மழை கணம் சேக்கும் மா மலை கிழவன்
வழை பூ கண்ணி வாய் வாள் அண்டிரன்
குன்றம் பாடின-கொல்லோ
களிறு மிக உடைய இ கவின் பெறு காடே
					மேல்
# 132 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
முன் உள்ளுவோனை பின் உள்ளினேனே
ஆழ்க என் உள்ளம் போழ்க என் நாவே
பாழ் ஊர் கிணற்றின் தூர்க என் செவியே
நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி
குவளை பைம் சுனை பருகி அயல		5
தகர தண் நிழல் பிணையொடு வதியும்
வட திசையதுவே வான் தோய் இமயம்
தென் திசை ஆஅய் குடி இன்று ஆயின்
பிறழ்வது-மன்னோ இ மலர் தலை உலகே

# 133 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
மெல் இயல் விறலி நீ நல் இசை செவியின்
கேட்பின் அல்லது காண்பு அறியலையே
காண்டல் வேண்டினை ஆயின் மாண்ட நின்
விரை வளர் கூந்தல் வரை வளி உளர
கலவ மஞ்ஞையின் காண்வர இயலி		5
மாரி அன்ன வண்மை
தேர் வேள் ஆயை காணிய சென்மே
					மேல்
# 134 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அற விலை வணிகன் ஆஅய் அல்லன்
பிறரும் சான்றோர் சென்ற நெறி என
ஆங்கு பட்டன்று அவன் கைவண்மையே
					மேல்
# 135 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
கொடு_வரி வழங்கும் கோடு உயர் நெடு வரை
அரு விடர் சிறு நெறி ஏறலின் வருந்தி
தடவரல் கொண்ட தகை மெல் ஒதுக்கின்
வளை கை விறலி என் பின்னள் ஆக
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின்		5
வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப
படுமலை நின்ற பயம் கெழு சீறியாழ்
ஒல்கல் உள்ளமொடு ஒரு புடை தழீஇ
புகழ் சால் சிறப்பின் நின் நல் இசை உள்ளி
வந்தெனன் எந்தை யானே என்றும்		10
மன்று படு பரிசிலர் காணின் கன்றொடு
கறை அடி யானை இரியல்_போக்கும்
மலை கெழு நாடன் மா வேள் ஆஅய்
களிறும் அன்றே மாவும் அன்றே
ஒளிறு படை புரவிய தேரும் அன்றே		15
பாணர் பாடுநர் பரிசிலர் ஆங்கு அவர்
தமது என தொடுக்குவர் ஆயின் எமது என
பற்றல் தேற்றா பயம் கெழு தாயமொடு
அன்ன ஆக நின் ஊழி நின்னை
காண்டல் வேண்டிய அளவை வேண்டார்		20
உறு முரண் கடந்த ஆற்றல்
பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே
					மேல்
# 136 துறையூர் ஓடை கிழார்
யாழ் பத்தர் புறம் கடுப்ப
இழை வலந்த பல் துன்னத்து
இடை புரை பற்றி பிணி விடாஅ
ஈர் குழாத்தொடு இறைகூர்ந்த
பேஎன் பகை என ஒன்று என்கோ			5
உண்ணாமையின் ஊன் வாடி
தெண் நீரின் கண் மல்கி
கசிவு_உற்ற என் பல் கிளையொடு
பசி அலைக்கும் பகை ஒன்று என்கோ
அன்ன தன்மையும் அறிந்தீயார்			10
நின்னது தா என நிலை தளர
மரம் பிறங்கிய நளி சிலம்பின்
குரங்கு அன்ன புன் குறும் கூளியர்
பரந்து அலைக்கும் பகை ஒன்று என்கோ
ஆஅங்கு எனை பகையும் அறியுநன் ஆய்		15
என கருதி பெயர் ஏத்தி
வாயார நின் இசை நம்பி
சுடர் சுட்ட சுரத்து ஏறி
இவண் வந்த பெரு நசையேம்
எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்			20
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப என
அனைத்து உரைத்தனன் யான் ஆக
நினக்கு ஒத்தது நீ நாடி
நல்கினை விடு-மதி பரிசில் அல்கலும்
தண் புனல் வாயில் துறையூர் முன்துறை		25
நுண் பல மணலினும் ஏத்தி
உண்குவம் பெரும நீ நல்கிய வளனே
					மேல்
# 137 ஒருசிறை பெரியனார்
இரங்கு முரசின் இனம் சால் யானை
முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை
இன்னும் ஓர் யான் அவா அறியேனே
நீயே முன் யான் அறியுமோனே துவன்றிய
கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது		5
கழை கரும்பின் ஒலிக்குந்து
கொண்டல் கொண்ட நீர் கோடை காயினும்
கண் அன்ன மலர் பூக்குந்து
கரும் கால் வேங்கை மலரின் நாளும்
பொன் அன்ன வீ சுமந்து			10
மணி அன்ன நீர் கடல் படரும்
செம் வரை படப்பை நாஞ்சில் பொருந
சிறு வெள் அருவி பெரும் கல் நாடனை
நீ வாழியர் நின் தந்தை
தாய் வாழியர் நின் பயந்திசினோரே		15
					மேல்
# 138 மருதன் இளநாகனார்
ஆன்_இனம் கலித்த அதர் பல கடந்து
மான்_இனம் கலித்த மலை பின் ஒழிய
மீன்_இனம் கலித்த துறை பல நீந்தி
உள்ளி வந்த வள் உயிர் சீறியாழ்
சிதாஅர் உடுக்கை முதாஅரி பாண			5
நீயே பேர் எண்ணலையே நின் இறை
மாறி வா என மொழியலன் மாதோ
ஒலி இரும் கதுப்பின் ஆய்_இழை கணவன்
கிளி மரீஇய வியன் புனத்து
மரன் அணி பெரும் குரல் அனையன் ஆதலின்	10
நின்னை வருதல் அறிந்தனர் யாரே
					மேல்
# 139 மருதன் இளநாகனார்
சுவல் அழுந்த பல காய
சில் ஓதி பல் இளைஞருமே
அடி வருந்த நெடிது ஏறிய
கொடி மருங்குல் விறலியருமே
வாழ்தல் வேண்டி				5
பொய் கூறேன் மெய் கூறுவல்
ஓடா பூட்கை உரவோர் மருக
உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந
மாயா உள்ளமொடு பரிசில் துன்னி
கனி பதம் பார்க்கும் காலை அன்றே		10
ஈதல் ஆனான் வேந்தே வேந்தற்கு
சாதல் அஞ்சாய் நீயே ஆயிடை
இரு நிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு ஒரு நாள்
அரும் சமம் வருகுவது ஆயின்
வருந்தலும் உண்டு என் பைதல் அம் கடும்பே	15
					மேல்
# 140 ஔவையார்
தடவு நிலை பலவின் நாஞ்சில் பொருநன்
மடவன் மன்ற செம் நா புலவீர்
வளை கை விறலியர் படப்பை கொய்த
அடகின் கண்ணுறை ஆக யாம் சில
அரிசி வேண்டினெம் ஆக தான் பிற		5
வரிசை அறிதலின் தன்னும் தூக்கி
இரும் கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர்
பெரும் களிறு நல்கியோனே அன்னது ஓர்
தேற்றா ஈகையும் உளது-கொல்
போற்றார் அம்ம பெரியோர் தம் கடனே		10
					மேல்
 




# 141 பரணர்
பாணன் சூடிய பசும்_பொன் தாமரை
மாண் இழை விறலி மாலையொடு விளங்க
கடும் பரி நெடும் தேர் பூட்டு விட்டு அசைஇ
ஊரீர் போல சுரத்து இடை இருந்தனிர்
யாரீரோ என வினவல் ஆனா			5
காரென் ஒக்கல் கடும் பசி இரவல
வென் வேல் அண்ணல் காணா ஊங்கே
நின்னினும் புல்லியேம்-மன்னே இனியே
இன்னேம் ஆயினேம்-மன்னே என்றும்
உடாஅ போரா ஆகுதல் அறிந்தும்			10
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ
கடாஅ யானை கலி_மான் பேகன்
எ துணை ஆயினும் ஈதல் நன்று என
மறுமை நோக்கின்றோ அன்றே
பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே	15
					மேல்
# 142 பரணர்
அறு குளத்து உகுத்தும் அகல் வயல் பொழிந்தும்
உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரி போல
கடாஅ யானை கழல் கால் பேகன்
கொடை மடம்படுதல் அல்லது			5
படை மடம்படான் பிறர் படை மயக்கு_உறினே
					மேல்
# 143 கபிலர்
மலை வான் கொள்க என உயர் பலி தூஉய்
மாரி ஆன்று மழை மேக்கு உயர்க என
கடவுள் பேணிய குறவர் மாக்கள்
பெயல் கண்மாறிய உவகையர் சாரல்
புன தினை அயிலும் நாட சின போர்		5
கைவள் ஈகை கடு மான் பேக
யார்-கொல் அளியள் தானே நெருநல்
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்து என
குணில் பாய் முரசின் இரங்கும் அருவி
நளி இரும் சிலம்பின் சீறூர் ஆங்கண்		10
வாயில் தோன்றி வாழ்த்தி நின்று
நின்னும் நின் மலையும் பாட இன்னாது
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்
முலை_அகம் நனைப்ப விம்மி
குழல் இனைவது போல் அழுதனள் பெரிதே		15
					மேல்
# 144 கபிலர்
அருளாய் ஆகலோ கொடிதே இருள் வர
சீறியாழ் செவ்வழி பண்ணி யாழ நின்
கார் எதிர் கானம் பாடினேம் ஆக
நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண்
கலுழ்ந்து வார் அரி பனி பூண் அகம் நனைப்ப		5
இனைதல் ஆனாள் ஆக இளையோய்
கிளையை-மன் எம் கேள் வெய்யோற்கு என
யாம் தன் தொழுதனம் வினவ காந்தள்
முகை புரை விரலின் கண்ணீர் துடையா
யாம் அவன் கிளைஞரேம் அல்லேம் கேள் இனி	10
எம் போல் ஒருத்தி நலன் நயந்து என்றும்
வரூஉம் என்ப வயங்கு புகழ் பேகன்
ஒல்லென ஒலிக்கும் தேரொடு
முல்லை வேலி நல் ஊரானே
					மேல்
# 145 கபிலர்
மட_தகை மா மயில் பனிக்கும் என்று அருளி
படாஅம் ஈத்த கெடாஅ நல் இசை
கடாஅ யானை கலி_மான் பேக
பசித்தும் வாரோம் பாரமும் இலமே
களங்கனி அன்ன கரும் கோட்டு சீறியாழ்		5
நயம் புரிந்து உறையுநர் நடுங்க பண்ணி
அறம் செய்தீமோ அருள் வெய்யோய் என
இஃது யாம் இரந்த பரிசில் அஃது இருளின்
இன மணி நெடும் தேர் ஏறி
இன்னாது உறைவி அரும் படர் களைமே		10
					மேல்
# 146 அரிசில் கிழார்
அன்ன ஆக நின் அரும் கல வெறுக்கை
அவை பெறல் வேண்டேம் அடு போர் பேக
சீறியாழ் செவ்வழி பண்ணி நின் வன்_புல
நன் நாடு பாட என்னை நயந்து
பரிசில் நல்குவை ஆயின் குரிசில் நீ		5
நல்காமையின் நைவர சாஅய்
அரும் துயர் உழக்கும் நின் திருந்து இழை அரிவை
கலி மயில் கலாவம் கால் குவித்து அன்ன
ஒலி மென் கூந்தல் கமழ் புகை கொளீஇ
தண் கமழ் கோதை புனைய			10
வண் பரி நெடும் தேர் பூண்க நின் மாவே
					மேல்
# 147 பெருங்குன்றூர் கிழார்
கல் முழை அருவி பன் மலை நீந்தி
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததை
கார் வான் இன் உறை தமியள் கேளா
நெருநல் ஒரு சிறை புலம்பு கொண்டு உறையும்
அரி மதர் மழை கண் அம் மா அரிவை		5
நெய்யொடு துறந்த மை இரும் கூந்தல்
மண்_உறு மணியின் மாசு அற மண்ணி
புது மலர் கஞல இன்று பெயரின்
அது-மன் எம் பரிசில் ஆவியர் கோவே
					மேல்
# 148 வன்பரணர்
கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி நின்
அசைவு இல் நோன் தாள் நசை வளன் ஏத்தி
நாள்-தொறும் நன் கலம் களிற்றொடு கொணர்ந்து
கூடு விளங்கு வியல் நகர் பரிசில் முற்று அளிப்ப
பீடு இல் மன்னர் புகழ்ச்சி வேண்டி			5
செய்யா கூறி கிளத்தல்
எய்யாது ஆகின்று எம் சிறு செம் நாவே
					மேல்
# 149 வன்பரணர்
நள்ளி வாழியோ நள்ளி நள்ளென்
மாலை மருதம் பண்ணி காலை
கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி
வரவு எமர் மறந்தனர் அது நீ
புரவு கடன் பூண்ட வண்மை யானே		5
					மேல்
# 150 வன் பரணர்
கூதிர் பருந்தின் இரும் சிறகு அன்ன
பாறிய சிதாரேன் பலவு முதல் பொருந்தி
தன்னும் உள்ளேன் பிறிது புலம் படர்ந்த என்
உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி
மான் கணம் தொலைச்சிய குருதி அம் கழல் கால்	5
வான் கதிர் திரு மணி விளங்கும் சென்னி
செல்வ தோன்றல் ஓர் வல் வில் வேட்டுவன்
தொழுதனென் எழுவேன் கை கவித்து இரீஇ
இழுதின் அன்ன வால் நிண கொழும் குறை
கான் அதர் மயங்கிய இளையர் வல்லே		10
தாம் வந்து எய்தா அளவை ஒய்யென
தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டு நின்
இரும் பேர் ஒக்கலொடு தின்ம் என தருதலின்
அமிழ்தின் மிசைந்து காய் பசி நீங்கி
நன் மரன் நளிய நறும் தண் சாரல்		15
கல் மிசை அருவி தண்ணென பருகி
விடுத்தல் தொடங்கினேன் ஆக வல்லே
பெறுதற்கு அரிய வீறு சால் நன் கலம்
பிறிது ஒன்று இல்லை காட்டு நாட்டேம் என
மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம்		20
மடை செறி முன்கை கடகமொடு ஈத்தனன்
எ நாடோ என நாடும் சொல்லான்
யாரீரோ என பேரும் சொல்லான்
பிறர்_பிறர் கூற வழி கேட்டிசினே
இரும்பு புனைந்து இயற்றா பெரும் பெயர் தோட்டி	25
அம் மலை காக்கும் அணி நெடும் குன்றின்
பளிங்கு வகுத்து அன்ன தீ நீர்
நளி மலை நாடன் நள்ளி அவன் எனவே
					மேல்
 



# 151 பெருந்தலை சாத்தனார்
பண்டும்_பண்டும் பாடுநர் உவப்ப
விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன்
கிழவன் சேண் புலம் படரின் இழை அணிந்து
புன் தலை மட பிடி பரிசில் ஆக
பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண் புகழ்		5
கண்டீரக்கோன் ஆகலின் நன்றும்
முயங்கல் ஆன்றிசின் யானே பொலம் தேர்
நன்னன் மருகன் அன்றியும் நீயும்
முயங்கற்கு ஒத்தனை-மன்னே வயங்கு மொழி
பாடுநர்க்கு அடைத்த கதவின் ஆடு மழை		10
அணங்கு சால் அடுக்கம் பொழியும் நும்
மணம் கமழ் மால் வரை வரைந்தனர் எமரே
					மேல்
# 152 வன்பரணர்
வேழம் வீழ்த்த விழு தொடை பகழி
பேழ் வாய் உழுவையை பெரும்பிறிது உறீஇ
புழல் தலை புகர் கலை உருட்டி உரல் தலை
கேழல் பன்றி வீழ அயலது
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும்		5
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன்
புகழ் சால் சிறப்பின் அம்பு மிக திளைக்கும்
கொலைவன் யார்-கொலோ கொலைவன் மற்று இவன்
விலைவன் போலான் வெறுக்கை நன்கு உடையன்
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்		10
சாரல் அருவி பய மலை கிழவன்
ஓரி-கொல்லோ அல்லன்-கொல்லோ
பாடுவல் விறலி ஓர் வண்ணம் நீரும்
மண் முழா அமை-மின் பண் யாழ் நிறு-மின்
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடு-மின்	15
எல்லரி தொடு-மின் ஆகுளி தொடு-மின்
பதலை ஒரு கண் பையென இயக்கு-மின்
மதலை மா கோல் கைவலம் தமின் என்று
இறைவன் ஆகலின் சொல்லுபு குறுகி
மூவேழ் துறையும் முறையுளி கழிப்பி		20
கோ என பெயரிய_காலை ஆங்கு அது
தன் பெயர் ஆகலின் நாணி மற்று யாம்
நாட்டிடன்_நாட்டிடன் வருதும் ஈங்கு ஓர்
வேட்டுவர் இல்லை நின் ஒப்போர் என
வேட்டது மொழியவும் விடாஅன் வேட்டத்தில்	25
தான் உயிர் செகுத்த மான் நிண புழுக்கோடு
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி
தன் மலை பிறந்த தா இல் நன் பொன்
பல் மணி குவையொடும் விரைஇ கொண்ம் என
சுரத்து இடை நல்கியோனே விடர் சிமை		30
ஓங்கு இரும் கொல்லி பொருநன்
ஓம்பா ஈகை விறல் வெய்யோனே
					மேல்
# 153 வன்பரணர்
மழை அணி குன்றத்து கிழவன் நாளும்
இழை அணி யானை இரப்போர்க்கு ஈயும்
சுடர்விடு பசும் பூண் சூர்ப்பு அமை முன்கை
அடு போர் ஆனா ஆதன் ஓரி
மாரி வண் கொடை காணிய நன்றும்		5
சென்றது-மன் எம் கண்ணுள் அம் கடும்பே
பனி நீர் பூவா மணி மிடை குவளை
வால் நார் தொடுத்த கண்ணியும் கலனும்
யானை இனத்தொடு பெற்றனர் நீங்கி
பசியார் ஆகல் மாறு-கொல் விசி பிணி		10
கூடு கொள் இன் இயம் கறங்க
ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்தே
					மேல்
# 154 மோசிகீரனார்
திரை பொரு முந்நீர் கரை நணி செலினும்
அறியுநர் காணின் வேட்கை நீக்கும்
சில் நீர் வினவுவர் மாந்தர் அது போல்
அரசர் உழையர் ஆகவும் புரை தபு
வள்ளியோர் படர்குவர் புலவர் அதனால்		5
யானும் பெற்றது ஊதியம் பேறு யாது என்னேன்
உற்றனென் ஆதலின் உள்ளி வந்தனனே
ஈ என இரத்தலோ அரிதே நீ அது
நல்கினும் நல்காய் ஆயினும் வெல் போர்
எறி படைக்கு ஓடா ஆண்மை அறுவை		10
தூ விரி கடுப்ப துவன்றி மீமிசை
தண் பல இழிதரும் அருவி நின்
கொண்பெரும்கானம் பாடல் எனக்கு எளிதே
					மேல்
# 155 மோசி கீரனார்
வணர் கோட்டு சீறியாழ் வாடு புடை தழீஇ
உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்க என
கிளக்கும் பாண கேள் இனி நயத்தின்
பாழ் ஊர் நெருஞ்சி பசலை வான் பூ
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு		5
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்
கொண்பெரும்கானத்து கிழவன்
தண் தார் அகலம் நோக்கின மலர்ந்தே
					மேல்
# 156 மோசிகீரனார்
ஒன்று நன்கு உடைய பிறர் குன்றம் என்றும்
இரண்டு நன்கு உடைத்தே கொண்பெரும்கானம்
நச்சி சென்ற இரவலர் சுட்டி
தொடுத்து உண கிடப்பினும் கிடக்கும் அஃதான்று
நிறை அரும் தானை வேந்தரை			5
திறை கொண்டு பெயர்க்கும் செம்மலும் உடைத்தே
					மேல்
# 157 குறமகள் இளவெயினி
தமர் தன் தப்பின் அது நோன்றல்லும்
பிறர் கையறவு தான் நாணுதலும்
படை பழி தாரா மைந்தினன் ஆகலும்
வேந்து உடை அவையத்து ஓங்குபு நடத்தலும்
நும்மோர்க்கு தகுவன அல்ல எம்மோன்		5
சிலை செல மலர்ந்த மார்பின் கொலை வேல்
கோடல் கண்ணி குறவர் பெருமகன்
ஆடு மழை தவிர்க்கும் பயம் கெழு மீமிசை
எல் படு பொழுதின் இனம் தலைமயங்கி
கட்சி காணா கடமான் நல் ஏறு			10
மட மான் நாகு பிணை பயிரின் விடர் முழை
இரும் புலி புகர் போத்து ஓர்க்கும்
பெரும் கல் நாடன் எம் ஏறைக்கு தகுமே
					மேல்
# 158 பெருஞ்சித்திரனார்
முரசு கடிப்பு இகுப்பவும் வால் வளை துவைப்பவும்
அரசு உடன் பொருத அண்ணல் நெடு வரை
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும்
பறம்பின் கோமான் பாரியும் பிறங்கு மிசை
கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும்		5
காரி ஊர்ந்து பேர் அமர் கடந்த
மாரி ஈகை மற போர் மலையனும்
ஊராது ஏந்திய குதிரை கூர் வேல்
கூவிளம் கண்ணி கொடும் பூண் எழினியும்
ஈர்ம் தண் சிலம்பின் இருள் தூங்கும் நளி முழை	10
அரும் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை
பெரும் கல் நாடன் பேகனும் திருந்து மொழி
மோசி பாடிய ஆயும் ஆர்வம்_உற்று
உள்ளி வருநர் உலைவு நனி தீர
தள்ளாது ஈயும் தகை சால் வண்மை		15
கொள்ளார் ஓட்டிய நள்ளியும் என ஆங்கு
எழுவர் மாய்ந்த பின்றை அழிவர
பாடி வருநரும் பிறரும் கூடி
இரந்தோர் அற்றம் தீர்க்கு என விரைந்து இவண்
உள்ளி வந்தனென் யானே விசும்பு உற		20
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி
ஆசினி கவினிய பலவின் ஆர்வு_உற்று
முள் புற முது கனி பெற்ற கடுவன்
துய் தலை மந்தியை கையிடூஉ பயிரும்
அதிரா யாணர் முதிரத்து கிழவ			25
இவண் விளங்கு சிறப்பின் இயல் தேர் குமண
இசை மேந்தோன்றிய வண்மையொடு
பகை மேம்படுக நீ ஏந்திய வேலே
					மேல்
# 159 பெருஞ்சித்திரனார்
வாழும் நாளொடு யாண்டு பல உண்மையின்
தீர்தல் செல்லாது என் உயிர் என பல புலந்து
கோல் கால் ஆக குறும் பல ஒதுங்கி
நூல் விரித்து அன்ன கதுப்பினள் கண் துயின்று
முன்றில் போகா முதுர்வினள் யாயும்		5
பசந்த மேனியொடு படர் அட வருந்தி
மருங்கில் கொண்ட பல் குறு_மாக்கள்
பிசைந்து தின வாடிய முலையள் பெரிது அழிந்து
குப்பை கீரை கொய் கண் அகைத்த
முற்றா இளம் தளிர் கொய்துகொண்டு உப்பு இன்று	10
நீர் உலையாக ஏற்றி மோர் இன்று
அவிழ் பதம் மறந்து பாசடகு மிசைந்து
மாசொடு குறைந்த உடுக்கையள் அறம் பழியா
துவ்வாள் ஆகிய என் வெய்யோளும்
என்று ஆங்கு இருவர் நெஞ்சமும் உவப்ப கானவர்	15
கரி புனம் மயக்கிய அகன் கண் கொல்லை
ஐவனம் வித்தி மை உற கவினி
ஈனல் செல்லா ஏனற்கு இழுமென
கருவி வானம் தலைஇ ஆங்கும்
ஈத்த நின் புகழ் ஏத்தி தொக்க என்			20
பசி தின திரங்கிய ஒக்கலும் உவப்ப
உயர்ந்து ஏந்து மருப்பின் கொல் களிறு பெறினும்
தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென் உவந்து நீ
இன்புற விடுதி ஆயின் சிறிது
குன்றியும் கொள்வல் கூர் வேல் குமண		25
அதற்பட அருளல் வேண்டுவல் விறல் புகழ்
வசை இல் விழு திணை பிறந்த
இசை மேம் தோன்றல் நின் பாடிய யானே
					மேல்
# 160 பெருஞ்சித்திரனார்
உரு கெழு ஞாயிற்று ஒண் கதிர் மிசைந்த
முளி புல் கானம் குழைப்ப கல்லென
அதிர் குரல் ஏறோடு துளி சொரிந்து ஆங்கு
பசி தின திரங்கிய கசிவு உடை யாக்கை
அவிழ் புகுவு அறியாது ஆகலின் வாடிய		5
நெறி கொள் வரி குடர் குளிப்ப தண்ணென
குய் கொள் கொழும் துவை நெய் உடை அடிசில்
மதி சேர் நாள்_மீன் போல நவின்ற
சிறு பொன் நன் கலம் சுற்ற இரீஇ
கேடு இன்று ஆக பாடுநர் கடும்பு என		10
அரிது பெறு பொலம் கலம் எளிதினின் வீசி
நட்டோர் நட்ட நல் இசை குமணன்
மட்டு ஆர் மறுகின் முதிரத்தோனே
செல்குவை ஆயின் நல்குவன் பெரிது என
பல் புகழ் நுவலுநர் கூற வல் விரைந்து		15
உள்ளம் துரப்ப வந்தனென் எள்_உற்று
இல் உணா துறத்தலின் இல் மறந்து உறையும்
புல் உளை குடுமி புதல்வன் பன் மாண்
பால் இல் வறு முலை சுவைத்தனன் பெறாஅன்
கூழும் சோறும் கடைஇ ஊழின்			20
உள் இல் வரும் கலம் திறந்து அழ கண்டு
மற புலி உரைத்தும் மதியம் காட்டியும்
நொந்தனள் ஆகி நுந்தையை உள்ளி
பொடிந்த நின் செவ்வி காட்டு என பலவும்
வினவல் ஆனாள் ஆகி நனவின்			25
அல்லல் உழப்போள் மல்லல் சிறப்ப
செல்லா செல்வம் மிகுத்தனை வல்லே
விடுதல் வேண்டுவல் அத்தை படு திரை
நீர் சூழ் நிலவரை உயர நின்
சீர் கெழு விழு புகழ் ஏத்துகம் பலவே		30
					மேல்
 




# 161 பெருஞ்சித்திரனார்
நீண்டு ஒலி அழுவம் குறைபட முகந்துகொண்டு
ஈண்டு செலல் கொண்மூ வேண்டு வயின் குழீஇ
பெரு மலை அன்ன தோன்றல சூல் முதிர்பு
உரும் உரறு கருவியொடு பெயல் கடன் இறுத்து
வள மழை மாறிய என்றூழ் காலை		5
மன்பதை எல்லாம் சென்று உண கங்கை
கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றி ஆங்கு
எமக்கும் பிறர்க்கும் செம்மலை ஆகலின்
அன்பு இல் ஆடவர் கொன்று ஆறு கவர
சென்று தலைவருந அல்ல அன்பு இன்று		10
வன் கலை தெவிட்டும் அரும் சுரம் இறந்தோர்க்கு
இற்றை நாளொடும் யாண்டு தலைப்பெயர என
கண் பொறி போகிய கசிவொடு உரன் அழிந்து
அரும் துயர் உழக்கும் என் பெரும் துன்புறுவி நின்
தாள் படு செல்வம் காண்-தொறும் மருள		15
பனை மருள் தட கையொடு முத்து படு முற்றிய
உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு
ஒளி திகழ் ஓடை பொலிய மருங்கின்
படு மணி இரட்ட ஏறி செம்மாந்து
செலல் நசைஇ உற்றனென் விறல் மிகு குருசில்	20
இன்மை துரப்ப இசைதர வந்து நின்
வண்மையின் தொடுத்த என் நயந்தினை கேள்-மதி
வல்லினும் வல்லேன் ஆயினும் வல்லே
என் அளந்து அறிந்தனை நோக்காது சிறந்த
நின் அளந்து அறி-மதி பெரும என்றும்		25
வேந்தர் நாண பெயர்வேன் சாந்து அருந்தி
பல் பொறி கொண்ட ஏந்து எழில் அகலம்
மாண் இழை மகளிர் புல்லு-தொறும் புகல
நாள் முரசு இரங்கும் இடன் உடை வரைப்பில் நின்
தாள் நிழல் வாழ்நர் நன் கலம் மிகுப்ப		30
வாள் அமர் உழந்த நின் தானையும்
சீர் மிகு செல்வமும் ஏத்துகம் பலவே
					மேல்
# 162 பெருஞ்சித்திரனார்
இரவலர் புரவலை நீயும் அல்லை
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்
இரவலர் உண்மையும் காண் இனி இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண் இனி நின் ஊர்
கடி_மரம் வருந்த தந்து யாம் பிணித்த		5
நெடு நல் யானை எம் பரிசில்
கடு மான் தோன்றல் செல்வல் யானே
					மேல்
# 163 பெருஞ்சித்திரனார்
நின் நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும்
பல் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும்
கடும்பின் கடும் பசி தீர யாழ நின்
நெடும் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும்
இன்னோர்க்கு என்னாது என்னோடும் சூழாது		5
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
எல்லோர்க்கும் கொடு-மதி மனை கிழவோயே
பழம் தூங்கு முதிரத்து கிழவன்
திருந்து வேல் குமணன் நல்கிய வளனே
					மேல்
# 164 பெருந்தலை சாத்தனார்
ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின்
ஆம்பி பூப்ப தேம்பு பசி உழவா
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி
இல்லி தூர்த்த பொல்லா வறு முலை
சுவை-தொறும் அழூஉம் தன் மகத்து முகம் நோக்கி	5
நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழை கண் என்
மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ
நின் படர்ந்திசினே நல் போர் குமண
என் நிலை அறிந்தனை ஆயின் இ நிலை
தொடுத்தும் கொள்ளாது அமையலென் அடுக்கிய	10
பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ்
மண் அமை முழவின் வயிரியர்
இன்மை தீர்க்கும் குடி பிறந்தோயே
					மேல்
# 165 பெருந்தலை சாத்தனார்
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம் புகழ் நிறீஇ தாம் மாய்ந்தனரே
துன் அரும் சிறப்பின் உயர்ந்த செல்வர்
இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின்
தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே		5
தாள் தாழ் படு மணி இரட்டும் பூ நுதல்
ஆடு இயல் யானை பாடுநர்க்கு அருகா
கேடு இல் நல் இசை வய_மான் தோன்றலை
பாடி நின்றெனன் ஆக கொன்னே
பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என்	10
நாடு இழந்ததனினும் நனி இன்னாது என
வாள் தந்தனனே தலை எனக்கு ஈய
தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின்
ஆடு மலி உவகையோடு வருவல்
ஓடா பூட்கை நின் கிழமையோன் கண்டே		15
					மேல்
# 166 ஆவூர் மூலம் கிழார்
நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை
முது முதல்வன் வாய் போகாது
ஒன்று புரிந்த ஈர்_இரண்டின்
ஆறு உணர்ந்த ஒரு முதுநூல்
இகல் கண்டோர் மிகல் சாய்-மார்			5
மெய் அன்ன பொய் உணர்ந்து
பொய் ஓராது மெய் கொளீஇ
மூ_ஏழ் துறையும் முட்டு இன்று போகிய
உரை சால் சிறப்பின் உரவோர் மருக
வினைக்கு வேண்டி நீ பூண்ட			10
புல புல்வாய் கலை பச்சை
சுவல் பூண் ஞான் மிசை பொலிய
மறம் கடிந்த அரும் கற்பின்
அறம் புகழ்ந்த வலை சூடி
சிறு நுதல் பேர் அகல் அல்குல்			15
சில சொல்லின் பல கூந்தல் நின்
நிலைக்கு ஒத்த நின் துணை துணைவியர்
தமக்கு அமைந்த தொழில் கேட்ப
காடு என்றா நாடு என்று ஆங்கு
ஈர்_ஏழின் இடம் முட்டாது			20
நீர் நாண நெய் வழங்கியும்
எண் நாண பல வேட்டும்
மண் நாண புகழ் பரப்பியும்
அரும் கடி பெரும் காலை
விருந்து உற்ற நின் திருந்து ஏந்து நிலை		25
என்றும் காண்க தில் அம்ம யாமே குடாஅது
பொன் படு நெடு வரை புயல்_ஏறு சிலைப்பின்
பூ விரி புது நீர் காவிரி புரக்கும்
தண் புனல் படப்பை எம் ஊர் ஆங்கண்
உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்		30
செல்வல் அத்தை யானே செல்லாது
மழை அண்ணாப்ப நீடிய நெடு வரை
கழை வளர் இமயம் போல
நிலீஇயர் அத்தை நீ நிலம் மிசையானே
					மேல்
# 167 கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரை குமரனார்
நீயே அமர் காணின் அமர் கடந்து அவர்
படை விலக்கி எதிர் நிற்றலின்
வாஅள் வாய்த்த வடு வாழ் யாக்கையொடு
கேள்விக்கு இனியை கட்கு இன்னாயே
அவரே நின் காணின் புறங்கொடுத்தலின்		5
ஊறு அறியா மெய் யாக்கையொடு
கண்ணுக்கு இனியர் செவிக்கு இன்னாரே
அதனால் நீயும் ஒன்று இனியை அவரும் ஒன்று இனியர்
ஒவ்வா யா உள மற்றே வெல் போர்
கழல் புனை திருந்து அடி கடு மான் கிள்ளி		10
நின்னை வியக்கும் இ உலகம் அஃது
என்னோ பெரும உரைத்திசின் எமக்கே
					மேல்
# 168 கருவூர் கந்தப்பிள்ளை சாத்தனார்
அருவி ஆர்க்கும் கழை பயில் நனம் தலை
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்
கொழும் கிழங்கு மிளிர கிண்டி கிளையொடு
கடுங்கண் கேழல் உழுத பூழி
நன்_நாள் வரு பதம் நோக்கி குறவர்		5
உழாஅது வித்திய பரூஉ குரல் சிறுதினை
முந்து விளை யாணர் நாள் புதிது உண்-மார்
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால்
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி
வான் கேழ் இரும் புடை கழாஅது ஏற்றி		10
சாந்த விறகின் உவித்த புன்கம்
கூதளம் கவினிய குளவி முன்றில்
செழும் கோள் வாழை அகல் இலை பகுக்கும்
ஊரா குதிரை கிழவ கூர் வேல்
நறை நார் தொடுத்த வேங்கை அம் கண்ணி		15
வடி நவில் அம்பின் வில்லோர் பெரும
கைவள் ஈகை கடு மான் கொற்ற
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப
பொய்யா செம் நா நெளிய ஏத்தி
பாடுப என்ப பரிசிலர் நாளும்			20
ஈயா மன்னர் நாண
வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே
					மேல்
# 169 காவிரிபூம் பட்டினத்து காரிக்கண்ணனார்
நும் படை செல்லும்_காலை அவர் படை
எடுத்து எறி தானை முன்னரை எனாஅ
அவர் படை வரூஉம்_காலை நும் படை
கூழை தாங்கிய அகல் யாற்று
குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ
அரிதால் பெரும நின் செவ்வி என்றும்
பெரிதால் அத்தை என் கடும்பினது இடும்பை
இன்னே விடு-மதி பரிசில் வென் வேல்
இளம் பல் கோசர் விளங்கு படை கன்மார்
இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின்
பெரு மர கம்பம் போல
பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே
					மேல்
# 170 உறையூர் மருத்துவன் தாமோதரனார்
மரை பிரித்து உண்ட நெல்லி வேலி
பரல் உடை முன்றில் அம் குடி சீறூர்
எல் அடிப்படுத்த கல்லா காட்சி
வில் உழுது உண்-மார் நாப்பண் ஒல்லென
இழிபிறப்பாளன் கரும் கை சிவப்ப			5
வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடும் துடி
புலி துஞ்சு நெடு வரை குடிஞையோடு இரட்டும்
மலை கெழு நாடன் கூர் வேல் பிட்டன்
குறுகல் ஓம்பு-மின் தெவ்விர் அவனே
சிறு கண் யானை வெண் கோடு பயந்த		10
ஒளி திகழ் முத்தம் விறலியர்க்கு ஈந்து
நார் பிழி கொண்ட வெம் கள் தேறல்
பண் அமை நல் யாழ் பாண் கடும்பு அருத்தி
நசைவர்க்கு மென்மை அல்லது பகைவர்க்கு
இரும்பு பயன் படுக்கும் கரும் கை கொல்லன்		15
விசைத்து எறி கூடமொடு பொருஉம்
உலை_கல் அன்ன வல்லாளன்னே
					மேல்
 




# 171 காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார்
இன்று செலினும் தருமே சிறு வரை
நின்று செலினும் தருமே பின்னும்
முன்னே தந்தனென் என்னாது துன்னி
வைகலும் செலினும் பொய்யலன் ஆகி
யாம் வேண்டி ஆங்கு எம் வறும் கலம் நிறைப்போன்	5
தான் வேண்டி ஆங்கு தன் இறை உவப்ப
அரும் தொழில் முடியரோ திருந்து வேல் கொற்றன்
இன மலி கத சே களனொடு வேண்டினும்
களம் மலி நெல்லின் குப்பை வேண்டினும்
அரும் கலம் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை	10
பிறர்க்கும் அன்ன அற தகையன்னே
அன்னன் ஆகலின் எந்தை உள் அடி
முள்ளும் நோவ உறாற்க தில்ல
ஈவோர் அரிய இ உலகத்து
வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே		15
					மேல்
# 172 வடமண்ணக்கன் தாமோதரனார்
ஏற்றுக உலையே ஆக்குக சோறே
கள்ளும் குறைபடல் ஓம்புக ஒள் இழை
பாடு வல் விறலியர் கோதையும் புனைக
அன்னவை பலவும் செய்க என்னதூஉம்
பரியல் வேண்டா வரு பதம் நாடி			5
ஐவனம் காவல் பெய் தீ நந்தின்
ஒளி திகழ் திருந்து மணி நளி இருள் அகற்றும்
வன்_புல நாடன் வய_மான் பிட்டன்
ஆர் அமர் கடக்கும் வேலும் அவன் இறை
மா வள் ஈகை கோதையும்			10
மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே
					மேல்
# 173 சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன்
யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய
பாணர் காண்க இவன் கடும்பினது இடும்பை
யாணர் பழு மரம் புள் இமிழ்ந்து அன்ன
ஊண் ஒலி அரவம் தானும் கேட்கும்
பொய்யா எழிலி பெய்வு இடம் நோக்கி		5
முட்டை கொண்டு வன்_புலம் சேரும்
சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப
சோறு உடை கையர் வீறு_வீறு இயங்கும்
இரும் கிளை சிறாஅர் காண்டும் கண்டும்
மற்றும்_மற்றும் வினவுதும் தெற்றென		10
பசி_பிணி_மருத்துவன் இல்லம்
அணித்தோ சேய்த்தோ கூறு-மின் எமக்கே
					மேல்
# 174 மாறோக்கத்து நப்பசலையார்
அணங்கு உடை அவுணர் கணம்_கொண்டு ஒளித்து என
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது
இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பை கொள் பருவரல் தீர கடும் திறல்
அஞ்சன உருவன் தந்து நிறுத்து ஆங்கு		5
அரசு இழந்திருந்த அல்லல் காலை
முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு கரை பொருது
இரங்கு புனல் நெரிதரு மிகு பெரும் காவிரி
மல்லல் நன் நாட்டு அல்லல் தீர
பொய்யா நாவின் கபிலன் பாடிய			10
மை அணி நெடு வரை ஆங்கண் ஒய்யென
செரு புகல் மறவர் செல் புறம் கண்ட
எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை
அரு வழி இருந்த பெரு விறல் வளவன்
மதி மருள் வெண்குடை காட்டி அ குடை		15
புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந
விடர் புலி பொறித்த கோட்டை சுடர் பூண்
சுரும்பு ஆர் கண்ணி பெரும் பெயர் நும் முன்
ஈண்டு செய் நல் வினை ஆண்டு சென்று உணீஇயர்
உயர்ந்தோர்_உலகத்து பெயர்ந்தனன் ஆகலின்		20
ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும்
கவலை நெஞ்சத்து அவலம் தீர
நீ தோன்றினையே நிரை தார் அண்ணல்
கல் கண் பொடிய கானம் வெம்ப
மல்கு நீர் வரைப்பில் கயம் பல உணங்க		25
கோடை நீடிய பைது அறு காலை
இரு நிலம் நெளிய ஈண்டி
உரும் உரறு கருவிய மழை பொழிந்து ஆங்கே
					மேல்
# 175 கள்ளில் ஆத்திரையனார்
எந்தை வாழி ஆதனுங்க என்
நெஞ்சம் திறப்போர் நின் காண்குவரே
நின் யான் மறப்பின் மறக்கும் காலை
என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும்
என் யான் மறப்பின் மறக்குவென் வென் வேல்	5	
விண் பொரு நெடும் குடை கொடி தேர் மோரியர்
திண் கதிர் திகிரி திரிதர குறைத்த
உலக இடைகழி அறை வாய் நிலைஇய
மலர் வாய் மண்டிலத்து அன்ன நாளும்
பலர் புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே		10
					மேல்
# 176 புறத்திணை நன்னாகனார்
ஓரை ஆயத்து ஒண் தொடி மகளிர்
கேழல் உழுத இரும் சேறு கிளைப்பின்
யாமை ஈன்ற புலவு நாறு முட்டையை
தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம்
இழுமென ஒலிக்கும் புனல் அம் புதவின்		5
பெரு மாவிலங்கை தலைவன் சீறியாழ்
இல்லோர் சொல் மலை நல்லியக்கோடனை
உடையை வாழி எம் புணர்ந்த பாலே
பாரி பறம்பின் பனி சுனை தெண் நீர்
ஓர் ஊர் உண்மையின் இகழ்ந்தோர் போல		10
காணாது கழிந்த வைகல் காணா
வழி நாட்கு இரங்கும் என் நெஞ்சம் அவன்
கழி மென் சாயல் காண்-தொறும் நினைந்தே
					மேல்
# 177 ஆவூர் மூலங்கிழார்
ஒளிறு வாள் மன்னர் ஒண் சுடர் நெடு நகர்
வெளிறு கண் போக பன் நாள் திரங்கி
பாடி பெற்ற பொன் அணி யானை
தமர் எனின் யாவரும் புகுப அமர் எனின்
திங்களும் நுழையா எந்திர படு புழை		5
கள் மாறு நீட்ட நணி_நணி இருந்த
குறும் பல் குறும்பின் ததும்ப வைகி
புளி சுவை வேட்ட செம் கண் ஆடவர்
தீம் புளி களாவொடு துடரி முனையின்
மட்டு அறல் நல் யாற்று எக்கர் ஏறி		10
கரும் கனி நாவல் இருந்து கொய்து உண்ணும்
பெரும் பெயர் ஆதி பிணங்கு அரில் குட நாட்டு
எயினர் தந்த எய்ம்_மான் எறி தசை
பைம் ஞிணம் பெருத்த பசு வெள் அமலை
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய		15
இரும் பனம் குடையின் மிசையும்
பெரும் புலர் வைகறை சீர் சாலாதே
					மேல்
# 178 ஆவூர் மூலங்கிழார்
கந்து முனிந்து உயிர்க்கும் யானையொடு பணை முனிந்து
கால் இயல் புரவி ஆலும் ஆங்கண்
மணல் மலி முற்றம் புக்க சான்றோர்
உண்ணார் ஆயினும் தன்னொடு சூள்_உற்று
உண்ம் என இரக்கும் பெரும் பெயர் சாத்தன்		5
ஈண்டோர் இன் சாயலனே வேண்டார்
எறி படை மயங்கிய வெருவரு ஞாட்பின்
கள் உடை கலத்தர் உள்ளூர் கூறிய
நெடுமொழி மறந்த சிறு பேராளர்
அஞ்சி நீங்கும்_காலை				10
ஏமம் ஆக தான் முந்துறுமே
					மேல்
# 179 வடநெடுந்தத்தனார் வடம நெடுந்தத்தனார் வடம நெடுந் தச்சனார்
ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்து என
ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை
மலர்ப்போர் யார் என வினவலின் மலைந்தோர்
விசி பிணி முரசமொடு மண் பல தந்த
திரு வீழ் நுண் பூண் பாண்டியன் மறவன்		5
படை வேண்டு_வழி வாள் உதவியும்
வினை வேண்டு_வழி அறிவு உதவியும்
வேண்டுப_வேண்டுப வேந்தன் தேஎத்து
அசை நுகம் படாஅ ஆண்தகை உள்ளத்து
தோலா நல் இசை நாலை_கிழவன்		10
பருந்து பசி தீர்க்கும் நல் போர்
திருந்து வேல் நாகன் கூறினர் பலரே
					மேல்
# 180 கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரை குமரனார்
நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே
இல் என மறுக்கும் சிறுமையும் இலனே
இறை உறு விழுமம் தாங்கி அமர்_அகத்து
இரும்பு சுவை கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து
மருந்து கொள் மரத்தின் வாள் வடு மயங்கி		5
வடு இன்றி வடிந்த யாக்கையன் கொடை எதிர்ந்து
ஈர்ந்தையோனே பாண் பசி பகைஞன்
இன்மை தீர வேண்டின் எம்மொடு
நீயும் வம்மோ முது வாய் இரவல
யாம் தன் இரக்கும்_காலை தான் எம்		10
உண்ணா மருங்குல் காட்டி தன் ஊர்
கரும் கை கொல்லனை இரக்கும்
திருந்து இலை நெடு வேல் வடித்திசின் எனவே
					மேல்
 




# 181 சோணாட்டு முகையலூர் சிறுகரும் தும்பியார்
மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில்
கரும் கண் எயிற்றி காதல் மகனொடு
கான இரும் பிடி கன்று தலைக்கொள்ளும்
பெரும் குறும்பு உடுத்த வன்_புல இருக்கை
புலாஅல் அம்பின் போர் அரும் கடி மிளை		5
வலாஅரோனே வாய் வாள் பண்ணன்
உண்ணா வறும் கடும்பு உய்தல் வேண்டின்
இன்னே செல்-மதி நீயே சென்று அவன்
பகை புலம் படரா அளவை நின்
பசி பகை பரிசில் காட்டினை கொளற்கே		10
					மேல்
# 182 கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி
உண்டால் அம்ம இ உலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது என
தமியர் உண்டலும் இலரே முனிவு இலர்
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சி
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்வு இலர்
அன்ன மாட்சி அனையர் ஆகி
தமக்கு என முயலா நோன் தாள்
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே
					மேல்
# 183 ஆரிய படை கடந்த நெடுஞ்செழியன்
உற்று_உழி உதவியும் உறு பொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒரு குடி பிறந்த பல்லோருள்ளும்			5
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேல்_பால் ஒருவனும் அவன் கண் படுமே		10
					மேல்
# 184 பிசிராந்தையார்
காய் நெல் அறுத்து கவளம் கொளினே
மா நிறைவு இல்லதும் பன் நாட்கு ஆகும்
நூறு செறு ஆயினும் தமித்து புக்கு உணினே
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்
அறிவு உடை வேந்தன் நெறி அறிந்து கொளினே	5
கோடி யாத்து நாடு பெரிது நந்தும்
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியா கல்லென் சுற்றமொடு
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போல			10
தானும் உண்ணான் உலகமும் கெடுமே
					மேல்
# 185 தொண்டைமான் இளந்திரையன்
கால் பார் கோத்து ஞாலத்து இயக்கும்
காவல் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறு இன்று ஆகி ஆறு இனிது படுமே
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்
பகை கூழ் அள்ளல் பட்டு			5
மிக பல் தீ நோய் தலைத்தலை தருமே
					மேல்
# 186 மோசிகீரனார்
நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே
மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்
அதனால் யான் உயிர் என்பது அறிகை
வேல் மிகு தானை வேந்தற்கு கடனே
					மேல்
# 187 ஔவையார்
நாடு ஆக ஒன்றோ காடு ஆக ஒன்றோ
அவலாக ஒன்றோ மிசையாக ஒன்றோ
எ வழி நல்லவர் ஆடவர்
அ வழி நல்லை வாழிய நிலனே
					மேல்
# 188 பாண்டியன் அறிவுடை நம்பி
படைப்பு பல படைத்து பலரோடு உண்ணும்
உடை பெரும் செல்வர் ஆயினும் இடை பட
குறுகுறு நடந்து சிறு கை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்		5
நெய் உடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்கு_உறு மக்களை இல்லோர்க்கு
பய குறை இல்லை தாம் வாழும் நாளே
					மேல்
# 189 மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடு_மா பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே		5
பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே
செல்வத்து பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே
					மேல்
# 190 சோழன் நல்லுருத்திரன்
விளை_பத சீறிடம் நோக்கி வளை கதிர்
வல்சி கொண்டு அளை மல்க வைக்கும்
எலி முயன்று அனையர் ஆகி உள்ள தம்
வளன் வலி_உறுக்கும் உளம் இலாளரோடு
இயைந்த கேண்மை இல் ஆகியரோ		5
கடுங்கண் கேழல் இடம் பட வீழ்ந்து என
அன்று அவண் உண்ணாது ஆகி வழி நாள்
பெரு மலை விடர்_அகம் புலம்ப வேட்டு எழுந்து
இரும் களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும்
புலி பசித்து அன்ன மெலிவு இல் உள்ளத்து		10
உரன் உடையாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உள ஆகியரோ
					மேல்
 




# 191 பிசிராந்தையர்
யாண்டு பல ஆக நரை இல ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்
யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன்_தலை		5
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கை
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே
					மேல்
# 192 கணியன் பூங்குன்றன்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்று ஓர் அன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்	5
இன்னாது என்றலும் இலமே மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல் ஆர் உயிர்
முறை வழிப்படூஉம் என்பது திறவோர்		10
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
					மேல்
# 193 ஓரேருழவர்
அதள் எறிந்து அன்ன நெடு வெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தலும் கூடும்-மன்
ஒக்கல் வாழ்க்கை தட்கும் மா காலே
					மேல்
# 194
ஓர் இல் நெய்தல் கறங்க ஓர் இல்
ஈர்ம் தண் முழவின் பாணி ததும்ப
புணர்ந்தோர் பூ அணி அணிய பிரிந்தோர்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப
படைத்தோன் மன்ற அ பண்பிலாளன்		5
இன்னாது அம்ம இ உலகம்
இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே
					மேல்
# 195 நரிவெரூஉ தலையார்
பல் சான்றீரே பல் சான்றீரே
கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள்
பயன் இல் மூப்பின் பல் சான்றீரே
கணிச்சி கூர்ம் படை கடும் திறல் ஒருவன்
பிணிக்கும்_காலை இரங்குவிர் மாதோ		5
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்பு-மின் அது தான்
எல்லாரும் உவப்பது அன்றியும்
நல் ஆற்று படூஉம் நெறியும் ஆர் அதுவே
					மேல்
# 196 ஆவூர் மூலங்கிழார்
ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
ஒல்லாது இல் என மறுத்தலும் இரண்டும்
ஆள்வினை மருங்கின் கேண்மை_பாலே
ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது
இல் என மறுத்தலும் இரண்டும் வல்லே		5
இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்
புகழ் குறைப்படூஉம் வாயில் அத்தை
அனைத்து ஆகியர் இனி இதுவே எனைத்தும்
சேய்த்து காணாது கண்டனம் அதனால்
நோய் இலர் ஆக நின் புதல்வர் யானும்		10
வெயில் என முனியேன் பனி என மடியேன்
கல் குயின்று அன்ன என் நல்கூர் வளி மறை
நாண் அலது இல்லா கற்பின் வாள் நுதல்
மெல் இயல் குறு_மகள் உள்ளி
செல்வல் அத்தை சிறக்க நின் நாளே		15
					மேல்
# 197 கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார்
வளி நடந்து அன்ன வா செலல் இவுளியொடு
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ
கடல் கண்டு அன்ன ஒண் படை தானையொடு
மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ
உரும் உரற்று அன்ன உட்குவரு முரசமொடு		5
செரு மேம்படூஉம் வென்றியர் எனாஅ
மண் கெழு தானை ஒண் பூண் வேந்தர்
வெண்குடை செல்வம் வியத்தலோ இலமே
எம்மால் வியக்கப்படூஉமோரே
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த		10
குறு நறு முஞ்ஞை கொழும் கண் குற்று அடகு
புன்_புல வரகின் சொன்றியொடு பெறூஉம்
சீறூர் மன்னர் ஆயினும் எம்_வயின்
பாடு அறிந்து ஒழுகும் பண்பினோரே
மிக பேர் எவ்வம் உறினும் எனைத்தும்		15
உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்
நல் அறிவு உடையோர் நல்குரவு
உள்ளுதும் பெரும யாம் உவந்து நனி பெரிதே
					மேல்
# 198 வடமவண்ணக்கண் பேரிசாத்தனார்
அருவி தாழ்ந்த பெரு வரை போல
ஆரமொடு பொலிந்த மார்பில் தண்டா
கடவுள் சான்ற கற்பின் சே இழை
மடவோள் பயந்த மணி மருள் அம் வாய்
கிண்கிணி புதல்வர் பொலிக என்று ஏத்தி		5
திண் தேர் அண்ணல் நின் பாராட்டி
காதல் பெருமையின் கனவினும் அரற்றும் என்
காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப
ஆல்_அமர்_கடவுள் அன்ன நின் செல்வம்
வேல் கெழு குருசில் கண்டேன் ஆதலின்		10
விடுத்தனென் வாழ்க நின் கண்ணி தொடுத்த
தண் தமிழ் வரைப்பு_அகம் கொண்டி ஆக
பணிந்து கூட்டுண்ணும் தணிப்பு அரும் கடும் திறல்
நின் ஓர் அன்ன நின் புதல்வர் என்றும்
ஒன்னார் வாட அரும் கலம் தந்து நும்		15
பொன் உடை நெடு நகர் நிறைய வைத்த நின்
முன்னோர் போல்க இவர் பெரும் கண்ணோட்டம்
யாண்டும் நாளும் பெருகி ஈண்டு திரை
பெரும் கடல் நீரினும் அ கடல் மணலினும்
நீண்டு உயர் வானத்து உறையினும் நன்றும்		20
இவர் பெறும் புதல்வர் காண்-தொறும் நீயும்
புகன்ற செல்வமொடு புகழ் இனிது விளங்கி
நீடு வாழிய நெடுந்தகை யானும்
கேள் இல் சேஎய் நாட்டின் எந்நாளும்
துளி நசை புள்ளின் நின் அளி நசைக்கு இரங்கி நின்	25
அடி நிழல் பழகிய அடியுறை
கடு மான் மாற மறவாதீமே
					மேல்
# 199 பெரும்பதுமனார்
கடவுள் ஆலத்து தடவு சினை பல் பழம்
நெருநல் உண்டனம் என்னாது பின்னும்
செலவு ஆனாவே கலி கொள் புள்_இனம்
அனையர் வாழியோ இரவலர் அவரை
புரவு எதிர்கொள்ளும் பெரும் செய் ஆடவர்		5
உடைமை ஆகும் அவர் உடைமை
அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே
					மேல்
# 200 கபிலர்
பனி வரை நிவந்த பாசிலை பலவின்
கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன்
செம் முக மந்தியொடு சிறந்து சேண் விளங்கி
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து
கழை மிசை துஞ்சும் கல்_அக வெற்ப		5
நிணம் தின்று செருக்கிய நெருப்பு தலை நெடு வேல்
களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை
விளங்கு மணி கொடும் பூண் விச்சிக்கோவே
இவரே பூ தலை அறாஅ புனை கொடி முல்லை
நா தழும்பு இருப்ப பாடாது ஆயினும்		10
கறங்கு மணி நெடும் தேர் கொள்க என கொடுத்த
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி_மகளிர்
யானே பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்
நினக்கு யான் கொடுப்ப கொண்-மதி சின போர்	15
அடங்கா மன்னரை அடக்கும்
மடங்கா விளையுள் நாடு கிழவோயே
					மேல்
 



# 201 கபிலர்
இவர் யார் என்குவை ஆயின் இவரே
ஊருடன் இரவலர்க்கு அருளி தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசை
படு மணி யானை பறம்பின் கோமான்
நெடு மா பாரி_மகளிர் யானே			5
தந்தை தோழன் இவர் என் மகளிர்
அந்தணன் புலவன் கொண்டுவந்தனனே
நீயே வட பால் முனிவன் தடவினுள் தோன்றி
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை
உவரா ஈகை துவரை ஆண்டு			10
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறல் போர் அண்ணல்
தார் அணி யானை சேட்டு இரும் கோவே
ஆண்_கடன் உடைமையின் பாண்_கடன் ஆற்றிய
ஒலியல் கண்ணி புலிகடிமாஅல்			15
யான் தர இவரை கொண்-மதி வான் கவித்து
இரும் கடல் உடுத்த இ வையகத்து அரும் திறல்
பொன் படு மால் வரை கிழவ வென் வேல்
உடலுநர் உட்கும் தானை
கெடல் அரும்-குரைய நாடு கிழவோயே		20
					மேல்
# 202 கபிலர்
வெட்சி கானத்து வேட்டுவர் ஆட்ட
கட்சி காணா கடமா நல் ஏறு
கடறு மணி கிளர சிதறு பொன் மிளிர
கடிய கதழும் நெடு வரை படப்பை
வென்றி நிலைஇய விழு புகழ் ஒன்றி		5
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர்
கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய
நீடு நிலை அரையத்து கேடும் கேள் இனி
நுந்தை தாயம் நிறைவு_உற எய்திய
ஒலியல் கண்ணி புலிகடிமாஅல்			10
நும் போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள் கழாஅத்தலையை
இகழ்ந்ததன் பயனே இயல் தேர் அண்ணல்
எவ்வி தொல் குடி படீஇயர் மற்று இவர்
கைவண் பாரி_மகளிர் என்ற என்			15
தேற்றா புன் சொல் நோற்றிசின் பெரும
விடுத்தனென் வெலீஇயர் நின் வேலே அடுக்கத்து
அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை
மா தகட்டு ஒள் வீ தாய துறுகல்
இரும் புலி வரி புறம் கடுக்கும்			20
பெரும் கல் வைப்பின் நாடு கிழவோயே
					மேல்
# 203 ஊன்பொதி பசுங்குடையார்
கழிந்தது பொழிந்து என வான் கண்மாறினும்
தொல்லது விளைந்து என நிலம் வளம் கரப்பினும்
எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை
இன்னும் தம் என எம்மனோர் இரப்பின்
முன்னும் கொண்டிர் என நும்மனோர் மறுத்தல்	5	
இன்னாது அம்ம இயல் தேர் அண்ணல்
இல்லது நிரப்பல் ஆற்றாதோரினும்
உள்ளி வருநர் நசை இழப்போரே
அனையையும் அல்லை நீயே ஒன்னார்
ஆர் எயில் அவர் கட்டு ஆகவும் நுமது என		10
பாண்_கடன் இறுக்கும் வள்ளியோய்
பூண் கடன் எந்தை நீ இரவலர் புரவே
					மேல்
# 204 கழைதின் யானையார்
ஈ என இரத்தல் இழிந்தன்று அதன்_எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள் என கொடுத்தல் உயர்ந்தன்று அதன்_எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று
தெண் நீர் பரப்பின் இமிழ் திரை பெரும் கடல்		5
உண்ணார் ஆகுப நீர் வேட்டோரே
ஆவும் மாவும் சென்று உண கலங்கி
சேற்றோடு பட்ட சிறுமைத்து ஆயினும்
உண் நீர் மருங்கின் அதர் பல ஆகும்
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை		10
உள்ளி சென்றோர் பழி அலர் அதனால்
புலவேன் வாழியர் ஓரி விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே
					மேல்
# 205 பெருந்தலை சாத்தனார்
முற்றிய திருவின் மூவர் ஆயினும்
பெட்பு இன்றி ஈதல் யாம் வேண்டலமே
விறல் சினம் தணிந்த விரை பரி புரவி
உறுவர் செல் சார்வு ஆகி செறுவர்
தாள் உளம் தபுத்த வாள் மிகு தானை		5
வெள் வீ வேலி கோடை_பொருந
சிறியவும் பெரியவும் புழை கெட விலங்கிய
மான் கணம் தொலைச்சிய கடு விசை கத நாய்
நோன் சிலை வேட்டுவ நோய் இலை ஆகுக
ஆர் கலி யாணர் தரீஇய கால்வீழ்த்து		10
கடல்_வயின் குழீஇய அண்ணல் அம் கொண்மூ
நீர் இன்று பெயரா ஆங்கு தேரொடு
ஒளிறு மருப்பு ஏந்திய செம்மல்
களிறு இன்று பெயரல பரிசிலர் கடும்பே
					மேல்
# 206 ஔவையார்
வாயிலோயே வாயிலோயே
வள்ளியோர் செவி முதல் வயங்கு மொழி வித்தி தாம்
உள்ளியது முடிக்கும் உரன் உடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும் இ பரிசில் வாழ்க்கை
பரிசிலர்க்கு அடையா வாயிலோயே		5
கடு மான் தோன்றல் நெடுமான்_அஞ்சி
தன் அறியலன்-கொல் என் அறியலன்-கொல்
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்து என
வறும் தலை உலகமும் அன்றே அதனால்
காவினெம் கலனே சுருக்கினெம் கல பை		10
மரம் கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழு உடை காட்டு_அகத்து அற்றே
எ திசை செலினும் அ திசை சோறே
					மேல்
# 207 பெருஞ்சித்திரனார்
எழு இனி நெஞ்சம் செல்கம் யாரோ
பருகு அன்ன வேட்கை இல்_வழி
அருகில் கண்டும் அறியார் போல
அகம் நக வாரா முகன் அழி பரிசில்
தாள் இலாளர் வேளார் அல்லர்			5
வருக என வேண்டும் வரிசையோர்க்கே
பெரிதே உலகம் பேணுநர் பலரே
மீளி முன்பின் ஆளி போல
உள்ளம் உள் அவிந்து அடங்காது வெள்ளென
நோவாதோன்_வயின் திரங்கி			10
வாயா வன் கனிக்கு உலமருவோரே
					மேல்
# 208 பெருஞ்சித்திரனார்
குன்றும் மலையும் பல பின் ஒழிய
வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கு என
நின்ற என் நயந்து அருளி ஈது கொண்டு
ஈங்கனம் செல்க தான் என என்னை
யாங்கு அறிந்தனனோ தாங்கு அரும் காவலன்	5
காணாது ஈத்த இ பொருட்கு யான் ஓர்
வாணிக பரிசிலன் அல்லேன் பேணி
தினை அனைத்து ஆயினும் இனிது அவர்
துணை அளவு அறிந்து நல்கினர் விடினே
					மேல்
# 209 பெருந்தலை சாத்தனார்
பொய்கை நாரை போர்வில் சேக்கும்
நெய்தல் அம் கழனி நெல் அரி தொழுவர்
கூம்பு விடு மென் பிணி அவிழ்ந்த ஆம்பல்
அகல் அடை அரியல் மாந்தி தெண் கடல்
படு திரை இன் சீர் பாணி தூங்கும்		5
மென்_புல வைப்பின் நன் நாட்டு பொருந
பல் கனி நசைஇ அல்கு விசும்பு உகந்து
பெரு மலை விடர்_அகம் சிலம்ப முன்னி
பழன் உடை பெரு மரம் தீர்ந்து என கையற்று
பெறாது பெயரும் புள் இனம் போல நின்		10
நசை தர வந்து நின் இசை நுவல் பரிசிலென்
வறுவியேன் பெயர்கோ வாள் மேம்படுந
ஈயாய் ஆயினும் இரங்குவென் அல்லேன்
நோய் இலை ஆகு-மதி பெரும நம்முள்
குறு நணி காண்குவது ஆக நாளும்		15
நறும் பல் ஒலிவரும் கதுப்பின் தே மொழி
தெரி இழை மகளிர் பாணி பார்க்கும்
பெரு வரை அன்ன மார்பின்
செரு வெம் சேஎய் நின் மகிழ் இருக்கையே
					மேல்
# 210 பெருங்குன்றூர் கிழார்
மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது
அன்பு கண்மாறிய அறன் இல் காட்சியொடு
நும்மனோரும் மற்று இனையர் ஆயின்
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ
செயிர் தீர் கொள்கை எம் வெம் காதலி		5
உயிர் சிறிது உடையள் ஆயின் எம் வயின்
உள்ளாது இருத்தலோ அரிதே அதனால்
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய
பிறன் ஆயினன்-கொல் இறீஇயர் என் உயிர் என
நுவல்வு_உறு சிறுமையள் பல புலந்து உறையும்	10
இடுக்கண் மனையோள் தீரிய இ நிலை
விடுத்தேன் வாழியர் குருசில் உது காண்
அவல நெஞ்சமொடு செல்வல் நின் கறுத்தோர்
அரும் கடி முனை அரண் போல
பெரும் கையற்ற என் புலம்பு முந்துறுத்தே		15
					மேல்
 




# 211 பெருங்குன்றூர் கிழார்
அஞ்சுவரு மரபின் வெம் சின புயல்_ஏறு
அணங்கு உடை அரவின் அரும் தலை துமிய
நின்று காண்பு அன்ன நீள் மலை மிளிர
குன்று தூவ எறியும் அரவம் போல
முரசு எழுந்து இரங்கும் தானையோடு தலைச்சென்று	5
அரைசு பட கடக்கும் உரை சால் தோன்றல் நின்
உள்ளி வந்த ஓங்கு நிலை பரிசிலென்
வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன் என
கொள்ளா மாந்தர் கொடுமை கூற நின்
உள்ளியது முடிந்தோய் மன்ற முன்_நாள்		10
கை உள்ளது போல் காட்டி வழி நாள்
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம்
நாணாய் ஆயினும் நாண கூறி என்
நுணங்கு செம் நா அணங்க ஏத்தி
பாடப்பாட பாடு புகழ் கொண்ட நின்		15
ஆடு கொள் வியன் மார்பு தொழுதெனன் பழிச்சி
செல்வல் அத்தை யானே வைகலும்
வல்சி இன்மையின் வயின்_வயின் மாறி
இல் எலி மடிந்த தொல் சுவர் வரைப்பின்
பாஅல் இன்மையின் பல் பாடு சுவைத்து		20
முலை கோள் மறந்த புதல்வனொடு
மனை தொலைந்திருந்த என் வாள்_நுதல் படர்ந்தே
					மேல்
# 212 பிசிராந்தையார்
நும் கோ யார் என வினவின் எம் கோ
களமர்க்கு அரித்த விளையல் வெம் கள்
யாமை புழுக்கின் காமம் வீட ஆரா
ஆரல் கொழும் சூடு அம் கவுள் அடாஅ
வைகு தொழில் மடியும் மடியா விழவின்		5
யாணர் நன் நாட்டுள்ளும் பாணர்
பைதல் சுற்றத்து பசி பகை ஆகி
கோழியோனே கோப்பெருஞ்சோழன்
பொத்து இல் நண்பின் பொத்தியொடு கெழீஇ
வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே		10
					மேல்
# 213 புல்லாற்றூர் எயிற்றியனார்
மண்டு அமர் அட்ட மதன் உடை நோன் தாள்
வெண்குடை விளக்கும் விறல் கெழு வேந்தே
பொங்கு நீர் உடுத்த இ மலர் தலை உலகத்து
நின் தலை வந்த இருவரை நினைப்பின்
தொன்று உறை துப்பின் நின் பகைஞரும் அல்லர்	5
அமர் வெம் காட்சியொடு மாறு எதிர்பு எழுந்தவர்
நினையும்_காலை நீயும் மற்று அவர்க்கு
அனையை அல்லை அடு_மான் தோன்றல்
பரந்து படு நல் இசை எய்தி மற்று நீ
உயர்ந்தோர்_உலகம் எய்தி பின்னும்		10
ஒழித்த தாயம் அவர்க்கு உரித்தன்றே
அதனால் அன்னது ஆதலும் அறிவோய் நன்றும்
இன்னும் கேள்-மதி இசை வெய்யோயே
நின்ற துப்பொடு நின் குறித்து எழுந்த
எண் இல் காட்சி இளையோர் தோற்பின்		15
நின் பெரும் செல்வம் யார்க்கு எஞ்சுவையே
அமர் வெம் செல்வ நீ அவர்க்கு உலையின்
இகழுநர் உவப்ப பழி எஞ்சுவையே
அதனால் ஒழிக தில் அத்தை நின் மறனே வல் விரைந்து
எழு-மதி வாழ்க நின் உள்ளம் அழிந்தோர்க்கு		20
ஏமம் ஆகும் நின் தாள் நிழல் மயங்காது
செய்தல் வேண்டுமால் நன்றோ வானோர்
அரும்_பெறல்_உலகத்து ஆன்றவர்
விதும்பு_உறு விருப்பொடு விருந்து எதிர்கொளற்கே
					மேல்
# 214 கோப்பெரும் சோழன்
செய்குவம்-கொல்லோ நல்வினை எனவே
ஐயம் அறாஅர் கசடு ஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்து துணிவு இல்லோரே
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறும் கையும் வருமே		5
அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு
செய்_வினை மருங்கின் எய்தல் உண்டு எனின்
தொய்யா_உலகத்து நுகர்ச்சியும் கூடும்
தொய்யா_உலகத்து நுகர்ச்சி இல் எனின்
மாறி பிறப்பின் இன்மையும் கூடும்		10
மாறி பிறவார் ஆயினும் இமயத்து
கோடு உயர்ந்து அன்ன தம் இசை நட்டு
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவ தலையே
					மேல்
# 215 கோப்பெரும் சோழன்
கவை கதிர் வரகின் அவைப்பு_உறு வாக்கல்
தாது எரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண் பூ வெண் தயிர் கொளீஇ
ஆய்_மகள் அட்ட அம் புளி மிதவை
அவரை கொய்யுநர் ஆர மாந்தும்			5
தென்னம்பொருப்பன் நன் நாட்டுள்ளும்
பிசிரோன் என்ப என் உயிர் ஓம்புநனே
செல்வ காலை நிற்பினும்
அல்லல் காலை நில்லலன்-மன்னே
					மேல்
# 216 கோப்பெரும் சோழன்
கேட்டல் மாத்திரை அல்லது யாவதும்
காண்டல் இல்லாது யாண்டு பல கழிய
வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும்
அரிதே தோன்றல் அதன் பட ஒழுகல் என்று
ஐயம் கொள்ளன்-மின் ஆர் அறிவாளிர்		5
இகழ்வு இலன் இனியன் யாத்த நண்பினன்
புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே
தன் பெயர் கிளக்கும்_காலை என் பெயர்
பேதை சோழன் என்னும் சிறந்த
காதல் கிழமையும் உடையவன் அதன்_தலை		10
இன்னது ஓர் காலை நில்லலன்
இன்னே வருகுவன் ஒழிக்க அவற்கு இடமே
					மேல்
# 217 பொத்தியார்
நினைக்கும்_காலை மருட்கை உடைத்தே
எனை பெரும் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல்
அதனினும் மருட்கை உடைத்தே பிறன் நாட்டு
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி
இசை மரபு ஆக நட்பு கந்து ஆக			5
இனையது ஓர் காலை ஈங்கு வருதல்
வருவன் என்ற கோனது பெருமையும்
அது பழுது இன்றி வந்தவன் அறிவும்
விய-தொறும் விய-தொறும் வியப்பு இறந்தன்றே
அதனால் தன் கோல் இயங்கா தேயத்து உறையும்	10
சான்றோன் நெஞ்சு உற பெற்ற தொன்று இசை
அன்னோனை இழந்த இ உலகம்
என் ஆவது-கொல் அளியது தானே

# 218 கண்ணகனார் நத்தத்தனார் எனவும் பாடம்
பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மா மலை பயந்த காமரு மணியும்
இடைபட சேய ஆயினும் தொடை புணர்ந்து
அரு விலை நன் கலம் அமைக்கும்_காலை
ஒரு வழி தோன்றி ஆங்கு என்றும் சான்றோர்	5
சான்றோர்_பாலர் ஆப
சாலார் சாலார்_பாலர் ஆகுபவே
					மேல்
# 219 கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்
உள் ஆற்று கவலை புள்ளி நீழல்
முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள
புலவுதி மாதோ நீயே
பலரால் அத்தை நின் குறி இருந்தோரே
					மேல்
# 220 பொத்தியார்
பெரும் சோறு பயந்து பல் யாண்டு புரந்த
பெரும் களிறு இழந்த பைதல் பாகன்
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை
வெளில் பாழ் ஆக கண்டு கலுழ்ந்து ஆங்கு
கலங்கினேன் அல்லனோ யானே பொலம் தார்	5
தேர் வண் கிள்ளி போகிய
பேர் இசை மூதூர் மன்றம் கண்டே
					மேல்
 



# 221 பொத்தியார்
பாடுநர்க்கு ஈத்த பல் புகழன்னே
ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே
அறவோர் புகழ்ந்த ஆய் கோலன்னே
திறவோர் புகழ்ந்த திண் அன்பினனே
மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து		5
துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்
அனையன் என்னாது அ தக்கோனை
நினையா கூற்றம் இன் உயிர் உய்த்தன்று
பைதல் ஒக்கல் தழீஇ அதனை
வைகம் வம்மோ வாய்மொழி புலவீர்		10
நனம் தலை உலகம் அரந்தை தூங்க
கெடு இல் நல் இசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே
					மேல்
# 222 பொத்தியார்
அழல் அவிர் வயங்கு இழை பொலிந்த மேனி
நிழலினும் போகா நின் வெய்யோள் பயந்த
புகழ் சால் புதல்வன் பிறந்த பின் வா என
என் இவண் ஒழித்த அன்பு இலாள
எண்ணாது இருக்குவை அல்லை			5
என் இடம் யாது மற்று இசை வெய்யோயே
					மேல்
# 223 பொத்தியார்
பலர்க்கு நிழல் ஆகி உலகம் மீக்கூறி
தலைப்போகு அன்மையின் சிறு வழி மடங்கி
நிலை பெறு நடுகல் ஆகிய கண்ணும்
இடம் கொடுத்து அளிப்ப மன்ற உடம்போடு
இன் உயிர் விரும்பும் கிழமை			5
தொல் நட்பு உடையார் தம் உழை செலினே
					மேல்
# 224 கருங்குழல் ஆதனார்
அருப்பம் பேணாது அமர் கடந்ததூஉம்
துணை புணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சி
இரும் பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்
அறம் அற கண்ட நெறி மாண் அவையத்து
முறை நற்கு அறியுநர் முன் உற புகழ்ந்த		5
தூ இயல் கொள்கை துகள் அறு மகளிரொடு
பருதி உருவின் பல் படை புரிசை
எருவை நுகர்ச்சி யூப நெடும் தூண்
வேத வேள்வி தொழில் முடித்ததூஉம்
அறிந்தோன் மன்ற அறிவு உடையாளன்		10
இறந்தோன் தானே அளித்து இ உலகம்
அருவி மாறி அஞ்சுவர கருகி
பெரு வறம் கூர்ந்த வேனில் காலை
பசித்த ஆயத்து பயன் நிரை தரும்-மார்
பூ வாள் கோவலர் பூ உடன் உதிர			15
கொய்து கட்டு அழித்த வேங்கையின்
மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரே
					மேல்
# 225 ஆலத்தூர் கிழார்
தலையோர் நுங்கின் தீம் சேறு மிசைய
இடையோர் பழத்தின் பைம் கனி மாந்த
கடையோர் விடு வாய் பிசிரொடு சுடு கிழங்கு நுகர
நில மலர் வையத்து வல முறை வளைஇ
வேந்து பீடு அழித்த ஏந்து வேல் தானையொடு	5
ஆற்றல் என்பதன் தோற்றம் கேள் இனி
கள்ளி போகிய களரி அம் பறந்தலை
முள் உடை வியன் காட்டதுவே நன்றும்
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன்-கொல் என
இன் இசை பறையொடு வென்றி நுவல		10
தூக்கணம்_குரீஇ தூங்கு கூடு ஏய்ப்ப
ஒரு சிறை கொளீஇய திரி வாய் வலம்புரி
ஞாலம் காவலர் கடை தலை
காலை தோன்றினும் நோகோ யானே
					மேல்
# 226 மாறோக்கத்து நப்பசலையார்
செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று ஆயினும்
உற்றன்று ஆயினும் உய்வு இன்று மாதோ
பாடுநர் போல கைதொழுது ஏத்தி
இரந்தன்று ஆகல் வேண்டும் பொலம் தார்
மண்டு அமர் கடக்கும் தானை			5
திண் தேர் வளவன் கொண்ட கூற்றே
					மேல்
# 227 ஆவடுதுறை மாசாத்தனார்
நனி பேதையே நயன் இல் கூற்றம்
விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை
இன்னும் காண்குவை நன் வாய் ஆகுதல்
ஒளிறு வாள் மறவரும் களிறும் மாவும்
குருதி அம் குரூஉ புனல் பொரு_களத்து ஒழிய	5
நாளும் ஆனான் கடந்து அட்டு என்றும் நின்
வாடு பசி அருத்திய பழி தீர் ஆற்றல்
நின் ஓர் அன்ன பொன் இயல் பெரும் பூண்
வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி
இனையோன் கொண்டனை ஆயின்		10
இனி யார் மற்று நின் பசி தீர்ப்போரே
					மேல்
# 228 ஐயூர் முடவனார்
கலம் செய் கோவே கலம் செய் கோவே
இருள் திணிந்து அன்ன குரூஉ திரள் பரூஉ புகை
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை
நனம் தலை மூதூர் கலம் செய் கோவே
அளியை நீயே யாங்கு ஆகுவை-கொல்		5
நிலவரை சூட்டிய நீள் நெடும் தானை
புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை
விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்து அன்ன
சேண் விளங்கு சிறப்பின் செம்பியர் மருகன்
கொடி நுடங்கு யானை நெடுமாவளவன்		10
தேவர்_உலகம் எய்தினன் ஆதலின்
அன்னோர் கவிக்கும் கண் அகன் தாழி
வனைதல் வேட்டனை ஆயின் எனையதூஉம்
இரு நிலம் திகிரியா பெரு மலை
மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே		15
					மேல்
# 229 கூடலூர் கிழார்
ஆடு இயல் அழல் குட்டத்து
ஆர் இருள் அரை இரவில்
முட பனையத்து வேர் முதலா
கடை குளத்து கயம் காய
பங்குனி உயர் அழுவத்து			5
தலை நாள்_மீன் நிலை திரிய
நிலை நாள்_மீன் அதன்_எதிர் ஏர்தர
தொல் நாள்_மீன் துறை படிய
பாசி செல்லாது ஊசி துன்னாது
அளக்கர் திணை விளக்கு ஆக			10
கனை எரி பரப்ப கால் எதிர்பு பொங்கி
ஒரு மீன் விழுந்தன்றால் விசும்பினானே
அது கண்டு யாமும் பிறரும் பல் வேறு இரவலர்
பறை இசை அருவி நன் நாட்டு பொருநன்
நோய் இலன் ஆயின் நன்று-மன் தில் என		15
அழிந்த நெஞ்சம் மடி உளம் பரப்ப
அஞ்சினம் எழு நாள் வந்தன்று இன்றே
மைந்து உடை யானை கை வைத்து உறங்கவும்
திண் பிணி முரசும் கண் கிழிந்து உருளவும்
காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும்		20
கால் இயல் கலி_மா கதி இன்றி வைகவும்
மேலோர்_உலகம் எய்தினன் ஆகலின்
ஒண் தொடி மகளிர்க்கு உறுதுணை ஆகி
தன் துணை ஆயம் மறந்தனன்-கொல்லோ
பகைவர் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு		25
அளந்து கொடை அறியா ஈகை
மணி வரை அன்ன மாஅயோனே
					மேல்
# 230 அரிசில்கிழார்
கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும்
வெம் கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும்
களம் மலி குப்பை காப்பு இல வைகவும்
விலங்கு பகை கடிந்த கலங்கா செங்கோல்
வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள்	5
பொய்யா எழினி பொருது களம் சேர
ஈன்றோள் நீத்த குழவி போல
தன் அமர் சுற்றம் தலைத்தலை இனைய
கடும் பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமொடு
நோய் உழந்து வைகிய உலகினும் மிக நனி		10
நீ இழந்தனையே அறன் இல் கூற்றம்
வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான்
வீழ் குடி உழவன் வித்து உண்டு ஆங்கு
ஒருவன் ஆர் உயிர் உண்ணாய் ஆயின்
நேரார் பல் உயிர் பருகி			15
ஆர்குவை-மன்னோ அவன் அமர் அடு_களத்தே
					மேல்
 




# 231 ஔவையார்
எறி புன குறவன் குறையல் அன்ன
கரி புற விறகின் ஈம ஒள் அழல்
குறுகினும் குறுகுக குறுகாது சென்று
விசும்பு உற நீளினும் நீள்க பசும் கதிர்
திங்கள் அன்ன வெண்குடை			5
ஒண் ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே
					மேல்
# 232 ஔவையார்
இல் ஆகியரோ காலை மாலை
அல் ஆகியர் யான் வாழும் நாளே
நடுகல் பீலி சூட்டி நார் அரி
சிறு கலத்து உகுப்பவும் கொள்வன்-கொல்லோ
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய		5
நாடு உடன் கொடுப்பவும் கொள்ளாதோனே
					மேல்
# 233 வெள்ளெருக்கிலையார்
பொய் ஆகியரோ பொய் ஆகியரோ
பா அடி யானை பரிசிலர்க்கு அருகா
சீர் கெழு நோன் தாள் அகுதை_கண் தோன்றிய
பொன் புனை திகிரியின் பொய் ஆகியரோ
இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் பூண்		5
போர் அடு தானை எவ்வி மார்பின்
எஃகு உறு விழுப்புண் பல என
வைகுறு விடியல் இயம்பிய குரலே
					மேல்
# 234 வெள்ளெருக்கிலையார்
நோகோ யானே தேய்கமா காலை
பிடி அடி அன்ன சிறு வழி மெழுகி
தன் அமர் காதலி புல் மேல் வைத்த
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்-கொல்
உலகு புக திறந்த வாயில்			5
பலரோடு உண்டல் மரீஇயோனே
					மேல்
# 235 ஔவையார்
சிறிய கள் பெறினே எமக்கு ஈயும்-மன்னே
பெரிய கள் பெறினே
யாம் பாட தான் மகிழ்ந்து உண்ணும்-மன்னே
சிறு சோற்றானும் நனி பல கலத்தன்-மன்னே
பெரும் சோற்றானும் நனி பல கலத்தன்-மன்னே	5
என்பொடு தடி படு இடம் எல்லாம் எமக்கு ஈயும்-மன்னே
அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்-மன்னே
நரந்தம் நாறும் தன் கையால்
புலவு நாறும் என் தலை தைவரும்-மன்னே
அரும் தலை இரும் பாணர் அகல் மண்டை துளை உரீஇ	10
இரப்போர் கையுளும் போகி
புரப்போர் புன்கண் பாவை சோர
அம் சொல் நுண் தேர்ச்சி புலவர் நாவில்
சென்று வீழ்ந்தன்று அவன்
அரு நிறத்து இயங்கிய வேலே			15
ஆசு ஆகு எந்தை ஆண்டு உளன்-கொல்லோ
இனி பாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை
பனி துறை பகன்றை நறை கொள் மா மலர்
சூடாது வைகி ஆங்கு பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர் தவ பலவே			20
					மேல்
# 236 கபிலர்
கலை உண கிழிந்த முழவு மருள் பெரும் பழம்
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும்
மலை கெழு நாட மா வண் பாரி
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ என்
புலந்தனை ஆகுவை புரந்த ஆண்டே		5
பெரும் தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது
ஒருங்கு வரல் விடாஅது ஒழிக என கூறி
இனையை ஆதலின் நினக்கு மற்று யான்
மேயினேன் அன்மையானே ஆயினும்
இம்மை போல காட்டி உம்மை			10
இடை இல் காட்சி நின்னோடு
உடன் உறைவு ஆக்குக உயர்ந்த பாலே
					மேல்
# 237 பெருஞ்சித்திரனார்
நீடு வாழ்க என்று யான் நெடும் கடை குறுகி
பாடி நின்ற பசி நாள் கண்ணே
கோடை காலத்து கொழு நிழல் ஆகி
பொய்த்தல் அறியா உரவோன் செவி முதல்
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று என		5
நச்சி இருந்த நசை பழுது ஆக
அட்ட குழிசி அழல் பயந்து ஆஅங்கு
அளியர் தாமே ஆர்க என்னா
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர்			10
வாழை பூவின் வளை முறி சிதற
முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்க
கள்ளி போகிய களரி அம் பறந்தலை
வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே
ஆங்கு அது நோய் இன்று ஆக ஓங்கு வரை		15
புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின்
எலி பார்த்து ஒற்றாது ஆகும் மலி திரை
கடல் மண்டு புனலின் இழுமென சென்று
நனி உடை பரிசில் தருகம்
எழு-மதி நெஞ்சே துணிபு முந்துறுத்தே		20
					மேல்
# 238 பெருஞ்சித்திரனார்
கவி செம் தாழி குவி புறத்து இருந்த
செவி செம் சேவலும் பொகுவலும் வெருவா
வாய் வன் காக்கையும் கூகையும் கூடி
பேஎய் ஆயமொடு பெட்டு ஆங்கு வழங்கும்
காடு முன்னினனே கள் காமுறுநன்		5
தொடி_கழி_மகளிரின் தொல் கவின் வாடி
பாடுநர் கடும்பும் பையென்றனவே
தோடு கொள் முரசும் கிழிந்தன கண்ணே
ஆள் இல் வரை போல் யானையும் மருப்பு இழந்தனவே
வெம் திறல் கூற்றம் பெரும் பேது உறுப்ப		10
எந்தை ஆகுல அதன் படல் அறியேன்
அந்தோ அளியேன் வந்தனென் மன்ற
என் ஆகுவர்-கொல் என் துன்னியோரே
மாரி இரவின் மரம் கவிழ் பொழுதின்
ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு ஒராங்கு		15
கண் இல் ஊமன் கடல் பட்டு ஆங்கு
வரை அளந்து அறியா திரை அரு நீத்தத்து
அவல மறு சுழி மறுகலின்
தவலே நன்று-மன் தகுதியும் அதுவே
					மேல்
# 239 பேரெயில் முறுவலார்
தொடி உடைய தோள் மணந்தனன்
கடி காவில் பூ சூடினன்
தண் கமழும் சாந்து நீவினன்
செற்றோரை வழி தபுத்தனன்
நட்டோரை உயர்பு கூறினன்			5
வலியர் என வழிமொழியலன்
மெலியர் என மீக்கூறலன்
பிறரை தான் இரப்பு அறியலன்
இரந்தோர்க்கு மறுப்பு அறியலன்
வேந்து உடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினன்	10
வரு படை எதிர்தாங்கினன்
பெயர் படை புறங்கண்டனன்
கடும் பரிய மா கடவினன்
நெடும் தெருவில் தேர் வழங்கினன்
ஓங்கு இயல களிறு ஊர்ந்தனன்			15
தீம் செறி தசும்பு தொலைச்சினன்
பாண் உவப்ப பசி தீர்த்தனன்
மயக்கு உடைய மொழி விடுத்தனன் ஆங்கு
செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்
இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ			20
படு வழி படுக இ புகழ் வெய்யோன் தலையே
					மேல்
# 240 குட்டுவன் கீரனார்
ஆடு நடை புரவியும் களிறும் தேரும்
வாடா யாணர் நாடும் ஊரும்
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்
கோடு ஏந்து அல்குல் குறும் தொடி மகளிரொடு
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப		5
மேலோர்_உலகம் எய்தினன் எனாஅ
பொத்த அறையுள் போழ் வாய் கூகை
சுட்டு குவி என செத்தோர் பயிரும்
கள்ளி அம் பறந்தலை ஒரு சிறை அல்கி
ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது			10
புல்லென் கண்ணர் புரவலர் காணாது
கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர்
வாடிய பசியர் ஆகி பிறர்
நாடு படு செலவினர் ஆயினர் இனியே
					மேல்
 




# 241 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
திண் தேர் இரவலர்க்கு ஈத்த தண் தார்
அண்டிரன் வரூஉம் என்ன ஒண் தொடி
வச்சிர தட கை நெடியோன் கோயிலுள்
போர்ப்பு_உறு முரசும் கறங்க
ஆர்ப்பு எழுந்தன்றால் விசும்பினானே		5
					மேல்
# 242 குடவாயி தீரத்தனாரி
இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல் யாழ் மருப்பின் மெல்ல வாங்கி
பாணன் சூடான் பாடினி அணியாள்
ஆண்மை தோன்ற ஆடவர் கடந்த
வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை		5
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே
					மேல்
# 243 தொடித்தலை விழுத்தண்டினார்
இனி நினைந்து இரக்கம் ஆகின்று திணி மணல்
செய்வு_உறு பாவைக்கு கொய் பூ தைஇ
தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து
தழுவு_வழி தழீஇ தூங்கு_வழி தூங்கி
மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு		5
உயர் சினை மருத துறை உற தாழ்ந்து
நீர் நணி படி கோடு ஏறி சீர் மிக
கரையவர் மருள திரை_அகம் பிதிர
நெடு நீர் குட்டத்து துடுமென பாய்ந்து
குளித்து மணல் கொண்ட கல்லா இளமை		10
அளிதோ தானே யாண்டு உண்டு-கொல்லோ
தொடி தலை விழு தண்டு ஊன்றி நடுக்கு_உற்று
இரும் இடை மிடைந்த சில சொல்
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே
					மேல்
# 244
பாணர் சென்னியும் வண்டு சென்று ஊதா
விறலியர் முன்கையும் தொடியின் பொலியா
இரவல் மாக்களும்
					மேல்
# 245 சேரமான் கோட்டம்பலத்து துஞ்சிய மாக்கோதை
யாங்கு பெரிது ஆயினும் நோய் அளவு எனைத்தே
உயிர் செகுக்க அல்லா மதுகைத்து அன்மையின்
கள்ளி போகிய களரி அம் பறந்தலை
வெள் இடை பொத்திய விளை விறகு ஈமத்து
ஒள் அழல் பள்ளி பாயல் சேர்த்தி			5
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
இன்னும் வாழ்வல் என் இதன் பண்பே
					மேல்
# 246 பூத பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
பல் சான்றீரே பல் சான்றீரே
செல்க என சொல்லாது ஒழிக என விலக்கும்
பொல்லா சூழ்ச்சி பல் சான்றீரே
அணில்_வரி_கொடும்_காய் வாள் போழ்ந்திட்ட
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது		5
அடை இடை கிடந்த கை பிழி பிண்டம்
வெள் எள் சாந்தொடு புளி பெய்து அட்ட
வேளை வெந்ததை வல்சி ஆக
பரல் பெய் பள்ளி பாய் இன்று வதியும்
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ		10
பெரும் காட்டு பண்ணிய கரும் கோட்டு ஈமம்
நுமக்கு அரிது ஆகுக தில்ல எமக்கு எம்
பெரும் தோள் கணவன் மாய்ந்து என அரும்பு அற
வள் இதழ் அவிழ்ந்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓர் அற்றே		15
					மேல்
# 247 மதுரை பேராலவாயர்
யானை தந்த முளி மர விறகின்
கானவர் பொத்திய ஞெலி தீ விளக்கத்து
மட மான் பெரு நிரை வைகு துயில் எடுப்பி
மந்தி சீக்கும் அணங்கு உடை முன்றிலில்
நீர் வார் கூந்தல் இரும் புறம் தாழ		5
பேர் அஞர் கண்ணள் பெரும் காடு நோக்கி
தெருமரும் அம்ம தானே தன் கொழுநன்
முழவு கண் துயிலா கடி உடை வியன் நகர்
சிறு நனி தமியள் ஆயினும்
இன் உயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்தே	10
					மேல்
# 248 ஒக்கூர் மாசாத்தனார்
அளிய தாமே சிறு வெள் ஆம்பல்
இளையம் ஆக தழை ஆயினவே இனியே
பெரு வள கொழுநன் மாய்ந்து என பொழுது மறுத்து
இன்னா வைகல் உண்ணும்
அல்லி படூஉம் புல் ஆயினவே			5
					மேல்
# 249 தும்பி சொகினனார் தும்பிசேர் கீரனார் என்பதும் ஆம்
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப
கணை கோட்டு வாளை மீ நீர் பிறழ
எரி பூ பழனம் நெரித்து உடன் வலைஞர்
அரி குரல் தடாரியின் யாமை மிளிர
பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு	5
உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும்
அகல் நாட்டு அண்ணல் புகாவே நெருநை
பகல் இடம் கண்ணி பலரொடும் கூடி
ஒருவழிப்பட்டன்று-மன்னே இன்றே
அடங்கிய கற்பின் ஆய் நுதல் மடந்தை		10
உயர்_நிலை_உலகம் அவன் புக வார
நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி
அழுதல் ஆனா கண்ணள்
மெழுகும் ஆப்பி கண் கலுழ் நீரானே
					மேல்
# 250 தாயம் கண்ணியார்
குய் குரல் மலிந்த கொழும் துவை அடிசில்
இரவலர் தடுத்த வாயில் புரவலர்
கண்ணீர் தடுத்த தண் நறும் பந்தர்
கூந்தல் கொய்து குறும் தொடி நீக்கி
அல்லி உணவின் மனைவியொடு இனியே		5
புல்லென்றனையால் வளம் கெழு திரு நகர்
வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும்
முனி தலை புதல்வர் தந்தை
தனித்தலை பெரும் காடு முன்னிய பின்னே
					மேல்
 



# 251 மாற்பித்தியார்
ஓவத்து அன்ன இடன் உடை வரைப்பில்
பாவை அன்ன குறும் தொடி மகளிர்
இழை நிலை நெகிழ்ந்த மள்ளன் கண்டிகும்
கழை கண் நெடு வரை அருவி ஆடி
கான யானை தந்த விறகின்			5
கடும் தெறல் செம் தீ வேட்டு
புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே
					மேல்
# 252 மாற்பித்தியார்
கறங்கு வெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து
தில்லை அன்ன புல்லென் சடையோடு
அள் இலை தாளி கொய்யுமோனே
இல் வழங்கு மட மயில் பிணிக்கும்
சொல் வலை வேட்டுவன் ஆயினன் முன்னே		5
					மேல்
# 253 குளம்பாதாயனார்
என் திறத்து அவலம் கொள்ளல் இனியே
வல ஆர் கண்ணி இளையர் திளைப்ப
நகாஅல் என வந்த மாறே எழா நெல்
பைம் கழை பொதி களைந்து அன்ன விளர்ப்பின்
வளை இல் வறும் கை ஓச்சி			5
கிளையுள் ஒய்வலோ கூறு நின் உரையே
					மேல்
# 254 கயமனார்
இளையரும் முதியரும் வேறு புலம் படர
எடுப்ப எழாஅய் மார்பம் மண் புல்ல
இடை சுரத்து இறுத்த மள்ள விளர்த்த
வளை இல் வறும் கை ஓச்சி கிளையுள்
இன்னன் ஆயினன் இளையோன் என்று		5
நின் உரை செல்லும் ஆயின் மற்று
முன் ஊர் பழுனிய கோளி ஆலத்து
புள் ஆர் யாணர்த்து அற்றே என் மகன்
வளனும் செம்மலும் எமக்கு என நாளும்
ஆனாது புகழும் அன்னை			10
யாங்கு ஆகுவள்-கொல் அளியள் தானே
					மேல்
# 255 வன்பரணர்
ஐயோ எனின் யான் புலி அஞ்சுவலே
அணைத்தனன் கொளினே அகல் மார்பு எடுக்க அல்லேன்
என் போல் பெரு விதிர்ப்பு உறுக நின்னை
இன்னாது உற்ற அறன் இல் கூற்றே
திரை வளை முன்கை பற்றி			5
வரை நிழல் சேர்கம் நடந்திசின் சிறிதே
					மேல்
# 256 பெயர் தெரிந்திலது
கலம் செய் கோவே கலம் செய் கோவே
அச்சு உடை சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறு வெண் பல்லி போல தன்னொடு
சுரம் பல வந்த எமக்கும் அருளி
வியல் மலர் அகன் பொழில் ஈம தாழி		5
அகலிது ஆக வனைமோ
நனம் தலை மூதூர் கலம் செய் கோவே
					மேல்
# 257 பெயர் தெரிந்திலது
செருப்பு இடை சிறு பரல் அன்னன் கணை கால்
அம் வயிற்று அகன்ற மார்பின் பைம் கண்
குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய்
செவி இறந்து தாழ்தரும் கவுளன் வில்லொடு
யார்-கொலோ அளியன் தானே தேரின்		5
ஊர் பெரிது இகந்தன்றும் இலனே அரண் என
காடு கைக்கொண்டன்றும் இலனே காலை
புல்லார் இன நிரை செல் புறம் நோக்கி
கையின் சுட்டி பையென எண்ணி
சிலையின் மாற்றியோனே அவை தாம்		10
மிக பல ஆயினும் என் ஆம் எனைத்தும்
வெண் கோள் தோன்றா குழிசியொடு
நாள் உறை மத்து ஒலி கேளாதோனே
					மேல்
# 258 உலோச்சனார்
முள் கால் காரை முது பழன் ஏய்ப்ப
தெறிப்ப விளைந்த தீம் கந்தாரம்
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு
பச்சூன் தின்று பைம் நிணம் பெருத்த
எச்சில் ஈர்ம் கை வில் புறம் திமிரி		5
புலம் புக்கனனே புல் அணல் காளை
ஒரு முறை உண்ணா அளவை பெரு நிரை
ஊர் புறம் நிறைய தருகுவன் யார்க்கும்
தொடுதல் ஓம்பு-மதி முது கள் சாடி
ஆ தர கழுமிய துகளன்			10
காய்தலும் உண்டு அ கள் வெய்யோனே
					மேல்
# 259 கோடை பாடிய பெரும்பூதனார்
ஏறு உடை பெரு நிரை பெயர்தர பெயராது
இலை புதை பெரும் காட்டு தலை கரந்து இருந்த
வல் வில் மறவர் ஒடுக்கம் காணாய்
செல்லல் செல்லல் சிறக்க நின் உள்ளம்
முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல		5
தாவுபு தெறிக்கும் ஆன் மேல்
புடை இலங்கு ஒள் வாள் புனை கழலோயே
					மேல்
# 260 வடமோதங்கிழார்
வளர தொடினும் வௌவுபு திரிந்து
விளரி உறுதரும் தீம் தொடை நினையா
தளரும் நெஞ்சம் தலைஇ மனையோள்
உளரும் கூந்தல் நோக்கி களர
கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி			5
பசி படு மருங்குலை கசிபு கைதொழாஅ
காணலென்-கொல் என வினவினை வரூஉம்
பாண கேள்-மதி யாணரது நிலையே
புரவு தொடுத்து உண்குவை ஆயினும் இரவு எழுந்து
எவ்வம் கொள்வை ஆயினும் இரண்டும்		10
கை உள போலும் கடிது அண்மையவே
முன் ஊர் பூசலின் தோன்றி தன் ஊர்
நெடு நிரை தழீஇய மீளியாளர்
விடு கணை நீத்தம் துடி புணை ஆக
வென்றி தந்து கொன்று கோள் விடுத்து		15
வையகம் புலம்ப வளைஇய பாம்பின்
வை எயிற்று உய்ந்த மதியின் மறவர்
கையகத்து உய்ந்த கன்று உடை பல் ஆன்
நிரையொடு வந்த உரையன் ஆகி
உரி களை அரவம் மான தானே			20
அரிது_செல்_உலகில் சென்றனன் உடம்பே
கான சிற்றியாற்று அரும் கரை கால் உற்று
கம்பமொடு துளங்கிய இலக்கம் போல
அம்பொடு துளங்கி ஆண்டு ஒழிந்தன்றே
உயர் இசை வெறுப்ப தோன்றிய பெயரே		25
மடம் சால் மஞ்ஞை அணி மயிர் சூட்டி
இடம் பிறர் கொள்ளா சிறு வழி
படம் செய் பந்தர் கல் மிசையதுவே
					மேல்
 




# 261 ஆவூர் மூலங்கிழார்
அந்தோ எந்தை அடையா பேர் இல்
வண்டு படு நறவின் தண்டா மண்டையொடு
வரையா பெரும் சோற்று முரி வாய் முற்றம்
வெற்று யாற்று அம்பியின் எற்று அற்று ஆக
கண்டனென் மன்ற சோர்க என் கண்ணே		5
வையம் காவலர் வளம் கெழு திரு நகர்
மையல் யானை அயா உயிர்த்து அன்ன
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை
புது கண் மாக்கள் செது கண் ஆர
பயந்தனை-மன்னால் முன்னே இனியே		10
பல் ஆ தழீஇய கல்லா வல் வில்
உழை குரல் கூகை அழைப்ப ஆட்டி
நாகு முலை அன்ன நறும் பூ கரந்தை
விரகு அறியாளர் மரபின் சூட்ட
நிரை இவண் தந்து நடுகல் ஆகிய			15
வென் வேல் விடலை இன்மையின் புலம்பி
கொய் மழி தலையொடு கைம்மை உற கலங்கிய
கழி_கல_மகடூஉ போல
புல்லென்றனையால் பல் அணி இழந்தே
					மேல்
# 262 மதுரை பேராலவாயர்
நறவும் தொடு-மின் விடையும் வீழ்-மின்
பாசுவல் இட்ட புன் கால் பந்தர்
புனல் தரும் இள மணல் நிறைய பெய்ம்-மின்
ஒன்னார் முன்னிலை முருக்கி பின் நின்று
நிரையோடு வரூஉம் என் ஐக்கு			5
உழையோர் தன்னினும் பெரும் சாயலரே
					மேல்
# 263 திணை கரந்தை
பெரும் களிற்று அடியின் தோன்றும் ஒரு கண்
இரும் பறை இரவல சேறி ஆயின்
தொழாதனை கழிதல் ஓம்பு-மதி வழாது
வண்டு மேம்படூஉம் இ வற நிலை ஆறே
பல் ஆ திரள் நிரை பெயர்தர பெயர்தந்து		5
கல்லா இளையர் நீங்க நீங்கான்
வில் உமிழ் கடும் கணை மூழ்க
கொல் புனல் சிறையின் விலங்கியோன் கல்லே
					மேல்
# 264 உறையூர் இளம்பொன் வாணிகனார்
பரல் உடை மருங்கின் பதுக்கை சேர்த்தி
மரல் வகுந்து தொடுத்த செம் பூ கண்ணியொடு
அணி மயில் பீலி சூட்டி பெயர் பொறித்து
இனி நட்டனரே கல்லும் கன்றொடு
கறவை தந்து பகைவர் ஓட்டிய			5
நெடுந்தகை கழிந்தமை அறியாது
இன்றும் வரும்-கொல் பாணரது கடும்பே
					மேல்
# 265 சோணாட்டு முகையலூர் சிறுகருந்தும்பியார்
ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீ
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து
பல் ஆன் கோவலர் படலை சூட்ட
கல் ஆயினையே கடு மான் தோன்றல்		5
வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கை
பரிசிலர் செல்வம் அன்றியும் விரி தார்
கடும் பகட்டு யானை வேந்தர்
ஒடுங்கா வென்றியும் நின்னொடு செலவே
					மேல்
# 266 பெருங்குன்றூர் கிழார்
பயம் கெழு மா மழை பெய்யாது மாறி
கயம் களி முளியும் கோடை ஆயினும்
புழல் கால் ஆம்பல் அகல் அடை நீழல்
கதிர் கோட்டு நந்தின் கரி முக ஏற்றை
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம்		5
நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல்
வான் தோய் நீள் குடை வய_மான் சென்னி
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்
ஆசு ஆகு என்னும் பூசல் போல
வல்லே களை-மதி அத்தை உள்ளிய		10
விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை
பொறி புணர் உடம்பில் தோன்றி என்
அறிவு கெட நின்ற நல்கூர்மையே
					மேல்
# 267

# 268
					மேல்
# 269 ஔவையார்
குயில் வாய் அன்ன கூர் முகை அதிரல்
பயிலாது அல்கிய பல் காழ் மாலை
மை இரும் பித்தை பொலிய சூட்டி
புத்து அகல் கொண்ட புலி கண் வெப்பர்
ஒன்றிரு முறை இருந்து உண்ட பின்றை		5
உவலை கண்ணி துடியன் வந்து என
பிழி மகிழ் வல்சி வேண்ட மற்று இது
கொள்ளாய் என்ப கள்ளின் வாழ்த்தி
கரந்தை நீடிய அறிந்து மாறு செருவின்
பல் ஆன் இன நிரை தழீஇய வில்லோர்		10
கொடும் சிறை குரூஉ பருந்து ஆர்ப்ப
தடிந்து மாறு பெயர்த்தது இ கரும் கை வாளே
					மேல்
# 270 கழாத்தலையார்
பன் மீன் இமைக்கும் மாக விசும்பின்
இரங்கு முரசின் இனம் சால் யானை
நிலம் தவ உருட்டிய நேமியோரும்
சமம் கண் கூடி தாம் வேட்பவ்வே
நறு விரை துறந்த நாறா நரை தலை		5
சிறுவர் தாயே பேரில்_பெண்டே
நோகோ யானே நோக்கு-மதி நீயே
மற படை நுவலும் அரி குரல் தண்ணுமை
இன் இசை கேட்ட துன் அரும் மறவர்
வென்றி தரு வேட்கையர் மன்றம் கொள்-மார்	10
பேர் அமர் உழந்த வெருவரு பறந்தலை
விழு நவி பாய்ந்த மரத்தின்
வாள் மிசை கிடந்த ஆண்மையோன் திறத்தே
					மேல்
 




