சங்கச் சொல்வளம் - கட்டுரைகள்

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

 
1. அசைவுகள் 			7. உணவு வகைகள் 
2. நகர்வுகள் 
3. குறைத்தல்கள்
4. அஞ்சுதல் 
5. உண்ணுதல் 
6. உண்ணும் விதங்கள் 

ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக
 
 						சங்கச் சொல்வளம்

	6. உண்ணும் விதங்கள் 


	இன்றைக்கு நாம் பயன்படுத்தும் சாப்பிடு, சாப்பாடு போன்ற சொற்கள் சங்க இலக்கியங்களில் இல்லை. 
ஆனால் அவற்றில் ஏதேனும் ஒரு திட அல்லது திரவப் பொருளை உட்கொள்ளுதலுக்குப் பல்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 
அவற்றை இலக்கிய எடுத்துக்காட்டுகளுடன் இங்கு ஆய்வோம்.

1. அருந்து

	இன்றைக்கு அருந்து, குடி, பருகு, மண்டு, மாந்து என்ற இந்த ஐந்து சொற்களுமே நீர்மப் (திரவப்) பொருளை உட்கொள்ளுதலுக்குப் 
பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் அருந்து என்பது சில நேரங்களில் திடப்பொருளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இன்றைக்கும் எழுத்து நடையில் 
‘உணவருந்திச் செல்லுங்கள்’ என்று எழுதப்படுவதைக் காண்கிறோம். 

	நாம் ஒரு பொருளை உண்கிறோம். சிறிது நேரங்கழித்து முடித்துக்கொள்கிறோம். அதற்குக் கீழ்க்கண்டவற்றுள் எதாவது 
ஒரு காரணம் இருக்கக்கூடும்.

	1. நமது வயிறு நிறைந்திருக்கலாம்.

	2. வயிறு நிறையாமலிருந்தாலும், மனநிறைவு ஏற்பட்டிருக்கலாம் - சலிப்பு ஏற்பட்டிருக்கலாம் அல்லது திகட்டிப்போயிருக்கலாம்.

	3. நாம் உண்ணும் பொருள் தீர்ந்துபோயிருக்கலாம்.

	4. அல்லது வேறு ஏதேனும் தடை ஏற்பட்டிருக்கலாம்.

	முதல் இரண்டு காரணங்களால் நாம் உண்ணுவதை நிறுத்தியிருந்தால், அதனை ஆர உண்ணுதல் என்போம் இல்லையா! 
அவ்வாறு ஆர உண்ணுதலே அருந்துதல். மேலும் நமக்குப் பிடித்த உணவை ஆர்வத்தோடே உண்ணுதலும் அருந்துதலே. 

	சங்க இலக்கியங்களில் திடப்பொருள் உண்பதுவே மிகப்பெரும்பாலும் அருந்துதல் எனப்படுகிறது.

	வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை
	தண்ணறும் சிலம்பில் துஞ்சும் ------ - நற் 7/7

	இறவு அருந்தி எழுந்த கரும் கால் வெண்_குருகு
	----------- ------ ----------- ---------
	கருங்கோட்டுப் புன்னை இறைகொண்டனவே - நற் 67/3-5

	---------- ------- ------- மீன் அருந்திப்
	புள்_இனம் குடம்பை உடன் சேர்பு உள்ளார் - நற் 382/3,4
	அடும்பு அவிழ் அணி மலர் சிதைஇய மீன் அருந்தி
	தடம் தாள் நாரை இருக்கும் எக்கர் - குறு 349/1,2

	வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின்
	தாழ்சினை உறங்கும் -------- ------- - அகம் 286/6,7

	இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி
	தங்கினை சென்மோ பாண ----- - புறம் 320/14,15

	போன்ற அடிகளில் அருந்துதல் என்பது நிறைவாக உண்ணுதல், மிக விருப்பமானதை உண்ணுதல் ஆகிய பொருளைத் 
தருவதைக் காணலாம்.

	மார்பில் சந்தனக் குழம்பைப் பூசும்போது, மார்பு அக் குழம்பை அருந்துகின்றது என்று புலவர்கள் பாடியுள்ளனர். 

