சங்கச் சொல்வளம் - கட்டுரைகள்

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

 
1. அசைவுகள் 			7. உணவு வகைகள் 
2. நகர்வுகள் 
3. குறைத்தல்கள்
4. அஞ்சுதல் 
5. உண்ணுதல் 
6. உண்ணும் விதங்கள் 

ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக
 
						சங்கச் சொல்வளம்

	3. குறைத்தல்கள்


	ஒரு வெள்ளரிக்காயை நன்றாகக் கழுவி ஒரு பலகையில் நீளவாக்கில் வைத்து ஓர் ஓரத்திலிருந்து கத்தியால் வெட்டிக்கொண்டே 
வருகிறீர்கள். இப்பொழுது காயின் நீளம் குறைந்துகொண்டே வரும் இல்லையா? இது ஒருவகைக் குறைத்தல் அல்லது குறைதல்.

	ஓர் ஊரில் ஒரு குறிப்பிட்ட இனத்தார் நிறையப்பேர் இருக்கிறார்கள். நாளாக ஆக அவர்களுக்கு வருமானம் இல்லை. 
ஒவ்வொரு குடும்பமாக ஊரைவிட்டு வெளியேறுகிறார்கள். ஊரில் அவர்களின் தொகை குறைந்துகொண்டே வரும் இல்லையா? 
இது இன்னொரு வகைக் குறைதல்.

	ஓர் அருவி பெரும் வெள்ளப்பெருக்குடன் ஆர்ப்பரித்து விழுகிறது. நீர்வரத்து குறையக் குறைய அருவிநீரின் அளவும் 
குறைந்துகொண்டே வரும் இல்லையா? இதுவும் வேறோர் வகைக் குறைதல். 
இவை மூன்றுமே கொஞ்சம் கொஞ்சமாகக் குறைதல்கள்தான். ஆனால் இலக்கியங்கள் இவற்றை வேறுபடுத்திக்காட்டுகின்றன. 

	முதலாவது அகைதல், 
	அடுத்தது அருகுதல். 
	கடைசியானது நிழத்துதல். 

	சங்க இலக்கியவழி இவற்றை ஆய்வோம்.
	
1. அகைதல் / அகைத்தல்

	ஒரு உயரமான அண்டாவில் நீர் நிறைய இருக்கிறது. அதன் கீழ்ப்புறத்தில் ஒரு குழாய் இருக்கிறது. அந்தக் குழாயைத் திறந்து 
ஒரு குவளை நீர் பிடிக்கிறோம். அண்டாவில் நீர்மட்டம் குறையும். இன்னும் கொஞ்சம் நீர் பிடிக்கிறோம். நீர் மட்டம் மேலும் குறையும். 
இவ்வாறு குழாயைத் திறந்துவைத்தால் நீரின் உயரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வரும். 

	அடுத்து, அந்தக் குவளையை அண்டாவின் மேல் பாகத்தில் உள்ளே விட்டு நேராக நீர் முகக்கிறோம். 
அப்போதும் நீரின் மட்டம் குறையும். இவ்வாறு அடுத்தடுத்துக் குவளையில் நீர் மொண்டுவருகிறோம். இவ்வாறு நீரை 
மொண்டுகொள்ளும்போதெல்லாம் நீரின் உயரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வரும். இந்த இருவகைக் 
குறைதலுக்குமுள்ள வேறுபாடு என்ன? 

	முதலாவதில் நீர் வடிய வடிய, நீரின் உயரம் தொடர்ச்சியாகக் குறைந்துகொண்டே வருகிறது. 

	அடுத்ததில், ஒருமுறை நீர் மொள்ளும்போது நீரின் உயரம் சடார் என்று ஓரளவுக்குக் குறைகிறது. ஒவ்வொரு முறையும் 
நீர் மொள்ள மொள்ள நீரின் உயரம் சடார் சடார் என்று குறைந்துகொண்டுவருகிறது. நீரின் உயரம் குறைதல் தொடர்ச்சியாக இல்லாமல் 
விட்டுவிட்டு நடக்கிறது. அறிவியல் வழக்கில், முதலாவது continuos அடுத்தது discreet. ஆப்பிளை எடைத்தராசில் நிறுத்து வாங்கினால் 
அது continuos. 1 கிலோ, 1¼ கிலோ, 1½ கிலோ என்று வாங்கலாம். எண்ணிக்கைக் கணக்கில் வாங்கினால் அது discreet. 
1 பழம், 2 பழம் என்றுதான் வாங்கமுடியும். 1¼ பழம் கிடைக்காது! 

