பத்துப்பாட்டு-பத்துக்கட்டுரைகள்


   1.இந்திரகோபம்
   2.இருகோல் குறிநிலை
   3.நீறு ஆடிய களிறும் வெண் கோயில் மாசும்
   4.மதுரைக்காஞ்சியில் வைகை
   5.பூப்போல் உண்கண்ணில் புலம்பு முத்து


   6.மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை
   7.சிறு புன் மாலை
   8.பானாள் என்பது நள்ளிரவு மட்டுமா?
   9.நெல்கின்டா என்னும் நெற்குன்றம்
   10.கொல்லை நெடும்வழி கோபம் ஊரவும்
 
பத்துப்பாட்டு - சிறப்புக்காட்சிகள்
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
                                              5.பூப்போல் உண்கண்ணில் புலம்பு முத்து

	
	பத்துப்பாட்டு நூல்களுள் ஐந்தாவதாக இடம்பெற்றுள்ள நூல் முல்லைப்பாட்டு.  இந்நூல், 103 அடிகளைக் கொண்டு 
பத்துப்பாட்டு நூல்களில் மிகச் சிறிய பாடலாக அமைகிறது. இதைப் பாடியவர் காவிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்தவர். ஒரு பொன் 
வாணிகருக்கு மகனாகப் பிறந்த இவர், பூதன் என்னும் பெயர் கொண்டவர். எனவே, இவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் 
மகனார் நப்பூதனார் எனப்படுகிறார். இப் பாடல் முல்லைத்திணையைச் சேர்ந்த ஓர் அகப்பாடல் ஆகும். இப்பாடலில், கார்கால மழையில்
தழைத்துச் செழித்த காயா, கொன்றை, வெண்காந்தள் போன்ற செடி, கொடி, மரங்களில் பூத்துக் குலுங்கும் மலர்கள் அழகுடன் 
விவரிக்கப்படுகின்றன. அகன்ற புன்செய்க் காடுகளில் மானினங்கள் துள்ளி விளையாட, மேகக் கூட்டங்கள் வானில் மிதந்து திரியும் 
காட்சி ஒரு குறும்படம் போல் கண் முன் ஓட்டப்படுகிறது. மாலைப் பொழுதில், மங்கையர் கைகூப்பித் திருமாலை வணங்கும் 
காட்சியும், மேயச் சென்ற பசுவை எண்ணி ஏங்கிக் குரல்கொடுக்கும் கன்றுகளை இடைச்சியர் தேற்றும் காட்சியும், போர்மேல் சென்ற 
தலைவனின் வரவை எண்ணித் தலைவி கண்களில் நீர் கோக்கக் காத்திருக்கும் காட்சியும் சொல்லோவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. 
மொத்தத்தில், ஒரு முல்லை ஒழுக்கப் பாடல் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கு இலக்கணமாக அமைந்தது போல் இப்பாடல் 
விளங்குகிறது.
	முல்லைத் திணையின் உரிப்பொருள் இருத்தலும் இருத்தல் நிமித்தமும் என்பது. அதாவது ஏதோ ஒரு காரியத்தை 
முன்னிட்டுத் தலைவன் பிரிந்து செல்ல, அவன் வரும் காலம் வரை தலைவி பொறுமையாகக் காத்திருத்தல். இவ்வாறு 
காத்திருக்கும்போது தலைவி தலைவன் பிரிவை எண்ணித் துயரம்கொண்டால் அது நெய்தல் திணை எனப்படும். அதன் உரிப்பொருள் 
இரங்கலும் இரங்கல் நிமித்தமும். இரங்கலென்பது துயரப்படுவது. இப்பாடலில் புலவர் கூறியிருக்கும் ஓர் அடி முல்லைத்திணையின் 
