பத்துப்பாட்டு-பத்துக்கட்டுரைகள்


   1.இந்திரகோபம்
   2.இருகோல் குறிநிலை
   3.நீறு ஆடிய களிறும் வெண் கோயில் மாசும்
   4.மதுரைக்காஞ்சியில் வைகை
   5.பூப்போல் உண்கண்ணில் புலம்பு முத்து


   6.மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை
   7.சிறு புன் மாலை
   8.பானாள் என்பது நள்ளிரவு மட்டுமா?
   9.நெல்கின்டா என்னும் நெற்குன்றம்
   10.கொல்லை நெடும்வழி கோபம் ஊரவும்
 
பத்துப்பாட்டு - சிறப்புக்காட்சிகள்
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
                                              9.நெல்கின்டா என்னும் நெற்குன்றம்

	

	சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட மூவேந்தரும் கடல்வழி வாணிபத்தில் மிகச் சிறந்தவர்களாக விளங்கினர். 
அவருள் சோழருக்குக் காவிரிப்பூம்பட்டினம் என்னும் பூம்புகார் துறைமுகப்பட்டினமாக இருந்தது. இது காவிரி கடலிற் கலக்குமிடத்தில் இருந்தது. 
சேரருக்குத் தொண்டி, முசிறி என்ற இரு துறைமுகப்பட்டினங்கள் இருந்தன. இவை மேற்குக் கடற்கரைப்பகுதியில் இருந்தன. 
பாண்டியருக்குக் கொற்கை துறைமுகப்பட்டினமாக இருந்தது. வைகை நதி கடலிற் சேருமிடத்தில் உள்ள அழகன்குளம் என்ற ஊரில் அண்மையில் 
நடந்த அகழ்வாய்வுகளில் ரோமானிய நாணயங்களும் மட்பாண்டங்களும் கிடைத்தன. எனவே அதுவும் பாண்டியரின் ஒரு துறைமுகப் பட்டினமாக 
இருந்திருக்கவேண்டும். இவை இரண்டுமே கிழக்குக் கடற்கரைப் பக்கம் இருக்கின்றன. இவற்றைத் தவிர பாண்டியருக்கு மேற்குக் கடற்கரைப் 
பக்கத்திலும் ஒரு கடற்கரைப் பட்டினம் இருந்திருக்கிறது. அதைப் பற்றிய ஆய்வுகளே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

	சங்க காலப் பாண்டியருள் மிகவும் புகழ்பெற்றவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்பவனாவான். 
இவன் இளவயதானவனாய் இருந்தபோதே, சேர சோழ மன்னரும், அவருடன் சேர்ந்து ஐந்து குறுநிலமன்னர்களுமாக எழுவர் இவனுடன் 
போர்தொடுத்தனர். அவர்களை முறியடித்து விரட்டிச் சென்று தலையாலங்கானம் என்ற இடத்தில் பெரும் போரிட்டு எழுவரையும் தோற்கடித்து, 
தமிழகம் முழுவதையும் ஒரு குடைக்கீழ்க் கொண்டுவந்து பேரரசனாக இவன் ஆண்டுவந்தான். அதன் பின் தன் முன்னோர் வாழ்ந்த சிறிய 
அரண்மனையை முழுதுமாக இடித்துவிட்டு, ஒரு பேரரசனுக்குரிய தகுதியை நிலைநாட்ட 
‘பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து’ (நெடு. 78) ஒரு மிகப் பெரிய மாளிகையைக் கட்டியதாக நெடுநல்வாடை கூறுகிறது.
 
	இந்தப் பாண்டியன் நெடுஞ்செழியனின் சிறப்புகளை மதுரைப் புலவர் மாங்குடிமருதனார் மதுரைக் காஞ்சி என்ற தலைப்பில் 
ஒரு பெரும்பாடலாகப் பாடியுள்ளார். அதில் இப் பாண்டியன் பெற்ற போர்வெற்றிகளை வரிசையாகக் கூறுகின்றபோது, 
இவனது தலையாலங்கானத்துப் போர் வெற்றியினை இரண்டாவதாகவே புலவர் கூறுகிறார். இந்தப் போருக்கு முன்னர் சேரமன்னர்க்குரிய 
குட்டநாட்டுப் பகுதியில் பல குறுநிலமன்னர்களை இவன் வெற்றிகொண்டதாகப் புலவர் கூறுகிறார். (பல் குட்டுவர் வெல் கோவே – மது.105) 
இதன் உச்சகட்டமாக அப் பகுதியில் இருந்த ஒரு கடற்கரைப் பட்டினத்தையும் இவன் கைப்பற்றியதாகப் புலவர் கூறுகிறார்.

