பத்துப்பாட்டு-பத்துக்கட்டுரைகள்


   1.இந்திரகோபம்
   2.இருகோல் குறிநிலை
   3.நீறு ஆடிய களிறும் வெண் கோயில் மாசும்
   4.மதுரைக்காஞ்சியில் வைகை
   5.பூப்போல் உண்கண்ணில் புலம்பு முத்து


   6.மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை
   7.சிறு புன் மாலை
   8.பானாள் என்பது நள்ளிரவு மட்டுமா?
   9.நெல்கின்டா என்னும் நெற்குன்றம்
   10.கொல்லை நெடும்வழி கோபம் ஊரவும்
 
பத்துப்பாட்டு - சிறப்புக்காட்சிகள்
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
                       10.கொல்லை நெடும்வழி கோபம் ஊரவும்

	

	பத்துப்பாட்டு நூல்களுள் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை என்னும் பாடல் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் என்ற புலவர் 
ஓய்மாநாட்டு நல்லியக்கோடனின் வள்ளல்தன்மையைப் புகழ்ந்து பாடுவது. அதுமட்டும் அல்ல – கண்ணுக்கினிய அழகிய காட்சிகளைக் 
கருத்தோவியமாகத் தீட்டும் நுட்பமான அழகிய வருணனைகளைக் கொண்டது. அப் பாடலில் வரும் முல்லை நிலத்தைப் பற்றிய ஓர் அழகிய 
வருணனையை நுணுகிப் பார்ப்போம். இதோ அந்த அடிகள்:

	பைந்நனை அவரை பவழங் கோப்பவும்
	கருநனைக் காயாக் கணமயில் அவிழவும்
	கொழுங்கொடி முசுண்டை கொட்டங் கொள்ளவும்
	செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவும்
	கொல்லை நெடுவழிக் கோபம் ஊரவும்
	முல்லை சான்ற முல்லையம் புறவின் – சிறு 164 – 169

	பச்சை அரும்புகளையுடைய அவரை பவழம் கோத்தாற்போன்று பூப்பவும், 
	கரிய அரும்பினையுடைய காயாமரங்கள் கூட்டமாக இருக்கும் மயில்களின் கழுத்துபோன்று கட்டவிழவும், 
	கொழுத்த கொடியை உடைய முசுட்டை கொட்டம் போன்ற பூக்களைத் தம்மிடத்தே கொள்ளவும், 
	செழித்த கொத்துக்களை உடைய காந்தள் கைவிரல் போலப் பூப்பவும், 
	கொல்லை நிலத்துக் கிடந்த நீண்ட வழிகளில் இந்திரகோபம் ஊர்ந்து திரியவும் – 

	என்ற முறையில் இவ் அடிகளுக்கு உரைகள் அமைந்துள்ளன.
	
		


