குறுந்தொகைக் காட்சிகள்

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

1. பாடல் 3 - நிலத்தினும் பெரிதே             11. பாடல் 87 மன்ற மராஅத்த பேஎம் முதிர்-
2. பாடல் 18 - வேரல் வேலி                         12. பாடல் 111 - மென்தோள் நெகிழ்த்த செல்லல்
3. பாடல் 21 - வண்டுபடத் ததைந்த         13. பாடல் 119 - சிறுவெள் அரவின்
4. பாடல் 27 - கன்றும் உண்ணாது            14. பாடல் 156 - பார்ப்பன மகனே
5. பாடல் 40 - யாயும் ஞாயும்                      15. பாடல் 167 - முளி தயிர் பிசைந்த
6. பாடல் 41 - காதலர் உழையராக           16. பாடல் 176 - ஒருநாள் வாரலன்
7. பாடல் 49 - அணில் பல் அன்ன           17. பாடல் 196 - வேம்பின் பைங்காய்
8. பாடல் 54 - யானே ஈண்டையேனே             18. பாடல் 246 - பெருங்கடற்கரையது
9. பாடல் 58 - இடிக்கும் கேளிர்                        19. பாடல் 305 - கண்தர வந்த காம ஒள்ளெரி
10. பாடல் 85 - யாரினும் இனியன்
         20. பாடல் 374 - எந்தையும் யாயும் உணரக் காட்டி
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக
 
குறுந்தொகைக் காட்சிகள் - பாடல் கதை
16. பாடல் 176 - ஒருநாள் வாரலன் 
                
                                   ஏறுடை மழை



	ஊர்த் திருவிழாவின்போது, சாவடி முன்னர் இருந்த அகன்ற பரப்பின் நடுவில் முளைப்பாரிகளை வைத்து அதைச் சுற்றிப் 
பெண்கள் ‘தானானே’ பாடிய வண்ணம் கும்மியடித்துச் சுற்றிவந்துகொண்டிருந்தனர். முல்லை மெய்ம்மறந்து அதனைப் பார்த்து 
இரசித்துக்கொண்டிருந்தாள். அருகில் நின்றிருந்த பொன்னி, திடீரென்று முல்லையின் இடுப்பை இலேசாகக் கிள்ளினாள். 
“என்னடீ” என்ற வண்ணம் நெளிந்துகொண்டே முல்லை அவளைக் கடிந்துகொண்டாள்.

“சீக்கிரம் வீட்டுக்குப் போகலாம்’டீ”

“இப்ப அதுக்கென்ன அவசரம். இது முடியட்டுமே”

“இல்ல, ஒடனே பொறப்படு. இங்க இருக்குறது நல்லாயில்ல”

“எதுடீ நல்லாயில்ல? எவ்வளவு அருமையாப் பாடுறாங்க”

“ஆமா வாயில ஈ நொழயறது தெரியாமப் பாத்துக்கிட்டு இரு. சுத்துவட்டுல என்ன நடக்குது’ன்னு தெரியாம”

“ஏன்டீ மொளப்பாரியப் பாப்பயா, சுத்துவட்டப் பாத்துக்கிட்டு இருப்பயா?”

“எல்லாத்தையுந்தான்டீ பாக்கணும்”

“இப்ப வேற என்னத்தப் பாக்கச் சொல்ற?”

“எதுத்தாப்புல ஒருத்தன் நம்மளயே பாத்துக்கிட்டு இருக்கான். அவன் நம்ம ஊர்க்காரன் மாதிரியும் தெரியல. வா வீட்டுக்குப் போயிரலாம்”

	அதற்குமேல் பொறுமை இல்லாத பொன்னி, முல்லையின் கையைப் பிடித்துத் ‘தரதர’-வென்று இழுத்துக்கொண்டு 
போயேவிட்டாள்.முல்லையின் வீடு வந்ததும் தன் கையை உறுவிக்கொண்ட முல்லை, “யப்பா! என்ன பிடி? கையெல்லாம் வலிக்கிதுடீ” 
என்ற வண்ணம் வலிக்கும் கையை அடுத்த கையால் நீவிவிட்டாள்.

