குறுந்தொகைக் காட்சிகள்
முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக
1. பாடல் 3 - நிலத்தினும் பெரிதே
11. பாடல் 87 மன்ற மராஅத்த பேஎம் முதிர்- 2. பாடல் 18 - வேரல் வேலி 12. பாடல் 111 - மென்தோள் நெகிழ்த்த செல்லல் 3. பாடல் 21 - வண்டுபடத் ததைந்த 13. பாடல் 119 - சிறுவெள் அரவின் 4. பாடல் 27 - கன்றும் உண்ணாது 14. பாடல் 156 - பார்ப்பன மகனே 5. பாடல் 40 - யாயும் ஞாயும் 15. பாடல் 167 - முளி தயிர் பிசைந்த 6. பாடல் 41 - காதலர் உழையராக 16. பாடல் 176 - ஒருநாள் வாரலன் 7. பாடல் 49 - அணில் பல் அன்ன 17. பாடல் 196 - வேம்பின் பைங்காய் 8. பாடல் 54 - யானே ஈண்டையேனே 18. பாடல் 246 - பெருங்கடற்கரையது 9. பாடல் 58 - இடிக்கும் கேளிர் 19. பாடல் 305 - கண்தர வந்த காம ஒள்ளெரி 10. பாடல் 85 - யாரினும் இனியன் 20. பாடல் 374 - எந்தையும் யாயும் உணரக் காட்டி |
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக |
குறுந்தொகைக் காட்சிகள் - பாடல் கதை 19. பாடல் 305 - கண்தர வந்த காம ஒள்ளெரி குப்பைக் கோழி வயல்காட்டுப்பக்கம் புல்லறுக்கச் செல்லும் வேலை பொன்னிக்கு அன்று இல்லை. இருக்கிற தீவனம் போதுமென்று அப்பா சொல்லிவிட்டார். பகல்முழுக்க வீட்டுவேலைகளில் மும்முரமாக இருந்த பொன்னிக்கு மாலையில் முல்லையின் நினைவு வந்தது. வாசலில் நின்றவண்ணம் வீட்டுக்குள் எட்டிப்பார்த்தாள். பக்கத்துவீட்டில் கங்கு எடுத்துவந்த ஆத்தாக்காரி அடுப்புப்பத்தவைத்துவிட்டாள் - இரவுச் சாப்பாட்டுக்காக. “ஆத்தா ஒரு எட்டு முல்லையப் போயி பாத்துட்டுவந்துர்ரேன்” என்று உள்பக்கமாக ஓங்கிக் குரல்கொடுத்துவிட்டுப் பதிலுக்குக் காத்திராமல் இரண்டு தெரு தள்ளி இருக்கும் முல்லையின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். முல்லையின் வீட்டுத் திண்ணையில் கால்நீட்டி அமர்ந்திருந்தாள் முல்லையின் தாய். சாதாரணமாக “வாம்மா பொன்னி, பாத்து ரொம்ப நாளாச்சு, நல்லாருக்கயா?” என்று புன்னகையுடன் நலம் விசாரித்துக் காலை மடக்கி வழிவிடுவாள் முல்லையின் தாய். அன்றென்னவோ, ஒன்றும் பேசாதது-மட்டுமல்ல, காலையும் மடக்காமல் பொன்னியை முறைத்துப்பார்த்தாள். வேறு வழியில்லாமல் பொன்னிதான் அரைச் சிரிப்போடு, ”என்னம்மா நல்லாயிருக்கீங்களா?” என்று கேட்டாள். “க்கும், அதுக்கொண்ணும் கொறச்சலில்ல” என்று கழுத்தைவெட்டியவள், “பொழுதுசாயுற