புக்கில் - (பெ) 1. புகுவதற்குரிய இல்லம், places one can reside
2. புகலிடம், place of refuge, asylum
1.
பண்டைய அல்ல நின் பொய் சூள் நினக்கு எல்லா
நின்றாய் நின் புக்கில் பல - கலி 90/24,25
இது ஒன்றும் பழைய காலம் அல்ல, நீ உரைக்கும் பொய்ச்சூள் உனக்குப் பயன்படுவதற்கு, ஏடா!
இங்கு நில்லாதே! உனக்குப் போவதற்குப் பல வீடுகள் உள்ளனவே!"
2.
துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில் - புறம் 221/6
குற்றமற்ற கேள்வியினையுடைய அந்தணர்க்குப் புகலிடம்
மேல்
புக்கீமோ - (ஏவல் வி.மு) (அங்கு) புகுந்துகொள், go (there)
தீரா முயக்கம் பெறுநர் புலப்பவர்
யார் நீ வரு நாள் போல் அமைகுவம் யாம் புக்கீமோ - கலி 71/22,23
அன்பிற் குறையாத முயக்கத்தைப் பெறுகின்ற பரத்தையரைக் கோபித்துக்கொள்பவர்
யார்? நீ வராத நாட்களையும் வந்த நாட்களாகவே கருதி அமைதி கொள்வேன்! நீ அங்குச் செல்வாயாக!
மேல்
புகர் - (பெ) 1. குற்றம், fault, blemisg, defect
2. புள்ளி, spot
3. கஞ்சி, rice-water used as starch
4. கபில நிற காளை, tawny coloured bull
1.
தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவல் அம்
கொடியன் நெடியன் தொடி அணி தோளன் - திரு 210,211
கிடாயையும், மயிலையும் உடையவன், குற்றமில்லாத கோழிக்
கொடியை உடையவன், நெடுக வளர்ந்தவன், தொடியை அணிந்த தோளையுடையவன்,
2.
புகர் வாய் குழிசி பூ சுமட்டு இரீஇ - பெரும் 159
(தயிர்)புள்ளிபுள்ளியாகத் தெரிந்த வாயையுடைய மோர்ப்பானையை மெல்லிய சுமட்டின் மேல் வைத்து
3.
புகா புகர் கொண்ட புன் பூ கலிங்கமொடு - நற் 90/4
சோற்றுக் கஞ்சி தோய்க்கப்பெற்ற சிறிய பூவேலைப்பாடு கொண்ட ஆடையோடு
4.
கணம்_கொள் பல் பொறி கடும் சின புகரும் - கலி 105/16
பேரளவிலான பலவித புள்ளிகளைக் கொண்ட பெருங்கோபமுள்ள புகர்நிறக் காளையும்
மேல்
புகர்முகம் - (பெ) (புள்ளிகளைக்கொண்ட முகத்தினையுடைய) யானை, elephant
பொறி வரி புகர்முகம் தாக்கிய வய_மான் - பெரும் 448
ஆழமாய்ப்பதிந்த இரேகைகளும், புள்ளிகளும் உள்ள முகத்தினையுடைய யானையைப் பாய்ந்த அரிமா
மேல்
புகர்ப்பு - (பெ) புள்ளிகள் அமைந்த தன்மை, nature of having beautiful spots
குறும்பொறி கொண்ட கொம்மை அம் புகர்ப்பின்
கரும் கண் வெம் முலை - நற் 314/5,6
மார்க்கச்சு அணிந்த இளைய அழகிய நிறமுள்ள புள்ளிகள் அமைந்த
கரிய கண்கள் அமைந்த விருப்பமிகு முலைகள்
மேல்
புகர்படு - (வி) 1. கெட்டுப்போ, அழிந்துபோ, perish, get ruined
2. குற்றப்படு, find fault
1.
காமம் புகர்பட
வேற்றுமை கொண்டு பொருள்_வயின் போகுவாய் - கலி 12/16,17
காம இன்பம் கெட்டுப்போகும்படி
அதனுடன் மாறுபட்டு பொருளைத் தேடிச் செல்கின்றவனே!
2.
அரசியல் பிழையாது செரு மேந்தோன்றி
நோய் இலை ஆகியர் நீயே நின்_மாட்டு
அடங்கிய நெஞ்சம் புகர்படுபு அறியாது
கனவினும் பிரியா உறையுளொடு
----------------------------- ----------------
வாள் நுதல் அரிவையொடு காண்வர பொலிந்தே - பதி 89/12-20
- அரசுமுறையில் பிழையாமல், போரில் வெற்றியால் மேம்பட்டு,
நோயின்றி இருப்பாயாக நீயே! உன்னிடத்தில்
அன்புகொண்டு அடங்கிய நெஞ்சம் குற்றப்படுதலை அறியாமல்,
கனவிலும் பிரியாத வாழ்க்கையோடு,
----------------------------- --------------------------
ஒளிபொருந்திய நெற்றியையுடைய உன் மனைவியுடன் அழகுற விளங்கி
மேல்
புகர்வை - (பெ) உண்பதற்கு ஏற்றது, that which is suitable for consumption
புகர்வை அரிசி பொம்மல் பெரும் சோறு - நற் 60/5
உண்ணுதற்கு ஏற்ப தீட்டப்பெற்ற அரிசியை வேகவைத்த மிக்க சோற்றை
மேல்
புகரி - (பெ) புள்ளியையுடைய மான்கள், spotted deer
புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில் - குறு 391/2
புள்ளிமான்கள் வெப்பத்தால் புழுங்கிய மழை நீங்கிய முல்லைநிலத்தில்
மேல்
புகல் - 1. (வி) 1. விரும்பு, desire
2. மகிழ், rejoice
3. புகழ்ந்து கூறு, praise
- 2. (பெ) 1. துணை, ஆதரவு, பற்றுக்கோடு, support, prop
2. விருப்பம், desire
3. புகுதல், entering
4. வசிப்பிடம், இருப்பிடம், dwelling, residence
5. வெற்றிச்செருக்கு, elation over victory
1.1
வெ வரி நிலைஇய எயில் எறிந்து அல்லது
உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய
நெஞ்சு புகல் ஊக்கத்தர் - பதி 68/5-7
கண்டோர் விரும்பும் அழகிய கோலங்கள் நிலையாய் அமைந்த பகைவர் மதிலை அழித்தாலொழிய
உண்பதில்லை என்று அடுக்கிக்கொண்டே சென்ற நாள்கள் பல கழிய,
நெஞ்சம் போரையே விரும்பும் ஊக்கத்தையுடையவராய்,
1.2
காதலர் உழையர் ஆக பெரிது உவந்து
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற - குறு 41/1,2
காதலர் அருகிலிருப்பவராய் இருக்கும்போது பெரிதும் மகிழ்ந்து
திருவிழாக்காணும் ஊரைப்போல மகிழ்வேன், உறுதியாக
1.3
செரு மிக்கு புகலும் திரு ஆர் மார்பன் - மலை 356
போர்த்தொழில் மிக்கு நடத்தலால் உலகம் புகழும் திருமகள் நிறைந்த மார்பினன்
2.1
மை அணல் காளை பொய் புகல் ஆக
அரும் சுரம் இறந்தனள் என்ப - நற் 179/8,9
கரிய மீசையும் தாடியையுமுடைய காளையொருவனின் பொய்மொழிகளை ஆதரவாகக் கொண்டு
கடப்பதற்கரிய பாலைவழியில் சென்றுவிட்டாள் என்கின்றனர்
2.2
ஆய்ந்து தெரிந்த புகல் மறவரொடு
படு பிணம் பிறங்க நூறி - பதி 69/8,9
பகைவரைத் தேடிப்பிடித்துப் போரிடும் போரவா மிகுந்த வீரர்களும் ஆகிய படையுடன் சென்று,
வெட்டுப்பட்டு விழுகின்ற பிணங்கள் குவிந்து உயரும்படி பகைவர்களைக் கொன்று,
2.3
ஒடுங்கி யாம் புகல் ஒல்லேம் பெயர்தர அவன் கண்டு
நெடும் கய மலர் வாங்கி நெறித்து தந்தனைத்தற்கோ - கலி 76/10,11
உடலை ஒடுக்கிக்கொண்டு நான் உள்ளே புகுந்து மலர் பறிக்கமாட்டாமல் பின்னேவர, அவன் அதனைக் கண்டு
ஆழமான குளத்து நீரில் இருந்த மலரைப் பறித்துப் புறவிதழை ஒடித்துத் தந்ததற்காகவோ
2.4
புள்_இனம் இரை மாந்தி புகல் சேர ஒலி ஆன்று
வள் இதழ் கூம்பிய மணி மருள் இரும் கழி - கலி 121/4,5
பறவை இனங்கள் தம் இரையை ஆர உண்டு தம் வசிப்பிடங்களைச் சேர, ஒலி அடங்கி,
வளமையான இதழ்கள் குவிந்து நிற்கும் நீல மணியைப் போன்ற பெரிய கழி
2.5
மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை
வாயுள் தப்பிய அரும் கேழ் வய புலி
மா நிலம் நெளிய குத்தி புகலொடு
காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை - அகம் 251/15-18
குற்றமற்ற வெள்ளிய கொம்பினையுடைய பெருமை வாய்ந்த யானையானது
தன்வாயினின்றும் தப்பிய அரிய நிறத்தையுடைய வலிய புலியை
பெரிய நிலம் குழியக் குத்திக்கொன்று செருக்குடன் பாதுகாவல் இன்றித் தங்கியிருக்கும் தேக்குமரங்கள்
நிறைந்த காடாகிய
மேல்
புகல்வரு(தல்) - (வி) விருப்பம்கொள், desire
வாள் வரி நடுங்க புகல்வந்து ஆளி
உயர் நுதல் யானை புகர் முகம் தொற்றி - அகம் 252/2,3
புலி நடுங்கிட, விருப்பங்கொண்டு பாய்ந்து, ஆளியானது
உயர்ந்த நெற்றியினையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்தைத் தாக்கி
மேல்
புகல்வி - (பெ) விலங்கின் ஆண், male of an animal
புழல் கோட்டு ஆமான் புகல்வியும் களிறும் - குறி 253
உள்ளீடற்ற கொம்பையுடைய ஆமான் ஏறும், யானையும்
மேல்
புகல்வு - (பெ) 1. மனச்செருக்கு, pride, arrogance
2. விருப்பம், desire
1.
மாறு பொருது ஓட்டிய புகல்வின் வேறு புலத்து
ஆ காண் விடையின் அணி பெற வந்து - குறி 135,136
(தன்னுடன்)மாறுபட்ட காளைகளைப் பொருது விரட்டியடிக்கும் செருக்குடைய -- (தானறியாத)வேறு நிலத்தில்
(புதிய)பசுவைக் காணும் -- காளையைப் போல அழகுபெற வந்து
2.
முனை புகல் புகல்வின் மாறா மைந்தரொடு
--------------------------------- ----------------------
காஞ்சி சான்ற செரு பல செய்து - பதி 84/17-19
போரை விரும்பும் விருப்பத்தில் மாறா வீரருடன்,
------------------------ ----------------------------------
நிலையாமை உணர்வே நிறைந்த போர்கள் பலவற்றைச் செய்து
மேல்
புகவு - (பெ) உணவு, food
வால் நிண புகவின் கானவர் தங்கை - அகம் 132/5
வெள்ளிய நிணத்துடன் கூடிய உணவினையுடைய வேடவர்களின் தங்கை
மேல்
புகழ்மை - (பெ) புகழுடைமை, Praise-worthiness
திகழ் மலர் புன்னை கீழ் திரு நலம் தோற்றாளை
இகழ் மலர் கண்ணளா துறப்பாயால் மற்று நின்
புகழ்மை கண் பெரியது ஓர் புகர் ஆகி கிடவாதோ - கலி 135/12-14
ஒளிவீசும் மலர்களையுடைய புன்னை மரத்தடியில் உன்னிடம் தன் தெய்வத் திருவழகை இழந்தவளை
மலர்கள் இகழும் கண்ணையுடையவளாக மாற்றிவிட்டு அவளைக் துறப்பாயேல், அது உன்
புகழுடைமைக்கு நேர்ந்த பெரிய கரும் புள்ளியாய் ஆகிவிடாதா?
மேல்
புகழது - (வி.மு) புகழினைக் கொண்டது, has fame
இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே
பெரும் கலி ஞாலத்து தொன்று இயல் புகழது - பரி 15/35,36
இருங்குன்றம் என்ற பெயர் பரந்த அந்த மலை
கடல்சூழ்ந்த நிலவுலகில் தொன்மையான இயல்பையுடைய புகழினைக் கொண்டது;
மேல்
புகற்சி - (பெ) விருப்பம், ஆர்வம், desire, fervour
குற குறு_மாக்கள் புகற்சியின் எறிந்த
தொண்டக_சிறுபறை பாணி - நற் 104/4,5
குறவர்களின் சிறுவர்கள் ஆர்வத்தோடு முழக்கிய
தொண்டகச் சிறுபறையின் தாள ஓசை
மேல்
புகா - (பெ) உணவு, food
மரல் புகா அருந்திய மா எருத்து இரலை - குறு 232/3
மரல்கொடியை உணவாக அருந்திய பெரிய கழுத்தைக் கொண்ட இரலை மான்
மேல்
புகார் - (பெ) ஆற்றுமுகம், Mouth of a river, காவிரியின் ஆற்றுமுகப் பட்டினமான பூம்புகார்,
The town of Kāviri-p-pUm-paTTiNam, as situated at the mouth of the river Kāvēri;
தீம் புகார் திரை முன்துறை - பட் 173
(கண்ணுக்கு)இனிதான புகாரிடத்து அலைகளையுடைய துறையின் முன்னே,
மேல்
புங்கவம் - (பெ) காளை, bull
புள் மிசை கொடியோனும் புங்கவம் ஊர்வோனும் - பரி 8/2
மேலே கருடப்பறவை வரையப்பெற்ற கொடியினையும் உடைய திருமாலும், காளையின் மேல் ஏறிவரும்
சிவபெருமானும்
மேல்
புட்டகம் - (பெ) புடைவை, saree. cloth
புட்டகம் பொருந்துவ புனைகுவோரும் - பரி 12/17
புடவைகளில் தமக்குப் பொருத்தமானவற்றை உடுத்திக்கொள்வோரும்
மேல்
புட்டில் - (பெ) 1. தக்கோலக்காய், 1. வால்மிளகு, cubeb, 2. பாக்கு, arecanut
2. குதிரையின் கெச்சை, Tinkling anklet of a horse
3. கால் கொலுசு,கால் சிலம்பு, tinkling anklet of a woman
4. கூடை, basket
1.பைம் கொடி நறை காய் இடை இடுபு வேலன்
அம் பொதி புட்டில் விரைஇ - திரு 190,191
பச்சிலைக்கொடியுடன் சாதிக்காயை நடுவே இட்டு, வேலன்,
அழகினையுடைய பொதிதலுள்ள தக்கோலக்காயைக் கலந்து
2.
நூபுர_புட்டில் அடியொடு அமைத்து யாத்த
வார் பொலம் கிண்கிணி ஆர்ப்ப இயற்றி - கலி 96/16,17
ஒலிக்கின்ற கெச்சையைக் காலின் அடியில் அமைத்துக் கட்டியது
ஒழுங்குபட்ட பொன்னாலான சதங்கையாக ஒலிக்கவும் கொண்ட அந்தக் குதிரையை ஓட்டி,
3.
அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து ஈங்கே
வருக எம் பாக_மகன் - கலி 80/8,9
பரல்கள் இட்ட உன் காற்கொலுசின் மணிகள் ஒலிக்க அங்கிருந்து இழுத்துக்கொண்டே இங்கே
வருக என் பாகனாகிய மகனே!
4.
மாதர் புலைத்தி விலை ஆக செய்தது ஓர்
போழில் புனைந்த வரி புட்டில் புட்டிலுள் என் உள - கலி 117/7,8
அழகிய புலைத்தி விலையாகக் கொடுத்த ஒரு
பனங்குருத்து நாரால் முடைந்து கட்டப்பட்ட கூடை"; "கூடையினுள்ளே என்ன இருக்கிறது?
மேல்
புடை - 1. (வி) 1. அடி, strike, beat
2. மோதித்தாக்கு, hit, attack
3. அடித்து ஒலியெழுப்பு, கொட்டு, beat, as a drum; to tap, as on a tambourine;
4. அடித்துப்பூசு, smear
5. (பறவை) சிறகுகளை அடித்துக்கொள், (birds) flap or flutter the wings
6. (கைகளைக்) கொட்டிப்பிசை, tap and rub hands
7. கன்னம் குளிரினால் அடித்துக்கொள், (cheeks) flutter or quiver due to extreme cold
8. (கைகளைத்)தட்டு, clap the hands
9. தானியங்களிலுள்ள தூசு, வேண்டாதவை ஆகியவற்றை நீக்க, முறம், சுளகு ஆகியவற்றில் இட்டு
மேலும் கீழும் அசைத்துத் தட்டு, sift, winnow
- 2. (பெ) 1. அடித்து உண்டாக்கும் ஒலி, sound from a stroke
2. பக்கம், side
3. புடைப்பு, பருமை, Protuberance
1.1
பாம்பு பட புடைக்கும் பல் வரி கொடும் சிறை
புள் அணி நீள் கொடி செல்வனும் - திரு 150,151
பாம்புகள் மாளும்படி அடிக்கின்ற பல வரியினையுடைய வளைந்த சிறகினையுடைய
கருடனை அணிந்த நீண்ட கொடியினையுடைய திருமாலும்
1.2
பூட்டு மான் திண் தேர் புடைத்த மறுகு எல்லாம் - கலி 98/5
எந்நேரமும் பூட்டியபடியே இருக்கும் உன் திண்ணிய தேர்ச்சக்கரங்கள் மோதித்தாக்கிய தெருக்களிலெல்லாம்
1.3
தட்டையும் புடைத்தனை கவணையும் தொடுக்க என - நற் 206/5
தட்டை எனும் கருவியை அடித்து ஒலித்து, கவண்கல்லும் வீசுக என்று
1.4
பொன் காண் கட்டளை கடுப்ப கண்பின்
புன் காய் சுண்ணம் புடைத்த மார்பின் - பெரும் 220,221
பொன்னை(உரைத்து)க் காணும் கட்டளைக்கல்லை ஒப்ப, சம்பங்கோரையின்
புல்லிய காயில் தோன்றின தாதை அடித்துக்கொண்ட மார்பினையும்,
1.5
புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு
இறகு புடைத்து இற்ற பறை புன் தூவி - நற் 329/4,5
அண்மையில் குஞ்சு பொரித்ததால் வரிசையாகப் பருத்த புள்ளிகளையுடைய முதிய பருந்தானது
இறகுகளைத் தீவிரமாக அடித்துக்கொள்வதால் இற்று விழுந்த காற்றில் பறக்கும் புல்லிய அடி இறகுகளைத்
1.6
இன்றோ அன்றோ தொன்று ஓர் காலை
நல்ல-மன் அளியதாம் என சொல்லி
காணுநர் கை புடைத்து இரங்க - பதி 19/24-26
இன்றல்ல, நேற்றல்ல, தொன்றுதொட்டு
இந்த நாடுகள் நல்லனவாய் இருந்தன, இப்போது இரங்கத்தக்கன என்று சொல்லி
காண்போர் கைகளைக் கொட்டிப்பிசைந்து வருந்திநிற்க,
1.7
மெய் கொள் பெரும் பனி நலிய பலர் உடன்
கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க - நெடு 7,8
(தம்)உடம்பில் கொண்ட மிகுந்த குளிர்ச்சி வருத்துகையினால், பலரும் கூடிக்
கையில் பிடித்த கொள்ளிக்கட்டையராய், கன்னங்கள் அடித்துக்கொண்டு நடுங்க
1.8
உயர் நிலை இதணம் ஏறி கை புடையூஉ
அகல் மலை இறும்பில் துவன்றிய யானை
பகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடும் கல் - மலை 204-206
உயரமான இடத்திலுள்ள பரணில் ஏறி, கைகளைத் தட்டி,
பரந்துபட்டுக்கிடக்கும் மலைகளின் புதர்க்காடுகளில் கூட்டமாகத்திரியும் யானைகள்
பகலில் (வந்து)நிற்கும் நிலையைக் குலைக்கின்ற கவண்கள் விடும் மூர்க்கத்தனமான கற்கள்
1.9
சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த
பருத்தி பெண்டின் சிறு தீ விளக்கத்து - புறம் 326/4,5
பஞ்சுக்கொட்டையின் புறத்தோல்களையும், கொட்டை, தூசி ஆகிய குப்பைகளையும் புடைத்து நீக்குவாளாய்
எழுந்திருந்த
பருத்தி நூற்கும் பெண்டினுடைய சிறிய விளக்கொளியில்
2.1
அரி மான் இடித்து அன்ன அம் சிலை வல் வில்
புரி நாண் புடையின் புறங்காண்டல் அல்லால் - கலி 15/1,2
சிங்கம் முழங்குவதைப் போன்று முழங்கும், அழகிய சிலைமரத்தால் செய்யப்பட்ட வலிய வில்லின்
முறுக்குடைய நாணைச் சுண்டிவிட்டு ஒலியெழுப்பினாலே பகைவர் தோற்றோடக் காண்பது அன்றி,
2.2
விரவு வரி கச்சின் வெண் கை ஒள் வாள்
வரை ஊர் பாம்பின் பூண்டு புடை தூங்க - பெரும் 71,72
(மார்பில்)விரவிய, வரியுடைய கச்சையில், வெண்மையான கைப்பிடியையுடைய ஒள்ளிய வாள்
மலையில் ஊர்கின்ற பாம்புபோலப் பூணப்பட்டு ஒருபக்கத்தே தொங்கிநிற்க,
2.3
மழை வீழ்ந்து அன்ன மா தாள் கமுகின்
புடை சூழ் தெங்கின் மு புடை திரள் காய் - பெரும் 363,364
மேகங்கள் விழுந்ததைப் போன்ற பெரிய தண்டினையுடைய கமுகுகளின்
பக்கத்தே சூழ்ந்த தெங்கினுடைய மூன்று புடைப்பினையுடைய திரண்ட காய்,
மேல்
புடைப்பு - (பெ) அடிக்கை, striking
நிலம் புடைப்பு அன்ன ஆர்ப்பொடு விசும்பு துடையூ
வான் தோய் வெல் கொடி தேர் மிசை நுடங்க - பதி 44/1,2
நிலத்தையே உடைப்பது போன்ற முழக்கத்துடன், விசும்பினைத் துடைப்பது போல்
வானத்தில் தோயும்படியாக, வெற்றிக்கொடி, தேர் மீது அசைந்தாட,
மேல்
புடைபெயர் - (வி) 1. இடம் மாறு, change position
2. நிலை மாறு, வாக்கு மாறு, change in stand,
1.
நிலம் புடைபெயர்வது ஆயினும் கூறிய
சொல் புடைபெயர்தலோ இலரே - நற் 289/2,3
நிலம் இடம்பெயர்ந்தாலும், தான் சொன்ன
சொல்லினின்றும் மாறுபடுகிறவர் இல்லை
2.