	பொன் மலிந்த விழுப்பண்டம்
	நாடு ஆர நன்கு இழிதரும்
	ஆடு இயல் பெரு நாவாய்
	மழை முற்றிய மலை புரைய
	துறை முற்றிய துளங்கு இருக்கை
	தெண்கடல் குண்டு அகழி
	சீர்சான்ற உயர் நெல்லின்
	ஊர் கொண்ட உயர் கொற்றவ ( மது. 81-88)

	பொன் மிகுதற்குக் காரணமான சீரிய சரக்குகளை
	நாட்டிலுள்ளோர் நுகரும்படி நன்றாக இறக்குதலைச் செய்யும்
	அசையும் இயல்பினையுடைய பெரிய மரக்கலங்கள் -
	மேகங்கள் சூழ்ந்த மலையைப் போல
	துறைகள் சூழ்ந்த - அசைகின்ற இருக்கையினையும், 					85
	தெளிந்த கடலாகிய ஆழ்ந்த அகழியினையும்,
	சிறப்புக்கள் அமைந்த உயர்ந்த நெல்லின் (பெயரைப்பெற்ற)
	ஊரைக் கொண்ட உயர்ந்த வெற்றியை உடையவனே -

	இது இப் பாண்டியன் பெற்ற முதல் வெற்றியாகும். இந்த ஊர் கடற்கரைப் பட்டினமாயினும் வயல்வெளிகள் நிறைந்த ஊர் என்றும் 
இந்த வெற்றியைக் கொண்டாடப் பாண்டியன் அங்கேயே போர்முனையில் வெற்றியைப் பாடும் பொருநருக்குப் பெரும் களிறுகளை வழங்கித் 
தலையில் பொற்றாமரையையும் சூடினான் என்று மதுரைக் காஞ்சி கூறுகிறது (89 – 105). 
	எனவே இது பாண்டியனின் மிகச் சிறப்பான வெற்றிகளுள் ஒன்று என்பதில் ஐயமில்லை.

	சங்ககாலத்தில் பொனீசியரும், பாரசீகத்தாரும், எகிப்தியரும், கிரேக்கரும் ரோமரும் மேலை நாடுகளிலிருந்து கடல்வழியாக 
தமிழகத்து மேற்குக் கடற்கரையில் வந்திறங்கினர். தமிழ் இலக்கியங்கள் இவர்களைப் பொதுவாக யவனர்கள் என்று குறிக்கிறது. தமிழகத்தில் 
கிடைக்கும் முத்து, விலையுயர்ந்த கற்கள், மயிலிறகு போன்றவற்றையும், மிளகு, லவங்கம் போன்ற வாசனைப்பொருள்களையும் 
ஏற்றிக்கொண்டுபோக இவர்கள் கப்பலில் வந்து மேற்குக் கடற்கரையில் இறங்கி, உள்நாடுகளுக்கு வந்து வணிகம் செய்ததாக வரலாறு 
கூறுகிறது. தமிழகப் பொருள்களை வாங்க அவர்கள் தங்கள் நாட்டிலிருந்து பெருமளவு தங்கத்தைக் கொண்டுவந்தார்கள் என்றும் அறிகிறோம். 
இதனையே ‘பொன் மலிந்த விழுப்பண்டம் நாடு ஆர நன்கு இழிதரு’-வதாகப் புலவர் பாடுகிறார். 

	இந்த ஊரின் பெயரை நேரிடையாகக் கூறாமல் புலவர் நெல்லின் ஊர் என்று கூறுகிறார். 
இதனை நெல்லூர் என்றும் சாலியூர் என்றும் உரைகாரர்கள் கூறுவர். இருப்பினும் அது எங்குளது என்று கண்டறியமுடியவில்லை.