# 271 வெறி பாடிய காமக்கண்ணியார்
நீர் அறவு அறியா நில முதல் கலந்த
கரும் குரல் நொச்சி கண் ஆர் குரூஉ தழை
மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல்
தொடலை ஆகவும் கண்டனம் இனியே
வெருவரு குருதியொடு மயங்கி உருவு கரந்து	5
ஒறுவாய் பட்ட தெரியல் ஊன் செத்து
பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம்
மறம் புகல் மைந்தன் மலைந்த மாறே
					மேல்
# 272 மோசி சாத்தனார்
மணி துணர்ந்து அன்ன மா குரல் நொச்சி
போது விரி பன் மரனுள்ளும் சிறந்த
காதல் நன் மரம் நீ நிழற்றிசினே
கடி உடை வியன் நகர் காண்வர பொலிந்த
தொடி உடை மகளிர் அல்குலும் கிடத்தி		5
காப்பு உடை புரிசை புக்கு மாறு அழித்தலின்
ஊர் புறங்கொடாஅ நெடுந்தகை
பீடு கெழு சென்னி கிழமையும் நினதே
					மேல்
# 273 எருமை வெளியனார்
மா வாராதே மா வாராதே
எல்லார் மாவும் வந்தன எம் இல்
புல் உளை குடுமி புதல்வன் தந்த
செல்வன் ஊரும் மா வாராதே
இரு பேர் யாற்ற ஒரு பெரும் கூடல்		5
விலங்கு இடு பெரு மரம் போல
உலந்தன்று-கொல் அவன் மலைந்த மாவே
					மேல்
# 274 உலோச்சனார்
நீல கச்சை பூ ஆர் ஆடை
பீலி கண்ணி பெருந்தகை மறவன்
மேல்வரும் களிற்றொடு வேல் துரந்து இனியே
தன்னும் துரக்குவன் போலும் ஒன்னலர்
எஃகு உடை வலத்தர் மாவொடு பரத்தர		5
கையின் வாங்கி தழீஇ
மொய்ம்பின் ஊக்கி மெய் கொண்டனனே
					மேல்
# 275 ஒரூஉத்தனார்
கோட்டம் கண்ணியும் கொடும் திரை ஆடையும்
வேட்டது சொல்லி வேந்தனை தொடுத்தலும்
ஒத்தன்று மாதோ இவற்கே செற்றிய
திணி நிலை அலற கூவை போழ்ந்து தன்
வடி மாண் எஃகம் கடி முகத்து ஏந்தி		5
ஓம்பு-மின் ஓம்பு-மின் இவண் என ஓம்பாது
தொடர் கொள் யானையின் குடர் கால் தட்ப
கன்று அமர் கறவை மான
முன் சமத்து எதிர்ந்த தன் தோழற்கு வருமே
					மேல்
# 276 மதுரை பூதன் இளநாகனார்
நறு விரை துறந்த நரை வெண் கூந்தல்
இரம் காழ் அன்ன திரங்கு கண் வறு முலை
செம் முது பெண்டின் காதல் அம் சிறாஅன்
மட பால் ஆய்_மகள் வள் உகிர் தெறித்த
குட பால் சில் உறை போல			5
படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே
					மேல்
# 277 பூங்கணுத்திரையார்
மீன் உண் கொக்கின் தூவி அன்ன
வால் நரை கூந்தல் முதியோள் சிறுவன்
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்
நோன் கழை துயல்வரும் வெதிரத்து		5
வான் பெய தூங்கிய சிதரினும் பலவே
					மேல்
# 278 காக்கைபாடினியார் நச்செள்ளையார்
நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படை அழிந்து மாறினன் என்று பலர் கூற
மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்ட என்
முலை அறுத்திடுவென் யான் என சினைஇ		5
கொண்ட வாளொடு படு பிணம் பெயரா
செம் களம் துழவுவோள் சிதைந்து வேறு ஆகிய
படு மகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே
					மேல்
# 279 ஒக்கூர் மாசாத்தியார்
கெடுக சிந்தை கடிது இவள் துணிவே
மூதின் மகளிர் ஆதல் தகுமே
மேல் நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை
யானை எறிந்து களத்து ஒழிந்தனனே
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்		5
பெரு நிரை விலங்கி ஆண்டு பட்டனனே
இன்றும் செரு பறை கேட்டு விருப்பு_உற்று மயங்கி
வேல் கை கொடுத்து வெளிது விரித்து உடீஇ
பாறு மயிர் குடுமி எண்ணெய் நீவி
ஒரு மகன் அல்லது இல்லோள்			10
செருமுகம் நோக்கி செல்க என விடுமே
					மேல்
# 280 மாறோக்கத்து நப்பசலையார்
என் ஐ மார்பில் புண்ணும் வெய்ய
நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்
நெடு நகர் வரைப்பின் விளக்கும் நில்லா
துஞ்சா கண்ணே துயிலும் வேட்கும்
அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்		5
நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்
செம் முது பெண்டின் சொல்லும் நிரம்பா
துடிய பாண பாடு வல் விறலி
என் ஆகுவிர்-கொல் அளியிர் நுமக்கும்
இவண் உறை வாழ்க்கையோ அரிதே யானும்		10
மண்_உறு மழி தலை தெண் நீர் வார
தொன்று தாம் உடுத்த அம் பகை தெரியல்
சிறு வெள் ஆம்பல் அல்லி உண்ணும்
கழி_கல_மகளிர் போல
வழி நினைந்திருத்தல் அதனினும் அரிதே		15
					மேல்
 




# 281 அரிசில் கிழார்
தீம் கனி இரவமொடு வேம்பு மனை செரீஇ
வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்க
கை பய பெயர்த்து மை இழுது இழுகி
ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
இசை மணி எறிந்து காஞ்சி பாடி			5
நெடு நகர் வரைப்பின் கடி நறை புகைஇ
காக்கம் வம்மோ காதல் அம் தோழீ
வேந்து உறு விழுமம் தாங்கிய
பூம் பொறி கழல் கால் நெடுந்தகை புண்ணே
					மேல்
# 282 பாலை பாடிய பெருங்கடுங்கோஇ
எஃகு உளம் கழிய இரு நில மருங்கின்
அரும் கடன் இறுத்த பெருஞ்செயாளனை
யாண்டு உளனோ என வினவுதி ஆயின்
வரு படை தாங்கிய கிளர் தார் அகலம்
அரும் கடன் இறும்-மார் வயவர் எறிய		5
உடம்பும் தோன்றா உயிர் கெட்டன்றே
மலையுநர் மடங்கி மாறு எதிர் கழிய
அலகை போகி சிதைந்து வேறு ஆகிய
பலகை அல்லது களத்து ஒழியாதே
சேண் விளங்கு நல் இசை நிறீஇ			10
நா நவில் புலவர் வாய் உளானே
					மேல்
# 283 அடை நெடும் கல்வியார்
ஒண் செங்குரலி தண் கயம் கலங்கி
வாளை நீர்நாய் நாள் இரை பெறூஉ
பெறாஅ உறை அரா வராஅலின் மயங்கி
மாறு கொள் முதலையொடு ஊழ் மாறு பெயரும்
அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும்		5
வலம்புரி கோசர் அவை_களத்தானும்
மன்றுள் என்பது கெட ----------------- தானே பாங்கற்கு
ஆர் சூழ் குறட்டின் வேல் நிறத்து இங்க
உயிர் புறப்படாஅ அளவை தெறுவர
தெற்றி பாவை திணி மணல் அயரும்		10
மென் தோள் மகளிர் நன்று புரப்ப
இமிழ்ப்பு_உற நீண்ட பாசிலை
கமழ் பூ தும்பை நுதல் அசைத்தோனே
					மேல்
# 284 ஓரம் போகியார்
வருக தில் வல்லே வருக தில் வல் என
வேந்து விடு விழு தூது ஆங்காங்கு இசைப்ப
நூல் அரி மாலை சூடி காலின்
தமியன் வந்த மூதிலாளன்
அரும் சமம் தாங்கி முன் நின்று எறிந்த		5
ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறை ஆக
திரிந்த வாய் வாள் திருத்தா
தனக்கு இரிந்தானை பெயர் புறம் நகுமே
					மேல்
# 285 அரிசில் கிழார்
பாசறையீரே பாசறையீரே
துடியன் கையது வேலே அடி புணர்
வாங்கு இரு மருப்பின் தீம் தொடை சீறியாழ்
பாணன் கையது தோலே காண்வர
கடும் தெற்று மூடையின் -------------------------			5
வாடிய மாலை மலைந்த சென்னியன்
வேந்து தொழில் அயரும் அரும் தலை சுற்றமொடு
நெடு நகர் வந்து என விடு கணை மொசித்த
மூரி வெண் தோள் --------------------------------
சேறுபடு குருதி செம்மல் உக்கு ஓஒ		10
மாறு செறு நெடு வேல் மார்பு உளம் போக
நிணம் பொதி கழலொடு நிலம் சேர்ந்தனனே
அது கண்டு பரந்தோர் எல்லாம் புகழ தலை பணிந்து
இறைஞ்சியோனே குருசில் பிணங்கு கதிர்
அலமரும் கழனி தண்ணடை ஒழிய		15
இலம்பாடு ஒக்கல் தலைவற்கு ஓர்
கரம்பை சீறூர் நல்கினன் எனவே
					மேல்
# 286 ஔவையார்
வெள்ளை வெள்யாட்டு செச்சை போல
தன்னோர் அன்ன இளையர் இருப்ப
பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனை
கால்_கழி_கட்டிலில் கிடப்பி
தூ வெள் அறுவை போர்ப்பித்திலதே		5
					மேல்
# 287 சாத்தந்தையார்
துடி எறியும் புலைய
எறி கோல் கொள்ளும் இழிசின
கால மாரியின் அம்பு தைப்பினும்
வயல் கெண்டையின் வேல் பிறழினும்
பொலம் புனை ஓடை அண்ணல் யானை		5
இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும்
ஓடல் செல்லா பீடு உடையாளர்
நெடு நீர் பொய்கை பிறழிய வாளை
நெல் உடை நெடு நகர் கூட்டு முதல் புரளும்
தண்ணடை பெறுதல் யாவது படினே		10
மாசு இல் மகளிர் மன்றல் நன்றும்
உயர்_நிலை_உலகத்து நுகர்ப அதனால்
வம்ப வேந்தன் தானை
இம்பர் நின்றும் காண்டிரோ வரவே
					மேல்
# 288 கழாத்தலையார்
மண் கொள வரிந்த வை நுதி மருப்பின்
அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்து
வென்றதன் பச்சை சீவாது போர்த்த
திண் பிணி முரசம் இடை புலத்து இரங்க
ஆர் அமர் மயங்கிய ஞாட்பின் தெறுவர		5
நெடு வேல் பாய்ந்த நாண் உடை நெஞ்சத்து
அரு குறை ஆற்றி வீழ்ந்தான் மன்ற
குருதியொடு துயல்வரும் மார்பின்
முயக்கு இடை ஈயாது மொய்த்தன பருந்தே
					மேல்
# 289 கழாத்தலையாரி
ஈர செவ்வி உதவின ஆயினும்
பல் எருத்துள்ளும் நல் எருது நோக்கி
வீறு_வீறு ஆயும் உழவன் போல
பீடு பெறு தொல் குடி பாடு பல தாங்கிய
மூதிலாளருள்ளும் காதலின்			5
தனக்கு முகந்து ஏந்திய பசும்_பொன் மண்டை
இவற்கு ஈக என்னும் அதுவும் அன்றிசினே
கேட்டியோ வாழி பாண பாசறை
பூ கோள் இன்று என்று அறையும்
மடி வாய் தண்ணுமை இழிசினன் குரலே		10
					மேல்
# 290 ஔவையார்
இவற்கு ஈந்து உண்-மதி கள்ளே சின போர்
இன களிற்று யானை இயல் தேர் குருசில்
நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை
எடுத்து எறி ஞாட்பின் இமையான் தச்சன்
அடுத்து எறி குறட்டின் நின்று மாய்ந்தனனே		5
மற புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்
உறைப்பு_உழி ஓலை போல
மறைக்குவன் பெரும நின் குறித்து வரு வேலே
					மேல்
 




# 291 நெடுங்கழுத்து பரணர்
சிறாஅஅர் துடியர் பாடு வல் மகாஅஅர்
தூ வெள் அறுவை மாயோன் குறுகி
இரும் புள் பூசல் ஓம்பு-மின் யானும்
விளரி கொட்பின் வெள் நரி கடிகுவென்
என் போல் பெரு விதுப்பு உறுக வேந்தே		5
கொன்னும் சாதல் வெய்யோற்கு தன் தலை
மணி மருள் மாலை சூட்டி அவன் தலை
ஒரு காழ் மாலை தான் மலைந்தனனே
					மேல்
# 292 விரிச்சியூர் நன்னாகனார்
வேந்தற்கு ஏந்திய தீம் தண் நறவம்
யாம் தனக்கு உறு முறை வளாவ விலக்கி
வாய் வாள் பற்றி நின்றனென் என்று
சினவல் ஓம்பு-மின் சிறு புல்லாளர்
ஈண்டே போல வேண்டுவன் ஆயின்		5
என் முறை வருக என்னான் கம்மென
எழு தரு பெரும் படை விலக்கி
ஆண்டும் நிற்கும் ஆண்தகையன்னே
					மேல்
# 293 நொச்சி நியமங்கிழார்
நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாண் உடை மாக்கட்கு இரங்கும் ஆயின்
எம்மினும் பேர் எழில் இழந்து வினை என
பிறர் மனை புகுவள்-கொல்லோ			5
அளியள் தானே பூ_விலை_பெண்டே
					மேல்
# 294 பெருந்தலை சாத்தனார்
வெண்குடை மதியம் மேல் நிலா திகழ்தர
கண்கூடு இறுத்த கடல் மருள் பாசறை
குமரி_படை தழீஇய கூற்று வினை ஆடவர்
தமர் பிறர் அறியா அமர் மயங்கு அழுவத்து
இறையும் பெயரும் தோற்றி நுமருள்		5
நாள் முறை தபுத்தீர் வம்-மின் ஈங்கு என
போர் மலைந்து ஒரு சிறை நிற்ப யாவரும்
அரவு உமிழ் மணியின் குறுகார்
நிரை தார் மார்பின் நின் கேள்வனை பிறரே
					மேல்
# 295 ஔவையார்
கடல் கிளர்ந்து அன்ன கட்டூர் நாப்பண்
வெந்து வாய் மடித்து வேல் தலைப்பெயரி
தோடு உகைத்து எழுதரூஉ துரந்து எறி ஞாட்பின்
வரு படை போழ்ந்து வாய் பட விலங்கி
இடை படை அழுவத்து சிதைந்து வேறு ஆகிய	5
சிறப்பு உடையாளன் மாண்பு கண்டு அருளி
வாடு முலை ஊறி சுரந்தன
ஓடா பூட்கை விடலை தாய்க்கே
					மேல்
# 296 வெள்ளை மாளர்
வேம்பு சினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்
நெய் உடை கையர் ஐயவி புகைப்பவும்
எல்லா மனையும் கல்லென்றவ்வே
வேந்து உடன்று எறிவான்-கொல்லோ
நெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே		5
					மேல்
# 297
பெரு நீர் மேவல் தண்ணடை எருமை
இரு மருப்பு உறழும் நெடு மாண் நெற்றின்
பைம் பயறு உதிர்த்த கோதின் கோல் அணை
கன்று உடை மரையா துஞ்சும் சீறூர்
கோள் இவண் வேண்டேம் புரவே நார் அரி		5
நனை முதிர் சாடி நறவின் வாழ்த்தி
துறை நணி கெழீஇ கம்புள் ஈனும்
தண்ணடை பெறுதலும் உரித்தே வை நுதி
நெடு வேல் பாய்ந்த மார்பின்
மடல் வன் போந்தையின் நிற்குமோர்க்கே		10
					மேல்
# 298
எமக்கே கலங்கல் தருமே தானே
தேறல் உண்ணும்-மன்னே நன்றும்
இன்னான் மன்ற வேந்தே இனியே
நேரார் ஆர் எயில் முற்றி
வாய் மடித்து உரறி நீ முந்து என்னானே		5
					மேல்
# 299 பொன் முடியார்
பருத்தி வேலி சீறூர் மன்னன்
உழுத்து அதர் உண்ட ஓய் நடை புரவி
கடல் மண்டு தோணியின் படை முகம் போழ
நெய்ம்மிதி அருந்திய கொய் சுவல் எருத்தின்
தண்ணடை மன்னர் தார் உடை புரவி		5
அணங்கு உடை முருகன் கோட்டத்து
கலம் தொடா மகளிரின் இகந்து நின்றவ்வே
					மேல்
# 300 அரிசில் கிழார்
தோல் தா தோல் தா என்றி தோலொடு
துறுகல் மறையினும் உய்குவை போலாய்
நெருநல் எல்லை நீ எறிந்தோன் தம்பி
அகல் பெய் குன்றியின் சுழலும் கண்ணன்
பேர் ஊர் அட்ட கள்ளிற்கு			5
ஓர் இல் கோயின் தேருமால் நின்னே
					மேல்
 



# 301 ஆவூர் மூலங்கிழார்
பல் சான்றீரே பல் சான்றீரே
குமரி மகளிர் கூந்தல் புரைய
அமரின் இட்ட அரு முள் வேலி
கல்லென் பாசறை பல் சான்றீரே
முரசு முழங்கு தானை நும் அரசும் ஓம்பு-மின்	5
ஒளிறு ஏந்து மருப்பின் நும் களிறும் போற்று-மின்
எனை நாள் தங்கும் நும் போரே அனை நாள்
எறியர் எறிதல் யாவணது எறிந்தோர்
எதிர் சென்று எறிதலும் செல்லான் அதனால்
அறிந்தோர் யார் அவன் கண்ணிய பொருளே		10
பலம் என்று இகழ்தல் ஓம்பு-மின் உது காண்
நிலன் அளப்பு அன்ன நில்லா குறு நெறி
வண் பரி புரவி பண்பு பாராட்டி
எல் இடை படர் தந்தோனே கல்லென
வேந்து ஊர் யானைக்கு அல்லது			15
ஏந்துவன் போலான் தன் இலங்கு இலை வேலே
					மேல்
# 302 வெறிபாடிய காம கண்ணியார்-காம கணியார் எனவும் பாடம்
வெடி வேய் கொள்வது போல ஓடி
தாவுபு உகளும் மாவே பூவே
விளங்கு இழை மகளிர் கூந்தல் கொண்ட
நரந்த பல் காழ் கோதை சுற்றிய
ஐது அமை பாணி வணர் கோட்டு சீறியாழ்		5
கை வார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய
நிரம்பா இயல்பின் கரம்பை சீறூர்
நோக்கினர் செகுக்கும் காளை ஊக்கி
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்
விண் இவர் விசும்பின் மீனும்			10
தண் பெயல் உறையும் உறை ஆற்றாவே
					மேல்
# 303 எருமை வெளியனார்
நிலம் பிறக்கிடுவது போல குளம்பு குடையூஉ
உள்ளம் அழிக்கும் கொட்பின் மான் மேல்
எள்ளுநர் செகுக்கும் காளை கூர்த்த
வெம் திறல் எஃகம் நெஞ்சு வடு விளைப்ப
ஆட்டி காணிய வருமே நெருநை			5
உரை சால் சிறப்பின் வேந்தர் முன்னர்
கரை பொரு முந்நீர் திமிலின் போழ்ந்து அவர்
கயம் தலை மட பிடி புலம்ப
இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே
					மேல்
# 304 அரிசில்கிழார்
கொடும் குழை மகளிர் கோதை சூட்டி
நடுங்கு பனி களைஇயர் நார் அரி பருகி
வளி தொழில் ஒழிக்கும் வண் பரி புரவி
பண்ணற்கு விரைதி நீயே நெருநை
எம்முன் தப்பியோன் தம்பியொடு ஓராங்கு		5
நாளை செய்குவென் அமர் என கூறி
புன் வயிறு அருத்தலும் செல்லான் பன் மான்
கடவும் என்ப பெரிதே அது கேட்டு
வலம் படு முரசின் வெல் போர் வேந்தன்
இலங்கு இரும் பாசறை நடுங்கின்று		10
இரண்டு ஆகாது அவன் கூறியது எனவே
					மேல்
# 305 மதுரை வேளாசான்
வயலை கொடியின் வாடிய மருங்குல்
உயவல் ஊர்தி பயலை பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்கு
சொல்லிய சொல்லோ சிலவே அதற்கே
ஏணியும் சீப்பும் மாற்றி			5
மாண் வினை யானையும் மணி களைந்தனவே
					மேல்
# 306 அள்ளூர் நன் முல்லையார்
களிறு பொர கலங்கு கழல் முள் வேலி
அரிது உண் கூவல் அம் குடி சீறூர்
ஒலி மென் கூந்தல் ஒண் நுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது
விருந்து எதிர் பெறுக தில் யானே என்னையும்	5
ஒ ----------------- வேந்தனொடு
நாடு தரு விழு பகை எய்துக எனவே
					மேல்
# 307
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ
குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்
வம்பலன் போல தோன்றும் உது காண்
வேனல் வரி அணில் வாலத்து அன்ன
கான ஊகின் கழன்று உகு முது வீ		5
அரியல் வான் குழல் சுரியல் தங்க
நீரும் புல்லும் ஈயாது உமணர்
யாரும் இல் ஒரு சிறை முடத்தொடு துறந்த
வாழா வான் பகடு ஏய்ப்ப தெறுவர்
பேர் உயிர் கொள்ளும் மாதோ அது கண்டு		10
வெம் சின யானை வேந்தனும் இ களத்து
எஞ்சலின் சிறந்தது பிறிது ஒன்று இல் என
பண் கொளற்கு அருமை நோக்கி
நெஞ்சு அற வீழ்ந்த புரைமையோனே
					மேல்
# 308 கோவூர் கிழார்
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின்
மின் நேர் பச்சை மிஞிற்று குரல் சீறியாழ்
நன்மை நிறைந்த நயவரு பாண
சீறூர் மன்னன் சிறியிலை எஃகம்
வேந்து ஊர் யானை ஏந்து முகத்ததுவே		5
வேந்து உடன்று எறிந்த வேலே என்னை
சார்ந்து ஆர் அகலம் உளம் கழிந்தன்றே
உளம் கழி சுடர் படை ஏந்தி நம் பெரு விறல்
ஓச்சினன் துரந்த_காலை மற்றவன்
புன் தலை மட பிடி நாண			10
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத்தனவே
					மேல்
# 309 மதுரை இளங்கண்ணி கௌசிகனார்
இரும்பு முகம் சிதைய நூறி ஒன்னார்
இரும் சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே
நல்_அரா உறையும் புற்றம் போலவும்
கொல் ஏறு திரிதரு மன்றம் போலவும்
மாற்று அரும் துப்பின் மாற்றோர் பாசறை		5
உளன் என வெரூஉம் ஓர் ஒளி
வலன் உயர் நெடு வேல் என் ஐ கண்ணதுவே
					மேல்
# 310 பொன்முடியார்
பால் கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்
செறாஅது ஓச்சிய சிறு கோல் அஞ்சியொடு
உயவொடு வருந்தும் மனனே இனியே
புகர் நிறம் கொண்ட களிறு அட்டு ஆனான்
முன்_நாள் வீழ்ந்த உரவோர் மகனே		5
உன்னிலன் என்னும் புண் ஒன்று அம்பு
மான் உளை அன்ன குடுமி
தோல் மிசை கிடந்த புல் அணலோனே
					மேல்
 




# 311 ஔவையார்
களர் படு கூவல் தோண்டி நாளும்
புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை
தாது எரு மறுகின் மாசுண இருந்து
பலர் குறை செய்த மலர் தார் அண்ணற்கு
ஒருவரும் இல்லை மாதோ செருவத்து		5
சிறப்பு உடை செம் கண் புகைய ஓர்
தோல் கொண்டு மறைக்கும் சால்பு உடையோனே
					மேல்
# 312 பொன்முடியார்
ஈன்று புறந்தருதல் என் தலை கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே
வேல் வடித்து கொடுத்தல் கொல்லற்கு கடனே
நல்_நடை நல்கல் வேந்தற்கு கடனே
ஒளிறு வாள் அரும் சமம் முருக்கி		5
களிறு எறிந்து பெயர்தல் காளைக்கு கடனே
					மேல்
# 313 மாங்குடி மருதனார்
அத்தம் நண்ணிய நாடு கெழு பெருவிறல்
கைப்பொருள் யாதொன்றும் இலனே நச்சி
காணிய சென்ற இரவல் மாக்கள்
களிறொடு நெடும் தேர் வேண்டினும் கடவ
உப்பு ஒய் சாகாட்டு உமணர் காட்ட		5
கழி முரி குன்றத்து அற்றே
எள் அமைவு இன்று அவன் உள்ளிய பொருளே
					மேல்
# 314 ஐயூர் முடவனார்
மனைக்கு விளக்கு ஆகிய வாள்_நுதல் கணவன்
முனைக்கு வரம்பு ஆகிய வென் வேல் நெடுந்தகை
நடுகல் பிறங்கிய உவல் இடு பறந்தலை
புன் காழ் நெல்லி வன்_புல சீறூர்
குடியும் மன்னும் தானே கொடி எடுத்து		5
நிறை அழிந்து எழுதரு தானைக்கு
சிறையும் தானே தன் இறை விழுமுறினே
					மேல்
# 315 ஔவையார்
உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்
மடவர் மகிழ் துணை நெடுமான்_அஞ்சி
இல் இறை செரீஇய ஞெலி_கோல் போல
தோன்றாது இருக்கவும் வல்லன் மற்று அதன்	5
கான்று படு கனை எரி போல
தோன்றவும் வல்லன் தான் தோன்றும்_காலே
					மேல்
# 316 மதுரை கள்ளி கடையத்தன் வெண்ணாகனார்
கள்ளின் வாழ்த்தி கள்ளின் வாழ்த்தி
காட்டொடு மிடைந்த சீயா முன்றில்
நாள் செருக்கு அனந்தர் துஞ்சுவோனே
அவன் எம் இறைவன் யாம் அவன் பாணர்
நெருநை வந்த விருந்திற்கு மற்று தன்		5
இரும் புடை பழ வாள் வைத்தனன் இன்று இ
கரும் கோட்டு சீறியாழ் பணையம் இது கொண்டு
ஈவது இலாளன் என்னாது நீயும்
வள்ளி மருங்குல் வயங்கு இழை அணிய
கள் உடை கலத்தேம் யாம் மகிழ் தூங்க		10
சென்று வாய் சிவந்து மேல் வருக
சிறு கண் யானை வேந்து விழுமுறவே
					மேல்
# 317 வேம்பற்றூர் குமரனார்
வென் வேல் ......................... வந்து
முன்றில் கிடந்த பெரும் களியாளற்கு
அதள் உண்டு ஆயினும் பாய் உண்டு ஆயினும்
யாது உண்டு ஆயினும் கொடு-மின் வல்லே
வேட்கை மீள ----------------------------------------------		5
------------------------------- கும் எமக்கும் பிறர்க்கும்
யார்க்கும் ஈய்ந்து துயில் ஏற்பினனே
					மேல்
# 318 பெருங்குன்றூர் கிழார்
கொய் அடகு வாட தரு விறகு உணங்க
மயில் அம் சாயல் மாஅயோளொடு
பசித்தன்று அம்ம பெருந்தகை ஊரே
மனை உறை குரீஇ கறை அணல் சேவல்
பாணர் நரம்பின் சுகிரொடு வய_மான்		5
குரல் செய் பீலியின் இழைத்த குடம்பை
பெரும் செய் நெல்லின் அரிசி ஆர்ந்து தன்
புன் புற பெடையொடு வதியும்
யாணர்த்து ஆகும் வேந்து விழுமுறினே
					மேல்
# 319 ஆலங்குடி வங்கனார்
பூவல் படுவில் கூவல் தோண்டிய
செம் கண் சில் நீர் பெய்த சீறில்
முன்றில் இருந்த முது வாய் சாடி
யாம் கஃடு உண்டு என வறிது மாசு இன்று
படலை முன்றில் சிறுதினை உணங்கல்		5
புறவும் இதலும் அறவும் உண்கு என
பெய்தற்கு எல்லின்று பொழுதே அதனால்
முயல் சுட்ட ஆயினும் தருகுவேம் புகுதந்து
ஈங்கு இருந்தீமோ முது வாய் பாண
கொடும் கோட்டு ஆமான் நடுங்கு தலை குழவி	10
புன் தலை சிறாஅர் கன்று என பூட்டும்
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்
வேந்து விடு தொழிலொடு சென்றனன் வந்து நின்
பாடினி மாலை அணிய
வாடா தாமரை சூட்டுவன் நினக்கே		15
					மேல்
# 320 வீரை வெளியனார்
முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி
பந்தர் வேண்டா பலர் தூங்கு நீழல்
கைம்_மான் வேட்டுவன் கனை துயில் மடிந்து என
பார்வை மட பிணை தழீஇ பிறிது ஓர்
தீர் தொழில் தனி கலை திளைத்து விளையாட	5
இன்புறு புணர் நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சி கலையே
பிணை_வயின் தீர்தலும் அஞ்சி யாவதும்
இல் வழங்காமையின் கல்லென ஒலித்து
மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி		10
கான கோழியொடு இதல் கவர்ந்து உண்டு என
ஆர நெருப்பின் ஆரல் நாற
தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம்
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி
தங்கினை சென்மோ பாண தங்காது		15
வேந்து தரு விழு கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரை சால் நெடுந்தகை ஓம்பும் ஊரே
					மேல்
 




# 321 உறையூர் மருத்துவன் தாமோதரனார்
பொறி புற பூழின் போர் வல் சேவல்
மேம் தோல் களைந்த தீம் கொள் வெள் எள்
சுளகு இடை உணங்கல் செவ்வி கொண்டு உடன்
வேனில் கோங்கின் பூ பொகுட்டு அன்ன
குடந்தை அம் செவிய கோட்டு எலி ஆட்ட		5
கலி ஆர் வரகின் பிறங்கு பீள் ஒளிக்கும்
வன்_புல வைப்பினதுவே சென்று
தின் பழம் பசீஇ ................. னனோ பாண
வாள் வடு விளங்கிய சென்னி
செரு வெம் குருசில் ஓம்பும் ஊரே			10
					மேல்
# 322 ஆவூர்கிழார்
உழுது ஊர் காளை ஊழ் கோடு அன்ன
கவை முள் கள்ளி பொரி அரை பொருந்தி
புது வரகு அரிகால் கருப்பை பார்க்கும்
புன் தலை சிறாஅர் வில் எடுத்து ஆர்ப்பின்
பெரும் கண் குறு முயல் கரும் கலன் உடைய	5
மன்றில் பாயும் வன்_புலத்ததுவே
கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது
இரும் சுவல் வாளை பிறழும் ஆங்கண்
தண் பணை ஆளும் வேந்தர்க்கு
கண்படை ஈயா வேலோன் ஊரே			10
					மேல்
# 323 ...............கிழார்
புலி_பால் பட்ட ஆமான் குழவிக்கு
சினம் கழி மூதா கன்று மடுத்து ஊட்டும்
கா ................................ பரிசிலர்க்கு
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை
வெள் வேல் ஆவம் ஆயின் ஒள் வாள்		5
கறை அடி யானைக்கு அல்லது
உறை கழிப்பு அறியா வேலோன் ஊரே
					மேல்
# 324 ஆலத்தூர் கிழார்
வெருக்கு விடை அன்ன வெருள் நோக்கு கயம் தலை
புள் ஊன் தின்ற புலவு நாறு கய வாய்
வெள் வாய் வேட்டுவர் வீழ் துணை மகாஅர்
சிறியிலை உடையின் சுரை உடை வால் முள்
ஊக நுண் கோல் செறித்த அம்பின்		5
வலாஅர் வல் வில் குலாவர கோலி
பருத்தி வேலி கருப்பை பார்க்கும்
புன்_புலம் தழீஇய அம் குடி சீறூர்
குமிழ் உண் வெள்ளை பகு வாய் பெயர்த்த
வெண் காழ் தாய வண் கால் பந்தர்		10
இடையன் பொத்திய சிறு தீ விளக்கத்து
பாணரொடு இருந்த நாண் உடை நெடுந்தகை
வலம் படு தானை வேந்தற்கு
உலந்து_உழி உலக்கும் நெஞ்சு அறி துணையே
					மேல்
# 325 உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
களிறு நீறு ஆடிய விடு நில மருங்கின்
வம்ப பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்து என
குழி கொள் சில் நீர் குராஅல் உண்டலின்
சேறு கிளைத்திட்ட கலுழ் கண் ஊறல்
முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை		5
முளவு_மா தொலைச்சிய முழு_சொல் ஆடவர்
உடும்பு இழுது அறுத்த ஒடும் காழ் படலை
சீறில் முன்றில் கூறுசெய்திடும்-மார்
கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம்
மறுகு உடன் கமழும் மதுகை மன்றத்து		10
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்
கயம் தலை சிறாஅர் கணை விளையாடும்
அரு மிளை இருக்கையதுவே வென் வேல்
வேந்து தலைவரினும் தாங்கும்
தாங்கா ஈகை நெடுந்தகை ஊரே			15
					மேல்
# 326 தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
ஊர் முது வேலி பார்நடை வெருகின்
இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை
உயிர் நடுக்கு_உற்று புலா விட்டு அரற்ற
சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த
பருத்தி_பெண்டின் சிறு தீ விளக்கத்து		5
கவிர் பூ நெற்றி சேவலின் தணியும்
அரு மிளை இருக்கையதுவே மனைவியும்
வேட்ட சிறாஅர் சேண் புலம் படராது
படப்பை கொண்ட குறும் தாள் உடும்பின்
விழுக்கு நிணம் பெய்த தயிர் கண் விதவை		10
யாணர் நல்லவை பாணரொடு ஒராங்கு
வரு விருந்து அயரும் விருப்பினள் கிழவனும்
அரும் சமம் ததைய தாக்கி பெரும் சமத்து
அண்ணல் யானை அணிந்த
பொன் செய் ஓடை பெரும் பரிசிலனே		15
					மேல்
# 327
எருது கால் உறாஅது இளைஞர் கொன்ற
சில் விளை வரகின் புல்லென் குப்பை
தொடுத்த கடவர்க்கு கொடுத்த மிச்சில்
பசித்த பாணர் உண்டு கடை தப்பலின்
ஒக்கல் ஒற்கம் சொலிய தன் ஊர்			5
சிறு புல்லாளர் முகத்து அவை கூறி
வரகு கடன் இரக்கும் நெடுந்தகை
அரசு வரின் தாங்கும் வல்லாளன்னே
					மேல்
# 328
....... புல்லென் அடை முதல் புறவு சேர்ந்திருந்த
புன்_புல சீறூர் நெல் விளையாதே
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
இரவல் மாக்களுக்கு ஈய தொலைந்தன
....................... அமைந்தனனே			5
அன்னன் ஆயினும் பாண நன்றும்
வள்ளத்து இடும் பால் உள் உறை தொடரியொடு
களவு புளி அன்ன விளை கள் ......................
................... வாடூன் கொழும் குறை
கொய் குரல் அரிசியொடு நெய் பெய்து அட்டு		10
துடுப்பொடு சிவணிய களி கொள் வெண் சோறு
உண்டு இனிது இருந்த பின்றை ........................
......................... தருகுவன் மாதோ
தாளி முதல் நீடிய சிறு நறு முஞ்ஞை
முயல் வந்து கறிக்கும் முன்றில்			15
சீறூர் மன்னனை பாடினை செலினே
					மேல்
# 329 மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
இல் அடு கள்ளின் சில் குடி சீறூர்
புடை நடுகல்லின் நாள்_பலி ஊட்டி
நன் நீராட்டி நெய் நறை கொளீஇய
மங்குல் மா புகை மறுகு உடன் கமழும்
அரு முனை இருக்கைத்து ஆயினும் வரி மிடற்று	5	
அரவு உறை புற்றத்து அற்றே நாளும்
புரவலர் புன்கண் நோக்காது இரவலர்க்கு
அருகாது ஈயும் வண்மை
உரை சால் நெடுந்தகை ஓம்பும் ஊரே
					மேல்
# 330 மதுரை கணக்காயனார்
வேந்து உடை தானை முனை கெட நெரிதர
ஏந்து வாள் வலத்தன் ஒருவன் ஆகி
தன் இறந்து வாராமை விலக்கலின் பெரும் கடற்கு
ஆழி அனையன் மாதோ என்றும்
பாடி சென்றோர்க்கு அன்றியும் வாரி		5
புரவிற்கு ஆற்றா சீறூர்
தொன்மை சுட்டிய வண்மையோனே
					மேல்
 




# 331 உறையூர் முதுகூத்தனார் உறையூர் முது கூற்றனார் எனவும் பாடம்
கல் அறுத்து இயற்றிய வல் உவர் கூவல்
வில் ஏர் வாழ்க்கை சீறூர் மதவலி
நனி நல்கூர்ந்தனன் ஆயினும் பனி மிக
புல்லென் மாலை சிறு தீ ஞெலியும்
கல்லா இடையன் போல குறிப்பின்		5
இல்லது படைக்கவும் வல்லன் உள்ளது
தவ சிறிது ஆயினும் மிக பலர் என்னாள்
நீள் நெடும் பந்தர் ஊண் முறை ஊட்டும்
இல் பொலி மகடூஉ போல சிற்சில
வரிசையின் அளக்கவும் வல்லன் உரிதினின்		10
காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும்
போகு பலி வெண் சோறு போல
தூவவும் வல்லன் அவன் தூவும்_காலே
					மேல்
# 332 விரியூர் கிழார்
பிறர் வேல் போலாது ஆகி இ ஊர்
மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே
இரும் புறம் நீறும் ஆடி கலந்து இடை
குரம்பை கூரை கிடக்கினும் கிடக்கும்
மங்கல மகளிரொடு மாலை சூட்டி			5
இன் குரல் இரும் பை யாழொடு ததும்ப
தெண் நீர் படுவினும் தெருவினும் திரிந்து
மண் முழுது அழுங்க செல்லினும் செல்லும் ஆங்கு
இரும் கடல் தானை வேந்தர்
பெரும் களிற்று முகத்தினும் செலவு ஆனாதே	10
					மேல்
# 333
நீருள் பட்ட மாரி பேர் உறை
மொக்குள் அன்ன பொகுட்டு விழி கண்ண
கரும் பிடர் தலைய பெரும் செவி குறு முயல்
உள்ளூர் குறும் புதல் துள்ளுவன உகளும்
தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின்		5
உண்க என உணரா உயவிற்று ஆயினும்
தங்கினிர் சென்மோ புலவீர் நன்றும்
சென்றதற்கொண்டு மனையோள் விரும்பி
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
இரவல் மாக்கள் உண கொள தீர்ந்து என		10
குறித்து மாறு எதிர்ப்பை பெறாஅமையின்
குரல் உணங்கு விதை தினை உரல் வாய் பெய்து
சிறிது புறப்பட்டன்றோ இலளே தன் ஊர்
வேட்ட குடி-தொறும் கூட்டு ...................
..................... உடும்பு செய்			15
பாணி நெடும் தேர் வல்லரோடு ஊரா
வம்பு அணி யானை வேந்து தலைவரினும்
உண்பது மன்னும் அதுவே
பரிசில் மன்னும் குருசில் கொண்டதுவே
					மேல்
# 334 மதுரை தமிழ கூத்தனார்
காமரு பழன கண்பின் அன்ன
தூ மயிர் குறும் தாள் நெடும் செவி குறு முயல்
புன் தலை சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்
படப்பு ஒடுங்கும்மே ........... பின்பு ..............
................. ஊரே மனையோள்			5
பாணர் ஆர்த்தவும் பரிசிலர் ஓம்பவும்
ஊண் ஒலி அரவமொடு கைதூவாளே
உயர் மருப்பு யானை புகர் முகத்து அணிந்த
பொலம் புனை ஓடை ---------------------------
பரிசில் பரிசிலர்க்கு ஈய			10
உரவு வேல் காளையும் கைதூவானே
					மேல்
# 335 மாங்குடி கிழார்
அடல் அரும் துப்பின் ....................
குரவே தளவே குருந்தே முல்லை என்று
இ நான்கு அல்லது பூவும் இல்லை
கரும் கால் வரகே இரும் கதிர் தினையே
சிறு கொடி கொள்ளே பொறி கிளர் அவரையொடு	5
இ நான்கு அல்லது உணாவும் இல்லை
துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று
இ நான்கு அல்லது குடியும் இல்லை
ஒன்னா தெவ்வர் முன் நின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்து என	10
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்து பரவும் கடவுளும் இலவே
					மேல்
# 336 பரணர்
வேட்ட வேந்தனும் வெம் சினத்தினனே
கடவன கழிப்பு இவள் தந்தையும் செய்யான்
ஒளிறு முகத்து ஏந்திய வீங்கு தொடி மருப்பின்
களிறும் கடி_மரம் சேரா சேர்ந்த
ஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனரே		5
இயவரும் அறியா பல் இயம் கறங்க
அன்னோ பெரும் பேது உற்றன்று இ அரும் கடி மூதூர்
அறன் இலள் மன்ற தானே விறல் மலை
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
முகை வனப்பு ஏந்திய முற்றா இள முலை		10
தகை வளர்த்து எடுத்த நகையொடு
பகை வளர்த்து இருந்த இ பண்பு இல் தாயே
					மேல்
# 337 கபிலர்
ஆர் கலியினனே சோணாட்டு அண்ணல்
கவி கை மண் ஆள் செல்வர் ஆயினும்
வாள் வலத்து ஒழிய பாடி சென்றாஅர்
வரல்-தோறு அகம் மலர
ஈதல் ஆனா இலங்கு தொடி தட கை		5
பாரி பறம்பின் பனி சுனை போல
காண்டற்கு அரியள் ஆகி மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய
துகில் விரி கடுப்ப நுடங்கி தண்ணென
அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கிய	10
கபில நெடு நகர் கமழும் நாற்றமொடு
மனை செறிந்தனளே வாள்_நுதல் இனியே
அற்று அன்று ஆகலின் தெற்றென போற்றி
காய் நெல் கவளம் தீற்றி காவு-தொறும்
கடுங்கண் யானை காப்பனர் அன்றி		15
வருதல் ஆனார் வேந்தர் தன் ஐயர்
பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல்
குருதி பற்றிய வெருவரு தலையர்
மற்று இவர் மறனும் இற்றால் தெற்றென
யார் ஆகுவர்-கொல் தாமே நேர்_இழை		20
உருத்த பல சுணங்கு அணிந்த
மருப்பு இள வன முலை ஞெமுக்குவோரே
					மேல்
# 338 குன்றூர் கிழார் மகனார்
ஏர் பரந்த வயல் நீர் பரந்த செறுவின்
நெல் மலிந்த மனை பொன் மலிந்த மறுகின்
படு வண்டு ஆர்க்கும் பன் மலர் காவின்
நெடுவேள் ஆதன் போந்தை அன்ன
பெரும் சீர் அரும் கொண்டியளே கரும் சினை	5
வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்
மலைந்த சென்னியர் அணிந்த வில்லர்
கொற்ற வேந்தர் தரினும் தன் தக
வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டு
பிணங்கு கதிர் கழனி நாப்பண் ஏமுற்று		10
உணங்கு கலன் ஆழியின் தோன்றும்
ஓர் எயில் மன்னன் ஒரு மட மகளே
					மேல்
# 339 குன்றூர்க் கிழார் மகனார்
வியன் புலம் படர்ந்த பல் ஆ நெடு ஏறு
மடலை மாண் நிழல் அசை விட கோவலர்
வீ ததை முல்லை பூ பறிக்குந்து
குறும் கோல் எறிந்த நெடும் செவி குறு முயல்
நெடு நீர் பரப்பின் வாளையொடு உகளுந்து		5
தொடலை அல்குல் தொடி தோள் மகளிர்
கடல் ஆடி கயம் பாய்ந்து
கழி நெய்தல் பூ குறூஉந்து
பைம் தழை துயல்வரும் செறுவில் ததைந்த
................. ............ கலத்தின்			10
வளர வேண்டும் அவளே என்றும்
ஆர் அமர் உழப்பதும் அமரியள் ஆகி
முறம் செவி யானை வேந்தர்
மறம் கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே
					மேல்
# 340 அள்ளூர் நன்முல்லையார்
அணி தழை நுடங்க ஓடி மணி பொறி
குரல் அம் குன்றி கொள்ளும் இளையோள்
மா மகள் .................... ..........
யார் மகள்_கொல் என வினவுதி கேள் நீ
எடுப்ப எடாஅ........... ...................			5
................ ............... மைந்தர் தந்தை
இரும் பனை அன்ன பெரும் கை யானை
கரந்தை அம் செறுவின் பெயர்க்கும்
பெரும் தகை மன்னர்க்கு வரைந்திருந்தனனே
					மேல்
 



# 341 பரணர்
வேந்து குறை_உறவும் கொடாஅன் ஏந்து கோட்டு
அம் பூ தொடலை அணி தழை அல்குல்
செம் பொறி சிலம்பின் இளையோள் தந்தை
எழு விட்டு அமைத்த திண் நிலை கதவின்
அரை மண் இஞ்சி நாள்_கொடி நுடங்கும்		5
..................  ..........................
புலி கணத்து அன்ன கடுங்கண் சுற்றமொடு
மாற்றம் மாறான் மறலிய சினத்தன்
பூ கோள் என ஏஎய் கயம் புக்கனனே
விளங்கு இழை பொலிந்த வேளா மெல் இயல்	10
சுணங்கு அணி வன முலை அவளொடு நாளை
மணம் புகு வைகல் ஆகுதல் ஒன்றோ
ஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின்
நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு
வாரா உலகம் புகுதல் ஒன்று என			15
படை தொட்டனனே குருசில் ஆயிடை
களிறு பொர கலங்கிய தண் கயம் போல
பெரும் கவின் இழப்பது-கொல்லோ
மென் புனல் வைப்பின் இ தண் பணை ஊரே
					மேல்
# 342 அரிசில் கிழார்
கான காக்கை கலி சிறகு ஏய்க்கும்
மயிலை கண்ணி பெரும் தோள் குறு_மகள்
ஏனோர் மகள்-கொல் இவள் என விதுப்பு உற்று
என்னொடு வினவும் வென் வேல் நெடுந்தகை
திரு நய_தக்க பண்பின் இவள் நலனே		5
பொருநர்க்கு அல்லது பிறர்க்கு ஆகாதே
பைம் கால் கொக்கின் பகு வாய் பிள்ளை
மென் சேற்று அடைகரை மேய்ந்து உண்டதன் பின்
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை
கூர் நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம்		10
தண் பணை கிழவன் இவள் தந்தையும் வேந்தரும்
பெறாஅமையின் பேர் அமர் செய்தலின்
கழி பிணம் பிறங்கு போர்பு அழி களிறு எருதா
வாள் தக வைகலும் உழக்கும்
மாட்சியவர் இவள் தன்னைமாரே			15
					மேல்
# 343 பரணர்
மீன் நொடுத்து நெல் குவைஇ
மிசை அம்பியின் மனை மறுக்குந்து
மனை கவைஇய கறி மூடையால்
கலி சும்மைய கரை கலக்கு_உறுந்து
கலம் தந்த பொன் பரிசம்			5
கழி தோணியான் கரை சேர்க்குந்து
மலை தாரமும் கடல் தாரமும்
தலைப்பெய்து வருநர்க்கு ஈயும்
புனல் அம் கள்ளின் பொலம் தார் குட்டுவன்
முழங்கு கடல் முழவின் முசிறி அன்ன		10
நலம் சால் விழு பொருள் பணிந்து வந்து கொடுப்பினும்
புரையர் அல்லோர் வரையலள் இவள் என
தந்தையும் கொடாஅன் ஆயின் வந்தோர்
வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை
வருந்தின்று-கொல்லோ தானே பருந்து உயிர்த்து	15
இடை மதில் சேக்கும் புரிசை
படை மயங்கு ஆரிடை நெடு நல் ஊரே
					மேல்
# 344 அடைநெடும் கல்வியார் - அண்டர் நடும் கல்லினார்
செந்நெல் உண்ட பைம் தோட்டு மஞ்ஞை
செறி வளை மகளிர் ஓப்பலின் பறந்து எழுந்து
துறை நணி மருதத்து இறுக்கும் ஊரொடு
நிறை சால் விழு பொருள் தருதல் ஒன்றோ
புகை படு கூர் எரி பரப்பி பகை செய்து		5
பண்பு இல் ஆண்மை தருதல் ஒன்றோ
இரண்டினுள் ஒன்று ஆகாமையோ அரிதே
காஞ்சி பனி முறி ஆரம் கண்ணி..............
கணி மேவந்தவள் அல்குல் அம் வரியே
					மேல்
# 345 அடைநெடும் கல்வியார் - அண்டர் நடும் கல்லினார்
களிறு அணைப்ப கலங்கின காஅ
தேர் ஓட துகள் கெழுமின தெருவு
மா மறுகலின் மயக்கு_உற்றன வழி
கலம் கழாஅலின் துறை கலக்கு_உற்றன
தெறல் மறவர் இறைகூர்தலின்			5
பொறை மலிந்து நிலன் நெளிய
வந்தோர் பலரே வம்ப வேந்தர்
பிடி உயிர்ப்பு அன்ன கை கவர் இரும்பின்
ஓவு உறழ் இரும் புறம் காவல் கண்ணி
கரும் கண் கொண்ட நெருங்கல் வெம் முலை	10
மையல் நோக்கின் தையலை நயந்தோர்
அளியர் தாமே இவள் தன்னைமாரே
செல்வம் வேண்டார் செரு புகல் வேண்டி
நிரல் அல்லோர்க்கு தரலோ இல் என
கழி பிணி பலகையர் கதுவாய் வாளர்		15
குழாஅம் கொண்ட குருதி அம் புலவொடு
கழாஅ தலையர் கரும் கடை நெடு வேல்
இன்ன மறவர்த்து ஆயினும் அன்னோ
என் ஆவது-கொல் தானே
பன்னல் வேலி இ பணை நல் ஊரே		20
					மேல்
# 346 அண்டர் மகன் குறுவழுதி
பிறங்கிலை இனி உள பால் என மடுத்தலின்
ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள்
கல்வியென் என்னும் வல் ஆண் சிறாஅன்
ஒள் வேல் நல்லன் அது வாய் ஆகுதல்
அழிந்தோர் அழிய ஒழிந்தோர் ஒக்கல்		5
பேணுநர் பெறாஅது விளியும்
புன் தலை பெரும் பாழ் செயும் இவள் நலனே
					மேல்
# 347 கபிலர்
உண்போன் தான் நறும் கள்ளின் இட சில
நா இடை பல் தேர் கோல சிவந்த
ஒளிறு ஒள் வாள் அட குழைந்த பைம் தும்பை
எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின்
மணம் நாறு மார்பின் மற போர் அகுதை		5
குண்டு நீர் வரைப்பின் கூடல் அன்ன
குவை இரும் கூந்தல் வரு முலை சேப்ப
..................... ............................
என் ஆவது-கொல் தானே நன்றும்
விளங்கு உறு பராரைய ஆயினும் வேந்தர்		10
வினை நவில் யானை பிணிப்ப
வேர் துளங்கின நம் ஊருள் மரனே
					மேல்
# 348 பரணர்
வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇ
கண் மடல் கொண்ட தீம் தேன் இரிய
கள் அரிக்கும் குயம் சிறு சின்
மீன் சீவும் பாண் சேரி
வாய்மொழி தழும்பன் ஊணூர் அன்ன		5
குவளை உண்கண் இவளை தாயே
ஈனாள் ஆயினள் ஆயின் ஆனாது
நிழல்-தொறும் நெடும் தேர் நிற்ப வயின்-தொறும்
செம் நுதல் யானை பிணிப்ப
வருந்தல-மன் எம் பெரும் துறை மரனே		10
					மேல்
# 349 மதுரை மருதனிள நாகனார்
நுதி வேல் கொண்டு நுதல் வியர் தொடையா
கடிய கூறும் வேந்தே தந்தையும்
நெடிய அல்லது பணிந்து மொழியலனே
இஃது இவர் படிவம் ஆயின் வை எயிற்று
அரி மதர் மழை கண் அம் மா அரிவை		5
மரம் படு சிறு தீ போல
அணங்கு ஆயினள் தான் பிறந்த ஊர்க்கே
					மேல்
# 350 மதுரை ஓலைக்கடை கண்ணம் புகுந்தார் ஆயத்தனார்
தூர்ந்த கிடங்கின் சோர்ந்த ஞாயில்
சிதைந்த இஞ்சி கதுவாய் மூதூர்
யாங்கு ஆவது-கொல் தானே தாங்காது
படு மழை உருமின் இறங்கு முரசின்
கடு மான் வேந்தர் காலை வந்து எம்		5
நெடு நிலை வாயில் கொட்குவர் மாதோ
பொருதாது அமருவர் அல்லர் போர் உழந்து
அடு முரண் முன்பின் தன்னையர் ஏந்திய
வடி வேல் எஃகின் சிவந்த உண்கண்
தொடி பிறழ் முன்கை இளையோள்		10
அணி நல் ஆகத்து அரும்பிய சுணங்கே
					மேல்
 



# 351 மதுரை படைமங்க மன்னியார்
படு மணி மருங்கின பணை தாள் யானையும்
கொடி நுடங்கு மிசைய தேரும் மாவும்
படை அமை மறவரொடு துவன்றி கல்லென
கடல் கண்டு அன்ன கண் அகன் தானை
வென்று எறி முரசின் வேந்தர் என்றும்		5
வண் கை எயினன் வாகை அன்ன
இவள் நலம் தாராது அமைகுவர் அல்லர்
என் ஆவது-கொல் தானே தெண் நீர்
பொய்கை மேய்ந்த செ வரி நாரை
தேம் கொள் மருதின் பூ சினை முனையின்		10
காமரு காஞ்சி துஞ்சும்
ஏமம் சால் சிறப்பின் இ பணை நல் ஊரே
					மேல்
# 352 பரணர்
தேஎம் கொண்ட வெண் மண்டையான்
வீங்கு முலை .............. கறக்குந்து
அவல் வகுத்த பசும் குடையான்
புதன் முல்லை பூ பறிக்குந்து
ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர்		5
குன்று ஏறி புனல் பாயின்
புற வாயால் புனல் வரையுந்து
................. நொடை நறவின்
மா வண் தித்தன் வெண்ணெல் வேலி
உறந்தை அன்ன உரை சால் நன் கலம்		10
கொடுப்பவும் கொளாஅன் நெடுந்தகை இவளே
விரி சினை துணர்ந்த நாகு இள வேங்கையின்
கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின்
மா கண் மலர்ந்த முலையள் தன்னையும்
சிறு கோல் உளையும் புரவியொடு ............		15.
...................... ........... யாரே
					மேல்
# 353 காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார்
ஆசு இல் கம்மியன் மாசு அற புனைந்த
பொலம் செய் பல் காசு அணிந்த அல்குல்
ஈகை கண்ணி இலங்க தைஇ
தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கி
தவிர்த்த தேரை விளர்த்த கண்ணை		5
வினவல் ஆனா வெல் போர் அண்ணல்
யார் மகள் என்போய் கூற கேள் இனி
குன்று கண்டு அன்ன நிலை பல் போர்பு
நாள் கடா அழித்த நனம் தலை குப்பை
வல் வில் இளையர்க்கு அல்கு பதம் மாற்றா		10
தொல் குடி மன்னன் மகளே முன்_நாள்
கூறி வந்த மா முது வேந்தர்க்கு
.......... ........... ........... ..........
செரு வாய் உழக்கி குருதி ஓட்டி
கதுவாய் போகிய நுதி வாய் எஃகமொடு		15
பஞ்சியும் களையா புண்ணர்
அஞ்சு_தகவு உடையர் இவள் தன்னைமாரே
					மேல்
# 354 பரணர்
அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா
நிரை காழ் எஃகம் நீரின் மூழ்க
புரையோர் சேர்ந்து என தந்தையும் பெயர்க்கும்
வயல் அமர் கழனி வாயில் பொய்கை
கயல் ஆர் நாரை உகைத்த வாளை		5
புனல் ஆடு மகளிர் வள மனை ஒய்யும்
ஊர் கவின் இழப்பவும் வருவது-கொல்லோ
சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை
வீங்கு இறை பணை தோள் மடந்தை
மான் பிணை அன்ன மகிழ் மட நோக்கே		10
					மேல்
# 355
மதிலும் ஞாயில் இன்றே கிடங்கும்
நீஇர் இன்மையின் கன்று மேய்ந்து உகளும்
ஊரது நிலைமையும் இதுவே மற்றே
எண்ணா மையலன் தந்தை தன் ஐயர்
கண் ஆர் கண்ணி கடு மான் கிள்ளி		5
................... ...........................
					மேல்
# 356 தாயங்கண்ணனார்
களரி பரந்து கள்ளி போகி
பகலும் கூஉம் கூகையொடு பிறழ் பல்
ஈம விளக்கின் பேஎய்_மகளிரொடு
அஞ்சு வந்தன்று இ மஞ்சு படு முதுகாடு
நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணீர்		5
என்பு படு சுடலை வெண் நீறு அவிப்ப
எல்லார் புறனும் தான் கண்டு உலகத்து
மன்பதை எல்லாம் தானாய்
தன் புறம் காண்போர் காண்பு அறியாதே
					மேல்
# 357 பிரமனார்
குன்று தலைமணந்த மலை பிணித்து யாத்த மண்
பொதுமை சுட்டிய மூவர் உலகமும்
பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும்
மாண்ட அன்றே ஆண்டுகள் துணையே
வைத்தது அன்றே வெறுக்கை வித்தும்		5
அற வினை அன்றே விழு துணை அ துணை
புணை கைவிட்டோர்க்கு அரிதே துணை அழ
தொக்கு உயிர் வௌவும்_காலை
இ கரை நின்று இவர்ந்து உ கரை கொளலே
					மேல்
# 358 வான்மீகியார்
பருதி சூழ்ந்த இ பயம் கெழு மா நிலம்
ஒரு பகல் எழுவர் எய்தி அற்றே
வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு
ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின்
கைவிட்டனரே காதலர் அதனால்			5
விட்டோரை விடாஅள் திருவே
விடாஅதோர் இவள் விடப்பட்டோரே
					மேல்
# 359 கரவட்டனாரி/காவட்டனார்
பாறுபட பறைந்த பன் மாறு மருங்கின்
வேறு படு குரல வெம் வாய் கூகையொடு
பிணம் தின் குறு நரி நிணம் திகழ் பல்ல
பேஎய் மகளிர் பிணம் தழூஉ பற்றி
விளர் ஊன் தின்ற வெம் புலால் மெய்யர்		5
களரி மருங்கின் கால் பெயர்த்து ஆடி
ஈம விளக்கின் வெருவர பேரும்
காடு முன்னினரே நாடு கொண்டோரும்
நினக்கும் வருதல் வைகல் அற்றே
வசையும் நிற்கும் இசையும் நிற்கும்		10
அதனால் வசை நீக்கி இசை வேண்டியும்
நசை வேண்டாது நன்று மொழிந்தும்
நிலவு கோட்டு பல களிற்றோடு
பொலம் படைய மா மயங்கிட
இழை கிளர் நெடும் தேர் இரவலர்க்கு அருகாது	15
கொள் என விடுவை ஆயின் வெள்ளென
ஆண்டு நீ பெயர்ந்த பின்னும்
ஈண்டு நீடு விளங்கும் நீ எய்திய புகழே
					மேல்
# 360 சங்க வருணர் என்னும் நாகரியர்
பெரிது ஆரா சிறு சினத்தர்
சில சொல்லால் பல கேள்வியர்
நுண் உணர்வினால் பெரும் கொடையர்
கலுழ் நனையால் தண் தேறலர்
கனி குய்யான் கொழும் துவையர்			5
தாழ் உவந்து தழூஉ மொழியர்
பயன் உறுப்ப பலர்க்கு ஆற்றி
ஏமம் ஆக இ நிலம் ஆண்டோர்
சிலரே பெரும கேள் இனி நாளும்
பலரே தகையஃது அறியாதோரே			10
அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது
இன்னும் அற்று அதன் பண்பே அதனால்
நிச்சமும் ஒழுக்கம் முட்டு இலை பரிசில்
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்பு-மதி அச்சு வர
பாறு இறைகொண்ட பறந்தலை மாறு தக		15
கள்ளி போகிய களரி மருங்கின்
வெள்ளில் நிறுத்த பின்றை கள்ளொடு
புல்_அகத்து இட்ட சில் அவிழ் வல்சி
புலையன் ஏவ புல் மேல் அமர்ந்து உண்டு
அழல் வாய் புக்க பின்னும்			20
பலர் வாய்த்து இராஅர் பகுத்து உண்டோரே
					மேல்
 




# 361 கயமனார்
கார் எதிர் உருமின் உரறி கல்லென
ஆர் உயிர்க்கு அலமரும் ஆரா கூற்றம்
நின் வரவு அஞ்சலன் மாதோ நன் பல
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு
அரும் கலம் நீரொடு சிதறி பெருந்தகை		5
தாயின் நன்று பலர்க்கு ஈத்து
தெருள் நடை மா களிறொடு தன்
அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும்
உருள் நடை பஃறேர் ஒன்னார் கொன்ற தன்
தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும்			10
புரி மாலையர் பாடினிக்கு
பொலம் தாமரை பூ பாணரொடு
கலந்து அளைஇய நீள் இருக்கையால்
பொறையொடு மலிந்த கற்பின் மான் நோக்கின்
வில் என விலங்கிய புருவத்து வல்லென		15
நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று மகளிர்
அல்குல் தாங்கா அசைஇ மெல்லென
கலங்கல் அம் தேறல் பொலம் கலத்து ஏந்தி
அமிழ்து என மடுப்ப மாந்தி இகழ்வு இலன்
நில்லா உலகத்து நிலையாமை நீ			20
சொல்ல வேண்டா தோன்றல் முந்து அறிந்த
முழுது உணர் கேள்வியன் ஆகலின் 
........................... விரகினானே
					மேல்
# 362 சிறுவெண்டேரையார்
ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த
மதி உறழ் ஆரம் மார்பில் புரள
பலி பெறு முரசம் பாசறை சிலைப்ப
பொழில்_அகம் பரந்த பெரும் செய் ஆடவர்
செரு புகன்று எடுக்கும் விசய வெண் கொடி		5
அணங்கு உருத்து அன்ன கணம்_கொள் தானை
கூற்றத்து அன்ன மாற்று அரு முன்பின்
ஆ குரல் காண்பின் அந்தணாளர்
நான்மறை குறித்தன்று அருள் ஆகாமையின்
அறம் குறித்தன்று பொருள் ஆகுதலின்		10
மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇ
கை பெய்த நீர் கடல் பரப்ப
ஆம் இருந்த அடை நல்கி
சோறு கொடுத்து மிக பெரிதும்
வீறு சால் நன் கலம் வீசி நன்றும்			15
சிறு வெள் என்பின் நெடு வெண் களரின்
வாய் வன் காக்கை கூகையொடு கூடி
பகலும் கூவும் அகலுள் ஆங்கண்
காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு
இல் என்று இல் வயின் பெயர மெல்ல		20
இடம் சிறிது ஒதுங்கல் அஞ்சி
உடம்பொடும் செல்-மார் உயர்ந்தோர் நாட்டே
					மேல்
# 363 ஐயாதி சிறுவெண்டேரையார்
இரும் கடல் உடுத்த இ பெரும் கண் மா நிலம்
உடை இலை நடுவணது இடை பிறர்க்கு இன்றி
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடு திரை மணலினும் பலரே சுடு பிண
காடு பதி ஆக போகி தத்தம்			5
நாடு பிறர் கொள சென்று மாய்ந்தனரே
அதனால் நீயும் கேள்-மதி அத்தை வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை
மடங்கல் உண்மை மாயமோ அன்றே
கள்ளி ஏய்ந்த முள்ளி அம் புறங்காட்டு		10
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்
உப்பு இலாஅ அவி புழுக்கல்
கை கொண்டு பிறக்கு நோக்காது
இழிபிறப்பினோன் ஈய பெற்று
நிலம் கலன் ஆக இலங்கு பலி மிசையும்		15
இன்னா வைகல் வாரா முன்னே
செய் நீ முன்னிய வினையே
முந்நீர் வரைப்பு_அகம் முழுது உடன் துறந்தே
					மேல்
# 364 கூகைக் கோழியார்
வாடா மாலை பாடினி அணிய
பாணன் சென்னி கேணி பூவா
எரி மருள் தாமரை பெரு மலர் தயங்க
மை விடை இரும் போத்து செம் தீ சேர்த்தி
காயம் கனிந்த கண் அகன் கொழும் குறை		5
நறவு உண் செம் வாய் நா திறம் பெயர்ப்ப
உண்டும் தின்றும் இரப்போர்க்கு ஈய்ந்தும்
மகிழ்கம் வம்மோ மற போரோயே
அரிய ஆகலும் உரிய பெரும
நிலம் பக வீழ்ந்த அலங்கல் பல் வேர்		10
முது மர பொத்தின் கதுமென இயம்பும்
கூகை கோழி ஆனா
தாழிய பெரும் காடு எய்திய ஞான்றே
					மேல்
# 365 மார்க்கண்டேயனார்
மயங்கு இரும் கருவிய விசும்பு முகன் ஆக
இயங்கிய இரு சுடர் கண் என பெயரிய
வளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம்
வயிர குறட்டின் வயங்கு மணி ஆரத்து
பொன் அம் திகிரி முன் சமத்து உருட்டி		5
பொருநர் காணா செரு மிகு முன்பின்
முன்னோர் செல்லவும் செல்லாது இன்னும்
விலை_நல_பெண்டிரின் பலர் மீக்கூற
உள்ளேன் வாழியர் யான் என பன் மாண்
நிலமகள் அழுத காஞ்சியும்			10
உண்டு என உரைப்பரால் உணர்ந்திசினோரே
					மேல்
# 366 கோதமனார்
விழு கடிப்பு அறைந்த முழு குரல் முரசம்
ஒழுக்கு உடை மருங்கின் ஒரு மொழித்து ஆக
அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப
ஒரு தாம் ஆகிய பெருமையோரும்
தம் புகழ் நிறீஇ சென்று மாய்ந்தனரே		5
அதனால் அறவோன் மகனே மறவோர் செம்மால்
நின் ஒன்று உரைப்ப கேள்-மதி
நின் ஊற்றம் பிறர் அறியாது
பிறர் கூறிய மொழி தெரியா
ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி		10
இரவின் எல்லை வருவது நாடி
உரைத்திசின் பெரும நன்றும்
உழவு ஒழி பெரும் பகடு அழி தின்று ஆங்கு
செம் கண் மகளிரொடு சிறு துனி அளைஇ
அம் கள் தேறல் ஆய் கலத்து உகுப்ப		15
கெடல் அரும் திருவ உண்மோ
விடை வீழ்த்து சூடு கிழிப்ப
மடை வேண்டுநர்க்கு அடை அருகாது
அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி
நீர்நிலை பெருத்த வார் மணல் அடைகரை		20
காவு-தோறு இழைத்த வெறி அயர் களத்தின்
இடம் கெட தொகுத்த விடையின்
மடங்கல் உண்மை மாயமோ அன்றே
					மேல்
# 367 ஔவையார்
நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம்
தமவே ஆயினும் தம்மொடு செல்லா
வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ம் கை நிறைய
பூவும் பொன்னும் புனல் பட சொரிந்து		5
பாசிழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய
நார் அறி தேறல் மாந்தி மகிழ் சிறந்து
இரவலர்க்கு அரும் கலம் அருகாது வீசி
வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்
வாழ செய்த நல்வினை அல்லது			10
ஆழும்_காலை புணை பிறிது இல்லை
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீ புரைய காண்_தக இருந்த
கொற்ற வெண்குடை கொடி தேர் வேந்திர்
யான் அறி அளவையோ இதுவே வானத்து		15
வயங்கி தோன்றும் மீனினும் இம்மென
பரந்து இயங்கும் மா மழை உறையினும்
உயர்ந்து மேந்தோன்றி பொலிக நும் நாளே
					மேல்
# 368 கழா தலையார்
களிறு முகந்து பெயர்குவம் எனினே
ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம் போல
கைம்_மா எல்லாம் கணை இட தொலைந்தன
கொடுஞ்சி நெடும் தேர் முகக்குவம் எனினே
கடும் பரி நன் மான் வாங்கு_வயின் ஒல்கி		5
நெடும் பீடு அழிந்து நிலம் சேர்ந்தனவே
கொய் சுவல் புரவி முகக்குவம் எனினே
மெய் நிறைந்த வழுவொடு பெரும்பிறிது ஆகி
வளி வழக்கு அறுத்த வங்கம் போல
குருதி அம் பெரும் புனல் கூர்ந்தனவே ஆங்க		10
முகவை இன்மையின் உகவை இன்றி
இரப்போர் இரங்கும் இன்னா வியன் களத்து
ஆள் அழிப்படுத்த வாள் ஏர் உழவ
கடாஅ யானை கால்_வழி அன்ன என்
தெடாரி தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி		15
பாடி வந்தது எல்லாம் கோடியர்
முழவு மருள் திரு மணி மிடைந்த நின்
அரவு உறழ் ஆரம் முகக்குவம் எனவே
					மேல்
# 369 பரணர்
இருப்பு முகம் செறிந்த ஏந்து எழில் மருப்பின்
கரும் கை யானை கொண்மூ ஆக
நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த
வாள் மின் ஆக வயங்கு கடிப்பு அமைந்த
குருதி பலிய முரசு முழக்கு ஆக			5
அரசு அரா பனிக்கும் அணங்கு உறு பொழுதின்
வெம் விசை புரவி வீசு வளி ஆக
விசைப்பு உறு வல் வில் வீங்கு நாண் உகைத்த
கணை துளி பொழிந்த கண் அகன் கிடக்கை
ஈர செறு வயின் தேர் ஏர் ஆக			10
விடியல் புக்கு நெடிய நீட்டி நின்
செரு படை மிளிர்ந்த திருத்து_உறு பைம் சால்
பிடித்து எறி வெள் வேல் கணையமொடு வித்தி
விழு தலை சாய்த்த வெருவரு பைம் கூழ்
பேய்_மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு	15
கண நரியோடு கழுது களம் படுப்ப
பூதம் காப்ப பொலி_களம் தழீஇ
பாடுநர்க்கு இருந்த பீடு உடையாள
தேய்வை வெண் காழ் புரையும் விசி பிணி
வேய்வை காணா விருந்தின் போர்வை		20
அரி குரல் தடாரி உருப்ப ஒற்றி
பாடி வந்திசின் பெரும பாடு ஆன்று
எழிலி தோயும் இமிழ் இசை அருவி
பொன் உடை நெடும் கோட்டு இமையத்து அன்ன
ஓடை நுதல ஒல்குதல் அறியா			25
துடி அடி குழவிய பிடி இடை மிடைந்த
வேழ முகவை நல்கு-மதி
தாழா ஈகை தகை வெய்யோயே
					மேல்
# 370 ஊன்பொதி பசுங்குடையார்
வள்ளியோர் காணாது உய் திறன் உள்ளி
நாரும் போழும் செய்து உண்டு ஓராங்கு
பசி தின திரங்கிய இரும் பேர் ஒக்கற்கு
ஆர் பதம் கண் என மாதிரம் துழைஇ
வேர் உழந்து உலறி மருங்கு செத்து ஒழிய வந்து	5
அத்த குடிஞை துடி மருள் தீம் குரல்
உழுஞ்சில் அம் கவட்டு இடை இருந்த பருந்தின்
பெடை பயிர் குரலொடு இசைக்கும் ஆங்கண்
கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை
வரி மரல் திரங்கிய கானம் பிற்பட		10
பழு மரம் உள்ளிய பறவை போல
ஒண் படை மாரி வீழ் கனி பெய்து என
துவைத்து எழு குருதி நில மிசை பரப்ப
விளைந்த செழும் குரல் அரிந்து கால் குவித்து
படு பிண பல் போர்பு அழிய வாங்கி		15
எருது களிறு ஆக வாள் மடல் ஓச்சி
அதரி திரித்த ஆள் உகு கடாவின்
அகன் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி
வெம் திறல் வியன் களம் பொலிக என்று ஏத்தி
இருப்பு முகம் செறித்த ஏந்து மருப்பின்		20
வரை மருள் முகவைக்கு வந்தனென் பெரும
வடி நவில் எஃகம் பாய்ந்து என கிடந்த
தொடி உடை தட கை ஓச்சி வெருவார்
இனத்து அடி விராய வரி குடர் அடைச்சி
அழு குரல் பேய்_மகள் அயர கழுகொடு		25
செம் செவி எருவை திரிதரும்
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே
					மேல்
 




# 371 கல்லாடனார்
அகன் தலை வையத்து புரவலர் காணாது
மரம் தலை சேர்ந்து பட்டினி வைகி
போது அவிழ் அலரி நாரின் தொடுத்து
தயங்கு இரும் பித்தை பொலிய சூடி
பறையொடு தகைத்த கல பையென் முரவு வாய்	5
ஆடு_உறு குழிசி பாடு இன்று தூக்கி
மன்ற வேம்பின் ஒண் பூ உறைப்ப
குறை செயல் வேண்டா நசைஇய இருக்கையேன்
அரிசி இன்மையின் ஆரிடை நீந்தி
கூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்ப		10
வரு கணை வாளி ......................
........................ அன்பு இன்று தலைஇ
இரை முரசு ஆர்க்கும் உரை சால் பாசறை
வில் ஏர் உழவின் நின் நல் இசை உள்ளி
குறை தலை படு பிணன் எதிர போர்பு அழித்து	15
யானை எருத்தின் வாள் மடல் ஓச்சி
அதரி திரித்த ஆள் உகு கடாவின்
மதியத்து அன்ன என் விசி_உறு தடாரி
அகன் கண் அதிர ஆகுளி தொடாலின்
பணை மருள் நெடும் தாள் பல் பிணர் தட கை	20
புகர்_முக முகவைக்கு வந்திசின் பெரும
களிற்று கோட்டு அன்ன வால் எயிறு அழுத்தி
விழுக்கொடு விரைஇய வெள் நிண சுவையினள்
குடர் தலை மாலை சூடி உண தின
ஆனா பெரு வளம் செய்தோன் வானத்து		25
வயங்கு பன் மீனினும் வாழியர் பல என
உரு கெழு பேய்_மகள் அயர
குருதி துகள் ஆடிய களம் கிழவோயே
					மேல்
# 372 மாங்குடி கிழார்
விசி பிணி தடாரி விம்மென ஒற்றி
ஏத்தி வந்தது எல்லாம் முழுத்த
இலங்கு வாள் அவிர் ஒளி வலம் பட மின்னி
கணை துளி பொழிந்த கண்கூடு பாசறை
பொருந்தா தெவ்வர் அரிந்த தலை அடுப்பின்		5
கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல்
ஆனா மண்டை வன்னி அம் துடுப்பின்
ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட
மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த
வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம்		10
வெம் வாய் பெய்த பூத நீர் சால்க என
புலவு களம் பொலிய வேட்டோய் நின்
நிலவு திகழ் ஆரம் முகக்குவம் எனவே
					மேல்
# 373 கோவூர்கிழார்
உரு மிசை முழக்கு என முரசம் இசைப்ப
செரு நவில் வேழம் கொண்மூ ஆக
தேர் மா அழி துளி தலைஇ நாம் உற
கணை காற்று எடுத்த கண் அகன் பாசறை
இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள்		5
பிழிவது போல பிட்டை ஊறு உவப்ப
மைந்தர் ஆடிய மயங்கு பெரும் தானை
கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே
.................. தண்ட மா பொறி
மட கண் மயில் இயல் மறலி ஆங்கு		10
நெடும் சுவர் நல் இல் புலம்ப கடை கழிந்து
மென் தோள் மகளிர் மன்றம் பேணார்
புண் உவந்து ........................
................. உளை அணி புரவி வாழ்க என
சொல் நிழல் இன்மையின் நன் நிழல் சேர		15
நுண் பூண் மார்பின் புன் தலை சிறாஅர்
அம்பு அழி பொழுதில் தமர் முகம் காணா
................... வாளில் தாக்கான்
வேந்து புறங்கொடுத்த வீய்ந்து உகு பறந்தலை
மாடம் மயங்கு எரி மண்டி கோடு இறுபு		20
உரும் எறி மலையின் இரு நிலம் சேர
சென்றோன் மன்ற கொலைவன் சென்று எறி
வெம் புண் அறிநர் கண்டு கண் அலைப்ப
வஞ்சி முற்றம் வய களன் ஆக
அஞ்சா மறவர் ஆள் போர்பு அழித்து		25
கொண்டனை பெரும குட புலத்து அதரி
பொலிக அத்தை நின் பணை தயங்கு வியன் களம்
விளங்கு திணை வேந்தர் களம்-தொறும் சென்று
புகர்_முக முகவை பொலிக என்று ஏத்தி
கொண்டனர் என்ப பெரியோர் யானும்		30
அம் கண் மா கிணை அதிர ஒற்ற
முற்றிலென் ஆயினும் காதலின் ஏத்தி
நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின்
மன் எயில் முகவைக்கு வந்திசின் பெரும
பகைவர் புகழ்ந்த ஆண்மை நகைவர்க்கு		35
தா இன்று உதவும் பண்பின் பேயொடு
கண நரி திரிதரும் ஆங்கண் நிணன் அருந்து
செம் செவி எருவை குழீஇ
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே
					மேல்
# 374 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
கானல் மேய்ந்து வியன் புலத்து அல்கும்
புல்வாய் இரலை நெற்றி அன்ன
பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவிய
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர்
மன்ற பலவின் மால் வரை பொருந்தி என்		5
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி
இரும் கலை ஓர்ப்ப இசைஇ காண்வர
கரும் கோல் குறிஞ்சி அடுக்கம் பாட
புலிப்பல்தாலி புன் தலை சிறாஅர்
மான் கண் மகளிர் கான் தேர் அகன்று உவா		10
சிலை_பால் பட்ட முளவு_மான் கொழும் குறை
விடர் முகை அடுக்கத்து சினை முதிர் சாந்தம்
புகர் முக வேழத்து மருப்பொடு மூன்றும்
இரும் கேழ் வய புலி வரி அதள் குவைஇ
விருந்து இறை நல்கும் நாடன் எம் கோன்		15
கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல
வண்மையும் உடையையோ ஞாயிறு
கொன் விளங்குதியால் விசும்பினானே
					மேல்
# 375 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
அலங்கு கதிர் சுமந்த கலங்கல் சூழி
நிலை தளர்வு தொலைந்த ஒல்கு நிலை பல் கால்
பொதியில் ஒரு சிறை பள்ளி ஆக
முழா அரை போந்தை அர வாய் மா மடல்
நாரும் போழும் கிணையோடு சுருக்கி		5
ஏரின்_வாழ்நர் குடி முறை புகாஅ
ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வை
புரவு எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார் என
புரசம் தூங்கும் அறாஅ யாணர்
வரை அணி படப்பை நன் நாட்டு பொருந		10
பொய்யா ஈகை கழல் தொடி ஆஅய்
யாவரும் இன்மையின் கிணைப்ப தவாது
பெரு மழை கடல் பரந்து ஆஅங்கு யானும்
ஒரு நின் உள்ளி வந்தனென் அதனால்
புலவர் புக்கில் ஆகி நிலவரை			15
நிலீஇயர் அத்தை நீயே ஒன்றே
நின் இன்று வறுவிது ஆகிய உலகத்து
நிலவன்மாரோ புரவலர் துன்னி
பெரிய ஓதினும் சிறிய உணரா
பீடு இன்று பெருகிய திருவின்			20
பாடு இல் மன்னரை பாடன்மார் எமரே
					மேல்
# 376 புறத்திணை நன்னாகனார்
விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்று
பசும் கதிர் மழுகிய சிவந்து வாங்கு அந்தி
சிறு நனி பிறந்த பின்றை செறி பிணி
சிதாஅர் வள்பின் என் தடாரி தழீஇ
பாணர் ஆரும் அளவை யான் தன்		5
யாணர் நன் மனை கூட்டு முதல் நின்றனென்
இமைத்தோர் விழித்த மாத்திரை ஞெரேரென
குணக்கு எழு திங்கள் கனை இருள் அகற்ற
பண்டு அறி வாரா உருவோடு என் அரை
தொன்றுபடு துளையொடு பரு இழை போகி		10
நைந்து கரை பறைந்த என் உடையும் நோக்கி
விருந்தினன் அளியன் இவன் என பெருந்தகை
நின்ற முரற்கை நீக்கி நன்றும்
அரவு வெகுண்டு அன்ன தேறலொடு சூடு தருபு
நிரயத்து அன்ன என் வறன் களைந்தன்றே		15
இரவினானே ஈத்தோன் எந்தை
அன்றை ஞான்றினோடு இன்றின் ஊங்கும்
இரப்ப சிந்தியேன் நிரப்பு அடு புணையின்
உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்
நிறை குள புதவின் மகிழ்ந்தனென் ஆகி		20
ஒரு நாள் இரவலர் வரையா வள்ளியோர் கடை தலை
ஞாங்கர் நெடுமொழி பயிற்றி
தோன்றல் செல்லாது என் சிறு கிணை குரலே
					மேல்
# 377 உலோச்சனார்
பனி பழுநிய பல் யாமத்து
பாறு தலை மயிர் நனைய
இனிது துஞ்சும் திரு நகர் வரைப்பின்
இனையல் அகற்ற என் கிணை தொடா குறுகி
அவி உணவினோர் புறம்காப்ப			5
அற நெஞ்சத்தோன் வாழ நாள் என்று
அதன் கொண்டு வரல் ஏத்தி
கரவு இல்லா கவி வண் கையான்
வாழ்க என பெயர் பெற்றோர்
பிறர்க்கு உவமம் தான் அல்லது			10
தனக்கு உவமம் பிறர் இல் என
அது நினைத்து மதி மழுகி
அங்கு நின்ற என் காணூஉ
சேய் நாட்டு செல் கிணைஞனை
நீ புரவலை எமக்கு என்ன			15
மலை பயந்த மணியும் கடறு பயந்த பொன்னும்
கடல் பயந்த கதிர் முத்தமும்
வேறு பட்ட உடையும் சேறுபட்ட தசும்பும்
கனவில் கண்டு ஆங்கு வருந்தாது நிற்ப
நனவின் நல்கியோன் நகை சால் தோன்றல்		20
நாடு என மொழிவோர் அவன் நாடு என மொழிவோர்
வேந்து என மொழிவோர் அவன் வேந்து என மொழிவோர்
புகர் நுதல் அவிர் பொன் கோட்டு யானையர்
கவர் பரி கச்சை நன் மான்
வடி மணி வாங்கு உருள			25
கொடி மிசை நல் தேர் குழுவினர்
கதழ் இசை வன்கணினர்
வாளின் வாழ்நர் ஆர்வமொடு ஈண்டி
கடல் ஒலி கொண்ட தானை
அடல் வெம் குருசில் மன்னிய நெடிதே		30
					மேல்
# 378 ஊன்பொதி பசுங்குடையார்
தென் பரதவர் மிடல் சாய
வட வடுகர் வாள் ஓட்டிய
தொடை அமை கண்ணி திருந்து வேல் தட கை
கடு மா கடைஇய விடு பரி வடிம்பின்
நல் தார் கள்ளின் சோழன் கோயில்		5
புது பிறை அன்ன சுதை செய் மாடத்து
பனி கயத்து அன்ன நீள் நகர் நின்று என்
அரி கூடு மா கிணை இரிய ஒற்றி
எஞ்சா மரபின் வஞ்சி பாட
எமக்கு என வகுத்த அல்ல மிக பல		10
மேம்படு சிறப்பின் அரும் கல வெறுக்கை
தாங்காது பொழிதந்தோனே அது கண்டு
இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல்
விரல் செறி மரபின செவி தொடக்குநரும்
செவி தொடர் மரபின விரல் செறிக்குநரும்		15
அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும்
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும்
கடும் தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலி தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்		20
செம் முக பெரும் கிளை இழை பொலிந்து ஆஅங்கு
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே
இரும் கிளை தலைமை எய்தி
அரும் படர் எவ்வம் உழந்ததன் தலையே
					மேல்
# 379 புறத்திணை நன்னாகனார்
யானே பெறுக அவன் தாள் நிழல் வாழ்க்கை
அவனே பெறுக என் நா இசை நுவறல்
நெல் அரி தொழுவர் கூர் வாள் மழுங்கின்
பின்னை மறத்தோடு அரிய கல் செத்து
அள்ளல் யாமை கூன் புறத்து உரிஞ்சும்		5
நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன்
வில்லியாதன் கிணையேம் பெரும
குறும் தாள் ஏற்றை கொளும் கண் அம் விளர்
நறு நெய் உருக்கி நாள்_சோறு ஈயா
வல்லன் எந்தை பசி தீர்த்தல் என			10
கொன் வரல் வாழ்க்கை நின் கிணைவன் கூற
கேட்டதன் கொண்டும் வேட்கை தண்டாது
விண் தோய் தலைய குன்றம் பிற்பட
நசைதர வந்தனென் யானே வசை இல்
தாய் இல் தூவா குழவி போல ஆங்கு அ		15
திரு உடை திரு மனை ஐது தோன்று கமழ் புகை
வரு மழை மங்குலின் மறுகு உடன் மறைக்கும்
குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊரே
					மேல்
# 380
தென் பவ்வத்து முத்து பூண்டு
வட_குன்றத்து சாந்தம் உரீஇ
................. கடல் தானை
இன் இசைய விறல் வென்றி
தென்னவர் வய மறவன்			5
மிசை பெய்த நீர் கடல் பரந்து முத்து ஆகுந்து
நாறு இதழ் குளவியொடு கூதளம் குழைய
வேறு பெ...............துந்து
தீம் சுளை பலவின் நாஞ்சில் பொருநன்
துப்பு எதிர்ந்தோர்க்கே உள்ளா சேய்மையன்		10
நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன்
வல் வேல் கந்தன் நல் இசை அல்ல
............... சிலைத்தார் பிள்ளை அம் சிறாஅர்
அன்னன் ஆகன் மாறே இ நிலம்
இலம்படு காலை ஆயினும்			15
புலம்பல் போயின்று பூத்த என் கடும்பே
					மேல்
 




# 381 புறத்திணை நன்னகனாரி
ஊனும் ஊணும் முனையின் இனிது என
பாலின் பெய்தவும் பாகின் கொண்டவும்
அளவுபு கலந்து மெல்லிது பருகி
விருந்து_உறுத்து ஆற்ற இருந்தெனம் ஆக
சென்மோ பெரும எம் விழவு உடை நாட்டு என	5
யாம் தன் அறியுநம் ஆக தான் பெரிது
அன்பு உடைமையின் எம் பிரிவு அஞ்சி
துணரியது கொளாஅ ஆகி பழம் ஊழ்த்து
பயம் பகர்வு அறியா மயங்கு அரில் முது பாழ்
பெயல் பெய்து அன்ன செல்வத்து ஆங்கண்		10
ஈயா மன்னர் புறங்கடை தோன்றி
சிதாஅர் வள்பின் சிதர் புற தடாரி
ஊன் சுகிர் வலந்த தெண் கண் ஒற்றி
விரல் விசை தவிர்க்கும் அரலை இல் பாணியின்
இலம்பாடு அகற்றல் யாவது புலம்பொடு		15
தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம் அதனால்
இரு நிலம் கூலம் பாற கோடை
வரு மழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றை
சேயை ஆயினும் இவணை ஆயினும்
இதன் கொண்டு அறிநை வாழியோ கிணைவ		20
சிறு நனி ஒரு வழி படர்க என்றோனே எந்தை
ஒலி வெள் அருவி வேங்கட நாடன்
உறுவரும் சிறுவரும் ஊழ் மாறு உய்க்கும்
அறத்துறை அம்பியின் மான மறப்பு இன்று
இரும் கோள் ஈரா பூட்கை			25
கரும்பனூரன் காதல் மகனே
					மேல்
# 382 கோவூர் கிழார்
கடல் படை அடல் கொண்டி
மண்டு உற்ற மலிர் நோன் தாள்
தண் சோழ நாட்டு பொருநன்
அலங்கு உளை அணி இவுளி
நலங்கிள்ளி நசை பொருநரேம்			5
பிறர் பாடி பெறல் வேண்டேம்
அவன் பாடுதும் அவன் தாள் வாழிய என
நெய் குய்ய ஊன் நவின்ற
பல் சோற்றான் இன் சுவைய
நல்குரவின் பசி துன்பின் நின்			10
முன்_நாள் விட்ட மூது அறி சிறாஅரும்
யானும் ஏழ் மணி அம் கேழ் அணி உத்தி
கண் கேள்வி கவை நாவின்
நிறன் உற்ற அராஅ போலும்
வறன் ஒரீஇ வழங்கு வாய்ப்ப			15
விடு-மதி அத்தை கடு மான் தோன்றல்
நினதே முந்நீர் உடுத்த இ வியன் உலகு அறிய
எனதே கிடை காழ் அன்ன தெண் கண் மா கிணை
கண்_அகத்து யாத்த நுண் அரி சிறு கோல்
எறி-தொறும் நுடங்கி ஆங்கு நின் பகைஞர்		20
கேள்-தொறும் நடுங்க ஏத்துவென்
வென்ற தேர் பிறர் வேத்தவையானே
					மேல்
# 383 மாறோக்கத்து நப்பசலையார்
ஒண் பொறி சேவல் எடுப்ப ஏற்றெழுந்து
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர்
நுண் கோல் சிறு கிணை சிலம்ப ஒற்றி
நெடும் கடை நின்று பகடு பல வாழ்த்தி
தன் புகழ் ஏத்தினென் ஆக என் வலத்து		5
இடுக்கண் இரியல் போக ஊன் புலந்து
அரும் கடி வியன் நகர் குறுகல் வேண்டி
கூம்பு விடு மென் பிணி அவிழ்த்த ஆம்பல்
தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உள
பாம்பு உரி அன்ன வடிவின காம்பின்		10
கழை படு சொலியின் இழை அணி வாரா
ஒண் பூ கலிங்கம் உடீஇ நுண் பூண்
வசிந்து வாங்கு நுசுப்பின் அம் வாங்கு உந்தி
கற்பு உடை மடந்தை தன் புறம் புல்ல
மெல் அணை கிடந்தோன் --------------			15
என் பெயர்ந்த --------------- நோக்கி
------------- அதற்கொண்டு
அழித்து பிறந்தனென் ஆகி அ வழி
பிறர் பாடு புகழ் பாடி படர்பு அறியேனே
குறு முலைக்கு அலமரும் பால் ஆர் வெண்மறி	20
நரை முக ஊகமொடு உகளும் வரை அமல்
----------------- குன்று பல கெழீஇய
கான் கெழு நாடன் கடும் தேர் அவியன் என
ஒருவனை உடையேன்-மன்னே யானே
அறான் எவன் பரிகோ வெள்ளியது நிலையே		25
					மேல்
# 384 புறத்திணை நன்னாகனார்
மென்_பாலான் உடன் அணைஇ
வஞ்சி கோட்டு உறங்கும் நாரை
அறை கரும்பின் பூ அருந்தும்
வன்_பாலான் கரும் கால் வரகின்
அரிகால் கருப்பை அலைக்கும் பூழின்		5
அம் கண் குறு முயல் வெருவ அயல
கரும் கோட்டு இருப்பை பூ உறைக்குந்து
விழவு இன்று ஆயினும் உழவர் மண்டை
இரும் கெடிற்று மிசையொடு பூ கள் வைகுந்து
கரும்பனூரன் கிணையேம் பெரும			10
நெல் என்னா பொன் என்னா
கனற்ற கொண்ட நறவு என்னா
மனை என்னா அவை பலவும்
யான் தண்டவும் தான் தண்டான்
நிணம் பெருத்த கொழும் சோற்று இடை		15
மண் நாண புகழ் வேட்டு
நீர் நாண நெய் வழங்கி
புரந்தோன் எந்தை யாம் எவன் தொலைவதை
அன்னோனை உடையேம் என்ப இனி வறட்கு
யாண்டு நிற்க வெள்ளி மாண்ட			20
உண்ட நன் கலம் பெய்து நுடக்கவும்
தின்ற நன் பல் ஊன் தோண்டவும்
வந்த வைகல் அல்லது
சென்ற எல்லை செலவு அறியேனே
					மேல்
# 385 கல்லாடனார்
வெள்ளி தோன்ற புள்ளு குரல் இயம்ப
புலரி விடியல் பகடு பல வாழ்த்தி
தன் கடை தோன்றினும் இலனே பிறன் கடை
அகன் கண் தடாரி பாடு கேட்டு அருளி
வறன் யான் நீங்கல் வேண்டி என் அரை		5
நிலம் தின சிதைந்த சிதாஅர் களைந்து
வெளியது உடீஇ என் பசி களைந்தோனே
காவிரி அணையும் தாழ் நீர் படப்பை
நெல் விளை கழனி அம்பர் கிழவோன்
நல் அருவந்தை வாழியர் புல்லிய			10
வேங்கட விறல் வரைப்பட்ட
ஓங்கல் வானத்து உறையினும் பலவே
					மேல்
# 386 கோவூர் கிழார்
நெடு நீர நிறை கயத்து
படு மாரி துளி போல
நெய் துள்ளிய வறை முகக்கவும்
சூடு கிழித்து வாடூன் மிசையவும்
ஊன் கொண்ட வெண் மண்டை			5
ஆன் பயத்தான் முற்று அழிப்பவும்
வெய்து உண்ட வியர்ப்பு அல்லது
செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை
ஈத்தோன் எந்தை இசை தனது ஆக
வயலே நெல்லின் வேலி நீடிய கரும்பின்		10
பாத்தி பன் மலர் பூ ததும்பின
புறவே புல் அருந்து பல் ஆயத்தான்
வில் இருந்த வெம் குறும்பின்று
கடலே கால் தந்த கலம் எண்ணுவோர்
கானல் புன்னை சினை அலைக்குந்து		15
கழியே சிறு வெள் உப்பின் கொள்ளை சாற்றி
பெரும் கல் நன் நாட்டு உமண் ஒலிக்குந்து
அன்ன நன் நாட்டு பொருநம் யாமே
பொராஅ பொருநரேம்
குண திசை நின்று குட முதல் செலினும்		20
குட திசை நின்று குண முதல் செலினும்
வட திசை நின்று தென்_வயின் செலினும்
தென் திசை நின்று குறுகாது நீடினும்
யாண்டும் நிற்க வெள்ளி யாம்
வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே		25
					மேல்
# 387 குண்டுகட் பாலியாதனார்
வள் உகிர வயல் ஆமை
வெள் அகடு கண்டு அன்ன
வீங்கு விசி புது போர்வை
தெண் கண் மா கிணை இயக்கி என்றும்
மாறுகொண்டோர் மதில் இடறி			5
நீறு ஆடிய நறும் கவுள
பூம் பொறி பணை எருத்தின
வேறு_வேறு பரந்து இயங்கி
வேந்து உடை மிளை அயல் பரக்கும்
ஏந்து கோட்டு இரும் பிணர் தட கை		10
திருந்து தொழில் பல பகடு
பகை புல மன்னர் பணி திறை தந்து நின்
நகை_புல_வாணர் நல்குரவு அகற்றி
மிக பொலியர் தன் சேவடி அத்தை என்று
யாஅன் இசைப்பின் நனி நன்று எனா		15
பல பிற வாழ்த்த இருந்தோர்_தம் கோன்
மருவ இன் நகர் அகன் கடை தலை
திருந்து கழல் சேவடி குறுகல் வேண்டி
வென்று இரங்கும் விறல் முரசினோன்
என் சிறுமையின் இழித்து நோக்கான்		20
தன் பெருமையின் தகவு நோக்கி
குன்று உறழ்ந்த களிறு என்கோ
கொய் உளைய மா என்கோ
மன்று நிறையும் நிரை என்கோ
மனை களமரொடு களம் என்கோ			25
ஆங்கு அவை கனவு என மருள வல்லே நனவின்
நல்கியோனே நகை சால் தோன்றல்
ஊழி வாழி பூழியர் பெருமகன்
பிணர் மருப்பு யானை செரு மிகு நோன் தாள்
செல்வக்கடுங்கோ வாழியாதன்			30
ஒன்னா தெவ்வர் உயர் குடை பணித்து இவண்
விடுவர் மாதோ நெடிதே நில்லா
புல் இலை வஞ்சி புற மதில் அலைக்கும்
கல்லென் பொருநை மணலினும் ஆங்கண்
பல் ஊர் சுற்றிய கழனி			35
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே
					மேல்
# 388 மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
வெள்ளி தென் புலத்து உறைய விளை வயல்
பள்ளம் வாடிய பயன் இல் காலை
இரும் பறை கிணை_மகன் சென்றவன் பெரும் பெயர்
சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தி
தன் நிலை அறியுநன் ஆக அ நிலை		5
இடுக்கண் இரியல்_போக உடைய
கொடுத்தோன் எந்தை கொடை மேம் தோன்றல்
நுண் நூல் தட கையின் நா மருப்பு ஆக
வெல்லும் வாய்மொழி புல் உடை விளை நிலம்
பெயர்க்கும் பண்ணன் கேட்டிரோ அவன் ...............	10
வினை பகடு ஏற்ற மேழி கிணை தொடா
நாள்-தொறும் பாடேன் ஆயின் ஆனா
மணி கிளர் முன்றில் தென்னவன் மருகன்
பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை
அண்ணல் யானை வழுதி			15
கண்மாறு இலியர் என் பெரும் கிளை புரவே
					மேல்
# 389 கள்ளில் ஆத்திரையனார்
நீர் நுங்கின் கண் வலிப்ப
கான வேம்பின் காய் திரங்க
கயம் களியும் கோடை ஆயினும்
ஏலா வெண்பொன் போகு_உறு_காலை
எம்மும் உள்ளுமோ பிள்ளை அம் பொருநன்		5
என்று ஈத்தனனே இசை சால் நெடுந்தகை
இன்று சென்று எய்தும் வழியனும் அல்லன்
செலினே காணா வழியனும் அல்லன்
புன் தலை மட பிடி இனைய கன்று தந்து
குன்றக நல் ஊர் மன்றத்து பிணிக்கும்		10
கல் இழி அருவி வேங்கடம் கிழவோன்
செல்வு_உழி எழாஅ நல் ஏர் முதியன்
ஆதனுங்கன் போல நீயும்
பசித்த ஒக்கல் பழங்கண் வீட
வீறு சால் நன் கலம் நல்கு-மதி பெரும		15
ஐது அகல் அல்குல் மகளிர்
நெய்தல் கேளல்-மார் நெடும் கடையானே
					மேல்
# 390 ஔவையார்
அறவை நெஞ்சத்து ஆயர் வளரும்
மறவை நெஞ்சத்து ஆய் இலாளர்
அரும்பு அலர் செருந்தி நெடும் கான் மலர் கமழ்
விழவு அணி வியன் களம் அன்ன முற்றத்து
ஆர்வலர் குறுகின் அல்லது காவலர்		5
கனவினும் குறுகா கடி உடை வியன் நகர்
மலை கணத்து அன்ன மாடம் சிலம்ப என்
அரி குரல் தடாரி இரிய ஒற்றி
பாடி நின்ற பன் நாள் அன்றியும்
சென்ற ஞான்றை சென்று படர் இரவின்		10
வந்ததன் கொண்டு நெடும் கடை நின்ற
புன் தலை பொருநன் அளியன் தான் என
தன் உழை குறுகல் வேண்டி என் அரை
முது நீர் பாசி அன்ன உடை களைந்து
திரு மலர் அன்ன புது மடி கொளீஇ		15
மகிழ் தரல் மரபின் மட்டே அன்றியும்
அமிழ்து அன மரபின் ஊன் துவை அடிசில்
வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி
முன் ஊர் பொதியில் சேர்ந்த மென் நடை
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு அகற்ற		20
அகடு நனை வேங்கை வீ கண்டு அன்ன
பகடு தரு செந்நெல் போரொடு நல்கி
கொண்டி பெறுக என்றோனே உண்துறை
மலை அலர் அணியும் தலை நீர் நாடன்
கண்டால் கொண்டு மனை திருந்து அடி வாழ்த்தி	25
.................... ..................
வான் அறியல என் பாடு பசி போக்கல்
அண்ணல் யானை வேந்தர்
உண்மையோ அறியலர் காண்பு அறியலரே
					மேல்
 




# 391 கல்லாடனார்
தண் துளி பல பொழிந்து எழிலி இசைக்கும்
விண்டு அனைய விண் தோய் பிறங்கல்
முகடு உற உயர்ந்த நெல்லின் மகிழ் வர
பகடு தரு பெரு வளம் வாழ்த்தி பெற்ற
திருந்தா மூரி பரந்து பட கெண்டி			5
அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும்
வேங்கட வரைப்பின் வட புலம் பசித்து என
ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல்
தீர்கை விடுக்கும் பண்பின முதுகுடி
நனம் தலை மூதூர் ---------- வினவலின்		10
முன்னும் வந்தோன் மருங்கிலன் இன்னும்
அளியன் ஆகலின் பொருநன் இவன் என
நின் உணர்ந்து அறியுநர் என் உணர்ந்து கூற
காண்கு வந்திசின் பெரும மாண் தக
இரு நீர் பெரும் கழி நுழை மீன் அருந்தும்		15
துதைந்த தூவி அம் புதாஅம் சேக்கும்
ததைந்த புன்னை செழு நகர் வரைப்பின்
நெஞ்சு அமர் காதல் நின் வெய்யோளொடு
இன் துயில் பெறுக-தில் நீயே வளம் சால்
துளி பதன் அறிந்து பொழிய			20
வேலி ஆயிரம் விளைக நின் வயலே
					மேல்
# 392 ஔவையார்
மதி ஏர் வெண்குடை அதியர் கோமான்
கொடும் பூண் எழினி நெடும் கடை நின்று யான்
பசலை நிலவின் பனி படு விடியல்
பொரு களிற்று அடி வழி அன்ன என் கை
ஒரு கண் மா கிணை ஒற்றுபு கொடாஅ		5
உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து
நிணம் படு குருதி பெரும் பாட்டு ஈரத்து
அணங்கு உடை மரபின் இரும் களம்-தோறும்
வெள் வாய் கழுதை புல்_இனம் பூட்டி
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்		10
வைகல் உழவ வாழிய பெரிது என
சென்று யான் நின்றனென் ஆக அன்றே
ஊர் உண் கேணி பகட்டு இலை பாசி
வேர் புரை சிதாஅர் நீக்கி நேர் கரை
நுண் நூல் கலிங்கம் உடீஇ உண்ம் என		15
தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல்
கோள்_மீன் அன்ன பொலம் கலத்து அளைஇ
ஊண் முறை ஈத்தல் அன்றியும் கோள் முறை
விருந்து இறை நல்கியோனே அந்தரத்து
அரும் பெறல் அமிழ்தம் அன்ன			20
கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே
					மேல்
# 393 நல்லிறையனார்
பதி முதல் பழகா பழங்கண் வாழ்க்கை
குறு நெடும் துணையொடும் கூமை வீதலின்
குடி முறை பாடி ஒய்யென வருந்தி
அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும்
கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின்		5
வள்ளன்மையின் எம் வரைவோர் யார் என
உள்ளிய உள்ளமொடு உலை நசை துணையா
உலகம் எல்லாம் ஒரு_பால் பட்டு என
மலர் தார் அண்ணல் நின் நல் இசை உள்ளி
ஈர்ம் கை மறந்த என் இரும் பேர் ஒக்கல்		10
கூர்ந்த எவ்வம் விட கொழு நிணம் கிழிப்ப
கோடை பருத்தி வீடு நிறை பெய்த
மூடை பண்டம் மிடை நிறைந்து அன்ன
வெண் நிண மூரி அருள நாள் உற
ஈன்ற அரவின் நா உரு கடுக்கும் என்		15
தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கி
போது விரி பகன்றை புது மலர் அன்ன
அகன்று மடி கலிங்கம் உடீஇ செல்வமும்
கேடு இன்று நல்கு-மதி பெரும மாசு இல்
மதி புரை மா கிணை தெளிர்ப்ப ஒற்றி		20
ஆடு_மகள் அல்குல் ஒப்ப வாடி
கோடை ஆயினும் கோடி
காவிரி புரக்கும் நன் நாட்டு பொருந
வாய் வாள் வளவன் வாழ்க என
பீடு கெழு நோன் தாள் பாடுகம் பலவே		25
					மேல்
# 394 கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார்
சிலை உலாய் நிமிர்ந்த சாந்து படு மார்பின்
ஒலி கதிர் கழனி வெண்குடை கிழவோன்
வலி துஞ்சு தட கை வாய் வாள் குட்டுவன்
வள்ளியன் ஆதல் வையகம் புகழினும்
உள்ளல் ஓம்பு-மின் உயர் மொழி புலவீர்		5
யானும் இருள் நிலா கழிந்த பகல் செய் வைகறை
ஒரு கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி
பாடு இமிழ் முரசின் இயல் தேர் தந்தை
வாடா வஞ்சி பாடினேன் ஆக
அகம் மலி உவகையொடு அணுகல் வேண்டி		10
கொன்று சினம் தணியா புலவு நாறு மருப்பின்
வெம் சின வேழம் நல்கினன் அஞ்சி
யான் அது பெயர்த்தனென் ஆக தான் அது
சிறிது என உணர்ந்தமை நாணி பிறிதும் ஓர்
பெரும் களிறு நல்கியோனே அதன் கொண்டு		15
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு உறினும்
துன் அரும் பரிசில் தரும் என
என்றும் செல்லேன் அவன் குன்று கெழு நாட்டே
					மேல்
# 395 மதுரை நக்கீரர்
மென்_புலத்து வயல் உழவர்
வன்_புலத்து பகடு விட்டு
குறு முயலின் குழை சூட்டொடு
நெடு வாளை பல் உவியல்
பழம் சோற்று புக வருந்தி			5
புதல் தளவின் பூ சூடி
அரி_பறையால் புள் ஓப்பி
அவிழ் நெல்லின் அரியல் ஆருந்து
மனை கோழி பைம் பயிரின்னே
கான கோழி கவர் குரலொடு			10
நீர்க்கோழி கூய் பெயர்க்குந்து
வேய் அன்ன மென் தோளால்
மயில் அன்ன மென் சாயலார்
கிளி கடியின்னே
அகல் அள்ளல் புள் இரீஇயுந்து			15
ஆங்கு அ பல நல்ல புலன் அணியும்
சீர் சான்ற விழு சிறப்பின்
சிறு கண் யானை பெறல் அரும் தித்தன்
செல்லா நல் இசை உறந்தை குணாது
நெடும் கை வேண்மான் அரும் கடி பிடவூர்		20
அற பெயர் சாத்தன் கிளையேம் பெரும
முன்_நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி
கதிர் நனி சென்ற கனை இருள் மாலை
தன் கடை தோன்றி என் உறவு இசைத்தலின்
தீம் குரல் ..... அரி குரல் தடாரியொடு		25
ஆங்கு நின்ற என் கண்டு
சிறிதும் நில்லான் பெரிதும் கூறான்
அரும் கலம் வரவே அருளினன் வேண்டி
ஐயென உரைத்தன்றி நல்கி தன் மனை
பொன் போல் மடந்தையை காட்டி இவனை		30
என் போல் போற்று என்றோனே அதன் கொண்டு
அவன் மறவலேனே பிறர் உள்ளலேனே
அகன் ஞாலம் பெரிது வெம்பினும்
மிக வானுள் எரி தோன்றினும்
குள_மீனோடும் தாள் புகையினும்			35
பெரும் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல்
பசும் கண் கருனை சூட்டொடு மாந்தி
விளைவு ஒன்றோ வெள்ளம் கொள்க என
உள்ளதும் இல்லதும் அறியாது
ஆங்கு அமைந்தன்றால் வாழ்க அவன் தாளே		40
					மேல்
# 396 மாங்குடி கிழார்
கீழ் நீரால் மீன் வழங்குந்து
மீ நீரான் கண் அன்ன மலர் பூக்குந்து
கழி சுற்றிய விளை கழனி
அரி_பறையான் புள் ஓப்புந்து
நெடு நீர் கூஉம் மணல் தண் கால்		5
மென் பறையான் புள் இரியுந்து
நனை கள்ளின் மனை கோசர்
தீம் தேறல் நறவு மகிழ்ந்து
தீம் குரவை கொளை தாங்குந்து
உள் இலோர்க்கு வலி ஆகுவன்			10
கேள் இலோர்க்கு கேள் ஆகுவன்
கழுமிய வென் வேல் வேளே
வள நீர் வாட்டாற்று எழினியாதன்
கிணையேம் பெரும
கொழும் தடிய சூடு என்கோ			15
வள நனையின் மட்டு என்கோ
குறு முயலின் நிணம் பெய்தந்த
நறு நெய்ய சோறு என்கோ
திறந்து மறந்து கூட்டு முதல்
முகந்து கொள்ளும் உணவு என்கோ		20
அன்னவை பல_பல --------------
வருந்திய ---------------
இரும் பேர் ஒக்கல் அருந்தி எஞ்சிய
அளித்து உவப்ப ஈத்தோன் எந்தை
எம்மோர் ஆக்க கங்கு உண்டே			25
மாரி வானத்து மீன் நாப்பண்
விரி கதிர வெண் திங்களின்
விளங்கி தோன்றுக அவன் கலங்கா நல் இசை
யாமும் பிறரும் வாழ்த்த நாளும்
நிரை சால் நன் கலன் நல்கி			30
உரை செல சுரக்க அவன் பாடல் சால் வளனே
					மேல்
# 397
வெள்ளியும் இரு விசும்பு ஏர்தரும் புள்ளும்
உயர் சினை குடம்பை குரல் தோற்றினவே
பொய்கையும் போது கண் விழித்தன பைபய
சுடரும் சுருங்கின்று ஒளியே பாடு எழுந்து
இரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப		5
இரவு புறங்கண்ட காலை தோன்றி
எஃகு இருள் அகற்றும் ஏம பாசறை
வைகறை அரவம் கேளியர் பல கோள்
செய் தார் மார்ப எழு-மதி துயில் என
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி		10
நெடும் கடை தோன்றியேனே அது நயந்து
உள்ளி வந்த பரிசிலன் இவன் என
நெய் உற பொரித்த குய் உடை நெடும் சூடு
மணி கலன் நிறைந்த மணம் நாறு தேறல்
பாம்பு உரித்து அன்ன வான் பூ கலிங்கமொடு		15
மாரி அன்ன வண்மையின் சொரிந்து
வேனில் அன்ன என் வெப்பு நீங்க
அரும் கலம் நல்கியோனே என்றும்
செறுவில் பூத்த சே இதழ் தாமரை
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த		20
தீயொடு விளங்கும் நாடன் வாய் வாள்
வலம் படு தீவின் பொலம் பூண் வளவன்
எறி திரை பெரும் கடல் இறுதி கண் செலினும்
தெறு கதிர் கனலி தென் திசை தோன்றினும்
என் என்று அஞ்சலம் யாமே வென் வெல்		25
அரும் சமம் கடக்கும் ஆற்றல் அவன்
திருந்து கழல் நோன் தாள் தண் நிழலேமே
					மேல்
# 398 திருத்தாமனார்
மதி நிலா கரப்ப வெள்ளி ஏர்தர
வகை மாண் நல் இல் ---------------
பொறி மயிர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப
பொய்கை பூ முகை மலர பாணர்
கைவல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க		5
இரவு புறம்பெற்ற ஏம வைகறை
பரிசிலர் வரையா விரை செய் பந்தர்
வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன்
நகைவர் குறுகின் அல்லது பகைவர்க்கு
புலி_இனம் மடிந்த கல் அளை போல		10
துன்னல் போகிய பெரும் பெயர் மூதூர்
மதியத்து அன்ன என் அரி குரல் தடாரி
இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து
உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய்
தள்ளா நிலையை ஆகியர் எமக்கு என		15
என் வரவு அறீஇ
சிறிதிற்கு பெரிது உவந்து
விரும்பிய முகத்தன் ஆகி என் அரை
துரும்பு படு சிதாஅர் நீக்கி தன் அரை
புகை விரிந்து அன்ன பொங்கு துகில் உடீஇ		20
அழல் கான்று அன்ன அரும் பெறல் மண்டை
நிழல் காண் தேறல் நிறைய வாக்கி
யான் உண அருளல் அன்றியும் தான் உண்
மண்டைய கண்ட மான் வறை கருனை
கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர			25
வரை உறழ் மார்பின் வையகம் விளக்கும்
விரவு மணி ஒளிர்வரும் அரவு உறழ் ஆரமொடு
புரையோன் மேனி பூ துகில் கலிங்கம்
உரை செல அருளியோனே
பறை இசை அருவி பாயல் கோவே		30
					மேல்
# 399 ஐயூர் முடவனார்
அடு_மகள் முகந்த அளவா வெண்ணெல்
தொடி மாண் உலக்கை பரூஉ குற்று அரிசி
காடி வெள் உலை கொளீஇ நீழல்
ஓங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி
மோட்டு இரு வராஅல் கோட்டு_மீன் கொழும் குறை	5
செறுவின் வள்ளை சிறு கொடி பாகல்
பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்து அன்ன
மெய் களைந்து இனனொடு விரைஇ
மூழ்ப்ப பெய்த முழு அவிழ் புழுக்கல்
அழிகளின் படுநர் களி அட வைகின்		10
பழம் சோறு அயிலும் முழங்கு நீர் படப்பை
காவிரி கிழவன் மாயா நல் இசை
கிள்ளிவளவன் உள்ளி அவன் படர்தும்
செல்லேன் செல்லேன் பிறர் முகம் நோக்கேன்
நெடும் கழை தூண்டில் விடு மீன் நொடுத்து		15
கிணை_மகள் அட்ட பாவல் புளிங்கூழ்
பொழுது மறுத்து உண்ணும் உண்டியேன் அழிவு கொண்டு
ஒரு சிறை இருந்தேன் என்னே இனியே
அறவர் அறவன் மறவர் மறவன்
மள்ளர் மள்ளன் தொல்லோர் மருகன்		20
இசையின் கொண்டான் நசை அமுது உண்க என
மீ படர்ந்து இறந்து வன் கோல் மண்ணி
வள் பரிந்து கிடந்த என் தெண் கண் மா கிணை
விசிப்பு_உறுத்து அமைந்த புது காழ் போர்வை
அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்து			25
கடியும் உணவு என்ன கடவுட்கும் தொடேன்
கடும் தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவல்
பகடே அத்தை யான் வேண்டி வந்தது என
ஒன்று யான் பெட்டா அளவை அன்றே
ஆன்று விட்டனன் அத்தை விசும்பின்		30
மீன் பூத்து அன்ன உருவ பன் நிரை
ஊர்தியொடு நல்கியோனே சீர் கொள
இழுமென இழிதரும் அருவி
வான் தோய் உயர் சிமை தோன்றி கோவே
					மேல்
# 400 கோவூர் கிழார்
மாக விசும்பின் வெண் திங்கள்
மூ_ஐந்தால் முறை முற்ற
கடல் நடுவண் கண்டு அன்ன என்
இயம் இசையா மரபு ஏத்தி
கடை தோன்றிய கடை கங்குலான்		5
பலர் துஞ்சவும் தான் துஞ்சான்
உலகு காக்கும் உயர் கொள்கை
கேட்டோன் எந்தை என் தெண் கிணை குரலே
கேட்டதன் கொண்டும் வேட்கை தண்டாது
தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி		10
மிக பெரும் சிறப்பின் வீறு சால் நன் கலம்
------------- ---------
கலிங்கம் அளித்திட்டு என் அரை நோக்கி
நார் அரி நறவின் நாள்_மகிழ் தூங்குந்து
போது அறியேன் பதி பழகவும்			15
தன் பகை கடிதல் அன்றியும் சேர்ந்தோர்
பசி பகை கடிதலும் வல்லன் மாதோ
மறவர் மலிந்த தன் -----------
கேள்வி மலிந்த வேள்வி தூணத்து
இரும் கழி இழிதரும் ஆர்கலி வங்கம்		20
தேறு நீர் பரப்பின் யாறு சீத்து உய்த்து
துறை-தொறும் பிணிக்கும் நல் ஊர்
உறைவு இன் யாணர் நாடு கிழவோனே
					மேல்



அடிநேர் உரை

# 1 கடவுள் வாழ்த்து
தலைமாலை கார்காலத்தில் மலரும் மணமுள்ள கொன்றைப்பூ, அழகிய
நிறத்தையுடைய மார்பின் மாலையும் அந்தக் கொன்றைப்பூ,
ஏறிச்செல்லும் வாகனம் தூய வெண்மையான காளை, சிறந்த
பெருமை பொருந்திய கொடியும் அந்த காளையே என்று சொல்வர்,
நஞ்சின் கறுப்பு தொண்டையை அழகுசெய்யவும் செய்கிறது, அந்தக் கறுப்புமே
வேதத்தை ஓதும் அந்தணரால் புகழவும்படும்,
பெண்வடிவம் ஒருபக்கம் ஆயிற்று, அந்த வடிவமும்
தன்னுள்ளே ஒடுக்கி மறைக்கவும்படும்,
பிறை நெற்றிக்கு அழகானது, அந்தப் பிறையும்
பதினெட்டுக் கணங்களாலும் புகழவும்படும்,
எல்லா உயிர்களுக்கும் பாதுகாவலாகிய
நீர் இல்லாமல்போவதை அறியாத கமண்டலத்தைக் கொண்ட
தாழ்ந்து விழும் சடையாலும் பொலிந்த, செய்வதற்கு அரிய தவத்தை உடையவனுக்கு
					மேல்
# 2 முரஞ்சியூர் முடிநாகராயர்
மண் செறிவாய் அமைந்துள்ள நிலமும்,
அந்த நிலம் ஏந்திநிற்கும் ஆகாயமும்,
அந்த ஆகாயத்தைத் தடவிவரும் காற்றும்,
அந்தக் காற்றினால் எழுந்த தீயும்,
அந்தத் தீயுடன் மாறுபட்ட நீரும் என்று
ஐந்துவகையான பெரிய பூதத்தினது தன்மை போல
பகைவரைப் பொறுத்தருளுதலும், சிந்திக்கும் அறிவாற்றலில் விசாலமும்
வலிமையும், பகைவரை அழித்தலும், அவர் வணங்கினால் அவருக்கு அருள்செய்தலும் உடையவனே!
உன் கடலில் தோன்றிய ஞாயிறு, மீண்டும் உன்
வெள்ளிய தலை (நுரை) பொருந்திய அலைகளையுடைய மேற்குக் கடலில் மூழ்கும்,
புதுவருவாயை இடையறாது கொண்ட ஊர்களையுடைய நல்ல நாட்டிற்கு வேந்தனே!
வானத்தை எல்லையாக உடையவனே! பெருமானே! நீயே 
ஆடுகின்ற தலையாட்டம் அணிந்த குதிரைகளையுடைய பாண்டவர் ஐவருடன் சினந்து
அவரின் நிலத்தைத் தம்மிடம் எடுத்துக்கொண்ட பொன்னாலான தும்பைப் பூவினையுடைய
கௌரவர் நூற்றுவரும் போரிட்டுப் போர்க்களத்தில் மடியுமட்டும்
பெரும் சோறாகிய மிக்க உணவை இரு படைக்கும் குறைவின்றிக் கொடுத்தவனே!
பால் புளித்துப்போனாலும், சூரியன் இருண்டுபோனாலும்,
நான்கு வேதத்தினது ஒழுக்கம் மாறுபட்டுப்போனாலும்,
மாறுபடாத அமைச்சர், படைத்தலைவர் முதலிய சுற்றத்துடன் குறைவின்றி நெடுங்காலம் புகழுடன் விளங்கி
மனக்கலக்கம் இன்றி நிற்பாயாக, பக்க மலையில்
சிறிய தலையையுடைய குட்டிகளுடன் பெரிய கண்களைக் கொண்ட பெண்மான்கள்
மாலையில் அந்தணர் தம் அரிய கடனாகிய ஆவுதியைப் பண்ணும்
முத்தீயாகிய விளக்கின்கண்ணே தூங்கும்
பொற்சிகரங்களைக் கொண்ட இமயமலையும் பொதிகை மலையும் போன்றே.