நேரத்துல இங்கெதுக்கு வந்த” என்று வெடுக்கென்று வினவினாள். பொன்னிக்கு என்னவோபோலாகிவிட்டது. “என்னம்மா, எப்பவும்போல முல்லயப் பாத்துட்டுப்போக வந்தேன்” என்றாள் சங்கடத்துடன். “பாத்துட்டுப்போக வந்தயா, இல்ல எதுனாச்சும் சங்கதி சொல்ல வந்தியா?” என்று மடக்கினாள் முல்லையின் தாய். ‘இது என்ன புதுக்கேள்வி?’ என்று மனத்துக்குள் கேட்டுக்கொண்ட பொன்னி, “என்னம்மா சங்கதி எங்கிட்ட இருக்கு? சும்மாதான் வந்தேன்” என்று சொன்னவளைப்பார்த்து, “வந்தோமா, பாத்தோமா, போனோமா’ன்னு இருக்கணும், அவங்க அப்பா வர்ர நேரம் அப்புறம் என் மண்டை உருளும்” என்று கண்டிப்பான குரலில் கூறிய முல்லையின் தாய் சிறிதளவு காலை மடக்கி பொன்னிக்கு வழிவிட்டாள். ‘என்னமோ நடந்திருக்கு’ என்று நினைத்தவண்ணம் தலையைக்குனிந்துகொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள் பொன்னி. உள்ளே அகலமான திறந்தவெளி. நான்கு பக்கமும் நடை. அதற்கப்புறம் உள்கட்டு. அதில் ஒருபக்கத்து நடையில் உட்கார்ந்து வானத்தையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தாள் முல்லை. “என்னடீ எப்படியிருக்க?” என்று கேட்ட பொன்னியைத் திரும்பிப் பார்த்த முல்லையின் கண்கள் கலங்கிப்போயிருந்தன. அவள் பக்கத்தில் அமர்ந்து அவளின் தோளைத் தொட்டாள் பொன்னி. “என்ன ஆச்சுடி, ஒங்கம்மா கடுகடு’ன்னு இருக்கு?” என்று குசுகுசுத்த குரலில் மெல்ல வினவினாள் பொன்னி. “இந்த வீட்டுல எல்லாருக்கும் கிறுக்குப்பிடிச்சுப்போச்சுடி” என்று வெடித்தாள் முல்லை. பொன்னி புரியாமல் விழித்தாள். “அப்புறம் என்ன? நான் வாசப்பக்கம் போயி நிக்கக்கூடாதாம். இந்த மாடாக்குழிகிட்ட இருக்குற சாளரத்து வழியாத் தெருவப் பாக்கக்கூடாதாம். பின்கட்டுல போயி நின்னு பூப்பறிக்கக்கூடாதாம். காலையில வாசத் தெளிக்கப்போனா ‘வெடுக்’-குன்னு பிடுங்கிக்கிட்டு “நீ உள்ள போ, முத்தம்மா பாத்துக்குருவா”’ன்னு அம்மாக்காரி அதட்டுறா. இத்தனநாளும் இத நான் செய்யலியா’ன்னா கேட்டா, “இத்தன நாளுஞ்சரி, இனிமேல வேண்டாம், கையக்கால வச்சுகிட்டுச் சும்மா கிட’ன்னு அதட்டல். அப்பாகூட ஏங்கிட்ட சரியாப் பேசுறதில்ல. கூப்பிட்டுக் கூப்பிட்டுப் பேசுறவரு, நான் போயிப் பேசுனாக்கூட கேட்டதுக்குப் பதில் சொல்லிட்டுப் பேசாமப்போயிடுறாரு. என்னாச்சு இவங்களுக்கு’ன்னு தெரியல்ல” என்று கடுகுபோல் வெடித்தாள் முல்லை. “ஏண்டி