பட்டினப்பாலை

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

சொற்பிரிப்பு-மூலம் அடிநேர்-உரை

வசை இல் புகழ் வயங்கு வெண் மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தன் பாடிய தளி உணவின்
புள் தேம்ப புயல் மாறி
வான் பொய்ப்பினும் தான் பொய்யா	5
மலை தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி
கார் கரும்பின் கமழ் ஆலை
தீ தெறுவின் கவின் வாடி		10
நீர் செறுவின் நீள் நெய்தல்
பூ சாம்பும் புலத்து ஆங்கண்
காய் செந்நெல் கதிர் அருந்து
மோட்டு எருமை முழு குழவி
கூட்டு நிழல் துயில் வதியும்		15
கோள் தெங்கின் குலை வாழை
காய் கமுகின் கமழ் மஞ்சள்
இன மாவின் இணர் பெண்ணை
முதல் சேம்பின் முளை இஞ்சி
அகல் நகர் வியல் முற்றத்து		20
சுடர் நுதல் மட நோக்கின்
நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும்
கோழி எறிந்த கொடும் கால் கனம் குழை
பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்
மு கால் சிறு தேர் முன் வழி விலக்கும்	25
விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா
கொழும் பல் குடி செழும் பாக்கத்து
குறும் பல் ஊர் நெடும் சோணாட்டு
வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி
நெல்லொடு வந்த வல் வாய் பஃறி	30
பணை நிலை புரவியின் அணை முதல் பிணிக்கும்
கழி சூழ் படப்பை கலி யாணர்
பொழில் புறவின் பூ தண்டலை
மழை நீங்கிய மா விசும்பின்
மதி சேர்ந்த மக வெண் மீன்		35
உரு கெழு திறல் உயர் கோட்டத்து
முருகு அமர் பூ முரண் கிடக்கை
வரி அணி சுடர் வான் பொய்கை
இரு காமத்து இணை ஏரி
புலி பொறி போர் கதவின்		40
திரு துஞ்சும் திண் காப்பின்
புகழ் நிலைஇய மொழி வளர
அறம் நிலைஇய அகன் அட்டில்
சோறு வாக்கிய கொழும் கஞ்சி
யாறு போல பரந்து ஒழுகி		45
ஏறு பொர சேறாகி
தேர் ஓட துகள் கெழுமி
நீறு ஆடிய களிறு போல
வேறுபட்ட வினை ஓவத்து
வெண் கோயில் மாசு ஊட்டும்		50
தண் கேணி தகை முற்றத்து
பகட்டு எருத்தின் பல சாலை
தவ பள்ளி தாழ் காவின்
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம்	55
மா இரும் பெடையோடு இரியல் போகி
பூதம் காக்கும் புகல் அரும் கடி நகர்
தூதுணம்புறவொடு துச்சில் சேக்கும்
முது மரத்த முரண் களரி
வரி மணல் அகன் திட்டை		60
இரும் கிளை இனன் ஒக்கல்
கரும் தொழில் கலி மாக்கள்
கடல் இறவின் சூடு தின்றும்
வயல் ஆமை புழுக்கு உண்டும்
வறள் அடும்பின் மலர் மலைந்தும்	65
புனல் ஆம்பல் பூ சூடியும்
நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரும்
நாள்மீன் விராய கோள்மீன் போல
மலர் தலை மன்றத்து பலர் உடன் குழீஇ
கையினும் கலத்தினும் மெய் உற தீண்டி	70
பெரும் சினத்தால் புறக்கொடாஅது
இரும் செருவின் இகல் மொய்ம்பினோர்
கல் எறியும் கவண் வெரீஇ
புள் இரியும் புகர் போந்தை
பறழ் பன்றி பல் கோழி			75
உறை கிணற்று புற சேரி
மேழக தகரொடு சிவல் விளையாட
கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி
நடுகல்லின் அரண் போல
நெடும் தூண்டிலில் காழ் சேர்த்திய	80
குறும் கூரை குடி நாப்பண்
நிலவு அடைந்த இருள் போல
வலை உணங்கும் மணல் முன்றில்
வீழ் தாழை தாள் தாழ்ந்த
வெண்கூதாளத்து தண் பூ கோதையர்	85
சினை சுறவின் கோடு நட்டு
மனை சேர்த்திய வல் அணங்கினான்
மடல் தாழை மலர் மலைந்தும்
பிணர் பெண்ணை பிழி மாந்தியும்
புன் தலை இரும் பரதவர்		90
பைம் தழை மா மகளிரொடு
பாய் இரும் பனி கடல் வேட்டம் செல்லாது
உவவு மடிந்து உண்டு ஆடியும்
புலவு மணல் பூ கானல்
மா மலை அணைந்த கொண்மூ போலவும்	95
தாய் முலை தழுவிய குழவி போலவும்
தேறு நீர் புணரியோடு யாறு தலைமணக்கும்
மலி ஓதத்து ஒலி கூடல்
தீது நீங்க கடல் ஆடியும்
மாசு போக புனல் படிந்தும்		100
அலவன் ஆட்டியும் உரவு திரை உழக்கியும்
பாவை சூழ்ந்தும் பல் பொறி மருண்டும்
அகலா காதலொடு பகல் விளையாடி
பெறற்கு அரும் தொல் சீர் துறக்கம் ஏய்க்கும்
பொய்யா மரபின் பூ மலி பெரும் துறை	105
துணை புணர்ந்த மட மங்கையர்
பட்டு நீக்கி துகில் உடுத்தும்
மட்டு நீக்கி மது மகிழ்ந்தும்
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்
மகளிர் கோதை மைந்தர் மலையவும்	110
நெடும் கால் மாடத்து ஒள் எரி நோக்கி