நிலம் புடைபெயர்வது ஆயினும் கூறிய
சொல் புடைபெயர்தலோ இலரே - நற் 289/2,3
நிலம் இடம்பெயர்ந்தாலும், தான் சொன்ன
சொல்லினின்றும் மாறுபடுகிறவர் இல்லை
மேல்
புடையல் - (பெ) மாலை, garland
இரும் பனம் புடையல் ஈகை வான் கழல் - பதி 42/1
கரிய பனந்தோட்டால் ஆன மாலையையும், பொன்னால் செய்த பெரிய வீரக் கழலினையும் உடையோராய்
மேல்
புண்ணியம் - (பெ) நற்செயல், good and morally correct deed
பண்ணியம் அட்டியும் பசும் பதம் கொடுத்தும்
புண்ணியம் முட்டா தண் நிழல் வாழ்க்கை
கொடு மேழி நசை உழவர் - பட் 203-205
(பல)பண்டங்களை ஆக்கியிட்டும், புதிய நல்லுணவு கொடுத்தும்,
அறத்தொழில்கள் முட்டுப்படாத குளிர்ந்த அருளுடனே வாழும் இல்வாழ்க்கையையுடைய,
வளைந்த மேழி(யால் உழவுத்தொழிலை) விரும்பும் உழவரும்
மேல்
புணர் - (வி) 1. கூடு, உடலுறவுகொள், cohabit, copulate
2. சேர், இணை, join, unite
3. பொருந்து, அமை, be fitted with
4. ஒத்ததாகு, ஏற்புடையதாகு, be suitable
5. கட்டு, tie, fasten
6. அளவளாவு, be associated with, keep company with;
7. உருவாக்கு, படை, create
8. சேர், இணை, combine, connect, link
1.
துடி அடி அன்ன தூங்கு நடை குழவியொடு
பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க என - பொரு 125,126
துடி போலும் அடிகளையும் அசைந்த நடையினையும் உடைய கன்றுகளுடன்,
பிடிகளைக் கூடின களிற்றியானைகளையும், (நீவிர்)விரும்பிய ஏனையவற்றையும் கொள்வீராக என்று
2.
கன்று புணர் பிடிய குன்று பல நீந்தி - பதி 12/13
கன்றுகளுடன் சேர்ந்த பெண்யானைகளைக் கொண்ட குன்றுகள் பலவற்றைக் கடந்து
3.
வலம் பட நடக்கும் வலி புணர் எருத்தின்
உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை - சிறு 189,190
வெற்றியுண்டாக நடக்கும், (இழுத்தற்குரிய)வலி பொருந்திய கழுத்தினால்
மனஉறுதி கொண்ட வலிமையான எருத்தினையுடைய உழவரின் தங்கையாகிய,
4.
தடவு நிலை பலவின் முழு முதல் கொண்ட
சிறு சுளை பெரும் பழம் கடுப்ப மிரியல்
புணர் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து
அணர் செவி கழுதை சாத்தொடு - பெரும் 77-80
வளைந்த நிலைமையினையுடைய பலாமரத்தின் அடிப்பகுதியில் குலைகொண்ட
சிறியதாகிய சுளையினையுடைய பெரிய பழத்தை ஒப்ப, மிளகின்
ஒத்த கனமாகச் சேர்ந்த சுமையைத் தாங்கிய, வடு அழுந்தின வலிமையான முதுகினையும்,
உயர்த்திய செவியினையும் உடைய கழுதைகளுடைய திரளோடே
5.
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளி
கொடும் கால் மா மலர் கொய்துகொண்டு அவண
பஞ்சாய் கோரை பல்லின் சவட்டி
புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி - பெரும் 215-218
அரும்புகள் சூழ்ந்த இதழ்களையுடைய மறிந்த வாயையுடைய முள்ளியின்
வளைந்த காம்பினையுடைய கரிய பூவைப் பறித்துக்கொண்டு, அங்கு உண்டாகிய
பஞ்சாய்க் கோரையைப் பல்லால் சிதைத்து(க் கிழித்து)
முடிந்த நாரால் கட்டிய உருவாக்கம் இனிதான மாலையை
6.
தொல் ஆணை நல் ஆசிரியர்
புணர் கூட்டுண்ட புகழ் சால் சிறப்பின்
நிலம்தருதிருவில் நெடியோன் போல - மது 761-763
தொன்மையான மரபுகளையுடைய நல்ல ஆசிரியர்கள்
அளவளாவும் சேர்க்கையை நுகர்ந்த புகழ் நிறைந்த சிறப்பினையுடைய
நிலந்தரு திருவில் பாண்டியன் என்னும் உயர்ந்தோனைப் போன்று
7.
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை - நற் 192/9
பூதமாகிய தெய்வங்கள் உருவாக்கிய புதிதாகச் செய்யப்பட்ட பாவை
8.
துறைவன்
தன்னொடு புணர்த்த இன் அமர் கானல் - நற் 267/5,6
துறையைச் சேர்ந்தவன்
தன்னோடு தலைவியைச் சேர்த்த இனிமை பொருந்திய கடற்கரைச் சோலை
மேல்
புணர்ச்சி - (பெ) 1. சேர்க்கை, இணைப்பு, தொடர்பு, உறவு, association, union
2. உடலுறவு, கலவி, coition, sexual union
1.
அரு விடர் அமைந்த களிறு தரு புணர்ச்சி - குறி 212
பயங்கரமான பிளவுகள் நிறைந்த மலையில் நேர்ந்த களிறு தந்த (இந்த)இணைப்பு
2.
புரிவு உண்ட புணர்ச்சியுள் புல் ஆரா மாத்திரை
அருகுவித்து ஒருவரை அகற்றலின் தெரிவார்_கண்
செய நின்ற பண்ணினுள் செவி சுவை கொள்ளாது
நயம் நின்ற பொருள் கெட புரி அறு நரம்பினும்
பயன் இன்று மன்று அம்ம காமம் - கலி 142/1-5
மனம் விரும்பிய உறவுக்காலத்தில், அதற்குரிய தழுவுதல் நிறைவுபெறாத அளவில்,
இருவருள் ஒருவரை அந்த உறவுக்கு அரிதானவராகப் பிரித்துவிடுவதால், ஆராய்ந்து பார்க்கும்போது,
நரம்பை இயக்க, அதில் நின்ற பண்ணினுள் தோன்றிய இனிமையைச் செவி சுவைப்பதற்கு முன்னே,
அந்த இசைப்பயன் கெட்டுப்போகும்படி, முறுக்கு அறுந்துபோகும் நரம்பைக்காட்டிலும்
பயனற்றதாகும் காமம்
மேல்
புணர்த்து - (வி) ஒன்றுசேர், இணை, combine, unite, connect
நோதலே செய்யேன் நுணங்கு இழையாய் இ செவ்வி
போதல் உண்டாம்-கொல் அறிந்து புனல் புணர்த்தது
ஓஓ பெரிதும் வியப்பு - பரி 24/38-40
வருந்தமாட்டேன், நுண்ணிய வேலைப்பாடமைந்த அணிகலன்களையுடையவளே! இத்தகைய தருணத்தில்
நீ இங்கு இருப்பாய் என அறிந்து அந்த மாலையை நீர் கொண்டுவந்து சேர்த்தது
ஓஓ இது பெரிதும் வியப்பிற்குரியது
மேல்
புணர்ப்பு - (பெ) 1. சேர்க்கை, joining
2. (தோழியர்)கூட்டம், ஆயம்
3. வஞ்சனை, சூது, plot, scheme, conspiracy
1.
தாழொடு குயின்ற போர் அமை புணர்ப்பின் - நெடு 84
தாழ்ப்பாழோடு சேரப்பண்ணின, பொருத்துவாய் (நன்றாக)அமைந்த சேர்க்கையுடன்,
2.
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர் - பரி 11/89
பொய்யாக ஆட்டத்தை ஆடுகின்ற தோழியர் கூட்டத்தைக் கொண்ட அந்தக் கன்னி மகளிர்
3.
வயக்கு_உறு மண்டிலம் வட_மொழி பெயர் பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்
ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா
கை புனை அரக்கு இல்லை கதழ் எரி சூழ்ந்து ஆங்கு - கலி 25/1-4
ஒளிமிக்க ஞாயிற்று மண்டிலத்துக்குரிய வடமொழிப் பெயரான பகன் என்ற கண்ணற்றவனின்
முகத்தைக்கொண்டவனான திருதராட்டிரனின் மக்களுள் மூத்தவனின் சூழ்ச்சியால்
ஐவர் என்று உலகம் போற்றும் அரசர்கள் உள்ளேயிருக்க,
வேலைப்பாடு மிக்க அரக்கு மாளிகையைக் கட்டுக்கடங்காத நெருப்பு சூழ்ந்துகொண்டதைப் போல்,
மேல்
புணர்வி - (வி) சேர்த்துவை, unite
தாம் அமர் காதலரொடு ஆட புணர்வித்தல்
பூ மலி வையைக்கு இயல்பு - பரி 20/110,111
தாம் விரும்பும் காதலரோடு புனலாட அவர்களைச் சேர்த்துவைத்தல்
பூக்கள் மலிந்த வையை ஆற்றின் இயல்பு.
மேல்
புணர்வு - (பெ) சேர்தல், uniting
நம் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு - நற் 165/7
நம்மை மணங்கொண்டு சேர்தல் இல்லாத அன்பில்லாதவரின் நட்பு
மேல்
புணரி - (பெ) 1. அலை, wave
2. கடல், sea
1.
புணரி பொருத பூ மணல் அடைகரை - நற் 11/6
அலைகள் மோதிய குறுமணல் அடைந்துகிடக்கும் கரையினில்
2.
கழி சுரம் நிவக்கும் இரும் சிறை இவுளி
திரை தரு புணரியின் கழூஉம் - நற் 63/9-10
கழியின் வழியாக நிமிர்ந்து செல்லும் இறுகிய பிணிப்பை உடைய குதிரைகளை
அலைகள் தருகின்ற கடல்நீர் கழுவிவிடும்
மேல்
புணை - (பெ) 1. தெப்பம், மிதவை, raft, float
2. உதவி, ஆதரவு, support, prop, help
1.
புனல் புணை அன்ன சாய் இறை பணை தோள்
மணத்தலும் தணத்தலும் இலமே - குறு 168/5,6
நீரில் விடும் தெப்பத்தைப்போல் வளைந்து இறங்கிய பருத்த தோள்களை
தழுவுதலும், பிரிதலும் இல்லையாயினோம்;
2.
முழா இமிழ் துணங்கைக்கு தழூஉ புணை ஆக - பதி 52/14
முழவு ஒலிக்கும் துணங்கைக் கூத்தில் தழுவியாடுவோருக்குத் துணையாக
மேல்
புணைவன் - (பெ) புகலிடமானவன், refuge
பணை எழில் மென் தோள் அணைஇய அ நாள்
பிழையா வஞ்சினம் செய்த
கள்வனும் கடவனும் புணைவனும் தானே - குறு 318/6-8
மூங்கில் போன்ற அழகுடைய மென்மையான தோள்களை அணைத்த அந்த நாளில்
தவறாத வஞ்சினம் கூறிய
வஞ்சகனும், அதை வாய்க்கச் செய்பவனும், நமக்குப் புகலிடமானவனும் அவன்தானே!
மேல்
புத்தி - (பெ) புதியது, new
புத்தி யானை வந்தது காண்பான் யான் தங்கினேன் - கலி 97/7
புதிய யானை இங்கு வந்தது, அதனை ஏறிப் பார்ப்பதற்கு நான் தங்கினேன்.
மேல்
புத்து - (பெ.அ) புதிய, new
உச்சி குடத்தர் புத்து அகல் மண்டையர் - அகம் 86/8
தலை உச்சியில் குடத்தினை உடையவரும், கையினில் புதிய அகன்ற மண்டை என்னும்கலத்தினை உடையவரும்
மேல்
புத்தேள் - (பெ) 1. தெய்வம், god, deity
2. புதியவர், stranger
1.
அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும் - குறு 101/2
மிகவும் அரிதில் பெறக்கூடிய சிறப்புமிக்க தேவருலகமும்,
2.
தலை கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர்
புல தகை புத்தேள் இல் புக்கான் - கலி 82/23,24
தலைக்கர்வம் கொண்டு நம்மோடு வெறுப்புக்கொண்டிருக்கும், மேலும் அருகிலிருக்கும் அந்தக்
கெடுகெட்ட புதியவள் வீட்டுக்குள் புகுந்தான்
மேல்
புத்தேளிர் - (பெ) தேவர், மேலுகத்தார், celestial beings
புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு
புக்க_வழி எல்லாம் கூறு - கலி 82/4,5
தேவர்களின் கோவிலை வலம்வந்து பின்னர் என் மகனாகிய இவனோடு
நீ சென்ற இடங்களையெல்லாம் சொல்வாயாக";
மேல்
புதல் - (பெ) புதர், சிறுதூறு, bush, thicket
நீர் வார் பைம் புதல் கலித்த
மாரி பீரத்து அலர் சில கொண்டே - குறு 98/4,5
நீர் ஒழுகி வளர்ந்த புதரின்மேல் செழித்துப் படர்ந்த
கார்காலத்து பீர்க்கின் மலர்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு சென்று
மேல்
புதவம் - (பெ) அறுகு, bermuda grass
கொழும் கால் புதவமொடு செருந்தி நீடி - பட் 243
தடித்த தண்டுகளையுடைய அறுகுடன் கோரைகளும் வளர்ந்து,
மேல்
புதவு - (பெ) 1. வாயில், entrance, gate
2. வாயிற்கதவு, door of the entrance
3. மதகு, sluice
1.
குடி நிறை வல்சி செம் சால் உழவர்
நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டி - பெரும் 197,198
குடியிருப்பு நிறைந்த, உணவினையுடைய செவ்விய சாலாக உழுகின்ற உழவர்கள்
நடை பயின்ற பெரிய எருதுகளை வாயிலிலே நுகத்தைப் பூட்டிக்கொண்டு சென்று,
2.
நல் எழில் நெடும் புதவு முருக்கி கொல்லுபு
ஏனம் ஆகிய நுனை முரி மருப்பின்
கடாஅம் வார்ந்து கடும் சினம் பொத்தி
மரம் கொல் மழ களிறு முழங்கும் பாசறை - பதி 16/5-8
நல்ல அழகிய நெடிய கதவுகளைத் தாக்கிச் சிதைத்ததால்
பன்றியைப் போலாகிய நுனி முறிந்துபோன கொம்புகளையுடைய,
மதநீர் சொரிந்து, மிக்க சினம் கொண்டு
கணைய மரங்களை ஒடித்துப்போடும் இளம் களிறுகள் முழங்கும் பாசறையில்
3.
புல் அரை காஞ்சி புனல் பொரு புதவின்
மெல் அவல் இருந்த ஊர்-தொறும் - மலை 449,450
அழகில்லாத அடிப்பகுதியையுடைய காஞ்சி மரங்களும், நீர் மோதுகின்ற மதகுகளும்,
(உழுது உழுது)மென்மையாகிப்போன விளைநிலங்களும், இருக்கும் ஊர்கள்தோறும்
மேல்
புதா - (பெ) நாரை, crane
துதைந்த தூவி அம் புதாஅம் சேக்கும் - புறம் 391/16
நெருங்கிய தூவியையுடைய புதா என்னும் நாரை தங்கும்
மேல்
புதுவ - (பெ) புதியன, new (things)
1.
அலர்வது அன்று-கொல் இது என்று நன்றும்
புலரா நெஞ்சமொடு புதுவ கூறி
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம்
அறிந்தனள் போலும் அன்னை - நற் 339/2-5
ஊராரின் பழிச்சொல்லை விளைவிக்கிறது இல்லையா இந்த உறவு என்று மிகவும்
அன்பு புலராத நெஞ்சத்துடனே புதிய புதிய காரணங்களைக் கூறிக்கொண்டு
இருவரும் வருந்தும் துன்பப் பெருக்கை
அறிந்துகொண்டாள் போலும் நம் அன்னை!
2.
புதுவ மலர் தேரும் வண்டே போல் யாழ - கலி 98/2
புதிய மலரைத் தேடியலையும் வண்டினைப் போல,
3
புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும்
அரும் பொருள்வேட்டம் எண்ணி - அகம் 389/12,13
வருத்தம் இல்லாத உள்ளத்துடன் புதிய பொருள்களைத் தந்து மகிழுவதற்குரிய
அரிய பொருளை ஈட்டிவரலை விரும்பி
மேல்
புதுவது - (பெ) புதிது, anything that is new
நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
வதுவை அயர்தல் வேண்டி புதுவதின்
இயன்ற அணியன் - அகம் 66/7-9
வரிசையாலாய மாலையைத் தரித்த மார்பனாகிய நம் தலைவன், நேற்று ஒருத்தியை
மணம்செய்துகொள்ள விரும்பி, புதிதாக
இயன்ற ஒப்பனையுடையனாகி
ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்று இ உலகத்து இயற்கை - புறம் 76/1,2
ஒருவனையொருவன் கொல்லுதலும் ஒருவற்கொருவன் தோற்றலும்
புதிது அன்று, இந்த உலகத்தின்கண் இயல்பு
மேல்
புதுவர் - (பெ) புதியவர், a stranger
நமர் கொடை நேர்ந்தனர் ஆயின் அவருடன்
நேர்வர்-கொல் வாழி தோழி நம் காதலர்
புதுவர் ஆகிய வரவும் நின்
வதுவை நாண் ஒடுக்கமும் காணும்_காலே - நற் 393/10-13
நம்மவர்கள் பெண்கொடுக்க இசைந்தால், அவருடன்
இசைவாகப் பேசுவார்களோ? வாழ்க, தோழியே!, நம் காதலர்
உனக்குப் புதியவரைப் போல் வந்து நின்றதையும், உன்னுடைய
மணநாளுக்கான நாணமுடைய அடக்கத்தையும் காணும்போது -
மேல்
புதுவிர் - (பெ) 1. புதியவர் (முன்னிலை), strangers (second person-plural)
2. புத்துணர்ச்சிபெற்றவர், fresh people (second person-plural)
1.
பண்டு நற்கு அறியா புலம் பெயர் புதுவிர்
சந்து நீவி புல் முடிந்து இடு-மின் - மலை 392,393
(அந்த வழிகள்)முன்பு(எப்படி இருந்தன என்று) நன்றாக அறியாத, நாடு மாறி வரும் புதியவராகிய நீங்கள்
(புல்,புதர் வளர்ந்து)குறுகலான வழிகளைத் தொட்டுத்தடவிப் பார்த்து, புற்களை முடிந்து (வழியுண்டாக்கி)வைப்பீர்
2.
வளை ஆன் தீம் பால் மிளை சூழ் கோவலர்
வளையோர் உவப்ப தருவனர் சொரிதலின்
பலம் பெறு நசையொடு பதி வயின் தீர்ந்த நும்
புலம்பு சேண் அகல புதுவிர் ஆகுவிர் - மலை 409-412
சங்கு (போன்ற வெண்மையான)பசுக்களின் இனிய பாலை, கிடையைச் சுற்றிக்காவல்புரியும் இடையர்களின்,
வளையல்கள் அணிந்த பெண்கள், (நீவிர்)மகிழும்படி கொண்டுவந்து (உள்ளங்கையில்)ஊற்றுகையினால், 410
(அதைக்குடித்து)பரிசில் பெறும் ஆசையோடு ஊரிலிருந்து வந்த உம்முடைய
வருத்தம் வெகுதூரம் போய்விட(முற்றிலும் நீங்க), புத்துணர்வுபெற்றவர் ஆவீர்;
மேல்
புதுவை - (பெ) புதியவன்/ள், a stranger (second person singular)
பொதி அவிழ் வைகறை வந்து நீ குறைகூறி
வதுவை அயர்தல் வேண்டுவல் ஆங்கு
புதுவை போலும் நின் வரவும் இவள்
வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவல் யானே - கலி 52/22-25
அரும்புகள் மலரும் அதிகாலையில் வந்து நீ உன் விருப்பத்தைக் கூறி
மணம் பேசி முடிக்க வேண்டும், அப்போது
புதியவன் போல் வருகின்ற உன்னுடைய வரவையும், இவளின்
திருமண வெட்கம் கொண்ட அடக்கத்தையும் நான் பார்க்கவேண்டும்.
மேல்
புதுவோர் - (பெ) புதியவர்கள், strangers
குறியவும் நெடியவும் ஊழ் இழிபு புதுவோர்
நோக்கினும் பனிக்கும் நோய் கூர் அடுக்கத்து
அலர் தாய வரி நிழல் அசையினிர் இருப்பின் - மலை 288-290
சிறிதும் பெரிதுமான(ஏற்ற இறக்கங்களில்) முறையாக(ஏறி) இறங்கி, புதியவர்கள்
பார்த்தாலே நடுங்கும் பயம் மிக்க மலைச்சரிவுகளில்,
மலர்ந்த பூக்கள் பரவிக்கிடக்கும் பட்டை பட்டையான நிழலில் களைப்பாறி இருப்பின்
மேல்
புதை - 1. (வி) 1. மறை, மூடு, conceal, cover
2. மண்ணில் அழுத்தில் உட்செலுத்து, bury, intern
- 2. (பெ) அம்புக்கட்டு, bundle of arrows
1.1
அடி புதை அரணம் எய்தி படம் புக்கு - பெரும் 69
பாதங்களை மறைக்கின்ற செருப்பைக் கோத்து, சட்டை அணிந்து
1.2
நிலம் புதை பழுனிய மட்டின் தேறல் - புறம் 120/12
நிலத்தின்கண் புதைக்கப்பட்ட முற்றிய மதுவாகிய தேறலை
2
வாயிலொடு புழை அமைத்து
ஞாயில்-தொறும் புதை நிறீஇ - பட் 287,288
பெரிய வாயில்களுடன் சிறு வாசல்களையும் உண்டாக்கி,
கோட்டை முகப்புத்தோறும் (மறைந்தெறியும்)அம்புக்கட்டுக்களைக் கட்டிவைத்து
மேல்
புந்தி - (பெ) புத்தி, புதன் என்னும் கோள், the planet jupiter
புந்தி மிதுனம் பொருந்த - பரி 11/6
புத்தி எனப்படும் புதன் மிதுன ராசியில் நிற்க
மேல்
புய் - (வி) 1. உருவு, வெளியேஇழு, pull out, extract
2. பறி, பிடுங்கு, pluck out, uproot
1.
புகர் நுதல் புண் செய்த புய் கோடு போல - கலி 53/4
மற்ற யானைகளைக் குத்தி உருவிய (இரத்தக்கரை படிந்த) கொம்பினைப் போல
2.
அகத்தோர்
புய்த்து எறி கரும்பின் விடு கழை - புறம் 28/11,12
அகத்துள்ளோர்
தாம் பிடுங்கி எறியும் கரும்பாகிய போகப்பட்ட கழை
மேல்
புயல் - (பெ) 1. மேகம், cloud
2. மழை, rain
1.
புயல் என ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் - அகம் 225/15
மேகம் போலத் தழைத்த தாழ்ந்த கரிய கூந்தல்
2.
புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில் - குறு 391/2
புள்ளிமான்கள் வெப்பத்தால் புழுங்கிய மழை நீங்கிய முல்லைநிலத்தில்
மேல்
புயலேறு - (பெ) இடி, thunder
அஞ்சுவரு மரபின் வெம் சின புயலேறு
அணங்கு உடை அரவின் அரும் தலை துமிய - புறம் 211/1,2
அஞ்சத்தக்க முறைமையுடைய வெய்ய சினத்தையுடைய இடியேறு
அச்சமுடைய பாம்பினது அணுகுதற்கரிய தலை துணிய
மேல்
புர - (வி) பாதுகா, பேணு, ஆதரி, keep, preserve, protect, cherish, tend, govern
மன்பதை புரக்கும் நன் நாட்டு பொருநன் - புறம் 68/10
உலகத்து உயிர்களைப் பாதுகாக்கும் நல்ல சோழநாட்டையுடைய வேந்தன்
பாணர் வருக பாட்டியர் வருக
யாணர் புலவரொடு வயிரியர் வருக என
இரும் கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம்
கொடுஞ்சி நெடும் தேர் களிற்றொடும் வீசி - மது 749-752
பாணர் வருவாராக, பாணிச்சியர் வருவாராக,
புது வருவாயினையுடைய புலவரோடு கூத்தரும் வருவாராக', என்று அழைத்து
(தம்)பெரிய சுற்றத்தாரைப் பேணி ஆதரிக்கும் பரிசிலர்க்கெல்லாம்
கொடுஞ்சியையுடைய நெடிய தேர்களை யானைகளோடும் வழங்கி,
புலி கொல் பெண்_பால் பூ வரி குருளை
வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும் - ஐங் 265/1,2
புலியால் கொல்லப்பட்ட பெண் பன்றியின் அழகிய வரிகள் கொண்ட குட்டியை,
வளைந்த வெண்மையான கொம்பினையுடைய ஆண்பன்றி காத்துவளர்க்கும்
ஒரு பிடி படியும் சீறிடம்
எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே - புறம் 40/10,11
ஒரு பெண்யானை படுக்கும் சிறிய இடம்
ஏழு களிற்றியானைகட்கு வேண்டும் உணவினை விளைவிக்கும் நாட்டை உடையோய்.
பூ விரி புது நீர் காவிரி புரக்கும்
தண் புனல் படப்பை எம் ஊர் ஆங்கண் - புறம் 166/28,29
பூப் பரந்த புதுநீரையுடைய காவிரி தன் நீரால் உலகத்தைக் காக்கும்
குளிர்ந்த புனல் பக்கத்தையுடைய எம்மூரிடத்தின்கண்
தன் புரந்து எடுத்த என் துறந்து உள்ளாள் - அகம் 383/1
தன்னை வளர்த்தெடுத்த என்னையும் நினையாளாய்த் துறந்து
மேல்
புரந்தரன் - (பெ) இந்திரன், Indra
ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய
போரால் வறும் கைக்கு புரந்தரன் உடைய - பரி 5/55,56
வளராத உடம்பினையுடைய நீ விரும்பி விளையாட்டாகச் செய்த அந்தப்
போரில் உன்னுடைய வெறும் கைகளுக்கே அந்த இந்திரன் தோற்றோட,
மேல்
புரவலன் - (பெ) 1. காப்பாளன், ஆதரிப்பவன், patron, benefactor
2. அரசன், king
1.
பாடுநர் புரவலன் ஆடு நடை அண்ணல் - பதி 86/8
பாடிவரும் பாணர், புலவர் ஆகியோரின் பாதுகாவலன் இந்த அசைந்த நடையையுடைய அண்ணல்
2.
நெருநல் எல்லை ஏனல் தோன்றி
திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து
புரவலன் போலும் தோற்றம் உறழ் கொள
இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி - அகம் 32/1-4
நேற்றுப் பகலில் தினைப்புனத்தில் தோன்றி,
அழகிய மணிகள் ஒளிரும் அணிகளைப் பூண்டவனாய் வந்து,
அரசன் போன்ற (தனது)தோற்றத்துக்கு மாறாக
இரத்தல் செய்யும் மக்களைப் போல பணிவான சொற்களைப் பலமுறை கூறி,
மேல்
புரவலை - (பெ) காப்பவர் (முன்னிலை), protector (second person)
இரவலர் புரவலை நீயும் அல்லை - புறம் 162/1
இரப்போர்க்கு ஈந்து பாதுகாப்பாய் நீயும் அல்லை
மேல்
புரவி - (பெ) குதிரை, horse
பணை நிலை முனைஇய பல் உளை புரவி
புல் உணா தெவிட்டும் புலம்பு விடு குரலொடு - நெடு 93,94
கொட்டிலில் நிற்பதை வெறுத்த நிறைந்த பிடரிமயிரையுடைய குதிரைகள்
புல்லாகிய உணவை வாய் நிறைய மெல்லும்(போது ஏற்படும்) தனிமை (அமைதியைக்)கெடுக்கும் ஓசையோடு
மேல்
புரவு - (பெ) 1. விளைநிலம், field
2. அரசு இறை, வரி, tax
3. கொடை, பரிசு, gift, grant
4. காத்தல், care, protection
5. அரசனால் அளிக்கப்பட்ட இறையிலி நிலம், Land given free of rent by a king;
1.
நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன் - புறம் 379/6
நெற்பயிர் நெருங்கிய விளைவயல்களையுடைய மா இலங்கை என்னும் ஊர்க்குத் தலைவன்
2.
வாரி
புரவிற்கு ஆற்றா சீறூர் - புறம் 330/5,6
வருவாய்
புரவு வரி செலுத்துவதற்கும் ஆற்றாததாய் உள்ள சீறூர்
3.
இரவலர் வரூஉம் அளவை அண்டிரன்
புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல - நற் 237/7,8
இரவலர்கள் வரும்வரை, அண்டிரன் என்போன்
அவர்களுக்குக் கொடை கொடுப்பதற்காகச் சேர்த்துவைத்த யானைகள் போல
4.
மண் உடை ஞாலம் புரவு எதிர்கொண்ட
தண் இயல் எழிலி தலையாது மாறி - பதி 18/9,10
மண் திணிந்த நிலவுலகத்தைக் காப்பதை மேற்கொண்ட
குளிர்ந்த இயல்பினையுடைய மேகங்கள் மழைபெய்யாமல் மாறிப்போய்
5.
சீறூர்
கோள் இவண் வேண்டேம் புரவே - புறம் 297/4,5
சிறிய ஊர்களை
இறையிலி நிலங்களாகக் கொள்வதை இவ்விடத்து வேண்டேம்
மேல்
புரி - 1. (வி) 1. செய், do, make
2. விரும்பு, desire
3. மிகுந்திரு, abound
4. ஆக்கு, படை, create
- 2. (பெ) 1. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கயிறு, நூல் போன்றவற்றைத் திரித்து உருவாக்கியதில்
ஒரு பகுதி, one part of a twisted twines or ropes
2. முறுக்கு, Strand, twist, as of straw
1.1
எய்யா நல் இசை செ வேல் சேஎய்
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம் புரி கொள்கை புலம் பிரிந்து உறையும்
செலவு நீ நயந்தனை ஆயின் - திரு 61-64
அளந்தறியமுடியாத நல்ல புகழினையும், செவ்விய வேலையும் உடைய முருகக்கடவுளின் -
திருவடியில் செல்லுதற்குரிய பெருமைகொண்ட உள்ளத்தோடு,
நன்மைகளையே செய்யும் மேற்கோளுடன், (இருக்கும்)இடத்தை விட்டு (வேறிடத்தில்) தங்கும்
பயணத்தை நீ விரும்பியவனாய் இருந்தால்
1.2
நால் பெரும் தெய்வத்து நல் நகர் நிலைஇய
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை
பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக - திரு 160-162
நான்கு பெரும் தெய்வங்களுள் வைத்து நல்ல நகரங்கள் நிலைபெற்றுள்ள
உலகத்தை ஓம்புதல் தொழில் ஒன்றையே விரும்பும் கோட்பாட்டையுடைய
பலராலும் புகழப்படுகின்ற (அயனை ஒழிந்த ஏனை)மூவரும் தலைவராக வேண்டி
1.3
நெடும் கயம் புரிந்த நீர் இல் நீள் இடை - நற் 148/4
நெடிய காய்ந்துபோன நீர்நிலைகள் மிகுந்த நீரற்ற நீண்ட பாலைவழியில்
1.4
அழல் புரிந்த அடர் தாமரை - புறம் 29/1
எரியால் ஆக்கப்பட்ட தகடாகச் செய்த தாமரைப்பூ
2.1
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண் - திரு 183
ஒன்பதாகிய நூலைத் தன்னிடத்தே கொண்ட, ஒரு புரி மூன்றாகிய, நுண்ணிய பூணூலையும் உடைய,
2.2
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் - சிறு 34
பொன்னை வார்த்த (கம்பியினை)ஒத்த முறுக்கு அடங்கின நரம்பின்
மேல்
புரிசை - (பெ) காப்பு மதில், fortification, wall
இடு முள் புரிசை ஏமுற வளைஇ - முல் 27
இடுமுள்ளாலான மதிலைக் காவலுறும்படி வளைத்து,
விண் உற ஓங்கிய பல் படை புரிசை - மது 352
விண்ணைத் தொடுமளவு உயர்ந்த பல படைகளையுடைய மதிலினையும்,
மேல்
புரிநூல் - (பெ) பூணூல், Sacred thread worn by the twiceborn, consisting of three strands
புரிநூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப - பரி 11/79
முப்புரியாக பூணூலை அணிந்த அந்தணர் பொன்னாலான கலன்களை ஏந்தி நிற்க'
மேல்
புரிவு - (பெ) 1. அன்பு, பரிவு, kindness, love
2. விருப்பம், desire
1.
புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும் என - கலி 11/3
அன்பும் ஆசையும் கொண்ட காதலினால் வாழ்வில் ஒன்றுபட்டிருப்பதுவும் பொருளினால் ஆகும் என்று
2.
புரிவுண்ட பாடலொடு ஆடலும் தோன்ற - பரி 23/54
யாவராலும் விரும்பப்படும் பாடலோடு ஆடலும் தோன்ற,
மேல்
புரீஇ - (வி.எ) புரிந்து என்பதன் விகாரம், change in form allowed in poetry
நலம் புரீஇ - பரி 15/63
தனக்கு நன்மை விளைவதை விரும்பி
மேல்
புருவை - (பெ) 1. ஒரு வகை ஆடு, a kind of sheep
2. இளமை, youthfulness
1.
செம் நில புறவின் புன் மயிர் புருவை
பாடு இன் தெண் மணி தோடு தலைப்பெயர - நற் 321/1,2
செம்மண் நிலமான முல்லைக்காட்டில், புல்லிய மயிரைக்கொண்ட செம்மறியாடுகளின்
ஓசை இனிய தெளிந்த மணி கட்டப்பட்ட கூட்டம், மேயும் இடத்தைவிட்டு தொழுவத்துக்குத் திரும்ப,
2.
புருவை பன்றி வருதிறம் நோக்கி
கடும் கை கானவன் கழுது மிசை கொளீஇய
நெடும் சுடர் விளக்கம் நோக்கி - அகம் 88/4-6
இளமை பொருந்திய பன்றியின் வரும்வகையினை நோக்கி
வலிய கையினையுடைய தினைப்புனங்காப்போன் பரண் மேல் கொளுத்திவைத்த
நீண்ட சுடரின் ஒளியினை நோக்கி
மேல்
புரை - 1. (வி) 1. ஒத்திரு, போன்றிரு, resemble
- 2. (பெ) 1. குற்றம், defect, fault, blemish
2. சிறப்பு, உயர்வு, greatness, eminence
3. உள்துளை, tubular hollow
4. இடுக்கு, இடைவெளி, gap, narrow space
1.1
மலை புரை மாடத்து கொழு நிழல் இருத்தர - மது 406
மலையை ஒத்திருக்கும் மாடங்களின் குளிர்ந்த நிழலில் இருக்க
2.1
கைவல் கம்மியன் முடுக்கலின் புரை தீர்ந்து
ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை - நெடு 85,86
கைத்தொழில் வல்ல தச்சன் (ஆணிகளை நன்றாக)முடுக்கியதனால் குறைபாடில்லாமல்
வெண்சிறுகடுகு அப்பிவைத்த நெய்யணிந்த நெடிய நிலையினையுடைய
2.2
புரை தவ உயரிய மழை மருள் பல் தோல் - மலை 377
சிறப்புக்களில் மிக உயர்ந்த, மேகக்கூட்டங்களோ என்று நினைக்கத்தோன்றும் பல யானைகள்
2.3
மண் புரை பெருகிய மரம் முளி கானம் - ஐங் 319/2
நிலத்தில் பொந்துகள் பெருகியுள்ள, மரங்கள் கருகிப்போன காட்டினைக்
2.4
பெரும் தெரு உதிர்தரு பெயல் உறு தண் வளி
போர் அமை கதவ புரை-தொறும் தூவ - நற் 132/3,4
பெரிய தெருவில் உதிர்ந்துவிழும் மழைத்தூறலைக் குளிர்ந்த காற்று
ஒன்றற்கொன்று பொருதியிருக்கும் கதவுகளின் இடைவெளிகள்தோறும் தூவிவிட
மேல்
புரைஇ - (வி.எ) 1. புரந்து, பாதுகாத்து, protecting
2. ஒத்து, being similar
1.
வளம் கெழு சிறப்பின் உலகம் புரைஇ - பதி 50/4
வளம் பொருந்திய சிறப்பினையுடைய உலகத்தைப் பேணிப் பாதுகாத்து
மன் உயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும்
கொண்டல் தண் தளி கமம் சூல் மா மழை - பதி 24/27,28
உலகத்து உயிர்களைக் காக்கும்பொருட்டு வலப்பக்கமாய் எழுந்து முழங்கும்
கீழ்க்காற்றால் கொணரப்பட்ட குளிர்ச்சியான நீர்த்துளிகளைக் கொண்ட நிறைசூலைக்கொண்ட கரிய மேகங்கள்
2.
வேய் அமை கண் இடை புரைஇ
சேய ஆயினும் நடுங்கு துயர் தருமே - அகம் 152/23,24
மூங்கிலில் பொருந்திய கணுக்களின் நடுவிடத்தை ஒத்து
சேய்மைக்கண் உள்ளனவாயினும் நாம் நடுங்கத்தக்க துயரினைத் தரும்.
மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே - நற் 317/10
கரிய இதழையுடைய அழகிய மலரைப் போன்ற கண்கள்
மேல்
புரைபடல் - (பெ) வருந்துதல், getting distressed
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு
புள்ளி நிலனும் புரைபடல் அரிது என
உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று - பரி 2/33-35
கூரிய வெண்மையான கொம்புகளால் பன்றிவடிவ வராகத்தில் நிலவுலகை எடுத்து அவளை மணம் செய்து
ஒரு புள்ளி அளவு நிலம்கூட வருந்துவதில்லை என்று
எண்ணிப்பார்த்து உரைப்போரின் புகழுரைகளோடு உன் செயலும் சிறந்து விளங்கும்.
மேல்
புரைமை - (பெ) உயர்வு, excellence
நீ அளந்து அறிவை நின் புரைமை - குறு 259/6
நீ அளந்து அறிவாய் உன் உயர்வினை
மேல்
புரைய - 1. (இ.சொ) ஓர் உவம உருபு, a particle of comparison
- 2. (பெ) உயர்வானது, an object with excellence
- 3 (வி.அ) மேன்மையுற, to be excellent
1.
ஆடு இயல் பெரு நாவாய்
மழை முற்றிய மலை புரைய
துறை முற்றிய துளங்கு இருக்கை - மது 83-85
அசையும் இயல்பினையுடைய பெரிய மரக்கலங்கள் -
மேகங்கள் சூழ்ந்த மலையைப் போல
துறைகள் சூழ்ந்த - அசைகின்ற இருக்கையினையும்
2.
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல
புரைய மன்ற புரையோர் கேண்மை - நற் 1/4,5
சந்தனமரத்தில் சேர்த்துக்கட்டிய இனிய தேன்கூடு போல
மேன்மையானது சிறந்தவர்களின் நட்பு
3.
அரையுற்று அமைந்த ஆரம் நீவி
புரைய பூண்ட கோதை மார்பினை - அகம் 100/1,2
நறுமணம் கூட்டி அரைக்கப்பெற்று முடிந்த சந்தனத்தைப் பூசி
உயர்வுற மாலையினைப் பூண்ட மார்பினையுடையையாய்
மேல்
புரையர் - (பெ) தக்காரும் மிக்காரும், those who are equal or greater
நலம் சால் விழு பொருள் பணிந்து வந்து கொடுப்பினும்
புரையர் அல்லோர் வரையலள் இவள் என - புறம் 343/11,12
நலம் சான்ற உயர்ந்த பொருள்களைக்கொண்டுவந்து உவகையுடன் கொடுத்தாலும்
ஒப்போரும் உயர்ந்தோரும் அல்லாதாரை மணந்துகொள்ளாளிவண் என்று
மேல்
புரையுநர் - (பெ) ஒப்பார், those who are alike
நின் அடி உள்ளி வந்தனென் நின்னொடு
புரையுநர் இல்லா புலமையோய் என - திரு 279,280
உன் திருவடியை நினைத்து வந்தேன், உன்னோடு
ஒப்பாரில்லாத மெய்யறிவுடையோனே', என
மேல்
புரையோர் - (பெ) 1. பெரியோர், சான்றோர், great or eminent persons
2. மெய்ப்பொருளுணர்ந்தோர், men of wisdom
3. கற்புடை காதல்மகளிர், loving women of chastity
1.
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல
புரைய மன்ற புரையோர் கேண்மை - நற் 1/4,5
சந்தனமரத்தில் சேர்த்துக்கட்டிய இனிய தேன்கூடு போல
மேன்மையானது சிறந்தவர்களின் நட்பு
2.
செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம் அ நலம்
பயலையால் உணப்பட்டு பண்டை நீர் ஒழிந்த_கால்
பொய் அற்ற கேள்வியால் புரையோரை படர்ந்து நீ
மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ - கலி 15/12-15
அசோக மரத்தின் அழகிய தளிரைப் போன்றது இவளின் எழில் நலம், அந்த நலம்
பசலை நோயால் பாழடிக்கப்பட்டு அதன் பண்டைய இயல்பு அழிந்தபோது -
பொய்யற்ற கேள்வியறிவால் உயர்ந்த மெய்ப்பொருளுணர்ந்தோரைச் சார்ந்து நீ பெறப்பொகும்
மாசற்ற நோன்புநெறிகளால் திருப்பித்தர முடியுமா
3.
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து
புரையோர் உண்கண் துயில் இன் பாயல்
பாலும் கொளாலும் வல்லோய் - பதி 16/17-19
எழுவரது மணிமுடியினால் செய்துகொண்ட ஆரத்தை அணிந்த - வெற்றித்திருமகள் நிறைந்த - உன் மார்பினை,
உன் காதல் மகளிரின் மையுண்ட கண்கள் உறங்குவதற்கு இனிய படுக்கையாக ஆக,
போர்மேற் செல்லும்போது நீங்குவதும், இல்லத்திலிருக்கும்போது கொள்ளுவதும் ஆகிய இரண்டுக்கும் வல்லவனே!
மேல்
புரைவது - (பெ) 1. ஒப்பானது, that which is similar
2. சிறப்பானது, that which is excellent
1,2
புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே - பதி 17/1
உனக்கு ஒப்பானது ஏதேனும் உள்ளதோ என்று எண்ணிப்பார்த்தால், சிறப்பானது ஒன்றும் இல்லை;
மேல்
புல் - (பெ) 1. பசு, ஆடு, போன்ற விலங்குகளின் உணவான சிறிய பச்சைத் தாவரம், grass
2. புல்லரிசி, பஞ்சகாலத்தில் ஏழைகள் உண்ணும் அரிசி போன்ற தானியம்,
Grain of cluster grass, Cynosurus egyptius, eaten in time of scarcity
3. புறத்தே அமைந்தது, that which is external
4. சிறியது, that which is small
5. இழிவு, meanness
6. அற்பம், smallness in value
1.
பணை நிலை முனைஇய பல் உளை புரவி
புல் உணா தெவிட்டும் புலம்பு விடு குரலொடு - நெடு 93,94
கொட்டிலில் நிற்பதை வெறுத்த நிறைந்த பிடரிமயிரையுடைய குதிரைகள்
புல்லாகிய உணவை வாய் நிறைய மெல்லும்(போது ஏற்படும்) தனிமை (அமைதியைக்)கெடுக்கும் ஓசையோடு
2.
இரு நில கரம்பை படு நீறு ஆடி
நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர் - பெரும் 93,94
கரிய நிலமாகிய கரம்பை நிலத்தில் உண்டாகின்ற புழுதியை அளைந்து,
மெல்லிய புல்லரிசியை வாரியெடுத்துக்கொண்ட வெண்மையான பல்லையுடைய எயிற்றியர்
3.
முள் அரை தாமரை புல் இதழ் புரையும்
நெடும் செவி குறு முயல் - பெரும் 114,115
முள்(இருக்கும்)தண்டு (உடைய) தாமரையின் புறவிதழை ஒக்கும்
நீண்ட காதுகளைக்கொண்ட சிறிய முயல்களை
4.
புலி போத்து அன்ன புல் அணல் காளை - பெரும் 138
புலியின் போத்தை ஒத்த, குறுந்தாடியினையுடைய (அந்நிலத்துத்)தலைவன்
5.
புல் அரை காஞ்சி புனல் பொரு புதவின் - மலை 449
அழகில்லாத அடிப்பகுதியையுடைய காஞ்சி மரங்களும், நீர் மோதுகின்ற மதகுகளும்,
6.
வெள் வாய் கழுதை புல்_இனம் பூட்டி - புறம் 392/9
வெள்ளிய வாயையுடைய கழுதையாகிய அற்பவிலங்குகளின் நிரையைப் பூட்டி
மேல்
புல்லல் - 1. (வி.வி.மு) தழுவவேண்டாம், do not embrace
- 2 (பெ) தழுவுதல், embracing
புல்லல் எம் புதல்வனை புகல் அகல் நின் மார்பில்
பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானால்
மாண் இழை மட நல்லார் முயக்கத்தை நின் மார்பில்
பூணினால் குறிகொண்டாள் புலக்குவள் அல்லளோ - கலி 79/11-14
தழுவவேண்டாம் எம் புதல்வனை! பரத்தையர் கொண்டாடும் அகன்ற உன் மார்பில் கிடக்கும்
பல வடங்களையுடைய முத்துக்கள் கோத்த மாலையைப் பிடித்து அவன் அறுத்துவிட்டால்,
மாட்சிமைப்பட்ட அணிகலனையுடைய இளைய மகளிர் உன்னைத் தழுவினார் என்று உன் மார்பில் கிடக்கும்
அந்த அணிகலனால் அறிந்துகொண்டவளாய் அவள் கோபித்துக்கொள்ளமாட்டாளோ?
2.
கொல் ஏறு கொண்டான் குருதி மயக்கு_உற
புல்லல் எம் தோளிற்கு அணியோ எம் கேளே - கலி 106/38,39
கொலைகாரக் காளையை அடக்கியவனின் குருதி கலந்து தோயத்
தழுவிக்கொள்ளுதல் என்னுடைய தோளுக்கு அழகல்லவோ! என் தோழியே
மேல்
புல்லாள் - (பெ) இழிந்த செயலைக்கொண்ட மக்கள், people of mean jobs
புலவு வில் உழவின் புல்லாள் வழங்கும்
புல் இலை வைப்பின் புலம் - பதி 15/12,13
புலால் நாறும் வில்லை வாழ்க்கையாகக் கொண்ட புல்லிய மறவர்கள் நடமாடும்
புல்லிய பனையோலை வேய்ந்த ஊர்களையுடைய பகைநிலங்களை
மேல்
புல்லாளர் - (பெ) சிறுமைத்தனம் உடையவர், people of mean mindedness
சினவல் ஓம்பு-மின் சிறு புல்லாளர் - புறம் 292/4
வெகுளுதலை விட்டொழிவீர்களாக, சிறிய புல்லாண்மையுடையவர்களே
மேல்
புல்லி - (பெ) சங்ககாலக் குறுநில மன்னன், a chieftain of sangam period
இவன் கள்வர் கோமான் புல்லி என்று அழைக்கப்படுகிறான்.
