மலைபடுகடாம்

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

சொற்பிரிப்பு-மூலம் அடிநேர்-உரை

திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின்
விண் அதிர் இமிழ் இசை கடுப்ப பண் அமைத்து
திண் வார் விசித்த முழவொடு ஆகுளி
நுண் உருக்குற்ற விளங்கு அடர் பாண்டில்
மின் இரும் பீலி அணி தழை கோட்டொடு		5
கண் இடை விடுத்த களிற்று உயிர் தூம்பின்
இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ
நடுவு நின்று இசைக்கும் அரி குரல் தட்டை
கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி		10
நொடி தரு பாணிய பதலையும் பிறவும்
கார் கோள் பலவின் காய் துணர் கடுப்ப
நேர் சீர் சுருக்கி காய கலப்பையிர்
கடு கலித்து எழுந்த கண் அகன் சிலம்பில்
படுத்து வைத்து அன்ன பாறை மருங்கின்		15
எடுத்து நிறுத்து அன்ன இட்டு அரும் சிறு நெறி
தொடுத்த வாளியர் துணை புணர் கானவர்
இடுக்கண் செய்யாது இயங்குநர் இயக்கும்
அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது
இடி சுர நிவப்பின் இயவு கொண்டு ஒழுகி		20
தொடி திரிவு அன்ன தொண்டு படு திவவின்
கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா
குரல் ஓர்த்து தொடுத்த சுகிர் புரி நரம்பின்
அரலை தீர உரீஇ வரகின்
குரல் வார்ந்து அன்ன நுண் துளை இரீஇ		25
சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி
இலங்கு துளை செறிய ஆணி முடுக்கி
புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து
புதுவது போர்த்த பொன் போல் பச்சை
வதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால்		30
மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து
அடங்கு மயிர் ஒழுகிய அம் வாய் கடுப்ப
அகடு சேர்பு பொருந்தி அளவினில் திரியாது
கவடு பட கவைஇய சென்று வாங்கு உந்தி
நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை		35
களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின்
வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர் பேரியாழ்
அமைவர பண்ணி அருள் நெறி திரியாது
இசை பெறு திருவின் வேத்தவை ஏற்ப
துறை பல முற்றிய பை தீர் பாணரொடு		40
உயர்ந்து ஓங்கு பெரு மலை ஊறு இன்று ஏறலின்
மதம் தபு ஞமலி நாவின் அன்ன
துளங்கு இயல் மெலிந்த கல் பொரு சீறடி
கணம் கொள் தோகையின் கதுப்பு இகுத்து அசைஇ
விலங்கு மலைத்து அமர்ந்த சே அரி நாட்டத்து	45
இலங்கு வளை விறலியர் நின் புறம் சுற்ற
கயம் புக்கு அன்ன பயம் படு தண் நிழல்
புனல் கால்கழீஇய மணல் வார் புறவில்
புலம்பு விட்டு இருந்த புனிறு இல் காட்சி
கலம் பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ		50
தூ மலர் துவன்றிய கரை பொரு நிவப்பின்
மீமிசை நல் யாறு கடல் படர்ந்து ஆஅங்கு
யாம் அவணின்றும் வருதும் நீயிரும்
கனி பொழி கானம் கிளையொடு உணீஇய
துனை பறை நிவக்கும் புள் இனம் மான		55
புனை தார் பொலிந்த வண்டு படு மார்பின்
வனை புனை எழில் முலை வாங்கு அமை திரள் தோள்
மலர் போல் மழை கண் மங்கையர் கணவன்
முனை பாழ்படுக்கும் துன் அரும் துப்பின்
இசை நுவல் வித்தின் நசை ஏர் உழவர்க்கு		60
புது நிறை வந்த புனல் அம் சாயல்
மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி
வில் நவில் தட கை மேவரும் பெரும் பூண்
நன்னன் சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு
உள்ளினிர் சேறிர் ஆயின் பொழுது எதிர்ந்த		65
புள்ளினிர் மன்ற என் தாக்குறுதலின்
ஆற்றின் அளவும் அசையும் நல் புலமும்
வீற்று வளம் சுரக்கும் அவன் நாடு படு வல்சியும்
மலையும் சோலையும் மா புகல் கானமும்
தொலையா நல் இசை உலகமொடு நிற்ப		70
பலர் புறம்கண்டு அவர் அரும் கலம் தரீஇ
புலவோர்க்கு சுரக்கும் அவன் ஈகை மாரியும்
இகழுநர் பிணிக்கும் ஆற்றலும் புகழுநர்க்கு
அரசு முழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு
தூ துளி பொழிந்த பொய்யா வானின்		75
வீயாது சுரக்கும் அவன் நாள் மகிழ் இருக்கையும்
நல்லோர் குழீஇய நா நவில் அவையத்து
வல்லார் ஆயினும் புறம் மறைத்து சென்றோரை
சொல்லிக்காட்டி சோர்வு இன்றி விளக்கி
நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும்	80
நீர் அகம் பனிக்கும் அஞ்சுவரு கடும் திறல்
பேர் இசை நவிரம் மேஎய் உறையும்
காரி உண்டி கடவுளது இயற்கையும்
பாய் இருள் நீங்க பகல் செய்யா எழுதரும்
ஞாயிறு அன்ன அவன் வசை இல் சிறப்பும்		85
இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம்
நுகம் பட கடந்து நூழிலாட்டி
புரை தோல் வரைப்பின் வேல் நிழல் புலவோர்க்கு
கொடை கடன் இறுத்த அவன் தொல்லோர் வரவும்
இரை தேர்ந்து இவரும் கொடும் தாள் முதலையொடு	90
திரை பட குழிந்த கல் அகழ் கிடங்கின்
வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி
உரை செல வெறுத்த அவன் மூதூர் மாலையும்
கேள் இனி வேளை நீ முன்னிய திசையே
மிகு வளம் பழுநிய யாணர் வைப்பின்		95
புதுவது வந்தன்று இது அதன் பண்பே
வானம் மின்னு வசிவு பொழிய ஆனாது
இட்ட எல்லாம் பெட்டாங்கு விளைய
பெயலொடு வைகிய வியன் கண் இரும் புனத்து
அகல் இரு விசும்பின் ஆஅல் போல		100
வாலிதின் விரிந்த புன் கொடி முசுண்டை
நீலத்து அன்ன விதை புன மருங்கில்
மகுளி பாயாது மலி துளி தழாலின்
அகளத்து அன்ன நிறை சுனை புறவின்
கௌவை போகிய கரும் காய் பிடி ஏழ்		105
நெய் கொள ஒழுகின பல் கவர் ஈர் எள்
பொய் பொரு கயமுனி முயங்கு கை கடுப்ப
கொய் பதம் உற்றன குலவு குரல் ஏனல்
விளை தயிர் பிதிர்வின் வீ உக்கு இருவிதொறும்
குளிர் புரை கொடும் காய் கொண்டன அவரை	110
மேதி அன்ன கல் பிறங்கு இயவின்
வாதி கை அன்ன கவை கதிர் இறைஞ்சி
இரும்பு கவர்வுற்றன பெரும் புன வரகே
பால் வார்பு கெழீஇ பல் கவர் வளி போழ்பு
வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல்		115
வேல் ஈண்டு தொழுதி இரிவுற்று என்ன
கால் உறு துவைப்பின் கவிழ் கனைத்து இறைஞ்சி
குறை அறை வாரா நிவப்பின் அறையுற்று
ஆலைக்கு அலமரும் தீம் கழை கரும்பே
புயல் புனிறு போகிய பூ மலி புறவின்		120
அவல் பதம் கொண்டன அம் பொதி தோரை
தொய்யாது வித்திய துளர் படு துடவை
ஐயவி அமன்ற வெண் கால் செறுவில்
மை என விரிந்தன நீள் நறு நெய்தல்
செய்யா பாவை வளர்ந்து கவின் முற்றி		125
காயம் கொண்டன இஞ்சி மா இருந்து
வயவு பிடி முழந்தாள் கடுப்ப குழிதொறும்
விழுமிதின் வீழ்ந்தன கொழும் கொடி கவலை
காழ் மண்டு எஃகம் களிற்று முகம் பாய்ந்து என
ஊழ் மலர் ஒழி முகை உயர் முகம் தோய		130
துறுகல் சுற்றிய சோலை வாழை
இறுகு குலை முறுக பழுத்த பயம் புக்கு
ஊழுற்று அலமரு உந்தூழ் அகல் அறை
காலம் அன்றியும் மரம் பயன் கொடுத்தலின்
காலின் உதிர்ந்தன கரும் கனி நாவல்		135
மாறுகொள ஒழுகின ஊறு நீர் உயவை
நூறொடு குழீஇயின கூவை சேறு சிறந்து
உண்ணுநர் தடுத்தன தேமா புண் அரிந்து
அரலை உக்கன நெடும் தாள் ஆசினி
விரல் ஊன்று படு கண் ஆகுளி கடுப்ப		140
குடிஞை இரட்டு நெடு மலை அடுக்கத்து
கீழும் மேலும் கார் வாய்த்து எதிரி
சுரம் செல் கோடியர் முழவின் தூங்கி
முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினை பலவே
தீயின் அன்ன ஒண் செங்காந்தள்			145
தூவல் கலித்த புது முகை ஊன் செத்து
அறியாது எடுத்த புன் புற சேவல்
ஊஉன் அன்மையின் உண்ணாது உகுத்தென
நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய்
வெறிக்களம் கடுக்கும் வியல் அறைதோறும்		150
மண இல் கமழும் மா மலை சாரல்
தேனினர் கிழங்கினர் ஊன் ஆர் வட்டியர்
சிறு கண் பன்றி பழுதுளி போக்கி
பொருது தொலை யானை கோடு சீர் ஆக
தூவொடு மலிந்த காய கானவர்			155
செழும் பல் யாணர் சிறு குடி படினே
இரும் பேர் ஒக்கலொடு பதம் மிக பெறுகுவிர்
அன்று அவண் அசைஇ அல் சேர்ந்து அல்கி
கன்று எரி ஒள் இணர் கடும்பொடு மலைந்து
சேந்த செயலை செப்பம் போகி			160
அலங்கு கழை நரலும் ஆரி படுகர்
சிலம்பு அடைந்து இருந்த பாக்கம் எய்தி
நோனா செருவின் வலம் படு நோன் தாள்
மான விறல் வேள் வயிரியம் எனினே
நும் இல் போல நில்லாது புக்கு			165
கிழவிர் போல கேளாது கெழீஇ
சேண் புலம்பு அகல இனிய கூறி
பரூஉ குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉ கண் இறடி பொம்மல் பெறுகுவிர்
ஏறி தரூஉம் இலங்கு மலை தாரமொடு		170
வேய் பெயல் விளையுள் தேம் கள் தேறல்
குறைவு இன்று பருகி நறவு மகிழ்ந்து வைகறை
பழம் செருக்குற்ற நும் அனந்தல் தீர
அருவி தந்த பழம் சிதை வெண் காழ்
வரு விசை தவிர்த்த கடமான் கொழும் குறை	175
முளவுமா தொலைச்சிய பைம் நிண பிளவை
பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ
வெண் புடை கொண்ட துய் தலை பழனின்
இன் புளி கலந்து மா மோர் ஆக
கழை வளர் நெல்லின் அரி உலை ஊழ்த்து		180
வழை அமை சாரல் கமழ துழைஇ
நறு மலர் அணிந்த நாறு இரு முச்சி
குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி
அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ
மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர்		185
செரு செய் முன்பின் குருசில் முன்னிய
பரிசில் மறப்ப நீடலும் உரியிர்
அனையது அன்று அவன் மலை மிசை நாடே
நிரை இதழ் குவளை கடி வீ தொடினும்
வரை அரமகளிர் இருக்கை காணினும்		190
உயிர் செல வெம்பி பனித்தலும் உரியிர்
பல நாள் நில்லாது நில நாடு படர்மின்
விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி
புழைதொறும் மாட்டிய இரும் கல் அடாஅர்
அரும் பொறி உடைய ஆறே நள் இருள்		195
அலரி விரிந்த விடியல் வைகினிர் கழிமின்
நளிந்து பலர் வழங்கா செப்பம் துணியின்
முரம்பு கண் உடைந்த பரல் அவல் போழ்வில்
கரந்து பாம்பு ஒடுங்கும் பயம்புமார் உளவே
குறி கொண்டு மரம் கொட்டி நோக்கி		200
செறி தொடி விறலியர் கைதொழூஉ பழிச்ச
வறிது நெறி ஒரீஇ வலம் செயா கழிமின்
புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர்
உயர் நிலை இதணம் ஏறி கை புடையூஉ