கொடும் திமில் பரதவர் குரூஉ சுடர் எண்ணவும்
பாடல் ஓர்த்தும் நாடகம் நயந்தும்
வெண் நிலவின் பயன் துய்த்தும்
கண் அடைஇய கடை கங்குலான்		115
மாஅ காவிரி மணம் கூட்டும்
தூஉ எக்கர் துயில் மடிந்து
வால் இணர் மடல் தாழை
வேலாழி வியன் தெருவில்
நல் இறைவன் பொருள் காக்கும்		120
தொல் இசை தொழில் மாக்கள்
காய் சினத்த கதிர் செல்வன்
தேர் பூண்ட மாஅ போல
வைகல்தொறும் அசைவு இன்றி
உல்கு செய குறைபடாது		125
வான் முகந்த நீர் மலை பொழியவும்
மலை பொழிந்த நீர் கடல் பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல
நீரினின்றும் நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர் பரப்பவும்		130
அளந்து அறியா பல பண்டம்
வரம்பு அறியாமை வந்து ஈண்டி
அரும் கடி பெரும் காப்பின்
வலி உடை வல் அணங்கின் நோன்
புலி பொறித்து புறம் போக்கி		135
மதி நிறைந்த மலி பண்டம்
பொதி மூடை போர் ஏறி
மழை ஆடு சிமைய மால் வரை கவாஅன்
வரை ஆடு வருடை தோற்றம் போல
கூர் உகிர் ஞமலி கொடும் தாள் ஏற்றை	140
ஏழக தகரோடு உகளும் முன்றில்
குறும் தொடை நெடும் படிக்கால்
கொடும் திண்ணை பல் தகைப்பின்
புழை வாயில் போகு இடைகழி
மழை தோயும் உயர் மாடத்து		145
சே அடி செறி குறங்கின்
பாசிழை பகட்டு அல்குல்
தூசு உடை துகிர் மேனி
மயில் இயல் மான் நோக்கின்
கிளி மழலை மென் சாயலோர்		150
வளி நுழையும் வாய் பொருந்தி
ஓங்கு வரை மருங்கின் நுண் தாது உறைக்கும்
காந்தள் அம் துடுப்பின் கவி குலை அன்ன
செறி தொடி முன்கை கூப்பி செவ்வேள்
வெறி ஆடு மகளிரொடு செறிய தாஅய்	155
குழல் அகவ யாழ் முரல
முழவு அதிர முரசு இயம்ப
விழவு அறா வியல் ஆவணத்து
மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய
மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும்	160
வரு புனல் தந்த வெண் மணல் கான்யாற்று
உரு கெழு கரும்பின் ஒண் பூ போல
கூழ் உடை கொழு மஞ்சிகை
தாழ் உடை தண் பணியத்து
வால் அரிசி பலி சிதறி			165
பாகு உகுத்த பசு மெழுக்கின்
காழ் ஊன்றிய கவி கிடுகின்
மேல் ஊன்றிய துகில் கொடியும்
பல் கேள்வி துறைபோகிய
தொல் ஆணை நல் ஆசிரியர்		170
உறழ் குறித்து எடுத்த உரு கெழு கொடியும்
வெளில் இளக்கும் களிறு போல
தீம் புகார் திரை முன்துறை
தூங்கு நாவாய் துவன்று இருக்கை
மிசை கூம்பின் நசை கொடியும்		175
மீன் தடிந்து விடக்கு அறுத்து
ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்
மணல் குவைஇ மலர் சிதறி
பலர் புகு மனை பலி புதவின்
நறவு நொடை கொடியொடு		180
பிறபிறவும் நனி விரைஇ
பல் வேறு உருவின் பதாகை நீழல்
செல் கதிர் நுழையா செழு நகர் வரைப்பின்
செல்லா நல் இசை அமரர் காப்பின்
நீரின் வந்த நிமிர் பரி புரவியும்		185
காலின் வந்த கரும் கறி மூடையும்
வடமலை பிறந்த மணியும் பொன்னும்
குட மலை பிறந்த ஆரமும் அகிலும்
தென் கடல் முத்தும் குண கடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரி பயனும்		190
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளம் தலைமயங்கிய நனம் தலை மறுகின்
நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும்
ஏமாப்ப இனிது துஞ்சி			195
கிளை கலித்து பகை பேணாது
வலைஞர் முன்றில் மீன் பிறழவும்
விலைஞர் குரம்பை மா ஈண்டவும்
கொலை கடிந்தும் களவு நீக்கியும்
அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும்	200
நல் ஆனொடு பகடு ஓம்பியும்
நான்மறையோர் புகழ் பரப்பியும்
பண்ணியம் அட்டியும் பசும் பதம் கொடுத்தும்
புண்ணியம் முட்டா தண் நிழல் வாழ்க்கை
கொடு மேழி நசை உழவர்		205
நெடு நுகத்து பகல் போல
நடுவு நின்ற நல் நெஞ்சினோர்
வடு அஞ்சி வாய் மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்வதூஉம் மிகை கொளாது கொடுப்பதூஉம் குறை கொடாது	210
பல் பண்டம் பகர்ந்து வீசும்
தொல் கொண்டி துவன்று இருக்கை
பல் ஆயமொடு பதி பழகி
வேறுவேறு உயர்ந்த முது வாய் ஒக்கல்
சாறு அயர் மூதூர் சென்று தொக்கு ஆங்கு	215
மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்து
புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்
முட்டா சிறப்பின் பட்டினம் பெறினும்
வார் இரும் கூந்தல் வயங்கிழை ஒழிய