# 3 இரும்பிடர் தலையார்
நிறைமதியின் வடிவத்தைப் போன்ற உயர்ந்த வெண்கொற்றக்குடை
நிலைபெற்ற கடலே எல்லையாகக் கொண்ட நிலத்தை நிழல்செய்ய,
பாதுகாக்கும் வீரமுரசம் இழுமென்று முழங்க,
ஆளுகை என்னும் ஆஞ்ஞாசக்கரத்தைச் செலுத்திய ஈரமுடைய நெஞ்சினையும்,
ஒழியாத ஈகைக் குணத்தையும் உடைய பாண்டியர் மரபினனே!
குற்றமற்ற கற்பினையுடைய சிறந்த அணிகலன் அணிந்தவளுக்குக் கணவனே!
பொன்னால் செய்த முகபடாத்தைப் புள்ளிகளைக் கொண்ட நெற்றியில் கொண்ட,
அணுக முடியாத வலிமையையும் மணங்கமழும் மதநீரையும்
கொம்பினையே படைக்கலமாகக்கொண்டு கோட்டைக் கதவைக் குத்தும்,
கயிற்றால் பிணிக்கப்பட்ட கவிழ்ந்த மணிகளைப் பக்கத்தில் கொண்ட,
நீண்ட கையையும் உடைய யானையின் பெரிய கழுத்திடத்தில் இருந்து
விலக்கமுடியாத யமனின் கொலைத்தொழிலுக்குச் சற்றும் இளைக்காத
வலிமையுள்ள கையில் இருக்கும் ஒளிரும் வாளினையுடைய பெரும் புகழ்வாய்ந்த வழுதியே!
நிலமே பிறழ்ந்தாலும் உன் ஆணையாகிய சொல் பிறழாதிருக்கவேண்டும்,
பொன்னால் செய்த வீரக்கழல் அணிந்த காலினையும், பூசிப் புலர்ந்த சந்தனத்தையுடைய
குறுக்கே அகன்ற பரந்த மார்பினையும் உடையவனே!
ஊர்கள் இல்லாதனவும், தப்பிவருவதற்கு கடினமானவையும்,
நீர்நிலை இல்லாதனவும் ஆகிய நீண்ட வெளியில்,
நெடுந்தூரம் பார்க்கத்தக்க இடத்தில் இருந்து, கையைக் கண்மீது கவிழ்த்துப் பார்த்து
குறியில் தப்பாத கொடுமை நிறைந்த மறவர்
அம்பினை ஏவ, அதனால் இறந்தோரின் உடலை மூடிய அண்மைய கற்குவியல்களையுடைய,
திருத்தமான சிறகுகளையும், வளைந்த வாயினையும் உடைய பருந்து இருந்து வருந்தும்
உன்ன மரங்களையுடைய நெருங்க முடியாத பல்வேறாய்ப் பிரியும் வழிகளில்
உன்னை விரும்பிய வேட்கையால் இரவலர்கள் வருவர், அது
அவரின் மனக்குறிப்பை அவர் முகத்தால் அறிந்து அவரின்
வறுமையைத் தீர்த்துவைப்பதில் நீ வல்லவன் என்பதனால்.
					மேல்
# 4 பரணர்
வாள், வெற்றியைத் தருவதால் குருதிக்கறை படிந்தன,
செக்கர் வானத்தின் அழகை ஒத்தன;
கால், போர்க்களத்தைத் தமதாக்கிக்கொள்ள அலைந்ததால் கழல்கள் தேய்ந்துபோயின,
கொல்லும் காளையின் கொம்பினைப் போன்றன;
கேடகங்கள், தைத்த அம்புகளால் துளையுடன் இருப்பன,
(பயிற்சியில்)குறிதப்பாமல் அம்புகள் எய்த இலக்குகள் போன்றன;
குதிரைகளோ, எதிரியைத் தாக்கும் நேரம் பார்ப்பவன், இடமும், வலமுமாகிய இடங்களைக் காட்ட,
கடிவாளம் தேய்த்த சிவந்த வாயை உடைமையால்
தன் இரையின் கழுத்தைக் கவ்விய புலியைப் போன்றன;
களிறுகளோ, கதவை முறித்துக் கண் சிவந்து மோதி
நுனி மழுங்கிய வெண்மையான கொம்புகளால்
உயிரை உண்ணும் கூற்றுவனைப் போன்றன;
நீதான், அசையும் தலையாட்டமுடைய விரைந்து இயங்கும் குதிரைகளுடன்
பொன்னாலான தேர் மீது பொலிவுடன் தோன்றி
பெரிய கரிய கடல் நடுவே உயர்ந்து எழுகின்ற
சிவந்த ஞாயிற்றின் அழகுடன் விளங்குகிறாய்;
நீ அத்தன்மையுடையவனாயிருப்பதால்
தாயில்லாத உண்ணாத குழந்தையைப் போல
ஓயாமல் அழும் உன்னைப் பகைத்தவர் நாடுகள்.
					மேல்
# 5 நரிவெரூஉ தலையார்
எருமை போன்ற கரும் பாறைகள் இருக்கும் இடங்கள்தோறும்
பசுக்களைப் போலப் பரவிக்கிடக்கும் யானைகளை உடையவனே! வலிமையுடன்
காட்டகத்து அமைந்த நாட்டினையுடையவனே! பெருமானே!
நீ ஒருவனே தனித்துச் சிறந்து விளங்குவதால் உன்னிடம் ஒன்று கூறுவேன்,
அருளும் அன்பும் இல்லாமல் நீங்காத
நரகத்தைச் சேர்ந்தவருடன் ஒன்றாமல், உன்னால் காக்கப்படும் நாட்டைக்
குழந்தையைக் கையாள்பவரைப் போல் பேணிப் பாதுகாத்திடுக,
அத்தகைய காவல் அருளுடையது, பெறுவதற்கு மிகவும் அரியது.
					மேல்
# 6 காரிகிழார்
வடக்கிலிருக்கும் பனி தங்கிய நெடிய இமயமலையின் வடக்கும்,
தெற்கிலிருக்கும் அச்சந்தரும் குமரியாற்றின் தெற்கும்,
கிழக்கிலிருக்கும் கரையை மோதுகின்ற சகரரால் தோண்டப்பட்ட கடலின் கிழக்கும்,
மேற்கிலிருக்கும் பழையதாய் முதிர்ந்த பெருங்கடலின் மேற்கும்,
கீழேயிருக்கும், நிலம், வான், சுவர்க்கம் என்ற மூன்றும் சேர்ந்து அடுக்கிய முறையில் முதலாவதான
நீர்நிலையிலிருந்து உயர்ந்து தோன்றும் நிலத்திற்குக் கீழேயும், மேலேயிருக்கும்
ஆனிலையுலகம் எனப்படும் கோ லோகத்திலும் அடங்காத
அச்சமும் புகழும் உன்னுடையதாகி, பெரிய அளவில்
சமமாக ஆராயும் துலாக்கோலின் நடுவூசி போல ஒரு பக்கத்தில்
சாயாது இருப்பாயாக; உன் படை, குடி முதலியன சிறந்துவிளங்கட்டும்;
போர் செய்ய எதிர்த்துவந்த பகைவரின் நாடுகளில்
உனது கடல் போன்ற படை உள்ளே புகுந்து முன்செல்ல, அடர்ந்த புள்ளிகளையும்
சிறிய கண்களையும் உடைய யானைப்படையை தடையின்றி நேரே ஏவி,
பசுமையான விளைநிலப் பக்கத்தையுடைய பல அரிய அரண்களைக் கைப்பற்றி
அந்த அரண்களில் கொள்ளப்பட்ட அழகுபடச் செய்த அணிகலன்களைப்
பரிசிலர்க்கு முறையாக வழங்கி,
தாழ்வதாக நின் வெண்கொற்றக்குடை, முனிவர்களால் துதிக்கப்படும்
முக்கண் செல்வரான சிவபெருமான் கோயிலை வலம்வருவதற்கு;
வணங்குக, பெருமானே உன் மணிமுடி, சிறந்த
வேதங்களை ஓதும் அந்தணர்கள் உன்னை வாழ்த்த எடுத்த கைகளின் முன்னே;
வாடிப்போகட்டும் இறைவனே, உன் தலைமாலை, பகைவரின்
நாடுகளை எரிக்கின்ற மணக்கின்ற புகை தடவிச்செல்வதால்;
தணியட்டும் உன் கோபம், வெண்மையான முத்தாரத்தையுடைய
உன் தேவியரின் சிறுசினம் சேர்ந்த ஒளிமிகு முகத்தின் முன்னே;
இதுவரை வென்ற வெற்றியினால் எழும் இறுமாப்பை வென்று, அவற்றை உன் மனத்துள் அடக்கிய,
குறைவுபடாத கொடைக்குணம் கொண்டு தகுதி மிகுதியும் பெற்ற குடுமியே!
குளிர்ந்த கதிர்களைக் கொண்ட திங்கள் போலவும், சுடுகின்ற தீச்சுவாலைகளைக் கொண்ட
ஒளி பொருந்திய கதிர்களைக் கொண்ட ஞாயிறு போலவும்
நிலைபெறுவாயாக, பெருமானே! நீ இந்த நிலத்தின் மேல்.

# 7 கருங்குழல் ஆதனார்
களிற்றினைச் செலுத்திய கால்களையும்,
வீரக்கழல் உராய்கின்ற திருத்தமான அடியினையும்,
அம்புடன் போரிட்டும், பிறர்க்கு அள்ளித்தருவதற்காகக் கவிந்த கொடை பொருந்திய கையில்
கண்ணைப்பறிக்கும் அழகுடைய வில்லையும்,
திருமகள் பிறரை மறுத்து உறையும் அகன்ற மார்பினையும்,
யானையையும் பெயர்க்கும் மிக்க வலிமையினையும் உடையவனே!
பகலென்றும் இரவென்றும் பாராமல், பகைவரின்
ஊரைச் சுடுகின்ற தீயின் வெளிச்சத்தில் அழுகையும், அரற்றுதலும் கொண்ட ஆரவாரத்திற்கிடையே
கொள்ளையிடுதலை விரும்புகின்றாய்; எனவே, நல்ல பொருள்கள்
இல்லையாகிப்போயின, விரைவாக இயங்குகின்ற தேரையுடைய வளவனே!
குளிர்ந்த நீர் பரந்த ஓசையையுடைய உடைப்புகளை, மண்ணினால் அடைப்பதை விடுத்து
மீனினால் அடைக்கும் புதுவருவாயினையுடைய
பயன் விளங்கும் ஊர்களையுடைய மாற்றாரின் அகன்ற இடத்தையுடைய நாடுகள் -
					மேல்
# 8 கபிலர்
உலகத்தைக் காக்கும் அரசர் உனக்கு வழிபாடு கூறி உன் சொற்படி நடக்க,
இன்பத்தை நுகர விரும்பி, நிலம் யாவர்க்கும் பொதுவானது என்ற சொல்லைப் பொறுக்கமாட்டாமல்
தன் நாட்டின் இடம் சிறியது - அதனை விரிவாக்கவேண்டும் என்னும் ஊக்கம் தன்னை உந்துதலால்
சோர்ந்து போகாத உள்ளத்தையும், சொந்தமாக எதனையும் வைக்க எண்ணாத ஈகைப் பண்பையும்,
பகைவரை வென்று அவரைக் கொல்லும் படையையும் உடைய சேரலாதனை,
எங்ஙனம் நீ ஒத்திருக்கிறாய், விரைவாகச் செல்லும் இயல்புடைய கதிரவனே?
பகற்பொழுதை உனக்கென வரையறுத்துள்ளாய், நிலவு எழும்போது நீ மறைவதால் நீ புறமிட்டுப்போகிறாய்,
தெற்கென்றும், வடக்கென்றும் மாறிமாறி வருகிறாய், மலையில் மறைந்துகொண்டு ஒளிந்துகொள்கிறாய்,
அகன்ற பெரிய ஆகாயத்திலும்
பகற்பொழுதுமட்டும் ஒளிவீசுகிறாய் உன் பலவான கதிர்களை விரித்து.
					மேல்
# 9 நெட்டிமையார்
பசுக்களும், பசுவைப் போன்ற இயல்புள்ள பார்ப்பன மக்களும்,
பெண்களும், நோயாளிகளும், வழிபாட்டுடன்
தென் திசையில் ஆவியாக இருக்கும் மூதாதையர்க்குப் பிதிர்க்கடன் செய்யும்
பொன் போன்ற புதல்வர்களைப் பெறாதவர்களும்,
எம் அம்புகளை விரைவாகச் செலுத்தப்போகிறோம், உம் அரண்களுக்குள் சேர்ந்துவிடுங்கள் என்று
அறநெறியைச் சொல்லும் கொள்கையைப் பூண்ட மறத்தினையுடைய
கொல்கின்ற யானையின் மேல் உயர்த்தப்பட்ட கொடிகள் விசும்பினுக்கு நிழலைச்செய்யும்
எம்முடைய வேந்தனாகிய குடுமி வாழ்வானாக, தம்முடைய முன்னோனான,
சிவந்த தன்மையுள்ள பசும்பொன்னை கூத்தர்க்கு வழங்கிய
முந்நீராகிய கடலின் தெய்வத்திற்கு எடுத்த விழாவினையுடைய நெடியோன் என்பவனின்
நல்ல நீரைக்கொண்ட பஃறுளி என்னும் ஆற்றின் மணலைக்காட்டிலும் பல ஆண்டுகள் - 
					மேல்
# 10 ஊன் பொதி பசும் குடையார்
உன்னை வழிபடுவோரை மிகவும் நன்றாய் அறிந்துவைத்திருக்கிறாய்,
பிறர் மீது பழி சுமத்துவோரின் சொற்களை நம்பமாட்டாய்,
நீ உண்மையாகக் கண்டறிந்த தீமையை ஒருவரிடம் கண்டால்
அதனை நீதிநூல்களுக்குத் தக்கவாறு ஆராய்ந்து அத் தீமைக்குத் தகுந்தவாறு தண்டிப்பாய்,
வந்து உன் பாதத்தை அண்டி உன் முன்னே நின்றால்
தண்டனையைக் குறைப்பாய், முன்னிலும் பெரிதாக அருள்செய்வாய்,
சுவையில் அமிழ்தத்தை வென்று மணக்கும் தாளிப்பு உள்ள சோற்றை
வருபவர்க்குக் குறைவில்லாமல் வழங்குகின்ற பழி தீர்ந்த வாழ்க்கையையுடைய
குலப்பெண்களுடன் காதற்போரிடுவதேயன்றி, பகைவீரரால்
வீரப்போர் புரிதல் இயலாதாகிய, இந்திரவில் போன்ற மாலையை அணிந்த மார்பினனே!
செய்துவிட்டுப் பின்னர் வருத்தப்படாத செயல்களையும், சேய்மையில் விளங்கும் புகழினையும் உடைய
நெய்தலங்கானல் என்னும் ஊரையுடைய நெடியவனே!
உன்னைச் சேரவே நாங்கள் வந்தோம், உன்னைப் பாடிப் போற்றுவோம் பலமுறை.
					மேல்
 



# 11 பேய்மகள் இளவெயினியார்
மென்மையான மயிரையுடைய திரண்ட முன்கையினையும்
தூய அணிகலன்களையும் உடைய அழகு மங்கையர்
வண்டல் மணலில் செய்த பாவைக்குச் சூட
வளைந்த கிளைகளில் பூக்களைக் கொய்து
குளிர்ந்த பொருநை என்னும் அமராவதி ஆற்று நீரில் பாய்ந்து குளிக்கும்
வானை முட்டிய புகழினையும் வெற்றியையும் உடைய வஞ்சி நகரில்
புகழ் வாய்ந்த வெற்றியையுடைய வேந்தனும்
பகைமையாகிய வெம்மையுடைய அரண்களை வென்று
வலிமையுடன் எதிர்த்தவரைப் புறங்கண்டான்;
அவ்வாறு புறங்கண்ட வலிமை மிக்க வேந்தனின்
வீரத்தைப் பாடிய பாடினியும்
அழகுடன் விளங்கும் சிறந்த பல கழஞ்சுப் பொன்னால் செய்யப்பட்ட
நல்ல அணிகலன்களைப் பெற்றாள்;
அந்த அணிகலன்களைப் பெற்ற பாடினியின்
ஏழிசையில் முதலாவதாகிய குரலென்னும் தானத்தில் பொருந்தும் பாடலில் வல்ல பாணனும்
(அசை நிலை)
ஒளிவிடும் நெருப்பில் ஆக்கப்பட்ட பொற்றாமரையாகிய
வெள்ளி நாரால் தொடுத்த பூவைப் பெற்றான்.
					மேல்
# 12 நெட்டிமையார்
பாணர்கள் பொற்றாமரை மலரைச் சூடவும், புலவர்கள்
நெற்றிப்பட்டத்தின் அழகு பொலிந்த மத்தகத்தையுடைய யானையுடனே அலங்கரித்த தேரினில் ஏறவும்
இது அறம் ஆகுமா? ஆற்றலும் மாண்பும் மிக்க குடுமியே!
வேற்றரசரின் நிலத்தை அவர்க்குத் துன்பம்வரும்படி கைப்பற்றி
இன்பமானவற்றைச் செய்கிறாய் உன் பரிசிலரிடத்தில்.
					மேல்
# 13 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
இவன் யார் என்று நீ கேட்டால், இவன்தான்
புலித்தோலால் செய்யப்பட்ட கவசம் சிதையும்படி
எய்யப்பட்ட அம்பு கிழித்த அகன்று உயர்ந்த மார்பினையுடையவன்,
கூற்றம் போன்ற களிற்றின் மேலிருப்பவன்;
அந்தக் களிறோ, கடலில் செல்லும் கப்பலைப் போலவும்,
பல விண்மீன்களின் நடுவே திகழும் திங்களைப் போலவும்,
சுறாமீன் கூட்டத்தைப் போன்ற வாள்வீரர் சூழ்ந்து வர
தமக்குப் பழக்கமான பாகரை அறியாமல், மதம்பிடித்துக்கொண்டது;
கேடு வராமல் இவன் திரும்பிச் செல்லட்டும் -
வயலில் மயில்கள் உதிர்த்த தோகைகளை,
கதிரறுக்கும் உழவர்கள் நெற்கட்டுகளோடு சேர்த்துக் கட்டுகின்ற,
கொழுத்த வயல் மீன்களையும், நன்கு முதிர்ந்த கள்ளினையும் உடைய,
மிகுந்த நீராகிய கடலையே வேலியாகக் கொண்ட, நாட்டிற்கு உரிமையாளன்.
					மேல்
# 14 கபிலர்
கடுமை நிறைந்த, கொல்லும் தொழிலையுடைய யானைகளால்
காவலையுடைய கணையமரத்தை முறித்து
இரும்பினாலான அழகிய அங்குசத்தால்
முன்னால் அவற்றைச் செலுத்தி, பின்னர் அவற்றை வேண்டும் அளவில் நிறுத்தவும்,
குந்தாலியால் நிலத்தை அகழ்ந்து குழியாக அமைந்த அகழியின்
நீர்ப்பரப்பின் ஆழத்தின் உயர்ச்சியைக் குறித்து, அதனிடம் செல்லாமல்
நிமிர்ந்த ஓட்டத்தையுடைய குதிரைகளைத் தாங்கிப் பிடிக்கவும்,
அம்பறாத்தூணி பொருந்திய முதுகினையுடையவனாய், தேரின் மேல் நின்று
வில்லின் வலிய நாண் வடு உண்டாக்குமளவிற்கு அம்புகளைச் செலுத்தவும்,
பரிசிலர்க்குப் பெறுவதற்கரிய அணிகலன்களை அளிக்கவும், தலைவனே!
வலிமையுடையனவாய் இருக்கின்றன, உனது முழங்காலைத்தொடும் பெரிய கைகள்;
புலால் நாறும் சிறந்த ஊன் துண்டத்தை
பூ மணம் கமழும் புகையைக் கொளுத்தி, ஊனையும், துவையலையும்,
கறிச்சோறினையும் உண்டு வருந்தும் தொழிலையன்றி
வேறு தொழிலை அறியாதிருப்பதால், மிகவும்
மெதுவாக இருக்கின்றன, பெருமானே! பெண்டிருக்கு
ஆற்றமுடியாத வருத்தம் தரும் மார்பினையும், உன்னுடன் போரிடவருவோர்க்கு
பெரிய நிலம் போன்ற வலிமையினையும் கொண்டு
போரில் சிறந்து விளங்கும் முருகனைப் போன்றவனே! உன்னைப் பாடுபவரின் கைகள் - 
					மேல்
# 15 கபிலர்
விரைகின்ற தேர்கள் குழிகளையுண்டாக்கின தெருக்களில்
வெள்ளை வாயினைக் கொண்ட கழுதைகளான அற்ப விலங்குகளை ஏரில் பூட்டிப்
பாழாக்கினாய், பகைவரின் அகன்ற இடங்களைக் கொண்ட நல்ல அரண்வெளிகளை;
பறவைகள் சத்தமிடும் புகழமைந்த விளைவயல்களில்
வெண்மையான தலையாட்டம் அணிந்த செருக்குடன் இருக்கும் குதிரைகளின் கவிந்த குளம்புகள் தாவ
தேரினை ஓட்டிச்சென்றாய், உன் பகைவரின் நாட்டினில்;
அசைகின்ற இயல்பினையும், பெரிய கழுத்தினையும்,
பரந்த அடியினையும், சீறுகின்ற பார்வையையும்,
ஒளிவிடும் கொம்புகளையும் உடைய களிற்றை, அவர்களின்
காவல் மிகுந்த குளங்களில் படியச்செய்தாய்;
அப்பேர்ப்பட்ட சீற்றத்தையும், அதற்கேற்ற செயல்களையும் உடையவன் என்பதால்,
பளிச்சிடும் இரும்பால் செய்யப்பட்ட ஆணிகளும் பட்டமும் அறைந்த அழகுமிக்க நெடும் கேடகத்துடன்
நிழலுண்டாக்கும் நீண்ட வேலினை ஏந்தி, பகைவர்
உனது பளீரென்ற படைக்கலங்களையுடைய விரைவான தூசிப்படையின் வலிமையை அழிக்க எண்ணி
ஆசையுடன் வரும்போது, அவர்களின் ஆசை பின்பக்கம் ஓட,
பழியுண்டாக வாழ்ந்தவர் பலரோ? குற்றமில்லாத
நல்ல அற நூலிலும், நால்வகை வேதத்திலும் சொல்லப்பட்ட
அடைவதற்கு அரிய மிக்க புகழையுடைய சமீது, பொரி ஆகிய மேலே தூவப்படும் சிறந்த பொருளுடன்
நெய் மிக்க ஓமப்புகை பொங்கி எழ, பலவாறு மாட்சிமைப்பட்ட
கெடாத சிறப்பையுடைய வேள்வியைச் செய்துமுடித்து
வேள்வித்தூண்களை நட்ட அகன்ற வேள்விச்சாலைகள் பலவோ?
இவற்றில் எது பல? பெருமானே! வார்களைக் கொண்டு
இழுத்துக்கட்டப்பட்ட, வாயில் கரிய சாந்து பூசப்பட்ட முழவையுடைய
பாடினி பாடும் வஞ்சிப்பாடலுக்கு ஏற்ப, வஞ்சிப்போரைப் பற்றி
நினைக்கும் வலிமையினையுடையவனே , உனக்கு.
					மேல்
# 16 பாண்டரம் கண்ணனார்
தன் போர்த்தொழிலில் மாண்புடன் விளங்கும் விரைந்து செல்லும் குதிரைகளுடன்
மேகங்களைப் போன்று கேடகங்களைப் பரப்பி,
போர்முனை கலங்குமாறு முன்னேறிச் சென்று, பகைவரின்
நெல்விளையும் வயல்களைக் கொள்ளையடித்து,
வீட்டுமரங்களை விறகாக்கி,
காவல்மிகுந்த நீர்த்துறைகளில் களிறுகளைப் படுக்கவைத்து,
பகல் என்று சொல்லும்படி மூட்டிய சுடு நெருப்பின் வெளிச்சம்
மறைகின்ற சுடரினைக் கொண்ட ஞாயிற்றின் செக்கர்வானம் போல் தோன்ற,
எதிரிநாடு அழியுமாறு தங்கும் எல்லையில்லாத படையினையும்,
யாரும் துணைக்கு வரவேண்டாத போர் வெற்றியினையும்,
புலால் நாறும் வாளினையும், பூசிப் புலர்ந்த சந்தனம் கொண்ட மார்பினையும்,
முருகனது சீற்றம் போன்ற சீற்றத்தையும் கொண்ட அச்சம் பொருந்திய தலைவனே!
ஒன்றோடொன்று கலந்த வள்ளைப்பூவையும், மலர்ந்த ஆம்பல் பூவையும்
குளிர்ச்சியையுடைய பகன்றைப்பூவையும், பழத்தையுடைய பாகற்பூவையும் உடைய
கரும்பு தவிர வேறு காட்டை அறியாத
பெரிய மருதநிலங்கள் பாழ்படும்படி
காவலையுடைய நல்ல நாட்டை எரியூட்டினாய்,
அஞ்சத்தக்க நல்ல போரைச் செய்வதற்கு
உன் எண்ணத்திற்கேற்ப ஒன்றுபட்டுப் போரிட்டன பெருமானே, உன் களிறுகள்.
					மேல்
# 17 குறுங்கோழியூர் கிழார்
தென்திசையில் குமரி, வடதிசையில் இமயமலை,
கிழக்கிலும் மேற்கிலும் கடல் ஆகியவையே எல்லையாக
இடைப்பட்ட இடத்தின் குன்றுகளும், மலைகளும், காடுகளும், நாடுகளும் என இவற்றை ஆள்வோர்
ஒன்றுபட்டு வழிபாடு மொழிய
தீய செயலைப் போக்கி, செங்கோலைத் திருத்தமாகக் கொண்டு,
நேரிதான இறையால் உண்டு, நடுவுநிலையைச் செய்து,
இனிமையாக உருண்ட ஒளியையுடைய ஆட்சிச்சக்கரத்தால்
நிலம் முழுதையும் ஆண்டோரின் மரபினைக் காப்பவனே!
குலை தாழ்ந்து கொள்ளத்தக்கதாய் அமைந்த தென்னையையும்,
அகன்ற வயல்வெளியையும், மலையாகிய வேலியையும்
நிலவொளி போன்ற மணலையுடைய அகன்ற கடற்கரைச் சோலைகளையும்,
தெளிந்த உப்பங்கழிகளில் தீப்பிடித்தது போன்ற பூக்களையும் கொண்ட
குளிர்ந்த தொண்டி மக்களின் வெற்றி மிக்க வீரனே!
யானையைப் பிடிக்கும் குழியின்மேல் பரவின பொய்மூடியின் பாரம்தாங்கும் சக்தியை மதிக்காமல்
நெடிய குழியினில் அகப்பட்ட
பெருமையும், மிக்க வலிமையும் உடைய,
முதிர்ச்சியுற்ற கொம்பினையுடைய, கொல்லும் களிறு
குழியின் நிலை சரிய அதனைத் தூர்த்து,
தன் இனம் விரும்ப, அதனோடு சேர்ந்தாற்போல,
பொறுப்பதற்கு அரிய வலிமையால் பகைவரை மதியாமல், நீ அடைந்த
பெரும் பின்னடைவினை, பலரும் மகிழும்படியாக
வேறொரு சூழ்ச்சியால்போய் பரந்த உரிமையையுடைய இடத்தின்
உன் சுற்றத்தார் பலரின் நடுவே புகழ்ந்து சொல்லப்படுதலால், 
நீ சிறைப்படும் முன் உன்னிடம் தோற்றவர்கள் தாம் இழந்த உயர்ந்த தம் நிலத்தையும்,
உன்னிடம் சென்ற தம் சிறந்த அணிகலன்களையும், நீ இப்போது வந்துவிட்டதால்
திரும்பப் பெற முடியும் உன் நெஞ்சு தமக்கு உரித்தாகப் பெற்றால் என்று நினைத்தும்,
உன் வரவை எதிர்பாராமல், தம் அரசைக் கைப்பற்றிய பகைவர் எடுத்த கொடியையுடைய உயர்ந்த மதிலையும்
மிக்க காவலையுடைய அகன்ற தமது அரண்களையும்
இனி தாம் உன்னிடம் திரும்ப இழந்துபோவோம், நீ
வெகுண்டு பார்ப்பாய் மிகுதியாக என்று நினைத்தும்,
பகை வேந்தர் உனக்கு ஏவல் செய்யத் தொடங்குவதற்குக் காரணமான உன்
ஆற்றலோடு, உன் புகழையும் உயர்த்திக் கூறி
உன்னைக் காண்பதற்கு வந்திருக்கிறேன், பெருமானே! ஒன்றுசேர்ந்த
மேகங்கள் என்று எண்ணி மருளத்தக்க பல கேடகங்களையும், மலை என்று எண்ணி
வண்டுகள் வந்து தங்கும் பெரிய பலவான யானைகளையும்,
பகைவர் பயப்படும்படியாகப் பெருத்து, கடல் என்று நினைத்து
மேகங்கள் நீரினை முகக்க இறங்கும் படையினையும், நீங்காத
நஞ்சு சுரக்கும் பல்லினையுடைய பாம்புகளின் தலை நடுங்க
இடிக்கும் இடியைப் போன்று முழங்கும் முரசினையும்
குறைவில்லாமல் கொடுக்கும் கொடைப்பண்பையும் கொண்ட குடநாட்டவர் வேந்தனே!
					மேல்
# 18 குடபுலவியனார்
முழங்குகின்ற கடலால் முழுவதும் சூழப்பட்டு
பரந்து கிடக்கின்ற அகன்ற உலகத்தைத்
தம்முடைய முயற்சியால் கைப்பற்றித் தம் புகழை நிலைநிறுத்தி
தாம் ஒருவராகவே ஆண்ட ஆற்றல் மிக்கோரின் வழியில் தோன்றியவனே!
ஒன்றைப் பத்துமுறை அடுக்கிய கோடி என்னும் எண்ணைக் கடைசி எண்ணாகச் செய்த
பெரிய அளவினதாகுக உன் ஆயுள்,
நீர் மேல் தாழ்ந்திருக்கும் குட்டையான காஞ்சிமரத்தின்
பூவினைக் கவ்விப்பிடிக்கும் கூட்டமான வாளைமீன்களையும்,
சிறிய ஆரல் மீன்களையும், பருத்த வரால் மீன்களையும்,
நிறமுள்ள கெடிற்று மீன்களையும் கொண்ட குழிவான கிடங்கினையும்,
வானமே அஞ்சும் திருந்திய நெடிய மதிலையும் உடைய
வளம்பொருந்திய பழைய ஊரினையுடைய வலிமையுள்ள வேந்தனே!
இறந்தபின் போகும் மறுமை உலகத்தில் நுகரும் செல்வத்தை விரும்பினாலும்,
உலகத்தைக் காப்பவரின் தோள் வலிமையைக் கெடுத்து
நீ ஒருவனே தலைவனாக ஆவதை விரும்பினாலும், மிகுந்த
நல்ல புகழை நிலைநிறுத்த விரும்பினாலும், அந்த விருப்பங்களுக்குரிய
தகுதியைக் கேட்பாயாக இப்போது, பெரியவனே!
நீர் இல்லாமல் வாழமுடியாத இந்த உடம்புகளுக்கெல்லாம்
உணவு கொடுத்தவர்கள் உயிரையும் கொடுத்தவர் ஆவர்,
உணவையே முதலாவதாக உடையது அந்த உணவால் ஆகிய உடம்பு,
உணவு என்று சொல்லப்படுவது நிலமும் நீரும் ஆகும்,
அந்த நிலத்தையும் நீரையும் ஒன்றாகப் பெற்றவர்கள், இந்த உலகத்தில்
உடம்பையும் உயிரையும் படைத்தவர் ஆவர்,
விதைத்துவிட்டு மழையை எதிர்நோக்கியிருக்கும் புன்செய்நிலம் இடம் அகன்ற
நிலத்தையுடையதாயினும், அதனை அடைந்து ஆளுகின்ற
அரசனின் முயற்சிக்குப் பயன்படாது, அதனால்,
கொல்லும் போரையுடைய செழியனே! இதனைச் சிறிதாக எண்ணாமல், விரைந்து
நிலம் நெகிழ்வாக இருக்கும் இடங்களில் நீர்நிலைகள் பெருகும்படி
நீரைத் தடுத்து நிறுத்தியவர், இந்த உலகத்தில் தம் புகழையும் நிலைநிறுத்துவார்,
அவ்வாறு நிலைநிறுத்தாதவர் தம் புகழையும் நிலைநிறுத்தாதவரே ஆவர்.
					மேல்
# 19 குடபுலவியனார்
ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த மண் திணிந்த அகன்ற உலகத்தில்,
தமிழ்ப்படை கைகலந்த தலையாலங்கானத்தில்,
நிலைபெற்ற உயிர்கள் பலவாக இருந்தாலும், அவற்றைக் கொள்ளும் கூற்றுவன் ஒருவனே என்பதை
உன்னோடு சீர்தூக்கி ஒப்புமை காணும்படியான வெற்றிதரும் வேலையுடைய செழியனே!
பெரிய புலியைப் பிடிப்பதற்காக வேட்டுவன் எந்திரம் அறிந்து மாட்டிவைத்த
பெரிய கல்லையுடைய அடார் என்னும் கற்பொறியைப் போல் இருக்கும் என்று விருப்பத்துடன்
நான் தழுவினேன் அல்லவா! அச்சத்தால் கலங்கி
மலையிலே தங்கின குருவிக்கூட்டம் போல,
அம்பு சென்று தைத்த பொறுப்பதற்கு அரிய புண்ணையுடைய யானையின்
உள்ளே துளையையுடைய பெரிய கையை அதன் வாயோடு சேர்த்துத் துண்டித்து, அந்த யானை
உழுகின்ற கலப்பையைப் போன்று நிலத்தின் மேல் விழுந்து புரள
வெட்டிப் போர்க்களத்தின் மீது வீழ்த்திய ஏந்திய வாளையுடைய வெற்றிவீரர்களாய்
எம் தலைவனுடன் இருந்தார் எமது புல்லிய தலையையுடைய புதல்வர்கள்
இப்படிப்பட்ட வெற்றி நமக்கும் உண்டோ என்று
முதிய மறக்குடியில் பிறந்த பெண்கள் இன்புற்று மனம்கசிந்து அழ, அதைக் கண்டு வெட்கப்பட்டு
கூற்றுவன் இரங்கிய அச்சம்தரும் போர்க்களத்தில்
எழுவரின் மிகுந்த வலிமையை வென்றவனே! உன்
கழுவப்பட்டு ஒளிரும் முத்தாரம் கிடந்த உன் மார்பை (- நான் தழுவினேன் அல்லவா!)
					மேல்
# 20 குறுங்கோழியூர்கிழார்
பெரிய கடலின் ஆழமும்,
அகன்ற உலகத்தின் பரப்பும்,
காற்று இயங்கும் திசையும்,
எந்தவிதப் பற்றுக்கோடுமின்றி நிலைபெற்ற ஆகாயமும் என்று சொல்லப்படுகின்ற
அவை அனைத்தையும் அளந்து அறிந்தாலும், நீ அளப்பதற்கு அரியவன் -
உன்னுடைய அறிவு, இரக்கம், மிகுந்த பரிவு ஆகியவற்றில்;
சோறு ஆக்கும் நெருப்பின் வெம்மையுடன்,
சிவந்த ஞாயிற்றின் வெம்மையையும் அன்றி
வேறு பகைமையின் வெம்மையை அறியார் உன் ஆட்சியில் வாழ்வோர்;
வானவில்லை அன்றி கொலைசெய்யும் வில்லை அறியார்;
ஏர்ப்படையை அன்றி போர்ப்படையை அறியார்;
போர்செய்யும் திறமையை அறிந்த வீரருடனே பகைவர் மாய, அந்தப்
பகைவரின் மண்ணைக்கொண்டு உண்ணும் தலைவனே! உன் நாட்டிலுள்ள
சூல்கொண்ட மங்கையர் வேட்கையினால் உண்டால் அன்றி
பகைவர் உண்ணாத அரிய மண்ணினை உடையவனே!
அம்புகள் வேலையின்றி இருக்கும் காவல் மிகுந்த அரணையும்
அறம் நிலைபெற்ற செங்கோலையும் உடையவன் நீ;
புதுப்பறவைகளின் வரவு, பழைய பறவைகள் நீங்குதல் ஆகிய தீய சகுனங்கள் என்ன நேர்ந்தாலும்
மனம் சஞ்சலப்படாத சேமமாகிய பாதுகாவலை உடையவன்;
நீ அத்தகையவனாக இருப்பதினால்
உலகத்து நிலைபெற்ற உயிர் எல்லாம் உனக்கு அஞ்சும்.
					மேல்
 



# 21 ஐயூர் மூலங்கிழார்
உன்னைப் பாடுகின்ற புலவர்களின் புலைமையின் எல்லையைக் கடந்த புகழ்மிக்க தலைவனே!
நிலத்தின் எல்லையைக் கடந்து ஆழமான இடத்தையுடைய அகழி,
வானத்தைத் தொடுவது போன்ற உயர்ந்த மதில், வானத்தில்
மீன்கள் பூத்துக்கிடப்பதைப் போன்ற வடிவையுடைய சூட்டு என்னும் கோட்டையின் ஏவறைகள்
ஞாயிற்றின் கதிர்களும் நுழையமுடியாதபடி நெருங்கி வளர்ந்த மரங்கள் செறிந்த காவற்காடு,
நெருங்க முடியாத சிற்றரண்கள் ஆகியவற்றால் சூழப்பட்ட கானப்பேர் எயில் என்னும் அரணை (நீ கைப்பற்ற)
வலிமையான கைகளையுடைய கொல்லனால் செந்தீயில் இடப்பட்ட
இரும்பு தன் வெப்பத்தால் உறிஞ்சிக்கொண்ட நீரினை மீட்பதைக்காட்டிலும் மீட்பது அரிது என்று
வேங்கைமார்பன் வருந்தும்படி, ஒவ்வொருநாளும்
போரிடும்போதெல்லாம் உடைத்துச்சூடியபின் தழைத்த தும்பையையுடைய, புலவர்கள்
பாடுகின்ற துறைகள் எல்லாம் முழுவதும் முடிந்துவிட்ட, வெற்றியினையுடைய வேந்தனே!
உன்னை மதிக்காத பகைவர் தம் பெயருடனே மாய்ந்துபோக,
வெற்றிப்புகழுடனே விளங்கிப் பொலிக உனது வேல்.
					மேல்
# 22 குறுங்கோழியூர் கிழார்
தொங்கிக்கொண்டு அசைகின்ற தும்பிக்கையுடனே, தலை நிமிர்ந்த நடையை உடையன;
மாறிமாறி ஒலிக்கும் மணியுடனே, உயர்ந்த கொம்பினை உடையன;
பிறை போன்று இடப்பட்ட மத்தகத்துடனே, சினம் பொருந்திய பார்வையை உடையன;
பரந்த அடியுடனே, பெரிய கழுத்தை உடையன;
தேனடை கலைந்த மலையைப் போல
தேனீக்கள் ஆரவாரிக்கும் மணக்கும் மதநீருடன்
புண்ணிலிருந்து வடியும் நீருடன் பெரிய தலையை உடையன;
இப்படிப்பட்ட வலிமை மிகுந்த இளங்களிறுகள்
கம்பத்தை ஒட்டி நின்ற நிலையிலேயே அசைந்துகொண்டிருக்க,
பக்கத்தில் நின்று கதிர்களைப் பரப்பும்
வானத்தில் இருக்கும் திங்கள் போன்ற
முத்துமாலையையுடைய வெண்கொற்றக்குடையின் நிழலில்
தம் பக்கத்தில் வாள் இல்லாதார் அக்குடையே காவலாக உறங்க;
அசைந்தாடும் செந்நெற்கதிரால் வேயப்பட்ட
மெல்லிய கரும்புகளே கழைகளாகக் கட்டப்பட்ட ஒருங்குபட்ட கூரை
விழா எடுத்து முடித்த இடம் போல
பல்வேறுபட்ட அழகுடன் விளங்க,
குற்றிக்கொண்டே இருக்கும் உலக்கையொலியுடன்
மிக்க ஆரவாரத்தையுடைய அகன்ற இடத்தில்,
பொன்னால் செய்யப்பட்ட இதழ்களையுடைய பசும் தும்பையுடன்,
மேலே ஆடுகின்ற தலையையுடைய பனந்தோட்டைச் செருகி
சினம் கொண்ட வீரர் வெறியாடும் குரவைக் கூத்தின் ஒலி
ஓதத்தையுடைய கடல் ஒலி போல கிளர்ந்து பொங்க,
இன்ன இடம் என்று பாராமல், எங்கும் பரந்து கிடக்கும்
அகன்ற பாசறையின் காவலனே!
பகையரசர் பணிந்து தந்த திறையால்
தம்மைச் சேர்ந்தவருடைய சுற்றத்தை நிறைக்கும்
உயர்ந்த கொல்லிமலையோரின் கொலைத்தொழில் மிக்க பொருநனே!
யானையின் பார்வையைப் போன்ற பார்வையைக் கொண்ட வெற்றியை விரும்பும் சேய் என்பவனே!
வாழ்க நீ பெருமானே! உன் எல்லையில்லாத செல்வத்தை
உன்னைப் பாடியதால் விளங்கிய செம்மையான நா,
பின்னர் பிறர் புகழைச் சொல்லாதவண்ணம்
தனக்கென வைத்துக்கொள்ளாது பிறர்க்குக் கொடுக்கும் ஆற்றல் மிக்க எம் வேந்தனே!
மாந்தரஞ்சேரல் இரும்பொறை பாதுகாத்த நாடு
தேவர் உலகத்தைப் போன்றது என்று பிறர் சொல்லக் கேட்டு வந்து
என் கண்ணுக்கு இனிதாகக் கண்டேன், பெருமானே! வெறுப்பற்ற முயற்சியுடன்
வேற்று நாட்டில் சென்று தங்கும் படைகளுடன்
உன் நாட்டில் சோறு மிகுதியாகச் செயல்படுவாய், ஏனெனில் நீ சோம்பலில்லாதவன்.
					மேல்
# 23 கல்லாடனார்
உள்கூடு இல்லாத வலிமையான வயிரம் பாய்ந்த கம்பத்தில் கட்டிக்கிடப்பதை வெறுத்து
களிறுகள் சென்று படுத்துக்கொண்டதாலும், நீர் உண்பதாலும் கலங்கிய நீர்த்துறையையும்,
கார்காலத்து மணமுள்ள கடம்பின் பச்சை இலையினாலான மாலையினையுடைய
சூரபன்மனைக் கொன்ற முருகனின் கூளிச் சுற்றத்தைப் போன்ற உன்னுடைய
கூர்மையான நல்ல அம்பினையும் வளைந்த வில்லையும் உடைய மறவர்கள்
தமக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு, வேண்டாமற்போட்டு மீந்துபோனதைப்
பகைவர் பயன்படுத்தமுடியாதபடி சிதறிப்போட்ட நிலங்களையும்,
நன்றாக வடிவமைக்கப்பட்ட கோடாலி வெட்டுவதால், ஊர்கள்தோறும்
காவல் மரங்கள் சாய்க்கப்பட்ட சோலைகளையும், பரந்த நகரங்களில்
சிறந்த தொழில்திறம் வாய்ந்த நல்ல இல்லங்களில் விரும்பும் சமையல் தீயைக் கெடுக்க
பெரும் தீ முழங்கிய பக்கத்தையும் பார்த்துப்
பகைவர் வெட்கப்படும்படியாக நாள்தோறும் அவர் நாட்டுக்குள் முன்னேறிச் சென்று
இன்னமும் இத்தன்மையுள்ள பலவற்றை இவன் செய்வான், எவரும்
தன்னை நெருங்கமுடியாத செயல்தெளிவுடையோன் என்று எண்ணும்படியாக,
பாரம் தாங்காமல் நிலமே நெளியும்படியாகக் கூடிய பெரும் படையினையுடைய
தலையாலங்கானத்தின் போரை எதிர்நின்று கொன்ற
காலனைப் போன்ற வலிமையினை உடையவனே! உன்னைக் காண்பதற்கு வந்தேன்,
கொம்பு இழந்த அழகிய ஆண்மான் புலிவசம் அகப்பட்டதாக,
சிறிய குட்டியை அணைத்துக்கொண்ட துள்ளுகின்ற நடையினையுடைய மென்மையான பெண்மான்
பூளைச்செடி ஓங்கி வளர்ந்த அஞ்சத்தக்க பாழ்பட்ட நிலத்தில்
வெண்மையான வேளைப்பூவைக் கொறிக்கும்
ஆள் நடமாட்டம் இல்லாத அரிய காட்டு வழியில் - (உன்னைக் காண்பதற்கு வந்தேன்,)
					மேல்
# 24 மாங்குடி மருதனார்
நெல் அறுக்கும் திறம் மிக்க உழவர்கள்
எரிக்கும் சூரியனின் வெயிலை வெறுத்தால்
தெளிந்த கடல் அலைகளின் மேலே பாய்கின்ற - 
உறுதியான படகினை உடைய வலிமை மிக்க மீனவர்கள்
வெம்மையையுடைய கள்ளைக் குடித்து
மெல்லிய குரவைக்கூத்திற்கு ஏற்ற தாளத்துடன் ஆடுகின்ற - 
கடலிலிருந்து தெறித்து விழும் நீர்த்திவலைகளால் தழைத்துவளர்ந்த தேன் சொட்டும் புன்னையின்
மெல்லிய பூங்கொத்துக்களைத் தலைமாலையாய் சூடிய ஆண்கள்
ஒளிரும் வளையல்களை அணிந்த பெண்களுக்கு அக் குரவை ஆட்டத்தில் தம் தலைக்கையைத் தருகின்ற - 
வண்டுகள் மொய்ப்பதினால் மலர்ந்த குளிர்ந்த மணமுள்ள கடற்கரைச் சோலையில்
கடல்முள்ளிப்பூவால் செய்த மாலையை அணிந்த ஒளிரும் வளையல்களை அணிந்த பெண்கள்
பெரிய பனைமரத்தின் நுங்கின் நீரும்,
மென்மையான கரும்பின் இனிய சாறும்,
உயர்ந்த மணல்மேட்டில் கூட்டமாக இருக்கும் தென்னை மரத்தின்
இனிய இளநீருடன் சேர்த்துக் கலந்து,
இந்த மூன்று நீரையும் குடித்து கடலுக்குள் பாய்ந்து விளையாடும்
கொடுத்துத் தாங்கவேண்டாத பல மக்களும் வாழும் நல்ல ஊர்கள் நிறைந்த
தனக்கென வைத்துக்கொள்ளாத ஈகைக்குணமுடைய பெரிய வேள் அரசனாகிய எவ்வியின்
நீர் பாயும் மதகுகளையுடைய - மிழலைக்கூற்றம் என்னும் ஊருடன், வயல்களில்
கயல் மீன்களை மேயும் நாரைகள் வைக்கோல்போரில் தங்கும்,
பொன்னாலான முகபடாம் அணிந்த யானைகளையுடைய பழைய முதிர்ந்த வேளிரது
திரண்ட நெல்லினையுடைய முத்தூற்றுக்கூற்றம் என்ற ஊரினையும் கைப்பற்றிய
வெற்றி பொருந்திய உயர்ந்த குடையினையும், கொடியால் அழகுபெற்ற தேரினையுமுடைய செழியனே! 
நின்று நிலைப்பதாக உன் பிறந்த நட்சத்திரம், நில்லாது
பட்டுப்போவதாக உன் பகைவரின் நட்சத்திரங்கள்,
உன்னுடைய பழையதாய் மூத்த உயிரைவிட, உயிருடன் விளங்கி
முதிர்ந்த உடலைப் போன்ற உன்
வெற்றியையுடைய குடியின் பழைமையும் சிறப்பும் உடைய குலத்தில் பிறந்த
வாட்போரால் வாழ்பவர் உன் முயற்சியின் வலிமையை வாழ்த்த,
இரக்கும் பரிசிலர் உன் கொடைப்பண்பை எடுத்துச்சொல்ல,
ஒளிரும் வளையணிந்த மகளிர் பொன்னாலான கலங்களில் ஏந்திக்கொணர்ந்த
குளிர்ந்த மணங்கமழும் மதுவைக் கொடுக்க அதனை உண்டு, மகிழ்ச்சி மிகுந்து
அப்படி இனிதாக ஒழுகுவாயாக, பெருமானே! அந்த ஒழுக்கத்தில் நடக்க
வல்லவர்களையே வாழ்ந்தோர் என்று சொல்வர், பழைய புகழுடன்
பரந்த இடத்தையுடைய உலகத்தில் தோன்றி, (அப்புகழ்)
பரவும்படி ஒழுகாமல், நின்று மாய்ந்தோர் பலர் - (அவர் வாழ்ந்தார் எனப்படார்)
					மேல்
# 25 கல்லாடனார்
மீன்கள் விளங்கும் வானத்தில் பரவியிருக்கும் இருள் அகன்றுபோகும்படி,
விரைவுடன் செல்கின்ற முறைமையினையுடைய தன் இயல்பிலிருந்து வழுவாமல்
வலிய வெம்மையைக் கடுமையாகக்கொண்ட அச்சம் பொருந்திய ஞாயிறு
ஒளி விளங்கும் திங்களோடு, நிலத்தில் விழுந்ததைப் போன்று
பகைத்துக்கொள்ளமுடியாத ஆற்றல்கொண்ட வஞ்சினம் கூறும் (இரண்டு பெரிய)வேந்தர்களை
வீரர் புண்படுவதற்கு அஞ்சாத போர்க்களத்தில் மடியச் செய்து,
அவர்களின் வாரால் பிணிக்கப்பட்ட முரசங்களைக் கைப்பற்றிய போழுது,
நின்ற நிலையிலேயே உன்னைச் சூழ்ந்த வீரரைத் தாக்கியபோது திண்மையான பொருத்துவாய் கழன்று
சிதைவுறாமல் பிழைத்தது உன் வேல், செழியனே!
முலைகள் பொலிந்துவிளங்கும் தம் மார்பகம் வருந்துமாறு அடித்துக்கொண்டும்
அறிவு மயங்கியும் அளவற்ற அழுகையால் ஆரவாரித்தும்
பளிச்சென்ற நெற்றியையுடைய மகளிர் கைம்மை நோன்பினை மேற்கொள்ள,
ஒளிரும் ஆற்றின் கருமணல் போன்ற நெளிவுகளைக் கொண்ட அழகிய மென்மையான
குவிந்த கரிய கூந்தலைக் கொய்வதைக் கண்டு - (நீ போரை நிறுத்தியதால், சிதைவுறாமல் பிழைத்தது உன் வேல்
					மேல்
# 26 மாங்குடி மருதனார்
பெரிய கடலின் மிக ஆழமான இடத்தில்
காற்றால் தள்ளப்பட்ட மரக்கலம் (நீரினைக் கிழித்துக்கொண்டு செல்வது) போல
களிறு உட்புகுந்து (போர்வீரர் சிதறி ஓடுவதால்) போர்க்களத்தை அகலமாக்க,
அவ்வாறு களத்தை அகலச்செய்த பரந்த இடத்தில்
ஒளிர்கின்ற இலையையுடைய வேலை ஏந்தி,
மன்னர் மடிய போரில் கலக்கி,
புகழ் மிகும்படி பகைவரின் முரசுகளைக் கைப்பற்றி,
மணிமுடிதரித்த மன்னர் தலையை அடுப்பாகக் கொண்டு,
நீராய் ஓடும் குருதியை உலைநீராகக் கொண்டு
வீரவளை அணிந்த வீரரின் வெட்டுண்ட தோளையே துடுப்பாகக் கொண்டு துழாவிச் சமைத்த உணவால்
போர்க்களத்தில் களவேள்வி செய்த கொல்லும் போரையுடைய செழியனே!
விசாலமான அறிவையும், ஐம்புலனும் அடங்கிய விரதங்களையும்
நான்கு வேதங்களையும் உடைய அந்தணர் சுற்றியிருக்க
மன்னர்கள் ஏவல் செய்ய. நிலைத்த
வேள்வியைச் செய்துமுடித்த தப்பாத வாளினையுடைய வேந்தனே!
தவம் செய்தவர் உன் பகைவர், உனக்கு
எதிரிகள் என்னும் பெயரினைப் பெற்று
உன்னுடன் போரிட இயலாதவராய் இருந்தாலும் மேலுலகத்தில் சென்று வாழ்கின்றவர் - (தவம் செய்தவர்)
					மேல்
# 27 உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
சேற்றில் வளரும் தாமரை தந்த, ஒளிரும் நிறத்தையுடைய
நூற்றுக்கணக்கான இதழ்களைக் கொண்ட வரிசையைக் கண்டது போன்ற
ஏற்றத்தாழ்வு இல்லாத சிறந்த குடியில் பிறந்து
அரசுகட்டில் வீற்றிருந்தோரை நினைத்துப்பார்க்கும்போது
புகழ்ச்சியான சொற்களும், புலவர் பாடும் பாட்டுகளும் உடையோர் சிலரே,
தாமரை இலையைப் போலப் பயனின்றி இறப்பவர் பலரே!
புலவரால் பாடப்பெறும் புகழினை உடையோர் வானவெளியில்
வலவன் ஏவா வானவூர்தியை
அடைவர், தாம் செய்யும் நற்செயல்களை முடித்த பின் என்பார்கள் என்று சொல்லக்
கேட்டிருக்கிறேன், என் தலைவனே! சேட்சென்னியே! நலங்கிள்ளியே!
பெருகின ஒன்று தேயும் என்பதையும், தேய்ந்த ஒன்று பெருகும் என்பதையும்,
பிறந்த ஒன்று மாயும் என்பதையும், மாய்ந்த ஒன்று பிறக்கும் என்பதையும்,
கல்வியால் அறியாதவரும் நன்கு அறிந்துகொள்ளும்படி காட்டி
திங்களாகிய தெய்வம் இயங்குகின்ற உலகத்தில்
ஆற்றல் இல்லாதவர் என்றாலும், ஆற்றலுள்ளவர் என்றாலும்
வறுமையால் வருந்தி வந்தவரின் வயிற்றைப் பார்த்து
அவர் மீது இரக்கம்கொள்வதில் வல்லவனாக இரு, இரக்கம் இல்லாதவராய்
கொடுக்காமல் இருப்பதில் வல்லவராய் இருக்கட்டும்
குறைவில்லாத ஆற்றல் மிக்க உனக்குப் பகையாக எதிர்த்துநிற்போர்.
					மேல்
# 28 உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
மனிதப் பிறப்பில், சிறப்புகள் இல்லாத பார்வையற்றோரும், உருவமாக அமையாத தசைத்திரளும்
கூனர்களும், குட்டைவடிவினரும், பேசமுடியாதோரும், காதுகேளாதோரும்,
விலங்கு வடிவம் கொண்டவரும், புத்தி பேதலித்தவர்களும் என்று உலகத்தில் உயிர்வாழ்வார்க்கு
எட்டுவகைப்பட்ட எச்சங்கள் எனப்படும் குறைவுகள் ஆகியவை எல்லாம்
பேதைத்தன்மையுடைய பிறப்புக்களேயன்றி, அவற்றால் பயன் எதுவும் இல்லை என்று
முற்காலத்திலும் அறிந்தவர்கள் சொல்லிப்போனார்கள், மேலும்
அந்தப் பயன்களின் கூறுபாடுகளே நான் உரைக்க வந்தது,
வட்டமான வரிகளையும், சிவந்த புள்ளிகளையும் கொண்ட காட்டுக்கோழிச்சேவல்
தினைப்புனம் காப்போரைத் துயிலெழுப்பக் கூவும்
காட்டிலுள்ளோர் உன் பகைவர், நீயோ
கரும்புக் காட்டுக்கு வெளியேநின்று கேட்கும் மக்களுக்கு, அறம் கருதி, உள்ளே இருப்போர்
பிடுங்கி எறிகின்ற கரும்பின் தூக்கியெறியப்பட்ட கழை, தாமரையின்
அழகிய பூக்கும் நிலையிலுள்ள மொட்டுக்களைச் சிதைத்து விழுந்ததாக, கூத்தர்களின்
ஆடுகளம் போன்று காட்சியளிக்கும் உள்நாட்டில் இருக்கிறாய்,
அதனால் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும்
செய்வதற்குப் பயன்படும் உன் செல்வம், பெருமானே!
பயன்படாதென்றால் அது உன்னைக் காக்காததே!
					மேல்
# 29 உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
நெருப்பினால் சுட்டு ஆக்கப்பட்ட தகடுகளால் செய்த பொற்றாமரைப் பூவுடன்,
மெல்லிதாகத் தட்டி கம்பியாகச் செய்த நூலில் இட்டு
அலங்கரித்தல் தொழிலால் பொலிந்த பொன்னால் ஆன நறிய மாலையை
கலைந்துகிடக்கும் மயிரையுடைய கரிய தலை பொலிவுபெறச் சூடி
பாணர்கள் சூழ்ந்திருப்பாராக உன் நாளோலக்கம் என்னும் காலை அத்தாணி இருப்பில்,
பாணர்கள் சூழ்ந்திருப்பது முடிந்த பின்னால், பெண்களின்
தோள்கள் சூழ்ந்திருப்பதாக, உன்னுடைய சந்தனம் பூசிக் காய்ந்திருக்கும் மார்பினில், எப்போதும்
வெறுப்பே இல்லாத உன் மாளிகையின் முற்றத்தில் இனிமையாக முரசுகள் முழங்க
கொடியவரைத் தண்டித்தல், தகுதியுடையோருக்கு அருள்செய்தல் ஆகிய
இடையறாத நீதிமுறையில் சோம்பல் இல்லாதவன் ஆகி
நல்வினையின் நன்மையும், தீவினையின் தீமையும்
இல்லையென்று சொல்லுவோரை உறவாகக் கொள்ளாதிருப்பாயாக,
நெல் விளையும் வயல்களில் வந்து படியும் பறவைகளை ஓட்டுவோர்
தானாக விழுந்த பனங்கருக்கை விறகாக ஆக்கி, கழியிலிருக்கும் மீனைப் பிடித்துச் சுட்டு
விரும்பத்தக்க கள்ளைக் குடித்து முடித்தும் அது போதாதவராய், தென்னையின்
இளநீர்க் காய்களை உதிர்ப்பர், அப்படிப்பட்ட வளம் மிகுந்த நல்ல நாட்டினைப்
பெற்றவர்களாய் மகிழும் உன் படையினர்,
உன் பகைவர் வாழ்வது போன்ற, இரக்கம் தோன்ற
கூவை இலையால் மூடிய நான்கு கால்களைக் கொண்ட பந்தலாகிய
சிறிய படைவீட்டில் வாழும் வாழ்க்கையிலிருந்து நீங்கட்டும், உன்னை நாடி வருபவர்க்கு
உதவி செய்யும் நட்போடு கூடிய குணத்தையுடைய 
முறைமையை உடைத்தாகுக உனது தொழில், விழாக்களின்போது
கூத்தர் வேறுவேறான ஒப்பனையுடன் தோன்றும் காட்சிபோன்று, முறைமுறையே தோன்றி
இயங்கி இறந்துபோகின்ற இந்த உலகத்தில் பொருந்திய
மகிழ்ச்சியை அடையட்டும் உன் சுற்றம்,
புகழை அடையட்டும் நீ பாதுகாத்த பொருள்.

# 30 உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
சிவந்த ஞாயிறு செல்லும் பாதையும்,
அந்த ஞாயிற்றின் இயக்கமும்,
அந்த இயக்கத்தால் சூழப்படும் வானமண்டிலமும்
காற்று செல்லும் திசைகளும்,
எந்த ஆதாரமும் இன்றி தானே நிற்கின்ற ஆகாயமும் என்று இவற்றை
அங்கங்கே போய் அளந்து அறிந்தவர்கள் போல ஒவ்வொருநாளும்
இப்படி இருக்கும் என்று சொல்வோரும் இருக்கின்றனர், இவ்வனைத்தையும்
அறியும் அறிவாலும் அறியாத அடக்கத்தையுடையவனாக
யானை தன் கன்னத்துக்குள் அடக்கிவைத்த எறியும் கல்லைப்போல
மறைந்திருக்கும் வலிமையை உடையவனாதலால், உனது திறம் வெளிப்பட
எங்ஙனம் பாடுவர் புலவர்? பாய்மரக்கம்பத்துடன்
அதன் மேல் கட்டப்பட்ட பாயினைச் சுருட்டாமல், அதன் மேற்பாரத்தையும் குறைக்காமல்
ஆற்றுமுகத்தில் புகுந்த பெரிய மரக்கலத்தை, அதனைச் செலுத்தத் தகுதியில்லாதோர்
இடைப்பட்ட பெரிய வழியிலேயே இறக்கிவிட நேரும்
கடலால் வரும் பல பண்டங்களையுடைய நாட்டை உடையவனே! 
					மேல்
 




# 31 கோவூர்கிழார்
சிறப்புடைய மரபினால், பொருளும் இன்பமும்
அறத்தின் பின்னே அமையும் தோற்றம் போல
சேர பாண்டியரின் இரண்டு குடைகளும் பின்னே நிற்க, ஓங்கிய உனது ஒரு குடை
நிறம் பொருந்திய மதியினைப் போல உயர்ந்து தொலைவிலும் விளங்குமாறு,
நல்ல புகழ்மீது கொண்ட வேட்கையை விரும்பி வெற்றிதரும் போரைச் செய்ய
பாசறைவீட்டிலன்றி உன் அரண்மனையில் இருப்பதற்கு உடன்படமாட்டாய்;
தம் கொம்புகளின் முனையின் முகம் மழுங்கிப்போகுமாறு பாய்ச்சி, பகைவரின்
காவல் மிக்க மதிலைக் குத்தும் உன்னுடைய யானைகள் அடங்கமாட்டா;
போர் என்று சொன்னால் மிக்க விருப்புடன் கேட்கும் வீரக்கழலை அணிந்த மறவர்கள்
காடுகள் இடையே கிடக்கும் நாடுகள் மிக்க தொலைவிலுள்ளன,
செல்லமாட்டோம் என்று சொல்லமாட்டார், ஆரவாரம் மிக்க
விழாக்களை உடைய அங்குள்ள பகைவரின் நாட்டில் தங்கிவிட்டு,
கிழக்குக்கடல் பின்னே இருக்க, மேற்குக்கடலின்
வெண்மையான நுரையினைக் கொண்ட அலைகள் உன் குதிரையின் குளம்புகளை மோத
வலப்பக்கமாக வந்தாலும் வருவாய் என்று அங்கலாய்த்து
நெஞ்சில் நடுங்கும் அவலம் பரவ
துயிலாத கண்ணையுடையன ஆயின வட புலத்து அரசுகள்.
					மேல்
# 32 கோவூர்கிழார்
நம் சுற்றத்தின் சமையல் கலங்களை நிறைக்கும் அளவிற்கு, அதற்கு விலையாக, நீண்ட கொடியைக் கொண்ட
சேரரின் வஞ்சிமாநகரையும் தருவான் (சோழவேந்தன்); அது ஒன்றுதானா?
நிறமுடைய கலவை பூசிய வளைந்து இறங்குகின்ற பெரிய தோள்களைக் கொண்ட
பளிச்சிடும் நெற்றியுள்ள விறலியர் பூவிற்கு விலையாகப் பெறுக என்று
மாடங்களுள்ள பாண்டியரின் மதுரையையும் தருவான்; நாம் எல்லாரும்
அவனைப் பாடுவோமாக! வாருங்கள்! பரிசில் மக்களே!
தொன்மையான நில உரிமையைக் குறிப்பிட்டுச் சொன்னால், நல்ல அறிவையுடைய
குயவரின் சிறுவர்கள் பானை வனையும் சக்கரத்தின் நடுவில் வைத்த
பச்சை மண்ணின் கனத்த திரள் (அச் சிறுவர்களின் எண்ணம் போல உருக்கொள்வது)போல, அவன்
மனத்துள் கொண்ட முடிவையே கொண்டது இந்த குளிர்ந்த மருத நிலத்தைக் கொண்ட நாடு.
					மேல்
# 33 கோவூர்கிழார்
காட்டில் வாழும் வாழ்க்கையையுடைய, சினம் பொருந்திய நாயையுடைய வேடன்
மானின் தசையை எடுத்துவந்து கொடுத்த நார்ப்பெட்டியும், இடையர் பெண்
தயிர் கொண்டுவந்த பெரிய குடமும் நிறையும்படியாக
உழுதுண்டு வாழ்பவரின் பெரிய இல்லங்களில் இருக்கும் பெண்கள்
குளத்தின் அருகே விளைந்து களத்தில் அடிக்கப்பட்டுக் கொண்டுவந்த வெண்ணெல்லை
முகந்து கொடுக்க, பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் திரும்பும்
தென்திசைப் பொதிகைமலையையுடைய பாண்டிய நாட்டிலுள்ள 
ஏழு கோட்டைக் கதவுகளை அழித்துக் கைப்பற்றி, உன்
பெரிய வாயையுடைய புலிச்சின்னத்தைப் பொறிக்கும் ஆற்றல்பெற்றவனே!
உன்னைப் பாடும் புலவர் நீ படையெடுத்துச் செல்வதைப்பாட, படைவீரர்கள்
பூந்தாதுக்களே சாணம் தெளித்ததைப் போன்றிருக்கும் தெருக்களையுடைய பாசறையில் பொலிவுடன் விளங்க
காயாத பச்சிலையை இடையிடையே வைத்துத் தொடுத்த
மலராத மொட்டுக்களையுடைய சரத்தின் பந்தைக் கண்டது போன்ற
தசையுடன் சேர்த்த பெரும் சோற்றுத் திரளைப் பாணரின் சுற்றம் உண்ணும்படி செய்யும்
பெருமையையுடையது உன் கடும் போர்முனையாகிய பாடிவீடுகள்,
கைத்திறம் மிக்கவன் செய்த வரையப்பட்ட அழகுடைய
அல்லிப்பாவைகள் அல்லியம் என்னும் கூத்தை, ஆண்,பெண் என இருவராக ஆடும் அழகினைப் போன்ற
அன்புமிக்க காதலர் இருவர் மட்டுமேயல்லாமல், நடுச்சாமத்தில்
தனியாக ஒருவன் நடமாடாத குளிர்ந்த மலர்களையுடைய சோலையில்
நடப்பதற்கு இனிய மணல் திணிந்த புதிய பூக்களையுடைய அரங்குகளின்
வாயிலைக் கொண்ட மேல்தளம் இருக்கும் வீடுகள்தோறும் செம்மறியாட்டுக்கிடாயை அறுக்க,
நீ அவ்விடத்தில் எடுத்த விழாக்களைக்காட்டிலும் பல - (உன் கடும் போர்முனையாகிய பாடிவீடுகள்)
					மேல்
# 34 ஆலத்தூர் கிழார்
பசுவின் மடியை அறுத்த அறம் இல்லாதவர்க்கும்,
மாட்சி மிக்க அணிகலனை அணிந்த மகளிரின் கருவினைச் சிதைத்தோர்க்கும்
பார்ப்பனருக்குத் தீமை செய்த கொடுமையானவர்க்கும்
அவர் செய்த பாவத்தைப் போக்கப் பிராயச்சித்தம் உண்டு எனவும்,
பூமி தலைகீழாய்ப் புரண்டாலும், ஒருவன்
செய்த நன்றியை அழித்தவர்க்கு உய்வு இல்லை எனவும்
அறநூல்கள் கூறுகின்றன, ஆய்ந்தெடுத்த ஆபரணங்களை அணிந்தவளின் கணவனே!
காலையாகிய அந்திப்பொழுதும், மாலையாகிய அந்திப்பொழுதும்
புறாவின் கருமுட்டையைப் போன்ற புன்செய் நிலத்து வரகு அரிசியை
பாலை ஊற்றிச் சமைத்த சோற்றைத் தேனோடு கலந்து,
குறிய முயலின் கொழுத்த சுட்ட இறைச்சியைத் தின்ற என் சுற்றத்தோடு கூட
இலந்தை மரம் உயர்ந்து நின்ற அகன்ற இடமுள்ள பொதுவிடத்தில்
எதையும் மறைக்காத உள்ளத்துடன், வேண்டிய சொற்களை மீண்டும்மீண்டும் கூறி
திரண்ட கொழுத்த சோற்றினை வேண்டுமளவு தின்ற பாணர்களுக்கு
நீங்காத செல்வம் அனைத்தையும் செய்தவனாகிய
எம்முடைய வேந்தன் வளவன் வாழ்க என்று உன்னுடைய
பெருமை பொருந்திய வலிய முயற்சியை நான் பாடவில்லையென்றால்
பல்கதிர்ச்செல்வனாகிய ஞாயிறு தோன்றுவதை அறியாமல்போவான்,
நான் மிக எளியவன், பெருமானே! இந்த உலகத்தில்
நல்லவர்கள் செய்த நன்மை என்று ஒன்று இருந்தால்,
இமயமலையில் திரண்டு, இனிய ஒசையைப் பலமுறை எழுப்பி
கிழக்குத்திசைக் காற்றால் பெரும் மேகம் சொரிந்த
நுண்ணிய பல துளிகளைக் காட்டிலும் பல ஆண்டுகள் வாழ்வாயாக.
					மேல்
# 35 வெள்ளைக்குடி நாகனார்
நீர் செறிந்த பெரிய கடலே எல்லையாக
இடையில் காற்றுப் புகாத, வானத்தைச் சூடிய
மண் திணிந்த உலகத்தில், குளிர்ந்த தமிழ்நாட்டிற்கு உரிமையாளரான
முரசு முழங்கும் படையினையுடைய மூவேந்தருக்குள்ளும்,
அரசு என்று சொல்லப்படும் சிறப்பிற்குரியது உன்னுடைய அரசு ஒன்றுதான் பெருமானே!
ஒளிசெய்யும் கதிர்களைக் கொண்ட ஞாயிறு நான்கு திசைகளிலும் தோன்றினாலும்,
ஒளிரும் கதிர்களையுடைய வெள்ளி தென்திசையில் சென்றாலும்
அழகிய குளிர்ந்த காவிரி நீரினைக் கொண்டுவந்து பல வாய்க்கால்களாக ஓடி நாட்டினை ஊட்டிவளர்க்க
தொகுதியான வேல்களை நட்டுவைத்த தோற்றத்தைப் போல
ஆடுகின்ற, கணுக்களைக்கொண்ட கரும்பின் வெள்ளையான பூக்கள் அசைகின்ற
நாடு எனப்படுவது உன்னுடைய நாடு ஒன்றே! அவ்வாறாக
அந்த நாடு பொருந்திய செல்வத்தையுடைய பெருமை பொருந்திய வேந்தனே!
உனக்குண்டான சில செய்திகளைக் கூறுகிறேன், என்னுடைய சில வார்த்தைகளைக் கேட்பாயாக,
அறக்கடவுள் விரும்பி ஆராய்வதைப் போன்ற உன்னுடைய செங்கோலால் ஆராயும் ஆராய்ச்சியையுடைய
நீதியைக் கேட்கவேண்டிய காலத்தில், தகுதியில் எளியோர், இங்கு
தூறலை வேண்டிய பொழுதில் பெருமழையைப் பெற்றவர் ஆவர்,
ஞாயிற்றைச் சுமப்பது போன்று பக்கமெல்லாம் திரண்ட மேகங்கள்
திசைகளைக் கொண்ட வானத்தின் நடுவில் நின்று அதன் வெயிலை மறைப்பது போன்று
கண்களைக்  கூசவைக்கும் உன் விண்ணை முட்டும்படி பரந்த வெண்கொற்றக்குடை
வெயிலை மறைப்பதற்காகக் கொள்ளப்பட்டதோ? இல்லையே! வருந்தும்
குடிமக்களுக்கு நிழல் தரவே, கூர்மையான வேலினைக்கொண்ட வளவனே!
உள்ளீடற்ற பனைமரத்தின் துண்டுகளைப் போல வேறுவேறாய்க் கிடக்க
களிறுகளின் கூட்டத்துடன் போரிட்ட இடம் அகன்ற போர்க்களத்தில்
எதிர்த்துவரும் படையினை எதிர்கொண்டு தடுத்து, இது இடம்பெயர்ந்து புறமுதுகிடும்போது ஆரவாரித்து
உன் போரிடும் படை தரும் வெற்றியும், உழுகின்ற கலப்பை
நிலத்தில் ஊன்றுகின்ற கொழு உண்டாக்கும் சாலில் விளைந்த நெல்லின் பயனே!
மழை பெய்யாமல்போனாலும், விளைச்சல் குறைந்துபோனாலும்
இயல்பாக அமையாதன மக்களின் தொழிலில் தோன்றினாலும்
நாட்டைக் காப்பவரையே பழித்துப்பேசும், இந்த இடம் அகன்ற உலகம்
என்பதனை நன்கு அறிந்திருப்பாயெனில், நீயும்
கோள்சொல்பவரின் வெற்றுவார்த்தைகளை உட்கொள்ளாமல்
பூட்டிய ஏரினைப் பேணுவோரின் பாரத்தைத் தாங்கி,
குடிமக்களைப் பாதுகாப்பாயானால், உன்
பாதங்களைப் போற்றுவார்கள் உன் பகைவர்கள்.
					மேல்
# 36 ஆலத்தூர் கிழார்
கொல்வது என்றாலும், கொல்லாமல் விட்டுவிடுவது என்றாலும்
சீர்தூக்கி அறிந்துகொள் அதனால் உனக்குக் கிடைக்கும் பெருமையை, நீண்ட சித்திரக்கோலால் தீட்டப்பட்ட
செறிவான பரல்களைக்கொண்ட சிலம்புகளையும், குறிய வளையல்களையும் உடைய மகளிர்
பொன்னால் செய்த கழங்குகளை வைத்து திண்ணைபோன்ற மணல்மேட்டில் விளையாடும்
குளிர்ந்த நீரையுடைய ஆன்பொருநை ஆற்றின் வெண்மையான மணல் சிதறும்படி
வலிய கையினைக் கொண்ட கொல்லன் அரத்தால் கூர்மைசெய்யப்பட்ட அழகிய வாயையுடைய
நீண்ட கைப்பிடியையுடைய கோடாரி வெட்டுதலால், நிலை தளர்ந்து
பூக்கள் மணக்கும் நீண்ட கிளைகள் துண்டாக, சோலைகள்தோறும்
காவல் மரங்களை வெட்டும் ஓசை, தன் ஊரில்
நீண்ட மதிலின் எல்லையில் காவலையுடைய அரண்மனைக்குள்ளும் ஒலிக்க
அங்கு அதனைக் கேட்டபின்னும் இனிதாக இருக்கும் வேந்தனோடு, இங்கு உன்
வானவில்லைப்போன்ற மாலையை அணிந்த முரசம் ஒலிக்க
நீ போரில் ஈடுபட்டாய் என்பது வெட்கப்படவேண்டியது ஆகும்.
					மேல்
# 37 மாறோக்கத்து நப்பசலையார்
நஞ்சையுடைய வெண்மையான பல்லினைக் கொண்ட ஐந்து தலைகளைச் சுமந்த
சினம் பொருந்திய கொடும் ஆற்றலையுடைய நாகம் புகுந்ததைப்போல (பகைவர் நாட்டில்)புகுந்து,
வானமெங்கும் கடுமையான தீ உண்டாக(அவர் ஊர்களை எரித்து), பச்சைக் கொடிகளையுடைய
பெரிய மலையின் குகைக்குள் இடி விழுந்தது போல் (அவர் நாட்டை அழித்து)-
ஒரு பறவை அடைந்த துன்பத்தைத் தீர்த்துவைத்த ஒளிபொருந்திய வேலையும்
சினம் பொருந்திய படையையுமுடைய செம்பியன் வழிவந்தவனே!
முதலைகள் செருக்கித்திரியும் ஆழமான இடத்தையுடைய அகழியினையும்,
கரிய இடமாகிய ஆழத்தில், ஒன்று சேர்ந்து ஓடி
யாமத்தை அறிவிப்பவரின் விளக்கின் நிழலினைக் கவ்விப்பிடிக்க முயலும்
கடும் பகைமையுணர்வு கொண்ட முதலைகளையுடைய ஆழமான நீரையுடைய நீர்நிலைகளையும்
செம்பினால் ஆக்கப்பட்டது போன்ற மதிலையும் உடைய தலைமைப்பண்புள்ள பழமையான ஊரில்
கச்சு அணிந்த யானையையுடைய வேந்தன் இருப்பதால்
அவற்றை நல்லன என்று பாராமல் அழித்துப்
போரிட்டு வெல்லும் ஆற்றல்படைத்தவனாய் இருக்கிறாய், நெடுந்தகையே!
					மேல்
# 38 ஆவூர் மூலம் கிழார்
மலை போன்ற இளமையான யானையின் மேல்
வானத்தைத் துடைப்பவை போல்
பல உருவங்களையுடைய கொடிகள் அசையும்
பரந்த படையினையுடைய வெற்றிமிக்க வேந்தனே!
நீ மாறுபட்டுப் பார்க்குமிடம் தீப்பற்றும்,
நீ விரும்பிப் பார்க்குமிடம் பொன் விளையும்,
சிவந்த கதிரவனில் குளுமையை வேண்டினாலும்,
வெண்ணிறமான திங்களில் வெம்மையை வேண்டினாலும்
வேண்டியதை விளைவிக்கும் ஆற்றலையுடையவன், அதனால்
உனது நிழலில் பிறந்து, உனது நிழலில் வளர்ந்த
எங்கள் நினைவின் அளவைச் சொல்லவும் வேண்டுமா? இனிய நிலையை உடையதாகிய
பொற்பூக்களையுடைய கற்பகச்சோலையுள்ள நல்ல விண்ணகத்தவரும்
தாங்கள் செய்த நல்வினையால் உள்ள இன்பத்தை அடைவதன்றி
இருப்போர் இல்லாதவர்க்குக் கொடுத்தலும், இல்லாதோர் இருப்பரிடம் வேண்டுதலும்
அங்குச் செய்ய இயலாது என்பதால் அவ்வுலகம் செயலிழக்கச் செய்வது எனக் கருதி
அவ்வுலகத்தில் அடையும் இன்பம் இவ்வுலகத்திலும் கிடைக்குமென்பதால்,
உன் நாட்டை நினைப்பார்கள் பரிசிலர்,
பகைவர் நாட்டிலிருந்தாலும் உன் நாடு உன்னை உடையது என்பதால்.
					மேல்
# 39 மாறோக்கத்து நப்பசலையார்
புறாவின் துன்பத்தைப் போக்குவதற்காக, உரல் போன்ற அடியினையுடைய
யானையின் வெள்ளிய கொம்பைக் கடைந்து செறிக்கப்பட்ட வெண்மையான கடைப்பகுதியைக் கொண்ட
கோலாகிய நிறுக்கப்படும் தராசுத் தட்டில் உட்கார்ந்தவனின் மரபில் வந்தவனே!
கொடுப்பது என்பது உனக்கு இயல்பாக அமைந்ததேயன்றி உனக்குப் புகழைச் சேர்ப்பதாகாது; அணுகுவதற்குப்
பகைவர்கள் அஞ்சும் நெருங்கமுடியாத மிக்க வலிமையுடைய
தொங்குகோட்டையை அழித்த உனது முன்னோரை நினைத்துப்பார்த்தால்
பகைவரைக் கொல்லுதல் உனக்குப் பழக்கமேயன்றி உனக்குப் புகழைச் சேர்ப்பதாகாது; கேடில்லாத
வீரமுள்ள சோழரின் உறையூரில் உள்ள அரசவையில்
அறம் நின்று நிலைபெற்றதாதலால்
நீதி வழங்குவது உனக்கு மரபேயன்றி உனக்குப் புகழைச் சேர்ப்பதாகாது; வீரம் மிகுந்து
எழுந்த போரினை எதிர்ந்து வென்றவனும், கணையமரத்தை ஒத்த திண்மையான தோளினையுடையவனும்,
கண்ணுக்கு அழகிய மாலையை அணிந்தவனும், செருக்குடைய குதிரையையுடையவனும் ஆகிய வளவனே!
எவ்வாறு கூறுவேன் நான்? உயர்ந்த 
எல்லை அளந்து அறியமாட்டாத பொன் போன்ற பனி படர்ந்த நெடிய சிகரங்களையுடைய
இமையமலையில் பொறிக்கப்பட்ட காவலாக அமைந்த வில் சின்னத்தையும்
வேலைப்பாடமைந்த நெடிய தேரினையும் உடைய சேரன் அழிய
அவனது அழிவில்லாத வஞ்சிநகரை அழிக்கும் உனது
பெருமை பொருந்திய வலிமையான முயற்சியைப் பாடும்போது - (எவ்வாறு கூறுவேன் நான்?)
					மேல்
# 40 ஆவூர் மூலங்கிழார்
நீயோ, பகைவர் பாதுகாக்கும் மறம் நிலைபெற்ற கோட்டைகளை
பெரிதென்று எண்ணாமல் அவற்றை எதிர்நின்று அழித்து, அவர்களின்
மணிமுடியில் இருந்த பசும்பொன்னை உன்
கால்கள் பொலிவுற கழலாகச் செய்துகொண்ட
ஆற்றலையுடையவன், வலிமையுள்ள வேந்தனே!
நாங்களோ, உன்னை இழித்துரைப்போர் கழுத்து வணங்க
புகழ்ந்துரைப்போர் பொலிவு தோன்ற,
இன்று கண்டதைப் போல என்றும் காண்போம்,
இனிய சொற்களுடன், எளிமை உடையவனாய் இருப்பாயாக, பெருமானே!
ஒரு பெண்யானை படுத்திருக்கும் சிறிய இடத்தில் விளையும் விளைச்சல்
ஏழு ஆண்யானைகளை வளர்க்கும் நாட்டினை உடையவனே!
					மேல்
 




# 41 கோவூர் கிழார்
காலனும் ஓர் உயிரை எடுக்க உரிய காலம் பார்த்திருப்பான், அப்படிப் பாராமல்,
வேல் செறிந்த படையின் வீரர்கள் அழியும்படி
வேண்டிய இடத்தில் கொல்லுகின்ற வெல்லும் போரை உடைய வேந்தனே!
எட்டுத் திசைகளிலும் எரிநட்சத்திரம் எரிந்து விழவும்,
பெரிய மரத்தின் இலையில்லாத நீண்ட கிளை காய்ந்துபோகவும்,
வெம்மையான கதிர்களையுடைய ஞாயிறு மிக அருகில் வந்து நெருப்பாய்ச் சுடவும், மேலும்,
அஞ்சத்தகுவனவாகிய பறவைகள் தம் குரலை இசைக்கவும்,
நிலத்தின் மேல் பல் விழவும், தலையில் எண்ணெய் தேய்த்து நீராடவும்,
ஆண்பன்றி மீது ஏறுவது போலவும், ஆடையைக் களைவது போலவும்,
வெண்மையான படைக்கலம் தான் இருந்த கட்டிலோடு கவிழவும், எனக்
கனவிலும் காணுவதற்கு அரிய காட்சிகளை நேரில் காணுமாறு
போர் செய்யும் வலிமையுடையவனே! நீ படையெடுத்து வருகின்ற தன்மையைப் பார்த்து
மயங்கிய பாதுகாப்பில்லாத இருக்கையினையுடைய பகைவர்,
தம் மக்களின் பூப்போன்ற கண்களில் முத்தமிட்டு, தம் மனைவியர்க்குத்
தமது வருத்தம் தோன்றாமல் மறைக்கும் துன்பத்தையுடைய வீரரோடு
மிகுந்த கலக்கம் அடைந்தது, காற்றுடன்
தீயும் கலந்தது போன்ற படையெடுப்பையுடைய
போரில் மிகுந்து விளங்கும் வளவனே! உன்னைக் கோபமூட்டியவர்களின் நாடு -(மிகுந்த கலக்கம் அடைந்தது)
					மேல்
# 42 இடைக்காடனார்
குறையாத கொடைக்குணமும், கொல்லுகின்ற போர்க்குணமும் உடைய தலைவனே! உன்
யானையும்  மலையைப் போலத் தோன்றும், பெருமானே! உன்
படையும் கடலைப் போல முழங்கும், கூர்மையான முனையைக் கொண்ட
உன் வேலும் மின்னலைப் போல் விளங்கும், உலகத்திலுள்ள
வேந்தர்கள் தலை நடுங்கும்படியாகச் செய்யும் ஆற்றலையுடையவனாய் இருப்பதால்
குற்றமற்று விளங்குகிறாய், அது புதிய செய்தியும் இல்லை,
குளிர்ந்த நீர் சலசலத்து ஓடும் ஓசையை அன்றி, வருந்தி
‘எம்மை நீக்கிவிடுக, வாழ்க வளவனே!’ என்று உன்
முன்னணிப்படை எழுப்பும் சலசலப்பைக் கனவிலும் அறியமாட்டாய்,
புலி பாதுகாக்கும் குட்டியைப் போல
குறைவில்லாத நேர்மையான ஆட்சியால் நீ மக்களைக் காக்கின்றாய்,
பெரும் சிறப்புள்ள புதுவரவினை உடையதாகி, நெல்லறுப்போர்
கடைமடையில் பிடித்த வாளைமீனும், உழுவோர்
தம் கலப்பையால் புரட்டிவிட்ட ஆமையும், கரும்பறுப்போர்
கரும்பிலிருந்து எடுத்த தேனும், பெரிய நீர்த்துறையில்
தண்ணீர் எடுத்துவரும் மகளிர் பறித்த குவளையும் ஆகிய இவற்றை
குறிஞ்சி, முல்லை ஆகிய வன்புலத்திலிருந்து வந்த சுற்றத்தார்க்கு விருந்தாக விரும்பிக் கொடுக்கும்
மருதம் நெய்தல் ஆகிய மென்புல ஊர்களைக் கொண்ட நல்ல நாட்டினையுடைய வேந்தனே!
மலையிலிருந்து இறங்கி, பெரிய கடலை நோக்கி
நிலத்து வழியே செல்லும் பல ஆறுகளைப் போல
புலவர்கள் எல்லாரும் உன்னை நோக்கி வருகிறார்கள்,
நீதான், தப்பிக்கமுடியாத போர்க்கோடரி வருந்தும்படியாக அதனைச் சுழற்றி
கூற்றுவன் கோபம்கொண்டதைப் போல வலிமையுடன்
மாற்றாரகிய இரு பெரு வேந்தரின் நாடுகளையும் நோக்குகின்றாய்.
					மேல்
# 43 தாமப்பல் கண்ணனார்
இந்த உலகத்தில் வாழ்பவர்க்கு வெப்பத்தால் உண்டாகும் துன்பம் நீங்க,
சுடும் கதிரையுடைய கதிரவனின் வெம்மையைத் தாங்கி,
காற்றே உணவாகக்கொண்டு, அந்தக் கதிரவனுடன் திரிந்து வரும்
ஒளிரும் சடையினைக் கொண்ட முனிவர்களும் வியப்பால் மயங்க, வளைந்த சிறகையும்
கூர்மையான நகத்தையும் கொண்ட பருந்தின் தாக்குதலிலிருந்து தப்பி,
தன்னை அடைந்த குறுகிய நடையையுடைய புறாவினது
அழிவுக்கு அஞ்சி தராசுத்தட்டில் ஏறி அமர்ந்த
எல்லையற்ற ஈகையையுடைய வலிமையையுடைவனின் வழியில் வந்தவனே!
பகைவரை வென்ற வலிமை மிக்கவனும், செல்வ நலம் உடையவனும்,
தேரினை வழங்கும் வண்மையானுமாகிய கிள்ளியின் தம்பியே!, நீண்ட அம்பினையும்
வளைந்த வில்லினையும் உடைய வீரர்களின் பெருமானே! விரையும் குதிரையையுடைய
கைவண்மை மிக்க தலைவனே! உன் பிறப்பில் எனக்கு ஓர் ஐயம் ஏற்படுகிறது,
ஆத்தியால் புனையப்பட்ட மாலையையுடைய உன் முன்னோர் எல்லாரும்
பார்ப்பனர் நோகும்படியான செயல்களைச் செய்யமாட்டார், இச்செயல்
சிறப்புத்தருமோ உனக்கு என்று மனம்வெறுத்துக் கூறி
உனக்கு நான் தவறிழைத்தது பற்றி நீ மனம் நோகவில்லை, என்னைக்காட்டிலும்
நீதான் தவறுசெய்தவன் போல மிகவும் வெட்கப்பட்டாய்,
தமக்குத் தவறிழைத்தவரைப் பொறுக்கக்கூடிய நல்ல உள்ளம்
இந்தக் குடியில் பிறந்தவர்க்கு எளிமையானதாய்க் காணப்படும் என்று
காட்டினாய், காணத்தக்க வலிமையையுடையவனே! எனவே,
நானே தவறிழைத்தேன், உன் வாழ்நாள் சிறந்துவிளங்கட்டும்,
பெருகிவரும் இனிய நீரையுடைய காவிரி
கொண்டுவந்து குவித்த மணலைக் காட்டிலும் பல ஆண்டுகள்.
					மேல்
# 44 கோவூர் கிழார்
கரிய பெண்யானைக் கூட்டத்துடன் பெரிய குளத்தில் மூழ்கிநீராடாமல்,
நெல்லரிசியையுடைய கவளத்துடன், நெய்யூற்றி மிதித்த கவளமும் பெறாமல்,
திருத்தமான அடிப்பகுதியைக் கொண்ட உறுதியான கம்பம் வருந்த அதனைச் சாய்த்து
நிலத்தின் மேல் புரளும் கையுடன் பெருமூச்செறிந்து
அங்குமிங்கும் சுழன்று திரியும் யானைகள் இடி போல் முழங்கவும்,
பால் இல்லாத பச்சைக்குழந்தை அலறி அழவும்,  மகளிர்
பூ இல்லாத வெறும் தலையை அள்ளி முடிக்கவும், தண்ணீர் இல்லாமல்
வேலைப்பாடமைந்த நல்ல இல்லங்களில் உள்ளவர்கள் வருந்திக்கூவும் கூக்குரல் கேட்கவும்,
நல்லதல்ல, இங்கு இனிதாக இருப்பது,
நெருங்க முடியாத வலிமை படைத்த ஆற்றல் மிக்க குதிரையின் தலைவனே!
நீ அறம் சார்ந்தவன் என்றால், இந்தக் கோட்டை உன்னுடையது என்று சொல்லிக் கதவைத் திற,
நீ வீரமுள்ளவன் என்றால் போரிடுவதற்காகக் கதவைத் திற,
அறமுள்ளவனாகவும் இராமல், மறமுள்ளவனாகவும் இராமல்
திறக்காமல் அடைத்துக்கிடக்கும் திண்ணிய நிலைகளையுடைய கதவுகளையுடைய
நீண்ட கோட்டைமதிலின் ஒரு பக்கத்தில் பதுங்கியிருத்தல்
யோசித்துப்பார்த்தால் வெட்கப்படத்தக்கது.
					மேல்
# 45 கோவூர் கிழார்
பெரிய பனையின் வெண்மையான தோட்டைச் சூடிய சேரன் அல்லன்,
கரிய கிளைகளையுடைய வேம்பின் மாலையைச் சூடிய பாண்டியன் அல்லன்,
உன்னுடைய மாலையும் ஆத்தி மலர்களால் தொடுக்கப்பட்டது, உன்னுடன்
போரிடுபவனின் மாலையும் ஆத்தி மலர்களால் தொடுக்கப்பட்டது,
உமக்குள் ஒருவர் தோற்றாலும் தோற்பது சோழர் குடியே,
இருவரும் வெல்லுதல் உலக இயல்பன்று, அதனால்
உமது குடிக்குப் பெருமைசேர்ப்பது அன்று உம் செய்கை, கொடியால் பொலிந்த தேரையுடைய
உம்மைப் போன்ற வேந்தர்களுக்கு
உடல் பூரிக்கும் உவகையைச் செய்யும் இந்தப் போர்.
					மேல்
# 46 கோவூர் கிழார்
நீதான், புறாவின் துன்பத்தை மட்டுமல்லாமல், மற்றவையும் உற்ற
இடுக்கண் பலவற்றையும் நீக்கினவனுடைய வழியில் வந்தவன்;
இவர்களோ, தம் அறிவைக்கொண்டு உழுது உண்ணும் கற்றவர்களின் வறுமைக்கு அஞ்சி
தம்முடையதை அவர்களுடன் பகிர்ந்து உண்ணும் குளிர்ந்த நிழலில் வாழ்பவர்கள்;
களிற்றினைக் கண்டு முதலில் அழுது, பின்னர் தம் அழுகையை மறந்துபோன
புல்லிய தலையையுடைய இந்தச் சிறுவர்கள், பொதுமக்கள் கூடும் இந்த மன்றத்தை மருட்சியுடன் பார்த்து
இதுவரை அறியாத புதியதொரு துயரத்தை உடையவர்;
நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டாய், இனி உன் விருப்பப்படி செய்
					மேல்
# 47 கோவூர் கிழார்
ஈகைக்குணமுடையோரை எண்ணிப்பார்த்து, பழுத்த மரத்தைத் தேடிச்செல்லும் பறவைகளைப்போலச் சென்று
நீண்டு கிடக்கின்றன என்று நினைக்காமல் அரிய வழிகள் பலவற்றையும் கடந்து
திருத்தமில்லாத நாவினால், திறமுள்ளபடி பாடி,
பெற்ற பரிசிலால் மகிழ்ந்து, சுற்றத்திற்கும் கொடுத்து
இனி வேண்டும் என்று வைத்துக்கொள்ளாமல் உண்டு, மனம் வருந்தாமல் கொடுத்து
தம்மைக் காப்போரால் கிடைக்கும் சிறப்புக்காக வருந்தியிருக்கும் இந்தப் பரிசிலால் வாழும் வாழ்க்கை
பிறருக்குக் கெடுதல் நினைப்பதில்லை, அறிவு மேம்பட
தமக்கு மாறானவர் வெட்கப்பட, தலை நிமிர்ந்து சென்று,
சென்றவிடத்தும் இனிமையாக நடப்பதைத் தவிர, உயர்ந்த புகழையுடைய
நிலத்தை ஆளும் செல்வத்தையுடைய 
உம்மைப்போன்ற தலைமைப்பண்பும் உடையது.(உம்மைப்போன்ற சிறந்தவர்களையும் காப்பாளராக உடையது)