இலக்கணத்தை மீறுவதாகச் சிலர் எண்ண இடம்கொடுக்கிறது. அது பற்றி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
	அது ஓர் அந்திப்பொழுது. கடுமையான கட்டுக்காவலையுடைய ஒரு பழமையான ஊர் அது.  திடீரென்று, அகன்ற இந் 
நிலப்பரப்பையே வளைப்பது போல, அடிவானத்தில் இருந்து கருமேகங்கள் எழுகின்றன. அவை மலைமுகடுகளை உரசிக்கொண்டு  
வேகமாக மேலெழுந்து, ‘பட பட'- என்று மழையைப் பொழிந்து தள்ளுகின்றன. சிறிது நேரத்தில் மழை ஓய்ந்துபோக, ஒரு மாளிகையின்
முன் வயதான பெண்டிர் சிலர் தோன்றுகின்றனர். அவர்கள் கைகளில் ஒரு நாழி. அதில் நெல்லும், முல்லை மலரும் உள்ளன. 
அவற்றைத் தெருவில் தூவிய பின், கைகளைத் தொழுதவாறு எதற்கோ காத்திருக்கின்றனர். அப்பொழுது, சிறிய கயிறுகளால் 
கட்டப்பட்ட இளங்கன்றுகளை ஓட்டிக்கொண்டு ஓர் இடைப்பெண் வருகிறாள். திடீர் மழையினால் ஏற்பட்ட குளிரினால் 
நடுங்கிக்கொண்டிருந்த தன் தோள்களின் மீது கைகளை மாற்றிப்போட்டுக் கட்டிக்கொண்டு இருக்கிறாள் அவள். பசியினால் வாடிப்போய்,
தாய்ப்பசுவிற்காக ஏங்கிய வண்ணம் அந்தக் கன்றுக் குட்டிகள் அங்குமிங்கும் அலைபாய்ந்துகொண்டிருக்கின்றன, ‘இன்னும் கொஞ்ச 
நேரத்தில் உம் தாயர் வந்துவிடுவர்' என்று அந்தக் கன்றுகளிடம் ஆறுதலாய்க் கூறியவண்ணம், அந்த இடைமகள் அங்கு நிற்கும் 
முதிய பெண்களைக் கடந்துபோகிறாள். இதைக் கேட்ட அந்த முதிய பெண்கள் முகத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. ‘வந்துவிடுவர்' என்ற 
அந்த இடைமகள் சொல்லைத் தெய்வ வாக்காகவே அவர்கள் எடுத்துக்கொள்கின்றனர். இந்த விரிச்சிச் சொல்லுக்காகத்தான் அவர்கள் 
இத்தனை நேரம் காத்துக்கொண்டிருந்தனர். மனநிறைவுடன் அவர்கள் மாளிகைக்குள் செல்லுகின்றனர். உள்ளே அந்த மாளிகைத் 
தலைவி இருக்குமிடத்திற்கு அவர்கள் போகின்றனர். அத் தலைவியோ மனம் கலங்கிப்போய் அமர்ந்திருக்கிறாள். “தலைவியே, 
இப்பொழுதுதான் ‘வந்துவிடுவர்' என்ற நல்ல சொல்லைக் கேட்டு வந்திருக்கிறோம். போரின் நிமித்தமாகச் சென்றிருக்கும் நம் தலைவர், 
பகைவரை வென்று, அவர் தரும் திறைப்பொருள்களுடன் சீக்கிரம் வந்துவிடுவார், நீ உனது மனத்தடுமாற்றத்தையும், துன்பத்தையும் 
களைவாய்” எனத் திரும்பத் திரும்பக் கூறுகின்றனர். இருந்தாலும் தலைவியின் மனம் அவர்கள் கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. 
பூப்போன்ற, மைதீட்டிய அவள் கண்களில் முத்துப் போல் கோத்த ஒரு துளிக்கண்ணீர் கீழே உதிர்கிறது.

-------- ---------- ----------- கலுழ்சிறந்து,
பூப்போல் உண்கண் புலம்புமுத்து உறைப்ப - முல். 22-23

	என்ற இந்த அடியே சிக்கலுக்குக் காரணம் என்று சிலர் கூறுவர்.

