<<முந்திய பக்கம்

சங்க இலக்கியம் - அருஞ்சொற்களஞ்சியம்
கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
ஊ - முதல் சொற்கள்
ஊக்கு
ஊகம்
ஊங்கு
ஊண்
ஊது
ஊதை
ஊம்
ஊமன்
ஊழ்
ஊழி
ஊற்றம்
ஊன்

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
  ஊக்கு 1. (வி) 1. தீவிரமாகச் செயல்படு, act with energy
         2. ஆடுகின்ற ஊஞ்சலை வேகமாக ஆட்டிவிடு, swing rapidly
         3. தூண்டப்படு, spur
         4. உயர்த்திவிடு, lift
     2. (பெ) 1. குறிதப்புதல், missing the mark
         2. ஊக்கம், உற்சாகம், மனஎழுச்சி, zeal, fervour
1.1
நோக்கினர் செகுக்கும் காளை ஊக்கி
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின் - புறம் 302/8,9
தன்னைப் பகைத்துப் பார்க்கும் பகைவரைக் கொல்லும் காளையாகிய அவன் மனஎழுச்சிகொண்டு
தன் வேலால்கொன்ற களிறுகளை ஒவ்வொன்றாக எண்ணிப்பார்க்குமிடத்து
1.2
ஊசல் ஊர்ந்து ஆட ஒரு ஞான்று வந்தானை
ஐய சிறிது என்னை ஊக்கி என கூற - கலி 37/15
ஊசலில் ஆடிக்கொண்டிருக்க, ஒரு சமயம் அங்கு வந்தவனை,
"ஐயனே! சிறிது என்னை வேகமாக ஆட்டிவிடு" என்று கூற,
1.3
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை - ஐங் 377/1
நீர் வேட்கையால் தூண்டப்பட்ட வருத்தங்கொண்ட யானை
1.4
வாழை மென் தோடு வார்பு_உறுபு ஊக்கும்
நெல் விளை கழனி நேர் கண் செறுவின் - நற் 400/1,2
வாழையின் மெல்லிய இலை நீண்டு தாழ்ந்திருக்க,அதனை உயர்த்தும்
நெற்பயிர் விளையும் கழனியிலுள்ள நேரான இடம் பொருந்திய வயலில்
2.1 
ஊர் காப்பாளர் ஊக்கு அரும் கணையினர் - மது 647
ஊர்க் காவலர்கள், குறிதப்புதற்கு அரிய அம்பினையுடையவராய்;
2.2
உள்ளுநர் பனிக்கும் ஊக்கு அரும் கடத்து இடை - அகம் 29/19
நினைப்போரை நடுங்கச்செய்யும் ஊக்கத்தை ஒழிக்கும் காட்டினிலே

 மேல்
 
  ஊகம் - (பெ) 1. கருங்குரங்கு, black monkey
         2. ஒருவகைப் புல், கூரையில் வேய உதவுவது, a kind of grass, Broomstick-grass, Aristida setacca
1.
வலிமையான பற்களைக் கொண்டது, விரல்களில் கறை படிந்திருக்கும்
கடும் பல் ஊக கறை விரல் ஏற்றை - குறு 373/5
கரு விரல் ஊகம் பார்ப்போடு இரிய - மலை 208
கடிய பல்லினையும் கொண்ட கருங்குரங்கின் கறைவாய்ந்த கரிய நிற விரல்களையுடைய ஆண்குரங்கு
பசிய கண்களை உடையது
பைம் கண் ஊகம் பாம்பு பிடித்து அன்ன - சிறு 221
பசிய கண்களையுடைய கரிய குரங்கு பாம்பு(த் தலையைப்) பிடித்தாற் போன்று,
முகம் வெளுத்திருக்கும்
நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்ப - குறு 249/2
வெள்ளிய முகத்தையுடைய கருங்குரங்குகள் குட்டிகளோடு குளிரால் நடுங்க,
2.
ஊகம் வேய்ந்த உயர் நிலை வரைப்பின் - பெரும் 122
ஊகம் புல்லால் வேய்ந்த உயர்ந்த நிலையையுடைய மதிலையும்,