இவங்களுக்குத் தெரிஞ்சுபோச்சு’ங்கிறது ஒனக்குத் தெரியலயா?” “என்ன தெரிஞ்சுபோச்சு?” “இன்னிக்கு வாசல்’ல ஒங்கம்மா பேசுனதப் பாத்தப்பவே எனக்குப் பொறிதட்டிச்சு, ஏண்டி கிறுக்கச்சி, இவ்வளவு நடக்குது, ஒனக்கு ஒண்ணும் தோணலியா?” என்று மீண்டும் குசுகுசுத்த குரலில் பொன்னி கேட்டாள். “எனக்கு ஒண்ணும் தோணலிடீ” “அந்த வெசயம்” “அது எப்பட்றீ இவங்களுக்குத் தெரியும்?” “எப்படியோ தெரிஞ்சுபோச்சு, நாமதான் நெனச்சுக்கிட்டு இருக்கோம், யாருக்கும் தெரியாதுண்ணு. ஆமா இது என்னிக்கு ஆரம்பிச்சிச்சு?” “எதுடீ?” “அடி இவளே, இந்த அரட்டல், உருட்டல், அதப்பாக்காத, இதப்பாக்காத’ங்குறது” “நேத்துல இருந்து தாண்டீ” “நேத்துக் காலயில அண்ணனப் பாத்தேன்” முல்லையின் முகம் சட்டென்று மலர்ந்தது, கண்கள் விரிந்தன. “அவரப் பாத்தியா? எங்கணக்குள்ள?” “காலயில பல்தேச்சுக்கிட்டுத் திரும்பிப் பாக்குறேன், அண்ணன மாதிரி ஒரு ஆளு ஒங்க வீட்டுப்பக்கம் போய்க்கிட்டு இருந்தாரு, அவராத்தான் இருக்கும்.” “சரித்தான், நேத்துக் காலயில வெள்ளென வாசத்தெளிச்சுட்டு வீட்டுக்குள்ள வந்து கையக்காலக் கழுவிக்கிட்டு இருந்தப்ப, முத்தம்மா வாசப்பக்கம் போயி யாரையோ அதட்டிப் பேசிக்கிட்டிருந்தா. ‘யாருப்பா நீ, ஊருக்குப்புதுசா? யாரப்பாக்கணும்? இந்த நேரத்துல வந்து வீடுவீடாப் பாத்துக்கிட்டுருக்க’ன்னு ஓங்கிப் பேசிக்கிட்டிருந்தா” “அப்ப அது அண்ணனாத்தான் இருக்கும். ரொம்ப நாளா ஒன்னக் காணலியேன்னு பாத்துட்டுப்போக வந்திருக்கும்’னு நெனக்கிறேன்” “எங்கடீ, வெளிய போகவே விடமாட்டேங்கிறாங்க. ஊருக்கு வெளிய நந்தவனத்துல பூப்பறிச்சுட்டு வர்ரேன்’னு சொன்னா, முந்தியெல்லாம் சீக்கிரம் போயிட்டுச் ‘சட்’-னு வந்துரு’ன்னு சொல்லி அனுப்புவாங்க, இப்ப என்னான்னா, ‘அதெல்லாம் முத்தம்மா பறிச்சுக்கிட்டு வருவா, நீ பேசாம இரு’ன்னு சொல்லி அடக்கிட்றாங்க. அவரப் பாத்துக் கொள்ள நாளாச்சுடீ. சும்மா வந்து வந்து ஏமாந்துபோயித் திரும்பியிருப்பாரு. அதான் வீட்டப்பக்கம் வந்திருக்காரு. இதுக நாய வெறட்டுறது கணக்கா அவரப்போயி வெரட்டியிருக்குக” அப்போது வீட்டு முற்றத்தில் நடுவில் கிடப்பதைக் கொத்திக்கொண்டிருந்த இரண்டு சேவல்கள் திடீரென்று மிகுந்த ஆக்ரோஷத்துடன் ஒன்றையொன்று தாக்கிக்கொள்ள ஆரம்பித்தன. பறந்து பறந்து தத்தம் கால்களால் ஒன்றையொன்று அறைந்துகொண்டன. தம் அலகுகளால் அடுத்ததின் கழுத்தைக் கொத்திக்கொத்திக் கோத்துக்கொண்டு