பிற-கட்டுரைகள்

முழுத்திரையில் காண, மேலே இடது பக்கம் உள்ள மூன்று கோடுகளைச் சொடுக்குக - பழைய நிலைக்கு மீண்டும் அதனையே சொடுக்குக.


1.இன்றைக்கும் வாழும் சங்க வழக்குகள்     
2.இன்றைக்கும் வாழும் சங்க வழக்காறுகள்  
3.இன்றைக்கும் வாழும் சங்க வழக்கங்கள்   
4.காற்றால் கிளைக்குமா மாமரம்             
5.அகலா மீனின் அவிர்வன                   
6.சங்க இலக்கியத்தில் சொல்லாக்கம்
7.ஆசிரியப்பாக்களில் சீர் தளை பரவல் முறை -  
8.சங்கம்/சங்கம் மருவிய நூல்களில்              
    யாப்பு முறை - கணினி வழி ஆய்வு
9.வெண்பாக்களில் சீர் தளை பயின்று வரும்      
    முறை - ஒரு புள்ளியியல் ஆய்வு                 
10.திருக்குறளில் சீர்தளைக் கணக்கீட்டில்         
   சிக்கல்களும் கணினி வழித்தீர்வும்                  

  11.பத்துப்பாட்டில் சொல்வள வளர்ச்சி வீதம் (RGV)
  12.தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் -
      ஒரு புள்ளியியல் பார்வை

  13.தொல்காப்பியமும் பிராமிப்புள்ளியும் -
      சங்க இலக்கிய மரபில்

  14.தொல்காப்பியத்தின் கட்டமைப்பு
  15.பிராமி எழுத்துகளும் தொல்காப்பியமும் -
      ஒரு மீள் பார்வை

  16.The axiomatic approach in tolkAppiyam
  17.Euclid nad tolkAppiyar
  18.The Association between Sound and Meaning
  19.Statistical Analysis of Some Linguistic Features in
      Tamil Literature

  20.Statistical study of word structure in written Tamil

 
ஏதேனும் ஒரு 
தலைப்பைச் 
சொடுக்குக.

21.Mathematical Techniques in the Analysis of word patterns and usage using computers - Part I
22.Mathematical Techniques in the Analysis of word patterns and usage using computers- Part II

23.என்னே தமிழின் இளமை - கட்டுரைத் தொகுப்பு
24.சங்கப்புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள் - கட்டுரைத் தொகுப்பு
                                              6.சங்க இலக்கியத்தில் சொல்லாக்கம்


					{ஏப்ரல்-1981 கலைக்கதிர் இதழில் (பக்கம் 49) வெளியான கட்டுரை}

மொழித்தோற்றம்

	மொழி என்பது மனிதனின் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் சிந்தனைகளையும் வெளியிட உதவும் ஒரு கருவியே எனினும், 
அது ஒரு தனிப்பட்ட மனிதனின் கருவியாக மட்டும் அமையாமல், ஒரு சமுதாயத்திற்குரிய கருவியாக அமைகிறது. மனிதன் தன் வாயசைவால் 
ஏற்படும் சிற்சில ஒலிச்சேர்க்கைகளுக்கும், தான் உலகில் கண்ட, உணர்ந்த பொருள்களுக்கும் இடையே ஒரு தொடர்பை (correspondence) 
ஏற்படுத்திக் கொள்கிறான். இத் தொடர்பு அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுப் பயன்படுத்தப்படும்போது மொழி பிறக்கிறது. இவ்வாறு 
அமைத்துக்கொள்ளப்படும் சொற்களை ‘இடுகுறிப்பெயர்’ என்பர். இவ்வாறு பிறந்த இடுகுறிப்பெயர்களைச் சேர்த்தும் கலந்தும் திரித்தும் புதுப்புதுச் 
சொற்கள் உருவாக்கப்படுகின்றன. இவை ‘காரணப் பெயர்கள்’ எனப்படும். இடுகுறிப்பெயர்களின் காலம் என்றோ முடிந்துவிட்டது. மாறிவரும் 
உலகில் வளர்ந்து வரும் தேவைகளுக்கேற்பப் புதுச் சொல்லாக்கம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

