சங்கச் சொல்வளம் - கட்டுரைகள்

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

 
1. அசைவுகள் 			7. உணவு வகைகள் 
2. நகர்வுகள் 
3. குறைத்தல்கள்
4. அஞ்சுதல் 
5. உண்ணுதல்  
6. உண்ணும் விதங்கள் 

ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக
 
 						சங்கச் சொல்வளம்

	7. உணவு வகைகள் 

	சங்கத் தமிழர் ஒவ்வொருவிதமான உணவுக்கும் ஒவ்வொருவிதமான பெயர் வைத்திருந்தனர் என்பது வியப்புக்குரிய செய்தி. 
இப்பொழுதும் நாம் பொரியல், அவியல், வறுவல், துவையல், புழுங்கல், களி, சோறு என்று பலவிதமான உணவுவகைகளைக் கொண்டிருக்கிறோம். 
இதுபோன்றே பண்டைத் தமிழகத்தும் உணவுப் பொருள்களுக்குப் பல்வேறு சொற்கள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. அவற்றை அகர வரிசையில் 
இங்குக் காண்போம்.

1. அடிசில்

	இன்றைக்கும் நாம் அக்காரவடிசில் என்ற ஒருவகை உணவுப் பொருளை அறிவோம். அதனைச் சிலர் கற்கண்டுச் சாதம் என்பர். அக்காரம் 
என்பது கற்கண்டு அல்லது கரும்புவெல்லத்தைக் குறிக்கும். இதனைச் சேர்த்து, நெய்யோடு மிகவும் குழைவாகச் செய்யப்பட்டதே அக்கார + அடிசில். 
சேர்க்கை விதியின்படி அக்காரவடிசில் ஆனது. இந்த அடிசில் ஒரு பழஞ்சொல் ஆகும். சங்க இலக்கியங்களில் இதனைப் பற்றிய குறிப்புகள் வெகுவாகக் 
கிடைக்கின்றன.

	அடிசில் என்பதற்குக் குழைவாக ஆக்கிய நெல்லரிசிச் சோறு என்பது ஒரு பொதுவான பண்பு. இதில் பலவகை உண்டு என்பதையும், 
அவற்றின் சிறப்புப் பண்புகளையும் பார்ப்போம்.

	அப்பொழுதுதான் நடக்கப் பழகிய குழந்தை. ‘குறுகுறு’-வென்று அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்குச் சோறு ஊட்டவேண்டும். 
அந்தச் சோறு எப்படி வெந்திருக்கவேண்டும்? பருக்கை பருக்கையாகவா? பாட்டிக்குக் கோபம் வந்துவிடும். குழந்தைக்காகச் சோற்றைக் குழைய 
ஆக்கியிருப்பார்கள். அதனையும் குழைவாகப் பிசைந்துவிட்டிருப்பார்கள். நெய்யும் சேர்த்திருப்பார்கள். அதை வாங்க மறுத்த குழந்தை பெரியவளைப் 
போல் கையை நீட்டுகிறது. உள்ளங்கையில் ஓரு சிறிய உருண்டையை ஆசையுடன் வைக்கிறீர்கள். அப்படியே கையை வாய்க்குக் கொண்டுசெல்கிறது 
குழந்தை. வாயில் பாதி-வயிற்றில் பாதியாக மேனியெல்லாம் சோறு. பார்த்த பாண்டியன் அறிவுடைநம்பி பாடுகிறான்:

	குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
	இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
	நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
	மயக்குறு மக்களை --------------    புறம் 188/3-6

	குழந்தைகளும் உண்ணும் குழைந்த உணவே அடிசில். பாண்டியன் குழந்தை உண்ணுவது நெய்யுடை அடிசில்.

	காதல்கொண்ட தலைவன், திருமணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் வந்துவந்து பார்த்துச் செல்கிறான். 
ஒருநாள் அவளைப் பெண்பார்க்க வந்துசென்றால், அதன் பின்னர் மணம் முடிந்து அவள் தன் வீட்டில் உனக்குச் பால்ச்சோறு தருவாளே என்ற கருத்தில் 
தோழி தலைமகனைப் பார்த்துச் சொல்கிறாள்:

	புதுக்கலத்தன்ன செவ்வாய்ச் சிற்றில்
	புனையிரும் கதுப்பின் நின் மனையோள் அயரப்
	பாலுடை அடிசில் தொடீஇய ஒருநாள்
	மாவண் தோன்றல்! வந்தனை சென்மோ! – அகம் 394/9-12

	இன்றைக்குச் சில குடும்பங்களில் திருமணம் நடந்து முதலிரவன்று, மணமகள் வெள்ளித்தட்டில் மணமகனுக்குப் பால்ச்சோறு 
எடுத்துச் செல்வது வழக்கமாக இருக்கிறது. அன்றைக்கும் குழைவாக ஆக்கிய சோற்றில் பாலூற்றிப் பிசைந்து மணமகள் மணமகனுக்குத் தருவது 
பழக்கமாயிருந்தது போலும்! இது பாலுடை அடிசில்!

	பச்சரிசிச் சோற்றைக் குழைவாக ஆக்கி, அகப்பையில் மொண்டு வட்டியில் இட்டால் உருண்டையாக விழும். அதற்குத் தொட்டுக்கொள்ள, 
சுடச்சுட கறிக்குழம்பு ஊற்றினால் எப்படியிருக்கும்! இதோ ஒரு சங்க மகள் ஊற்றித் தருகிறாள் பாருங்கள்.

	குய் குரல் மலிந்த கொழும் துவை அடிசில்
	இரவலர்த் தடுத்த வாயில் புரவலர் - புறம் 250/1,2

	குய் என்பது தாளித்தல். கொழும் துவை என்பது கொழுத்த மாமிசம் போட்ட ‘கொள கொள’-வென்ற குழம்பு. தாளித்த ஓசையுடன் 
கூடிய கொழுத்த ஊன் குழம்பும் குழைத்த சோறும் இரவலரைப் போகவிடாது தடுக்குமாம். இது கொழும் துவை அடிசில்!

	பெருவள்ளலாகிய குமணன், தன்னைத் தேடி வரும் இரவலருக்குப் பொன்னாலான வட்டிலில் இந்தக் கொழும் துவையை 
நெய்யுடை அடிசிலோடு கொடுத்திருப்பதைப் புலவர் பெருஞ்சித்திரனார் பாடுகிறார்.

	குய் கொள் கொழும் துவை நெய்யுடை அடிசில்
	மதி சேர் நாள்மீன் போல நவின்ற
	சிறு பொன் நன் கலம் சுற்ற இரீஇ - புறம் 160/7 -9
	இது இன்னும் சிறந்த கொழும் துவை நெய்யுடை அடிசில்!

	இந்தக் குய் மணக்கும் கொழும் துவை அடிசில் மிக்க சுவையுடையது என்றும் அமிழ்தத்தினும் சுவை மிக்கது என்றும் கூறுகின்றனர் 
நம் சங்கப் புலவர்கள்.

	அமிழ்து அட்டு ஆனா கமழ் குய் அடிசில் - புறம் 10/7,8
	சுவைக்கு இனிது ஆகிய குய் உடை அடிசில் - புறம் 127/7,8

	கொழுத்த ஆட்டின் மாமிசத்தில் கொழுப்பு ஒட்டிக்கொண்டிருக்கும். அதனை வேகவைத்துக் கையிலெடுத்தால் கைவிரல்களுக்கிடையில் 
அது நெய்போல ஒழுகும். பசுவின் நெய்யை மிகுதியாக இட்டுக் குழைத்து ஆக்கிய சோற்றுடன் இந்த ஒழுகும் நிணமும் கலந்திருந்தால் 
எப்படியிருக்கும்? இது ஒரு வகை அடிசில். இந்த அடிசிலை விருந்தினருக்கு இட்டு, அவர்கள் உண்ட பின் மிஞ்சிய மீதத்தை நாம் உண்போம் 
என்று குறிஞ்சிப்பாட்டுத் தலைவன் தலைவியிடம் கூறுகிறான்.

	பைம் நிணம் ஒழுகிய நெய்ம் மலி அடிசில்
	வசை இல் வான் திணை புரையோர் கடும்பொடு
	விருந்துண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
	நின்னோடு உண்டலும் புரைவது  - குறி 204 - 207

	இது நிணம் சேர்த்த நெய் அடிசில்!

	இன்றைக்கு ஊனோடு சேர்ந்த சோற்றைப் பிரியாணி என்கிறோம். அது உதிரி உதிரியாகக் கூட இருக்கும். இதனை ஊன்சோறு எனலாம். 
அப்படி இல்லாமல் வெகுவாக ஊனுடன் குழைத்து ஆக்கப்படுவது ஊன் அடிசில். இருப்பினும் இங்கே குழைவாக என்பதை அழுத்தம் திருத்தமாகச் 
சொல்ல, நம் புலவர்கள் இதனை ஊன் துவை அடிசில் என்றார்கள். நன்றாக மசிப்பதுதானே துவையல்! துவை என்பதற்கு மிதித்து உழக்கு, குழை 
என்பது பொருள். சோறும் கறியும் வேறுவேறாகத் தெரியக்கூடாதாம், பதிற்றுப்பத்து கூறுவதைப் பாருங்கள்!

	சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில்
	ஓடா பீடர் உள்_வழி இறுத்து - பதி 45/13,14

	போரில் வெற்றியை ஈட்டித்தந்த மறவருக்கு வெற்றிவேந்தன் அளித்த விருந்தின் ஒரு பகுதி இது! இது ஊன் துவை அடிசில்.

	இவ்வாறான பலவகை அடிசில்கள் சங்க கால மக்களால் உண்ணப்பட்டன. இமயம் போன்ற மார்பினைக் கொண்ட பீமன், 
உணவுவகைகளைப் பற்றிய நூல் இயற்றியிருந்தான் எனவும், அந் நூலில் விதம் விதமான பல்வேறு அடிசில் வகைகளைப் பற்றிக் கூறியிருந்தான் 
எனவும் சிறுபாணாற்றுப்படை ஆசிரியர் கூறுகிறார்.

	பனிவரை மார்பன் பயந்த நுண்பொருள்
	பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில் - சிறு 240,241

	பனுவல் என்பது புத்தகம். பனிவரை மார்பன் என்பவன் பீமன் – சமையற்கலையிற் சிறந்தவன் என்று போற்றப்படுபவன்.

2. அமலை

	அமலை என்பதற்கு மிகுதி என்பது பொருள். இதுவே ஆகுபெயராகி, மிகுதியான சோற்றுத்திரள் அமலை எனப்படுகிறது. 
கிராமப்புறத் திருமண விருந்துகளில் ஒருசிலரின் இலையில் போடப்பட்டிருக்கும் சோற்றின் அளவைக் கண்டால் நமக்கு மயக்கமே வரும். 
இவ்வாறு தட்டு அல்லது இலை நிறையப் போடப்பட்ட உணவே அமலை.

	பலவிடங்களில் அமலை என்பது சோற்றுக்கு அடைமொழியாகக் கையாளப்பட்டுள்ளது.

	அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு - சிறு 194
	பழம் சோற்று அமலை முனைஇ - பெரும் 224
	பெரும் சோற்று அமலை நிற்ப - அகம் 86/2
	ஆம்பல் அகல் இலை அமலை வெம் சோறு - அகம் 196/5
	ஊன் சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும் - புறம் 33/14
	அமலை கொழும் சோறு ஆர்ந்த பாணர்க்கு - புறம் 34/14

	ஆனால் சிலவிடங்களில் அமலை என்பது சோற்றுத்திரள் என்ற பொருளிலேயே கையாளப்பட்டிருப்பதையும் காணலாம்.

	செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது - குறு 277/2 
	வெண் எறிந்து இயற்றிய மா கண் அமலை - மலை 441
	அல்கு அறை கொண்டு ஊண் அமலை சிறுகுடி - கலி 50/13 
	பைம் ஞிணம் பெருத்த பசு வெள் அமலை - புறம் 177/14

3. அமுது

	அமுது என்பது அமிர்தம், அமுதம், அமிழ்தம் ஆகியவற்றின் சுருக்கப்பெயராகப் பயன்பட்டுள்ளது எனினும், சிலவிடங்களில் 
உணவு என்ற பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மிகவும் சுவையான உணவுகளை அமிழ்தம் போன்ற சுவையான உணவு என்று 
சொல்லும் வகையான் அவ்வகை உணவுகளே அமுது என்று சொல்லப்பட்டுள்ளன.