	ஒரு குளத்தின் மடைவழியாக வயலுக்கு நீர் பாயும். சில நேரங்களில் அருகில் இருக்கும் வயலுக்குப் பாய்ச்சுவதற்கு 
ஒரே ஆள் அல்லது இரண்டு ஆட்கள் சேர்ந்து ஒரு கூடையின் மூலம் நீரை முகந்து முகந்து வயலுக்குப் பாய்ச்சுவர். 
இதைப் பற்றிக் கூற வந்த ஒரு புலவர் கூறுகிறார்,

	கயன் அகைய வயல் நிறைக்கும்
	மென்தொடை வன்கிழார் - மதுரைக்காஞ்சி 92,93

	(கயன்=குளம்; அகைய=குறைய; தொடை=கட்டு; கிழார்=நீர்முகக்கும் கருவி)

	‘குளத்துநீர் குறையும்படியாக (நீரை முகந்து)வயலை நிறைக்கும் மெல்லிய கட்டுக்களையுடைய வலிமையான பூட்டுப்பொறி' 
என்பது இதன் பொருள்.


			

	அகைதல் அல்லது அகைத்தல் என்பது கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிட்டுக் குறைதல் அல்லது குறைத்தல் என்று பொருள்படும். 
ஒரு யானை மரத்தின் தளிருள்ள கிளைகளை ஒவ்வொன்றாக ஒடித்து-ஒடித்து உண்ணும். இதை, 

	உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்  என்கிறது மலைபடுகடாம் (429)

	(உம்பல்=யானை;முறி=தளிர்). 

	குளத்தில் மடை இருந்தால், அதன் வழியே நீர் வெளியே செல்லும்போதும் நீர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். 
ஆனால், இது தொடர்ச்சியாக நடைபெறும். எனவே இது ஒரு continuous process. எனவே இது அகைத்தல் அல்ல. 
ஒரு பொறியினால், நீரை முகந்து முகந்து வெளியே கொட்டும்போது, நீர் விட்டுவிட்டுத்தானே குறையும்! ஒரு முகத்தலுக்கும் 
அடுத்த முகத்தலுக்கும் இடைப்பட்ட சிறிய இடைவெளியில் நீர் குறைவதில்லை. எனவே, இது ஒரு discreet process. 
இந்த நுணுக்கமான வேறுபாட்டையும் குறிப்பிடுவதற்குப் புலவர் தெரிந்தெடுத்துள்ள சரியான சொல், அவரின் சொல்திறனையும் 
தமிழின் சொல்வளத்தையும் காட்டுகிறது அல்லவா!

2. அருகு / அருக்கு

	மதுரை, தேனி மாவட்டங்களில் சில கிராமங்களில் குறைந்த அளவு வாழும் அந்தணர்கள் உண்டு. அவர்களின் இருப்பிடம் 
அக்ரகாரம் எனப்படும். இப்போதெல்லாம் அங்கு பிறந்து வளர்ந்தவர்கள் வெளியூர்களுக்கோ, வெளிமாநிலங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ 
சென்று தங்கிவிடுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து அவர்களின் பெற்றோரும் சென்றுவிட, அக் கிராமங்களில் அந்தணர் எண்ணிக்கை 
குறைந்துகொண்டே வருகிறது. இப்படியாகத் தாமாகக் குறைவதை அருகுதல் என்றும், வேறு யாரோராலோ குறைக்கப்படுவதை அருக்குதல் 
என்றும் கூறுகின்றன நம் சங்க இலக்கியங்கள்.

