கலித்தொகை

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக


கடவுள் வாழ்த்து - 1
1. பாலை ( 2 - 36)

2. குறிஞ்சி (37 - 65)
3. மருதம் ( 66 - 100)

4. முல்லை ( 101 - 117)
5. நெய்தல் ( 118 - 150)
  தேவையான
  பாடல் எண்
  எல்லையைத்
  தட்டுக

 #1 கடவுள் வாழ்த்து - மதுரை ஆசிரியர் நல்லந்துவனார்

ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து
தேறு நீர் சடை கரந்து திரிபுரம் தீமடுத்து
கூறாமல் குறித்ததன் மேற்செல்லும் கடும் கூளி
மாறா போர் மணி மிடற்று எண் கையாய் கேள் இனி
படு பறை பல இயம்ப பல் உருவம் பெயர்த்து நீ	5
கொடுகொட்டி ஆடும்-கால் கோடு உயர் அகல் அல்குல்
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ
மண்டு அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து
பண்டரங்கம் ஆடும்-கால் பணை எழில் அணை மென் தோள்
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்கு தருவாளோ	10
கொலை உழுவை தோல் அசைஇ கொன்றை தார் சுவல் புரள
தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடும்-கால்
முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ
என ஆங்கு
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை		15
மாண் இழை அரிவை காப்ப
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி



 #1 கடவுள் வாழ்த்து - அடிநேர் உரை

ஆறு அங்கங்களையும் அறிந்த அந்தணர்களுக்கு அரிய வேதங்கள் பலவற்றையும் அறிவித்து,
தெளிந்த நீரைக்கொண்ட கங்கையைத் தன் சடையில் அடக்கிக்கொண்டு, முப்புரங்களையும் தீயூட்டி,
சொல்லாமலேயே மனத்தால் நினைத்த எப்பொருளுக்கும் எட்டாமல் நிற்கும் கடிய கூளியின்
புறமுதுகிடாத போரினையும், நீலமணி போன்ற கழுத்தினையும், எட்டுக்கைகளையும் உடையவனே! கேட்பாயாக!
ஒலிக்கின்ற பறைகள் பல முழங்க, பல்வேறு உருவங்களையும் உன்னுள்ளே அடக்கிக்கொண்டு நீ
கொடுங்கொட்டி என்னும் கூத்தினை ஆடும்போது வளைவாக உயர்ந்த பின்பக்கத்தையும்,
கொடி போன்ற இடையும் கொண்ட இறைவி, தாளம் முடியுங் காலத்தைக் கொண்ட சீரைத் தருவாளோ?
மிக்குச் செல்கிற போர்கள் பலவற்றையும் வென்று, அதன் வலிமையால் பகைவர் வெந்த சாம்பலை அணிந்து,
பாண்டரங்கம் என்னும் கூத்தினை ஆடும்போது, மூங்கில் போன்ற அழகும், அணை போன்ற மெல்லிய தோள்களும்,
வண்டுகள் ஒலிக்கும் கூந்தலும் உடைய இறைவி, தாளத்தின் இடையில் அமையும் தூக்கினைத் தருவாளோ?
கொலைக்குணமுடைய புலியைக் கொன்று அதன் தோலை அணிந்து, கொன்றை மாலை தோளில் அசைய,
அயன் தலையைக் கையில் ஏந்திக்கொண்டு காபாலம் என்னும் கூத்தினை ஆடும்பொழுது,
முல்லையைப் போன்ற முறுவலையுடைய இறைவி தாளத்தின் முதலில் அமையும் பாணியைத் தருவாளோ?
என்று சொல்லும்படியாக,
பாணி, தூக்கு, சீர் என்ற இவற்றை
மாட்சிமை பொருந்திய அணிகலன்களையுடைய இறைவி காக்க,
அன்பற்ற பொருளான எம்மிடத்தும் வந்து பொருந்தி நின்றாய்!