	பலவகையான சுவையான உணவுவகைகளைப் பெரும்பாணாற்றுப்படை அடுக்குவதைப் பாருங்கள்.

	வல்லோன் அட்ட பல்லூன் கொழுங்குறை
	அரி செத்து உணங்கிய பெருஞ்செந்நெல்லின்
	தெரிகொள் அரிசித் திரள் நெடும் புழுக்கல்
	அரும் கடித் தீஞ்சுவை அமுதொடு பிறவும்
	விருப்புடை மரபின் கரப்புடை அடிசில் – பெரும் 472 - 476

	இங்கே தீஞ்சுவை அமுது என்பதற்கு இனிய சுவையுடைய அமிழ்தம் போன்ற உண்டிகளும் என்றே பொருள் கொள்கிறார் 
பெருமழைப்புலவர்.

4. அயினி

	அயில் என்பதன் பொருள் விருப்பத்துடன் வேண்டுமளவு உண்ணுதல் என்று முன்பு பார்த்தோம். அதனை அடியாகக் கொண்ட 
பெயற்சொல்லே அயினி.

	குதிரைக்கு மிகவும் பிடித்த உணவு கொள்ளு. ஆனால் அது கடற்கரை ஊரில் எவ்வாறு கிடைக்கும்? அங்கு உப்பை விற்று மாற்றாகக் 
கொண்டுவந்த நெல்தான் இருக்கும். அதனைக் குற்றி அவலாக்கி, அயினியாக வயிறார உண்ணத் தன் தலைவனின் குதிரைகளுக்குத் தருவேன் 
என்கிறாள் நெய்தல் தலைவி.

	உமணர் தந்த உப்புநொடை நெல்லின்
	அயினி மா இன்று அருந்த – நற்றிணை 254/6,7

	மா என்பது இங்கு குதிரை. இவை விரும்பி உண்ணும் வகையில் அயினியாக அரிசி அவல் தருவேன் என்கிறாள் தலைவி.
	தொண்டை நாட்டு நன்னனிடம் பரிசில் பெற்றுவரப் புறப்பட்டுச் செல்லும் ஒரு கூத்தர் கூட்டம், செல்லும் வழியில் பலவித 
நிலங்களைக் கடந்து செல்கிறது. அக் கூட்டம் மருத நிலத்தைக் கடந்து செல்லும் வழியில் அவர்களுக்கு அங்கு கிடைக்கக்கூடிய மீன்குழம்புச் 
சோற்றைச் சுவைபட எடுத்தோதுகிறார் புலவர் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார். மீனின் முள்ளைக் கழித்து ஆக்கின, கொழுப்பால் வெளுத்த 
நிறமுடையை துண்டுகளையுடைய வெள்ளிய சோற்றை வேண்டுமளவு அரசரின் துய்த்தலோடு (ராஜபோகம்) உண்ணலாம் என்று சொல்லவந்த 
புலவர் கூறுகிறார்:

	முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண்சோறு
	வண்டுபடக் கமழும் தேம்பாய் கண்ணித்
	திண் தேர் நன்னற்கும் அயினி சான்ம் எனக்
	கண்டோர் மருளக் கடும்புடன் அருந்தி – மலைபடுகடாம் 465 – 468

	சான்ம் என்பது சாலும் என்றதன் சுருக்கம். போதுமானதாக அமையும் என்று பொருள். அந்த உணவு தூய்மையாலும், சுவையாலும், 
தோற்றத்தாலும் உயர்ந்து அரசனாகிய நன்னனும் விரும்பி நிறைய உண்ணத்தக்கதாயிருக்கும் என்பது இதன் பொருள் என்பர். இவ்வாறாக விரும்பி
உண்ணும் சிறந்த உணவே அயினி.

5. உண்டி, உணவு, ஊண்

	இந்த மூன்றுமே உணவு என்ற பொதுவான பொருளை உடையன. இருப்பினும் இலக்கியப் பயன்பாட்டில் இவற்றுக்கிடையே 
நுண்மையான வேறுபாடு இருப்பதைக் காணலாம். அவற்றை எடுத்துக்காட்டுகளுடன் இங்குக் காண்போம்.

5.1,2 உண்டி, உணவு

	உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே (புறம் 18:19) என்ற அருமையான புறநானூற்று அடி நமக்குத் தெரியும். 
ஒருவன் மிகவும் பசியோடு தள்ளாடிக்கொண்டு வருகிறான். இன்னும் சிறிது நேரத்தில் சுருண்டு படுத்துவிடுவான் என்ற நிலையில், அவனுக்குப் 
பக்கத்துத் தேநீர்க் கடையில் கிடைக்கும் ரொட்டி, பழம், தேநீர் ஆகியவற்றை வாங்கிக்கொடுக்கிறீர்கள். மிகுந்த ஆவலுடன் அந்தப் பண்டங்களை 
உண்ட அவன் சற்று நேரங்கழித்து, “அப்பாடா இப்போதுதான் உயிர் வந்தது” என்று சொல்வான் பார்த்தீர்களா, அதுதான் உயிர்கொடுத்தல். அவன் 
சாப்பிட்டதுதான் உண்டி. 

	ஒருவர் விரதம் இருக்கிறார். காலையிலிருந்து ஒன்றுமே உட்கொள்ளாமல் இருந்து மதியவேளையில் எல்லாக் கடமைகளையும் 
முடித்து தம் நோன்புக்குரிய பண்டங்களைக் கொண்ட உணவு உண்பார். அதுவே விரதம் கழிப்பது. இவ்வாறு அவர் உண்பதனை 
உண்டி என்கிறது குறுந்தொகை.

	பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
	செம் பூ முருக்கின் நன் நார் களைந்து
	தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்து
	படிவ உண்டி பார்ப்பன மகனே – குறு. 156:1-4

	ஒருவன் பசியுடன் இருக்கும்போது ஒரு கிணைமகள் பாகல்காய்க் கூட்டுடன் புளிக்குழம்புடன் சேர்த்த கூழ் தருகிறாள். 
நேரங்கெட்ட நேரமாயிருந்தாலும் பசியினால் அதனையுண்ட புலவன் கூறுகிறான், 

	கிணைமகள் அட்ட பாகல் புளிங்கூழ் 
	பொழுதுமறுத்துண்ணும் உண்டியேன் – புறம் 399:16,17

	ஆக, இவற்றினின்றும் நாம் அறிவது, ஒரு திருமண வீட்டில் சமைத்துப் பரிமாறுவதற்காகப் பலவித பாத்திரங்களில் 
எடுத்துவைக்கப்பட்டிருப்பது உணவு. அதனை ஒவ்வோர் இலையிலும் பரிமாறியபின் இலையில் இருப்பது உண்டி. உண்டி எனப்படுவது 
உண்ணும் நிலையில் உள்ள உணவு. உணவு என்பது பொதுப்படையான சொல் - “நான் புலால் உணவு உண்பதில்லை” என்று சொல்கிறோமே, 
அங்கு வருவதைப் போல. 

	மேலும் உண்டி என்ற சொல் உயர்திணை உயிரினங்கள் உண்ணுவதற்கே பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். உணவு என்ற 
பொதுச்சொல் எல்லா உயிரினங்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் காணலாம். வானில் பறந்து திரியும் வானம்பாடிப் பறவைக்கு 
மழைத்துளியே உணவு என்கிறது பட்டினப்பாலை.

	தற்பாடிய தளி உணவின் புள் – பட்:3,4

	கோடைகாலத்தில் எறும்புகள் தம் மழைக்காலத் தேவைக்காக கிடைக்கின்றவற்றை இழுத்துக்கொண்டுபோய்ச் சேர்ப்பதை 
அகநானூறு அழகாகச் சொல்லுகிறது.

	கோடை நீடலின் வாடு புலத்து உக்க
	சிறு புல் உணவு நெறிபட மறுகி
	நுண் பல் எறும்பு கொண்டு அளைச் செறித்த – அகம் 377: 1-3

	வேள்வித்தீயில் படைக்கும் பொருள்கள் வேகும்போது ஏற்படும் மணமே தேவர்களுக்கு உணவாகிறதாம். இதனை நாற்ற உணவு 
என்கிறார் புறநானூற்றுப்புலவர்.

	வாடாப் பூவின் இமையா நாட்டத்து
	நாற்ற உணவினோரும் – புறம் 62: 16,17
	
	‘நாற்ற உணவின் உருகெழு பெரியோர்க்கு’ 
	
	என்கிறது மதுரைக்காஞ்சி (458)

	எனவே, இன்றைய வழக்கில், உண்டி என்பது சாப்பாடு (meal), உணவு என்பது ஆகாரம் (food). 

	உணவு என்பது உணா என்றும் அழைக்கப்படுகிறது. 

	பணை நிலைப் புரவி புல் உணாத் தெவிட்ட – மதுரைக்காஞ்சி 660
	சில் உணா தந்த சீறூர்ப் பெண்டிர் – அகம் 283: 5

	என்ற அடிகளில் உணா என்பது உணவு என்ற பொருளில் வந்துள்ளதைக் காணலாம்.

5.3 ஊண்

	அடுத்ததாக இவற்றையொட்டிய பொருள்கொண்டு வருவது ஊண் என்ற சொல். ஊன் என்பது புலாலைக் குறிக்கும். ஊண் என்பது 
உண்ணுகின்ற எந்தப் பொருளையும் குறிக்கும்.

	வேலைக்குச் செல்வோர் ஒரு தூக்குச் சட்டி நிறைய பழைய சோற்றை, சில உரித்த சின்ன வெங்காயத்துடன் எடுத்துப்போவதை 
கிராமப்புறங்களில் காணலாம். அது உண்டியா உணவா? அவ்வாறான உணவைத்தான் இலக்கியங்கள் ஊண் என்கின்றன.

	விருந்தோம்பலில் சிறந்த ஒருவரின் வீட்டில் பொருள்கள் குறைந்துபோயின. திடீரென்று உணவுக்காக நிறையப் பேர் வந்துவிடுகின்றனர். 
வந்தவருக்குப் பெரிய விருந்து படைக்கமுடியாவிடினும், வெறும் ‘ரசஞ்சோறாவது’ போட்டனுப்புவான் என்பதை,

	தவச் சிறிதாயினும் மிகப் பலர் என்னான்
	நீள் நெடும் பந்தர் ஊண் முறை ஊட்டும் – புறம் 331:7,8

	ஊண் என்ற சொல்லால் குறிக்கிறது புறநானூறு.

	கரிகால் பெருவளதானிடம் பரிசில் வேண்டிச் செல்கிறது ஒரு பொருநனின் குடும்பம். அரண்மனையில் அவர்களுக்கு வளமான 
பலவித உணவுகள் கிடைத்தாலும் அவர்கள் மிகவும் விரும்பி உண்ணுவது இறைச்சியைத்தான். இரவும் பகலும் இறைச்சியை மென்று மென்று, 
கொல்லைக்காட்டில் உழும் கலப்பையிலுள்ள கொழுவினைப்போல் பல் எல்லாம் தேய்ந்துபோய்விட்டனவாம். மூக்குமுட்ட ஊனையே உண்டு உண்டு 
அந்த ஊண் அவர்களுக்கு வெறுத்துப்போய்விட்டதாம்.

	கொல்லை உழுகொழு ஏய்ப்பப், பல்லே
	எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி,
	உயிர்ப்பிடம் பெறாஅது, ஊண் முனிந்து – பொருநராற்றுப்படை 117-119

	புலால் உணவு உண்ணாமல், புலாலையே ஊணாகக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள். ஆக, ஒருவர் பலவிதப் பண்டங்களோடு உண்டால் 
அது அவருக்கு உண்டி. மிகக் குறைந்த எண்ணிக்கையினாலான பண்டங்களுடன், ஒரே வகை உணவை ஒருவர் உண்டால் அது அவருக்கு ஊண். 

	பிரிந்துசென்ற கணவனை நினைத்து ஏங்கிக்கொண்டிருப்பவள், தினமும் விருந்துச் சோறா உண்பாள்? இருக்கின்ற பருக்கைகளையும் 
எடுத்துப்போட்டு உண்ண மனமில்லாதவளாய் இருக்கிறாள் என்று கலித்தொகை கூறும்போது,

	ஊண் யாதும் இலள் ஆகி – கலி 147:8

	எனக் கூறுகிறது.