அகல் மலை இறும்பில் துவன்றிய யானை		205
பகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடும் கல்
இரு வெதிர் ஈர் கழை தத்தி கல்லென
கரு விரல் ஊகம் பார்ப்போடு இரிய
உயிர் செகு மரபின் கூற்றத்து அன்ன
வரும் விசை தவிராது மரம் மறையா கழிமின்	210
உரவு களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி
இரவின் அன்ன இருள் தூங்கு வரைப்பின்
குமிழி சுழலும் குண்டு கய முடுக்கர்
அகழ் இழிந்து அன்ன கான்யாற்று நடவை
வழூஉம் மருங்கு உடைய வழாஅல் ஓம்பி		215
பரூஉ கொடி வலந்த மதலை பற்றி
துருவின் அன்ன புன் தலை மகாரோடு
ஒருவிர்ஒருவிர் ஓம்பினர் கழிமின்
அழுந்துபட்டு அலமரும் புழகு அமல் சாரல்
விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா	220
வழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி
அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய
முழு நெறி அணங்கிய நுண் கோல் வேரலோடு
எருவை மென் கோல் கொண்டனிர் கழிமின்
உயர் நிலை மா கல் புகர் முகம் புதைய		225
மாரியின் இகுதரு வில் உமிழ் கடும் கணை
தாரொடு பொலிந்த வினை நவில் யானை
சூழியின் பொலிந்த சுடர் பூ இலஞ்சி
ஓர் யாற்று இயவின் மூத்த புரிசை
பராவு அரு மரபின் கடவுள் காணின்		230
தொழா நிர் கழியின் அல்லது வறிது
நும் இயம் தொடுதல் ஓம்புமின் மயங்கு துளி
மாரி தலையும் அவன் மல்லல் வெற்பே
அலகை அன்ன வெள் வேர் பீலி
கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும்		235
கடும் பறை கோடியர் மகாஅர் அன்ன
நெடும் கழை கொம்பர் கடுவன் உகளினும்
நேர் கொள் நெடு வரை நேமியின் தொடுத்த
சூர் புகல் அடுக்கத்து பிரசம் காணினும்
ஞெரேரென நோக்கல் ஓம்புமின் உரித்து அன்று	240
நிரை செலல் மெல் அடி நெறி மாறுபடுகுவிர்
வரை சேர் வகுந்தின் கானத்து படினே
கழுதில் சேணோன் ஏவொடு போகி
இழுதின் அன்ன வால் நிணம் செருக்கி
நிறம் புண் கூர்ந்த நிலம் தின் மருப்பின்		245
நெறி கெட கிடந்த இரும் பிணர் எருத்தின்
இருள் துணிந்து அன்ன ஏனம் காணின்
முளி கழை இழைந்த காடு படு தீயின்
நளி புகை கமழாது இறாயினிர் மிசைந்து
துகள் அற துணிந்த மணி மருள் தெள் நீர்		250
குவளை அம் பைம் சுனை அசைவு விட பருகி
மிகுத்து பதம் கொண்ட பரூஉ கண் பொதியினிர்
புள் கை போகிய புன் தலை மகாரோடு
அற்கு இடை கழிதல் ஓம்பி ஆற்ற நும்
இல் புக்கு அன்ன கல் அளை வதிமின்		255
அல் சேர்ந்து அல்கி அசைதல் ஓம்பி
வான்கண் விரிந்த விடியல் ஏற்றெழுந்து
கானகம் பட்ட செம் நெறி கொண்மின்
கயம் கண்டு அன்ன அகன் பை அம் கண்
மைந்து மலி சினத்த களிறு மதன் அழிக்கும்		260
துஞ்சு மரம் கடுக்கும் மாசுணம் விலங்கி
இகந்து சேண் கமழும் பூவும் உண்டோர்
மறந்து அமைகல்லா பழனும் ஊழ் இறந்து
பெரும் பயன் கழியினும் மாந்தர் துன்னார்
இரும் கால் வீயும் பெரு மர குழாமும்		265
இடனும் வலனும் நினையினிர் நோக்கி
குறி அறிந்து அவையவை குறுகாது கழிமின்
கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்து
கூடு இயத்து அன்ன குரல் புணர் புள்ளின்
நாடு காண் நனம் தலை மென்மெல அகன்மின்	270
மா நிழல் பட்ட மரம் பயில் இறும்பின்
ஞாயிறு தெறாஅ மாக நனம் தலை
தேஎம் மருளும் அமையம் ஆயினும்
இறாஅ வன் சிலையர் மா தேர்பு கொட்கும்
குறவரும் மருளும் குன்றத்து படினே		275
அகன் கண் பாறை துவன்றி கல்லென
இயங்கல் ஓம்பி நும் இயங்கள் தொடுமின்
பாடு இன் அருவி பயம் கெழு மீமிசை
காடு காத்து உறையும் கானவர் உளரே
நிலை துறை வழீஇய மதன் அழி மாக்கள்		280
புனல் படு பூசலின் விரைந்து வல் எய்தி
உண்டற்கு இனிய பழனும் கண்டோர்
மலைதற்கு இனிய பூவும் காட்டி
ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற
நும்மின் நெஞ்சத்து அவலம் வீட			285
இம்மென் கடும்போடு இனியிர் ஆகுவிர்
அறிஞர் கூறிய மாதிரம் கைக்கொள்பு
குறியவும் நெடியவும் ஊழ் இழிபு புதுவோர்
நோக்கினும் பனிக்கும் நோய் கூர் அடுக்கத்து
அலர் தாய வரி நிழல் அசையினிர் இருப்பின்		290
பல திறம் பெயர்பவை கேட்குவிர் மாதோ
கலை தொடு பெரும் பழம் புண் கூர்ந்து ஊறலின்
மலை முழுதும் கமழும் மாதிரம்தோறும்
அருவி நுகரும் வான் அரமகளிர்
வரு விசை தவிராது வாங்குபு குடைதொறும்		295
தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை
இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல்
விலங்கல் மீமிசை பணவை கானவர்
புலம் புக்கு உண்ணும் புரி வளை பூசல்
சேய் அளை பள்ளி எஃகு உறு முள்ளின்		300
எய் தெற இழுக்கிய கானவர் அழுகை
கொடுவரி பாய்ந்தென கொழுநர் மார்பில்
நெடு வசி விழுப்புண் தணிமார் காப்பு என
அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல்
தலை நாள் பூத்த பொன் இணர் வேங்கை		305
மலைமார் இடூஉம் ஏம பூசல்
கன்று அரைப்பட்ட கயம் தலை மட பிடி
வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின்
ஒண் கேழ் வய புலி பாய்ந்தென கிளையொடு
நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல்	310
கை கோள் மறந்த கரு விரல் மந்தி
அரு விடர் வீழ்ந்த தன் கல்லா பார்ப்பிற்கு
முறி மேய் யாக்கை கிளையொடு துவன்றி
சிறுமையுற்ற களையா பூசல்
கலை கையற்ற காண்பு இன் நெடு வரை		315
நிலை பெய்து இட்ட மால்பு நெறி ஆக
பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை
அரும் குறும்பு எறிந்த கானவர் உவகை
திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என
நறவு நாள்செய்த குறவர் தம் பெண்டிரொடு		320
மான் தோல் சிறு பறை கறங்க கல்லென
வான் தோய் மீமிசை அயரும் குரவை
நல் எழில் நெடும் தேர் இயவு வந்து அன்ன
கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை
நெடும் சுழி பட்ட கடுங்கண் வேழத்து		325
உரவு சினம் தணித்து பெரு வெளில் பிணிமார்
விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை
ஒலி கழை தட்டை புடையுநர் புனம்தொறும்
கிளி கடி மகளிர் விளி படு பூசல்
இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு		330
மலை தலைவந்த மரையான் கதழ் விடை
மாறா மைந்தின் ஊறு பட தாக்கி
கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப
வள் இதழ் குளவியும் குறிஞ்சியும் குழைய
நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை		335
காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி
வண் கோள் பலவின் சுளை விளை தீம் பழம்
உண்டு படு மிச்சில் காழ் பயன் கொண்மார்
கன்று கடாஅவுறுக்கும் மகாஅர் ஓதை
மழை கண்டு அன்ன ஆலைதொறும் ஞெரேரென	340
கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும்
தினை குறு மகளிர் இசை படு வள்ளையும்
சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப்பறையும் குன்றகம் சிலம்பும்
என்று இ அனைத்தும் இயைந்து ஒருங்கு ஈண்டி	345
அவலவும் மிசையவும் துவன்றி பல உடன்
அலகை தவிர்த்த எண் அரும் திறத்த
மலை படு கடாஅம் மாதிரத்து இயம்ப
குரூஉ கண் பிணையல் கோதை மகளிர்
முழவு துயில் அறியா வியலுள் ஆங்கண்		350
விழவின் அற்று அவன் வியன் கண் வெற்பே
கண்ண் தண்ண் என கண்டும் கேட்டும்
உண்டற்கு இனிய பல பாராட்டியும்
இன்னும் வருவதாக நமக்கு என
தொன் முறை மரபினிர் ஆகி பன் மாண்		355
செரு மிக்கு புகலும் திரு ஆர் மார்பன்
உரும் உரறு கருவிய பெரு மலை பிற்பட
இறும்பூது கஞலிய இன் குரல் விறலியர்
நறும் கார் அடுக்கத்து குறிஞ்சி பாடி
கைதொழூஉ பரவி பழிச்சினிர் கழிமின்		360
மை படு மா மலை பனுவலின் பொங்கி
கை தோய்வு அன்ன கார் மழை தொழுதி
தூஉ அன்ன துவலை துவற்றலின்
தேஎம் தேறா கடும் பரி கடும்பொடு
காஅய் கொண்ட நும் இயம் தொய்படாமல்		365
கூவல் அன்ன விடரகம் புகுமின்
இரும் கல் இகுப்பத்து இறுவரை சேராது
குன்று இடம்பட்ட ஆர் இடர் அழுவத்து
நின்று நோக்கினும் கண் வாள் வௌவும்
மண் கனை முழவின் தலைக்கோல் கொண்டு	370
தண்டு கால் ஆக தளர்தல் ஓம்பி
ஊன்றினிர் கழிமின் ஊறு தவ பலவே
அயில் காய்ந்து அன்ன கூர் கல் பாறை
வெயில் புறந்தரூஉம் இன்னல் இயக்கத்து
கதிர் சினம் தணிந்த அமயத்து கழிமின்		375
உரை செல வெறுத்த அவன் நீங்கா சுற்றமொடு
புரை தவ உயரிய மழை மருள் பல் தோல்
அரசு நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய
பின்னி அன்ன பிணங்கு அரில் நுழைதொறும்
முன்னோன் வாங்கிய கடு விசை கணை கோல்	380
இன் இசை நல் யாழ் பத்தரும் விசி பிணி
மண் ஆர் முழவின் கண்ணும் ஓம்பி
கை பிணி விடாஅது பைபய கழிமின்
களிறு மலைந்து அன்ன கண் கூடு துறுகல்
தளி பொழி கானம் தலை தவ பலவே		385
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்தென
நல் வழி கொடுத்த நாண் உடை மறவர்
செல்லா நல் இசை பெயரொடு நட்ட
கல் ஏசு கவலை எண்ணு மிக பலவே
இன்பு உறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆக	390
தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்து துனைமின்
பண்டு நற்கு அறியா புலம் பெயர் புதுவிர்
சந்து நீவி புல் முடிந்து இடுமின்
செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறிமார்
கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த		395
கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை
ஒட்டாது அகன்ற ஒன்னா தெவ்வர்
சுட்டினும் பனிக்கும் சுரம் தவ பலவே
தேம் பாய் கண்ணி தேர் வீசு கவி கை
ஓம்பா வள்ளல் படர்ந்திகும் எனினே		400
மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர்
ஆங்கனம் அற்றே நம்மனோர்க்கே
அசைவுழி அசைஇ அஞ்சாது கழிமின்
புலி உற வெறுத்த தன் வீழ் பிணை உள்ளி
கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து		405
சிலை ஒலி வெரீஇய செம் கண் மரை விடை
தலை இறும்பு கதழும் நாறு கொடி புறவின்
வேறு புலம் படர்ந்த ஏறு உடை இனத்த
வளை ஆன் தீம் பால் மிளை சூழ் கோவலர்
வளையோர் உவப்ப தருவனர் சொரிதலின்		410
பலம் பெறு நசையொடு பதி வயின் தீர்ந்த நும்