வாரேன் வாழிய நெஞ்சே கூர் உகிர்	220
கொடுவரி குருளை கூட்டுள் வளர்ந்து ஆங்கு
பிறர் பிணியகத்து இருந்து பீடு காழ் முற்றி
அரும் கரை கவிய குத்தி குழி கொன்று
பெரும் கை யானை பிடி புக்கு ஆங்கு
நுண்ணிதின் உணர நாடி நண்ணார்	225
செறிவு உடை திண் காப்பு ஏறி வாள் கழித்து
உரு கெழு தாயம் ஊழின் எய்தி
பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர்
கடி அரண் தொலைத்த கதவு கொல் மருப்பின்
முடி உடை கரும் தலை புரட்டும் முன் தாள்	230
உகிர் உடை அடிய ஓங்கு எழில் யானை
வடி மணி புரவியொடு வயவர் வீழ
பெரு நல் வானத்து பருந்து உலாய் நடப்ப
தூறு இவர் துறுகல் போல போர் வேட்டு
வேறு பல் பூளையொடு உழிஞை சூடி	235
பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம்
மா கண் அகல் அறை அதிர்வன முழங்க
முனை கெட சென்று முன் சமம் முருக்கி
தலை தவ சென்று தண் பணை எடுப்பி
வெண் பூ கரும்பொடு செந்நெல் நீடி	240
மா இதழ் குவளையொடு நெய்தலும் மயங்கி
கராஅம் கலித்த கண் அகன் பொய்கை
கொழும் கால் புதவமொடு செருந்தி நீடி
செறுவும் வாவியும் மயங்கி நீர் அற்று
அறு கோட்டு இரலையொடு மான் பிணை உகளவும்	245
கொண்டி மகளிர் உண்துறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலர் அணி மெழுக்கம் ஏறி பலர் தொழ
வம்பலர் சேக்கும் கந்து உடை பொதியில்
பரு நிலை நெடும் தூண் ஒல்க தீண்டி	250
பெரு நல் யானையொடு பிடி புணர்ந்து உறையவும்
அரு விலை நறும் பூ தூஉய் தெருவில்
முது வாய் கோடியர் முழவொடு புணர்ந்த
திரி புரி நரம்பின் தீம் தொடை ஓர்க்கும்
பெரு விழா கழிந்த பேஎ முதிர் மன்றத்து	255
சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பி
அழல் வாய் ஓரி அஞ்சுவர கதிர்ப்பவும்
அழு குரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும்
கணம் கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇ
பிணம் தின் யாக்கை பேய்மகள் துவன்றவும்	260
கொடும் கால் மாடத்து நெடும் கடை துவன்றி
விருந்து உண்டு ஆனா பெரும் சோற்று அட்டில்
ஒண் சுவர் நல் இல் உயர் திணை இருந்து
பைம் கிளி மிழற்றும் பால் ஆர் செழு நகர்
தொடுதோல் அடியர் துடி பட குழீஇ	265
கொடு வில் எயினர் கொள்ளை உண்ட
உணவு இல் வறும் கூட்டு உள்ளகத்து இருந்து
வளை வாய் கூகை நன் பகல் குழறவும்
அரும் கடி வரைப்பின் ஊர் கவின் அழிய
பெரும் பாழ் செய்தும் அமையான் மருங்கு அற	270
மலை அகழ்க்குவனே கடல் தூர்க்குவனே
வான் வீழ்க்குவனே வளி மாற்றுவன் என
தான் முன்னிய துறைபோகலின்
பல் ஒளியர் பணிபு ஒடுங்க
தொல் அருவாளர் தொழில் கேட்ப		275
வடவர் வாட குடவர் கூம்ப
தென்னவன் திறல் கெட சீறி மன்னர்
மன் எயில் கதுவும் மதன் உடை நோன் தாள்
மா தானை மற மொய்ம்பின்
செம் கண்ணால் செயிர்த்து நோக்கி	280
புன் பொதுவர் வழி பொன்ற
இருங்கோவேள் மருங்கு சாய
காடு கொன்று நாடு ஆக்கி
குளம் தொட்டு வளம் பெருக்கி
பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி	285
கோயிலொடு குடி நிறீஇ
வாயிலொடு புழை அமைத்து
ஞாயில்தொறும் புதை நிறீஇ
பொருவேம் என பெயர் கொடுத்து
ஒருவேம் என புறக்கொடாது		290
திரு நிலைஇய பெரு மன் எயில்
மின் ஒளி எறிப்ப தம் ஒளி மழுங்கி
விசி பிணி முழவின் வேந்தர் சூடிய
பசு மணி பொருத பரேர் எறுழ் கழல் கால்
பொன் தொடி புதல்வர் ஓடி ஆடவும்	295
முற்று இழை மகளிர் முகிழ் முலை திளைப்பவும்
செம் சாந்து சிதைந்த மார்பின் ஒண் பூண்
அரிமா அன்ன அணங்கு உடை துப்பின்
திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய
வேலினும் வெய்ய கானம் அவன்		300
கோலினும் தண்ணிய தட மென் தோளே

பழிச்சொல் இல்லாத புகழையுடைய, சுடர் வீசும் வெள்ளியாகிய மீன்
(தான் நிற்பதற்குரிய)வடதிசையினின்றும் மாறி தென்திசையில் சென்றாலும்,
தன்னை(மேகத்தை)ப் பாடிய, நீர்த்துளியையே உணவாகக்கொண்ட
வானம்பாடி வருந்த மழை பெய்யாமற்போக,
மேகம் பொய்த்தாலும் தான் பொய்யாத (காலந்தோறும் வருகின்ற),				5
(குடகு)மலையை உற்பத்தியிடமாகக்கொண்ட கடற்பக்கத்துக் காவிரி(யின்)
நீர் பரந்து பொன்(போல் விளைச்சல்) செழித்துப்பெறுகும் - (28-பெரிய சோழநாட்டில்),
விளைதல் தொழில் அற்றுப்போகாத அகன்ற வயல்களில்,