	எனவே ஒருவர் உண்ணக்கூடியது உணவு; பலவிதப் பதார்த்தங்களுடன் பரிமாறப்படுவது உண்டி; பெரும்பாலும் ஒரே வகையாக 
அமைந்த உணவு ஊண் ஆகும்  அறுசுவை உண்டி என்றுதானே சொல்கிறோம். 

	பல்சுவை கொண்டது உண்டி என்றால் ஒரு சுவைத்தது ஊண் ஆகும் எனலாம்.

			

6.1,2,3,4,5 கருனை, கலவை, களி, குறை, கூழ்

	இவற்றில் களி, கூழ் ஆகியவை முழுமையான உணவுப் பொருள்கள். கலவை, குறை ஆகியவை உணவுடன் சேர்த்து 
உண்ணப்படும் பொருள்கள்.

6.1 கருனை = பொரித்த உணவு

	சோற்றைக் கடுகுகொண்டு தாளித்துக் காக்கைக்குப் பலிச்சோறு இடுவதை,

	கருங்கண் கருனை செந்நெல் வெண்சோறு – நற். 367/3

	என்று நற்றிணை கூறுகிறது. 

	கண்டம் கண்டமாக வெட்டிய மான்கறித் துண்டுகளை வறுத்தும், பொரித்தும் செய்யப்படும் உணவை,

	மண்டைய கண்ட மான் வறை கருனை -புறம் 398/24 

என்கிறது புறநானூறு. 

	பச்சைக் கறித்துண்டுகளைப் பொரித்தும், நெருப்பில் சுட்டும் செய்யப்படும் உணவை,

	பசுங்கண் கருனை சூட்டொடு மாந்தி – புறம். 395/37

என்கிறது புறநானூறு.

	பரல்கற்கற்களைப் போல் கெட்டியாக வறுக்கப்பட்ட இறைச்சியையும், பொரித்த இறைச்சியையும்

	பரல் வறை கருனை காடியின் மிதப்ப – பொரு 115

என்கிறது பொருநராற்றுப்படை.

	எனவே கருனை என்பது ஓரளவு எண்ணெய் கொண்டு பொரித்த உணவுப்பண்டம் என்பது தெளிவு.

6.2 கலவை

	இன்றைய வழக்கில் கலவை என்பது mixture. எந்தெந்தப் பொருள்கள் கலந்தது என்பது இடத்தைப் பொருத்தது. கட்டிடம் கட்டுபவர்கள் 
கலவை என்றால் சிமெண்ட்டு, மணல் ஆகியவை கலந்தது. இதில் போதுமான நீர் கலந்தால் அது சாந்துக்கலவை அல்லது சாந்து. நீர் சேராவிட்டால் 
உதிரிக்கலவை. சிறிதளவே நீர் கலந்தால் அது புட்டுக்கலவை. இனிப்புக் கடையில் mixture என்றால் அது என்னென்ன பொருள்கள் கலந்தது என்பது 
நமக்குத் தெரியும். உணவகங்களில் கலவை சாதம் என்பது புளியோதரை, கறிவேப்பிலை சாதம், தக்காளி சாதம் ஆகியவை. சோற்றுடன் வேறு பல 
பொருள்கள் சேர்ந்து கலக்கப்பட்டு ஒன்றாக்கப்பட்டதால் இது கலவை சாதம். 

	மன்னன் சேரலாதன் பகைவரின் கோட்டைக்கே சென்று, மதில் மேலிருப்போர் மீது வேல் எய்தி அவரைக் கொன்று கோட்டையைக் 
கைப்பற்றுவதாகப் புலவர் குமட்டூர்க் கண்ணனார் பதிற்றுப்பத்தில் விவரிக்கிறார். பகைவரின் மார்பினின்றும் கொட்டிய குருதி அகழிநீரில் 
விழுந்ததினால், அகழியின் நீல நிற நீர் குங்குமச் சேறு போல ஆகிவிட்டதாம். 

	அரு நிறம் திறந்த புண் உமிழ் குருதியின்
	மணி நிற இரும் கழி நீர் நிறம் பெயர்ந்து
	மனாலக் கலவை போல அரண் கொன்று – பதிற்றுப்பத்து 10: 8-10

	மனாலம் என்பது குங்குமம். குங்குமத்தைக் குழைத்து மேனியில் இட்டுக்கொள்வர். அந்தக் குங்குமக் குழைசேற்றை 
மனாலக் கலவை என்கிறார் புலவர். 

	சந்தனம் போன்ற நறுமணப்பொருள்களுடன், சில நறுமணத் தைலங்களையும் சேர்த்துக் குழைத்து மேனியில் பூசிக்கொள்வதுண்டு. 
என்னென்ன பொருள்களை எந்தெந்த அளவில் சேர்க்கவேண்டும் என்ற நுட்பம் தெரிந்தவர்கள் ஆக்கிய குழைவு மிக்க நறுமணம் கொண்டதாக 
இருக்கும். ஆனால், அந்த நுட்பத்தை அறியாதவர்கள் இந்தக் குழைவைச் செய்தால் அது முற்றிலும் மாறுபட்ட ஒரு மணத்தைத் தரும். 
அதைப் போல வழக்கமாக நறுமண மலர்களின் நல்ல வாசத்துடன் வரும் வைகை, வெள்ளம் வரும்போது புதுவித மணத்துடன் வருவதாகப் 
பரிபாடல் கூறுகிறது.

	விதி ஆற்றான் ஆக்கிய மெய்க்கலவை போல
	பொது நாற்றம் உள்ளுள் கரந்து புது நாற்றம்
	செய்கின்றே செம் பூ புனல் – பரி 7: 20-22

	இங்கே மெய்க்கலவை என்பது மேனியில் பூசிக்கொள்ளும் நறுஞ்சாந்து.

	இவை உண்ணும் பொருள்கள் அல்ல. இப்போது உண்ணும் கலவைக்கு வருவோம்.

	பரிசில் வேண்டி, ஓய்மா நாட்டு நல்லியக்கோடனைத் தேடிச் செல்லும் சிறுபாணன், செல்கிற வழியில் மருத வயல்களின் உழவர் 
வீடுகளின் உபசரிப்பைப் பெறும் விதத்தைப் புலவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் கூறுகிறார். 
	உலக்கையால் நெல்லைக் குத்திப் பெற்ற அரிசியினாற் செய்த பெருமளவு சோற்றை, நண்டுக் கலவையுடன் அவர்கள் பெறுவார்களாம்.

	இரும் காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த
	அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு
	கவைத் தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர் – சிறுபாண். 193-195

	அலவன் என்பது நண்டு. சங்க இலக்கியங்களில் கலவை என்ற சொல் இந்த மூன்று இடங்களில் மட்டுமே வருகிறது. 
இப்பொழுது இந்த மூன்றனையும் சேர்த்துப்பாருங்கள். மனாலக் கலவை, மெய்க் கலவை, அலவன் கலவை. இந்த மூன்றனுக்கும் பொதுவாக 
இருப்பது குழைவுத் தன்மை. இதனைக் குழம்பு என்று இப்போது சொல்கிறோம். இவற்றை இன்றைய மொழியில் குங்குமக் குழம்பு, மேனிக் குழம்பு, 
நண்டுக் குழம்பு எனலாம். பலவித சமையல் பொருள்களைச் சேர்த்துத் தான் குழம்புப்பொடி செய்கின்றனர். இத்துடன் வேறு சில பொருள்களையும் 
சேர்த்துக் கொதிக்கவைத்தால் கிடைப்பது குழம்பு என்ற கலவை. இந்தக் கலவையில் மீனைப் போட்டல் அது மீன் குழம்பு. நண்டைப் போட்டால் 
அது நண்டுக்குழம்பு - அலவன் கலவை. 

	ஆக, சங்க இலக்கியங்களின்படி, ஒருசில பண்டங்களை ஒன்றாகச் சேர்த்துக் குழைவாகச் செய்தால் கிடைப்பதே கலவை. 
அது உணவுப்பொருள் ஆகலாம். வேறு ஏதேனும் பொருளும் ஆகலாம்.

6.3 களி

	இது நமக்குத் தெரிந்த பொருள். இன்றைக்கும் பலர் பயன்படுத்தும் உணவுப் பொருள். பொதுவாகக் கேழ்வரகு எனப்படும் கேப்பையை 
மாவாகத் திரித்து, நீர் சேர்த்துப் பதமாகக் கிண்டினால் கிடைப்பது களி. அந்தக் காலத்தில் பெரும்பாலும் சிறைக்கைதிகளின் உணவு கேப்பைக் களிதான். 
‘சிறைக்குப் போய்விடுவாய்’ என்று எச்சரிக்க, ‘களிதின்னப் போகிறாய்’ என்பார்கள்.
	இந்தக் களி ஈராயிரம் ஆண்டுகட்கு மேலாகத் தமிழகத்தில் பலதரப்பட்ட மக்களின் உணவாக இருந்துவருகிறது. 

	அவையா அரிசி அம் களி துழவை - பெரும் 275

	என்கிறது பெரும்பாணாற்றுப்படை. நெல்லைக் குற்றிக் கிடைத்த அரிசிதான் அவைத்த அரிசி. அவ்வாறு குற்றாமல் கிடைத்த அரிசியே 
அவையா அரிசி. இது கேழ்வரகு, தினை, வரகு போன்றது. இதனை நேரடியாகத் திரித்து மாவாக்கிக் களி செய்யலாம். களி செய்வதற்கு கொதிக்கிற 
நீரில் மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலக்குவர். அது கெட்டிப்பதம் பெறும்போது துடுப்பு என்ற கருவியால் நன்றாகத் தொடர்ந்து கிண்டிவிடுவர். 
இதுவே துழாவுதல். இவ்வாறு துழாவிப் பெற்றதே துழவை. 

	உளுந்தங்களி பற்றியும் ஒரு சங்கப்பாடல் உண்டு.

	உழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவை - அகம் 86/1

	என்கிறது ஓர் அகநானூற்றுப் பாடல். 

	மிதவை என்பது கும்மாயம் என்ற பருப்புக் குழம்பு என்பர். களியைக் கிண்டி, சற்றுச் சூடு குறைந்த பின்னர் உருண்டைகளாக உருட்டி, 
புளித்த நீரில் (புளிச்சதண்ணி) அல்லது நீர்த்த மோரில் போட்டுவைப்பார்கள். இரண்டு மூன்று நாள்களுக்கு அது கெடாமல் இருக்கும். இவை மோரில் 
மிதந்துகொண்டிருக்கும். இதனையே மிதவை என்கிறார் புலவர் எனலாம்.

	சோறு குழைந்துபோனால் “என்ன இன்னிக்குக் களியா” என்று கேலிபேசுவோம். ஆனால் சில வீடுகளில் சோற்றையே குழையவைத்து, 
துடுப்புகொண்டு துழாவி களிப்பதத்தில் செய்திருக்கிறார்கள்.

	துடுப்பொடு சிவணிய களி கொள் வெண் சோறு - புறம் 328/11

	என்கிறது ஒரு புறநானூற்றுப்பாடல். வெண்சோறு என்பதால் அது நெல் அரிசிச் சோறுதான். இதைக் குழைய ஆக்கி, துடுப்பால் துழாவி 
களிப்பதத்துக்குச் செய்திருக்கின்றனர்.

6.4 குறை

	உருவத்தில் பெரிய ஒன்றை இரண்டு மூன்று பாகங்களாக வெட்டிக் குறைத்தால், கிடைப்பது குறை. அதற்காகப் பூசணிக்காயை 
வெட்டிக்குறைத்தால் அந்தத் துண்டுகள் குறை எனப்படமாட்டா. இச் சொல் புலால் உணவுக்கே உரியதாகச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. 
கசாப்புக் கடைகளில் முழு உருவமாகத் தோலுரித்துத் தொங்கவிடப்பட்டிருப்பதினின்றும் ஒரு பெரும் பகுதியைத் துண்டமாக்கிக் கீழே இறக்குவர். 
அதுவே குறை. அதில் கொழுப்பும் சேர்ந்திருந்தால் அது கொழுங்குறை. 