	தமிழகத்தின் தொன்மைச் சான்றுக்குப் பல புறச்சான்றுகள் உள்ளன. அவற்றுள் தமிழகத்தைப் பற்றி மேனாட்டு வரலாற்றாசிரியர்கள், 
பயணநூலாசிரியர்கள் போன்றோர் எழுதிவைத்துள்ள குறிப்புகள் முக்கியமானவை. 

	மெகஸ்தனீசின் (கி.மு 350 – கி.மு 290) இண்டிகா என்னும் நூலில் தற்போது கிடைக்கும் பகுதிகளில் 
தமிழகத்தைப் பற்றிய செய்திகள் வெகுவாக இல்லை. மெகஸ்தனிஸ் மதுரைக்கு வந்திருந்தார் என்ற செய்திக்குச் சான்றுகள் இல்லை. 

	ஆனால் அவரை அடுத்து ஸ்ட்ராபோ (Strabo) என்ற கிரேக்க வரலாற்றாசிரியர் (கி.மு 64 – கி.பி 24) 
தன்னுடைய ஜியாக்ரபிகா (Geographica) என்ற நூலில் பாண்டியன் அல்லது போரஸ் என்ற ஒரு இந்திய மன்னன் 
அகஸ்டஸ் சீசர் (கி.மு 63 – கி.பி 14) என்ற ரோமப்பேரரசனுக்கு ஒரு தூதுவனை அனுப்பினான் என்ற செய்தியைத் தெரிவிக்கிறார். 

	ஃப்லோரஸ் (Florus) என்ற மற்றொரு வரலாற்றாசிரியர் சூரியனுக்கு நேர் கீழே வசிக்கும் இந்தியர்கள் 
முத்துக்களையும், விலையுயர்ந்த கற்களையும் அகஸ்டஸ் பேரரசனுக்குப் பரிசாக அனுப்பினர் என்று தன் நூலில் 
(The Epitome of Roman History) குறிப்பிடுகிறார். 

	எனவே அந்த மன்னன் ஒரு பாண்டிய அரசனே என்பது தெளிவாகிறது. (பார்க்க – குறிப்பு – 1)

	இவன் நம்முடைய தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனே என்று நம்ப இடமிருக்கிறது. இதைப் பின்னர்க் காண்போம்.

	அடுத்து, பெரிப்ளூஸ் (Periplus) என்ற ஒரு பயணநூல் பாண்டியர்களைப் பற்றிப் பேசுகிறது. 
இந்த நூலை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை. இது எழுதப்பட்ட காலமும் சரியாகத் தெரியவில்லை. எனினும் இதன் காலம் கி.பி 40 50 க்குள் 
இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். இந்த நூல் தமிழக மேற்குக் கடற்கரையில் அன்றிருந்த முக்கிய துறைமுகப் பட்டினங்களைப் பற்றிய 
தகவல்களைக் கொண்டுள்ளது. இதில் தொண்டி, முசிறி ஆகிய சேரர் துறைமுகப் பட்டினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 
முசிறிக்குச் சற்றுத் தெற்கில் சுமர் 100 கி.மீ தொலைவில் உள்ள ஓர் ஆற்றின் உட்பகுதியில் 
நெல்கின்டா (Nelcynda or Nelkynda) என்று அழைக்கப்படும் ஒரு துறைமுகப்பட்டினம் இருந்ததாகவும், 
அது உள்நாட்டில் வெகுதொலைவில் உள்ள மதுரை என்ற நகரை ஆளும் பாண்டியன் என்றொரு மன்னனின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் 
பெரிப்ளுஸ் கூறுவது கூர்ந்து நோக்கத்தக்கது. மேலும் தொண்டி முசிறி ஆகிய துறைமுகங்களுக்கருகே கடற்கொள்ளைக்காரரின் ஆபத்து நேரக்கூடும் 
என்றும், நெல்கின்டா மிகவும் பாதுகாப்பானது என்றும் அந்நூல் கூறுகிறது. (பார்க்க – குறிப்பு – 2)

	பெரிப்ளுசை அடுத்து தமிழகத்தைப் பற்றிய தகவல் தெரிவிப்பவர் மூத்த பிளினி (Plini the Elder) (கி.பி.23 – கி.பி 79) 
என்ற உரோம வரலாற்றாசிரியர். இவர் தன்னுடைய இயற்கை வரலாறு (Natural History) என்ற நூலில் 
நெல்கின்டா, மதுரை, பாண்டியன் ஆகிய பெயர்களைக் குறிப்பிட்டு பெரிப்ளுஸ் கூறும் செய்திகளை உறுதிப்படுத்துக்கிறார்.  (பார்க்க – குறிப்பு – 3)

	ஆனால் இவருக்கும் பின் வந்த  தாலமி (கி.பி 90 – கி.பி 168) என்ற கிரேக்க வரலாற்றாசிரியர் 
தன்னுடைய ஜியாக்ரபிகா என்ற நூலில் நெல்கின்டா என்ற இந்த ஊர் ஆய் அரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததாகக் கூறுகிறார். 