# 48 பொய்கையார்
சேரமான் கோக்கோதைமார்பன் தன் மார்பினில் அணிந்த மாலையாலும்,
அந்தச் சேரமன்னனை மணந்தவர்கள் சூடியுள்ள மாலையினாலும்
கரிய கழியில் மலர்ந்த நெய்தல் மலராலும்
தேன் மணம் வீசுகின்றது கடற்கரைச்சோலையையுடைய தொண்டி நகரம்,
அது எம்முடைய ஊர், அவன் எமது தலைவன்,
அவனை நினைத்து அவனிடம் சென்றால், நீயும்
எம்மையும் நினைத்துப்பார்ப்பாயாக, முதிய வாய்மையே பேசும் இரவலனே! 
”நீ போரில் சிறந்துவிளங்கும்போது உன்னுடைய
புகழைச் சிறப்பித்துக் கூறுபவனைக் கண்டோம்” என்று சொல்லி - (எம்மையும் நினைத்துப்பார்ப்பாயாக)
					மேல்
# 49 பொய்கையார்
குறிஞ்சி நிலத்து நாடன் என்பதா?, மருத நிலத்து ஊரன் என்பதா?
ஓசையிடும் குளிர்ந்த கடலை உடைய சேர்ப்பன் என்பதா?
எப்படி அழைப்பேன் சிறந்த வாளையுடைய சேரமான் கோதைமார்பனை?
குறிஞ்சித் தினைப்புனத்துள்ளோர் கிளிகளை விரட்ட தட்டை என்ற கருவியை முழக்கின், அருகிருக்கும்
வளைந்த நெற்கதிர்கள் அசைந்தாடும் கழனிகளிலும்
மிக்க நீரையுடைய கடற்கரையிலும் பறவைகள் ஒருமித்து எழுந்து பறக்கும்.
					மேல்
# 50 மோசிகீரனார்
குறைவில்லாமல் நன்கு இழுத்துக் கட்டப்பட்ட வாரையுடைய
கருமரத்தால் செய்யப்பட்ட கருமையான பக்கங்கள் பொலிவுபெற மயிலின்
தழைத்த நீண்ட தோகையால் தொடுக்கப்பட்ட பளிச்சென்ற பொறிகளையுடைய நீலமணி போன்ற மாலையை
பொன்போன்ற தளிரையுடைய உழிஞை மலருடன் பொலிவுபெறச் சூட்டி
குருதிப்பலி கொள்ளும் வேட்கையையுடைய அச்சம் பொருந்திய போர்முரசம்
நீராடிவர எடுத்துச்செல்லப்பட்டு, திரும்பக் கொண்டுவரப்படுவதற்கு முன்னர், எண்ணெயின்
நுரையை முகந்துவைத்ததைப் போன்ற மென்மையான பூக்கள் தூவிய கட்டிலில்
அது முரசுக்கட்டில் என்பதனை அறியாமல் ஏறிப் படுத்திருந்த என்னை, சினம் பெருக
இரண்டு துண்டங்களாக வெட்டிப்போடும் உன்னுடைய வாள் வெட்டாமல் விட்டுவிட்டது
ஒன்றே போதும் நீ நல்ல தமிழை முழுதும் அறிந்திருக்கிறாய் என்பதைக் காட்டுவதற்கு,
அத்துடன் நில்லாமல், என் அருகே வந்து உன்னுடைய 
வலிமையுடைய முழவு போன்ற தோளினை உயர்த்தி,
சாமரத்தால் குளிர வீசினாயே, இந்த அகன்ற உலகம் பாராட்ட
இங்குப் புகழ் உடையவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு அங்கிருக்கும்
மேலுலகத்தில் இடம் இல்லை என்பதை
தெளிவாகக் கேட்டு அறிந்ததனால்தானோ என்னவோ,
வெற்றியையுடைய வேந்தனே! இங்கு இச் செயலை நீ செய்தது!
					மேல்
 



# 51 ஐயூர் முடவனார் ஐயூர் கிழார் எனவும் பாடம்
வெள்ளம் பெருகுமானால் அதனைத் தடுக்கும் அணை இல்லை; நெருப்பு மிகுந்தெழுந்தால்
உலகத்து உயிர்களை நிழல்செய்யும் நிழலும் இல்லை;
காற்று மிகுந்தால் அதனைத் தாங்கும் வலிமையும் இல்லை; பெருமை மிகுந்து
அவற்றைப் போன்ற சினம் பொருந்திய போரையுடைய வழுதி
குளிர்ந்த தமிழ்நாடு மூவேந்தர்க்கும் பொது என்று சொல்வதைப் பொறுக்கமாட்டான், போரை மேற்கொண்டு
திறையை விரும்புவான் என்றால், எடுத்துக்கொள்க என்று
தாமாகவே கொடுத்த மன்னர் நடுக்கம் அற்றவரானார்;
மிகவும் இரங்கத்தக்கவர் அவனுடைய இரக்கத்தை இழந்தவர்கள்,
நுண்ணிய பல கறையான்கள் மிகவும் முயன்று கட்டிய
சிவந்த புற்றிலிருந்து புறப்பட்ட ஈசல் போல
ஒரு பகல்பொழுது மட்டுமே வாழும் வாழ்க்கைக்காகத் தடுமாறித்திரிவோர்.
					மேல்
# 52 மருதன் இளநாகனார்
தெய்வங்களை உடைய நெடிய சிகரங்களைக் கொண்ட மலையின் குகையில் தங்குவதை வெறுத்து
சோம்பல் முறித்து எழுந்த நிரம்பிய வலிமை கொண்ட ஆண் புலி
ஊனை விரும்பும் உள்ளம் ஏவுதலால், இரையைத் தேடி
தான் வேண்டிய பக்கத்தில் விரும்பிச் செல்வதைப் போல
வடநாட்டு வேந்தர் மனம்வருந்த, அவரைக் கொல்வதற்காக
இன்னாத கொடிய போரைச் செய்ய தேரைச் செலுத்திய வழுதியே!
நீ கருதியது இந்தப் போரானால், பெரிய உலகத்தில்
யார்தாம் இரங்கத்தக்கவர்? ஊர்கள்தோறும்
மீனைச் சுடுவதால் எழும்பும் புகையின் புலால் நாறும் நெடிய சுருள்
வயல் அருகிலுள்ள மருதமரத்தின் வளைந்த கிளைகளைச் சூழுகின்ற
பெரிய நல்ல புதுவருவாயினை இழந்து, இப்பொழுது
ஆரவார இசை பொருந்திய தெய்வங்கள் தாம் உறையும் தூண்களைவிட்டு நீங்கித்
தாம் பலிபெறும் இடங்களை மாற்றிக்கொள்ளும் பாழ்பட்ட அம்பலங்களில்
நரையையுடைய முதியோர் சூதாடும்காய்களை வைத்ததால் குழிவாய்ப்போன
சூதாடுமிடம் நிறைய, பல பொறிகளைக் கொண்ட
காட்டுக்கோழி முட்டையிடும்
காடாய்ப்போய்க் கெடும் நாட்டினையுடையோரில் - (யார்தாம் இரங்கத்தக்கவர்?)
					மேல்
# 53 பொருந்தில் இளங்கீரனார்
முற்றிய நீண்ட சிப்பியின் முத்துப்போன்ற வெண்மையான ஒழுங்குபட்ட மணல் முற்றத்தைக்கொண்ட
ஒளிவிடுகின்ற மணிகளால் கண்ணைப் பறிக்கும் மாடத்தில்
பளபளக்கும் வளையல்களை அணிந்த மகளிர் திண்ணையில் விளையாடும்
புகழால் விளங்கும் விளங்கில் என்ற ஊருக்குப் பகைவரால் வந்த தீங்கினை அகற்றிய,
போர்க்களத்தைத் தனதாக்கிக்கொண்ட யானையையும் விரையும் குதிரையையும் உடைய பொறையனே!
விரித்துச்சொன்னால் பெருகுகிறதே, தொகுத்துச்சொன்னால் குறைவுபடுகிறதே என்று
மனமயக்கம் உள்ள நெஞ்சினைக்கொண்ட எங்களுக்கு, நிச்சயமாகச்
சொல்லி முடியாதது உனது புகழ் எந்நாளும்,
கல்வியில் சிறந்தவர் பிறந்த இந்த பெரிய இடத்தையுடைய உலகத்தில்
வாழமாட்டோம் என்று இருப்பது அரிது, நேரம் தாழ்க்காமல்
பல பொருளையும் அடக்கிய செய்யுளைச் செய்யும் செம்மையான நாவினையும்,
மிகுந்த அறிவினையும், சிறந்த புகழினையும் கொண்ட கபிலன்
இன்றைக்கு இருந்தால் நலமாயிருக்குமே என்று சொன்ன உன்
வெற்றி கொண்ட சிறப்பினுக்கு ஏற்றவாறு
பாடுவேன் நான், நீ பகைவரை வென்ற வெற்றியை.
					மேல்
# 54 கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார்
எங்கள் தலைவன் இருந்த ஆரவாரம் மிகுந்த பழைய ஊரில்
அதற்கு உரிமையாளர் போல நேரம் பார்க்காமல் அணுகி,
எம் தலைவனின் காலையில் கூடும் அரசவையில் தலை நிமிர்ந்து நுழைவது
எம்மைப் போன்ற வாழ்க்கையையுடைய இரவலர்க்கு எளிதான செயலாகும்;
அவ்வாறு இரவலர்க்கு எளிமையானது அல்லாமல், குடிமக்களைப் பாதுகாப்பதைத் தனதாக்கிக்கொண்டு
மழை நாணும்படியாக, அளவின்றி, இரவலர்க்கு
நிற்காமல் கொடுக்கும் கவிந்த கையையுடைய வள்ளன்மையும்,
விரையும் குதிரையையும் உடைய கோதையின் வலிமையோடு முரண்பட்டு எழுந்த
வஞ்சினம் கூறிய மன்னர்களை நினைக்கும்போது
பசுமையான இலைகளாலும் தழைகளாலும் தொடுக்கப்பெற்ற தலைமாலையையும்,
அழுக்குப்படிந்த உடையையும், சீழ்க்கையடிக்கும் வாயையும் உடைய இடையன்
சிறிய தலையையுடைய ஆட்டு மந்தையுடன் கிட்ட நெருங்காத
புலி வாழும் அகன்ற நிலத்தைப் போன்றதாகும்
வலிமை தங்கிய பெரிய கையையுடைய அவனுடைய நாடு.
					மேல்
# 55 மதுரை மருதன் இளநாகனார்
உயர்ந்த மலையாகிய பெரிய வில்லைப் பாம்பாகிய நாணினால் கட்டி,
ஒப்பில்லாத ஓர் அம்பை இழுத்து, அதனால் மூன்று கோட்டைகளை அழித்து
பெரிய ஆற்றல் மிக்க தேவர்களுக்கு வெற்றியைத் தந்த
கருமை படர்ந்த தொண்டையையுடைய இறைவனின் அழகிய திருமுடியில் சூடிய
பிறை சேர்ந்த நெற்றியில் விளங்கும் ஒரு கண்ணைப் போல
மூவேந்தருள்ளும் உயர்ந்த பூமாலை அணிந்த மாறனே!
கொடும் கோபம்கொண்டு கொல்லுகின்ற யானைப்படை,
விரைந்த ஓட்டமும், மனச்செருக்கும் கொண்ட குதிரைப்படை,
நெடிய கொடியை உடைய உயர்ந்த தேர்ப்படை,
நெஞ்சுரம் கொண்ட போரை விரும்பும் காலாட்படை என்று
நான்கு படைகளுடன் சிறந்துவிளங்குவதாயினும், சிறந்த
அறநெறியை முதலாவதாகக் கொண்டதுவே ஆளுவோர் வெற்றி,
அதனால், நம்மவர் என்று நடுநிலை தவறாமல்
மற்றவர் என்று அவர் நற்குணங்களைப் பழிக்காமல்
சூரியனைப் போன்ற வெம்மையான ஆற்றலையுடைய வீரமும்,
திங்களைப் போன்ற குளிர்ந்த பெரிய மென்மையும்,
மழையைப் போன்ற ஈகையும், ஆகிய இந்த மூன்றனையும்
உடையவன் ஆகி, இல்லாதவர்களே இல்லையெனும்படி
நீ நெடுங்காலம் வாழ்வாயாக நெடுந்தகையே! ஆழமான நீர்ப்பரப்பையும்
வெண்மையான மேற்பரப்பையுடைய அலைகள் வந்து மோதும் செந்தில் பதியில்
முருகவேள் நிலைபெற்ற அழகிய அகன்ற கடல்துறையில்
கடுங்காற்று கொண்டுவந்து திரளாகக் குவித்த  
கால்சுவடுகள் பதிகின்ற மேட்டு மணலினும் பல ஆண்டுகள் - (நீ நீடு வாழிய நெடுந்தகை)
					மேல்
# 56 மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
# மதுரை மருதன் இளநாகனார் எனவும் பாடம்
காளையை வெற்றிக்கொடியாக உயர்த்திய, எரிகின்ற தீயைப் போன்று விளங்கும் சடையை உடைய,
தடுப்பதற்கு அரிய கோடரியையுடைய, நீலமணி போலும் கரிய கழுத்தினையுடைய சிவபெருமானும்,
கடலில் வளரும் முறுக்குண்ட சங்கினைப் போன்ற மேனியை உடைய,
கொலையை விரும்பும் கலப்பையையுடைய பனைக்கொடியோனாகிய பலராமனும்,
கழுவப்பட்ட அழகிய நீலமணி போன்ற திருமேனியை உடைய,
வானளாவ ஓங்கிய கருடக்கொடியை உடைய, வெற்றியை விரும்புவோனாகிய கண்ணனும்,
நீலமணி போன்ற நிறத்தையுடைய மயில் கொடியை உடைய, மாறாத வெற்றியையுடைய,
பிணிமுகம் என்ற யானையை ஊர்தியாகக் கொண்ட ஒளியையுடைய செய்யோனாகிய முருகவேளும், என்ற
உலகத்தைக் காக்கும் முடிவுகாலத்தைச் செய்யும் வலிமையினையும்
தோல்வியில்லாத நல்ல புகழையும் உடைய நான்கு கடவுளர்க்குள்ளும்
தடுக்கமுடியாத சீற்றத்தில் நீ எமனைப் போன்றவன்;
வலிமையில் நீ வெண்மையான பலராமனைப் போன்றவன்;
புகழில் நீ தன்னை இகழ்ந்தவரை அழிக்கும் கண்ணனைப் போன்றவன்;
நினைத்ததைச் செய்துமுடிப்பதில் முருகனைப் போன்றவன்;
அவ்வவ்வாறு நீ அவரவர்களைப் போன்று இருப்பதால், எங்கும்
செய்யமுடியாதது ஒன்று உண்டோ உனக்கு? அதனால்
இரவலர்க்கு அரிய அணிகலன்களைக் குறைவுபடாமல் ஈந்து,
யவனர்கள் நல்ல சாடிகளில் தந்த குளிர்ந்த நறுமணமுடைய மதுவை
பொன்னாலான அழகிய கிண்ணங்களில் ஏந்தி, நாள்தோறும்
ஒளிரும் வளையல்கள் அணிந்த மகளிர் ஊற்றிக்கொடுக்க, மகிழ்ச்சி மிக்கு
அப்படி இனிதாக நடப்பாயாக வெற்றியால் உயர்ந்த வாளையுடைய மாறனே!
அழகிய இடத்தையுடைய வானத்தில் நிறைந்திருக்கும் இருளை அகற்றும்
வெம்மையான கதிர்களையுடைய ஞாயிறு போலவும், மேற்குத்திசையில் தோன்றும்
குளிர்ந்த கதிர்களையுடைய திங்களின் வளர்பிறையைப் போலவும்
நின்று நிலைபெறுவாயாக இவ்வுலகத்தோடு கூடச் சேர்ந்து.

# 57 காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார்
கல்வியில் வல்லவர்களாய் இராதவர்கள் என்றாலும், வல்லவர்கள் என்றாலும்
உன்னைப் புகழ்வோருக்கு மாயோனைப் போன்று பாதுகாப்பளிக்கும்,
மற்றவர் பாராட்டிப் பேசும் சிறப்பினையுடைய புகழ் மிக்க மாறனே!
உனக்கு ஒன்று சொல்லுவேன், அது என்னவெனில்
நீதான் பிறர் நாட்டைக் கொள்ளும்போது, அவர் நாட்டின்
வளைந்த கதிர்களையுடைய வயல்களை உன் வீரரும் கொள்ளையிடட்டும்;
அகன்ற இடத்தையுடைய பெரிய ஊரைத் தீயும் சுடட்டும்;
நிமிர்ந்து நிற்கும் மின்னலைப் போன்ற உன் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் நீண்ட வேல்
பகைவரை அழித்தாலும் அழிக்கட்டும்; என்ன ஆனாலும்
பகைவரின் காவல் மரத்தை வெட்டுவதை மட்டும் செய்யவேண்டாம், உனது
நெடிய நல்ல யானைகளைக் கட்டுவதற்கு அவை கம்பங்களாக ஆகமாட்டா.
					மேல்
# 58 காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார்
சோழனாகிய நீதான், குளிர்ந்த நீரையுடைய காவிரிக்கு உரியவன், பாண்டியனாகிய இவனோ
பருத்த அடிமரம் இற்றுப்போன கோளி என்னும் ஆலமரத்தின்
அடர்ந்த நிழல் தரும் நெடிய கிளைகளை விழுதுகள் தாங்கிக்கொள்வது போன்று
தனக்கு முன்னுள்ளோர் இறந்துபட, தான் சோர்ந்துபோகாமல்
நல்ல புகழ்பெற்ற தன் பழைய குடி தடுமாறாதபடி அணைத்து,
தான் சிறியதாய் இருந்தாலும் கூட்டத்துடன் பாம்பைக் கொல்லும்
பொறுப்பதற்கு அரிய வெண்மையுருக்கொண்ட இடியினைப் போல, பகைவரைக் காணப் பொறுக்காத
போரில் சிறந்த பாண்டியர் குடியில் காளை போன்றவன்; நீதான்
அறம் வாழும் உறையூர் அரசன்; இவனோ
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிதில் கிடைக்கூடியது என்று எண்ணி,
எளிதில் கிடைப்பதல்லாத மலையின் சந்தனமும், கடலின் முத்தும் என்ற  இவற்றின்
பெருமையை ஒலிக்கும் குரலையுடைய முரசம் மூன்றுடனே ஆளுகின்ற
தமிழ் நிலவும் மதுரையின் குளிர்ந்த செங்கோலையுடைய வேந்தன்;
பால் போன்ற நிறத்தையுடைய பனைக்கொடியோனாகிய பலராமனும்,
நீல நிற மேனியைக்கொண்ட சக்கரத்தையுடைய திருமாலும் என்ற
இரண்டு பெரும் தெய்வங்களும் ஒன்றாகச் சேர்ந்து நின்றதைப் போல
அச்சம் விளைவிக்கும் உங்களின் பெருமை மிக்க தோற்றத்துடன், உள்ளத்தை நடுக்கும் அச்சம் வர விளங்கி
இத்தன்மையுடையவராக நீங்கள் விளங்கினால் இதைக்காட்டிலும் இனியது வேறு உண்டோ?
இன்னமும் கேளுங்கள், உம் புகழ் நெடுங்காலம் வாழ்ந்திருக்கட்டும்,
உமக்குள் ஒருவர் ஒருவர்க்கு உதவிசெய்யுங்கள், இருவரும்
ஒன்றுபட்டிருக்கும் இந்நிலையிலிருந்து மாறுபடாமல் இருப்பீர்களென்றால் ஒலிக்கும் அலைகளையுடைய
பெருங்கடல்கள் சூழ்ந்த இந்தப் பயன் பொருந்திய பெரிய நிலவுலகம்
உங்கள் கைவசமிருக்கும் என்பது பொய்யாகாது;
அதனால், நல்லவை போன்றும், நியாயமானவை போன்றும்,
முன்னோர் காட்டிச்சென்ற முறைகளில் நடப்பவர் போன்றும்,
அன்புகொண்ட உள்ளங்களையுடைய உமக்கு இடையே புகுந்து பிளவை ஏற்படுத்த அல்லாந்துதிரியும்
அயலாருடைய அற்பமொழிகளை ஏற்றுக்கொள்ளாமல் 
இன்று இருப்பதைப் போலவே இருக்கட்டும் உங்கள் நட்பு, மேலும் மேலும் வென்று
போர்க்களத்தில் உயர்ந்துவிளங்கட்டும் உமது வேல்கள், வளைந்த கோடுகளையுடைய
புலிச் சின்னத்தைச் செதுக்கிய தொலைவிடத்துக்கும் தெரியுமாறு கட்டிவைக்கப்பட்ட இலாஞ்சனை
நெடிய நீரில் வாழும் கெண்டைமீன் சின்னத்துடன் பொறிக்கப்பட்ட
சிகரங்களை உடையன ஆகுக பிறர் குன்றுகள் பொருந்திய நாடுகள்.
					மேல்
# 59 மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தனார்
முத்துமாலை தொங்கும் அழகு மிக்க மார்பினையும்,
முழங்காலைத்தொடும் அளவிற்கு நீண்ட கையினையும் உடைய அழகில் சிறந்த வழுதியே!
நீ அருளுடன் அளிப்பதில் வல்லவன் ஆவாய்,
எது பொய் என்பதைத் தெளிந்து அறிவாயாக, எப்பொழுதும்
கடும் வெம்மை நீங்காமல், கடலிலிருந்து கிளர்ந்து எழுகின்ற
ஞாயிறு போன்றவன் உன் பகைவர்க்கு,
திங்களைப் போன்றவன் எங்களைப்போன்றவர்க்கு.
					மேல்
# 60 உறையூர் மருத்துவன் தாமோதரனார்
கடலின் நடுவே இருக்கும் தோணியில் இடப்பட்ட விளக்கின் சுடரைப் போல
செவ்வாய் என்ற சிவந்த கோள் கண்சிமிட்டும் திசைகளைக்கொண்ட ஆகாயத்தின்
உச்சியில் நின்ற முழுமதியினைக் கண்டு
காட்டில் வாழும் மயிலைப் போல அரிய காட்டுவழியின் தொடக்கத்தை அடைந்த
சிலவாகிய வளையல்களையுடைய விறலியும் நானும் மிக வேகமாக
தொழுதோம் அல்லவா பலமுறை! கடற்கரையில்
கழியின் நீரால் கிடைத்த உப்பை முகந்துகொண்டு, மலைநாட்டை நோக்கிச் செல்கின்ற
ஆரங்களையுடைய வண்டிச்சக்கரம் பள்ளத்தில் சிக்கிக்கொண்டதை எளிதில் மீட்கும்
வலிமையுடைய பாரம் பொறுக்கும் காளையைப் போன்ற எமது அரசனாகிய
வெற்றி முழக்கமிடும் முரசையும், குறிதப்பாத வாளினையும் உடைய வளவனின்
வெயில் மறைப்பதற்குத் தூக்கிநிறுத்திய பார்ப்பதற்கு அச்சத்தைத்தரும் சிறப்பினையுடைய
மாலை அணிந்த வெண்கொற்றக்குடையைப் போல இருக்கின்றது என்பதனால் - (உவவு மதி -- தொழுதனம்)
					மேல்
 




# 61 கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரை குமரனார்
கொண்டையாக முடிந்த கூந்தலில் குளிர்ந்த தழையைச் சூடிய உழவர் வீட்டுப்பெண்கள்
சிறிய, அழகிய நெய்தல் மலரை ஆம்பல்மலருடன் களையாகப் பறிக்கும்
விலாங்கு மீன் புரளும் வயலில் சேறுகுத்தியால் துண்டாக்கப்பட்ட
பொய்கை வாளையின் பெரிய துண்டத்தை
புதுநெல்லை அரிசியாக்கிச் சமைத்த வெண்மையான சோற்றுக்கு வியஞ்சனமாக
விலாப்புடைக்க, வயிற்றின் பக்கங்கள் விம்ம உண்டு,
நீண்ட கதிர்களையுடைய வயல்களில் அறுத்த நெற்கதிகர்களை இடுமிடம் தெரியாமல் தடுமாறுகின்ற
வலிமையான கைகளையுடைய கதிரறுப்போரின் புல்லிய தலையையுடைய சிறுவர்கள்
தென்னையில் விளையும் பெரிய இளநீர்க்காய்களை உண்டு வெறுத்தால், தம் தந்தையரின்
குறைந்த தலை இடத்தையுடைய உயரமான நெற்போரின் மீது ஏறி, உயரத் தாவிக் குதித்து
அதிகமாகக் காய்த்துத்தொங்கும் பனையின் காய்களைத் தொட முயலுகின்ற
நாள்தோறும் புதுவரவினையுடைய நல்ல நாட்டிற்கு வேந்தனான
வேல் விளங்கும் பெரிய கையினையும், நன்கு புனையப்பட்ட தேரினையும் உடைய சென்னியின்
வானவில் போன்ற மாலையையுடைய மார்பினைப் பகைத்தெழுகின்றவர்கள் இருப்பார்களேயானால்
தமக்கு என்ன நேரும் என்பதைத் தாமே அறிவார்கள், நாங்கள், சென்னியின்
கணையமரத்தைப் போன்ற திண்மையான தோள்களைத் தவறுகள் இல்லாமல் எதிர்த்துப்போரிட்டோர்
வாழக் கண்டதும் இல்லை, நேரம் தாழ்க்காமல்
அவனுடைய திருத்தமான அடிகளைச் சேர வல்லவர்கள்
வருந்துவதைக் காணுவது அதனிலும் இல்லை.
					மேல்
# 62 கழா தலையார்
வருகின்ற முன்னணிப் படையைத் தடுத்துப் போரில் ஒருவரையொருவர் வெல்வோம் என்பது எப்படியாகும்?
போரிட்டு, போர்க்களத்தில் மாண்ட வீரர்களின் புண்களைத் தோண்டி
குருதி படிந்த தம் சிவந்த கைகளைக் கூந்தலில் தடவி
நிறம் மிக்க வடிவத்தையுடைய பேய் மகளிர்
மேலும் மேலும் கொட்டுகின்ற மந்தமான ஓசையையுடைய பறையின் தாளத்துடன் ஆட
பருந்துகள் ஊனைத் தின்னும் படையுடன், போரினால் வெகுண்டு
படையினர் மாண்டபின்னும் தாமாகப் போரிடும் வீரமிக்க போரையுடைய இருபெரு வேந்தரும்
இறந்துபோனார்கள், அவர்களின் கொற்றக்குடைகள் குடைசாய்ந்தன,
புகழுக்குரிய சிறப்பினையுடைய முரசங்களும் விழுந்துவிட்டன,
பல நூறுகளாக அடுக்கப்பட்ட பல்வேறு மொழிகள் பேசும் படைத்தொகுதி பசிய நிலத்தில்
இடமில்லை என்று சொல்லும்படி செறிவாக இருந்த அகன்ற இடத்தையுடைய பாசறையில்
போரிடுவதற்குரியோர் இல்லாமல், பார்ப்பவர்க்கு அச்சம் தோன்ற
உடனே நின்றது போர்; மாண்ட வீரரின் மனைவியரும்
பச்சை இலையைத் தின்று, குளிர்ந்த நீரில் குளித்துக் கைம்மை நோன்பு ஏற்காதவராய்
வீரர்களின் மார்புகளைக் கட்டியணைத்துக் களத்திலேயே கிடந்தனர்
வாடாத கற்பக மாலையினையும், இமைக்காத கண்களையும்
வேள்வியில் கிடைக்கும் உணவையும் உடைய தேவர்களும் மிகவும்
பெறுவதற்கு அரிய உலகம் நிரம்ப
விருந்தினர்களைப் பெற்றவர்கள் ஆனார்கள், ஒங்குக உமது புகழ்.
					மேல்
# 63 பரணர்
மிகப்பலவான அத்தனை யானைகளும், அம்பினால் நிலைகுலைந்து
போரில் இனிமேல் ஆற்றவேண்டிய செயல்கள் இல்லாமல் படையினர் இருப்பிடத்துக்குத் திரும்பின;
வெற்றிப்புகழினால் சிறந்த குதிரைகள் எல்லாம்
வீரப்பொலிவு மிக்க குதிரைவீரருடன் அங்கேயே விழுந்து மடிந்தன;
தேர் மேல் வந்த வீரர்கள் எல்லாரும்
தாம் பிடித்த கேடயமே தமது கண்களை மறைக்க ஒன்றாய் மாண்டுபோனார்கள்;
வாரினால் இழுத்துக்கட்டப்பட்ட, ஒலிப்பதில் சிறந்த மயிர் சீவாத தோலினால் போர்க்கப்பட்ட முரசம்
தம்மைச் சுமப்பவர்கள் யாரும் இல்லாததினால் இருந்து ஓய்ந்தன;
சந்தனம் பூசிய மார்பில் நெடிய வேல்கள் பாய்ந்ததினால்
வேந்தர்களும் போரிட்டுப் போர்க்களத்தில் மாண்டு விழுந்தனர்; இனிமேல்,
என்னதான் ஆகுமோ? வயல்வெளிகளிலுள்ள
ஆம்பல் தண்டினால் செய்த வளையல்களைக் கையிலணிந்த மகளிர்
பச்சை அவலை நிறையத்தின்று, குளிர்ந்த நீரில் பாய்ந்து விளையாடும்
புதுவரவுகள் அற்றுப்போகாத ஊர்களையுடைய
அழகிய இருப்பிடங்கள் கொண்ட அவர்களின் அகன்ற இடத்தையுடைய நாடுகள் - (என்னதான் ஆகுமோ?)
					மேல்
# 64 நெடும்பல்லியத்தனார்
நல்ல யாழ், ஆகுளி என்ற சிறுபறை, பதலை என்ற ஒருதலை மாக்கிணை ஆகியவற்றைக் கட்டிக்கொண்டு
செல்லலாமோ, ஒருசில வளையல்களை அணிந்த விறலியே!
பெரிய யானைப்படை போரிட்ட இடம் அகன்ற படைவீட்டில்
ஆகாயத்தில் பறக்கும் பருந்துகளைப் பச்சை ஊனின் துண்டங்கள் தடுத்து நிறுத்தும்
மாற்றார் நாட்டில் தான் பெற்ற அழகிய பெரிய செல்வத்தினையுடைய
முதுகுடுமி என்னும் அரசனைக் கண்டு
நீரே மிகுதியாக உள்ள கஞ்சியைக் குடிக்கும் இந்த வாழ்வை விட்டுவிட்டு வருவதற்காக 
					மேல்
# 65 கழாஅ தலையார்
முழவு மண்சாந்து இடுதலை மறக்க, யாழ் பண்ணை மறக்க,
பெரிய இடத்தையுடைய பானை கவிழ்ந்து நெய் கடைதலை மறக்க,
சுரும்புகள் மொய்க்கும் மதுவைச் சுற்றத்தார் மறக்க,
உழவர் ஆரவாரத்துடன் செய்யும் உழவுத்தொழிலை மறக்க, விழாக்கொண்டாடுதலை
அகன்ற உட்பகுதியினையுடைய சிறிய ஊர்கள் மறக்க,
முழுமதி வந்து கூடிய பெரிய நாட்பொழுதில்
ஞாயிறு மேற்கிலும், திங்கள் கிழக்கிலும் இருக்க தம்முள் எதிர்நின்று பார்த்து, அவற்றில் ஞாயிறு
புல்லிய மாலைப்பொழுதில் மலையில் மறைவதைப் போல்
தன்னைப் போன்ற ஒரு வேந்தன் மார்பினை நோக்கி எறிந்த (வேல் துளைத்து)
முதுகிலும் ஏற்பட்ட புண்ணினால் வெட்கப்பட்டு வீரம் பொருந்திய மன்னன்
வாளை ஊன்றி வடக்குநோக்கி அமர்ந்துவிட்டான், இங்கு
ஞாயிறு இருக்கும் பகற்பொழுது இனிமேல் முன்பு இருந்த நாட்களைப் போல் இனிதாகக் கழியாது.
					மேல்
# 66 வெண்ணி குயத்தியார்
நீர் செறிந்த பெரிய கடலில் கப்பல்களை ஓட்டி
காற்றும் தனக்குப் பணியாற்றும்படிசெய்து அதனையும் ஆண்ட வலிமை மிக்கவனின் மரபில் வந்தவனே!
மதம்பிடிக்கும் இயல்பையுடைய யானையை உடைய கரிகால்வளவனே!
எதிர்சென்று போரினில் அழிவையேற்படுத்திய உனது ஆற்றல் வெளிப்படும்படி
வெற்றியடைந்தவனே! உன்னைக்காட்டிலும் நல்லவன் அல்லவா!
பெருகுகின்ற புதுவருவாயையுடைய வெண்ணி என்ற இடத்தில் உள்ள போர்க்களத்தில்
உலகத்தில் மிகவும் புகழை அடைந்து (தனக்கேற்பட்ட)
முதுகுப்புண்ணுக்காக வெட்கப்பட்டு வடக்கிருந்தவனான சேரலாதன் - (நின்னினும் நல்லன் அன்றே)
					மேல்
# 67 பிசிராந்தையார்
அன்னச் சேவலே! அன்னச் சேவலே!
வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று, கொல்லுகின்ற போரில் அண்ணலாக விளங்குகின்ற சோழன்
தன் நாட்டு மக்களைக் கருணையோடு நோக்கும் பிரகாசமான முகத்தினைப் போல
இரண்டு முனைகளும் கூடிவருகின்ற திங்களின் அரும்புகின்ற பிறைநிலா ஒளிரும்
மயக்கத்தைத் தரும் மாலை நேரத்தில் நான் செயலிழந்து வருந்த,
குமரி ஆற்றின் பெரிய துறையில் அயிரை மீனை மேய்ந்து
வடமலையாகிய இமயமலைக்குச் செல்லுவாயென்றால், இடையிலிருக்கும்
நல்ல சோழநாட்டு வழியே சென்றால், உறையூரில்
உயர்ந்து நிற்கும் மாடத்தில் குறுகிய சிறகுகளையுடைய உன் பேடையுடன் இளைப்பாறி,
வாயில் காவலரிடம் ஏதும் சொல்லாமல் அரண்மனைக்குள் சென்று, எம்முடைய
பேரரசனாகிய கிள்ளி கேட்கும்படியாக, பெரிய பிசிர் என்னும் ஊரில் வாழும்
ஆந்தை என்பவரின் அடியவன் என்று சொன்னால், பெருமை மிக்க உன்
இன்பமுடைய பெடை அணிந்துகொள்ள தனது
விருப்பமுறும் நல்ல அணிகலன்களை அளிப்பான் உனக்கு.
					மேல்
# 68 கோவூர் கிழார்
உடும்பின் தோலை உரித்தது போல எலும்புகள் வெளித்தெரியும் விலாவினையுடைய
சுற்றத்தாரின் கடுமையான பசியைப் போக்குபவர்களைக் காணாமல்,
கேட்பதற்கு மிகச் சிலரே உள்ளனர் என்ற நிலைமையுடைய யாழால் என்ன பயன் என்று மிகவும் நொந்து
இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறாய்? பாணனே! நகைகளைத் தாங்கி
அழகிய பெருமையையுடைய எழில்பெற்ற சிவந்த பொறிகளைக் கொண்ட மார்பினையுடைய
மென்மையான பெண்களுக்குப் பணிந்து, வன்மையான
வீரரை அகப்படுத்தும் பெருமை பொருந்திய நெடுந்தகை,
ஈன்று அணிமை தீர்ந்த குழந்தைக்காகச் சுரக்கும் முலையைப் போன்று
சிறியதாய்ச் சுரந்து தொடங்கிய காவிரியின் மரத்தையே சாய்க்கும் மிகுந்த வெள்ளம்
உலகத்தையே காக்கின்ற நல்ல சோழநாட்டுக்கு வேந்தன்,
உள்நாட்டுப்பகையை ஒருவழியாய்த் தீர்த்து, பறவைகளால் உண்டாகும் தீய சகுனங்களினால்
போருக்கு அனுப்பமாட்டான் என்பதினால், நமக்குள் போரிட்டுச் சாவோம் என்று
நீங்காத வீரமுடையோர் தம்முடைய பூரித்த தோள்களைத் தட்ட,
அவர்களின் வீர உணர்வு தணியும்படியாக பறைகளைக் கொட்டும் அழகு பொருந்திய தேர் வரும் வழிகளில்
கடுமையான கள்ளைப் பருகுபவர்களின் நடுங்குகின்ற கைகளிலிருந்து சிந்தியதால் உண்டான
மணம் மிக்க சேற்றினை மிதித்த பாகன் ஓட்டாத யானை
நெடிய நகரின் எல்லைகளில் ஒலிக்கும் முழவின் ஓசையை உற்றுக்கேட்கும்
உறையூரில் இருப்பவனே எம் இறைவன்,
அவனிடம் சென்றால், பிறர் வாயிலை நினைக்கத் தேவையில்ல என்னும் அளவுக்கு அவன் கொடுப்பான்.
					மேல்
# 69 ஆலந்தூர் கிழார்
கையிலே இலக்கண முறைமை நிரம்பிய யாழ்; உடம்பிலே
காப்பார் இல்லாததினால் பசி; இடுப்பிலே
துணியில் இருக்கும் இழையுடன் தையல் போட்ட இழை நுழைந்த வேர்ப்பதால் நனைந்த கந்தலாடை;
அதனை மிகக் கவனத்துடன் மறைத்துக்கட்டிய வருத்தத்தையுடைய பாணனே!
எடுத்த காரியத்தை முடிக்கும் மனவுறுதி இல்லாதவனின் உடம்பைப் போல
பெரிதாகப் பொலிவிழந்த மிகப் பெரிய சுற்றத்தையுடையவனே!
உலகம் முழுவதையும் சுற்றிவந்து, பின்னர் மெதுவாக
என்னிடம் (உன் வறுமை தீர்ப்பார் யார் என்று) கேட்டால், மன்னர்களின்
கொல்கின்ற யானைகள் புண்பட்டு வருந்திக்கிடக்கும் கொடிகளைக் கொண்ட பாசறையில்
குருதி படர்ந்த பரப்பில் யானைகளைக் கொன்று
புலாலை உடைய போர்க்களத்தை உண்டாக்கிய போர்செய்யும் படையை உடையவன்,
உயர்ந்த நிலைகளைக்கொண்ட மாடங்களையுடைய உறையூரில் இருப்பவன்,
போரிடும் பகைவரை எதிர்க்க உயர்த்திய வேலையுடையவன், சிலவேளைகளில்
பகைவர் நாட்டிற்குள் செல்லவும் செய்வான், சுற்றப்பட்ட மாலையையும்
ஒளி பொருந்திய நெருப்புப் போன்ற நிறம் பொருந்திய பசும்பொன்னால் செய்யப்பட்ட பூண்களையுடைய
கிள்ளிவளவன், அவனிடம் சென்றால்,
அவனது நெடிய வாயிலில் காத்துக்கிடப்பது இல்லை, உச்சிப்பொழுதில்
இரவலர்க்குத் தேர்களை வழங்கும் ஓலக்கத்தினைக் கண்ணாரக் கண்டு
நீ அவனைப் பார்த்த பின்னால் பூவில்
மொய்க்கும் வண்டுகள் ஊதாத பொன்னாலான தாமரையைச்
சூடாது இருத்தல் அதைக்காட்டிலும் இல்லை;
					மேல்
# 70 கோவூர் கிழார்
தேன் போல இனிய இசையை எழுப்பும் நரம்பினால் தொடுத்த சிறிய யாழையுடைய பாணனே!
குளத்தில் வாழும் ஆமையைக் கம்பியால் குத்தித் தூக்கியதைப் போன்ற
நுண்ணிய கோலால் கட்டப்பட்ட தெளிந்த முகப்பினையுடைய பெரிய கிணையின் ஓசையை
இனிமையாகக் கேட்டுக்கொண்டு இங்கே சிறிது தங்கிச் செல்வாயாக என்று கூறி
ஓயாது என்னைக் கேட்கும் முதிய வாய்மையையுடைய இரவலனே!
தை மாதத்துக் குளிர்ந்த தடாகம் போன்ற
எடுக்க எடுக்கக் குறையாத உணவினையுடைய அகன்ற மனைகளில்
சமைக்கின்ற தீயே அன்றி, பகைவர் வந்து ஊரைச் சுடுகின்ற தீயினை அறியாமல்,
சோறும், நீரும் ஆகிய இரண்டு பிணிதீர்க்கும் மருந்துகளை விளைவிக்கும் நல்ல நாட்டுக்கு வேந்தனாகிய
கிள்ளிவளவனின் நல்ல புகழை நினைத்து,
நல்ல மணத்தைத் தேடிச்செல்லும் வண்டு
சிறிய வெண்மையான ஆம்பலின் மீது ஊதும்
அள்ளிக்கொடுக்கும் ஈகையையுடைய பண்ணன் என்பவனின் சிறுகுடியிலுள்ள
பாதிரிப்பூ மணக்கின்ற கூந்தலினையும், பளிச்சென்ற நெற்றியையும்,
இனிய முறுவலையும் உடைய விறலியுடனே மெல்லமெல்ல நடந்து
செல்வாயென்றால் மிகுந்த செல்வத்தையுடையவன் ஆவாய்
காட்டில் விறகு வெட்டி ஊருக்குக் கொண்டுவருவோர், காட்டில் புதையலைப் பெற்றாற்போல
ஐயத்திற்கிடமான எதிர்பாரா நிகழ்ச்சி அல்ல அவனது ஈகை,
அது கிடைக்குமோ என்று நினைக்கவேண்டாம், அவனது அடி வாழ்க.
					மேல்
 




# 71 ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
சிங்கம் போலச் சினந்து, திரும்பிப்பார்க்காத உள்ளத்துடன்,
அளவில் அடங்காத பெரும்படையையுடைய வேந்தர்கள் ஒன்று கூடி
என்னோடு போரிடுவோம் என்கின்றனர், அவர்களைப்
தாங்கமுடியாத போரில் அலறும்படி தாக்கி, தேருடன்
திரும்பிப் பாராமல் ஓடச்செய்வேன், இல்லையெனில், சிறந்த
பெரிய அமர்த்த மைதீட்டிய கண்களைக் கொண்ட இவளைவிட்டுப் பிரிவேன் ஆகுக,
அறமானது தனது நிலையிலிருந்து தவறாத அன்பினையுடைய என்னுடைய அரசவைக்குத்
திறமை இல்லாத ஒருவனைத் தலைவனாக ஆக்கி, நெறி பிறழ்ந்து
கொடுங்கோல் ஆட்சி புரிந்தவன் ஆகுக, மிகுந்த புகழையுடைய
வையை ஆற்றால் சூழப்பட்ட வளம் பொருந்திய ஊர்களில்
குறையாத புதுவருவாயை உடைய மையல் என்னும் ஊரின் தலைவன்
மாவனும், நிலைபெற்ற எயில் என்னும் ஊரைச் சார்ந்த ஆந்தையும், புகழ்மிக்க
அந்துவன் சாத்தனும், ஆதன் அழிசியும்,
கடும் கோபம் கொள்ளும் இயக்கனும் உள்ளிட்ட பிறரும்
எனது கண் போன்ற நட்பினையுடைய நண்பர்களோடு கூடிய
இனிய செருக்கு மிக்க மகிழ்ச்சியை இழந்து, நான் இத்துடன்
பல உயிரையும் பாதுகாக்கும் அரசர் குலத்தில் சிறந்த
தென்புலமான பாண்டியநாட்டைக் காக்கும் காவலிலிருந்து நீங்கி, மற்றவர்தம்
வன்புலங்களைக் காக்கும் காவலுக்கு மாறி நான் பிறப்பேனாகுக.
					மேல்
# 72 தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
சிரிப்புக்குரியவர்கள் இவனது நாட்டைச் சிறப்பித்துக்கூறுபவர்கள்,
சிறுவன் இவன் என்று நான் வெறுக்கும்படி சொல்லி,
ஓசையிடும் மணிகள் மாறிமாறி ஒலிக்கும் பரந்த அடியினையும், பெரிய காலினையும் உடைய
உயர்ந்த நல்ல யானையினையும், தேரையும், குதிரையையும்
படைக்கலங்களைக் கொண்ட வீரர்களையும் உடையவர் நாம் என்று
எனது மிகுந்த வலிமைக்கு அஞ்சாமல், பகைத்துச் சினம் பெருகி
சிறுபிள்ளைத்தனமான சொற்களைச் சொன்ன சினம் பொருந்திய வேந்தர்களைத்
தாங்க முடியாத போரில் அவர்கள் சிதறியோடும்படி தாக்கி, அவரின் முரசுகளோடு
சேர்த்துக் கைப்பற்றுவேன், அப்படிச் செய்யாவிட்டால் மனத்துக்கு இசைவான
என்னுடைய ஆட்சியில் வாழ்பவர்கள் வேறு புகலிடம் இல்லாமல்
கொடியவன் எம் அரசன் என்று கண்ணீர் விட்டுக்
குடிமக்கள் பழிதூற்றும் கொடுங்கோலன் ஆவேன் ஆகுக,
ஓங்கிய சிறப்பு, உயர்ந்த அறிவு ஆகியவை உடைய
மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்ட
உலகத்தோடு நிலைபெற்ற பலரும் புகழும் தலைமையையுடைய 
புலவர்கள் பாடாமல் நீங்குக என் நிலத்தின் எல்லையை,
என்னால் காக்கப்படும் எளியோரின் துயரம் அதிகமாக,
என்னிடம் இரந்துவருவோர்க்குக் கொடுக்கமுடியாத வறுமையை நான் அடைவேனாக.
					மேல்
# 73 சோழன் நலங்கிள்ளி
மெல்ல வந்து என் நல்ல அடியை அடைந்து
‘கொடுங்கள்’என்று பணிந்து கேட்டால், சிறப்புடைய
முரசு பொருந்திய தொன்றுதொட்டு ஆளும் உரிமையை உடைய எனது அரசைக் கொடுப்பதுதானா பெரிது?
எனது இனிய உயிரையானாலும் கொடுப்பேனே! இவ்வுலகத்தில்
ஆற்றலுடையவர்களின் ஆற்றலை எண்ணிப்பார்க்காமல்
என் உள்ளத்தை இகழ்ந்த அறிவில்லாதவன், தெள்ளத்தெளிவாக
தூங்குகிற புலியை இடறிய கண்ணில்லாதவன் போல
பிழைத்துப்போவது கடினம், வலிமையுடைய,
மூங்கிலைத் தின்னும் யானையின் காலில் அகப்பட்ட
வலிய, திண்ணிதான நீண்ட முளையைப்போல, படையெடுத்துச் சென்று அங்கே
அவர்கள் வருந்தும்படி போரிடாமல் போவேன் என்றால், உள்ளம் பொருந்திய
தீது இல்லாத நெஞ்சத்தால் காதல் கொள்ளாத
பலவான கரிய கூந்தலையுடைய மகளிரின்
பொருத்தமற்ற அணைத்தலில் துவண்டுபோகட்டும் என் மாலை.
					மேல்
# 74 சேரமான் கணைக்கா லிரும்பொறை
மன்னர் குடியில், குழந்தை இறந்து பிறந்தாலும், தசைப் பிண்டமாகப் பிறந்தாலும்
அவற்றை ஆள் அல்ல என்று சொல்லி வாளினால் கீறாமல் புதைக்கமாட்டார்,
சங்கிலியால் கட்டப்பட்ட நாய் போல, துன்பப்படுத்தி இருக்கவைத்த
உறவே இல்லாத சுற்றத்தாரின் உபகாரத்தால் கிடைத்த தண்ணீரை,
மனவலிமை இன்றி வயிற்றுத்தீயைத் தணிக்க
தாமே கெஞ்சிக்கேட்டு உண்ணுகின்ற அளவுக்கு
ஒருவரைப் பெற்றெடுப்பார்களோ, இவ்வுலகத்தில்?
					மேல்
# 75 சோழன் நலங்கிள்ளி
மூத்தோர் ஒவ்வொருவரையும் கூற்றம் கொண்டுப்போய்விட,
விதி வசத்தால் கிடைத்த பழைய வெற்றியால் உண்டான அரசுரிமை
கிடைக்கப்பெற்றோமானால் சிறப்படைந்தோம் என்று
குடிமக்களிடம் வரியினை வேண்டி இரந்துகேட்கும் அறிவுநுட்பம் இல்லாத ஆண்மையையுடைய
சிறுமை படைத்த உள்ளமுடைய ஒருவன் பெற்றால் அது அவனுக்கு மிகுந்த பாரமுள்ளது ஆகும்;
உக்கிரமான போரையும் தாங்க வல்ல மனவெழுச்சியுடன் கூடிய வலிய முயற்சியையுடைய
சிறப்புக்குரியவன் ஒருவன் பெற்றால், சிறிதளவு நீரே உள்ள
வற்றிய குளத்தோரத்தின் சிறிய தண்டாகிய வெண்மையான நெட்டியின்
கோடைக்காலத்தில் உலர்ந்த சுள்ளியைப் போல, பெரிதும்
இலேசானதாகும், குற்றமற்று
வானளாவ உயர்ந்த வெண்கொற்றக்குடையினையும்
முரசினையும் உடைய அரசரின் அரசாட்சியோடு சேர்ந்த செல்வம்.
					மேல்
# 76 இடைக்குன்றூர் கிழார்
ஒருவனையொருவன் கொல்லுதலும், ஒருவர்க்கொருவர் தோற்றுப்போதலும்
புதிதான ஒன்று இல்லை, இந்த உலகத்து இயற்கை அதுவே,
ஆனால் இன்றைக்கு முன்னர் நாம் கேள்விப்பட்டதில்லை; திரட்சியான அடிமரத்தையுடைய,
ஊர்ப்பொதுவிடத்தில் உள்ள வேம்பின் பெரிய கிளையிலிருக்கும் ஒளி மிகுந்த தளிரை
நீண்ட கொடியாகிய உழிஞையின் அடந்தகொடியுடன் சேர்த்துக்கட்டி
செறிவாகத் தொடுத்த தேன் சிந்தும் தலைமாலையை
வளைய மாலையுடன் பொலிவுபெறச் சூடி
இனிதான ஓசையினையுடைய தெளிவான போர்ப்பறை ஒலிக்க, கண்ணுக்கு நிறைவாய் அமைந்த
நாட்டினில் அமைந்த செல்வத்தினையுடைய பசும்பொன்னால் செய்த பூண்களை அணிந்த பாண்டியனின்
பெருமையையும்,உயர்ந்த தலைமையையும் அறியாதவர்கள் ஒன்றுகூடி
போரிடுவோம் என்று தன்னிடத்து வந்த
புனைந்த வீரக்கழலினை அணிந்த ஏழு அரசர்களுடைய நல்ல வெற்றி அடங்கிப்போகுமாறு
தான் ஒருவனாக நின்று போரிட்டுக் களத்தில் கொன்றதை - இன்றைக்கு முன்னர் நாம் கேள்விப்பட்டதில்லை
					மேல்
# 77 இடைக்குன்றூர் கிழார்
கொலுசினைக் கழற்றிய காலில் ஒளி வீசும் வீரக்கழலை இறுகக்கட்டி,
குடுமி களையப்பட்ட தலையில் வேம்பின் ஒளி மிக்க தளிரை
நீண்ட கொடியாகிய உழிஞையின் அடந்தகொடியுடன் சூடி
குறிய வளைகளைக் கழற்றிய கையில் வில்லினைப் பிடித்துக்கொண்டு
நெடிய தேரின் மொட்டு பொலிவுபெற நிற்கின்றவன்
யாராயிருக்கக்கூடும்? வாழ்க அவன் தலைமாலை! மாலையை அணிந்து
ஐம்படைத்தாலியைக் கழற்றவுமில்லை, பால் குடிப்பதை நிறுத்தி
உணவையும் இன்றுதான் உண்டிருக்கிறான், அடுத்தடுத்து
வெகுண்டு எதிர்த்துவந்த புதிதுபுதிதான வீரர்களைப் பார்த்து
வியக்கவோ இழிவாக நினைக்கவோ இல்லை, அவ்வீரர்களை
இறுகப் பிடித்து பரந்த ஆகாயத்தில் பேரொலி எழும்ப
உடல் கவிழ்ந்து நிலத்தில் விழும்படி கொன்றதை எண்ணி
மகிழவோ, வீண்பெருமைகொள்ளவோ அதனைக்காட்டிலும் இல்லை.
					மேல்
# 78 இடைக்குன்றூர் கிழார்
வளைந்த காலணியால் அழகுபெற்ற வலிமை பொருந்திய நிலைதளராத கால்களையும்
வருத்துவதற்கு முடியாத மிக்க ஆற்றலையும் உடைய என் தலைவன், சோம்பல் முறித்து
குகையில் கிடந்த புலி இரையை நோக்கி வந்ததைப் போல
எதிர்ப்பதற்கு அரிய அவன் மார்பினை மதியாதவராய், ஆரவாரித்து எழுந்து
நாமே சிறந்தவர்கள், படைபலத்தால் பெரியவர்கள், நம்முடன்
போரிடுபவனோ இளைஞன், நாம் அடையப்போகும் கொள்ளைப்பொருளோ மிகவும் பெரிது என்று
இளக்காரத்துடன் வந்த நிலையில்லாத வீரர்,
பொலிவிழந்த கண்களையுடையவராய் பின்வாங்கிச் செல்ல
இங்கு அவரைக் கொல்வதற்குச் சம்மதியாதவனாய், அங்கு அவர்களுடைய
சிறந்த அணிகலன்களை அணிந்த மகளிர் வெட்கப்பட்டு இறந்துபோக,
அவர்களுடைய தந்தையரின் ஊரிலேயே
தெளிவான் போர்ப்பறை ஒலிக்கச் சென்று அங்குக் கொன்றான்.
					மேல்
# 79 இடைக்குன்றூர் கிழார்
தன்னுடைய பழமையான நகரின் வாயிலில், குளிர்ந்த பொய்கையில் மூழ்கியெழுந்து
பொதுவிடத்தில் உள்ள வேம்பின் ஒளிவிடும் தளிரைச் சூடிக்கொண்டு
தெளிந்த ஓசையையுடைய போர்ப்பறையின் முன்னாகக் களிறு போல நடந்து
கடும் போர் செய்யும் செழியனும் வந்தான், அவனை எதிர்த்து நின்ற
நிலையற்ற வீரரோ பலர் இருக்கின்றனர், 
சிலர் தப்பிக்கக்கூடும், பகற்பொழுது மிகச் சிறியதாய் இருக்கிறது.
					மேல்
# 80 சாத்தந்தையார்
இனிய, நன்கு புளித்த கள்ளினையுடைய ஆமூர் என்னும் ஊரில்
வலிமையுடைய மல்லனின் மிக்க வலிமையை அழித்து
ஒரு கால் மண்டிபோட்டு மார்பிலே மடித்து இருந்தது, அடுத்த கால்
எதிராளியின் ,செயல்களைத் தடுத்து, அவன் முதுகை வளைத்தது;
இதைப் பார்த்து மகிழ்ந்தாலும், மகிழாவிட்டாலும், வெல்லும் போரைக்கொண்ட
பொருவதற்கு அரிய அவன் தந்தையாகிய தித்தன் பார்க்கவேண்டும்; 
பசித்து மூங்கிலைத் தின்பதற்கு முயலும் யானையைப் போல
தலையும் காலுமாகிய இரண்டு பக்கமும் முறியும்படி காலால் உதைத்து
மற்போருக்கு வந்த மல்லனை எதிர்த்துக் கொன்ற நிலையை - (தித்தன் பார்க்கவேண்டும்)
					மேல்
 




# 81 சாத்தந்தையார்
படையின் ஆரவாரம் ஏழுகடலும் கூடி ஒலிக்கும் ஒலியிலும் பெரியது; அவனுடைய களிறு
கார்காலத்து மழையின் இடியினைக்காட்டிலும் முழங்குதலை உடையது;
யாராயிருக்கக்கூடும், அவர் தாம் இரங்கத்தக்கவர், ஆத்திப்பூவை நாரில்
நெருங்கிக் கட்டிய தலைமாலையையும்
கொடுக்கக் கவிந்த கையினையும் உடைய இவ் வீரனின் கையிலகப்பட்டு அழிபவர்கள் - (யார்-கொல் அளியர்)
					மேல்
# 82 சாத்தந்தையார்
ஒரு பக்கம் ஊரில் திருவிழா தொடக்கம்; இன்னொரு பக்கம் வீட்டில் மனைவிக்கு பேறுகால நேரம்
பெய்கின்ற மழை, மறைகின்ற ஞாயிறு,
அந்நேரத்தில், கட்டிலைப் பின்னுகின்ற புலையனின் கையிலுள்ள
வாரை இழுத்துக்கொண்டு செல்லும் ஊசி எவ்வளவு விரைவாகச் செல்லுமோ அதைவிட விரைவானது
ஊரினைக் கைப்பற்ற வந்த வீரனோடு
ஆத்தியால் தொடுக்கப்பட்ட மாலையையுடைய பெருந்தகையாகிய கிள்ளியின் போர்
					மேல்
# 83 பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார்
காலில் புனைந்த செறிந்த வீரக்கழலையுடைய, மை போன்ற கரிய தாடியை உடைய இளைஞனுக்காக என்
வளையல்கள் கழன்றுபோனதால், நான் என் தாயை எண்ணி அஞ்சுவேன்;
பகையை வெல்லும் அவனுடைய தோள்களைத் தழுவுவதற்கு அவையிலுள்ளாரை எண்ணி நாணுவேன்;
என்னைப்போல மிக்க நடுக்கமுறுவதாக, எந்நாளும்
என் பக்கம் அல்லது தாய்ப்பக்கம் என்று ஏதாவது ஒரு பக்கமாகச் சேராமல்
இருவர் பக்கமும் நின்று மயங்குகின்ற இந்த ஊர் - (என்னைப்போல மிக்க நடுக்கமுறுவதாக)
					மேல்
# 84 பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்
என்னுடைய தலைவன் பழைய சோற்றைத் தின்றாலும் பெரிய தோள்களையுடையவன்,
நானோ, அவனுக்கு அடுத்தவீட்டில் இருந்தாலும் பசலையினால் பொன்னிறமுடையவள் ஆனேன்,
போரினை எதிர்கொண்டு என் தலைவன் போர்க்களம் புகுந்தால்
ஆரவாரிக்கும் பெரிய ஊரில் போரிடும் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில்
தம்மைப் பெரிதாக எண்ணி இன்புற்றிருந்த வீரர்களுக்கு
உமணர்கள் தம் வண்டியை ஏற்றுவதற்கு அஞ்சும் ஏற்றத்தையுடைய ஆற்றங்கரையைப் போன்றவன்.
					மேல்
# 85 பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்
என்னுடைய தலைவனுக்கு ஊர் இது இல்லை,
என்னுடைய தலைவனுக்கு நாடு இது இல்லை,
அவனுடைய வெற்றியை, வெற்றி என்று சொல்லுவார் ஒரு பக்கத்தார்,
வெற்றியல்ல என்று சொல்லுவார் ஒரு பக்கத்தார்,
நன்றாய் இருக்கிறது இவ்வாறு இருவகையாகவும் பலர் கூறிய நல்ல மொழி!
அழகிய சிலம்பு ஒலிக்க ஓடிச்சென்று, எம்முடைய இல்லத்தில்
முழவினைப் போன்ற அடிமரத்தையுடைய பனைமரத்தை ஒட்டி நின்று
நான் கண்டேன் அவன் வெற்றியுடன் விளங்குவதை.
					மேல்
# 86 காவல் பெண்டு காதற்பெண்டு எனவும் பாடம்
என்னுடைய சிறிய வீட்டிலுள்ள நல்ல தூணைப் பிடித்துக்கொண்டு உன் மகன்
எங்கு இருக்கின்றான் என்று கேட்கிறீர்கள், என் மகன்
எங்கே இருந்தாலும் அதை நான் அறியேன், 
புலி தங்கியிருந்து சென்ற கல் குகை போல
அவனைப் பெற்ற வயிறு இங்கே இருக்கிறது,
அவன் போர்க்களத்தில் காணப்படுவான். 
					மேல்
# 87 ஔவையார்
போர்க்களத்தில் புகுவதைத் தவிர்த்திடுங்கள், பகைகொண்டு வந்திருப்போரே!
எங்களுக்குள்ளும் இருக்கிறான் ஒரு வீரன், ஒரு நாளில்
எட்டுத் தேர்களைச் செய்யவல்ல தச்சன் ஒருவன்
ஒரு மாதம் உழைத்துச் செய்த ஒரு சக்கரத்தைப் போன்றவன். 
					மேல்
# 88 ஔவையார்
நீங்கள் யாராயிருந்தாலும், பின்னே வரும் கூழைப்படையையும், முன் செல்லும் தார்ப்படையையும் கொண்டு
நாங்கள் போரிடுவோம் என்று சொல்வதைத் தவிர்த்திடுங்கள்; உயர்ந்த ஆற்றலையும்
ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் நெடிய வேலினையும் கொண்ட மழவர்களின் பெருமகனான,
சுடர்விடுகின்ற நுண்மையான தொழில்திறம் கொண்ட பூண் அணிந்த அழகிய வலிய மார்பினையும்
களவேள்வி முதலான விழாவினையுடைய நல்லபோரைச் செய்யும்
முழவு போன்ற தோளினையும் உடைய என் தலைவனைக் காண்பதற்கு முன்னால்.
					மேல்
# 89 ஔவையார்
மணிகள் பதித்த அணிகலன்களால் பொலிவுபெற்ற ஏந்திய பக்கத்தினையுடைய அல்குலினையும்,
மடப்பத்தினையும், மையுண்ட கண்களையும், ஒளிசிந்தும் நெற்றியையும் உடைய விறலியே!
உம்முடைய அகன்ற இடத்தினையுடைய நாட்டில் எம்முடன் போர்புரிபவரும் இருக்கிறார்களோ என்று
விடாது கேட்கும் போரிடும் படையையுடைய வேந்தனே!
அடிக்கும் கோலுக்கு அஞ்சாத பாம்பினைப் போல
இளமையும் வலிமையும் உள்ள வீரரும் இருக்கின்றனர், அதுமட்டுமல்ல,
ஊர்ப்பொது மன்றத்தில் கட்டித்தொங்கவிடப்பட்டிருக்கும் நன்றாக இழுத்துக்கட்டப்பட்ட முழவில்
காற்று மோதுகின்ற அதன் முகப்பில் எழும் ஓசையைக் கேட்டால்
அது போருக்கு அழைக்கும் அழைப்பு என்று மகிழும் என்னுடைய தலைவனும் இருக்கிறான்.
					மேல்
# 90 ஔவையார்
உடைந்த வளையலைப் போல மலர்ந்திருக்கும் காந்தள் பூ,
இலைகள் நிறைந்த மல்லிகைப் பூவுடன் மணக்கும் மலைச்சாரலில்
வீரம் மிக்க புலி சீறினால் அதனை எதிர்த்து நிற்கும் மான் கூட்டமும் உண்டோ?
முகில்கூட்டங்கள் கலைந்துகிடக்கும் வானத்திலும் திசைகளிலும் செறிந்துகிடக்கும்
இருளும் உண்டோ ஞாயிறு சினந்தெழுந்தால்?
பார மிகுதியால் அச்சுமரத்தொடு தாக்கி பார் கீழிறங்கிச் செல்லும்
சரக்கு வண்டியின் சக்கரம் மண்ணில் புதைவதைப் போக்குவதற்கு
காலைப் புதைக்கும் மணல் விலகிப்பரக்க, கற்கள் பிளக்க நடக்கும்
செருக்குடைய காளைக்கு ஏறமுடியாத துறைகளும் உண்டோ?
கணையமரத்தைப் போன்ற முழங்காலைத் தொடும் நீண்ட கைகளையும்,
பழுதற்ற வன்மையைச் செய்யும் கைகளையும் உடைய வீரர்களின் தலைவனே!
நீ ஆளுகின்ற பெரிய நிலத்தில் உன் மண்ணைக் கைப்பற்றி ஆரவாரிக்கும்
வீரர்களும் இருப்பார்களோ, நீ போர்க்களம் புகுந்தால்?
					மேல்
 




# 91 ஔவையார்
வெற்றியை உண்டாக்குகிற, குறியிலிருந்து தப்பாத வாளினை ஏந்தி, பகைவர்
போர்க்களத்தில் மடிய அவர்களை வென்ற கழலுமாறு விடப்பட்ட வீரவளை பொருந்திய பெரிய கையையுடைய
மிக்க மன எழுச்சியைத் தரும் மதுவினையுடைய அதியர்களின் தலைவனாகிய
போரில் வெல்லும் வெற்றிதரும் செல்வத்தையும், பொன்னாலான மாலையினையும் அணிந்த அஞ்சியே!
பால் போன்ற பிறையினை அணிந்த நெற்றியுடன் பொலிவுற்ற திருமுடியையும்
நீல மணி போன்ற கரிய கழுத்தினையும் உடைய ஒருவனாகிய சிவபெருமான் போல
நிலைபெற்றிருப்பாயாக பெருமானே! நீதான் நெடுங்காலமாக நிற்கும்
பெரிய மலையின் பிளவினில் ஏறுவதற்கு அரிய உச்சியில் வளர்ந்த
சிறிய இலைகளையுடைய நெல்லியின் இனிய பழத்தை, அது பெறுவதற்கு அரியது என்று கருதாமல்,
அக்கனியினால் அடையும் பயன்களை எமக்குக் கூறாமல் தன்னுள் அடக்கி,
நான் இறவாமல் நெடுங்காலம் இருக்க எனக்குத் தந்துவிட்டாய்!
					மேல்
# 92 ஔவையார்
யாழின் இசை போல இன்பமும் செய்யாது, பொழுதிற்குரிய பண்ணிலும் சேராது,
பொருளையும் அறிந்துகொள்ள முடியாது, ஆயினும் தந்தையர்க்கு
அருள் சுரக்கும் தம் புதல்வரின் மழலைச்சொல் கேட்கும்போது,
என் வாய்ச் சொல்லும் அப்படிப்பட்டதே, பகைவரின்
காவல் மிக்க மதில்களைக் கொண்ட அரண்கள் பலவற்றையும் வென்ற
நெடுமான் அஞ்சியே!  உனக்கு என்மீது அருள்சுரப்பதால் - (என் வாய்ச் சொல்லும் அப்படிப்பட்டதே)
					மேல்
# 93 ஔவையார்
திண்ணிதாகப் பிணிக்கப்பட்ட முரசம் ‘திடும்’ என முழங்கப்
புறப்பட்டுப்போய் போரில் வெற்றிபெறுவதற்கு இனிப் பகைவர் ஏது? உன்னை எதிர்த்து வந்தவர்கள்
உனது முன்னணிப்படையினையும் தாங்கமாட்டாதவராய், சிதறி
ஓடத்தொடங்கிய பெருமை இல்லாத மன்னர்கள்,
நோயினால் இறக்கும் உடம்பைப் பெற்று
தமது ஆசையை மறந்து, அவர்கள் வாளால் மடியாத குற்றம் அவர்களை விட்டு நீங்குமாறு
அறத்தை விரும்பிய கொள்கைகளையுடைய நான்கு வேதங்களையுடைய அந்தணர்
நன்கு வளர்ந்த தருப்பைப்புல்லைப் பரப்பி, அதில் அவரைக் கிடத்தி,
தனது வீரமே பற்றுக்கோடாக நல்ல போரில் மடிந்த
சிறந்த வீரக்கழலை அணிந்த மறவர் செல்லும் உலகத்திற்குச் செல்க என்று
வாளால் அறுக்கப்பட்டு அடக்கம்செய்யப்படுவதிலிருந்து தப்பித்தனர்,
வரியையுடைய வண்டுகள் ஒலிக்கும் வாய்க்குள் வந்து புகுகின்ற மதத்தினையுடைய
தலைமை பொருந்திய யானை போர்க்களத்தில் மடிய
தாங்குவதற்கு அரிய போரில் சிதறி ஓடும்படி வெட்டிக்கொன்று நீ
பெருந்தகையே! விழுப்புண் பட்டு நின்றதால் - (போரில் வெற்றிபெறுவதற்கு இனிப் பகைவர் ஏது?)
					மேல்
# 94 ஔவையார்
ஊர்ச் சிறுவர்கள் வெண்மையான தந்தத்தைக் கழுவுவதற்காக
நீருள்ள துறையில் படிந்து கிடக்கும் பெரிய ஆண்யானை போல
இனியவன் பெருமானே நீ எமக்கு! மேலும் அதன்
நெருங்க முடியாத மதம்பிடித்த நிலை போல
கடுமையானவன் பெருமானே! உன் பகைவருக்கு!
					மேல்
# 95 ஔவையார்
இங்கு இருப்பவை, மயில்தோகை சூட்டப்பெற்று, மாலை அணியப்பெற்று
உடற்பகுதியாகிய திரண்ட வலிமையான காம்புகள் செப்பமிடப்பட்டு, நெய் பூசி,
காவலையுடைய அகன்ற மாளிகையில் இருப்பவை; அங்கு இருப்பவையோ,
பகைவரைக் குத்தியதால் கங்கும் நுனியும் முரிந்து
கொல்லனுடய களமாகிய குறிய இடத்தில் கிடப்பவை - எந்நாளும்
நிறைய இருந்தால் நன்றாகப் பக்குவமானதைக் கொடுத்து,
இல்லாவிட்டால் இருப்பதைப் பகிர்ந்துண்ணும்
வறியவரின் சுற்றத்திற்குத் தலைவனாகிய
தலைமையையுடைய எம் வேந்தனுடைய கூர்மையான நுனியையுடைய வேல்.
					மேல்
# 96 ஔவையார்
மலர்ந்த பூவையுடைய தும்பை மாலையை அணிந்த அழகிய வலிமையான மார்பினையும்,
திரண்டு நீண்ட பெரிய கைகளையும் உடைய என் தலைவனின் மகனாகிய இளைஞனுக்கு
பகை இரண்டு தோன்றின; ஒன்று
பூப் போன்ற வடிவினையுடைய மையுண்ட கண்கள் பசந்து தோள்கள் மெலிந்து
தன்னைப் பார்த்த மகளிரின் உள்ளத்தை கட்டிப்போட்டதால் அவர் கொண்ட துயரால் ஏற்பட்டது; ஒன்று
விழாக்காலம் இல்லையென்றாலும் உண்டாக்கப்படும் உணவு யாருக்கும் இல்லாமற்போகாமல்
செம்மறி ஆட்டுத்தசையை தின்ற சுற்றத்துடனே, நீர்த்துறைகளிலுள்ள நீரை
அவனது யானைகள் குடித்துவிடும் என்ற அச்சத்தால்
அவ்விடத்தில் தங்குவதை அவன் படையெடுத்துச்செல்லும் ஊர் மக்கள் வெறுக்கும் பகை.
					மேல்
# 97 ஔவையார்
போருக்காகப் புறப்பட்டு விரும்பி உறையிலிருந்து உருவிய வாள்கள்
எதிர்த்தவரின் காவல் மிகுந்த மதிலை அழித்ததினால்
பகைவரின் உடலை உருவக்குத்தி ஒரம் சிதைந்து தம் உருவை இழந்தன;
வேல்களோ, பகைவர்கள் நிறைந்திருந்த அரண்களைக் கடந்து, அவர்களின்
நறிய கள்ளினையுடைய நாட்டினை அழித்ததால்
சுரையோடு பொருந்திய கரிய காம்புடனே
ஆணிகள் கழன்று நிலைகெட்டன;
களிறுகளோ, கணையமரங்கள் தாங்கி நிறுத்திய கதவுகளை முட்டி, அவர்களின்
திரளான களிறுகளையுடைய அரண்களை உடைத்ததால்
பருத்தவாய்ப் பிணிக்கப்பட்டிருக்கும் பூண்களை இழந்தன;
குதிரைகளோ, பலபக்கங்களிலிருந்து வந்து ஒன்றாய்த் தாக்கிய வீரர்களின்
பொன்னால் செய்த புதிய மாலையணிந்த மார்புகள் உருவிழக்கும்படி ஓடுவதால்
போர்க்களத்தில் போரிட்டு வருந்திய குருதியால் கறைபடிந்த குளம்பினைப் பெற்றன;
அவன் தானும், நிலத்தைத் தன்னுள் அடக்கிய கடல் போன்ற பெரும்படையுடன்
பொன்னால் செய்த தும்பைமாலையைச் சூடி, கழல் வடிவிலும், கிண்ணி வடிவிலும் உள்ள
அம்புகள் வந்து தைத்ததால் துளைகளுள்ள கேடகத்தைக் கொண்டிருந்தான்;
அவ்விடத்தில் அவனுடன் மாறுபட்டோர் பிழைப்பது எப்படி? அகன்ற தாளினையும்
ஒன்றோடொன்று பின்னிக்கிடக்கும் கதிர்களையுடைய நெல்லினையுடைய தலைமை பொருந்திய பழைய ஊர்
உங்களுக்கே உரியதாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் புறப்பட்டுப்போய் அவனுக்குக்
கப்பம் கட்டவேண்டும், மறுத்தால்
அதற்குச் சம்மதிக்கமாட்டான் அந்த வெல்லும் போரினையுடையவன் என்று
நான் சொல்லவும் நீங்கள் தெளிவுபெறாமலிருந்தால், மெல்லிய இயல்பும்
கழல் கொடியின் கனியால் பகுத்துப் பின்னப்பெற்ற சிலவாகிய கூந்தலையுடைய
குறிய வளையல்களையுடைய உமது உரிமை மகளிரின் தோளைப் பிரிந்து வாழப்போவது
வியப்பிற்குரியது ஆகாது, அதனை அறிந்து போரிடுங்கள்.

# 98 ஔவையார்
போர்முனைகளில் பகைவரின் பகைமை முற்றிலும் தொலையப்
போரிடுவதால் தேய்ந்து குறுகிப்போன நுனியையுடைய கொம்புகளையுடைய உன்
களிற்றுக்கூட்டம் செல்வதைக் கண்டவர்கள்
தங்கள் கோட்டை மதில்களிலுள்ள கதவுகளையும், கணையமரங்களையும் புதிதாக்கவும்,
களத்தில் மடிந்தவர்களின் பிணங்கள் சிதையும்படியாக போர்க்களத்தைக் கலக்கிச்
செல்வதால் வருந்திய கறைபடிந்த குளம்புகளைக் கொண்ட உனது
நல்ல குதிரைக்கூட்டம் செல்லுவதைக் கண்டவர்கள்
கவைக்கோலினால் எடுத்த முள்ளினால் தங்கள் காட்டரண்களின் வாயில்களை அடைக்கவும்,
பகைவரின் மார்பில் தைத்து வளைந்துபோகாமல் ஊடுருவிச் செல்லும்
உறையில் செறிக்கப்படாத உன்னுடைய வேலினைக் கண்டவர்கள்
தங்கள் கேடயத்தின் காம்புடன் பிடியை இறுக்கவும்,
வாள் பட்டு வடுக்கள் பரந்த மார்பினையுடைய உன்
வீர மைந்தர்களின் வலிமையைக் கண்டவர்கள்
தம் புண்ணினால் பட்ட குருதியையுடைய அம்புகளைத் தம் அம்பறாத்தூணிகளில் அடக்கிக்கொள்ளவும்
நீதான், புண்பட்டோருக்குக் காவலாக வெண்சிறுகடுகைப் புகைக்கவும், அதனை மதிக்காமல், விரைவாக
வந்து சேரும் முறைமையை மரபாகக் கொண்ட, வீட்டுக்கு வெளியில் நின்றே உயிரைக் கொண்டுபோகும்
கூற்றத்தைப் போன்றவனாதலால், பகைவர்
வருந்தும்படியாக அழிந்துபோகுமோ, வரப்புகளைத் தழுவிக்கொண்டு
வளைந்து நிற்கும் நெற்கதிர்கள் அசைகின்ற கழனியோடு
மிக்க நீர்ப்பரப்பையுடைய அவர்களின் அகன்ற இடத்தையுடைய நாடு- (வருந்தும்படியாக அழிந்துபோகுமோ)

# 99 ஔவையார்
தேவர்களைப் போற்றி வழிபட்டும், அவர்களுக்கு வேள்வியுணவைக் கொடுத்து உண்பித்தும்
பெறுவதற்கு அரிய மரபினையுடைய கரும்பினை இந்நாட்டுக்குக் கொண்டுவந்தும்,
கடலுக்குட்பட்ட நிலத்தில் ஆட்சிச்சக்கரத்தைச் செலுத்திய
மிகப்பழைய மரபை உடைய உன் முன்னோர்களைப் போல
பொன்னால் செய்யப்பட்ட கழலினையுடைய காலினையும், பெரிய பனந்தோடால் ஆகிய மாலையையும்
பூக்கள் நிறைந்த சோலைகளையும், புதிய ஈரம் புலராத புலாலையுடைய நெடிய வேலையும்,
கேழல்,மேழி,கலை,ஆளி,வீணை,சிலை,கெண்டை ஆகிய ஏழு இலாஞ்சனையும், நீங்காத அரசுரிமையையும்
தவறு இல்லாமல் பெற்றும் மனநிறைவு அடையாதவனாய், போரை விரும்பி
ஒலிக்கும் ஓசை மிக்க முரசையுடைய ஏழு அரசர்களோடு பகைத்து
அவர்களை எதிர்த்துச் சென்று போரில் வென்று உன் வலிமையை உலகோர்க்குக் காட்டிய
அக்காலத்திலும் பாடுபவர்க்கு அரியவனாக இருந்தாய், இக்காலத்திலும்
பரணன் பாடினான் அல்லவா! நீ
பகைமை மிக்க கோவலூரை அழித்து, உன்
அரண்களை அழிக்கின்ற ஆட்சிச்சக்கரத்தை ஏந்திய தோள்களை - (பரணன் பாடினான் அல்லவா!)
					மேல்
# 100 ஔவையார்
கையிலே வேல், காலிலே கட்டப்பட்ட வீரக்கழல்,
உடம்பிலே வியர்வை, கழுத்தில் பச்சைப்புண்,
பகைவர் அழிவதற்கு ஏதுவாகிய வளரும் இளம் பனையின்
உச்சியில் பறிக்கப்பட்ட குத்தும்தன்மை கொண்ட வெண்மையான தோட்டையும்
வெட்சியின் பெரிய மலரையும், வேங்கை மலரோடு கலந்து
சுருண்ட கரிய மயிர் பொலிவுபெறச் சூடி
புலியுடன் சண்டையிட்ட வலிமை மிக்க யானையைப் போல
இன்னமும் நீங்காது சினம் என்பதால், ஐயோ,
பிழைத்துப்போக மாட்டார் இவனைக் கோபமூட்டியவர்கள்,
பகைவரை வெகுண்டு பார்த்த கண்கள், தன்னுடைய
புதல்வனைப் பார்த்தும் சிவப்பு மாறவில்லை.
					மேல்
 



# 101 ஔவையார்
ஒரு நாள் சென்றாலும் சரி, இரு நாள் சென்றாலும் சரி,
பல நாட்கள், மீண்டும் மீண்டும், பலரோடு சென்றாலும் சரி,
முதல் நாளில் இருந்ததைப் போன்ற அதே விருப்பத்தை உடையவன்;
அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட யானையையும், இலக்கணம் அமைந்த தேரினையும் உடைய அஞ்சியாகிய
அதியமான் நமக்குப் பரிசில் தரும் காலத்தை
நீட்டினாலும், நீட்டாவிட்டாலும், யானையின்
கொம்புகளுக்கு இடையே வைத்த கவளத்தைப் போல
நமது கைக்குக் கிடைத்தது, அது என்றும் பொய்க்காது,
உண்ண ஆசைப்பட்ட நெஞ்சமே!
வருந்த வேண்டாம், வாழ்க அவன் தாள்.
					மேல்
# 102 ஔவையார்
காளைகள் இளமையானவை, நுகத்தடியை அறியமாட்டா,
வண்டியிலோ நிறையப் பண்டங்கள் ஏற்றப்பட்டுள்ளன,
இறக்கத்தில் இறங்கினாலும், மேட்டில் ஏறினாலும்,
அங்கே என்ன நடக்கும் என்று அறிவார் யார் என்று, உமணர்கள்
வண்டியின் கீழ்ப்பக்கமாகக் கட்டியிருக்கும் உபரி அச்சுப் போல
புகழ் விளங்கிய கொடுப்பதற்காகக் கவிழ்ந்த கையினையுடைய உயர்ந்தவனே! திங்களாகிய
நாள் நிறைந்த முழுமதியைப் போன்று இருக்கிறாய், இருள்
எங்கே இருக்கிறது, உன்னுடைய குடைநிழலில் வாழ்பவர்க்கு?
					மேல்
# 103 ஔவையார்
தோளின் ஒரு பக்கத்தில் பதலை என்ற தோல் இசைக்கருவி தொங்க, இன்னொரு பக்கம்
உள்ளே துளையை உடைய சிறிய முழவு தொங்க, இவற்றைச் சுமந்தவாறே
எமக்கு உணவிட்டு, கவிழ்த்துக்கிடக்கும் உண்கலத்தைத் திருப்பிப்போட வைப்பவர் யார் என்று
நீண்ட வழியின் தொடக்கத்தில் நின்றுகொண்டிருக்கும் சில வளையல்களே அணிந்திருக்கும் விறலியே!
அவனிடம் செல்ல எண்ணினால், அவன் ஒன்றும் நெடுந்தொலைவில் இல்லை,
பகைப்புலத்தை எரியூட்டியதால் எழுந்த கரிய புகைமூட்டம்
மலையைச் சூழும் முகில் போல, இளங்களிற்றைச் சூழும்
பகை நாட்டில் இருக்கின்றான் பல வேல்களையுடைய அஞ்சி என்பான்,
ஒருபொழுதும் ஓயாமல் உண்ணவும் தின்னவும் செய்தலால் காய்ந்துபோகாத உண்கலத்தில்
மெழுகால் செய்யப்பட்ட மெல்லிய அடை போல கொழுத்த நிணம் மிகுந்திருக்க,
உலகமே வறுமையுற்றுப் போனாலும்
உன்னைப் பாதுகாக்கும் வல்லமையாளன், அவன் பாதங்கள் வாழ்வதாக.
					மேல்
# 104 ஔவையார்
வீரர்களே! உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள், உமக்கு ஒன்று அறிவிப்பேன்,
ஊரிலுள்ள சிறுவர்கள் விளையாடக் கலங்கிப்போகும்
முழங்கால் அளவேயான சிறிது நீரில் யானையைக் கொன்று வீழ்த்தும்
இழுக்கும் ஆற்றலையுடைய முதலையைப் போன்று, என் தலைவனின்
நுண்ணிய ஆற்றலுள்ள பல்வேறு அரிய செயல்களை எண்ணிப்பாராமல்,
அவனை ‘இளையவன்’ என்று இகழ்ந்தால் நீங்கள் வெற்றிபெறுதல் அரிது.
					மேல்
# 105 கபிலர்
சிவந்த அணிகலன்களைப் பெறுவாய், ஒளிமிகும் நெற்றியையுடைய விறலியே!
அகன்ற இடத்தையுடைய சுனையில் தழைத்துவளர்ந்த கரிய இதழ்களையுடைய குவளையின்
வண்டுகள் மொய்க்கும் புதிய மலரில் குளிர்ந்த துளி விழுமாறு
மழை பெய்தாலும், பெய்யாவிட்டாலும், அருவிநீர்
கொள்ளுக்காக உழுத பரந்த நிலத்தின் பக்கத்தில் வாய்க்காலாகச் செல்ல
கண் ஏணியையுடைய உயர்ந்த மலையின் சிகரந்தோறும் வழிந்து கீழே ஒழுகும்
நீரைவிட இனிய இயல்பையுடைய
பாரிவேளிடம் பாடியவளாய்ச் சென்றால் - (சிவந்த அணிகலன்களைப் பெறுவாய்)
					மேல்
# 106 கபிலர்
நல்லவை என்றும் தீயவை என்றும் சொல்லமுடியாத குவிந்த பூங்கொத்துக்களையும்
புல்லிய இலைகளையும் உடைய எருக்கம்பூ என்றாலும், ஒருவன் தனக்குடையதைக் கொடுத்தால்
தெய்வங்கள் விரும்பவில்லை என்று சொல்லமாட்டா, அதைப் போல
அறிவில்லாதவரும், அற்பகுணங்களையுடையவரும் சென்றாலும்
கொடையளிப்பதைக் கடமையாகக்கொண்டவன் பாரி.
					மேல்
# 107 கபிலர்
பாரி பாரி என்று சொல்லி, அவனது பல புகழையும் வாழ்த்தி
அந்த ஒருவனையே புகழ்கின்றனர் செம்மையான நாவையுடைய அறிவுடையோர்,
பாரி ஒருவன் மட்டும் இல்லை
மாரியும் உண்டு இங்கு உலகத்தைக் காப்பது.
					மேல்
# 108 கபிலர்
குறமகள் அடுப்பில் எரித்த காய்ந்த கடைசி வரை எரிந்த கொள்ளிக்கட்டை
சந்தனம் என்பதால், அதனுடைய நறுமணப்புகை, பக்கத்திலிருக்கும்
மலைச்சரிவில் இருக்கும் வேங்கைமரத்தின் பூவையுடைய கிளைகளில் தவழும்
பறம்புமலை அவனைப் பாடியவர்க்கு உரிமையாகிவிட்டது. அறத்தை மேற்கொண்டு
பாரியும் பரிசிலர் இரந்து வேண்டினால்
வரமாட்டேன் என்று கூறாமல் அவர் எல்லையில் போய் நிற்பான்.
					மேல்
# 109 கபிலர்
வியக்கத்தக்கது பாரியின் பறம்பு மலை!
பெருமை கொண்ட முரசுகளையுடைய மூன்று வேந்தர்களும் ஒன்று கூடி முற்றுகையிட்டாலும்,
உழவர் உழாமல் கிடைக்கும் பயன்கள் நான்கினை அது உடையது,
ஒன்று, சிறிய இலையையுடைய மூங்கிலில் நெல்விளையும்,
இரண்டு, இனிய சுளைகளையுடைய பலாவின் பழம் பழுத்துக்கிடக்கும்,
மூன்று, செழிப்பான கொடியை உடைய வள்ளி, கீழே கிழங்கு வைத்திருக்கும்,
நான்கு, அழகிய நிறத்தையுடைய நீலநிறம் பாய்ந்து தேன் முதிர்தலால் தேனடை அழிந்து
இறுகிய நெடிய குன்றத்தில் தேன் சொரியும்,
அகல, நீள, உயரத்தால் வானிடத்தைப் போன்றது அவன் மலை, வானத்து
மீன்களைப் போன்றவை அங்குள்ள சுனைகள், அவ்விடத்தில்
மரங்கள்தோறும் கட்டிய களிறுகளைக் கொண்டவர்கள் என்றாலும்
இடெமெல்லாம் பரப்பிய தேரினைக் கொண்டவர்கள் என்றாலும்
உங்கள் முயற்சியால் கொள்ளமுடியாது, உமது வாள் வலிமைக்குப் பயந்து அவன் தரவும்மாட்டான்
எனக்குத்தெரியும் அதனைப் பெற்றுக்கொள்ளும் வழி,
வடித்து முறுக்கப்பட்ட நரம்பினையுடைய சிறிய யாழை வாசித்து
நறுமணமிக்க தழைத்த கூந்தலையுடைய உமது விறலியர் உமது பின்னே வர,
ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் செல்வீர்களேயானால்
நாட்டையும் மலையையும் சேர்த்தே தருவான்.
					மேல்
# 110 கபிலர்
நேர் நின்று வெல்ல வல்ல படையைக் கொண்டுள்ள வேந்தராகிய நீங்கள் மூவரும் கூடிநின்று
போரிட்டாலும் பறம்பு நாட்டை வெற்றிகொள்ள இயலாது,
முந்நூறு ஊர்களைக் கொண்டது குளிர்ந்த நல்ல பறம்பு நாடு,
அந்த முந்நூறு ஊர்களையும் பரிசிலர் பெற்றுக்கொண்டனர்,
நானும் பாரியும் மட்டும் இருக்கிறோம்,
மலையும் உள்ளது, நீங்கள் பாடிக்கொண்டு வந்தால்.
					மேல்
 




# 111 கபிலர்
வியப்பிற்குரியது இந்தப் பெரிய கரிய குன்றம்,
அதனை வேலால் வெல்லுதல் வேந்தர்களுக்கு அரியது ஆகும்,
நீலத்தினது இணையான மலர்களைப் போன்ற மையுண்ட கண்களைக் கொண்ட
கிணைமகளுக்கு அது எளிது, அவள் பாடிக்கொண்டு வந்தால்.
					மேல்
# 112 பாரி மகளிர்
போன மாதம், அந்த முழுமதி நாளில்
எம் தந்தை எங்களிடம் இருந்தார், எமது குன்றையும் பிறர் கொள்ளவில்லை,
இந்த மாதம் இந்த முழுமதி நாளில்
வென்று முழக்குகின்ற முரசினையுடைய வேந்தர்கள் எமது
குன்றையும் கைப்பற்றினர், நாங்கள் எம் தந்தையையும் இழந்தோம்.
					மேல்
# 113 கபிலர்
மது இருந்த சாடியை வாய் திறக்கவும், ஆட்டுக்கிடாயை வெட்டவும்
சமைத்து அமைந்து முடியாத நிறைந்த துவையலையும், ஊன் சோற்றையும்
விரும்பியபடியெல்லாம் கொடுக்கும் மிக்க செல்வம் நிறைந்து
எம்மோடு நட்புடன் இருந்தாய் முன்னர்; இப்போதோ
பாரி இறந்துபோய்விட, நாங்கள் கலங்கிச் செயலிழந்து
நீரொழுகும் கண்ணுடையவராய் வணங்கி உன்னை வாழ்த்திச்
செல்கின்றோம், வாழ்க, பெரும் புகழையுடைய பறம்புமலையே!
சித்திரக்கோலால் தீட்டப்பட்ட திரண்ட முன்கையிலுள்ள குறிய வளையல்களை அணிந்த மகளிரின்
மணக்கின்ற கரிய கூந்தலைத் தீண்டுவதற்கு உரியவரை நினைத்து.
					மேல்
# 114 கபிலர்
இங்கே நிற்பவருக்குத் தெரியும் சிறிது எல்லை
சென்று நிற்பவர்க்கும் தெரியும் நிச்சயமாக,
யானை மென்று துப்பிய கவளத்தின் சக்கை போல
மதுவைப் பிழிந்து போட்ட சக்கையையுடைய சிதறல்களிலிருந்து
நீண்டதாய் மதுச்சேறு ஒழுகும் முற்றத்தையுடைய
தேர்களை வாரிவழங்கும் நாளோலக்கத்தையுடைய உயர்ந்தவனின் குன்றம்.
					மேல்
# 115 கபிலர்
ஒரு பக்கம் அருவி ஆரவாரிக்கும், ஒரு பக்கம்
பாணருடைய உண்கலங்கள் நிரம்ப ஊற்றுவதற்காக
வடித்துவிட்டுச் சிந்திய இனிமையான கள்ளாகிய மது
கற்களை உருட்டிக்கொண்டு ஒழுகும்; பலவேல்களையும்
தலைமை பொருந்திய யானையையும் உடைய வேந்தர்களுக்கு
இன்னான் ஆகிய இனியவனின் குன்றினில் - (ஒரு பக்கம் அருவி ஆரவாரிக்கும், ஒரு பக்கம் ... ... )
					மேல்
# 116 கபிலர்
இனிய நீரையுடைய பெரிய ஆழமான சுனையில் பூத்த குவளையின்
மொட்டு அவிழ்ந்து புறவிதழ் ஒடிக்கப்பட்ட முழுப் பூ புரளுகின்ற அல்குலையும்
மிக்க அழகையுடைய குளிர்ந்த கண்களையும் இனிய முறுவலையும் உடைய மகளிர்
புல் முளைத்து மூடிக்கிடக்கும் பலவாய்ப் பிரிந்து செல்லும் வழிகளையுடைய முள் செறிந்த வேலியினையும்,
பஞ்சு பரந்த முற்றத்தினையுமுடைய சிறிய வீட்டில்
பீர்க்கங்கொடி முளைத்த சுரைக்கொடி படர்ந்த இடத்தில்
ஈச்ச மர இலைகளின் குப்பை மீது ஏறி நின்று உமணர்கள்
உப்புமூடைகளை ஏற்றிக்கொண்டு வரிசையாகச் செல்லும் வண்டிகளை எண்ணிக்கொண்டிருக்கின்றனர்,
இதைக்கண்டு வருந்துகிறேன், கெடுவதாக என் வாழ்நாள்;
மலர்கள் நிறைந்த சோலையில் மயில்கள் எழுந்து ஆடவும்,
தமக்குப் பழக்கமான உயர்ந்த மலைச்சரிவுகளில் குரங்குகள் தாவியோடித்திரியவும்
குரங்குகளும் உண்டு வெறுத்துப்போய் உண்ணாத பலாப்பழங்கள்
பயன்தரும் காலமாக இல்லாதிருந்தும் மரங்கள் விளைந்து கொடுக்கும்
புதுவருவாய் அற்றுப்போகாத அகன்ற மலையைப் போன்ற
தலைமையுடன் விளங்கும் நெடிய மலையில் ஏறி, தமது தந்தையாகிய
மிகுந்த கள்ளினையும், கூரிய வேலினையும் உடைய பாரியின்
அருமையை அறியாதவர்கள் போரினை ஏற்று வந்த
வெற்றியையுடைய சேனையையுடைய வேந்தரின்
பொன்னால் செய்யப்பட்ட அணிகலன் அணிந்த மனம் செருக்கிய குதிரைகளை எண்ணுவோர்.
					மேல்
# 117 கபிலர்
கரியவன் என்னப்படும் சனிக்கோள் புகைந்தாலும், தூமகேது என்னப்படும் எரிகற்கள் தோன்றினாலும்
வெள்ளிக்கோள் தெற்குப்பக்கம் நகர்ந்தாலும்
வயலிடங்களில் நீர் நிறைய, புதர்களில் பூக்கள் மலர
வீட்டிடத்தில் கன்றினை ஈன்ற விருப்பததைச் செய்யும் கண்களைக் கொண்ட
பசுக்களின் நீண்ட கூட்டம் நல்ல புல்லினை மேய
ஆட்சி செம்மையாக இருந்ததால் ஆன்றோர் பெருகி,
தவறாமல் மழை பெய்கின்ற புன்செய்க் காடுகளைக் கொண்டது,
பூனைக்குட்டியின் முள் போன்ற பற்களைப் போல
பசிய இலைகளைக் கொண்ட முல்லை மொட்டுவிடும்
நுட்பமான தொழில்திறம் உள்ள வளையல்களை அணிந்த மகளிரின் தந்தையின் நாடு.
					மேல்
# 118 கபிலர்
குளத்தங்கரையின் உச்சி படுத்துக்கிடக்கும் பாறைகளும் எழுந்து நிற்கும் கற்பாறைகளும் கலந்தது,
கரையோ, எட்டாம் நாள் பாதி மூடிய திங்கள் போன்று, உச்சியைத் தொட்டுக்கொண்டிருக்கும் நீரை உடையது;
தெளிந்த நீரைக்கொண்ட அந்தக் குளம் பாதுகாப்பார் இல்லாமல் உடையும் நிலையில் உள்ளது.
இவ்வாறாகிப்போனது, கூர்மையான வேலையும், திரண்ட வலிமையும்,
தேரைக் கொடுக்கும் கொடைத்தன்மையையும் உடைய பாரியின் பறம்பு நாடு.
					மேல்
# 119 கபிலர்
கார்கால மழை பெய்து ஓய்ந்த காண்பதற்கு இனிய வேளையில்
யானை முகத்தின் புள்ளிகளைப் போன்று தெறுழின் பூக்கள் மலர,
சிவந்த புற்றில் பிடித்த ஈசலை இனிய மோரில் இட்டுச்சமைத்த புளிக்கூட்டை உடையது,
மெல்லிய தினையாகிய புதுவருவாயை உடையது, இனி அது கெட்டுப்போய்விடுமோ?
நிழலே இல்லாத நீண்ட வழியில் நிற்கும் தனிமரம் போல
முரசுடைய வேந்தர்களைக் காட்டிலும்
இரவலர்களுக்குக் கொடுக்கும் வள்ளல் பாரியின் நாடு.
					மேல்
# 120 கபிலர்
வெம்மை முதிர்ந்த வேங்கை மரத்தையுடைய சிவந்த மேட்டு நிலத்தில்
கார்காலத்து மழையால் மிகுந்த பெரிய அளவில் பக்குவமடைந்த ஈரத்தில்
புழுதி கலக்க பலமுறை உழுது விதைத்து
பல்கள் உள்ள கலப்பையால் இலேசாக உழுது நெருங்கிய பயிர்களை விலக்கி, பல கிளைகளையுடைய நிலையில்
களைகளை அடியோடு பறித்தலால் இலை தழைத்துப் பெருகி
மென்மையான மயிலின் அண்மையில் ஈன்ற பேடையைப் போல ஓங்கி
கரிய தண்டு நீண்டு எல்லாமே ஒன்றாய்ப் பாளை விரிந்து
கதிரின் அடியும் தலையும் குறைவில்லாமல் நிறையக் காய்த்து
நன்றாக விளைந்த புதிய வரகினை அறுக்கவும்,
தினையைக் கொய்யவும், எள்ளின் இளங்காய் முற்றவும், அவரையின்
செழுமையான கொடியில் வெண்மையான காய் பறிக்கும் பக்குவத்தில் இருக்கவும்
நிலத்தில் புதைக்கப்பட்ட முற்றிய மதுவாகிய தேறலை
புல் வேய்ந்த குடிசைகளில் மக்கள் குடியுள்ள இடங்கள்தோறும் பருகக்கொடுக்கவும்,
மணமிக்க நெய்யில் கடலை துள்ளுமாறு வறுத்துச் சேர்த்து, சோற்றை ஆக்கி உண்டு
பெரிய தோள்களையுடைய மகளிர் உண்கலன்களைக் கழுவவும்,
இவ்வாறாக வருத்தமில்லாத புதுவருவாயையுடையது இனிமேல் அழிந்துவிடும் போலும்;
கரிய பலவாகிய கூந்தலையுடைய மடந்தையர்களின் தந்தையாகிய,
அசைகின்ற மூங்கில்கள் ஒலிக்கும் உயர்ந்த உச்சியையுடையனும், புலவர்கள்
பாடி ஓயாத தன்மையையுடையவனும், பகைவர்கள்
புறமுதுகிட்டு ஒடும்போது அவரின் கழல்கள் ஆரவாரிக்கும் காட்சியைக் கண்ட
போரை விரும்பிய முருகனைப் போன்ற பெரிய வெற்றியையும் உடையவனது நாடு.
					மேல்
 




# 121 கபிலர்
ஒரு திசையிலிருக்கும் ஒரு வள்ளலை நினைத்து, நான்கு திசைகளிலிருந்தும்
பரிசில் பெற மக்கள் பலரும் வருவார்கள்,
அவர்களின் தகுதியை அறிவது மிகவும் கடினம், நிறைய
அள்ளிக்கொடுப்பது மிகவும் எளிது, பெரிய வள்ளன்மை உடைய தலைவனே!
அதனை நன்கு அறிந்திருப்பாயென்றால்
புலவர்களின் தகுதியைப் பார்க்காமல் எல்லாரையும் ஒன்றாகக் கருதுவதைத் தவிர்ப்பாயாக,
					மேல்
# 122 கபிலர்
கடலால் கொள்ளப்பட முடியாதது, பகைவர் கைப்பற்ற முயலமாட்டார்,
வீரக்கழல் அணிந்த திருத்தமான அடிகளைக் கொண்ட மலையமான் திருகுடிக் காரியே! உனது நாடு
வேள்வித்தீயைக் காக்கும் அந்தணர்களுடையது
குறையாத செல்வத்தையும், வெற்றி பொருந்திய படையையும் உடைய 
மூவேந்தருள் ஒருவன் ‘எனக்கு வலிமை சேர்க்கும் துணையாக இரு’ என்று
உன்னைப் புகழ்ந்து தருகின்ற பொருள், உனது குடியை
வாழ்த்திக்கொண்டு வரும் இரவலருக்குச் சொந்தமாகும்,
வடமீனாகிய அருந்ததி விண்மீனைப் போன்ற கற்பினையும், மென்மையான மொழியினையும் உடைய
உன் மனைவியின் தோள் மட்டுமே உனக்கு உரிமையானது என்பதைத்தவிர
உனக்கு என்று வேறு ஒன்றும் இல்லையெனினும் நீ பெருமிதம்கொண்டு விளங்குகிறாய். 
					மேல்
# 123 கபிலர்
ஒரு நாளின் காலையிலே மதுவை உண்டு, நாளோலக்கத்து மகிழ்ச்சியை அனுபவிக்கும்போது
தேர்களை வழங்குதல் யார்க்கும் எளியது,
அழியாத நல்ல புகழோடு விளங்கும் மலையமான் திருமுடிக்காரி
மது அருந்திய நிலையில் இல்லாமல் வழங்கிய அணிகலன்களால் அணியப்பட்ட உயர்ந்த தேர்
நல்ல பயனைத் தரும் முள்ளூரின் மேல்
பெய்த மழைத்துளிகளிலும் பலவாகும்.
					மேல்
# 124 கபிலர்
போன நாளோ நல்ல நாள் இல்ல, போகின்றபோதே பறவைகள் தீயசகுனம் காட்டுகின்றன,
புகுந்த நேரமோ நல்ல நேரம் இல்லை, சொன்ன மொழிகளோ திறம்பட்டதாக இல்லை,
இருப்பினும் வெறுங்கையாய்த் திரும்பியதில்லை, ஒழுங்குபட
ஓசை நிறைந்து ஒலிக்கும் அருவியையுடைய
பெருமை பொருந்திய மலையனைப் பாடிச் சென்றவர்கள் - (வெறுங்கையாய்த் திரும்பியதில்லை)
					மேல்
# 125 வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார்
பருத்தி நூற்கும் பெண்ணின் சிக்கெடுத்த பஞ்சினைப் போல
நெருப்பால் சுட்டதன் சூடு தணிந்த நிணம் படர்ந்த கொழுத்த இறைச்சித்துண்டினை
நிறைய கள் ஊற்றிய உண்கலத்தோடு மாற்றி மாற்றி
உண்போமாக, எம்முடைய தலைவனே! உன்னைக் காண்பதற்காக வந்திருக்கிறேன் -
பகைவரின் வலிமையை அழித்த
வல்லவனே! நீ மகிழ்வுடன் இருக்கும் அரசவை இருக்கையின்போது;
உழுதுவிட்டு வந்த வலிமை மிக்க பகடு, வைக்கோலைத் தின்றாற்போல
நல்ல அமிழ்தம் ஆவதாக, நீ மிக விரும்பி உண்ணும் கள்;
மலையைப் போன்ற யானை இறந்துபட
எதிர்நின்று கொன்று வென்றவனும் உன்னையே புகழ்ந்து கூறுவான்
‘நம்மை வெற்றிபெறச் செய்தவன் இவன்தான்’ என்று;
வீரக்கழலாகிய அணிகலனால் சிறந்த சிவந்த அடியால் போர்க்களத்தைக் கைக்கொள்வதற்காக
விரைந்து வந்து போரைத் தடுத்த
வலிய வேலினையுடைய மலையன்மட்டும் இல்லாமற்போயிருந்தால்
நல்ல போரினை வெல்லுதல் நமக்கு எளிதாயிருந்திருக்கும் என்று
தோற்றுப்போனவனும் உன்னையே புகழ்ந்து கூறுவான்,
நம்மைத் தோல்வியுறச்செய்தவன் இவன் என்று;
ஆதலால் நீ ஒருவனே ஒப்பற்றவன், பெருமானே! பெரும் மழைக்கு
இருப்பிடமாக அமைந்த உயர்ந்த மலையையுடைய
சிறப்புக்குத் தகுதியான செவ்வேளைப் போன்றவனே! உன்னை நட்பாகவும் பகையாகவும் பெற்றவர்க்கு
					மேல்
# 126 மாறோக்கத்து நப்பசலையார்
பகைவரின் யானைகளின் நெற்றிப்பட்டத்துப் பொன்னைக்கொண்டு
பாணர்களின் தலை பொலிவுபெறும்படியாகச் செய்து
வாடாத பொற்றாமரையைச் சூட்டிய சிறந்த தலைமையைக் கொண்ட
புறமுதுகிட்டு ஓடாத கொள்கையைப் பூண்ட பெரியோன் மரபில் வந்தவனே!
உன் புகழைப் பாட வல்லவர்களாய் இராதபோதிலும், விரைந்து
உன்னிடம் உன் புகழைச் சொல்லுவோமானால், இரவுநேரம்
தூங்கிப்போனதைப் போல செறிந்த இருளையுடைய சிறுகாட்டையும்
பறை ஒலி போன்ற ஒலியை எழுப்பும் அருவியையும் உடைய முள்ளூருக்கு வேந்தனே!
அழிக்கவே முடியாத இயல்பினையுடைய உன் சுற்றத்தோடுகூட அழகு பெற
உலகத்தில் பரந்துகிடக்கும் மக்களுக்கெல்லாம்
அறிவில் மாசற்ற அந்தணனாகிய கபிலன்
உன்னிடம் பொருள்வேண்டி வருகின்ற புலவர்க்கு இனி இடமில்லாமல்
உன்னுடைய புகழ் பரந்து நிற்கப் பாடிவிட்டான், அதனால்
சினம் மிக்க படையையுடைய சேரன் மேற்குக் கடலில்
பொன் தரும் மரக்கலங்களைச் செலுத்திய அவ்விடத்தில்
பிற மரக்கலங்கள் எவ்வாறு செல்ல முடியாதோ அது போல் நாங்களும் ஆனோம்,
எமது வறுமை எங்களை உந்தித்தள்ள, உன் புகழ் எங்களை  இழுத்துவர இங்கு வந்து உன்
கொடைக்குணம் பற்றி சில சொற்களை நாங்கள் தொடுத்தோம், முள் போன்ற பற்கள் கொண்ட
பாம்பினைக் கொல்லும் இடியினைப் போல் முரசு மிகுந்து ஒலிக்க,
பட்டத்து யானையோடு வேந்தர்கள் போர்க்களத்தில் மடிய
அரிய போரில் பகைவர்கள் சிதறியோடும்படி தாக்கி, பெரிதும்
பொருந்தாத பகைவரைத் தடுக்கும்
பெண்ணை ஆற்றுப்பக்கத்தையுடைய நாட்டிற்கு உரிமையாளனே!
					மேல்
# 127 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
களாப்பழம் போன்ற கருநிறத் தண்டினை உடைய சிறிய யாழைக்கொண்டு
பாடுவதற்கு இனிய பாடலைப் பாணர்கள் பாடிப் பரிசில் பெற்றுச் சென்றுவிட
களிறுகள் இல்லாமல் போன வெறுமையான யானை கட்டும் தறியுள்ள இடங்களில்
காட்டு மயில்கள் கூட்டமாக வந்து தங்க,
கொடுப்பதற்கு இயலாத மங்கல நாண் ஒன்று மட்டுமே அணிந்த மகளிரோடு
பொலிவு குன்றியது ஆய் என்ற வள்ளலின் அரண்மனை என்பர்,
சுவைப்பதற்கு இனிய தாளிப்பையுடைய உணவைப்
பிறர்க்குத் தருதல் இல்லாமல், தம் வயிற்றை நிரப்பி,
மற்றவரால் பாராட்டப்படும் மேம்பட்ட புகழிலிருந்து நீங்கிய
முரசு முழங்கும் அரசர் அரண்மனை இதற்கு ஒப்பாகாது.
					மேல்
# 128 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
ஊர்ப்பொதுவிடத்தில் இருக்கும் பலாமரத்தின் பெரிய கிளையில் இருக்கும் பெண்குரங்கு
இரவலர்கள் அந்த மரத்தில் தூக்கிக் கட்டியிருக்கும் நன்கு இழுத்துக்கட்டப்பட்ட முழவின்
இனிதாக ஒலியெழுப்பும் தெளிவான முகப்பினைப் பலாக் கனி என்று நினைத்து அடிக்க,
அங்கிருக்கும் அன்னச்சேவல் அந்த ஓசைக்குப் பதில்கொடுக்கும் வகையில் எழுந்து ஒலிக்கும் 
கழலும்படி விடப்பட்ட வீரவளையையுடைய ஆய் என்பவனின் முகில் படியும் பொதிகை மலையை
ஆடல்மகளிர் வேண்டுமானால் நெருங்கலாமேயன்றி
பெருமை பொருந்திய மன்னர்கள் நெருங்க முடியாது.
					மேல்
# 129 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
குறுகலாக இறங்கும் கூரையைக் கொண்ட குடிசையில் வாழும் குறமக்கள்
வளைந்த மூங்கில்குழாயில் வார்த்திருந்த முதிர்ந்த மதுவை அருந்தி
வேங்கை மரத்தையுடைய முற்றத்தில் குரவைக்கூத்து ஆடுகின்ற
இனிய சுளைகளைக் கொண்ட பலாமரங்களைக் கொண்ட பெரிய மலையின் உரிமையாளன்
ஆய் அண்டிரன் என்னும் கொல்லுகின்ற போரைச் செய்யும் தலைவன்
இரவலர்களுக்கு வழங்கிய யானைகளின் எண்ணிக்கைக்கு, மேகங்களால் மறைக்கப்படாத
வானத்தில் விண்மீன்கள் பல தோன்றுமானால் அவற்றின் எண்ணிக்கை நிகராகாது, 
ஒரு விண்மீனுக்கும் அடுத்த விண்மீனுக்கும் இடையே கருமையான இடம் இராதபடி
எங்கும் பெரும் வெளிச்சம் தோன்ற விண்மீன்கள் நெருங்கியிருந்தால் அந்த எண்ணிக்கை சரியாக அமையும்.
					மேல்
# 130 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
மின்னும் மணிகளால் வளைத்துச்செய்யப்பட்ட பூண்களை அணிந்த ஆயே! உன் நாட்டுப்
பெண் யானைகள் ஒரு பிரசவத்தில் பத்துக் கன்றுகளை ஈனுமோ?
உன்னையும், உன் மலையையும் பாடி வருபவர்க்கு
உன் இனிய முகத்தை வெளிப்படுத்தி மகிழ்ச்சியுடன் நீ அளித்த
தலைமைச் சிறப்பு வாய்ந்த யானைகளை எண்ணிப்பார்த்தால், கொங்கர்களை
மேற்குக் கடல்பக்கம் நீ விரட்டிய போது
அவர்கள் விட்டுச்சென்ற வேலின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாகும்.