	வரு விசை தவிர்த்த கடமான் கொழும் குறை - மலை 175
	கானவன் எய்த முளவு_மான் கொழும் குறை - நற் 85/8
	எஃகு போழ்ந்து அறுத்த வால் நிண கொழும் குறை - பதி 12/16
	ஊனத்து அழித்த வால் நிண கொழும் குறை - பதி 21/10
	துடி கண் கொழும் குறை நொடுத்து உண்டு ஆடி - அகம் 196/3
	அரி நிற கொழும் குறை வௌவினர் மாந்தி - அகம் 236/3
	செம் தீ அணங்கிய செழு நிண கொழும் குறை - அகம் 237/9
	நெருப்பு சினம் தணிந்த நிணம் தயங்கு கொழும் குறை - புறம் 125/2
	இழுதின் அன்ன வால் நிண கொழும் குறை - புறம் 150/9
	வாடூன் கொழும் குறை - புறம் 328/9
	காயம் கனிந்த கண் அகன் கொழும் குறை - புறம் 364/5,6

	இந்தக் குறை எனப்படும் துண்டுகளை அப்படியே நெய்யில் பொரித்தோ, தீயில் வாட்டியோ, பெரிய சட்டிகளில் வேகவைத்தோ உண்பர். 
வேகவைத்த குறையும் குறைதான். இதைச் செய்வதற்குக் கைப்பக்குவம் தேவை. தொழில் தெரிந்தவர்கள்தான் குறையைச் சமைக்க முடியும். 
எனவேதான், பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது;

	வல்லோன் அட்ட பல் ஊன் கொழும் குறை - பெரும் 472

	இந்தக் குறை என்பது ஆடு ,மான், காட்டுப்பன்றி போன்ற பலவித விலங்குகளின் உடலிலிருந்தும் பெறப்படுவது. அதுமட்டுமல்ல, 
சுறாமீனை வெட்டிப் பெறுவதும் குறைதான்.

	மோட்டு இரு வராஅல் கோட்டுமீன் கொழும் குறை - புறம் 399/5,6

	என்கிறது ஒரு புறப்பாடல். கோட்டுமீன் என்பது சுறா. கோடு என்பது கொம்பு. கொம்புள்ள மீன் கோட்டுமீன்.

6.5 கூழ்

	களி கிண்டும்போது நீர் அதிகமாய்ச் சேர்த்தால் அது கூழ் ஆகிவிடும். கம்பு, வரகு போன்ற சில தானியங்களின் மாவில் 
களியைக்காட்டிலும் கூழ்தான் அதிகமாகச் செய்வர். களி என்பது நீர்த்த திடப்பொருள் (semi-solid) என்றால் கூழ் என்பது திடமுள்ள 
நீர்ப்பொருள் (semi-liquid). 

	கூழ் என்பது ஏழ்மை நிலையிலுள்ளவர்களின் உணவாகவே பெரும்பாலும் இருந்துள்ளது. 

	ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன் - பெரும் 175
	வல் வாய் கணிச்சி கூழ் ஆர் கோவலர் - அகம் 21/22
	ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில் - அகம் 113/
	கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த - அகம் 194/13

	என்ற அடிகளில் கூழ் என்பது முல்லைநில எளிய மக்களான இடையர், கோவலர் ஆகியோருக்கும், மருதநில எளிய மக்களான உழவர் 
ஆகியோருக்கும் உணவாக இருந்ததைப் பற்றி அறிகிறோம்.

	கூழ் என்பதற்குப் பொதுவாக உணவு என்ற பொருளும் இருந்திருக்கிறது. 

	கூழ் உடை நல் இல் கொடும் பூண் மகளிர் - பெரும் 327
	கூழ் உடை கொழு மஞ்சிகை - பட் 163
	கூழ் உடை நன் மனை குழுவின இருக்கும் - நற் 367/5
	கூழ் உடை நல் இல் ஏறு மாறு சிலைப்ப - பதி 90/45
	கூழ் உடை தந்தை இடன் உடை வரைப்பின் - அகம் 145/17
	கொளக்கொள குறைபடா கூழ் உடை வியன் நகர் - புறம் 70/7

	என்ற அடிகளில், உணவு அல்லது உணவுப்பொருள்களான தானியம் போன்றவற்றைக் கூழ் என்ற சொல் குறிப்பதைக் காணலாம்.

			

7.1,2,3 சூடு, சொன்றி, சோறு 

7.1 சூடு = நெருப்பில் சுட்ட உணவுப் பண்டம்

	வேட்டையாடுவோர், பொதுவாகத் தாம் கொன்ற விலங்குகளின் இறைச்சியைத் துண்டங்களாக்கி, அந்த இடத்திலேயே நெருப்புமூட்டி, 
துண்டங்களை நெருப்பில் வாட்டி உண்பர். இவ்வாறு நெருப்பில் வாட்டப்பட்ட உணவே சூடு எனப்படுகிறது.

	குறுமுயல் கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு – புறம் 34/11
	குறுமுயலின் குழை சூட்டொடு – புறம்.395/3
	கொழுந்தடிய சூடு என்கோ – புறம் 396/15

	என்ற வரிகள் இதனை உறுதிப்படுத்தும். நெருப்பிற் சுட்ட இறைச்சியைப் பல்லில் கடித்து இழுத்துக் கிழித்துத்தானே உண்ணமுடியும்! 
இதனையே சூடு கிழித்த ஒக்கல் என்கிறது மேற்கூறிய புறப்பாடல். மீன், ஆமான் போன்றவற்றின் இறைச்சிச் சூடு பற்றியும் செய்திகள் இருக்கின்றன.

	வறல் குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுசிர் – சிறு. 163
	ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவிர் – சிறு. 177
	தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் – பெரு 282
	கடல் இறவின் சூடு தின்றும் – பட். 63
	விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப – புறம் 366/17

	போன்ற அடிகள் பலவித சூடுகள் பற்றித் தெரிவிக்கின்றன.

7.2 சொன்றி = அரிசிச் சோறு

	சோறு என்பது நாம் உண்ணும் முழு உணவையும் குறிக்கும். பொதுவாக, வேகவைத்த அரிசி, அதைப் பிசைந்து உண்ணக் குழம்புவகைகள் 
மற்றும் கூட்டுவகைகளைக் கொண்டது சோறு. இதில் வேகவைத்த அரிசி மட்டும் சொன்றி எனப்படுகிறது. இந்த அரிசி நெல், வரகு ஆகிய தானியவகை 
மணிகளினின்றும் தோல்நீக்கிப் பெறப்பட்டது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற சொலவடையில் வரும் சோறு என்பதே சொன்றி.

	சுவல் விளை நெல்லின் செவ் அவிழ் சொன்றி – பெரும்.131

	என்று பெரும்பாணாற்றுப்படை கூறுவது நன்றாக மலர்ந்து வெந்த நெல்லரிசிச்சோறு.

	குறுந்தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி – பெரும். 193
	புன்புல வரகின் சொன்றியொடு பெறூஉம் - புறம் 197/12

	என்ற அடிகளில் கூறப்படுவது வரகரிசிச் சோறு.
	
	மேலும்,

	இழித்து ஆனாப் பல சொன்றி - மது 212
	சாறு அயர்ந்து அன்ன மிடாஅச் சொன்றி - குறி 201
	அடங்காச் சொன்றி அம் பல் யாணர் - நற் 281/5
	வரை கோள் அறியாச் சொன்றி - குறு 233/6
	கண்டு மதி மருளும் வாடாச் சொன்றி - பதி 24/22,23

	ஆகிய இடங்களில் குறிப்பிடப்படும் சொன்றியும் பானைகளில் சமைத்துக் கொட்டும் அரிசிச்சோற்றையே குறிக்கிறது.

7.3 சோறு = அரிசிச் சோறு உள்ளிட்ட முழு உணவு

	எயிற்றியர் அட்ட இன் புளி வெம் சோறு - சிறு 175
	விடக்கு உடை பெரும் சோறு உள்ளுவன இருப்ப - நற் 281/6
	மை ஊன் பெய்த வெண்ணெல் வெண் சோறு - பதி 12/17
	வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு - அகம் 107/9
	ஈயல் பெய்து அட்ட இன் புளி வெம் சோறு - அகம் 394/5
	கறி சோறு ஊண்டு வருந்து தொழில் அல்லது - புறம் 14/14
	ஊன் சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும் - புறம் 33/14
	நிணம் பெருத்த கொழும் சோற்று இடை - புறம் 384/14
	அட்டு ஆன்று ஆனா கொழும் துவை ஊன் சோறும் - புறம் 113/2
	கொய் குரல் அரிசியொடு நெய் பெய்து அட்டுத்
	துடுப்பொடு சிவணிய களிக் கொள் வெண் சோறு - புறம் 328/10, 11  

	ஆகிய அடிகளில் காணப்படும் சோறு என்பது அரிசிச் சோற்றுடன் ஏதோ ஒரு பொருளைச் சேர்த்துப் பிசைந்து உண்ணும் உணவைக் 
குறிப்பதைக் காணலாம். இன்றைக்கு நாம் பிரியாணி என்று அழைக்கும் உணவு அன்றைக்கு ஊன்சோறு என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

	இதைத்தவிர, பொதுவாக நாம் உண்ணும் சாப்பாடு எனப்படும் உணவும் சோறு எனப்படுகிறது.

	சாறு கழி வழி நாள் சோறு நசையுறாது -பொரு 2	
	ஆம்பல் அகல் இலை அமலை வெம் சோறு - அகம் 196/5
	பெரும் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள் - அகம் 275/9  
	
	ஆகிய அடிகளால் இதனை அறியலாம்.

			

8 - 1,2,3,4,5 தடி, தாரம், திற்றி, துழவை

8.1  தடி

	ஓர் உணவுப்பொருளாகத் தடி என்ற சொல்லுக்குத் தசை (Flesh) என்று பொருள். ஒரு தடித்த மாமிசத்துண்டு என்றும் 
பொருள் கொள்ளலாம். 

	மீன்களிலேயே வரால் மீன் மிகவும் பருமனானது. நீண்டு, உருண்டு திரண்டு இருக்கும். வாளை மீன் நீண்டு இருக்கும். இவற்றின் 
நடுப்பகுதியை மட்டும் துணித்து எடுத்தால் அதுவே மீன் தடி.

	விடிந்தும் விடியாத கருக்கல் வேளையில் வேலைக்குப் புறப்படும் உழவன் மதியம்வரை பசிதாங்குவதற்காகப் புறப்படும்போதே 
வயிறார உண்டுவிட்டுச் செல்கின்ற செய்தியை நற்றிணை கூறுகிறது.

	பெருநல் பல்கூட்டு எருமை உழவ!
	கண்படை பெறாது தண் புலர் விடியல்
	கருங்கண் வராஅல் பெரும் தடி மிளிர்வையொடு
	புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோறு
	கவர்படு கையை கழும மாந்தி – நற்றிணை 60 2-6

	மிளிர்வை என்பது குழம்பில் கிடக்கும் ‘தான்’. மீன்குழம்பில் ‘தான்’ என்பது மீன்துண்டங்கள் தானே! 

	வாளை மீனை அரிவாள்மனையில் வைத்து அரியும்போது பெண்ணின் விரல்கள் சிவந்துபோய்விடுகின்றனவாம்.

	சிறுதாழ் செறித்த மெல் விரல் சேப்ப
	வாளை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇ – நற்றிணை 120 4,5

	என்கிறது நற்றிணை.

			

	மாமிசத்தையும் பெரும்பெரும் துண்டங்களாக நறுக்கினால் அவையும் தடி எனப்படும். 

	கொழு நிண தடியொடு கூர் நறா பெறுகுவிர் – பெரும். 345
	முடுவல் தந்த பைந்நிணத் தடியொடு – மலை. 563
	விரைந்து வாய் வழுக்கிய கொழும் கண் ஊன் தடி – அகம் 193/9
	நிணம்பொதி விழுத் தடி நெருப்பின் வைத்து எடுத்து – அகம் 265/13

	ஆகிய அடிகளால் இதனைப் பெறலாம்.