“யாரோ நம்மளப் பாத்தா நமக்கென்னடீ, நாம மட்டும் யாரயாவது பாக்காம இருந்தாப் போதும்”

“ந்தா பாரு, நாம நல்லா’ருக்குறது மட்டுமில்ல, பொல்லாதவய்ங்க கண்ணுல படவுங்கூடாது”
வீட்டு வெளித்திண்ணையில் அமர்ந்து அவர்கள் பேசிக்கொண்-டிருக்கும்போது அவன் அந்தப் பக்கம் மெதுவாக நடந்து வந்தான்.

“பாருடீ, இங்கயும் வந்துட்டான்டீ, தெருவுல நடமாட்டம் இல்ல, நாம உள்ள போயிரலாம்” என்று சொல்லியவாறு முல்லையை வீட்டுக்குள்
இழுக்காத குறையாகக் கூட்டிக்கொண்டு சென்ற பொன்னி, கதவைப் ‘படக்’கென்று மூடினாள்.
இது நடந்து சில நாட்களுக்குப் பின்னர், பொன்னியும் முல்லையும் ஊருக்கு வெளியேயுள்ள புளியந்தோப்பில் புளியம்பூ பொறுக்கச் 
சென்றார்கள். புளியம்பூ இரசம் என்றால் முல்லையின் அப்பாவுக்குக் கொள்ளைப் பிரியம். தோப்பில் தரையைப் பெருக்கிச் சாணி 
மெழுகி வைத்திருப்பார்கள். இரவு முழுதும் அதில் உதிர்ந்து விழும் புளியம்பூக்களைப் பகலில் சென்று தூசுதும்பட்டை இன்றிச் சேர்த்துப் 
பொறுக்கி வருவர். இருவரும் மும்முரமாக புளியம்பூ சேர்க்கும் பணியிலிருந்த போது, திடீரென்று பொன்னி முல்லையின் இடுப்பைக் 
கிள்ளினாள். நெளிந்த முல்லை, “என்னடீ, இங்கயுமா?” என்றாள்.
பொன்னி சுட்டிக்காட்டிய திசையில் திரும்பிப் பார்த்த முல்லை முதலில் திடுக்கிட்டாள். யாரோ ஒருவன் தங்களையே “குறுகுறு’-வென்று 
பார்த்துக்கொண்டிருப்பது அவளை மிகுந்த சங்கடத்தில் ஆழ்த்தியது. பொன்னி கறுவினாள்.

“நாம் போயிக் கேட்டுட்டு வாரேன்” என்று முந்தானையை இழுத்து இடுப்பில் செறுகியவண்ணம் புறப்பட்டாள் பொன்னி.

முல்லை அவளைத் தடுத்தாள்.

“நமக்கு ஒண்ணும் தொந்தரவு செய்யாதவரைக்கும் நம்ம வேலய நம்ம பாப்போம்”

“என்னது? சும்மா எதுக்க வந்து நின்னு மொறச்சுப் பாத்துக்கிட்டு இருக்குறது தொந்தரவு இல்லையா?”

இவர்களின் இழுபறியைத் தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தவன் சத்தம்போடாமல் வந்தவழியே சென்றுவிட்டான்.

“அவந்தான் போயிட்டானேடீ, வந்த வேலயப் பாப்போம்” என்றாள் முல்லை.

“இன்னொருதரம் வரட்டும், பேசிக்கிறேன்”

அப்புறம் சில நாட்கள் கழித்து, முல்லையும் பொன்னியும் நந்தவனத்துக்குப் பூப்பறிக்கச் சென்றனர். அன்றென்னவோ பூக்கள் அதிகம் இல்லை. 
இருந்த சில பூக்களும் அவர்களுக்கு எட்டாத உயரத்தில் இருந்தன. ஏதாவது நீளமான கம்பு இருக்கிறதா என்று சுற்றிப்பார்த்த பொன்னி 
திடுக்கிட்டாள். நந்தவனத்தில் நுழைவாசலில் அவன் நின்றுகொண்டிருந்தான். அவன் சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்த முல்லையையே 
வைத்தகண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். இப்பொழுது நன்றாகத் தெரிந்தது. அவன் முல்லைக்காக வருகிறான். பொன்னிக்கு என்ன 
செய்வதென்று தெரியவில்லை. திரும்பிப்போனாலும் அவன் நிற்கிற இடத்தைத் தாண்டித்தான் செல்லவேண்டும். மெதுவாக, 
முல்லையினிடத்தில் வந்த பொன்னி, “இன்னிக்கும் வந்திருக்கான்டீ, வா போயிரலாம்” என்றாள்.