பாடல் வரிகளையும், படங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, புலவரின் வருணனை உவமைகளாக இல்லாமல் உருவகங்களாகவே இருப்பதை உணரலாம். இருப்பினும், புலவரின் அடிகளையும், புலமையோர் உரைகளையும் பொருத்திப் பார்க்கும்போது. இரண்டு இடர்ப்பாடுகள் தோன்றுகின்றன. அவ் இரண்டுமே இறுதி அடியில் – கொல்லை நெடுவழிக் கோபம் ஊரவும் என்ற அடியில் - அமைந்தும் உள்ளன. கோபம் என்பதற்கு இந்திரகோபம் எனப் பொருள் கூறுகிறார் நச்சினார்க்கினியர். கோபம் – இந்திரகோபப் புழு என்பார் பெருமழைப் புலவர். இந்திரகோபம் என்பதற்கு தம்பலப்பூச்சி, cochineal என்ற பொருள் தருகிறது தமிழ்ப் பேரகராதி. cochineal என்பது Coccus cacti என்ற சப்பாத்துக் கள்ளியில் உள்ள புழு என்கின்றன விலங்கியல் அகராதிகள். Mexican red scale insect that feeds on cacti; the source of a red dye என்கிறது WordWeb. சுமார் 5 மி,மீ அளவுள்ள இந்த மிகச் சிறிய புழுக்கள் கள்ளியின் வரட்டி போன்ற பட்டைகளில் அடையடையாகக் காணப்படும். மற்றபடி இவை வழிகளில் ஊர்ந்து திரிவதில்லை என அறிகிறோம். எனவே கோபம் என்பது cochineal என்ற புழுவாக இருக்கமுடியாது. சங்க இலக்கியங்களில் மூதாய் அல்லது ஈயல் மூதாய் என்ற பூச்சியைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. இவை முல்லை நிலங்களில் மழைக்காலத்தில் பலுகிப் பெருகி ஊர்ந்து திரியும் என்றும் செய்திகள் கிடைக்கின்றன. அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய் - அகம் 139/13 வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப - அகம் 283/15 குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி - அகம் 374/12 என்ற அடிகள் இதனை விளக்கும். இவையும் தம்பலப்பூச்சி என்றே உரைகளில் குறிப்பிடப்படுகின்றன. Trombidium grandissimum என்ற பெயர் கொண்ட இந்த செந்நிறப்பூச்சி இன்றைக்கு வெல்வெட் பூச்சி என அழைக்கப்படுகிறது. இதன் சிறப்புப் பண்புகளில் ஒன்று - Trombidium grandissimum emerges after early season rains and can then be seen scouring the ground in large numbers. இங்கு early season rains என்பது நம் கார்கால மழைத் தொடக்கம் – முல்லைத்திணைக்கு உரியது. எனவே பாடலில் புலவர் குறிப்பிடுவது cochineal என்ற புழு வகை அல்ல என்றும் Trombidium grandissimum எனப்படும் வெல்வெட் பூச்சியே என்றும் அறியலாம். அடுத்து நம் ஐயத்தைக் கிளறுவது சொற்பொருள் அன்று – சொற்றொடர்ப் பொருள். கொல்லை நெடுவழிக் கோபம் ஊரவும் என்ற தொடருக்கு - கொல்லை நிலத்துக் கிடந்த நீண்ட வழிகளில் இந்திரகோபம் ஊர்ந்து திரியவும் – என்ற பொருள் பொருந்துமா என்று பார்ப்போம். இங்கு காணப்படும் ஆறு அடிகளில் முதல் நான்கு அடிகள் உருவகமாக அமைந்தவை. வரிசையாகப் பூத்திருக்கும் அவரைப்பூ கோக்கப்பட்ட பவழமாலையாக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. அவரைப் பூவின் நிறமும், பூக்கள் பூத்திருக்கும் ஒழுங்கும், பவழத்துக்கும், அவற்றால் கோக்கப்பட்ட மாலைக்கும் உவமையாய் ஆகிறது. இவ்வாறு நிறத்துக்கும் உருவத்துக்குமான உவமையில் உவம உருபு இல்லை. பவழம் கோப்பவும் என்பதற்குப் பவழம் போலக் கோப்பவும் என்ற பொருள் சொன்னாலும், அது ஒரு பவழமாலையாகவே உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. அடுத்த