	கார்காலத்தில் திரும்ப வருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் இன்னும் வரவில்லை. வேனில்காலத் தொடக்கத்தில், 
அவன் போர்மேற் சென்றிருக்கிறான். போர் முடிந்தால்தான் திரும்பவேண்டும் என்பதில்லை. கார்காலம் தொடங்கிவிட்டால் போர் எந்த 
நிலையில் இருந்தாலும் அதனை முடித்துக்கொண்டு அவரவர் நாடு திரும்பவேண்டும் என்பது அன்றைய தமிழ் மன்னர்களிடையே 
இருந்த ஓர் எழுதப்படாத சட்டம். இன்றைக்கு truce என்கிறார்களே, அது போல்தான் அதுவும். அடுத்து வரும் கூதிர்காலத் தொடக்கத்தில் 
தேவைப்பட்டால் மீண்டும் போரைத் தொடங்கலாம். எனவேதான் தலைவியின் எதிர்பார்ப்பு அதிகமாகிறது. இதுவரை முடிவுக்குவராத 
போரை மேலும் மும்முரமாக்கி மறுநாள் எப்படியும் போரை வெற்றிகரமாக முடித்துவிட்டு வெற்றிவாகைசூடி ஊர் திரும்பவேண்டும் 
என்று அந்த மன்னன் முந்தின நாள் நடுநிசி வரை தீவிரமாகச் சிந்தித்துக்கொண்டிருக்கிறான். மழை என்ன நாள் குறித்துக்கொண்டா 
வருகிறது? ஒவ்வோர் ஆண்டும் சற்று முன்னே பின்னே வரும். இந்த ஆண்டு ஒருநாள் முந்தி வந்துவிட்டது போலும். ஊருக்குள் 
முதல் மழை. முதல் மழையே வெளுத்துவாங்கிவிட்டது. ஒரே நாளில், குளிரைத் தாங்கமாட்டாமல் இடைப்பெண்கள் தங்கள் 
கைகளைத் தோள்களில் குறுக்காகப் போட்டு உடம்பை மறைத்துத் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டிய அளவுக்குப் பூமி 
குளிர்ந்துவிட்டது. அந்த நாளின் பகற்பொழுதும் முடிந்துவிட்டது. தலைவனைக் காணோம். பணிப்பெண்கள் கூறும் ஆறுதலான 
சொற்களால் மனம் தேறவில்லை. கண்களிலிருந்து ஒரு துளிக் கண்ணீர் முத்துப்போல் உதிர்கிறது. 
	இந்த இடத்தில் நச்சினார்க்கினியர் பிடித்துக்கொண்டார். அவர் மிகச் சிறந்த உரைகாரர்தான். எனினும் சிலர் ‘நூல் பிடித்தபடி' 
என்பார்களே, அதுபோல் முல்லை - நெய்தல் ஆகிய திணைகளின் வரையரைகளை இறுகப் பிடித்துக்கொண்டார். முல்லைத்திணை 
என்பது பிரிந்துசென்ற தலைவன் திரும்ப வருமளவும் ஆற்றியிருப்பது - அதாவது, ‘இருத்தலும் இருத்தல் நிமித்தமும்' ஆகும்; ஆனால் 
இங்கே தலைவி ஆற்றமாட்டாமல் கண்ணீர் விடுகிறாள்; எனவே இது ‘இரங்கலும் இரங்கல் நிமித்தமுமான' நெய்தல் திணை எனப்படும்
என்ற முடிவுக்கு வருகிறார். எனினும், ‘நான் சட்டத்தை வளைக்கமாட்டேன் - சாட்சியை வளைப்பேன்' என்பது போல் பாட்டையே 
வளைக்க ஆரம்பிக்கிறார். ஓரிடத்தில் வரும் பாடல் அடியை வேறோர் இடத்தில் வைத்துப் பொருள் கொள்கிறார்.  ‘ஆற்றொழுக்காகச் 
செல்லும்' பாட்டின் அடிகளையும் சொற்களையும் அக்கக்காகப் பிரித்து, அவற்றை கீழ்மேலாக அடுக்கி, இது ‘இரங்கல்' அல்ல, 
‘இருத்தலே' என்று தீர்ப்புக் கூறுகிறார். இதனை, மறைமலை அடிகள், “பொற்சரிகை பின்னிய நற்பட்டாடையினைத் துண்டு துண்டாகக் 
கிழித்துச் சேர்த்துத் தைத்து அவம்படுவார் போல' என்று நையாண்டி செய்கிறார். 
	பாட்டினுக்கு நேரான பொருள் கொள்ளும் வழியிலேயே ‘இது முல்லையே' என்று கூறலாம் என்று அடிகளாரும் ஏனைய 
உரைகாரரும் உரைக்கிறார்கள். அவர்கள் பாட்டின் மற்ற அடிகளை எடுத்துக்காட்டுவர். 