இவனைப் பாடிய சங்ககாலப் புலவர்கள், கல்லாடனார்(அகம் 83,209), மாமூலனார்(அகம் 61, 295, 311, 393)
இவன் ”களவர் கோமான்” என்றும் ”இளையர் பெருமகன்” என்றும் அடைமொழியுடன் குறிப்பிடப்படுகிறான்.
இவன் மழபுலம் என்ற நாட்டை வென்றான்.
வேங்கட நாட்டை ஆண்டவன் புல்லி. புல்லி ஆண்ட நாட்டுக்கு மேற்கில் மழநாடு, புன்னாடு, கொண்கானம் என்னும்
கொண்கான நாடு ஆகியவை இருந்தன.
புல்லி ஆண்டு வந்த வேங்கட மலைப்பகுதியில் வேற்றுமொழி வழங்கியதாக
மாமூலனார் குறிப்பிடுகிறார்( அகநானூறு, 295:11.15).
மழ புலம் வணக்கிய மா வண் புல்லி
விழவு உடை விழு சீர் வேங்கடம் பெறினும் - அகம் 61/12,13
கல்லா இளையர் பெருமகன் புல்லி
வியன் தலை நன் நாட்டு வேங்கடம் கழியினும் - அகம் 83/9,10
மாஅல் யானை மற போர் புல்லி
காம்பு உடை நெடு வரை வேங்கடத்து உம்பர் - அகம் 209/8,9
பொய்யா நல் இசை மா வண் புல்லி - அகம் 359/12
நிரை பல குழீஇய நெடுமொழி புல்லி - அகம் 393/18
மேல்
புல்லிகை - (பெ) மகளிர் அணியும் ஒரு காதணி, குதிரைகளுக்கு அணியும் கன்ன சாமரைக்கு உவமை,
An ear ornament for women, likened to the tassels for horse's ears;
ஞால் இயல் மென் காதின் புல்லிகை சாமரை - கலி 96/11
தொங்கும் இயல்புடைய மென்மையான காதிலிருக்கும் புல்லிகை என்னும் காதணியே கன்னத்தின் சாமரையாகவும்
மேல்
புல்லியார் - (பெ) இழிந்தவர், low, base persons
சிறப்பு செய்து உழையரா புகழ்பு ஏத்தி மற்று அவர்
புறக்கொடையே பழி தூற்றும் புல்லியார் தொடர்பு போல் - கலி 25/15,16
சிறப்புகள் பல செய்து அருகிலிருந்து புகழ்ந்து பாராட்டிவிட்டு, அவர்
புறத்தே அகன்றவுடன் பழி தூற்றுகின்ற புன்மையாளர் போல
மேல்
புல்லீயாய் - (ஏ.வி.மு) தழுவுவாய், embrace (as command)
பக்கத்து புல்லீயாய் என்னுமால் - கலி 94/26
பக்கவாட்டில் வந்து தழுவுவாய் என்கிறான்
மேல்
புல்லு - 1. (வி) 1. தழுவு, embrace
- 2. (பெ) தழுவுவது, embracing
1
கொக்கு உரித்து அன்ன கொடு மடாய் நின்னை யான்
புக்கு அகலம் புல்லின் நெஞ்சு ஊன்றும் புறம் புல்லின்
அக்குளுத்து புல்லலும் ஆற்றேன் அருளீமோ - கலி 94/18-20
கொக்கை உரித்ததைப் போன்ற வளைந்த மூட்டுவாய் போன்ற கூனியே! உன் கைகளுக்குள் நான்
புகுந்து உன் மார்பினைத் தழுவினேனாயின் என் நெஞ்சிலே உன் கூன் அழுந்தும், உன் முதுகைத் தழுவினால்
கிச்சுக்கிச்சு மூட்டியதைப் போல் தழுவமுடியாதபடி ஆவேன், அருள்வாயாக,
2.
வீழா கொள்கை வீழ்ந்த கொண்டி
மல்லல் மார்பு மடுத்தனன்
புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே - நற் 174/9-11
பிற பெண்களை விரும்பாத கொள்கையுடைய நம் தலைவன் இப்போது விரும்புகின்ற அந்தப் பரத்தையைத்
தன் வளப்பம் பொருந்திய மார்பினில் சேர்த்தனன்;
அவனைத் தழுவுவது எப்படி, அன்பு இல்லாத போது?
மேல்
புல்லென் - (பெ.அ) பொலிவிழந்த, புன்மையுடைய, having no splendour, lackluster
திறவா கண்ண சாய் செவி குருளை
கறவா பால் முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில் - சிறு 130-132
திறக்காத கண்ணையுடைய சாய்ந்த செவியினையுடைய குட்டி,
கறக்கப்படாத பாலினையுடைய முலையை உண்ணுதலை(த் தன் பசி மிகுதலால்) பொறுத்தலாற்றாது,
ஈன்றணிமையையுடைய நாய் ஒலியெழுப்பும் புன்மையுடைய அடுக்களையில்
பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள் - கலி 3/4
தாங்க முடியாத காம நோயோடு பொலிவிழந்த நெற்றியைக் கொண்ட இவள்
புல்லென்று - வி.அ
எவ்வி இழந்த வறுமை யாழ்_பாணர்
பூ இல் வறும் தலை போல புல்லென்று
இனை-மதி வாழியர் நெஞ்சே - குறு 19/1-3
எவ்வி என்ற வள்ளலை இழந்ததால் வறுமையுற்ற யாழ்ப்பாணரின்
பொற்பூ இல்லாத வெறும் தலை போல, பொலிவின்றி
வருந்துவாயாக! வாழ்வாயாக நெஞ்சே!
புல்லென - வி.எ
மெல்லம்புலம்பன் பிரியின் புல்லென
புலம்பு ஆகின்றே தோழி கலங்கு நீர் - நற் 38/5,6
நம் நெய்தல்நிலத் தலைவன் பிரிந்துசென்றால், பொலிவிழந்து
வெறிச்சோடிப்போய்விடுகிறதே, தோழி!
புல்லென - வி
நின் நிலை கொடிதால் தீம் கலுழ் உந்தி
நம் மனை மட_மகள் இன்ன மென்மை
சாயலள் அளியள் என்னாய்
வாழை தந்தனையால் சிலம்பு புல்லெனவே - குறு 327/4-7
உனது செயல் கொடியதாகும்; இனிதான கலங்கியநீரைக் கொணரும் ஆறே!
நம் மனையிலுள்ள இளையமகள் இன்னவாறான மெல்லிய
சாயலுடையவள், இரங்கத்தக்கவள் என்று பாராமல்
வாழைமரங்களைப் பெயர்த்துக் கொணர்கிறாய், மலைச்சரிவுகள் பொலிவற்றுப்போக
மேல்
புல்வாய் - (பெ) கலைமான், antelope, deer, Antilope cervicapra
விசைத்த வில்லர் வேட்டம்போகி
முல்லை படப்பை புல்வாய் கெண்டும்
காமர் புறவினதுவே - அகம் 284/9-11
வேகமாக இழுத்து நாண் பூட்டிய வில்லினராய் வேட்டையாடி
முல்லைநிலத் தோட்டத்தே மானை அறுத்து உண்ணும்
அழகிய காட்டின்கண்ணது
புல புல்வாய் கலை பச்சை - புறம் 166/11
காட்டுநிலத்து வாழும் புல்வாய்க் கலையினது உறுப்புத்தோல்
கானம் மேய்ந்து வியன் புலத்து அல்கும்
புல்வாய் இரலை நெற்றி அன்ன
பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவிய - புறம் 374/1-3
காட்டின்கண் மேய்ந்துவிட்டு அகன்ற கொல்லைக்கண் தங்கும்
புல்வாய் என்னும் மானினது ஆணின் நெற்றி மயிர் போல
பொற்றாமரை விளங்கும் சென்னியிலுள்ள சிதறிக்கிடக்கும் தலைமயிர் அடங்கிப்படியுமாறு.
புல்வாய் என்பது blackbuck என்று சொல்லப்படும் மான் இனம்..
இது இந்தியத் துணைக் கண்டத்தைத் தோன்றிடமாகக் கொண்ட மான் இனமாகும்.
இதில் ஆண் மான் இரலை என்றும் பெண் மான் கலை என்றும் அழைக்கப்படுகின்றது.
இதுதவிர புல்வாய் மானுக்கு திருகுமான், வெளிமான், முருகுமான் என்று பல்வேறு தமிழ்ப்பெயர்கள் உள்ளன.
இம்மான்கள் அகன்ற சமதரை வெளிகளில் பெருந்திரள்களாக குடியிருந்தன.
மேல்
புல - (வி) 1. கோபித்துக்கொள், சினந்துபேசு, be indignant
2. வெறு, dislike
3. வருந்து, de distressed
1.
நின் மனையோள்
யாரையும் புலக்கும் எம்மை மற்று எவனோ - ஐங் 87/3,4
உன் மனைவி
யாரையுமே சினந்து பேசுவாள் - என்னை மட்டும் சும்மா விடுவாளா?
மகிழ்நன் மாண் குணம் வண்டு கொண்டன-கொல்
வண்டின் மாண் குணம் மகிழ்நன் கொண்டான்-கொல்
அன்னது ஆகலும் அறியாள்
எம்மொடு புலக்கும் அவன் புதல்வன் தாயே - ஐங் 87-90
புதுப்புதுப் பெண்டிரை நாடிச் செல்லும் தலைவனின் சிறந்த குணத்தை வண்டுகள் பற்றிக்கொண்டனவோ?
புதுப்புது மலர்களைத் தேடிச் செல்லும் வண்டுகளின் சிறந்த குணத்தைத் தலைவன் பற்றிக்கொண்டானோ?
அவன் குணம் அப்படிப்பட்டது என்பதனை அறியாள்,
என்னோடு கோபித்துக்கொள்ளும் அவனுடைய மகனின் தாய்.
2.
துறை கேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை
நம்மொடு புலக்கும் என்ப - அகம் 106/5,6
துறை பொருந்திய ஊரனின் மனைவி தன் கணவனை
நம்மொடு கூட்டி வெறுத்துப்பேசுகின்றாள் என்பர்
3.
புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர் - மலை 203
(யானைகள் தினைப்புனத்தை அழுப்பதற்காக)
வருந்தி, பிஞ்சுத்தன்மை நீங்கிய(பிஞ்சுத்தன்மை நீங்கிக் காய்ந்த) தினைப்புனத்தைச் சுற்றிவந்த குறவர்கள்,
மேல்
புலத்தல் - (பெ) 1. கோபித்துக்கொள்ளுதல், சினந்துபேசுதல், being indignant
2. வெறுத்தல், disliking
1.
புல்லேன் மகிழ்ந புலத்தலும் இல்லேன் - நற் 340/1
தழுவமாட்டேன், தலைவனே! உன்னைக் கோபித்துக்கொள்ளுதலும் இல்லை;
2.
நும்_வயின் புலத்தல் செல்லேம் எம்_வயின்
பசந்தன்று கண்டிசின் நுதலே - அகம் 376/12,13
(சேரிப்பரத்தை நின்னைக் கவர்ந்துசென்றாளாக)
நும்பால் யாம்வெறுத்தல் இல்லேம், எம்மிடத்து
நுதல் பசலையுற்றது காண்பாயாக
மேல்
புலத்தி - (வி) கோபித்துக்கொள்கிறாய், (you) get angry
ஊடல் யாங்கு வந்தன்று என யாழ நின்
கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி
நறும் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து
வறும் கை காட்டிய வாய் அல் கனவின்
ஏற்று ஏக்கற்ற உலமரல்
போற்றாய் ஆகலின் புலத்தியால் எம்மே - அகம் 39/20-25
(உனக்கு)ஊடல் எங்ஙனம் வந்தது?’ என்று உன்
பக்கம் உயர்ந்த புருவங்களுடன் திரண்டு குறுகிய நெற்றியை நீவிவிட்டு,
மணமுள்ள பக்கக் கூந்தலைக் கோதிவிட்ட நல்ல நேரத்தில்
வெறுங்கையாய் ஆக்கிய அந்தப் பொய்க் கனவினின்றும்
கண்விழித்து உள்ளம் நலிவடைந்த துயரத்தை
ஏற்றுக்கொள்ளாததினால் கோபித்துக்கொள்கிறாய் என்னை.
மேல்
புலப்பு - (பெ) தனிமை, loneliness, solitariness
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலப்பில் போல புல்லென்று
அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே - குறு 41/4-6
மக்கள் கைவிட்டுப்போனபின், அணில்கள் ஓடியாடும் முற்றத்தையுடைய
தனிமைப்பட்ட வீட்டைப் போல பொலிவிழந்து
வருந்துகிறேன் தோழி அவர் பிரிந்துசென்ற போது.
மேல்
புலம் - (பெ) 1. வயல், விளைநிலம், arable land, rice field
2. நிலம், land
3. இடம், Place, location, region, tract of country
4. திக்கு, திசை, direction, quarter
5. பொறி, sense organs
6. அறிவு, knowledge
1.
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியா கல்லென் சுற்றமொடு
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போல
தானும் உண்ணான் உலகமும் கெடுமே - புறம் 184/7-11
வேந்தன் அறிவால் மெல்லியனாகி, நாள்தோறும்
தரம் அறியாத ஆரவாரத்தையுடைய சுற்றத்தோடு கூடி
அன்புகெடக் கொள்ளும் பொருள் தொகுதியை விரும்பின்
யானை புகுந்த விளைவயல் போல,
தானும் உண்ணப்பெறான் உலகமும் கெடும்
2.
பெய்த புலத்து பூத்த முல்லை
பசு முகை தாது நாறும் நறு நுதல் - குறு 323/4,5
மழை பெய்த நிலத்தில் பூத்த முல்லையின்
பசிய மொட்டின் பூந்தாது மணக்கும் நறிய நெற்றியையுடைய
3.
யாண்டு பல கழிய வேண்டு புலத்து இறுத்து
மேம்பட மரீஇய வெல் போர் குருசில் - மது 149,150
ஆண்டுகள் பல கழியுமாறு (நீ)விரும்பும் இடத்திலே தங்கி,
(அந்நிலங்கள்)மேன்மைபெற அங்குத் தங்கிய வெல்லும் போரினையுடைய தலைவனே
4.
வெள்ளி தென் புலத்து உறைய விளை வயல்
பள்ளம் வாடிய பயன் இல் காலை - புறம் 388/1,2
வெள்ளியாகிய மீன் தென் திசையில் நிற்க, விளைவயல்களும்
நீர்நிலைகளும் வற்றிய பயனில்லாத காலமாகிய
5.
பெண்மை பொதுமை பிணையிலி ஐம் புலத்தை
துற்றவ துற்றும் துணை இதழ் வாய் தொட்டி - பரி 20/50,51
உன் பெண்மை யாவர்க்கும் பொதுவாகிப்போனதால் காப்பு என்று ஒருவரும் இல்லாதவளே! ஐம்புல இன்பத்தை மட்டும்
நுகரும் இயல்புடைய காமுகப் பன்றிகள் நுகரும் இரண்டு உதடுகளையுடைய வாயைத் தொட்டியாக உடையவளே!
6.
புலத்தோடு அளவிய புகழ் அணிந்தோரும் - பரி 23/38
அறிவோடு கூடிய புகழை அணிகலனாகக் கொண்டோரும்,
மேல்
புலம்பல் - (பெ) 1. ஏமாற்றம், தனிமையுணர்வு போன்றவற்றால் ஏங்குதல், lamenting, bemoaning
2. வருந்துதல், grieving
1.
கலந்து ஆங்கே என் கவின் பெற முயங்கி
புலம்பல் ஓம்பு என அளிப்பான் போலவும் - கலி 128/12,13
என்னோடு கலந்து கூடி, அங்கே நான் இழந்துபோன என் அழகை நான் திரும்பப் பெறும்படி தழுவிக்கொண்டு
புலம்புவதைத் தவிர்ப்பாயாக என்று எனக்கு அருள்செய்தான் போலவும்,
2.
புலம்பல் போயின்று பூத்த என் கடும்பே - புறம் 380/15
பொற்பூவும், பொன்மாலையும் கொண்டு மகிழும் என் சுற்றத்தார் வருந்துதல் இலராயினர்.
மேல்
புலம்பு - 1. (வி) 1. தனித்திரு, be solitary, be only one
2. தனித்திருந்து வருந்து, be lonely and despair
3. தனிமைத்துயரில் வாடு, fade away due to loneliness
4. வருத்தம்கொள், grieve
5. எதிரொலி, echo
6. ஒலியெழுப்பு, sound
7. அரற்று, mourn, wail, cry put
- 2. (பெ) 1. தனிமை, loneliness
2. தனிமைத்துயர், grief due to loneliness
3. ஒற்றை, single
4. வருத்தம், distress
1.1
புனல் ஆடு மகளிர் இட்ட பொலம் குழை
இரை தேர் மணி சிரல் இரை செத்து எறிந்தென
புள் ஆர் பெண்ணை புலம்பு மடல் செல்லாது - பெரும் 312-314
நீராடுகின்ற மகளிர் (நீரில்)நழுவவிட்டுச்சென்ற பொன்னாற் செய்த மகரக்குழையினை,
இரையைத் தேடுகின்ற (நீல)மணி(போலும்) மீன்கொத்தி (தனக்கு)இரை என எண்ணிப் பாய்ந்தெடுத்து,
பறவைகள் நிறைந்திருக்கின்ற பனைமரத்தின் தனித்த மடலுக்குச் செல்லாமல்,
1.2
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ நாளும்
பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் ஆங்கே - குறு 11/1-3
சங்கினை அறுத்துச் செய்யப்பட்ட ஒளிரும் வளை நெகிழ, நாள்தொறும்
தூக்கம் இல்லாமல் கலங்கி அழும் கண்ணோடு தனித்து வருந்தி
இப்படி இங்கே தங்கியிருத்தலிலிருந்து விடுபடுவோம்;
1.3
இவள் நலம் புலம்ப பிரிய
அனை நலம் உடையளோ மகிழ்ந நின் பெண்டே- ஐங் 57/3,4
இவளின் பெண்மை நலத்தைத் தனிமையில் வாடவிட்டுப் பிரிந்துசெல்ல
அந்த அளவுக்குப் பெருநலம் உடையவளோ, தலைவனே! உன் பரத்தை?
1.4
குறும் கை இரும் புலி கோள் வல் ஏற்றை
பூ நுதல் இரும் பிடி புலம்ப தாக்க - நற் 36/1,2
குட்டையான கைகளையுடைய பெரிய புலியின் கொல்லுதலில் வல்ல ஆண்புலி
அழகிய நெற்றியையுடைய பெரிய பெண்யானை வருந்தும்படி தாக்கி
1.5
அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்ப களிறு அட்டு
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும் - நற் 112/2-4
அரும்புகள் முற்றிலும் இல்லாமல் மலர்ந்த கரிய அடிப்பகுதியையுடைய வேங்கை மரத்தில்
வண்டுகள் ஒலியெழுப்பும் அடுக்குமலைகள் எதிரொலி செய்ய, களிற்றினைக் கொன்று
அச்சமற்ற உள்ளத்தையுடைய சிங்கம் நடமாடும்
1.6
பொறி படு தட கை சுருக்கி பிறிது ஓர்
ஆறு இடையிட்ட அளவைக்கு வேறு உணர்ந்து
என்றூழ் விடர் அகம் சிலம்ப
புன் தலை மட பிடி புலம்பிய குரலே - நற் 318/6-9
வரிகளையுடைய தன் நீண்ட கையினைச் சுருக்கி, வேறு ஒரு
பாதையில் சென்றுவிட்டதும், அதனை வேறாக உணர்ந்து
வெயில் பரவிய மலைப் பிளப்புகளில் எதிரொலிக்குமாறு
புல்லிய தலையைக்கொண்ட இளம் பெண்யானை பிளிறிக்கொண்டு ஒலித்த குரலை
1.7
கடலொடு புலம்புவோள் கலங்கு அஞர் தீர
கெடல் அரும் காதலர் துனைதர பிணி நீங்கி - கலி 144/68,69
கடலோடு புலம்பிக்கொண்டிருந்தவளின் கலக்கம் தரும் துன்பம் தீரும்படியாக,
ஒழுக்கம் குன்றாக் காதலர் விரைந்து ஓடிவர, தன் காமநோய் நீங்கி,
2.1
பணை நிலை முனைஇய பல் உளை புரவி
புல் உணா தெவிட்டும் புலம்பு விடு குரலொடு - நெடு 93,94
கொட்டிலில் நிற்பதை வெறுத்த நிறைந்த பிடரிமயிரையுடைய குதிரைகள்
புல்லாகிய உணவை வாய் நிறைய மெல்லும்(போது ஏற்படும்) தனிமை (அமைதியைக்)கெடுக்கும் ஓசையோடு
2.2
நல் கவின் தொலையவும் நறும் தோள் நெகிழவும்
புள் பிறர் அறியவும் புலம்பு வந்து அலைப்பவும் - குறி 9,10
(அவளுடைய)நல்ல அழகு கெடவும், நறுமணமிக்க தோள்கள் மெலியவும்,
வளை (கழலுதலைப்)பிறர் அறியவும், தனிமைத் துயர் (அவள் உள்ளத்தில்)தோன்றி வருத்தவும்,
2.3
புலி பல் கோத்த புலம்பு மணி தாலி - அகம் 7/18
புலிப்பல்லோடு கோக்கப்பெற்ற ஒற்றை மணித் தாலியினையும்
2.4
கயம் புக்கு அன்ன பயம் படு தண் நிழல்
புனல் கால்கழீஇய மணல் வார் புறவில்
புலம்பு விட்டு இருந்த புனிறு இல் காட்சி
கலம் பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ - மலை 47-50
குளத்தில் மூழ்கியதைப் போன்ற பயனைத் தருகின்ற குளிர்ந்த நிழலில்,
வெள்ள நீர் தூய்மைப்படுத்திய மணல்பரப்பு (ஆங்காங்கே)நீண்டுகிடக்கும் முல்லைநிலத்தின்கண்,
(நடந்துவந்த)வருத்தத்தைக் கைவிட்டு அமர்ந்திருந்த புதுமைப்பொலிவு இல்லாத(தளர்ந்த) தோற்றத்தையுடைய,
அணிகலன்களைப் பெறும் கூத்தர் குடும்பத்திற்குத் தலைவனே
மேல்
புலர் - (வி) 1. (ஈரம்) உலர், become dry
2. விடி, dawn
3. காய்ந்துபோ, become parched
4. குறை, dwindle
5. சூடு அல்லது வெம்மை குறை, decrease (in heat)
6. புலால் நாற்றம் வீசு, stink with the smell of raw meat,
1.
சாவம் தாங்கிய சாந்து புலர் திணி தோள் - சிறு 98
வில்லை எடுத்த சந்தனம் பூசி உலர்ந்துபோன திண்ணிய தோளினையும்
2.
வைகு புலர் விடியல் மை புலம் பரப்ப - அகம் 41/1
பின்னிருட்டு புலர்ந்த விடியல் வேளையில் எருமைகளை மேய்நிலத்திற்கு ஓட்டிவிட,
3.
அறு நீர் பைம் சுனை ஆம் அற புலர்தலின்
உகு நெல் பொரியும் வெம்மைய யாவரும் - அகம் 1/12,13
நீர் அற்ற பசுமையான சுனைகள் ஈரப்பசையே இன்றிக் காய்ந்துபோனதால்
நெல்விழுந்தால் பொரிந்துபோகும் அளவு வெம்மையுடைய
4.