 




# 131 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
மேகக் கூட்டங்கள் சென்று தங்கும் உயர்ந்த மலைக்கு உரியவன்
சுரபுன்னைப் பூவால் தொடுக்கப்பட்ட தலைமாலையையும் குறிதப்பாத வாளையும் உடைய அண்டிரனின்
மலையைப் பாடினவோ?
களிறுகளை மிகக்கொண்டிருக்கின்றன, இந்தக் அழகுபெற்ற காடு - (அண்டிரனின் மலையைப் பாடினவோ?)
					மேல்
# 132 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
எல்லாருக்கும் முன்னதாக நினைக்கப்படவேண்டியவனைப் பின்பே நினைத்தேன் நான்,
அப்படி எண்ணிய என் உள்ளம் அழிந்துபோகட்டும், பிறரைப் புகழ்ந்த என் நா பிளந்துபோகட்டும்,
பாழ்பட்டுப்போன ஊரின் கிணற்றினைப் போலத் தூர்ந்துபோகட்டும் என் செவிகள், 
நரந்தை என்னும் நறுமணமுள்ள புல்லை மேய்ந்த கவரிமான்
குவளைப் பூவையுடைய புதிய நீரைக்கொண்ட சுனையில் பருகி அருகில் இருக்கும்
தகர மரத்தின் குளிர்ந்த நிழலில் தம் பெண்ணோடு தங்கும்
வடதிசையில் இருக்கிறது வானளாவிய இமயம்,
தென்திசையில் ஆய் குடியும் இல்லையென்றால்
இந்தப் பரந்த இடத்தையுடைய உலகம் தலைகீழாய்ப் போயிருக்கும்

# 133 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
மென்மையான இயல்பினையுடைய விறலியே! நீ ஆய் அண்டிரனின் நல்ல புகழை உன் செவியால்
கேட்டதேயன்றி அவனை நேரில் கண்டு அறியமாட்டாய்,
அவனைக் காண விரும்பினால் சிறந்த உன்
நறுமணம் கமழும் கூந்தலை மலையிலிருந்து வரும் காற்று கோதிவிட
பீலியையுடைய மயிலைப் போல கண்ணுக்கினியதாக நடந்து
மழை போன்ற கொடைத்தன்மையுள்ள
தேரினையுடைய வேள் ஆயைக் காணச் செல்வாயாக.
					மேல்
# 134 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
இந்தப் பிறப்பில் என்ன நன்மை செய்கிறோமோ, அது அடுத்த பிறவிக்கு உதவும் என்று
அறத்தை விலைபேசி விற்கும் வாணிகன் அல்ல ஆய்,
சான்றோர் பலரும் சென்ற நல்ல வழி என்று
அதனால் உண்டானது அவனது கொடைக்குணம்.
					மேல்
# 135 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
புலிகள் நடமாடும் உயரமான சிகரங்களை உடைய நீண்ட மலைத்தொடரின்
ஏறுவதற்குக் கடினமான பிளவுகளை ஒட்டிய சிறிய வழியில் ஏறுதலால் வருந்தி,
உடல் வளைந்து மெல்ல அடியிட்டு நடக்கின்ற நடையினையும்,
வளை அணிந்த கையினையும் உடைய விறலி என் பின்னே வர,
பொன்னைக் கம்பியாகச் செய்ததைப் போன்ற முறுக்கடங்கின நரம்பினை உடைய,
பொருளோடும் சேர்ந்த வரிப்பாட்டு இடந்தோறும் மாறி மாறி ஒலிக்க
படுமலை என்ற பாலைப்பண் நிலைபெற்ற பயன் பொருந்திய சிறிய யாழை
தளர்ந்த நெஞ்சத்துடன் ஒரு பக்கத்தில் அணைத்துக்கொண்டு
புகழ்தற்கு அமைந்த சிறப்பையுடைய உனது நல்ல புகழை நினைத்து
என்னுடைய தலைவனே! நான் வந்தேன், எப்பொழுதும்
உன்னுடைய அவைக்கு வரும் பரிசிலரைக் கண்டால், கன்றுகளுடன்
உரல் போன்ற காலினைக் கொண்ட யானைகளை அவருக்காக விரட்டிவிடும்
மலையையுடைய நாடனே! பெரிய வேள் ஆகிய ஆயே!
நாங்கள் உன்னிடம் வேண்டியது களிறும் அல்ல, குதிரையும் அல்ல,
ஒளிர்கின்ற சேணங்களை அணிந்த குதிரைகளைக் கொண்ட தேரையும் அல்ல,
பாணரும், புலவரும், பரிசிலர் முதலானவர்களாகிய அவர்கள்
தமக்கு என ஒரு பொருளை எடுத்துக்கொள்வார் என்றால் அதை எமக்கு உரியது என்று
கைப்பற்ற எண்ணாத பயன் மிகுந்த அரசுரிமையோடு
அப்படியே இருக்கக்கடவது உன் வாழ்நாள்கள், உன்னைக்
காண்பதற்காக மாத்திரமே நான் வந்தது. பகைவரை
மிக்க வலிமையை வென்ற ஆற்றலும்,
யாவரும் பொதுவாகப் புகழும் நாட்டையும் உடையவனே!
					மேல்
# 136 துறையூர் ஓடை கிழார்
யாழின் பத்தராகிய குடத்தின் வெளிப்பக்கத்தைப் போன்று
நூல் இழை சூழ்ந்த பல தையல்களின்
இடையில் உள்ள சிறிய துளைகளைப் பிடித்துக்கொண்டு ஒன்றையொன்று பின்னிக்கிடக்கிற
ஈர்களின் கூட்டத்துடன் தங்கியிருக்கும்
பேன்களாகிய பகையை ஒரு பகை என்று சொல்வேனோ?
உணவு உண்ணாததால் உடல் வாட்டமடைந்து
தெளிந்த நீரால் கண்கள் நிறைந்து
வியர்வை கசிந்து கிடக்கும் என் பல சுற்றத்தோடு
பசிநோய் துன்புறுத்தும் பகையை ஒரு பகை என்று சொல்வேனோ?
இப்படிப்பட்ட நிலைமையையும் அறியாமால்
‘உன் கையிலிருப்பதைக் கொடு’ என்று என் நிலை தளரும்படி
மரங்கள் செறிந்த குளிர்ந்த மலையின்
குரங்குகளைப் போல பறித்துக்கொள்ளும் இயல்புடைய அற்பமான குட்டையான வழிப்பறிக்கள்வர்கள்
பரந்து வந்து துன்புறுத்தும் பகையை ஒரு பகை என்று சொல்வேனோ?
எத்தகைய பகையையும் அறிந்திருப்பவன் ஆய்
என்று எண்ணி உன் பெயரைப் போற்றி
வாயாரப் உன் புகழை உயர்த்திக்கூறி உன்னை விரும்பி
ஞாயிறு காய்ந்த பாறைவழிகளில் ஏறி
இங்கு உன்னிடம் வந்த பெரும் ஆசையையுடையவர்கள் நாங்கள்
எங்களுக்கு ஒன்றைக் கொடுப்பவர்கள் பயன்கருதாமல் பிறர்க்கு ஒன்றைக் கொடுப்பவர்கள் ஆவார்,
பயன்கருதி பிறர்க்குக் கொடுப்பவர்கள் தங்களுக்குத் தாங்களே கொடுத்துக்கொள்பவர்கள் என்று
அவ்வளவாக நான் சொன்னேனாக,
உனக்குப் பொருத்தமானதை நீ ஆராய்ந்து
எமக்குப் பரிசில் கொடுத்து எங்களை அனுப்புவாயாக, நாள்தோறும்
குளிர்ந்த நீர் ஓடும் வாய்க்கால்களையுடைய துறையூரின் நீர்த்துறையின் முன் இருக்கும்
நுண்ணிய பல மணலைக் காட்டிலும் பல நாள் வாழ்வாயாக என்று வாழ்த்தி
உண்போம் பெருமானே! நீ தந்த செல்வத்தை.
					மேல்
# 137 ஒருசிறை பெரியனார்
ஒலிக்கும் முரசினையும் கூட்டமாக நிறைந்த யானைகளையும்
கடலாகிய எல்லையையும் உடைய வெற்றி பொருந்திய மூவேந்தரைப்
பாடும் ஆசையை இன்றளவும் நான் ஒருவனே அறியாதவன்,
நீதான் முன்காலம் தொடங்கி நான் அறிந்தவன், நீர் நிறைந்த
பள்ளத்திற்குள் விதைத்த விதை அது வறண்டுபோனாலும் சாகாது,
திரண்ட கழையைக் கொண்ட கரும்பினைப் போலத் தழைக்கும்,
மேகத்தால் முகந்து சொரியப்பட்ட நீர் கோடைக்காலத்தில் வெயில்காய்ந்தாலும்
மகளிர் கண் போன்ற குவளை மலர் பூக்கும்,
நாள்தோறும் கரிய அடிமரத்தையுடைய வேங்கை மலரின்
பொன்னை போன்ற பூவைச் சுமந்து
நீலமணி போன்ற நீர் கடலில் செல்லும், 
இத்தகைய வளம் வாய்ந்த மலைப்பக்கத்தையுடைய நாஞ்சில் என்னும் மலையையுடைய தலைவனே!
சிறிய வெள்ளிய அருவியையுடைய பெரிய மலையையுடைய நாட்டினையுடையவன் நீ,
நீ வாழ்வாயாக, உன் தந்தையும்
தாயுமாகிய உன்னைப் பெற்றவர்கள் வாழ்க
					மேல்
# 138 மருதன் இளநாகனார்
பசுக்கூட்டம் நிறைந்த வழிகள் பலவற்றைக் கடந்து,
மான்கூட்டம் நிறைந்த மலைகள் பின்னுக்குச் செல்ல,
மீன் கூட்டம் நிறைந்த நீர்த்துறைகள் பலவற்றையும் கடந்து
பரிசிலை நினைத்து வந்த பெருத்த ஓசையைத் தரும் சிறிய யாழையும்
கந்தல் ஆடையையும் உடைய முதிய பாணனே!
நீதான் பெரிய எண்ணம்கொண்டவன், உன் தலைவன்
இன்னொரு நாள் வா என்று சொல்லமாட்டான்,
அடர்ந்து வளர்ந்த கரிய கூந்தலையுடைய ஆய்ந்த அணிகலன்களை அணிந்த பெண்ணின் தலைவன்
கிளி தங்கிய பெரிய தினைப்புனத்தில்
மரப்பொந்தில் வைத்த பெரிய கதிரைப் போன்றவன். அதனால்
உன்னை முன்பும் வந்தவன் என்று அறிவார் யார்?
					மேல்
# 139 மருதன் இளநாகனார்
தோள்கள் வடுப்பட பல சுமைகளைச் சுமந்துவருகிற
குட்டையான மயிரையுடைய பல இளைஞர்களும்,
பாதங்கள் நோக நெடுநேரம் மலை ஏறிய
கொடி போன்ற இடையை உடைய விறலியர்களும்
உயிர்வாழவேண்டுமே  என்பதற்காக
பொய்யைக் கூறமாட்டேன், உண்மையையே கூறுகிறேன்,
புறங்கொடாத கொள்கையைப் பூண்ட வலிமையுடையவர்களின் வழிவந்தவனே!
உயர்ந்த உச்சியையுடைய உழப்படாத நாஞ்சில் என்னும் பெயரையுடைய மலைக்குத் தலைவனே!
அழியாத எண்ணத்தோடு பரிசில் பெறுவதை விரும்பி
அது வாய்க்கும் காலத்தைக் கருதும் நிலை இல்லை,
ஈதலில் குறைவுபடாதவன் உன்னுடைய அரசனாகிய சேரன், அவனுக்காகச்
சாதற்கு அஞ்சாதவன் நீ, அந்நிலையில்
பெரிய நிலம் பிளவுபட்டதைப் போல ஒருநாள்
பொறுத்தற்கரிய போர் வந்தால்
வருத்தமடையும் என் பசித்துன்பத்தையுடைய சுற்றம்.
					மேல்
# 140 ஔவையார்
அகன்று பரந்த பலாமரங்களையுடைய நாஞ்சில் மலைக்குத் தலைவன்
உண்மையாகவே மடையன், செம்மையான நாவினையுடைய புலவர்களே!
வளையல் அணிந்த கைகளையுடைய விறலியர் தோட்டத்தில் பறித்த
கீரைக்கு இடுபொருளாக நாங்கள் சிறிதளவு
அரிசியை வேண்டினோமாக, தான் பரிசிலர்க்கு உதவும்
தகுதியை அறிந்திருத்தலால், தன் மேம்பாட்டையும் நினைத்து
பெரிய கடினமான வழி சூழ்ந்த மலையைப் போன்ற ஒரு
பெரிய களிற்றினையே வழங்கிவிட்டான், இதுபோன்றதொரு
ஆராய்ந்து பார்க்காத கொடையும் உண்டா?
கவனமாக இருக்கமாட்டார்கள் போலும், பெரியவர்கள் தம் கடமையைச் செய்யும்போது.
					மேல்
 




# 141 பரணர்
”பாணன் சூடிய பசும்பொன்னால் ஆன தாமரைப்பூ,
சிறந்த அணிகலன்களை அணிந்த விறலியின் தங்கச் சங்கிலியுடன் பொலிந்து விளங்க
விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டிய நீண்ட தேரினை பூட்டவிழ்த்துவிட்டு இளைப்பாறி
ஊரில் இருப்பதைப் போல நடுக்காட்டில் இருக்கின்றவரே,
நீங்கள் யாரோ” என்று விடாமல் கேட்கும்
மேகம் போன்று கருத்துப்போன சுற்றத்தாரையும் கடும் பசியையும் உடைய இரவலனே!
வெற்றிதரும் வேலினையுடைய தலைவனைக் காண்பதற்கு முன்
உன்னைக்காட்டிலும் மோசமான நிலையிலிருந்தோம், இப்போதோ,
இந்த நிலையில் இருக்கின்றோம், எந்நாளும்
உடுத்திக்கொள்ளவோ, போர்த்திக்கொள்ளவோ போவதில்லை என்று அறிந்திருந்தும்
பட்டுத்துணியை மயிலுக்குக் கொடுத்த எம் அரசன்
மதம் மிக்க யானையினையும், மனம் செருக்கின குதிரையினையும் உடைய பேகன்
எவ்வளவென்றாலும் கொடுப்பது நல்லது என்று
அடுத்த பிறப்பை எண்ணிச் செய்யப்பட்டது அல்ல
பிறர் வறுமையை எண்ணிச் செய்யப்பட்டது அவன் கொடைத்திறம்
					மேல்
# 142 பரணர்
வற்றிய குளத்தில் பெய்தும், அகன்ற விளைநிலங்களில் பொழிந்தும்
பெய்யும் இடத்திற்கு உதவாத வகையில் உவர்நிலத்தை நிறைத்தும்
ஒரு வரையறை இல்லாத வழக்கத்தையுடைய மழையைப் போல
மதம் மிக்க யானையினையுடைய கழல் புனைந்த காலையுடைய பேகன்
யாருக்கு வேண்டுமானாலும் கொடுப்பானேயன்றி
யாரிடம் வேண்டுமானாலும் போரிடமாட்டான், பிறர் படை வந்து கலந்து போரிட்டால். 
					மேல்
# 143 கபிலர்
மலையை மேகங்கள் சூழ்ந்துகொள்ளட்டும் என்று மிகுந்த பலிப்பொருளைத் தூவி,
மழை மிகப் பெய்தலால், மேகங்கள் மேலே உயர்ந்து செல்லட்டும் என்று
கடவுளைத் தொழுத குறவர் மக்கள்
மழையும் இடம் மாறிச்சென்றதால் உவகையுடையவராய், மலைச் சாரலில்
புனத்தில் விளைந்த தினையை உண்ணுகின்ற நாடனே! சினங்கொண்டு செய்கின்ற போரையும்
வள்ளன்மையாகிய கொடையையும் விரைந்து ஓடும் குதிரையையும் உடைய பேகனே!
இவள் யார் வருந்தத்தக்கவள்? நேற்று
காட்டுவழியில் உழன்று வருந்திய எனது சுற்றம் பசித்ததாக
குறுந்தடியால் அடிக்கப்பட்ட முரசினைப் போன்று ஒலிக்கும் அருவியையுடைய 
பெரிய உயர்ந்த மலையின் சரிவில் உள்ள ஒரு சிற்றூரில்
வாயிலில் வந்து உன்னை வாழ்த்திக்கொண்டு
உன்னையும் உன் மலையையும் பாட, துன்ப மிகுதியால்
வழியும் கண்ணீரைத் தடுக்கமாட்டாதவளாக
தன் முலைப்பக்கம் நனையுமாறு விம்மி
புல்லாங்குழல் வருந்தி ஒலிப்பது போல மிகவும் அழுதாள் - (இவள் யார் வருந்தத்தக்கவள்?)
					மேல்
# 144 கபிலர்
இரக்கப்படாவிட்டால் அது கொடியது, நேரம் இருட்டிக்கொண்டு வர
என்னுடைய சிறிய யாழில் இரங்கல் பண்ணாகிய செவ்வழி என்னும் பண்ணை அமைத்து, உன்
மழையைப் பெற்ற காட்டினைப் பாடினோமாக,
நீல நிற மணமுள்ள நெய்தல் மலரைப் போன்ற பொலிவுடைய மையுண்ட கண்கள்
கலங்கி விட்டுவிட்டு வீழ்ந்த கண்ணீர்த்துளிகள் அணிகலன் அணிந்த மார்பகப் பகுதியை நனைக்க
வருத்தம் மிகுந்தவளாய் இருக்க, “இளம்பெண்ணே!
உறவினளோ, எமது நட்பினை விரும்புவனுக்கு” என்று
நாங்கள் அவளை வணங்கிக் கேட்டோமாக, காந்தளின்
மொட்டுப் போன்ற விரல்களால் தன் கண்ணீரைத் துடைத்து
”நாம் அவனுடைய உறவினர் அல்ல, கேளுங்கள், இப்பொழுது
என்னைப் போன்ற ஒருத்தியின் அழகை விரும்பி ஒவ்வொருநாளும்
வருகிறான் என்று சொல்கிறார்கள், விளங்குகின்ற புகழையுடைய பேகன்
கலீரென ஒலிக்கும் தேருடன்
முல்லை வேலியையுடைய நல்ல ஊருக்குள்”
					மேல்
# 145 கபிலர்
மென்மையான இயல்பினையுடைய கரிய மயில் குளிரால் நடுங்கும் என்று இரக்கப்பட்டு
பட்டுச்சால்வையைக் கொடுத்த அழியாத புகழுக்குரிய
மதம் மிக்க யானையையும் மனச் செருக்குடைய குதிரையையும் உடைய பேகனே!
நாம் பசித்ததினால் வரவில்லை, எம்மைச்சுற்றிப் பாரமான கூட்டமும் இல்லை,
களாப்பழம் போன்ற கரிய தண்டினையுடைய சிறிய யாழை
இசை இன்பத்தை விரும்புவோர் தலை அசைத்துப் பாராட்டும்படி பண் அமைத்து
”அறத்தைச் செய்வாயாக, அருளை விரும்புபவனே” என்று
இதுவே நாம் இரந்துவேண்டிக்கொண்ட பரிசில், அது என்னவெனில், இருட்டோடேயே
பல மணிகளைக் கொண்ட சிறந்த தேரில் ஏறிப்போய்
காண்பதற்கே முடியாத கடும் துயரத்தோடு இருப்பவளின் பொறுத்தற்கரிய துன்பத்தைக் களைவாயாக.
					மேல்
# 146 அரிசில் கிழார்
அவ்வாறே ஆகட்டும்; உனது பெறுதற்கரிய அணிகலன்களும், செல்வமுமாகிய 
அவற்றைப் பெற நாங்கள் விரும்பவில்லை, கொல்லும் போரையுடைய பேகனே!
சிறிய யாழில் செவ்வழி என்னும் இரங்கல் பண்ணை அமைத்து, உன் வன்மையான நிலமாகிய
நல்ல மலைநாட்டை நாம் பாட, என் மீது அன்புகொண்டு
பரிசில் அளிக்கவேண்டுமென்றால், தலைவனே! நீ
அருள்கூராமையால் காண்போர் இரங்க மெலிந்து
பொறுத்தற்கரிய துயரில் வருந்தும் உனது திருத்தமான அணிகலன் அணிந்த துணைவியின்
நீண்ட மயில்தோகையைக் காலோடு கவிழ்ந்தாற் போன்ற
தழைத்த மெல்லிய கூந்தலில் மணங்கமழும் நறும்புகையை ஊட்டி
குளிர்ந்த மணங்கமழும் மாலையைச் சூட
விரைந்த வேகம் கொண்ட உயர்ந்த தேரில் பூட்டுக உன் குதிரைகளை.- (அவ்வாறே ஆகட்டும்)
					மேல்
# 147 பெருங்குன்றூர் கிழார்
கற்குகைகளையும், அருவிகளையும் உடைய பல மலைகளைக் கடந்துவந்து
சிறிய யாழில் செவ்வழிப்பண்ணை அமைத்து வந்ததற்கு,
கார்காலத்து மழையின் இனிய துளி வீழ்கின்ற ஓசையைத் தன்னந்தனியாகக் கேட்டு
நேற்று ஒரு பக்கம் தனிமையில் இருந்த
செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ச்சியான கண்களையுடைய அழகிய மாநிறப் பெண்மணி
எண்ணெய் தேய்க்கப்படாத மை போன்ற கரிய கூந்தலை
கழுவப்பட்ட நீல மணியினைப் போன்று மாசறக் கழுவி
புத்தம்புது மலர்கள் சூடும்படி செய்ய இன்று நீ புறப்பட்டால்
அதுவே எம் பரிசில் ஆவியர் கோவே!
					மேல்
# 148 வன்பரணர்
ஒலித்துக்கொண்டு உச்சியிலிருந்து வீழும் அருவி விளங்கும் மலைக்குரிய நள்ளியே!, உன்
தளர்ச்சி இல்லாத உறுதியான முயற்சியால் விரும்பத்தக்க வளத்தைப் பாராட்டி
நாள்தோறும் நல்ல அணிகலன்களை யானையோடு கொண்டுவந்து
நெல்குதிர் சிறக்கும் பெரிய இடத்தில் பரிசில் முழுவதாகத் தருகின்றனர், அதனால்,
பெருமை இல்லாத மன்னரைப் புகழ்ந்து
அவர் செய்யாதவற்றைச் செய்ததாகக் கூறிப் புகழ்வதை
அறியாதது ஆயிற்று எங்களுடைய சிறிய செம்மையான நாக்கு.
					மேல்
# 149 வன்பரணர்
நள்ளி, வாழ்வாயாக, நள்ளியே! அமைதியான
மாலை நேரத்தில் காலையில் பாடும் மருதம் என்ற பண்ணை வாசித்து, காலை நேரத்தில்
கையில் எப்பொழுதும் இருக்கும் யாழில் மாலையில் பாடும் செவ்வழிப் பண்ணை வாசித்து,
மரபு முறைமையை எங்கள் பாணர்கள் மறந்துபோய்விட்டனர், அதற்குக் காரணம் நீ
எங்களுக்குக் கொடுத்துப் பாதுகாப்பதைக் கடமையாகக் கொண்ட உன் ஈகைக்குணமே.
					மேல்
# 150 வன் பரணர்
குளிர் காலத்துப் பருந்தின் கருமையான சிறகைப் போன்ற
நைந்துபோன கந்தல்துணியை உடுத்தியிருந்தேன், பலா மரத்தடியில் அமர்ந்து
என்னையும் மறந்து இருந்தேன், என் நாட்டைவிட்டு வேற்றுநாட்டுக்கு வந்த என்
பயணத்தினால் ஓய்ந்துபோன வருத்தத்தையும் வறுமையையும் நோக்கி வந்த
மானின் கூட்டத்தை அழித்த குருதி தோய்ந்த அழகிய வீரக்கழலினையுடைய காலினையும்
பளிச்சென்ற ஒளியையுடைய அழகிய நீலமணி விளங்கும் உச்சியையும் உடைய
செல்வத்தையுடைய தலைவனாகிய ஒரு வலிய வில்லையுடைய வேட்டுவனை
வணங்கி எழ முயன்றேனாக, கை கவித்து என்னை அமரச் செய்து
நெய் இழுது போன்ற வெண்மையான நிணத்தையுடைய கொழுத்த தசையை,
காட்டு வழியினில் பாதைமாறிச் சென்ற இளைஞர்கள் விரைந்து
தாம் வந்து சேரும் முன்னர், மிக விரைவாக
தான் கடைந்த தீயில் சடுதியில் சுட்டு, உம்
மிகப் பெரிய சுற்றத்துடன் தின்னுங்கள் என்று தந்ததால்
அமிழ்து என மென்று உண்டு வாட்டுகின்ற பசி தீர்ந்ததாக,
நல்ல மரங்கள் செறிந்திருக்கும் நறிய குளிர்ந்த மலைச்சாரலில்
மலையுச்சியிலிருந்து வீழ்ந்த அருவிநீரைக் குளிரப் பருகி,
அவனிடம் விடைபெறத் தொடங்கினேனாக, விரைவாக வந்து,
பெறுவதற்கு அரிய பெருமை பொருந்திய நல்ல அணிகலன்கள்
வேறு ஒன்றுமில்லை, நான் இப்போது காட்டில் உள்ளேன் என்று கூறி
மார்பில் அணிந்திருந்த ஒளிரும் முத்து வடங்களையுடைய ஆரத்தை
முன்கையில் இறுகப் பூட்டியிருந்த கடகத்துடனே தந்தான்;
நீங்கள் எந்த நாட்டவரோ என்று கேட்க நாடும் சொல்லான்,
தாங்கள் யாரோ என்று கேட்கப் பெயரும் சொல்லான்,
அதனைப் பிறர் பிறர் வழியாகக் கேட்டறிந்தேன்,
இரும்பால் செய்யப்பெறாத மிக்க புகழையுடைய தோட்டி என்னும்
அழகிய மலையைக் காக்கும் அழகிய நெடிய பக்கமலையினையும்
பளிங்கினைக் கீறினாற் போன்ற இனிய நீரையும் உடைய
பெரிய மலைநாட்டையுடைய நள்ளி அவன் என்று.
					மேல்
 



#151 பெருந்தலை சாத்தனார்
முன்பெல்லாம், பாடும் புலவர்கள் மகிழ்ச்சிகொள்ள,
வானளாவிய உச்சியையுடைய சிறந்த மலைப்பக்கத்து வழியாகத்
தன் தலைவன் நெடுந்தொலைவுக்குச் சென்றால், நகைகளை அணிந்துகொண்டு
புன்மையான தலையையுடைய மென்மையான பெண்யானையைப் பரிசிலாகப்
பெண்களும் தம் தரத்தில் கொடுக்கும் வளமான புகழ் பொருந்திய
கண்டீரக்கோன் என்பதனால் பெரிதும்
தழுவிக்கொள்ளுதலை மேற்கொண்டேன் நான், பொன்னால்செய்யப்பட்ட தேரையுடைய
நன்னனின் மரபில் வந்தவனாதலால் நீயும்
தழுவிக்கொள்ளுவதற்குப் பொருத்தமானவனே! தெளிவான சொற்களையுடைய
பாடுவார்க்குக் கதவை அடைத்த காரணமாக, தவழ்கின்ற மேகங்கள்
தெய்வங்கள் இருக்கும் பக்க மலையில் மழையைப் பொழியும் உம்முடைய
மணங்கமழும் உயர்ந்த மலையைப் பாடுதலை விலக்கினார் எம் போன்ற புலவர்கள்.
					மேல்
#152 வன்பரணர்
யானையைக் கொன்று வீழ்த்திய சிறப்பாகத் தொடுக்கப்பட்ட அம்பு
பிளந்த வாயையுடைய புலியை இறக்கச் செய்து
துளையையுடைய கொம்பைக் கொண்ட புள்ளிமானை உருளச்செய்து, உரல் போன்ற தலையையுடைய
கேழலாகிய பன்றியை வீழ்த்தி, அருகிலிருக்கும்
ஆழமான புற்றில் இருக்கும் உடும்பில் தைத்து நிற்கும்
வலிய வில்லின் வேட்டையை வெற்றிகரமாக முடித்தவன்
புகழ் பொருந்திய சிறப்பினையுடைய அம்புத்தொழிலில் முழு நிறைவு பெற்ற
கொலையாளி யாரோ? கொலையாளியாக இருப்பினும் இவன்
விலைக்காகக் கொன்றவன் போல் தெரியவில்லை, செல்வம் மிக உடையவன்
முத்துமாலை தாழ்ந்து கிடக்கும் அழகிய பரந்த மார்பினையுடையவன்,
மலைச் சாரலில் அருவியையுடைய பயன் மிகத் தரும் மலைக்கு உரிமையாளன்,
ஓரியாய் இருப்பானோ? இல்லை, அவன் அல்லவோ?
பாடுவேன் விறலியே ஒரு பாட்டு, நீங்களும்
முழா இனிது ஒலிக்க அதன் முகப்பில் சாந்து பூசுங்கள், யாழில் பண்ணை நிறுவுங்கள்
கண் திறக்கப்பட்ட தூம்பாகிய களிற்றுத் துதிக்கை போன்ற பெருவங்கியத்தை ஊதுங்கள்,
எல்லரி என்ற சல்லியைத் தட்டுங்கள், ஆகுளி என்ற சிறுபறையை அறையுங்கள்,
பதலையின் ஒரு பக்கத்தை மெல்லெனத் தட்டுங்கள்,
இசைப் புலமைக்குச் சான்றாக அமையும் கோலை என் கையில் தாருங்கள் என்று
தலைவனாதலால் இவ்வாறு சொல்லிக்கொண்டு அணுகி
இருபத்தொரு பாடல் துறையும் முறையால் பாடி முடித்து
வேந்தனே என்று அவனது பெயரைச் சொன்னபோது, அங்கே அது
தன் பெயராதலால் நாணமடைந்து, பின்னர் நாங்கள்
நாடுநாடாகச் சென்று வருகிறோம், இங்கு ஒரு
வேட்டுவரும் இல்லை உன்னைப் போன்றவர்கள் என்று
நாங்கள் விரும்பியதைக் கூறவும், அதனைக் கூறவிடாமல், வேட்டையில்
தான் எய்து கொன்ற மானின் வேகவைத்த நிணத்தையுடைய தசையுடன்
பசுவின் நெய்யை உருக்கினாற் போன்ற மதுவைத் தந்து
தன்னுடைய மலையில் கிடைத்த மாசில்லாத நல்ல பொன்னைப்
பல மணிக் குவியல்களுடன் கலந்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று
காட்டு வழியில் எமக்குத் தந்தான் குகைகளையும் சிகரங்களையும் கொண்ட
உயர்ந்த பெரிய கொல்லிமலைக்குத் தலைவன்
தனக்கென வைத்துக்கொள்ளாத ஈகைக்குணமுடைய, வெற்றியையே எப்போதும் விரும்புபவன்
					மேல்
# 153 வன்பரணர்
மேகங்கள் சுழ்ந்த மலைக்குத் தலைவன், நாள்தோறும்
அணிகலன்களை அணிந்த யானைகளை இரப்போர்க்குக் கொடுக்கும்
ஒளி விடுகின்ற பசும்பொன்னால் செய்த பூண்களையும், கடகம் அணிந்த முன்கையினையும் உடைய
கொல்லும் போரைச் செய்து அமையாத ஆதன் ஓரியின்
மழை போன்ற வளப்பமான கொடையைக் காண எண்ணி, மிகுதியாகச்
சென்றது எமது கூத்தர்களைக் கொண்ட சுற்றம்;
குளிர்ந்த நீரில் பூக்காத மணிகள் கலந்த (பொன்னால் செய்த) குவளையையும்
வெள்ளிக்கம்பியால் தொடுக்கப்பட்ட பொன்னரி மாலையையும், பிற அணிகலன்களையும்
யானைக் கூட்டத்துடன் பெற்றவர்களாய் அந்த இடத்தை விட்டு நீங்கி
பசிக்காதவராய் ஆகிவிட்டதனாலோ என்னவோ, வாரால் இழுத்துக்கட்டப்பட்ட
பல கருவிகள் கூடிய இனிய வாத்தியங்கள் முழங்க
ஆடவும் இயலாதவர் ஆயினார், தம் பாடலையும் மறந்து
					மேல்
# 154 மோசிகீரனார்
அலைகள் வந்து மோதும் கடலின் கரையை ஒட்டிச் சென்றாலும்
தெரிந்தவரைக் கண்டால் தாகத்தை நீக்கும்
சிறிதளவு நீர் கேட்பர் மாந்தர், அது போல்
அரசர் பலர் அருகிலே இருந்தாலும், குற்றமற்ற
வள்ளல்களையே எண்ணிச் செல்வார்கள் புலவர், அதனால்
நானும் பெற்ற ஊதியத்தைப் பார்த்து, இதனால் என்ன பயன் என்று இகழமாட்டேன்,
வறுமையுற்றதால் உன்னை நினைத்து வந்தேன்,
எனக்குக் கொடுப்பாய் என்று இரந்துவேண்டுவது எனக்குக் கடினமான செயல், நீ அந்தப் பரிசிலைக்
கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் வெல்லுகின்ற போரில்
வீசப்படும் ஆயுதத்துக்குத் தப்பி ஓடாத ஆண்மையையும், வெள்ளைத் துணியின்
தூய விரிப்பைப் போன்று நிறைவாக, உச்சியிலிருந்து
பலவாய்க் கொட்டும் குளிர்ந்த அருவியையுடைய உனது
கொண்பெருங்கானத்தையும் பாடுவது எனக்கு எளிது.
					மேல்
# 155 மோசி கீரனார்
வளைந்த தண்டையுடைய சிறிய யாழை, வாடிப்போன இடுப்பில் தழுவிக்கொண்டு
அறிந்தவர் யார் என் பசித்துன்பத்தைப் போக்க என்று
நயமாகக் கேட்கும் பாணனே! இப்போது கேள்!
பாழடைந்த ஊரில் முளைத்த நெருஞ்சியின் பொன்னிறப்பூ
எழுகின்ற கதிரவனை எதிர்கண்டது போல 
வறுமையுற்ற புலவரின் கவிழ்த்துப்போட்ட உண்கலங்கள், புகழ் விளங்கும்
கொண்பெரும் கானத்துத் தலைவனின்
குளிர்ந்த மாலையணிந்த மார்பினை மலர்ந்து நோக்கின.
					மேல்
# 156 மோசிகீரனார்
வள்ளன்மை, வலிமை ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றனைக் கொண்டிருக்கும் பிறர் மலைகள், எந்நாளும்
இரண்டையும் நன்றாகப் பெற்றிருக்கும் கொண்பெருங்கானம்,
விரும்பிச் சென்ற இரவலர் வேண்டும் என குறித்துக் கூறி
வளைத்து உண்ணுமாறு கிடந்தாலும் கிடக்கும், அது அல்லாமல்
நிறுத்தற்கரிய படையையுடைய வேந்தரிடம்
கப்பத்தை வாங்கிக்கொண்டு அவர்களை வழியனுப்பும் பெருமிதமும் உடையது.
					மேல்
# 157 குறமகள் இளவெயினி
தன்னுடைய உறவினர் தனக்குப் பிழைசெய்தால் அதனைப் பொறுத்துக்கொள்ளுதலும்,
பிறர் கொண்ட வறுமைக்குத் தான் நாணுதலும்,
படையிடத்துப் பிறர் பழிக்காத வலிமையுடையவன் ஆதலும்
வேந்தனைக் கொண்ட அவையில் நிமிர்ந்து நடத்தலும்
உமது தலைவர்களுக்குத் தகுவன அல்ல, எம்முடைய தலைவன்
வில்லை முழுதுமாக இழுப்பதால் அகன்ற மார்பினையும், கொல்லும் வேலினையும்,
காந்தள் தலைமாலையையும் உடைய குறவர் பெருமகன்
தவழ்கின்ற மேகங்களைத் தன் உயரத்தால் தடுக்கும் பயன் பொருந்திய மலையின் உச்சியில்
ஞாயிறு மறைகின்ற பொழுதில் கூட்டத்திலிருந்து பிரிந்து
தான் தங்கும் இடத்தைக் காணாத காட்டு விலங்காகிய நல்ல கலைமான்
மடப்பத்தையுடைய மானாகிய இளம் பெண்மானைக் குரலால் அழைத்தால், பிளவுண்ட குகையில் இருக்கும்
பெரிய புலியின் புகர் நிறத்தையுடைய ஆண் கூர்ந்து கேட்கும்
பெரிய மலையையுடைய நாட்டிற்குரியவனாகிய எம்முடைய ஏறைக்கோனுக்குத் தகும்.
					மேல்
# 158 பெருஞ்சித்திரனார்
குறுந்தடியைக் கொண்டு முரசை அடித்து, வெண் சங்கை ஊதி
அரசர்களுடன் போரிட்ட, சிறந்த நெடிய மலையில்
ஒலிக்கும் வெள்ளிய அருவி கல்லை உருட்டிக்கொண்டு ஓடும்
பறம்பு மலையின் வேந்தன் பாரியும், உயர்ந்த உச்சியையுடைய
கொல்லிமலையை ஆண்ட வலிய வில்லினையுடைய ஓரியும்,
காரி என்னும் குதிரையின் மீதேறிப் பெரும் போரினை வென்ற
மழையைப் போன்ற கொடையுள்ளத்தையும், வீரம் மிகுந்த போரினையும் உடைய மலையனும்,
யாராலும் ஏறப்படாத குதிரை என்னும் உயர்ந்த மலையையும், கூரிய வேலையும்
கூவிளம்பூ தலைமாலையையும் வளைந்த பூண்களையும் உடைய எழினி அதியமானும்,
மிகக் குளிர்ந்த மலையின் இருள் செறிந்த குகையினையும்
அரிய ஆற்றலையுடைய தெய்வம் காக்கும் உயர்ந்த சிகரங்களையும் உடைய
பெரிய மலைநாட்டினனான பேகனும், திருத்தமான சொற்களையுடைய
மோசி என்னும் புலவர் பாடிய ஆயும், ஆசைப்பட்டுத்
தன்னை நினைத்து வருவாருடைய வறுமை முற்றிலும் நீங்க
தவறாமல் கொடுக்கும் மேம்பாடு பொருந்திய வள்ளன்மையுடைய,
பகைவரைத் துரத்திய நள்ளியும் என்று சொல்லப்பட்ட
எழுவரும் இறந்துபோன பின்னர், பார்த்தவருக்கு இரக்கம் வர
பாடி வருபவரும், மற்றவரும் சேர்ந்து
வேண்டி வருபவரின் துன்பத்தைத் தீர்ப்பேன் நான் என்று நீ இருப்பதால், வேகமாக இந்த இடத்துக்கு
உன்னை நினைந்து வந்தேன் நான், வானத்தைத் தோயும்படி
மூங்கில்கள் வளரும் மலையில் சுரபுன்னையோடு உயர்ந்து
ஆசினி மரங்கள் அழகுபெற்ற பலாவின்மேல் ஆசைகொண்டு
முள்போன்ற வெளிப்பக்கத்தையுடைய பழுத்த கனியினைப் பெற்ற ஆண்குரங்கு
பஞ்சு போன்ற தலையையுடைய பெண்குரங்கை கையால் குறிகாட்டி அழைக்கும்
குறைவில்லாத புதுவருவாயினையுடைய முதிரமலைக்கு உரியவனே!
இந்த உலகம் முழுதும் விளங்கும் சிறப்பினையும், நன்கு செய்யப்பட்ட தேரினையும் உடைய குமணனே!
புகழ் உயர்ந்து விளங்கும் கொடையுடன்
பகையிடத்து உயர்க நீ தூக்கிய வேல்.

# 159 பெருஞ்சித்திரனார்
இப்போது வாழுகின்ற நாட்களுடன், தனக்குச் சென்ற ஆண்டுகள் பல ஆதலின்
‘என் உயிர் இன்னும் போகாமல் இருக்கிறதே’ என்று பலவாறாக வெறுத்து
ஊன்றுகோலையே காலாகக் கொண்டு, குறுகிய பல அடியிட்டு நடந்து,
நூலைத் தொங்கவிட்டது போன்ற மயிரை உடையவளாய், கண்பார்வை மறைந்து
முற்றத்துக்கும் போகாத முதுமையையுடையவளான தாயும்,
வெளிறிப்போன உடம்புடன், நினைவு வருத்த வருந்தி
இடுப்பில் கொண்ட சிறு குழந்தைகள்
பிசைந்து உண்ணத் தளர்ந்த மார்பை உடையவளாய், பெருந்துயர் அடைந்து
குப்பைக் கீரையின் ஏற்கனவே கொய்த இடங்களில் கிளைத்த
முற்றாத இளம் தளிர்களைக் கொய்துகொண்டு, உப்பு இல்லாமல்
நீரையே உலையாக வைத்து மோர் இல்லாமல்
வெந்த சோறை மறந்து, பச்சை இலைகளைத் தின்று
அழுக்கேறிய, கிழித்ததால் குறைந்துபோன உடையினளாய், அறக்கடவுளைப் பழித்து,
உண்ணாதவளாகிய என்னை விரும்பும் என் மனைவியும்
ஆகிய இருவர் நெஞ்சமும் மகிழ, வேடர்களால்
சுடப்பட்டுக் கரிந்துபோன புனத்தை மண் கீழும் மேலுமாக உழுத அகன்ற இடத்தையுடைய கொல்லையில்
மலைநெல்லை விதைத்து அது பசுமை மிக அழகு பெற்று
கோடை மிகுதியால் கதிர்விடாத பயிருக்கு, திடுமென
மின்னலும் இடியும் சேர்ந்த மேகங்கள் மழையைச் சொரிந்தாற் போல,
கொடுத்த உனது புகழை வாழ்த்தி, கூட்டமான என்
பசி வாட்டுதலால் வருத்தமுற்ற சுற்றமும் மகிழ,
உயர்ந்து ஏந்தலான கொம்புகளையுடைய கொல்லுகின்ற களிற்றினைப் பெற்றாலும்
முகம் மாறித் தரும் பரிசிலை நான் ஏற்கமாட்டேன், மகிழ்ந்து நீ
இன்புற வழியனுப்பினால், சிறியதாகக்
குன்றிமணி அளவே கொடுத்தாலும் பெற்றுக்கொள்வேன், கூரிய வேலைக்கொண்ட குமணனே!
எனவே அவ்வாறு இன்பம் அடைய அருள்செய்ய வேண்டுகிறேன், வெற்றியையும் புகழையுமுடைய
பழி இல்லாத நல்ல குடியில் பிறந்த
மேலும் புகழால் உயர்ந்த தலைவனே! உன்னைப் பாடிய நான்.
					மேல்
# 160 பெருஞ்சித்திரனார்
அச்சந்தரும் ஞாயிற்றின் ஒளிமிகும் சுடர்கள் தின்றதால்
காய்ந்துபோன புல்லையுடைய கானம் தழைக்க, ’சோ’வென்று
அதிரவைக்கும் ஓசையையுடைய இடியுடன் மழை பெய்ததைப் போல
பசி தின்றதால் காய்ந்துபோன, வியர்வையையுடைய உடம்பு
சோறு உண்பதை அறியாமற்போனதால் வாட்டமுற்று
ஒடுங்கிப்போன வரிசைகளையுடைய குடல் நிரம்புமாறு, குளிர்ந்த,
தாளிப்பு செய்யப்பட்ட கொழுத்த துவையலோடு நெய் உள்ள சோற்றை,
திங்களைச் சேர்ந்த அன்றைய விண்மீன் போல, புழக்கத்திலுள்ள
பொன்னாலான சிறிய நல்ல கலன்களில் சுற்றி வைத்து
’குறைவு இன்று இருப்பதாக பாடுவோரின் சுற்றம்’ என்று
பெறுவதற்கு அரிய பொன் அணிகலன்களை எளிதாக வழங்கி,
தன் நண்பரிடத்துக் காட்டிலும் எம்மிடம் அதிக நட்புக் கொள்ளும் நல்ல புகழையுடைய குமணன்
மது நிறைந்த தெருவினையுடைய முதிரம் என்னும் மலையில் இருப்பவன்,
நீ அவனிடம் சென்றால் உனக்கு மிகுதியும் தருவான் என்று
உனது பல்வேறு புகழையும் கூறுவார் கூற, மிக வேகமாக,
என் மனம் என்னைத் தூண்ட வந்தேன், மனத்தில் இகழ்ச்சிக்குறிப்பு உண்டாக,
எனது வீட்டில் உணவு இல்லாததால், அந்த வீட்டை மறந்து இருக்கும்
குதிரையின் அற்பமான பிடரிமயிரைப் போன்ற குடுமியை உடைய புதல்வன், பல முறை
(என் மனைவியின்)பால் இல்லாத வறண்ட மார்பகத்தைச் சுவைத்தும் பால் பெறாதவனாய்
கூழையும் சோற்றையும் விரும்பி, ஒவ்வொன்றாக
உள்ளே ஒன்றும் இல்லாத வெற்றுப் பாத்திரங்களைத் திறந்து பார்த்து அழுவதைக் கண்டு,
“புலி வந்து கொல்லும்” என்று சொல்லியும், “நிலாவைப் பார்” என்று திங்களைக் காட்டியும்
நொந்துபோய், “உன் அப்பாவை நினைத்து
கோபப்படும் உன் முகத்தைக் காட்டு” என்று பலமுறையும்
கேட்டு அமையாதவளாய் நாள் முழுதும்
துன்பப்படுவோளின் வளம் செழிக்குமாறு
குறையாத செல்வத்தை மிகுதியாகக் கொடுத்தாய், விரைவில்
வழியனுப்பவேண்டுகிறேன், ஒலிக்கும் அலைகளைக் கொண்ட
நீர் சூழ்ந்த இந்நிலவுலகில் ஓங்கி இருக்கும்படி
உனது சிறப்புப் பொருந்திய பெரும் புகழை வாழ்த்துவேன் பலமுறை.
					மேல்
 




# 161 பெருஞ்சித்திரனார்
பெரிதாய் ஒலிக்கின்ற பரந்த கடல் குறைவுபட நீரை முகந்துகொண்டு
விரைவாகச் செல்லும் மேகங்கள் தாம் விரும்பிய இடத்தில் திரண்டு
பெரிய மலையைப் போன்ற தோற்றத்தையுடையனவாய், கருக்கொண்டு கறுத்து
இடி முழக்கத்துடன் மின்னலும் சேர்ந்த தொகுதியுடன் மழையை முறையாகப் பெய்து
வளத்தைத்தரும் மழை நீங்கிய கோடைக்காலத்தில்,
உலகத்து உயிர்கள் எல்லாம் சென்று நீர் பருக கங்கையின்
கரையை மோதும் பெரு வெள்ளம் நிறைந்து தோன்றுவது போல
எங்களுக்கும் மற்றவர்க்கும் நீதான் தலைவனாக இருப்பதினால்
அன்பு இல்லாத கள்வர்கள் கொன்று வழியில் பறித்துக்கொள்வதால்
போய்வரக் கூடியவை அல்ல காட்டுவழிகள், தம் உயிர் மீது அன்பு இல்லாமல், 
வலிய கலைமான் அசைபோட்டுக்கிடக்கும் செல்வதற்கரிய அவ்வழியில் சென்றவர்க்கு
இன்றுடன் வாழ்நாள் முடிந்தது என்று சொல்லி
கண்பார்வை மறையும்படி நீர் கசிந்து, மனதிடம் அழிந்து
பொறுக்கமுடியாத துன்பத்தில் வருந்திக்கிடக்கும் பெரும் வறுமையில் ஆழ்ந்துள்ள என் மனைவி, உன்
முயற்சியால் உண்டான செல்வத்தைப் பார்க்கப்பார்க்க வியந்துபோகும்படி,
பனைமரம் போன்ற துதிக்கையோடு, முத்து விளையும்படி முதிர்ந்து
உயர்ந்த கொம்பினை ஏந்திய மலை போன்ற வலிய களிற்றின்
ஒளி விளங்கும் நெற்றிப்பட்டம் பொலிய, பக்கங்களில்
ஒலிக்கின்ற மணிகள் மாறிமாறி ஒலிக்க, அதன் மீது ஏறிப் பெருமிதம் தோன்ற அமர்ந்து
செல்வதை விரும்பினேன், வெற்றி மிக்க வேந்தனே!
எனது வறுமை என்னைப் பின்னே நின்று துரத்த, உன் புகழ் என்னை முன்னே இழுக்க, உனது
கொடைத்திறம் பற்றி நான் பாடுவதை என்மீது அன்புகொண்டு கேட்பாயாக!
அவ்வாறு பாட வல்லவன் என்றாலும், வல்லமையற்றவன் என்றாலும் விரைந்து
என் கல்வியறிவின் அளவை அறிந்து நோக்காமல் சிறந்த
உன் அளவை அறிவாயாக பெருமானே! எந்நாளும்
அரசர் நாணும்படி நான் திரும்புவேன், சாந்து பூசி,
பல நல்ல இலக்கணங்களைக் கொண்ட மேம்பட்ட அழகினையுடைய மார்பை
சிறந்த அணிகலன்களையுடைய மகளிர் தழுவும்போதெல்லாம் விரும்ப,
நாள்காலையில் முரசு முழங்கும் இடங்களையுடைய எல்லையில், உனது
அடி நிழலில் வாழ்வார் நல்ல அணிகலன்களை மிகுதியாகப் பெற 
வாட்போரில் சிறப்படைந்த உன் படையையும்
உன் சிறப்பு மிக்க செல்வத்தையும் புகழ்வோம் பலமுறை.
					மேல்
# 162 பெருஞ்சித்திரனார்
இரப்போரின் பாதுகாவலன் நீயும் இல்லை;
இரப்போருக்குப் பாதுகாவலர்கள் இல்லாமலும் போய்விடவில்லை;
இனியும் இரப்போர் இருப்பதையும் காண்பாய், அந்த இரவலர்க்குக்
கொடுப்போர் இருப்பதையும் இனிக் காண்பாய், உன் ஊரிலுள்ள
காவல் மரம் வருந்தும்படியாக, நான் கொண்டுவந்து கட்டிய
உயர்ந்த நல்ல இலக்கணமுள்ள யானை எமது பரிசில்,
விரைந்து ஓடும் குதிரையையுடைய தலைவனே! இனி நான் போகிறேன்.
					மேல்
# 163 பெருஞ்சித்திரனார்
உன் மீது அன்புகொண்டு வாழ்பவர்க்கும், நீ அன்புசெலுத்தி வாழ்பவர்க்கும்,
பல குணங்களும் சிறந்த கற்பினையுடைய உனது சுற்றத்து மூத்தவர்க்கும்,
நமது சுற்றத்தின் மிக்க பசி நீங்க உனக்கு
நெடுநாள் கடன் தந்து உதவியோர்க்கும், 
இன்னாருக்கு என்றுதான் இல்லாமல், என்னையும் கலந்துகொள்ளாமல்,
நமக்கே வைத்துக்கொண்டு வளமுடன் நெடுங்காலம் வாழ்வோம் என்னாமல், நீதான்
எல்லார்க்கும் கொடுப்பாயாக, இல்லக்கிழத்தியே!
பழங்கள் பழுத்துத் தொங்கும் முதிரமலைக்கு உரியவன்
திருத்தமான வேலையுடைய குமணன் கொடுத்த செல்வம் இது.
					மேல்
# 164 பெருந்தலை சாத்தனார்
சமைப்பதை முற்றிலும் மறந்த, குமிழ்கள் தேயாமல் உயர்ந்து விளங்கும் அடுப்பில்
காளான் முளைத்திருக்க, உடம்பை மெலிவிக்கும் பசியால் வாடி,
பால் இல்லாததால் தோலுடன் சுருங்கி
துளை தூர்ந்துபோன பொல்லாத வெறுமையான முலையைச்
சுவைத்துச் சுவைத்து அழும் தன் குழந்தையின் முகத்தை நோக்கிக்
கண்ணீரால் நிறைந்த ஈரமான இமைகளையுடைய குளிர்ந்த கண்களையுடைய என்
மனையாளின் வருத்தத்தைப் பார்த்து, உன்னை நினைத்து
உன்னிடம் வந்திருக்கிறேன், நல்ல போரையுடைய குமணனே!
எனது வறிய நிலையை அறிந்தாயாயின், இந்நிலையில்
உன்னை வளைத்தும் பரிசு கொள்ளாமல் விடமாட்டேன், பலவாக அடுக்கப்பட்டு
மீட்டும் நிலையிலுள்ள நரம்பினைக் கொண்ட, தோலால் போர்த்தப்பட்ட நல்ல யாழையும்
மார்ச்சனை பூசப்பட்ட முழவினையும் கொண்ட கூத்தர்களின்
வறுமையைப் போக்கும் குடியில் பிறந்தவனே! 
					மேல்
# 165 பெருந்தலை சாத்தனார்
எதுவுமே நிலையில்லாத இந்த உலகத்தில் என்றென்றும் நிலைத்து வாழவேண்டும் என்று எண்ணியவர்கள்
தமது புகழை இவ்வுலகத்தில் நிலைநிறுத்தித் தாம் மாண்டுபோயினர்,
யாராலும் அடையமுடியாத சிறப்பினையுடைய உயர்ந்த செல்வர்
வறுமையால் இரப்போர்க்குக் கொடுக்காததால்
முந்தைய கொடையுள்ளம் உள்ள மக்களைப்போல் உலகில் தொடர்ந்து இருப்பதை அறியாமற் போனார்,
கால்வரை தாழ்ந்த ஒலிக்கின்ற மணிகள் மாறிமாறி ஒலிக்கும் புள்ளிகளையுடைய நெற்றியையுடைய
வெற்றியுடன் நடந்துவரும் யானையைப் பாடுபவர்க்கு மிகுதியாகக் கொடுக்கும்
அழிவு இல்லாத நல்ல புகழையுடைய, வலிமையுள்ள குதிரையை உடைய தலைவனை
நான் பாடி நிற்கையில், பயனில்லாமல்
பெருமைபெற்ற பரிசிலன் வாடியவனாகத் திரும்புவது, என்
நாட்டை இழந்ததைக் காட்டிலும் மிகவும் கொடியது என்று
வாளைத் தந்தான், தன்னுடைய தலையை எனக்குக் கொடுக்க
தன்னைவிடச் சிறந்த பொருள் வேறு ஒன்றும் இல்லாததால்;
வெற்றி மிக்க உவகையோடு வந்திருக்கிறேன்
போரில் புறங்கொடாத கொள்கையைப் பூண்ட உன் தமையனைப் பார்த்துவிட்டு
					மேல்
# 166 ஆவூர் மூலம் கிழார்
நன்கு ஆராயப்பட்ட மிக நீண்ட சடையினையுடைய
முதிய இறைவனது வார்த்தைகளைவிட்டு விலகாமல்
அறம் ஒன்றையே சார்ந்து, நான்கு பகுதி உடையதாகி
ஆறு அங்கங்களாலும் உணரப்பட்ட ஒரு பழைய நூலாகிய வேதத்துக்கு
மாறுபட்டவைகளைக் கண்டோரின் செருக்கை அழிக்க விரும்பி
அவரது உண்மை போன்ற பொய்யை உணர்ந்து
அப்பொய்யை உண்மை என்று கருதாமல் உண்மைப் பொருளை அவர்களுக்கு ஏற்பச் சொல்லி
இருபத்தொரு வேள்வித்துறைகளையும் குறையில்லாமல் செய்து முடித்த
புகழ் நிறைந்த சிறப்பையுடைய அறிவுடையோர் மரபில் வந்தவனே!
வேள்வித் தொழிலுக்காக நீ போர்த்த
காட்டில் வாழும் கலைமானின் தோல்
நீ தோளின் மேல் அணிந்திருக்கும் பூணூலின் மேல் பொலிவுற்று விளங்க,
அறமற்றவைகளைக் கடிந்து நீக்கிய பெறுவதற்கரிய கற்பினையும்
அறநூல்கள் புகழ்கின்ற, யாகபத்தினிகள் நெற்றியில் அணியும் அணியான சாலகத்தைச் சூடி
சிறிய நெற்றியினையும், பெரிய அகன்ற அல்குலையும்
சிறிதளவான பேச்சையும், நிறைந்த கூந்தலினையும் உடைய உன்
நிலைக்கு மனமொத்த உன் துணையாகிய மனைவிமார்
தத்தமக்கு அமைந்த ஏவல் தொழிலைக் கேட்டுச் செய்ய,
காடோ, நாடோ அந்த அந்த இடத்தில்
காடென்றால் காட்டுப்பசு ஏழுடனும், நாடென்றால் நாட்டுப்பசு ஏழுடனும் குறையே இல்லாமல்
தண்ணீரைப்போல நெய்யை வழங்கியும்,
எண்ணிறந்த பல வேள்விகளைச் செய்தும்
மண் தாங்காத புகழ் பரப்பியும்
பெறுதற்கரிய விளக்கமுற்ற வேள்வி முடிந்த காலத்தில்
விருந்தினர்க்கு விருந்து செய்த உன் திருத்தமான மேம்பட்ட நிலையை
யாம் இன்றுபோல் எந்நாளும் காண்போமாக, மேற்கில்
பொன் விளையும் உயர்ந்த குடகு மலையில் மேகங்களின் இடி முழங்கினால்
பூக்கள் பரந்த புது நீரையுடைய காவிரி காக்கும்
குளிர்ந்த நீருடைய விளைநிலம் கொண்ட எங்கள் ஊரில் 
உண்பன உண்டும், தின்பன தின்றும், ஏறுவனவற்றில் ஏறியும் கொண்டாடுவதற்காகச்
செல்கிறேன் நான், நீ இறவாதிருந்து
மேகங்கள் அண்ணாந்துபார்க்கும் உயர்ந்த நீண்ட மலையான
மூங்கில் வளரும் இமயம் போல
நீ நிலைபெற்று வாழ்வாயாக, இந்த நிலத்தின் மேல்
					மேல்
# 167 கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரை குமரனார்
நீதான், போரைக் கண்டால், அந்தப் போரை வென்று, அந்தப் பகைவரின்
படையைத் தடுத்து எதிரே நிற்பதால்,
எதிரியின் வாள் பட்டதால் வடுக்கள் அழுந்தின உடம்புடனே
இச் செய்தியைக் கேட்ட செவிக்கு இனியவனாய் இருக்கிறாய், ஆனால் கண்ணுக்கு இனியவன் இல்லை
உன் பகைவரோ, உன்னைக் கண்டவுடன் புறங்கொடுத்து ஓடிவிடுதலால்
காயப்படாத உடம்பாகிய வடிவுடன் 
கண்ணுக்கு இனியவராக இருக்கின்றனர், ஆனால் அச் செய்தியைக் கேட்ட செவிக்கு இனியவர் இல்லை,
அதனால் நீயும் ஒன்றில் இனியவன், அவரும் ஒன்றில் இனியவர்,
இதில் ஒத்துப்போகாதது என்ன இருக்கிறது? வெற்றிபெரும் போரினைச் செய்யும்
வீரக்கழல் அணிந்த திருத்தமான அடிகளையும், விரையும் குதிரையையும் உடைய கிள்ளியே!
உன்னை வியந்து போற்றுகிறது இந்த உலகம், அது
எப்படியோ, பெருமானே! எமக்குச் சொல்வாயாக.
					மேல்
# 168 கருவூர் கந்தப்பிள்ளை சாத்தனார்
அருவி ஆரவாரிக்கும் மூங்கில்கள் நெருக்கமாக வளர்ந்த அகன்ற இடமாகிய
மிளகுக் கொடி வளரும் மலைச்சாரலில் மலர்ந்த காந்தள் செடியின்
கொழுத்த கிழங்கு வெளிப்படக் கிண்டியெடுத்து, தன் கூட்டத்துடன்
கடுமை நிறைந்த காட்டுப்பன்றி உழுதுபோட்ட புழுதிபட்ட நிலத்தில்
ஒரு நல்ல நாள் வருவதை எதிர்நோக்கிக் காத்திருந்து, குறவர்கள்
உழாமலேயே விதைத்த பெரிய கதிர்களையுடைய சிறுதினையின்
முதலில் விளைந்த புதுவரவை அதே நாள் காலையில் புதிதாக உண்ணுவதற்காக
காட்டுப்பசுவில் கறந்த நுரையுடன் கூடிய இனிய பாலை
மானின் தசையை வேகவைத்த புலால் நாறும் பானையின் (கொழுப்புத்தோய்ந்த)
வெள்ளிய நிறமுடைய பெரிய வெளிப்புறத்தைக் கழுவாமல் (பாலை) உலைநீராக ஊற்றி,
சந்தன விறகால் வேகவைக்கப்பட்ட சோற்றை
கூதாளி அழகாகப் பூத்துக்கிடக்கும் முல்லைப்பூ மணக்கும் முற்றத்தில்
செழுமையான குலையையுடைய வாழையின் அகன்ற இலையில் பலருடன் பகுத்து உண்ணும்
யாரும் ஏறாத குதிரையாகிய குதிரைமலைக்குத் தலைவனே! கூரிய வேலையும்
நறைக்கொடி நாரால் தொடுத்த வேங்கை மலர்களைக் கொண்ட அழகிய தலைமாலையையும் உடைய,
தீட்டப்பட்ட அம்பையுடைய வில்லோர்களுக்குத் தலைவனே!
கையால் அளவின்றிக் கொடுக்கும் ஈகையினையும், விரைந்தோடும் குதிரையையும் கொண்ட வேந்தனே!
உலக எல்லைக்குள் தமிழகம் கேட்கும்படி
பொய்யில்லாத நேர்மையான நாக்கு வலிக்கும்படி வாழ்த்தி
நாள்தோறும் பாடுவார்கள் பரிசிலர் என்று சொல்வர் -
ஈகைக் குணம் இல்லாத மன்னர் வெட்கப்படும்படியாக
அழியாது பரந்த உனது பழி இல்லாத சிறந்த புகழை - (வாழ்த்தி நாள்தோறும் பாடுவார்கள் பரிசிலர்)

# 169 காவிரிபூம் பட்டினத்து காரிக்கண்ணனார்
நீ படையெடுத்துச் செல்லும்போது பகைவரின் படையில்
வேலை எடுத்து எறியும் படைக்கு முன்னர் நிற்பாய் என்பதாலும்,
பகைவர் படையெடுத்து வரும்போது உம் படையின்
பின் அணியைத் தாங்கவேண்டி அகன்ற ஆற்றினைக்
குன்று குறுக்கே தடுப்பதைப் போல் நிற்பாய் என்பதாலும்
அரிது, பெருமானே! என்றும் உன்னைக் காணும் நேரம் கிடைப்பது 
பெரிதோ பெரிது என் சுற்றத்தின் துயரம்,
இப்பொழுதே பரிசில் கொடுத்து எங்களைப் போகச்செய்வாயாக, வெற்றியுடைய வேலைக்கொண்ட
இளம் கோசர் பலர் ஒளிவிளங்கும் படைக்கலம் பயிற்சிசெய்வதற்காக
உக்கிரமாக வேல் போன்றவற்றை எறிந்த அகன்ற இலையையுடைய முள்முருங்கையின்
பெரிய மரக் கம்பம் போல,
போரிடுபவர்க்குப் பிற்படாத உன் வெற்றி வாழ்வதாக.
					மேல்
# 170 உறையூர் மருத்துவன் தாமோதரனார்
காட்டுப்பசுக்கள் காயைத்தின்று விதையைத் துப்பிய நெல்லி மரங்களை வேலியாகக் கொண்ட
விதைகள் பரலாகச் சிதறிக்கிடக்கும் முற்றத்தையுடைய அழகிய வீடுகளைக் கொண்ட சிறிய ஊரில்
பகல் முழுதும் வேட்டையாடித் திரிந்த படிக்காத தோற்றத்தையுடைய
வில்லே ஏராகக் கொண்டு வேட்டையே உழவாகக் கொண்டவர்களின் நடுவே, ’துடும்துடும்’என்று
புலையன் தன் காய்த்துப்போன உள்ளங்கை சிவக்கும்படி
வலிமையுடன் அடித்து உரக்க ஒலியெழுப்பும் வலிய கண்ணையுடைய அச்சமுண்டாக்கும் உடுக்கு
புலி படுத்துக்கிடக்கும் உயர்ந்த மலையில் வாழும் பேராந்தையுடன் மாறிமாறி ஒலிக்கும்
மலையை உடைய நாட்டிற்கு உரிமையாளன் கூரிய வேலைக் கொண்ட பிட்டனை
நெருங்குவதைத் தவிருங்கள், பகைவர்களே! அவன்தான்
சிறிய கண்ணையுடைய யானையின் வெள்ளிய கொம்பு தந்த
ஒளி திகழும் முத்தினை விறலியருக்கு வழங்கி,
பிழிந்து நாரால் வடிகட்டின விரும்பத்தக்க கள்ளாகிய தேறலை
பண் அமைத்த நல்ல யாழைக்கொண்ட பாணனின் சுற்றத்தைப் பருகச்செய்து
தன்னிடம் பரிசில் கேட்டு வந்தவர்க்கு மென்மையானவனாக இருப்பானே அல்லாது பகைவர்க்கு
இரும்பைப் பயன்படுத்தும் வலிய கையையுடைய கொல்லன்
ஓங்கி அடிக்கும் சம்மட்டியோடு எதிர்த்துநிற்கும்
உலைக்கல் போன்ற வலிமையும் ஆண்மையும் உடையவன்.
					மேல்
 




# 171 காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார்
இன்று சென்றாலும் தருவான், சிறிதுநாள்
கழித்துச் சென்றாலும் தருவான், அடுத்துச் சென்றாலும்
முன்பே தந்தேனே என்று சொல்லாமல் அவனை அணுகி
நாள்தோறும் சென்றாலும் பொய்க்காமல்
நாங்கள் வேண்டியபடியே எம்முடைய வெறும் கலத்தை நிரப்புவான்,
தான் விரும்பியபடியே தன்னுடைய அரசன் மகிழும்படி
செய்வதற்கரிய போர்த்தொழிலை முடிப்பானாக, திருத்தமான வேலையுடைய கொற்றன்,
இனமான மிகுந்த துடிப்புள்ள காளைகளைத் தொழுவத்துடன் கேட்டாலும்,
களம் நிறைந்த நெல்லின் குவியல்களைக் கேட்டாலும்
அரிய அணிகலன்களை யானைகளோடு கேட்டாலும் பெருந்தகையாளனாகிய அவன்
எமக்கு மட்டுமல்ல, பிறர்க்கும் அத்தகைய அறத்தைச் செய்பவன்,
அவன் அப்படிப்பட்டவன் என்பதால் எம் இறைவனது பாதம்
முள்ளாலும்கூட வருந்தாமலிருக்கட்டும், 
கொடுப்பவர்கள் அரிதாகிப்போன இந்த உலகத்தில்
உயிர்வாழ்வோர் வாழ அவனது அடி வாழ்வதாக.
					மேல்
# 172 வடமண்ணக்கன் தாமோதரனார்
அடுப்பில் உலையை ஏற்றுங்கள், சோற்றை ஆக்குங்கள்
கள்ளும் குறைவுபடாமல் பார்த்துக்கொள்ளுங்கள், ஒளிரும் அணிகலன்களையுடைய
பாடுவதில் வல்ல விறலியர் மாலையும் சூடுங்கள்,
இப்படிப்பட்ட பல செயல்களை செய்யுங்கள், கொஞ்சங்கூட
வருந்தவேண்டாம், மேலும் தேவைப்படும் உணவுப்பொருளை எண்ணி,
ஐவனநெல்லுக்காகக் காவல்காப்போர் காவலுக்காக மூட்டிய தீ குறைந்தபோது
ஒளி வீசும் திருந்தின மாணிக்கம் செறிந்திருக்கும் இருளை அகற்றும்
மலைநாட்டை உடையவன் வலிய குதிரையையுடைய பிட்டன்,
அரிய போரை வெல்லும் வேலும், அவனுடைய தலைவனாகிய
மிகப் பெரிய கொடையையுடைய கோதையும்
அவனைப் பகைத்த மன்னரும் வாழ்வார்களாக நீண்ட காலம்.
					மேல்
# 173 சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன்
நான் உயிர்வாழும் நாளையும் சேர்த்துப் பண்ணன் வாழ்வானாக,
பாணர்களே! பாருங்கள்! இந்த இரவலனது சுற்றத்தின் வறுமையை
புதிதாகப் பழுத்திருக்கும் மரத்தில் பறவைகள் ஒலிப்பது போல
உணவு பரிமாறுவதாலும் உண்பதாலும் உண்டான மிகுந்த ஆரவாரம் கேட்கிறது;
காலம் தப்பாத மழை பெய்யும் காலம் பார்த்துத்
தம் முட்டைகளை எடுத்துக்கொண்டு மேட்டுநிலத்துக்குச் செல்லும்
மிகச் சிறிய எறும்பின் ஒற்றை வரிசையைப் போல
சோற்றை உடைய கையினராய், வெவ்வேறாகப் போகின்ற
பெரும் சுற்றத்தாரோடும் கூடிய சிறுவர்களைக் கண்டோம், கண்டும்
மீண்டும் மீண்டும் வினவுகிறோம், தெளிவாக
பசியென்னும் நோயைப் போக்கும் மருத்துவன் வாழும் வீடு
அருகில் இருக்கிறதா? தொலைவில் இருக்கிறதா? எங்களுக்குச் சொல்லுங்கள்.
					மேல்
# 174 மாறோக்கத்து நப்பசலையார்
பிறரை அச்சுறுத்தி வருத்தும் அசுரர் கூட்டம் கொண்டுபோய் மறைத்ததினால்
தொலைவிலிருந்து ஒளிவிடும் சிறப்பு மிக்க சூரியனைக் காணாமையால்
இருளானது உலகத்தார் கண்ணை மறைத்த வட்டமான உலகத்தில்
மன உளைச்சலொடு சேர்ந்த துன்பம் நீங்கும் வண்ணம், மிக்க வலிமையுடைய
கருநிறக் கண்ணன் அந்தச் சூரியனைக் கொண்டுவந்து நிறுத்தியதைப் போல்,
போரில் தோற்றதால் தம் அரசனை இழந்து துயரத்துடன் இருக்கும் நேரத்தில்
முரசு கிளர்ந்து ஒலிக்கும் அரண்மனை முற்றத்தோடு, கரையை மோதி
முழங்கும் நீர் உடைந்து பெருக்கெடுத்த அகண்ட காவிரி பாயும்
வளமான நல்ல நாட்டின் அல்லல் தீர,
பொய்யா நாவின் கபிலன் பாடிய
மேகங்கள் சூழ்ந்த பெரிய மலையில், விரைந்து
போரை விரும்பும் மறவர் புறங்காட்டி ஓடுவதைக் கண்ட
இகழ்ச்சியற்ற சிறப்பையுடைய முள்ளூரின் மலையுச்சியில்
அரிய இடத்தில் இருந்த பெரிய வெற்றியையுடைய சோழனது
திங்களைப் போன்ற வெண்கொற்றக்குடையைத் தோன்றச்செய்து, அந்தக் குடையைப்
புதுமையுண்டாக நிலைநிறுத்திய புகழால் மேம்பட்டவனே!
குகையில் வாழும் புலியின் சின்னத்தைப் பொறித்த கோட்டையையும், ஒளிவிடும் அணிகலன்களையும்
வண்டு ஒலிக்கும் மாலையையும் பெரும் புகழையும் உடைய உன் முன்னோனாகிய தந்தை
இங்கே செய்த நல்ல அறத்தின் பலனை அங்கே சென்று அனுபவிக்குமாறு
தேவருலகத்துக்குப் போய்விட்டான், எனவே
நல்ல நெறியைக் கொன்றவர் பக்கத்திலிருக்க, திசையெங்கும் தேடியலையும்
கவலையுற்ற மனத்தின் வருத்தம் தீர
நீ வந்து தோன்றினாய், இணைந்த மாலையையுடைய தலைவனே!
மலையிடம் பொடிபட, கானம் வெம்பிப்போக
மிக்க நீர் உள்ள எல்லைகளில் உள்ள பல குளங்கள் வற்றிப்போக,
கோடைக்காலம் நீண்டு செல்லும் பசுமை இல்லாத காலத்தில்
இந்தப் பெரிய உலகம் நெளியுமாறு திரண்டு
இடி முழங்கும் மின்னல் தொகுதியோடு மழை பொழிந்ததைப் போல - (நீ வந்து தோன்றினாய்)
					மேல்
# 175 கள்ளில் ஆத்திரையனார்
என் இறைவனே! ஆதனுங்கனே! நீ வாழ்க! என்
நெஞ்சத்தைத் திறப்போர் உன்னைக் காண்பார்கள்,
உன்னை நான் மறந்தால், மறக்கும் வேளையானது
என் உயிர் உடம்பிலிருந்து பிரியும் பொழுது
என்னையே நான் மறந்தால், அப்போது உன்னை மறப்பேன், வெற்றிதரும் வேலையும்
விண் முட்டும் உயர்ந்த வெண்கொற்றக்குடையையும், கொடியுடைய தேரையும் கொண்ட மௌரியரின்
உறுதியான ஆரங்கள் கொண்ட சக்கரங்கள் எளிதில் உருண்டோட வெட்டப்பட்ட
மலைகளுக்கு அப்பாலுள்ள உலகத்திற்கு இடைகழியாகிய அற்றவாயில் என்னுமிடத்தில் நிலைபெற்ற
பரந்த இடத்தையுடைய சூரியமண்டிலம் போல, நாள்தோறும்
பலரையும் காப்பாற்றுவதை ஏற்றுக்கொண்டிருக்கிற அறத்துறையாகிய உன்னை - 
					மேல்
# 176 புறத்திணை நன்னாகனார்
விளையாட்டுத் தோழியரான ஒளிரும் வளையகளை அணிந்த மகளிர்
காட்டுப்பன்றி தோண்டிப்போட்ட கரிய சேற்றைக் கிளறினால்
ஆமை இட்ட புலால் நாறும் முட்டையை
தேன் மணக்கும் ஆம்பலின் கிழங்குடனே பெறும்
துடும் என்று ஒலிக்கும் நீரோடும் வாய்க்கால்களைக் கொண்ட
பெரிய மாவிலங்கை என்னும் ஊர்க்குத் தலைவன், சிறிய யாழையுடைய
வறியோர் தொடுக்கும் புகழ்மாலை சூடும் நல்லியக்கோடனைத்
துணையாகக் கொண்டிருக்கிறாய், வாழ்க, என்னைப் பிடித்த விதியே!
பாரியின் பறம்புமலையின் குளிர்ந்த சுனையிலுள்ள தெளிந்த நீர்
ஊருக்குள்ளேயே கிடைப்பதால் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் மெத்தனமாய் இருப்பவர் போல
அவனைப் பார்க்காமல் கழிந்த நாள்களுக்காகவும், அவனைப் பார்க்காமல் இருக்கும்
வரப்போகிற நாள்களுக்காகவும் என் நெஞ்சம் வருந்தும், அவனது
மிக்க மென்மையான சாயலைப் பார்க்கும்போதெல்லாம் அவற்றை எண்ணி. 
					மேல்
# 177 ஆவூர் மூலங்கிழார்
ஒளிவிடும் வாளையுடைய மன்னர்களின் ஒளி சிந்தும் விளக்குகளையுடைய உயர்ந்த அரண்மனையில்
கண்கள் பூத்துப்போக, பல நாள்கள் வாடிக்கிடந்து
பாடிப் பெற்ற பொன் அணிகலன்கள் அணிந்த யானையானது -
தமக்கு வேண்டியவர் எனில் எல்லாரும் எளிதில் நுழையலாம், போர் எனில்
திங்களும் நுழையமுடியாத அளவுக்குப் பொறிகள் பொருத்தியிருக்கும் ஒடுக்கவாயிலை உடைய
கள்ளை ஒருவருக்கொருவர் மாறிமாறி நீட்ட, அருகருகே இருந்த
குறுகிய பல அரண்களுக்குள் அக் கள்ளை நிரம்ப உண்டு தங்கியிருந்து
புளிப்புச் சுவையை விரும்பிய கள் செருக்கினால் சிவந்த கண்ணையுடைய ஆடவர்
இனிய புளிப்பையுடைய களாப்பழத்துடனே, துடரிப்பழத்தைத் தின்று, வெறுத்துப்போய்
மிதமாக அரித்து ஓடும் நீரையுடைய நல்ல காட்டு ஆற்றின் மணற்குன்றின் மேல் ஏறி
கடிய நாவல் பழத்தைப் பறித்து இருந்து உண்ணும்
பெரும் புகழ் ஆதியின் பின்னிக்கிடக்கும் செடிகொடிகளைக் கொண்ட காட்டை உடைய குடநாட்டில்
பாலை மறவர் தந்த முள்ளம்பன்றியின் வெட்டப்பட்ட தசையின்
குழைவான கொழுப்பு நிறைந்த சூடான வெண் சோற்று உருண்டையை
வருவார்க்கெல்லாம் அளவின்றி அள்ளிக் கொட்ட
பெரிய பனையோலையால் செய்த குடையில் வாங்கி உண்ணும்
பெரிதாகப் புலர்ந்த விடியற்காலையின் சிறப்புக்கு ஒப்பிடமுடியாதது. 
					மேல்
# 178 ஆவூர் மூலங்கிழார்
கட்டிப்போட்டிருக்கும் கம்பத்தை வெறுத்து நெடுமூச்சு விடும் யானையோடு, இலாயத்தை வெறுத்து
காற்றுப்போல் இயங்கும் குதிரை ஆரவாரிக்கும் இடத்தில்
இடுமணல் நிறைத்த முற்றத்தில் புகுந்த சான்றோர் முன்னிலையில்
உண்ணவில்லையென்றாலும், தன் பெயரில் சபதம் செய்து
உண்ணுங்கள் என்று எங்களை இரந்துவேண்டும் பெரும் புகழையுடைய சாத்தன்
எம்மைப் போன்றவரிடம் இனிய பண்பினையுடையவன், பகைவர்
எறிகின்ற படைக்கலங்கள் ஒன்றோடொன்று தம்முள் கலந்து வரும் அச்சம் தரும் போரில்
கள்ளுச்சட்டியைக் கையினில் பிடித்துக்கொண்டு, உள்ளூரில் கூறிய
வீரமொழிகளைப் போரின்போது மறந்த சிறியவரான பெரியவர்கள்
பயந்து பின்வாங்கும்போது
அவர்க்கு அரணாகத் தான் முன்னே நிற்பான்
					மேல்
# 179 வடநெடுந்தத்தனார் வடம நெடுந்தத்தனார் வடம நெடுந் தச்சனார்
உலகத்தின் மேல் வள்ளல்தன்மையுடையவர்கள் இறந்துபோக
எதையுமே ஏற்கமுடியாமல் கவிழ்த்துவைத்த என் பிச்சைப் பாத்திரத்தை
நிமிர்த்துவோர் யார் என்று கேட்டதால், தன்னுடன் பகைமைகொண்டோரின்
நன்கு இழுத்துக் கட்டப்பட்ட முரசத்துடன், பல நாடுகளை வெற்றிகொண்ட
திருமகள் விரும்பும் நுணுக்கமான வேலைத்திறன் கொண்ட ஆபரணங்களை அணிந்த பாண்டியனின் வீரன்
மன்னனுக்குப் படை வேண்டிய பொழுது வாட்படைவீரரைக் கொடுத்து உதவியும்,
செயல் வேண்டிய பொழுது ஆலோசனை வழங்கி உதவியும்
இவ்வாறு வேண்டிய பலவற்றையும் அரசனுக்கு உதவி,
தான் தாங்கும் நுகம் ஒருபக்கம் சாயாமல் செல்லும் காளை போல ஆண்மை பொருந்திய ஊக்கத்தையும்
தோற்றுப்போகாத நல்ல புகழையும் உடைய நாலை கிழவன்
பருந்தினது பசியைப்போக்கும் நல்ல போரைச் செய்யும்
திருத்தமான வேலையுடைய நாகன் என்று பலரும் கூறினர்.
					மேல்
# 180 கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரை குமரனார்
தினந்தோறும் கொடுக்கும் செல்வம் உடையவன் அல்லன்,
இல்லை என வருவோர்க்கு இல்லை என மறுக்கும் இழிவு உடையவனும் அல்லன்,
அரசனுக்கு ஏற்பட்ட துயரத்தைத் தாங்கி, போர்க்களத்தில்
படைக்கலங்கள் பட்டதால் உண்டான விழுப்புண்ணின் வலியை நீக்கி
மருந்துக்காக வெட்டப்பட்ட மரத்தைப் போல வாளால் ஏற்பட்ட வடுக்கள் ஒன்றோடொன்று கலந்து
பழிகூறப்படாத அழகுபெற்ற உடம்பையுடையவன், இரவலர்க்குக் கொடுப்பதை எதிர்பார்த்து இருப்பவன்
ஈர்ந்தூர் என்னும் ஊரினன், பாணரின் பசிக்குப் பகையானவன், அவனிடம்
உன் வறுமையை நீக்க விரும்பினால் எம்முடன்
நீயும் வருவாயாக முதுமை வாய்க்கப்பெற்ற இரவலனே!
நாம் அவனை இரந்து வேண்டும்பொழுது, அவன் எம்முடைய
உண்ணாத வயிற்றைச் சுட்டிக்காட்டி, தன் ஊரிலிருக்கும்
வலிமையான கையையுடைய கொல்லனிடம் வேண்டுவான்,
”சிறந்த இலைவடிவில் அமைந்த நெடிய வேலைக் கூர்மையாக்கித்தா” என்று 
					மேல்
 




# 181 சோணாட்டு முகையலூர் சிறுகரும் தும்பியார்
ஊர்ப்பொதுவில் நின்ற விளாமரத்தின் பழம் வீட்டில் விழ, அதனைக்
கரிய கண்ணையுடைய மறத்தியின் காதல் மகனுடன்
காட்டிலுள்ள கரிய பெண்யானையின் கன்றும் வந்து எடுக்கும்
பெரிய அரண் சூழ்ந்த வலிய நிலத்தில் இருப்பிடத்தைக் கொண்ட
புலால் நாறும் அம்பையும் போரிடுவதற்கு அரிய காவல்காட்டினையுமுடைய
வலார் என்னும் ஊரில் உள்ளவன் குறிதப்பாத வாளினை உடைய பண்ணன்;
உனது உண்ணாத வறுமையிலுள்ள சுற்றம் உண்டு பிழைக்க விரும்பினால்
இப்போதே நீ செல்வாயாக, சென்று அவன்
பகைநாட்டுக்குச் செல்லும் முன்னர் உன்
வறுமையைக் காட்டி, உன் பசிக்குப் பகையாகிய பரிசிலைப் பெற்றுக்கொள்வாயாக.
					மேல்
# 182 கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி
இந்த உலகம் நிலைத்து இருக்கிறது, இந்திரர்க்கு உரிய
அமிழ்தம் தமக்குக் கிட்டியது எனினும், அதனை இனிது என்று கொண்டு
தனித்து உண்பவரும் இல்லை, யாரோடும் வெறுப்புக் கொண்டிருப்பவர் இல்லை,
சோம்பல் உடைவரும் இல்லை, பிறர் அஞ்சுகின்ற துன்பத்திற்குத் தாமும் அஞ்சுவர்,
புகழ் கிடைக்கும் என்றால் உயிரையும் கொடுப்பார், பழி வரும் என்றால்
அதனால் உலகம் முழுவதையும் பெற்றாலும் ஏற்கமாட்டார், சோர்வடையமாட்டார்,
அத்தகைய சிறப்புகளை உடையவர்கள் ஆகி
எதையும் தமக்கு என முயலாத வலிய முயற்சியால்
பிறர்க்காக முயல்பவர்கள் இருப்பதால் - (இந்த உலகம் நிலைத்து இருக்கிறது)
					மேல்
# 183 ஆரிய படை கடந்த நெடுஞ்செழியன்
ஆசிரியர் இடர்ப்பாடு உற்றபோது உதவியும். அவருக்குத் தேவையான பொருள் கொடுத்தும்,
பின் நின்று கற்கும் முறைமையையும் வெறுக்காமல் கற்றல் நல்லது;
பிறப்பு ஒரு தன்மையாகிய ஒரு வயிற்றுப் பிறந்தோருள்ளும்
கல்வியின் சிறப்பால் தாயும் மனம் வேறுபடும்;
ஒரு குடும்பத்தில் பிறந்த பலருக்குள்ளும்
மூத்தவன் வருக என்று அழைக்காமல், அவர்களுக்குள்
அறிவுடையோன் கூறும் ஆலோசனை வழியே அரசும் நடக்கும்,
வேறுபாடு தெரியப்பட்ட நான்கு பிரிவினுள்ளும்
கீழ்ப்பிரிவைச் சார்ந்த ஒருவன் கற்றால்
மேல் பிரிவைச் சார்ந்த ஒருவனும் அவனிடம் கீழ்ப்படுவான்.
					மேல்
# 184 பிசிராந்தையார்
நன்கு விளைந்த நெல்லை அறுத்துக் கவளமாக யானைக்குக் கொடுத்தால்
ஒரு மாவிற்கும் குறைந்த நிலத்தில் விளைந்தது, பல நாள்களுக்கு வரும்;
நூறு செய் நிலம் என்றாலும், யானை தனியே புகுந்து உண்டால்
அதன் வாய்க்குள் புகுவதைக் காட்டிலும், காலே மிதித்துப் பெரிதும் அழித்துவிடும்;
அறிவுடைய வேந்தன் முறை அறிந்து இறை கொண்டால்
கோடிப்பொருளை உற்பத்திசெய்து நாடு மிகவும் வளம்பெறும்;
அரசன் அறிவுச்சிறுமையன் ஆகி நாள்தோறும்
தரம் அறியாத ஆரவாரத்தையுடைய சுற்றத்தோடு
மக்களின் அன்பு கெடும்படியாகத் திரட்டும் பெரும் பொருளை விரும்பினால்
யானை புகுந்த வயல் போல
தானும் பயனடையான், அவன் நாடும் கெட்டுப்போகும்.
					மேல்
# 185 தொண்டைமான் இளந்திரையன்
சக்கரங்களை வண்டியின் நெடுஞ்சட்டத்துடன் முறையாக இணைத்து, நிலத்தில் செலுத்தப்படும்
பாதுகாப்பான வண்டி, அதனைச் செலுத்துவோன் வல்லவனாக இருந்தால்
இடர்ப்பாடு இல்லாமல் தன் வழியில் இனிதாகச் செல்லும்;
வண்டியைச் செலுத்துவதில் தெளிவில்லாதவனாக இருந்தால் நாள்தோறும்
பகையாகிய செறிந்த சேற்றில் அழுந்தி
மிகப் பல தீய துன்பத்தை மேன்மேலும் உண்டாக்கும்.
					மேல்
# 186 மோசிகீரனார்
நெல்லும் உயிர் அன்று, நீரும் உயிர் அன்று,
மன்னனையே உயிராக உடையது இந்தப் பரந்த இடத்தையுடைய உலகம்,
அதனால், நாம்தான் நாட்டுமக்களுக்கு உயிரானவன் என்பதனை அறிந்திருத்தல்
வேல்கள் மிகுந்த படையையுடைய வேந்தனுக்குக் கடமையாகும்.
					மேல்
# 187 ஔவையார்
ஒன்றில் நாடாக இருக்கிறாய், ஒன்றில் காடாக இருக்கிறாய்,
ஒன்றில் பள்ளமாக இருக்கிறாய், ஒன்றில் மேடாக இருக்கிறாய்,
எந்த இடத்தில் நல்லவராக ஆடவர் இருக்கிறார்களோ
அந்த இடத்தில் நீயும் நல்லதாக இருக்கிறாய், வாழ்க நிலமே!
					மேல்
# 188 பாண்டியன் அறிவுடை நம்பி
பெறக்கூடிய செல்வம் பலவற்றையும் பெற்றுப் பலருடன் உடனிருந்து உண்ணும்
உடைமை மிக்க செல்வராக இருந்தாலும், சிறிதளவு கால இடைவெளியுடன்
சிறு சிறு எட்டுகளாக எடுத்துவைத்து, சின்னக் கையை நீட்டி
வட்டில் உணவைத் தரையில் சிந்தியும், கூடவே பிசைந்தும், வாயில் கவ்வியும், கையால் துழாவியும்
நெய்யையுடைய சோற்றை உடம்பில் படுமாறு சிதறியும்,
அறிவை இன்பத்தால் மயக்குகின்ற புதல்வரை இல்லாதவர்க்குத்
தம் வாழ்நாளின் பயன் என்பதில் குறைபாடு இல்லை.
					மேல்
# 189 மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
தெளிந்த நீரால் சூழப்பட்ட உலகம் முழுவதையும் மற்ற வேந்தர்க்கும் பொதுவானது என்பதில்லாமல்
தனது வெண்கொற்றக்குடையின் கீழ் ஆட்சிசெய்யும் ஒருவர்க்கும்,
நடுச்சாமத்திலும், பகலிலும் உறங்காதவனாக
விரைந்தோடும் விலங்குகளை வேட்டையாடித் திரியும் கல்வியில்லாத ஒருவனுக்கும்,
உண்பது நாழி அளவு, உடுப்பவை அரை ஆடை, மேலாடை என இரண்டே,
மற்றவையும் எல்லாம் ஒன்றுபோலத்தான்,
செல்வத்தால் பெறும் பயன் கொடுத்தல்,
செல்வத்தை நாமே அநுபவிப்போம் என்றால் அவர் இழக்கப்போவது மிகுதியாக இருக்கும்.
					மேல்
# 190 சோழன் நல்லுருத்திரன்
விளைந்து முற்றிய பதத்தில் உள்ள சிறிய நிலத்திலிருந்து வளைந்த கதிராகிய
உணவைக் கொண்டுவந்து தன்னுடைய வளையில் நிறையச் சேமித்துவைக்கும்
எலியைப் போன்ற சிறிய முயற்சியராகி, தம்மிடம் உள்ள
செல்வத்தை நுகராது இறுகப்பிடிக்கும் ஊக்கமற்றவரோடு
ஏற்படும் நட்பு எனக்கு இல்லாமல் போகட்டும்;
கொடூரமான காட்டுப்பன்றியை அடித்து, அது இடப்பக்கம் விழுந்ததென்றால்
அன்றைக்கு அவ்விடத்தில் அதனை உண்ணாமலிருந்து, பின்னொருநாள்
பெரிய மலையின் குகையினின்றும் கிளம்பி, உணவை விரும்பி எழுந்து
பெரிய களிறாகிய ஒற்றை யானையை நல்ல வலப்பக்கம் விழுமாறு கொல்லும்
புலிக்குப் பசித்ததைப் போல தளர்ச்சி இல்லாத உள்ளத்து
வலிமையுடையோரின் நட்போடு
கூடி வாழும் நாட்கள் நமக்கு உண்டாவதாக.
					மேல்
 




# 191 பிசிராந்தையர்
உமக்கு வயது பல ஆண்டுகள் ஆகியிருக்க நரை இல்லாமல் இருப்பது
எப்படி ஆகியது என்று கேட்பீர்கள் என்றால்,
மேன்மையான குணங்களையுடைய என் மனைவியோடு மக்கள்மாரும் அறிவு நிரம்பியவர்கள்,
நான் எதைச் செய்ய நினைக்கிறேனோ அதனையே செய்கிறார்கள் என் ஏவலாளர், வேந்தனும்
தவறானவற்றைச் செய்யாமல் மக்களைக் காப்பான், அதற்கு மேலும்
நல்ல குணங்களால் நிறைந்து, பணியவேண்டியவரிடம் பணிந்து, புலனடக்கமுள்ள கொள்கையையுடைய
சான்றோர் பலர் இருக்கின்றனர் நான் வாழும் ஊரில்.
					மேல்
# 192 கணியன் பூங்குன்றன்
எல்லா ஊரும் நம் ஊரே, எல்லா மக்களும் நம் உறவினரே!
கேடும் ஆக்கமும் பிறர் தருவதால் வருவதில்லை,
வருந்துவதும், அது தீர்தலும் அவற்றைப் போன்றனவே,
இறப்பு என்பது புதியது அன்று, வாழ்க்கை
இனியது என்று மகிழ்ந்ததில்லை, வெறுத்தபோது
இனிமையற்றது என்று சொன்னதும் இல்லை, மின்னலுடனே
மழை குளிர்ந்த துளிகளைப் பெய்தலால், பெருக்கெடுத்து
பாறைகளை மோதிக்கொண்டு ஆரவாரிக்கும் மிகுந்து செல்லும் பெரிய ஆற்றின்
நீரின் வழியே போகும் மிதவையைப் போல, பெறுவதற்கரிய இந்த உயிர்
விதிவழியே போகும் என்பது அறிவுடையோர் கூறிய
நூலால் தெளிந்தோம்; எனவே, நன்மையால் மிக்க
பெரியோரை வியந்து போற்றுதல் செய்யோம்,
சிறியோரை இகழ்தல் அதனைக்காட்டிலும் செய்யோம்.
					மேல்
# 193 ஓரேருழவர்
தோலை உரித்து அதனை மேல்கீழாய்த் திருப்பிப்போட்டதைப் போன்ற பரந்த வெளிறிய உவர்மண் நிலத்தில்
ஒருவன் விரட்டுகின்ற மானைப் போல
ஓடித் தப்பிவிடுதலும் கூடும்
சுற்றத்தோடு கூடி வாழும் இல்வாழ்க்கை தப்பவிடாமல் காலைத் தடுக்கும்.
					மேல்
# 194 பக்குடுக்கை நன்கணியார்
ஒரு வீட்டில் இழவுக்கொட்டு கொட்ட, ஒரு வீட்டில்
மிகக் குளிர்ந்த மணமுழவின் ஓசை பெரிதாக ஒலிக்க,
கணவருடன் சேர்ந்திருப்போர் பூக்களையும், அணிகலன்களையும் அணிந்திருக்க, அவரைப் பிரிந்திருப்போரின்
வருத்தம் மிக்க கரிய கண்கள் கண்ணீர் ஒழுகிச் சிந்த,
படைத்திருக்கிறான் அந்தப் பண்பு இல்லாத கடவுள்,
கொடுமையானது இந்த உலகத்தின் இயற்கை,
எனவே இனியதைக் காண்க, இதன் இயல்பினை உணர்ந்தவர்கள்.
					மேல்
# 195 நரிவெரூஉ தலையார்
பலராய்க் கூடியிருக்கும் சான்றோர்களே! பலராய்க் கூடியிருக்கும் சான்றோர்களே! 
மீனின் முள் போன்ற முதிர்ந்த நரையையும், சுருக்கம் விழுந்த கன்னங்களையும்
யாருக்கும் பயனில்லாமற் போன மூப்பையும் கொண்ட சான்றோர்களே!
மழு என்ற கூரிய ஆயுதத்தையும், கடுமையான வலிமையையும் உடைய கூற்றுவன்
உம்மைப் பாசக்கயிற்றினால் கட்டிக்கொண்டுபோகும்போது வருந்துவீர்கள்,
உங்களால் நல்லதைச் செய்ய முடியாவிட்டாலும்
நல்லவை அல்லாததைச் செய்வதைத் தவிருங்கள், அதுதான்
எல்லாரும் விரும்புவது, அன்றியும்
நல்ல வழியில் செலுத்தும் பண்பும் அதுதான்.
					மேல்
# 196 ஆவூர் மூலங்கிழார்
தம்மால் கொடுக்க இயலும் பொருளை இயலும் என்று சொல்லிக் கொடுத்தலும், எவருக்குமே
தம்மால் கொடுக்க இயலாத பொருளை இல்லை என்று சொல்லி மறுத்தலுமாகிய இரண்டும்
முயற்சியின்பாற்பட்ட நட்பின் கூறுகளாகும்,
தம்மால் இயலாததை இயலும் என்று சொல்வதும், இயலுவதை
இல்லை என்று மறுத்தலும் ஆகிய இரண்டும் வேகமாக
இரந்துவருவோரை வருத்தப்படுத்துவதுமட்டுமன்றி, கொடுப்போரின்
புகழைக் குறைப்படுத்தும் வழியுமாகும்,
இப்போது நிகழ்ந்தது அது போன்றது, எள்ளளவுகூட
நெடுநாள் காணாமல் இப்போது பார்க்கிறோம், அதனால்,
நோயில்லாமல் வாழ்வாராக உன் மக்கள், நானும்
வெயிலடிக்கிறதே என்று வெளியில் செல்ல வெறுத்ததில்லை, குளிருகிறதே என்று சோம்பியிருந்ததில்லை
பாறையைக் குடைந்தது போன்ற, காற்றுக்கு மறைவிடமாகிய வறுமையுள்ள என் வீட்டில்
நாணம் ஒன்றைத்தவிர வேறு ஒன்றை அணியாத கற்பினையும், பளிச்சென்ற நெற்றியையும்,
மென்மையான இயல்பினையும் உடைய என் மனைவியை நினைத்துச்
செல்கிறேன், உன் ஆயுள் பெருகட்டும்.
					மேல்
# 197 கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார்
காற்று இயங்குவதைப் போல தாவிச் செல்லும் குதிரைகளோடு
கொடி அசையும் உச்சியையுடைய தேரினை உடையவர் என்றும்,
கடலைக் கண்டது போன்ற ஒளியுடைய படைக்கருவிகளைக் கொண்ட படைவீரரோடு
மலையை எதிர்த்து மோத வல்ல களிற்றினையுடையவர் என்றும்,
இடி முழங்கினாற் போன்ற அச்சந்தரும் முரசமோடு
போரில் மேம்பட்ட வெற்றியாளர் என்றும்,
நிலம் முழுதும் படையினையுடைய சிறந்த அணிகலன் அணிந்த அரசரின்
ஆட்சியின் கீழுள்ள செல்வத்தை ஒருபொருட்டாக எண்ணியது இல்லை;
எம்மால் மதிக்கப்படுவோர்
முள்வேலி அடைத்த தோட்டத்தில் ஆட்டுக்குட்டி மேய்ந்து மிஞ்சிய
குறிய, மணமுடைய முஞ்ஞையின் செழுமையான கண்ணில் கிளைத்த சிறிய இலையை
முல்லை நிலத்தில் விளையும் வரகுச் சோற்றுடன் பெறுகின்ற
சிறிய ஊர்க்குரிய மன்னன் என்றாலும், எம்மிடம்
முறைமை அறிந்து நடக்கும் குணத்தையுடையவரே;
மிகப் பெரிய துன்பத்தை அடைந்தாலும் கொஞ்சங்கூட
நல்ல உள்ளம் இல்லாதவரின் செல்வத்தை விரும்பமாட்டோம்;
நல்ல அறிவாளரின் வறுமையை
நாங்கள் மிகவும் பெரிதாக விரும்பி அதனையே நினைப்போம், பெருமானே 
					மேல்
# 198 வடமவண்ணக்கண் பேரிசாத்தனார்
அருவி கீழே விழும் பெரிய மலையைப் போன்ற
முத்தாரத்தோடு பொலிந்த உன் மார்பினில், ஆசை குறையாத
தெய்வத்தன்மை அமைந்த கற்பினையும், சிவந்த ஆபரணத்தையும் உடைய
உன்னுடைய மனைவி பெற்றுத் தந்த பவழ மணி போன்ற அழகிய வாயினையும்
கிண்கிணியையுமுடைய உன் புதல்வர் பொலிவு பெறுக என்று வாழ்த்தி
திண்ணிய தேரையுடைய அண்ணலே! உன்னைப் புகழ்ந்து,
உன் மேல் அன்பு பெரிதாகையால் கனவிலும் உன் புகழையே கூறும்
என் ஆசை மிகுந்த நெஞ்சம் இன்புற்று மகிழ,
ஆலிலையில் இருந்த திருமால் போன்ற உன்னுடைய செல்வத்தையெல்லாம்
வேலையுடைய தலைவனே! நான் கண்டேன், எனவே
விடைபெறுகிறேன், வாழ்க உன் தலைமாலை, தொடர்ச்சியான
குளிர்ந்த தமிழ்நாட்டு எல்லை முழுவதையும் கொள்ளைப்பொருளாகக் கொண்டு
உன் பகைவர் பணிய, அவர் பொருளையும் சேர்த்து உண்ணும் தணிக்க முடியாத மிக்க வலிமையுடைய
உன்னைப் போன்ற உன் புதல்வர்கள் எப்போதும்
பகைவர் வாட, பெறுவதற்கு அரிய அணிகலன்களைத் தந்து உன்னுடைய
பொன்னை உடைய பெரிய அரண்மனையில் நிரம்ப வைத்த உன்னுடைய
முன்னோர்களைப் போல் இருப்பதாக அவர்களின் பெரிய கருணை உள்ளம்,
எல்லா இடங்களிலும், ஒவ்வொரு நாளும் மிகுந்து, செறிந்த அலைகளைக் கொண்ட
பெரிய கடல் நீரைக் காட்டிலும், அந்தக் கடல் கொழிக்கும் மணலைக் காட்டிலும்
நீண்டு உயர்ந்த வானத்திலிருந்து விழும் மழைத் துளிகளைக் காட்டிலும் மிகுதியாக
உன் மைந்தர் பெறும் மக்களைக் காணும்போதெல்லாம், நீயும்
விரும்பிய செல்வத்துடனே புகழும் இனிதே விளங்க
நெடுங்காலம் வாழ்வாயாக நெடுந்தகையே! நானும்
உறவினரே இல்லாத தொலைதூர நாட்டில் நாள்தோறும்
மழைத்துளியை விரும்பும் வானம்பாடியைப் போல உன் கொடை மேல் ஆசையால் வருந்தி, உன்
அடி நிழலில் வாழ்ந்து பழகிய அடியேனாகவே வாழ்வேன்,
விரைந்து ஓடும் குதிரையையுடைய மாறனே! நீ செய்த செயலை மறவாதிருப்பாயாக!
					மேல்
# 199 பெரும்பதுமனார்
தெய்வம் உறையும் ஆலமரத்தின் பெரிய கிளைகளில் பழுத்த மிகுதியான பழத்தை
நேற்று உண்டோம் என்று கருதாமல், பின்பும்
அங்குச் செல்வதைக் குறைப்பதில்லை, ஆரவாரிக்கும் பறவைக்கூட்டம்,
அதனைப் போன்றவர் இரப்போர், அவர்களை
எதிர்கொண்டு காக்கும் மேலான செயலைச் செய்யும் பெருமக்களின்
செல்வம் அந்த இரப்போரின் செல்வம் ஆகும், 
அந்தப் பெருமக்களின் வறுமை, அந்த இரப்போருடைய வறுமை ஆகும்.
					மேல்
# 200 கபிலர்
குளிர்ந்த மலையில் உயர்ந்துநிற்கும் பசும் இலைகளையுடைய பலாமரத்தின்
பழத்தைக் கையில் பிடித்துக்கொண்டு உண்ட கரிய விரலையுடைய ஆண்குரங்கு
சிவந்த முகத்தையுடைய தனது பெண்குரங்குடனே அன்பாகச் சேர்ந்து, மலைமுகடுகளுடன் விளங்கி,
மேகங்களும் உச்சியை அறியாத உயர்ந்த மலைப்பக்கத்தில்
மூங்கில் உச்சியில் தூங்கும் மலைநாட்டு வேந்தனே!
கொழுப்பைச் சுவைத்து மகிழ்ந்த குருதிதோய்ந்ததினால் நெருப்புப்போன்ற தலையுடைய நீண்ட வேலையும்
களத்தையே தன்வசப்படுத்திக்கொண்டு சீறும் கொடுமை நிறைந்த யானையையும்,
ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட வளைந்த ஆபரணங்களையும் உடைய விச்சிக்கோவே!
இவர்கள், பூக்கள் தன் தலையில் எப்போதும் அலங்கரிக்கும் கொடி முல்லையானது
தன் நா தழும்பு உண்டாகுமாறு பாடாது என்றாலும்
ஒலிக்கின்ற மணிகளையுடைய நெடிய தேரைக் கொள்க என அந்த முல்லைக்குக் கொடுத்த
பரந்து மேம்பட்டு விளங்கும் சிறப்பினையுடைய பாரியின் மகளிர்,
நானோ, பரிசிலன், அத்துடன் நிலைபெற்ற அந்தணன், நீயோ,
போரிடும் முறையில் போரிட்டுப் பகைவரை வணங்கச்செய்யும் வாளால் மேம்பட்டவன்,
உனக்கு நான் கொடுப்ப இவர்களை ஏற்றுக்கொள், சினத்தையுடைய போரில்
அடங்காத மன்னரை அடக்கும்
குறையாத விளைச்சலையுடைய நாட்டிற்கு உரியவனே!
					மேல்
 