8.2  தாரம்

	தாரம் என்பது மிகவும் அரிதிற் கிடைக்கக்கூடிய பண்டம். எனவே மிகவும் விலையுயர்ந்த உணவுப்பண்டமும் தாரம் எனப்படுகிறது.
மிகவும் நெருக்கமான உறவினர் வரும்போது நம் மனையிலுள்ள விலையுயர்ந்த பண்டங்களை அவர்களுக்கு உண்ணக்கொடுப்போம். 
ஆனால் அவர்களே முன்பின் அறிமுகமில்லாத புதிய விருந்தினராய் இருந்தால் நாம் சற்று யோசிப்போம் இல்லையா! ஆனால் சிற்றூர்களில் 
இருக்கும் ஏழை மக்கள் தம் வீட்டுக்கு யார் விருந்தினராக வந்தாலும் அவர்களுக்கு அரிய பொருள்களைத் தாராளமாகக் கொடுப்பர் என்று 
சங்கப் புலவர் கூறுகிறார்.

	மணல் மலி முன்றில்
	வரையாத் தாரம் வருவிருந்து அயரும்
	தண்குடி வாழ்நர் அம்குடிச் சீறூர் – நற். 135/2-4

	என்ற நற்றிணை அடிகளால் இதனை அறிகிறோம்.

	பசித்து வரும் பாணனுக்கு வெறும் கூழ்கூட அமிழ்தமாய் இருக்கும் அவனுக்கு, பாலாச்சுளைகளும், இனிய தென்னையிளநீரும், 
வாழைப்பழங்களும், நுங்கும் கொடுத்தால் அது பெரிய விருந்தாகவே அமைந்துவிடாதோ! இதைப் போன்ற உணவைத் தீம் பல் தாரம் என்கிறார் 
பெரும்பாணாற்றுப்படைப் புலவர்.

	தாழ்கோள் பலவின் சூழ்சுளைப் பெரும்பழம்
	வீழ் இல் தாழை குழவித் தீநீர்க்
	கவைமுலை இரும்பிடிக் கவுள்மருப்பு ஏய்க்கும்
	குலைமுதிர் வாழைக் கூனி வெண்பழம்
	திரள் அரைப் பெண்ணை நுங்கொடு பிறவும்
	தீம் பல் தாரம் ----  பெரும். 356 – 361

	என்ற பெரும்பாணாற்று அடிகள் தாரம் என்பது ஒருவர்க்கு எத்துணை சிறப்பான உணவு என்பது அவரவர் நிலையைப் பொருத்தது 
என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

8.3  திற்றி

	மென்று தின்னக்கூடிய தசை திற்றி எனப்படுகிறது. எனவே வேகவைத்த இளம் தசையே திற்றி எனலாம்.

	ஊருக்கு வெளியில் வெகுதொலைவில் மாடுமேய்ப்பவர்கள் இரவில் தங்குவதற்குப் பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்திக்கொண்டு 
மாடுகளைக் கிடைபோட்டிருப்பர். அப்போது வில்லேந்திய கள்வர்கள் அவர்களைக் கொன்று, ஆநிரைகளைக் கவர்ந்து, அவற்றைத் தமக்குள் 
பங்கிட்டுக்கொண்டு, அவற்றுள் நல்ல கன்றை அடித்துப் பாறை முடுக்கில் சுட்டுச் சாப்பிடுவர் என்பதை அகநானூறு குறிப்பிடுகிறது.

	இரவுக் குறும்பு அலற நூறி நிரை பகுத்து
	இரும் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்
	கொலைவில் ஆடவர் – அகம் 97:4-6

	கெண்டுதல் என்பது துண்டாக்கி உண்ணல்.

	மழவர் எனப்படும் மறவர் மரநிழலில் இளமையான பசுங்கன்றை அடித்து, அதன் தசையை அரிந்துச் சுட்டுத் தின்றார்கள் என்பதை 
வேறோர் அகப்பாடல் குறிப்பிடுகிறது.

	பல்பூங்கானத்து அல்குநிழல் அசைஇத்
	தோகைத் தூவித் தொடைத் தார் மழவர்
	நாகு ஆ வீழ்த்துத் திற்றி தின்ற – அகம் 249/11-13

	என்ற அடிகள் திற்றி என்பது உண்ணும் நிலையிலுள்ள இறைச்சி என்பதை வலியுறுத்துவதைக் காணலாம்.

	பாண்டியன் நெடுஞ்செழியனின் அரண்மனையில் எப்போதும் உண்பதற்குப் பலவிதப் பண்டங்கள் கிடைக்கும் என்பதை,

	தவாப் பெருக்கத்து அறா யாணர்
	அழித்து ஆனாக் கொழும் திற்றி,
	இழித்து ஆனாப் பல சொன்றி
	உண்டு ஆனாக் கூர் நறவில்
	தின்று ஆன இன வைகல் – மதுரைக்காஞ்சி 210 - 214

	என்று கூறும்போது, தின்று தீர்க்க முடியாத கொழுத்த இறைச்சி என்பதற்குத் திற்றி என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பதைப் 
பார்க்கலாம்.

8.4  துழவை

	துழாவு என்ற சொல்லின் அடியாகப் பிறந்ததுதான் துழவை. துடுப்பை வைத்துத் துழாவிச் செய்வது களி. இந்தக் களியே சற்று 
இளக்கமாக இருந்தால் அது துழவை. 

	மலைநாட்டுக் குறமகள் ஒருத்தி என்னவெல்லாம் போட்டு துழாவித் துழாவிச் சமைக்கிறாள் என்பதை மலைபடுகடாம் அழகுற 
விவரிக்கிறது.

	அருவி தந்த பழம்சிதை வெண்காழ்
	வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை
	முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை
	பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ
	வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனின்
	இன்புளிக் கலந்து மாமோராக
	கழைவளர் நெல்லின் அரிஉலை ஊழ்த்து
	வழைஅமை சாரல் கமழத் துழைஇ
	நறுமலர் அணிந்த நாறு இரு முச்சிக்
	குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி – மலைபடுகடாம் 174 – 183

	இதன் பொருள்:

	அருவிநீர் அடித்துக்கொண்டுவந்த (பலாப்)பழத்தினின்றும் சிதறிய வெண்மையான விதைகளையும்,
	(ஓடி)வரும் வேகத்தைத் தணித்து (ப் பின் கொன்ற)கடமானின் கொழுத்த தசைகளையும்,	175
	முள்ளம்பன்றியைக் கொன்ற மின்னுகின்ற கொழுப்பையுடைய பிளக்கப்பட்ட தசைத்துண்டுகளையும்,
	பெண் நாயை விரட்டிக் கடிக்கவிட்டுக்கிடைத்த (உடும்பின்)பருமனான தசைத்துண்டோடு கலந்து,
	வெண்மையான புடைத்த பக்கங்களைக்கொண்ட, நாரை உச்சியில் கொண்ட (புளியம்)பழத்தின்
	மனதிற்குகந்த புளிப்பையும் கலந்து, விலங்கின் மோர் (உலைநீர்)ஆக,
	மூங்கிலில் வளர்ந்த நெல்லின் அரிசியை உலையில் உதிர்த்து,				180
	சுரபுன்னை மரங்கள் வளர்ந்துநிற்கும் மலைச்சாரல் கமகமக்கும்படி துழாவிவிட்டு,
	நல்ல வாசனையுள்ள மலர்களைச் சூடிய இனிய மணம் வீசும் கரிய உச்சிக்கொண்டையையுடைய
	குறமகள், (தான்)ஆக்கிய அருமையாகக் குழைந்து வெந்த சோற்றை,

	இவ்வாறு துழாவிச் சமைக்கப்படும் உணவைத் துழவை என்றே பெரும்பாணாற்றுப்படை அழைக்கிரது.
நெல்லைக் குற்றினால் அரிசியாகும். அரிசியைக் குற்றினால் குருணை அல்லது மாவு ஆகும். இவ்வாறு குருணை அல்லது அரிசிமாவைக் 
கொண்டு துழவை செய்யலாம். அது கஞ்சி போல் ஆகிவிடும். ஆகையால் குற்றாத முழு அரிசியையே குழைய வேகவைக்கிறாள் 
பெண்ணொருத்தி. இதனை

	அவையா அரிசி அம் களித் துழவை – பெரும். 275

	என்கிறார் பெரும்பாணாற்றுப்படைப் புலவர்.

			

9.1  நுவணை

	நுண்ணித்தாக இடித்த மா நுவணை எனப்படும். கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களை இடித்து மாவாக்கித்தான் உண்ணப் 
பயன்படுத்தமுடியும். தினையரிசியை மாவாக்கி, இனிப்புச் சேர்த்து உருண்டையாக்கி உண்டால் சுவையாக இருக்கும். இதை நிறைய 
உண்ணமுடியாது. உண்டால் திகட்டிப்போய் உண்பவர்களை மேலும் உண்ணவிடாமல் தடுத்துவிடும். இதனையே,

	விசையம் கொழித்த பூழி அன்ன
	உண்ணுநர்த் தடுத்த நுண் இடி நுவணை – மலை. 445

	என்கிறது மலைபடுகடாம். விசையம் என்பது சர்க்கரை. பூழி என்பது தூள்.  சர்க்கரையை சுளகில் இட்டுத் தெள்ளினால், 
ஓர் ஓரத்தில் மாவுமட்டும் தனியாக ஒதுங்கும். அவ்வாறு ஒதுங்கிய சர்க்கரை மாவைப் போல இருக்குமாம் தினை மாவு.

	நுவணை என்பது பெரும்பாலும் தினையரிசி மாவிலிருந்து செய்யப்படுவது என்பதை வேறு இலக்கியங்களிலிருந்தும் அறியலாம்.

	மென் தினை நுவணை உண்டு  - ஐங் 285/2 
	மென் தினை நுவணை முறைமுறை பகுக்கும் - பதி 30/24

10. 1 .. 5 பண்ணியம், பதம், பிளவை, புழுக்கல், பொம்மல்

10.1 பண்ணியம்

	பண்ணியம் என்பது ஒருவகைத் தின்பண்டம். இன்றைய பணியாரம் என்ற சொல் அதினின்றும் பெறப்பட்டது எனலாம். 
இன்றைக்குப் பலகாரம் என்று சொல்லப்படும் பொருள்கள் அன்றைக்குப் பண்ணியம் என்று அழைக்கப்பட்டன. 

	சங்க கால மதுரை நகரில் தெருவில் பலவிதத் தின்பண்டங்களை விற்றுத்திரிவோரைப் பற்றியும், அவை மக்கள் விரும்பும் 
வண்ணம் பல்வேறு உருவினதாய் இருந்தமை பற்றியும், அந்தப் பண்ணியங்கள் பல்வேறு நாடுகளிலிருந்து கொணரப்பட்டன என்றும், 
அவை சாணம் மெழுகிய கடைகளில் பரப்பிவைக்கப்பட்டு விற்கப்பட்டன என்றும் மதுரைக் காஞ்சி மூலம் அறிகிறோம். 

	பல் வேறு பண்ணியம் தழீஇ திரி விலைஞர் - மது 405  
	காமர் உருவின் தாம் வேண்டு பண்ணியம் - மது 422  
	சிறந்த தேஎத்து பண்ணியம் பகர்நரும் - மது 506  
	பல் வேறு பண்ணியம் கடை மெழுக்குறுப்ப - மது 661  

	என்ற மதுரைக்காஞ்சி அடிகளால் இதனை அறியலாம். 

	கடவுளுக்குப் படைக்கப்படும் பலவிதமான உணவுப்பொருள்களும் பண்ணியம் எனப்பட்டது. 

	கூழ் உடைக் கொழு மஞ்சிகை
	தாழ் உடை தண் பணியத்து
	வால் அரிசிப் பலி சிதறி
	பாகு உகுத்த பசு மெழுக்கின் – பட். 163 - 166 

	என்ற பட்டினப்பாலை அடிகள் மூலம் இதனை அறிகிறோம்.

	சோழநாட்டு உழவர் பெருமக்களின் வளமான வாழ்க்கையைக் கூறவந்த கடியலூர் உருத்திரங்கண்ணனார், 

	கொலை கடிந்தும், களவு நீக்கியும்
	அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும்
	நல்லானொடு பகடு ஓம்பியும்
	நான்மறையோர் புகழ்பரப்பியும்
	பண்ணியம் அட்டியும் பசும்பதம் கொடுத்தும்
	புண்ணியம் முட்டாத் தண்ணிழல் வாழ்க்கை – பட். 199 – 204

	என்று பட்டினப்பாலையில் குறிப்பிடுகிறார். இங்கு பண்ணியம் என்பது விருந்தினர் நுகர்தற்குரிய பல பண்டங்கள் என்று 
பொருள் கொள்ளப்படுகிறது.