யான் யாய் அஞ்சுவல் எனினும் தான் என்
பிரிதல் சூழான்-மன்னே இனியே
கானல் ஆயம் அறியினும் ஆனாது
அலர் வந்தன்று-கொல் என்னும் அதனால்
புலர்வது-கொல் அவன் நட்பு எனா
அஞ்சுவல் தோழி என் நெஞ்சத்தானே - நற் 72/6-11
"நான் எமது தாய்க்கு அஞ்சுகிறேன்" என்று சொன்னாலும், தான் என்னைவிட்டுப்
பிரிந்துசெல்லுதலை எண்ணமாட்டான்; இப்பொழுதோ,
கானலில் உள்ள விளையாட்டுத் தோழியருக்குத் தெரிந்தாலும், அதனைப் பொறுக்காமல்
பழிச்சொல் வந்துவிடுமோ என்று கூறுகின்றான்; அதனால்
குறைவுபட்டதோ அவன் காதல் என்று
அஞ்சுகிறேன் தோழி என் மனத்துக்குள்
5.
அவையா அரிசி அம் களி துழவை
மலர் வாய் பிழாவில் புலர ஆற்றி - பெரும் 275,276
அவிக்காத(நெல்லின்) அரிசி(பச்சரிசி)யை அழகிய களி(யாகத் துழாவி அட்ட) குழைசோற்றை 275
அகன்ற வாயையுடைய தட்டுப் பிழாவில் சூடு குறைய ஆற்றி,
6.
இரும்பு வடித்து அன்ன கரும் கை கானவன்
விரி மலர் மராஅம் பொருந்தி கோல் தெரிந்து
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி
இகல் அடு முன்பின் வெண் கோடு கொண்டு தன்
புல் வேய் குரம்பை புலர ஊன்றி - அகம் 172/6-10
இரும்பினை வார்த்துச் செய்தாற் போன்ற வலிய கையினையுடைய வேட்டுவன்
விரிந்த மலரினையுடைய வெண்கடம்பினைச் சார்ந்து நின்று அம்பினை ஆய்ந்துகொண்டு
வரி பொருந்திய நெற்றியினையுடைய களிற்றின் அரிய மார்பில் செலுத்தி
பகையினைக் கொல்லும்வலியினையுடைய அதன் வெள்ளிய கொம்பினைக் கொண்டுவந்து தனது
ஊகம் புல்லால் வேய்ந்த குடிசையில் புலால் நாற்றம்வீச ஊன்றுதல்செய்து
மேல்
புலர்த்து - (வி) உலரச்செய், cause to dry
மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்ன
சேவலாய் சிறகர் புலர்த்தியோய் எனவும் - பரி 3/25,26
பெரிய வானத்திலிருந்து நிற்காமல் வழிகின்ற மழைநீர் வறண்டுபோகும்படி, அன்னத்தின்
சேவலாய்ச் சிறகுகளால் உலரச் செய்தவனே என்றும்
மேல்
புலர்வு - (பெ) காய்ந்துபோதல், becoming dried
சிறு கோல் இணர பெரும் தண் சாந்தம்
வகை சேர் ஐம்பால் தகைபெற வாரி
புலர்வு_இடத்து உதிர்த்த துகள் படு கூழை - நற் 140/2-4
சிறிய கிளைகளில் பூங்கொத்துக்களையுடைய மிகவும் குளிர்ந்த சந்தனத்தைப்
பிற பொருள்களையும் சேர்த்துக் கூந்தலில் அழகு உண்டாகப் பூசி,
அவை காய்ந்துபோன பின் உதிர்ந்துபோன துகள்கள் பரவிய கூந்தல்
மேல்
புலரி - (பெ) வைகறைப்பொழுது, day break
நொய் மர விறகின் ஞெகிழி மாட்டி
பனி சேண் நீங்க இனிது உடன் துஞ்சி
புலரி விடியல் புள் ஓர்த்து கழி-மின் - மலை 446-448
(உடைப்பதற்கு எளிதான)சுள்ளிக் குச்சிகளைக் கொள்ளியாகத் தீமூட்டி,
குளிர் முற்றிலும் விட்டுப்போக இனிதே சேர்ந்து தூங்கி,
பொழுது புலர்ந்த அதிகாலையில் பறவைகளின் குரலைக்கேட்டுப் போவீராக
மேல்
புலவர் - (பெ) 1. புலமையுடையவர், கற்றவர், learned person, scholar
2. செய்யுள் இயற்றும் திறனுடையவர், கவிஞர், poet
1.
மாலை மார்ப நூல் அறி புலவ - திரு 261
மாலையணிந்த மார்பையுடையவனே, நூல்களை அறிந்த புலவனே,
2.
புலவர் ஏத்த ஓங்கு புகழ் நிறீஇ - பதி 20/14
புலவர்கள் புகழ்ந்துபாட, ஓங்கிய புகழை நிலைநாட்டி,
மேல்
புலவல் - (பெ) 1. புலால் நாற்றம், smell of flesh or fish
2. வெறுப்பு மொழிகள், words of wrath or displeasure
1.
உரவு கடல் உழந்த பெரு வலை பரதவர்
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண்
கல்லென் சேரி புலவல் புன்னை
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும் - நற் 63/1-4
வலிமை மிக்க கடலில் சென்று வருந்திய, பெரிய வலைகளைக் கொண்ட பரதவர்
மிகுதியாகப் பெற்ற மீன்களைக் காயவைத்த புதிய மணற்பரப்பாகிய அவ்விடத்தில்
மிகுந்த ஆரவாரமுள்ள சேரியை அடுத்த புலால்நாறும் இடத்திலுள்ள புன்னையின்
விழாவுக்குரிய மணம் விளங்கும் பூங்கொத்துகள் உடன் மலர்ந்து மணங்கமழும்
2.
போர் எதிர்ந்த அற்றா புலவல் நீ கூறின் என்
ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது - கலி 89/5,6
மற்றொன்றுடன் சண்டைக்கு வந்தது போல் வெறுப்பு மொழிகளை நீ கூறினால் என்னுடைய
அருமையான உயிர் நிற்கும் வழி என்ன?"
மேல்
புலவாதி - (ஏ.வி.மு) புலந்துகொள்ளவேண்டாம், கோபிக்காதே, do not be angry
புரிந்து நீ எள்ளும் குயிலையும் அவரையும் புலவாதி - கலி 33/27
மனம் வேறுபட்டு, நீ உன்னை இகழும் குயிலையும், அவரையும் கோபிக்காதே!
மேல்
புலவாய் - (ஏ.வி.மு) பிணக்குக்கொள்ளவேண்டாம், do not sulk
தண் துறை ஊரன் தண்டா பரத்தமை
புலவாய் என்றி தோழி புலவேன் - நற் 280/4,5
குளிர்ந்த ஆற்றுத்துறைகளைக் கொண்ட ஊரினனுடைய நீங்காத பரத்தைமை பொருட்டு
அவன் மீது பிணக்குக்கொள்ளவேண்டாம் என்கிறாய் தோழி! அவன் மீது கோபங்கொள்ளேன் -
மேல்
புலவி - (பெ) ஊடல், பிணக்கு, feigned displeasure, sulkiness
குளவியொடு
கூதளம் ததைந்த கண்ணியன் யாவதும்
முயங்கல் பெறுகுவன் அல்லன்
புலவி கொளீஇயர் தன் மலையினும் பெரிதே - நற் 119/8-11
காட்டு மல்லிகையுடனே
கூதளத்து மலரையும் நெருக்கமாய்ச் சேர்த்துக்கட்டிய தலைமாலையை உடையவன் ஒருபோதும்
என்னுடைய தழுவுதலைப் பெறமாட்டான்
என்மீது பிணக்குக் கொண்டாலும் கொள்ளட்டும், தன் மலையைக் காட்டிலும் பெரிதாக.
புள்ளே புனலே புலவி இ மூன்றினும்
ஒள் ஒளி சேய்தா ஒளி கிளர் உண்கண் கெண்டை - பரி 16/38,39
கள்ளுண்டதாலும், நீராடியதாலும், கணவருடன் ஊடியதாலும் ஆகிய மூன்று காரணங்களினால்
மகளிரின் ஒளிமிக்க மையுண்ட கண்களாகிய கெண்டைமீன்கள் தம் சிவந்த ஒளி மேலும் சிவந்து நிற்க,
மேல்
புலவு - 1. (வி) வெறு, dislike, abhor
- 2. (பெ) புலால் நாற்றம், smell of meat or fish
1.
உள்ளாற்று கவலை புள்ளி நீழல்
முழூஉ வள்ளூரன் உணக்கும் மள்ள
புலவுதி மாதோ நீயே - புறம் 219/1-3
ஆற்றின் நடுவே உள்ள இடைவெளியில், புள்ளிப்பட்ட மரநிழலில் இருந்து
உடம்பாகிய முழுத்தசையை (உண்ணாநோன்பிருந்து) வாட்டும் வீரனே
(நான் தாமதமாக வந்ததினால்) என்னை வெறுத்தாயோ நீயே?
2.
புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல் - சிறு 181
புலால் நாறும் கயலை(முழுகி) எடுத்த பொன்(னிறம் போலும்) வாயையுடைய (நீல)மணி(போன்ற) மீன்கொத்தியின்
வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம் - பெரும் 119
கூரிய முனை மழுங்கின புலால் நாறும் வாயையுடைய வேல்களை
மேல்
புலன் - (பெ) 1. அறிவு, wisdom, intelligence
2. அறிவுள்ளோர், புலவர், wise men, poet
3. புலம், விளைநிலம், arable land
1.
அன்பு இலை ஆதலின் தன் புலன் நயந்த
என்னும் நாணும் நன்_நுதல் உவப்ப
வருவை ஆயினோ நன்றே - நற் 375/4-6
உமக்கு எம்மீது அன்பு இல்லை; ஆதலினால், அவளுடைய அறிவின்வழியே ஒழுகுகின்ற
என்னிடத்தில் கூடத் தன் விருப்பத்தை வெளிப்படையாகக் கூற வெட்கப்படும் இந்த நல்ல நெற்றியையுடையாள் மகிழும்படி
- நீ மணம்பேச வருவாயானால் மிகவும் நல்லது;
2.
நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாட கூடலார்
புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ - கலி 35/17,18
நிலத்தின் பெருமை உலகோர் நாவில் நடமாடும் நீண்ட மாடங்களைக் கொண்ட கூடல்மாநகரத்தவர்
புலவர் நாவில் பிறந்த பாடல்களைப் புதிதுபுதிதாய்க் கேட்டு இன்புறும் காலம் அன்றோ?
3.
மா ஆடிய புலன் நாஞ்சில் ஆடா - பதி 25/1
உன் குதிரைப்படைகள் பாய்ந்துசென்ற நிலங்களில் கலப்பைகள் உழுதுசெல்லமாட்டா;
மேல்
புலா - (பெ) 1. புலவு, புலால் நாற்றம், smell of flesh or fish
2. இறைச்சி, மீன், flesh, fish
3. தொண்டைத் தசை, throat flesh
1.
கொடும் திமில் பரதவர் வேட்டம் வாய்த்து என
இரும் புலா கமழும் சிறுகுடி பாக்கத்து - அகம் 70/2
வளைந்த படகினையுடைய பரதவர் மீன் வேட்டை நன்கு கைகூடிற்றாக
பெரிய அளவில் புலால் நாற்றம் வீசும் சிறிய குடிகளையுடைய கடற்கரையூரில்
2.
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து
கரும் கால் வெண்_குருகு எனவ கேள்-மதி - நற் 54/3,4
மிக்க புலவைத் தின்னும் உன் கிளையுடன் சற்றுத் தாமதித்து,
கரிய காலைக் கொண்ட வெண்ணிறக் குருகே! நான் சொல்வதைக் கேட்பாயாக!
3.
வெருகின்
இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை
உயிர் நடுக்குற்று புலா விட்டு அரற்ற - புறம் 326/1-3
காட்டுப்பூனையாகிய
இருளில் வந்து வருத்தும் பகைக்கு அஞ்சிய மிக்க இளமைபொருந்திய பெட்டைக்கோழி
உயிர்ப்பும் நடுக்கமும்கொண்டு தொண்டைத்தசையைத் திறந்து கூவி
மேல்
புலால் - (பெ) 1. இறைச்சி, மாமிசம், ஊன், மீன், raw meat, flesh, fish
2. இறைச்சி நாற்றம், smell of raw meat or fish
1.
பூ ஆர் காவின் புனிற்று புலால் நெடு வேல் - புறம் 99/6
பூ நிறைந்த சோலையினையும், புதிய ஈரம் புலராத தசையினையுடைய நெடிய வேலினையுமுடைய
2.
பூத்த மாஅத்து புலால் அம் சிறு மீன் - ஐங் 10/4
பூத்த மாமரங்களையும், புலால் நாறும் சிறுமீன்களையும் உடைய
மேல்
புலாவு - (வி) இறைச்சி நாற்றம் வீசு, smell raw flesh
கேழல் அட்ட பேழ் வாய் ஏற்றை
பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும் - அகம் 8/6,7
ஆண்பன்றியைக் கொன்ற பிளந்த வாயையுடைய ஆண்புலி,
பலா மரங்கள் நெருக்கமாய் இருக்கும் குன்றுகளில் புலால் நாற இழுத்துச்செல்லும்,
மேல்
புலிகடிமால் - (பெ) ஒரு சங்ககாலச் சிற்றரசன், a chieftain of sangam period
இந்தச் சிற்றரசனின் இயற்பெயர் இருங்கோவேள். இவன் நாடு புதுக்கோட்டைச் சீமையிலுள்ள மலைநாடு.
புலிகடிமால் என்பது இவன் குடி முதல்வனுக்குப் பெயர் என்பார் உரையாசிரியர் ஔவை துரைசாமியார்.
பாரி மன்னன் இறந்த பின்னர் அவனது மிகச் சிறந்த நண்பரான புலவர், பாரி மகளிர் இருவரையும்
அழைத்துக்கொண்டு இவனிடம் சென்று அவரை மணந்துகொள்ளுமாறு வேண்டுகிறார். ஆனால் இவன்
அவர்களை மணந்துகொள்ள மறுத்துவிட்டான்.
இச் செய்திகள் புறப்பாடல்கள் 201, 202 வாயிலாக அறியக்கிடக்கின்றன.
தபலகர் என்னும் முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார். புலி ஒன்று அவரைத் தாக்க வந்தது.
சளன் என்னும் யாதவ அரசன் அவ்வழியாக வேட்டையாட வந்தான்.
முனிவர் அவனிடம் “ஹொய் சள” (சளனே ஓட்டு) என்றார்.
அவன் ஓட்டினான். அதனால் அவ்வரசன் ஹொய்சளன் எனப்பட்டான். இது ஒரு கதை.
சளன் என்னும் அரசன் சகசபுத்தை அடுத்த காட்டிலிருந்த தன் தேவதை வாஸந்தியை வழிபடச் சென்றான்.
அப்போது புலி ஒன்று அவனைத் தாக்க வந்தது. தேவதை ஒரு இரும்புத் தடியை நீட்டி ‘ஹொய் சள’ என்றது.
ஓட்டியவன் ‘ஹொய்சளன்’ எனப்பட்டான். இது வேறொரு கதை.
ஹொய்சளன் என்பதன் தமிழ் வடிவம் ‘புலிகடிமால்’ என்பர் உ.வே.சா அவர்கள்.
கி.பி. 10-14 நூற்றாண்டுகளில் கன்னடத்தை ஆண்ட ஹொய்சள அரசர்களின் மூதாதையரின் ஒரு பிரிவினர்
தமிழ்நாட்டிலும் ஆண்டுவந்தனர் என்பதைக் குறிக்கும் சான்று இது எனக் கொள்ள வேண்டும்.
ஒலியல் கண்ணி புலிகடிமாஅல்
யான் தர இவரை கொண்-மதி - புறம் 201/15,16
தழைத்த கண்ணியையுடைய புலிகடிமாலே!
யான் நினக்குத் தர இவரை (பாரி மகளிரை)க் கொள்வாயாக.
மேல்
புலித்தொடர் - (பெ) புலிப்பல் கோத்த சங்கிலி, a chain attaching tiger's teeth.
வலி புணர் யாக்கை வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட புனை மாண் நல் இல் - முல் 61,62
வலிமை கூடின உடம்பினையும் உடைய கடுமையான யவனர்,
புலிச் சங்கிலி விடப்பட்ட, அலங்கரித்தல் நிறைவான அழகிய நல்ல இல்லில்
போர்மேற்செல்லும் ஒரு தமிழ் மன்னனுக்கு, அவனது பாசறையில், அவனுக்கெனத் தனியாக
ஒரு தனி இல்லத்தை யவனர்கள் அமைத்துக்கொடுத்ததாக முல்லைப்பாட்டு குறிப்பிடுகிறது.
அந்த இல்லத்தின் முகப்பில் இந்தப் புலித்தொடரை யவனர் தொங்கவிட்டிருந்தனர் என்று
இந்தச் செய்தி கூறுகிறது.
இந்தப் புலித்தொடர் என்பதற்கு உரையாசிரியர் எவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கங்கள்
தரவில்லை. இதனை ஆய்ந்து இந்தக் கட்டுரை ஆசிரியர் ஒரு விரிவான கட்டுரை எழுதியிருக்கிறார்.
அதனைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.
பார்க்க : புலித்தொடர்
மேல்
புலிப்பல்தாலி - (பெ) புலிப்பல் கோத்த சிறுவர் கழுத்தணி,
Amulet tied on a child's neck attaching two teeth of a tiger.
புலிப்பல்தாலி புன் தலை சிறாஅர் - புறம் 374/9
சங்கஇலக்கியத்தில் சிறுவர்கள் தாலி அணிந்திருப்பதைப் பற்றிப் பல பாடல்கள் கூறுகின்றன.
புலி பல் தாலி புதல்வன் புல்லி - குறு 161/3
பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி - அகம் 54/18
புலிப்பல் தாலி புன் தலைச் சிறாஅர் - புறம் 374/9
மிகவும் இள வயதில் போர்க்கோலம் பூண்ட பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடவந்த புலவர் இடைக்குன்றூர்க்கிழார்
தாலி களைந்தன்றும் இலனே - புறம் 77/7
என்கிறார்.
புலிப்பல் தாலி அணிந்த இளம்பெண்கள் பற்றியும் குறிப்பு உள்ளது. உடன்போக்கு சென்ற தலைவியைச்
சுரத்திடைத் தேடிச்சென்ற செவிலித்தாய் தன் ஆற்றாமையை வழியில் கண்ட மானிடம் புலம்புவதாக
அமைந்த அகம்.7ஆவது பாடல் திருமணத்திற்கு முன்பு புலிப்பல்தாலி அணிந்திருந்த தலைவிபற்றிக் குறிப்பிடுகின்றது.
பொன்னொடு
புலிப்பல் கோத்த புலம்பு மணி தாலி
------------------------ ---------------------
கல் கெழு சிறுகுடி கானவன் மகளே - அகம் 7/17-22)
இப்பாடல்களில் குறிக்கப்படும் புலிப்பல் தாலி ஆண்,பெண் என இருபால் சிறுவர் சிறுமியருக்கும் உரிய அணிகலன்
என்பது தெளிவு.
குறிஞ்சி, முல்லை சார்ந்த மாந்தர்களே புலிப்பல்தாலி அணிந்திருந்தனர் என்றும் அறியமுடிகின்றது.
வீரத்தின் சின்னமாகப் புலிப்பல் தாலியை அணிந்து கொண்டனர் என்று தொ.பரமசிவன் (பண்பாட்டு அசைவுகள் 2001:52)
குறிப்பிடுவது போன்று பொருள்கொள்ளாமல் சிறுவர்களும் சிறுமியரும் புலிப்பல்தாலி அணிந்திருந்தனர் என்ற
குறிப்புகளையும் கவனத்தில்கொண்டால் அது ஒரு குலக்குறிச் சின்னமாக இருக்கலாம் எனக் கருதும் வாய்ப்புள்ளது.
எனவே புலிப்பல் தாலி திருமணத்தோடு தொடர்புடையது அல்ல எனத் தெளியலாம்.
மேல்
புலியுறை - (பெ) புலித்தோலாற் செய்த ஆயுதத்தின் மேலுறை, Sheath of sword, javelin, etc., made of tiger's skin;
திண் பிணி எஃகம் புலியுறை கழிப்ப - பதி 19/4
திண்ணிதாகப் பிணிக்கப்பட்ட வாளினை அதன் புலித்தோல் உறையிலிருந்து உருவியவாறு
மேல்
புலைத்தி - (பெ) புலையன் என்பதன் பெண்பால், the feminine form of the masculine word 'pulaiyan'.
புலையன்,புலைத்தி என்பார் அன்றைய சமுதாயத்தில் கீழ்நிலையில் இருப்பவராகக் கருதப்பட்டவர்.
ஈமச்சடங்குகள் செய்பவர், சலவைத்தொழிலாளிகள் ஆகியோர் இவ்வாறு கருதப்பட்டனர்.
வறன் இல் புலைத்தி எல்லி தோய்த்த
புகா புகர் கொண்ட புன் பூ கலிங்கமொடு - நற் 90/3,4
வறுமை இல்லாத சலவைப்பெண், பகலில் வெளுத்த
சோற்றின் பழுப்புநிறக் கஞ்சி இட்ட சிறிய பூக்களைக் கொண்ட ஆடையுடன்
மாதர் புலைத்தி விலை ஆக செய்தது ஓர்
போழில் புனைந்த வரி புட்டில் - கலி 117/7,8
அழகிய புலைத்தி விலையாகக் கொடுத்த ஒரு
பனங்குருத்து நாரால் முடைந்து கட்டப்பட்ட கூடை
முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல
தாவுபு தெறிக்கும் ஆன் மேல்
புடை இலங்கு ஒள் வாள் புனை கழலோயே - புறம் 259/5-7
தெய்வம் மெய்யின்கண் ஏறிய புலைமகளை ஒப்ப
தாவித்துள்ளும் ஆனிரை மேல்
மருங்கிலே விளங்கும் ஒள்ளிய வாளினையும் வீரக் கழலினையுமுடையோய்
மேல்
புலையன் - (பெ) சங்ககாலச் சமுதாயத்தில் கீழ்நிலையில் இருப்பதாகக்கருதப்பட்ட ஒரு வகுப்பைச் சேர்ந்தவன்,
a person belonging to a community considered to be low in sangam period
பாணர்கள், ஈமச்சடங்குகள் செய்வோர், சலவைத்தொழிலாளிகள் ஆகியோர் இவ்வாறு அழைக்கப்பட்டனர்.
துடி எறியும் புலைய
எறி கோல் கொள்ளும் இழிசின - புறம் 287/1,2
துடிப்பறை கொட்டும் புலையனே
பறையை முழக்கும் குறுந்தடியைக் கைக்கொண்டு நிற்கும் இழிநிலையில் உள்ளவனே!