கார்காலத்ததைப்போன்ற(செழுமையான) கரும்பு(ப் பாகு)மணக்கும் கொட்டிலின் (அடுப்பு)
நெருப்பின் அனல் சுடுகையினால், அழகு கெட்டு,							10
நீரையுடைய வயலில் உள்ள நீண்ட நெய்தல்
மலர் வாடும் வயல்வெளிகளில்,
காய்ந்த செந்நெற்கதிரைத் தின்ற,
பருத்த வயிற்றையுடைய எருமை (ஈன்ற)முதிர்ந்த கன்றுகள்,
நெற்கூட்டினுடைய நிழலில் உறக்கத்தைக் கொள்ளும் - (28-பெரிய சோழநாட்டில்),		15
கொத்துக்கொத்தான காய்களையுடைய தென்னையையும், குலைகளையுடைய வாழையினையும்,
(நன்கு காய்த்த)காயையுடைய பாக்கு மரத்தையும், மணம் கமழும் மஞ்சளையும்,
கூட்டமான மாமரங்களையும், குலைகளையுடைய பனையினையும்,
கிழங்கையுடைய சேம்பினையும், முளையினையுடைய இஞ்சியினையும் உடைய - (28-பெரிய சோழநாட்டில்),
அகன்ற மனையின் பரந்த முற்றத்தில்,								20
பளிச்சிடும் நெற்றியையும், கபடமற்ற பார்வையையும்(கொண்ட), 
நேர்த்தியான நகைகளை அணிந்த பெண்கள், உலருகின்ற நெல்லைத் தின்னும்
கோழியை (விரட்ட)எறிந்த வளைவான அடிப்பகுதியையுடைய பொன்னாற்செய்த காதணி,
பொன் காப்பு அணிந்த கால்களையுடைய சிறுவர் (குதிரை பூட்டாமற் கையால்)உருட்டும்,
மூன்று சக்கர நடைவண்டியின் முன்செல்லும் வழியைத் தடுக்கும் 				25
(இங்ஙனம் குறுக்கிடும்)பகையைத் தவிர (மனம்)கலங்கும் (வேறு)பகையை அறியாத,
நல்ல வசதியான பல குடிகளைக் கொண்ட, செழுமையான பாக்கங்களையும்,
அருகருகே அமைந்த பல (சிறிய)ஊர்களையுமுடைய - பெரிய சோழநாட்டில்;
வெள்ளை(வெளேர் என்ற) உப்பின் விலையைச் சொல்லி(விற்று, அதற்கு மாற்றாக வாங்கிய)
நெல்லைக் கொண்டுவந்த, கெட்டியான விளிம்புகளையுடைய படகுகளை --			30
கொட்டில் பந்தியில் நிறுத்தப்படும் குதிரைகளை(க் கட்டிவைப்பதை)ப் போன்று -- கட்டுத்தறிகளில் கட்டிவைக்கும்
உப்பங்கழி சூழ்ந்த ஊர்ப்புறங்களையும், மனமகிழ்ச்சி தரும் புதுவருவாயையுடைய
தோப்புக்களை அடுத்து இருக்கும் பூஞ்சோலைகளையும்,
மழை(பெய்து) விட்டுப்போன அகன்ற ஆகாயத்தில்
சந்திரனைச் சேர்ந்த மகம் என்னும் வெள்ளிய மீனின்						35
வடிவத்தில் அமைந்த வலிமையுள்ள உயர்ந்த கரையையுடைய,
மணம்பொருந்திய பூக்கள் நிறத்தால் தம்முள் மாறுபட்டுக் கிடப்பதினால்
பல நிறங்களைக் கொண்டு ஒளிரும் அழகிய பொய்கைகளையும்,
(இம்மையிலும் மறுமையிலும் உண்டாகிய) இரண்டுவிதக் காம இன்பம் (கொடுக்கும்) இணைந்த ஏரிகளையும்;
புலிச் சின்னத்தையும் (பலகைகள் தம்மில் நன்கு)பொருதும் (இரட்டைக்)கதவுகளையும் (உடைய),		40
செல்வம் தங்கும் திண்மையான மதிலையும்(உடைய),
(இம்மையில்)புகழ் நிலைபெற்ற சொல் எங்கும் பரவிநிற்க,
(மறுமைக்கு)அறம் நிலைபெற்ற, அகன்ற சமையற்கூடத்தில்
சோற்றை வடித்து வார்த்த கொழுமையான கஞ்சி
ஆற்றுநீர் போல (எங்கும்)பரவி ஓடி,									45
(அதைக் குடிக்க வந்த)காளைகள் தம்மில் பொருவதால் சேறாய் ஆகி,
(அச் சேற்றின் மீது)(பல)தேர்கள் ஓடுவதால் துகள்களாய் (மதில்கள் மீது)தெறித்து,
புழுதியில் விளையாண்ட (அதனை மேலே அப்பிக்கொண்ட) ஆண்யானையைப் போல,
பல்வேறுவிதமாக வரையப்பட்ட சித்திரங்களையுடைய
வெண்மையான அரண்மனை(மதில்களை) அழுக்கேறப்பண்ணும்;					50
குளிர்ந்த சிறிய குளங்களை உள்ளேயடக்கின முற்றத்தையுடைய,
பெரிய எருதுகளுக்கான (அவற்றிற்கு வைக்கோல் இடும்)பல சாலைகளையும்,
தவஞ்செய்யும் (சமண,பௌத்த) பள்ளிகள் இருக்கும் தாழ்வான மரங்கள் கொண்ட சோலைகளில்
மினுமினுக்கும் சடையையுடைய துறவிகள் தீயில் யாகம்செய்யும்(போது எழும்பிய)
(நெய் முதலியவற்றின்)மணமுள்ள புகையை வெறுத்து, குயில்கள் தம்முடைய			55
கரிய பெரிய பேடைகளுடன் விரைவாக(விழுந்தடித்து)ப் பறந்தோடி,
பூதங்கள் (வாசலில்)காத்துநிற்கும் நுழைவதற்கு அரிய காவல் உள்ள (காளி)கோட்டத்தில்,
கல்லைத் தின்னும் அழகிய புறாக்களுடன் ஒதுக்குப்புறமாகத் தங்கும்
பழைமையான மரத்தின் (கீழான) மற்போர் (செய்யும்) களங்கள் (கொண்ட பட்டினம்) -
அறல் சேர்ந்த மணல் கொண்ட அகன்ற திட்டுகளில்,						60
பெரும்குடும்பத்தவரும், ஓரே இனத்துச் சுற்றத்தவருமான,
வலிய தொழில் செய்யும் செருக்குள்ள ஆடவர்
கடல் இறால்களின் (தசை)சுடப்பட்டதைத் தின்றும்,
வயல் ஆமையைப் புழுக்கின இறைச்சியைத் தின்றும்,
மணற்பாங்கான இடத்தின் (அங்கு வளரும்)அடப்பம் பூவைத் தலையிலே கட்டியும்,		65