	இந்த ஆய் அரசர்கள் பொதிகைமலைப் பகுதியை ஆண்டவர்கள் எனத் தெரிகிறது. எனவே பொதிமலைப் பகுதியில் மேற்குமலைத் தொடரை 
ஊடுறுவிக்கொண்டு மேற்குக் கடற்கரைப் பட்டினமான நெல்கின்டாவுக்கு ஒரு வணிகப் பாதை இருந்திருக்கவேண்டும் என்பது தெளிவாகிறது. 
நெல்கின்டாவில் இறக்குமதியான மேலைநாட்டுப் பொருள்கள் இந்த வழியாகப் பாண்டிய நாட்டுக்கு வந்தன என்றும், பாண்டியநாட்டுப் பொருள்கள் 
இந்த வழியாக மேலைநாடுகளுக்கு ஏற்றுமதி ஆயின என்றும் கூறலாம். (பார்க்க – குறிப்பு – 4)

	இப்பொழுது மீண்டும் மதுரைக்காஞ்சிக்கு வருவோம். நெடுஞ்செழியன் வெற்றி கொண்ட நெல்லின் ஊர் என்பது முதலில் 
ஒரு மேற்குக் கடற்கரைப் பட்டினமாகவே இருக்கவேண்டும். அது ஒரு கடற்கரைப் பட்டினம் என்பதைப் பாடலே கூறுகிறது. 
அது கொற்கையாகவோ, அழகன்குளமாகவோ இருக்கமுடியாது. கொற்கைப் பட்டினம் சிலவேளைகளில் தென்பாண்டி மன்னரின் கட்டுப்பாட்டில் 
இருந்திருப்பினும், இதே பாடலில் பின்னர் புலவர் ‘நல் கொற்கையோர் நசைப் பொருந’ (மது.138) என்று கூறுவதால் முதலில் கூறப்பட்டது 
கொற்கை அல்ல என்பது தெளிவு. மேலும் அது நெல்லுக்குப் பெயர்போனதும் அல்ல. அடுத்து அழகன்குளம் என்பது இன்றைய இராமநாதபுரப்பகுதி. 
அது என்றைக்குமே பாண்டியர் வசமே இருந்துள்ளது. எனவே அதனை வெல்லவேண்டிய நிலை பாண்டியனுக்கு இல்லை. எனவே அந்த 
நெல்லின் ஊர் வேறு ஒரு மன்னரின் ஆளுகைக்குட்பட்டிருந்து, பாண்டியன் அரசேற்றவுடன் முதலில் அதனைக் கைப்பற்றியிருக்கவேண்டும். 
இந்த நெல்லின் ஊரே மேற்குக்கடற்கரைப் பகுதியில் பாண்டியர் ஆளுகைக்குட்பட்ட பகுதி என யவன ஆசிரியர்களால் கூறப்படும் நெல்கின்டா 
என்பது உறுதியாகிறது.

	யவன ஆசிரியர்கள் குறிப்பிடும் நெல்கின்டா என்ற இந்த இடம், இன்றைய கேரளாவில் திருவல்லாவைச் சேர்ந்த ஆளும்துருத்தி – கடப்பரா 
பகுதியில் இருந்ததாக அங்கு நடந்த அகழ்வாய்வுகள் கூறுகின்றன. அந்த இடம் இன்றைக்கும் மிகுந்த நெல்வளம் மிக்க பகுதியாக விளங்குவது 
கவனிக்கத் தக்கது. இந்த இடம் பம்பா நதிக் கரையில் இருப்பது வராற்றாசிரியரின் கூற்றை மெய்ப்பிப்பதாகவே உள்ளது. மேலும் இந்த இடம் 
பொதிகை மலைக்கு மேற்கில் அமைந்திருப்பது நமது ஊகங்களை உறுதிப்படுத்துகிறது. (பார்க்க – குறிப்பு – 5)
இதன்மூலம் பாண்டியனுக்கு இரண்டு நன்மைகள் விளைகின்றன. முதலில் இது நெல்வளம் மிக்க ஊர். 