வலைவர் போல சோர் பதன் ஒற்றி
புலையர் போல புன்கண் நோக்கி
தொழலும் தொழுதான் தொடலும் தொட்டான் - கலி 55/17-19
வலையை விரித்துக் காத்திருக்கும் வேட்டுவர் போல, அவன் சொல்வலையில் நான் சொக்கிப்போவேன் என்று எதிர்பார்த்து,
கொடுமைக்காரர் போல நான் வருத்தமடையும்படி பார்த்து,
என்னைக் கையெடுத்துக் கும்பிட்டான், கையால் தொட்டுப்பார்க்கவும் செய்தான்,
புதுவன ஈகை வளம் பாடி காலின்
பிரியா கவி கை புலையன் தன் யாழின்
இகுத்த செவி சாய்த்து - கலி 95/9-11
புதிது புதிதாய்க் கொடுக்கும் ஈகை வளத்தைப் பாடியவனாக, உன் காலைவிட்டுப்
பிரியாத கவிந்த கையனாக இருக்கும் உன் பாணன் தன் யாழில்
இசைக்க, அதற்குச் செவிசாய்த்து
கள்ளி போகிய களரி மருங்கில்
வெள்ளில் நிறுத்த பின்றை கள்ளொடு
புல்லகத்து இட்ட சில் அவிழ் வல்சி
புலையன் ஏவ புல் மேல் அமர்ந்து உண்டு
அழல்வாய் புக்க பின்னும் - புறம் 360/16-20
கள்ளிகள் ஓங்கியுள்ள பிணம்சுடு களத்தின்கண்
பாடையை நிறுத்திய பின் கள்ளுடனே
பரப்பிய தருப்பைப்புல்லின் மேல் படைக்கப்பட்ட சில சோறாகிய உணவை
புலையன் உண்ணுமாறு படைக்க தருப்பைப்புல் மேல் இருந்து உண்டு
தீயில் வெந்து சாம்பலானது கண்ட பின்னும்
மேல்
புவ்வம் - (பெ) கொப்பூழ், உந்தி, நாபி, navel
புவ்வ_தாமரை புரையும் கண்ணன் - பரி 15/49
தனது தொப்புள்தாமரையைப் போன்ற கண்ணையுடையவன்,
மேல்
புழகு - (பெ) 1. மலை எருக்கு, Mountain madar, Calotropis
2. புன முருங்கை, palas tree
1.
அழுந்துபட்டு அலமரும் புழகு அமல் சாரல் - மலை 219
(காலில்)மிதிபட்டு வாடிக்கிடக்கும் மலையெருக்கு மண்டிக்கிடக்கும் மலைச்சரிவுகளில்
2.
அரக்கு விரித்து அன்ன பரேர் அம் புழகுடன்
மால் அங்கு உடையம் மலிவனம் மறுகி - குறி 96,97
சாதிலிங்கத்தைப் பரப்பினாற் போன்ற பருத்த அழகினையுடைய மலையெருக்கம்பூவுடன்,
(எதைப்பறிப்பது என்று)குழப்பம் உள்ளவராயும், அவா மிகுந்தவராயும் (பலகாலும்)திரிந்து (பறித்து
”புழகு என்பது செம்பூவுமாம்; புனமுருங்கையும் என்பர்” என்கிறார் நச்சினார்க்கினியர், தம் உரையில்.
புழகு எனப்படும் மலை எருக்கு ஒரு மலைச்செடி. இதன் வேர் கிழங்காகக் கற்பிளவுகளில் பாய்ந்திருக்க
இச்செடி தழைத்து வளரும். பல செடிகள் நெருங்கியிருக்கும்.
இவற்றை மலைபடுகடாம், - "அழுந்துபட்டு அலமரும் புழகு அமல் சாரல்’ - என்னும் ஒரடியால் விளக்கியுள்ளது.
கபிலர் குறிஞ்சிப்பாட்டில் இதனைப் பரேர் அம் புழகு என்கிரார்.
பருத்து அழகானவற்றைக் குறிக்கச் சங்க இலக்கியங்களில் பரு + ஏர் = பரேர் என்னும் அடைமொழி
பல பாடல்களில் அமைந்துள்ளது. இவ்வடைமொழியோடு 'அம் என்னும் அழகுச் சொல்லையும் சேர்த்துக்
கபிலர் 'பரேரம் புழகு" என்றார். இது கொண்டு இப்பூ பருத்தது; மிக்க பேரழகுடையது என்று கொள்ளலாம்.
இதற்கு நச்சினார்க்கினியர் தம் உரையில், பருத்த அழகினையுடைய மலையெருக்கம் பூவும் என்றவர்
'செம்பூவுமாம் புனமுருங்கையும் என்பர்” என்றார். செம்பூ நிறத்தளவில் பொருந்தும். புனமுருங்கை வேறு.
மலையெருக்கே பொருந்துகின்றது. கொங்குவேளிர் , தம் பெருங்கதையில்,
பகன்றையும் பலாசும் அகன் தலை புழகும்
குளவியும் குறிஞ்சியும் வளவிய மௌவலும் - இலாவாண 12/27,28
என்றமை கொண்டு இது அகன்று விரிந்து தழைப்பதை அறியலாம்.
மேலும், கபிலர் இதன் நிறத்தையும் அழகமைப்பையும் விரிக்கும் கருத்தில் 'அரக்கு விரித்தன்ன பரேரம் புழகுடன்’
என்றார். அரக்கு போன்று செம்மை நிறங்கொண்டது; அரக்கைச் சிதறிவைத்ததுபோன்று அழகமைப்புடையது. இப்பூ.
குறிஞ்சி நிலத்துக் கோட்டுப் பூ. அரக்குச் செம்மையில் பேரழகுடையது. நற்செம்மைப் பூக்களுக்குரிய கார்ப் பருவத்தை
இதற்குக் கொள்ளலாம். இலக்கியங்களில் இப் பூவைக் காணக்கூடவில்லை.
மற்றொரு சிறப்பிடத்தைக் கபிலர் இதற்கு அமைத்துள்ளார். மலர்ப் பட்டியலை வேங்கைப் பூவுடன் முடிக்க எண்ணியவர்,
வேங்கையும் பிறவும் அரக்கு விரித்தன்ன பரேசம் புழகுடன்' என (குறி.:95, 96).வண்ண மலர்களை நிறைவேற்றினார்.
விரித்த அரக்கு புழகுக்கு இஃதொரு தனிச்சிறப்பாகும்
மேல்
புழல் - (பெ) உள்துளை, tube, anything hollow
புழல் கால் ஆம்பல் அகல் அடை நீழல் - புறம் 266/3
உள்ளே துளை பொருந்திய தண்டினையுடைய ஆம்பலினது அகன்ற இலையின் நிழலில்
மேல்
புழுக்கல் - (பெ) 1. வேகவைத்தது, அவித்தது, anything that is slightly boiled
2. சோறு, cooked rice
1.
முரவை போகிய முரியா அரிசி
விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல்
பரல் வறை கருனை காடியின் மிதப்ப
அயின்ற காலை - பொரு 113-116
(தீட்டப்படாத அரிசியிலுள்ள)வரி நீக்கப்பெற்ற(தீட்டிய) உடையாத(முழு) அரிசியின்
விரல் என்னும்படி நெடுகின, ஒரே அளவு அமைந்த, (பருக்கை பருக்கையான)வேகவைத்ததை(சோற்றை)யும்,
பருக்கைக் கற்கள் போன்று (நன்கு)பொரித்த பொரிக்கறிகளையும், தொண்டையில் மிதக்கும்படி
உண்டபொழுதின்
2.
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல் - நற் 83/5
ஆட்டிறைச்சி கலந்த நெய்யிட்டுச் சமைத்த வெண்சோற்றை,
மேல்
புழுக்கு - 1. (வி) அவி, வேகவை, boil
- 2. (பெ) வேகவைத்தது, anything that is cooked by boiling
1.
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி - புறம் 168/9
மானின் இறைச்சி வேகவைத்த புலால் நாறும் பானையின்
2.
துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின்
பராஅரை வேவை பருகு என தண்டி - பொரு 103,104
அறுகம் புல் கட்டுக்களை கவ்வித்தின்ற செம்மறிக்கிடாயின் அழகிய புழுக்கப்பட்ட(இறைச்சியின்)
பெரிய (மேல்)தொடை நெகிழ வெந்ததனைத் ‘உண்பாயாக' என்று வற்புறுத்தி
கட்டி புழுக்கின் கொங்கர் கோவே - பதி 90/25
சர்க்கரைக் கட்டியுடன் அவரை விதைகளை வேகவைத்து உண்ணும் கொங்கர்களின் அரசனே!
மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு - அகம் 136/1
குற்றம் நீங்க இறைச்சியுடன் கூட்டி வேகவைத்து ஆக்கிய நெய் மிக்க வெள்ளிய சோற்றை
யாமை புழுக்கின் காமம் வீட ஆரா - புறம் 212/3
ஆமையின் வேகவைத்த இறைச்சியுடனே வேட்கைதீர அக்களமர் உண்டு
அவரை வான் புழுக்கு அட்டி பயில்வு_உற்று - பெரும் 195
அவரை விதையின் (தோலுரித்த)வெண்மையான பருப்பை வேகவிட்டு, துழாவுதலால்
மேல்
புழுகு - (பெ) அம்பின் தலையிற் செறிக்கும் குப்பி, அம்பு நுனி, arrowhead
கொல் வினை பொலிந்த கூர்ம் குறும் புழுகின்
வில்லோர் தூணி வீங்க பெய்த
அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை - அகம் 9/1-3
கொல்லும் தொழிலில் சிறந்த, கூரிய, குறிய, புழுகு எனப் பெயர்கொண்ட
வில்வீரர் அம்புக்கூட்டில் நிறைய வைத்திருக்கும்
அம்பின் குப்பி நுனையைப் போன்று அரும்பிய இலுப்பையின்
மேல்
புழுங்கு - (வி) வெப்பத்தாலும், காற்றின் இறுக்கத்தாலும், புழுக்கமாக இரு, be sultry
புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில் - குறு 391/2
புள்ளிமான்கள் வெப்பத்தால் புழுங்கிய மழை நீங்கிய முல்லைநிலத்தில்
மேல்
புழை - (பெ) 1. துளை, hole
2. சாளரம், window
3. சிறு வாயில், திட்டிவாயில், wicket gate
4. ஒடுக்கமான வழி, narrow path
5. வாயில், gate, entrance
1.
ஏழ் புழை ஐம் புழை யாழ் இசை கேழ்த்த அன்ன இனம்
வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்ப - பரி 8/22,23
ஏழு துளை, ஐந்து துளை ஆகியவற்றைக் கொண்ட குழல்கள், யாழ் ஆகியவற்றின் இசைக்கு ஒப்பானதைப் போன்று,
தம் இனத்தை
விரும்புகின்ற தும்பியும், வண்டும், மிஞிறும் ஆரவாரிக்க,
2.
சில்_காற்று இசைக்கும் பல் புழை நல் இல் - மது 358
சில்லென வீசும் காற்று ஒலிக்கும் பல சாளரங்களையுடைய நல்ல இல்லங்களையும்
3.
வாயிலொடு புழை அமைத்து
ஞாயில்தொறும் புதை நிறீஇ - பட் 287,288
பெரிய வாயில்களுடன் சிறு வாசல்களையும் உண்டாக்கி,
கோட்டை முகப்புத்தோறும் (மறைந்தெறியும்)அம்புக்கட்டுக்களைக் கட்டிவைத்து,
4.
ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி வாள் வரி
கடுங்கண் வய புலி ஒடுங்கும் நாடன் - நற் 322/6,7
ஆட்கள் நடமாடும் அரிய ஒடுக்கமான வழியில் மறைந்திருந்து ஒளிபொருந்திய வரிகளையும்
கடுமையான கண்களையும் உடைய வலிமை மிக்க புலி ஒடுங்கியிருக்கும் நாடனாகிய தலைவனின்
5.
புலர் குரல் ஏனல் புழை உடை ஒரு சிறை - அகம் 82/13
முதிர்ந்த கதிரினையுடைய தினைப்புனத்தின் வாயிலின் ஒரு பக்கத்தே
மேல்
புள் - (பெ) 1. பறவை, bird
2. வண்டு, bee
3. குருகு, வளை, bracelet
4. கிட்டிப்புள், Trap, small stick used in the game of tip-cat
5. நல்நிமித்தம், good omen
6. கள், மதுவுண்ணல், toddy, drinking
1.
முடி வலை முகந்த முடங்கு இறா பாவை
படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே - நற் 49/3,4
முடிச்சிட்ட வலைகள் முகந்த முடங்கிய இறாமீன்கள் காய்வதை
அவற்றின் மேல் விழும் பறவைகளை விரட்டுவதால் பகலும் கழிந்தது;
2.
முழு முதல் கொக்கின் தீம் கனி உதிர்ந்தென
புள் எறி பிரசமொடு ஈண்டி பலவின்
நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல் - குறி 188-190
(அது கேட்ட)வண்டுகள் (திடுக்கிட்டுப் பறக்க, அதனால்)சிதறிய தேன் கலந்த, பலாமரத்தின்
(நன்கு பழுத்து)கட்டு விட்டு உதிர்ந்த நறிய பழத்தில் உண்டான தெளிந்த கள்ளை
3.
நல் கவின் தொலையவும் நறும் தோள் நெகிழவும்
புள் பிறர் அறியவும் புலம்பு வந்து அலைப்பவும் - குறி 9,10
(அவளுடைய)நல்ல அழகு கெடவும், நறுமணமிக்க தோள்கள் மெலியவும்,
வளை (கழலுதலைப்)பிறர் அறியவும், தனிமைத் துயர் (அவள் உள்ளத்தில்)தோன்றி வருத்தவும்,
4.
புள் கை போகிய புன் தலை மகாரோடு - மலை 253
கிட்டிப்புள் கையைவிட்டுப் போன புல்லிய தலையையுடைய மக்களாகிய சிறுவருடனே
5.
வேதின வெரிநின் ஓதி முது போத்து
ஆறு செல் மாக்கள் புள் கொள பொருந்தும்
சுரனே சென்றனர் காதலர் - குறு 140/1-3
பன்னரிவாளைப் போன்ற முதுகையுடைய முதிய ஆண் ஓந்தியானது
வழிச்செல்வோருக்கு நல் நிமித்தமாக ஒலியெழுப்பத் தங்கியிருக்கும்
பாலைநிலத்தில் சென்றனர் காதலர்;
6.
புள்ளே புனலே புலவி இ மூன்றினும்
ஒள் ஒளி சேய்தா ஒளி கிளர் உண்கண் கெண்டை - பரி 16/39,40
கள்ளுண்டதாலும், நீராடியதாலும், கணவருடன் ஊடியதாலும் ஆகிய மூன்று காரணங்களினால்
மகளிரின் ஒளிமிக்க மையுண்ட கண்களாகிய கெண்டைமீன்கள் தம் சிவந்த ஒளி மேலும் சிவந்து நிற்க,
மேல்
புள்ளு - (பெ) பார்க்க : புள்
புள்ளு நிமிர்ந்து அன்ன பொலம் படை கலி_மா - நற் 78/9
பறவைகள் எழுந்து பறந்தாற்போன்ற பொன்னால் செய்யப்பட்ட கலன்களைக் கொண்ட செருக்குள்ள குதிரை,
மேல்
புற்கை - (பெ) கஞ்சி, gruel
நல் யாழ் ஆகுளி பதலையொடு சுருக்கி
செல்லாமோ தில் சில் வளை விறலி
------------------ -------------------- ----------------------
குடுமிக் கோமாற் கண்டு
நெடு நீர் புற்கை நீத்தனம் வரற்கே - புறம் 64/1-7
நல்யாழையும், சிறுபறையையும் தோல்பையில் போட்டுக் கட்டி வைத்து அதைச் சுமந்து கொண்டு
நாம் பகைப் புலத்தில் உள்ள அவனை நாடிச் செல்வோமாக, வளையல்கள் சில அணிந்த விறலியே!
--------------------------------- ----------------------------------
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி முதுகுடுமிப் பெருவழுதியைக் கண்டு
வெறும் நீர் கலந்த பருக்கைச் சோறு தின்பதைக் கைவிட்டு வருவதற்கு.
மேல்
புற்றம் - (பெ) பார்க்க : புற்று, anthill
நெடும் கோட்டு புற்றத்து ஈயல் கெண்டி - நற் 59/2
உயர்ந்த உச்சிகளையுடைய புற்றில் இருக்கும் ஈசலையும் கிளறித் தாழியில் பிடித்துக்கொண்டு,
பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி - அகம் 64/10
பாம்புகள் தங்கும் புற்றின் ஈரமான வெளிப்பக்கத்தைக் குத்திக்
நல்_அரா உறையும் புற்றம் போலவும் - புறம் 309/3
நல்ல பாம்பு வசிக்கும் புற்றினைப் போலவும்
மேல்
புற்று - (பெ) கரையான் கட்டிய மண்கூடு, anthill
புற்று அடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின் - பதி 45/2
புற்றினில் அடங்கி இருக்கும் பாம்பைப் போன்று ஒடுங்கிக்கிடக்கும் அம்புகளையும்,
மேல்
புறக்கு - (பெ) வெளிப்பக்கம், outer side
வெண் புறக்கு உடைய திரி மருப்பு இரலை - அகம் 139/10
வெள்ளிய புறத்தினையுடைய திரிந்த கொம்பினையுடைய ஆண்மான்
மேல்
புறக்குடி - (பெ) பார்க்க : புறச்சேரி, குடியிருப்பின் வெளிப்பக்கம், outside the colony
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை
அணைய கண்ட அம் குடி குறவர்
கணையர் கிணையர் கை புனை கவணர்
விளியர் புறக்குடி ஆர்க்கும் நாட - நற் 108/2-5
தன் துணையினின்றும் பிரிந்த கொடிய யானை
அணுகுவதைக் கண்ட அழகிய குடியிருப்பின் கானவர்
அம்புகளோடும், கிணைப்பறையோடும், கையில் கட்டப்பட்ட கவண்களோடும்
பிறரை உரக்க அழைப்பவராய் தமது குடியிருப்பின் புறமெல்லாம் சென்று ஆரவாரிக்கும் நாட்டினனே
மேல்
புறக்கொடு - (வி) 1. புறமுதுகிடு, தோற்றோடு, turn back and flee after defeat
2. திரும்பி ஓடு, turn back and flee
1.
பொருவேம் என பெயர் கொடுத்து
ஒருவேம் என புறக்கொடாது - பட் 289,290
போரிடுவோம் எனச் சூள் உரைத்து,
(பின்னர் போரைக்)கைவிடுவோம் என்று கருதிப் புறமுதுகிட்டு ஓடாமல்
2.
செம் கோல் வாளி கொடு வில் ஆடவர்
வம்ப மாக்கள் உயிர் திறம் பெயர்த்து என
வெம் கடற்று அடை முதல் படு முடை தழீஇ
உறு பசி குறுநரி குறுகல் செல்லாது
மாறு புறக்கொடுக்கும் அத்தம் - நற் 164/6-10
செம்மையான கோல் வடிவிலான அம்புகளையும், வளைந்த வில்லையும் உடைய ஆடவர்
புதிதான வழிப்போக்கரின் உயிராற்றலைப் போக்கியதால்
வெம்மையான பாலைவழியின் உலர்ந்த சருகுகளின் மேல் மிக்க முடைநாற்றம் சூழ்ந்திருக்க,
மிக்க பசியையுடைய குள்ளநரி அருகில் செல்லாமல்
பின்னே திரும்பி ஓடும் பாலைவழியில்
மேல்
புறக்கொடை - (பெ) 1. தோற்று ஓடுகை, turning the back in the battle field
2. திரும்பிச்செல்லுதல், going back
1.
ஒடுங்கா தெவ்வர் ஊக்கு அற கடைஇ
புறக்கொடை எறியார் நின் மற படை கொள்ளுநர் - பதி 31/32,33
அடங்காத பகைவரின் ஊக்கம் கெடும்படியாக விரட்டி
அவர் தோற்றோடுகையில் (அவரின் முதுகினில்) வேல்களை வீசியெறியமாட்டார் -
உன் வீரம் மிக்க சேனைக்குத் தலைமைகொள்பவர்
2.
சிறப்பு செய்து உழையரா புகழ்பு ஏத்தி மற்று அவர்
புறக்கொடையே பழி தூற்றும் புல்லியார் தொடர்பு போல் - கலி 25/15,16
சிறப்புகள் பல செய்து அருகிலிருந்து புகழ்ந்து பாராட்டிவிட்டு, அவர்
புறத்தே அகன்று செல்லுகையில் பழி தூற்றுகின்ற புன்மையாளர் போல
மேல்
புறங்கடை - (பெ) வீட்டு வாசலுக்கு வெளியே, outside the front entrance of a house
நீயும் தவறு இலை நின்னை புறங்கடை
போதர விட்ட நுமரும் தவறு இலர் - கலி 56/30,31
உன்மீதும் தவறில்லை; உன்னை வாசலுக்கு வெளியே
போகவிட்ட உன் வீட்டார் மீதும் தவறில்லை;
மேல்
புறங்கா - (வி) பாதுகா, பேணு, guard, protect, save
காமர் கவினிய பேரிளம் பெண்டிர்
பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சி
சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும் - மது 465-467
ஆசைப்படும்படி அழகுபெற்ற இளமை முதிர்ந்த மகளிர்,
பூவையுடையவராய், புகையையுடையவராய், வணங்கியவராய் புகழ்ந்து வாழ்த்தி
சிறப்பாக (அவர்களாற்)பாதுகாக்கப்படும் கடவுளின் (பௌத்தப்)பள்ளியும்
மேல்
புறங்காடு - (பெ) 1. சுடுகாடு, இடுகாடு, Place of cremation or burial
2. காவற்காடு, Jungle or forest serving as defence
1.
கள்ளி ஏய்ந்த முள்ளி அம் புறங்காட்டு
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்
உப்பு இலா அவி புழுக்கல்
கைக்கொண்டு பிறக்கு நோக்காது
இழிபிறப்பினோன் ஈயப்பெற்று
நிலம் கலனாக இலங்கு பலி மிசையும்
இன்னா வைகல் வாரா முன்னே - புறம் 363/10-16
கள்ளிகள் பரந்து மூடிய முட்செடிகள் நிறைந்த சுடுகாட்டிற்குப்
பாடையில் கொண்டு போய், பின் அந்த அகன்ற இடத்தின்கண்
உப்பு இல்லாமல் வேகவைத்தசோற்றைக்
கையில்கொண்டு, பின்பக்கம் பார்க்காமல்
புலையனால் கொடுக்கப்பெற்று
நிலத்தையே உண்கலனாகக் கொண்டுவைத்து விளங்குகின்ற பலியுணவை ஏற்கும்
துன்பம் பொருந்திய இறுதிநாள் வருவதற்கு முன்னர்
2.
நொச்சி வேலி தித்தன் உறந்தை
கல் முதிர் புறங்காட்டு அன்ன
பல்முட்டின்றால் தோழி நம் களவே - அகம் 122/21-23
மதிலாகிய வேலியையுடைய தித்தன் என்பானது உறையூரைச் சூழ்ந்துள்ள
கற்கள் நிறைந்த காவல்புறங்காடு போன்ற
பல தடைகளையுடையது நமது இந்தக் களவொழுக்கம்.
மேல்
புறங்காண் - (வி) 1. புறமுதுகிடச்செய், தோற்றோடச்செய், put to flight, defeat
2. பின்னே சென்று காண், go behind and see
1.
அரி மான் இடித்து அன்ன அம் சிலை வல் வில்
புரி நாண் புடையின் புறங்காண்டல் அல்லால் - கலி 15/1,2
சிங்கம் முழங்குவதைப் போன்று முழங்கும், அழகிய சிலைமரத்தால் செய்யப்பட்ட வலிய வில்லின்
முறுக்குடைய நாணைச் சுண்டிவிட்டு ஒலியெழுப்பினாலே பகைவர் தோற்றோடக் காண்பது அன்றி,
2.