புலம்பு சேண் அகல புதுவிர் ஆகுவிர்
பகர் விரவு நெல்லின் பல அரி அன்ன
தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇ
கல்லென் கடத்திடை கடலின் இரைக்கும்		415
பல் யாட்டு இன நிரை எல்லினிர் புகினே
பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர்
துய் மயிர் அடக்கிய சேக்கை அன்ன
மெய் உரித்து இயற்றிய மிதி அதள் பள்ளி
தீ துணை ஆக சேந்தனிர் கழிமின்			420
கூப்பிடு கடக்கும் கூர் நல் அம்பின்
கொடு வில் கூளியர் கூவை காணின்
படியோர் தேய்த்த பணிவு இல் ஆண்மை
கொடியோள் கணவன் படர்ந்திகும் எனினே
தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ			425
ஓம்புநர் அல்லது உடற்றுநர் இல்லை
ஆங்கு வியம் கொண்மின் அது அதன் பண்பே
தேம் பட மலர்ந்த மராஅ மெல் இணரும்
உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்
தளிரொடு மிடைந்த காமரு கண்ணி		430
திரங்கு மரல் நாரில் பொலிய சூடி
முரம்பு கண் உடைந்த நடவை தண்ணென
உண்டனிர் ஆடி கொண்டனிர் கழிமின்
செ வீ வேங்கை பூவின் அன்ன
வேய் கொள் அரிசி மிதவை சொரிந்த		435
சுவல் விளை நெல்லின் அவரை அம் புளிங்கூழ்
அற்கு இடை உழந்த நும் வருத்தம் வீட
அகலுள் ஆங்கண் கழி மிடைந்து இயற்றிய
புல் வேய் குரம்பை குடிதொறும் பெறுகுவிர்
பொன் அறைந்து அன்ன நுண் நேர் அரிசி		440
வெண் எறிந்து இயற்றிய மா கண் அமலை
தண்ணென் நுண் இழுது உள்ளீடு ஆக
அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர்
விசையம் கொழித்த பூழி அன்ன	
உண்ணுநர் தடுத்த நுண் இடி நுவணை		445
நொய் மர விறகின் ஞெகிழி மாட்டி
பனி சேண் நீங்க இனிது உடன் துஞ்சி
புலரி விடியல் புள் ஓர்த்து கழிமின்
புல் அரை காஞ்சி புனல் பொரு புதவின்
மெல் அவல் இருந்த ஊர்தொறும் நல் யாழ்		450
பண்ணு பெயர்த்து அன்ன காவும் பள்ளியும்
பல் நாள் நிற்பினும் சேந்தனிர் செலினும்
நன் பல உடைத்து அவன் தண் பணை நாடே
கண்பு மலி பழனம் கமழ துழைஇ
வலையோர் தந்த இரும் சுவல் வாளை		455
நிலையோர் இட்ட நெடு நாண் தூண்டில்
பிடி கை அன்ன செம் கண் வராஅல்
துடி கண் அன்ன குறையொடு விரைஇ
பகன்றை கண்ணி பழையர் மகளிர்
ஞெண்டு ஆடு செறுவில் தராய்க்கண் வைத்த		460
விலங்கல் அன்ன போர் முதல் தொலைஇ
வளம் செய் வினைஞர் வல்சி நல்க
துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதி தேறல்
இளம் கதிர் ஞாயிற்று களங்கள்தொறும் பெறுகுவிர்
முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண் சோறு	465
வண்டு பட கமழும் தேம் பாய் கண்ணி
திண் தேர் நன்னற்கும் அயினி சான்ம் என
கண்டோர் மருள கடும்புடன் அருந்தி
எருது எறி களமர் ஓதையொடு நல் யாழ்
மருதம் பண்ணி அசையினிர் கழிமின்		470
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ
செம் கண் எருமை இனம் பிரி ஒருத்தல்
கனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி
வனை கல திகிரியின் குமிழி சுழலும்
துனை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும்	475
காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின்
யாணர் ஒரு கரை கொண்டனிர் கழிமின்
நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின்
பதி எழல் அறியா பழம் குடி கெழீஇ
வியல் இடம் பெறாஅ விழு பெரு நியமத்து		480
யாறு என கிடந்த தெருவின் சாறு என
இகழுநர் வெரூஉம் கவலை மறுகின்
கடல் என கார் என ஒலிக்கும் சும்மையொடு
மலை என மழை என மாடம் ஓங்கி
துனி தீர் காதலின் இனிது அமர்ந்து உறையும்		485
பனி வார் காவின் பல் வண்டு இமிரும்
நனி சேய்த்து அன்று அவன் பழ விறல் மூதூர்
பொருந்தா தெவ்வர் இரும் தலை துமிய
பருந்து பட கடக்கு ஒள் வாள் மறவர்
கரும் கடை எஃகம் சாத்திய புதவின்		490
அரும் கடி வாயில் அயிராது புகுமின்
மன்றில் வதியுநர் சேண் புல பரிசிலர்
வெல் போர் சேஎய் பெரு விறல் உள்ளி
வந்தோர் மன்ற அளியர்தாம் என
கண்டோர் எல்லாம் அமர்ந்து இனிதின் நோக்கி	495
விருந்து இறை அவரவர் எதிர்கொள குறுகி
பரி புலம்பு அலைத்த நும் வருத்தம் வீட
எரி கான்று அன்ன பூ சினை மராஅத்து
தொழுதி போக வலிந்து அகப்பட்ட
மட நடை ஆமான் கயமுனி குழவி		500
ஊமை எண்கின் குடா அடி குருளை
மீமிசை கொண்ட கவர் பரி கொடும் தாள்
வரை வாழ் வருடை வன் தலை மா தகர்
அரவு குறும்பு எறிந்த சிறு கண் தீர்வை
அளை செறி உழுவை கோளுற வெறுத்த		505
மட கண் மரையான் பெரும் செவி குழவி
அரக்கு விரித்து அன்ன செம் நில மருங்கின்
பரல் தவழ் உடும்பின் கொடும் தாள் ஏற்றை
வரை பொலிந்து இயலும் மட கண் மஞ்ஞை
கானக்கோழி கவர் குரல் சேவல்			510
கான பலவின் முழவு மருள் பெரும் பழம்
இடி கலப்பு அன்ன நறு வடி மாவின்
வடி சேறு விளைந்த தீம் பழம் தாரம்
தூவல் கலித்த இவர் நனை வளர் கொடி
காஅய் கொண்ட நுகம் மருள் நூறை		515
பரூஉ பளிங்கு உதிர்த்த பல உறு திரு மணி
குரூஉ புலி பொருத புண் கூர் யானை
முத்து உடை மருப்பின் முழு வலி மிகு திரள்
வளை உடைந்து அன்ன வள் இதழ் காந்தள்
நாகம் திலகம் நறும் காழ் ஆரம்			520
கரும் கொடி மிளகின் காய் துணர் பசும் கறி
திருந்து அமை விளைந்த தேம் கள் தேறல்
கான் நிலை எருமை கழை பெய் தீம் தயிர்
நீல் நிற ஓரி பாய்ந்தென நெடு வரை
நேமியின் செல்லும் நெய் கண் இறாஅல்		525
உடம்புணர்பு தழீஇய ஆசினி அனைத்தும்
குட மலை பிறந்த தண் பெரும் காவிரி
கடல் மண்டு அழுவத்து கயவாய் கடுப்ப
நோனா செருவின் நெடும் கடை துவன்றி
வானத்து அன்ன வளம் மலி யானை		530
தாது எரு ததைந்த முற்றம் முன்னி
மழை எதிர் படு கண் முழவு கண் இகுப்ப
கழை வளர் தூம்பின் கண் இடம் இமிர
மருதம் பண்ணிய கரும் கோட்டு சீறியாழ்
நரம்பு மீது இறவாது உடன் புணர்ந்து ஒன்றி		535
கடவது அறிந்த இன் குரல் விறலியர்
தொன்று ஒழுகு மரபின் தம் இயல்பு வழாஅது
அரும் திறல் கடவுள் பழிச்சிய பின்றை
விருந்தின் பாணி கழிப்பி நீள்மொழி
குன்றா நல் இசை சென்றோர் உம்பல்		540
இன்று இவண் செல்லாது உலகமொடு நிற்ப
இடை தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்தென
கொடை கடன் இறுத்த செம்மலோய் என
வென்றி பல் புகழ் விறலோடு ஏத்தி
சென்றது நொடியவும் விடாஅன் நசை தர		545
வந்தது சாலும் வருத்தமும் பெரிது என
பொரு முரண் எதிரிய வயவரொடு பொலிந்து
திரு நகர் முற்றம் அணுகல் வேண்டி
கல்லென் ஒக்கல் நல் வலத்து இரீஇ
உயர்ந்த கட்டில் உரும்பு இல் சுற்றத்து		550
அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து
இலம் என மலர்ந்த கையர் ஆகி
தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்
நெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவி
கடு வரல் கலுழி கட்கு இன் சேயாற்று		555
வடு வாழ் எக்கர் மணலினும் பலரே
அதனால் புகழொடும் கழிக நம் வரைந்த நாள் என
பரந்து இடம் கொடுக்கும் விசும்பு தோய் உள்ளமொடு
நயந்தனிர் சென்ற நும்மினும் தான் பெரிது
உவந்த உள்ளமோடு அமர்ந்து இனிது நோக்கி		560
இழை மருங்கு அறியா நுழை நூல் கலிங்கம்
எள் அறு சிறப்பின் வெள் அரை கொளீஇ
முடுவல் தந்த பைம் நிணம் தடியொடு
நெடு வெண்ணெல்லின் அரிசி முட்டாது
தலை நாள் அன்ன புகலொடு வழி சிறந்து		565
பல நாள் நிற்பினும் பெறுகுவிர் நில்லாது
செல்வேம் தில்ல எம் தொல் பதி பெயர்ந்து என
மெல்லென கூறி விடுப்பின் நும்முள்
தலைவன் தாமரை மலைய விறலியர்
சீர் கெழு சிறப்பின் விளங்கு இழை அணிய		570
நீர் இயக்கு அன்ன நிரை செலல் நெடும் தேர்
வாரி கொள்ளா வரை மருள் வேழம்
கறங்கு மணி துவைக்கும் ஏறு உடை பெரு நிரை
பொலம் படை பொலிந்த கொய் சுவல் புரவி
நிலம் தின கிடந்த நிதியமோடு அனைத்தும்		575
இலம்படு புலவர் ஏற்ற கை நிறைய
கலம் பெய கவிழ்ந்த கழல் தொடி தட கையின்
வளம் பிழைப்பு அறியாது வாய் வளம் பழுநி
கழை வளர் நவிரத்து மீமிசை ஞெரேரென
மழை சுரந்து அன்ன ஈகை நல்கி			580
தலை நாள் விடுவிக்கும் பரிசில் மலை நீர்
வென்று எழு கொடியின் தோன்றும்
குன்று சூழ் இருக்கை நாடு கிழவோனே

கருக்கொண்ட மேகங்கள் ஒன்றுகூடிய கருமை நிறங்கொண்ட பரந்த வானில்
விண்ணகமே அதிரும்படி முழங்கும் ஓசையைப் போன்று, தாளங்களைத் தட்டிப்பார்த்து,
உறுதியான வாரால் இறுகக் கட்டிய மத்தளத்துடன், சிறுபறையும்,
நன்றாக உருக்கப்பட்டு ஒளிர்கின்ற தகடாகத் தட்டப்பட்ட கஞ்சதாளமும்,
மின்னுகின்ற கரிய மயில் இறகுகளின் அழகிய கொத்து(கட்டப்பட்ட) கொம்பு வாத்தியமும் சேர்த்து,		5
துளைகள் இடையிடையே விடப்பட்ட, யானையின் துதிக்கை போன்ற குழலமைப்புக்கொண்ட,
இளியென்னும் பண்ணின் ஓசையைத் தானொலிக்கும் குறுகிய பாரமான நெடுவங்கியத்துடன்,
பாடுவதைச் சுருதி குன்றாமல் கைக்கொள்ளும் இனிய வேய்ங்குழலும் நெருக்கமாகச் சேர்க்கப்பட்டு,
(தாளத்திற்கு)இடைநின்று ஒலிக்கும் (தவளையின்)அரித்தெழும் ஓசையையுடைய தட்டைப்பறையும்,
அடிக்குரல் ஓசையில் (தாளத்துடன்)ஒத்து ஒலிக்கும் வலிமையான விளிம்புப் பகுதியையுடைய சல்லியும்,	10
காலவரை காட்டுவதற்கு ஒலிக்கும் ஒருகண் பறையும், இன்னும் பிற இசைக்கருவிகளும்,
கார்காலத்தே கொள்ளப்படும் பலாவின் காய்களைக்கொண்ட கொத்தைப் போல,
சமமாய் எடைகட்டி(பைகளில் இட்டு வாயின் சுருக்கை)இறுக்கித் தோளின்(இருபுறமும்) தொங்கவிட்ட பைகளை உடையவராய் -
கடுக்காய் மரம் நெருங்கி வளர்ந்த இடம் பெரிதான மலைச்சரிவில்
பரப்பி வைத்ததைப் போன்றிருக்கும் பாறைகளின் பக்கத்தே,					15
(கீழே கிடப்பதை)எடுத்து நிறுத்திவைத்ததைப் போன்ற குறுகலான (ஏறுதற்குக்)கடினமான சிறிய வழியை,
தொடுக்கப்பட்ட அம்பினை உடையவராய்த் தம் துணைவியரோடே சேர்ந்திருக்கும் கானவர்,
இடற்பாடு செய்யாமல், போவோர் வருவோரை (வழிகாட்டியும் உதவியும்)போகச்செய்யும் 
பாறைக்குன்றின் உச்சியில், நடந்துபோகும் கடினத்தை(யும்) பெரிதாகக்கொள்ளாமல்,
உடைத்து அமைக்கப்பட்ட பாதையின் செங்குத்தான பகுதியில் (பழைய)வழித்தடத்தையே பார்த்து நடந்து -	20
(கையில் சுற்றியுள்ள)தொடியின் திருக்கினைப்போன்ற ஒன்பது என்னும் எண் உண்டான வார்க்கட்டினையும்,