	எனவே வடகிழக்குப் பருவமழை பொய்த்து வைகை வறண்ட காலங்களிலும், மேற்குமலைப் பகுதியில் இருக்கும் இந்த வளமிக்க 
சமவெளியில் விளையும் நெல் பாண்டிய நாட்டு மக்களுக்கு உணவாகும் அன்றோ!  

	புலவர் ‘பல்குட்டுவர் வெல் கோவே’ (மது.105) என்று பாண்டியனைச் சிறப்பித்துக்கூறியதைப் பார்த்தோம். 
குட்டநாட்டை ஆண்டவரே குட்டுவர் எனப்பட்டனர் என்பர் உரையாசிரியர். இந்தக் குட்டநாடு இன்றைய கோட்டயம், கொல்லம் மாவட்டங்களை 
அடக்கிய பகுதியாகும். அகழ்வாராய்வு செய்யப்பட்ட ஆளும்துருத்தி – கடப்பரா பகுதி இந்த வட்டாரத்தைச் சேர்ந்தது என்பதுவும் கவனிக்கத் தகுந்தது.

	மேலும் மேலைக் கடற்கரையில் இருக்கும் இந்த பட்டினம் மேலை நாடுகளுடன் நேரடியாகவும், எளிதாகவும் கடல்வழி வாணிகம் 
செய்ய ஒரு வாயிலாகவும் விளங்கும் அன்றோ! இதனை உறுதிப்படுத்தவே பாண்டியன் அங்கு வலிமையான படைகளை நிறுத்தி, 
கடற்கொள்ளையர்களை விரட்டியடித்தான் எனலாம். எனவே இதனைப் பாண்டியனின் மேற்கு வாயில் என்ற பொருளில் பாண்டியநாட்டுக் 
குடவாயில் என்றும் கூறலாம்.

	மிகுந்த நெல்வளம் கொண்ட காரணத்தால் இந்த இடம் நெற்குன்றம் என்று அன்றைக்கு அழைக்கப்பட்டிருக்கலாம். 
இதனையே யவன ஆசிரியர்கள் நெல்கின்டா என்று அழைத்தனர் என்றும் கூறலாம்.

	எனவேதான் நெடுஞ்செழியன் பதவிக்கு வந்தவுடன் முதல்வேலையாக இந்த மேற்குக் கடற்கரைப் பட்டினத்தைக் கைப்பற்றுகிறான். 
அதன்மூலம் சேர மன்னனிடம் ஏற்பட்ட பகை பெரிதாகி, ஏழு மன்னர்களும் சேர்ந்து இவனை எதிர்க்க முற்படுகின்றனர். 
அவர்களை முற்றிலும் தோற்கடித்து தமிழக முழுமைக்கும் ஒரே பேரரசனாக (மகா சக்கரவர்த்தி) முடிசூடிக்கொண்ட பின்னர், 
தன் தகுதிக்கேற்ப பெரிய அரண்மனையைக் கட்டியதுமில்லாமல், அப்போது ரோமானியப் பேரரசனாக ஆன அகஸ்டஸ் சீசருக்கும் 
தமிழகத்தின் சார்பில் வாழ்த்துத் தெரிவிக்க ஒரு தூதனை அனுப்பினான் என்று நம்ப இடமிருக்கிறது. 

	இதன் மூலம் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் கிறிஸ்து பிறப்பையொட்டிய காலத்தில் தமிழகத்தில் 
ஆண்டான் என்றும் கூற முடிகிறது.

	குறிப்பு – 1

	The Geography of Strabo. Literally translated, with notes, in three volumes. London. George Bell & Sons. 1903)
	2. ஸ்ட்ராபோ (Strabo : 64 BC – 24 AD)
	Book 15, Chapter 1:

	Very few of the merchants who now sail from Egypt by the Nile and the Arabian Gulf to India have proceeded as far as 
	the Ganges; and, being ignorant persons, were not qualified to give an account of places they have visited. 
	From one place in India, and from one king, namely, Pandion, or, according to others,5 Porus, presents and embassies were sent 
	to Augustus Caesar. With the ambassadors came the Indian Gymno-Sophist, who committed himself to the flames at Athens,
	like Calanus, who exhibited the same spectacle in the presence of Alexander .