“இன்னமும் ஒரு பூக்கூடப் பறிக்கலியேடீ”

“இன்னிக்குப் பூ வேணாம், போகலாம்” என்று முல்லையை அவன் நிற்கும்பக்கத்துக்கு எதிர்ப்பக்கமாய்க் கூட்டிக்கொண்டு 
நடக்கலானாள் பொன்னி.

அவன் இருக்குமிடத்தை அவர்கள் தாண்டிச் செல்லும்போது, “என்ன இன்னிக்கிப் பூ பறிக்கலயா, ஒண்ணுமே எட்டல’ன்னா 
நான் வேணும்’னா வளைச்சுக்கொடுக்கிறேன்” என்று மெல்லிய குரலில் அவன் கேட்டான்.

“ஒண்ணும் வேண்டாம்” என்று சொல்லியவண்ணம் முல்லையைக் கூட்டிக்கொண்டு வேகமாக நடையைக் கட்டினாள் பொன்னி.

“இதென்னடீ பெரிய தொந்தரவாப் போச்சு, எங்கயும் போக முடியல” என்று சலிப்புடன் கேட்டாள் பொன்னி.

“திரும்பிப் பாக்காம நட. திரும்பிப்பாத்த, அப்புறம் அவனுக்குப் பெரிய ‘இது’-வாகிரும்” என்று பொன்னி எச்சரிக்க அவர்கள் வேகமாக 
நடந்து மறைந்துபோனார்கள்.

சிலநாள்கள் கழித்து முல்லையும் பொன்னியும் ஆற்றங்கரைக்குத் துணிதுவைக்கச் சென்றார்கள். சுகமில்லையென்று ஏகாலி சிலநாள்களாக 
அழுக்கெடுக்க வரவில்லை. 

துணிகளைத் துவைத்து அலசும் நேரத்தில் பொன்னி குசுகுசுத்தாள். 

“வந்துட்டான்டீ”

‘சடக்’-கென்று முல்லை கரைப்பக்கம் திரும்பிப் பார்த்தாள். ஒரு மரத்தடியில் அவன் நின்றுகொண்டிருந்தான். என்ன செய்யலாம் என்று 
அவள் யோசித்துக்கொண்டிருந்த சில நொடிகளில் முல்லையின் கையிலிருந்த தாவணி நழுவி ஆற்றுநீரில் மிதந்து செல்லத் தொடங்கியது. 
சட்டென்று அதைக் கவனித்த முல்லை, “ஐயோ தாவணி” என்று உரக்கக் கூவினாள். அப்பொழுதுதான் அதைக் கவனித்த பொன்னி 
கரைவழியே பின்தொடர்ந்து ஓடத் தொடங்கினாள். இருப்பினும் தாவணி நீரின் ஆழமான பகுதிக்குச் சென்றது மட்டுமல்ல, வேகமான 
நீரோட்டத்தில் சேர்ந்து படுவேகமாக நகரத் தொடங்கியது. அந்தப் பகுதியில் வேறு யாரும் இல்லை.

	யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், அவன் ஆற்றைநோக்கி ஓடி வந்தான். துணியை நோக்கி ஆற்றில் இறங்கியவன், ஆழமான 
பகுதிக்கு வந்ததும் நீந்திச் செல்லத் தொடங்கினான். மிகவும் இலாவகமாக கைகளை மாற்றிப்போட்டு வேகமாக நீந்திச் சென்று துணியை 
எட்டிப்பிடித்தான். அப்படியே அதனைத் தன் தோள்களின்மீது போட்டுக்கொண்டு கரையை நோக்கி நீந்திவந்தான். கரையை அடைந்ததும், 
நேராகப் பொன்னியிடம் சென்று, “அங்க கொடுத்திருங்க” என்று மென்மையான குரலில் சொன்னவாறு துணியைப் பொன்னியிடம் 
நீட்டினான். கேட்காமலேயே உதவி செய்திருக்கிறான் அவன். மிகவும் பண்புடன் முல்லையிடம் பேசாமல் பொன்னியிடமே துணியைத் 
தருகிறான். பொன்னிக்கு வேறு வழியில்லை. எனினும் இப்போது பொன்னியின் மனம் கோபங்கொள்ளவில்லை. பேசாமல் துணியை 
வாங்கிக்கொண்ட பொன்னி, முல்லையிடம் வந்தாள். இருவரும் மற்ற துணிகளையும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டனர்.

“என்னங்க, எவ்வளவு சிரமப்பட்டு ஆத்துல போன துணிய எடுத்து-வந்துருக்கேன். ஒரு நன்றி கிடையாதா? அட ஒரு சின்ன சிரிப்புக்கூட 
போதுங்க” என்றான் அவன்.

முல்லை ‘கிளுக்’-கென்று சிரித்துவிட்டாள்.

“அது போதுங்க” என்றவன் வேறு வழியே போய்விட்டான்.

“இப்ப எதுக்குடீ சிரிச்சவ? பாத்தியா அவனுக்குத் தெம்பு வந்துருச்சு. இனி அடிக்கடி வருவான்.”

“இப்ப என்னடீ ஆயிப்போச்சு? நாம கேக்காமலேயே நமக்கு வந்து உதவி செய்யலியா? இல்லாட்டி துணி ஆத்தோட போயிருக்கும். அத 
நெனச்சுப்பாக்காம..”

“அதெல்லாம் சரித்தான். அவனுக்கு இடம்கொடுக்குற மாதிரி நடந்துக்கிட்ட’ல்ல அதச் சொன்னேன்”

“இப்ப என்னத்த பெரிய இடத்தத் தூக்கிக்கொடுத்துட்டேன். சிரிக்கிறமாதிரிப் பேசுனாரு, எனக்கும் சிரிப்பு வந்திருச்சு”

“என்ன? பே-சு-னா-ரா? என்ன பேச்சு மாறுது?”

“நான் என்னிக்கும் ஒண்ணாத்தேன் பேசுறேன். ஒதவி செஞ்ச ஒரு நல்ல மனுசனுக்கு மரியாத கொடுக்கக் கூடாதா?”

“கொடுடீ அம்மா கொடு. இன்னிக்கி மருவாத கொடுப்ப, நாளக்கி …”

“நாளக்கி?”

“சரி பேச்ச விடு, வீடுவரப்போகுது”

	இப்படித்தான் தொடங்கியது அவர்களின் தொடர்பு. அடுத்தடுத்த முறைகளில் சிரிப்பு தொடர்ந்தது. அவனும் தொடர்ந்து வந்தான். 
மரியாதையுடன் பேசினான். நல்லவிதமாக நடந்துகொண்டான். எனவே கொஞ்சம் கொஞ்சமாக முல்லையின் நெஞ்சம் அவன்பால் 
ஈர்ப்புக்கொண்டது. முதலில் கொஞ்சம் சொல்லிப்பார்த்த பொன்னி பின்னர் தன் நினைப்புகளையும் மாற்றிக்கொண்டாள். அந்த அளவுக்குப் 
பண்புள்ளவனாக அவன் இருந்தான். இருப்பினும் முல்லையோ, பொன்னியோ பிடிகொடுத்துப் பேசவில்லை. பட்டும்படாததுமாக 
நடந்துகொண்டார்கள்.

	திடீரென்று சிலநாள்களாக அவனைக் காணவில்லை. வெளியில் செல்லும்போதெல்லாம் நாற்புறமும் சுற்றிமுற்றிப் பார்ப்பார்கள், 
அவன் எங்காவது தென்படுகிறானா என்று. ஊகும், அவன் வரவே இல்லை.

“ஏன்டீ பொன்னி, நாம மனச மாத்திக்கிட்டோம்’னு அவருக்குத் தெரியாமலேயே போயிருச்சோ?”