நீர் (மேல் வளரும்)ஆம்பல் பூவை(ப் பறித்து)ச் சூடியும்,
நீல நிறமுடைய ஆகாயத்தில் வலமாக எழுந்து திரிதலைச்செய்யும்
(அன்றைய)நாளுக்குரிய விண்மீனுடன் கலந்த கோள்களாகிய மீன்கள் போல,
அகன்ற இடத்தையுடைய அம்பலங்களில் பலரும் சேரத் திரண்டு,
(வெறும்)கைகளாலும் ஆயுதங்களாலும் உடலில் படும்படி பற்றியும் அடித்தும்,			70
மிகுந்த சினத்தால் புறமுதுகுகொடாமல்,
நீண்ட போர்(செய்யும்) போட்டிபோடும் வலிமையுடையோர்
கல்லை எறியும் கவணை அஞ்சி
பறவைகள் பறந்தோடும் கபிலநிறப் பனைமரங்கள் (கொண்ட பட்டினம்) -
குட்டிகளையுடைய பன்றிகளையும், பலவிதமான கோழிகளையும்,					75
உறைக் கிணறுகளையும் உடைய (ஊருக்குப்)புறம்பேயுள்ள சேரிகளில்
செம்மறி ஆட்டுக்கிடாயோடே கௌதாரிப் பறவை விளையாட - (இருக்கும் பட்டினம்),
(தோல்)கேடயங்களை வரிசையாக(க் கூரைபோல் சாய்த்து) அடுக்கி, வேலை ஊன்றி,
நடுகல்லுக்கு வைத்த பாதுகாப்பு போல,
நீண்ட தூண்டிலில் இரும்பு முள் சேர்த்துவைக்கப்பட்ட						80
குறுகிய கூரைச்சரிவுகளையுடைய குடியிருப்புகளின் நடுவில்,
நிலவின் நடுவே சேர்ந்த இருளைப் போல
வலைகிடந்து உலரும் மணலையுடைய முற்றத்தைக்கொண்ட இல்லங்களில்,
விழுதையுடைய தாழையின் அடியில் இருந்த
வெண்டாளியின் குளிர்ந்த பூவால் செய்த மாலையையுடையோர்,					85
சினைப்பட்ட சுறா மீனின் கொம்பை நட்டு,
மனையில் ஏற்றிய துடியான தெய்வம் காரணமாக,
மடலையுடைய தாழையின் மலரைச் சூடியும்,
சொரசொரப்பான பனைமரத்துக் கள்ளை உண்டும்,
பரட்டைபாய்ந்த தலையினையுடைய கரிய பரதவர்							90
பசிய தழையை(உடுத்திய) மாநிற மகளிரோடு,
பரந்த கருமைநிறமுடைய குளிர்ந்த கடலில் மீன்பிடிக்கச் செல்லாது,
உவாநாள்(பௌர்ணமி/அமாவாசை) ஓய்வுஅனுசரித்து உண்டும் விளையாடியும்;
முடைநாற்றமுள்ள மணலையும் பூக்களையும் உடைய கடற்கரையில்,
கரிய மலையைச் சேர்ந்த மேகம் போலவும்,							95
தாயின் முலையைத் தழுவிய பிள்ளையைப் போலவும்,
தெளிந்த கடலின் அலைகளுடன் காவிரியாறு கலக்கும்
மிகுந்த அலைஆரவாரம் ஒலிக்கும் புகார்முகத்தில்,
தீவினை போகக் கடலாடியும்,
(பின்னர்)உப்புப் போக (நல்ல)நீரிலே குளித்தும்,							100
நண்டுகளை அலைக்கழித்தும், தொடர்ந்து வரும் அலைகளை மிதித்து விளையாடியும்,
(ஈர மணலில்)உருவங்களை உருவாக்கியும்; ஐம்பொறிகளால் நுகரும்பொருள்களை நுகர்ந்து மயங்கியும்,
நீங்காத விருப்பத்துடன் பகற்பொழுதெல்லாம் விளையாடி,
பெறுவதற்கு அரிய தொன்றுதொட்ட மேன்மையுடைய சுவர்க்கத்தைப் போன்ற,
பொய்க்காத இயல்புடைய, மலர்கள் மிக்க பெரிய துறைகள் - (உள்ள பட்டினம்)			105
(தம்)கணவரைக் கூடிய மடப்பம் பொருந்திய இளம்பெண்கள்,
பட்டுடையை நீக்கிப் (மெல்லிய)பருத்தி ஆடையை உடுத்தவும்,
(மிதமான கிளர்ச்சியைத் தரும்)கள்ளைத் தவிர்த்து (வெறியூட்டும்)மது (உண்டு) மகிழ்ந்தும்,
கணவர் (சூடும்)கண்ணியை மகளிர் (தலையில்)சூடிக்கொள்ளவும்,
மகளிர் (சூடும்)கோதையைக் கணவர் (தோளைச்சுற்றி)அணிந்துகொள்ளவும்,			110
உயரமான தூண்களையுடைய மாடங்களில் ஒளிரும் தீப்பந்தங்களைப் பார்த்து,
வளைந்த கட்டுமரங்களிலிருக்கும் மீனவர், செந்நிறச் சுவாலைகளை எண்ணவும்,
பாடல்(இசையை) ரசித்துக்கேட்டும், நாடகங்களைக் கண்டுபோற்றியும்,
வெள்ளிய நிலவொளியின் பயனை நுகர்ந்தும்,
(பின்பு)கண்துயின்ற கடையாமத்து இரவில்,								115
அகண்ட காவிரி (பலவித மலர்களின்)மணங்களைக் கொண்டுவந்து திரட்டும்
தூய மணல்திட்டுகளில் துயில்கொண்டு கிடந்து - (இருக்கும் பட்டினம்),
வெண்மையான பூங்கொத்துக்களையும் மடல்களையுமுடைய தாழையையுடைய
கடற்கரையின் (அருகே இருக்கும்)அகன்ற தெருவிடத்து,
நல்ல அரசனின் பொருளை (மற்றவர் கொள்ளாமல்)காக்கும்					120
தொன்மையான புகழையுடைய (சுங்கம் வசூலிக்கும்)தொழிலாளர்,
சுடும் சினமுடைய கதிர்களையுடைய ஞாயிற்றின்
தேர் பூண்ட குதிரைகளைப் போல,
நாள்தோறும் சோர்வின்றிச்
சுங்கம் கொள்வதில் தளர்வடையாராக -								125
மேகம் (தான்) முகந்த நீரை மலையில் சொரியவும்,	
மலையில் சொரிந்த நீர் (மீண்டும்)கடலில் பரவவும்,
மழை பெய்யும் ஒழுங்கான (சுழல்)நிகழ்வு போல -
கடலிலிருந்து நிலத்திற்கு(பண்டசாலைக்கு) ஏற்றுவதற்காகவும்,