	
	இங்கே ஸ்ட்ராபோ குறிப்பிடும் மன்னன் தென்னாட்டுப் பாண்டியன்தானா என்ற ஐயம் எழுப்பப்படுகிறது. 
இங்கே Pandion, or, according to others,5 Porus என்று கிரேக்கத்தில் எழுதப்பட்ட தொடர் பல்வேறுவிதமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

	அத் தொடர் இதுதான் : 5. ἢ κατ᾽ ἄλλους for καὶ ἄλλου.—Groskurd.

	ஃப்லோரஸ் (Florus) என்ற மற்றொரு வரலாற்றாசிரியர் தன்னுடைய நூலான  The Epitome of Roman History என்பதில் 
இதே தூதனைப் பற்றிக் குறிப்பிடுகிறார். 

	சூரியனுக்கு நேர் கீழே வசிக்கும் இந்தியர்களிடமிருந்து பரிசுப்பொருள்களுடன் தூதன் சக்கரவர்த்தியக் காண வந்தான் என்று 
குறிப்பிடுகிறார். அவர் கூறுவது இதுதான்:

	For the Scythians and the Sarmatians sent ambassadors seeking friendship; the Seres4 too and the Indians, 
	who live immediately beneath the sun, though they brought elephants amongst their gifts as well as precious stones and pearls, 
	regarded their long journey, in the accomplishment of which they had spent four years, as the greatest tribute 
	which they rendered; and indeed their complexion proved that they came from beneath another sky (available in internet :

	http://penelope.uchicago.edu/Thayer/E/Roman/Texts/Florus/Epitome/home.html
	
	எனவே ஸ்ட்ராபோ குறிப்பிடும் இந்தியத்தூதன் தென்னாட்டுப் பாண்டிய மன்னனால் அனுப்பப்பட்டவனே என்பது உறுதியாகிறது.

	குறிப்பு – 2

	3. செங்கடலை அடுத்த பயணம் (Periplus of the Erythraean Sea 

	– The Voyage around the Erythraean Sea – AD 40 - 50)

	இந் நூல் 66 பத்திகளை (Paragraph)க் கொண்டது. 54-ஆம் பத்தியில் நெல்கின்டா, பாண்டியன் பற்றிய குறிப்புகள் உள்ளன.

	54.   Tyndis is of the Kingdom of Cerobothra; it is a village in plain sight by the sea. Muziris, of the same Kingdom, 
	abounds in ships sent there with cargoes from Arabia, and by the Greeks; it is located on a river, distant from Tyndis 
	by river and sea five hundred stadia, and up the river from the shore twenty stadia. Nelcynda is distant from Muziris 
	by river and sea about five hundred stadia, and is of another Kingdom, the Pandian. This place also is situated on 
	a river, about one hundred and twenty stadia from the sea.

	குறிப்பு – 3

	Plini the Elder 4. மூத்த பிளினி (Pliny the Elder - Gaius Plinius Secundus) ( கி.பி. 23 – கி.பி. 79)

	The Natural History (Naturalis Historia)

	BOOK VI. c. 23 (26).
	
	If the wind called Hippalus be blowing, Muziris, the nearest mart of India, can be reached in forty days. 
	It is not a desirable place of call, pirates being in the neighbourhood who occupy a place called Nitrias, and besides it is 
	not well supplied with wares for traffic. Ships besides anchor at a great distance from the shore, and the cargoes have to be 
	landed and shipped by employing boats. At the time I was writing this Caelobothras was the sovereign of that country. 
	Another more convenient harbour of the nation is Neacyndon which is called Becare. 
	There Pandion used to reign, dwelling at a great distance from the mart, in a town in the interior of the country 
	called Modura. The district from which pepper is carried down to Becare in canoes is called Cottonara. 
	None of these names of nations, ports, and cities are to be found in any of the former writers--from which it appears 
	that the names (stations) of the places are changed. ( available in internet : 
	
	http://www.sdstate.edu/projectsouthasia/upload/Pliny-Voyages-to-India.pdf
	 - South Dakota State University, Brookings, SD 57007
	வேறு யாரும் இதுவரை இந்தப் பெயர்களைக் குறிப்பிடவில்லை என்கிறார் பிளினி.