பல்கலைக் கழகம்

	பண்டை இலக்கியங்களைக் கற்பதுவும் அவற்றின் நுணுக்கங்களையுணர்ந்து இன்புறுவதுமே கல்வி என்ற நிலைதான் சென்ற 
நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் நிலவி வந்தது. மனிதனின் அறிவியற் சிந்தனைகள் கட்டவிழ்த்துக்கொண்டு கடுகிச் செல்லும் இவ்விருபதாம் 
நூற்றாண்டில் அவ்வறிவியற் சிந்தனைகளைத் தமிழில் எழுத விழைந்தோர் முதலில் திகைத்தனர். இதனையொட்டியே ‘தமிழில் முடியுமா?’ 
என்பது போன்ற வினாக்களும் ‘தமிழில் முடியும்’ என்பது போன்ற விடைகளும் கற்றாரிடையே காரசாரமாக விவாதிக்கப்பட்டன. அதையடுத்துப் 
புதிய கருத்துகளுக்கேற்ற புதுச் சொல்லாக்கம் வேகம் பெற்றது. ஏறக்குறைய ஐம்பதாண்டுக் காலத்திற்கு முன்னர்கூட high school, college, 
university, lecture போன்ற சொற்கள் ஹைஸ்கூல், காலேஜ், சர்வகலாசாலை, பிரசங்கம் என்றே மொழிபெயர்க்கப்பட்டன. உயர்நிலைப் பள்ளி, 
கல்லூரி, பல்கலைக் கழகம், சொற்பொழிவு போன்ற சொற்கள் இன்று எல்லோராலும் எளிதில் புரிந்துகொள்ளப்படினும், தொடக்க நிலையில் 
இத்தகைய சொல்லாக்கங்கள் எவ்வளவோ எதிர்ப்புகளுக்குள்ளாயின. எளிமையான முறையில் இயல்பாக அமைக்கப்படும் புதுச் சொல்லாக்கம் 
ஒரு மொழிக்குப் புத்துணர்ச்சியூட்டும் என்பது மறுக்க முடியாத உண்மை.

சொல்லாக்கம் – இருவகை

	சொல்லாக்கம் இருவகைப்படும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களைக் கொண்டு ஒரு புதிய சொல் உருவாக்கப்படலாம். 
உயர்நிலைப் பள்ளி, பல்கலைக்கழகம், சொற்பொழிவு , மாவட்டம், வானொலி போன்றவை அப்படிப்பட்டவை. இவ்வாக்கத்தில் உள்ள பல்வேறு 
சொற்களுக்கும் பல பொருள் இருப்பினும், ஒரு குறிப்பிட்ட சொற்சேர்க்கைக்கு இதுதான் பொருள் என்ற நியதி ஏற்படுத்தப்பட்டுவிடுகிறது. 
‘மாவட்டம்’ என்பது பெரிய வட்டம் என்ற பொருளையே குறிப்பினும், அது ஒரு ஆட்சிப் பகுதியைக் குறிக்கும் ‘district’ ‘ஜில்லா’ 
என்பவற்றின் நேர்ச்சொல்லாக அமைக்கப்படுகிறது.

	அடுத்து, ஒரு சொல்லை வேர்ச்சொல்லாகக் கொண்டு அதற்கு முன்னும் பின்னும் ஒட்டுக்களைச் சேர்த்துப் புதிய சொற்கள் 
உருவாக்கப்படலாம். இவ்வாறு உருவாக்கப்படும் சொற்கள் தத்தம் வேர்ச்சொற்களையொட்டிய பொருளையே தாங்கி நிற்கின்றன. 
நீள் – நீளம் – நீட்டம் என்பதனையே இதற்கு எடுத்துக்காட்டாய்க் கொள்ளலாம்.

	இத்தகைய சொல்லாக்கங்கள் தமிழ் மொழியின் வரலாற்றில் எல்லாக் காலகட்டங்களிலும் நடைபெற்றிருக்கின்றன. எனினும் இன்றைய 
அறிவியல் முன்னேற்றத்தின் வேகத்திற்கும் அதனை எப்படியும் தமிழில் வடித்துவிடவேண்டும் என்ற ஆர்வத்திற்கும் ஈடுகட்டப் புதுச் சொல்லாக்கம் 
மிகவும் அவசியமாக மட்டுமன்றி, அவசரமாகவும் தேவைப்படுகிறது. ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடிக்கும் 
அவசியம் இப்போது எல்லாத் துறைகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே இலக்கியங்களில் இச் சொல்லாக்கம் எப்படி 
ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பற்றிய அறிவு அனைவருக்கும் வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இறுவரை

	ஒரு மலைச்சரிவிலே ஒருவன் ஓடிவருகிறான். திடீரென்று ஓரிடத்தில் மலை இற்று முடிந்துவிடுகிறது. தன் காலடியில் ஆழ்ந்து கிடக்கும் 
அதல பாதாளத்தைக் கண்டு அவன் துணுக்குற்று நடுங்குகிறான். இதனைப் போன்று, ‘என் நெஞ்சே! நீ உன் தலைவியைக் காணச் செல்லும் இரவு 
வழியை எண்ணி நடுங்குகின்றாயோ?’ என்று ஒரு தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லிக்கொள்வதாக வருகிறது ஓர் அழகிய அகப்பாடல்.