	அம் தளிர் குவவு மொய்ம்பு அலைப்ப சாந்து அருந்தி
	மைந்து இறைகொண்ட மலர்ந்து ஏந்து அகலத்து - குறி 120,121

	வேந்தர் நாண பெயர்வேன் சாந்து அருந்தி
	பல் பொறி கொண்ட ஏந்து எழில் அகலம் - புறம் 161/26,27

	அகலம் என்பது மார்பு. இனிமேலும் மார்பு ஏற்றுக்கொள்ளாமல் குழம்பை வழியவிடும் என்கிற நிலை வருமளவும் மார்பில் சந்தனம் 
பூசப்படும்போது, மார்பு சாந்து (சந்தனம்) அருந்துவதாகக் கூறுவது பொருத்தம்தானே!

	இதைப்போல, தலை நிறைய எண்ணெய் பூசும்போது, கூந்தல் நெய்யை அருந்துகிறதாம்.

	இரும் பிடி தட கை மான நெய் அருந்து
	ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால் - அகம் 177/4,5

	ஐம்பால் என்பது பின்னப்பட்ட கூந்தல். 

	ஒரோவழி (occassionally) நீர்மப் பொருளை உட்கொள்ளுவதுவும் அருந்துதல் எனப்படுகிறது.

	கருங்கோட்டுப் புன்னை மலர்த் தாது அருந்தி
	இரும் களிப் பிரசம் ஊத ---- - நற் 311/9,10

	தாது என்பது தேன். பிரசம் என்பது தேனீ. 

2. குடி 

	தலைவனும் தலைவியும் வெப்பம் மிகுந்த பாலைவழியில் சென்றுகொண்டிருக்கிறார்கள். தலைவிக்குத் தாகத்தால் நா வறண்டுபோய்க் 
கிடக்கிறது. வழியில் ஒரு சுனை இருக்கிறது ஆனால் நீர் வற்றிப்போய் மிகுந்த வெப்பத்துடன் மிகச் சிறிதளவு கலங்கல் நீரே இருக்கிறது. 
தலைவி நீரைக் கண்டதும் விரைந்து செல்கிறாள். நீரை உள்ளங்கையில் வாரியெடுத்து ‘மடக் மடக்’ என்று விழுங்குகிறாள். செல்வச் செழிப்பு மிக்க
 குடும்பத்தில் பிறந்த அவள் வீட்டில், தங்கக் குவளையில் இனிப்புச் சேர்த்த பாலைக் கூட ஒரு மடக்குக்கு மேல் உண்ண மறுப்பாள். 
இப்போது அந்தக் கலங்கல் நீரைக் குடிப்பதற்கு எவ்வாறு மனம் துணிவாள் என்று தாய் உடன்போக்கில் சென்ற மகளை எண்ணி வருந்துவதாக 
வரும் பாடலில் (குறுந்தொகை 356) குடி என்ற சொல்லின் முழுப்பொருளையும் காணலாம். 

	அறுசுனை மருங்கில் மறுகுபு வெந்த
	வெம் வெம் கலுழி தவ்வெனக் குடிக்கிய
	யாங்கு வல்லுநள்-கொல் தானே ----- - குறு 356/3-5

	இன்னொரு தலைவன், தலைவிக் கதை. மலைநாட்டில் வேட்டைக்காகச் செல்கிறன் தலைவன். அங்குத் தோழியருடன் பூப்பறிக்க 
வந்த தலைவியைப் பார்த்துக் காதல்கொள்கிறான். அவன் காதலை ஏற்கத் தலைவி தயங்குகிறாள். உறுதியாக அவளை மணம்புரிந்து இல்லறம் 
நடத்துவதாகச் சூளுரைக்கிறான் தலைவன். அதை உறுதிப்படுத்தும் வகையில் அவன் அருகில் ஓடும் அருவிநீரை அள்ளிக் குடிப்பதாகப் 
புலவர் கபிலர் குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடுகிறார்.

	மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுது,
	ஏமுறு வஞ்சினம் வாய்மையில் தேற்றி,
	அம் தீம் தெண் நீர் குடித்தலின் நெஞ்சு அமர்ந்து - குறி 209-211

	முருகன் மணக்கோலத்துடன் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கிறான். அவன் முன்னர் எப்போதும் மணமுரசுகளின் முழக்கம் 
இடிமுழக்கம் போல் எழுந்துகொண்டிருக்கிறது என்கிறது பரிபாடல்.
	