	குறிப்பு – 4

	Ptolemy5. தாலமி (Ptolemy கி.பி. 90 – கி.பி. 168) 	Geographia

	 (ஆய் என்பனின் நாடு என்பதின் கீழ் மெல்கின்டா (நெல்கின்டா) குறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.)
 
				


	குறிப்பு – 5

	The major occupation in Kuttanadu (in Kerala) is farming, with rice the most important agricultural product. 
This activity gives the area its moniker of "The Rice Bowl of Kerala". Three crops are grown every year now instead of the traditional 
practice of two crops per year.  https://en.wikipedia.org/wiki/Kuttanad

			

			
			http://www.yaatrika.com/traveler/2010/01/paddy-fields-in-kerala/

	THIRUVANANTHAPURAM: A team from the Department of Archaeology, University of Kerala, that undertook surface 
exploration studies in the Central Travancore region of Kerala claims to have stumbled upon what could well be Nelcynda, 
a trade emporium of ancient Kerala.
	The finds have brought to the fore hypotheses about maritime trade between ancient Rome and Kerala and a sea port that 
was “preferred” by Roman seafarers to that of famed Kodungalloor.

	The 16-member team led by the Head of the Department, Ajit Kumar, found a piece of the handle of what was possibly 
a Roman amphora — a vessel used at the turn of the first millennium to carry wine and olive oil — from the Alumthuruthu-Kadapra 
area on the banks of the river Pampa. Pottery shards of local origin were also found during the exploration done in December 2007.

	“Till now evidence of trade between ancient Rome and Kerala was confined to references in historical books and to finds of 
Roman coins. Pattanam near Paravoor recently yielded Roman pottery. Now we have found evidence that points to the possibility that 
the ancient trade port of Nelcynda was located in what is today Alumthuruthu-Kadapra near Chengannur,” Dr. Ajit Kumar said.
The amphora handle is seen to conform to references to Nelcynda in ancient books. The earliest reference to Nelcynda is perhaps 
in the book The Periplus of the Etuthraean Sea (Periplus Maris Erythraeai) authored by an unknown seafarer who navigated the west coast 
of India during the first century A.D. Periplus states that Nelcynda is 500 ‘stadia’ (about 92 km) from Muziris (Kodungalloor) 
by sea and by river and is 120 stadia (about 22 km) from Bacare (Porakkad) along the mouth of the same river.

	“Pliny the Elder in his book Naturalis Historia calls the port Neacyndi. Pliny also states that Bacare near Nelcynda was 
preferred to the one at Muziris as the latter was infested with pirates and because the roadhead was far from the sea. 
	
	Claudius Ptolemy, the Alexandrian geographer, in his book Geographia dated to the second century A.D. calls this port Melkynda.
It was also known variously as Nincylda and Nikinna. Early books say the port was part of the territory ruled by the Pandyas of Madurai,” 
Dr. Ajit Kumar explained.

	Periplus says large ships came into Nelcynda bearing thin fabric, linen, corak, crude glass, copper, corn, wine and coins, 
largely from Rome. Exports from Nelcynda included pepper, pearls, ivory, silk, diamonds and sapphire. It is believed that at this point 
the coastline was further along the eastern side of the present Vembanad lake. Consequently Nelcynda was approachable by sea and river. 
The name could have its roots in nel (paddy) and ‘cynda’ or ‘candam’ (field).

	The area west of Alumthuruthu is called Kadapra, which could have meant a beach. There is a boat jetty called Thomakkadavu 
now located on a defunct channel of the Pamba; a place where the apostle Thomas is believed by some to have set foot. This, argues, 
Dr. Ajit, could mean that this area was connected by waterways of the Pamba. An area east of Alumthuruthu is called Nakkada — which 
could have originated from ‘Nelcynda.’ To the east of Alumthuruthu is Pandanad, on the Pamba.

	Other experts who were consulted, however, felt that extensive surface studies and surveys are needed before it could be 
concluded that the site indeed is Nelcynda. They said the finds are significant.

	http://www.thehindu.com/todays-paper/study-points-to-ancient-trade-connection-in-central-travancore/article1180832.ece