	மயங்குதுளி பொழிந்த பானாட் கங்குல்
	ஆராக் காமம் ஆடூஉ நின்றலைப்ப
	இறுவரை வீழ்நரின் நடுங்கி  -- அகம் 322

	என்பதே அப்பாடல். உயரமான, நேர் செங்குத்தான மலைப்பகுதி என்ற பொருளை உணர்த்தும் ‘இறுவரை’ என்ற சொல்லாக்கம் 
எவ்வளவு இனிமையாகவும் இயல்பாகவும் அமைந்துள்ளது! ‘Cliff’ என்ற சொல்லுக்குக் ‘கொடும்பாறை’, ‘செங்குத்தான பாறை’, ‘மலையின் 
செங்குத்தான பகுதி’ என்று விளக்கங்கள் கொடுக்கிறது சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில-தமிழ் அகராதி. ‘இறுவரை’ என்பதனையே அதற்கு 
நேரான, சுருக்கமான பொழிபெயர்ப்புச் சொல்லாகக் கொள்ளலாமல்லவா! ‘இறுவரை காணிற் கிழக்காம் தலை’ என்ற குறளில் இதே சொல் 
வேறொரு வகையில் முடிவான எல்லையைக் குறிக்க வந்துள்ளது.

மனையுறு கோழி

	காட்டில் வாழுகின்ற பறவைகளையும், விலங்குகளையும் பிடித்து, அவை தனக்கு உணவாகவும், உதவியாகவும் இருக்கும்பொருட்டுத் 
தன் மனையைச் சுற்றி வளரும் வகையில் அவற்றைப் பழக்கினான் பண்டைய மனிதன். இப்படிப்பட்டவற்றை ‘Domesticated’ என்று ஆங்கிலத்தில் 
அழைப்பர். இதனைக் குறிக்கும் ஓர் அழகிய சொல்லாக்கம் குறுந்தொகையில் காணப்படுகிறது. காட்டில் பிடித்து மனையில் வளர்க்கப்படும் குறுகிய 
கால்களையுடைய கோழிகளைக் குறிக்க

	மனையுறு கோழி குறுங்காற் பேடை – குறுந். 139

	என்ற சொற்றொடர் கையாளப்பட்டிருக்கிறது. மனையுறுத்தப்பட்ட கோழி – மனையுறு கோழி – என்று எளிய வகையில் 
ஏற்படுத்தப்பட்டிருக்கும் இச் சொல்லாக்கம் தமிழ் மொழியின் சொல்லாக்கத் திறனுக்கே எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறது.

பல்லியம்

	வங்கியம் முழவு போன்ற பல்வகை இன்னிசைக் கலங்களைப் பைகளில் கட்டிக்கொண்டு பல ஊர்களுக்குச் சென்று ஆடிப்பாடிப் பிழைக்கும் 
கூத்தரை நம் கண்முன் நிறுத்துகிறது ஓர் அகப்பாடல்.

	குறுநெடுந் தூம்பொடு முழவுப் புணர்ந்து இசைப்ப
	---------- ---------- -------------------- ----------
	சில் அரி கறங்கும் சிறு பல்லியத்தொடு
	பல்லூர் பெயர்வனர்   -----
	---- ---- பல்தொகைக் கலைப்பையர் – அகம் 301

	இங்குப் பலவகை இசைக் கருவிகள் கொண்ட தொகுதி ‘பல்லியம்’ என்றழைக்கப்படுகிறது. ‘orchestra’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு 
நேர் மொழிபெயர்ப்பாக அமைந்துள்ள இவ்வழகிய சொல்லாக்கம் இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே ஏற்பட்டுவிட்டது என்பது நம்மில் எத்தனை 
பேருக்குத் தெரியும்?