	மால் கடல் குடிக்கும் மழை குரல் என
	----------- ------------- -------------- -------------
	மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும் - பரி 8/32 -35

	தாகத்தின் மிகுதியால் கலங்கல் நீரை அள்ளிஅள்ளிக் குடித்தாலும், ஓரளவு தாகம் தீர்ந்தபின் அவள் மனத்தில் எஞ்சியிருப்பது 
அருவருப்புத்தானே! “சீ, இந்த நீரையா குடித்தோம்?”. எனவே அவள் தன் தாகத்தைத் தணிப்பதற்காக மட்டும் மிகக் குறைந்த அளவு நீரை, 
அதுவும் வேண்டா வெறுப்பாகக் குடிக்கிறாள். 

	வஞ்சினத் தலைவன் மிக்க விருப்புடன் நீரை அள்ளி அள்ளி வயிறார உண்ணவில்லை. ஒரு தேவையை முன்னிட்டு, 
ஒரு சில மடக்குகளே உட்கொள்ளுவான். 

	மேகங்கள் கடல்நீரை மிக்க விருப்புடன் வயிறாரவா அருந்தும்? வேண்டுமளவு எடுத்துக்கொள்ளும். அவ்வளவுதான்.
எனவே, நீரின் மீது மிக்க விருப்பம் இன்றி, ஒரு தேவைக்காகச் சிறிதளவு நீரை உட்கொள்ளுதலே குடித்தல். 

3. பருகு 

	அருந்துதல் என்பதில் விருப்பமும், நிறைவும் இருப்பினும், அவற்றோடு சுவைத்தலும் இருக்கும். நாம் நீரைப் பருகுகிறோம் ; 
பழச்சாறு அருந்துகிறோம் என்பதுவே சரியானது. அருந்துதல் நாவின் சுவையுடன் உட்கொள்ளுதல். பருகுதல் அப்படியே விழுங்குதல்.

	தொலைவில் நிற்கும் காதலியை ஆசையுடன் பார்க்கும் காதலனை, அவனது நண்பர்கள், “என்னடா இது? கண்ணாலயே 
முழுங்கிடுவான்போல” என்று கேலிசெய்வது இல்லையா? 

	கரிகாற்பெருவளத்தான் தன்னிடம் பரிசில் வேண்டி வருபவரை, அருகில் அமர்த்தி, ஆசையுடன் அவர்களைப் 
பார்த்துக்கொண்டிருப்பான் என பொருநராற்றுப்படை ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார் பாடுகிறார்.

	கண்ணில் காண நண்ணுவழி இரீஇப்
	பருகு அன்ன அருகா நோக்கமோடு
	உருகுபவைபோல் என்பு குளிகொளீஇ - பொரு 76-78

	இதுதான் பார்வையிலேயே பருகுதல்.

	வயிறார உணவு உண்டபின், வயிற்றில் ஓரஞ்சாரத்தில் எங்காவது கொஞ்சம் ஒளிவிடம் இருந்தால் அதையும் நிரப்பக் 
குவளை நிறையத் தெளிந்த கள்ளை அண்ணாக்க, மடக் மடக் என்று ஒருவர் உட்கொள்ளும் காட்சியை மனத்தில் எண்ணிக்கொள்ளுங்கள். 

	வேய்ப்பெயல் விளையுள் தேக்கள் தேறல்
	குறைவின்று பருகி நறவு மகிழ்ந்து … - மலை 171,172

	இங்கே சுவைத்தல் முக்கியமல்ல. நிரப்புதலே முக்கியம். 

	காட்டுப்பன்றியை அடித்துத் தீயில் வாட்டி, வயிறார உண்டபின்னர் என்ன கேட்கும்? பக்கத்தில் ஓர் அழகிய சுனை இருந்தால்? 
அதன் நீரை அள்ளி அள்ளி, அள்ளி அள்ளி, அப்படியே மடக் மடக்-என்று என்ன செய்வோம்? அதுதான் பருகுதல். பருகியவுடன் சோர்வு 
எல்லாம் ஓடிவிடுகிறதாம். கூறுகிறார் மலைபடுகடாம் பாடலின் ஆசிரியர் பெருங்கௌசிகனார். 