	நீடு நினைந்து தேற்றியும் ஓடுவளை திருத்தியும் - முல். 82

என்று பின்னர் வரும் அடியினை மேற்கோள் காட்டுவர். அதாவது 23-ஆம் அடியில் தலைவி விடும் ஒரு துளிக் கண்ணீர் தலைவனது 
பிரிவினால் ஏற்பட்ட துயரத்தின் விளைவு அல்ல. அவனது வருகை தாமதம் ஆகிக்கொண்டு செல்வதனால் அப்போதைக்குப் புதிதாக 
எழுந்த துயரத்தின் விளைவு என்று உரையாசிரியர் பெருமழைப்புலவர் கூறுவார். எனினும் அவள் தன்னைத் தேற்றிக்கொள்கிறாள் 
என்பதைப் புலவர் பின்னர் கூறுவதையும் (அடி - 82) அவர் சுட்டிக்காட்டுவார். 
	இதுமட்டுமல்ல, இதற்குச் சான்றாக முல்லைத்திணையைச் சேர்ந்த ஓர் அகப்பாடலையும் பெருமழைப்புலவர் 
சுட்டிக்காட்டுவார்.

	நம் நோய் அறியா அறனிலாளர்
	இந்நிலை களைய வருகுவர்கொல் என
	ஆனாது எறிதரும் வாடையொடு
	நோனேன் தோழி என் தனிமையானே! - அகம் 294/13-16

இதன் பொருள்:

	நமது துன்பத்தினை அறியாத அறமற்ற நம் தலைவர்
	நம்முடைய இந்தத் துன்பமான நிலையை நீக்க வருவாரோ என்று எண்ணி
	கொஞ்சமும் குறையாமல் ஓங்கி வீசும் வாடைக்காற்றுடன்
	என் தனிமையைப் பொறுக்கமுடியாதவளாய் இருக்கின்றேன்,தோழியே!

என்ற தலைவியின் கூற்றும், அவளது பொறுக்கமுடியாத இறுதி நிலையைக் காட்டுவதாக அமைகிறது என்பார் பெருமழைப்புலவர்.

வருவாரா, வரமாட்டாரா என்று பெருகிக்கொண்டே செல்லும் ஏக்கம் -- இனியெங்கே வரப்போகிறார் என்று குறைந்துகொண்டே செல்லும்
பொறுமை
வந்துவிடமாட்டாரா என்று உயர்ந்துகொண்டே செல்லும் ஆர்வம் -- இன்னும் வரவில்லையே என்று கரைந்துகொண்டே வரும் 
உறுதிப்பாடு
அதிகரித்துக்கொண்டே வரும் ஆற்றாமை - தேய்ந்துகொண்டே வரும் நம்பிக்கை
கூடிக்கொண்டே வரும் மன உளைச்சல் - தளர்ந்துகொண்டே வரும் தன்னம்பிக்கை
கண்களைக் கடந்துவரத் துடிக்கும் கண்ணீர்த்துளி - அதைக் கட்டுக்குள் அடக்கிவிடத் துடிக்கும் கண்ணியம்

இவை சந்திக்கும் இடத்தில் நிற்கிறாள் நம் தலைவி. இந்த விளிம்பு நிலையிலிருக்கும் மனநிலையில் - கரணம் தப்பினால் மரணம் 
என்ற நிலையில் - அடியோடு தகர்ந்துவிடும் நிலையிலிருந்து (brink of collapse) தன்னை அடக்கத்துடன் காத்துக்கொள்ளும் உரம் 
வாய்ந்தவளாகத் (ability to restrain) தலைவி காணப்படுகிறாள்.  
	மேலும், தலைவி முல்லை இலக்கணத்தை மீறவில்லை என்பதற்கான சான்று 