ஈனில்

ஆடிப்பாடிக் கூடிமகிழ்ந்து இல்லறம் நடத்துகின்றன இரண்டு குருவிகள். நாளடைவில் பெண்குருவி கருவுருகின்றது. சூல்முதிர்ந்த தன் பேடை 
முட்டையிட்டு அடைகாத்துக் குஞ்சுபொரிப்பதற்குப் பாதுகாப்பான, வசதியான ஓரிடம் அமைக்கிறது சேவல் குருவி. மென்மையான பூவிதழ்களைக் 
கொணர்ந்து அவற்றை இழை போல் பின்னி ஈன்று புறந்தருதலைத் தன் கடனாகக் கொண்ட இளம்பேடைக்கு ஓர் இல்லம் அமைக்கின்றது. இவ்வினிய 
காட்சியைக் கண்ட ஒரு புலவன் அவ்வில்லத்திற்கு ‘ஈனில்’ என்ற ஓர் அழகிய இனிய பெயர் சூட்டுகிறான்.

	உள்ளூர்க் குரீஇ துள்ளுநடைச் சேவல்
	சூல்முதில் பேடைக்கு ஈனில் இழையியர்
	தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்
	நாறா வெண்பூக் கொழுதும்  - குறுந். 85

	என்பனவே அவ்வரிகள். ‘maternity home’ என்பதற்கு ‘மகப்பேறு இல்லம்’ என்பது இனிய மொழிபெயர்ப்பாக அமைந்தாலும் 
‘ஈனில்’ என்பதே செறிவுள்ள, சீரிய (short and crisp) சொல்லாக்கமாக அமைந்துள்ளதைக் காணலாம்.

	இறுவரை, மனையுறு, பல்லியம், ஈனில் போன்றவை சொல்லாக்கத்தின் முதல் வகையைச் சார்ந்தவை என்பது தெளிவு. இனி, அடுத்த 
வகையைச் சேர்ந்த ஒரு சில சொல்லாக்கங்களைக் காண்போம்.

ஒடிவை

	அறிவியல் பாடங்களில், குறிப்பாகக் கணிதத்தில், continuous curve, continuity, point of continuity என்ற சொற்கள் அடிக்கடிக் 
கையாளப்படுகின்றன. இவற்றை, தொடர் வரை, தொடர்வு, தொடர்வுப் புள்ளி என்று மொழிபெயர்த்துள்ளனர். எனினும் discontinuous curve, 
discontinuity, point of discontinuity என்று இயல்பாக அமைந்துள்ள ஆங்கிலச் சொல்லாக்கத்துக்குரிய மொழிபெயர்ப்பு தமிழில் சுருக்கமாகவும், 
இயல்பாகவும் அமைய வழியில்லை. செயற்கையாகவும், நீண்ட அமைப்புள்ளதாகவுமே அமைக்கவேண்டியுள்ளது (discontinuity – தொடர்வு அற்ற 
தன்மை) இவ்விக்கட்டைப் போக்க நமக்குக் கைகொடுக்கிறது மற்றொரு அகப்பாடல்.

	கொடை வள்ளல்கள் குறையாது அள்ளிக்கொடுத்த பரிசில்களினின்றும் கிடைக்கும் வருவாயை இடயறவின்று, இனியும் வேண்டும் 
என்ற நினைப்பின்றி, களிப்புடன் உண்டு மகிழும் கவிதைவாணர்களைப் பற்றிக் கூறும் ஒரு தொடர்,

	நல்குநர் ஒழித்த கூலிச் சில்பதம்
	ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு – அகம் 301
	
	என்று குறிப்பிடுகின்றது. ‘தொடர்ந்து உண்டனர்’ என்பதனினும், ‘இடையறவு இன்றி உண்டனர்’ என்பதே மேல் அல்லவா! இதுவே 
‘ஒடிவையின்றி’ என்று குறிக்கப்பட்டுள்ளது. ஒடி – ஒடிவு – ஒடிவை என்ற சொல்லாக்கம் ‘discontinuity’  என்பதன் சரியான மொழிபெயர்ப்பாக 
அமைகிறது. ஒடிவு வரை, ஒடிவு (ஒடிவை) ஒடிவுப்புள்ளி என்பன, discontinuous curve, discontinuity, point of discontinuity என்பனவற்றின் 
சரியான இயல்பான மொழிபெயர்ப்பாக அமைந்த சொல்லாக்கங்கள்.