“அதுக்காக? நாம என்ன ஓடிப்போயி, ஐயா ஐயா நான் ஒன்ன விரும்புறேன்’னு சொல்லவா முடியும்? மண்குடத்துல தண்ணி கசியுற 
மாதிரிதான் நம்மளும் நம்ம நெனப்பக் கசியவிட்டோம். ஒரு ஆம்புள, அதப் புரிஞ்சிக்கிற வேணாமா?”

“தேன் கூட்டுல தேன் சேர்ர மாதிரி கொஞ்சம் கொஞ்சமா அவரு மேல பிடிப்பு வந்துகிட்டே இருந்துச்சு. முத்தின தேன்கூடு பொத்துனு 
விழுந்தாப்புல, சட்டுனு அவரு வராமப் போயிட்டாரேடீ”

“வருவாரு வருவாரு எங்க போயிடப்போறாரு?”

“ஒரு நாளா, ரெண்டு நாளா? எத்தன நாளு திரும்பத் திரும்ப வந்தாரு? இப்ப எங்க போயிருக்காரோ? இதுவரைக்கும் எங்கப்பாதான் எனக்கு 
எல்லாமா இருந்தாரு. இனிமேல இவருதான் எனக்கு எல்லாம்’னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். எனக்குப் பிடிமானமா இருக்கும்’னு நெனச்ச 
அந்தக் கொழுகொம்பு எங்கணக்குள்ள ஊனிக்கிடக்குதோ? 

“மனசத் தளரவிடாதடி, வருவாரு” என்று ஆறுதல் சொன்னாள் பொன்னி.

“எம் மனசா? உம்! எங்கயோ இடி இடிச்சு மழை பெஞ்சா, இந்த ஊரு ஆத்துத் தண்ணி கலங்கிப்போயி வர்ரமாதிரி, யாரோ ஒருத்தரு 
எங்கயோ இருந்துகிட்டு என்னை அலக்கழிக்க, இங்க எம் மனசு கலங்கிப்போயி கெடக்குடீ”

பாடல்:குறுந்தொகை 176 ஆசிரியர்:வருமுலையாரித்தி திணை:குறிஞ்சி
	
	ஒரு நாள் வாரலன், இரு நாள் வாரலன்;
	பல் நாள் வந்து பணிமொழி பயிற்றி, என்
	நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை,
	வரை முதிர் தேனின் போகியோனே!
	ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ?
	வேறு புல நன் நாட்டு பெய்த
	ஏறு உடை மழையின் கலிழும் என் நெஞ்சே!

அருஞ்சொற் பொருள்

பயிற்றி = திரும்பத் திரும்பச் சொல்லி; நன்னர் = நல்ல; வரை = மலை; ஆசு = பற்றுக்கோடு; எந்தை = என் தந்தையைப் போன்றவன். 
ஏறு = இடி; கலிழும் = கலங்கும்.

அடிநேர் உரை

	ஒருநாள் வந்தான் அல்லன், இரண்டு நாள் வந்தானல்லன்;
	பல நாள் வந்து பணிவான மொழிகளை மீண்டும் மீண்டும் சொல்லி, என்னுடைய
	நல்ல நெஞ்சத்தை இளகச் செய்த பின்னர்,
	மலையின் முதிர்ந்த தேன்கூட்டைப் போல மறைந்து போனான்,
	எனக்குப் பற்றுக்கோடாக இருக்கும் என் தந்தையைப் போன்றவன் எங்கு உள்ளானோ?
	அயலிடமாகிய ஒரு நல்ல நாட்டில் பெய்த
	பெருத்த இடியுடன் கூடிய மழையின் நீரைப் போல என் நெஞ்சம் கலங்கி இருக்கிறது.
		
	He did not stop with coming on one day or two days;
	He did come on many days and also uttered humble words;
	And thereby softened my good heart. And then – 
	He was gone like a fully grown honeycomb on a hill;
	Oh! Where would he be now, my lord and support?
	My heart is perturbed,
	Like the murky waters that come from rains with thunderstorm in a distant country.