	துகளறத் துணிந்த மணிமருள் தெண்ணீர்
	குவளை அம் பைம் சுனை அசைவு விடப் பருகி - மலை 250,251

	இன்னும் கொஞ்சம் பருகுதலைப் பாருங்கள். காலையில் கிழக்கில் உதிக்கும் சூரியன் விண் முழுக்கப் பரவியிருக்கும் இருளை 
அப்படியே விழுங்குவிடுகிறதாம். இதனைப் பாய் இருள் பருகிய பல்கதிர்ப் பருதி என்று வியந்து கூறுகிறார் பெரும்பாணாற்றுப்படைப் புலவர்.

	அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி
	பகல் கான்று எழுதரு பல் கதிர்ப் பருதி - பெரும் 1,2

	மேகங்கள் கடல் நீரைக் குடித்து உருவாகி மழையைக் கொட்டுகின்றன என்று பார்த்தோம். முல்லைப்பாட்டு ஆசிரியர் நப்பூதனார் 
மேகங்கள் கடல்நீரைப் பருகுகின்றன என்று கூறுகிறார். அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. முல்லைப்பாட்டு முல்லைத்திணைப் பாட்டு.
அதன் கார்காலம் நமது தென்மேற்குப் பருவமழைக் காலம். அக் காலத்தில் மேற்கே கேரளத்தையும் தாண்டிய அரபிக்கடலில் மேகங்கள் 
உருவாகின்றன. உருவாகி வடகிழக்குத் திசையில் நகர்கின்றன. அவை முதலில் எதிர்கொள்வது மிகவுயர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைகள். 
அவற்றின் உச்சிகளைக் கடந்து, உள்நாட்டு மதுரைவரை வரவேண்டுமென்றால் மிகவும் வேகமாக வரவேண்டும். அங்கு வந்து பெருமழை 
பொழியவேண்டுமென்றால், அது முதலில் கடல்நீரைக் குடித்தால் மட்டும் போதாது. வடகிழக்குப் பருவமழை வேண்டுமென்றால் 
வங்கக் கடலைக் குடித்து வடதமிழ்நாட்டில் துப்பிவிட்டுப் போகலாம். ஆனால் தென்மேற்குப் பருவமழை அவ்வாறில்லாமல், 
கடல் நீரை வெகுவாக உறிஞ்சிக் குடித்து – அதாவது பருகி, தமிழ்நாட்டுக்கு மழையைத் தருகிறது என்கிறார் புலவர்.

	நனந்தலை உலகம் வளைஇ -----------
	-------- ------------- ------------ -----------
	பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வலனேர்பு
	கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி
	பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை – முல். 1- 6

	எழிலி என்பது கருக்கொண்ட மேகங்கள். பெயல் என்பது மழை. புலவர் பருகி என்ற சொல்லை எத்துணை கூர்த்த மதியுடன் 
கையாண்டிருக்கிறார் பாருங்கள்.

	வைகறைப் பொழுதில் எழுந்து வயற்காட்டுக்கு விரைகிறது ஒரு கூட்டம். அங்கே களத்துமேட்டில் முந்தின நாள் 
அறுத்துவைத்திருந்த நெற்கதிர்களை எடுத்துப் பரப்பி, மாடுகளை ஓட்டிப் போரடிக்கிறார்கள். பின்னர் அடித்துக் குவித்த நெல்லைக் காற்றில் 
தூற்றிக் குவிக்கிறார்கள். வைக்கோலைக் கட்டுக்கட்டாக முடிந்து அடுக்குகிறார்கள். வேலை முடிந்தது. பசித்த கூட்டத்துக்குப் பானை நிறைய 
புளித்த கள் இருக்கிறது. பனையோலையைக் குடையாகக் கட்டி, அந்தக் கள்ளை வாங்கி வாங்கிப் பருகிறார்கள். எப்படி? போரடித்த காளைகளை 
அருகிலிருக்கும் குளத்துக்குக் கொண்டுசென்று தண்ணீர் காட்டுகிறார்கள். அப்போது அந்தக் காளைகள் எவ்வாறு நீரைக் குடிக்கும்? வைத்த 
வாயை எடுக்காமல் வயிறு நிறைய நீரை உறிஞ்சிக்குடிக்கும் காளைகள் தண்ணீரை மண்டுகின்றனவாம். அவ்வாறு மண்டுகின்ற காளைகளைப் 
போல இந்த உழவர்கூட்டம் கள்ளைப் பருகுவதாக அகநானூறு கூறுகிறது.