நிலத்திலிருந்து(அப்பண்டசாலையிலிருந்து) கடலில் (உள்ள மரக்கலங்களில்)பரப்பிவைக்கவும்,	130
(மனத்தால்)அளந்து அறிய முடியாத பலவகைப் பொருட்களும்
எல்லை அறியாதபடி வந்து திரண்டு,
அரிய காவலையுடைய பெரும் பாதுகாப்புடைய சுங்கச்சாவடியில்,
வலிமையுடைய பெரும் அச்சம்தரும் (அச்சடையாளமாகிய)மூர்க்கமான 
(பாயும்)புலி(ச்சின்னம்) இட்டு, (பண்டசாலைக்கு)ப் வெளியில் அனுப்பி,				135
மதிப்பு மிக்க ஏராளமான பண்டங்கள்	
பொதிந்த பொதிகளை அடுக்கிவைத்த குவியலின்மீது ஏறி,
மழை விளையாடும் சிகரத்தையுடைய உயர்ந்த மூங்கில்கள் வளர்ந்த சரிவுகள் உள்ள
மலையில் துள்ளி விளையாடும் வருடைமானின் காட்சி போல,
கூரிய நகங்களையுடைய நாயின் வளைந்த பாதங்களையுடைய ஆணானது			140
ஆட்டுக் கிடாயுடன் குதிக்கும் (பண்டசாலையின்)முற்றத்தையும் - (கொண்ட பட்டினம்),		
(ஒன்றற்கொன்று)நெருக்கமாய் அமைந்த படிகளையுடைய நீண்ட ஏணிச்சட்டங்கள்(சார்த்தின)
சுற்றுத் திண்ணையினையும், பல உள்கட்டுக்களையும்,
சிறுவாசலையும், பெரியவாசலையும், நீண்ட நடை(ரேழி)களையும் உடைய
மேகங்களை எட்டித்தொடும்(அளவுக்கு) உயரமான மாடத்தில் -					145
சிவந்த பாதங்களும், செறிந்த தொடைகளும்,	
புத்தம் புதிய நகைகளும், பெரிய அல்குலும்,
தூய்மையான பஞ்சினால் நெய்த ஆடையும், பவளம் போலும் நிறமும்,
மயில்(போன்ற) மென்னயமும், மான்(போன்ற) பார்வையும்,
கிளி(போன்ற) மழலைமொழியும், மென்மையான சாயலும் உடைய மகளிர் -			150
தென்காற்று வரும் சாளரங்களைச் சேர்த்து,		
உயர்ந்த மலைப்பக்கத்தே நுண்ணிய மகரந்தம் துளிக்கும்
செங்காந்தளின் அழகிய மடல்கள் (இணைந்து) கவிந்திருக்கும் குலையைப் போன்ற --
செறிந்த வளையல்களுடைய -- முன்கை குவித்து வணங்கிநிற்க, முருகனின்
வெறியாட்டு ஆடும் மகளிரோடு (அவர் ஆட்டத்திற்கு இணையாகப்)பொருந்தப் பரந்து,		155
வங்கியம்(புல்லாங்குழல்) இசையுண்டாக்க, யாழ் ஒலிக்க,					
முழவு அதிர்ந்துமுழங்க, முரசு ஒலிப்ப,
விழாக்கோலம் நீங்காத அகன்ற அங்காடித் தெருவினில் -
குற்றம் அற்ற சிறப்பினைடைய தெய்வங்களைக் கொண்ட
மலர் அணிந்த (கோயில்)வாசலில் (கட்டின) பலரும் வணங்கும் கொடிகளும்			160
(பெருகி)வரும் நீர் கொண்டுவந்த வெண்மையான மணலையுடைய காட்டாற்று(க்கரையில் நின்ற)
அழகு பொருந்திய கரும்பின் பிரகாசமுள்ள பூவைப் போன்ற,
(தானிய மாவுக்)கூழையுடைய நிறைந்த பாத்திரத்தையும்,
வழிபாட்டுடன் (பரப்பிய)குளிர்ந்த பண்ணியங்களையும்(வைத்து)
வெண்மையான அரிசியையும் பலியாகத் தூவி,							165
பாக்கு(வெற்றிலை) சொரிந்த, புது மெழுக்கினையுடைய,
கால்கள் நட்டு (அதன் மேல்)வைத்த கவிந்த மேற்கூரையின்
மேலே நட்டுவைத்த (வீர வணக்க)துகில் கொடிகளும்,
பல நூல்களை(முற்றக் கற்று அவற்றில்) நிறைவுபெற்ற
பெரிய ஆளுமை(பெற்ற) நல்ல ஆசிரியர்கள்								170
வாது (செய்யக்)கருதிக் கட்டின அச்சம் மிகுந்த கொடிகளும்,
கட்டுக்கம்பத்தை (அசைத்து அசைத்து)நெகிழ்க்கும் ஆண்யானை போன்று,
(கண்ணுக்கு)இனிதான புகாரிடத்து அலைகளையுடைய துறையின் முன்னே,
அசைகின்ற (நெருக்கமாய் நின்று காத்திருக்கும்)மரக்கலங்களின் நெருக்கமான இருப்பினில்,
(அவற்றின்)மேல் (நட்ட)பாய்மரத்தின் (மேலெடுத்த)விருப்பம் தரும் கொடிகளும்,			175
மீனை வெட்டி, (அதனுள் இருக்கும்)வேண்டாத பகுதிகளை நீக்கி,
(அதன்)தசையினைப் பொரிக்கும் ஓசையெழும்பும் முற்றத்தினையும்,
மணலைக் குவித்து, மலர்களைச் சிதறி,
(கள்ளுண்போர்)பலரும் செல்லும் மனைகளில் (தெய்வத்திற்குக் கொடுக்கும்)பலிகளுக்கான வாசலில்
கள் விற்பனைக்காகக் கட்டிய கொடியுடன்,								180
ஏனையவற்றிற்குக் கட்டின கொடிகளும் மிகவும் கலந்துகிடப்பதால்,
பலவாய் வேறுபட்ட வடிவினையுடைய பெருங்கொடிகளின் நிழலில் -
செல்கின்ற (ஞாயிற்றின்)கிரணங்கள் நுழையமுடியாத வளமையான ஊர் எல்லையில்,
குன்றாத நல்ல புகழையுடைய தேவர்களின் காவலால்,
கடலில் (மரக்கலங்களில்)வந்த நிமிர்ந்த நடையினையுடைய குதிரைகளும்,			185
(நிலத்தில்)வண்டிகளில் வந்த கரிய மிளகுப் பொதிகளும்,
இமயமலையில் பிறந்த மாணிக்கமும், பொன்னும்,
பொதிகை மலையில் பிறந்த சந்தனமும், அகிலும்,
தென்திசைக் கடலில் (பிறந்த)முத்தும், கீழ்த்திசைக் கடலில் (பிறந்த)பவளமும்,
