பத்துப்பாட்டு-பத்துக்கட்டுரைகள்


   1.இந்திரகோபம்
   2.இருகோல் குறிநிலை
   3.நீறு ஆடிய களிறும் வெண் கோயில் மாசும்
   4.மதுரைக்காஞ்சியில் வைகை
   5.பூப்போல் உண்கண்ணில் புலம்பு முத்து


   6.மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை
   7.சிறு புன் மாலை
   8.பானாள் என்பது நள்ளிரவு மட்டுமா?
   9.நெல்கின்டா என்னும் நெற்குன்றம்
   10.கொல்லை நெடும்வழி கோபம் ஊரவும்
 
பத்துப்பாட்டு - சிறப்புக்காட்சிகள்
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
                                              7.சிறு புன் மாலை

	

	பத்துப்பாட்டு நூல்களின் ஐந்தாவதான முல்லைப்பாட்டு என்ற நூலைக் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் 
நப்பூதனார் என்பவர் இயற்றியுள்ளார். போர்மேற்சென்ற தலைவனான அரசன் கார்காலத் தொடக்கத்தில் வருவான் என்று காத்திருக்கும் 
தலைவியான அரசியின் மனநிலையை வெகு அழகாகப் படம்பிடித்துக்காட்டுகிறார் புலவர்.

	காரும் மாலையும் முல்லை - தொல்.பொருள்.அகத்.6.

	என்பார் தொல்காப்பியர். முல்லைத்திணைக்குரிய பெரும்பொழுது கார்காலம். சிறுபொழுது மாலைநேரம். பாடலின் 
தொடக்கத்தில் கார்காலத்து முதல் மழை பெருமழையாய்ப் பெய்வதைக் காட்டுகிறார் புலவர். தலைவன் வரவுக்காகக் காத்திருக்கும் 
தலைவி தலைவன் வந்துவிடுவான் என்று தன்னை அலங்கரித்துக்கொண்டு மைதீட்டிய கண்ணினளாய்ப் பகலெல்லாம் காத்திருக்கிறாள். 
ஆனால் தலைவன் வரவில்லை. பகற்பொழுது முடிந்துவிட்டது. மாலையும் தொடங்கிவிட்டது. இதனைக் குறிப்பிடவந்த புலவர் கூறுகிறார்:

	பாடு இமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு
	கோடுகொண்டு எழுந்த கொடும் செலவு எழிலி
	பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை. - முல்.5-7

இதன் பொருள்:

	ஒலி முழங்குகின்ற குளிர்ந்த கடலைக் குடித்து வலமாக எழுந்து,
	மலையுச்சிகளைக் கொண்டு எழுந்த விரைவான போக்கினையுடைய மேகம்
	பெரிய மழையைப் பெய்த சிறிய புல்லிய மாலைக் காலத்து

	இங்கே புலவர் மாலை நேரத்தைக் குறிக்கும்போது ‘சிறு புன் மாலை’ என்கிறார். அதென்ன சிறு புன் மாலை? மாலை எப்படிச் 
சிறியது ஆகும்? புன் மாலை புரிகிறது. புல்லிய மாலை, அதாவது பொலிவிழந்த மாலை. பளீரென்று விடிகிற காலைப்பொழுதில் மக்கள் 
சுறுசுறுப்புடன் இயங்குவர். ஆனால் நாளெல்லாம் வெளியில் உழைத்து வீடுதிரும்பும் வேலையாட்கள் மாலையில் களைத்துச் சோர்ந்து 
வீடு திரும்புவர். பகலெல்லால் இரைதேடித் திரிந்த பறவைகள் மாலையில் தத்தம் கூடுகளைத் தேடிப் பறந்து செல்லும். மேயப்போன 
மாடுகளை ஓட்டிக்கொண்டு மேய்ப்பர்கள் களைப்புடன் வீடு திரும்பும் நேரம் மாலை. வெளியூர் சென்றிருக்கும் தலைவன் வீடு திரும்ப 
மாட்டானா என்று கவலையுடன் வீட்டில் தலைவி காத்திருக்கும் புல்லிய மாலை. போதாக்குறைக்கு அந்நேரத்தில் மழைவேறு பெய்தால்?
’பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை’ என்கிறார் புலவர். ஒரே அடியில் தொடக்கத்தில் ’பெரும்’, என்றும் இறுதியில் ‘சிறு’ என்றும்
புலவர் கொடுத்திருக்கிற முரண்தொடையின் அழகை ரசித்துப் பார்க்கலாமேயொழிய, அதென்ன ‘சிறு’ புன் மாலை? அந்தச் ‘சிறு’ எதற்கு?

	சங்க மரபுப்படி, மாலை என்ற சிறுபொழுது இன்றைய மாலை 6 மணி முதல் 10 வரையில் உள்ள பொழுது ஆகும்.  இந்த 
மாலையைத்தான் சில நேரங்களில் ‘சிறு புன் மாலை என்கிறார்கள் சங்கப் புலவர்கள். இந்தச் ’சிறு புன் மாலை’ என்ற தொடர் சங்க 
இலக்கியத்தில் வேறு மூன்று இடங்களில் வருகிறது.
 
	பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை - நற் 54/5
	சிறு புன் மாலை உண்மை - குறு 352/5
	சிறு புன் மாலையும் உள்ளார் அவர் என - அகம் 114/6

	முல்லைப்பாட்டில் இத்தொடருக்கு, ’சிறுபொழுதாகிய வருத்தம் செய்கிற மாலை’ என்று பொருள்கொள்கிறார் நச்சினார்க்கினியர்.
உரையாசிரியர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்களும் இந்தத் தொடருக்கு இதே பொருள்கொள்கிறார். அடுத்து நற்றிணையில், 
‘பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை' என்ற அடியில் வரும் இத்தொடருக்குப் பின்னத்தூரார் ‘சிறிய புல்லிய மாலைப் பொழுதானது’ 
என்று பொருள் கூறுகிறார். இதே அடிக்கு உரையாசிரியர் ஔவைசு.து.அவர்கள் ‘சிறிது போதில் கழியும் புல்லிய மாலை’ என்று பொருள் 
கொள்கிறார். அடுத்து, குறுந்தொகையில் வரும் சிறு புன் மாலை என்ற தொடருக்கு, ’சிறிய புல்லிய மாலை’ என்றே உரையாசிரியர்கள் 
உ.வே.சா. அவர்களும், பொ.வே.சோமசுந்தரனார் அவர்களும் பொருள் கொள்கிறார்கள். அடுத்து அகநானூற்றுப் பாடலில் வரும் 
’சிறு புன் மாலை’ என்ற தொடருக்கு, சிறுமையுடைய புல்லிய மாலை என்று, பொ.வே.சோ. அவர்களும், சிறிய புல்லிய மாலை என்று 
நாட்டார் அவர்களும் பொருள்கொள்கிறார்கள். ஆக பொ.வே.சோ அவர்கள், முல்லைப்பாட்டிலும், குறுந்தொகையிலும், அகநானூற்றிலும் 
வரும் இந்தத் தொடருக்கு, சிறுபொழுதாகிய, சிறிய, சிறுமையுடைய என்று மூன்றுவிதமான பொருள்களைக் கொண்டிருக்கிறார்.

	இப்பொழுது இத் தொடர் பாடலில் வருகின்ற இடங்களைப் பார்ப்போம்.

	முல்லைப்பாட்டில், இத்தொடரை அடுத்து வரும் காட்சியில், மேயப்போன தம் தாய்ப்பசுக்கள் வீடு திரும்புவதை எதிர்நோக்கி 
வீட்டில் ஆவலுடன் கன்றுக்குட்டிகள் காத்துக் கொண்டிருப்பதைக் காட்டுகிறார் புலவர். பொதுவாக மேயப்போன பசுக்கள் பொழுதுசாயும் 
நேரத்தில் வீடு திரும்பும். ஏறக்குறைய இன்றைய நேரப்படி மாலை 6 மணி முதல் 6:30 மணிக்குள் அவை திரும்பிவிடும்.

	நற்றிணையில், பறவைகள் இரையருந்தி வீடுதிரும்பும் நேரத்தையே புலவர் இத்தொடரால் குறிப்பிடுகிறார். இதுவும் 
இருட்டுகின்ற நேரம்.

	குறுந்தொகையில், பகலெல்லால் மரத்தில் தங்கியிருந்துவிட்டு, இருட்டப்போகும் நேரத்தில் வௌவால்கள் வெளியே 
இரைதேடப் போகும் நேரத்தையே புலவர் இத்தொடரால் குறிக்கிறார். இதுவும் இருட்டுகின்ற நேரம்.

	அகநானூற்றில் இந்நேரம் இன்னும் மிகத்தெளிவாகக் குறிக்கப்படுகிறது.

	உரவுக்கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு
	அரவு நுங்கு மதியின் ஐயென மறையும்
	சிறு புன் மாலையும் - அகம் 114/4-6

இதன் பொருள்:

	வெப்பம் மிகுந்த கதிர்கள் தம் வெம்மை மழுங்கப்பெற்று மேற்கு மலையினை அடைந்த ஞாயிறு
	பாம்பு விழுங்கிய மதியைப் போல மெதுவாக மறைகின்ற
	பொலிவிழந்த இளம் மாலை நேரத்திலும் நம்மை நினைத்துப்பார்க்கமாட்டார் அவர்’ என்று

	ஆக, சூரியன் மறைகின்ற, மறைந்து சிறிதளவு நேரமே ஆன மாலைப்பொழுதே சிறு மாலை எனப்படுகிறது.  அதாவது, 
இன்றைய நேரப்படி மாலை 6 முதல் 6 1/2 வரையுள்ள நேரம் எனக் கொள்ளலாம். 
	இதனை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டுமென்றால் இதற்கு இணையான ஆங்கில வழக்கைப் பார்க்கலாம். ஆங்கில 
முறைப்படி, நள்ளிரவு 12 மணியைத் தாண்டியவுடன் அந்நேரத்தை a.m என்றே குறிப்பிடுவர். நள்ளிரவு தாண்டி 30 நிமிடங்களை 00.30 a.m 
என்றே குறிப்பிடுவர். இதனை ஆங்கிலத்தில் the small hours in the morning என்று குறிப்பிடுவர். அதாவது சிறு காலைப் பொழுது!! 
அப்படியெனில் சிறு மாலை என்று சங்கப் புலவர்கள் குறிப்பது the small hours of the evening. அப்பொழுதுதான் மாலை தொடங்கிய 
நேரம்.