சுத்திச் சுத்தி வந்தன. திடீரென்று ஏற்பட்ட சத்தத்தால் அடித்துப்பிடித்து ஓடிவந்த முத்தம்மா ‘சூச்சூ’ என்று அந்தச் சேவல்களைக் கையால் தட்டிப் பிரித்துவிட்டாள். “இப்ப யாராவது இந்தக் கோழிகள ‘சூ’-காட்டிவிட்டாகளா?” “என்னடீ இது, நோய் வந்தவக கெணக்கா பெணாத்துற, இந்தக் கோழியப் போயி யாரு சூ-காட்டிவிடுவா?” “நோய்தான்டி இது, நோய் மட்டுமில்ல, தீயி” “தீயா” “ஆமா, கண்தர வந்த காம ஒள் எரி, ஒனக்கெங்க புரியப்போகுது, தீ’ன்னா, இந்தப் பாழாப்போன கண்ணு என்னிக்கி அவரப் பாத்துச்சோ அன்னிக்கிப் பிடிச்ச தீ, எலும்பு வரைக்கும் போயிச் சுடுதுடீ” “ந்தா, ஒங்கம்மா வருது, செத்தப் பேசாம இரு” “என்ன பொன்னி, நான் வந்ததும் கம்’முனு இருக்கீங்க, இன்னுமா ஒங்க பேச்சு முடியல?” என்று வினவினாள் தற்செயலாக அங்கு வருவதுபோல வேவுவார்க்க வந்த முல்லையின் தாய். “இல்லம்மா, இன்னும் செத்த நேரத்துல கெளம்பிருவேன்” என்றாள் பொன்னி. “வேவு பாக்க வர்ராங்க பாத்தியா” என்று சீறினாள் முல்லை. “இப்படித்தான்டி நான் என்ன செஞ்சாலும் எங்க போனாலும் சுத்திச் சுத்தி வர்ராங்க. அவரப்போயி பாத்துக் கொஞ்சநேரம் பேச முடியல்லியே, அந்தளவுக்கு வெடக்கோழிய பஞ்சாரத்துல அமுக்குனது கெணக்கா என்ன அமுக்கிப்புட்டாங்கடீ, சரி அவராவது பாக்க வந்தா விடுதுகளா இந்த .... எனக்கு என்னண்டு வாயில வருது” “சரி சரி பெத்தவக, வளத்தவக அப்படித்தான் இருப்பாக, நீதான் செத்த சூதானமா இருக்கணும்” “இருந்து என்ன செய்ய?, இந்தக் கோழியயாவது பிரிச்சுவிட ஆளிருக்கு. அவரப் பாக்கணுமிங்கிற ஆச, பாக்க முடியாத தவிப்பு, இது ரெண்டுக்கும் எனக்குள்ள நடக்கிற மல்லுக்கட்டு இருக்கே, இத யாஅரும் மூட்டிவிடவும் இல்ல. பிரிச்சுவிடவும் மாட்டாக. தானா வந்தது தவியாத் தவிக்குது. குப்பயில சண்டபோட்டுக்கிட்டு இருக்குமே கோழிக, அதுகள மூட்டிவிட்டது யாரு? பிரிக்கப்போறது யாரு? அதுவா சண்ட போட்டு, சண்ட போட்டுக் களச்சுபோயி, பொத்துன்னு விழுந்தாத்தான். அத மாதிரி எனக்குள்ள தானா நடக்குற இந்த மல்லுக்கட்டுல நான் செத்தே போவண்டி, இதத் தீத்துவிட யாரு வரப்போறா?” “என்னா, இன்னமுமா ஒங்க பேச்சு முடியல்ல, இவ அப்பா வர்ர நேரமாச்சு” என்ற தாயின் சொல் கேட்டு, மனமில்லாமல் முல்லையின் தொடையை இலேசாக ஒரு அமுக்கு அமுக்கிவிட்டுப் புறப்பட்டுச் சென்றாள் பொன்னி. |