	பொருநரை உபசரிப்பதில் குன்றாத நாட்டமுடைய மன்னன் கரிகாலனைப் புலவர் முடத்தாமக் கண்ணியார் குறையாத 
பாசத்துடன் அவர்களைப் பார்க்கிறான் என்பதை இப்படியாக விவரிக்கிறார்:-

	கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி,
	வேளாண் வாயில் வேட்பக் கூறி,
	கண்ணில் காண நண்ணுவழி இரீஇ,
	பருகு அன்ன அருகா நோக்கமொடு – பெரும்பாணாற்றுப்படை 74 - 77

	உறவினரைப் போல உறவுகொள்ளுதலை விரும்பி, 
	தான் விருந்தோம்பல் செய்வதையே விரும்புவதாகக் கூறி, 
	கண்ணுக்கு எதிராக இருக்கும்படி அருகிலே இருத்தி, 
	கண்ணால் பருகிவிடுவதுபோல் குறையாத பார்வையால் –

	என்பது இதன் பொருள். பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பார்கள். அது போலன்றி, அவன் பொருநரிடத்தில் அருகாத கனிவான 
பார்வை கொண்டிருந்தான் என்கிறார் புலவர். 

	சிறுபாணாற்றுப்படையில் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் ஓய்மாநாட்டு நல்லியக்கோடனின் ஆமூர் என்ற ஊரின் 
சிறப்பைக் கூறுங்கால்,

	அந்தணர் அருகா அருங்கடி வியல் நகர் – சிறுபாணாற்றுப்படை - 187

	என்கிறார். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் இப்போதெல்லாம் பறவைகளின் வரத்து அருகியே காணப்படுகிறது 
என்று இப்போதும் சிலர் எழுதுவதைப் பார்க்கிறோம். எனவே அருகுதல் என்பது தாமாகவே கொஞ்சம் கொஞ்சமாகக் குறைதல் என்ற 
பொருள்படும். 

	இனி, அருகு என்பதன் பிறவினையாக அருக்கு என்ற சொல்லும் ஆட்சியில் இருந்திருக்கிறது. இது பிறரால் கொஞ்சம் கொஞ்சமாகக் 
குறைக்கப்படுதல் அல்லது குறைவுறுதல் எனலாம். 

	ஆய் எயினன் என்ற வேளிர்குல மன்னன் ஒரு போரில் மிஞிலியுடன் போரிட்டு மாய்கிறான். அப்போது பெருந்துன்பம் கொண்ட 
வேளிர் மகளிர் போர்க்களத்துக்கு விரைந்து வருகிறார்கள். மாண்டுகிடக்கும் மன்னனைப் பார்த்துத் தம் கூந்தலில் சூடியுள்ள வண்ண மலர்ச் 
சரங்களைக் கையிலெடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்துப் பிய்த்து எறிந்து அழுகிறார்கள். இதனைக் கூற வந்த புலவர் பரணர்,

	குரூஉப் பூ பைம் தார் அருக்கிய பூசல் - அகம் 208/16

	என்று கூறுகிறார். இவ்வாறு பூச்சரங்கள் குறைக்கப்படும்போது எழுந்த கூக்குரலை, பூந்தார் அருக்கிய பூசல் என்கிறார் புலவர்.

	இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைகின்ற அல்லது குறைக்கப்படுகின்ற அருகு அல்லது அருக்கு என்பது இதே பொருளில் 
வரும் அகைய அல்லது அகைத்த என்ற சொல்லினின்றும் எவ்வாறு வேறுபடுகின்றது?

	அகைதல் அல்லது அகைத்தலில், குறையும்போது ஓர் அழிவோ சிதைவோ ஏற்படுவதில்லை. 
ஆனால் அருகுதலிலும் அருக்குதலிலும் சிதைவு உண்டாகிறது. முதலில் சுவையாக இருந்த பால் பின்னர் புளிக்கத் தொடங்குகிறது அல்லவா! 
அவ்வாறு இல்லாத நோக்கமே அருகா நோக்கம். அந்தணர் நிறைய இருக்கும்போது பொலிவுடன் இருந்த இல்லங்கள், அவர்கள் அருகிய பின்னர்
சிதைவுற்றும் பாழடைந்தும் போய்விடும் அல்லவா? அவ்வாறு நடக்காத ஊரே அந்தணர் அருகா வியல் நகர். 