	புளிப் பதன் அமைந்த புதுக்குட மலிர்நிறை
	------------ -------------- ------------------ -------------
	கயம் மண்டு பகட்டின் பருகி ---- - அகம் 37/11

	எனவே, பருகுதல் என்பது ஆர்வத்துடன், அளவுக்கதிகமாகக் குடிப்பது என்பது பெறப்படுகிறது. போகிறபோக்கில் அடுத்த 
சொல்லாகிய மண்டு என்பதையும் இங்குப் பார்க்கிறோம். 

4. மண்டு

	வெயிற்காலத்தில் ஊரைச் சுற்றிவிட்டு அலுத்துக் களைத்துப்போய் வரும் சிறார், வீட்டுள் நுழைந்தவுடன் நேராக மண்பானைக்குப் போய், 
மூடியைத் திறந்து குவளையில் நீரை மொண்டு மொண்டு குடிப்பர். அப்போது தாய்க்காரி, “ஏண்டா, சாப்பிடப் போற நேரத்துல இப்படித் தண்ணிய 
மண்டுற?” என்பாள். மண்டு என்பதற்கு வேறு எத்தனையோ பொருள் இருப்பினும் மிகுதியாக உண் – eat and drink greedily என்ற ஒரு பொருள் 
உண்டு. இன்றைக்கும் சிற்றூர்களில் வெகுவாகப் புழக்கத்திலிருக்கும் இச்சொல் இலக்கியங்களிலும் ஒரோவழி இப் பொருளில் வந்துள்ளது.
பகலெல்லாம் முல்லைக்காட்டில் உழுத உழவன், மாலையில் வீடு திரும்பும்போது வழியிலிருக்கும் குளத்தில் நீர் குடிக்க மாடுகளை அழைத்துச் 
செல்கிறான். தண்ணீரைக் கண்டவுடன் மாடுகள் கட்டப்பட்டிருக்கும் கயிற்றையும் இழுத்துக்கொண்டு நீரை நோக்கி விரைந்து செல்கின்றன. குனிந்து 
நீரின் பரப்பில் வாய்வைத்த மாடுகள் வாயையே எடுக்காமல் தொடர்ந்து ‘சர் சர்’-ரென்று நீரை வெகுநேரம் உறிஞ்சிக் குடிக்கின்றன. இவற்றையே 
கயம் மண்டு பகடு என்கிறார் அகநானூற்றுப் புலவர்.

			

	களத்துமேட்டில் அறுத்துப்போட்ட நெல்லைப் போரடித்துக் குவித்த உழவர்கள் வேலை முடிந்து, புளித்த நீரை வெகுவாகக் குடிப்பதைக் 
கயம் மண்டு பகடுகளைப் போல் பருகினர் என்பதன் விளக்கத்தை பருகு என்ற சொல்லின் கீழ்ப் பார்த்தோம்.

	முள்ளுக்காட்டில், உச்சி வெயிலில் கண்டபடி சுற்றித்திரியும் மழவர்கள் தெளிந்த நீர் உள்ள சுனையைக் கண்டதும் அள்ளி அள்ளி 
மண்டுவார்கள் என்று இன்னோர் அகநானூற்றுப் பாடல் சொல்கிறது.

	செருப்புடை அடியர் தெண் சுனை மண்டும்
	அரும் சுரம் அரிய அல்ல - அகம் 129/13,14

	தெண் சுனை என்பது தெளிந்த நீரையுள்ள சுனை. செருப்பு என்ற சொல்லும் பண்டை நாள்களிலிருந்து இன்றைக்கு வரை 
புழங்கி வருவதைக் காணுங்கள். 