செழும் தண் மனையோடு எம் இவண் ஒழிய
செல் பெரும் காளை பொய்ம்மருண்டு சேய் நாட்டு
சுவை காய் நெல்லி போக்கு அரும் பொங்கர்
வீழ் கடை திரள் காய் ஒருங்கு உடன் தின்று
வீ சுனை சிறு நீர் குடியினள் கழிந்த
குவளை உண்கண் என் மகள் ஓர் அன்ன
செய் போழ் வெட்டிய பெய்தல் ஆயம்
மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு
மா இரும் தாழி கவிப்ப
தா இன்று கழிக என் கொள்ளா கூற்றே - நற் 271/3-12
செழுமையும் குளிர்ச்சியும் உள்ள வீட்டோடு நான் இங்கே தனித்திருக்க,
தன்னுடன் வருகின்ற பெரிய காளைபோன்றவனின் பொய்மொழிகளில் மயங்கி, தொலை நாட்டு,
சுவையுள்ள காயைக்கொண்ட நெல்லியின், வழிச்செல்வோரைப் போகவிடாமல் தடுக்கும் தோப்பில்
விழுந்துகிடக்கின்ற முற்றிலும் திரண்ட காய்களை இருவரும் சேர்ந்து தின்று,
வற்றியுள்ள சுனையிலுள்ள சிறிதளவு நீரைக் குடித்துவிட்டுக் கடந்து சென்ற
குவளை மலர்போன்ற மையுண்ட கண்களையுடைய என் மகளை, ஒன்றுபோலிருக்கும்
சிவந்த பனங்குருத்தைக் கீண்டு பதனிடுமாறு போடுதலாய
மாலைக் காலத்து விரிந்த நிலவில் சென்று பின்னே போய்க் காணும்படியாக விட்ட இதற்கு
முன்னாலேயே பெரிய கரிய தாழியிலிட்டுக் கவித்து மூடும்படி
வலிமையற்று இறந்தொழிக என் உயிரை எடுத்துக்கொள்ளாத கூற்றம்.
மேல்
புறங்கால் - (பெ) பாதத்தின் மேல்பக்கம், Upper part of the foot, instep
பேணான் துறந்தானை நாடும் இடம் விடாய் ஆயின்
பிறங்கு இரு முந்நீர் வெறு மணல் ஆக
புறங்காலின் போக இறைப்பேன் முயலின்
அறம் புணை ஆகலும் உண்டு - கலி 144/45-48
என்னைக் காக்காமல் கைவிட்டவனை நான் தேடிக் கண்டுபிடிக்கும் இடத்தை நீ எனக்கு விட்டுத்தராமலிருந்தால்
பெருகி வரும் கரிய கடலே! நீ வெறும் மணல்வெளியாய்ப் போகும்படி
என் புறங்காலால் உன் நீரை எல்லாம் இறைத்துவிடுவேன், அவ்வாறு முயன்றால்
அதற்கு அறமே துணையாகவும் இருக்கும்;
மேல்
புறங்கூற்று - (பெ) காணாவிடத்து பிறர்மேல் பழிதூற்றுகை, Slander, backbiting
மறம் திருந்தார் என்னாய் நீ மலை இடை வந்த_கால்
அறம் சாரான் மூப்பே போல் அழி_தக்காள் வைகறை
திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திரு தகும் அ திரு
புறங்கூற்று தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல் உரைத்தை காண் - கலி 38/18-21
வழியில் கொள்ளையர்கள் கொடுஞ்செயலினின்றும் மாறவில்லை என்று கருதாமல், நீ மலைவெளியில் வந்தபோது
அறநெறியைக் கைவிட்டவன் முதுமையில் சீரழிவது போல், மனம் அழிந்துபோய்க் கிடந்தவள், விடியற்காலையில்
நல்லொழுக்கமுடையவனின் செல்வம் போல் நாளும் சீர்பெற்றுச் சிறப்புறுவாள், அந்தச் சீரினால்
அயலார் கூறும் இழிப்புரைகளை மாற்றத்தக்க ஒரு வழி இருந்தால் அதை உரைப்பாயாக,
மேல்
புறங்கூறு - (வி) காணாவிடத்துப் பிறர்மேல் அலர்தூற்று, backbite, slander;
அரில் பவர் பிரம்பின் வரி புற நீர்நாய்
வாளை நாள் இரை பெறூஉம் ஊரன்
பொன் கோல் அவிர் தொடி தன் கெழு தகுவி
என் புறங்கூறும் என்ப - குறு 364/1-4
இறுகப் பின்னிய கொடிப்பிரம்பினைப் போல் வரிவரியான முதுகினைக் கொண்ட நீர்நாய்
வாளை மீனை அன்றைய ஊணவாகப் பெறும் ஊரினனான தலைவனின்
பொன்னாலான திரண்ட ஒளிவிடும் வளையல் அணிந்த, தனக்குத்தான் தகுதியைக் கொண்ட பரத்தை
என்னைப்பற்றிப் பழித்துப்பேசுகிறாள் என்று சொல்வர்;
மேல்
புறங்கொடு - (வி) முதுகுகாட்டு, தோற்று ஓடு, turn one's back, show one's back, in defeat
உடு உறும் பகழி வாங்கி கடு விசை
அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின்
புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழிதர
புள்ளி வரி நுதல் சிதைய நில்லாது
அயர்ந்து புறங்கொடுத்த பின்னர் - குறி 170-174
இறகு சேர்ந்த அம்பினை வலிந்திழுத்து, கடும் வேகத்துடன்,
தலைமை யானையின் அழகிய முகத்தில் ஆழச்செலுத்துதலினால்,
(அப்)புண் உமிழ்ந்த செந்நீர் (அதன்)முகத்தில் பரவி வழிந்துநிற்க,
புள்ளிபுள்ளியானதும் வரிகளையுடையதுமான நெற்றியின் (அழகு)அழிந்து, (அங்கே)நிற்கமாட்டாமல்,
(அக் களிறு)தளர்ந்து திரும்பி ஓடிய பின்னர்
மேல்
புறச்சேரி - (பெ) புறஞ்சேரி, நகர்க்குப் புறம்பே மக்கள் வாழும் பிரதேசம், Outskirts of a city; suburb;
பறழ் பன்றி பல் கோழி
உறை_கிணற்று புறச்சேரி
மேழக தகரொடு சிவல் விளையாட - பட் 75-77
குட்டிகளையுடைய பன்றிகளையும், பலவிதமான கோழிகளையும்,
உறைக் கிணறுகளையும் உடைய (ஊருக்குப்)புறம்பேயுள்ள சேரிகளில்
செம்மறி ஆட்டுக்கிடாயோடே கௌதாரிப் பறவை விளையாட - (இருக்கும் பட்டினம்),
மேல்
புறஞ்சாய் - (வி) தோற்றுப்போ, be defeated
மாண மறந்து உள்ளா நாண் இலிக்கு இ போர்
புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே - கலி 89/12,13
"நாம் சிறந்திருப்பதை மறந்தும் நினைக்காத இந்த வெட்கமில்லாதவனுக்கு, இந்த ஊடல் சண்டையில்
தோற்பதுபோல் காட்டிக்கொள்வாய்! நெஞ்சே!
மேல்
புறஞ்சிறை - (பெ) 1. மாளிகைக்கு வெளியே அருகிலுள்ள இடம், Premises in the neighbourhood of a palace or castle;
2. வேலி அல்லது எல்லைக்கு வெளியே உள்ள இடம், Place outside the fence, as of a field
3. அருகிலுள்ள இடம், vicinity
1.
களிறு நிலை முணைஇய தார் அரும் தகைப்பின்
புறஞ்சிறை வயிரியர் காணின் - பதி 64/7,8
களிறுகள் நிற்பதற்கு வெறுத்த, ஒழுங்காக அமைந்த உயர்ந்த கட்டுக்காவலையுடைய
அரண்மனையின் வெளிப்புறத்தில் கூத்தர்கள் வரக் காணும்போது
2.
புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து அகத்தோர்
புய்த்து எறி கரும்பின் விடுகழை - புறம் 28/1112
வேலிப்புறத்து நின்று வேண்டிய மாக்கட்கு, அறத்தைக் கருதி, அகத்துள்ளோர்
பிடுங்கி எறியும் கரும்பாகிய போகப்பட்ட கழை
3.
யாமே புறஞ்சிறை இருந்தும் பொன் அன்னம்மே - புறம் 84/2
யான் மன்னனுக்கு அருகேயுள்ள இடத்தில் இருந்தும் வருந்திப் பொன் போலும் நிறைத்தை உடையவரானோம்
மேல்
புறஞ்சொல் - (பெ) வீண் பழிச்சொல், gossip, slander
நகையினும் பொய்யா வாய்மை பகைவர்
புறஞ்சொல் கேளா புரை தீர் ஒண்மை
பெண்மை சான்று பெரு மடம் நிலைஇ
கற்பு இறைகொண்ட கமழும் சுடர் நுதல்
புரையோள் கணவ பூண் கிளர் மார்ப - பதி 70/12-16
விளையாட்டுக்கும் பொய்கூறாத வாய்மையினையும், பகைவரின்
ஒளிவுமறைவான இகழ்ச்சிப்பேச்சையும் கேளாத குற்றம் நீங்கிய அறிவினையும் கொண்ட -
நாணம் நிறைந்து, பெருமளவு கபடமின்மை நிலைபெற்று,
கற்பு நிலையாகத் தங்கின, மணங்கமழும் ஒளிபொருந்திய நெற்றியையுடைய,
சிறந்தவளுக்குக் கணவனே! - பூண்கள் அணிந்த மார்பினையுடையவனே!
மேல்
புறந்தா - (வி) 1. பாதுகா, பேணு, protect, take care of, look after
2. போற்று, புகழ், extol, adore
3. ஒளிர், பொலிவுபெறு, become shiny
1.
மன்னவன் புறந்தர வரு விருந்து ஓம்பி
தன் நகர் விழைய கூடின்
இன் உறல் வியன் மார்ப அது மனும் பொருளே - கலி 8/21-23
மன்னவன் பேணிப்பாதுகாக்க, வீட்டுக்கு வரும் விருந்தினரை உபசரித்து,
தன் மனைவி மக்கள் விரும்பும்படி, அவருடன் சேர்ந்திருப்பது,
இனிய நெருக்கமான உறவினுக்குரிய அகன்ற மார்பினையுடையவனே! அதுவே நிலைத்த பொருளும் ஆகும்.
பெயல் புறந்தந்த பூ கொடி முல்லை - குறு 126/3
மழையால் வாழ்விக்கப்பட்ட பூங்கொடியையுடைய முல்லையின்
இனிது புறந்தந்து அவர்க்கு இன் மகிழ் சுரத்தலின் - பதி 46/7
அவர்களை நன்கு உபசரித்து, அவர்க்கு இனிய கள்ளினை மிகுதியாகக் கொடுப்பதால் -
எழூஉ புறந்தரீஇ பொன் பிணி பலகை
குழூஉ நிலை புதவின் கதவு மெய் காணின் - பதி 53/15,16
கணைய மரம் காக்கின்ற, இரும்பு ஆணிகள் தைத்த பலகைகளால் ஆன
பற்பல நிலைகளையுடைய சிறிய நுழைவாயில்களையுடைய கதவுகளின் உருவத்தைக் கண்டாலே,
2.
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி
குடி புறந்தருகுவை ஆயின் நின்
அடி புறந்தருகுவர் அடங்காதோரே - புறம் 35/32-34
ஏர் மாடுகளைப் பாதுகாப்போருடைய குடியைப் பாதுகாத்து
ஏனைக் குடிமக்கலையும் பாதுகாப்பாயாயின்
நின் அடியைப் போற்றுவர் நின் பகைவர்
3.
பொடி அழல் புறந்தந்த செய்வு_உறு கிண்கிணி - கலி 85/2
பொன் தூளால் பொடிவைத்து பொலிவுற அழகாகச் செய்த சதங்கை
மேல்
புறந்தை - (பெ) புறையாறு என்பதன் மரூஉ, a city by the name poRaiyARu.
புன்னை அம் கானல் புறந்தை முன்துறை - அகம் 100/13
புன்னை மரங்களையுடைய அழகிய சோலை சூழ்ந்த புறையாற்றின் கடல்துறையின்கண் உள்ள
நறவு_மகிழ் இருக்கை நல் தேர் பெரியன்
கள் கமழ் பொறையாறு அன்ன - நற் 131/7,8
நறவுண்டு மகிழும் அரச அமர்வையுடைய நல்ல தேரினைக்கொண்ட பெரியன் என்பானின்
தேன் மணக்கும் பொறையாறு என்ற ஊரைப் போன்ற
என்று இங்கு குறிப்படப்படும் பொறையாறு என்பதே புறந்தை என்ற இந்த ஊர் என்பர்.
மேல்
புறநிலை - (பெ) 1. குறை இரந்து நிற்கும் நிலை, உதவி வேண்டிப் பிறர் புறங்கடையில் நிற்றல்,
Standing in the back-yard of one's house, seeking one's favour
2. வேறுபட்ட நிலை, மாறுபட்ட சூழல், changed condition or situation
1.
சேரி சேர மெல்ல வந்து_வந்து
அரிது வாய்விட்டு இனிய கூறி
வைகல்-தோறும் நிறம் பெயர்ந்து உறையும் அவன்
பைதல் நோக்கம் நினையாய் தோழி
---------------------- ----------------------- ---------------
பிறிது ஒன்று குறித்தது அவன் நெடும் புறநிலையே - குறு 298/1-8
நமது தெருவினை அடைய மெல்ல வந்து வந்து
அரிதாக வாயைத்திறந்து இனிய சொற்களைக் கூறி
ஒவ்வொருநாளும் தன் மேனியின் நிறம் வேறுபட்டுத் தங்கும் தலைவனின்
வருத்தம் தேங்கிய பார்வையினை நினைத்துப்பார் தோழி!
-------------------------- ------------------------------- --------------------
(குறை இரத்தலை அன்றியும்)வேறொன்றைக் குறித்தது அவன் நீளப் பின்னிற்றல்.
2.
முன் நாள்
கை உள்ளது போல்காட்டி வழிநாள்
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம் - புறம் 211/10-12
முதல்நாள்
பரிசில் கையிலே புகுந்தது போல் காட்டி, அடுத்தநாள்
பொய்யைப் பெற்றுநின்ற உனது அன்பு இடம் மாறிய நிலைமைக்கு யான் வருந்திய வருத்தத்திற்கு
மேல்
புறப்புண் - (பெ) முதுகில் பட்ட புண், Wound on the back of a person;
களி இயல் யானை கரிகால்வளவ
சென்று அமர் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
---------------------------- ---------------------------
புறப்புண் நாணி வடக்கிருந்தோனே - புறம் 66/3-8
மதம் பொருந்திய யானையையுடைய கரிகால் வளவனே!
நேற்சென்று போரை எதிர்நின்று கொன்ற நினது வலிமை தோன்ற
வென்றவனே! உன்னைக்காட்டிலும் நல்லவன் அல்லவா!
-------------------------------------- -------------------
(உன்னிடம்தோற்று முதுகிலே புண்பட்டு)
அந்த முதுகில் பட்டபுண்ணுக்கு நாணி வடக்கிருந்து உயிர்விட்டவன்.
மேல்
புறம் - (பெ) 1. வெளிப்பக்கம், outside
2. பின்பக்கம், backside
3. முதுகு, back
4. ஒட்டியுள்ள பகுதி, adjoining place
5. பக்கம், side, surface
6. இடம், place
7. உடம்பு, body
1.
களிறு களம் படுத்த பெரும் செய் ஆடவர்
ஒளிறு வாள் விழுப்புண் காணிய புறம் போந்து - நெடு 171,172
யானையை (முன்னர்)க் கொன்ற பெரும் செயலையுடைய வீரரின்,
சுடர்விடும் வாளினால் ஏற்பட்ட விழுப்புண்ணைக் காண்பதற்காக (பாசறையைவிட்டு)வெளியில் வந்து,
2.
இலங்கு வளை விறலியர் நின் புறம் சுற்ற - மலை 46
ஒளிர்கின்ற வளையல்களையும் கொண்ட விறலியர் உமக்குப் பின்னால் சூழ்ந்து வர
3.
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால் - நற் 96/5
முதுகில் தாழ்ந்து கருத்த ஒளிரும் திரண்ட கூந்தலை
4.
சாரல் புறத்த பெரும் குரல் சிறுதினை - ஐங் 282/1
மலைச் சாரலை அடுத்த பெரிய கதிர்களைக் கொண்ட சிறுதினையைக் காத்து
5.
மணி புறத்து இட்ட மா தாள் பிடியொடு - நெடு 178
மணிகளைப் பக்கங்களில் இட்ட பெரிய கால்களையுடைய பெண்யானைகளோடு,
6.
புல்லார் இன நிரை செல் புறம் நோக்கி - புறம் 257/8
பொருந்தாதாரது இனமாகிய நிரை போகின்ற இடத்தைப் பார்த்து
7.
நிறம் படு குருதி புறம் படின் அல்லது
மடை எதிர்கொள்ளா அஞ்சுவரு மரபின்
கடவுள் அயிரையின் நிலைஇ - பதி 79/16-18
மார்பினைக் கிழித்து வரும் குருதி உடம்பின் மேலே பட்டாலல்லது
பலியுணவை ஏற்றுக்கொள்ளாத அச்சம்தரும் இயல்பினையுடைய
கடவுளான கொற்றவை இருக்கும் அயிரை மலையைப் போல நிலைபெற்று
மேல்
புறம்பு - (பெ) முதுகு, back of a person
உண்ணு நீர் விக்கினான் என்றேனா அன்னையும்
தன்னை புறம்பு அழித்து நீவ - கலி 51/13,14
"நீர் உண்ணும்போது விக்கினான்" என்று சொல்ல, அன்னையும்
அவனது முதுகைத் தடவிக்கொடுக்க,
மேல்
புறம்பெறு - (வி) புறக்கொடையைப் பெறு, பகைவரை வெற்றிகொள், gain victory over one's enemies;
கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே - புறம் 373/8
கொங்குநாட்டவரை புறம்தந்து ஓடச்செய்த வெற்றியையுடைய வேந்தனே
இரவு புறம்பெற்ற ஏம வைகறை - புறம் 398/6
இரவுப்பொழுதை விரட்டியடித்த இன்பமான விடியற்காலத்தில்
மேல்
புறம்மாறு - (வி) 1. கைவிடு, abandon
2. வலிமை இழ, lose vigour or strength
1.
மரீஇ தாம் கொண்டாரை கொண்ட_கால் போலாது
பிரியும்_கால் பிறர் எள்ள பீடு இன்றி புறம்மாறும்
திருவினும் நிலை இல்லா பொருளையும் நச்சுபவோ - கலி 8/12-14
விரும்பித் தான் சேர்ந்தாரைச் சேர்ந்திருக்கும்போது இன்புறச் செய்வதைப் போலல்லாமல்,
அவரை விட்டுச் செல்லும்போது மற்றவர் அவரை இகழ்ந்துபேசும்படி, தமக்கும் ஒரு பெருமையின்றிக்
கைவிட்டுச் செல்லும்
செல்வத்தைக்காட்டிலும் விரைந்து அழியும் நிலையற்ற பொருளையா விரும்பிச் செல்கிறாய்?
2.
உரவு தகை மழுங்கி தன் இடும்பையால் ஒருவனை
இரப்பவன் நெஞ்சம் போல் புல்லென்று புறம்மாறி
கரப்பவன் நெஞ்சம் போல் மரம் எல்லாம் இலை கூம்ப - கலி 120/4-6
தன் உள்ள உறுதியின் மேன்மை தேயும்படியாக, தனக்கு வந்த வறுமையினால் ஒருவனை
இரந்துகேட்பவனின் நெஞ்சம் போல பொலிவிழந்து வலிமைகுன்றி
இரப்பவனைக் கண்டு மறைந்துகொள்பவன் நெஞ்சம் போல மரம் எல்லாம் இலைகள் எல்லாம் குவிந்துபோக
மேல்
புறமாறு - (வி) பார்க்க : புறம்மாறு
1.
நன்று புறமாறி அகறல் யாழ நின்
குன்று கெழு நாடற்கு என்னெனப்படுமோ - அகம் 398/9,10
அறத்தினைக் கைவிட்டு நீங்குதல் உன்னுடைய
குன்று பொருந்திய நாட்டினையுடைய தலைவன்க்கு யாதெனப்படுமோ?
மேல்
புறவு - (பெ) 1. காடு, forest
2. சிறுகாடு, jungle
3. முல்லைநிலம், forest tract
4. புறா, dove, pigeon
1.
கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில்
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி - முல் 24,25
காட்டாறு சூழ்ந்த அகன்ற நெடிய காட்டினில்,
நெடுந்தொலையும் மணக்கும் பிடவ மலரோடு (ஏனைப்)பசிய தூறுகளையும் வெட்டி
2.
காடே கடவுள் மேன புறவே
ஒள் இழை மகளிரொடு மள்ளர் மேன - பதி 13/20,21
காடுகள் கடவுள் விரும்பும் இடம் ஆக, முல்லைநிலங்கள்
ஒளிரும் அணிகலன்கள் அணிந்த மகளிரோடு மள்ளர்கள் விரும்பித்தங்கும் இடம் ஆக,
3.
நின் நுதல் நாறும் நறும் தண் புறவில்
நின்னே போல மஞ்ஞை ஆல - ஐங் 413/1,2
உன்னுடைய நெற்றியைப் போலவே மணங்கமழும் நறிய குளிர்ந்த முல்லைவெளியில்
உன்னைப் போலவே மயில்கள் களித்தாட,
4.
மனை உறை புறவின் செம் கால் சேவல் - நெடு 45
வீட்டில் வாழும் புறாவின் சிவந்த காலினையுடைய சேவல்
மேல்
புறன் - (பெ) பார்க்க : புறம்
முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின்
புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல்
ஆயமும் அழுங்கின்று யாயும் அஃது அறிந்தனள் - நற் 295/1-3
உச்சி சரிந்து விழுந்த மலைப்பக்கத்தில் நசுங்கிப்போன வள்ளிக்கொடி போல
புற அழகெல்லாம் அழிந்துபோய், தழைத்துத் தாழ்ந்த கரிய கூந்தலையுடைய
தோழியர் கூட்டமும் மனம்வருந்தினர்; எம் தாயும் அதனை அறிந்துகொண்டாள்;
மேல்
புறனிலை - (பெ) பார்க்க : புறநிலை, குறை இரந்து நிற்கும் நிலை, உதவி வேண்டிப் பிறர் புறங்கடையில் நிற்றல்,
Standing in the back-yard of one's house, seeking one's favour
என் குறை புறனிலை முயலும்
அண்கணாளனை நகுகம் யாமே - அகம் 32/20,21
என் தேவையை (என்னிடமே) இரந்து நிற்க முயலும்
(என்)கண் முன்னே வந்து நிற்பவனை நகையாடுவோம் யாம்.
மேல்
புன் - (பெ.அ) புல்லிய, புன்மையான, இழிவான, சிறுமையான, சிறிய, அசுத்தமான, mean, low, small, unclean
இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன
குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் - திரு 312,313
கரிய பனையின் - (உள்ளே)வெளிற்றினையுடைய - புல்லிய செறும்பை ஒத்த
கரிய நிறத்தையுடைய மயிரினையுடைய உடம்பினையும் வளைந்த அடியினையுமுடைய கரடி
புன் கொடி முசுண்டை பொறி புற வான் பூ - நெடு 13
புல்லிய கொடியையுடைய முசுட்டையில் திரண்ட புறத்தையுடைய வெண்ணிறப் பூ
புன் தலை இரும் பரதவர் - பட் 90
பரட்டைபாய்ந்த தலையினையுடைய கரிய பரதவர்
புன் கால் நாவல் பொதி புற இரும் கனி - நற் 35/2
புல்லிய அடிமரத்தையுடைய நாவல் மரத்தின் பொதியைப் போன்ற வெளிப்பகுதியையுடைய பெரிய பழத்தை
மேல்
புன்புலம் - (பெ) 1. தரிசு நிலம், waste land
2. புன்செய் நிலம், dry land
1.
புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சி - குறு 202/2
தரிசு நிலத்தில் அடர்ந்து படர்ந்த சிறிய இலையைக் கொண்ட நெருஞ்சியின்
2.
புன்புல வரகின் சொன்றியொடு பெறூஉம் - புறம் 197/12
புன்செய்நிலத்தில் விளைந்த வரகினது சோற்றுடனே பெறுகின்ற
மேல்
புன்கண் - (பெ) 1. துன்பம், Sorrow, distress, trouble, affliction, sadness
2. இழிவு, கீழ்மை, lowness, meanness
1.
இல்லோர் புன்கண் தீர நல்கும்
நாடல் சான்ற நயன் உடை நெஞ்சின் - பதி 86/6,7
பொருளில்லாதவரின் துன்பம் நீங்குமாறு அள்ளிக்கொடுக்கும்
அறத்தின் மீதான நாட்டம் மிகுந்த அன்புடைய நெஞ்சினையும்,
2.
புலம்பொடு வந்த புன்கண் மாலை - நற் 117/7
தனிமைத் துயரோடு வந்த இழிந்த மாலைப்பொழுது,
மேல்
புன்கம் - (பெ) சோறு, cooked rice
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி - புறம் 34/10
பாலின்கண் பெய்து சமைக்கப்பட்ட சோற்றைத் தேனொடு கலந்துண்டு
மேல்
புன்கு - (பெ) புங்கமரம், indian beech, Pongamia glabra;
1.
இதன் பூ பொரிப்பொரியாக இருக்கும். தளிர்கள் செந்நிறத்திலிருக்கும்.
பொரி பூ புன்கின் அழல் தகை ஒண் முறி - நற் 9/5
பொரிப்பொரியான பூக்களைக்கொண்ட புன்கமரத்தின் நெருப்பின் தன்மைத்தான ஒள்ளிய தளிரை
2.
பெண்கள் தங்கள் மார்பில் தோன்றும் சுணங்கு என்ற அழகுத்தேமலை நீக்க, இதன் தளிரைப் பூசிக்கொள்வர்.
பொரி பூ புன்கின் அழல் தகை ஒண் முறி
சுணங்கு அணி வன முலை அணங்கு கொள திமிரி - நற் 9/5,6
பொரிப்பொரியான பூக்களைக்கொண்ட புன்கமரத்தின் நெருப்பின் தன்மைத்தான ஒள்ளிய தளிரை
அழகுத்தேமல் பரந்த அழகிய முலைகளில் பொருந்தத் தேய்த்து
சோரியாஸிஸ்ஸை குணப்படுத்தும் புங்கம் மரம்
சுத்தமான காற்றை கொடுக்கக் கூடியதும், தோல் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதும்,
மூட்டு வலியை போக்கவல்லதும் உடலில் ஏற்படும் அரிப்பை குணப்படுத்த கூடியதும்,
பசியின்மை, ஈரல் நோய்களை போக்கும் தன்மை கொண்டதுமானது புங்கமரம்,
புங்க இலை தோலுக்கு ஆரோக்கியம் கொடுக்கிறது. தோல் மென்மை தன்மை அடைகிறது.
அக்கி புண்கள், அம்மை கொப்பளங்கள் சரியாகிறது
என்ற இன்றைய மருத்துவக் குறிப்புகள் இதனை மெய்ப்பிக்கின்றன.
மேல்
புன்மை - (பெ) அற்பம், இழிவு, கீழ்த்தரம், meanness, lowness, vileness
பிரிவு அரிது ஆகிய தண்டா காமமொடு
உடன் உயிர் போகுக தில்ல கடன் அறிந்து
இருவேம் ஆகிய உலகத்து
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே - குறு 57/3-6
பிரிவு என்பது அரிதாகிய துய்த்து அமையாத காமத்தோடே
பிரிவு ஏற்பட்டவுடனேயே உயிர் போவதாக; இல்லறக் கடமைகளை அறிந்து
இருவராய் வாழும் இவ்வுலகில்
ஒருவராய் வாழும் சிறுமையினின்றும் தப்புவதற்காக
மேல்
புன்றுறை - (பெ) சேரன் படைத்தலைவர்களில் ஒருவன், one of the army chiefs of King cEran
நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி
துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி
பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு
அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர் - அகம் 44/7-10
நன்னனும், ஏற்றை என்பவனும், நறிய பூண்களை அணிந்த அத்தியும்,
(பகைவர்) நெருங்குதற்கரிய மிக்க வலிமையுடைய கங்கனும், கட்டியும்,
பொன் அணிகலன்கள் அணிந்த வலிய வில்லையுடைய புன்றுறையும், என்பதாக
முன்பு அவர்கள் ஒன்றுகூடியிருந்த அளத்தற்கரிய சிறப்பு வாய்ந்த பாசறையில்,
இந்தப் புன்றுறை என்பவன் நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன் கட்டி, ஆகிய மற்ற சேரன் படைத்தலைவர்களுடன்
பாசறையில் இருந்தபோது, சோழன் பெரும்பூட் சென்னியின் படைத்தலைவனான பழையன் என்பான்,
அவருடன் போர்செய்து இறந்தான்.
மேல்
புன்னாகம் - (பெ) ஒரு மரம்/ பூ, a tree/flower
நந்தி நறவம் நறும் புன்னாகம் - குறி 91
நந்தியாவட்டை, நறைக்கொடி, நறிய புன்னாகம்
குறிஞ்சிப்பாட்டில் கபிலர் குறிப்பிடும் 99 பூக்களில் இது 87-ஆவது பூ ஆகும்.
வரையன புன்னாகமும்
கரையன சுரபுன்னையும் - பரி 11/16,17
என்ற பரிபாடல் அடிகளால் இது குறிஞ்சி நிலப் பூ என்பது உறுதியாகின்றது.
சிலர் இதனை நாகம் என்றும், புன்னை என்றும் கூறுகின்றனர்.
ஆனால், அதே குறிஞ்சிப்பாட்டில், கபிலர்,
ஆரம் காழ்வை கடி இரும் புன்னை
நரந்தம் நாகம் நல்லிருள்நாறி - குறி. 93,94
என்று, புன்னை, நாகம் ஆகிய மலர்களைத் தனியே குறித்திருப்பதால், புன்னாகம் என்பது இவற்றினும்
வேறுபட்டது என அறியலாம்.
karkanirka.org என்ற இணையதளம் இதனை calophyllum elatum bedd என்கிறது.
மேல்
புன்னை - (பெ) ஒரு மரம்/பூ, Mastwood, Calophyllum inophyllum
1.
இறவு அருந்திய இன நாரை
பூ புன்னை சினை சேப்பின் - பொரு 204,205
என்ற அடிகளால் இது ஒரு கடற்கரைப்பகுதியில் வளரும் மரம் என்பது தெரியவருகிறது.
2.
நெடும் கால் புன்னை நித்திலம் வைப்பவும் - சிறு 149
நெடிய தாளையுடைய புன்னை நித்திலம் (போல அரும்புகள்) வைக்கவும்,
என்ற அடியால், இது நீண்ட அடிப்பகுதியைக் கொண்டது என்றும் இதன் பூ, முத்துப்போல் வெண்மையாக
உருண்டு இருக்கும் என்றும் தெரியவருகிறது. பார்க்க : படம்.
3.
கொடும் கால் புன்னை கோடு துமித்து இயற்றிய
பைம் காய் தூங்கும் பாய் மணல் பந்தர் - பெரும் 266,267
வளைந்த காலையுடைய புன்னைகளின் கொம்புகளை வெட்டி(க் கால்களாகக்கொண்டு) உருவாக்கிய,
(படர்ந்த கொடியில்)பச்சைக் காய்கள் தொங்கும், பரப்பப்பட்ட மணலையுடைய பந்தலில்,
இதன் அடிமரம் நீண்டிருந்தாலும், வளைந்து இருக்கும் என்றும், அதனை வெட்டி பந்தல்காலாக நடுவர்
என்றும் தெரிய வருகிறது.
4.
ஆரம் காழ்வை கடி இரும் புன்னை - குறி 93
சந்தனப்பூ, அகிற்பூ, மணத்தையுடைய பெரிய புன்னைப்பூ
இதன் பூ மிக்க மணமுள்ளதாகவும் பெரியதாகவும் இருக்கும் என அறிய முடிகிறது.
5.
கானல் அம் சிறுகுடி கடல் மேம் பரதவர்
நீல் நிற புன்னை கொழு நிழல் அசைஇ - நற் 4/1,2
கடற்கரைச் சோலையிடத்தே அமைந்த அழகான சிறுகுடியில் வாழும் கடல்மேற்செல்லும் பரதவர்கள்
நீல நிறப் புன்னையின் கொழுவிய நிழலில் தங்கி,
இந்த மரம் நீல நிறத்தை உடையது என்றும், இலைதழைகள் மிகுந்திருப்பதால் மிகுதியான நிழலைத் தரும்
எனவும் அறிகிறோம். இங்கே நீலம் என்பது கருமையைக் குறிக்கும் என்பது,
கரும் கோட்டு புன்னை இறைகொண்டனவே - நற் 67/5
பெரும் போது அவிழ்ந்த கரும் தாள் புன்னை - நற் 231/7
என்பதால் தெளிவாகும்.
6.
நெடும் சினை புன்னை கடும் சூல் வெண்_குருகு - நற் 31/10
இதன் அடிமரம் மட்டுமல்லாமல்,இதன் கிளைகளும் நீண்டதாக இருக்கும் என அறிகிறோம்.
7.
மன்ற புன்னை மா சினை நறு வீ
முன்றில் தாழையொடு கமழும் - நற் 49/8,9
மன்றத்துப் புன்னையின் பெரிய கிளையில் உள்ள நறு மலர்கள்
வீட்டு முற்றத்தில் இருக்கும் தாழையோடு சேர்ந்து மணங்கமழும்
கடற்கரை ஓரத்தில்மட்டுமன்றி, ஊருக்குள் தெருக்களிலும் இது காணப்படும்.
8.
கல்லென் சேரி புலவர் புன்னை
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும் - நற் 63/3,4
மிகுந்த ஆரவாரமுள்ள சேரியை அடுத்த புலால்நாறும் இடத்திலுள்ள புன்னையின்
விழாவுக்குரிய மணம் விளங்கும் பூங்கொத்துகள் உடன் மலர்ந்து மணங்கமழும்
இதன் பூ மிகுந்த மணமுள்ளதால் விழாக்கொண்டாட இதனைப் பயன்படுத்துவர்.
9.
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம் - நற் 78/3
பொன் போன்ற நுண்ணிய தாதினைப் புன்னை மரங்கள் தூவும்,
இதன் பூவிலிருக்கும் மகரந்தம் பொன் நிறத்தது.
மேல்
புனம் - (பெ) மலைச்சார்பான கொல்லை, வானம்பார்த்த பூமி, upland fit for dry cultivation
புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர் - மலை 203
காய்ந்து, பிஞ்சுத்தன்மை நீங்கிய(பிஞ்சுத்தன்மை நீங்கிக் காய்ந்த) தினைப்புனத்தைச் சுற்றிவந்த குறவர்கள்,
சிறுதினை விளைந்த வியன் கண் இரும் புனத்து - குறு 375/3
சிறுதினை விளைந்த அகன்ற இடமுடைய பெரிய தினைப்புனத்தில்
இரும்பு கவர்வு_உற்றன பெரும் புன வரகே - மலை 113
(இரும்பாலாகிய)அரிவாள் வசப்பட்டன(=அரிதலுற்றன) பெரிய கொல்லைக்காட்டின் வரகுகள்;
மேல்
புனல் - (பெ) 1. நீர், water
2. நீர்ப்பெருக்கு, ஆறு, flood, river, stream
1.
தீது நீங்க கடல் ஆடியும்
மாசு போக புனல் படிந்தும் - பட் 99,100
தீவினை போகக் கடலாடியும்,
(பின்னர்)உப்புப் போக (நல்ல)நீரிலே குளித்தும்,
2.
மழை கொள குறையாது புனல் புக மிகாது - மது 424
முகில்கள் முகக்கக் குறையாது, (ஆற்று)வெள்ளம் உட்புக நிரம்பிவழியாது,
மேல்
புனவன் - (பெ) புனத்திற்கு உரியவன், owner of dry land ; பார்க்க : புனம்
குறிஞ்சிநில மக்கள், inhabitants of the hilly tracts
தினை உண் கேழல் இரிய புனவன்
சிறு பொறி மாட்டிய பெரும் கல் அடாஅர் - நற் 119/1,2
தினையை உண்ணும் காட்டுப்பன்றி வெருண்டு ஓட, தினைப்புனத்தான்
சிறிய பொறியைப் பொருத்தி வைத்த பெரிய கல்லிலான சாய்வுப்பலகையில்
புன் புலம் வித்திய புனவர் - ஐங் 246/3
புன்செய் நிலமாகிய கொல்லையில் தினையை விதைத்த குறவர்
மேல்
புனனாடு - (பெ) மேற்குக்கடற்கரைப்பகுதியிலுள்ள ஓர் நாடு, a country on the western coast
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்து என - அகம் 396/2
பொன்னாலான பூண்களையுடைய நன்னன் என்பான் புன்னாடு என்னும் நாட்டிலுள்ளாரை வெகுண்டெழுந்தானாக
இது புன்னாடு என்றும் சொல்லப்படுகிறது. புள்ளுநாடு என்பது புண்ணாடு என்றாகிப் பின்னர் புன்னாடு ஆகி, புனனாடு
ஆகியது என்பர்.
மேல்
புனன் - (பெ) புனம், பார்க்க : புனம்
பெரும் பெயல் தலைக புனனே - நற் 328/7
பெரும் மழை பெய்வதாக தினைப்புனத்தில்,
மேல்
புனிறு - (பெ) 1. ஈன்றணிமை, Recency of delivery, as of a woman
2. அண்மையில் மழை பெய்தது, (place) that had rains recently
3. அண்மையில் கதிர்விட்டது, பிஞ்சுத்தன்மை,
recently formed ear of grain, greenness as of unripe fruit
4. புதியது, raw, fresh
5. கசடு, rubbish
1.
புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போல - புறம் 68/8
ஈன்றணிமை பொருந்தி அது தீர்ந்த குழந்தைக்குச் சுரக்கும் முலை போல
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில் - சிறு 132
ஈன்றணிமையையுடைய நாய் ஒலியெழுப்பும் புன்மையுடைய அடுக்களையில்,
இரும் புனிற்று எருமை பெரும் செவி குழவி - நற் 271/1
கரிய, அண்மையில் ஈன்ற, எருமையின் பெரிய செவியினையுடைய கன்று,
வய புனிற்று இரும் பிண பசித்து என வய புலி
புகர் முகம் சிதைய தாக்கி களிறு அட்டு - நற் 383/3,4
மசக்கை நோயால் வாடிய ஈன்றணிமையான பெரிய பெண்புலிக்குப் பசித்ததாக, வலிய ஆண்புலி
புள்ளிகளையுடைய முகம் உருக்குலைந்துபோகத் தாக்கிக் களிற்றினைக் கொன்று
கன்று உடை புனிற்று ஆ தின்ற மிச்சில் - நற் 290/2
கன்றை உடைய அண்மையில் ஈன்ற பசு தின்றுவிட்டுப்போன மிச்சத்தை
மென் புனிற்று அம் பிணவு பசித்து என பைம் கண்
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க - அகம் 21/17,18
மெலிந்த, அண்மையில் ஈன்ற, அழகிய பெண்நாய் பசியுற்றது என, பசிய கண்ணை உடைய
ஆண் செந்நாய் ஆண் காட்டுப்பன்றியைத் தாக்க,
மென் மயில் புனிற்று பெடை கடுப்ப - புறம் 120/6
மெல்லிய மயிலினது ஈன்றணிய பேடையை ஒப்ப
புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு - நற் 329/4
அண்மையில் குஞ்சு பொரித்ததால் வரிசையாகப் பருத்த புள்ளிகளையுடைய முதிய பருந்தானது
2.
நிறை நீர் புனிற்று புலம் துழைஇ ஆனாய்
இரும் புறம் தழூஉம் பெரும் தண் வாடை - நற் 193/3,4
நிறைந்த நீருள்ள புதிதாய் மழைபெய்த நிலங்களில் புகுந்து, அத்துடன் நிற்காமல்
எமது பெரிய ஊர்ப்புறத்தையும் சூழவரும் பெரிய குளிர்ந்த வாடைக்காற்றே!
3.
துய் தலை புனிற்று குரல் பால் வார்பு இறைஞ்சி - நற் 206/1
மெல்லிய பஞ்சினைத் தலையிலே கொண்டு பிஞ்சுவிட்டிருக்கும் கதிர்கள் பால்பிடித்துத் தலைசாய்க்க
புயல் புறந்தந்த புனிற்று வளர் பைம் காய்
வயலை செம் கொடி - ஐங் 25/1,2
மழையினால் பேணி வளர்க்கப்பட்ட இளமையான வளர்கின்ற பச்சையான காயையுடைய
வயலையின் சிவந்த கொடியை
செழும் செய் நெல்லின் சேய் அரி புனிற்று கதிர் - அகம் 156/3
செழுமை வாய்ந்த வயலிலுள்ள நெல்லின் சிவந்த அரிகளையுடைய இளமையான கதிரை
4.
பூ ஆர் காவின் புனிற்று புலால் நெடு வேல் - புறம் 99/6
பூ நிறைந்த காவினையும், புதிய ஈரம் புலராத புலாலையுடைய நெடிய வேலினையுமுடைய
புலம்பு விட்டு இருந்த புனிறு இல் காட்சி
கலம் பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ - மலை 49,50
(நடந்துவந்த)வருத்தத்தைக் கைவிட்டு அமர்ந்திருந்த புதுமைப்பொலிவு இல்லாத(தளர்ந்த) தோற்றத்தையுடைய,
அணிகலன்களைப் பெறும் கூத்தர் குடும்பத்திற்குத் தலைவனே,
5.
புயல் புனிறு போகிய பூ மலி புறவின் - மலை 120
மழையால் கசடுகள் நீக்கப்பட்ட, பூக்கள் நிறைந்த காட்டுநிலத்தில்,
மேல்
புனை - (வி) 1. (உடை, மாலை,ஆபரணம் முதலியவை) அணி, தரி, உடுத்து, put on (as clothes, garland, jewels)
2. சூடு, wear
3. அலங்கரி, decorate, adorn
4. செய், படை, உருவாக்கு, make, create
5. ஓவியம் தீட்டு, paint, draw
6. செய்யுள் அமை, கவிதை, கதை ஆகியவை இயற்று, compose a poetry, write fiction
7. கட்டு, string, bind
8. முடை, பின்னு, plait, as an ola basket
9. (பூக்கள் போன்றவற்றைத்)தொடு, link together; to string, as beads;
10. உண்டாகு, ஏற்படு, come into existence
1.
மகளிர் கோதை மைந்தர் புனையவும்
மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும் - பரி 20/20,21
மகளிர் அணிதற்குரிய மாலைகளை மைந்தர் அணிந்துகொள்ளவும்,
மைந்தர்களின் குளிர்ச்சியான மாலைகளை மகளிர் சூடிக்கொள்ளவும்,
2.
நெறி இரும் கதுப்பின் கோதையும் புனைக - அகம் 269/2
நெளிந்த கரிய கூந்தலில் மாலையையும் நீ சூடிக்கொள்க
3.
வேலன் புனைந்த வெறி அயர் களம்-தொறும் - குறு 53/3
வேலன் ஒப்பனைசெய்த வெறியாடும் களங்கள்தோறும்
4.
கைவல் கம்மியன் கவின் பெற புனைந்த
செம் கேழ் வட்டம் சுருக்கி - நெடு 57,58
கை(வேலைப்பாட்டில்) சிறந்த கைவினைக்கலைஞன் அழகுபெறச் செய்த
சிவந்த நிறத்தையுடைய விசிறி (மூடிச்)சுருக்கிடப்பட்டு,
5.
புனையா ஓவியம் கடுப்ப - நெடு 147
முற்றிலும் தீட்டப்பெறாத கோட்டுச் சித்திரத்தை ஒப்ப(தலைவி அமர்ந்திருக்க)
6.
நாவின் புனைந்த நன் கவிதை மாறாமை - பரி 6/8
தம் நாவால் இயற்றிய(பாடிய) வையை ஆற்றைப் பற்றிய நல்ல கவிதைகள் பொய்படாமல் நிலைநிற்கச் செய்ய,
7.
கணையர் கிணையர் கை புனை கவணர் - நற் 108/4
அம்புகளோடும், கிணைப்பறையோடும், கையில் கட்டப்பட்ட கவண்களோடும்
8.
போழில் புனைந்த வரி புட்டில் - கலி 117/8
பனங்குருத்து நாரால் முடைந்து கட்டப்பட்ட கூடை"
9.
வள் இதழ் நெய்தல் தொடலையும் புனையாய் - நற் 155/2
பெரிய இதழ்களையுடைய நெய்தல் பூக்களாம் மாலையையும் தொடுக்கமாட்டாய்;
10.
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும் - நற் 330/5
இருள் உண்டாகக் கிளைத்திருக்கும் மருதமரத்தின் இனிய நிழலில் படுத்திருக்கும்
மேல்
புனைஇழை - (பெ) அன்மொழித்தொகை, transferred epithet
எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க
வினவல் ஆனா புனை_இழை கேள் இனி - அகம் 29/13,14
பற்கள் சிறந்து விளங்கும் பவள வாயில் இனிய புன்னகை கெடும்படியாகக்
கேட்டுக்கொண்டே இருக்கிறாயே, அழகிய அணிகளை உடையவளே! கேட்பாயாக, இப்போது
புனைஇழாய் என் பழி நினக்கு உரைக்கும் தான் என்ப - கலி 46/19
அணிகலன்களால் அலங்கரித்துக்கொண்டவளே! என்னுடைய குற்றத்தை உன்மேல் ஏற்றிச் சொல்கிறான்
அவன் என்றால்,
மேல்
புனைவு - (பெ) 1. வேலைப்பாடு, உருவாக்கம், workmanship, making
2. ஒப்பனை, அலங்காரம், ornamentation, decoration
1.
புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி - பெரும் 218
முடிந்த நாரால் கட்டிய உருவாக்கம் இனிதான மாலையை
2.
புனையா ஓவியம் கடுப்ப புனைவு இல்
தளிர் ஏர் மேனி தாய சுணங்கின்
----------------------- ------------------------ -----------------
செம் முக செவிலியர் கைம்மிக குழீஇ - நெடு 147-153
முற்றுப்பெறாத கோட்டுச் சித்திரத்தை ஒப்ப(தலைவி அமர்ந்திருக்க) - ஒப்பனை இல்லாத,
மாந்தளிரைப் போன்ற நிறத்தினையும், பரந்த அழகுத் தேமலையும்,
--------------------- ------------------------------- -------------------------------
சிவந்த முகத்தையுடைய செவிலித்தாயர் அளவுக்குமீறித் திரண்டு,
மேல்
|