(பேய்க்குப் பகையாகிய)வெண்சிறுகடுகளவும்(=சிறிதளவும்) இசைச் சுருதியில் தவறு இல்லாது
ஒலிநயத்தைக் கூர்ந்து கேட்டுக்கேட்டுக் கட்டிய வகிர்ந்து முறுக்கேற்றப்பட்ட நரம்பினில்
கழலைகள் முற்றிலும் அகலுமாறு சிம்பெடுத்து, வரகின்
கதிர்(மணிகள்) ஒவ்வொன்றாக உதிர்ந்ததைப்போல நுண்ணிய துளைகளை இட்டு,		25
ஒலியை எதிரொலித்துப் பெரிதாக்கும் தன்மை அமைந்த (கூடு போன்ற)பத்தலினைப் பசையினால் சேர்த்து,
மின்னுகின்ற துளைகள் முற்றிலும் அடையுமாறு ஆணிகளை இறுகப் பதித்து,
புதுமையான உருவாக்கமாக தந்தத்தை யாப்பாக(பத்தரின் மேல் குறுக்குக்கட்டையாக) அமைத்து,
புதியதாகப் போர்த்திய பொன்னின் நிறம் போன்ற (நிறமுடைய) தோல்போர்வையை உடையதாய்;
மணமாலை (இன்னும்)மணக்கும்(புதுமணம் மாறாத), (மொய்க்கும்)வண்டுகளும் மணம்வீசும் கூந்தலினையுடைய 30
இளம்பெண்ணின் அழகுநிறைந்த, மெல்லிதாக அசையும் அழகிய மார்பகத்தே 
சென்று முடிவுறும் மயிர் முறைமையோடு அமைந்திருக்கும் அழகிய அமைப்பு போன்று,
(இரண்டு ஓரங்களையும் இணைத்து)நடுவினில் சேர்வதுபோல் சீராக அமைத்து, தனக்குரிய அளவினில் மாறாது,
இரண்டாகப் பிரிவுபட உள்ளிருத்தப்பட்ட நீண்டு வளைந்த உந்தியெனும் வயிற்றுப்பகுதியையும்;
நுட்பமான அரத்தால் அராவின நுண்ணிய தன்மையும், கரிய நிறத்தில்				35
களாப்பழத்தை ஒத்த, சீறியெழுந்து நிற்கும் தோற்றத்தையும்,
வளைந்து உயர்ந்த கொம்பினையும் உடைய பெரிதாய் ஒலிக்கும் பேரியாழ் என்ற பெரிய யாழை
(நன்கு)அமைவாகச் செய்து, சொல்லப்பட்ட நியதிகளினின்றும் மாறுபடாமல்,
இசை கேட்கும் சிறப்புடைய அரசவை(யிலுள்ளோர்) ஏற்றுக்கொள்ளும் விதத்தில்,
துறைகள் பலவற்றையும் கற்றுத்தேர்ந்த இளநிலை முடிந்த (=அனுபவமிக்க) பாணர்களோடு -	40
உயர்ந்தோங்கிய (=மிக உயர்ந்த)பெரிய மலைகளை (எவ்விதத்)தீங்குமின்றி ஏறிவருதலால்,
வலிமை குன்றிய நாயின் நாவைப் போன்றதும்,
சோர்வடைந்த தன்மையினால் தளர்வுற்றதும், கற்களை மிதித்து நடந்ததுமான சிறிய பாதங்களையும்,
கூட்டமாய் இருக்கும் மயில்கள் (தங்கள் தோகையைத் தாழ்த்தியதைப்)போன்று தலைமயிர் தாழ விழச் சோர்வுடன் நடந்து,
மான் கண்ணோடு (உருவத்தால்)ஒத்தும்,(நோக்கால்)மாறுபட்டும், அமைதிகொண்ட, சிவந்த வரியையுடைய கண்களையும்,	45
ஒளிர்கின்ற வளையல்களையும் கொண்ட விறலியர் உமக்குப் பின்னால் சூழ்ந்து வர -
குளத்தில் மூழ்கியதைப் போன்ற பயனைத் தருகின்ற குளிர்ந்த நிழலில்,
வெள்ள நீர் தூய்மைப்படுத்திய மணல்பரப்பு (ஆங்காங்கே)நீண்டுகிடக்கும் முல்லைநிலத்தின்கண்,
(நடந்துவந்த)வருத்தத்தைக் கைவிட்டு அமர்ந்திருந்த புதுமைப்பொலிவு இல்லாத(தளர்ந்த) தோற்றத்தையுடைய,
அணிகலன்களைப் பெறும் கூத்தர் குடும்பத்திற்குத் தலைவனே,					50
தூய பூக்கள் அடர்ந்துகிடக்கும் கரை(யின் உச்சி)யை மோதுகின்ற (அளவுக்கு)உயர்ச்சியினையுடைய
பெரும் பெருக்குள்ள நல்ல ஆறு கடலில் விரிந்து பரவியதைப்போல்,
நாங்கள் அவ்விடத்திலிருந்து வருகின்றோம்; நீங்களும்,
பழங்கள் நிறைந்துவழியும் காட்டை நோக்கி (அப்பழங்களைத் தன்)சுற்றத்தோடு தின்னுவதற்கு,
விரைவாக(த் தம்) சிறகுகளை உயர்த்தும் பறவைக்கூட்டம் போல,					55
அலங்காரமான மாலையினால் அழகுபெற்ற, வண்டுகள் மொய்க்கும் மார்பினையுடைய,
கோலமிட்டு அலங்கரிக்கப்பட்ட அழகிய முலையையும் வளைவுள்ள மூங்கில்(போன்ற) திரண்ட தோளையும்
பூப் போன்ற குளிர்ச்சியான கண்ணையும் உடைய பெண்களின் கணவனான;
பகைவர் நாட்டை நாசமாக்கும் (பகைவர்)நெருங்குவதற்கு முடியாத வலிமையுடைய,
புகழ் பாடுதல்(என்ற) விதையினையும் (பரிசில்மீது)விருப்பம் (என்ற)ஏரினையும் (கொண்ட)உழவர்க்கு(=பரிசிலர்க்கு)		60
புதுப் பெருக்காய் வந்த நீர் (போன்ற)அழகிய மேனியைக்கொண்ட,
தன் அறிவிற்கு மாறாக நினைக்காமல் நல்லனவற்றை உணரும் நுண்ணறிவுடைய,
வில்தொழில் பயின்ற பெரிய கையினையும், (தனக்குப்)பொருத்தமான சிறந்த அணிகலன்களையும் உடைய
நன்னன் மகனான நன்னனை நினைத்த உறுதிப்பாட்டுடன்
(அவனையே)நினைத்தவராக (அவனிடம்)சென்றடைந்தால், நல்லநேரத்தை எதிர்கொண்ட		65
(பறவையால் தோன்றிய)நல்ல சகுனம் பெற்றவர் ஆவீர், எம்மைச் சந்தித்ததால் -
(செல்லும்)பாதையின் தன்மையையும், தங்குவதற்கான நல்ல இடங்களையும்,
வேறெங்கும் காணமுடியாத செழிப்பு நாளும் உண்டாகும் அவனது நாடு விளைக்கும் உணவுகளையும்,
மலைகளையும், பொழில்களையும், விலங்குகள் அடைந்திருக்கும் காடுகளையும்,
குறைக்கமுடியாத நல்ல புகழ் உலகம் உள்ளளவும் நிலைக்கும்படியாக,				70
(பகைவர்)பலரையும் தோற்கடித்து, அவரது அரிய அணிகலன்களைக் கொணர்ந்து,
புலவர்க்கு வழங்கும் அவன் கொடைமழையையும்,
இகழுவோரைத் தன்வயப்படுத்தும் ஆற்றலும், புகழுபவர்க்கு
தன் ஆட்சி முழுதையும் கொடுத்தாலும் மனநிறைவடையாத எண்ணத்துடன்,
தூய்மையான துளிகளை மிகுதியாகப் பெய்கின்ற பருவம் தவறாத வானத்தைப் போன்று,	75
நிற்காமல் கொடுக்கும் அவனது நாளோலக்கத்தையும் (முற்பகல் நேர அரசு வீற்றிருப்பு),
நல்லோர் கூடியிருக்கும் நாவால் (சிறந்தவற்றை)உரைக்கும் அவையில்,
(சொல்)வன்மையில்லாதவர் எனினும் (அவர்)தரப்பை மறைத்து, தம்மிடம் சென்றோரை,
(தம் பொருளைச்)சொல்லிக் காட்டி, (திரும்பத் திரும்ப)சோர்வடையாமல் விளக்கி,
நன்றாக நடத்தும் அவனுடைய அவைமக்களின் சீலத்தையும்,					80
நீர் (சூழ்ந்த)இவ்வுலகம் நடுங்கும்படி அச்சம் தரும் பேரளவிலான வலிமையையுடைய,
பெரும் புகழ்கொண்ட நவிரம் என்னும் மலையில் நிலைகொண்டு வாழுகின்ற,
நஞ்சை உணவாகக் கொண்ட இறைவனது இயல்பையும்,
பரந்துகிடக்கும் இருள் நீங்கும்படி பகற்பொழுதைச் செய்து உதிக்கும்
ஞாயிற்றைப் போன்ற அவனது பழிச்சொல் அற்ற மேன்மையையும்,				85
வெகுதூரத்தில் உள்ளனவாயினும், பகைவர் நாட்டின்
(வண்டிக்கு நுகத்தடி போன்ற)முன்னணிப்படை வீழுமாறு மேற்சென்று (படையினரைக்)கொன்று குவித்து,
சிறந்த கேடகங்களைக்கொண்ட கோட்டைமதிலில் இருக்கும் வேல் படையின் பாதுகாப்பில் இருக்கும் அறிஞர்க்கு
கொடை என்னும் தம் கடமையை ஆற்றிய அவனது மூத்தோர் வரலாற்றையும்,
இரையைத் தேர்ந்தெடுத்து (அதை நோக்கி மெதுவாக ஊர்ந்து)நகரும் வளைந்த காலையுடைய முதலையுடன்,		90
அலைகள் உண்டாகும் அளவிற்கு ஆழமான, பாறைகளைத் தோண்டி அமைத்த பள்ளத்தையும்,
மலையை ஒத்த உயர்ச்சியோடு வானை எட்டித் தொடும் மதிலினையுமுடைய,
புகழ் (எங்கும்)சென்று மிகுகின்ற அவனுடைய மூதூரின் இயல்பினையும்,
கேட்பாயாக - இப்பொழுது, வேளிர் குலத்தவனை நீ நினைத்துச் செல்கின்ற திசைதான்,
பெருகுகின்ற வளம் நிறைவடைந்த புதுவருவாயையுடைய ஊர்களால்				95
(என்றும்)புதியதாகவே இருக்கும் தன்மை வந்தது, இது அத்திசையின் பண்பு;
மேகம் மின்னல் வெட்டோடு மழையைக்கொட்ட, குறைவில்லாமல்
விதைத்தவை எல்லாம் விரும்பியவாறே விளைய,
மழையோடு (எப்போதும்)நிலைகொண்ட அகன்ற இடமாகிய பெரிய கொல்லை நிலத்தில்,
அகன்ற இருண்ட வானத்தின் கார்த்திகை என்னும் விண்மீன் போல,				100
வெண்மையாக மலர்ந்தன மிக மெல்லிய கொடியை உடைய முசுட்டை;
நீல மணிகள் போன்ற (விதைகள்)விதைக்கப்பட்ட கொல்லைக்காட்டின் பக்கத்தே,
மகுளியென்னும் அரக்குநோய் பரவாமல், மிகுந்த மழைத் துளியைத் தழுவுதலால்,
நீர் இறைக்கும் சாலைப் போன்று நிறைந்த சுனைகளையுடைய காட்டுநிலத்தில்,
பிஞ்சுத்தன்மை போன(=முற்றிய) கரிய காய்கள் ஒரு கைப்பிடிக்குள் ஏழு காய்களே கொள்ளத்தக்கனவாய்	105
நெய் (உள்ளே)கொண்டிருக்க வளர்ந்தன பலவாகக் கிளைத்த ஈரப்பதமான எள்;
பொய்ச் சண்டைபோடும் யானைக்கன்றுகளின் (ஒன்றோடொன்று)பின்னிப்பிணைந்த துதிக்கைகள் போல,
கொய்யப்படும் பக்குவம் பெற்றன பிணைந்துகிடக்கும் கதிர்களையுடைய தினை;
முற்றிய தயிர் (கீழே விழுந்து ஏற்பட்ட)சிதறலைப்போல் பூக்கள் உதிர்ந்து, (கதிர்கொய்யப்பட்ட)அரிதாள்கள்தோறும்
அரிவாள் போன்ற வளைந்த காய்களைக் கொண்டன அவரை;					110
எருமையைப் போன்ற பாறைகள் மிகுந்திருக்கும் வழியில்,
வாதிடுபவனின் கைகளைப் போன்று கிளைத்துப்பிரிந்த கதிர்கள் (முற்றியதால்)தலைவணங்கி,
(இரும்பாலாகிய)அரிவாள் வசப்பட்டன(=அரிதலுற்றன) பெரிய கொல்லைக்காட்டின் வரகுகள்;
பால் பிடித்து முற்றி, பலவிதமாய்க் கிளைத்து (அடிக்கும்)காற்றால் ஊடறுக்கப்பட்டு,
மிகுதியாக விளைந்தன ஐவனம் என்னும் மலைநெல்;					115
வேல்களோடு நெருக்கமாக (வந்த வேற்படையாகிய)கூட்டம் தோற்றோடியதைப் போன்று,
காற்று மிகவும் அடித்து மோதுகையினால், சாய்ந்து ஆரவாரமாக ஒலித்து, தலைவணங்கி,
குட்டையாதலும் சூம்பிப்போதலும் உண்டாகாத வளர்ச்சியுடன், வெட்டப்பட்டு, 
ஆலைக்காக (அறைபடுவதற்காக)வாடியிருக்கும் இனிக்கும் கோலாகிய கரும்பு;
மழையால் கசடுகள் நீக்கப்பட்ட, பூக்கள் நிறைந்த காட்டுநிலத்தில்,				120	
அவல் இடிக்கும் பக்குவம் பெற்றன, அழகிய கொத்துக்கொத்தான மூங்கில்நெல்;
உழாமல் விதைக்கப்பட்டு, களைக்கொட்டுகளால் கொத்தப்பட்ட தோட்டங்களில்
வெண்சிறுகடுகு(ச் செடிகள்) நெருங்கிவளர்ந்தன; வெளுத்த(நெல்)அரிதாளையுடைய வயல்களில்,
கரேர் என மலர்ந்தன, நீண்ட நறிய நெய்தல்;
(கையால்)செய்யப்படாத(இயற்கையாய் அமைந்த) பாவை(உருவில்) வளர்ந்து, அழகு மிகுந்து,	125
உறைப்புத்தன்மை கொண்டன, இஞ்சி; (முற்றி)மாவாகும் தன்மை பெற்று,
வலிமையுள்ள பெண்யானையின் முழங்காலைப் போன்று, குழிகள்தோறும்,
சிறந்த நிலையில் (நிலத்தடியில்)வளர்ந்தன, செழுமையான கொடியையுடைய கவலை எனும் கிழங்கு;
காம்பினுள் செலுத்தப்பட்ட (எஃகினாலான)வேல் (நுனிப்பாகம்)யானையின் முகத்தில் பாய்ந்தது எனும்படி,
பதம்கெட்டு மலர்தல் இல்லாத(நன்கு திரண்ட) மொட்டுக்களின் நிமிர்ந்த முகங்கள் உரசும்படியாக,		130
(பக்கத்திலுள்ள)பாறைகள் சூழ நின்ற தோட்டத்தின் வாழைமரங்களில்,
இறுகிக்கிடக்கும் குலைகள் முதிர்ந்து பழுத்தன; பயன்தரும் நிலை அடைந்து
முதிர்தலுற்று (காற்றுக்கு) ஆடின பெருமூங்கில்நெல்; அகன்ற பாறையின்மேல், 
(தம்)பருவத்தே அன்றியும் (எல்லாக் காலங்களிலும்)மரங்கள் பயனைக் கொடுத்தலால்,