# 201 கபிலர்
இவர்கள் யார் என்று கேட்பாயென்றால், இவர்கள்தாம்
ஊர் எல்லாவற்றையும் இரவலர்க்கு வழங்கி, தேருடன் உள்ளவற்றை எல்லாம்
முல்லைக் கொடிக்கு வழங்கிய அழியாத நற்புகழையும்
ஒலிக்கும் மணியையுடைய யானையையும் உடைய பறம்புமலையின் கோமான்
மிகப் பெரியவனாகிய பாரியின் பெண் மக்கள், நான்தான்
இவர்களின் தந்தையின் தோழன், இவர்கள் என் பிள்ளைகள்,
அந்தணனாகிய புலவன் கொண்டுவந்திருக்கிறேன்,
நீதான், வடதிசை முனிவனின் ஓமகுண்டத்தில் தோன்றி
செம்பு கலந்து செய்யப்பட்ட மிக உயரமான கோட்டையையும்
வெறுப்பில்லாத கொடையை உடையவராய், துவராபதி என்னும் நகரை ஆண்டு
நாற்பத்தியொன்பது தலைமுறையாக வந்த
வேளிர்களுக்கு வேளாய் இருப்பவன், வெற்றிதரும் போரினையுடைய தலைவனே!
மாலை சூட்டிய யானையையுடைய பெரிய இருங்கோவே!
முயற்சியைக் கடமையாகக் கொண்டதனால் பாணர்க்குச் செய்யும் கடமைகளைச் செய்த
தழைத்த தலைமாலையைக் கொண்ட புலிகடிமாலே!
நான் இவர்களை உனக்குத் தர, நீ பெற்றுக்கொள்வாயாக, வானத்தால் சுற்றிலும் மூடப்பட்டு
பெரிய கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் அணுக முடியாத வலிமையையுடைய
பொன் விளையும் பெரிய மலைக்குத் தலைவனே! வெற்றி வேலையுடைய
பகைவர் அஞ்சும் படையையுடைய
கேடு இல்லாத நாட்டுக்கு உரியவனே!
					மேல்					
# 202 கபிலர்
வெட்சிச் செடியையுடைய காட்டில் வேட்டுவர் விரட்டுவதால்
தனக்குப் புகலிடம் காணாத காட்டு மாட்டின் நல்ல காளை
மலைச்சாரலிலுள்ள மணிகள் மேலே கிளம்பவும், சிதறிய பொன் மினுங்கவும்,
வேகமாக ஓடும் நீண்ட மலைப்பகுதியில்
வெற்றி நிலைபெற்ற, சிறந்த புகழ் பொருந்திய
சிற்றரையம், பேரரையம் என்று இரு பகுதிகளாகப் பெயர் கொண்ட அச்சம் பொருந்திய பழைய ஊரில்
கோடி கோடியாகப் பொருளை உங்களுக்கு வழங்கிய
நீடிய நிலையையுடைய அரையம் என்ற ஊருக்கு நேர்ந்த அழிவைக் கேட்பாயாக இப்போது,
உன் தந்தையின் உரிமைச் செல்வத்தை நிறையப் பெற்ற
தழைத்த தலைமாலையையுடைய புலிகடிமாலே!
உம்மைப் போல் அறிவுடைய உம்மவன் ஒருவன்
புகழ்ந்து பாடும் செய்யுளைச் செய்த கழாத்தலையார் என்னும் புலவரை
அவமதித்ததனால் உண்டான பலனே அது, நன்கு இயற்றப்பட்ட தேரையுடைய தலைவனே!
இவர்கள் எவ்வி என்பவனின் பழைய குடியில் வந்தவர்கள், மேலும் இவர்கள்
கொடைப்பண்புடைய பாரியின் மகளிர் என்ற என்
தெளிவில்லாச் சிறுசொல்லைப் பொறுத்துக்கொள்வாயாக, பெருமானே!
உன்னை விட்டுச் செல்கின்றேன், வெல்வதாக உன் வேல், மலைச்சரிவில்
அரும்புகளே இல்லாமல் மலர்ந்த கரிய அடிமரத்தையுடைய வேங்கையின்
கரிய புறவிதழையுடைய ஒளிவிடும் பூ பரந்த சிறுதூண் போன்ற பாறை
பெரிய புலியின் வரிகளையுடைய முதுகினைப் போன்றிருக்கும்
பெரிய மலையிடத்து ஊர்களைக் கொண்ட நாட்டை உடையவனே!
					மேல்					
# 203 ஊன்பொதி பசுங்குடையார்
ஏற்கனவே பொழிந்து கழிந்துவிட்டோமே என்று வானம் பெய்யாது போனாலும்,
ஏற்கனவே விளைந்துவிட்டோமே என்று நிலம் தன் வளத்தை ஒளித்துவைத்துக்கொண்டாலும்,
எல்லா உயிர்களுக்கும் வாழ்க்கை இல்லாமற் போய்விடும்,
ஏற்கனவே வாங்கியிருப்பினும் இன்னும் தாருங்கள் என்று எம்மைப் போன்றவர்கள் இரந்துகேட்டால்
முன்னரேயே வாங்கிவிட்டீர்களே என்று உம்மைப் போன்றவர்கள் மறுப்பது
இனியதல்ல, நன்கு இயற்றப்பட்ட தேரையுடைய தலைவனே!
தம்மிடத்துள்ள வறுமையினால் தம்மை நாடி வந்தவர்க்குப் பரிசளிக்க இயலாதவர்களைவிட,
செல்வம் இருந்தும் பரிசளிக்காதவர்கள், தம்மை நாடிவந்தவர்களால் விரும்பப்படுவதை இழந்தவராவர்,
அப்படிப்பட்டவனும் நீ அல்லன், பகைவரது
அரிய அரண் அவரிடமே இருக்கும்போதும், உங்களுடையது என்று
பாணர்க்குக் கொடுத்துக் கடமையாற்றும் வள்ளலே!
எம் தலைவனே! நீ இரவலரைப் பாதுகாப்பதைக் கடமையாகப் பூண்டுகொள்வாயாக.
					மேல்					
# 204 கழைதின் யானையார்
ஒருவரிடம் போய் ‘எனக்குக் கொடு’என்று கேட்பது இழிவானது, அதற்குப் பதிலாகக்
‘கொடுக்கமாட்டேன்’ என்று சொல்வது அதனைக் காட்டிலும் இழிவானது;
‘இதனைப் பெற்றுக்கொள்’ என்று ஒருவருக்குக் கொடுப்பது உயர்வானது, அதற்குப் பதிலாக
‘வேண்டாம்’ என்று மறுப்பது அதனைக் காட்டிலும் உயர்வானது;
தெளிந்த நீர்ப்பரப்பாக ஒலிக்கும் அலைகளையுடைய பெரிய கடலின் நீரை
உண்ணமாட்டார் தண்ணீர் வேட்கை உள்ளவர்கள்;
பசுக்களும், மற்ற விலங்குகளும் சென்று குடித்ததினால் கலங்கிப்போய்
சகதியுடன் கிடக்கும் சிறிதளவு நீரேயானாலும்
அந்த உண்ணுகின்ற நீரையுடைய இடத்திற்குச் செல்லும் வழிகள் பல ஆகும்;
தமக்குப் பரிசில் கிடைக்காவிட்டால், தீய சகுனங்களையும், புறப்பட்ட நேரத்தையும் பழிப்பாரேயன்றி
தாம் நாடிச் சென்றவரைப் பழிக்கமாட்டார், அதனால்
வெறுப்புக்கொள்ளமாட்டேன், ஓரியே! ஆகாயத்தில்
மின்னல், இடி ஆகிய தொகுதியையுடைய மழை போல
அளவின்றிக் கொடுக்கும் கொடையாளன் உன்மேல் - (வெறுப்புக்கொள்ளமாட்டேன், ஓரியே!)
					மேல்					
# 205 பெருந்தலை சாத்தனார்
நிரம்பிய செல்வத்தையுடைய மூவேந்தர்களே என்றாலும்
விருப்பத்துடன் எங்களைப் பேணிக் கொடுக்காதவற்றைப் பெற விரும்பமாட்டோம்,
வெற்றிபெற்றதால் சினம் தணிந்த விரைந்த ஓட்டத்தையுடைய குதிரையை உடைய,
அஞ்சிவந்த பகைவர்க்குப் புகலிடமாய் ஆகி, அஞ்சாத பகைவரின்
முயற்சியையுடைய எழுச்சிமிக்க உள்ளத்தைக் கெடுத்த, வாள்போரில் சிறந்த படையினையுடைய,
வெண்மையான பூவையுடைய முல்லை வேலியையுடைய கோடை என்னும் மலைக்குத் தலைவனே!
சிறியதாகவும், பெரிதாகவும் அரிய வழிகளால் தடுக்கப்பட்ட
மான் கூட்டத்தை அழித்த விரைந்த ஓட்டத்தையுடைய சினங்கொண்ட நாயையும்
வலிய வில்லினையும் கொண்ட வேட்டுவனே! நீ துயர் இல்லாதவனாக இருப்பாயாக,
இடியின் மிக்க ஓசையையுடைய புதுமழையைக் கொண்டுவர, கீழிறங்கிக்
கடலில் திரண்ட முதன்மை மேகம்
நீர் இல்லாமல் திரும்பாதது போல, தேருடன்,
மின்னுகின்ற கொம்பினை ஏந்திய தலைமைப் பண்புடைய
யானை இல்லாமல் திரும்பமாட்டாது பரிசிலர்களின் சுற்றம்.
					மேல்					
# 206 ஔவையார்
வாயில் காப்பவனே! வாயில் காப்பவனே!
வள்ளல்களின் செவியாகிய வயலில், சிறந்து விளங்கும் சொற்களாகிய விதையை விதைத்து, தாம்
விரும்பும் பரிசிலைப் பெற்றுக்கொள்ளும் வலிமையான உள்ளத்தையும்
தகுதியறிந்து போற்றுதலை வருந்தி வேண்டும் கொள்கையையும் உடைய, இந்தப் பரிசில் வாழ்க்கை வாழும்
பரிசிலர்க்கு அடைக்காத வாசலைக் காப்பவனே!
விரைந்த ஓட்டத்தையுடைய குதிரைத் தலைவன், அதியமான் நெடுமான் அஞ்சி
தன் தரத்தை அறியவில்லை போலும்! என் தரத்தை அறியவில்லை போலும்!
அறிவும் புகழும் உடையோர் இறந்துபோய்விட்டதால்
வறுமைப்பட்ட இடமாய்ப் போய்விடவில்லையே இந்த உலகமும், அதனால்,
தூக்கித்தோளில் போட்டோம் எம் இசைக்கலங்களை, இழுத்துக் கட்டினோம் அந்த மூட்டைகளை,
மரம் வெட்டச் செல்லும் தச்சனின் தேர்ச்சி மிக்க சிறுவர்கள்
கோடரியுடன் காட்டுக்குள் சென்றது போல
எந்தப் பக்கம் சென்றாலும் அந்தப் பக்கம் சோறு கிடைக்கும்.
					மேல்					
# 207 பெருஞ்சித்திரனார்
எழுவாயாக நெஞ்சமே! இனி நாம் போவோமாக, யார்தான் -
கண்ணால் பருகுவது போன்ற ஆசை இல்லாத இடத்தில்
அருகில் இருப்பதைக் கண்டும் கண்டறியாதவர் போல
உள்ளம் மகிழும்படி கொடுக்காமல், முகம் மாறுபட்டுத் தருகின்ற பரிசிலை
முயற்சியே இல்லாதவர் விரும்பாமல் இருக்கமாட்டார் (முயற்சியுடையோர் விரும்பார்)
வாருங்கள் என்று வேண்டி வரவேற்கும் தரமுடையவர்க்கோ
உலகம் பெரியது, அதில் விரும்பிப் பேணுவோரும் பலர்;
மிக்க வலிமையையுடைய யாளியைப் போல
உள்ளம் உள்ளுக்குள் அவிந்து அடங்கிப்போகாமல் (எழுவாயாக நெஞ்சமே!) அனைவரும் அறிய
இரக்கம் காட்டாதவனிடத்தில் வருந்தி நின்று
கிடைக்காத கன்றிப்போன கனிக்கு அலைபவர் - (யார்தான்)
					மேல்					
# 208 பெருஞ்சித்திரனார்
பல குன்றுகளும் மலைகளும் பின்னே செல்ல
அவற்றைக் கடந்து வந்தேன், பரிசிலைக் கொண்டு செல்வதற்கு என்று
சொல்லி நின்ற என் மீது அன்பும் இரக்கமும் கொண்டு, இப்பரிசிலை எடுத்துக்கொண்டு
இப்படியே செல்லட்டும் அவர்கள் என்று சொல்ல என்னை
எப்படி அறிந்தான் பகைவரால் தடுத்தற்கு அரிய காவலன்?
என்னப் பார்க்காமலேயே கொடுத்துவிட்ட இந்தப் பரிசிலைப் பெறுவதற்கு, நான் ஒரு
பாட்டினை விற்கும் வியாபாரப் பரிசிலன் அல்லன், உபசரித்து
தினையளவே ஆயினும் இனியது, பரிசிலரின்
திறத்தின் அளவு அறிந்து கொடுத்து வழியனுப்பினால்
					மேல்					
# 209 பெருந்தலை சாத்தனார்
பொய்கையில் மேய்ந்த நாரை, வைக்கோல் போரில் வந்து தங்கும்
நெய்தல் நிலத்து அழகிய வயல்வெளியில் நெல்லை அறுக்கும் உழவர்கள்
மொட்டு அவிழ்ந்து மென்மையான இதழ்கள் நெகிழ்ந்த ஆம்பலின்
அகன்ற இலையில் மதுவை உண்ட பின்பு, தெளிந்த கடலின்
ஒலிக்கும் அலைகளின் இனிய சீரான தாள ஓசையில் தூங்கும்
நன்செய் நிலங்களைக் கொண்ட ஊர்களையுடைய நல்ல நாட்டின் வீரனே!
பல பழங்களையும் விரும்பி, தாம் பெரிதும் வாழும் ஆகாயத்தில் விசைத்தெழுந்து
பெரிய மலையின் குகைகள் எதிரொலிக்கச் சென்று
பழங்களையுடைய பெரிய மரத்தில் கனிகள் தீர்ந்துபோய்விட மனம் வருந்தி
பழங்கள் கிடைக்கபெறாமல் திரும்பி வரும் பறவைக் கூட்டம் போல, உன் மேலுள்ள
ஆசை அழைத்து வர வந்து, உன் புகழைக் கூறும் பரிசிலனாகிய நான்
வெறுங்கையுடன் திரும்புவேனோ? வாள்போரில் மேம்பட்டவனே!
நீ எனக்குக் கொடுக்கவில்லை என்றாலும் வருந்தமாட்டேன்,
நோய் இன்றி இருப்பாயாக, பெருமானே! நம்மிடையே உள்ள
மிக அண்மையான நெருக்கத்தைக் காண்பதாகுக - நாள்தோறும்
மணம் மிக்க பலவான நன்கு வளர்ந்த கூந்தலையும், தேன் போன்ற இனிய சொல்லையும்
தெரிந்தெடுத்த அணிகலன்களையும் உடைய மகளிர் உன்னுடனிருக்கும் இனிய காலத்தை எதிர்நோக்கும்
பெரிய மலையைப் போன்ற மார்பினையுடைய
போரை விரும்பும் முருகனை ஒத்தவனே! உன் நாளோலக்கம் - (நம்முள் குறு நணி காண்குவது ஆக)
					மேல்					
# 210 பெருங்குன்றூர் கிழார்
உயிர்களைப் பாதுகாக்கும் உன்னுடைய மேன்மையான நிலையை எண்ணிப்பாராமல்,
அன்பு நீங்கிய அறம் இல்லாத பார்வையுடன்
உம்மைப் போன்றவர் யாவரும் இப்படிப்பட்டவராய் இருந்தால்
எம்மைப் போன்றவர்கள் இங்கு பிறவாதிருப்பார்களாக,
குற்றமில்லாத கற்பினையுடைய எம்மை விரும்பிய மனைவி
சிறிதே உயிர் உடையவளாய் இருந்தால் என்னை
நினைக்காமல் இருக்கமாட்டாள், அதனால்
அறன் இல்லாத கூற்றம் முறைகேடாக உயிர்கொள்ளத் துணிய,
இறந்துவிட்டானோ, என் உயிரும் போகட்டும் என்று
சொல்லுகின்ற துன்பத்தையுடையவளாய்ப் பலவாறு வெறுத்துத் தங்கியிருக்கும்
மனையோளின் இடுக்கண் தீர, இங்கிருந்து
புறப்பட்டேன், வாழ்க வேந்தனே! இங்கே பார்!
வருந்திய மனத்தோடு போகிறேன், உன்னைப் பகைத்தவர்களின்
அரிய காவலையுடைய முனையிடத்து அரண் போல
பெரிய செயலற்ற என் வறுமையை முன்னே போகவிட்டு.
					மேல்					
 




# 211 பெருங்குன்றூர் கிழார்
அஞ்சத்தக்க தன்மையையுடைய, கடும் சினமுள்ள மேகத்திலுள்ள இடி
அஞ்சுகின்ற பாம்பின் அணுகமுடியாத தலை துண்டாக,
நிலப்பரப்பை நின்று பார்ப்பது போன்ற நீண்ட மலை பிறழும்படியாகவும்
சிறிய மலை சிதறும்படியாகவும் இடிக்கும் ஓசையைப் போல
முரசு ஓங்கி ஒலிக்கும் படையுடனே முன்னேறிச் சென்று
அரசுகள் வீழ எதிர்நின்று கொல்லும் புகழ் அமைந்த தலைவனே! உன்னை
நினைத்து வந்த உயர்ந்த நிலையையுடைய பரிசிலனாகிய நான்
நீ வள்ளல் என்பதால் எம்மை வணங்கிப் பரிசில் தருவான் இவன் என்று
எம்மை ஏற்றுக்கொள்ளாத மாந்தரின் கொடுமையை உனக்குக் கூறவும் நீ
நினைத்ததையே உறுதியாகச் செய்துமுடித்தாய், முதல் நாள்
பரிசில் கையில் உள்ளது போல் காட்டி, அடுத்த நாள்
அது பொய்யாகிப் போன வேறுபட்ட நிலையை எண்ணி நான் வருந்தியதற்கு
நீ வெட்கப்படவில்லை, என்றாலும் நீ வெட்கப்படும்படி சொல்லி என்
நுணுக்கமாக ஆய்வுசெய்யும் செம்மையான நாக்கு வருந்தும்படி, உன்னைப் புகழ்ந்து
பாடப்பாட அந்த பாடு புகழை ஏற்றுக்கொண்ட உன்
வெற்றி பொருந்திய அகன்ற மார்பினை வணங்கி வாழ்த்திப்
போகிறேன். நான், நாள்தோறும்,
உணவில்லாததால் என் வீட்டின் பழைய சுவர்களில் வேறுவேறு இடங்களில் மாறிமாறித் தோண்டிய
வீட்டு எலிகள் இறந்து கிடக்கும் பழைய சுவர்களையுடைய வீட்டில்
என் மனைவியின் முலைகளில் பால் இல்லாததால், பலமுறை சுவைத்தும் ,
பால் குடிப்பதையே மறந்துவிட்ட என் மகனோடு
வீட்டில் வறுமையில் வாடும் என் மனைவியின் ஒளிபொருந்திய நெற்றியை நினைத்து -
					மேல்					
# 212 பிசிராந்தையார்
“உம் அரசன் யார்?” என்று என்னைக் கேட்பீராயின், எம் அரசன்
உழவர்களுக்காக வடிக்கப்பட்ட, முதிர்ந்த விரும்பத்தகுந்த கள்ளை
ஆமையின் அவித்த இறைச்சியுடன் ஆசைதீர அவ்வுழவர்கள் உண்டு,
வதக்கிய கொழுத்த ஆரல் மீனைத் தம் கன்னத்தில் அடக்கித்
தம்முடைய தொழிலை மறந்துபோகும், நீங்காத விழாக்களையும்
புதுவருவாயையும் உடைய வளமான சோழநாட்டில், பாணர்களின்
வருத்தமடைந்த சுற்றத்தாரின் பசிக்குப் பகையாக இருக்கும்,
உறையூரில் வாழ்பவன் கோப்பெருஞ்சோழன்.
அவன் குறையற்ற நண்பர் பொத்தியாரோடு கூடி
உண்மையான பெருமகிழ்ச்சியோடு நாள்தோறும் மகிழ்ந்து -
					மேல்					
# 213 புல்லாற்றூர் எயிற்றியனார்
நெருங்கி வரும் போரில் வெல்லும் ஆற்றலும் மிகுந்த முயற்சியும் உடையவனாகிய
வெண்கொற்றக்குடையுடன் விளங்கும் வெற்றி பொருந்திய வேந்தே!
கிளர்ந்தெழும் கடல் சூழ்ந்த, இந்தப் பரந்த இடத்தையுடைய உலகத்தில்,
உன்னை எதிர்த்து வந்த இருவரையும் எண்ணிப்பார்த்தால்,
அவர்கள் தொன்றுதொட்டு வரும் வலிமையுடைய உன் பகைவராகிய சேரரோ பாண்டியரோ அல்லர்.
போரில் வெற்றிபெறும் நோக்கத்தோடு உன்னை எதிர்த்து வந்தவர்கள்
சிந்தித்துப் பார்த்தால், நீ அவர்களுக்குப்
பகைவன் அல்லன். பகைவர்களைக் கொல்லும் யானைகளையுடைய தலைவனே!
பரந்துபட்ட நல்ல புகழை அடைந்து, நீ
தேவருலகம் சென்ற பிறகு,
நீ விட்டுச்சென்ற அரசுரிமை அவர்களுக்கு உரியதுதானே?
ஆதலால், அவ்வாறு ஆதல் நீ அறிவாய். மேலும்
நான் சொல்வதை இன்னும் நன்றாகக் கேள். புகழை விரும்புபவனே!
நிலைபெற்ற வலிமையோடு உன்னோடு போர்செய்யப் புறப்பட்டு வந்திருக்கும்
ஆராயும் திறனற்ற அறிவையுடைய உன் மக்கள் தோற்றால்,
உனக்குப் பிறகு, உன் பெருஞ்செல்வத்தை யாருக்குக் கொடுக்கப் போகிறாய்?
போரை விரும்பும் அரசே! நீ அவர்களிடம் தோற்றால்
உன் பகைவர்கள் அதைக்கண்டு மகிழ, பழிதான் மிஞ்சும்.
அதனால், உன் வீராவேசத்தை விட்டுவிடுக, மிகவும் விரைவாக
புறப்படுவாயாக. உன் உள்ளம் வாழ்வதாக. அஞ்சுபவர்களுக்குப்
பாதுகாப்பாக இருக்கும் உனது அடி நிழல் மயங்காத வண்ணம் 
நல்ல செயல்களை செய்ய வேண்டும், விண்ணவரின்
பெறுவதற்கரிய உலகத்தில் இருக்கும் பெரியோர்
விரைந்த விருப்பத்தோடு உன்ன விருந்தினனாக ஏற்றுக்கொள்ள - (நல்ல செயல்களை செய்ய வேண்டும்)
					மேல்					
# 214 கோப்பெரும் சோழன்
நல்ல செயல்களைச் செய்யலாமா வேண்டாமா என்ற
ஐயம் நீங்காதவர்களாக இருப்பார்கள் அழுக்கு நிறைந்த அறிவு
நீங்காத உள்ளத்தினையுடைய துணிவு இல்லாதவர்கள்
யானையை வேட்டையாடச் சென்றவன் யானையைப் பெறலாம்;
சிறுபறவையை வேட்டையாடச் சென்றவன் வெறுங்கையோடு திரும்பி வரலாம்.
அதனால், உயர்ந்த விருப்பமுடைய பெரியவர்களுக்கு
அவர் செய்த நல்வினைக்குத் தகுந்த பயன் கிடைக்குமானால்,
விண்ணுலக இன்பம் கிடைக்கலாம்.
விண்ணுலக இன்பம் கிடைக்காவிடினும்
மீண்டும் பிறவாமல் இருக்கும் நிலையையும் பெறலாம்.
பிறவாமை என்ற நிலை இல்லை என்றாலும், இவ்வுலகிலே இமயத்தின்
சிகரம்போல் உயர்ந்த புகழை நிலைநாட்டிக்,
குறையற்ற உடலோடு இறப்பது மிகப் பெருமை வாய்ந்தது.
					மேல்					
# 215 கோப்பெரும் சோழன்
பிளவுபட்ட கதிர்களையுடைய வரகைக் குற்றி உலையேற்றி வடிக்கப்பட்ட சோற்றையும்,
பூக்களின் தாதுகள் எருவாக உதிர்ந்த புழுதியையுடைய தெருவில் அரும்புகளோடு தழைத்த
வேளைச்செடியின் வெண்ணிறப் பூக்களை வெள்ளை நிறமுள்ள தயிரில் இட்டு,
இடைச்சியர் சமைத்த அழகிய புளிக்கூழை
அவரையைக் கொய்பவர்கள் நிறைய உண்ணும்
தென்திசையில் உள்ள பொதிகை மலையையுடைய பாண்டிய நன்னாட்டில் உள்ள
பிசிர் என்னும் ஊரில் உள்ளவன் என்பார்கள் என் உயிரைப் பாதுகாப்பவன்;
நான் செல்வாக்குடன் இருந்த காலத்தில் அவன் வந்து என்னைப் பார்க்காவிட்டாலும்
நான் துன்பத்தில் இருக்கும் பொழுது என்னைப் பார்க்க வராமல் இருக்கமாட்டான்.
					மேல்					
# 216 கோப்பெரும் சோழன்
”உன்னைப்பற்றி அவன் கேள்விப்பட்டிருக்கிறானே தவிர, சிறுபொழுதுகூட
நேரில் கண்டதில்லை. இவ்வாறு பல ஆண்டுகள் கழிய
தவறாமல் கூடிக் கலந்து பழகிய உரிமையுடைய நண்பராக இருப்பினும்,
அவன் அம்முறைப்படி நடத்தல் அரிது, தலைவனே!” என்று
சந்தேகப்படாதீர்கள். அறிவு நிறைந்தவர்களே!
அவன் என்னை ஒருபொழுதும் இகழாதவன்; இனியவன்; பிணிப்புண்ட நட்புக் கொண்டவன்;
புகழ் கெடும்படி வரும் பொய்யை விரும்பாதவன்.
தன் பெயர் என்னவென்று சொல்லும்போதுகூட, “என் பெயர் 
களங்கமில்லாத சோழன்” என்று கூறும் சிறந்த
அன்பும் உரிமையும் உடையவன். அதற்கும் மேலே,
இத்தகைய நிலையில் அவன் வராமல் இருக்க மாட்டான்;
அவன் இப்பொழுதே வருவான்; அவனுக்கு ஒரு இடம் ஒதுக்கி வையுங்கள்.
					மேல்					
# 217 பொத்தியார்
எண்ணும்போது வியப்பாக உள்ளது.
இத்துணைப் பெரிய சிறப்போடு இங்கு இவ்வாறு முடிவெடுத்தது;
அதைவிட வியப்பையுடையது,. வேறு நாட்டுப்
பெருமை மிக்க சான்றோன் ஒருவன், பாதுகாத்துவரும்
புகழை மரபாகக்கொண்டு, நட்பைப் பற்றுக்கோடாகக் கொண்டு,
இப்படிப்பட்ட ஒரு நேரத்தில் இங்கு வருவது;
அவன் வருவான் என்று கூறிய அரசனது பெருமையும்,
அந்தக் கூற்றுக்குப் பழுது நேராமல் வந்தவனின் அறிவும்
வியக்குந்தோறும் வியக்குந்தோறும் வியப்பின் எல்லையைக் கடந்ததாக உள்ளது.
அதனால், தன் ஆட்சியில் இல்லாத நாட்டில் வாழும்
சான்றோனின் நெஞ்சில் இடம் பெற்ற பழைய புகழையுடைய
அப்படிப்பட்ட பெரியவனை இழந்த இந்நாடு
என்னாகுமோ? இது இரங்கத்தக்கதுதான்.
			மேல்
# 218 கண்ணகனார் - நத்தத்தனார் எனவும் பாடம்
பொன், பவளம், முத்து, நிலைபெற்ற
பெரிய மலையிலிருந்து பெற்ற விரும்பத்தக்க மாணிக்கம் ஆகியவை
ஒன்றுக்கொன்று தொலைவான இடங்களில் தோன்றியவையானாலும், கோக்கப்பட்டு 
பெருமதிப்புடைய நல்ல அணிகலன்களை அமைக்கும் பொழுது,
அவை ஒரே இடத்தில் காணப்படுவது போல, எந்நாளும் சான்றோர்கள்
சான்றோர்களையே சேர்ந்திருப்பர்.
சான்றோர் அல்லாதவர், சான்றோர் அல்லாதவர்களையே சேர்ந்திருப்பர்.
					மேல்					
# 219 கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்
ஆற்றின் நடுவே இருக்கும் மேட்டில் உள்ள புள்ளிபுள்ளியான மர நிழலில்,
உடல் முழுதும் உள்ள தசைகள் அனைத்தையும் வாட்டும் வீரனே!
என்னை நீ வெறுத்தாய் போலும்!
உன் கருத்திற்கேற்ப உன்னோடு வடக்கிருந்தவர்கள் பலர்.
					மேல்					
# 220 பொத்தியார்
பெருமளவில் சோற்றை அளித்துப் பல ஆண்டுகள் பாதுகாத்துவந்த
பெரிய யானையை இழந்த வருத்தம் மிகுந்த பாகன்,
அந்த யானை தங்கியிருந்த சோகம் உண்டாக்கும் கூடத்தில்,
கட்டியிருந்த கம்பம் வெறுமையாய் இருப்பதைக் கண்டு அழுததைப்போல்,
நான் கலங்கினேன் அல்லனோ? பொன்மாலை அணிந்தவனும்
தேர்களை வழங்குபவனும் ஆகிய சோழன் இல்லாத
பெரும்புகழ்கொண்ட உறையூரின் அரசவையைக் கண்டு
					மேல்					
 



# 221 பொத்தியார்
பாடி வருபவர்களுக்கு அள்ளிக் கொடுத்துப் புகழ் பல கொண்டவன்;
ஆடி வருபவர்களுக்கு அள்ளிக் கொடுத்த மிகுந்த அன்புடையவன்;
அறவோர் புகழ்ந்த செங்கோலன்;
சான்றோர் புகழ்ந்த உறுதியான நட்புடையவன்;
மகளிரிடத்து மென்மையானவன்; வலியோர்க்கு வலியோன்;
குற்றமற்ற கேள்வி அறிவுடைய உயர்ந்தவர்களுக்குப் புகலிடமானவன்;
அத்தகைய தன்மைகள் உடையவன் எனக் கருதாது, அந்தத் தகுதிமிக்கவனைச்
சிந்திக்கும் திறனற்ற கூற்றுவன், அவனது இனிய உயிரைக் கொண்டுசென்றான்.
வருந்தும் நம் சுற்றத்தாரோடு சேர்ந்து அக்கூற்றுவனை
வைவோம்; வாருங்கள். வாய்மையே பேசும் புலவர்களே!
அகன்ற இடமுள்ள இந்த உலகு துன்பம் அடைய,
கேடில்லாத நல்ல புகழ்மாலையைச் சூடி,
எம்மைப் பாதுகாத்தவன் நடுகல்லாகிவிட்டான் என்று
					மேல்					
# 222 பொத்தியார்
”தீச்சுடர் போல் ஒளிரும் மின்னுகின்ற அணிகலன்கள் அழகுசெய்யும் மேனியையுடைய,
உன் நிழலைக் காட்டிலும் உன்னைவிட்டு ஒருபோதும் நீங்காத, நீ விரும்புபவள் உண்டாகியிருக்கும்
புகழ் நிறைந்த புதல்வனைப் பெற்றபின் வா” எனக் கூறி
என்னை இங்கிருந்து போகச் சொன்ன அன்பில்லாதவனே!
நம் நட்பினை நீ எண்ணிப் பார்க்காமல் இருந்திருக்கமாட்டாய்.
புகழை விரும்பும் மன்னா! எனக்குரிய இடம் எது?
					மேல்					
# 223 பொத்தியார்
பலருக்கும் அருள் செய்யும் நிழலாகி, உலகத்தாரால் மிகவும் பெருமையாகப் பேசப்படும் வகையில்
அரசாளும் பணியை முற்றிலும் முடிக்காமல் ஒரு சிறிய இடத்தில் அடங்கி
நிலைபெறும் நடுகல்லாய் ஆன போதும்,
இடம் கொடுத்து உதவி செய்வாய், உடம்போடு 
இனிய உயிர் வாழ விரும்புவது போல விரும்பும் உரிமையுடைய,
பழைய நட்பினர் உன்னிடம் வந்தால்,
					மேல்					
# 224 கருங்குழல் ஆதனார்
பகைவர்களின் அரண்களை மதியாது, அவற்றைப் போரில் அழித்ததுவும்,
துணையாகக் கூடிய இனத்துடன் சேர்ந்து, குடிப்பதற்கு மதுவைக் குடம் குடமாக அளித்து,
பாணர்களின் பெரிய சுற்றமாகிய கூட்டத்தைப் பாதுகாத்ததுவும்,
அறத்தை முழுமையாகக் கற்ற சான்றோர்களின் சிறந்த அவையில்
வழிமுறைளை நன்கு அறிந்தவர்கள் முன்னின்று பாராட்டிய
தூய்மையான இயல்பும், கற்பொழுக்கமாகிய கொள்கையுமுடைய குற்றமற்ற குல மகளிரோடு
வட்டவடிவமான பல மதில்களால் சூழப்பட்ட வேள்விச் சாலையுள்,
பருந்து விழுங்குவதுபோல் செய்யப்பட்ட இடத்து நாட்டிய வேள்வித் தூணாகிய நீண்ட கம்பத்து,
வேதத்தால் சொல்லப்பட்ட வேள்வியைச் செய்து முடித்ததுவுமாகிய.
இத்தகைய செயல்களின் பயனை நிச்சயமாக அறிந்த அறிவுடையோன்
இறந்தான்; ஆகவே இவ்வுலகம் இரங்கத் தக்கது;
அருவியில் நீர் குறைந்து, உலகத்தார் அஞ்சும்படி தீய்ந்து
பெரும் வறட்சி மிகுந்த வேனிற்காலத்தில்
பசியால் வாடும் பசுக்களாகிய பயன்தரும் கூட்டத்தைப் பாதுகாப்பதற்காக,
கூர்மையான கொடுவாளால் இடையர்கள் இலைகளும் பூக்களும் உதிரக்
கொய்து தழைச்செறிவை அழித்த வேங்கை மரத்தைப் போல்
மெல்லிய இயல்புடைய மனைவியர் தங்கள் அணிகலன்களைக் களைந்தனர்.
					மேல்					
# 225 ஆலத்தூர் கிழார்
முன்னே செல்லுகின்ற படையினர் நுங்கின் இனிய பதத்தினை உண்ண,
படையின் இடைப்பகுதியில் உள்ளோர், பனம்பழத்தின் இனிய கனியை உண்ண,
படையின் கடைப்பகுதியில் உள்ளோர் பிளந்த வாயையுடைய தோலுடன் சுட்ட பனங்கிழங்கினை உண்ண,
பரந்த நிலப்பரப்பையுடைய உலகத்தை வலமாகச் சுற்றிப்
பகைமன்னர்களின் பெருமிதத்தை அழித்த வேல் ஏந்திய படையோடு கூடிய,
வலிமை என்று சொல்லப்பட்டதன் விளைவை இப்பொழுது கேட்பாயாக;
கள்ளிச் செடிகள் உயரமாய் வளர்ந்திருக்கும் களர் நிலமாகிய பாழிடத்தில்
முள்ளுடைய பெரிய காட்டில் இருப்பதாயிற்று (அந்த வலிமை),
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்பானோ என்று அஞ்சி,
முன்பு, இனிய ஓசையையுடைய முரசுடனே, வெற்றியை அறிவிக்க
தூக்கணங்குருவியின் தொங்கும் கூட்டைப் போல
ஒருபக்கம் தொங்கவிட்ட திரிந்த வாயையுடைய வலம்புரிச் சங்கு
இப்போது, உலகாளும் மன்னர்களின் அரண்மனை வாயில்களில்,
காலையில் ஒலித்தாலும் நான் அதனைக் கேட்டு வருந்துகிறேன்.
					மேல்					
# 226 மாறோக்கத்து நப்பசலையார்
மனத்துள் கறுவிக்கொண்டோ, வெளிப்படையாக வெகுண்டோ,
மெய்தீண்டி வருத்தியோ இருந்திருந்தால் அதற்கு உய்வு இருந்திருக்காது;
பாடுவோர் போல் வந்து தொழுது வணங்கி, வாழ்த்தி,
அவனை இரந்து கேட்டுத்தான் அவன் உயிரை நீ கொண்டு சென்றிருக்க வேண்டும். பொன்மாலையையும்,
உக்கிரமாகப் போரில் பகைவரை அழிக்கும் படையையும்,
திண்மையான தேரையும் உடைய கிள்ளிவளவனின் உயிரைக் கொண்ட கூற்று.
					மேல்					
# 227 ஆவடுதுறை மாசாத்தனார்
மிகவும் அறிவற்றவன் நீ, இரக்கமற்ற கூற்றமே!
விவேகம் இல்லாததால், நீ விதையைச் சமைத்து உண்டாய்,
இன்னமும் காண்பாய் நான் சொல்லுவது மெய்யே என்று;
ஒளிருகின்ற வாளையுடைய வீரர்களும், யானைகளும், குதிரைகளும்
இரத்தம் என்னும் அழகிய சிவப்பு நிற நீர் பெருகும் போர்க்களத்தில் இறந்துபட,
அதற்கும் நிறைவடையாமல், நாள்தோறும் பகைவர் படைகளை வென்று அழித்து, என்றும் உன்னை
வாட்டும் பசியைத் தீர்க்கும் பழியற்ற ஆற்றல் உடையவனாகிய,
உன்னைப் போல் பொன்னால் செய்த பெரிய அணிகளை அணிந்த
வளவன் என்னும் வண்டுகள் மொய்க்கும் மாலையணிந்த
இத்தன்மையுடையவனின் உயிரைப் பறித்தாய்.
இனி உன் பசியைத் தீர்ப்பவர் யார்?
					மேல்					
# 228 ஐயூர் முடவனார்
மண்பாத்திரங்களைச் செய்யும் குயவனே! மண்பாத்திரங்களைச் செய்யும் குயவனே!
இருள் ஓரிடத்தில் செறிவாய் நின்றதைப் போல் கரிய நிறத்தில் திரண்ட மிகுந்த புகை
அகன்ற பெரிய ஆகாயத்தில் சென்று தங்கும் சூளையையுடைய
அகன்ற இடத்தையுடைய பழைய ஊரில் மண்பாத்திரங்கள் செய்யும் குயவனே!
நீ என்ன பாடு படுவாயோ? நீ இரங்கத் தக்கவன்.
நிலமெல்லாம் பரப்பிய மிகப் பெரிய படையையுடைய,
புலவர்களால் புகழப்பட்ட பொய்மை இல்லாத நல்ல புகழையுடைய,
விரிந்த கதிர்களையுடைய ஞாயிறு, வானத்தில் ஊர்ந்து ஏறுவது போன்ற
தொலைவிலும் விளங்கும் சிறப்பையுடைய சோழர் குலத்தின் வழித்தோன்றல்
கொடி அசைந்தாடும் யானைகளையுடைய மிகப் பெரிய வளவன்
தேவருலகம் அடைந்தானாக,
அவனை அடக்கம் செய்வதற்கேற்ற இடம் அகன்ற தாழியைச்
செய்ய விரும்பினாய் என்றால், எப்படியும்
பெரிய நில உலகத்தைச் சக்கரமாகவும், பெரிய இமயமலையை
மண்ணாகவும் கொண்டு உன்னால் அந்தத் தாழியைச் செய்ய முடியுமா? - (நீ இரங்கத் தக்கவன்.)
					மேல்					
# 229 கூடலூர் கிழார்
மேட இராசியில் உள்ள கார்த்திகை நாளில் முதல் கால்பகுதியில்
இருள் நிறைந்த நடு இரவில்,
வளைந்த பனை போல் இருக்கும் அனுடத்தின் அடிப்பகுதிக்கு முந்திய மீனாகிய கேட்டை முதலாக,
குளத்தைப்போல் தோற்றமளிக்கும் புனர்பூசத்தின் முடிவில் உள்ள திருவாதிரை எல்லையாக உள்ள
ஒரு பங்குனி மாதத்து முதற் பதினைந்து நாட்களுள்,  
உச்சமாகிய உத்தர நட்சத்திரம் உச்சியிலிருந்து சாய
அந்த உத்தர நட்சத்திரத்திற்கு எட்டம் நட்சத்திரமாகிய மூலம் அதற்கு எதிராக எழ,
அந்த உத்தரத்திற்கு முன் எட்டாம் நட்சத்திரமாகிய மிருகசீரிடம் மேற்கே சாய்ந்து மறையும் நேரத்தில்
கிழக்கும் போகாமல், வடக்கும் போகாமல்,
கடல் சூழ்ந்த உலகுக்கு விளக்குப் போல்
தீப்பரந்து சிதறி விழ, காற்றில் கிளர்ந்து எழுந்து 
வானத்திலிருந்து ஒரு நட்சத்திரம் விழுந்தது,
அதைக் கண்டு, நாமும் மற்றவரும் பல்வேறு இரவலரும்,
“பறை ஓசைபோல் ஒலிக்கும் அருவிகள் நிறைந்த நல்ல மலைநாட்டின் தலைவன்
நோயின்றி இருப்பது நல்லது” என்று
வருந்திய நெஞ்சத்துடன் வாடிக் கலங்கி
அஞ்சினோம்; அந்த நட்சத்திரம் விழுந்து ஏழாம் நாள். இன்று,
வலிய யானை தன் தும்பிக்கையை நிலத்தில் வைத்து உறங்கவும்
வாரால் பிணிக்கப்பட்ட முரசு கிழிந்து உருளவும்
காவலுக்கு அடையாளமாக இருக்கும் கொற்றக்குடையின் காம்பு ஒடிந்து சிதையவும்
காற்றைப்போல் விரைந்து செல்லும் குதிரைகள் நிலைகலங்கி நிற்கவும்
விண்ணுலகம் அடைந்தான், ஆகையால்
ஒளி மிக்க வளையல்களையுடைய மகளிர்க்கு உற்ற துணையாகி
தனக்குத் துணையாக வந்த பெண்களையும் மறந்தனனோ?
பகைவரைக் கொல்லும் வலிமையும், தன்னை நாடி வந்தவர்களுக்கு
அளக்காமல் பொருட்களை அளித்த கொடைவள்ளலும்,
நீல மலையைப் போன்ற திருமால் போன்றவனுமாகிய சேரன் 
					மேல்					
# 230 அரிசில்கிழார்
கன்றுகளுடன் கூடிய பசுக்களின் கூட்டம் காட்டிலே பாதுகாப்பாகத் தங்கி இருக்கவும்,
சூடேறிய கால்களுடன் நடந்து வந்த வழிப்போக்கர்கள் தாம் விரும்பிய இடங்களில் தங்கவும்,
களத்தில் நிறைந்த நெற்குவியல்கள் காவல் இன்றிக் கிடக்கவும்,
எதிர்த்து வந்த பகையை விரட்டி, நிலைகலங்காத செங்கோல் ஆட்சி புரிந்து,
உலகம் புகழும் போரைச் செய்யும் ஒளி பொருந்திய வாளையுடைய,
பொய் கூறாத எழினி போர்க்களத்தில் இறக்க,
பெற்ற தாயால் கைவிடப்பட்ட குழந்தை போல்
தன்னை விரும்பும் சுற்றத்தார் வேறுவேறு இடங்களில் இருந்து வருந்த,
மிகுந்த பசியால் வருந்திய துன்பம் மிகுந்த நெஞ்சத்தோடு,
அவனை இழந்து வருத்தமுற்றுக் கிடந்த உலகத்தைக் காட்டிலும் மிகப் பெரிதாக
நீ இழந்துவிட்டாய், அறமில்லாத கூற்றமே!.
தன் வாழ்க்கைக்கு ஏதுவாக விளையும் வயலின் வளத்தை அறியாதவனாய்
வறுமையுற்ற குடியில் உள்ள உழவன் விதைகளைச் சமைத்து உண்ட போல்
இந்த ஒருவனது பெறுதற்கரிய உயிரை உண்ணாமல் இருந்திருப்பாயாயின்,
பல பகைவர்களுடைய உயிர்களை உண்டு
நீ நிறைவடைந்திருப்பாய், அவன் பகைவரைக் கொல்லும் போர்க்களத்தில்.
					மேல்					
 




# 231 ஔவையார்
தினைப்புனத்திற்காகக் குறவன் வெட்டிய மரத்துண்டம் போல்
கரிந்த வெளிப்பக்கம் உடைய விறகு அடுக்கிய ஈமத்தீயின் ஒளிநிறைந்த தீக்கொழுந்துகள்
உடலை நெருங்கினாலும் நெருங்கட்டும்; நெருங்காமல் போய்
வானளாவ ஓங்கினும் ஓங்கட்டும், குளிர்ந்த சுடர் கொண்ட
திங்களைப் போன்ற வெண்கொற்றக்குடையை உடைய,
ஓளிபொருந்திய ஞாயிற்றைப் போன்றவனது புகழ் அழியாது.
					மேல்					
# 232 ஔவையார்
இல்லாமல் போகட்டும். காலையும் மாலையும் 
இல்லாமல் போகட்டும் என் வாழ்நாட்களும்
நடுகல்லுக்கு மயில் தோகையைச் சூட்டி, நாரால் வடிக்கப்பட்ட மதுவை
ஒரு சிறிய கலத்தில் ஊற்றிக் கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்வானோ?
ஓங்கிய சிகரத்தையுடைய உயர்ந்த மலையுடன் கூடிய
நாடு முழுவதும் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாதவன்.
					மேல்					
# 233 வெள்ளெருக்கிலையார்
பொய்யாகட்டும், பொய்யாகட்டும்,
பெரிய பாதங்களையுடைய யானைகளைப் பரிசிலருக்குக் குறையாது வழங்கிய
சிறந்த, வலிய முயற்சியையுடைய அகுதையிடத்து உள்ள(தாகச் சொல்லப்பட்ட)
பொன்னால் செய்யப்பட்ட சக்கரப்படையைப் போல பொய்யாகட்டும்,
பெரிய பாண் சுற்றத்துக்குத் தலைவனும், மிகுந்த அணிகலன்களை அணிந்தவனும்,
போரில் பகைவரை அழிக்கும் பெரிய படையையுடையவனுமாகிய வேள் எவ்வியின் மார்பில்
வேலால் உண்டான விழுப்புண்கள் பல என்று
இன்று அதிகாலையில் வந்த செய்தி - (பொய்யாகட்டும், பொய்யாகட்டும்.)
					மேல்					
# 234 வெள்ளெருக்கிலையார்
மனம் நொந்துபோகிறேன் நான், என் வாழ்நாட்கள் இன்றோடு ஒழியட்டும்.
ஒரு பெண் யானையின் கால் அடி அளவே உள்ள சிறிய இடத்தை மெழுகி,
அவனை விரும்பும் அவன் மனைவி அங்கிருந்த புல் மேல் படைத்த
இனிய, சிறிதளவு உணவை எப்படித்தான் உண்டானோ?
உலகத்து மக்களெல்லம் நுழையும்படியாகத் திறந்த வாயிலை உடைய,
பலரோடும் சேர்ந்து உண்பதை வழக்கமாகக் கொண்டவன்.
					மேல்					
# 235 ஔவையார்
சிறிதளவு கள்ளைப் பெற்றால் எமக்குத் தருவான்;
பெருமளவு கள்ளைப் பெற்றால்
அதனை நாங்கள் உண்டு பாட, அதைக் கேட்டு மகிழ்ந்து அவனும் உண்பான்;
சிறிதளவு சோறாக இருந்தாலும் அதை மிகப் பல கலங்களில் இட்டுப் பலரோடும் பகிர்ந்து உண்பான்;
பெருமளவு சோறாக இருந்தாலும், அதை மிகப் பல கலங்களில் இட்டுப் பலரோடும் பகிர்ந்து உண்பான்;
எலும்போடு கூடிய தசை கிடைக்கும் இடம் முழுதும் எமக்கு அளிப்பான்;
அம்புடன் வேல் தைக்கும் இடமாகிய போர்க்களங்கள் எல்லாவற்றிலும் தானே சென்று நிற்பான்;
நரந்தம் மணக்கும் தன் கையால்
புலால் மணக்கும் என் தலையை அன்போடு தடவுவான்;
அரிய தலைமையுடைய பெரிய பாணர் கூட்டத்தினரின் அகன்ற உண்கலங்களைத் துளைத்து
இரப்போர் கைகளையும் ஊடுருவி,
அவன் பாதுகாக்கும் சுற்றத்தாரின் துன்பம் மிகுந்த கண் பாவை ஒளி மழுங்கிப்போக,
அழகிய சொல்லும் ஆராய்ந்த அறிவும் உடைய புலவர்களின் நாவில்
சென்று வீழ்ந்தது அவன்
அரிய மார்பைத் துளைத்த வேல்;
எமக்குப் பற்றுக்கோடாக இருந்த எம் இறைவன் இப்பொழுது எங்குள்ளானோ?
இனிப் பாடுவோரும் இல்லை; பாடுவோருக்கு ஒன்று ஈவோரும் இல்லை.
குளிர்ந்த நீர்த்துறையில் உள்ள தேனொழுகும் பெரிய பகன்றை மலர்
பிறரால் சூடப்படாது கழிந்தாற் போல, பிறர்க்கு ஒன்றும்
கொடுக்காமல் வாழ்ந்து இறப்பவர் மிகப் பலர்.
					மேல்					
# 236 கபிலர்
குரங்கு பிளந்து உண்டதால் கிழிந்துபோன முழவு போன்ற பெரிய பலாப்பழம்
வில்லுடன் கூடிய குறவர்களுக்கு சில நாட்கள் வைத்து உண்ணக்கூடிய உணவாகும்
மலைகள் பொருந்திய நாட்டையுடையவனே!, பெரிய வள்ளல் தன்மை வாய்ந்த பாரியே!
நீயும் நானும் கூடியிருந்த நட்பிற்குத் தகுந்தவாறு நீ நடவாமல் என்னை
வெறுத்தவன் ஆகிவிட்டாய்; பல ஆண்டுகள் நீ என்னைப் பாதுகாத்திருந்தாலும்
பெருமைக்குரிய, சிறந்த நட்பிற்குப் பொருத்தமில்லாத முறையில்,
நானும் உன்னுடன் கூட வருவதற்கு இசையாமல், “இங்கே இருந்து வருக” எனக் கூறி
இப்படி நீ வேறுபட்டவனாக ஆகிவிட்டதனால், உனக்கு நான்
ஏற்றவனாக இல்லாமல் போய்விட்டேன் என்று நினைக்கிறேன். ஆயினும்,
இப் பிறவியில் நீயும் நானும் இன்புற்றிருந்ததைப் போல் காட்டி, மறுபிறவிலும்
இடைவிடாமல் காட்சியளிக்கும் உன்னுடன்
கூடி வாழ்வதை இயன்றதாக்குக உயர்ந்த நல்வினையே!
					மேல்					
# 237 பெருஞ்சித்திரனார்
நெடுங்காலம் வாழ்க என்று நான் நெடிய வாயிலை அணுகிப்
பாடி நின்ற பசியையுடைய நாளில்,
கோடைக்காலத்துக்கேற்ற கொழுத்த நிழலாக இருந்து,
யாரிடத்திலும் பொய் கூறாத அறிவுடையவன் செவிகளில்
விதைத்த கேள்வியாகிய பயிர் நன்கு விளைந்தது என்று நினைத்துப்
பரிசிலை விரும்பியிருந்த என் விருப்பம் பயனில்லாமல் போக,
சமைத்த சோற்றுப் பானையிலிருந்து நெருப்பு புறப்பட்டது போல,
இரங்கத்தக்க இரவலர்கள் உண்ணட்டும் என்று எண்ணாத
அறமற்ற கூற்றுவன், இவன் உயிர் கொள்ளத்தக்கதா என்ற கூறுபாடு இன்றி கொல்லத் துணிய,
முறைப்படி தம் மார்பில் வெப்பமுண்டாகுமாறு அடித்துக் கொண்ட மகளிரின்
கை வளையல்களின் முறிந்த துண்டுகள் வாழைப் பூப்போல் சிதற,
முதிய வாக்கினையுடைய சுற்றத்தாரும் பரிசிலரும் வருந்த,
கள்ளிச் செடிகள் விளையும் பாழிடங்களிலுள்ள சுடுகாட்டில்,
ஒளியுடைய வேலையுடைய வீரன் இறந்துபோய்ச் சேர்ந்தான்;
கூற்றுவன் நோயின்றி இருப்பானாக! உயர்ந்த மலையில்,
புலி பார்த்துத் தாக்கிய யானையாகிய இரை தப்பிப் போனால்,
புலி எலியைப் பார்த்துத் தாக்காது, அலைகள் மிகுந்த
கடலில் விரைந்து சென்று சேரும் ஆற்று நீர்போல், நாமும் விரைந்து சென்று
மிகுந்த பரிசிலைப் பெற்று வருவோம்.
நெஞ்சே! துணிவை முன்வைத்து எழுவாயாக.
					மேல்					
# 238 பெருஞ்சித்திரனார்
பிணமிட்டுக் கவிழ்த்துப் புதைக்கப்பட்ட சிவந்த தாழியின் குவிந்த மேற்புறத்தில் இருந்த
சிவந்த காதுகளையுடைய ஆண்கழுகுகளும், பெண்கழுகுகளும், அச்சமில்லாமல்,
வலிய வாயையுடைய காக்கையும், கோட்டானும் கூடியிருக்க,
பேய்களின் கூட்டத்தோடு தாம் விரும்பியபடி திரிகின்ற
இடுகாட்டைச் சேர்ந்துவிட்டான், கள்ளை விரும்புகின்றவன்;
அவனை இழந்த, வளையல்களை நீக்கிய அவன் மனைவியர் போல் முன்பிருந்த அழகு அழிந்து,
பாடுபவர்களின் சுற்றத்தினரும் கண்களில் ஒளி மழுங்க வருந்தினர்;
தொகுதியாக இருந்த முரசுகளின் கண்கள் கிழிந்தன;
பாகர்கள் இல்லாத, மலைபோன்ற யானைகள் தம் தந்தங்களை இழந்தன;
கொடும் திறம் கொண்ட கூற்றுவன் கொடிய இறப்பைச் செய்துவிக்க,
என் தலைவன் இறந்துபட, அவ்வாறு அவன் படுதலை அறியாமல்
அந்தோ! இரக்கத்திற்குரியவனான நான் அவனைக் காண வந்தேன்.
என்னைச் சேர்ந்த சுற்றத்தார் என்ன ஆவார்களோ?
மழைபொழியும் இரவில், மரக்கலம் கவிழ்ந்த நேரத்தில்,
பொறுக்கமுடியாத துன்பமுற்ற நெஞ்சத்துடனே, ஒருசேரக்
கண்ணும் பேச்சும் இல்லாத ஒருவன் கடலில் விழுந்ததைப் போல்
எல்லையைக் காணமுடியாத, அலைகள் இல்லாத வெள்ளத்தில்
கொடிய துன்பமாகிய சுழலில் சுழலுவதைவிட
இறப்பதே நல்லது, அது நமக்குத் தகுந்த செயலும் ஆகும்.
					மேல்					
# 239 பேரெயில் முறுவலார்
வளையல்கள் அணிந்த மகளிரின் தோளைத் தழுவினான்;
காவலுடைய சோலையிலுள்ள மரங்களிலுள்ள பூக்களைச் சூடினான்;
குளிர்ந்த, மணக்கும் சந்தனம் பூசினான்;
பகைவரைக் கிளையோடு அழித்தான்;
நண்பர்களை உயர்வாகக் கூறினான்;
வலிமையுடையவர்கள் என்பதால் ஒருவரிடம் பணிந்து பேசமாட்டான்;
தம்மைவிட வலிமை குறைந்தவர்களிடம் தன்னைப் பெரிதாகப் பேசமாட்டான்;
பிறரிடம் ஒன்றை இரப்பதை அறியாதவன்;
தன்னிடம் இரப்பவர்களுக்கு இல்லையென்று கொடுக்க மறுப்பதை அறியாதவன்;
வேந்தர்களின் அவையில் தனது உயர்ந்த புகழ் தோன்றுமாறு செய்தான்;
தன்னை எதிர்த்துவரும் படையை முன்நின்று தடுத்தான்;
தோற்று ஓடும் படையைத் தொடர்ந்து பின் செல்லாமல் நின்றான்;
விரைந்து செல்லும் குதிரையைச் செலுத்தினான்;
நெடிய தெருக்களில் தேரை ஓட்டினான்;
உயர்ந்த இயல்புடைய யானையின்மீது சென்றான்;
இனிமையான கள் நிரம்பிய குடங்களைப் பலரோடு பகிர்ந்து குடித்து முடித்தான்;
பாணர்கள் மகிழுமாறு அவர்கள் பசியைப் போக்கினான்;
பிறரைக் குழப்பும் சொற்களைக் கூறுவதைத் தவிர்த்தான்; இவ்வாறு,
அவன் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்தான், ஆகவே,
புதைத்தாலும் சரி; அல்லது எரித்தாலும் சரி,
இப் புகழை விரும்புவோனது தலையை - நடப்பது நடக்கட்டும்.
					மேல்
# 240 குட்டுவன் கீரனார்
வெற்றி நடைபோடும் குதிரையும், யானையும், தேரும்,
குறையாத வருவாய் உள்ள நாடும், ஊரும்,
பாடுபவர்களுக்குக் குறையாது வழங்குபவன் ஆய் அண்டிரன்.
பக்கங்கள் ஏந்திய அல்குலையுடைய, சிறிய வளையல்களை அணிந்த மனைவியரோடு
காலன் என்று சொல்லப்படும் கருணை இல்லாதவன் கொண்டுபோக
விண்ணுலகம் அடைந்தான் என்று
பொந்தில் வாழும் பிளந்த வாயையுடைய ஆந்தை,
“சுட்டுக் குவி” என்று செத்தவர்களை அழைப்பது போலக் கூவும்
கள்ளியையுடைய பாழிடமாகிய காட்டில் ஒருபக்கத்தில் வைத்து
ஒளிமிக்க தீச் சுடுவதால் அவனுடைய உடல் அழிந்துவிட்டது;
பொலிவிழந்த கண்களையுடையவர்களாய், தம்மைப் பாதுகாப்போனைக் காணாது,
ஆரவாரிக்கும் சுற்றத்துடன் செயலிழந்து நிற்கும் புலவர்கள்
தம் உடலை வாட்டும் பசியுள்ளவராய், வேறு
நாடுகளுக்குச் செல்லும் பயணத்தை மேற்கொண்டனர், இப்பொழுது.
					மேல்					
 




# 241 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
உறுதியான தேர்களை இரவலர்க்கு அளித்த, குளிர்ந்த மாலையணிந்த
ஆய் அண்டிரன் வருகிறான் என்று, ஒளி பொருந்திய வீர வளைகளையும்,
வச்சிரம் என்னும் ஆயுதத்தையும், பெரிய கையையும் உடைய இந்திரனின் அரண்மனையில்,
போர்த்தப்பட்ட முரசுகள் முழங்க,
ஆரவார ஒலி வானத்தில் எழுந்தது.
					மேல்					
# 242 குடவாயி தீரத்தனாரி
இளம் ஆடவர் தலைமாலையாய் சூடிக்கொள்ளார்; வளையல் அணிந்த மகளிர் கொய்யமாட்டார்கள்;
நல்ல யாழின் தண்டால் மெதுவாக வளைத்துப் பறித்துப்
பாணனும் சூடமாட்டன்; பாடினியும் அணிந்துகொள்ளமாட்டாள்.
தன்னுடைய வீரம் வெளிப்படுமாறு பகைவர்களின் வீரர்களைக் கொன்ற,
வலிய வேலையுடைய சாத்தன் இறந்த பிறகு,
முல்லையே! ஒல்லையூர் நாட்டில் பூத்தாயோ?
					மேல்					
# 243 தொடித்தலை விழுத்தண்டினார்
இப்பொழுது நினைத்தால் மனவருத்தமாக உள்ளது. செறிவான மணலால்
செய்யப்பட்ட பொம்மைக்கு, பறித்த பூவைச் சூடி,
குளிர்ந்த பொய்கையில் விளையாடும் பெண்களோடு கை கோத்து,
அவர்கள் தழுவும் பொழுது தழுவி, அவர்கள் ஆடும் பொழுது ஆடி,
ஒளிவு மறைவு இல்லாமல் வஞ்சனை இல்லாத இளையோர் கூட்டத்தோடு
உயர்ந்த கிளைகளையுடைய மருதமரத்தின் நீர்த்துறையில் படும்படி தாழ்வாக
நீர்க்கு மிக அண்மையிலே படிந்த கிளையைப் பற்றி ஏறி, அழகு மிக,
கரைகளில் உள்ளோர் வியக்க, நீரலைகளிலிருந்து நீர்த்துளிகள் சிதற,
ஆழமான நீரையுடைய மடுவில், “துடும்” எனக் குதித்து,
மூழ்கி, அடிமணலை அள்ளிக்கொண்டுவந்து காட்டிய அறியாமை மிகுந்த இளமை
இரங்கத் தக்கது., அந்த இளமை இப்பொழுது எங்கு உள்ளதோ?
பூண் சூட்டிய நுனியையுடைய பருத்த ஊன்றுகோலை ஊன்றித் தளர்ந்து,
இருமல்களுக்கு இடைஇடையே வந்த சில சொற்களைக் கூறும்
பெரிய முதியவர்களாகிய எமக்கு - (அந்த இளமை இப்பொழுது எங்கு உள்ளதோ?)
					மேல்					
# 244
பாணர்களின் தலைகளில் வண்டுகள் சென்று தாது ஊதுவதில்லை,
விறலியரின் முன்கைகளில் வளையல்கள் அழகு செய்யவில்லை.
இரவலர்களும் --
					மேல்					
# 245 சேரமான் கோட்டம்பலத்து துஞ்சிய மாக்கோதை
எவ்வளவு பெரியதாயினும், நான் உறும் துன்பம் அவ்வளவு வலிமை உடையதன்று.
அது என் உயிரை அழிக்கும் வலிமை இல்லாததால்,
கள்ளிச்செடிகள் ஓங்கி வளர்ந்த களர் நிலமாகிய பாழிடத்தில்,
வெட்ட வெளியில் மூட்டிய தீயை விளைவிக்கும் விறகடுக்கான ஈமத்தின்
ஒளி பெருகும் நெருப்பாகிய படுக்கையில் கிடத்தப்பட்டு
மேலுலகம் சென்றாள் என் மனைவி,
ஆனால், நான் இன்னும் வாழ்கின்றேனே! என்ன இந்த உலகத்தின் இயற்கை?
					மேல்					
# 246 பூத பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
பலராய்க் கூடியிருக்கும் பெரியோர்களே! பலராய்க் கூடியிருக்கும் பெரியோர்களே!
”உன் கணவனோடு நீ இறந்து போ” என்று கூறாது, நானும் ஈமத்தீயில் இறப்பதைத் ”தவிர்க” என்று கூறும்
பொல்லாத சிந்தனையையுடைய பல பெரியோர்களே!
அணிலின் மேலுள்ளது போன்ற வரிகளையுடைய வளைந்த வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்திட்ட
விதைகளைப் போன்ற, வெள்ளை நிறமான, மணமுள்ள, நெய் கலவாத,
பானையின் அடிப்பகுதியில் நீருடன் கிடந்ததைக் கையால் எடுத்துப் பிழிந்த சோற்றுத்திரளோடு,
வெள்ளை எள்ளை அரைத்து ஆக்கிய துவையலுடன், புளியிட்டுச் சமைத்த
வேகவைத்த வேளைக் கீரையை உணவாக உண்டு,
பருக்கைக் கற்களால் ஆன படுக்கையில் பாயில்லாமல் படுத்துக்கிடக்கும்
கைம்மை நோன்பால் வருந்தும் பெண்களில் நான் ஒருத்தி அல்லள்;
சுடுகாட்டில் கரிய கட்டைகளை அடுக்கிச் செய்யப்பட்ட பிணப்படுக்கை
உங்களுக்குத் தாங்க முடியாததாக இருக்கலாம்; எனக்கு என்
பெரிய தோள்களையுடைய கணவர் இறந்ததால், அரும்புகளே இல்லாமல்,
வளமான இதழ்களையுடைய மலர்ந்த தாமரைகளை உடைய
நீர் செறிந்த பெரிய பொய்கையும் தீயும் ஒன்றேதான்.
					மேல்					
# 247 மதுரை பேராலவாயர்
யானை கொண்டுவந்து தந்த காய்ந்த மர விறகால்
வேடர்கள் தீ மூட்டக் கடைந்து கொள்ளப்பட்ட நெருப்பின் வெளிச்சத்தில்
படுத்திருக்கும் மடப்பம் பொருந்திய மான்களின் கூட்டத்தை உறக்கத்திலிருந்து எழுப்பி,
குரங்குகள் அந்த இடத்தைச் சுத்தப்படுத்தும் பெண் தெய்வக் கோயில் முற்றத்தில்
நீர் வடியும் கூந்தல் பெரிய முதுகில் விழுந்து கிடக்க,
பெரும் துயரம் உடைய கண்களோடு, சுடுகாட்டை நோக்கி
மனம் கலங்குகிறாள், தன் கணவனின்
ஓயாது முரசு ஒலிக்கும், காவலுடைய பெரிய அரண்மனையில்
சிறுபொழுது தன் கணவனைவிட்டுப் பிரிந்து தனித்திருந்தாலும்
தன் இனிய உயிர் நடுங்கும் தன் இளமையைத் துறந்து - (சுடுகாட்டை நோக்கி மனம் கலங்குகிறாள்)
					மேல்					
# 248 ஒக்கூர் மாசாத்தனார்
இரங்கத் தக்கன இந்த சிறிய வெண்ணிறமான அல்லிப் பூக்கள்,
சிறுவயதில் இந்த அல்லியின் இலைகள் எனக்கு தழையுடையாக உதவின; இப்பொழுது,
பெரிய செல்வமுடைய என் கணவன் இறந்ததால், உரிய பொழுதில் உண்ணாமல்,
பொருந்தாத நேரத்தில் உண்ணும்
அல்லியிடத்தில் உண்டாகும் புல்லரிசியாக எமக்கு ஆயின.
					மேல்					
# 249 தும்பி சொகினனார் தும்பிசேர் கீரனார் என்பதும் ஆம்
கதிர் நுனை போன்ற கூர்மையான மூக்கையுடைய ஆரல் மீன் கீழேயுள்ள சேற்றில் ஒளிந்துகொள்ள,
திரண்ட மீசையையுடைய வாளைமீன் நீர்மேல் பிறழ,
நெருப்புப்போல் சிவந்த செந்தாமரை பூத்த பொய்கைகளை நெருங்கி ஒன்றுசேர்ந்து வலைஞர்கள்,
மெல்லிய ஓசையையுடைய தடாரி போன்ற ஆமை புரள,
பனங்குருத்தைப் போன்ற சினை முற்றிய வரால் மீன்களோடு,
எதிரிடும் வேல் போன்ற கெண்டை மீன்களையும் முகந்து கொள்ளும்
அகன்ற நாட்டின் தலைவனின் உணவு, நேற்று
ஒளி பொருந்திய இடத்தில், பலரோடு கூடி
ஒன்றாகக் கழிந்தது. இப்பொழுது,
தன்னிடம் நிறைந்த கற்பினையும் அழகிய நெற்றியையும் உடைய அவன் மனைவி
அவன் மேலுலகம் அடைந்ததால், அவனுக்கு உணவு கொடுப்பதற்காக
புழுதி படிந்த முறமளவு உள்ள சிறிய இடத்தைத் துடைத்து
அழுவதை நிறுத்தாத கண்ணையுடையவளாய்
தன்னுடைய கண்ணிலிருந்து ஒழுகும் நீரில் கலந்த பசுஞ்சாணத்தால் மெழுகுகிறாள்.
					மேல்					
# 250 தாயம் கண்ணியார்
மிகுந்த ஓசையுடன் தாளித்த வளமான துவையலோடு கூடிய உணவை அளித்து
இரவலர்களை வேறு எங்கும் செல்லாமல் தடுத்து நிறுத்திய வாயிலையும், வேண்டி வந்தவர்களின்
கண்ணீரைத் துடைக்கும் குளிர்ந்த நறுமணமுள்ள பந்தலையும் உடையதாக முன்பு இருந்த நீ,
கூந்தலைக் குறைத்து, குறிய வளையல்களை நீக்கி,
அல்லி அரிசியை உணவாகக் கொண்ட மனைவியுடன் இப்பொழுது
பொலிவிழந்து காணப்படுகிறாய், வளங்கள் பொருந்திய அழகிய மாளிகையே! 
சுவையான சோற்றை உண்டு இனிய பாலை விரும்பும்
குடுமித் தலையையுடைய புதல்வர்களின் தந்தை
தனியிடமாகிய சுடுகாட்டை அடைந்த பின்.
					மேல்					
 



# 251 மாற்பித்தியார்
ஓவியம் போல் அழகான இடங்களுடைய மாளிகையில்,
கொல்லிப்பாவை போன்ற, சிறிய வளயல்களை அணிந்த மகளிரின்
அணிகலன்களை அவற்றின் நிலையிலிருந்து நெகிழவைத்த இளைஞனை முன்பு கண்டுள்ளோம்.
மூங்கில் இருக்கும் இடத்தையுடைய நெடிய மலைகளிலிருந்து விழும் அருவிகளில் நீராடி,
காட்டு யானைகள் கொண்டு வந்து தந்த விறகால் மூட்டிய
மிகுந்த வெப்பமுள்ள சிவந்த தீயை மூட்டி
தன் முதுகுவரை தாழ்ந்துள்ள திரண்டு சுருண்ட சடைமுடியை உலர்த்துபனும் அவனே.
					மேல்					
# 252 மாற்பித்தியார்
ஓசையிடும் வெண்மையான அருவியில் நீராடுவதால், பழையநிறம் மாறி
தில்லை மரத் தளிர் போன்ற வெளிறிய சடையோடு கூடி நின்று,
செறிந்த இலைகளுடைய தாளியைப் பறிக்கின்ற இவன்,
வீட்டில் நடமாடித்திரியும் இளம் மயிலை ஒத்த தன் மனைவியை வயப்படுத்தும்
சொற்களாலாகிய வலையையுடைய வேட்டுவனாக இருந்தான், முன்பு.
					மேல்					
# 253 குளம்பாதாயனார்
“எனக்காக அவலம் கொள்ளாதே. இனி” என்று சொல்லி
நன்கு சுற்றப்பட்ட தலைமாலையையுடைய இளைஞர்கள் மகிழ்ந்திருக்க
நான் மகிழ்ந்திருக்கமாட்டேன் என்று போருக்கு வந்ததன் விளைவே இது; நெல் விளையாத
பச்சை மூங்கில் பட்டையை உரித்தது போன்ற வெளுத்திருந்த
வளையல் இல்லாத வறுங்கையைத் தலைக்குமேலே தூக்கிக்கொண்டு
உன் சுற்றத்தாருடன் எப்படிச் செல்வேன்? நீயே வாய்திறந்து சொல்லிவிடு.
					மேல்					
# 254 கயமனார்
இளையவர்களும் முதியவர்களும் போர்க்களத்திலிருந்து வேறு இடங்களுக்குச் செல்ல,
நான் எழுப்பவும் எழாதவனாய், உனது மார்பு மண்ணைத் தழுவ,
நடுக்காட்டில் இறந்துகிடக்கும் வீரனே! வெளுத்த
வளையல்கள் இல்லாத வெறுங்கையைத் தூக்கி, உன் சுற்றத்தாரிடம்,
இப்படி ஆகிவிட்டான் இளையவன் என்று நான் சொல்ல
உன்னைப் பற்றிய செய்தி பரவுமானால், 
”ஊரின் முன்னே உள்ள, பழுத்த கோளியாகிய ஆலமரத்தில்
பறவைகள் ஆரவாரிக்கும் புதுவருவாயைப் போன்றது என் மகனுடைய
செல்வமும் தலைமையும் எனக்கு” என்று எப்போதும்
விடாமல் புகழ்ந்து பேசும் உன் தாய்
என்ன ஆவாளோ? அவள் இரங்கத்தக்கவள்.
					மேல்					
# 255 வன்பரணர்
’ஐயோ!’ என்று ஓலமிட்டு அழுதால் புலி வந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்;
உன்னை அணைத்தவாறு எடுத்துச்செல்லலாம் எனில் உன் அகன்ற மார்பைத் தூக்க முடியவில்லை;
என்னைப்போல் பெரிய நடுக்கமுறுவான் ஆகுக, உனக்கு
இவ்வாறு கொடுமை விளைவித்த அறமற்ற கூற்றுவன்; 
என்னுடைய வளையல் அணிந்த முன்கையைப் பற்றிக்கொண்டு
மலையின் நிழலைச் சென்றடையலாம், மெல்ல நடப்பாயாக.
					மேல்					
# 256 பெயர் தெரிந்திலது
மண்பாண்டங்கள் செய்யும் குயவனே! மண்பாண்டங்கள் செய்யும் குயவனே! 
அச்சுடன் பொருந்திய வண்டியின் ஆரக்காலைப் பற்றிக்கொண்டு வந்த
சின்னஞ்சிறு வெள்ளைப் பல்லியைப் போல, என் கணவனுடன்
பல வழிகளையும் கடந்து வந்த எனக்கும் சேர்த்து, அருள் கூர்ந்து
பெரிய பரப்பினையுடைய அகன்ற பூமியிலுள்ள இடுகாட்டில் புதைக்க, தாழியை
அகலம் உள்ளதாகச் செய்வாயாக!
பெரிய இடங்களையுடைய பழைய ஊரின்கண் மண்பாண்டங்கள் செய்யும் குயவனே!
					மேல்					
# 257 பெயர் தெரிந்திலது
(பகைவர்க்குச்)செருப்பிடையே நுழைந்த சிறிய கல் போன்றவன், திரண்ட கால்களையும்,
அழகிய வயிற்றையும், அகன்ற மார்பையும், குளிர்ந்த கண்களையும்,
குச்சுப்புல்லை வரிசையாக வைத்தது போன்ற நிறம் பொருந்திய மயிரினையுடைய தாடியையும்,
காதுக்கும் கீழே தாழ்ந்த கன்னமுடியையும் உடையவனாய், வில்லுடன் கூடியவன்
யாராய் இருப்பான்? இரங்கத்தக்கவன்தான். ஆராய்ந்து பார்த்தால்,
இவன் ஊரைவிட்டு அதிகம் எங்கும் போகாதவன். பாதுகாப்பிற்காகக்
காட்டைப் பிடித்துக்கொண்டவனும் அல்லன்; இன்று காலை,
பகைவர்களின் கூட்டமான ஆநிரை போகின்ற இடத்தைப் பார்த்து
கையால் சுட்டிக்காட்டி, அவசரப்படாமல் மெல்ல எண்ணிப்பார்த்து
தன் வில்லால் பசுக்களை திருப்பிக் கொணர்ந்தான், அப் பசுக்கள்தான்
மிகப் பல என்றாலும் அவனுக்கு என்ன பயன்? கொஞ்சங்கூட (தனக்கென வைத்துக்கொள்ளாததால்)
பாலின் வெண்மை தட்டுப்படாத பானையுடன்,
காலைப் பொழுதில் துளிகள் தெறிக்கக் கடையும் மத்தின் ஒலியையும் கேட்காதவன்.
					மேல்					
# 258 உலோச்சனார்
தண்டில் முள்ளுடைய காரைச் செடியின் முதிர்ந்த பழத்தைப் போன்று
நன்கு முதிர்ந்த இனிய மதுவையுடைய கந்தாரம் என்னும் இடத்திலிருந்து தான் கொண்டுவந்து
நிறுத்திய ஆநிரைகளுக்கு ஈடாகக் கள்ளை வாங்கிப் பருகி,
வளமான ஊனைத் தின்று, நன்றாகக் கொழுப்பு படிந்துள்ள
தன் ஈரமான எச்சில் கையை வில்லின் முதுகில் துடைத்துவிட்டு,
வேறொரு இடத்திற்குச் சென்றிருக்கிறான், சிறிய தாடியையுடைய காளை போன்ற அந்த இளைஞன் 
இங்குள்ளவர்கள் அனைவரும் ஒருமுறை குடித்து முடிக்கும் முன்னே, பெரிய ஆநிரைகளைக் கவர்ந்து
ஊரின் வெளியே நிறையக் கொணர்வான்; வேறு யாருக்கும் கள்ளினை ஊற்றாமல்
தொடாமல் காத்துவையுங்கள், முதிர்ந்த கள் உள்ள சாடியை;
பசுக்களை ஓட்டிவரும் புழுதி படிந்த மேனியன்
தாகத்துடனும் இருப்பான், அந்தக் கள்ளினை விரும்புவோன்..
					மேல்					
# 259 கோடை பாடிய பெரும்பூதனார்
எருதுகளையுடைய பெரிய ஆநிரை முன்னே போக, அவற்றைக் கவர்ந்தவர்கள் அவற்றுடன் செல்லாது,
இலைகளால் மூடப்பட்ட பெரிய காட்டுக்குள் தலைமறைவாக இருந்த
வலிய வில்லையுடைய வீரர்கள் மறைவிடத்தில் இருப்பதைக் காண்பாயாக.
போகவே போகவேண்டாம், உன் எண்ணம் வெல்வதாக,
தெய்வம் உடலில் ஏறிய புலைத்தியைப் போல்
துள்ளிக் குதிக்கும் பசுக்களைத் தேடி - (போகவே போகவேண்டாம்)
இடுப்பில் ஒளிர்ந்து பிரகாசிக்கும் வாளையும், காலில் வீரக்கழலையும் அணிந்தவனே! 
					மேல்					
# 260 வடமோதங்கிழார்
ஓசை அதிகரிக்குமாறு இசைத்தாலும், ஓசையை உள்வாங்கித் திரிந்து,
இரங்கற் பண்ணாகிய விளரிப் பண்ணே இனிய யாழிலிருந்து வருகிறது என்பதை நினைத்து
வருத்தம் அடையும் நெஞ்சத்துடன் புறப்பட்டுவரும் வழியில், ஒரு குடும்பப்பெண்
விரித்துப் போட்டுக்கொண்டு வரும் கூந்தலைப் பார்த்து, இது தீயசகுனமாதலால் களர்நிலத்தில் இருக்கும்
கள்ளிமரத்தின் நிழலில் இருந்த கடவுளை வாழ்த்தி,
பசியோடு கூடிய வயிற்றையுடையவனாய், வருந்தித் தொழுது,
“நான் காண வந்த தலைவனைக் காண முடியாதோ?” என்று கேட்டு வருகின்ற
பாணனே! நமது வருவாயின் நிலையை நான் கூறுகிறேன். கேள்!
தலைவன் நமக்கு அளித்தவற்றை வைத்து உண்டாய் என்றாலும், இரப்பதற்காக வேறிடம் புறப்பட்டு
வருத்தம் அடைந்தாய் என்றாலும், இவை இரண்டும்
உனது கையிலுள்ளன, மிக அருகில் உள்ள
ஊரில் முன்பு தோன்றிய பூசலால், தன்னுடைய ஊரில்
இருந்த ஆநிரைகளைக் கவர்ந்த வீரம் மிக்க பகைவர்கள்
எய்த அம்பு வெள்ளத்தைத் தன் வலிமையை மட்டுமே துணையாகக் கொண்டு
பகைவரைக் கொன்று, வெற்றியை ஈட்டி, ஆநிரைகளை விடுவித்து,
உலகம் வருந்துமாறு, தன்னை விழுங்கிய பாம்பின்
கூர்மையான பற்களையுடைய வாயிலிருந்து திங்கள் மீண்டது போல், மறவருடைய
கையிலிருந்து தப்பி வந்த கன்றுகளையுடைய பல பசுக்களைக்
கூட்டத்துடன் கொண்டுவந்த பெரும்புகழ் பெற்றவன் ஆகி
தோலை உரித்துவிட்டுச் செல்லும் பாம்பு போல், தானே
அரிதாகச் செல்லப்படும் மேலுலகம் சென்றான்; அவன் உடல்
காட்டிலுள்ள சிறிய ஆற்றின் அரிய கரையில், காலூன்றி உறுதியாக நின்று
நடுக்கத்துடன் சாய்ந்த அம்பு ஏவும் இலக்குப் போல்
அம்புகளால் துளைக்கப்பட்டு அங்கே வீழ்ந்தது.
உயர்ந்த புகழ் மிகவும் தோன்றிய தலைவனின் பெயர்,
மென்மையான, அழகிய மயிலின் அழகிய மயிராகிய பீலி சூட்டப்பட்டு,
பிறர் இடம் கொள்ள முடியாத சிறிய இடத்தில்
திரைச் சீலைகளால் அலங்கரிக்கப்பட்ட பந்தரின் கீழ் நடப்பட்ட கல்லின் மேலே பொறிக்கப்பட்டிருக்கிறது.
					மேல்					
 




# 261 ஆவூர் மூலங்கிழார்
ஐயோ! என் தலைவனின் கதவுகள் எப்பொழுதும் அடைக்கப்படாத பெரிய இல்லமே!
வண்டுகள் மொய்க்கும் மது எப்பொழுதும் குறையாமல் இருக்கும் உண்கலத்துடன்,
வந்தோர்க்குக் குறையாமல் அளிக்கும் மிகுந்த சோற்றையுடைய தேய்ந்த உயர்தளமுடைய முற்றம், 
நீரின்றி வற்றிய ஆற்றில் உள்ள ஓடம் எப்படி இருக்குமோ அப்படியாக இருக்கப்
பார்க்கவே பார்த்தேன், அதைப் பார்த்த என் கண்கள் ஓளி இழந்துபோகட்டும்.
உலகத்தைக் காக்கும் வேந்தருடைய செல்வம் மிக்க அழகிய அரண்மனையில்
மதத்தால் மயங்கிய யானை பெருமூச்சு விடுவதைப் போன்ற
நெய் காய்கின்ற உலையில் சொரியப்பட்ட ஆட்டிறைச்சியின் ஓசையையுடைய பொரியலை
புதிய மாந்தர்கள் தம் ஓளிமழுங்கிய கண்களால் கண்ணாரக் கண்டு மகிழ்ந்து
உண்ணத் தந்தாய் முன்பு; இப்பொழுது,
பல பசுக்களின் கூட்டத்தை கைப்பற்றிய வில்வித்தை கற்கத் தேவையில்லாத வலிய வில்வீரரை,
பெருங்குரலைத் தன்னிடத்தே கொண்ட கூகைகள் தம் இனத்தைக் கூவி அழைக்க, அலைக்கழித்து,
இளம் பசுங் கன்றுகளின் முலை போன்ற தோற்றமுள்ள, மணமுள்ள கரந்தைப் பூவை,
அறிவிற் சிறந்தோர் சூட்ட வேண்டிய முறைப்படி சூட்ட,
பசுக்களை மீட்டுவந்து, நடுகல்லாகிப்போய்விட்ட
வெற்றியையுடைய வேலையுடைய தலைவன் இல்லாததால், அழுது,
மயிர் கொய்யப்பட்ட தலையுடன், கைம்மை நோன்பை மேற்கொண்டு, கலக்கமுறும்
அணிகலன்களை இழந்த அவன் மனைவியைப் போல்
பொலிவிழந்து காணப்படுகிறாய், பல அழகும் இழந்து.
					மேல்					
# 262 மதுரை பேராலவாயர்
மதுவைப் பிழியுங்கள்; ஆட்டை வெட்டுங்கள்.
பசிய இலை, தழைகளால் வேயப்பட்ட சிறிய கால்களையுடைய பந்தலில்
நீர் கொழித்துக் கொண்டுவந்த குறுமணலைப் பரப்புங்கள்;
பகைவரின் தூசிப்படையை முறித்துத் திரும்பிவரும் தனது படைக்குப் பின்னே நின்று,
ஆநிரையுடன் வரும் என் தலைவனுக்குப்
பக்கத்தில் துணையாக உள்ள மறவர்கள் அவனைவிட மிகவும் சோர்வுடன் இருப்பார்கள்.
					மேல்					
# 263 திணை கரந்தை
பெரிய யானையின் காலடி போலத் தோன்றும் ஒரு கண்ணையுடைய
பெரிய பறையை வைத்திருக்கும் இரவலனே! நீ அந்த வழியாகச் சென்றால்,
தொழாமல் செல்வதைத் தவிர்ப்பாயாக, தொழுது சென்றால், இடைவிடாமல்
வண்டுகள் மேம்பட்டு வாழும் மலர்ச்சோலை ஆகும் இந்தக் கொடிய வழி;
பல பசுக்கள் கொண்ட திரளான கூட்டத்தைக் கவர்ந்துசெல்லும்போது மீட்டுக்கொண்டுவந்து,
போர்த்தொழில் தவிர வேறெதையும் கற்காத இளைஞர்கள் பயந்தோட, தான் ஓடாமல்
பகைவர்களின் வில்களிலிருந்து வந்த விரைவான அம்புகளால் மூழ்கப்பெற்று
கரையை அரிக்கும் நீரில் அணை போல் தடுத்தவனின் நடுகல்லை-(தொழாமல் செல்வதைத் தவிர்ப்பாய்)
					மேல்					
# 264 உறையூர் இளம்பொன் வாணிகனார்
பரல்கற்களையுடைய இடத்தில் உள்ள மேட்டுப்பகுதியைச் சேர்த்து,
பெருங்குரும்பையைக் கீறி எடுத்த நாரால் தொடுத்த சிவந்த பூக்களுடன் கூடிய தலைமாலையுடன்
அழகிய மயில் தோகையையும் சூட்டி, அவன் பெயர் பொறித்துத்
தலைவனுக்கு இப்பொழுது நடுகல்லும் நட்டுவிட்டார்களே; கன்றுகளோடு
பசுக்களையும் மீட்டு வந்து, பகைவரை விரட்டியடித்த
தலைவன் இறந்ததை அறியாது
பாணர்கள் கூட்டம் இன்றும் அவனைக் காண வருமோ?
					மேல்					
# 265 சோணாட்டு முகையலூர் சிறுகருந்தும்பியார்
ஊரிலிருந்து வெகு தொலைவில் உள்ள முரம்பு நிலமாகிய பழைய சுடுகாட்டில்
ஓங்கி உயர்ந்த வேங்கை மரத்தின் ஒளிபொருந்திய மணமுள்ள பூங்கொத்துகளை
அழகிய பனங்குருத்துக்களோடு அலங்கரித்துத் தொடுத்து,
பல பசுக்களையுடைய இடையர்கள் இலைமாலையாகச் சூட்டி வழிபடும்
நடுகல்லாயினாயே! விரைந்து செல்லும் குதிரைகளையுடைய தலைவனே! 
மழையின் இடிபோன்ற வலிமையும், வண்மையும் உடைய உன் அடி நிழலில் வாழும் வாழ்க்கையையுடைய
பரிசிலர்களின் செல்வம் மட்டுமல்லாமல் மலர்ந்த மலர்களாலாகிய மாலையணிந்த,
விரைந்து செல்லும் வலிமையுடைய யானைகளையுடைய வேந்தர்களின்
குறையாத வெற்றியும் உன் இறப்பால் உன்னுடன் மறைந்தனவே.
					மேல்					
# 266 பெருங்குன்றூர் கிழார்
பயன் பொருந்திய பெரிய மேகம் மழை பெய்யாமல் நீங்கிப்போக,
நீர்நிலைகள் களியாகி உலர்ந்துபோகும் கோடைக் காலத்திலும்
துளையுள்ள தண்டினைக் கொண்ட ஆம்பலின் அகன்ற இலையின் நிழலில்
கதிர் போன்ற கூர்மையான கொம்புகளையுடைய நத்தையின் சுரித்த முகத்தையுடைய ஆண்
இளம் பெண்ணாகிய சங்குடன் பகலில் கூடுகின்ற
நீர் விளங்கும் வயல்களுள்ள நாட்டையுடைய பெரிய வெற்றி வீரனே!
விண்ணைத் தொடும் நெடிய குடையும் வலிய குதிரையும் உடைய சென்னியே!
சான்றோர்கள் கூடியுள்ள அவைக்குச் சென்ற ஒருவன்,
“எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்று ஓலமிட, அவர்கள் அதனை விரைவில் தீர்ப்பது போல
நீ விரைவில் தீர்த்துவைப்பாய், என்னை நினைத்து வந்த
விருந்தினரைக் கண்டதும் ஒளிந்துகொள்ளும் நன்மையில்லாத வாழ்க்கையையுடைய,
ஐம்பொறிகளும் குறைவின்றி இருக்கும் என் உடலில் தோன்றி, என்
அறிவைக் கெடுத்து நிற்கும் வறுமையை - (நீ விரைவில் தீர்த்துவைப்பாய்)
					மேல்					
# 267

# 268
					
# 269 ஔவையார்
குயிலின் அலகு போன்ற கூர்மையான மொட்டுக்களையுடைய காட்டு மல்லிகைக் கொடியில்
நெருக்கமில்லாமல் மலர்ந்த பல பூக்கள் மிகுந்த மாலையைக்
கரிய பெரிய தலைமுடியில் அழகுடன் சூடி,
புதிய அகன்ற கலத்தில், புலியின் கண் போன்ற நிறத்தையுடைய வெம்மையான மதுவை
ஓரிரு முறை இங்கே இருந்து நீ உண்ட பின்,
இலை, தழைகளைக் கலந்து தொடுத்த மாலை அணிந்த துடியன் வந்து “போர் வந்தது” என்று அறிவிக்க
பிழிந்த மதுவாகிய உணவை உண்ணுமாறு உன்னை வேண்டியும், நீ அந்த
மதுவை வாழ்த்தி, அதனைக் கொள்ளவில்லை என்று கூறுவார்கள்,
கரந்தை சூடியோர் மிகுதியாய்க் கூடி மறைந்திருத்தலை அறிந்து மாறிச் சென்று செய்த போரில்
அவர்களின் பலவான இனமான பசுக் கூட்டங்களைக் கவர்ந்துகொண்டு, வில் மறவர்களை,
வளைந்த சிறகையும், நிறத்தையும் உடைய பருந்துகள் ஆரவாரிக்குமாறு
கொன்று மாறுபாட்டைப் போக்கியது உனது வலிய கையில் உள்ள இந்த வாள்தானே.
					மேல்					
# 270 கழாத்தலையார்
பல விண்மீன்கள் ஒளிரும் மாகமாகிய உயர்ந்த வானத்தில் முழங்கும் முகில் போல
முழங்கும் முரசினையும், கூட்டமாக அமைந்த யானையினையும் உடைய,
நில உலகில் நெடுங்காலம் ஆட்சிச் சக்கரத்தைச் செலுத்தும் வேந்தரும்
போர்க்களத்தில் ஒன்று கூடி அன்பால் வருந்தி நின்றனர்;
நறுமணப் பொருள்களைத் துறந்தமையால் நறுமணம் கமழாத, நரைத்த தலையையுடைய 
சிறுவர் தாயே! பெரிய குடும்பத்துப் பெண்ணே!
நான் வருந்துகிறேன், நீயே பார்ப்பாயாக;
மறம் பொருந்திய வீரர்களைப் போர்க்கழைக்கும் அரித்த குரலையுடைய போர்ப்பறையின்
இனிய ஓசையைக் கேட்ட, பகைவர்களால் நெருங்குதற்கரிய மறவர்,
வெற்றிபெறும் வேட்கையையுடையவராய், போர்க்களத்தின் நடு இடத்தைக் கைப்பற்ற எண்ணி
பெரும் போரைச் செய்த அச்சம்தரும் போர்க்களத்தில்,
பெரிய கோடரியால் வெட்டப்பட்டு விழுந்த மரம் போல்
வாளின்மேல் கிடந்த, ஆண்மையுடைய உன் மகனின் ஆற்றலை எண்ணி - (வேந்தரும் வருந்தி நின்றனர்)
					மேல்					
 




# 271 வெறி பாடிய காமக்கண்ணியார்
நீர் அற்றுப்போவதை அறியாத நிலத்தோடு ஒன்றி நிற்கும்
கரிய பூங்கொத்துக்களையுடைய நொச்சியின் கண்ணுக்கு நிறைவான நிறமுடைய தழையை,
மெல்லிய அணிகலன்கள் அணிந்த பெண்கள் தம் அழகான அகன்ற இடையில்
தழையுடையாக அணிவதையும் கண்டோம். இப்பொழுது,
அச்சம்தரும் குருதியில் கலந்து, உருமாறி,
துண்டிக்கப்பட்டுக் கிடந்த நொச்சி மாலையை ஊன்துண்டு என்று கருதிப்
பருந்து ஒன்று கவர்ந்துகொண்டு உயரே எழுவதை யாம் கண்டோம்.
வீரத்தை விரும்பும் ஆண்மகன் ஒருவன் அணிந்திருப்பதால்.
					மேல்					
# 272 மோசி சாத்தனார்
மணிகளைக் கொத்துக்கொத்தாய்க் கோத்துவைத்தாற் போன்ற கரிய பூங்கொத்துக்களையுடைய நொச்சியே!
பூக்கள் மலரும் பலவிதமான மரங்களுக்குள்ளும் நீதான் மிகுந்த
அன்பிற்குரிய நல்ல மரம், நீ ஒளிமிக்கதாய் இருக்கின்றாய்;
காவலையுடைய பெரிய மாளிகைகளில் காண்பதற்கு இனிமையாய் அழகு மிக்க
வளையல் அணிந்த இளமகளிர் இடுப்பில் தழையுடையாக இருப்பாய்;
பாதுகாவலுடைய மதிலில் நின்று பகைவர்களின் மாறுபாட்டை அழித்தலில்
கைவிடாது ஊரைக் காக்கும் வீரர்களின்
பெருமைக்குரிய தலையில் அணியப்படும் உரிமையும் உன்னுடையதாகும்.
					மேல்					
# 273 எருமை வெளியனார்
குதிரை வரவில்லையே! குதிரை வரவில்லையே!
மற்ற வீரர்கள் அனைவருடைய குதிரைகளும் வந்தன. எம் வீட்டில் உள்ள
சிறிதளவே குடுமியுள்ள இளமகனைத் தந்த
என் கணவன் ஏறிச்சென்ற குதிரை வரவில்லையே!
இரண்டு பெரிய ஆறுகள் கூடும் பெரிய சந்திப்பில்
குறுக்கே நின்ற பெருமரம் போல்,
அவன் ஏறிச்சென்று போரிட்ட குதிரை சாய்ந்ததோ?
					மேல்					
# 274 உலோச்சனார்
நீல நிறமுடைய கச்சையையும், பூவேலைப்பாடுகள் நிறைந்த ஆடையையும்,
மயில் தோகையால் தொடுக்கப்பட்ட தலைமாலையையும் உடைய பெரியோனாகிய வீரன்,
தன்னைக் கொல்ல வந்த யானையின் நெற்றியில் வேலைச் செலுத்தி, இப்பொழுது,
தன் உயிரையும் செலுத்திப் போரிடுவான் போல் தோன்றுகிறது; பகைவர்
தங்கள் வலக்கரங்களில் வேலை ஏந்தியவராய் யானைகளுடன் பரவி வர,
அவன் மீது வந்து தைத்த வேலைப் பிடுங்கி, அவர்களை இரு கைகளாலும் இறுகப் பற்றி,
தன் வலிமையால் உயரத் தூக்கி, நிலத்தில் மோதி, உயிர் நீங்கிய உடலைப் பற்றிக்கொண்டு நிற்கின்றான்.
					மேல்					
# 275 ஒரூஉத்தனார்
வளையத் தொடுத்த மாலையைச் சூடுவதும், வளைத்துக் கட்டிய அலையலையான ஆடையை உடுத்துவதும்,
அரசன் விரும்புவதைக் கூறி அவனைத் தன் வசப்படுத்துவதும்
இவனுக்குப் பொருந்திவருகின்றன; மனவலிமையையுடன் போர்புரியும்
போர்க்களத்தின் மையப்பகுதியினர் அலறக் கூட்டமான படையைப் பிளந்துகொண்டு, தன்னுடைய
நன்கு செய்யப்பட்ட, சிறந்த வேலின் இலைமுகத்தைத் தான் செல்லும் திசைநோக்கி ஏந்தி,
“இவனை இங்கே தடுத்துநிறுத்துங்கள், தடுத்துநிறுத்துங்கள்.” என்று பகைவர் கூற, அதை மதியாமல்
கால் சங்கிலியை இழுத்துச்செல்லும் யானைபோல், இறந்த வீரர்களின் குடல்கள் காலைத் தடுக்க,
தன் கன்றை விரும்பும் பசுவைப் போல்
பகைவரின் முன்னணிப் படையை எதிர்த்து அவரால் சூழப்பட்டிருக்கும் தன் தோழனைக் காக்க வருகிறான்.
					மேல்					
# 276 மதுரை பூதன் இளநாகனார்
நல்ல மணமுள்ள பொருள்களைத் துறந்த, நரைத்த வெண்மையான கூந்தலையும்,
இரவமரத்தின் விதைபோன்ற சுருங்கிய கண்ணையுடைய வற்றிய முலையையும் உடைய,
செம்மையான பண்புடைய முதியவளுடைய அன்புச் சிறுவன்,
இளமைப் பான்மையையுடைய இடைக்குலப் பெண் ஒருத்தி தன் வளமையான நகத்தால் தெளித்த
ஒரு குடப்பாலுக்குச் சிறிதளவு உறை போலப்
பகைவரின் படைக்குத் தானே துன்பம் எல்லாம் தருபவன் ஆனான்.
					மேல்					
# 277 பூங்கணுத்திரையார்
மீன் உண்ணும் கொக்கின் இறகு போன்ற
வெண்மையான, நரைத்த கூந்தலையுடைய முதிய தாய், தன் சிறுவன்
யானையைக் கொன்று தானும் வீழ்ந்தான் என்ற செய்தியைக் கேட்டவுடன் அடைந்த மகிழ்ச்சி,
அவள் அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியைவிடப் பெரிது; அவள் வடித்த மகிழ்ச்சிக் கண்ணீர்த்துளிகள்
வலிய கழையாய் அசைகின்ற மூங்கிலில்
மழை பெய்யும்போது தொங்கிக்கொண்டு சொட்டும் மழைத்துளிகளைவிட அதிகமானவை.
					மேல்					
# 278 காக்கைபாடினியார் நச்செள்ளையார்
நரம்புகள் புடைத்து வற்றி உலர்ந்த மெலிந்த தோள்களையும்,
தாமரை இலை போன்ற அடிவயிற்றையும் உடைய முதியவளிடம், அவள் மகன்
பகைவரின் படையைக் கண்டு நிலைகுலைந்து, புறமுதுகு காட்டி இறந்தான் என்று பலரும் கூற,
கடும் போரைக் கண்டு அஞ்சி என் மகன் தோற்றோடி இறந்தது உண்மையானால், அவன் பால் உண்ட என்
முலைகளை அறுத்திடுவேன் நான் என்று சினந்து,
கையிலேந்திய வாளோடு சென்று, போர்க்களத்தில், இறந்து கிடந்த பிணங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துச்
சிவந்த போர்க்களம் முழுவதும் தன் மகனின் உடலைத் தேடியவள். சிதைந்து வேறு வேறாக
வெட்டுப்பட்டு அவன் உடல் கிடப்பதைக் கண்டு,
அவனைப் பெற்றபோது அடைந்ததைவிட பெருமகிழ்ச்சி அடைந்தாள்.
					மேல்					
# 279 ஒக்கூர் மாசாத்தியார்
இவளது சிந்தை கெடுக; இவளது துணிவு மிகவும் கடுமையானது.
முதுமையான மறக்குலப் பெண் என்று சொன்னால் அதற்கு இவள் தகுதியானவள்.
முந்தாநாள் நடைபெற்ற போரில், இவளுடைய தந்தை,
யானையைக் கொன்று தானும் வீழ்ந்து மாண்டான்;
நேற்று நடைபெற்ற போரில், இவள் கணவன்
ஆநிரைகளைக் கவர்ந்து செல்வோரைக் குறுக்கிட்டுத்தடுத்து அப் போரில் இறந்தான்;
இன்றும் ஒலிக்கிற போர்ப்பறை கேட்டு, மறப் புகழ் மேல் விருப்பம்கொண்டு அறிவு மயங்கி
வேலினைக் கையில் கொடுத்து, வெண்ணிற ஆடையை எடுத்து விரித்து, இடுப்பில் உடுத்தி,
பரட்டை மயிர்க் குடுமியில் எண்ணெய் தடவி,
இந்த ஒரு மகனைத் தவிர வேறு மகன் இல்லாதவள்
“போர்க்களத்தை நோக்கிச் செல்க” என்று அனுப்பினாள்.
					மேல்					
# 280 மாறோக்கத்து நப்பசலையார்
என் கணவனின் மார்பில் புண்ணும் கடுமையானதாக இருக்கிறது;
நடுப்பகலில் வந்து வண்டுகளும் மொய்த்து ஒலிக்கின்றன;
என்னுடைய பெரிய மாளிகைப் பிரகாரங்களின் விளக்குகள் நின்று எரியாமல் அவிந்துவிடுகின்றன;
அவன் அருகிருந்து உறங்காத என் கண்கள் உறக்கத்தை விரும்புகின்றன;
அச்சத்தைத் தரும் கூகை தன் குரலால் அலறுகிறது;
நெல்லும் நீரும் சொரிந்து விரிச்சி கேட்கும்
செம்மைப்பண்புள்ள முதிய பெண்டிரின் சொற்களிலும் முழுமை இல்லை;
துடியனே! பாணனே! பாடுவதில் வல்ல விறலியே!
நீங்கள் என்ன ஆவீர்களோ? நீங்கள் இரங்கத்தக்கவர்கள்; உங்களுக்கும்
இவ்விடத்து வாழும் வாழ்க்கையோ அரிது; நானும்
நீராடிய பிறகு மொட்டைத் தலையில் இருந்து தெளிந்த நீர் ஒழுக,
முன்பு இளமைக் காலத்தில் உடுத்திய அழகிய மாறுபட்ட தழைமாலையாக விளங்கிய
சிறிய வெள்ளாம்பலில் உண்டாகும் அல்லியரிசியை உண்ணும்
அணிகலன்கள் அணியாத கைம்பெண்கள் போலத்
இனி வாழும் வகையை நினைத்து வருந்தி இங்கு நான் உயிர் வாழ்வது அதனினும் அரிது.
					மேல்					
 