5. மாந்து

	ஏதோ சில காரணங்களினால் மதுக்கடைகள் மூடிக்கிடந்தபின் மீண்டும் திறக்கும்போது ‘காய்ந்த மாடு கம்பில் விழுந்த மாதிரி,’ 
வாங்கி வைத்துக்கொண்டு ஊற்றி ஊற்றிக் குடிக்கிறார்களே அதுதான் மாந்துதல் – அளவுக்கு மீறி உண்ணுதல். இப்படிப்பட்டவர்களைப் பற்றிச் 
சங்க இலக்கியங்கள் வெகுவாகப் பேசுகின்றன.

	வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து - நெடு 33

	தேம் பிழி தேறல் மாந்தி மகிழ் சிறந்து - குறி 155

	தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி
	 பெரிய மகிழும் துறைவன் எம் - நற் 388/8,9

	நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி - பதி 12/18

	நனை விளை நறவின் தேறல் மாந்தி - அகம் 221/1

	நார் அறி தேறல் மாந்தி மகிழ் சிறந்து - புறம் 367/7

	தேறல் என்பது தெளிந்த கள். மாந்துதல் அளவுக்கு மீறி உண்ணுதல் என்றால், அதற்கும் மண்டுதலுக்கும் வேறுபாடு என்ன? 
கதிர்வேற்பிள்ளையின் தமிழ் அகராதியில் மண்டுதல் என்பதற்கு அதிகமாகக் குடித்தல் என்ற பொருளே காணப்படுகிறது. 
அதாவது இச் சொல் நீர்மப் பொருளுக்கானது. சங்க இலக்கியங்களிலும் மண்டுதல் என்பது நீரை மண்டுதல் என்ற பொருளில்தான் வருகிறது. 
மதுரைப் பக்கம் இன்றளவும் மண்டுதல் என்பது நீர்மப் பொருளுக்கே பயன்படுவதாக அறிகிறேன். மாந்துதல் என்பது கெட்டிப்பொருளுக்கும் ஆகிவரும்.

	செஞ்சோற்ற பலி மாந்திய
	 கரும் காக்கை கவவு முனையின் - பொரு 183,184

	செம் சுளைய கனி மாந்தி - பொரு 192

	குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி
	 தில்லை அம் பொதும்பில் பள்ளிகொள்ளும் - நற் 195/2,3

	நெல்லி அம் புளி மாந்தி அயலது - குறு 201/4

	எரி மருள் கவளம் மாந்தி களிறு தன் - அகம் 349/11

	எனவே மண்டு என்பது பெரும்பாலும் நீர்மப் பொருளுக்கு ஆகிவர, மாந்து என்பது இருவகைப் பொருளுக்கும் ஆகிவரும்.

	இதைவிட வேறோர் குறிப்பிடத்தக்க வேற்றுமையும் உண்டு. மண்டுதல் என்பது பெருவிருப்பால் இடைவெளிவிடாமல் தொடர்ந்து 
நிறைய உட்கொள்ளல். இதில் கொஞ்சம் அவசரம் இருக்கும். மாந்துதல் என்பது நிதானமாகக் கொஞ்சம் கொஞ்சமாக, தேவையானால் 
இடைவெளிவிட்டுவிட்டு – ஆனால் நிறைய -உட்கொளல். 

			

6. மடு

	மடு என்ற சொல் உண், அருந்து என்ற பொருளைவிட உண்பி, அருத்து என்ற பொருளையே பெரிதும் பெறுகிறது. 
ஒருவர் ஏதோ ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொடுக்க அடுத்தவர் வாங்கி உட்கொள்வது மடுத்தல். இதோ கள் குடிக்கும் குறவரைப் பற்றி:

	பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி ----- குறவர்
	முறித் தழை மகளிர் மடுப்ப மாந்தி - அகம் 348/7-9

	பாப்புக் கடுப்பு என்பது பாம்பின் நஞ்சு. தோப்பி என்பது கள். மகளிர் ஊற்றிக்கொடுக்க, குறவர் மாந்தியிருக்கிறார்கள். 

	யவனர், நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
	பொன்செய் புனைகலத்து ஏந்தி நாளும்
	ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து
	ஆங்கு இனிது ஒழுகுமதி --		புறம் 56

	என்கிறார் நக்கீரனார். 