	’பூப்போல் உண்கண் புலம்புமுத்து உறைப்ப’ 

என்கிற அதே அடியிலேயே இருக்கிறது. ஏறக்குறைய இதே மையக்கருத்தைக் கொண்டதுதான் நெடுநல்வாடை என்னும் இன்னொரு 
பத்துப்பாட்டு நூலும். ஆனால் அங்குத் தலைவனைப் பிரிந்து வருந்தும் அரசியாகிய தலைவி, தன் உயர்ந்த பட்டாடைகளை நீக்கிப் 
பருத்தி அணிந்து, அணிகலன்களை எல்லாம் களைந்து, வறிய கழுத்தும் காதும் கொண்டவளாய், பொன்வளையல்களை நீக்கிச் சங்கு 
வளையல்கள் அணிந்து பொலிவிழந்திருக்கிறாள் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் முல்லைப்பாட்டுத் தலைவியின் கண்கள் 
’பூப்போல் உண்கண்’ எனப்படுகின்றன. நெய்தல் நிலத் தலைவியாக அவள் அழுது அரற்றிக்கொண்டிருந்தால் அவளின் கண்கள் 
பூப்போலவா இருக்கும்? அழகு, புதுமை, பொலிவு என்ற அத்தனை பண்புகளும் கொண்டவை அன்றலர்ந்த பூக்கள். தலைவன் 
வந்துவிடுவான் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த கண்கள் அன்றலர்ந்த பூக்களாய் அப்பொழுது வரை சிரித்துக்கொண்டிருக்கின்றன. 
இதுவே முல்லை ஒழுக்கத்துப் பெண்களின் இயல்பு.
	மேலும், உண்கண் என்பது மையுண்ட கண்கள் என விரியும். தலைவனின் பிரிவை இத்தனை நாளும் பொறுத்திருந்த 
தலைவிக்கு அன்று காலையில் அவள் உள்மனது கூறியிருக்கவேண்டும் - அன்று மாலை தலைவன் திரும்பி வந்துவிடுவான் என்று. 
எனவே மலர்ந்த கண்களுடன் பகல் முழுக்கப் பரபரப்பாய்த் திரிந்துகொண்டிருந்த அவள், மாலை நெருங்கியதும் தன்னை 
அலங்கரித்துக்கொண்டு கண்களுக்கு மையிட்டுத் தயாராக இருக்கிறாள். மாலையும் வந்து, தலைவனின்றிக் கழிந்து, இருட்ட 
ஆரம்பித்த பின்னர் அவள் மனம் கலங்குகிறாள் (கலுழ் சிறந்து). பூப்போன்ற அவள் மையிட்ட கண்களில் நீர் கோத்துநிற்கிறது. 
பொங்கிவரும் கண்ணீரை அடக்கிக்கொண்டு இருக்கிறாள். மனம் அடக்குகிறது; ஆனால் கண்ணில் ஏற்கனவே நிரம்பிவிட்ட நீர் அவள் 
அடக்குவதையும் மீறி ஒரே ஒரு துளி முத்துப்போல்(புலம்பு முத்து) திரண்டு ‘டொப்' என்று விழுந்துவிடுகிறது. ‘பொறுத்திரு' என்று 
மனம் சொன்னாலும், பொறுக்கமாட்டாத கண்ணீர் ஒரு துளி வெளிவந்துவிடுகிறது - ‘Spirit is willing, but flesh is weak' என்பதைப் 
போல. புலம்பு முத்து என்பது தன்னந்தனியான முத்து அல்லது ஒரே ஒரு முத்து எனப் பொருள்படும். 

	புள் ஆர் பெண்ணை புலம்பு மடல் செல்லாது - பெரும் 314

என்ற அடியில் புலம்பு மடல் என்பது தனித்து நிற்கும் ஒரே ஒரு மடல் எனப்பொருள் படும். 
	எனவே, இங்கு தலைவியின் நோக்கம் ஆற்றியிருப்பதுவே எனக்கொண்டு இது முல்லைப்பாடலே என்றும், புலவர் 
முல்லை ஒழுக்கத்தை மீறவில்லை என்றும் முடிவுக்கு வரலாம்.