	திரிகடுகம் 50-ஆவது பாடலைப் பாருங்கள்:-

	கொள் பொருள் வெஃகிக் குடி அலைக்கும் வேந்தனும்
	உள் பொருள் சொல்லாச் சல மொழி மாந்தரும்
	இல் இருந்து எல்லை கடப்பாளும் இம் மூவர்
	வல்லே மழை அருக்கும் கோள்

	குடிமக்களைத் துன்புறுத்தி வரிவசூலிக்கும் மன்னனும், உண்மை சொல்லாப் பொய்மொழி மாந்தரும், தற்காத்துக்கொள்ளாத 
மனைவியும், மழையினை அருக்கும் கோள்களாவர் என்கிறது இப் பாடல்.

	வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினால் மழை வளம் கரக்கும் என்கிறது பட்டினப்பாலை. 
அவ்வாறு திசைமாறிய கோள்களை ஒப்பர் இம் மூவரும் என்பது இதன் பொருள். மழை அற்றுப்போனால் என்ன நிகழும்? 
சிதைவும் வெறுமையும்தானே. இதனையே அருக்கும் கோள் என்கிறார் திரிகடுகத்தார்.

	சீதையின் எண்ணத்தை மாற்ற முடியாத இராவணன் சீற்றங்கொண்டு இராம இலக்குவரையும் அவருடன் சேர்ந்த அனைவரையும் 
கொன்று அழிப்பேன் என்று சினந்து, யுத்தகாண்டம் மாயாசனகப் படலத்தில் கூறுவதைப் பாருங்கள்:-

	தாவ அரிய பேர் உலகத்து எம்பி சவத்தோடும்
	யாவரையும் கொன்று அருக்கி என்றும் இறவாத
	மூவரையும் மேலை நாள் மூவா மருந்து உண்ட
	தேவரையும் வைப்பேன் சிறை என்ன சீறினான் - யுத்2:17 90/2
	
	போரில் பகைவரைக் கொல்லக் கொல்ல படைபலம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும்தானே! 
பின்னர் அழிவும் சிதைவும் ஏற்படும் அல்லவா! எனவேதான் இராவணன் யாவரையும் கொன்று அருக்கி என்று கூறுவதாகக் கூறுகிறார் கம்பர்.

3. நிழத்து

	உயர்ந்த ஒரு கோபுரத்தின் உச்சியில் இருக்கும் ஒரு பெரிய வெண்கலமணி ‘கணீர்’ என்று ஒலிக்கிறது. 
பின்னர் அந்த ஒலி சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து தேய்ந்து மறைகிறது. சுற்றுப்புறச் சந்தடிகள் மணி ஒலியைச் 
சீக்கிரமாகவே அமுக்கி முழுங்கிவிடுகின்றன. இதுவே, நள்ளிரவாயிருந்தால், வேறு எந்தச் சந்தடியும் இல்லாத நேரத்தில் மணி ஒலி 
கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தாலும் நீண்ட நேரத்துக்குக் கேட்டுக்கொண்டே இருக்கும். இதுதான் நிழத்துதல். முல்லைப்பாட்டில், 
தலைவனான அரசன் போர்மேற் சென்றிருக்கிறான். அவனுடைய பாசறைக் காட்சிகளை மிக அழகாகவும், வெகு விளக்கமாகவும் 
ஆசிரியர் கூறிக்கொண்டே வரும்போது நள்ளிரவு நெருங்குகிறது. அப்போது அங்கு இருந்த நீண்ட நாவினை உடைய மணியைப் 
பொழுது அறிவிப்போர் முழக்குகின்றனர். ஓங்கி ஒலித்த மணியின் ஓசை கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து இறுதிவரை 
நீண்ட நேரம் ஒலிப்பதைப் புலவர் நப்பூதனார்,