மூன்று அடிகளும் அவ்வாறே அமைந்துள்ளன. அவரைப் பூக்கள் பவழம் போல் கோத்திருக்க- காயாம் பூக்கள் மயில் கழுத்துப் போல் கட்டவிழ – முசுண்டைப் பூக்கள் கொட்டம் போல் கொண்டிருக்க- காந்தள் பூக்கள் கைவிரல் போல் பூத்திருக்க – அல்லது, அவரைப் பூக்கள் பவழமாய்க் கோத்திருக்க- காயாம் பூக்கள் மயில் கழுத்தாய்க் கட்டவிழ – முசுண்டைப் பூக்கள் கொட்டமாய்க் கொண்டிருக்க- காந்தள் பூக்கள் கைவிரலாய்ப் பூத்திருக்க – என்று இவற்றைப் படிக்கலாம். இந்த நான்கு காட்சிகளிலும் உருவத்துக்கும் நிறத்துக்குமான ஒப்புமைகளாகவும், உருவகங்களாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கு அடுத்த அடி – கொல்லை நெடுவழிகளில் கோபம் ஊர்ந்துதிரிய – என்பது, இதற்கு முந்தைய நான்கு அடிகளின் அமைப்பினின்றும் முற்றிலும் மாறுபட்டதாய்த் தோன்றுகிறது. வளம் நிறைந்த உருவகக் காட்சிகளின் கற்பனைத் திறனுக்கு முற்றிலும் மாறுபட்டதான ஒரு வரட்டுக் கூற்றாகவே இது அமைந்திருப்பதைக் காணலாம். எனவே இப்படிப்பட்ட ஒரு தட்டைக் கூற்றை (flat statement) இங்கு புலவர் அமைத்திருப்பாரா என்பது ஐயமே! எனவே இக் கூற்றும் ஒரு வளமான ஒப்புமை கொண்ட உருவகக் காட்சியாகவே அமைந்திருக்கும் என எதிர்பார்க்கலாம். கொல்லை என்பது புன்செய் நிலம் அல்லது முல்லை நிலம் என்ற பொருள்தரும். கம்பு விளையும் நிலத்தைக் கம்பங்கொல்லை என்கிறோம். இது பெரும்பாலும் செம்மண் பூமியாகத்தான் இருக்கும். இந்தச் செந்நிலங்களைப் பிரிக்கும் வரப்புகளுக்கு இடையே வளைந்து நெளிந்து செல்லும் ஒரு நீண்ட செம்மண் பாதையே கொல்லை நெடுவழி. கோபப்பூச்சிகள் ஊர்ந்து செல்வது போல இந்த நெடுவழியும் வளைந்து நெளிந்து செல்கிறதாம்! ------------------------------------------------ காந்தள் பூக்கள் கைவிரல் போல் பூத்திருக்க – கொல்லை நெடுவழி கோபம் போல் ஊர்ந்துசெல்ல – அல்லது கொல்லை நெடுவழி கோபம்ஊர்வது போல் செல்ல – என்று பொருள் கொண்டால் உருவத்துக்கும் நிறத்துக்கும் ஒப்புமை உள்ள மற்றோர் உருவகப் பொருத்தம் அமைவதோடு, முந்தைய நான்கு அடிகளின் உருவகக் காட்சிகளோடு ஒத்தமைந்து, இந்த ஐந்து அடிகளிலும் ஒரு தொடர்ச்சியான கருத்தமைவு இருப்பதையும் பார்க்கலாம். கொல்லைக் காடுகளுக்கே இடையே இருக்கும் அகன்ற, நெடிய வழி, கார்கால மழையினால் இரு மருங்கிலும் புதர்கள் வளர்ந்து மண்டிக்கிடக்க, அகலமான பாதை குறுகிய ஒற்றையடிப் பாதையாய் மாறிப்போய் கோபம் ஊர்வதுபோல் ஆகிவிட்டது என்கிறார் புலவர் எனலாம். அல்லது, கோபம் என்பதை இந்திரகோபப் பூச்சியின் நிறத்துக்கு ஆகிவருவதாகக் கொள்ளலாம். கோபத்தன்ன தோயாப் பூந்துகில் – திரு.15 என்று வரும் திருமுருகாற்றுப்படை அடிக்கு, இந்திரகோபத்தின் சிவப்பு நிறத்தைப் போன்ற சிவப்புப் பூந்துகில் என்றுதான் பொருள்கொள்ளப்படுகிறது. வளைந்து வளைந்து செல்லும் சிவப்புத் தடம் இந்திரகோபப் பூச்சியின் நிறமாய் நெளிந்து நெளிந்து செல்கிறது என்று புலவர் கூறுவதாகக் கொள்ளலாம். நெடுவழி எப்படி ஊர்ந்து செல்லும்? இன்றைக்கும் நாம் ஒருவரிடம் வழி கேட்கும்போது, “இந்தப் பாதைவழியே சென்றால் எங்கே போகலாம்?” என்றா கேட்கிறோம்? இல்லையே. மாறாக, “இந்தப் பாதை எங்கே போகிறது?” என்றுதானே கேட்கிறோம். நம் பேச்சு வழக்கே இங்கு இலக்கிய வழக்காகவும் அமைந்துள்ளது. www.wisegeek.com