காற்றால் உதிர்ந்தன, கரிய கனிகளான நாவல்பழங்கள்;						135
(குடிப்பதற்கு)மாற்றுப்பொருளாக (நீர்)சொரிந்தன, ஊறுகின்ற நீரையுடைய உயவைக்கொடி; 
சுண்ணாம்பின் தன்மையில் (முற்றித்இ)திரண்டன, கூவைக்கிழங்கு; சதைப்பற்றுடன் சாறு மிக்கு,
(மிக்க தித்திப்பினால் திகட்டலால்)உண்பாரைத் தடுத்தன, தேமாங்கனிகள்; (மேல்தோல்)புண்ணாகி வெடித்து,
விதைகளை உதிர்த்தன, நெடிய அடிப்பகுதியையுடைய ஆசினிப்பலாப்பழங்கள்;
விரல்கள் அழுந்தப்பதிந்து ஒலியெழுப்பும் முகப்பையுடைய சிறுபறையைப் போன்று,		140
பேராந்தைகள் (சேவலும் பெட்டையும்)மாறி மாறிக் கூப்பிடும் நெடிய மலைச் சாரலில்,
அடிவாரத்திலும் உச்சியிலும், மழை வாய்க்கப்பெற்றமையால் அதனைப்பெற்று, 
வழியே செல்லும் கூத்தருடைய மத்தளங்களைப் போன்று தொங்கி,
முதிர்வு கொண்டு தலை வணங்கின, (மேலும் கீழும்)அசைகின்ற கிளைகளிலுள்ள பலாப்பழங்கள்;
நெருப்பினைப் போன்று ஒளிர்வுள்ள செங்காந்தளின்						145
மழையால் செழித்து வளர்ந்த புதிய மொட்டினைத் தசையெனக் கருதி,
அறியாமல் எடுத்த பொலிவிழந்த முதுகினையுடைய பருந்து,
(அது)தசையில்லாததால், உண்ணாமல் கீழேபோட்டுவிட,
நெருப்பைப் போன்ற பல இதழ்கள் பரந்து,
வெறியாடுகின்ற களத்தை ஒக்கும் அகன்ற பாறைகள்தோறும்				150
மண வீடு (போன்று) மணக்கும் பெரிய மலைப்பக்கத்தே கிடைக்கும்
தேனுடையராய், கிழங்குடையராய், தசை நிறைந்த நார்க்கூடையராய்,
சிறிய கண்ணையுடைய பன்றியின் (தசைகளில்)பழுதுள்ளவற்றை நீக்கி,
(தம்மில்)போர்செய்து இறந்த யானைகளின் தந்தங்கள் காவுத்தண்டாக,
(மற்றுமுள்ள)தசைகளோடே நிறைய (கூடைகளைத்)தோளில் சுமந்துவந்த கானவருடைய	155
வளப்பம் மிக்க பல்வித புதுவருவாயையுடைய சிறிய ஊரில் தங்கினால்,
(அலைச்சலால்)கறுத்துப்போன பெரிய சுற்றத்துடன் பக்குவமாக வேகவைத்த அவ்வுணவை நிறையப் பெறுவீர் - 
அன்று அவ்விடத்தில் இளைப்பாறி, இரவிலும் (அவர்களுடன்)சேர்ந்து தங்கி,
(தீக்கங்குகளில்)கனலாய் எரியும் நெருப்பு(ப்போன்று) ஒளிரும் பூங்கொத்துக்களைச் சூடி, 
சிவந்த அசோக மரங்களுள்ள சீராக்கப்பட்ட வழியில் சென்று,					160
(மேலும் கீழூம்)அசைகின்ற மூங்கில்கள் கிரீச்சிடும் கடினமான ஏற்ற இறக்கங்களான பாதைகளையுடைய
மலைச்சரிவை அடுத்திருந்த சிறிய ஊரை அடைந்து,
‘(பகைவர் மேல்)பொறுமைகாட்டாத போர்களையும் (அவற்றில்)வெற்றிபெறும் தீவிர முனைப்பினையுமுடைய,
மானஉணர்ச்சிமிக்க, வலிமைமிக்க நன்னனுடைய கூத்தர் யாம்' என்று கூறுவீராயின்,
உம்முடைய (சொந்த)வீடு போல (வாசலில்)நிற்காமல் உள்ளே சென்று,				165
உரிமையுடையவர் போலக் கேட்காமலேயே (அவருடன்)நட்புரிமை கொள்ள,
தொலைவிலிருந்து வந்த உம் வருத்தம் நீங்க இனிய மொழிகள் கூறி,
பெரிய பெரிய தசைகள் மிகுதியாகப்போட்ட நெய்யின்கண் வெந்த பொரியலுடன்,
(மிகுந்த)நிறங்கொண்ட கண்போன்ற (பருக்கைகளாலான)தினைச்சோற்றுக் குவியலைப் பெறுவீர் -
(மலை மீது)ஏறிக் கொண்டுவந்த பொலிவுள்ள மலையின் அரும்பொருட்களோடு,			170
மூங்கில் குழாய்க்குள் பெய்தலுற்று விளைவித்ததான தேனால் செய்த கள்ளின் தெளிவைக்
குறைவு இல்லாமல் குடித்து, (அதன்)நறுமணத்தில்(=களிப்பில்) மகிழ்ந்து, விடியற்காலையில்,
பழைய களிப்பினால் அடைந்த உமது போதைமயக்கம் தீரும்படி,
அருவிநீர் அடித்துக்கொண்டுவந்த (பலாப்)பழத்தினின்றும் சிதறிய வெண்மையான விதைகளையும்,
(முட்டுவதற்கு ஓடி)வரும் வேகத்தைத் தணித்து (ப் பின் கொன்ற)கடமானின் கொழுத்த தசைகளையும்,	175
முள்ளம்பன்றியைக் கொன்ற மின்னுகின்ற கொழுப்பையுடைய பிளக்கப்பட்ட தசைத்துண்டுகளையும்,
பெண் நாயை விரட்டிக் கடிக்கவிட்டுக்கிடைத்த (உடும்பின்)பருமனான தசைத்துண்டோடு கலந்து,
வெண்மையான புடைத்த பக்கங்களைக்கொண்ட, நாரை உச்சியில் கொண்ட (புளியம்)பழத்தின்
மனதிற்குகந்த புளிப்பையும் கலந்து, விலங்கின் மோர் (உலைநீர்)ஆக,
மூங்கிலில் வளர்ந்த நெல்லின் அரிசியை உலையில் உதிர்த்து,				180
சுரபுன்னை மரங்கள் வளர்ந்துநிற்கும் மலைச்சாரல் கமகமக்கும்படி கிளறி,
நல்ல வாசனையுள்ள மலர்களைச் சூடிய இனிய மணம் வீசும் கரிய உச்சிக்கொண்டையையுடைய
குறமகள், (தான்)ஆக்கிய அருமையாக மலர்ந்து உதிரிஉதிரியான சோற்றை,
மனம் நிறைந்த மகிழ்ச்சியுடனும், (மிக்க)ஆர்வத்துடனும் கலந்துதர,
தாய்பிள்ளை ஆகிவிட்டதால் (இருந்து செல்க என்று)தடுக்க, (இந்த விருந்தோம்பலை)வீடுகள்தோறும் பெறுவீர் -	185
போர் செய்யும் மிக்க வலிமையையுடைய மன்னனைக் கருதிச்செல்லும்
பரிசிலை(யும்) மறக்குமளவுக்கு (உமது இருப்பை)நீட்டித்தலுக்கு உரித்தாவீர்;
அத்தகையது (அன்று - அசை)அவன்  மலையின்மீது (உள்ள)நாடு (நாட்டின் மலைப்பகுதி);
வரிசையாய் அமைந்த இதழ்களையுடைய குவளையின் தொழுகைக்குரிய பூக்களைத் (தெரியாமல்)தொட்டாலும்,
மலைத்தேவதைகளின் இருப்பிடங்களைப் பார்த்தாலும்,						190
உயிர் போக (=மிகவும்) மனம் வெதும்பி நடுங்குதலுக்கும் உரித்தாவீர்;
(எனவே)பல நாட்கள் நிற்காமல், (=தாமதியாமல்)(மலையை விட்டிறங்கி)சமவெளிப்பகுதிக்கு விரைவீர் -
விளைந்த (தினைப்)புனத்தை (பன்றிகள்)சிறிது சிறிதாக அழித்து இல்லாமலாக்கிவிடுவதால், (அப்)பன்றிகளுக்குப் பயந்து,
(அவை நுழையும்)ஒடுங்கிய வழிகள்தோறும் மாட்டிவைத்த பெரிய கல் பலகையால் செய்த அடார்
(என்னும்)சிறந்த பொறிகளை உடையன வழிகள், (எனவே)கும்மிருட்டு(ப்போய்)			195
(பொழுது)புலர்ந்த விடியற்காலைவரை தங்கியிருந்துப் பின் (அவ்விடத்தைக்)கடந்துசெல்வீராக -
அடுத்தடுத்துப் பலர் புழங்காத நேரான பாதைகளில் போகத் துணிந்தால்,
சரளைமேடுகளில் மேற்பரப்பு வெடித்து(உண்டான),கூழாங்கல்(நிறைந்த) ஆழமற்ற பள்ளங்கள்(உள்ள)பிளவுகளில்
மறைந்து பாம்புகள் சுருண்டுகிடக்கும் குழிகளும் உள்ளன;
(அவ்விடங்களை மனத்தில்)குறித்துவைத்துக்கொண்டு, (மற்ற விலங்குகளுக்காக)மரத்தில் ஏறிக் கைதட்டிப் பார்த்து,	200
நெருக்கமாக வளையல் (அணிந்த) விறலியர் கைகூப்பி வாழ்த்த,
சற்றே அவ்வழியைக் கடந்த பின்னர் வலப்பக்கமாகவே செல்லுங்கள் -
காய்ந்து, பிஞ்சுத்தன்மை நீங்கிய(பிஞ்சுத்தன்மை நீங்கிக் காய்ந்த) தினைப்புனத்தைச் சுற்றிவந்த குறவர்கள்,
உயரமான இடத்திலுள்ள பரணில் ஏறி, கைகளைத் தட்டி,
பரந்துபட்டுக்கிடக்கும் மலைகளின் புதர்க்காடுகளில் கூட்டமாகத்திரியும் யானைகள்		205
பகலில் (வந்து)நிற்கும் நிலையைக் குலைக்கின்ற கவண்கள் விடும் மூர்க்கத்தனமான கற்கள்,
பெரிய மூங்கிலின் ஈரமான தண்டுகளில் (பட்டுப் பட்டுத்) தாவித்தாவிச் சென்று சலசலப்பு உண்டாக்க,
கருத்த விரல்களையுடைய குரங்குகள் (தம்)குட்டிகளோடே மிரண்டோட,
உயிர்களைக் கொல்வதையே இயல்பாகக் கொண்டுள்ள கூற்றத்தைப் போன்று,
(அக் கவண்கற்கள்)வருகின்ற வேகம் குறையமாட்டா, (எனவே)மரங்களில் ஒளிந்துநின்று (ப் பின்)கடந்துசெல்லுங்கள்-	210
வலிமையுள்ள யானைகளை(யும்) வஞ்சகமாகக் கவரும் முதலைகள் சோம்பிக்கிடக்கும்,
(பகலிலும்)இரவுநேரத்தைப் போன்ற இருள் அடர்ந்திருக்கும் எல்லையோரக் காட்டினையும்,
நீர்க்குமிழிகள் சுழன்று வருகின்ற ஆழமான பொய்கையின் நீர் அரித்த கரையின்(மறுபக்கத்தில்),
அகழியில் இறங்குவது போன்ற, காட்டாற்று வழித்தடம்
வழுக்கும் இடங்களைக் கொண்டிருத்தலால், வழுவாமை காத்து,					215
பருத்த கொடிகள் பின்னியவற்றை ஆதரவாகப் பிடித்துக்கொண்டு,
செம்மறியாட்டைப் போன்று, பரட்டைத் தலையினையுடைய (உம்)பிள்ளைகளோடே,
ஒருவர் ஒருவராக (ஒருவரை ஒருவர்)இறுகப் பிடித்தவராய்ச் செல்லுங்கள் -
(காலில்)மிதிபட்டு வாடிக்கிடக்கும் மலையெருக்கு மண்டிக்கிடக்கும் மலைச்சரிவுகளில்,
விழுந்தவரைக் கொல்லும் ஆழமான பொய்கையின் அருகே,				220
வழுவழுப்பான மெல்லிய ஏட்டால் (கீழுள்ள)தரையை மறைக்கும் நுண்ணிய தன்மையுள்ள பாசி
(ஊன்றிய)காலின் உறுதியைக் குலைக்கும் (=வழுக்கும்) வழுக்குநிலங்களும் உள்ளன,
முழுப் பாதையும் பின்னி வளர்ந்த நுண்ணிதான கோல்களையுடைய வேரல் என்னும் சிறுமூங்கிலுடன்
எருவை என்னும் நாணலின் மெல்லிய கோல்களையும் (பிடித்துக்)கொண்டவர்களாய்ச் செல்லுங்கள் -
உயர்ந்து நிற்றலையுடைய பெருமை மிக்க (நவிர)மலையில், புள்ளிகளையுடைய (தம்)முகத்தில அழுந்தப் பதிய,		225
மழை போன்று இறங்கிவரும் வில் பொழியும் கடுமையான அம்புகள்,
(கழுத்தில் கிடக்கும் கிண்கிணி)மாலையுடன் அழகூட்டும், போர்த்தொழில் பயின்ற யானையின்
முகபடாம் போன்று பொலிவுற்ற, தீச்சுடர் (போன்ற)பூக்களையுடைய, சுற்றிலும் கரை அமைந்த மடுக்களையுடைய,
ஓர் ஆற்றின் போக்கில் உள்ள பழைய கோட்டைமதிலையுடைய
மிகவும் அரிதாகப் போற்றி வணங்கப்படும் வழக்கினையுடைய கடவுளைப் பார்த்தால்,		230
வணங்கி நீங்கள் சென்றுவிடுங்கள், அவ்வாறில்லாமல் கொஞ்சமேனும்
உம்முடைய இசைக்கருவிகளைத் தொடுதலைத் தவிருங்கள், (ஏனெனில்)நெருக்கமான துளிகளைக்கொண்ட
மழை (எப்போதும்)பெய்யலாம் அவனுடைய வளமிக்க மலையிடத்தே (மழையில் கருவிகள் நனையுமாதலால்) -
சோழியைப் போன்ற வெண்மையான வேர்களையுடைய மயிலிறகுகளைக்கொண்ட
தோகையையுடைய மயில்கள் தம்மிடங்களில் சோர்வுறும்வரை ஆடிக்கொண்டிருப்பினும்,	235
தீவிரமாய்ப் பறையடிக்கும் கழைக்கூத்தாடிகளின் பிள்ளைகளைப் போன்று,
நீண்ட மூங்கிலின் உச்சிக்கொம்பில் குரங்குகள் (நழுவியும் ஏறியும்) ஆடிக்கொண்டிருப்பினும்,
செங்குத்தைக் கொண்ட(=செங்குத்தான) உயர்ந்த மலையில், தேர்ச்சக்கரம் போன்று (தேனீக்கள்)கட்டிய,
தெய்வமகளிர் விரும்பும் அடுக்கடுக்காய் அமைந்த சரிவுகளில், தேனடையைக் கண்டாலும்,
‘படக்'என்று (அவற்றைத் திரும்பிப்) பார்ப்பதைத் தவிருங்கள், (அது உமக்கு)உரித்தான செயல் அன்று,	240
(ஏனெனில்)ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக எட்டெடுத்துவைக்கும் காலடிகள் வழி மாறிப் போகலாவீர் -
மலைக்குச்செல்லும் கிளைப்பாதையையுடைய வனத்துள் செல்லநேர்ந்தால்,
காவற்பரண் மீது உயரத்தில் இருப்பவன் ஏவிவிட்ட அம்போடு ஓடிப்போய்,