	நெடுநா ஒண்மணி நிழத்திய நடுநாள் – முல்லைப்பாட்டு 50

	என்று கூறுகிறார். அது நள்ளிரவு நேரம். அரசனின் இருப்பிடம் வேறு. எனவே எங்கும் ஒரே அமைதி. 
எனவே மணியோசை இறுதிவரை ஒலித்து அடங்குகிறது. ஒருவேளை அது பகல் நேரமாயிருந்து, அந்நேரத்தில் வேறு அரவங்கள் 
இருந்திருந்தால் மணியோசை கடைசிவரை ஒலிக்காமல் சற்று நேரத்திலேயே அடங்கிப்போயிருக்கும். அவ்வாறு இடையில் சட்டென்று 
அடங்கிப்போகாமல் இறுதிவரை ஒலித்து மிக நுணுக்கமாக ஆகி மறைந்துபோவதே நிழத்தல்.

	ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
	ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் – தொல்காப்பியம்– உரிச்சொல் – 32

	என்கிறது தொல்காப்பியம். எனவே நிழத்தல் என்பது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து மிகவும் நுணுகிப்போதல் என அறியலாம்.

	இவ்வாறு நுணுகிக் குறையாமல் நின்றுபோவதை அடங்குதல் அல்லது அவிதல் எனலாம். உருமிக்கொண்டு வருகிற 
கருத்த மேகங்கள் இடி மின்னலுடன் பெருமழை பெய்து ஓய்ந்து போவதை,

	உருமுரறு கருவிய பெருமழை தலைஇப்
	பெயல் ஆன்று அவிந்த தூங்கு இருள் நடுநாள் – அகம் 158/1,1

	என்கிறது அகநானூறு. பெய்கின்ற மழை நின்றபின் அதன் ஒலி அடங்கிப்போவதையே மழை நின்று ஒலி அடங்கிய 
நள்ளிரவு என்கிறது இப் பாடல். அவிதலுக்கும் நிழத்தலுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்.

	மழை பெய்யாமல் வறங்கூர்ந்ததால் பெரிய மலையினின்றும் விழும் அருவி கொஞ்சம் கொஞ்சமாக நீர்வரத்துக் குறைந்து, 
நுணுகிப்போய் வறண்டுபோவதும் நிழத்தலே. 

	காட்டு விலங்குகளான யானை, காட்டுப்பன்றி போன்றவை தினைப்புனத்தை மேய்ந்து அல்லது தோண்டிக் கொஞ்சம் கொஞ்சமாகப் 
புனத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவதும் நிழத்தலே. இதனை,

	அருவி மா மலை நிழத்தவும் – பொருநராற்றுப்படை - 235
	நிழத்த யானை மேய் புலம் படர – மதுரைக்காஞ்சி - 303
	வாய் மடுத்து, இரும் புனம் நிழத்தலின் – குறிஞ்சிப்பாட்டு - 156,157
	விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி – மலைபடுகடாம் - 193

	ஆகிய அடிகள் வலியுறுத்தும்.

			

	இத்தருணத்தில் இன்னொன்றையும் குறிப்பிடவேண்டும். 

	அகைதல் என்பது ஒருவகையான குறைதல் என்று கண்டோம். ஆனால் குறைதல் மட்டுமன்றி அகைதலுக்குத் 
தழைத்தல் (sprout) என்ற பொருளும் உண்டு. 

	குப்பைக் கீரை கொய்க் கண் அகைத்த
	முற்றா இளம் தளிர் கொய்துகொண்டு உப்பு இன்று - புறம் 159/9,10

	என்ற புறநானூற்று அடிகள் மூலம் இதனை அறியலாம். சில வகைக் கீரைகளை வேருடன் பிடுங்காமல் நுனியில் 
இளந்தண்டுகளுடன் கிள்ளிப் பிடுங்குவார்கள். அவ்வாறு கிள்ளப்பட்ட இடங்களில் உள்ள கணுக்களிலிருந்து புதிய தளிர்கள் துளிர்விடும். 
இவ்வாறு துளிர்விடுதலையும் அகை என்ற சொல் குறிக்கும். 
	
	இவ்வாறு குறைதலையும், துளிர்விடுதலையும் ஒரே சொல் குறிப்பது இச் சொல்லின் தனிச் சிறப்பாகும்.