 மேல்
 
  ஊங்கு - 1. (வி) 1. ஊஞ்சலில் ஆடு, swing
          2. முன்னும் பின்னும் அசை, move to an fro
       2. (வி.அ) 1. அங்கு, yonder
           2. முன்பு, prior to
           3. அச்சமயத்தில், at that time
1.1.
பூ கண் ஆயம் ஊக்க ஊங்காள்
அழுதனள் பெயரும்- நற் 90/7,8
பூப்போன்ற கண்களையுடைய தோழியர் ஆட்டிவிட ஆடாள்,
அழுதுகொண்டே அவ்விடம்விட்டுப் போகின்றாள் 
1.2.
கடல்_மரம் கவிழ்ந்து என கலங்கி உடன் வீழ்பு
பலர் கொள் பலகை போல
வாங்க_வாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே - நற் 30/8,9,10
கடலில் மரக்கலம் கவிழ்ந்துவிட, கலங்கி எல்லாரும் கடலுக்குள் வீழ்ந்து
பலரும் பிடித்துக்கொள்ளும் ஒரு பலகை போல,
அவரவரும் பற்றி இழுக்க, நீ நின்றுகொண்டு முன்னும் பின்னும் அசையும் துன்பமான நிலையை 
2.1
நகுதலும் தகுதி ஈங்கு ஊங்கு நின் கிளப்ப - பரி 4/5
நீ சிரிப்பதற்கேற்றவற்றை இங்கும், அங்கும் நாங்கள் உன்னைப்பற்றிக் கூற
2.2
வான் தோய் வெற்பன் மணவா ஊங்கே - குறு 357/8
விண்ணைத்தொடும் மலைநாட்டைச் சேர்ந்தவன் மணப்பதற்கு முன்னே
2.3
காமர் கொண்கன் நாம் வெம் கேண்மை
ஐது ஏய்ந்து இல்லா ஊங்கும் - நற் 145/4,5
அழகிய கடற்கரைநாடனிடம் நாம் விரும்பிக்கொண்ட நட்பு
இப்போது சிறிதளவும் இல்லாதிருந்த போதும்

 மேல்
 
  ஊண் - (பெ) உணவு, food
பல் வேறு பண்டமோடு ஊண் மலிந்து கவினி - மது 503
பலவாய் வேறுபட்ட பண்டங்களோடே பல உணவுகளும் மிக்கு அழகுபெற்று,

 மேல்
 
  ஊது - (வி) 1. வண்டுகள் மலரின் மீது பறந்து ஒலியெழுப்புதல், hum, as bees or beetles, in getting out honey from flowers;
        2. (தேன்) குடி, feed on as bees honey
        3. குழல் வாத்தியங்களை இசைத்தல், play instruments like flute 
1.
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே - குறு 260/2
வரிகளையுடைய வண்டுகள் சுற்றிப் பறந்து ஒலிப்பதால் இதழ்கள் விரிந்திருக்கும்
2.
தண் தாது ஊதிய வண்டு இனம் களி சிறந்து - அகம் 170/6
குளிர்ந்த பூந்தாதினை உண்ட வண்டின் கூட்டம் களிப்பு மிக்கு
3.
ஊது சீர் தீம் குழல் இயம்ப - பரி 22/40
ஊதுதற்குரிய ஓசை இலயத்தைக் கொண்ட இனிய குழல் ஒலிக்க

 மேல்
 
  ஊதை - (பெ) பனிக்காலக் காற்று, வாடைக்காற்று, cold biting wind in dewy season
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து - குறு 86/4
வாடைக்காற்றினால் தூறல்போடும் குளிர்நிறைந்த நள்ளிரவில்

 மேல்
  ஊம் - (பெ) ஊமை
கூனும் குறளும் ஊமும் செவிடும் - புறம் 28/2

 மேல்
 
  ஊமன் - (பெ) 1. ஊமை, பேசமுடியாதவன், dumb person
          2. ஒரு ஆந்தை, ஊமைக்கோட்டான், brown fish owl, Bubo Zeylonensis Leschenault 
1.
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல - குறு 58/4
கையும் இல்லாது வாயும் பேசாத ஒருவன் தன் கண்களாலேயே பாதுகாக்க நினைக்கும்
காய்கின்ற வெண்ணெய் உருண்டை போல
2.
கூவல்
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட
உயர்திணை ஊமன் போல - குறு 224/3-5
கிணற்றில் விழுந்த
கபிலைநிறப் பசு படுகின்ற துயரத்தை இரவில் கண்ட
ஊமை மகனைப் போல

இங்கே உயர்திணை ஊமன் என்று சொல்லப்பட்டிருப்பதைக் கவனிக்கவேண்டும். 
உயர்திணை ஊமன் என்பது ஒரு ஊமையான மனிதனைக் குறிக்கும். இதனால் உயர்திணை அல்லாத ஊமன்
என்பதுவும் உண்டு என்பது பெறப்படும். உயர்திணை அல்லாத ஊமன் என்பது ஒரு ஆந்தை. பேச்சு வழக்கில்
ஊமைக்கோட்டான் என்று அழைக்கப்படும். இது மீனை மட்டும் தின்று வாழும். எனவே இது brown fish owl
எனப்படுகிறது. “ஊம், ஊம்” என்று ஒலி எழுப்புதால் இது ஊமன் என்று அழைக்கப்படுகிறது போலும்.

	

ஆண்டலை, ஊமன், குடிஞை, குரால், கூகை எனபன தமிழ்நாட்டு ஆந்தை வகைகள்.