கங்கையாற்றின் விளைச்சலும், காவிரியாற்றின் செல்வங்களும்,					190
ஈழத்தின் உணவுப்பொருளும், கடாரத்தின் ஈட்டமும்,
அரிதானவும், பெரிதானவும், (நிலத்தின் முதுகு)நெளியும்படி திரண்டு,
செல்வங்கள் (ஒன்றோடொன்று)கலந்துகிடக்கும் அகன்ற இடங்களுடைய தெருக்களும் - (கொண்ட பட்டினம்), 
(மீன் பிடிப்போர்)கடல்நீர் நடுவிடத்தும், (ஏனையோர்)கரையினிடத்தும்
மகிழ்ச்சியுடன் இனிதாகத் தூங்கி,									195
(தம்)சுற்றம் தழைக்க (தம் உயிர்க்கு வரும்)பகையைப் பற்றிக்கவலைப்படாமல்,
வலைஞர் முற்றத்தில் மீன் பிறழ்ந்து திரியும்படியாகவும்,
விலைஞர் குடிலில் விலங்குகள் கிடக்கும்படியாகவும்,
கொலைத் தொழிலை விலக்கியும், களவுத் தொழிலைப் போக்கியும்,
தேவர்களைப் போற்றியும், வேள்வியைச் செய்வித்தும்						200
நல்ல பசுக்களோடு எருதுகளைப் பாதுகாத்தும்,							
அந்தணர்க்குள்ள புகழை அவர்க்கு நிலைநிறுத்தியும்,
(பல)பண்டங்களை ஆக்கியிட்டும், புதிய நல்லுணவு கொடுத்தும்,
அறத்தொழில்கள் முட்டுப்படாத குளிர்ந்த அருளுடனே வாழும் இல்வாழ்க்கையையுடைய,
வளைந்த மேழி(யால் உழவுத்தொழிலை) விரும்பும் உழவரும் -					205
நீண்ட நுகத்தடியில் (தைத்த) பகலாணி போல,
நடுவுநிலையென்னும் குணம் நிலைபெற்ற நல்ல நெஞ்சினையுடையோர்,
(தம் குடிக்கு)பழிச்சொல் அஞ்சி மெய்யே சொல்லி,
தம்முடையவற்றையும் பிறருடையவற்றையும் ஒன்றாக எண்ணி,
(தாம்)கொள்வனவற்றை மிகையாகக் கொள்ளாது, கொடுப்பனவற்றைக் குறையாகக் கொடாமல்,	210
பல சரக்குகளையும் விலைசொல்லிக் கொடுக்கும்,
பழந்தொழிலால் வரும் உணவினைக் கொள்ளும், நெருங்கின குடியிருப்புகள் - (கொண்ட பட்டினம்),
பல திரளோடே இவ்வூரிடத்தே பழகி,
பல பல சாதிகளாயுயர்ந்த அறிவு வாய்ந்த சுற்றத்தினர்
திருவிழா நிகழும் பழைமையான ஊருக்குச் சென்று குடியேறினாற்போன்று,			215
மொழிகள் பல பெருகிய குற்றமற்ற (பிற)தேசங்களிலே
(தத்தம்)நிலத்தைக் கைவிட்டுப்போந்த மக்கள் கூடி மகிழ்ந்து இருக்கும்,
குறைவுபடாத சிறப்புகள் கொண்ட - பட்டினம் (எனக்கு உரித்தாகப்)பெறுவதாயினும் -
நீண்ட கரிய கூந்தலையுடைய ஒளிரும் அணிகளையுடையாள் (இங்கு என்னைப்)பிரிந்திருப்ப,
(யான் நின்னோடு கூட)வாரேன்; (நீ)வாழ்க, நெஞ்சே - கூரிய நகங்களையுடைய,			220
வளைந்த வரிகளையுடைய(புலியின்) குட்டி கூட்டுக்குள் (அடையுண்டு)வளர்ந்தாற் போன்று,
பகைவர் சிறையறையிலிருந்து, (தன்)தன்மான உணர்வு வைரம்பாய்ந்து;
(தன்னை விழப்பண்ணின குழியின்)அரிய கரைகளை இடியும்படி (கொம்பினால்)குத்திக் குழியைத் தூர்த்த,
பெரிய துதிக்கையையுடைய யானை (தன்)பிடியிடத்தில் சென்றதைப் போன்று,
(சிறையிலிருந்து தப்புதற்குரிய வழியை)நுட்பமாக எண்ணி ஆராய்ந்து, (அப்)பகைவருடைய	225
செறிவுள்ள திண்ணிய காவல்மதிலை ஏறி(க்கடந்து), வாட்படையை ஓட்டி,
அச்சம் பொருந்தின தன் அரசவுரிமையை முறையாலே பெற்று -
(தான் இறையாகப்)பெற்ற அரசுரிமையால் மகிழ்வுறுதல் செய்யானாய், பகைவரின்
காவலையுடைய அரண்களைப் பிடித்த (கோட்டைக்)கதவை முறிக்கும் கொம்பினையும்,
கிரீடங்களையுடைய கரிய தலைகளை உருட்டும் முன்காலின்					230
நகமுடைய அடிகளையும் கொண்ட உயர்ந்த அழகினையுடைய யானை,
வடித்த மணிகட்டின குதிரைகளோடு, வீரர் விழும்படி,
பெரிய நல்ல வானத்தில் பருந்து உலாவித் திரியும்படியாக,
புதர்கள் படர்ந்த பாறைக்குன்றுகள் போல, போரை விரும்பி,
(சிறுபூளை,பெரும்பூளையாகிய)பலவாகிய பூளைகளோடே, உழிஞையைச் சூடி,			235
பேயின் கண்ணை ஒத்த, முழங்குகின்ற காவலையுடைய முரசம்
பெருமைகொள்ளும் இடத்தையுடைய பாசறையில் நடுங்குவனவாய் முழங்க,
பகைப்புலம் கெடும்படி சென்று, முன்னால் நிற்கும் தூசிப்படையை அழித்து,
(அப்பகைவர்)அரண்களில் மிடுக்குடன் நடந்து, மருதநிலத்துக் குடிகளை ஓட்டி -
வெண்மையான பூக்களையுடைய கரும்புகளுடன் செந்நெல்லும் உயரமாய் வளர்ந்து,		240
பெரிய இதழ்களையுடைய குவளையோடு நெய்தலும் கலந்து,
முதலைகள் (செருக்கித்)திரிந்த இடமகன்ற பொய்கைகளில்,
தடித்த தண்டுகளையுடைய அறுகுடன் கோரைகளும் வளர்ந்து,
வயலும், குளங்களும், தம்மில் ஒன்றாகி, நீரற்று,
நெளிவுள்ள கொம்புகளையுடைய கலைமான்களோடு பெண்மான்கள் துள்ளிவிளையாடவும்;	245
சிறைப்பிடித்துவந்த மகளிர் நீருண்ணும் துறையில் சென்று முழுகி,