# 281 அரிசில் கிழார்
இனிய கனியைத் தரும் இரவமரத்தின் இலையோடு வேப்பிலையையும் சேர்த்து வீட்டில் செருகி,
வளைந்த தண்டையுடைய யாழோடு பலவகை இசைக்கருவிகளும் ஒலிக்க,
கையால் மெல்ல எடுத்து மைபோன்ற சாந்தைத் தலைவனின் புண்களில் மெழுகி,
வெண்சிறுகடுகுகளைத் தூவி, ஆம்பல் தண்டை ஊதி,
ஓசையைச் செய்யும் மணியை ஒலித்து, காஞ்சிப் பண்ணைப் பாடி,
நெடிய அரண்மனை பிரகாரங்களில் முழுதும் நல்ல மணமுள்ள புகையை எழுப்பி,
காப்போம்., வாருங்கள்! அன்புடைய தோழிகளே! 
வேந்தனுக்கு உண்டாகிய துன்பத்தைத் தான் தாங்கிய,
பூ வேலைப்பாடு அமைந்த கழல் பூண்ட பெருந்தகைக்கு உண்டாகிய புண்களை - (காப்போம்., வாருங்கள்!)
					மேல்					
# 282 பாலை பாடிய பெருங்கடுங்கோ
மார்பை வேல் ஊடுருவிச் செல்ல, இப்பெரிய உலகில்
செய்தற்கரிய கடமைகளைச் செய்த, மிகுந்த செயல் புரியும் சான்றோனாகிய மறவனை
எவ்விடத்து உள்ளான் என்று கேட்கின்றீரெனில்
தன்னை நோக்கி வரும் மாற்றார் படையை எதிர்கொள்ளக் கிளர்ந்தெழும் மாலையணிந்த மார்பைத்
தம் அரிய கடமைகளை நிறைவேற்றும் வகையில் பகைவர்கள் தாக்கியதால்,
அம்பு, வேல் ஆகியவை தைத்து அவன் உடல் தெரியாமல் போய், உயிரும் நீங்கியது;
போரிடும் பகைவர் பின்வாங்கித் தம் எதிர்ப்பு குலைந்து வலிமை தொலைதலால்,
காக்கக்கூடிய தன்மை இழந்து, உருத்தெரியாமல் சிதைந்து பலவேறு துண்டுகளாகிய
அவனுடைய கேடயம் கிடப்பதைத் தவிர, அவன் போர்க்களத்தில் கிடந்து ஒழியாமல்
நெடுந்தொலைவுக்கு விளங்கும் நல்ல புகழை நிறுவி,
நாவால் நல்லுரைகளைக் கூறும் புலவர்களின் வாயிலிருந்து வரும் செய்யுளில் உள்ளான்.
					மேல்					
# 283 அடை நெடும் கல்வியார்
ஒளிபொருந்திய செங்குரலிக்கொடி நிறைந்த குளிர்ந்த நீர்நிலை கலங்க,
வாளைமீனை நீர்நாய் தனக்கு அன்றைய உணவாகப் பெற்று உண்டு,
உணவு இல்லாமல் அங்கே வாழும் பாம்புகளை வரால்மீன் எனக்கருதி மயங்கி
தன்னிடம் பகைகொள்ளும் முதலைகளோடு மாறிமாறிப் பகைகொண்டும் விலகியும் போகும்
அழும்பில் என்னும் ஊருக்குத் தலைவன், அடங்காதவனாக எதிர்நின்று போரிடுவான் என்று எண்ணி,
வெற்றியை விரும்பும் கோசருடைய அவைக்களத்திலும்
போர்க்களத்தின் நடுவிடமும் இல்லையாக ---------- தான் தோழன்பொருட்டு
ஆரக்கால்கள் சூழச் செருகப்பட்டுத் தோன்றும் குடம் போல, வேல் மார்பில் பாய்ந்து அழுத்தித் தங்க
தோழனின் உயிர் உடலிலிருந்து நீங்குவதற்கு ஊசலாடிக்கொண்டிருக்கும் அளவில், கோபங்கொண்டு
திண்ணையில் வைத்து விளையாடும் பாவையைத் திணிந்த மணலில் வைத்து விளையாடும்
மென்மையான தோள்களையுடைய மகளிர் மிகவும் பேணி வளர்க்கத்
துளிர்விட்டுத் தழைத்த நீண்ட பசிய இலைகளையுடைய
மணக்கும் தும்பைப் பூ மாலையை நெற்றியில் கட்டிக்கொண்டு போருக்குப் புறப்பட்டான்.
					மேல்					
# 284 ஓரம் போகியார்
“விரைந்து வருக, விரைந்து வருக” என்று
வேந்தன் அனுப்பிய சிறந்த தூதுவர் ஆங்காங்கு சென்று தெரிவிக்க,
நூலால் தொடுக்கப்பட்ட மாலையைச் சூடிக்கொண்டு, காலால் நடந்து
தனியனாய் வந்த மறக்குடி மறவன்,
கடுமையான போரில் பகைவரை மேலே செல்லாதவாறு தடுத்து முன்னே சென்று வெட்டி வீழ்த்தின
யானையின் பிணத்தின் தந்தங்களை தன் வாளின் வளைவை நிமிர்த்தும் அமைப்பாகக் கொண்டு
வளைந்து கோணிய வாளை நிமிர்த்திக்கொண்டு
தன்னைக்கண்டு பயந்தோடிய பகைவனை, அவன் திருப்பிக்காட்டிய முதுகைக் கண்டு சிரிப்பான்.
					மேல்					
# 285 அரிசில் கிழார்
பாசறையில் உள்ளவர்களே! பாசறையில் உள்ளவர்களே!
துடியனின் கையில் இருக்கிறது வேல்; அடியில் இணைக்கப்பட்ட
வளைந்த கரிய தண்டோடு, இனிய இசையை எழுப்பும் நரம்புகளுடன் கூடிய சிறிய யாழையுடைய
பாணனின் கையில் இருக்கிறது கேடயம்; கண்ணுக்கு இனியதாக
மிகவும் நெருக்கமாக அடுக்கிய மூட்டைகள் போல --------------------------------------
வாடிய மாலையைத் தலையில் அணிந்த தலைவன்,
வேந்தனுக்கு வேண்டிய செயல்களைச் செய்யும் அரிய அமைச்சர் போன்ற தலைமைவாய்ந்த சுற்றத்தாரோடு
நெடிய அரண்மனைக்கு வந்தானாக, பகைவர்கள் எய்த அம்புகள் மொய்த்த
வலிய வெள்ளிய தோள் ..........................................
நிலத்தைச் சேறாக்கும் குருதியைத் தலைவன் சொரிந்து, ஐயோ!
பகைவர்கள் சினத்துடன் எறிந்த நெடிய வேல் அவன் மார்பை ஊடுருவிப் புதைந்து நிற்க,
மாமிசம் படிந்த கழலுடன் நிலத்தில் வீழ்ந்தான்.
அவன் வீழ்ந்ததைக் கண்டு, அங்கிருந்த சான்றோரெல்லாம் புகழ, நாணித் தலைகுனிந்து
வணங்கினான், குருசிலாகிய அவன்; கதிர்கள் தம்முள் பின்னிக்கொண்டு
அசையும் கழனிகளையுடைய மருதநிலத்து ஊர்களைத் தவிர (முன்னே இரவலர்க்குக் கொடுத்துவிட்டதால்)
வறுமையுற்ற இரவலராகிய சுற்றத்தின் தலைவனுக்கு (எஞ்சிநின்ற) ஒரு
சாகுபடி செய்யக்கூடிய கரம்பை மண்ணுள்ள நிலமுள்ள சிறிய ஊரைப் பரிசாகக் கொடுத்தான்.” என்று - 
					மேல்					
# 286 ஔவையார்
வெண்மையான நிறத்தையுடைய வெள்ளாட்டுக் கிடாய்கள் போலத்
தன்னைப் போன்ற இளைஞர்கள் பலர் இருக்கவும்,
அந்தப் பலருக்கும் மேலாக என் மகனுக்கு நீட்டித் தரப்பட்ட மண்டையிலுள்ள கள், என் மகனைக்
கால் இல்லாத கட்டிலாகிய பாடையில் கிடத்தி
தூய வெண்ணிறப் போர்வையால் இன்னும் போர்க்கவில்லையே.
					மேல்					
# 287 சாத்தந்தையார்
துடிப் பறையை அடிக்கும் புலையனே!
குறுந்தடியால் பறையடிக்கும் பறையோனே!
கார்காலத்து மழைபோல் அம்புகள் உடம்பில் தைத்தாலும்,
வயல்களில் பிறழும் கெண்டை மீன்கள் போல வேற்படை வந்து பாய்ந்தாலும்,
பொன்னாலான நெற்றிப்பட்டம் அணிந்த தலைமை பொருந்திய யானைகள்
விளங்குகின்ற, வெண்மையான தந்தங்களின் நுனியை அமிழ்த்துக் குத்தினாலும்,
அஞ்சிப் புறமுதுகுகாட்டி ஓடாத பெருமைபொருந்திய வீரர்கள்
ஆழமான நீருடைய பொய்கையிலிருந்து கிளர்ந்தெழுந்த வாளைமீன்
நெல்வளமிக்க நீண்ட வீட்டின் புறத்தே நிறுத்தப்பட்ட நெற்கூட்டின் அடிப்பக்கத்தில் புரளும்
மருதநிலத்து ஊர்களைப் பெறுவதால் என்ன பயன்? வீரர்கள் போரில் இறந்தால்,
அவர்கள் குற்றமற்ற மகளிரை மணந்து மிகவும் இன்பத்தை
மேலுலகத்தில் அனுபவிப்பார்கள். அதனால்,
குறும்பு செய்யும் பகைவேந்தனுடைய படையின்
வரவை இங்கே இருந்து காண்பீராக.
					மேல்					
# 288 கழாத்தலையார்
மண்ணைக் குத்தியதால் வரிவரியாகக் கோடுகள் உள்ள கூரிய கொம்பினையுடைய
தலைமை பொருந்திய நல்ல காளைகள் இரண்டைப் போரிடச் செய்து,
வெற்றிபெற்ற காளையின் தோலை உரித்து, மயிர் சீவாத அத்தோலால் போர்த்தப்பட்ட,
இறுக்கமாகக் கட்டப்பட்ட முரசு போர்க்களத்தின் நடுவே ஒலிக்க,
தடுத்தற்கரிய போர் நடந்த அப்போர்க்களத்தில் சினம் தோன்ற,
பகைவர் எறிந்த நெடிய வேல் வந்து பாய்ந்ததால் நாணமடைந்த நெஞ்சத்துடன்
அரிய செயலைச் செய்து மடிந்து வீழ்ந்தான்,
குருதியோடு ஏறியிறங்கும் அவனது மார்பைத்
தழுவவந்த அவன் மனைவியைத் தழுவவிடாமல் பருந்துகள் அவன் உடலை மொய்த்தன.
					மேல்					
# 289 கழாத்தலையாரி
ஈரமுள்ள பருவம் மாறுவதற்குமுன் உழுவதற்கு உதவிசெய்தன என்றாலும்,
தனக்குள்ள பல எருதுகளிலும் நல்ல எருதுகளைத் தேர்வுசெய்யும்பொருட்டு
அவற்றை வெவ்வேறாக ஆராய்ந்து தேர்ந்தெடுக்கும் உழவனைனைப் போல,
பெருமைபெற்ற பழமையான குடியில் பிறந்த, வழிவழியாக வரும் நற்பண்புகளைக் காத்துவரும்
முதுகுடி மறவர்களுக்குள் தன்மேல் கொண்டிருக்கும் அன்பால்
தனக்காக முகந்து எடுத்துத் தந்த பசும்பொன்னாலான மண்டையிலுள்ள கள்ளை
“இவனுக்கு ஈக” என்று அரசன் அன்போடு கொடுத்துச் சிறப்பிப்பதைக் கண்டு வியப்பதை விடு;
கேட்பாயாக வாழ்க, பாணனே! பாசறையில்
இன்று போர்க்குரிய பூக்கள் வழங்கப்படுகின்றன என்று தெரிவிக்கும்
தோலை மடித்துப் போர்த்த வாயையுடைய தண்ணுமைப் பறையை இழிசினன் முழக்கும் ஓசையை -

# 290 ஔவையார்
”அரசே, முதலில் கள்ளை இவனுக்கு அளித்துப் பின்னர் நீ உண்பாயாக; சினத்துடன் செய்யும் போரையும்,
கூட்டமான யானைகளையும், நன்கு செய்யப்பட்ட தேர்களையும் உடைய தலைவனே!
உன் தந்தையின் தந்தைக்கு இவன் தந்தையின் தந்தை
போரினில் பகைவர்கள் எறிந்த வேல்களைக் கண்ணிமைக்காமல், தச்சனால்
ஆரக்கால்கள் செருகப்பட்ட வண்டியின் குடத்தைப் போல, தான் ஏற்று நின்று மாய்ந்தான்;
வீரத்துடன் போர்செய்து புகழ்பெற்ற வலிமையுடைய இவனும்,
மழை பெய்யும்பொழுது நம்மை அதனின்று காக்கும் பனையோலையால் செய்யப்பட்ட குடை போல
உன்னை நோக்கி வரும் வேல்களைத் தான் ஏற்றுத் தாங்குவான்.”
					மேல்					
 




# 291 நெடுங்கழுத்து பரணர்
சிறுவர்களே! துடி அடிப்பவர்களே! பாடும் வல்லமைபெற்ற மக்களாகிய பாணர்களே!
தூய வெள்ளாடை உடுத்திய கரிய நிறமுடைய என் கணவனை நெருங்கியுள்ள
பெரிய பறவைக் கூட்டத்தின் ஆரவாரத்தை நீக்குவீர்களாக; நானும்
விளரிப் பண்ணைப் பாடிச் சுற்றிவந்து, வெள்ளை நிறமுள்ள நரிகள் நெருங்கவிடாமல் ஓட்டுவேன்;
என்னைப்போலவே வேந்தனும் பெரிதும் வருந்தி நடுங்கட்டும்;
எந்தப் பயனுமின்றி வேந்தனுக்காகச் சாக விரும்பும் என் தலைவனுக்கு, அவ்வேந்தன் தன் மார்பில் இருந்த
பல வடங்களோடு கூடிய பல மணிகள் கலந்த மாலையை அணிவித்து, என் கணவன் அணிந்திருந்த
ஒற்றைவட மாலையைத் தான் அணிந்துகொண்டான்.
					மேல்					
# 292 விரிச்சியூர் நன்னாகனார்
”அரசனுக்குக் கொடுப்பதற்காக முகந்து எடுத்த இனிய குளிர்ந்த (விலையுயர்ந்த) மதுவை,
நாங்கள் அவனுக்குத் தகுதியான முறைப்படி தரம் குறைந்த கள்ளைக் கலந்து கொடுக்க, அதை மறுத்துத்
தன் குறிதவறாத வாளைக் கையில் எடுத்துக்கொண்டு எழுந்து நின்றான்” என்று
அவன் மீது சினம் கொள்ளாதீர்கள், ஆண்மையில் அவனைவிடக் குறைந்தவர்களே!
இங்கே எவ்வாறு வீரத்தோடு அவன் வாளைப் பற்றினானோ அதுபோல, போரிட வேண்டுமானால்
”எனக்குரிய முறை வரட்டும்.” என்று சொல்லாமல், விரைந்து
முன்னே எழுகின்ற பெரிய படையைத் தடுத்து விலக்கி
அங்கேயும் முதலில் நிற்கும் ஆண்மை உடையவன் அவன்.
					மேல்					
# 293 நொச்சி நியமங்கிழார்
குத்துக்கோலுக்கும் அடங்காத யானையின் மேலே இருப்பவன்
அரணுக்கு வெளியில் போரிடும் பகைவரை எதிர்த்துப் போரிட வருமாறு அறையும் அழைப்புகான தண்ணுமை,
போருக்கு அஞ்சி நாணி இருக்கும் ஆண்களுக்காக ஒலிக்கும்; ஆதலால்
எங்களைக்காட்டிலும் தன்னுடைய மிகுந்த பொலிவு வாடிப்போக, இது போரிடலால் நேர்ந்தது என்று
பூவை விற்பதற்குப் போருக்குப் போகாதவர்கள் இருக்கும் வீடுகளுக்குப் போவாள் போலும்;
இரங்கத் தக்கவள், இந்தப் பூ விற்கும் பெண். (போருக்குச் சென்றவர்களின் வீட்டுப் பெண்கள் பூ அணிவதில்லை)
					மேல்					
# 294 பெருந்தலை சாத்தனார்
வெண்மையான குடைபோலத் திகழும் திங்கள் வானத்தின் மேலிருந்து ஒளி வீசிக் கொண்டிருக்க,
வீரர்கள் ஒன்றாகத் தங்கியிருக்கும் கடல் போன்ற பாசறையிலிருந்து சென்று
புதிதாகச் செய்யப்பட்ட படைக்கருவிகளைக் கைக்கொண்ட கொலைத் தொழிலைச் செய்யும் வீரர்கள்
எதிர்ப்போர் நம்மவர் என்றும் பிறர் என்றும் வேறுபாடு பாராமல் கைகலந்து போர் செய்யும் போர்க்களத்தில்,
“உங்கள் அரசனின் பெருமையையும் உங்கள் புகழையும் தோன்றச்செய்து, உங்களுக்குள்
யாருக்கெல்லாம் வாழ்நாள் முடியப் போகிறதோ அவர்கள் என்னோடு போரிட வாருங்கள்.” என்று கூறி,
போரிட வந்தவர்களையெல்லாம் வென்று, ஒரு பக்கமாக நிற்க, 
பாம்பு உமிழ்ந்த மணியை எடுக்க எவரும் நெருங்காததைப் போல, எவரும் நெருங்கவில்லை.
வரிசையாக மாலையணிந்த மார்பையுடைய உன் கணவனை.
					மேல்					
# 295 ஔவையார்
கடல் எழுந்தாற் போல் அமைந்துள்ள பெரிய பாசறையோடு கூடிய போர்க்களத்தின் நடுவில்,
தீயால் சூடாக்கிக் கூர்மையாகத் தீட்டிய வேலைப் பகைவர் மீது திருப்பி,
தன் படையை முன்னால் செலுத்தித் தானும் எழுந்து சென்று, அம்பும் வேலும் பாய்ச்சிப் போரிடும் போரில்
எதிர்த்து வரும் பகைவர் படையைப் பிளந்து, தான் போர் செய்வதற்கு இடமுண்டாகுமாறு குறுக்கிட்டுத் தடுத்து,
படைகளின் நடுவில் இருக்கும் போர்க்களத்தில், துண்டுபட்டு வேறு வேறாகக் கிடந்த,
சிறப்பிற்குரிய தன் மகனின் மற மாண்பைக் கண்டு, அன்பு மிகுந்து,
வற்றிய முலைகள் மீண்டும் பாலூறிச் சுரந்தன,
புறமுதுகு காட்டி ஓடாத கொள்கையையுடைய அந்த இளைஞனின் தாய்க்கு - 
					மேல்					
# 296 வெள்ளை மாளர்
வேப்ப மரத்தின் கிளைகளை ஒடிக்கவும், காஞ்சிப் பண் பாடவும்,
நெய்யுடைய கையோடு வெண்சிறுகடுகைப் புகைக்கவும் என்று
எல்லா வீடுகளும் ஆரவாரமாக இருக்கின்றன;
பகை வேந்தனைச் சினந்து அவனை வீழ்த்தாமல் மீளேன் என்று இவன் போர் புரிகிறான் போலும்;
அதனால்தான் நெடுந்தகையாகிய இவனின் தேர் காலம் தாழ்த்தி வந்தது.
					மேல்					
# 297
மிகுந்த நீரில் இருக்க விரும்பும் மெதுவான நடையையுடைய எருமையின்
பெரிய கொம்பு போன்ற நெடிய முற்றிய நெற்றுக்களையுடைய
பச்சைப் பயறு நீக்கப்பட்ட தோட்டைத் திரட்சியான படுக்கையாகக் கொண்டு
கன்றுடன் கூடிய காட்டுப்பசு உறங்கும் சிறிய ஊர்களைக்
கொடையாகக் கொள்வதை விரும்பமாட்டோம்; நாரால் வடிக்கப்பட்டு
பூக்களையிட்டு முதிரவைத்த சாடியிலுள்ள கள்ளை வாழ்த்தி,
நீரின் பக்கத்தே பொருந்தி காட்டுக்கோழிகள் முட்டையிடும்
மருதநிலத்தூர்களைப் பெறுவதும் உரியதாகும், கூர்மையான நுனியையுடைய
நீண்ட வேல் தைத்த மார்புடன்
மடல் நிறைந்த வலிய பனைமரம்போல் நிற்கும் வீரர்க்கு.
					மேல்					
# 298
முன்பெல்லாம், எங்களுக்குக் களிப்பை மிகுதியாகத் தரும் தரம் குறைந்த கலங்கிய கள்ளைக் கொடுப்பான்; தான்
களிப்பைக் குறைவாக அளிக்கும் தரம் மிகுந்த தெளிந்த கள்ளை உண்பான்; மிகவும்
அன்பில்லாதவனாகிவிட்டான் எம் அரசன் இப்பொழுது;
பகைவருடைய கைப்பற்றுவதற்கு அரிய அரணைச் சூழ்ந்து போரிடும் நேரத்தில்,
வாயை மடித்துச் சீழ்க்கையடித்து ஒலியெழுப்பி “நீ முந்து” என்று எங்களை ஏவுவதில்லை. 
					மேல்					
# 299 பொன் முடியார்
பருத்தியை வேலியாகக் கொண்ட சிறிய ஊரின் மன்னனுடைய,
உழுந்தின் சக்கையைத் தின்று வளர்ந்த தளர்ந்த நடையையுடைய குதிரைகள்
கடல்நீரைப் பிளந்துகொண்டு விரையும் தோணியைப் போலப் பகைவரின் படையைப் பிளந்துகொண்டு செல்ல,
நெய்யூற்றி மிதித்துச் செய்த உணவை உண்ட, ஒழுங்காகக் கத்திரிக்கப்பட்ட பிடரியையுடைய,
மருதநிலத்தூர்களையுடைய பெருவேந்தனின் மாலைகள் அணிந்த குதிரைகள்
தெய்வத்தன்மை வாய்ந்த முருகன் கோட்டத்தில்,
கலன்களைத் தொடாத விலக்குடைய மகளிரைப் போல அஞ்சிப் பின்னிட்டு நின்றன.
					மேல்					
# 300 அரிசில் கிழார்
“கேடயம் தா; கேடயம் தா” என்று கேட்கிறாயே! கேடயம் மட்டுமல்லாமல்
பெரும்பாறையின் பின்னால் மறைந்துகொண்டாலும் நீ தப்ப மாட்டாய்;
நேற்று, பகற்பொழுதில் நீ கொன்றவனின் தம்பி,
அகலில் இட்ட குன்றிமணி போல் சுழலும் கண்களையுடையவனாய்
பெரிய ஊரில், காய்ச்சிய கள்ளைப் பெறுவதற்கு,
வீட்டில் புகுந்து, கள்ளை முகக்கும் கலயத்தைத் தேடுவதுபோல் உன்னைத் தேடுகிறான்.”
					மேல்
 



# 301 ஆவூர் மூலங்கிழார்
பல சான்றோர்களே! பல சான்றோர்களே!
மணமாகாத பெண்ணின் கூந்தல் பிற ஆடவரால் தீண்டப்படாதவாறு போல,
போர் கருதி எழுப்பப்பட்ட கடத்தற்கரிய முள்வேலி சூழ்ந்த
ஆரவாரம் மிகுந்த பாசறையில் உள்ள பல சான்றோர்களே!
முரசு முழங்கும் படையையுடைய உங்கள் அரசனையும் காத்துக்கொள்ளுங்கள்;
ஒளிர்கின்ற உயர்ந்த கொம்புகளையுடைய உங்கள் யானைகளையும் நன்கு பாதுகாத்துக்கொள்ளுங்கள்;
எத்தனை நாட்கள் உங்கள் போர் இங்கே நடைபெறுமோ அத்தனை நாட்களும்
தன்மேல் படையெறிந்து போரிடாதவருடன் போரிடுவது எங்கே உண்டு? தன்மேல் படையெறிந்தோரையும்
தகுதியில்லாதவராக இருந்தால் எங்கள் அரசன் எதிர்சென்று போர்செய்ய மாட்டான்; அதனால்,
அவன் கருதியதை அறிந்தவர் உங்களுள் யார்?
உங்கள் படையில் பலர் இருப்பதாக எண்ணிச் செருக்குடன் இகழ்வதைத் தவிர்க; இதோ பாருங்கள்!
நிலத்தை அடியிட்டு அளப்பதைப்போல மிகக் குறுகிய வழியிலும் நில்லாது
மிக விரைவாக ஒடும் குதிரையின் பண்புகளைப் பாராட்டி,
இரவுப்பொழுது வந்ததால், தன் பாசறைக்குச் சென்றிருக்கிறான்; மிகுந்த ஆரவாரத்துடன்
உங்கள் வேந்தன் ஏறிவரும் யானையைத் தாக்குவதற்கு அல்லாமல்
தன்னுடைய ஒளிவிடும் இலைவடிவில் அமைந்த வேலை எங்கள் அரசன் தன் கையில் எடுக்க மாட்டான்.
					மேல்
# 302 வெறிபாடிய காம கண்ணியார்-காம கணியார் எனவும் பாடம்
வளைத்த மூங்கில் விடுபட்டதும் கிளர்ந்து எழுவது போல ஓடி
தாவித் துள்ளித் திரிந்தன குதிரைகள்; பூக்களும்
ஒளிரும் அணிகலன்களை அணிந்த மகளிரின் கூந்தலில் இடங்கொண்டன;
நரந்தம் பூவால் பலவடங்களாகத் தொடுக்கப்பட்ட மாலை சுற்றப்பட்ட,
மென்மையாக அமைந்த தாளத்திற்கேற்ப வளைந்த, தண்டையுடைய சிறிய யாழினுடைய
கைவிரலால் இசைக்கும் நரம்புகளை மீட்டி இசையெழுப்பும் பாணர்களுக்குக் கொடுக்கப்பட்டன -
குறுகிய வழிகளையுடைய, சாகுபடி செய்யக் கூடிய நிலங்கள் உள்ள சிற்றூர்கள்;
தன்னைப் பகைத்துப் பார்க்கும் பகைவரைக் கொல்லும் காளை போன்ற வீரன் ஒருவன் ஊக்கத்தோடு
தன் வேலால் கொன்ற களிறுகளை ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்தால்,
வானத்தில் ஊர்ந்து செல்லும் ஆகாயத்து மீன்களும்
குளிர்ந்த மழைத்துளிகளும் அவற்றுக்கு உறைபோடக்கூடக் காணாது.
					மேல்
# 303 எருமை வெளியனார்
நிலம் பின்னோக்கிப் போவது போலக் குளம்பை ஊன்றிக்
காண்போரின் நெஞ்சைக் கலங்கடிக்கும் வகையில் சுழன்று வரும் குதிரை மேல் வரும்,
தன்னை இகழும் பகைவரைக் கொல்லும் காளை போன்றவன், தனது கூரிய,
கொடிய வலிமை பெற்ற வேலால் எதிர்த்தவர்களின் மார்பைக் குத்திப் புண் செய்யுமாறு
ஆட்டிக்கொண்டு காண வருகின்றான்; நேற்று,
புகழ் மிக்க சிறப்பினையுடைய வேந்தர்களின் கண்முன்னே,
கரையை மோதும் கடலைப் பிளந்து செல்லும் படகைப் போல் பகைவர் படையைப் பிளந்து, அவர்களுடைய
பெரிய தலையையுடைய இளம் பெண்யனைகள் தனிமையுற்று வருந்துமாறு,
ஒளிரும் கொம்புகளையுடைய களிறுகளை கொன்ற என்னை - (காண வருகின்றான்)
					மேல்
# 304 அரிசில்கிழார்
வளைந்த காதணிகளை அணிந்த மகளிர் மாலை சூட்ட,
நடுங்கவைக்கும் குளிரைப் போக்குவதற்காக நாரால் வடிகட்டப்பட்ட மதுவைக் குடித்து,
காற்றின் விரைவையும் கடந்து செல்லும் மிகுந்த ஓட்டத்தையுடைய குதிரைகளைப்
போருக்குத் தகுந்தவையாக ஆயத்தம் செய்வதற்கு நீ விரைந்கொண்டிருக்கிறாய்; ”நேற்று,
என் அண்ணனைக் கொன்றவனோடும் அவன் தம்பியோடும் ஒருசேர
நாளை போர்புரிவேன்” என்று கூறி
சிறிதளவும் வயிற்றுக்கு உணவு எடுத்துக்கொள்ளாமல், பல குதிரைகளைப்
பெரிதும் ஆராய்கின்றாய் என்று கூறுகிறார்கள், அதைக் கேள்விப்பட்டு,
வெற்றியை உண்டாக்கும் முரசையும் வெல்லும் போரையும் உடைய பகைவேந்தனின்
விளங்கும் பெரிய பாசறையில் உள்ளவர்கள் நடுங்குகின்றார்கள்,
உன் சொல்லும் செயலும் வேறு வேறல்ல என்பதை எண்ணி 
					மேல்
# 305 மதுரை வேளாசான்
பசலைக் கொடி போல வாடி மெலிந்த இடையையும்
வருத்தத்தால் ஊர்ந்து செல்வது போன்ற நடையையும் உடை ய இளம் பார்ப்பனன் ஒருவன்,
இரவில் வந்து, நில்லாமல் உள்ளே சென்று
சொல்லிய சொற்களோ சிலவே. அதன் விளைவாக,
மதில்மேல் சாத்திய ஏணியையும், கதவுக்கு வலிமை சேர்ப்பதற்காக வைத்திருந்த சீப்பையும் நீக்கி,
சிறப்பாகப் போர்புரியும் யானைகள் அணிந்திருந்த மணிகளையும் களைந்துவிட்டனர்..
					மேல்
# 306 அள்ளூர் நன் முல்லையார்
முள்ளையுடைய கழற்கொடிகளாலாகிய வேலி சூழ்ந்த, யானைகள் புகுந்து உழக்குதலால் கலங்கிச் சேறாகி, 
உண்ணும் நீர் சிறிதளவே உள்ள நீர்த்துறையையும், அழகிய சிறுகுடிகளையுமுடைய சிற்றூரில் வாழும்,
தழைத்த மெல்லிய கூந்தலையும் ஒளி பொருந்திய நெற்றியையும் உடைய பெண் ஒருத்தி,
நாளும் தவறாமல் தன் முன்னோர்களின் நடுகல்லைத் தொழுது வழிபட்டாள்,
”விருந்தினரை எதிர்கொள்ளப்பெறுவேனாக நான், என் கணவனும்
------------ ------------------ வேந்தனோடு
பிற நாடுகளை வென்று பொருள் பெற உதவும் சிறந்த பகையை அடைவானாகுக” என்று -
					மேல்
# 307
எமக்குப் பற்றாகிய எம் தலைவன் எங்கு இருக்கிறானோ?
மலை போன்ற யானையைக் கொன்று அதனோடு அவனும் இறந்தான்;
அவன் அயலான் போலத் தோன்றுகிறான் அங்கே அவனைப் பார்! 
வேனிற் காலத்தில் வரிகளையுடைய அணிலின் வாலைப் போல்,
காட்டு ஊகம் புல்லிலிருந்து உதிர்ந்த பழைய பூக்கள்
வரிவரியாகப் பெரிய தலைமயிரில் உள்ள சுருள்களில் தங்குவதால்,
நீரும் புல்லும் கொடாமல், உப்பு வணிகர்கள் 
யாருமில்லாத ஓரிடத்தில், முடமாகியதால் கைவிட்டுப்போன
வாழும் திறனற்ற பெரிய எருது தன்னருகே உள்ளதை எல்லாம் தின்று முடிப்பதைப்போல், பகைவர்களின்
உயிர்களை எல்லாம் கவர்வான்; அதைக் கண்டு
மிகுந்த சினம் கொண்ட யானையையுடைய வேந்தனும், இக்களத்தில்
இறப்பதைவிடச் சிறந்த செயல் வேறு யாதும் இல்லை என்று கருதியும்,
புலவர் பாடும் பாடலை வேறுவகையால் பெறுவதற்குரிய அருமையை நினைத்தும்,
தன் உயிர் மேல் ஆசையின்றி வீழ்ந்து பெருமையுடையவன் ஆயினான்.
					மேல்
# 308 கோவூர் கிழார்
பொன்னை உருக்கி வார்த்ததைப் போன்ற முறுக்கு அடங்கிய நரம்புகளையும்,
மின்னல் போன்ற தோல் போர்வையையும், வண்டிசை போன்ற இசையையும் உடைய சிறிய யாழை இசைக்கும்
புலமை நிறைந்த, கேட்பவர்களின் நெஞ்சில் விருப்பத்தை எழுப்பும் பாணனே!
சிற்றூர் மன்னனின் சிறிய இலைகளையுடைய வேல்,
பெருவேந்தன் ஊர்ந்துவந்த யானையின் உயர்ந்த நெற்றியில் பாய்ந்து தங்கியது;
பெருவேந்தன் சினத்துடன் எறிந்த வேல் என் கணவனுடைய
சந்தனம் பூசிய மார்பில் தைத்து ஊடுருவிச் சென்றது;
மார்பில் ஊடுருவிய ஒளி விளங்கும் வேலைப் பிடுங்கிக் கையில் ஏந்தி, மிக்க வலிமையுடைய நம் தலைவன்
ஓங்கி எறிந்தபோது. பகைவேந்தனின்
சிறிய தலையையுடைய இளம் பெண்யானைகள் நாணுமாறு
களிறுகளெல்லாம் புறங்கொடுத்து ஓடின.
					மேல்
# 309 மதுரை இளங்கண்ணி கௌசிகனார்
இரும்பாலாகிய வேல், வாள் முதலிய படைக்கருவிகளின் நுனி மழுங்குமாறு கொன்று, பகைவரைப்
போரில் வெல்லுதல் மற்ற எல்லா வீரர்களுக்கும் எளிதாகும்;
நல்லபாம்பு வாழும் புற்றுப் போலவும்,
கண்டாரைக் கொல்லும் காளை திரியும் பொதுவிடம் போலவும்,
வெல்லுதற்கு அரிய வலிமையுடைய பகைவர், இவன் பாசறையில்
உள்ளான் எனக் கேட்டு நெஞ்சம் நடுங்கும்படியான சிறந்த புகழ்,
வெற்றி மிக்க நெடிய வேலினையுடைய நம் தலைவனிடம் மட்டுமே உள்ளது.
					மேல்
# 310 பொன்முடியார்
இளையோனாக இருந்தபொழுது, பாலை ஊட்டினாலும் உண்ணமாட்டானாதலின்
சினம் கொள்ளாமல் சினம் கொண்டதுபோல் நடித்து ஓங்கிய சிறுகோலுக்கு அஞ்சியவனோடு
கவலைகொண்டு வருந்தும் மனமே! இப்பொழுது,
புள்ளிகள் பொருந்திய நெற்றியையுடைய யானைகளைக் கொன்றும் அவ்வளவில் நில்லாதவனாக,
இவன் முன்னாள் போரில் இறந்த வீரனின் மகன் என்பதற்கேற்ப,
மார்பில் புண்படுத்தி நிற்கும் அம்பைச் சுட்டிக்காட்டியபொழுது,‘அதை நான் அறியேன்’ என்று கூறினான்,
குதிரையின் பிடரிமயிர் போன்ற குடுமியுடன்,
கேடயத்தின்மேல் விழுந்து கிடக்கும் குறுந்தாடிக்காரன்.
					மேல்
 




# 311 ஔவையார்
களர்நிலத்தில் உள்ள கிணற்றைத் தோண்டி, நாள்தோறும்
வண்ணாத்தி துவைத்து வெளுத்த தூய ஆடை
அழுக்குப் படிய, சாணப்பொடி பரவிக்கிடக்கும் தெருவில் அமர்ந்திருந்து,
பலரின் குறைகளை விசாரித்துத் தீர்த்துவைத்த மலர்மாலை அணிந்த தலைவனுக்கு
ஒருவரும் இல்லாமற்போய்விட்டார்களே! போர்க்களத்தில் 
சிறப்பு மிகுந்த சிவந்த கண்களில் புகையெழ நோக்கி, ஒரு
கேடகத்தைக் கொண்டு அவனை மறைத்து நிற்கும் பெருந்தன்மையுடையவன் - (ஒருவரும் இல்லை மாதோ)
					மேல்
# 312 பொன்முடியார்
மகனைப் பெற்று வளர்த்துப் பாதுகாத்தல் என் தலையாய கடமை;
அவனை நற்பண்புகள் நிறையப் பெற்றவனாக்குதல் அவன் தந்தையின் கடமை;
அவனுக்குத் தேவையான வேலை உருவாக்கிக் கொடுத்தல் கொல்லரின் கடமை;
அவனுக்கு நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது அரசனின் கடமை;
ஓளியுடன் விளங்கும் வாளைக் கையில் ஏந்தித் தடுத்தற்கரிய போரைச் செய்து,
பகைவரின் யானைகளைக் கொன்று வெற்றியுடன் திரும்புவது அந்த இளங்காளையின் கடமை.
					மேல்
# 313 மாங்குடி மருதனார்
பல வழிகள் நிறைந்துள்ள நாட்டையுடைய பெரிய வலிமை மிக்க தலைவன்.
கையில் பொருள் யாதொன்றும் உடையவன் இல்லையெனினும், பொருளை விரும்பி
அவனைக் காணச் சென்ற இரவலர்,
யானைகளுடன் நெடிய தேர்களையும் விரும்பிக் கேட்டாலும் தருகின்ற கடமையையுடையவன்,
உப்பை வண்டிகளில் சுமந்து செல்லும் உப்பு வணிகர்களின் காட்டினில் இருக்கும்
கழிநீர் வந்து மோதும் குன்று போல் குவிந்திருக்கும் உப்பினைப் போன்றதாய் (அள்ள அள்ள உற்பத்தியாகும்)
இகழ்ச்சிக்கு உரியது அன்று அவன் உள்ளத்தில் எழும் எண்ணம்.
					மேல்
# 314 ஐயூர் முடவனார்
இல்லத்திற்கு விளக்குப் போல் விளங்கும் ஒளி பொருந்திய நெற்றியையுடைய பெண்ணின் கணவன்;
போரில் தன் படைக்கு எல்லையாக நின்று காக்கும் வெற்றி பொருந்திய வேலையுடைய நெடுந்தகை;
நடுகற்கள் விளங்கும் சருகுகள் நிறைந்த பாழிடங்களையும்,
சிறிய கொட்டைகளையுடைய நெல்லி மரங்களையும் உடைய சிறிய ஊரில் வாழும்
குடிமக்களில் அவனும் ஒருவன்; தானே கொடியை உயர்த்திக்
கட்டுக்கடங்காது வரும் பகைப்படையை
அணைபோலத் தடுத்து நிறுத்துபவனும் அவனே - தனது அரசனுக்குத் துன்பம் வந்தால்,
					மேல்
# 315 ஔவையார்
மிகுதியாக உணவு உடையவனாயின் பரிசிலர்க்குக் கொடுத்து எஞ்சியதை உண்ணுபவன்;
தான் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறவர்களுக்குக் கொடுப்பதைவிட இரவலர்க்கு அதிகமாகக் கொடுப்பான்;
அறிவில்லாதவர் மகிழக்கூடிய துணையாக இருப்பான்; நெடுமான் அஞ்சி
வீட்டுத் தாழ்வாரத்தில் செருகப்பட்ட தீக்கடை கோல் போல்
தன் ஆற்றல் வெளியே தோன்றாமல் ஒடுங்கி இருப்பதிலும் வல்லவன்; மேலும் அதனைக்
கடையும்போது வெளிப்படும் சுடர்த் தீயைப் போல
வெளிப்படத் தோன்றுவதிலும் வல்லவன், தன் ஆற்றல் தோன்ற வேண்டுமிடத்தில்.
					மேல்
# 316 மதுரை கள்ளி கடையத்தன் வெண்ணாகனார்
தான் உண்ட கள்ளினை வாழ்த்தியவாறு,
செத்தைகள் நிறைந்த, பெருக்கித் தூய்மை செய்யப்படாத முற்றத்தில்
விடியற்காலத்துக் களிப்பினால் ஏற்பட்ட மயக்கத்தால் உறங்குகின்றானே
அவன் எம் தலைவன்; நாங்கள் அவனுடைய பாணர்கள்;
நேற்று, தன்னிடம் வந்த விருந்தினரைப் பேணுவதற்குத் தன்
பெரிய, பக்கத்தில் செருகியிருக்கும் பழமையான வாளை ஈடு வைத்தான். இன்று இந்தக்
கரிய தண்டையுடைய சிறிய யாழ் பணையம் ஆகும். இதனைவைத்துக்
கொடுப்பதற்கு அவன் ஒன்றும் இல்லாதவன் என்று எண்ணாமல், நீயும்
கொடிபோன்ற இடையையுடைய உன் பாடினி ஒளிவிடும் அணிகலன்களை அணிய,
கள்ளையுடைய கலங்களையுடைய நாங்கள் மகிழ்ச்சிகொள்ள,.
அவனிடம் சென்று விருந்து உண்டு, வாய் சிவந்து பின்பு வருக - 
சிறிய கண்களையுடைய யானையையுடைய பகைவேந்தன் போரில் விழுந்து இறந்ததினால்.
					மேல்
# 317 வேம்பற்றூர் குமரனார்
வெற்றி பயக்கும் வேல் ------------------------------வந்து,
முற்றத்தில் மிகுந்த களிப்புடன் கிடக்கும் இவனுக்கு,
படுப்பதற்குத் தோல் இருந்தாலும், பாய் இருந்தாலும்
அல்லது வேறு எது இருந்தாலும் விரைந்து கொடுப்பீர்களாக;
எமக்குப் பொருள்மேல் சென்ற விருப்பம் மீள ...................
............................... எங்களுக்கும், மற்றவர்களுக்கும்,
யாவருக்கும் கொடுத்துவிட்டு, (தனக்கு விரிக்கக்கூட இல்லாமல், வெறுந்தரையில்) துயிலை மேற்கொள்கிறான்.
					மேல்
# 318 பெருங்குன்றூர் கிழார்
பறித்த கீரை சமைக்கப் படாமல் வாடி வதங்க, கொண்டு வந்த விறகு உலர்ந்து கெட, (அரிசி இன்றி)
மயில் போன்ற சாயலும், கரிய நிறமும் உடைய அவன் மனைவியோடு
பசியால் வாடும் இப்பெருந்தகையின் ஊர் முழுதும்;
வீடுகளின் இறைப்பில் வாழும் பெண்குருவியின் துணையாகிய கரிய கழுத்தையுடைய ஆண்குருவி,
பாணர்களுடைய யாழ் நரம்பின் கோதுகளுடன், வலிமைமிக்க சிங்கத்தின்
கதிர் போல் விரிந்த பீலி போன்ற பிடரி மயிரும் சேர்த்துச் செய்த கூட்டில்,
பெரிய வயலில் விளைந்த நெல்லின் அரிசியைக் கொண்டுவந்து தின்று தன்
சிறிய முதுகுடைய பெட்டையோடு வாழும்
புதுவருவாய் உள்ளதாக இருக்கும் (இந்த ஊர்), வேந்தனுக்குத் துன்பம் வந்தால் -(அரிசி இன்றிப் பசியால் வாடும்)
					மேல்
# 319 ஆலங்குடி வங்கனார்
செம்மண் நிலத்தில், பள்ளத்திலே இருக்கும் கிணற்றைத் தோண்டியதால் உண்டாகிய
சிவந்த இடத்தில் சிறிதளவு ஊறிய நீரை முகந்துவைத்த, எங்கள் சிறிய வீட்டின்
முற்றத்தில் உள்ள பழைய அகன்ற வாயையுடைய சாடியின்
அடியில் கொஞ்சம் கிடக்கிறது; அது சிறிதும் குற்றமற்ற நல்ல நீர்;
படல் வேலியோடு கூடிய முற்றத்தில், உலர்ந்த தினையை வீசி,
புறாவும், காடையும், முழுவதும் கொத்தித்தின்ன என விடுத்து அவற்றைப் பிடித்துச்
சமைப்பதற்கு, இப்போது மாலை நேரம் கழிந்து இரவு வந்துவிட்டது. அதனால்,
முயலைச் சுட்டுச் சமைத்த கறியையாகிலும் தருகிறோம். எம் இல்லத்திற்குள் வந்து
இங்கே தங்குக, அறிவு முதிர்ந்த பாணனே!
வளைந்த கொம்புகளையுடைய காட்டுப் பசுவின், நடுங்கும் தலையையுடைய இளம் கன்றைப்
பரட்டைத்தலைச் சிறுவர்கள் தம்முடைய சிறுதேர்களில் கன்றுகளாகப் பூட்டி விளையாடும்
சிற்றூருக்குத் தலைவனான என் கணவன். நேற்றைய நாளில்,
வேந்தனின் கட்டளைப்படி போருக்குச் சென்றிருக்கிறான்; அவன் வந்ததும், உன்
மனைவிக்குப் பொன்மாலை அணிவித்து,
உனக்கு வாடாத பொற்றாமரைப் பூவைச் சூட்டுவான்.
					மேல்
# 320 வீரை வெளியனார்
வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடியும் முசுண்டைக் கொடியும் அடர்த்தியாகப் படர்ந்து இருந்ததால்
அங்குப் பந்தல் வேண்டாத அளவுக்குப் பலர் உறங்கக்கூடிய நிழலில்,
யானை வேட்டைக்காரன், நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்க,
விலங்குகளைப் பிடிப்பதற்காகக் கட்டிவைக்கப்படும் பார்வை இளம்பெண்மானைத் தழுவி, வேறு ஒரு
வேலை எதுவும் இல்லாத தனி ஆண்மான் புணர்ந்து மகிழ்ச்சியோடு விளையாடிக்கொண்டிருக்க,
மான்கள் புணர்ச்சி இன்பத்தை அனுபவிப்பதைக் கண்ட வேட்டுவனின் மனைவி,
கணவன் விழித்துக்கொள்வான் என்று அஞ்சியும், ஆண்மான்
பெண்மானை விட்டு விலகி ஓடிவிடும் என்று அஞ்சியும், சிறிதும்
வீட்டில் நடமாடாமல் இருக்க, கல்லென்று ஆரவாரித்து,
மான் தோலின் மேல் பரப்பி உலரவைத்த தினை அரிசியான தீனியைக் 
காட்டுக் கோழியோடு, காடையும் கவர்ந்து தின்று கொண்டிருக்க, அவற்றைப் பிடித்து,
சந்தனக் கட்டையால் மூட்டிய தீயில் சுட்ட ஆரல் மீனின் மணம் கமழ,
துண்டு துண்டாக அறுத்த நிறைந்த இறைச்சியைச் சமைத்து,
கரிய பெரிய சுற்றத்தாரோடே ஒன்றாகக் கூடியிருந்து இனிதே உண்டு
தங்கிச் செல்க பாணனே! குறையாமல்
வேந்தன் தனக்குத் தரும் சிறப்பான பெருஞ்செல்வத்தை என்றும் தன்பால் வரும் பரிசிலர்க்குக்
குறையாமல் கொடுக்கும் வள்ளல்தன்மையையும் 
புகழையும் உடைய நெடுந்தகை பாதுகாக்கும் இந்த ஊரில் - (தங்கிச் செல்க பாணனே!)
					மேல்
 




# 321 உறையூர் மருத்துவன் தாமோதரனார்
புள்ளிகள் நிறைந்த முதுகையுடைய குறும்பூழ்ப் பெண்பறவையின் போர்புரிவதில் ஆற்றலுடைய சேவல்
மேல் தோல் நீக்கிய, இனிமை பொருந்திய வெண்ணிறமான எள்ளின்
முறத்தில் வைத்து உலர்த்தப்பட்ட காய்ச்சலை, தக்க சமயம் பார்த்துக் கவர்ந்து உண்டு, உடனே
வேனிற்காலத்தில் பூத்த கோங்குப் பூவின் கொட்டை போன்ற
வளைந்த அழகிய காதுகளையுடைய, வரப்பில் வாழும் எலியை விரட்ட,
அவ்வெலி தழைத்து விளங்கும் வரகின் உயர்ந்த இளங்கதிர்களில் மறைந்துகொள்ளுகின்ற
புன்செய் நாட்டில் உள்ளது, அங்குச் சென்று
பறித்துத் தின்னப்படும் பழம் பசந்து ..................... பாணனே! 
வாளால் வெட்டப்பட்டு வடுவுடன் விளங்கும் தலையையுடைய,
போரை விரும்பும் தலைவன் பாதுகாக்கும் ஊர்.- (புன்செய் நாட்டில் உள்ளது)
					மேல்
# 322 ஆவூர்கிழார்
நிலத்தை உழுததால் ஓய்ந்த நடையோடு செல்லும் காளையின் தலையில் நன்கு முளைத்த கொம்பு போல்,
பிளவுபட்ட முட்களையுடைய கள்ளி மரத்தின் பொரிந்த அடிப்பகுதியில் இருந்துகொண்டு,
புதிதாக அறுத்த வரகின் அடித்தாளில் மேயும் எலியைப் பிடிப்பதற்குத் தக்க சமயம் பார்க்கும்
சிறுவர்கள் தங்கள் கையில் வில்லை எடுத்துக்கொண்டு ஆரவாரம் செய்தால்,
அந்த ஒலியைக் கேட்ட, பெரிய கண்களையுடைய சிறிய முயல், கரிப்பிடித்த பாத்திரங்கள் உடையுமாறு
உருட்டித் தள்ளிவிட்டு வீட்டு முற்றத்தில் பாயும் புன்செய். நிலத்தில் உள்ளது -
கரும்பை ஆட்டும் ஆலைகள் ஒலியெழுப்பினால், அருகே உள்ள நீர்நிலைகளில்,
பெரிய கழுத்தையுடைய வாளைமீன்கள் துள்ளிப் பாயும்
வளமான மருதநிலத்து ஊர்களை ஆட்சி செய்யும் அரசர்களுக்குக்
கண்ணுறக்கம் இல்லாமல் செய்யும் வேலை உடையவனின் ஊர்.
					மேல்
# 323 ...............கிழார்
புலியிடம் சிக்கிக்கொண்டு இறந்த ஒரு காட்ட்ப்பசுவின் கன்றுக்குச்
சினம் இல்லாத முதிய பசு தன் கன்று எனச் சேர்த்துத் தன் பாலை உண்ணக்கொடுக்கும். 
.............................................. பரிசிலர்களுக்கு 
அவர் நினைத்ததை நினைத்தவாறு அளிக்கும், தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாத ஈகைக் குணமுடைய,
வெள்ளிய வேல் ஏந்திச் செய்யும் போர் இருந்தால், தன் ஒளி பொருந்திய வாளை,
உரல் போன்ற காலடிகளையுடைய யானையை வீழ்த்துவதற்கு அன்றி
உறையிலிருந்து எடுப்பதை அறியாத வேற்படையை உடைய, தலைவனின் ஊர்.
					மேல்
# 324 ஆலத்தூர் கிழார்
ஆண் காட்டுப் பூனையின் பார்வை போன்ற அஞ்சத்தக்க பார்வையையும், பெரிய தலையையும்,
பறவைகளின் ஊனைத் தின்பதால் புலால் நாற்றம் வீசும் மெல்லிய வாயையும் உடைய,
வெளுத்த வாயையுடைய வேட்டுவர்களின், ஒருவரை ஒருவர் நேசிக்கும் சிறுவர்கள்,
சிறிய இலையைக்கொண்ட உடைவேல் மரத்தின், உள்ளே துளையமைந்த வெண்ணிற முள்ளை,
ஊகம் புல்லின் சிறிய தண்டில் செருகிய அம்பை,
வளாரால் செய்யப்பட்ட வலிய வில்லில் வைத்து வளைவாக இழுத்து,
பருத்தி வேலியின் அடியில் தங்கியிருக்கும் எலியைக் குறிபார்க்கும்
புன்செய் நிலம் சூழ்ந்த அழகிய குடிகளை உடைய சிறிய ஊரில்,
குமிழம் பழத்தை உண்ணும் வெள்ளாடுகள் பின் வாய் வழியாக இட்ட
வெண்ணிறமுள்ள பிழுக்கைகள் பரந்து கிடக்கின்ற வளப்பமான தூண்கள் உள்ள பந்தலின் கீழ்,
இடையன் கொளுத்திய சிறிய தீயின் வெளிச்சத்தில்,
பாணர்களுடன் இருந்த, நாணமாகிய நற்பண்பு உள்ள தலைவன்,
வெற்றி பயக்கும் படையையுடைய வேந்தனுக்கு,
அவன் அல்லல்படும்போது தானும் அவனோடு சேர்ந்து அல்லல்படும் மனமறியக்கொண்ட உயிர்த் துணைவன்.
					மேல்
# 325 உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
பன்றிகளால் புழுதியாக்கப்பட்ட மேய்ச்சல் நிலத்தில்
புதிதாக வந்த பெரு மழை அவ்விடத்தில் குறைவாகப் பெய்து அவ்விடத்தைவிட்டு நீங்க,
பள்ளங்களில் தங்கிய சிறிதளவு நீரை, கன்றையுடைய பசு குடித்துவிட்டதால்,
அங்குள்ள மக்கள், சேற்றைத் தோண்டியதால் ஊறிய கலங்கலான நீரை
முறைவைத்துப் பகிர்ந்து உண்ணும் நிறைவில்லாத வாழ்க்கையையுடைய,
முள்ளம்பன்றியைக் கொல்லுகின்ற, சொல்லியதைச் சொல்லியவண்ணம் செய்து முடிக்கும் ஆடவர்கள்
அறுத்தெடுத்த உடும்பின் தசையை, ஒடுமரத்தின் வலிய கழிகளால் செய்யப்பட்ட படல் சார்த்திய
சிறிய வீட்டின் முற்றத்தில் எல்லாருக்கும் பகிர்ந்து கூறுபோடுவதற்காக,
நெருப்பில் வேகவைத்த கொழுத்த புலாலின் மணம்
தெருவெங்கும் கமழும் - வலிதாக எழுப்பப்பட்ட ஊர் மன்றத்தில் நிற்கும்
உலர்ந்த தலையையுடைய இலந்தை மரத்தின் அசையும் நிழலில்,
மெல்லிய தலையையுடைய இளஞ்சிறுவர்கள் அம்பெய்தி விளையாடும் - 
கடத்தற்கரிய காவற்காடுகள் உள்ள நாட்டில் உள்ளது, வெற்றி பயக்கும் வேலையுடைய
வேந்தன் தன் படையுடன் வந்தாலும் தாங்கக்கூடிய - 
குறையாத ஈகையையுடைய நெடுந்தகையாகிய தலைவனுடைய ஊர்,
					மேல்
# 326 தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
ஊரானது, பழைய வேலியடியில் பதுங்கியிருக்கும் மெத்தென்ற நடையுடைய காட்டுப்பூனையாகிய
இருளில் வந்து வருத்தும் பகைக்கு வெருண்ட இளம் பெட்டைக் கோழி
உயிர் நடுங்குவது போல் நடுக்கமடைந்து தொண்டை கிழியக் கத்த,
குச்சிகளையும், செத்தையையும் அகற்றுவதற்காக எழுந்த
நூல் நூற்கும் பெண்ணின் சிறிய விளக்கொளியில்,
முருக்கம் பூப் போன்ற கொண்டையையுடைய சேவற்கோழியைக் கண்டு அச்சம் தணியும்
கடத்தற்கரிய காவற்காடுகள் சூழ்ந்த இடத்தில் உள்ளது; இவ்வூர்த் தலைவனின் மனைவி,
வேடர்களின் சிறுவர்கள் நெடுந்தொலைவு செல்லாமல்
கொல்லையில் பிடித்துவந்த குறுகிய காலையுடைய உடும்பின்
தசையுடன் சேர்ந்த கொழுப்பை இட்டுச் சமைத்த தயிரோடு கூடிய கூழ்போன்ற உணவையும்,
புதிதாக வந்த வேறு நல்ல உணவுப் பொருட்களையும் பாணர்களோடு, ஒருசேர,
அவர்களோடு வந்த மற்ற விருந்தினர்களுக்கும் கொடுத்து உண்பிக்கும் விருப்பமுடையவள்; அவள் கணவனும்
கடத்தற்கரிய போர் அழியுமாறு தாக்கி, பெரும் போரில்
தலைமையையுடைய யானைகள் அணிந்திருந்த
பொன்னால் செய்யப்பட்ட நெற்றிப்பட்டம் முதலியவற்றை பெரும் பரிசிலாக வழங்குபவன்.
					மேல்
# 327
எருதுகளைப் பூட்டிப் போரடிக்காமல் இளைஞர்கள் காலால் மிதித்து எடுத்த,
சிறிதளவே விளைந்த வரகின் அற்பமான குவியலில்,
வளைத்துக்கொண்ட கடன்காரர்களுக்குக் கொடுத்தது போக எஞ்சியிருப்பதைப்
பசித்து வந்த பாணர்கள் உண்டு வெளியேறிய பிறகு,
சுற்றத்தாரின் வறுமையைக் களைவதற்காக, தன்னூரில் வாழும்
அற்ப மனிதர்களிடத்தில் அவரவர்க்குத் தகுந்தபடி பேசி
வரகைக் கடனாகக் கேட்டுப் பெறும் பெருந்தகை,
பெருவேந்தர்கள் படையெடுத்து வந்தால் எதிர்த்து நின்று வெற்றிகொள்ளும் வலிமையுடையவன்.
					மேல்
# 328
................. பொலிவற்ற இலைகளும் அடிப்பாகமும் உடைய மரங்கள் உள்ள முல்லை நிலத்தைச் சேர்ந்த
புன்செய் நிலங்களில் உள்ள சிற்றூர்களில் நெல் விளையாது;
அங்கு விளையும் வரகையும் தினையையும் ஆகிய உள்ளவை எல்லாம்
இரவலர்க்குக் கொடுத்ததால் அவை தீர்ந்து போயின;
.......................... பொருந்தினான்;
அத்தன்மை உடையவனாயினும் பாணனே! மிகவும்
கிண்ணத்தில் ஊற்றிவைத்த பாலில் உறையிடுவதற்காக வைத்திருந்த தயிரையும், தொடரிப் பழத்தையும்,
களாப் பழத்தின் புளிப்பைப் போலப் புளிப்பேறிய கள்ளையும் .........................
........................ வெந்து வாடிய கொழுத்த ஊன்துண்டுகளையும்,
அறுவடை செய்த வரகிலிருந்து எடுத்த அரிசியில் நெய்யிட்டுச் சமைத்துத்,
துடுப்பால் துழாவப்பட்ட களிப்பைத் தருகின்ற வெண் சோற்றை
உண்டு இனிது இருந்த பின்பு ...............................
............................. கொடுப்பான்;
தாளிமரத்தின் அடியில் நீளப் படர்ந்த, சிறிய மணமிக்க முன்னைக் கொடியை
முயல் வந்து தின்னும் முற்றத்தையுடைய
சிறிய ஊர்களையுடைய மன்னனைப் பாடிச் சென்றால்,
					மேல்
# 329 மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
வீடுகளில் காய்ச்சப்படும் கள்ளை உடைய சில குடிகளே உள்ள சிற்றூரின்
பக்கத்தில், நடப்பட்ட நடுகல்லுக்கு, விடியற்காலையில் படையல் செய்து,
நல்ல நீரால் நீராட்டி, நெய்விளக்கு ஏற்றியதால் உண்டாகிய
மேகம் போன்ற கரிய புகை தெருவெல்லாம் மணக்கும்
அரிய முதன்மையான இடத்தையுடையதாய் இருந்தாலும், வரிகள் பொருந்திய கழுத்தையுடைய
பாம்பு வாழும் புற்றினைப் போன்றது; நாள்தோறும்,
செல்வந்தர்களுக்கு உண்டாகும் துன்பத்தைப் பாராமல், இரவலர்களுக்குக்
குறையாது கொடுக்கும் வள்ளல் தன்மை உடைய
புகழ் மிகுந்த பெருந்தகையால் பாதுகாக்கப்படும் ஊர்.
					மேல்
# 330 மதுரை கணக்காயனார்
தன் வேந்தனுடைய முன்னணிப் படை சிதைந்து அழியுமாறு, பகைவர் படை நெருக்கி மோதுவதால்,
உயர்த்திய வாளை வலக்கையில் பிடித்துக்கொண்டு, தான் ஒருவனாக
பகைவர் படை தன்னைக் கடந்து செல்லாமல் தடுப்பதால், இவன் பெருங்கடலுக்குக்
கரையைப் போன்றவன்; எப்போதும்,
தன்னைப் பாடிச் சென்ற பரிசிலர்களை மட்டுமல்லாமால், வருவாய்
வரி செலுத்துவதற்குக்கூடப் போதாத சிற்றூரில் வாழும் மக்களையும்
வழிவழியாகக் காத்து வரும் வள்ளல்தன்மையும் உடையவன்,
					மேல்
 




# 331 உறையூர் முதுகூத்தனார் உறையூர் முது கூற்றனார் எனவும் பாடம்
கல்லை உடைத்துக் கட்டிய கடும் உவர்நீர் உள்ள கிணறும்,
வில்லால் வேட்டையாடி வாழ்க்கை நடத்தும் மக்களும் உள்ள சிற்றூரின் மிகுந்த வலிமையுடைய தலைவன்.
மிகவும் வறுமையுற்றவனாயிருந்தாலும், குளிர் மிகுவதால்
இருள் மயங்கும் மாலை நேரத்தில் சிறிய தீக்கடைக் கோலால் கடைந்து தீ உண்டாக்கும்
வேறு தொழிலைக் கற்காத இடையனைப் போலத், தன் இல்லத்தில் இல்லாததைக் குறிப்பால் அறிந்து
அவ்வாறு இல்லாததை உண்டாக்கிக்கொள்ளவும் வல்லவன்; வீட்டில் இருப்பது
மிகவும் சிறிய அளவினதாயிருந்தாலும், மிகப் பலர் இருக்கிறார்களே என்று மனம் கலங்காதவளாய்
நீண்ட நெடிய பந்தலின் கீழ் அவர்களை இருத்தி உணவை முறையாக அளித்து உண்பிக்கும்
இல் வாழ்க்கையில் சிறந்த மகளிரைப் போல, கொஞ்சம் கொஞ்சமாகப்
பரிசிலர்களின் தகுதியை அறிந்து கொடுக்கவும் வல்லவன்; செல்வம் மிகுதியாக இருந்தால்
நாட்டைக் காக்கும் பெருவேந்தர்களின் தலைவாயிலில் அளிக்கப்படும்
உயர்ந்த பலியாகிய வெண்மையான சோற்றைப் போல,
அள்ளித்தூவும் காலத்தில் பலரும் கொள்ளுமாறு வாரி வழங்கக் கூடியவன்.
					மேல்
# 332 விரியூர் கிழார்
பிறருடைய வேலைப் போல் அல்லாமல், இந்த ஊரைச் சார்ந்த
வீரனின் வேலோ மிகுந்த மதிப்பு உடையதாகும்.
அந்த வேலின் பெரிய இலைப்பகுதியில் புழுதியும் படிந்து, பல பொருள்களுக்கிடையில் கலந்து
குடிசையின் கூரையில் கிடந்தாலும் கிடக்கும்;
அந்த வேல், மாலை சூட்டப்பட்டு, மங்கல மகளிரின் இனிய குரலோடு,
பெரிய பையில் அமைந்த யாழின் இசையும் கலந்து இசைக்க,
தெளிந்த நீருள்ள குளங்களையும் தெருக்களையும் ஊர்வலமாக வந்து,
உலகம் முழுதும் உள்ள பகைவர்கள் கவலை கொள்ளும்படியாகச் செல்லவும் செல்லும், அங்கு
பெரிய கடல் போன்ற படையையுடைய வேந்தரின்
பெரிய யானைகளின் முகத்திலும் சென்று பாய்வதில் தப்பாதாகும்.
					மேல்
# 333
நீரில் விழுந்த மழையின் பெரிய துளியால் உண்டாகிய
குமிழி போலிருக்கும் கொட்டை போன்ற விழிகள் பொருந்திய கண்களையும்,
கரிய பிடரியையுமுடைய தலையையும், பெரிய காதுகளையுமுடைய சிறு முயல்
உள்ளூரில் உள்ள சிறிய புதர்களில் துள்ளி விளையாடும்
வளைகளையுடைய மன்றத்திற்குச் சென்றால்,
அங்குள்ளவர்கள் உண்ணுக என்று குறிப்புணர்ந்து உரைக்காத வருத்தமுடையதாயினும்
புலவர்களே, நீங்கள் அங்கே பெரிதும் தங்கிச் செல்க;
அவ்வாறு அங்குச் சென்றதினால் மனையவள் விரும்பி
வரகு, தினை ஆகிய இருப்பவை எல்லாம்
பரிசிலர்கள் உண்டதாலும், எடுத்துக்கொண்டதாலும் தீர்ந்து போக,
அம்மனைக்குரியவள், கைம்மாற்றுக் கடனாக உணவுப்பொருட்களைப் பெற இயலாமையால்,
காய்ந்த கதிராக இருக்கும் விதைத் தினையை உரலிலிட்டு இடித்துச் சமைத்துச் சோறுபோடுவாளேயன்றி
சிறிதும் இல்லாததைக்கூறி உணவின்றி உங்களை வறிதே போகவிடமாட்டாள்; தன் ஊரிலுள்ள
வேட்டுவர்களின் வீடுகள்தோறும் கூட்டப்படும் .....................................
............................ உடும்பின் தோலால் செய்யப்பட்ட
கைக்கவசம் அணிந்து நெடிய தேரைச் செலுத்தும் வீரர்களோடு ஊர்ந்து,
கச்சணிந்த யானைகளையுடைய வேந்தர்கள் அவ்வீட்டிற்கு வந்தாலும்
அவர்கள் உண்பதும் அவ்வுணவேயாகும்;
பரிசிலர்களுக்கு வழங்கும் பரிசில் அரசராகிய அவன் பகைவரை வென்று பெற்ற பொருளேயாகும்.
					மேல்
# 334 மதுரை தமிழ கூத்தனார்
அழகிய நீர்நிலைகளில் வளர்ந்திருக்கும் சண்பங்கோரையின் கதிர் போன்ற
தூய்மையான மயிரையும், குட்டையான கால்களையும், நீண்ட காதுகளையுமுடைய சிறிய முயல்,
பரட்டைத் தலையையுடைய சிறுவர்கள் ஊர் மன்றத்தில் விளையாடி ஆரவாரம் செய்வதால்
வைக்கோற் போரில் பதுங்கும் .................... பின்பு .............
....................... வேந்தனது ஊர்; மனையவள்
பாணரை உண்ணச் செய்தும், பரிசிலரை வரவேற்று அவர்களுக்கு ஆதரவு அளித்தும்
அவர்கள் உண்பதனால் உண்டாகும் ஆரவாரத்திற்கிடையே கை ஓய்ந்திருக்கமாட்டாள்:
உயர்ந்த கொம்புகளையுடைய யானையின் புள்ளிகளையுடைய முகத்தில் அணியப்படும்
பொன்னாலான நெற்றிப்பட்டத்தை ........................
பரிசிலாகப் பரிசிலர்களுக்கு அளிப்பதில்
வலிய வேலை உடைய தலைவனும் கைஓயமாட்டான்.
					மேல்
# 335 மாங்குடி கிழார்
அழித்தற்கரிய வலிமையையுடைய .........................
குரவ மலர், தளவ மலர், குருந்த மலர், முல்லை மலர் ஆகிய
இந்நான்கு மலர்களைத் தவிர வேறு மலர்களும் இல்லை;
கரிய அடியையுடைய வரகு, பெரிய கதிரையுடைய தினை,
சிறிய கொடியில் விளையும் கொள், புள்ளிகள் நிறைந்த அவரை
இவை நான்கைத் தவிர வேறு உணவுப்பொருட்களும் இல்லை;
துடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகிய
இந்நான்கு குடிகளைத் தவிர வேறு குடிகளும் இல்லை;
மனம் பொருந்தாத பகைவரின் முன்னே நின்று அவர் படையெடுப்பைத் தடுத்து,
ஒளிறும் உயர்ந்த கொம்புகளையுடைய யானைகளைக் கொன்று தாமும் விழுப்புண்பட்டு இறந்தவர்களின்
நடுகல்லைக் கும்பிடுவோமே அல்லாமல்
நெல்லைத் தூவிக் கும்பிடும் கடவுளும் வேறு இல்லை.
					மேல்
# 336 பரணர்
இந்தப் பெண்ணை மணஞ்செய்துகொள்ள விரும்பிய வேந்தனும் மிகுந்த கோபங்கொண்டிருக்கிறான்;
தான் செய்ய வேண்டிய கடமைகளைக் கழித்தலை இப்பெண்ணின் தந்தையும் செய்யமாட்டான்;
ஒளிறும் முகத்தில் உள்ள, உயர்ந்திருக்கும் பெரிய தொடி அணிந்த கொம்புகளையுடைய
யானைகள் காவல் மரத்தில் சேராமல் நிற்கின்றன; வேந்தனையும் அப்பெண்ணின் தந்தையையும் சேர்ந்த
ஒளிறும் வேலேந்திய வீரர்கள் வாயை மூடிக்கொண்டுள்ளனர்;
இசை வல்லுநர்களும் அறியாத பல இசைக்கருவிகள் முழங்குகின்றன;
ஐயோ! பெரும் துன்பத்துக்குள்ளாகியது, அரிய காவல் உள்ள இந்தப் பழமையான ஊர்;
அறமில்லாதவள், நிச்சயமாக, வலிமை வாய்ந்த மலையாகிய
வேங்கை மலையில் மலர்ந்த கோங்க மரத்தினுடைய
அரும்பின் வனப்பையுடைய முதிராத இளமுலையையுடைய
இப்பெண்ணை மிகவும் அழகுடையவளாக வளர்த்ததால் பெற்ற மகிழ்ச்சியுடன்,
இப்போது பகையை வளர்த்திருக்கும் பண்பில்லாத தாய் - (அறமில்லாதவள், நிச்சயமாக)
					மேல்
# 337 கபிலர்
மிகுந்த ஆரவாரமுடையவன், சோழநாட்டுத் தலைவன்;.
பிறருக்கு அளிப்பதற்காகக் கவிந்த தங்கள் கைகளில், உலகத்தை ஆளும் செல்வமுள்ளவர் என்றாலும்
வெற்றியைத்தரும் வாளை ஏந்தாமல், பாணர்களைப் போலப் பாடிப் பரிசுபெறச் சென்றவர்
வந்தபொழுது மனம் மலர்ந்து,
கொடுப்பதில் குறையாதவனாகிய, ஒளிரும் தொடியணிந்த பெரிய கையையுடைய,
பாரியின் பறம்பு மலையிலுள்ள யாரும் காண்பதற்கு அரிய குளிர்ந்த நீர்நிலை போல
யாராலும் காண்பதற்கரியவளாய், மாட்சி மிக்க
பெண்மை நிறைந்த அழகுடன், துவைக்கப்பட்ட
மெல்லிய துணி காற்றில் அசைவதுபோல் அசைந்து, குளுமையான
அகில் தந்த நறும்புகை மெதுவாகச் சென்று படிந்த
கபில நிறமுடைய பெரிய அரண்மனை முழுதும் கமழும் மணம் பொருந்திய
வீட்டுக்குள் அடைத்துவைக்கப்பட்டிருந்தாள் ஒளிபொருந்திய நெற்றியையுடையள்; இப்பொழுது
அவளை அடைய முடியாது என்பதைத் தெளிவாக உணர்ந்து,
விளைந்த நெல்லின் அரிசியில் உண்டாகிய கவளத்தை உண்பித்துச் சோலையெங்கும் கட்டிப்போட்டு,
சினங் கொண்ட கண்களையுடைய தங்கள் யானைகளைப் பாதுகாத்து வந்தனரே தவிர
போரிடத் துணியவில்லை வேந்தர்கள்; அப்பெண்ணின் தமையன்மார்,
சண்டையிடும் போர்களில் வெற்றிகொண்ட அச்சம் பொருந்திய நெடிய வேலையும்,
குருதி தோய்ந்த அச்சம் தரும் தலையையும் உடையவர்களாக இருந்தனர்;
அவர்களின் வீரம் இப்படியிருக்க, தெளிவாக
யாரோ? சிறந்த அணிகலன்களை அணிந்த,
இவளுக்கு உரிமையாகத் தோன்றிய பலவான தேமல் படர்ந்த, 
யானைக்கொம்பு போன்ற அழகிய இளமுலைகளை இறுகத் தழுவுவோர் - (யாரோ?)
					மேல்
# 338 குன்றூர் கிழார் மகனார்
ஏர் உழுத வயல்களையும், நீர் நிறைந்த வரப்புகளையும்,
நெல் நிரம்பிய வீட்டையும், பொன் நிறைந்த தெருக்களையும் ,
மொய்க்கும் வண்டுகள் ஒலிக்கும் பன்மலர்ச் சோலையையும் உடைய
நெடுவேள் ஆதன் என்பவனின் போந்தை என்னும் ஊர் போன்ற
பெரும் சீருடனே, போரிட்டுப் பகைவரிடம் பெற்ற அரிய செல்வத்தை உடையவள்; கரிய கிளைகளையுடைய
வேம்பின் பூமாலை, ஆத்தி மாலை, பனந்தோட்டு மாலை ஆகிய மூன்றையும்
சூடிய தலையை உடையவராய், வரிந்து கட்டப்பட்ட வில்லையுடையவராய்,
வெற்றி மிக்க முடிவேந்தரும் அவளை மணக்க விரும்பி பெண் கேட்க வந்தாலும் தன் தகுதிக்கேற்பத்
தன்னை வணங்காதவர்க்கு அவளைத் தரமாட்டான்; வளமான கதிர்த்தாளையும்
ஒன்றோடொன்று பின்னிக் கிடக்கும் கதிர்களையுமுடைய வயல்களுக்கு நடுவில், கரையில் கட்டப்பட்டு
காய்ந்து கிடக்கும் மரக்கலமும் கடலும் போலக் காட்சி அளிக்கும்
ஒற்றை மதிலால் சூழப்பட்ட கோட்டைக்குரியவனின் இளமை பொருந்திய ஒப்பற்ற மகளை.
					மேல்
# 339 குன்றூர் கிழார் மகனார்
அகன்ற, புல் வெளியில் பரந்து மேய்ந்த பல பசுக்களுடன் கூடிய நெடிய காளைகள்,
பூக்களையுடைய மரங்களின் நிழலில் தங்கி அசை போட்டுக் கொண்டிருக்க, இடையர்கள்,
பூக்கள் மிகுந்த முல்லைக் கொடிகளிலிருந்த பூக்களைப் பறிப்பர்;
சிறிய கோலால் எறியப்பட்ட நீண்ட காதுகளை உடைய குறு முயல்கள் 
ஆழமான நீர்நிலையில் உள்ள வாளைமீன்களோடு சேர்ந்து துள்ளித் தாவும்;
மேகலை அணிந்த இடையையும் வளை அணிந்த தோள்களையுமுடைய பெண்கள்
கடலில் நீராடிக், குளங்களில் மூழ்கிக்
கடற்கரையில் உள்ள கழியில் நெய்தற் பூக்களைப் பறிப்பர்;
பசிய தழை அசையும் வயலிடத்தே நெருங்கிய
--------------- ---------- கலத்தைப் போல
வளர வேண்டும் அவள் எப்போதும் - 
தன் பொருட்டு வேந்தர்கள் அரிய போர் செய்வதை விரும்பினவள் போல், 
முறம் போன்ற காதுகளையுடைய யானைகளைக் கொண்ட வேந்தர்களின்
வீரம் பொருந்திய நெஞ்சைக் கவர்ந்து பிறர் அறியாதவாறு அதை மறைத்துக்கொண்டவள்..
					மேல்
# 340 அள்ளூர் நன்முல்லையார்
’இடையில் அணிந்த தழை உடை அசையுமாறு ஓடிச் சென்று, செம்மணி போல் நிறமும் புள்ளிகளுமுடைய
குன்றிமணிக் கொத்துக்களைச் சேகரிக்கும், இளையவளான
மா நிறத்தவள் ..........................
யாருடைய மகள்?’ என்று கேட்கிறாயா? நான் கூறுகிறேன். நீ கேட்பாயாக;
தன் கையில் ஆயுதங்களை எடுக்க, அதனை நேர்ந்து ஆயுதங்களை எடுக்காத
.......................... மைந்தர்களுக்குக்குத் தந்தையானவன்,
கரிய பனை போன்ற பெரிய துதிக்கைகளையுடைய யானைகளைக்
கரந்தைக் கொடி நிரம்பிய வயலில் தாக்கிக் கொல்லும்
பெரும் தகைமையினையுடைய மன்னருக்கு இவளைத் திருமணம் செய்விப்பது என்று முடிவு செய்துள்ளான்.
					மேல்
 



# 341 பரணர்
வேந்தன் வந்து பணிவோடு, பெண் கேட்டாலும் கொடுக்கமாட்டான். உயர்ந்த பக்கங்களையும்
அழகிய பூவோடு தழையும் சேர்த்துக் கட்டிய தழையுடை அணிந்த அல்குலையும்
சிறந்த பொறிகள் பொறிக்கப்பட்ட சிலம்பையுமுடைய இளம்பெண்னின் தந்தை
கணையமரத்தை குறுக்கே கொண்ட திண்ணிய நிலையையுடைய கதவையும்,
அரைத்த மண்ணால் அமைந்த மதிலையும், நாள்தோறும் வெற்றிக் குறியாக எடுத்த கொடி அசையும்
....................... ........................
புலிக்கூட்டத்தை ஒத்த வலிய வீரர்களோடு,
தான் கூறிய வஞ்சினச் சொல்லினின்றும் மாறாதவனாய், போர் குறித்த சினமுடையவனாய்,
வீரர்கள் போருக்குரிய பூக்களைப் பெற்றுக்கொள்ளுமாறு கட்டளையிட்டு, பின் நீராடக் குளத்தில் மூழ்கினான்.
ஒளிவிடும் அணிகலன்களை அணிந்து, அழகுடையவளாய், மணமாகாதவளாய், மெல்லியல்புடையவளாய்,
தேமல் படர்ந்த அழகிய முலையினையுடைய அவளை நான் நாளை
ஒன்று, மணம் செய்துகொள்ளும் நாளாக வேண்டும், அல்லது,
அரிய போரைச் செய்தற்குரிய வீரம் மிகுந்த ஆற்றலோடு
நீண்ட இலைவடிவில் ஆகிய வேலால் புண்பட்டு வடுப்பட்ட உடலோடு
மேலுலகம் புகுவேன், இந்த இரண்டில் ஒன்று நாளை நடைபெற வேண்டும்.என்று வஞ்சினம் கூறித் 
தன் படைக் கருவிகளைக் கையில் எடுத்தான் வேந்தன்; அப்போது. 
நீராடும் யானைகள் போரிடுவதால் கலங்கிச் சேறாகும் குளிர்ந்த குளம் போல,
தன் பேரழகை இழந்துவிடுமோ,
நன்செய் வயல்கள் பொருந்திய ஊராகிய இந்த மருதநிலத்து ஊர்?
					மேல்
# 342 அரிசில் கிழார்
காட்டுக் காக்கையின் தழைத்த சிறகைப் போன்ற
இருவாட்சிப் பூவால் தொடுக்கப்பட்ட மாலையையும் பெரிய தோளையும் உடைய இந்த இளம்பெண்,
வீரர்களின் குடியைச் சேராத பிறர்குடியினரின் மகளோ இவள் என்று கருதி ஆசையுடன் படபடத்து
அவளைப் பற்றி என்னிடம் கேட்கும் வெற்றி பொருந்திய வேலையுடைய பெருவீரனே!
திருமகளும் விரும்பத்தக்க பண்பும் அழகும் உடைய இவள். நலனோ
போர்மறவர்க்கு அன்றி பிறருக்கு எய்த முடியாதது;
வளப்பமான கால்களையுடைய கொக்கின் அகன்ற வாயையுடைய குஞ்சு,
மெத்தென்றிருக்கும் சேற்றின் கரையோரத்தில் நின்று, மீன்களை மேய்ந்து உண்ட பின்,
ஆரல்மீன்கள் இட்ட வெண்சிறுகடுகு போன்ற சிறிய முட்டைகளை
நல்ல இறாலின் குஞ்சுகளுடன் தாய்க் கொக்கு தர உண்ணும் 
மருதநிலத்து ஊருக்குத் தலைவன் இவள் தந்தையும், வேந்தர்களும்
இவளை மணம் முடிக்கப் பெறாமையால் பெரும் போரைச் செய்ததால்
இறந்தோரின் பிணங்கள் உயர்ந்த வைக்கோல் போராகவும், களிறுகள் அதனை மிதிக்கின்ற எருதுகளாகவும்
தமது வாள் வீரத்திற்கு ஏற்ப நாள்தோறும் வாளால் உழவுசெய்யும்
பெருமை உடையவர்கள் இவள் தமையன்மார்.
					மேல்
# 343 பரணர்
மீன்களை விற்று அதற்குப் பண்டமாற்றாகப் பெற்ற நெல் குவித்திருக்க,
உயர்ந்த தோணிகளா அல்லது வீடா என்று பிரித்து அறிய முடியாதபடி காண்போரை மயங்கச் செய்யும்;
மனையிடத்தே குவிக்கப்பட்ட மிளகு மூட்டைகள்
ஆரவாரம் மிக்க ஒலி பொருந்திய கடற்கரையோ என்று காண்போரைக் கலங்கச் செய்யும்;
மரக்கலங்கள் கொண்டுவந்த பொன்னாகிய பொருட்கள்
கழிகளில் இயங்கும் தோணிகளால் கரை சேர்க்கப்படும்;
மலையில் உள்ள பொருட்களையும் கடலில் உள்ள பொருட்களையும் 
கலந்து, வந்தோர்க்கெல்லாம் அளிக்கும்
தண்ணீரைப் போல் கள் மிகுதியாக உள்ள பொன்னாலான மாலை அணிந்த குட்டுவனுடைய நாட்டின்
கடல் போல் முழங்கும் முரசை உடைய முசிறி என்னும் நகரத்தை ஒத்த
நலம் மிகுந்த சிறந்த செல்வத்தைப் பணிந்துவந்து கொடுத்தாலும்
தன் தகுதிக்கு ஏற்றவர்கள் அல்லாதாரை இவள் திருமணம் செய்துகொள்ளமாட்டாள் என்று
இவள் தந்தையும் கொடுக்கமாட்டான், அதனால் பெண்கேட்டு வந்தவர்கள்
கோட்டை மதிலின் மேல் ஏறச் சார்த்திய ஏணிகள்
இனி வருத்தப்படும் போலும், பருந்துகள் இளைப்பாறுவதற்கு (உச்சிக்குச் செல்லமுடியாமல்)
இடைப்பட்ட மதிலில் தங்கியிருக்கும் கோட்டையையும்
படை ஏந்திய வீரர்கள் பாதுகாக்கும் அரிய வழிகளையும் உடைய நெடிய நல்ல ஊரில் -
					மேல்
# 344 அடைநெடும் கல்வியார் - அண்டர் நடும் கல்லினார்
செந்நெல் கதிர்களை உண்ட, அழகிய தோகைகளையுடைய மயில்,
வளையல்களை நிறைய அணிந்த மகளிர் ஓட்டுவதால், பறந்து எழுந்து,
நீர்த்துறையை அடுத்த மருதமரத்தில் தங்கும் ஊருடன்,
மிகுந்த அளவில் சிறந்த பொருட்களையும் இவள் தந்தைக்குத் தருவது ஒன்று, 
புகை எழும் மிக்க தீயானது ஊர்களில் பரந்து எரிய, பகைகொண்டு 
பண்பில்லாத வீரச் செயல்களைச் செய்வது மற்றொன்று, 
இவ்விரண்டினுள் ஒன்று நடைபெறாமல் இருப்பது கடினம்;
காஞ்சியின் குளிர்ந்த தளிர்களோடு ஆத்திப்பூவைக் கலந்து தொடுத்த மாலைசூடும் ................
வேங்கைத் தாதினை விரும்பும் இளையவளின் அல்குலில் பரந்த அழகிய வரிகள்.
					மேல்
# 345 அடைநெடும் கல்வியார் - அண்டர் நடும் கல்லினார்
யானைகளைக் கட்டுவதால் சோலையிலுள்ள மரங்கள் நிலைகுலைந்தன;
தேர்கள் ஓடியதால் தெருக்களில் புழுதிகள் நிரம்பின;
குதிரைகள் சுற்றித் திரிவதால் வழிகள் உருத்தெரியாதவாறு மாறின;
படைக்கலங்களைக் கழுவுவதால் நீர்த்துறைகள் கலங்கிப்போயின;
போர்புரிவதைத் தம் இயல்பாகக் கொண்ட மறவர்கள் தங்கள் படைக்கருவிகளுடன் வந்து தங்கியதால்
நிலம் சுமையைத் தாங்க முடியாமல் நெளிய, 
தம் படையோடு புதிது புதிதாகப் பல வேந்தர்கள் இப்பெண்ணை விரும்பி வந்தனர்;
பெண்யானையின் பெருமூச்சுப்போல் காற்றை வெளியிடும் உலைத் துருத்தியின் வாயிரும்பு போன்ற
இரட்டைக் கதவமைந்த பெரிய வழி காக்கப்படுவது கருதி,
கரிய கண்களையுடைய நெருக்கமாயமைந்த, விருப்பத்தையுண்டாக்கும் முலைகளையும்,
மயக்கம் உண்டாக்கும் பார்வையும் உடைய இவளை மணக்க விரும்பி வந்தவர்
இரங்கத்தக்கவர்;  இவள் தமையன்மாரோ, 
பெண்கேட்டு வந்தவர் தரும் செல்வத்தை விரும்ப மாட்டர்கள்; போர்புரிவதையே விரும்பி,
எமக்கு நிகரில்லாதவர்களுக்கு இவளைத் தரமாட்டோம். என்று கூறி,
கழிகளால் கட்டப்பட்ட கேடயத்தை ஏந்தியவர்; வடுப்பட்ட வாளை உடையவர்;
கூட்டமாகக் கூடி, குருதி நாறும் புலால் நாற்றத்துடன்,
கழுவாத தலையினர்; வலியக் கட்டப்பட்ட காம்பையுடைய நெடிய வேலேந்தும்
இத்தகைய வீரர்களை உடையதாக இருந்தாலும், ஐயோ,
என்னதான் ஆகுமோ?
பருத்திவேலி சூழ்ந்த இந்த மருதநிலத்து ஊர்.
					மேல்
# 346 அண்டர் மகன் குறுவழுதி
போதும் என்று உணரும் அளவுக்கு வயது முதிரவில்லை, இன்னும் பால் உள்ளது என்று ஊட்டுவதால்
ஈன்ற தாயும் இதனை விரும்பாதவள் அல்லள்;
நான் கல்வி அறிவுடையவன் என்று கூறுவான், வலிமையும் வீரமும் மிக்க சிறுவனாகிய அவள் தமையன்;
ஒளி விடும் வேலோடு போரிடுவதில் திறமையுடையவன் இவள் தந்தை; அது உண்மையாவது உறுதி;
போரில் இறந்தவர் அழிந்துபோக, எஞ்சியிருப்போர்க்குச் சுற்றமாய் இருப்பான்;
விரும்புபவர் யாரும் இல்லாமல் அழிந்துபோகும்
சிறுமைப்பட்ட இடமாகிய பெரும்பாழிடமாக இவ்வூரைச் செய்யப்போகும் இவள் அழகு - (அழிந்துபோகும்)
					மேல்
# 347 கபிலர்
மணமுள்ள கள்ளை உண்பவன் அதற்குத் துணையாக சில தொடுகறிகளையும் தின்றதனால்,
பல் இடுக்குகளில் சிக்கிக் கொண்ட துணுக்குகளைத் துழாவி எடுத்ததால் சிவந்த நாவைப் போலச் சிவந்த,
ஒளிபொருந்திய அழகிய வாளால் பகைவரை எதிர்த்து வெட்டியதால், வாடிய தும்பைப் பூமாலையும்,
பகைவரைத் தாக்கியதால் இலை முரிந்து வடுப்பட்ட வாயையுடைய வேலையும்,
சந்தனம் கமழும் மார்பையும் உடைய, மறம் பொருந்திய போரைச் செய்யும் அகுதை என்பவனின்
ஆழமான, நீர் நிறைந்த இடமாகிய கூடல் நகர் போன்ற,
திரண்ட கரிய கூந்தலை உடைய இந்தப் பெண்ணின் இளைய மார்பகங்கள் சிவக்குமாறு
.......................... ................................
என்னதான் ஆகுமோ? பெரிதும்
பளபளப்பாக இருக்கும் பருத்த அடிமரங்களை உடையனவாக இருந்தாலும், வேந்தர்கள்
தங்கள் போர்த்தொழிலில் நன்கு பயிற்சிபெற்ற யானைகளைக் கட்ட,
நம் ஊருக்குள் இருக்கும் மரங்களின் வேர்கள் அசைந்தன.
					மேல்
# 348 பரணர்
வெண்ணெல்லை அறுப்பவர்கள் இசைக்கும் முழவின் ஒலியைக் கேட்டு அஞ்சி,
மரங்களின் கணுக்களில் கட்டியிருந்த தேன் கூட்டிலிருந்த தேனீக்கள் வெருண்டு பறக்க,
தேனடையில் உள்ள தேனை எடுக்கும் குயவர் சேரியும், சில சிறு
மீன்களைப் பிடித்துச் சுத்தம் செய்யும் பாணர்களின் சேரியும் உடைய,
உண்மையே பேசும் தழும்பன் என்பவனின் ஊணூர் என்ற ஊரினைப் போன்ற,
குவளை மலர் போன்ற, மைதீட்டிய  கண்களையுடைய இவளை, இவளின் தாய்
பெறாமல் இருந்திருப்பாளாயின், அளவுகடந்து
நிழல் இருக்குமிடமெல்லாம் நெடிய தேர்கள் நிறுத்தப்பட்டிருக்க, இடங்கள்தோறும்
சிவந்த நெற்றியையுடைய யானைகள் கட்டப்பட்டிருக்க,
வருந்தமாட்டா, எங்கள் ஊர்ப் பெருந்துறையில் உள்ள மரங்கள்.
					மேல்
# 349 மதுரை மருதனிள நாகனார்
தன் வேலின் கூரிய முனையைக் கொண்டு தன் நெற்றியில் உள்ள வியர்வையைத் துடைத்துக்
கடுஞ்சொற்களைக் கூறுகிறான் வேந்தன்; இப்பெண்ணின் தந்தையும்
வஞ்சினம் கூறுகிறானே ஒழியப் பணிந்து பேசவில்லை;
இதுதான் இவர்களின் கொள்கையானால், கூர்மையான பற்களையும்,
செவ்வரி படர்ந்து மதர்த்துக் குளிர்ந்த கண்களையுமுடைய, இந்த அழகிய மாமை நிறமுள்ள இளம்பெண்,
மரத்திலே தோன்றிய சிறிய தீ மரத்தையே அழிப்பது போல
தான் பிறந்த ஊருக்கு வருத்தம் விளைவிப்பவளாயினாள்.
					மேல்
# 350 மதுரை ஓலைக்கடை கண்ணம் புகுந்தார் ஆயத்தனார்
தூர்ந்துபோன அகழியையும், தளர்ந்துபோன ஞாயில்களையும்
இடிந்த மதிலையுமுடைய சிதிலமடைந்த பழைய இவ்வூர்
மேலும் போரைத் தாங்காதாகலின், என்னதான் ஆகுமோ? 
ஒலிக்கும் மேகத்தினின்று தோன்றும் இடிபோல் முழங்கும் முரசையும்,
விரைந்து செல்லும் குதிரைகளையுமுடைய வேந்தர்கள் காலையில் வந்து எங்கள் ஊரின்
நெடிய நிலையையுடைய வாயிலிடத்துச் சுற்றித் திரிகிறார்கள்;
பெண் தர மறுத்தால் போர் செய்யாமல் அமைதியாக இருக்கமாட்டார்கள்; போரில் ஈடுபட்டு
கொல்லுகின்ற பகைமைக்கேதுவாகிய வலிமையுடைய தன் தமையன்மார் கையில் ஏந்திய
வடித்த வேலின் இலையைப் போன்ற சிவந்த, மை தீட்டிய கண்களையும்,
வளையல்கள் தவழும் முன்கைகளையும் உடைய இளமகளின்
அழகிய, நல்ல மார்பகத்தில் தேமல் தோன்றியதால் -
					மேல்
 



# 351 மதுரை படைமங்க மன்னியார்
ஒலிக்கும் மணிகள் கட்டப்பட்ட பக்கங்களையும், பருத்த கால்களையும் உடைய யானைகளும்,
கொடி நின்று அசையும் உச்சியையுடைய தேர்களும், குதிரைகளும்,
படைக்கலம் ஏந்திய வீரர்களுடன் நெருங்கிச் சேர்ந்து, ஆரவாரமான ஒலியுடன் கூடிய
கடலைக் கண்டாற் போன்ற இடம் அகன்ற படையையுடைய,
வெற்றிபெற ஒலிக்கும் முரசினையுடைய வேந்தர்கள், எப்போதும்
வள்ளன்மையுடையவனாகிய எயினன் என்பவனின் வாகை என்னும் ஊர் போன்ற
இவளின் பெண்மை நலத்தை அவளின் தந்தை மணம்செய்து தந்தாலொழிய மனநிறைவு அடையமாட்டார்;
என்னதான் ஆகுமோ? தெளிந்த நீரையுடைய
பொய்கையின் மீனை உண்ட சிவந்த வரிகளையுடைய நாரை
தேன் பொருந்திய மருதமரத்தின் பூக்கள் உள்ள கிளையில் தங்குவதை வெறுத்தால்,
அழகிய காஞ்சி மரத்தில் உறங்கும்
பாதுகாவல் அமைந்த சிறப்பான இந்த மருதநிலத்து நல்ல ஊர் - (என்னதான் ஆகுமோ?)
					மேல்
# 352 பரணர்
கள் நிரம்பக் கொண்ட வெண்ணிறமான பாத்திரத்தில்,
பருத்த முலைகளிலிருந்து .............. கறக்கிறார்கள்;
குழிவாயுள்ள பச்சையான ஓலைக்குடையில்
புதரில் பூத்த முல்லைப் பூக்களைப் பறிக்கிறார்கள்;
அல்லித் தண்டால் செய்யப்பட்ட வளையல்கள் அணிந்த கையையுடைய மகளிர்,
மணற்குன்றுகளில் ஏறி நீரில் பாய்வதால்,
புறத்தே வாயைக் கொண்ட மதகுகள் வழியே நீர் வழிந்து செல்லும்;
----------------- --------------- விலைக்கான கள்ளையுடைய
பெரும் கொடையினைக் கொண்ட தித்தனின், வெண்ணெல் விளையும் வயல்கள் வேலியாகச் சூழ்ந்துள்ள
உறந்தையைப் போன்ற புகழ் மிகுந்த நல்ல அணிகலன்களைக்
கொடுத்தாலும், நெடுந்தகையனாகிய இப்பெண்ணின் தந்தை ஏற்றுக்கொள்ளான்; இவளும்
விரிந்த கிளைகளையுடைய, கொத்துக் கொத்தாகப் பூத்த, இளம் வேங்கை மரத்தைப் போல
கதிர்விட்டு ஒளியுடன் திகழும் நுண்ணிய பல தேமல் பரந்த,
கரிய முலைக்காம்பு தோன்றிய முலையையுடையவள்; இவள் தமையன்மார்,
சிறிய கோலுக்கு மிகவும் வருந்தும் குதிரைகளுடன் .....................
................ .................. யாரோ?
					மேல்
# 353 காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார்
குற்றமற்ற பொற்கொல்லன் பழுதறச் செய்த
பொன்னாலாகிய பல காசுகளைக் கொண்ட மேகலையை அணிந்த அல்குலுடன்,
பொன்னால் செய்த தலைமாலையால் ஓளி விளங்க ஒப்பனை செய்துகொண்டு,
பண்பும் செயலும் கொண்டு நடந்து செல்பவளின் அழகைக் கண்டு,
நிறுத்திய தேரினையுடையவனாய், வெளுத்த பார்வையுடையவனாய்
மீண்டும் மீண்டும் கேட்கும், வெல்லும் போரினையுடைய தலைவா!
‘இவள் யார் மகள்?’ என்று கேட்கின்றாய், இப்பொழுது நான் கூறுவதைக் கேள்! 
குன்றினைக் கண்டாற் போன்ற நிலையினையுடைய பல நெற்போர்களை
விடியற்காலையில் அழித்து எருதுகளைக்கொண்டு போரடித்த ,அகன்ற இடத்தில் குவித்த நெல்லை,
வலிய வில் வீரர்களுக்குச் சிலநாட்கள் வைத்து உண்ணக்கூடிய உணவாக நல்குவதில் மாறுதல் இல்லாத,
பழமையான குடிகள் நிறைந்த ஊருக்கு வேந்தனின் மகள் ஆவாள்; முன் நாட்களில்
இவளை மணந்துகொள்ள வேண்டி வந்த பெரிதும் மூத்த வேந்தர்களுக்கு
........................ ..........................................
போர்க்களத்தில் கொன்று, அவர் குருதியை ஆறாக ஓடச் செய்து,
கொறுவாய்ப்பட்டுப்போன கூர்மையான வாயையுடைய வேலோடு,
துணிக்கட்டுக்கள் நீக்கப்படாத புண்களை உடையவராய்,
அஞ்சத்தக்கவர்கள், இவள் தமையன்மார்.
					மேல்
# 354 பரணர்
அரசர்கள் முன் நின்று போரிடுவதற்கு வந்தாலும் அடங்காத,
வரிசையான, காம்போடு பொருந்திய வேலைப் போருக்கு முன் நீராட்டுவதற்கு,
போரில் சிறந்த பெரியோர்கள் வந்து கூடியவுடன் இப்பெண்ணின் தந்தையும் அவர்களுடன் சென்றான்;
வயல்கள் சூழ்ந்த கழனிகட்கு வாயிலாக அமைந்த நீர்நிலையில்,
கயல் மீனை உண்ணும் நாரையால் துரத்தப்பட்ட வாளை மீன்களை
நீரில் விளையாடும் பெண்கள் பிடித்துத் தம் வளமுடைய வீடுகளுக்கு எடுத்துச் செல்கின்ற
இந்த ஊர் தன் அழகை இழக்கும் நிலை வருமோ? 
தேமல் பரந்து உயர்ந்து நிமிர்ந்து நிற்கும் இளமுலைகளும்
புடைத்துக்கொண்டு இறங்கும் மூங்கில் போன்ற தோள்களும் உடைய இப்பெண்ணின்
பெண்மான் போன்ற மருண்ட மகிழ்ச்சியுடைய பார்வையால்-(இந்த ஊர் தன் அழகை இழக்கும் நிலை வருமோ?)
					மேல்
# 355
இவ்வூர் மதிலுக்கு ஞாயில்கள் இல்லை; அகழியில்
நீர் இல்லாததால் கன்றுகள் மேய்ந்து திரிகின்றன;
இந்த ஊரின் நிலையும் இதுதான்;
இவள் தந்தை இதனை எண்ணிப் பாராமல் அறியாமை மயக்கத்தில் உள்ளான்; இவள் தமையன்மார்
கண்ணுக்கினிய ஆத்திமாலையையும் விரைந்து ஓடும் குதிரைகளையும்டைய கிள்ளி
................... ...........................
					மேல்
# 356 தாயங்கண்ணனார்
களர் நிலம் படர்ந்து, கள்ளி மிகுந்து,
பகலில் கூவும் கூகைகளோடு, மாறுபட்டுக்கிடக்கும் பற்களையுடைய,
பிணம் சுடும் தீயின் வெளிச்சத்தில் தெரியும் பேய் மகளிரோடு
அச்சத்தை வரவழைக்கிறது, இந்தப் புகை தவழும் சுடுகாடு;
மனம் விரும்பும் காதலர்கள் அழுவதால் ஒழுகும் கண்ணீர்,
எலும்புகள் கிடக்கும் சுடுகாட்டிலுள்ள சாம்பலை அவிப்ப,
எல்லாரையும் தான் வெற்றிகண்டு, உலகத்து
மக்கட்கெல்லாம் தானே முடிவிடமாகிய சுடுகாடு,
தன்னை வெற்றி காண வல்லவர்களைக் கண்டதில்லை.
					மேல்
# 357 பிரமனார்
குன்றுகளுடன் சேர்ந்த மலைகளைத் தன்னோடு சேர்த்துக் கட்டிக்கொண்ட இந்த மண்ணுலகில்,
பொது என சொல்லப்பட்ட மூவேந்தர்களின் நாடு மூன்றையும்,
பொதுவானதாகக் கருதாமல் தனக்கே உரியதாகக் கொண்டு ஆண்டவர்களுக்கும்
முடிந்துபோய்விட்டன அல்லவா வாழ்நாட்கள்! துணையாகச்
செல்லவில்லை அல்லவா, அவர்கள் சேர்த்துவைத்த செல்வம்! இவ்வுலகில், அவரவர் செய்யும்
அறவினைகள்தான் அல்லவா மறுவுலகத்திற்குரிய சிறப்பான துணையாகும்! அந்த அறவினைத் துணையே
தெப்பம், அதனைக் கைவிட்டவர்க்கு மேலுலகப்பேறு அரிதாகும், துணைவர்கள் அழுதுகொண்டு
ஒன்றுகூட, உயிர் கூற்றுவனால் கவர்ந்து செல்லப்படும்பொழுது,
இக்கரையிலிருந்து நீந்தி அக்கரைக்குச் செல்வதற்கு - (அந்த அறவினைத் துணையே தெப்பம்)
					மேல்
# 358 வான்மீகியார்
கதிரவன் சுற்றிவரும் இப் பயன் மிக்க பெரிய உலகம்
ஒரே நாளில் ஏழுபேர் சொந்தமாக்கிக்கொள்ளும் இயல்பினது;
உலகியலாகிய இல்லறத்தையும், தவ வாழ்வாகிய துறவறத்தையும் ஆராய்ந்து பார்த்தால், துறவறத்துக்கு
(இல்லறம்) கடுகளவு கூட ஒப்பாகாது; எனவே,
பற்றுக்களைக் கைவிட்டனர் தவம் செய்வதை விரும்பியவர்கள்; அதனால்
பற்றுக்களை விட்டவர்களைத் திருமகள் கைவிடமாட்டாள்;
பற்றுக்களை விடாதவர்கள் திருமகளால் கைவிடப்பட்டவர்கள் ஆவார்கள்.
					மேல்
# 359 கரவட்டனாரி/காவட்டனார்
முற்றிலும் கெட்டுத் தேய்ந்து அழிந்து கிடக்கும், பல முட்களையுடைய பக்கமான இடங்களில்
வெவ்வேறு குரலுடன் கொடிய வாயையுடைய ஆந்தையுடன்,
பிணங்களைத் தின்னும் குறுநரிகள் தசை ஒட்டிய பற்களுடன் காணப்பட,
பேய்மகளிர் பிணங்களைத் தழுவிப் பற்றிக்கொண்டு
வெளுத்த தசையைத் தின்றதால், கொடிய புலால் நாறும் உடலுடையவராய்,
களர் நிலப்பக்கத்தில் காலை எடுத்துவைத்துக் கூத்தாடிக்
சுடுகாட்டுத் தீயின் வெளிச்சத்தில் காண்போர்க்கு அச்சம் உண்டாக நடமாடும்
சுடுகாட்டைத்தான் சென்றடைந்தனர் நாடுகளை வென்றவர்களும்;
உனக்கும் காட்டைச் சென்றடையும் அந்த நாள் வருதல் அப்படிப்பட்டதாகும்;
இவ்வுலகில் அவரவர் செய்த பழியும் நிலைத்து நிற்கும்; புகழும் நிலைத்து நிற்கும்.
அதனால், பழியை நீக்கிப் புகழை விரும்பியும்,
விருப்பு வெறுப்பு இல்லாமல், நடுவுநிலையில் இருந்து, நல்லவற்றையே பேசியும்,
ஒளிறும் தந்தங்களையுடைய பல களிறுகளுடன்,
பொன்னாலான அணிகலன்களை அணிந்த குதிரைகள் கலந்து வர,
பொன்னிழை அணிந்த நெடிய தேர்களை இரவலர்க்குக் குறையாது
கொள்க என்று கொடுத்து அனுப்பினால், வயது முதிர்வதற்கு முன்
நீ மேலுலகத்திற்குச் சென்ற பின்னரும்
இவ்வுலகில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் ஈகையால் நீ எய்திய புகழ்.
					மேல்
# 360 சங்க வருணர் என்னும் நாகரியர்
மிகுதியாக உண்ணாதவராக இருந்து, சிறிதே சினமுடையவராய்,
குறைவாகப் பேசி, கேள்வியில் பலவாறு சிறந்து,
நுண்ணிய உணர்வோடு பெரும் கொடையினராய்,
கலங்கிய கள்ளுடன், குளிர்ந்த தெளிவான கள்ளை அளிப்பவராய்,
நன்கு தாளித்த கொழுவிய துவையலை அளிப்பவராய்,
பணிவதில் மகிழ்ந்து, அன்புடன் தழுவிப் பேசும் இன்சொல்லையுடையவருமாய்,
பயனளிக்கும் செயல்களைப் பலருக்கும் செய்து
இன்புற்றிருக்க இவ்வுலகத்தை ஆண்டவர்கள்
சிலரே. பெருமானே! நான் சொல்வதை இப்பொழுது கேள், எந்நாளும்
பலரே அவ்வாறு வாழ்வதை அறியாதோரே
அவர்களுடைய செல்வம் நிலைத்து நில்லாது.
நிலையில்லாச் செல்வத்தின் பண்பு இன்றும் அப்படித்தான். அதனால்,
நாள்தோறும் ஒழுக்கத்தில் குறையாமல் வாழ்க. உன்னிடம் பரிசிலை
விரும்பி வருவோரின் கையை நிரம்பச்செய்வதைக் காத்துக்கொள்க, காண்போர்க்கு அச்சம் வருமாறு
கேடு நிலைத்திருக்கும் பாழிடமாகிய மாறுபட்ட இடத்துக்குத் தக,
கள்ளிகள் ஓங்கி வளர்ந்த சுடுகாட்டுப்பக்கம்
பாடையை விட்டு இறக்கிய பின்பு, கள்ளுடன்
தருப்பைப் புல்லைப் பரப்பிய இடத்தில் படைக்கப்பட்ட கொஞ்சம் சோற்றை உணவாகப்
புலையன் உண்ணுமாறு படைக்க, அதைப் புல்லின்மேல் இருந்து உண்டு,
ஈமத் தீயில் வெந்து சாம்பலானவர்களைக் கண்ட பிறகும்,
பகுத்துண்டு வாழும் பலருள்ளும் பலர் ஒழுக்கம் குன்றாத புகழ் வாய்க்கப்பெற்றிலர்.
					மேல்
 