	பார்க்க : ஆண்டலை குடிஞை
         குரால் கூகை

 மேல்
 
  ஊழ் 1. (வி) 1. முற்று, முதிர்வடை, mature
        2. மலர், blossom
        3. உதிர், fall off
        4. போடு, பெய், pour out
    2. (பெ) 1. முறை, பொழுது, turn, occassion
        2. முறைமை, வழக்கு, established usage
        3. முதிர்வு, aging, maturity
        4. தடவை, turn, number of times
1.1
மயில் அடி இலைய மா குரல் நொச்சி
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ - நற் 115/6
மயிலின் காலடி போலும் இலைகளை உடைய கரிய கொத்துக்களோடு கூடிய நொச்சியும்
மனையில் நட்டு நொச்சியில் படரவிட்டிருக்கும் முல்லையும் முற்றிய அரும்புகள் மலர்ந்து மணம் கமழ
1.2
பருவம் வாரா அளவை நெரிதர
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த - குறு 66/3,4
பருவம் இன்னும் வராதபோது, மிகச் செறிவாக
கிளைகளில் சேர்ந்த கொடிபோல் கொத்தாகப் பூத்தன
1.3
மயில் அடி இலைய மா குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே - குறு 138/3,4,5
மயிலின் அடியைப் போன்ற இலையையுடைய கரிய பூங்கொத்துக்களையுடைய நொச்சியின்
அழகுமிக்க மெல்லிய கிளைகளிலிருந்து உதிர்ந்த
நீல மணி போன்ற பூக்களின் ஓசையை மிகவும் கேட்டு -
1.4
இன் புளி கலந்து மா மோர் ஆக
கழை வளர் நெல்லின் அரி உலை ஊழ்த்து - மலை 179, 180
மனதிற்குகந்த புளிப்பையும் கலந்து, விலங்கின் மோர் (உலைநீர்)ஆக,
மூங்கிலில் வளர்ந்த நெல்லின் அரிசியை உலையில் பெய்து,		
2.1
தழலும் தட்டையும் குளிரும் பிறவும்
கிளி கடி மரபின ஊழூழ் வாங்கி - குறி 43,44
கவணும், தட்டையும், குளிரும், ஏனையவும்(ஆகிய)
கிளிகளை விரட்டும் இயல்புடையவற்றை முறை முறையாகக் கையில் எடுத்து,
2.2
கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும்
நூழிலும் இழுக்கும் ஊழ் அடி முட்டமும்
வளைந்த கால் முதலைகளும், இடங்கர் இன முதலைகளும், கராம் இன முதலைகளும்,
(வழிப்பறி செய்வோர்)கொன்று குவிக்கும் இடங்களும், வழுக்கு நிலமும், புழங்கின தடங்களுள்ள முட்டுப்பாதைகளும்
2.3
கடுவன்
ஊழ்_உறு தீம் கனி உதிர்ப்ப - குறு 278/4,5
ஆண் குரங்கு
பழுத்து முதிர்வடைந்த இனிய பழங்களை உதிர்க்க
2.4
வித்தா வல்சி வீங்கு சிலை மறவர்
பல் ஊழ் புக்கு பயன் நிரை கவரும் - அகம் 377/4,5
விதைத்து உண்டாக்காத உணவினைக் கொள்ளும் பெருத்த வில்லையுடைய மறவர்கள்
பல முறை புகுந்து பாற்பசுக் கூட்டங்களைக் கவர்ந்ததால்

 மேல்
 
  ஊழி - (பெ) 1. நெடுங்காலம், very long time
        2. வாழ்நாள், life-time
        3. யுகம், aeon
        4. ஊழ்வினை, விதி, fate
1.
ஊழி வாழி பூழியர் பெருமகன் - புறம் 387/28
நெடுநாள் வாழ்வாயாக, பூழியர் தலைவனே!
2.
செல்கம் எழுமோ சிறக்க நின் ஊழி - நற் 93/6
நாங்கள் செல்கின்றோம்! நீயும் எழுந்திருப்பாய்! சிறந்து விளங்குக உன் வாழ்நாட்கள்;
3.
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும் - பரி 2/6
எந்த உருவமும் காணப்படாத முதல் ஊழிக்காலமும்,
4.
அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழி செல்வம் போல் - கலி 130/4
அரசன் இறந்தபின் அவனோடு மாய்ந்துவிட்ட, நல்ல ஊழ்வசத்தால் உண்டான செல்வம் போல

 மேல்
 
  ஊற்றம் - (பெ) வலிமை, strength
நின் ஊற்றம் பிறர் அறியாது - புறம் 366/8
உனது வலிமையைப் பிறர் அறியாமலும்

 மேல்
 
  ஊன் - (பெ) இறைச்சி, தசை, meat, flesh
ஊன் பொரிக்கும் ஒலி முன்றில் - பட் 177
இறைச்சியைப் பொரிக்கின்ற ஒலியை உடைய முன்பக்கம்.