வெண்ணெய் போன்ற வெண்மையான கொழுப்பு (அம்பு தைத்த இடத்தில்)மிகுதியாய் வெளிவர,
மார்பில் புண் ஏற்பட்டு, மண் தின்ற (மண்ணைத்தோண்டியதால் தேய்ந்துபோன)கொம்போடு,	245
வழியை விட்டு விலகிக் கிடக்கின்ற, கரிய சொரசொரப்புள்ள கழுத்தினையுடைய,
இருட்டை வெட்டிப்போட்டதைப் போன்ற காட்டுப்பன்றியைக் கண்டால்,
(முற்றிக்)காய்ந்துபோன மூங்கில்கள் (ஒன்றோடொன்று)உரசிக்கொண்டதால் காட்டில் உண்டான தீயில்
அடர்ந்த புகை வீசாமல், வாட்டி மயிர்போக வழித்துவிட்டு (வெந்ததை)உண்டு,
தூசியை விலக்கிவிட்டு (கையால் வெட்டியதைப்போன்று)மொண்ட பளிங்கோவென நினைக்கத்தக்க தெளிந்த நீரை,	250
குவளை மலரால் அழகுபெற்ற புதிய நீர் கொண்ட சுனையில் களைப்பு நீங்கக் குடித்து,
மீதம்வைத்த தசையைக் கொண்ட பருத்த வடிவுடைய மூட்டையுடையராய்,
கிட்டிப்புள் கையினின்றும் போகும்(தட்டிக்கொண்டே வரும்) வாராத தலை(முடி)ப் பிள்ளைகளுடன்,
இரவிற்கு இடைவழிகளில் காலத்தைப் போக்குவதைத் தவிர்த்து, வழியிலுள்ள, உமது(சொந்த)
வீட்டிற்குள் நுழைவதைப்போன்ற(உயரமான நுழைவிடம் கொண்ட) கல்குகைகளில் தங்குவீராக -	255
இரவில் கூட்டாக (அவ்விடத்தில்)தங்கி, (நெடுநேரம் அசந்து தூங்கி)ஓய்வெடுத்தலைத் தவிர்த்து,
வானம் துயிலெழுந்த விடியற்காலத்தே, (சீக்கிரமாய்ப்)புத்துணர்வோடு எழுந்து,
காட்டிடைக் கிடந்த செம்மையான பாதையில் போவீராக -
குளத்தைப் பார்த்ததைப் போன்ற, அகன்ற பசுமையான(குளிர்ந்த), அழகிய அவ்விடத்தே
மதம் மிகுந்து கோபத்துடனிருக்கும் யானையின் செருக்கை(யும்) அழிக்கக்கூடிய,			260
விழுந்துகிடக்கும் மரத்தைப்போன்ற மலைப்பாம்பினின்றும் ஒதுங்கி,
எல்லைகடந்து தொலைதூரத்திலும் மணம்வீசும் பூவும், உண்டவர்கள்
மறந்து இருக்கமுடியாத பழங்களும், வழக்கத்தை மீறி,
(அவற்றால்)பெரும் பயன் மிகுந்தாலும், மனிதர் (அவற்றை)நெருங்கார்; 
நீண்ட காம்பையுடைய (அப்)பூவினையும், (அப்பழங்களையுடைய)பெரிய மரக்கூட்டங்களையும்	265
இடப்பக்கத்திலும், வலப்பக்கத்திலும் நினைவினிற்கொண்டவராய்ப் பார்த்து,
(அவற்றின்)அடையாளங்களை அறிந்து அவற்றையெல்லாம் அணுகாமல் போவீராக;
கிளைகள் பலவும் முற்றிப்போன பூவாது காய்க்கும் மரமாகிய ஆலமரத்தில்,
ஒன்றுசேர்ந்த பல இசைக்கருவிகள் (இசைத்ததைப்)போன்ற (பல)ஓசைகள் இணைந்த பறவைகளின்
வாழ்விடங்களைக் காணும்படியான அகன்ற இடத்தையுடைய மலையை மெல்ல மெல்ல விட்டு அகல்வீராக-270
பெரிய நிழல் படிந்த மரங்கள் நெருங்கிவளர்ந்த அடர்ந்த புதர்க்காடுகளில்,
கதிரவன் சுடாத(வெப்பம்படாத) வான்வெளியைக்கொண்ட அகன்ற இடங்களில்,
திசை தடுமாறும் காலமாயினும்,
முறிந்துபோகாத கெட்டியான வில்லையுடையவர்களாய் விலங்குகளைத் தேடிச் சுற்றியலையும்
குறவர்களும் (வழி தவறி)மனம்தடுமாறும் குன்றுகளில் சென்றால்,				275
அகன்ற இடத்தையுடைய பாறையில் கூடி, சுற்றுப்புறம் அதிரும்படியாக,
மேற்செல்லுதலைத் தவிர்த்து உமது இசைக்கருவிகளை இசைப்பீராக -
ஒலித்தல் இனிமையான (இனிமையாக ஒலிக்கும்)அருவியின் பயன் மிகுந்த உச்சிகளில்
காடுகளைக் காத்து வசிக்கும் கானவர் (பலர்)உளர்;
வழக்கிலுள்ள துறையைத் தவறவிட்ட(வேறு துறையில் புகுந்து,திரும்பிவர முயன்று, முடியாத)வலிமை குன்றிய மக்கள்	280
நீரில் சிக்கிய கூச்சலைக் கேட்டதைப் போல் (உம் இசையைக்கேட்டு)வேகமாக ஓடிவந்து சீக்கிரமாய் (உம்மைக்)கிட்டி,
உண்பதற்கு இனிமையான பழங்களையும், பார்த்தவர்கள்
சூடுவதற்கு மகிழ்ச்சிதரும் பூக்களையும், காட்டி
தீமைகள் மிகுந்த பாதையில் அவர் முன்னேசெல்ல,
உம்முடைய மனத்துயரம் முற்றிலும் நீங்க,								285
(மனநிறைவோடு)‘இம்' என்ற ஒலியெழுப்பும் சுற்றத்தோடே மகிழ்ச்சியுள்ளவர் ஆகுவீர்;
தெரிந்தவர்கள் கூறிய திசைகளைப் பின்பற்றி,
சிறிதும் பெரிதுமான(ஏற்ற இறக்கங்களில்)(அவர் சொல்லிக்கொடுத்தது போல்)முறையாக(ஏறி) இறங்கி, புதியவர்கள்
பார்த்தாலே நடுங்கும் பயம் மிக்க மலைச்சரிவுகளில்,
மலர்ந்த பூக்கள் பரவிக்கிடக்கும் பட்டை பட்டையான நிழலில் களைப்பாறி இருப்பின்,		290
பலவிதமான நடமாட்டங்களை(உற்றுக்கேட்டால்) கேட்பீர் -
ஆண் கருங்குரங்கு தோண்டின பெரிய பலாப்பழம் காயம் மிகுந்து ஊற்றெடுப்பதால்,
மலை முழுதும் மணம்கமழும் திசைகள்தோறும்,
அருவி(யில் குளித்து அதன் பயனை) நுகரும் வானத்துத் தெய்வ மகளிர்,
(அருவிநீர்)விழும் வேகத்தைத் தவிர்க்காமல் (தம் முதுகில்)வாங்கி (நீரைக்) குடையும்போதெல்லாம்	295
கேட்கும் இமிழும் ஒலியைக் கொண்ட உமது இசைக்கருவி (எழுப்புவதைப்)போன்ற இனிய ஓசையும்;
ஒளிர்கின்றதும் ஏந்திநிற்பதுமான கொம்பினையுடைய (தன்)இனத்தைப்பிரிந்த ஒற்றை ஆண்யானை,
குறுக்குமலையில் மிக உயரமான பரண் (மீது இருக்கும்)குறவர்களின்
நிலத்தில் புகுந்து (பயிர்களைத்)தின்ன, (அதனை விரட்ட, அவர்கள்)ஆர்வத்துடன் சுற்றிவளைத்து ஏற்படுத்தும் ஓசையும்;
தூரத்துக் குகையைப் படுக்குமிடமாகக்கொண்ட, இரும்பைப் போன்ற முட்களையுடைய		300
முள்ளம்பன்றி தாக்கியதால் தவறிவிழுந்த குறவருடைய அழுகையும்;
(வளைந்த வரிகளைக்கொண்ட)புலி பாய்ந்ததால் (தம்)கணவர் மார்பில்(ஏற்பட்ட)
நீண்ட பிளவாகிய விழுப்புண்ணை ஆற்றுவதற்காக, காக்கக்கூடியது என
(ஆற்றுக் கருமணல் போல் அலை அலையான)நெறிப்பு உள்ள மயிரினையுடைய (மலை)இடைச்சியர் பாடலோசையும்;
முதல்நாளில்(=முதன்முதலில்) பூத்த பொன் போன்ற கொத்தினையுடைய வேங்கை மலர்களைச் 305
சூடுவதற்குப் (பெண்கள்)போடும் (தீங்கற்ற)மகிழ்ச்சி ஆரவாரமும்;
கன்றை வயிற்றுக்குக் கீழே(கால்களுக்கிடையே) கொண்ட இளந் தலையுடைய பேதைமையுள்ள பெண்யானை,
வலிமைக்கு ஓர் எல்லை என்று கூறத்தக்க அதன் கணவன் பாதுகாத்துநிற்பதினால்,
ஒளிரும் நிறமுள்ள வலிமையுள்ள புலி பாய்ந்ததினால், (தன்)சுற்றத்தோடு,
உயர்ந்த மலையில் (மற்றவரை உதவிக்குக்)கூப்பிடும் இடியோசை போன்று முழங்கும் குரலும்;	310
(குட்டியைக்)கையில் பிடிப்பதை மறந்த கரிய விரலையுடைய மந்தி,
எளிதாய் அணுகமுடியாத பிளவுக்குள் விழுந்துவிட்ட தன் (தாவுதலை முற்றிலும்)கற்றுக்கொள்ளாத குட்டிக்காக
தளிர்களை மேய்ந்து (வளர்ந்த) உடம்பினையுடைய சுற்றத்தோடே கூடிநின்று
துன்பப்பட்ட (யாராலும்)களையமுடியாத பெரிய அமளியும்;
ஆண்கருங்குரங்கு(ம்) (ஏறமுடியாதென்று)கைவிட்ட, பார்ப்பதற்கு இனிய உயர்ந்த மலையில்,	315
உறுதியாக நட்டுச் சார்த்திய கணுக்களைக்கொண்ட மூங்கிலே வழியாகக்கொண்டு,
பெரும் பலனாக எடுத்துச்சேர்த்த இனிய (தேன் கூட்டினின்றும்)கொள்ளையாகக் கொண்ட பொருட்காக,
எளிதாய்க் கிட்டமுடியாத (தேனுக்குக் காவலரண் போன்ற)தேனடைகளை அழித்த கானவர் மகிழ்ச்சிக்கூச்சலும்;
திருத்தமாகச்செய்யப்பட்ட வேலையுடைய தலைவனுக்கு(நன்னனுக்கு) புதிய குடியிறையாக அமையும் என்று
கள்ளை (அரசனுக்கு) நாள்செய்வதற்காகச் செய்த குறவர்கள் தம் பெண்களோடு			320
மான் தோலால் செய்யப்பட்ட சிறுபறையைச் சுழற்ற கல கல என்னும் ஓசையுடன்,
விண்ணைத் தொடும் மலையுச்சியில் வழிபாடுசெய்ய எழுப்பும் குலவை ஒலியும்;
நல்ல தோற்றப்பொலிவையுடைய நெடும் தேர் தன் வழித்தடத்தில் வந்ததைப் போன்ற
பரல்கற்கள்(மீது) ஆறு(ஓடிவரும்போது) சலசலக்கும்(ஒலி) மலைப்பிளவுகளில் பெரிதாக ஒலிக்கும் எதிரொலி ஓசையும்;
பெரிய நீர்ச்சுழலில் அகப்பட்ட கொடுங்குணமுள்ள யானையின்					325
மிகுகின்ற சினத்தைத் தணித்து, பெரிய கம்பங்களில் கட்டுவதற்கு,
(விலங்குமொழி கலந்த)கலப்பு மொழியால் பழக்கும் பாகருடைய ஆரவாரமும்;
ஒலிக்கும் மூங்கில் தட்டைகளை மீண்டும் மீண்டும் அடிப்பவராய், புனங்கள்தோறும்
கிளியை விரட்டுகின்ற பெண்களின் கூச்சலால் எழும் ஆரவாரமும்;
(தன்)கூட்டத்தைவிட்டுப் பிரிந்துபோன (வலம் இடமாக)அசைந்தாடும் திமிலைக்கொண்ட காளையும்,	330
மலையிலிருந்து புறப்பட்டுவந்த காட்டுமாட்டின் சீறியெழுந்த காளையும்,
குறையாத வலிமையுடன் (ஒன்றற்கொன்று) காயம் ஏற்படும்படியாகத் தாக்கி,
இடையர்கள் குறவர்களோடு முழுவதும் ஒத்து ஆரவாரிக்க,
செழுமையான இதழ்களைக்கொண்ட காட்டுமல்லிகையும் குறிஞ்சிப்பூவும் வாடும்படி,
காளைகள் சண்டையிடும் கல்லென்ற ஆரவாரமும்;							335
காந்தளின், துடுப்பைப்போன்ற, கமழுகின்ற (வெட்டுவதற்குக்கூரான விளிம்புள்ள)மடலை ஓங்கிப்பாய்ச்சி,
உருண்டு திரண்ட குலைகளையுடைய பலாவின் சுளைகள் நன்கு பழுத்த இனிய பழத்தினை
தின்று விழுந்த மீதமான(பழங்களின்) கொட்டைகளின் பயன் கொள்ள(=அவற்றை எடுக்க)
கன்றுகளால் (அப் பழங்களின்மீது)போரடிக்கும் பிள்ளைகளின் ஓசையும்;
மேகங்களைப் பார்த்தாற் போல் (புகை விடும்)ஆலைகள்தோறும், விரைவாக			340
(கரும்புத்)தட்டைகளைக் கணுக்களில் துண்டாக்கும் கரும்பின் ஏற்றம் இறைப்பது போன்ற ஒலியும்;
தினையைக் குற்றுகின்ற பெண்களுடைய தாளத்தோடு கூடிய வள்ளைப்பாட்டும்;
சேம்பையும் மஞ்சளையும் பேணிக் காப்போர்
பன்றிகள் (வராதிருக்கக் கொட்டும்) பறையொலியும்; (இவற்றின்)குன்றிடத்து எதிரொலியும்;
என்று இந்த அனைத்தும், ஒத்து ஒன்றாகப் பெருகியொலித்து,					345
தாழ்நிலத்தவும் மேல்நிலத்தவும் (ஆகிய ஒலி அனைத்தும்)கூடிப் பலவும் ஒன்றுசேர்தலால்,
(அளக்கக்கூடிய எந்த)அளவை (யும்)மீறிய, எண்ண முடியாத தன்மையுடையனவாய்,
மலை(எனும் யானை)யில் உருவாகும் மதநீர் (எனும் வெறியூட்டும் கூட்டொலிகள்)திசைகள்தோறும் ஒலிக்க-
(பல)நிறங்கொண்ட காம்புகளையுடைய மலர்களைப் பிணைத்த மாலை (அணிந்த)பெண்கள்
முரசுகள் தூக்கம்(=ஓய்வு) அறியாத அகன்ற ஊரினில்(கொண்டாடும்)				350
திருவிழாவைப் போன்றது, அவனுடைய(நன்னனுடைய) அகன்ற இடத்தைக்கொண்ட மலை;
கண் குளிரக் கண்டும் (செவி குளிரக்)கேட்டும்,
உண்ணுவதற்கு இனியவை பலவற்றை உரிமையுடன் கொண்டும்,
‘இனியும் வருவதாக நமக்கு' என்று
நீண்டகால உறவுள்ள (ஒரே)வம்சத்தினர்(போல்) ஆகி, பல்வித சிறப்புக்கொண்ட			355
போரிடுவதை(ப்பற்றியே) பெருமையுடன் (எந்நேரமும்)பேசும் சிறப்பு நிறைந்த மார்பினன்(ஆன நன்னனின்)
இடி முழங்கும் மேகக்கூட்டத்தினையுடைய பெரிய மலைகள் (உமக்குப்)பின்னாகப்போக,