# 361
கார் காலத்தில் தோன்றும் இடியைப் போல் சட்டெனத் தோன்றி, ஆரவாரமாக,
அரிய பல உயிர்களைக் கொள்வதற்குச் சுழன்று திரியும் கூற்றமே,
உன் வருகைக்கு எங்கள் தலைவன் அஞ்சமட்டான்; அவன், நல்ல பல
நூல்களை கேட்டு அறிவு நிரம்பிய வேள்வி செய்யும் அந்தணர்களுக்கு
அரிய அணிகலன்களை நீர்வார்த்துக் கொடுத்து, பெரும் தகைமையை உடைய எம் தலைவன்;
தாயைவிட அன்பில் சிறந்தவனாக, இரவலர் பலர்க்கும் அளித்து,
நல்ல நடைபயின்ற குதிரைகளையும் யானைகளையும் தன்
அருளியியல்புகளைப் பாடுவோர்க்கு மிகக் கொடுத்தும்,
உருண்டோடும் பல தேர்களை, பகைவரைக் கொன்ற தன்
அடியினைச் சரணடைந்தோர்க்கு இனிமையுடன் வழங்கியும்,
பொன்னாலான மாலையைப் பெறுவதற்குரிய பாடினிகளுக்கும்,
பொற்றாமரைப் பூவைப் பாணர்களுக்கு,
இவ்வாறு பலர்க்கும் பரிசுகள் கொடுத்துக் கலந்து அளவளாவி நெடிய இருக்கையில் இருக்கும் பொழுது,
பொறுமைக் குணங்களால் நிறைந்த கற்பினையும், மான் போன்ற பார்வையையும்,
வில் போல் வளைந்த புருவத்தையும், கடுமையான
சொற்களைப் பேசுவதற்கு அஞ்சும் நாவையும், முள் போன்ற பற்களையும் உடைய மகளிர்,
அல்குலில் அணிந்த மேகலையின் எடை தாங்காமுடியாமல் தளர்ந்து, மென்மையாக
கலங்கலாகிய அழகிய கள்ளின் தெளிவைப் பொற்கலத்தில் எடுத்துவந்து
அமிழ்தம் என்று உண்பிக்க உண்டு, இகழ்ச்சி இல்லாதவன்;
நிலையே இல்லாத உலகத்தின் நிலையாமையைப் பற்றி நீ
அவனுக்குச் சொல்ல வேண்டா; எங்கள் தலைவனாகிய அவன், முன்னரே அறிந்து,
முற்றிலும் உணர்ந்த கேள்வி அறிவுடையவன், எனவே
......................... ............................ விவேகத்தினால்.
					மேல்
# 362 சிறுவெண்டேரையார்
கதிரவனைப்போல் ஒளியுடன் திகழும் ஆராய்ந்தெடுத்த மணிகள் பதித்த,
பிறைமதி போன்ற வளைந்த மாலை மார்பில் தவழ,
பலியூட்டப்பட்ட முரசு பாசறையில் ஒலிக்க,
பொழிலின் இடமெல்லாம் பரந்து நின்று, பெரிய வீரச் செயல்களைச் செய்யும் ஆடவர்,
போரை விரும்பி, உயர்த்திய வெற்றியையுடைய வெண்மையான கொடியை ஏந்தி,
வருத்தும் தெய்வம் உருவெடுத்து வந்தது போலக் கூட்டமாக வந்த சேனை
கூற்றுவனைப்போல் எவராலும் எதிர்த்தற்கு அரிய வலிமையுடன்,
பகைவரைத் தாக்குதற்கு அவர்கள் எழுப்பும் ஒலியைக் கேட்பீராக. அந்தணர்களே!
நான்மறைகளில் இதைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை, இப்போர் அருளின் அடிப்படையில் செய்யப்படாததால்;
அறநூல்களிலும் கூறப்படவில்லை, இது பொருள்பற்றிய செயலாகையால்;
நிலையாமையைப் பற்றிய தெளிவின்மை நீங்கி, தெளிவின்மை காரணமான மயக்கத்தையும் போக்கி
அந்தணர்களுக்குக் கொடையளிக்கும் பொழுது அவர்கள் கையில் வார்த்த நீர், கடல்வரை ஓட,
நீர்வளம் மிகுந்த மருதநிலத்து ஊர்களைக் கொடுத்து, 
இரவலர்களுக்கு மிகப் பெரிதும் சோறு வழங்கி,
பரிசிலர்களுக்குப் பெருமைக்குரிய நல்ல அணிகலன்களைப் பெருமளவில் கொடுத்து,
சிறிய வெண்ணிற எலும்புகள் கிடக்கும் நெடிய வெண்மையான களர் நிலத்தில்
வலிய வாயையுடைய காக்கை கூகையுடன் கூடிப்
பகற்பொழுதிலும் கூவும் அகன்ற இடத்தில்,
சுடுகாடு இருக்குமிடம் தெரியாதபடி செறிந்த ஆரவாரம் மிக்க சுற்றத்தார் நிறைந்திருக்க,
இனி அங்குத் தனக்கு இடமில்லை என்று வீட்டிலிருந்து மெல்ல நீங்கக் கருதி,
உலகம் சிறிதாதலால் இங்கு இனி இயங்குவதற்கு அஞ்சி,
விண்ணுலகுக்குத் தன் புகழுடம்புடன் செல்வதற்காகப் போரிடுகின்றனர்.
					மேல்
# 363 ஐயாதி சிறுவெண்டேரையார்
கரிய கடல் சூழ்ந்த பெரிய இடத்தையுடைய உலகின் நடுவே,
உடைமரத்தின் இலை அளவுகூட இடத்தையும் பிறர்க்கு இல்லாமல்
தாமே ஆண்டு பாதுகாத்த அரசர்களின் எண்ணிக்கை,
கடலின் அலைகள் கொழித்தொதுக்கும் மணலின் எண்ணிக்கையைவிட அதிகம்; பிணங்களைச் சுடும். 
சுடுகாட்டைத் தங்கள் இடமாகக் கொண்டு போய்ச்சேர்ந்து தத்தம்
நாடுகளைப் பிறர் கைப்பற்றிக்கொள்ள இறந்துவிட்டனர்;
அதனால், நான் சொல்வதை நீயும் கேட்பாயாக. அழியாத
உடம்போடு என்றும் உயிரோடு இருந்தவர் யாரும் இல்லை;
சாதல் என்பது உண்மை; அது பொய்யன்று;
கள்ளி பரவிய முட்செடிகள் உள்ள சுடுகாட்டின்
பாடைகள் கிடக்கும் அகன்ற வெளியிடத்தில்,
உப்பில்லாமல் வேகவைத்த சோற்றை,
கையில் எடுத்துப் பிணத்தைத் திரும்பிப் பார்க்காமல்,
பிணம் சுடும் புலையன் கொடுக்கப் பெற்று
நிலத்தில் வைத்துப் படைத்த வேண்டாத உணவை உண்ணும்
கொடிய நாள் வருவதற்கு முன்பே,
நீ கருதிய தவமாகிய நல்வினையைச் செய்க,
கடல் சூழ்ந்த இவ்வுலகத்தை முழுவதுமாகத் துறந்து.
					மேல்
# 364 கூகை கோழியார்
வாடாத பொன்னாலான மாலையைப் பாடினி அணிய,
பாணன் தலையில் குளத்தில் பூக்காத
நெருப்பினைப் போன்ற பெரிய பொற்றாமரை அசைய,
கரிய, பெரிய ஆட்டுக் கடாவின் ஊனைத் தீயிலிட்டுக்
காரம் சேர்த்துச் சமைத்த பெரிய கொழுத்த தசையை,
மது உண்ணும் சிவந்த வாயிலிட்டு நாவால் இரண்டு பக்கங்களிலும் புரட்டிக் கொடுத்து
உண்டும் தின்றும், இரப்போர்க்குக் கொடுத்தும்
மகிழ்வோம் வருக!. வீரத்தோடு போர் புரிபவனே!
இவையெல்லாம் அரிதாய்ப் போய்விடும் காலமும் உண்டு பெருமானே!
நிலத்தைப் பிளந்து ஊடுருவிச் செல்லும் அசைகின்ற பல வேர்களையுடைய
முதிய மரத்தின் பொந்துகளிலிருந்து விரைவுடன் கூவும்
பேராந்தைகள் நீங்காத,
தாழிகளையுடைய சுடுகாட்டை அடையும்பொழுது -
					மேல்
# 365 மார்க்கண்டேயனார்
தம்முள் கலந்த கரிய மேகங்கள், மின்னல் முதலிய தொகுதியையுடைய ஆகாயத்தை முகமாகக் கொண்டு,
அதில் இயங்கும் ஞாயிறு, திங்கள் ஆகிய இரு சுடர்களைக் கண்களாகக் கொண்டு, இடம் விட்டு இடம் பெயரும்
காற்றும் ஊடே செல்லாத இடமாகிய, எவ்வுயிரும் செல்லுதற்கரிய வானத்தைக் கடந்து,
வயிரம் வைத்து இழைத்த சக்கரத்தின் குடத்தில் ஒளிரும் மணிகள் பொருந்திய ஆரக்கால்களையுடைய
பொன்னாலான ஆழிப்படையை (ஆட்சிச் சக்கரத்தை) போரின் முன்னே ஆற்றலுடன் செலுத்திப்
பகைவரை அழித்து, மேலே பகைவர் வாராததால், போரில் மிகுந்த வலிமையையுடைய
முன்னோர்களாகிய வேந்தர்கள் விண்ணுலகுக்குச் செல்லக் கண்டும், உடன் செல்லாது, இன்னும்
தன் நலத்தைப் பிறர்க்கு விற்கும் விலைமகளிரைப் போல, பலர் என் நலத்தைப் பாராட்டிப் புகழ,
நான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேனே என்று பலவகையிலும் மாட்சிமை அடைந்த
நிலமகள் தன் நிலைமையை நினைத்து வருந்திக் காஞ்சிப் பண்
பாடி அழுததாக அறிவுடையோர் கூறுவர்.
					மேல்
# 366 கோதமனார்
சிறந்த குறுந்தடியால் அடிக்கப்பட்டுப் பெரும் ஒலியெழுப்பும் முரசின் முழக்கம்,
மற ஒழுக்கமுடைய வீரரிடத்தே சென்று, வேந்தரின் ஆணை என்ற ஒரு குறிப்பே தோன்ற
பாம்பை நடுங்கச் செய்யும் இடி முழங்குவது போல முழங்க,
எல்லாச் சிறப்பிற்கும் தாம் ஒருவரே உரியவர் என்ற பெருமை உடையவரும்
தங்கள் புகழை நிறுவித் தாம் மடிந்துபோய்விட்டனர்;
அதனால், அறவோன் மகனே! வீரர்களுக்குத் தலைவனே!
உனக்கு ஒன்று சொல்கிறேன், அதைக் கேட்பாயாக;
உன்னுடைய வலிமையைப் பிறர் அறியாமலும்,
பிறர் சொல்லும் சொல்லின் உட்கருத்தை நீ அறிந்துகொண்டும்,
ஞாயிறு விளங்கும் எல்லையாகிய பகற்பொழுதில் வினைபுரிவோர்க்கு உதவி செய்தும்,
இரவுப் பொழுதில் மறுநாள் செய்ய வேண்டிய பணிகளை ஆராய்ந்து
பணியாளர்களுக்கு உரைப்பாயாக; பெருமானே! பெரிதும்
உழுதலைச் செய்து முடித்த பெரிய எருது வைக்கோலைத் தின்றாற்போலச்,
சிவந்த கண்களையுடைய மகளிரோடு சிறிது ஊடிக் கலந்து,
அழகிய கள்ளின் தெளிவை தேர்ந்தெடுத்த நல்ல பாத்திரங்களில் ஊற்றித் தர,
குறைவில்லாத செல்வத்தை உடையவனே! நீ அருந்துவாயாக. 
ஆட்டுக் கடாவை அறுத்துச் சூட்டுக் கோலில் கோத்துச் சுட்ட இறைச்சியை உண்ணும்படி,
தெய்வத்திற்குப் பலியுணவு வேண்டுவோர்க்கு இலையில் வைத்துக் குறையாது கொடுத்து,
சோறு வேண்டுவோர்க்கு இடமளித்து உண்பித்து,
நீர்நிலைகள் மிக்க ஒழுகிய மணல் பரந்த கரையில் இருக்கும்
சோலைகள்தோறும் அமைக்கப்பட்ட வெறியாடல் களங்களில்
இனி இடமில்லை என்னும்படி தொகுத்து நிறுத்தப்பட்ட ஆடுகளைப் போல்,
இறத்தல் உண்டு என்பது உண்மை; அது பொய்யன்று.
					மேல்
# 367 ஔவையார்
நாகலோகத்தைப் போன்ற வளமான பகுதிகளையுடைய நாடு
தம்முடையதாகவே இருந்தாலும், இறக்கும்பொழுது அது அவர்களுடனே செல்வதில்லை;
அது அவனுக்குப் பின்னர் வரும் வேற்று நாட்டவராயினும், வலிமையுடையோர்க்குப் போய்ச் சேரும்;
பொருளை வேண்டி இரந்த பார்ப்பனர்களுக்கு, அவர்களின் ஈரக்கை நிறைய
பூவும் பொன்னும் நீர்வார்த்துக் கொடுத்து,
நல்ல அணிகலன்களை அணிந்த மகளிர் பொற்கலங்களில் கொண்டுவந்து கொடுக்கும்,
நாரால் வடிகட்டப்பட்ட கள்ளின் தெளிவை அருந்திக் களித்து,
இரவலர்க்கு அரிய அணிகலன்களைக் குறையாது கொடுத்து,
இவ்வுலகில் நீங்கள் வாழ்வதற்காக வரையறுக்கப்பட்ட நாட்கள் முழுதும் வாழவேண்டும்;
நீங்கள் வாழும்பொழுது இவ்வுலகில் செய்த நல்வினைகளைத் தவிர,
நீங்கள் இறக்கும்பொழுது உங்களுக்குத் துணையாக வருவது வேறொன்றுமில்லை.
வீடுபேறு ஒன்றையே விரும்பிப், புலன்களை அடக்கிய அந்தணர்கள் வளர்க்கும்
முத்தீயைப் போல காண்பதற்கினிமையாய் வீற்றிருக்கும்
வெண்கொற்றக் குடையையும், கொடிகட்டிய தேரையும் உடைய மூவேந்தர்களே!
நான் அறிந்த அளவில் முடிவாகத் தெரிந்தது இதுவேயாகும்; வானத்தில்
ஒளிர்ந்து தோன்றும் விண்மீன்களையும் இம்மென்ற ஒலியுடன்
பெய்யும் பெரிய மழைத்துளிகளையும் விட
மேம்பட்டு விளங்குவன ஆகுக, நும்முடைய வாழ்நாட்கள்.
					மேல்
# 368 கழா தலையார்
யானைகளைப் பெற்றுவரலாம் என்று நினைத்து வந்தால்,
ஒளியுடன் கூடிய மேகங்களைத் தடுக்கும் மலைபோன்ற
யானைகளெல்லாம் அம்புபட்டு இறந்து கிடக்கின்றன;
கொடிஞ்சியையுடைய நெடிய தேர்களைப் பெறலாம் என்று நினைத்து வந்தால்,
விரைந்து செல்லும் குதிரைகள் வளைவான பாதைகளில் சென்றதால்
நெடிய வலிமை அழிந்து நிலத்தில் கிடக்கின்றன;
கொய்யப்பட்ட பிடரி மயிருள்ள குதிரைகளைப் பெறலாம் என்று நினைத்து வந்தால்,
உடலெல்லாம் காயத்துடன் மரணமடைந்து
காற்றில்லாத கடலில் உள்ள மரக்கலங்கள் போல்
குருதி வெள்ளத்தில் நிறைந்து மிதக்கின்றன; அவ்வாறு,
பெறுவதற்கு எதுவும் இல்லாததால், உள்ளத்தில் மகிழ்ச்சியின்றி,
இரப்போர் வருந்தும் கொடிய அகன்ற போர்க்களத்தில்,
ஆள்களாகிய வைக்கோலை அறுத்துக் கடாவிட்டுப் போராகக் குவித்த வாளாகிய ஏரையுடைய உழவனே!
மதமுள்ள யானையின் கால்தடம் போன்ற என்
தடாரிப் பறையின் தெளிவான கண் ஒலிக்க இசைத்துப்
பாடி வந்ததெல்லாம், கூத்தர்களின்
முழவு போன்ற அழகிய மணிகளால் செய்யப்பட்ட வாகுவலயம் செறிந்த உன் தோளில் கிடக்கும்
பாம்பு போன்ற மாலையைப் பெறுவதற்குத்தான் போலும்.
					மேல்
# 369 பரணர்
இரும்பால் செய்யப்பட்ட பூண் அணிவிக்கப்பட்ட, உயர்ந்த, அழகிய கொம்புகளையும்,
பெரிய துதிக்கையையும் உடைய யானைகள் மேகங்களாக,
வஞ்சினம் கூறும் மறவர்கள் பகைவரைத் தாக்குவதற்காக உயர்த்திய
வாள்கள் மின்னல் ஆக, மின்னுகின்ற குறுந்தடியால் அடிக்கப்பட்டு,
குருதிப்பலி ஊட்டப்பட்ட முரசின் முழக்கம் மழையின் இடி முழக்கம் ஆக,
அந்த இடி முழக்கத்தால் பகையரசராகிய பாம்புகள் நடுங்கி வருந்தும் பொழுதில்,
மிகுந்த வேகத்துடன் செல்லும் குதிரைகள் வீசுகின்ற காற்று ஆக,
விசைத்துக் கட்டப்பட்ட வலிய வில்லின் பெரிய நாண் செலுத்திய
அம்புகளாகிய மழை பொழிந்த இடம் அகன்ற போர்க்களத்தில்
குருதி தோய்ந்து ஈரமாகிப் போன போர்க்களமாகிய வயலில், தேர்கள் ஏர்கள் ஆக,
விடியற்காலைப் பொழுதில் புகுந்து, நீண்ட படைக்கலங்களைப் பயன்படுத்திப்
பகைவர்களின் படைக்கருவிகள் கீழ்மேலாகப் புரட்டப்பட்ட, திருத்தமான புதிய படைச்சாலில்,
பிடித்தெறியும் ஒளியுள்ள வேலும், கணையமரமும் தூள்படச் சிதைவுறுதலால் விதைகளாய் நிலத்தில் விதைத்து,
பெரிய தலைகளை வெட்டிச் சாய்த்து, அச்சத்தை விளைவிக்கும் மூளையும் நிணமுமாகிய கூழே பசிய பயிராக,.
பேய்மகளிர் பற்றி இழுக்கும் பிணங்கள் குவிக்கப்பட்டு உயர்ந்த பல போர்களை
கூட்டமான நரிகளும், பேய்களும் இழுத்துப் போரடிக்க,
பூதம் காவல்புரிய, பிணங்களாகிய நெல் பொலிந்த போர்க்களத்தைப் பொருந்தி,
போர்க்களம் பாடும் பொருநரின் பாடல்களைக் கேட்டற் பொருட்டு வீற்றிருந்த பெருமைக்குரியவனே!
கல்லில் தேய்த்து அரைக்கப்படும் வெண்மையான சந்தனக் கட்டை போன்ற, இழுத்துக் கட்டப்பட்ட,
குற்றமில்லாத, புதிதாகப் போர்க்கப்பட்ட,
அரித்த ஓசையையுடைய பெரிய தடாரிப் பறை சூடுபடும்படி அடித்துப்
பாடிவந்தேன் பெருமானே! ஓசை நிறைந்து
மேகங்கள் தவழும், ஒலிமிகுந்த அருவிகள் நிறைந்த,
பொன்னிறமான நெடிய உச்சியையுடைய இமயம் போன்ற,
பட்டமணிந்த நெற்றியையுடைய, சுருங்குதல் இல்லாத
துடி போன்ற அடிகளையுடைய, கன்றுகளைக்கொண்ட பெண்யானைகள் இடையிடையே நிறைந்துள்ள
ஆண்யானைகளைப் பரிசாக அளிப்பாயாக.
குறையாத ஈகைத் தன்மையை விரும்புபவனே! 
					மேல்
# 370 ஊன்பொதி பசுங்குடையார்
வள்ளன்மை உடையவரைக் காணாததால், பிழைக்கும் வழியை எண்ணி,
பனை நாரையும் பனங்குருத்தையும் வைத்துத் தொழில் செய்து உண்டு, ஒருசேரப்
பசி வாட்டத் துவண்டுபோன என்னுடைய மிகப் பெரிய சுற்றத்தார்க்கு
நிறைய உணவு பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு, நாற்றிசையும் தேடி,
உடலில் வியர்வை ஒழுக அலைந்து புலர்ந்து, வயிறு ஒட்டிப்போய் வாட வந்து
காட்டு வழியில் வாழும் கோட்டானின் துடியொலி போன்ற கடிய குரலோசை,
உழுஞ்சில் மரத்தின் பிரிந்த கிளைகளிலிருந்த பருந்தின்
பெடையை அழைக்கும் ஆண்பருந்தின் குரலோடு கலந்து ஒலிக்கும் அவ்விடத்தில்,
மூங்கில் மரங்கள் காய்ந்து உலறிக் கிடக்கும் அந்த வறட்சி மிகுந்த நீண்ட வழியில்,
வரிகளையுடைய மரல் பழங்கள் வற்றி வாடிக் கிடக்கும் காடுகள் பின்னே செல்ல,
பழுத்த மரத்தைத் தேடிச் செல்லும் பறவைகளைப் போல,
ஓளி பொருந்திய போர்க்கருவிகளாகிய மழை, தலைகளாகிய கனிகளைக் கொய்ய,
முழங்கி வரும் குருதிவெள்ளம் நிலத்தின் மேல் பரவிச் செல்ல,
விளைந்த செழுமையான கதிர்களாகிய கழுத்தை அறுத்து, காலோடு சேர்த்துக் குவித்து,
இறந்த பிணங்களாகிய பல குவியல்கள் அழியும்படி வளைத்து,
யானைகளை எருதாகவும், வாளைப் பனை மடலாகவும் கொண்டு செலுத்தி,
போரடிக்கச் சுற்றிவரச்செய்த பகைவர் வீழ்ந்து கிடக்கும் கடாவிடும் இடத்தில் 
அகன்ற கண்ணையுடைய தடாரிப் பறை ஒலிக்க அறைந்து,
உன்னுடைய வலிமை மிகுந்த, அகன்ற போர்க்களம் பொலிவுபெறுக எனப் பாராட்டி,
இரும்பினால் செய்யப்பட்ட பூண் அணிந்த, உயர்ந்த, அழகிய கொம்புகளையுடைய,
மலை போன்ற யானைகளைப் பரிசிலாகப் பெறலாம் என்று நான் வந்தேன், பெருமானே!
நன்றாக வடிக்கப்பட்ட கோடரி பாய்ந்து வெட்டியதால் துண்டாகிக் கிடந்த
தொடியணிந்த பெரிய கை ஒன்றைத் தூக்கி, அஞ்சாத வீரர்களின்
கூட்டத்தில் தன்னுடைய கால்களைச் சுற்றிக்கொள்ளும் வரியுள்ள குடல்களை ஒன்றுசேர்த்து
அழுகுரலையுடைய பேய்ப்பெண் பாடிக் கூத்தாட, கழுகோடு,
சிவந்த காதுகளையுடைய பருந்துகளும் வட்டமிட்டுத் திரியும்
அஞ்சத்தக்கப் இடங்களையுடைய போர்க்களத்திற்கு உரிமையுடையவனே!
 				          மேல்
 




# 371 கல்லாடனார்
அகன்ற இடங்களையுடைய இவ்வுலகில் பாதுகாப்பவரைக் காணாததால்,
மரத்தின் அடியில் இருந்து பட்டினி கிடந்த,
அரும்புகளாக இருந்து மலர்ந்த பூக்களை நாரால் மாலையாகத் தொடுத்து,
அங்குமிங்கும் அசையும் கரிய தலைமுடி அழகுபெறச் சூடிக்கொண்டு
பறையொடு கட்டப்பட்ட இசைக் கருவிகள் அடங்கிய பையை உடையவனாய், சிதைந்த வாயையுடைய
சமையல் செய்யும் பானையை உடையாதபடி மெல்லத் தூக்கிகொண்டு,
மன்றத்திலிருந்த வேப்பமரத்திலிருந்த ஒளிபொருந்திய பூக்கள் உதிர,
வேறு எந்தச் செயலையும் செய்ய விரும்பாமல், பொருள் ஒன்றையே விரும்பும் இருக்கையை உடையவனாய்,
சோற்றுக்குரிய அரிசி இல்லாததால், அரிய வழிகள் பல கடந்து,
கூர்மையான வாயையுடைய பெரிய வாள்படை, அவைகளின் இயல்பிற்கேற்ப மேலும் கீழுமாகச் சுழல,
தம்மை நோக்கி வரும் அம்புகளை ........................
...................... அன்பில்லாமல் பகைவர் மேற்சென்று
ஒலிக்கும் முரசு முழங்கும் புகழ் நிறைந்த பாசறையில் தங்கி,
வில்லையே ஏராகக் கொண்டு போராகிய உழவைச் செய்யும் உன்னுடைய நல்ல புகழை நினைத்து,
தலைகள் வெட்டுண்டு குறையுடல்களாய் விழும் பிணங்கள் எதிரே குவிய, அக் குவியலாகிய போரை அழித்து,
யானைகளாகிய எருதுகளைப் வாளாகிய பனைமடலால் செலுத்தி
போரடிக்கச் சுற்றிவரச்செய்த பகைவர் வீழ்ந்து கிடக்கும் கடாவிடும் இடத்தில் 
முழுமதி போன்றதும், வாரால் இறுகக் கட்டப்பட்டதுமாகிய என் தடாரிப் பறையை
அதன் அகன்ற கண் அதிரும்படி அடித்து, ஆகுளிப் பறையைக் கொட்டிக்கொண்டு,
பணை என்ற பறை போன்ற நெடிய கால்களையும், பலவாகச் சொரசொரப்புடைய பெரிய கையையும்,
புள்ளிகள் நிறைந்த முகத்தையுமுடைய யானைகளைப் பரிசாகப் பெறலாம் என்று வந்தேன். பெருமானே!
பன்றியின் கொம்பு போன்ற வெண்ணிறமான பற்களால் கடித்து இழுத்து,
தசை கலந்த வெண்மையான கொழுப்பைத் தின்று சுவைப்பவளாய்க்,
குடல்களைத் தலையில் மாலையாக அணிந்துகொண்டு, உண்ணவும், தின்னவும்
குறையாதவாறு பெரிய வளமாகிய பிணங்களைத் தந்த இவ்வேந்தன், வானத்தில்
விளங்கும் பல விண்மீன்களைவிடப் பல்லாண்டுகள் வாழ்வானாக என்று,
அச்சம் பொருந்திய பேய்மகள் பாடிக் கூத்தாடும்
குருதி உலர்ந்து செந்தூள் பறக்கும் போர்க்களத்திற்கு உரிமையுடையவனே!
					மேல்
# 372 மாங்குடி கிழார்
இழுத்துக் கட்டப்பட்ட தடாரிப் பறையை இம்மென ஒலிக்கும்படி அறைந்து,
உன்னைப் பாராட்டிப் பாடி வந்ததற்கெல்லாம் காரணம் - முழுமையாக
ஒளிவிடும் வாளின் பிரகாசமான ஒளி வெற்றியுண்டாக மின்னலைப் போல் மின்னி,
அம்புகளாகிய மழையைப் பொழிய, இடம் நிறைந்த பாசறையில்
மனம் பொருந்தாத பகைவர்களின் அறுபட்ட தலைகளாகிய அடுப்பில்,
கூவிளமரத்தின் கட்டைகளை விறகாகக் கொண்டு ஆக்கிய கூழில் வரிக்குடல்கள் நெளிய
தலையில் பொருந்தாத மண்டையோட்டை அகப்பையாகவும், வன்னிமரத்தின் கிளையை காம்பாகவும் கொண்டு,
குழந்தை பெறுதலில்லாத பேய்மகள் தோண்டித் துழாவிச் சமைத்த
விலங்குகளும் வேண்டாத ஊன்சோறாகிய பிண்டத்தை பேய்மடையன் கொற்றவைக்குப் படைக்க உயர்த்த
திருமண விழாவில் தெளிப்பது போல் வந்தவர் மீதெல்லாம்,
’கலயத்தின் சூடான வாயிலிருந்து வந்த புதுநீர் அமைவதாக.’என்று தெளித்துப்
புலால் நாறும் போர்க்களம் விளங்க மறக்கள வேள்வி செய்தவனே! உன்னுடைய,
நிலவுபோல் ஓளியுடன் திகழும் மாலையைப் பெறலாம் என்பதே.
					மேல்
# 373 கோவூர்கிழார்
இடியின் முழக்கத்தைப் போல முரசம் முழங்க,
போரில் பயிற்சி பெற்ற யானைகள் மேகங்களாக,
தேர், குதிரை ஆகியவை அழிந்து சிதைந்து மழைத் துளியாக விழ, அச்சம் உண்டாக
அம்புகளாகிய காற்று வீசுகின்ற இடமகன்ற பாசறையில், 
சொரியும் குருதியோடு கையிலேந்திய ஒளிபொருந்திய வாள்களால்
உடலைப் பிழிந்து எடுப்பதைப் போலப் பிளந்ததால் உண்டாகிய புண்களைக் கண்டு மகிழ்ச்சியடைய,
வலிமையுடைய வீரர் போர் செய்வதை விரும்பித் திரண்ட பெரும்படையால்
கொங்கு நாட்டவரைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்த வெற்றியையுடைய வேந்தனே!
........................ பெரிய புள்ளிகளையும்,
மடப்பமுள்ள கண்களையுமுடைய மயில்கள் மனம் மாறுபட்டு அங்கும் இங்கும் நடப்பது போல்,
நெடுஞ்சுவர்களையுடைய தங்கள் நல்ல வீடுகள் தனிமைப்பட அவற்றை விட்டு அகன்று சென்று,
மெல்லிய தோள்களையுடைய மகளிர் ஊர் மன்றத்தை நெருங்காமல்,
தங்கள் கணவர் போரிற் பெற்ற விழுப்புண்ணைக் காண விரும்பி .....................
.................... தலையாட்டம் அணிந்த குதிரைகளை வாழ்க என வாழ்த்தி,
தங்கள் குறைகளைச்  சொல்லி ஆதரவு பெற யாரும் இல்லாததால், உன் நல்ல தாள் நிழலைச் சேர்வதற்காக,
நுண்ணிய அணிகலன்களை மார்பில் அணிந்த பரட்டைத் தலையுடைய சிறுவர்கள்
தாம் விளையாடிய அம்புகள் தீர்ந்து போனதால் தமக்கு அவற்றைச் செய்து தரும் உறவுகளைக் காணதவராய்,
......................... வாளால் தாக்காதவனாய்
எதிர்த்துப் போரிட்ட அரசன் புறமுதுகிட்டு ஓடியதால் அழிந்து கெட்ட போர்க்களத்தில்,
பெரிய மாடங்களைப் பற்றி எரிக்கும் தீப்போல உன் படையை நெருங்கி, கொம்புகள் ஒடிந்து
இடியால் தாக்கப்பட்டு விழும் மலை போல நிலத்தில் விழும்படி கொன்று,
சென்றான் உறுதியாகக் கொலை செய்வதில் வல்லவன்; அவன்மேல் சென்று அவன் மீது எறியும்போது ஏற்பட்ட
கொடும் புண்ணைக் கண்டு அதற்கு மருந்திடுவோரும், அதனைக் காணச் சகிக்காமல் கண்கலங்கி வருந்த
வஞ்சி மாநகரத்தின் முற்றம் உனக்கு வெற்றி பொருந்திய போர்க்களமாக மாற,
அஞ்சாத வீரர்களின் பிணமாகிய நெற்போர்களை அழித்து,
நீ குடநாட்டில் கடாவிட்டு அழித்தாய் பெருமானே!.
உன்னுடைய முரசு முழங்கும் பெரிய போர்க்களம் பொலிவுபெறுக,
விளக்கமுடைய உயர்குல வேந்தர்களின் போர்க்களம்தோறும் சென்று,
வெற்றியுடன் விளங்குக என்று புகழ்ந்து, புள்ளிகள் பொருந்திய முகத்தையுடைய யானைகளைப் பரிசிலாகப்
பெற்றனர் என்பர் பெரியோர், நானும்
அழகிய கண்ணையுடைய பெரிய தடாரிப் பறையை அதிரும்படி அடித்து,
இசையறிவில் முதிர்ச்சி பெறாதவனாக இருந்தாலும், நான் உன்னை அன்புடன் வாழ்த்தி,
உன்னைப் போன்றவர் வேறு எவரும் இவ்வுலகில் இல்லாததால்,
நீ பகைமன்னர்களின் மதிலிடத்தே பெற்ற பொருளைப் பெறலாம் என்று வந்தேன் பெருமானே!
பகைவர் புகழும் ஆண்மையும், நண்பர்களுக்குக்
குறைவின்றி உதவும் பண்பும் உடையவனாய், பேய்க் கூட்டமும்
நரிக் கூட்டமும் திரியும் அவ்விடத்தில், ஊன் தின்னும்
சிவந்த காதுகளையுடைய கழுகுகள் கூடிக்
காண்பவர்க்கு அச்சத்தை உண்டாக்கும் இடமாகிய போர்க்களத்தை உரிமையாக உடையவனே!
					மேல்
# 374 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
காட்டில் மேய்ந்த பிறகு, அகன்ற கொல்லையில் தங்கும்
புல்வாய் என்னும் மானினத்தைச் சேர்ந்த ஆண்மானின் நெற்றிமயிர் போலப்
பொற்றாமரை விளங்கும் என் தலையிலுள்ள சிதறிக் கிடக்கும் மயிர் அடங்கிப் படியுமாறு,
குளிர்ந்த பனித்துளிகள் துளிக்கும், பொழுது புலராத விடியற்காலத்தில்
ஊர்ப்பொதுவிடத்தில் நிற்கும் பலாமரத்தின் பருத்த அடியில் இருந்து, என்னுடைய
தெளிந்த கண்ணையுடைய பெரிய கிணைப்பறையை நன்கு ஒலிக்கும்படி கொட்டி,
பெரிய கலைமான்கள் செவிசாய்த்துக் கேட்கும்படி இசைத்து, அழகுண்டாக
கரிய தண்டினையுடைய குறிஞ்சி நிறைந்த மலைப்பக்கத்தைப் பாட,
புலிப்பல் கோத்த தாலியை அணிந்த பரட்டைத் தலையையுடைய சிறுவர்களைப் பெற்ற,
மான் விழி மகளிர் காட்டினில் உணவு தேர்கையில் அகன்று உலவிச் சுழல்கையில் கண்ட
வில்லம்பில் பட்ட முள்ளம்பன்றியின் கொழுத்த தசைத்துண்டுகள்,
மலைப்பிளவுகளையும் குகைகளையுமுடைய மலைப்பக்கத்தில் கிளை தழைத்து நிற்கும் சந்தனமரக்கட்டை,
புள்ளிகள் பொருந்திய முகமுடைய யானையின் தந்தம் ஆகிய மூன்றையும்,
மிக்க நிறம் பொருந்திய வலிய புலியின் வரி அமைந்த தோலின் மேல் குவித்து
விருந்தினர்க்குத் திறையாகக் கொடுக்கும் நாட்டையுடையவன் எங்கள் மன்னன்
கழலவிடப்பட்ட தொடியை அணிந்த ஆய் அண்டிரன் போல,
வள்ளல் தன்மையைக் கொண்டிருக்கின்றாயா? ஞாயிறே!
நீ வானில் வறிதே ஒளிசெய்கின்றாய்!
					மேல்
# 375 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
அசைகின்ற வெயிலைச் சுமந்துகொண்டிருக்கும் கலங்கிய நீர்நிலை போல்
நிலைதளர்ந்து, பாழடைந்து தளர்ந்துபோய் நிற்கும் பல தூண்களையுடைய
மன்றத்தின் ஒருபக்கத்தை படுக்கையிடமாகக் கொண்டு,
முரசு போன்ற அடியினையுடைய பனையின், அரத்தின் வாய் போன்ற கருக்குடைய பெரிய மடலிலிருந்தெடுத்த
நாரையும் குருத்தையும் கிணைப்பறையுடன் சேர்த்துக் கட்டி,
ஏரால் உழுதுண்டு வாழ்பவர்களின் குடியிருப்பில் கிடைக்கும் உணவை
முறையாக இரந்து உண்ணும் வருத்தத்துடன் கூடிய  வாழ்வையுடைய
எம்மை ஆதரிக்கும் சான்றோர் எவர் இருக்கிறார்கள் என்று எண்ணி
தேன்கூடுகள் தொங்குகின்ற, குறையாத புதுவருவாயையுடைய
மலைசார்ந்த தோட்டங்களையுடைய நல்ல நாட்டின் தலைவனே!
பொய்க்காத கொடையையும் கழலவிடப்பட்ட தொடியையுமுடைய ஆய் அண்டிரனே!
கிணைப்பறையைக் கொட்டிப் புகழ்ந்து பாட, எங்களைக் காப்போர் யாரும் இல்லாததால், நின்று கெடாமல்
பெரிய மழை முகில்கள் நீரைப் பெறுவதற்காகக் கடலை நோக்கிச் செல்வது போல், நானும்
ஒப்பற்ற உன்னை நினைத்து வந்தேன். அதனால்,
புலவர்களுக்குப் புகலிடமாகி, இவ்வுலகம் உள்ளளவும்
நீ நிலைபெற்று வாழ்வாயாக. ஒன்று,
நீ இல்லாமற்போனால் வெறுமையாய்ப்போய்விடும் இவ்வுலகில்
புலவர் இல்லாமல் போவாராக. அல்லது, நெருங்கிச் சென்று
பல சொற்களால் எடுத்துரைத்தாலும், சிறிதளவும் அவற்றை உணரக்கூடிய திறமை இல்லாத,
சிறப்பு இல்லாமல் பெருகிக்கிடக்கும் செல்வத்தையுடைய
பெருமை இல்லாத மன்னர்களை எம்மைப் போன்ற புலவர்கள் பாடாது ஒழிவாராக. 
					மேல்
# 376 புறத்திணை நன்னாகனார்
விசும்பாகிய பெருவெள்ளத்தைக் கடந்து சென்ற ஞாயிற்றின்
இளம் கதிர்கள் ஓளி குறைந்து, சிவந்த நிறத்துடன் ஞாயிறு வளைவாகத் தோன்றும் மாலைப் பொழுதின்
மிகச் சிறு பொழுது கழிந்த பின்னர், இறுக்கிக் கட்டப்பட்ட
கிழிந்த துணியையும், தோல் வார்களையும் கொண்ட எனது தடாரிப் பறையைத் தழுவிக் கொண்டு,
பாணர்கள் உணவு உண்ணும் சமயத்தில், நான், அவனுடைய
புதுமை மாறாத நல்ல மனையின் நெற்கூட்டின் அடியில் நின்றேன்.
கண்ணை மூடித் திறக்கும் நேரத்திற்குள், விரைவாகக்
கிழக்கே தோன்றிய திங்கள் அடர்ந்திருந்த இருளை அகற்ற,
முன்பிருந்த எனது நிலையைக் கண்டுகொள்ள முடியாதவாறு மாறியிருந்த உருவோடு, என் இடுப்பில் இருந்த
பழசாகிப்போய், துளைகளைத் தைக்க பருத்த இழைகள் ஊடே சென்று
நைந்து கரை கிழிந்து கிடந்த எனது உடையை நோக்கி,
‘இவன் புதியவன்; இரங்கத் தக்கவன்.’ என்று கூறிப் பெருந்தன்மையுடைய நல்லியக் கோடன்,
என் கையில் இருந்த தாளத்தைத் தான் வாங்கிக்கொண்டு, பெரிதும்
பாம்பு சீறினாற் போன்ற கள்ளின் தெளிவையும், சுட்ட இறைச்சியையும் எனக்குத் தந்து,
நரகம் போன்ற என் வறுமையைக் களைந்து,
அன்று இரவே தேவையான பொருள்களை எல்லாம் அளித்தான், என் தலைவனாகிய நல்லியக் கோடன்;
அன்றைய நாள் முதல் இன்றுவரையும், இனிமேலும்
பிறரிடம் இரத்தலை நினைத்திலேன், என் வறுமைக் கடலைக் கடப்பதற்கு ஒரு தெப்பம் போல் இருந்ததால்;
நான் பிறர் உள்ளத்தில் எண்ணுவதை அளந்து அறியும் சிறந்த புலமை உடையவன்;
நீர் நிறைந்த குளத்தின் மதகைத் திறந்தால் வெளிப்படும் வெள்ளப் பெருக்குப் போல நான் மகிழ்ச்சி அடைந்து
இனி, ஒருநாளும், இரப்போரை மறுக்காத வள்ளல் தன்மை உடையவரின் வாயிலில்கூட
அவர்களின் முன் அவரின் பெரும் புகழுக்குரியவற்றைப் பாராட்டி
இசைக்காது எனது சிறிய கிணப்பறையின் ஓசை.
					மேல்
# 377 உலோச்சனார்
பனி மிகுந்த பல இரவுகளில்,
பரந்து கலைந்து தோன்றும் என் தலைமயிர் பனியால் நனைய,
இனிது உறங்கும் செல்வம் மிகுந்த மாளிகையின் எல்லையில்,
என் வறுமைத்துன்பத்தைப் போக்கக் கருதி என் தடாரிப்பறையை இசைத்துக்கொண்டு சென்று,
’வேள்வியில் அளிக்கப்படும் உணவை உண்ணும் தேவர்கள் புறத்தே நின்று பாதுகாக்க,
அறத்தை நெஞ்சில் உடைய வேந்தன் நெடுநாள் வாழ்வானாக!’ என்று வாழ்த்த
அதைப் பார்த்து, வாழ்த்தி வந்தவர்களை வேந்தன் வரவேற்க,
’இரவலர்க்கு ஓளிவு மறைவின்றிக் கொடுக்கக் கவிந்த வளமுள்ள கையையுடையனாய்
நெடிது வாழ்க’ என்று புலவர்களால் வாழ்த்தப்பட்ட பலருள்ளும்
பிற வேந்தர்க்கு, இவ்வேந்தன் உவமம் ஆவானே அன்றி
இவனுக்குப் பிற வேந்தர்கள் உவமம் இல்லை என்று சான்றோர் பலர் பாராட்ட,
அவர்கள் பாராட்டியதை நினைத்து மதிமயங்கி
அங்கே நின்ற என்னைக் கண்டு,
‘ஆதரவு அளிப்போரைத் தேடித் தொலைவில் உள்ள நாடுகளுக்குச் செல்லும் கிணைப் பொருநனே,
நீ என்னால் காக்கப்படுவாய்’ என்று கூறி,
மலை தந்த மணிகளையும், காடு தந்த பொன்னையும்,
கடல் தந்த ஒளிர் முத்துக்களையும்,
வேறுவேறு வகையான உடைகளையும், கள் நிறைந்த குடங்களையும்,
நான் இனிமேல் வறுமையில் வருந்தாமல் இருப்பதற்காகக் கனவில் காண்பதைப் போல
நனவில் கொடுத்தான் அந்த அன்பு நிறைந்த வேந்தன்;
நாடுகளில் சிறந்த நாட்டைப் பற்றிப் பேசுபவர்கள் பெருநற்கிள்ளியின் நாடுதான் சிறந்தது என்று கூறுவர்;
வேந்தர்களில் சிறந்த வேந்தனைப் பற்றிப் பேசுபவர்கள் பெருநற்கிள்ளிதான் சிறந்த வேந்தன் என்று கூறுவர்;
புள்ளிகள் உள்ள நெற்றியையும், ஒளிர்கின்ற பூண் அணிந்த கொம்பினையுமுடைய யானைப்படைத் தலைவரும்,
காண்போர் உள்ளத்தைக் கவரும் ஓட்டமும் கச்சும் அணிந்த குதிரைப்படைத் தலைவரும்,
நன்றாக வார்த்த மணியையும், வளைந்த சக்கரங்களையும்,
மேலே கொடியையும் உடைய  நல்ல தேர்ப்படைத் தலைவரும்,
விரைவும் புகழும் வீரமுமுடைய வேல்படை, வில்படைத் தலைவர்களும்,
வாள் கொண்டு போர்செய்து வாழும் வாட்படைத் தலைவரும் ஆர்வத்தோடு கூடியிருத்தலால்
கடலின் முழக்கத்தையுடைய படையையுடைய
போரில் வெற்றி பெறுவதை விரும்பும் வேந்தனாகிய பெருநற்கிள்ளி நெடுங்காலம் வாழ்வானாக!
					மேல்
# 378 ஊன்பொதி பசுங்குடையார்
தெற்கிலிருந்து வந்து குறும்பு செய்த பரதவரின் வலிமையை ஒழித்து,
வடக்கிலிருந்து வந்து குறும்பு செய்த வடுகரின் வாட்படையை அழித்த
நன்றாகத் தொடுக்கப்பட்ட கண்ணியையும், நன்கு செய்யப்பட்ட வேலை ஏந்திய பெரிய கையையும்,
விரைந்து செல்லும் குதிரையைச் செலுத்துவதற்கான பரிவடிம்பு என்னும் காலணியையும்,
நல்ல மாலையையும், கள்ளையும் உடைய சோழன் இளஞ்சேட்சென்னியின் அரண்மனையில்
புதிதாக எழுந்த பிறை போன்ற, வெண்ணிறச் சுண்ணாம்பு பூசப்பட்ட மாடங்களையுடைய
குளிர்ந்த நீர்நிலை போன்ற குளிர்ச்சி பொருந்திய நெடுமனையின் முன்னே நின்று, என்னுடைய
அரித்த ஓசையைச் செய்யும் பெரிய கிணைப் பறை கிழியுமாறு கொட்டி,
மரபு தவறாமல், பகைமேற் செல்லும்போது பாடும் வஞ்சித்துறைப் பாடல்களை பாட,
எம்மைப் போன்ற பரிசிலர்க்குக் கொடுப்பதற்காகச் செய்யப்படாத, மிகப் பல,
மேன்மையான சிறப்பினையுடைய அரிய அணிகலன்களையும் பிற செல்வங்களையும்
எம்மால் தாங்க முடியாத அளவுக்கு வழங்கினான்; அதனைக் கண்டு
வறுமையால் வருந்திய என்னுடைய பெரிய சுற்றத்தார்
விரல்களில் அணிவனவற்றைக் காதில் அணிபவரும்,
காதில் அணிவனவற்றைக் விரல்களில் அணிபவரும்,
இடையில் அணியவேண்டியவற்றைக் கழுத்தில் அணிபவரும்,
கழுத்தில் அணிய வேண்டியவற்றைக் இடையில் கட்டிக்கொண்டவருமாய்
கடும் அழித்தல் தொழிலையுடைய இராமனுடன் கூடியிருந்த சீதையை,
மிக்க வலிமையுடைய அரக்கன் கவர்ந்துகொண்டு செல்லும்பொழுது,
சீதை கழற்றி எறிந்த நகைகள் நிலத்தே விழுந்தவுடன் அந்த நகைகளைக் கண்டெடுத்த குரங்குகளின்
சிவந்த முகமுடைய பெரும் கூட்டம் அவற்றைத் தாறுமாறாக அணிந்ததைக் கண்டோர் நகைத்ததைப் போல்
நீங்காத அரிய மகிழ்ச்சியை மிகவும் அடைந்தோம்,
பெரிய சுற்றத்திற்குத் தலைமை தாங்கி,
பல அரிய எண்ணங்களினால் உண்டாகிய நோயின் வருத்தம் உற்றதற்கும் மேலாக.
					மேல்
# 379 புறத்திணை நன்னாகனார்
’அவனுடைய கால்நிழலில் வாழும் வாழ்க்கையை நான் பெறுவேனாக;
என் நாவால் புகழ்ந்து பாடும் பாடலை அவன் ஒருவனே பெறுவானாக;
நெல்லை அறுவடை செய்பவர்கள், தம்முடைய கூர்மையான அரிவாள் மழுங்கிப்போனால்,
மறுபடியும் வலிமையோடு அரிவதற்காக, தீட்டுகின்ற கல் என்று நினைத்து
சேற்றில் உள்ள ஆமையின் வளைந்த முதுகில் தீட்டும்,
நெற்பயிர் நெருக்கமாக விளையும் வயல்கள் உள்ள மாவிலங்கை என்னும் ஊர்க்குத் தலைவனான
ஓய்மான் வில்லியாதனுக்கு நாங்கள் கிணைப் பொருநர் ஆவோம், பெருமானே! 
குறுகிய கால்களையுடைய பன்றியின் கொழுத்த ஊன்துண்டுகளான நல்ல வெளுத்த ஊனை,
நல்ல நறுமணமுள்ள நெய்யை உருக்கி அதன்மேல் பெய்து பொரித்து, நாள் காலையில் சோற்றோடு கொடுத்து
எம் பசியைப் போக்குவதில் வல்லவன் எமது தலைவன்’ என்று,
விடியற்காலையில் வந்து பாடும் மரபினையுடைய உன் கிணைப்பொருநன் என்னிடம் கூற,
அதைக் கேட்டது முதல் எனக்கு உன்னைக் காணவேண்டும் என்ற விருப்பம் அதிகரித்து.
வானைத் தொடும் உச்சிகளையுடைய குன்றுகள் பின்சென்று மறைய,
உன்னிடம் கிடைக்கும் பரிசிலின் மேல் ஆசை செலுத்த, நான் உன்னிடம் வந்தேன் - குற்றமற்ற
தாயிடம் பால் குடிப்பதற்கு வரும் குழந்தையைப் போல; அங்கு அந்த
செல்வமுள்ள அழகிய மனையிலிருந்து மெல்லிதாகத் தோன்றும் நறுமணம் கமழும் புகை,
மழைபொழிய வரும் மேகம் போலத் தெருவெல்லாம் மறைக்கும்
அரணை அடுத்துள்ள ஆழமான அகழியையும், நீண்ட மதிலையுமுடைய உன் ஊர்க்கு,
					மேல்
# 380
தென் கடலிலிருந்து எடுத்த முத்துக்களாலான மாலையைச் சூடிய,
வடமலையிலிலிருந்து பெற்ற சந்தனத்தைப் பூசி,
...................... கடல் போன்ற படையும்,
இனிய புகழும், போரில் வெற்றியும் பெற்ற
பாண்டியருடைய வலிமை மிக்க தானைத் தலைவனுடைய நாட்டில்,
ஆகாயத்திலிருந்து பெய்த மழைநீர் கடலை அடைந்து முத்தாக மாறும்;
நறுமணம் கமழும் காட்டுமல்லிகையோடு கூதாளி செழித்து விளங்க,
.......................................
இனிய சுளைகளையுடைய பலாமரங்கள் நிறைந்த நாஞ்சில் நாட்டுக்குத் தலைவன்.
வலிமையோடு போரிட வந்தவர்க்கு நினைவுக்கும் எட்டாத தொலைவில் உள்ளவன்;
நட்புடன் எதிரில் வந்தவர்க்கு உள்ளங்கை போல அண்மையில் உள்ளவன்;
வலிய வேலையுடைய கந்தனுடைய நல்ல புகழையன்றி,
.................... வில்லைப்போல் வளைந்த மாலையணிந்த பிள்ளைப் பருவத்தில் உள்ள சிறுவர்களின்
தன்மையனாதலால், இந்த நாட்டு மக்கள்
வறுமையில் வருந்தும் காலம் வந்தாலும்,
வருந்துதல் இல்லாமல் போனது பொலிவு பெற்ற என் சுற்றம்.
					மேல்
 




# 381 புறத்திணை நன்னகனாரி
கறியும் சோறும் தெவிட்டி வெறுப்பு ஏற்பட்டதால், இனியவை என்று
பால் கலந்து செய்தனவும், வெல்லப்பாகு கலந்து செய்தனவும் ஆகியவற்றைத்
தக்க அளவுடன் கலந்து, மென்மையுண்டாகக் கரைத்துக் குடித்து
விருந்தினராகப் பசியைப் போக்கிப் பலநாட்கள் இங்கு இருந்தோமாக,
’பெருமானே! விழாக்கள் நடைபெரும் எம்முடைய நாட்டிற்குச் செல்ல விரும்புகிறோம்’ என்று
நாங்கள் அவனுக்கு அறிவித்தோமாக, தான் மிக்க
அன்புடையவனாதலால் எங்களைப் பிரிவதற்கு அஞ்சி,
’கொத்துக் கொத்தாகப் பூத்து, எவராலும் கொள்ளப்படாததால், பழுத்துக் கனிந்து,
பயன்படுத்த முடியாதபடி, முட்கள் கலந்த கொடிகள் பின்னிக் கிடக்கும் முதிய பாழிடத்தில்
மழை பெய்தாற் போன்ற, செல்வம் இருந்தும்
இரவலர்க்கு ஈயாத மன்னர்களின் முற்றத்தில் நின்று,
துண்டித்த வார்களால் கட்டப்பட்ட, சிதைந்த வெளிப்பக்கத்தையுடைய தடாரிப்பறையைக்
ஊன் பொருக்கு ஒட்டிக் கொண்டிருக்கும் தோல் பொருந்திய தெளிந்த முகப்பை அறைந்து,
விரலால் நொடிக்கும் நொடிப்பின் விசையிலும் மேம்பட்ட குற்றமில்லாமல் தாளமிட்டுப் பாடும் பாட்டால்
வறுமையைப் போக்க எப்படி முடியும்? ஆதரவின்றி வறுமையால் தனிமையில் வருந்தி,
வள்ளல்களைத் தேடித் திரிந்து வருந்துவதையும் யாம் போக்குவோம்.  அதனால்,
இப்பெரிய உலகம் தானிய வகைகளின் விளைச்சல் இல்லாமல் இருக்கும் வறண்ட கோடைக்காலம்
வருகின்ற மழை முகிலின் முழக்கத்து ஒலிக்கு நீங்கிய பிறகு,
நீ தொலைவில் உள்ள நாட்டில் இருந்தாலும், இந்த நாட்டிலேயே இருந்தாலும்
இதை அறிந்து கொள்வாயாக. கிணைவனே! நீ வாழ்க!
சிறியதும் பெரியதும் எண்ணி ஒரு வழி நடப்பாயாக’ என்று சொன்னான் எங்கள் தந்தை,
ஒலிக்கின்ற வெண்ணிறமான அருவியையுடைய வேங்கட நாட்டுக்கு உரியவன்;
பெரியோரானாலும் சிறியோரானாலும் ஒருகரையிலிருந்து இன்னொருகரைக்கு மாறிமாறிக் கொண்டுசேர்க்கும்
அறவழியில் இயங்கும் தெப்பம் போல், மறவாமல்
பெரிய குறிக்கோளையும், எவராலும் மாற்றமுடியாத கொள்கையையுமுடைய
கரும்பனூர் கிழானின் அன்புக்குரிய மகன்.  
					மேல்
# 382 கோவூர் கிழார்
கடற்படையைக் கொண்டு சென்று, பகைவரை அழித்து அவர்களிடமிருந்து கொண்ட பொருளும்,
செறிவாகப் பெருகிய வலிமையும் முயற்சியும் உடைய
குளிர்ச்சி பொருந்திய சோழநாட்டு வேந்தன்,
அசைகின்ற தலையாட்டம் அணிந்த குதிரைகளையுடைய
நலங்கிள்ளியின் விருப்பத்துக்குரிய பொருநர் ஆவோம்;
அவனைத் தவிர வேறு எவரையும் பாடிப் பரிசில் பெறுவதை நாங்கள் விரும்ப மாட்டோம்;
அவன் திருவடிகள் வாழ்க என்று அவனை வாழ்த்துவோம்;
நெய்யிட்டுத் தாளித்த, ஊன் கலந்த
பல வகையான சோற்றுடன் இனிய சுவையுள்ள பொருள்களையும்
வறுமையால் ஏற்பட்ட பசித்துன்பத்தினையுடைய உன்னுடைய
முன்பு நீ பரிசு கொடுத்து அனுப்பியதால் உன் ஈகையை அறிந்த சிறுவரும்
நானும், எழுச்சி பொருந்திய மணியும், நல்ல நிறமும் படத்திலுள்ள அழகிய புள்ளிகளும்,
கண்ணே செவியாகவும், பிளவுற்ற நாவையும் உடைய
தன் சட்டையை உரித்த பாம்பு போல்,
எங்கள் வறுமையிலிருந்து நீங்கிப் பிறர்க்கு நாங்கள் வழங்கும் வாய்ப்பு உள்ளவர்களாகுமாறு,
எங்களுக்கு நீ பரிசில் கொடுத்து அனுப்புவாயாக, விரைந்து செல்லும் குதிரைகளையுடைய அரசே!
உன்னுடையது, அனைவரும் அறிய, கடல் சூழ்ந்த இந்தப் பரந்த உலகம்;
என்னுடையது, நெட்டியின் காம்பு போல் சுமையில்லாத, தெளிந்த கண்ணையுடைய பெரிய கிணைப்பறை;
அந்தப் பறையின் கண்ணில் கட்டப்பட்ட நுண்ணிய அரித்தலோசையை எழுப்பும் சிறிய கோல்
அடிக்குந்தோறும் பறையின் கண் நடுங்குவது போல் உன் பகைவர்
கேட்குந்தோறும் நடுங்குமாறு புகழ்ந்து பாடுவேன் -
உன்னால் வெல்லப்பட்ட தேர்களைப் பற்றி - பிற வேந்தர்களின் அவைகளில் 
					மேல்
# 383 மாறோக்கத்து நப்பசலையார்
ஒளி பொருந்திய புள்ளிகளை உடைய சேவல் கூவி எழுப்ப, படுக்கையிலிருந்து எழுந்து,
குளிர்ந்த பனி பெய்யும் புலராத விடியற்காலத்தே,
நுண்ணிய கோலால் சிறிய கிணைப்பறையை ஒலியுடன் அறைந்து,
பெரிய வாயிலில் நின்று, பல எருதுகளைப் பலவாக வாழ்த்தி,
அவற்றையுடையவனான அவினன் புகழ்களைப் பாராட்டிப் பாடினேனாக, என்னிடம் தங்கியிருந்த
வறுமைத் துயர் விரைவில் நீங்குமாறு, உடல் மெலிந்து,
அரிய காவலுடைய பெரிய மாளிகைக்குள் நான் செல்வதை விரும்பி,
குவிந்திருந்து விரிந்த மெல்லிய அரும்பு மலர்ந்த ஆம்பல் மலர் போன்ற,
குழியுள்ள குவளையில் தேன் ஒழுக மணக்கும் கள்ளின் தெளிவைப் பெய்து உண்ணச் செய்து
பாம்பின் தோல் போன்ற வடிவினையுடையதும், மூங்கிற்
கோலின் உட்புறற்த்தே உள்ள தோல் போன்ற நெய்யப்பட்ட இழைகளை அறிய இயலாத
ஒளிபொருந்திய பூப்போன்றதுமான உடையை உடுக்கச் செய்து, நுண்ணிய அணிகலன்களை அணிந்து,
மின்னல் போல் மின்னி வளைந்த இடையையும், அழகாகக் குழிந்த கொப்பூழையுமுடைய
கற்புடைய மனைவி தன் முதுவைத் தழுவிக் கிடக்க,
மெல்லிய அணைமேல் அவன் படுத்திருந்தான் ...........................
என்னைவிட்டு நீங்கிய .............. பார்த்து ..................
.................... அதுமுதல்,
நான் புதுப்பிறவி எடுத்ததைப் போல், அவ்விடத்தில்
பிறருடைய பாடுதற்குரிய புகழைப் பாடிச் செல்வதை அறியாதவன் ஆனேன்;
தாயின் சிறிய முலைக்காகச் சுற்றிவரும் பாலுண்ணும் வெள்ளாட்டுக்குட்டி,
வெளுத்த முகத்தையுடைய குரங்குக் குட்டியுடன் தாவும் மூங்கில் நிறைந்த
...................... குன்றுகள் பல பொருந்திய
காடுகளுடைய நாட்டுக்குரியவனாகிய, விரைந்து செல்லும் தேர்களையுடைய அவியன் என்னும்
ஒருவனை நான் எனக்குத் தலைவனாக உடையேன்; 
அவன் என்னை ஆதரிப்பதை நிறுத்தமாட்டான், வெள்ளியின் நிலையைக் குறித்து யார் கவலைப்படுவார்கள்?
					மேல்
# 384 புறத்திணை நன்னாகனார்
மென்புலமாகிய மருதநிலத்து வயல்களில் கூட்டத்துடன் சேர்ந்து மேய்ந்து,
வஞ்சி மரத்தின் கிளையில் உறங்கும் நாரை,
முற்றிய கரும்பின் பூக்களைத் தின்னும்;
வன்புலமாகிய முல்லை நிலத்தில் விளையும் கரிய தாளினையுடைய வரகின்
அரிகாலில் உள்ள எலியைப் பிடிப்பதற்கு முயலும் குறும்பூழ்ப் பறைவைகளின் ஆரவாரத்தால்
அங்கே வாழும் சிறுமுயல் அஞ்சி ஓட, அருகே,
கரிய கிளைகளையுடைய இருப்பை மரத்திலிருந்து பூக்கள் உதிரும்;
விழா ஒன்றும் நிகழாவிட்டாலும், உழவர்கள் உண்ணும் பாத்திரங்களில்
பெரிய கெளிற்று மீன் கலந்த உணவுடன், இஞ்சி முதலிய பூக்கள் கலந்த கள்ளும் இருக்கும்;
நாங்கள் இத்தகைய கரும்பனூர்க் கிழானின் கிணைவர்கள். பெருமானே!
நெல் என்ன? பொன் என்ன?
உடலில் சூடு உண்டாகுமாறு உண்ணும் கள் என்ன?
என் இல்லத்தில் இல்லாத அவை பலவற்றையும்
நான் குறைவுபடவும், அவன் குறைவில்லாதவனாய்,
ஊன் கலந்த கொழுமையான சோற்றில்,
உலகில் உள்ளவர்கள் நாணுமாறு புகழுக்குரிய செயல்களைச் செய்து,
நீரே வெட்கப்படும்படியாக அதிகமாக நெய்யை விட்டு,
எம்மை ஆதரிக்கும் எங்கள் தலைவன் இருக்க, எதற்கு நாங்கள் வருந்தப்போகிறோம்?
அத்தகையவனைத் தலைவனாகக் கொண்டிருக்கிறோமாதலால், இனிமேல் வறட்சியைக் கொண்டுவர
வெள்ளி எங்கே வேண்டுமானலும் நிற்கட்டும்! சிறப்பான
உண்டு முடித்த நல்ல கலன்களில் எஞ்சியதை இட்டு மடக்கித் தூக்கி எறியவும்,
நல்ல மிகுதியான ஊனைத் தின்றதனால் பற்களின் இடுக்குகளில் சிக்கிக் கொண்டவற்றைத் தோண்டி எடுக்கவும்
இவ்வாறு கழிந்த நாட்களே அன்றி
வேறு வகையில் கழிந்த நாட்களை நான் அறியேன்.
					மேல்
# 385 கல்லாடனார்
வானத்தில் வெள்ளி முளைக்க, பறவைகளின் குரல் இசையாய் ஒலிக்க,
இரவுப்பொழுது புலரும் விடியற்காலத்தில், பலவாகிய எருதுகளைப் பலவாறு வாழ்த்தி,
அவன் மனை முற்றத்தில் நான் தோன்றவும் இல்லை, பிறர் மனையின் முற்றத்தில் நின்று கொட்டிய
அகன்ற கண்ணையுடைய தடாரிப் பறையின் ஒலியைக் கேட்டு அருள்கூர்ந்து
நான் வறுமையிலிருந்து விடுபட விரும்பி, என் இடையில் இருந்த
மண் தின்னும்படி பழைதாய்க் கிழிந்திருந்த கந்தைத் துணியை அகற்றி,
வெண்ணிற ஆடையை உடுப்பித்து, என் பசியைப் போக்கினான்;
காவிரி ஆறு பாயும் தாழ்ந்த நிலத்தில் உள்ள தோட்டங்களையும்,
நெல்விளையும் வயல்களையுமுடைய அம்பர் என்னும் ஊர்க்கு உரியவன்
நல்ல அருவந்தை என்பவன் வாழ்க! புல்லி என்பவனுடைய
வலிய வேங்கட மலையில் மேல் விழுந்த
உயர்ந்த வானத்து மழைத்துளிகளைவிடப் பல ஆண்டுகள் - (வாழ்க).
					மேல்
# 386 கோவூர் கிழார்
மிக்க நீர் நிறைந்த குளத்தில்
விழுகின்ற மழைத்துளி எழுப்பும் ஒலியைப் போல்
நெய்யில் வறுக்கப்பட்ட பொழுது ஒலி உண்டாக்கிய வறுவலை அள்ளி உண்ணவும்,
சூட்டுக்கோலால் குத்திச் சூடுபடுத்தப்பட்ட இறைச்சியைத் தின்னவும்,
ஊன் வைத்திருந்த வெண்ணிறமான பாத்திரம்
பசும்பாலால் நிரம்பி வழியவும்,
இவ்வாறு உண்பவற்றைச் சுடச்சுட உண்பதால் உண்டாகும் வியர்த்தலை அல்லாமல்
வேறு தொழில் செய்வதால் வியர்வை உண்டாகாத வகையில்
கொடுத்தான் எங்களுக்குத் தந்தை போன்றவன் - புகழெல்லாம் தனக்கே உரித்தாக;
நெல் வயல்கள், நெல்லுக்கு வேலியாக நீண்டு வளர்ந்து நின்ற கரும்புகள் உள்ள
பாத்தியில், பலவகையான பூக்கள் பூத்து நிரம்பினதாயிருக்கும்;
முல்லைக்காடு, புல் மேயும் ஆனிரைகள் நிறைந்து,
வில்லேந்திய வீரர்கள் காவலிருந்த கடுமையான அரணுடையதாயிருக்கும்;
கடல், காற்றால் கொண்டுவரப்பட்ட கப்பல்களை எண்ணுவோர் தங்கியிருக்கும்
சோலையில் உள்ள புன்னை மரங்களின் கிளைகளை அலைப்பதாயிருக்கும்;
கடல் சார்ந்த கழி, சிறிய வெண்ணிறமான உப்பின் விலையைச் சொல்லி
பெரிய மலைகள் உள்ள நல்ல நாடுகளுக்குச் சென்று விற்கும் உமணர்களின் குடி நிறைந்ததாயிருக்கும்;
நாங்கள் அத்தகைய நல்ல நாட்டுப் பொருநர் ஆவோம்; நாங்கள்
போரிடாத பொருநர் ஆவோம்;
கிழக்கே இருந்து மேற்கின் அடிவாரத்திற்குச் சென்றாலும்,
மேற்கே இருந்து கிழகின் அடிவாரத்திற்குச் சென்றாலும்,
வடக்கே இருந்து தெற்குப்பக்கம் சென்றாலும்,
தெற்கேயே நின்று வேறு பக்கம் செல்லாமல் நெடுநாள் இருந்தாலும் 
எங்கேயும் நின்றுகொள்ளட்டும் வெள்ளி, நாங்கள்
வேண்டியதைக் குறிப்பால் உணர்ந்துகொள்பவனின் திருவடிகள் வாழ்க.
					மேல்
# 387 குண்டுகட் பாலியாதனார்
கூர்மையான நகங்களையுடைய, வயல் ஆமையின்
வெண்ணிறமான வயிற்றைக் கண்டாற் போன்ற 
பெரிதாய் இறுக்கிக் கட்டப்பட்ட புதிய தோல் போர்த்த
தெளிவான கண்ணையுடைய பெரிய தடாரிப் பறையை அறைந்து, ‘எப்பொழுதும்
பகைகொண்டவரின் மதிலை இடித்தலால்,
புழுதிபடிந்த மணம் மிக்க கன்னங்களையுடைய,
பூவேலைப்பாடுடைய பட்டமணிந்த, பெரிய கழுத்தையுடையனவாய்,
வேறுவேறாகப் பரவிச் சென்று
பகைவேந்தர்களின் காவற்காட்டிற்குப் புறம்பாக உலவும்,
உயர்ந்த கொம்புகளையும் பெரிய சொரசொரப்பான பெரிய துதிக்கையும்,
நல்ல தொழில் செய்யும் பல யானைகளையுடைய
பகைநாட்டு வேந்தர் பணிந்துவந்து, உனக்குத் தரவேண்டிய திறையைத் தந்து, உனக்கு
இன்பம் அளிக்கும் அறிவிற் சிறந்த இரவலர், நண்பர் முதலியோரது வறுமையைப் போக்கி,
உன்னுடைய திருவடிகள் மிகவும் பொலிந்து விளங்குக’ என்று
நான் அவனைப் புகழ்ந்து பாடினால் அது மிகவும் நல்லது என்று
மற்ற பல இயல்புகளைச் சொல்லி வாழ்த்த இருந்தவர்க்குத் தலைவன்.
அவனது நெருங்குதற்கு இனிய பெரிய அரண்மனையின் அகன்ற முற்றத்தில்
தன்னுடைய நல்ல கழலணிந்த திருவடிகளை வந்தடையுமாறு
போர்க்களத்தில் பகைவரை வென்று முழக்கும் வலிய முரசுடையவன்.
அவன் என் சிறுமையைக் கண்டு இகழ்ந்து நோக்காமல்,
தன் பெருமையின் தகுதியையும் நோக்கி,
மலை போன்ற களிறுகள் என்ன,
பிடரிமயிர் கொய்யப்பட்டு, தலையாட்டம் அணிந்த குதிரைகள் என்ன,
மன்றம் நிறைந்த ஆநிரைகள் என்ன,
மனைப்பணியாளரும் களப்பணியாளரும் என்ன,
அவற்றைக் கனவென்று மயங்குமாறு நனவில்
அளித்த அன்பு நிறைந்த தலைவன்;
பல ஊழிகள் வாழ்வானாக, பூழி நாட்டார்க்குத் தலைவன்.
சொரசொரப்பான கொம்புடைய யானைகள் செய்யும் போரில் மேம்பட்ட வலிய முயற்சியையுடைய
செல்வக் கடுங்கோ வாழியாதன் என்று அவன் பெயரைக்கூறிய அளவில்,
மனம் பொருந்தாத பகைவர் தம்முடைய உயர்ந்த குடையைத் தாழ்த்தி வணங்கி இங்கே
வரவிடுவர், காலம் தாழ்த்தாமல், செய்ய வேண்டிய சிறப்புக்களைச் செய்து,
ஆதலால், இலையே இல்லாத வஞ்சி என்னும் மாநகரத்தின் மதிற்புறத்தை அலைக்கும்
ஆரவாரம் மிக்க பொருநையாற்று மணலினும், அதைச் சுற்றியுள்ள
பல வயல்கள் அனைத்திலும்
விளையும் நெல்லையும்விட மிகுதியாகுக - (பல ஊழிகள் வாழ்வானாக)
					மேல்
# 388 மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
வெள்ளியாகிய கோள் தெற்கே நிலைகொண்டிருக்க, விளைவயல்களும்
நீர்நிலைகளும் வாடிய பயனற்ற காலத்தில்
பெரிய பறையாகிய தடாரிப் பறையை இசைக்கும் பொருநன் ஒருவன் சென்று, பெரும்புகழுடைய
சிறுகுடிக்கு உரியவனாகிய பண்ணனை அடைந்து
தன் வறுமையை அறிவித்தானாக, அப்பொழுதே, அப்பொருநனின்
வறுமைத் துன்பம் நீங்குமாறு, தன்னிடம் இருந்த பொருள்களைக்
கொடுத்தான் எங்கள் தந்தை கொடையால் மேம்பட்ட தலைவன்;
நுண்ணிய நூல்களைப் பெரிய துதிக்கையாகவும், நாவைக் கொம்பாகவும் 
வெல்லும் பாடல்களைக் களிறாகவும் இயற்றும் புலவர்களுக்கு, நெல் விளையும் நிலங்களைத்
தருகின்ற பண்ணனைப் பற்றி நான் கூறக் கேட்பீராக; அவனுடைய .............
உழவுத் தொழிலுக்குரிய எருதுகளையும், ஏற்றத்தையும், மேழியையும் கிணைப்பறையை அறைந்து
நாள்தோறும் நான் பாடேனாயின், நீங்காத
ஆராய்ச்சி மணி கட்டிய முற்றத்தையுடைய பாண்டியர் வழித்தோன்றலான
வாரால் கட்டப்பட்ட முரசு முழங்கும் பெருமை பொருந்திய சிறந்த படையையுடைய
தலைமை பொருந்திய யானையால் சிறந்த
என் பெரிய சுற்றத்தாரைப் பாதுகாக்கும் அருட்செயலை செய்யாது ஒழிவானாக.
					மேல்
# 389 கள்ளில் ஆத்திரையனார்
நீருடைய நுங்கு காய்ந்து கல்லைப் போலக் கடினமானாலும்,
காட்டு வேம்பின் காய் பழுக்காமல் சுருங்கி உலர்ந்து போனாலும்,
நீர்நிலைகள் வற்றிச் சேறு காய்ந்த கோடைக்காலமானாலும்
வழக்கமான பாதையில் செல்ல இயலாத வெள்ளி தெற்கே செல்லும் வறுமைக் காலமானாலும்,
’எம்மையும் உன் நினைவில் கொள்வாயாக, இளைய பொருநனே’
என்று கூறிப் பெரும்புகழ் வாய்ந்த நெடுந்தகை எனக்குப் பெருமளவில் பொருள்களை அளித்தான். ,
நான் இன்று சென்று காணும் இடத்தில் அவன் இல்லை;
சென்றால் காண முடியாதவனும் அல்லன்.
சிறிய தலையையுடைய பெண்யானைகள் வருந்த, அவற்றின் கன்றுகளை கொண்டுவந்து
குன்றுகளுடைய நல்ல ஊரின் மன்றத்தில் கட்டிவைக்கும்
கற்களினூடே பாயும் அருவிகளையுடைய வேங்கட மலைக்கு உரியவனான
மனம் போன போக்கில் போகாத நல்லேர் முதியனே!
உன் முன்னோனாகிய ஆதனுங்கனைப் போல், நீயும்
பசியால் வாடும் என் சுற்றத்தாருடைய துன்பம் நீங்கச்
சிறப்பமைந்த நல்ல அணிகலன்களை வழங்குவாயாக! பெருமானே!
மெல்லிதாய் அகன்ற அல்குலையுடைய உன் மகளிர்
உன் பெரிய மனையின் முற்றத்தில் என்றும் நெய்தற்பறையைக் (இரங்கல் ஒலியைக்) கேளாதிருப்பார்களாக. 
					மேல்
# 390 ஔவையார்
அறம்புரியும் நெஞ்சத்தினையுடைய இடையர்களும், பெருகுகின்ற
வீரம் மிகுந்த நெஞ்சத்தினையுடைய சிறுகுடியினரும் கூடி எடுக்கும்,
அரும்பு மலர்ந்த செருந்தி முதலிய மரங்கள் செறிந்த பெரிய காட்டில் மலரும் பூக்களின் மணம் கமழும்
விழாக்களினால் அழகுறும் அகன்ற மன்றத்தைப் போன்ற அரண்மனை முற்றத்தில்
அன்புடையவர்கள் மட்டுமே அணுகக் கூடியதாகவும், பகைவர்களால்
கனவில்கூட நெருங்க முடியாத அளவுக்குக் காவலுடைய அகன்ற நகரில் புகுந்து
மலைகளின் கூட்டம் போன்ற மாடங்களில் எதிரொலி உண்டாகுமாறு, என்
அரித்த ஓசையைக் கொண்ட தடாரிப் பறை கிழியும்படி அறைந்து,
நான் பல நாட்கள் பாடுதல் இல்லாமல்.
சென்ற முதல் நாள் இரவுப் பொழுதிலேயே,
நான் வந்ததைக் கண்டு, அரண்மனையின் நெடியவாயிலில் நின்ற
புல்லிய தலையையுடைய பொருநன் இரங்கத்தக்கவன் என்று எண்ணி
நான் அவனை அணுகுவதைப் பார்த்து, என் இடுப்பில்
பழமையான நீர்ப்பாசி போல் அழுக்குப் படிந்திருந்த கந்தைத் துணியை அகற்றி,
அழகிய மலர் போன்ற புத்தாடையைக் கொடுத்து அணியச் செய்து,
மகிழ்ச்சி அளிக்கும் பண்பினையுடைய கள்ளையும், அதுமட்டுமல்லாமல், 
அமிழ்து போன்ற சுவையுடைய ஊன்துவையல் கலந்த சோறும்
வெள்ளியாலாகிய வெண்ணிறக் கலத்தில் கொடுத்து உண்ணச் செய்ததோடு, 
ஊரின் முன்னிடமாகிய மன்றத்தில் தங்கியிருந்த தளர்ந்த நடையினையுடைய
பெரிய சுற்றத்தார், என்னைப் பிரிந்ததால் அடைந்த தனிமைத் துயரத்தை நீக்க,
தேனால் உள்ளிடம் நனைந்த வேங்கைப் பூவைக் கண்டாற் போன்ற
எருதுகளைக் கொண்டு விளைவித்த, நிறமுடைய செந்நெல்லைப் போரோடு அளித்து,
கொள்ளத்தக்க இதனைக் கொள்க என்றான். நீர் உண்ணும் துறையில்
மலையில் பூத்த மலர்களை கொண்டுவந்து சேர்க்கும் நீர்வளம் பொருந்திய நாட்டுக்கு உரியவன்
அவனைக் கண்டால், தன் மனைக்கு அழைத்துச் சென்று, அவனுடைய திருவடிகளை வாழ்த்தி
.................... ..................
‘எங்கள் பசித்துயரை அறிந்து அதைப் போக்குதற்காக மழைகூடப் பெய்யவில்லை’ என்பவர்கள்
பெருமித மிக்க யானைகளையுடைய தலைவனை
அறியாதவரும், அறிந்தும் அவனைக் காணாதவரும் ஆவர்.
					மேல்
 




# 391 கல்லாடனார்
குளிர்ந்த மழைத்துளிகளை மிகப் பெய்து மேகங்கள் முழங்கும்
மலை போல வானளாவிய குவியலாய்
உச்சியுண்டாக உயர்ந்ததாகக் குவித்த நெல்லாகிய, மகிழ்ச்சி மிக
எருதுகளின் உழைப்பால் உண்டாகிய பெரிய வளத்தை வாழ்த்திப் பெற்றதை
திருத்தம் இல்லாத ஊன்கறியைச் சிறுசிறு துண்டுகளாகப் பரக்குமாறு துண்டித்து
கள் உண்போர் உண்டு மிகவும் இன்புறும்
வேங்கட நாடாகிய வடநாடு வறுமையுற்றததினால்
இங்கே வந்து தங்கின என் பெரிய சுற்றத்தார், 
இந்நாட்டை விட்டு நீங்குவதைக் கைவிடும் இயல்புடைய பழங்குடிகள் நிறைந்த
அகன்ற இடத்தையுடைய மூதூரில் .............. கேட்டலால்
’இவன் முன்பே இங்கு வந்தவன்; பொருளில்லாதவன். மேலும்
இரங்கத்தக்கவன், எனவே பரிசில் கொடுக்கத்தக்க பொருநன் இவன்’ என்று
உன் உள்ளத்தை அறிந்தவர்கள் என் நிலைமையினை நன்குணர்ந்து எனக்கு அறிவிக்க,
நான் உன்னைக் காண வந்தேன், பெருமானே! சிறப்பு மிக
கரிய நீர் மிகுந்த பெரிய கழியில் நுழைமீன்களைத் தேடி உண்ணும்
செறிந்த சிறகுகளையுடைய அழகிய புதா என்னும் பறவைகள் தங்கும்
அடர்ந்த புன்னைமரங்களையுடைய செழுமையான உன் பெரிய அரண்மனையில்,
உன்மீது காதல் கொண்ட, உன்னால் விரும்பப்பட்ட, உன் மனைவியுடன்
நீ இனிதான உறக்கத்தைப் பெறுவாயாக; நெல்வளம் பெருகுமாறு
தகுந்த காலத்தில் மழை பொழிந்து
உன் நாட்டில் வேலிக்கு ஆயிரம் கலம் நெல் விளைவதாக. 
					மேல்
# 392 ஔவையார்
முழுமதி போன்ற வெண்கொற்றக் குடையையுடைய அதியர் வேந்தனாகிய,
வளைந்த அணிகலன் அணிந்த எழினியின் அரண்மனையின் முற்றத்தில் நின்று, நான்
ஒளி மழுங்கிய நிலவில் பனிபொழியும் விடியற்காலை நேரத்தில் 
போர் யானையின் காலடித்தடம் போன்ற என் கையிலுள்ள
ஒருகண் தடாரிப் பறையை அடிக்க, திறை கொடுக்காத
அஞ்சத்தக்கப் பகைவேந்தரின் அரிய மதில்களை அழித்துத்
தசையும் குருதியும் தோய்ந்ததால் ஈரமடைந்த,
துன்பந்தரும் தெய்வங்கள் உறையும் பெரிய போர்க்களமெல்லாம்,
வெளுத்த வாயுள்ள கழுதையை ஏரில் பூட்டி உழுது,
வெண்ணிற வரகும், கொள்ளும் விதைத்து,
இடைவிடாமல் போராகிய உழவைச் செய்யும் வேந்தே, நீ நீடு வாழ்க’ என்று வாழ்த்தி
அங்கே சென்று நான் நின்றேனாக, அப்பொழுதே
ஊரில் உள்ளவர்கள் நீருண்ணும் கிணற்றில் படர்ந்துள்ள பெரிய இலைகளையுடைய பாசியின்
வேர்களைப் போல் கிழிந்திருந்த என் உடையைக் களைந்து, நீண்ட கரையையுடைய
நுண்ணிய நூலாலான உடையை உடுப்பித்து, உண்பாயாக என்று சொல்லி
தேள் கொட்டினால் நெறியேறுவதைப் போல நாள்பட்டு நன்கு புளித்த கள்ளை
வானத்தில் மின்னும் கோள்போல் ஒளிறும் பொற்கலங்களில் ஊற்றி
உண்ணும் முறைப்படி அளித்தது மட்டுமல்லாமல், கொள்வார் கொள்ளும் முறைப்படி
என்னை விருந்தினனாக இருத்தி உண்பித்தான்; கடலுக்கு அப்பால் உள்ள நாட்டில் இருந்து
பெறுவதற்கரிய அமிழ்தம் போன்ற
கரும்பை இந்நாட்டிற்குக் கொண்டுவந்தவனுடைய பெரிய வழித்தோன்றல். 
					மேல்
# 393 நல்லிறையனார்
வீட்டில் தொடக்கம் முதலே பழகி அறியாத துன்பமான வாழ்க்கையில்,
என்னுடைய இளைய நெடிய மனைவியோடும் என் அறிவுக் கூர்மையும் கெட்டுவிட்டதால்
குடிகள் தோறும் முறையே சென்று பாடி, ஈவோரில்லாதலால் மிகவும் வருந்தி,
சோறாக்கும் விருப்பத்தை மறந்த எம்முடைய பானையை நிமிர்த்தி மீண்டும் சமைக்கச் செய்யும்
ஈதற்கடனை அறிந்த வள்ளன்மை உடையவர்கள் பிற நாடுகளில் இல்லாததால்,
வள்ளன்மையோடு எம்மை ஆதரிப்பவர் யார் என்று
நினைத்த நெஞ்சத்துடனே வருந்துவதற்கேதுவான ஆசை துணையாக
உலகத்து வளமெல்லாம் ஓரிடத்து இருந்தாற்போல,
மலர்மாலை அணிந்த தலைவனாகிய உன்னுடைய நல்ல புகழை நினைத்து,
உண்ணுவதால் கை ஈரமாவதை மறந்த என் மிகப் பெரிய சுற்றத்தின்
மிகுந்த வறுமைத் துன்பம் நீங்குமாறு, கொழுத்த ஊனைத் துண்டாக்க
கோடையில் பருத்தியிலிருந்து பஞ்சை எடுத்து வீடு நிறைய வைத்த
மூட்டை மூட்டையான பண்டம் செறிவாக நிறைந்தது போல்
வெண்ணிறமான, கொழுமை நிறைந்த ஊனைக் கொடுத்து, ஈனுதற்குரிய நாள் வந்தவுடன்
முட்டை ஈன்ற பாம்பின் பிளந்த நாவைப் போல் இருந்த என்னுடைய
பழைய, கிழிந்த உடையை முற்றிலும் நீக்கி,
அரும்பு விரிந்து மலர்ந்த புதிய பகன்றை மலரைப் போல்,
அகன்ற மடிப்புகளையுடைய உடையை உடுத்தச் செய்து, செல்வமும்
குறையாத அளவுக்குக் கொடுப்பாயாக, பெருமானே! மாசற்ற
முழுமதி போன்ற தடாரிப் பறையை ஒலிக்குமாறு அறைந்து,
ஆடும் பெண் ஆடிய பிறகு தளர்ந்து ஒடுங்குவது போல் எல்லாப் பொருளும் வாடி வதங்கும்
கோடைக் காலத்திலும் கோடிப்பொருளைக் கொடுத்துக்
காவிரி காப்பாற்றி ஆதரிக்கும் நல்ல நாட்டுக்கு அரசே!
’குறி தவறாத வாளையுடைய கிள்ளிவளவன் வாழ்க என்று
உன்னுடைய பெருமைக்குரிய வலிய திருவடிகளைப் பலமுறை பாடுவோம்.’
					மேல்
# 394 கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார்
விற்பயிற்சியால் உயர்ந்து அகன்று சந்தனம் பூசப்பட்ட மார்பினையுடைய,
தழைத்த கதிர்களுடன் கூடிய வயல்களையுடைய வெண்குடை என்னும் ஊருக்கு உரியவன்.
வலிமை பொருந்திய பெரிய கைகளையும், குறிதவறாத வாளையும் உடைய குட்டுவன்,
வள்ளன்மையுடையவன் என்பதை உலகம் புகழ்ந்தாலும்,
உயர்ந்த மொழியறிவும் புலமையும் உடைய புலவர்களே! அவனை நினைத்தலை விட்டுவிடுங்கள்.
நான் இருளும் நிலவும் அகன்று பகற்பொழுது வருவதற்காக வந்த விடியற் காலைப் பொழுதில்
என்னுடைய ஒருகண் தடாரிப் பறையை ஒலிக்குமாறு அறைந்து,
ஒலிமுழக்கம் செய்யும் முரசையும் நன்கு செய்யப்பட்ட தேரையுமுடைய அவன் தந்தையின் புகழை
வஞ்சித்துறைப் பாடலாகப் பாடினேனாக,
உள்ளத்தில் மிகுந்த மகிழ்ச்சியோடு, நான் அவனைவிட்டுப் பிரியாமல் இருக்கவேண்டும் என்று விரும்பி,
பகைவரைக் கொன்ற பின்பும் சினம் தணியாத, புலால் நாறும் கொம்பினையுடைய
கொடும் சினத்தையுடைய யானை ஒன்றை எனக்கு அளித்தான்; நான் அந்த யானையைக் கண்டு அஞ்சி,
அதைத் திருப்பி அவனிடம் அனுப்பிவிட்டேனாக, அவன்தான் அது
என் தகுதிக்குச் சிறிது என நான் உணர்வதாக எண்ணி வெட்கப்பட்டு, மேலும் ஒரு
பெரிய யானையைப் பரிசாக அளித்தான்; அதனால்
என் மிகப் பெரிய சுற்றம் வறுமையால் பெருந்துன்பம் அடைந்தாலும்
கிட்டுதற்கு அரிய பரிசிலை நல்குவான் என்று கருதி
குன்றுகள் பொருந்திய நாட்டுக்கு நான் இனி எப்போதும் செல்ல மாட்டேன்.
					மேல்
# 395 மதுரை நக்கீரர்
மென்புலமாகிய மருத நிலத்து வயல் உழவர்கள்
வன்புலமாகிய முல்லை நிலத்தில் தம் எருதுகளை மேயவிட்டு
சிறிய முயலின் குழைந்த சூட்டிறைச்சியுடன்
நெடிய வாளை மீனைக்கொண்டு செய்த பலவகையான அவியலைப்
பழஞ்சோற்றுடன் சேர்த்து உண்டு
புதர்களிலே மலர்ந்த செம்முல்லைப் பூவைத் தலையில் சூடிக்கொண்டு
அரித்தெழும் ஓசையுடைய தடாரிப் பறையை அடித்துக் கதிர்களை தின்னவந்த பறவைகளை ஓட்டி,
நெற்சோற்றிலிருந்து வடிக்கப்பட்ட கள்ளை அருந்துவர்;
வீட்டுக் கோழிகள் பசுமையான குரலில் கூவி அழைக்க,
காட்டுக்கோழியின் கவர்த்த குரலுடன்
நீர்க்கோழிகளும் தங்கள் குரலை எழுப்புக் கூப்பிடும்;
மூங்கில் போன்ற தோளையும்
மயில் போன்ற மெல்லிய சாயலையுமுடைய மகளிர்
வயல்களிலுள்ள கிளிகளை ஓட்டுவதால்,
அகன்ற சேறுள்ள இடத்தில் இருக்கும் பறவைகள் அங்கிருந்து பறந்து செல்லும்;
அங்கே, பல நல்ல விளைநிலங்கள் சூழ்ந்திருக்கும்.
தலைமையமைந்த செல்வச் சிறப்பும்,
சிறிய கண்களையுடைய யானைகளும், பெறுதற்கரிய தித்தன் என்பவனின்
கெடாத நல்ல புகழுமுடைய உறையூருக்குக் கிழக்கே,
பெரிய கையையுடைய வேண்மான் என்பவனுக்குரிய, அரிய காவல் பொருந்திய பிடவூரிலுள்ள,
அறச்செயல்களால் புகழ்பெற்ற சாத்தனின் கிணைப்பொருநர் நாங்கள் பெருமானே!
முந்திய நாள் நண்பகலில் காட்டு வழிகளில் நடந்து வருந்தி,
ஞாயிற்றின் கதிர்கள் மறைந்த இருள் சூழ்ந்த மாலைப் பொழுதில்
அவன் முற்றத்தில் நின்று நான் வந்ததை அறிவிப்பதற்காக
இனிய குரலுடன் ..... அரித்த ஓசையையுடைய தடாரிப் பறையுடன்
அங்கு நின்ற என்னைக் கண்டு,
சிறிதும் காலம் தாழ்த்தாமல், அதிகமாக எதுவும் பேசாமல்,
அரிய அணிகலன்களை வருவித்துக் கொடுத்தான், மிகவும் விரும்பி
மெல்லிய சிலசொற்களைச் சொன்னதுமன்றி, தன் மனையிலுள்ள
பொன்போன்ற அவன் மனைவிக்கு என்னை அறிமுகப்படுத்தி, ‘இவனை
என்னைப் போல் பேணுக.’ என்றான். அதனால்,
அவனை மறவேன்; அவனைத் தவிர வேறு யாரையும் நினையேன்;
இப்பெரிய உலகம் மழையின்றி மிகுந்த வெப்பத்தால் வாடினாலும்,
வானத்தில் எரிமீன்கள் மிகுதியாகத் தோன்றினாலும்,
குளமீன் என்னும் விண்மீனோடு தாள்மீன் என்னும் விண்மீனும் புகைந்து தோன்றினாலும்,
பெரிய வயல்களில் விளைந்த நெல்லின், கொக்கின் நகம் போன்ற சோற்றையும்,
வளமான பொரிக்கறியையும், சூட்டிறைச்சியையும் நிரம்ப உண்டு,
விளைச்சல் வெள்ளம் என்ற மிகப் பெரிய அளவாக விளையக் கொள்க என்று
உள்ளது இது என்றும் இல்லாதது இது என்றும் பாராமல்
கொடுத்தலிலே அமைந்துள்ளது அவனுடைய தாளாண்மை; அது வாழ்க.
					மேல்
# 396 மாங்குடி கிழார்
நீரில் கீழே மீன்கள் உலாவித் திரியும்;
நீரின் மேல் மகளிரின் கண்போன்ற பூக்கள் மலர்ந்திருக்கும்;
கழிகளால் சூழப்பட்ட விளை வயல்களில்
அரித்த ஓசையையுடைய பறையை முழக்கி, கதிர் கவர வரும் பறவைகள் ஓட்டப்படும்;
நீர் பெருகி வருதலால் குவிந்த மணலை அள்ளித்தூவும் காற்றால்
மெல்லிய இறகுகளையுடைய புள்ளினங்கள் அங்கிருந்து அகன்று செல்லும்;
மலர்களிடத்திலிருந்து பெற்ற கள் நிறைந்த மனைகளையுடைய கோசர் என்பவர்கள்
இனிய கள்ளின் தெளிவை உண்டு மகிழ்ந்து களிப்பேறி
இனிய குரவை ஆடும் இடத்தில் பாடல்கள் பாடுவர்;
ஊக்கம் இல்லாதவர்க்கு ஊக்கம் அளிப்பவன்;
உறவினர் இல்லாதார்க்கு உற்ற உறவினன் ஆவன்;
அவன் பிறபடையோடு கலந்த, வெல்லும் வேற்படையையுடைய வேளிர் தலைவன்;
நீர்வளம் மிகுந்த வாட்டாறு என்னும் ஊரின் தலைவனாகிய எழினியாதன்;
நாங்கள் அவனுடைய பொருநர் ஆவோம்;
அவன் எமக்கு அளித்த கொழுத்த துண்டமாகிய சூட்டிறைச்சியைச் சொல்லவா!
வளமான மலரினின்று இறக்கிய மதுவைச் சொல்லவா!
குறுமுயலின் கொழுப்புச் சேர்ந்த
மணம் கமழும் நெய்ச் சோற்றைச் சொல்லவா!
திறந்து மூட மறந்த நெற் கூட்டின் அடிப்பகுதியிலிருந்து
நாங்கள் முகந்துகொண்ட உணவுப் பொருள்களைச் சொல்லவா!
அவை போன்றவை பலபலவாம் ---------------
வறுமையுற்று வருந்திய -----------
என்னுடைய பெரிய சுற்றத்தார் உண்டதுபோக உணவு எஞ்சுமாறு,
அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உணவுப் பொருள்களை அளித்தான் எம் தலைவன்;
எம்மைப் போன்றவர் அவனிடம் பெற்ற செல்வத்துக்கு எல்லையே இல்லை;
மேகங்கள் தவழும் வானில் விண்மீன்களின் இடையே
விரிந்த கதிர்களைக் கொண்ட வெண் திங்களைப் போல்
சிறப்புடன் நிலவுவதாக அவனுடைய கெடாத நல்ல புகழ்;
நாள்தோறும் நாங்களும் எம்மைப் போன்றவர்களும் வாழ்த்திப் பாராட்டுமாறு
களிற்று நிரைகளையும் நல்ல அணிகலன்களையும் வழங்கி
புகழுண்டாக மேம்படுக, புலவர் பாடும் புகழுடைய அவன் பெருஞ்செல்வம்.
					மேல்
# 397
வெள்ளி என்னும் கோளும் பெரிய வானத்தில் எழுந்தது; பறவைகளும்
மரங்களின் உயர்ந்த கிளைகளில் இருந்த தங்கள் கூடுகளிலிருந்து குரல் எழுப்பி ஒலித்தன;
நீர்நிலைகளில் குவிந்திருந்த தாமரை மொட்டுகள் கண் விழிப்பது போல் மலர்ந்தன; மெல்லமெல்ல
திங்களின் ஒளி குறையத் தொடங்கியது; ஒலித்தலுக்குத் தயாராகி,
முழங்குகின்ற ஓசையையுடைய முரசுகளுடன், வலம்புரிச் சங்குகள் ஒலிக்க,
இரவுப் பொழுதை விரட்டியடித்த காலைப் பொழுது தோன்றும் நேரத்தில்,
எஞ்சி இருந்த குறைவான இருளைப் போக்கும் காவலுள்ள பாசறையில் எழும்
விடியற்கால ஒலிகளைக் கேட்பாயாக; பலவகையான பூங்கொத்துக்களால்
தொடுக்கப்பட்ட மாலையை அணிந்த மார்பையுடையவனே, துயிலெழுவாயாக என்று
தெளிந்த கண்ணையுடைய பெரிய தடாரிப் பறையை ஒலிக்குமாறு அறைந்து
அரண்மனையின் நெடிய முற்றத்தில் நின்றேன்; நான் வந்ததை விரும்பி,
’என்னை நினைத்து வந்த பரிசிலன் இவன்’ என்று கூறி,
நெய்யில் பொரித்ததும் தாளிப்பும் உடையதுமான பெரிய சூட்டிறைச்சித் துண்டுகளையும்,
மணி பதித்த பாத்திரத்தில் மணம் கமழும் கள்ளின் தெளிவையும் அளித்தான்;
பாம்பின் தோல் போன்ற மென்மையானதும் சிறந்த பூ வேலைப்பாடு அமைந்ததுமான உடையுடன்
மழை போன்ற ஈகைத்திறத்தால் வாரி வழங்கி,
வேனில் போன்ற என் வறுமைத் துன்பம் நீங்குமாறு,
அரிய அணிகலன்களை அளித்தான்; எப்போதும்
வயல்களில் பூத்த சிவந்த இதழ்களைக் கொண்ட தாமரை மலரானது,
அறுவகைத் தொழில்களைச் செய்யும் அந்தணர்கள் அறத்தை விரும்பி வளர்க்கும்
தீப்போல விளங்கும் நாட்டையுடைவனும், குறிதவறாத வாட்படையோடு சென்று
வெற்றி பெற்ற தீவுகளிலிருந்து பெற்ற பொன்னாலான அணிகலன்களை உடையவனுமாகிய வளவன்,
மோதும் அலைகளையுடைய பெரிய கடல் வறட்சியுறும் முடிவுக் காலமே வந்தாலும்,
வெப்பத்தைத் தரும் கதிரவன் கிழக்குத் திசை மாறித் தெற்கே தோன்றினாலும்,
’என்ன செய்வது?’ என்று நாங்கள் அஞ்ச மாட்டோம்; வெற்றி தரும் வேலைக் கையில் ஏந்தி,
அரிய போர் செய்யும் ஆற்றல் உடையவனின்
நன்கு செய்யப்பட்ட கழல்களை அணிந்த வலிமைமிக்க அடிகளின் குளிர்ந்த நிழலில் இருப்பதால்,
					மேல்
# 398 திருத்தாமனார்
திங்களின் நிலவொளி மறைய, வெள்ளியாகிய கோள் எழுந்து விளங்க,
சிறப்பாகக் கட்டப்பட்டு மாண்புற்ற இல்லத்தில் ------------
புள்ளிகளையுடைய சேவற் கோழி பொழுது விடிந்ததை அறிந்து கூவ,
நீர்நிலைகளில் இருந்த பூக்களின் மொட்டுகள் மலர, பாணர்கள்
தம்முடைய கைதேர்ந்த சிறிய யாழை இசைக்கும் முறை அறிந்து இசைக்க,
இரவுப் பொழுதை விரட்டியடித்த இன்பமான விடியற்காலையில்,
பரிசிலர்கள் நீங்காது இருக்கும் மிகுந்த மணமுள்ள பந்தலில்
அவர்களின் தகுதி அறிந்து பரிசளிக்கும், எப்பொழுதும் வாய்மையே பேசுபவன் வஞ்சன்;
அவனை மகிழ்விக்கும் பாணர் முதலியோர் அவனை அணுகமுடியுமே தவிர, பகைவர்களுக்கு
புலியினம் உறங்கும் கற்குகை போன்ற
நெருங்கமுடியாத பெரும்புகழ் பெற்ற அவனுடைய மூதூருக்குச் சென்று,
முழுமதி போன்ற வடிவும், அரித்தெழும் ஓசையையுமுடைய என் தடாரிப் பறையை
என்னுடைய வேண்டல் மொழிகளை, நீண்ட வார்கள் அரித்த குரல் எடுத்துக்கூற இசைத்து,
‘உன்னை நினைத்து வருவோரின் கலங்கள் நிரம்புமாறு பரிசுப் பொருள்களை வழங்குபவனே!
எம்மிடம் நீங்காத அன்புற்ற நிலைமையுடையவன் ஆகுக’ என்று என் வருகையை அறிவிக்க,
என் வருகையை அறிந்து,
நான் கூறிய சிறுசொற்களைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்து,
அன்போடு மலர்ந்த முகம் உடையவனாய், என் இடுப்பில் இருந்த
அழுக்குப் படிந்த கிழிந்த கந்தைத் துணியை நீக்கி, தன் இடுப்பில் உடுத்தியிருந்த
புகையை விரித்தாற் போன்ற சிறந்த உடையை எனக்கு உடுப்பித்து
நெருப்பில் காய்ந்தது போல் ஒன்றும் இல்லையாகிய என்னுடைய உண்கலத்தில்,
உண்பவர்கள் தமது நிழலைக் காணுமாறு தெளிந்த கள்ளின் தெளிவை நிரம்ப வார்த்து
நான் உண்ணுவதற்கு அருளினான், அது மட்டுமல்லாமல், தான் உண்ணும்
கலத்தில் இருந்த மான் இறைச்சித் துண்டுகளை வறுத்துப் பொரித்த கறியையும்,
கொக்கின் நகம் போன்ற சோற்றையும் என் சுற்றத்தார் வயிறார உண்ண
மலை போன்ற தன் மார்பில் அணிந்திருந்த, உலகம் எல்லாம் மதிக்கத்தக்க,
பல மணிகள் கோத்து ஒளியுடன் விளங்கும் பாம்பு போல் வளைந்த மாலையையும்,
மிகவும் உயர்ந்தவனாகிய அவன் மேனியிற் கிடந்த பூ வேலைப்பாடுகள் அமைந்த மெல்லிய உடைகளையும்,
தன் புகழ் எங்கும் பரவுமாறு, எமக்கு அளித்தான்.  
பறைபோல் முழங்கும் அருவிகளையுடைய பாயல் என்னும் மலைக்கு உரியவன்.
					மேல்
# 399 ஐயூர் முடவனார்
சமைக்கும் பெண் அளக்காமல் அள்ளிக்கொண்டு வந்த வெண்ணெல்லைச்
சிறந்த பூணுடன் கூடிய பருத்த உலக்கையால் குத்தி எடுக்கப்பட்ட அரிசியை,
புளித்த நீருள்ள அடுப்பில் ஏற்றாத உலையில் பெய்து, மிகுந்த நிழல் தரும்
உயர்ந்த கிளைகளையுடைய மாமரத்தின் இனிய பழங்களைப் பிசைந்து செய்த மணமுள்ள புளியும்,
பெரிய கரிய வரால் இறைச்சியும், கொம்புகளையுடைய சுறாமீனின் கொழுத்த துண்டுகளும்,
வயலில் விளைந்த வள்ளைக் கீரையும், சிறிய கொடியில் முளைத்த பாகற் காயும்,
பாதிரியின் முதிர்ந்த அரும்பின் இதழ் விரித்தாற் போன்ற
தோலை நீக்கிக் கலக்க வேண்டிய பொருள்களைக் கலந்து
மூடிவைத்து அவித்து முழுதும் வெந்த சோறும்,
வைக்கோலில் உழைக்கும் உழவர்கள், தாம் உண்ட கள்ளால் களிப்படைந்து மயங்கிச் சோர்ந்திருப்பின்,
பழஞ்சோற்றை உண்ணும் முழங்கும் நீரையுடைய தோட்டங்களையும் உடைய
காவிரி பாயும் நாட்டுக்கு உரியவனாகிய, அழியாத நல்ல புகழையுடைய
கிள்ளிவளவனை நினைத்து அவனை நோக்கிச் செல்கின்றேன்.
உதவியை நாடி, நான் பிறரை நோக்கிச் செல்ல மாட்டேன்; பிறர் முகத்தையும் பார்க்க மாட்டேன்.
நெடிய மூங்கிற் கழியாலான தூண்டிலால் பிடித்த மீனை விற்றுக்
கிணைமகள் சமைத்த நீர்த்தாய்ப் பரந்த புளிங்கூழை
காலம் தவறி உண்ணும் உணவையுடையேன், மனம் சோர்ந்து
ஒருபக்கம் இருந்தேன், என் நல்ல காலம் இருந்தவாறுதான் என்னே!, இப்போது
அறவோர்களில் சிறந்த அறவோனும், வீரர்களில் சிறந்த வீரனும்,
படைத்தலைவர்களில் சிறந்த படைத்தலைவனும், பெருமைக்குரிய முன்னோர்களின் வழித்தோன்றலுமாகிய
’உன் புகழால் உன் மேல் அன்புகொண்டான்; ஆகவே, நீ விரும்பும் செல்வத்தைப் பெறலாம்’ என்று பலரும் கூற.
மேலே செய்யவேண்டியவற்றை நினைத்துச் சென்று, வலிய கிணைக்கோலைக் கழுவி,
வார்கள் கட்டுக் குலைந்திருந்த என் தெளிந்த கண்ணையுடைய பெரிய கிணைப்பறையை
இறுகக்கட்டி, புதிய வலிய போர்வையைப் போர்த்தி,
அளவில்லாத மாலை போன்ற நெடிய வார்களை ஒலித்து இயக்கி,
உணவு பெறுவது தாமதமாகிவிடும் என்று கடவுளை வேண்டியும் கிணையை இயக்காமல்
’வலிய தேராகிய வண்டி சேற்றில் சிக்கிக் கொண்டால், தளராமல் இழுத்துச் செல்லும் வலிய கழுத்தையுடைய
காளை ஒன்றுதான் நான் விரும்பி வந்தது.’ என்று
ஒன்று நான் விரும்பிக் கேட்டு முடிப்பதற்கு முன்பே, அப்பொழுதே
கொடுப்பதற்கு முன்வந்து எனக்குக் கொடுப்பவனாய்,, வானில்
விண்மீன்கள் பூத்துக்கிடப்பதைப் போல் அழகிய நிறமுள்ள பல ஆனிரைகளை,
ஊர்ந்து செல்வதற்கேற்ற காளைகளுடன் கொடுத்தான்; தாளத்துடன்
’தடார்’ என்று இறங்கும் அருவிகளையுடைய,
வானளாவ உயர்ந்த உச்சியையுடைய தோன்றிமலைக்குத் தலைவன்.
					மேல்
# 400 கோவூர் கிழார்
உயர்ந்த ஆகாயத்தில் இருக்கும், முழுமதி
பதினைந்து நாட்கள் முறையே முதிர,
அதனைக் கடலின் நடுவே கண்டாற் போன்ற எனது
இசைக்கருவியாகிய தடாரிப்பறையை அறைந்து, முறையாக அவனுடைய புகழைப் பாடி,
வாயிலில் தோன்றிய இரவின் கடைப் பகுதியாகிய விடியற்காலையில்
உலகத்து மக்களெல்லாம் உறங்கிக் கொண்டிருக்க அவன் மட்டும்  உறங்காமல்
உலகைக் காக்கும் உயர்ந்த கொள்கை உடையவனாய்,
என் தெளிவான தடாரிப்பறையின் இசையைக் கேட்டான், என் தலைவன்;
அதைக் கேட்டதனால், என் மீதுள்ள அன்பு குறையாமல்,
பழையதாகிப்போன கந்தைத் துணியை இடுப்பிலிருந்து நீக்கி,
மிகப்பெரிய சிறப்புடைய நல்ல ஒளி மிகுந்த அணிகலன்களை
------------- ---------
புத்தாடை தந்து அணிப்பித்து, பொலிவுடன் இருக்கும் என் இடுப்பை நோக்கி
நாரால் வடிகட்டப்பட்ட கள்ளை உண்டு நாள்தோறும் மகிழ்ச்சி மிகுந்ததால்
நாட்கள் கழிந்ததையே நான் அறியாதவனாய் அவன் ஊரில் இருந்தேன்;
தன் பகைவரை அழிப்பது மட்டுமல்லாமல் அவனை அடைந்தோரின்
பசிப்பகையையும் அழிக்கவும் வல்லவன்.
வீரர்கள் மிகுந்த தன் ----------- 
கேள்வி அறிவிற் சிறந்த மறையோர்கள் நிறைந்த வேள்விச் சாலையில் தூண்களையும்
கரிய கழி வழியாக வந்திறங்கும் கடலிற் செல்லும் ஓடங்களை,
தெளிந்த நீர் பரந்த கடலுக்குச் செல்லும் வழியாகிய ஆற்றைச் செம்மைசெய்து செலுத்தி
நீர்த்துறைகள் தோறும் பிடித்துக் கட்டும் நல்ல ஊர்களையும்,
தங்கு வாழ்தற்குரிய இனிய புது வருவாயையும் உடைய நாட்டுக்கு உரியவன்.
					மேல்