நீடு

	நின்னைப் பிரியேன், பிரிந்தால் உயிர் தரியேன் என்றெல்லாம் காதல் பேசிக் கடிமணம் புரிந்த தலைவன், பின்னர் பொருள் தேடப் 
புறப்பட்டுவிடுகிறான். அயல் நாட்டுக்குச் சென்றவனுக்கு அங்கென்ன செல்வம் கொட்டியா கிடக்கிறது, அள்ளிக்கொண்டு வர? திரும்பி வருவேன் 
என்று தான் சொல்லிச் சென்ற காலத்தை நீட்டித்துக்கொண்டே செல்கிறான். அதனை நினைந்து வருந்துகின்ற தலைவியின் நிலையை,
‘நீடு நினைந்து இரங்கல்’ என்பர் தொல்காப்பியர். ‘நீள்’ என்றதனை அடியாகக் கொண்டு பிறந்த இச்சொல் இதே பொருளில் பல சங்கப் 
பாடல்களிலும் காணப்படுகிறது. நீளம் (length), நீட்சி (extension), நீட்டம் (lenghthening) இவை போலன்றி நீடு என்பது வழக்கொழிந்துவிட்டது. 
இச் சொல்லாக்கத்தை elongation என்பதன் மொழிபெயர்ப்பாகக் கொள்ளலாம். இயற்பியல் (Physics) போன்ற பிரிவுகளில் இதனை ஒரு 
கலைச்சொல்லாகவும் கொள்ளலாம்.

உரிவை – சுரி

	வெற்றியே கொண்டுள்ள வீரமிக்க காளையொன்று இறந்த பின்னர், தோலையுரித்து அதை வைத்தே முரசங்கள் தைப்பர் 
பண்டைத் தமிழர். இதனை,
	
	ஓடா நல்லேற்று உரிவை தைஇய
	ஆடுகொள் முரசம் – அகம் 334

	என்ற அகச்செய்யுள் விளக்கும்.

	உரிக்கப்படும் தோல் ‘உரிவை’ என்றழைக்கப்படுகிறது. Peel என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான சொல்லாக ‘உரிவை’ 
என்பதனைக் கொள்ளலாம்.

	சுருள் சுருளாக அமைந்த கூந்தல் ‘சுரி’ என்று இலக்கியங்களில் அழைக்கப்படுகிறது. 

	வணர் சுரி வடியாப் பித்தை ஆடவர்

	என்ற தொடர் (அகம் 161) இதனையுணர்த்தும். 

	சுரிகுழல் அசைவுற அசைவுற

	என்ற கலிங்கத்துப்பரணியும் இதனை மெய்ப்படுத்துகிறது. சுருள் என்ற சொல்லை வேராகக் கொண்டுள்ள ‘சுரி’ என்ற சொல்லை, 
a spiral winding, curling, whirling போன்றவற்றின் தமிழாக்கமாகக் கொள்ளலாம்.

	இதுவரை கண்ட ஒடிவை, நீடு, உரிவை, சுரி போன்றவை வேர்ச்சொல்லை அடியாகக் கொண்டெழுந்த இரண்டாவது வகைச் 
சொல்லாக்கங்கள். மேலெழுந்தவாரியாக நோக்கும்போது ‘இடறி விழுந்த’ சொற்கள் இத்தனையென்றால், சங்க இலக்கியமாம் தங்கச் சுரங்கத்தைத் 
தோண்டிப்பார்த்தால் எத்தனையோ ஆயிரமாயிரம் சொற்கள் கிடைக்கும் என்பது உண்மை. எனினும் தேவையான சொல்லாக்கத்திற்கெல்லாம் 
சங்கத்தைத் தேடி ஓடவேண்டிய அவசியம் இல்லை. இனிமை, எளிமை, குறுமை ஆகிய பண்புகளைக் கொண்ட புதுச் சொல்லாக்கங்கள் எல்லாத் 
துறைகளிலும் கொண்டுவர எத்தனையோ வழிகள் உண்டு. இருப்பினும், இலக்கியப் பயிற்சியும், பரிச்சயமும் இச் சொல்லாக்கத்திற்குப் பெருந்துணை 
புரியும். பதவுரையையும், பொழிப்புரையையும் பார்த்துக்கொண்டு போவது மட்டுமன்றி, சொற்கள் ஆக்கப்பட்டிருக்கும் முறையையும் ஆழ்ந்து 
கவனிக்கும் முறையில் சங்க இலக்கியங்கள் அனைத்தும் அலசி ஆராயப்படவேண்டும். அதுவே அறிவியல் தமிழ் வளர அளப்பரும் துணை புரியும்.