(புதிய இடங்களைக்கண்ட)வியப்பு மேலிட்ட, இனிய குரலையுடைய விறலியர்
மணமிக்க கரிய மலைத்தொடரில் குறிஞ்சிப்பண்ணைப் பாடி,
(தெய்வங்களைக்)கைகூப்பித்தொழுது வணங்கிப் புகழ்ந்து செல்வீர் -				360
கருமை பரந்த பெரிய மலையில், பஞ்சு போலப் பொங்கியெழுந்து,
கையால் எட்டித்தொடமுடியும் என்பதைப் போன்ற கார்காலத்து மேகக் கூட்டம்,
தூவுவதைப் போன்று நீர்த் திவலைகளை வீசியடிப்பதால்,
திக்குத் தெரியாமல் மிக விரைவாக ஓடும் சுற்றத்தோடே,
(தோளில்)தொங்கவிட்ட உம்முடைய இசைக்கருவிகள் (நனைந்து)தொய்வடையாதபடி,		365
கிணற்றைப்போன்ற பெரிய பொந்துகளில் புகுந்துகொள்ளுங்கள் -
பெரிய பாறைகளைக்கொண்ட இறக்கத்தில் (திடீரென்று)முடிவுறும் (செங்குத்தான)சரிவுகளின் கிட்டப்போகாமல்,
குன்றுகளில் உள்ள நிறைந்த துன்பம்(தரும்) பள்ளங்களில்,
நின்று (சற்று உற்றுப்)பார்த்தாலும் கண்ணின் ஒளியைக் கவர்ந்துகொள்ளும்,
(தோலில் பூசப்பட்ட கரிய)சாந்து நிறைந்த முரசின் (அதை எடுத்துச்செல்லக் கட்டிய)காவுமரத்தைக் கையில் பிடித்து	370
(முரசை அடிக்கும்)குறுந்தடியை (மூன்றாவது)காலாக (ஊன்றிக்)கொண்டு, தடுமாறுதலினின்றும் (உம்மைக்)காத்து,
(தடியை)ஊன்றினராக(வே) கடந்து செல்லுங்கள் - இடையூறுகள் மிகப் பலவாம்,
வேல்(முகப்பு) (வெயிலில்)காய்ந்ததைப் போன்ற (சுடுகின்ற)கூர்மையான(சில்லுகளைக் கொண்ட) கற்பாறையில்,
வெயில் ஆட்சிசெய்கின்ற இன்னல்(தரும்) வழிகளில்,
கதிரவன் (தன்)சினம் தணிந்த (மாலைப்)பொழுதில் செல்லக்கடவீர் -				375
புகழ் (எங்கும்)பரவி மிகுகின்ற அவனது(நன்னனது) (அவனைவிட்டு)விலகாத படைத்தலவரோடே
சிறப்புக்களில் மிக உயர்ந்த, மேகக்கூட்டங்களோ என்று நினைக்கத்தோன்றும் பல யானைகள்(உள்ள),
(போரிட வந்த)அரசர்களின் நிலையழிக்கும் கோட்டைகளும் (அவ்வழியே)உள்ளன;
பின்னிவைத்ததைப் போன்ற கொடிகள் பிணைந்திருக்கும் புதர்க்காட்டில் நுழையும்போதெல்லாம்,
முன்னே செல்பவன் (ஒதுக்கிப் பின்)விட்டுவிட்ட கடும் வேகம்கொண்ட திரண்ட கோல்,		380
இனிய இசையைத்தரும் நல்ல யாழின் (கூடு போன்ற)பத்தலினையும், இழுத்துக்கட்டப்பட்ட
(தோலில் பூசப்பட்ட கரிய)சாந்து நிறைந்த முரசின் மேற்பரப்பையும், (அடித்து உடைத்துவிடாதபடி)பாதுகாத்து,
(முன்செல்பவனைப் பற்றிய)கைப் பிடியை விட்டுவிடாமல் மெல்ல மெல்லப் போவீராக -
யானைகள் (ஒன்றோடொன்று)சண்டையிட்டதைப் போன்ற ஒன்றன்மீது ஒன்று ஏறிநிற்கும் பாறைகள்(மீது)
மழைத்துளிகள் நிறைய விழும் காடுகளும் கூட(அத்துடன்)மிகப் பலவாம்;				385
(தன்னுடன்)ஒத்துப்போகாத பகைவரின் தோல்வியின்போது (ஆயுதங்களை மேலே தூக்கி)ஆரவாரித்ததைப் போன்று,
(வெற்றியாகிய)நல்ல தீர்வைக் கொடுத்த (இறந்துபட்ட)மான உணர்வு உள்ள வீரர்களின்
அழியாத நல்ல புகழையுடைய பெயர்களோடு நட்ட
(நடு)கற்கள் நிறைய நிற்கின்ற கிளைத்துச்செல்லும் வழிகள் எண்ணிக்கையில் மிகப் பலவாம்;
(கேட்போர்)மகிழ்ச்சி அடையும் தாளக்கட்டுடைய உம்முடைய பாட்டு (நடுகல் வீரருக்கு)விருப்பமாய் அமைய,	390
தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கும் வழக்கத்தில் உம்முடைய கொம்பை(யும்) வாசித்து விரைவீராக -
(அந்த வழிகள்)முன்பு(எப்படி இருந்தன என்று) நன்றாக அறியாத, நாடு மாறி வரும் புதியவராகிய நீங்கள்
(புல்,புதர் வளர்ந்து)குறுகலான வழிகளைத் தொட்டுத்தடவிப் பார்த்து, புற்களை முடிந்து (வழியுண்டாக்கி)வைப்பீர் -
போகும் இடத்தின் பெயரும் எல்லையும் அறியும்படி,
கல்லைக் கொத்தி எழுதிய, நல்ல அடிப்பகுதியையுடைய மரா மரத்தடிகளில்			395
கடவுள்(படிமங்கள்) ஓங்கிநிற்கும் காடுகள் நிறைந்த கிளைவழிகளில்,
(நன்னனை)ஒட்டிப்பழகாமல் பிரிந்துபோன (அவனுடன்)ஒத்துப்போகாத பகைவர்கள்
(இந்தப்பக்கம் இருப்பர் என்று)சுட்டிக்காட்டினும் நடுக்கம்வரும் கடினமான வழிகள் மிகப் பலவாம்;
‘தேன் சொரிகின்ற தலையிற் சூடும் மாலையினையும், தேர்களை (அள்ளி)வீசும் கவிந்த கையினையும் உடைய
(தனக்கென எதையும்)வைத்துக்கொள்ளாத வள்ளலிடம் செல்கின்றோம்' என்று சொன்னால்,	400
நலம்சிறந்து மிகுகின்ற அவனுடைய தொன்றுதொட்ட வாழ்க்கைநெறியையுடைய தொன்மையான ஊர்களுக்கு
உள்ளே இருப்பது போன்றதே நம்மைப்போன்றவர்க்கெல்லாம்;
(எனவே)களைப்புற்றபோது இளைப்பாறி அஞ்சாமல் போவீராக -
புலி வந்ததால், (தன்னைக்)கைவிட்டு ஓடிப்போன தான் (இன்னும்)விரும்புகின்ற துணையை எண்ணி,
ஆண்மான் நின்று கூப்பிடும் (அக்)காட்டை வழக்கமானபாதையில் சென்றுகடந்து,			405
வில்லின் ஓசைக்குப் பயந்த சிவந்த கண்களையுடைய காட்டெருது
குறுங்காட்டின் முகப்பிற்குள் விரைந்தோடுகின்ற மணங்கமழும் கொடிகளையுடைய கொல்லைக்காட்டினில்,
(தங்கள் ஊர்களைவிட்டு)வேற்று நிலமான (மேட்டுப்பகுதியில்)மேய்ந்த, எருதுகளையுடைய ஆநிரையைச்சேர்ந்த
சங்கு (போன்ற வெண்மையான)பசுக்களின் இனிய பாலை, கிடையைச் சுற்றிக்காவல்புரியும் இடையர்களின்,
வளையல்கள் அணிந்த பெண்கள், (நீவிர்)மகிழும்படி கொண்டுவந்து (உள்ளங்கையில்)ஊற்றுகையினால்,	410
(அதைக்குடித்து)பரிசில் பெறும் ஆசையோடு ஊரிலிருந்து வந்த உம்முடைய
வருத்தம் வெகுதூரம் போய்விட(முற்றிலும் நீங்க), புத்துணர்வுபெற்றவர் ஆவீர்;
(பண்டங்களை)விற்றுப் (பண்டமாற்றாகப்)பெற்ற கலப்பு நெல்லின் பலவாறான அரிசியைப் போல,
கிடாக்கள் கலந்த செம்மறியாடுகள் வெள்ளாடுகளோடு கலந்து,
கல்லென்ற ஓசையையுடைய காட்டினில் கடல் போல் இரைச்சலிடும்				415
பலவித ஆட்டினங்களைக்கொண்ட மந்தைகள்(இருக்கும் இடத்தில்) இராத்தங்குபவராய்ச் சேர்ந்தால்,
பாலும் (தயிரில்)மிதக்கும் வரகுருண்டைச்சோறும் (அப்பொழுது)சமைக்காது (ஏற்கனவே இருந்ததைப்)பெறுவீர்;
நார்(போன்ற) உரோமத்தை உள்ளடக்கிய மெத்தை விரிப்பைக்கொண்ட கட்டில் போன்ற,
(ஆடுகளின்)உடலை உரித்துச் செய்த (வார்)மிதித்த தோலாலான படுக்கையில்,
நெருப்பே துணையாக தங்கிப் போவீர் -								420
(அம்பு எய்தால்)கூப்பிடு தூரத்தையும் கடக்கக்கூடிய கூரிய நல்ல அம்பினையும்,
கொடிய வில்லினையும் உடைய (காட்டுப்படையான)விற்படையினரின் கூட்டத்தைக் கண்டால்,
‘தனக்குப் படியாதாரை அழித்த (யாருக்கும்)அடங்குதல் இல்லாத ஆளுமையுள்ளவனும்,
(பூங்)கொடிபோன்றவளின் கணவனும் ஆகிய (நன்னனிடம்) செல்கின்றோம்' என்று சொன்னால்,
தசைகளையும் கிழங்குகளையும் இறையாகப்பெற்றவராய் (அவற்றை உமக்குக்)கொடுத்து,	425
(உம்மைப்)பேணுபவர் அன்றி, வருத்துபவர்கள் இல்லை;
(பின்னர்)அங்கே (அவர்)போகச்சொன்ன வழியைக் கொள்வீர் - அதுவே அக்காட்டின் தன்மையாம்,
தேன் உண்டாக மலர்ந்த மராமரத்தின் மென்மையான பூங்கொத்தும்,
யானை முறித்த அழகிய தளிர்களையுடைய யாம் பூவும்,
தளிர்களோடே இறுகக்கலந்த கட்டழகான மாலையை,				430
நன்கு காய்ந்த கற்றாழை நாரில் (கட்டி)அழகுபெறச் சூடி,
சரளைமண்ணுடைய மேட்டுநிலத்தின் (மழைநீரினால்)அரிப்புண்ட வழித்தடங்களில் (தேங்கியுள்ள)குளிர்ந்த
(மழைநீரைக்)குடித்து, (அதை மொண்டு உடல்)கழுவி (ப்பின் வழிக்கு)எடுத்துக்கொண்டவராய்ச் செல்வீராக -
சிவந்த மலர்களைக் கொண்ட வேங்கை மரத்தின் பூக்களைப் போன்ற
மூங்கிலினின்றும் கொண்ட அரிசி(யினால் செய்து தயிரில் மிதக்கவிட்ட)உருண்டைச்சோற்றின்மீது ஊற்றிய, 435
மேட்டுநிலத்தில் விளைந்த நெற்பயிரின்(ஊடே வளர்ந்த) அவரைப்பருப்பின் புளிசேர்த்த மசியலை,
இரவுக்கு, இடைவழியில் பட்ட வருத்தம் போக,
அகன்ற உட்பரப்பைக்கொண்ட (அங்குள்ள)ஊர்களிலுள்ள, கம்புகளை நெருக்கமாகக் கட்டிப்
புல்லால் வேய்ந்த குடிசைகளான வீடுகள்தோறும் பெறுவீர்;
தங்கத்தை (ச்சிறிது சிறிதாக)நறுக்கினதைப்போன்ற நுண்ணிதாக ஒன்றுபோலிருக்கும் அரிசியை,	440
வெண்மை(யான கஞ்சியை வடித்து)நீக்கி ஆக்கிய பெரிய உருவமுடைய (சூடான)சோற்றுருண்டையில்,
குளிர்ந்த(சூடற்ற) நுண்ணிய நெய்விழுதை உட்பொதிவாகக் கொண்டு,
இளைப்பாறி (அங்குத்)தங்கினால், தினமும் பெறுவீர்; (மேலும்),
சர்க்கரையை(ச் சுளகில்) கொழித்து (குருமணல் போன்ற பகுதியை நீக்கி ஒதுக்கிய)பொடியைப் போல,
(திகட்டலால்)உண்பாரைத் தடுக்கும் நுண்ணிதாக இடிக்கப்பட்ட தினைமாவையும் (பெறுவீர்);	445
(உடைப்பதற்கு எளிதான)சுள்ளிக் குச்சிகளைக் கொள்ளியாகத் தீமூட்டி,
குளிர் முற்றிலும் விட்டுப்போக இனிதே சேர்ந்து தூங்கி,
பொழுது புலர்ந்த அதிகாலையில் பறவைகளின் குரலைக்கேட்டுப் போவீராக -
அழகில்லாத அடிப்பகுதியையுடைய காஞ்சி மரங்களும், நீர் மோதுகின்ற மதகுகளும்,
(உழுது உழுது)மென்மையாகிப்போன விளைநிலங்களும், இருக்கும் ஊர்கள்தோறும், நல்ல யாழின் 450
பண்களை மாறிமாறி வாசிப்பதைப்போல, (பலவித இன்பம் தரும்)சோலைகளிலும், துயிலிடங்களிலும்,
பலநாள் தங்கினும், (அல்லது ஒருநாள் மட்டும்)தங்கியவராய்ச் சென்றாலும்,
(அவற்றை)மிகப் பல உடையது அவனுடைய குளிர்ச்சியான மருதநிலங்களைக்கொண்ட நாடு;
சம்பங்கோரை நெருங்கிவளர்ந்த வயல்வெளிகள் (சேற்று)மணம்வீச (கைகளினால்)துழாவி,
வலைகொண்டு மீன்பிடிப்போர் கொண்டுவந்த பெரிய கழுத்தையுடைய வாளைமீன்(துண்டங்களை),	455
நிலையாக நின்று மீன்பிடிப்போர் போட்ட நீண்ட நரம்பையுடைய தூண்டிலால் பிடித்த,
பெண்யானையின் துதிக்கையைப் போன்ற, சிவந்த கண்களையுடைய விரால்மீன்களின்,
உடுக்கையின் முகப்பரப்பை ஒத்த, துண்டங்களோடு கலந்து,
பகன்றைப்பூ மாலை(சூடிய) கள்விற்கும் பழையர்வீட்டுப் பெண்கள்,
நண்டுகள் ஓடித்திரியும் வயல்களின்(அருகே) களத்துமேட்டில் வைத்த,				460
மலை போன்ற (நெற்கதிர்)போர்களின் அடிப்பாகத்தை இழுத்து (அவற்றைச்)சரித்து,
(போரடித்து)வளம் சேர்க்கும் தொழிலாளிகள் நெல்லை முகந்து தர,
(வேகும்போது கொதிப்பதால்)குலுங்கும் பானையிலிருந்து வடித்த (நெல்லின்)இளம் முளைகளாலான தெளிந்த கள்ளை,
இள வெயில் சூரியனையுடைய(காலைவேளையில்) (நெற்)களங்கள்தோறும் பெறுவீர்;
(மீனின்)முள்ளை நீக்கிச் சமைத்த(குழம்பினின்றும்) அரித்தெடுத்த (மீன்துண்டங்களோடு)வெண்மையான சோற்றை ,465
‘வண்டுகள் மொய்க்கும்படி மணங்கமழும், தேன் சொரியும் (தலையில் சூடிய)மாலையினையும்