(அவர்கள்)அந்திக்காலத்தே கொளுத்தின அணையாத விளக்கினையுடைய,
பூக்களைச் சூட்டின, சாணம் மெழுகிய, இடத்தில் ஏறிப் பலர் தொழுவதற்கு,
புதியவர்கள் தங்கும், தெய்வம் உறையும் கம்பம் உள்ள அம்பலத்தில்,
பருத்த நிலையையுடைய நெடிய தூண் சாயும்படி தம்முடம்பை உரசி				250
பெரிய நல்ல யானைகளுடன் பிடிகள் கூடித் தங்கும்படியாகவும்;
அரிய விலை(க்கு வாங்கிய) நறுமணமுள்ள பூக்களைச் சிதறி, தெருவினில்
அறிவு வாய்க்கப்பெற்ற கூத்தருடைய மத்தளத்தின் தாளத்தோடு கூடின
முறுக்கப்பட்ட புரி(போன்ற) நரம்பின் இனிய கட்டினையுடைய யாழைக் கேட்கும்
பெரிய திருநாள் முடிந்துபோன, அச்சம் மிகுந்த, மன்றத்தில்,						255
சிறிய பூக்களையுடைய நெருஞ்சியோடு அறுகம்புல் அடர்ந்து பரவப்பெற்று,
கொடிய வாயையுடைய நரிகள் (பிறர்க்கு)அச்சம் தோன்ற ஊளையிடவும்;
அழுகின்ற குரலையுடைய கூகைகளுடன் ஆண்டலைப்பறவைகள் கூப்பிடவும்;
திரட்சிகொண்ட ஆண்பேய்களுடன் மயிரைத் தாழ்த்து மெல்லநடந்து,
பிணந்தின்னும் வடிவையுடைய பேய்மகள் நெருங்கிச்செல்லவும்;					260
உருண்ட(வளைவான) தூண்களையுடைய மாடத்தின் உயரமான தலைவாசலில் ஒன்றுகூடி,
(இடையறாது)விருந்தினர் உண்டு(ம்) குறையாத நிறைந்த சோற்றையுடைய அடுக்களை(உள்ள),
(சாந்து பூசி)அழகுமிக்க சுவர்களையுடைய நல்ல இல்லங்களின் உயர்ந்த திண்ணைகளிலேயிருந்து,
பச்சைக் கிளிகள் மழலையில் பேசும் பால் நிறைந்த வளமான ஊர்,
செருப்பு (அணிந்த) காலினையுடையராய் உடுக்கை ஒலிக்கத் திரண்டு,				265
கொடிய வில்லையுடைய வேடர் கொள்ளையாக(க் கொண்டு) உண்ட
நெல் இல்லாமற்போன வெறுமையான நெற்கூட்டின் உட்புறத்தில் தங்கி,
வளைந்த அலகையுடைய கூகை உச்சிக்காலத்து(ம்) கூவவும்;
அரிய காவலையுடைய மதிலையுடைய பகைவரின் படைவீடுகள் அழகு அழியவும்,
பெரும் அழிவைச் செய்தும் மனநிறைவடையானாய் - ‘(பகைவர்)நாடு இல்லையாகும்படி,	270
மலைகளையெல்லாம் மட்டப்படுத்துவான், கடல்களையெல்லாம் தூர்ப்பான்,
வானத்தை(யும்) (கீழ்)வீழ்த்துவான், காற்று (அடிக்கும் போக்கை)மாற்றுவான்' என்று கூறும்படி,
தான் கருதிய (போர்த்துறைகள்)எல்லாம் பொருதுமுடிக்கக்கூடியவன் என்பதினால் -
பலராகிய ஒளிநாட்டார் தாழ்ந்து (தம்)வீரம் குறைய,
தொன்மையான அருவாளநாட்டவர் ஏவல் கேட்க,							275
வடநாட்டவர் களையிழக்க, குடநாட்டவர் (மனவெழுச்சி)குன்றிப்போக,
பாண்டியன் வலியழிய, சினங்கொண்டு, அரசருடைய
பெரும் அரண்களைக் கைப்பற்றும் செருக்குடைய வலிய முயற்சியினையும்,
பெருமைமிக்க நாற்படையினையும், வீரமான வலிமையையும்,(கொண்டு)
(தன்)சிவந்த கண்ணால் வெகுண்டு பார்த்து,								280
வளங்குன்றிய முல்லைநில மன்னர் கிளை(முழுதும்)கெட்டுப்போக,
இருங்கோவேளின் குலம் (முழுதும்)அழிய -
காடுகளை அழித்து, (அவற்றை மக்கள் வாழும்)நாடாகச் செய்து,
குளங்களைத் தோண்டி, செல்வத்தை மிகுத்து,
பருத்த நிலைகளைக்கொண்ட மாடங்களையுடைய உறையூர் (என்னும் தன்னூரை)விரிவாக்கி,	285
கோயில்களுடன் (பழைய)குடிமக்களையும் நிலைநிறுத்தி,
பெரிய வாயில்களுடன் சிறு வாசல்களையும் உண்டாக்கி,
கோட்டை முகப்புத்தோறும் (மறைந்தெறியும்)அம்புக்கட்டுக்களைக் கட்டிவைத்து,
போரிடுவோம் எனச் சூள் உரைத்து,
(பின்னர் போரைக்)கைவிடுவோம் என்று கருதிப் புறமுதுகிட்டு ஓடாமல்,				290
செல்வம் நிலைபெற்ற பெரிய ஆக்கத்தையுடைய (உறந்தையின்)மதிலில்,
பிரகாசமான விளக்குகள் ஒளிவீசுவதால் - தம்முடைய வீரம் குறைந்து,
இறுக்கிய வார்க்கட்டினைக் கொண்ட முரசுகளையுடைய வேந்தர் (தம் முடிமேல்)சூடின
புதிய மணிகள் மோதுகின்ற பெரிய அழகிய வலியினையுடைய கழலை அணிந்த காலையும்,
பொன்னால் செய்த வளையினையுடைய பிள்ளைகள் ஓடிவந்து ஏறி விளையாடுதலாலும்,	295
உடல் முழுதும் அணிகலன்கள் அணிந்த மகளிரின் (தாமரை)மொட்டு(ப் போன்ற)முலைகள் அழுந்துவதாலும்,
சிவப்புச் சந்தனம் அழிந்துபோன மார்பினையும், ஒளிரும் பேரணிகலன்களையும்,
ஆண் சிங்கத்தைப் போன்ற வருத்துதலையுடைய வலியினையும் உடைய
திருமாவளவவன் பகைவரைக் கொல்லுதற்கு உயர்த்தி ஓங்கிய
வேலினும் கொடியவாயிருந்தன, (தலைவியைப் பிரிந்து செல்லும் வழியிலுள்ள)காடு, அவன்	300
செங்கோலினும் குளிர்ந்தன (தலைவியின்)பெரிய மெல்லிய தோள்கள்.