	திருப்பரங்குன்றத்து முருகனைச் சேவிக்கச் செல்வோர், அங்கு மலையில் வாழும் குரங்குகளுக்குப் பலவித பலகாரங்களைக் 
கொடுத்து மகிழ்வர் என்று பரிபாடல் கூறுகிறது.

	குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும் – பரி. 19/38

	எனவே பண்ணியம் என்பது பலவகையான தின்பண்டங்களைக் குறிக்கும் என்றாலும், இன்று நாம் பலசரக்கு என்று குறிப்பிடும் 
பலவிதமான கடைப் பொருள்களையும் பண்ணியம் என்ற சொல் குறிக்கிறது என்றும் இலக்கியங்களில் காண்கிறோம்.

	வேறு பன்னாட்டின் கால்தர வந்த
	பலவுறு பண்ணியம் இழிதரு நிலவுமணல் – நற்.31/8
	பெருங்கடல் நீந்திய மரம் வலியுறுக்கும்
	பண்ணிய விலைஞர் போல – பதிற்.76/4-5

	என்ற அடிகளால் பலவிதமான ஏற்றுமதி/இறக்குமதிப் பொருள்களும் பண்ணியம் என்னப்படும் என்று அறிகிறோம்.

10.2 பதம்

	பொதுவாகப் பதம் என்பது ஏற்றகாலம், பக்குவம் என்ற பொருள் தரும். நன்றாக வெந்த சோற்றை அவிழ் பதம் என்பர். 
தயிரைக் கடைந்து பக்குவமாக வழித்து எடுக்கப்படும் வெண்ணெய் பதம் எனப்படும். இருப்பினும் பதமாகச் சமைக்கப்பட்ட ஒரு பொருள் 
பதம் என்று சொல்லப்படுகிறது.

	இரும் பேர் ஒக்கலொடு பதம் மிகப் பெறுகுவிர் – மலை.157
	மிகுத்துப் பதம் கொண்ட பரூஉக் கண் பொதியினர் – மலை.252

	என்ற அடிகளால் இதை அறியலாம்.

	ஆர் பதம் பெறுக தோழி – குறுந்.383/2
	நல்குநர் ஒழித்த கூலிச் சில் பதம் – அகம்.301/4
	வல்வில் இளையர்க்கு அல்குபதம் மாற்றா – புறம் 353/10

	என்ற அடிகளும் இதனை வலியுறுத்தும்.

10.3 பிளவை

	பிளக்கப்பட இறைச்சித் துண்டு பிளவை எனப்படுகிறது.

	முழவுமா தொலைச்சிய பைந்நிணப் பிளவை – மலை.176

	என்ற மலைபடுகடாம் அடியால் இதனை அறியலாம். இதைத்தவிர இச் சொல் வேறு சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. 
யானைப் பாகன் அங்குசத்தால் யானையின் நெற்றியைக் குத்திப் பிளந்த புண் பிளவை என்று மணிமேகலையில் கூறப்பட்டுள்ளது.

10.4 புழுக்கல்

	புழுங்கலாக வேகவைத்த உணவு புழுக்கல் எனப்படுகிறது. ஆவியில் வேக்கவைத்தலை அவித்தல் என்கிறோம். அவ்வாறு அவித்துச் 
சமைக்கப்பட்ட உணவு புழுக்கல் எனப்படுகிறது. இதுவே புழுக்கு என்றும் சொல்லப்படுகிறது. இது இறைச்சி உணவாகவோ அல்லது வேறு 
தாவர உணவாகவோ இருக்கலாம்.

	வாராது அட்ட வாடூன் புழுக்கல் - பெரும் 100  
	துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் - பொரு 103  
	வயல் ஆமை புழுக்கு உண்டும் - பட் 64
	மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல் - நற் 83/5 
	உவலை கண்ணியர் ஊன் புழுக்கு அயரும் - அகம் 159/10
	
	போன்ற அடிகள் மாமிசப் புழுக்கலைக் குறிக்கின்றன.

	விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல் - பொரு 114  
	தெரி கொள் அரிசி திரள் நெடும் புழுக்கல் - பெரும் 474  
	அவரை வான் புழுக்கு அட்டி பயில்வுற்று - பெரும் 195  
	மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு - அகம் 136/1
	குடவர் புழுக்கிய பொங்கு அவிழ் புன்கம் - அகம் 393/16

	ஆகிய அடிகள் தாவரப் புழுக்கலைக் குறிக்கும்

10.5 பொம்மல்

	அடர்த்தியான, நீண்ட கூந்தல் உள்ளவர்கள் சில சமயங்களில் நீண்ட முடியைப் பந்துபோல் சுருட்டிக் கொண்டைபோட்டிருப்பார்கள். 
புலவர்களால் இது பொம்மல் ஓதி எனப்படுகிறது. ஓதி என்பது கொண்டை. பொம்மல் என்பது திரட்சி, மிகுதி.  ஒரு தட்டில் மிகுந்த அளவு 
சோற்றைக் குவித்து வைத்தால் அது பொம்மல் பெரும் சோறு எனப்படுகிறது.

	புகர்வை அரிசி பொம்மல் பெரும் சோறு - நற் 60/5

	என்று நற்றிணை கூறுகிறது. இதுவே ஆகுபெயராகி, பொம்மல் என்றாலேயே திரட்சியாகக் குவிக்கப்பட்ட உணவு என்ற பொருள்தரும்.

	குரூஉ கண் இறடி பொம்மல் பெறுகுவிர் - மலை 169

	என்ற மலைபடுகடாம் அடி, பெருமளவு சோறு என்பதைப் பொம்மல் என்று சொல்வதைப் பார்க்கலாம். 

			

11. 1 .. 4 மிதவை, மிளிர்வை, மூரல், மோதகம்,

11.1 மிதவை

	மிதவை என்பதற்குச் சோறு, கூழ், கும்மாயம் என்று பொருள் தருகிறது தமிழ்ப் பேரகராதி. கும்மாயம் என்பது குழையவைத்த 
பருப்பு. ஆனால் சங்க இலக்கியங்களில் இச் சொல் காணப்படும் இடங்களை ஆய்ந்தால் வேறுவகையாகப் பொருள்கொள்ளத் தோன்றுகிறது. 

	செவ்வீ வேங்கைப் பூவின் அன்ன
	வேய்கொள் அரிசி மிதவை சொரிந்த
	சுவல் விளை நெல்லின் அவரை அம் பைங்கூழ் – மலை 434 – 436

	சிவந்த பூக்களையுடைய வேங்கைப் பூவினை ஒத்த, 
	மூங்கிலினின்றும் கொண்ட அரிசியினாலான சோற்றின் கண் சொரிந்த
	மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லின் அரிசியை விரவி, அவரை விதையினால் சமைத்த புளிக்கரைத்த புளியங்கூழ்

	என்று பெருமழைப்புலவர் உரைகூறுகிறார்.

	எனவே இங்கு மிதவையும் (அவரைப்)பருப்புக் கூழும் வெவ்வேறானவை என்பது தெளிவாகிறது. 

	அடுத்து ஓர் அகநானூற்றுப்பாடல் இதைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

	உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை
	பெருஞ்சோற்று அமலை நிற்ப – அகம் 86:1,2

	உழுத்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த செவ்விய குழைதலையுடைய பொங்கலோடு, பெரிய சோற்றுத்திரளை உண்டல் 
இடையறாது நிகழ என்று நாட்டார் அவர்கள் இதற்குப் பொருள்கூறுகிறார். எனவே மிதவை என்பது சோற்றினின்றும் வேறுபட்டது என்பது 
இதன்மூலம் தெரிகிறது. இங்கு மிதவை என்பது குழைவான பொங்கல் என்று குறிப்பிடப்படுகிறது. உழுந்து என்பது உழுந்தப் பருப்பைக் 
குறிக்கிறதா, உழுந்தம் மாவைக் குறிக்கிறதா என்பது ஆயத்தக்கது. கொழுங்களி என்பதால் இங்கே உழுந்து என்பது உழுந்தம் மாவாக 
இருக்கவேண்டும் என்பது புலனாகிறது. இந்த உழுந்தங்களி மிதவை என்று சொல்லப்படுவதேன்?

	வேறு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா என்று தேடும்போது இன்னொரு அகப்பாடலைப் பார்க்கிறோம். 

	பசுமீன் நொடுத்த வெண்ணெல் மாஅத்
	தயிர்மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே – அகம் 340:14,15

	இது நெய்தல் திணைப் பாடல். பச்சைமீனை விலைக்குக் கொடுத்து வாங்கிய வெண்ணெல்லின் மாவைத் தயிரிட்டுப் பிசைந்த கூழ்
என்று நாட்டார் இங்கே பொருள்கொள்கிறார். எனவே இங்கு மிதவை என்பது மாவினால் செய்யப்பட்டது என்பது உறுதியாகிறது. ஆனால் 
நெல்லின் மாவைத் தயிரிட்டுப் பிசைந்து அப்படியே உண்பார்களா? சமைக்கவேண்டாமா? எனவே இங்கு வெண்ணெல் மா மிதவை, தயிர்மிதி 
மிதவை என்று இரண்டையுமே மிதவைக்கு அடையாகக் கொள்ளவேண்டும். வெண்ணெல் மாவைச் சமைத்துக் களியாக்கி, அதனுடன் தயிர் 
சேர்த்துப் பிசைந்து கூழாக்கி உண்டிருக்கிறார்கள். எனவே மிதவை என்பது கூழல்ல – தயிரில் பிசைந்து கூழாக்கப்படுகிறது என்பதுவும் 
புலனாகிறது. 

	தெளிவான முடிவுக்காக மேலும் ஆய்ந்தபோது கைகொடுக்கிறது ஒரு புறப்பாடல்.

	கவைக் கதிர் வரகின் அவைப்புறு ஆக்கல்
	தாதெரு மறுகில் போதொடு பொதுளிய
	வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ
	ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை – புறம் 215:1-4

	இங்கே வரகு அவைப்புறுகிறது – அதாவது குற்றப்படுகிறது. கிடைப்பது வரகரிசி. கதிரினின்றும் பெறப்பட்ட வரகைக் குற்றி 
அரிசியாக்குகிறார்கள். எனவே இது வரகின் பச்சரிசி.  ஆக்கினால் இது வெகு விரைவில் குழைந்துபோகும். இதனையும் தயிருடன் சேர்த்து 
உண்டிருக்கிறார்கள். 

	இதனையும் அடுத்து மற்றுமோர் அகப்பாடல் மிதவை பற்றிப் பேசுகிறது.

	காண்வர, கொள்ளொடு பயறு பால் விரைஇ வெள்ளிக்
	கோல்வரைந்தன்ன வாலவிழ் மிதவை
	வாங்கு கை தடுத்த பின்றை – அகம் 37: 13,15

	கொள்ளும் பயறும் அழகுபொருந்த பாலுடன் கலந்து ஆக்கிய வெள்ளிக்கம்பியை ஓரளவாக நறுக்கி வைத்தாற்போன்ற வெள்ளிய 
அவிழ்க் கஞ்சியை வளைத்து உண்ட கை போதும் எனத் தடுத்த பின்னர் – என்று இதற்குப் பொருள்கூறப்படுகிறது. 

	இங்கும் மிதவை கூழாக்கப்படுகிறது. ஆனால் இங்கு அது கொள்ளு, பயறு ஆகியவற்றின் மாவை ஆக்கிச் செய்யப்பட்டிருக்கிறது. 
தயிருக்குப் பதிலாக இங்கு பால் சேர்க்கப்படுகிறது. எதிரில் நிற்பவர் குனிந்து உள்ளங்கைகளைச் சேர்த்துக் குவித்து வாங்க, வெள்ளிக்கம்பியாய் 
இந்தக் கூழ் அவர் கைகளில் ஊற்றப்படுகிறது. 

	எனவே மிதவை என்பது, நெல்லரிசி மாவு, பச்சை வரகரிசி, பயறுகளின் மாவு ஆகியவற்றைக் குழையவோ, களியாகவோ கிண்டி. 
அதனுடன் பாலோ, மோரோ, புளித்தநீரோ சேர்த்துக் கூழாக உண்ணப்படுவது என்பது புலனாகிறது.