திண்ணிய தேரையுமுடைய நன்னனுக்கே (இது)உணவாக ஆகும்' என(ப்புகழ்ந்துரைத்து)
பார்ப்போர் வியக்கும்படி, (உமது)சுற்றத்துடன் உண்டு,
எருதுகளை ஓட்டும் உழவரின் (உழவுப்)பாட்டோடு இயையுமாறு (உமது)நல்ல யாழில்
மருதப்பண்ணை வாசித்து, (அங்கு)இளைப்பாறியவராய்ச் செல்வீர் -					470
வெண்ணெல்லை அறுப்போரின் முழவு(எழுப்பும் ஓசை)க்குப் பயந்து,
சிவந்த கண்களையுடைய எருமைகளின் கூட்டத்தினைப் பிரிந்த (ஒற்றை)எருமைக்கடா,
உறுமிக்கொண்டு(வரும்) ஓட்டத்தின் வலிமையோடு (உம்மேல்)விரைவாக வரலாம் என்பதைக் கவனத்திற்கொண்டு,
(குயவர்)வனையப் பயன்படுத்தும் கருவியின் சக்கரத்தைப் போல நீர்க்குமிழி சுழலும்,
வேகமான நீரோட்டத்தையுடைய முதல் மதகில் ஒழிவின்றி ஓடும்,				475
காண்போர் விரும்பும், கண்ணுக்கு இனிய சேயாற்றின்
புதுப்புதுச் செல்வம் தரும் ஒரு கரையை வழியாகக்கொண்டு போவீராக -
முத்துமணிகள்(கேட்பாரற்றுத்) தூங்குகின்ற, உயர்ந்தோங்கிய மதிலையுடைய,
ஊரினின்றும் குடிபெயர்தலை அறியாத பழமையான குடிமக்கள் நிறைந்துவாழும்,
அகன்றதாயினும் இடம்போதாத சிறந்த பெரிய கடைத்தெருவினையுடைய,			480
ஆறு என்றுசொல்கிறமாதிரி இருக்கும் தெருக்களையுடைய, திருவிழாவோ என்றுநினைக்கும்படி(மக்கள் கூடிய),
(ஊரைப்பற்றி)ஏளனம்பேசுவோர் (வழி தவறிப்போமோ என)அஞ்சும், சந்திகளையும் தெருக்களையும்கொண்ட,
கடலோ (அல்லது) பெருமழையோ என்று நினைக்கும்படியாக ஒலிக்கும் பேரிரைச்சலோடு,
மலையோ (அல்லது) முகில்கூட்டமோ என்று நினைக்கும்படியாக மாடங்கள் உயர்ந்துநிற்க,
(மக்கள் தம்)துன்பம் தீர்க்கும் விருப்புடன் இன்புற்று அமர்ந்து தங்கியிருக்கும்,			485
குளுமை பொழியும் சோலைகளில் பல்வித வண்டுகள் ரீங்காரம்செய்யும் --
- (இன்னும்)வெகு தூரத்திலிருப்பதன்று; -- (அவன் பழமையான சிறப்பியல்புகள் கொண்ட தொன்மையான ஊர்)-
(மன்னனோடு)இசைந்துபோகாத பகைவரின் கரிய தலைகள் துண்டிக்கப்பெற,
பருந்துகள் (சதைகளைத் தூக்கப்)பாய்ந்திறங்க, கள வெற்றிகொள்ளும் ஒளிரும் வாளையுடைய மறவர்
(தம்)கரிய காம்பினையுடைய வேலைச் சாத்திவைத்திருக்கும் திட்டிவாசல்களையுடைய,		490
கடுமையான காவலையுடைய கோட்டைவாசலுள் (யாரும் தடுப்பரோ என)ஐயம்கொள்ளாமல் நுழைவீராக;
மரத்தடித் திண்ணைகளில் வசிப்போராய் தொலைதூர நாட்டிலிருந்து வரும் பரிசிலர் (இவர்),
‘வெற்றிகொள்ளும் போரில்(வல்ல நன்னன்) மகன் (நன்னனின்) பெரும் சிறப்பியல்புகளை நினைத்து
வந்திருக்கின்றனர் போலும், பாவம் இவர்கள்' என்று(இரக்கப்பட்டு),
பார்ப்பவர்கள் எல்லாம், கனிவுடன், இனிது நோக்கி,							495
விருந்தினராகத் தங்க ஒவ்வொருவரும் (உறவினராக உம்மை)ஏற்றுக்கொள்ள, (அவரிடம்)சேர்ந்து,
(சொந்த ஊரைவிட்டு வந்த)மிகுந்த ஏக்கத்தால் அலைக்கப்பட்ட உம் வருத்தம் குறைந்துபோக -
நெருப்பைக் கக்கியது போன்ற பூப்பூத்த கிளைகளையுடைய மரா மரத்தில்,
(தன்)கூட்டமெல்லாம் ஓடிப்போய்விட (ஓடமுடியாமல்) வலிய அகப்பட்ட
மெல்லிய நடையையுடைய காட்டுப்பசுவின் கன்றும், யானைக்கன்றும்,				500
வாய்திறவாத கரடியின் வளைந்த பாதங்களையுடைய குட்டியும்,
மலையுச்சியில் பிடித்த (நிலத்தைப்)பற்றிக்கொண்டு ஓடும் வளைந்த கால்களையுடைய
மலையில் வாழும் மலையாடும், உறுதியான தலையையுடைய பெரிய செம்மறியாட்டுக்கிடாவும்,
பாம்பின் வலிமையை அழித்த சிறிய கண்களையுடைய கீரியும்,
குகையில் பதுங்கியிருந்த புலி கொள்வதற்காகப்பாய, (அதனால்)துன்புற்ற,				505
பேதைமை மிகுந்த கண்களையுடைய மரைமானின் பெரிய காதுகளைக்கொண்ட குட்டியும்,
அரக்கை (உருக்கிப்)பரப்பிவிட்டாற் போன்ற சிவந்த நிலத்தில்,
பருக்கைக்கற்களின்மீது தவழும் உடும்பின் வளைந்த பாதங்களைக்கொண்ட ஏறும்,
மலை அழகுற ஆடும் பேதைமை நிறைந்த கண்களைக்கொண்ட மயிலும்,
காட்டுக்கோழியை அழைக்கும் கூவலொலியுடைய சேவலும்,					510
காட்டுப் பலாவின் மத்தளமோவென நினைக்கத் தோன்றும் பெரிய பழமும்,
(தானியங்களை)இடித்துக் கலந்துசெய்த(பொரிவிளங்காய்)உருண்டை போன்ற,(ஆனால்) மணம்மிக்க வடு மாங்காயின்
தேன் போன்ற சதைப்பற்று முதிர்ந்த இனிய பழங்களாகிய அரும்பண்டங்களும்,
தூறலால் செழுப்புற்றுத் தழைத்து உயர்ந்த, அரும்புகள் முதிருகின்ற (மணம்வீசும்)நறைக் கொடியும்,
தோளில் சுமந்துவந்த, நுகத்தடியோ என நினைக்கத்தோன்றும் நூறைக்கிழங்கும்,			515
பருமனான பளிங்குக்கல்லை (உடைத்து)உதிர்த்துவிட்டதைப்போன்ற பலவித அழகிய மணிகளும்,
மினுமினுப்பான(தோலையுடைய) புலி தாக்கிய புண் மிகுந்த யானையின்
முத்துக்களைக்கொண்ட தந்தத்தின் முழுதும் உறுதி மிகுந்த குவியலும்,
வளையல் உடைந்ததைப் போன்ற, செழுமையான இதழ்களையுடைய காந்தள்பூவும்,
புன்னைப்பூவும், திலகப்பூவும், மணமிக்க வயிரத்தையுடைய சந்தனமும்,				520
கரிய கொடிகளையுடைய மிளகின் காய்க்குலைகளின் (காய்ந்துபோகாத)பச்சை மிளகும்,
நன்குசெய்யப்பட்ட கெட்டி மூங்கில் குழாயில், நன்கு பக்குவப்பட்ட, தேனிற்செய்த கள்ளின் தெளிவும்,
காட்டில் வசிக்கும் எருமையின், மூங்கில் குழாயினுள் ஊற்றப்பட்ட இன்சுவையுள்ள தயிரும்,
கருநீல நிறமான முற்றிய தேனின் நிறம் (எங்கும்)பரவியதைப்போன்ற, உயர்ந்த மலையில்
சக்கரம் போன்று ஒழுகும் தேனைத் தன்னிடத்தேகொண்ட தேனடைகளும்,			525
இவற்றோடு சேர்ந்த ஆசினிப்பலாவும், (மற்ற)எல்லாப்பொருள்களும்,
குடகு மலையில் பிறந்த குளுமையான பெரிய காவிரியாற்றைக்
கடல் (தாகத்துடன்)குடிக்கும் ஆழமான கழிமுகத்தைப் போன்று,
(பகைவர் மேல்)பொறுமைகாட்டாத போர்களையுடைய உயரமான வாயிலில் நிறைந்து (இருக்கும்),
மழைமேகங்களைப் போன்ற செழுமை மிகுந்த யானைகள்(இருக்கும்),				530
(காய்ந்த)சாணத் துகள்கள் (யானை மிதிப்பதால்)சிதறிக்கிடக்கும் முற்றத்தை அடைந்து,
மேகங்களின் முழக்கத்துக்கு ஈடாக முழங்கும் கண்களையுடைய முழவின் கண்கள் ஒலிக்க,
மூங்கிலால் உருவாக்கப்பட்ட பெருவங்கியத்தின் துளையிடங்கள் ஒலியெழுப்ப,
மருதப்பண்ணை வாசித்த கரிய தண்டினையுடைய சிறுயாழின்
நரம்பின் இசையை மீறாது அதனோடு சேர்ந்து ஒன்றுபட்டுப்					535
பாடும் முறையை (நன்கு)அறிந்த இனிய குரல்வளமுடைய விறலியர்,				
தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கும் வழக்கத்தினின்றும் தம் நெறிமுறை தவறாது,
அளவற்ற வலிமைகொண்ட கடவுளை வாழ்த்திய பின்னர்,
(உமக்கே உரித்தான)புதிய பாடல்களைப் பாடி, ‘சூளுரைத்து அதனைக்காப்பதில்
குறையாத நல்ல புகழோடு இருந்து மறைந்தோரின் வழிவந்தவனே,				540
(தம் புகழ்)இன்றைக்கு இங்கே முடிந்துவிடாது, உலகம் உள்ளளவும் நிலைத்திருக்கும்படி,
நடுவுநிலை அறிந்து உணர்ந்த பெரியோர்கள் மறைந்தனராக,
(அவர் கைக்கொண்டிருந்த)கொடையாகிய கடமையைச் செய்துமுடித்த அண்ணலே' என்று
(அவனது)வெற்றிகளால் கிடைத்த பெரும் புகழையும், அவன் சிறப்பியல்புகளையும் புகழ்ந்துகூறி,
(நீர்)சொல்லிச்சென்றதை முடிக்கவும் விடமாட்டாதவனாய், ‘(என்மீதான)விருப்பம் (உம்மைக்)கொண்டுவந்துசேர்க்க	545
(நீர்)வந்ததே போதும், (வேறு புகழ்மொழி வேண்டாம்)(வழிவந்த)வருத்தமும் பெரியது' என,
போரிடும் பகைவரை எதிர்கொள்ளும் படைத்தலைவர்களோடே (முகம்)மலர்ந்து,
சிறப்பு மிக்க தன் மனையின் முன்பகுதிக்கு (நீர்)வருவதை விரும்பிக்கேட்டு,
கலகலப்புள்ள (தன்)அவையோரின் நலமுள்ள வலப்பக்கத்தே இருத்தி,
‘சிறந்த அரசுரிமையையும், சினங்கொள்ளாத அமைச்சர்களையும்					550
அகன்ற நாட்டினையும் குறைந்த அறிவினையும் உடையோராய்,
“எம்மிடம் இல்லை” என்று விரித்த கையினராய்,
தம் பெயரைத் தம்முடனேயே எடுத்துச்சென்று மாண்டோர்,
உயர்ந்த மலையிலிருந்து கீழேவிழுகின்ற நீர்ப்பெருக்கு நிறைந்த அருவியின்
வேகமாகப் பாயும் வெள்ளத்தையுடைய கண்ணுக்கு இனிய சேயாற்றின்				555
கருமணல் இருக்கும் மணல்மேடுகளிலுள்ள மணலினும் பலரே,
அதனால், புகழோடே முடிவடையட்டும், நமக்கு வரையப்பட்ட வாழ்நாள்' என்று
பரந்துபட்டு, (எல்லாவற்றிற்கும்)இடம்கொடுக்கும் வானத்தை(யும்)எட்டும் (உயர்ந்த)உள்ளத்தோடு
ஆசைகொண்டவராய்ச் சென்ற உம்மைக்காட்டிலும், தான் பெரிதும்
மகிழ்ந்த நெஞ்சத்தோடே கனிவுடன் இனிதாகப் பார்த்து,						560
இழை இருக்குமிடம் தெரியாத அளவில் நுண்ணிய நூலால் நெய்த புடைவைகளை
ஏளனம் அற்ற சிறப்பு உண்டாக உட்கூடுபாய்ந்த இடுப்பில் உடுத்தி,
பெண்நாய் (கடித்துக்)கொண்டுவந்த இளங்கொழுப்புள்ள தசைகளும்,
நீண்ட வெண்ணெல்லின் அரிசியும் தட்டுப்பாடு இல்லாமல்,
முதல்நாள் போன்ற ஆதரவுடன், (உம்முடன் உண்டான)உறவு சிறப்பெய்தி				565
பல நாட்கள் (அங்குத்)தங்கினாலும் பெறுவீர், (தொடர்ந்து)தங்காமல்
“போகலாமென்று எண்ணுகிறோம், எமது பழைய ஊருக்கு, திரும்பவும்”, என்று
(தயங்கித்தயங்கி)மெதுவாகக் கூறி, (அவ்விடம் விட்டுச்)சென்றால், உங்களில்
தலவனானவன் பொற்றாமரையைச் சூட, விறலியர்
சீர்சிறப்பாக(=சீதனமாக) ஒளிரும் அணிகலன்கள் அணிய,						570
(ஆற்று)நீர் (சீராக)ஒடுவதைப்போன்று வரிசையாகச் செல்லும் நெடிய தேர்களையும்,
யானைபிடிக்குமிடத்தில் கொள்ளாத (பகைவரது), மலையோ என்று நினைக்கத்தோன்றும் யானைகளையும்,
(கழுத்தைச்சுழ்ந்த)மணிகள் ஒலிக்கும் காளைகளையுடைய பெரிய பசுக்கூட்டங்களையும்,
அழகிய சேணம் முதலியவற்றால் பொலிவுற்ற, கத்தரிக்கப்பட்ட பிடரிமயிரைக்கொண்ட குதிரைகளையும்,
(எடுக்க எடுக்கக்குறையாமல்)மண் அரிக்கக் கிடக்கும் பொருள்குவியலுடன், அனைத்தையும்	575
வறுமையில்வாடும் புலவர்கள் ஏந்திய கைகள் நிறைய,
அணிகலன்களை அள்ளித்தரக் கவிழ்ந்த இறுக்கமாக இல்லாத தோளணியுடைய பெரிய கைகளில்
வளம் குன்றுதல் இல்லாது, வாய்த்த வளமும் செழித்துமிகுந்து(உள்ள),
மூங்கில் வளரும் நவிரமலையின் உச்சியில், சடுதியாக
மழை சொரிவதைப் போலக் கொடை வழங்கி,							580
(போவோம் என்ற)முதல்நாளிலேயே(தாமதிக்காமல் உம்மை)வழியனுப்புவான் (தன்)பரிசிலோடே - மலையின் (அருவி)நீர்
வென்று உயரும் கொடியைப்போலத் தோன்றும்
மலைகள் சூழ்ந்த குடியிருப்புகளைக்கொண்ட நாட்டிற்கு உரிமையுடையவன்.