	இருப்பினும் இது மிதவை என்று ஏன் அழைக்கப்படுகிறது. மலைபடுகடாம் அடி ஒன்று இதற்குப் பதிலளிக்கிறது.

	கல்லென் கடத்திடைக் கடலின் இரைக்கும்
	பல்யாட்டு இனநிரை எல்லினிர் புகினே
	பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர் – மலை 415-417

	கல்லென்ற ஓசையையுடைய காட்டிடத்தே கடல் போல ஒலிக்கும்
	பல ஆட்டினங்களையுடைய திரள்களிலே இருட்டும் நேரத்தில் சென்றால் 
	பாலும் மிதவையும் (அப்போதைக்குச்) சமைக்காமல் பெறுவீர்கள் 

	என்பது இதன் பொருள்.

	இங்கே காட்டப்படுவோர் ஆட்டு இடையர்கள். ஊருக்கு வெகு தொலைவில் காட்டில் கிடைபோட்டிருக்கிறார்கள். காலையில் எழுந்து 
களிக்கிண்டி உண்டுவிட்டு, மீந்ததை நீரில் போட்டுவிட்டு ஆடுகளை ஓட்டிக்கொண்டு செல்வர். களியை நீரில் போடாவிட்டால் மாலைவரை 
தாங்காது. கெட்டுப்போய்விடும். எனவே களி உருண்டைகளை நீரிலோ, புளித்ததண்ணீரிலோ, அல்லது நீர்த்த மோரிலோ போட்டு வைத்திருப்பார்கள்.
மாலையில் ஆடுகளைத் திரும்ப ஓட்டிக்கொண்டு வந்த அவர்களுக்குக் களிக்கிண்ட நேரமிருக்காது. எனவே நீரில் மிதந்துகொண்டிருக்கும் 
உருண்டைகளை எடுத்து, நீரை நன்கு வடித்து, அந்த உருண்டைகளைப் பாலில் கரைத்து உண்ணுவர். அது அப்போதைக்கு ஆக்காத களியாதலால் 
அதனைப் பண்ணாது என்கிறார் புலவர். அந்த நேரத்தில் கூத்தர்கள் அங்குச் சென்றால், ‘பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர்” 
என்கிறார் புலவர்.

	மிதவை என்பதன் அடிச் சொல் மித. இது நீரில் அல்லது நீர்த்தன்மையுள்ள ஒரு பொருளில் மிதப்பது. அது எப்படி உணவுக்கானது? 
மேலே ஆட்டிடையர்கள் செய்வதுபோல, பச்சரிசிச் சோற்றைக் குழைய ஆக்கியோ, அரிசி அல்லது பயறுகளின் மாவைக் களியாகக் கிண்டியோ, 
சூடாக முதலில் உண்டுவிட்டு, மீந்ததை உருண்டைகளாக்கி ஒரு நீர்ப்பொருளில் மிதக்கவிடுவதே மிதவை. எனவே இது உருண்டைச் சோறு 
அல்லது களியுருண்டை. பின்னர் இதனைப்  பாலிலோ, தயிரிலோ, புளித்தநீரிலோ கரைத்துக் குடிப்பது வழக்கம். இன்றைக்கும் இந்தப் பழக்கம் 
சிற்றூர்களில் ஏழைபாழைகளின் மனைகளில் நடப்பதைக் காணலாம்.

11.2 மிளிர்வை 

	கரும் கண் வராஅல் பெரும் தடி மிளிர்வையொடு
	புகர்வை அரிசி பொம்மல் பெரும் சோறு - நற் 60/4,5

	என்கிறது நற்றிணை. மீன்குழம்பில் கிடக்கும் மீன்துண்டுகளைத்தான் இங்கு மிளிர்வை என்கிறார் புலவர். மிளிர் என்றால் 
சுழலு, புரளு என்ற பொருள் உண்டு. 

	போர்க்களத்தில் வாள்கள் சுழலுவதை,

	கூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்ப - புறம் 371/10

	என்கிறது புறநானூறு. கொதிக்கிற குழம்பில் புரண்டு புரண்டு சுழன்று வெந்த மீன்துண்டுகள் அல்லது கறித்துண்டுகளே 
மிளிர்வை எனப்படுகின்றன.

11.3 மூரல்

	மூரல் என்பதற்கு இளமுறுவல் என்று ஒரு பொருள் உண்டு.

	வீட்டுக்கதவு தட்டப்படுகிறது. திறந்து பார்த்தால் மிகவும் நெருங்கிய நண்பர் அல்லது உறவினர். உடனே உங்கள் முகம் மலர்கிறது. 
வாயெல்லாம் பல்லாய், “வாங்க வாங்க” என்று உற்சாகத்துடன் வரவேற்கிறீர்கள். இது மலர்ந்த சிரிப்பு.

	தெருவில் போகும்போது முற்றிலும் புதிய ஒருவர் உங்களைப் பார்த்துச் சிரிக்கிறார். யாரென்று தெரியாத நிலையில் பதிலுக்கு 
ஒரு சிறு முறுவல்மட்டும் காட்டிவிட்டுச் செல்கிறீர்கள். 

	இப்படியில்லாமல் நெடுநாள்களுக்கு முன்னர் ஓரளவே பரிச்சயம் ஆகியிருப்பவரை எதிர்பாராமல் காணும்போது உங்கள் முகம் 
ஓரளவு மலர்ந்து, வாயில் பற்கள் மிகச் சிறிய அளவே தெரிய புன்னகைக்கிறீர்களே அதுதான் மூரல். இதை விருந்தின் மூரல் என்கிறது சிலம்பு.

	திருந்து எயிறு அரும்பிய விருந்தின் மூரலும் - வஞ்சி 28/24

	என்கிறது சிலப்பதிகாரம்.

	மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே - குறு 286/5  (முழு)
	மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற - அகம் 390/15  (முழு)

	என்ற சங்க அடிகள் இதனையே கூறுகின்றன.

	எனவே மூரல் என்பதனை இளநகை எனலாம். இது எப்படி உணவுக்கானது? 

	சரியாக வேகாத அரிசிச்சோறு விதை விதையாய் இருக்கும். இது முற்றிலும் புதியவருக்குக் காட்டும் முறுவல் போன்றது. 
நன்றாக வெந்து குழைந்துபோன சோறு நெருங்கிய உறவினரிடம் காட்டும் மலர்ந்த சிரிப்புப் போன்றது. மிகச் சரியான பதத்தில் வெந்து, 
சோறு பருக்கைபருக்கையாக ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் இருந்தால் அதுவே மூரல். இளநகை போன்று இளம்பதச் சோறு எனலாம். 

	உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு - அகம் 60/4 

	என்று அகநானூறு கூறுவதைக் கவனியுங்கள்.

	பெரும்பாணாற்றுப்படை இதனை விளக்கமாய் உரைக்கிறது.

	நெடுங்குரல் பூளைப் பூவின் அன்ன
	குறுந்தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றிப்
	புகர் இணர் வேங்கை வீ கண்டன்ன
	அவரை வான் புழுக்கு அட்டிப் பயில்வுற்று
	இன்சுவை மூரல் பெறுகுவிர் – பெரும் 192 – 196

	அவரை விதையை வேகவைத்துக் கடைந்து வரகரிசிச் சோற்றில் ஊற்றிப் பிசைந்து உண்டிருக்கிறார்கள். நன்றாக மலர வெந்த 
வரகரிசிச்சோறு ‘பொலபொல’-வென்று இருக்கும். அதுவே அவிழ் சொன்றி. பருப்பை வேகவைத்துக் கடைந்தாலும் அது குருணைப் பதத்தில்தான் 
இருக்கும். ‘குக்கரில்’ வைத்த துவரம்பருப்பு போல் குழைய இருக்காது. இந்தக் குருணைப்பதப் பருப்புக் கடைசலை, குருணைபோன்ற வரகரிசிச் 
சோற்றில் பிசையக் கிடைப்பதே இன்சுவை மூரல்.

11.4 மோதகம்

	மோதகம் என்பது இன்றைய கொழுக்கட்டை. கற்கண்டை இளக்கிப் பாகாக்கி, அதனைப் பூரணமாகக் கொண்டு செய்த கொழுக்கட்டைகள் 
மதுரைத் தெருக்களில் விற்கப்பட்டதை மதுரைக் காஞ்சி கூறுகிறது.

	அயிர் உருப்புற்ற ஆடமை விசயம்
	கவவொடு பிடித்த வகையமை மோதகம் – மது. 625, 626

	அயிர் என்பது கற்கண்டு. உருப்புற்ற என்பது சூடாக்கிய. ஆடு என்பது அடுதல் – சமைத்தல். விசயம் என்பது பாகு. கவவு என்பது 
பாகுடன் தேங்காய்த்துருவல், வேகவைத்த பயறு போன்றவை சேர்ந்த உள்ளீடு, பூரணம்.

			

12. 1 .. 8  வத்தம், வட்டம், வல்சி, வறை, வாட்டு, வாடூன், விசயம், வேவை

12.1 வத்தம்

	இச் சொல் பெரும்பாணாற்றுப்படை தவிர, வேறு சங்க இலக்கியங்களில் மட்டுமன்றி, ஏனைச் செம்மொழி இலக்கியங்களிலும் 
காணப்படவில்லை. 

	தொண்டைமான் இளந்திரையனிடம் பரிசில் பெறுவதற்காக நடந்து செல்லும் பெரும்பாணன் குடும்பத்தினர், செல்லும் வழியில் 
பலதரப்பட்ட நிலங்களில் பலதரப்பட்ட மக்கள் தரும் உணவை உண்டவாறு செல்கின்றனர். அவ்வாறு மருதநிலத்துப் பகுதியில் செல்லும்போது 
அங்கிருக்கும் அந்தணர் வீட்டில் அவர்களுக்குக் கிடைக்கும் அரிசிசோற்றைப் புலவர் வத்தம் என்கிறார். 

	பெருநல் வானத்து வடவயின் விளங்கும்
	சிறுமீன் புரையும் கற்பின் நறுநுதல்
	வளைக்கை மகடூஉ வயின் அறிந்து அட்ட
	சுடர்க்கடைப் பறவைப் பெயர்படு வத்தம்
	சேதா நறுமோர் வெண்ணெயின் – பெரும் 302 – 306

	என்பதுதான் அப் பகுதி.

	சுடர்க்கடை என்பது ஞாயிறு மறையும் மாலைநேரம். பறவைப் பெயர்படு வத்தம் என்பது கருடன் சம்பா நெல்லரிசிச் சோறு.

	எனவே வத்தம் என்பது அன்றைய வட்டார வழக்காகவோ, அந்தணர் வழக்காகவோ இருந்திருக்க வேண்டும்.

12.2 வட்டம்

	வட்டம் என்பது வட்ட வடிவிலான எந்தவொரு பொருளையும் குறிக்கலாம். பெரும்பாணாற்றுப்படையில் வட்டம் என்பது ஒரு 
தின்பண்டம் எனக் காண்கிறோம்.

	பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூ
	கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த
	இழைசூழ் வட்டம் பால் கலந்தவை போல்
	நிழல்தாழ் வார்மணல் நீர் முகத்து உறைப்ப – பெரும் 376 - 379

	கூவியர் என்போர் அப்ப வாணிகர். மணற்பரப்பில் உள்ள குழியில் நீரில் உதிர்ந்து கிடக்கும் குருக்கத்தி மலரைப் போலப் பாலில் 
போடப்பட்ட வட்டம் மிதந்துகொண்டிருக்கிறதாம். எனவே இங்கே வட்டம் என்பது வட்டவடிவிலான அப்பத்தைக் குறிக்கிறது.

12.3 வல்சி

	நாம் எந்த உணவை உண்டு உயிர்வாழ்கிறோமோ அதுதான் நமக்கு வல்சி. அது என்ன பொருளாக இருந்தாலும், எந்த நிலையில் 
இருந்தாலும் அது வல்சிதான். 

	உழவர்களுக்கு நெல், பருப்பு வகை எல்லாமே வல்சிதான்

	குடி நிறை வல்சி செம் சால் உழவர் - பெரும் 197
	வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி - பெரும் 255

	என்கிறது பெரும்பாணார்ருப்படை.

	அந்த நெல்லைக் குற்றி அரிசி ஆக்கினால் அதுவும் வல்சியே.

	செந்நெல் வல்சி அறியார் - பதி 75/12 என்கிறது பதிற்றுப்பத்து.

	அந்த அரிசியைச் சோறாக ஆக்கினால் அதுவும் வல்சியே

	குற_மகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி - மலை 183,184

	அந்த நெல்லைக் குற்றி, உமியிலிருந்து தவிட்டைப் புடைத்தெடுத்து அதனைப் பன்றிக்குக் கொடுப்பர். அந்தப் பன்றிக்குத் 
தவிடுதான் வல்சி.

	நெல்மா வல்சி தீற்றி பல் நாள் - பெரும் 343
	குழி நிறுத்து ஓம்பிய குறுந்தாள் ஏற்ற – பெரும் 343,344

	என்கிறது பெரும்பாணாற்றுப்படை.

	ஒரு பசுவை வளர்த்து, அதினின்றும் கிடைக்கும் பால், மோர், வெண்ணெய், நெய் ஆகியவற்றை விற்று, அதில் கிடைக்கும் 
ஊதியத்தைக் கொண்டு பிழைப்பு நடத்துவோருக்கு வல்சி வழங்குவது அந்தப் பசு. அதனை ஓர் ஆன் வல்சி என்கிறது குறுந்தொகை.

	ஓர் ஆன் வல்சி சீர் இல் வாழ்க்கை - குறு 295/4

	அதைப்போல யானையைக் கொண்டும் சிலர் பிழைப்பு நடத்தலாம்

	களிறு பெறு வல்சி பாணன் கையதை - நற் 310/9
	களிறு பெறு வல்சி பாணன் எறியும் - அகம் 106/12

	என்ற அடிகள் இதனைக் கூறும்.

	கூகை எனும் ஆந்தைக்கு எது உணவு? வீட்டில் வாழும் எலிதானே. எனவே எலி என்பது கூகையின் வல்சி.

	இல் எலி வல்சி வல் வாய் கூகை - அகம் 122/13

	என்று அகம் கூறுவதைப் பாருங்கள்.

	இன்னும் ஒவ்வொருவருக்கும் வாழ்வுதரும் உணவு அவர்களுக்கு வல்சி என்பதைக் கீழே காணும் அடிகள் உணர்த்தும்.

	கோழ் ஊஉன் குறை கொழு வல்சி
	புலவு வில் பொலி கூவை - மது 141,142

	ஓய்பசிச் செந்நாய் உயங்குமரைத் தொலைச்சி
	ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய்நாட்டு
	அரும் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் - நற் 43/2-5

	வலைவர் தந்த கொழு மீன் வல்சி

	பறை தபு முது குருகு இருக்கும் - ஐங் 180/2,3

	முளவு_மா வல்சி எயினர் தங்கை - ஐங் 364/1

	நிண ஊன் வல்சி படு புள் ஓப்பும் - ஐங் 365/2

	பச்சூன் பெய்த பைம் நிண வல்சி
	பொலம் புனை கலத்தில் தருகுவென் மாதோ - ஐங் 391/3,4

	கொள்ளை வல்சி கவர் கால் கூளியர் - பதி 19/1

	வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை - பதி 55/8

	குரும்பி வல்சி பெரும் கை ஏற்றை - அகம் 8/2

	கொழு மீன் வல்சி என்றனம் - அகம் 110/17

	ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்குறுத்த - அகம் 224/12

	மட மான் வல்சி தரீஇய நடுநாள் - அகம் 238/3

	கொழு மீன் வல்சி புன் தலை சிறாஅர் - அகம் 290/3

	வித்தா வல்சி வீங்கு சிலை மறவர் - அகம் 377/4

	வேளை வெந்ததை வல்சி ஆக - புறம் 246/8 வேளை என்பது கீரை.

	பிழி மகிழ் வல்சி வேண்ட மற்று இது - புறம் 269/7

	மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி - புறம் 320/10
	
	புல்லகத்து இட்ட சில் அவிழ் வல்சி
	புலையன் ஏவ புல் மேல் அமர்ந்து உண்டு - புறம் 360/18,19

	மன்னனுடைய முரசை ஒலிக்கும் வீரர்கள் எப்போதும் முரசின் அருகிலேயே இருக்கவேண்டும்; எந்த நேரமும் 
அறிவிக்கப்படவேண்டிய செய்தி வரலாம் இல்லையா? அப்போது தம் பசிக்கு உண்டுகொள்வது அவர்களின் வல்சி. 
மதுரைக்காஞ்சி சொல்வதைப் பாருங்கள். 

	தீம் புழல் வல்சி கழல் கால் மழவர்
	பூந்தலை முழவின் நோன்தலை கடுப்ப - மது 395,396

	இங்கே  தீம் என்பது சுவைத்தால் இனிப்பது. புழல் என்பது உள்துளை. குழல் போன்று இனிப்பானது எது? தெரியவில்லையா? 
சுருண்டு சுருண்டு இருக்குமே! நமது ஜிலேபியேதான்! தளர்வுற்றிருக்கும்போது இனிப்பை இன்றும் உண்கிறோமே! 
அன்றைக்கு நம் மறவர்கள் உண்டிருக்கின்றனர்.  

12.4 வறை

	வறை என்பது பொரித்த கரி.
	
	பரல் வறை கருனை காடியின் மிதப்ப - பொரு 115

	உடும்பின், வறை கால்யாத்தது வயின்தொறும் பெறுகுவிர் - பெரும் 132,133

	நெய் கனிந்து வறை ஆர்ப்ப - மது 756		

	நெய் துள்ளிய வறை முகக்கவும் - புறம் 386/3 

	மண்டைய கண்ட மான் வறை கருனை - புறம் 398/24 

	என்ற அடிகளில் பொரித்த / பொரிக்கின்ற இறைச்சித்துண்டுகள் வறை எனப்படுவதைக் காண்கிறோம்.

12.5 வாட்டு

	ஒரு பொருளை நேரே நெருப்பில் சுட்டால் அதனை வாட்டுதல் என்போம். எனினும் சட்டியிலிட்டு அதனை வதக்கினால் 
அதுவும் வாட்டுதலே. எனவே வாடவைத்தல் என்ற பொருளில், வாட்டு என்பதற்கு வதக்கு (roast) என்று பொருள்கொள்கிறோம். 
இன்றைக்கு அதனைப் பொரியல் என்று சொல்கிறோம்.

	மனைவாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர் – பெரும் 256
	
	என்கிறது பெரும்பாணாற்றுப்படை மனைவாழ் அளகு என்பது கோழி. கோழியைக் கொன்று அதன் இறகுகளை 
நீக்கியபின்னர்,மேல் தோலில் ஒட்டிக்கொண்டிருக்கும் குறுஞ்சிறகுகளையும் நீக்க, அதனைத் தீயில் வாட்டுவர். அதன்மீது தேவையான 
பொருள்களை அரைத்துப்பூசி, மீண்டும் தீயில் வாட்டி உண்பர். அல்லது துண்டங்களாக நறுக்கி, அடுப்பிலிட்டு வதக்கி உண்பர். இவை 
எல்லாமே கோழியின் வாட்டுதான்.

12.6 வாடூன்

	வாடிய ஊன் வாடூன். 

	மதுரை சித்திரைத் திருவிழாவுக்கு அண்டை கிராமங்களிலிருந்து மாட்டுவண்டிகளில் சாரிசாரியாக மக்கள் வருவர். 
ஏறக்குறைய ஒவ்வொரு வண்டியிலும் ஓர் ஆடு கட்டப்பட்டிருக்கும். திருவிழாவின்போடு அது சாமிக்குப் பலியிடப்படும். திருவிழா 
நேரத்தில் வேண்டுமளவுக்கு உண்டபின்னர், மீந்துபோன இறைச்சியை என்ன செய்வது? உப்பும் மஞ்சளும் அரைத்துத் தடவி, 
கோணியூசியால் ஒரு சிறு சரட்டில் கோத்து, வண்டியில் சரம் சரமாகத் தொங்க விடுவர். ஊர் திரும்பியதும் அவற்றை உருவி எடுத்து 
வெயிலில் நன்றாகக் காயவைப்பர். அந்த்த் துண்டுகள் ஈரமெல்லாம் புலர்ந்து இறுகிக் கெட்டியாகிவிடும். இதனை உப்புக்கண்டம் என்பர். 
இதனையே இங்கு வாடூன் என்கிறார் புலவர். வாடிய ஊன் வாடூன் ஆனது. வேண்டும்போது இதனை எண்ணெயில் பொரித்து உண்பர். 
சோற்றுடன் நீரிலும் வேகவைத்து உண்பர் என்பதை.

	முரவு வாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி
	வாராது அட்ட வாடூன் புழுக்கல் - பெரும் 100

	என்ற பெரும்பாணாற்றுப்படை அடிகள் இத்தகைய வேகவைத்த வாடூன் பற்றிக் கூறுகின்றன.

	வாடூன் கொழும் குறை
	கொய்குரல் அரிசியொடு நெய்பெய்து அட்டு
	துடுப்பொடு சிவணிய களிக்கொள் வெண்சோறு - புறம் 328/9-11

	என்ற புறநானூற்று அடிகள் இன்னும் விரிவாக இந்தச் செய்முறையை விளக்குகின்றன.

	சூடு கிழித்து வாடூன் மிசையவும் - புறம் 386/4

	கொழுப்புச் சத்து நிறைந்த இறைச்சியினால் ஆகிய உப்புக்கண்டத்தை நெருப்பில் சுட்டாலே உருகிவிடும். 
அதனை வாயில் வைத்து உறிஞ்சி உண்பர் என்பது வேறொரு புறநானூற்றுப் பாடல் இவ்விதம் கூறுகிறது.

12.7 விசயம்

	கருப்பஞ்சாறு, கருப்பட்டி, கரும்புப்பாகு ஆகியவை விசயம் எனப்படுகின்றன. 

	விசயம் அடூஉம் புகைசூழ் ஆலைதொறும் – பெரும் 261

	என்ற பெரும்பாணாற்றுப்படை அடி கருப்பஞ்சாற்றைக் காய்ச்சும் ஆலையைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு கருப்பஞ்சாற்றைக் 
காய்ச்சி இறுக வைத்தால் அது வெல்லம் ஆகிறது. வேறொரு பக்குவத்தில் அது கற்கண்டு ஆகிறது. அதுவே அயிர். இந்தக் கற்கண்டை 
வீட்டில் நீர்சேர்த்துக் காய்ச்சினால் பாகு கிடக்கும். இதைப் பல திண்பண்டங்களுக்குப் பயன்படுத்துவர். இப்படிக் காய்சிய கற்கண்டுப் பாகும் 
விசயம் எனப்படுகிறது.

	அயிர் உருப்புற்ற ஆடு அமை விசயம் – மது. 625

	என்ற மதுரைக் காஞ்சி இதனைக் கூறுகிறது.

	கருப்பஞ்சாற்றைக் காய்ச்சி வேறொரு பக்குவத்தில் நாட்டுச் சர்க்கரை ஆக்குவர். இது தூளாக இருக்கும். இடையிடையே 
கட்டிதட்டிப்போயிருக்கும். இதனைச் சுளகிலிட்டுக் கொழித்து விபூதி போன்று தூளாக ஆக்குவதை மலைபடுகடாம்

	விசையம் கொழித்த பூழி அன்ன – மலை 444

	என்று கூறுகிறது.

	எனவே கருப்பஞ்சாற்றின் பலநிலைகளும் விசையம் எனப்படுகிறது என்று அறிகிறோம்.

12.8 வேவை

	வேகவைத்த உணவு வேவை எனப்படுகிறது.

	துராய் துற்றிய துருவை அம் புழுக்கின்
	பராரை வேவை பருகு எனத் தண்டி - பொரு.103, 104

	என்ற அடிகள் துருவை ஆட்டின் கொழுத்த இறைச்சியைப் புழுக்கி வேகவைத்த துண்டுகளை வேவை என்று சங்க மக்கள் 
அழைத்தமை பற்றிப் பேசுகின்றன.

	நீரில் வெந்தது புழுக்கின் வேவை என்றால், எண்ணெயில் வெந்தது  நெய்க்கண் வேவை எனப்படுகிறது. 

	பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு – மலை 168

	என்ற மலைபடுகடாம் அடி நெய்யில் வெந்த வேவை பற்றிப் பேசுகிறது. இது இன்றைய பஜ்ஜி, பூரி போன்றது.