	ஒண்தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய
	தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து
	ஆங்கு இனிது ஒழுகுமதி --		புறம் 24

என்கிறார் மாங்குடிக் கிழார்.

			

	இங்கே உண்பவர் அரசன். ஆனால் உண்ணல் வெளிப்படையாகக் கூறப்படவில்லை. இருப்பினும் மடுப்பவர்கள் மங்கையர்கள். 
எனவே மடுத்தல் என்பது பொருளை எடுத்து உண்ணக்கொடுத்தல் என்ற பொருளில் அமையும்.

	மடுத்தல் என்பதைத் தன்வினையாகச் சொன்னால் ஊட்டு என்று சொல்லலாம். ஒருவர் தனக்குத்தானே ஊட்டிக்கொள்ள முடியுமா? 
முடியும் என்கிறார் சங்கப் புலவர்.

	தினைப்புனத்தைக் காவல்காக்கிறார்கள் குறவர். அவர்கள் அயர்ந்திருக்கும் நேரம் பார்த்து ஒரு யானை புகுந்து தினையைத் 
தின்று தீர்த்துவிடுகிறதாம்.

	சேமம் மடிந்த பொழுதின் வாய் மடுத்து
	இரும் புனம் நிழத்தலின் சிறுமை நோனாது - குறி 156,157

	என்கிறது குறிஞ்சிப்பாட்டு. யானை தன் கையாலே தினையை உருவி வாயிற்புகுத்துகின்றது என்று கூறுகிறது உரை. 

			

	தாய் தன் மகவுக்குப் பாலூட்டுவதைப் பால் மடுக்கிறாள் என்று சொல்லலாம்.

	கருங்கோட்டு எருமைச் செங்கண் புனிற்றாக்
	காதல் குழவிக்கு ஊறு முலை மடுக்கும் - ஐங் 92/1,2

	எருமை தன் கன்றுக்குப் பால்கொடுக்கும்போது தன்னில் ஊறுகின்ற பாலைத் தன் மடியில் இறக்கி, அதன் கன்று குடிக்கும்படி 
செய்கிறது. அதுதான் மடுத்தல் – enable one to take in. 

			

	காட்டில் ஒரு மான் தன் குட்டியுடன் மேய்ந்துகொண்டிருக்கும்போது ஒரு புலி அந்த மானைக் கொன்றுவிடுகிறது. 
புலியிடமிருந்து தப்பிய சிறுகுட்டி பசியால் வாடிநிற்கிறது. அப்போது அதைக் கண்ட ஒரு முதிய காட்டுக் கறவைப்பசு அந்த மான்குட்டிக்குப் 
பால் கொடுக்கிறது. இந்த அற்புதக் காட்சியைப் புலவர் எப்படி வருணிக்கிறார் பாருங்கள்.

	புலிப்பால் பட்ட வாமான் குழவிக்குச்
	சினங்கழி மூதாக் கன்றுமடுத்து ஊட்டும் – புறம் 323/1,2

	இங்கே மடுத்து ஊட்டும் என்று புலவர் கூறுவதைப் பாருங்கள். மடுத்தல் என்றாலே ஊட்டுதல் என்று பார்த்தோம். 
இப்போது அதைச் சொல்லுடன் பொருளையும் சேர்த்து ஏன் புலவர் கூறுகிறார்? ஒரு பசு தன் கன்றுக்குப் பால் ஊட்டவேண்டுமெனில் 
முதலில் அது தன் மடியில் பாலை இறக்கவேண்டும். தன் காதல் குழவியைப் பார்த்ததும் எந்தத் தாய்க்கும் முலை தானாக ஊறும். 
அது இயல்பான பாசத்தால் ஏற்படுவது. இந்தக் காட்டுப்பசுவுக்கோ இந்த மான்கன்று சொந்தமானது அல்ல. எனவே அதைப் பார்த்ததும் ப
சுவுக்குத் தானாக மடியிறங்காது. எனினும் பாசத்தை மனத்தில் வலிய வருவிக்கிறது. வேறு இனத்தைப் பார்த்ததும் பொதுவாகக் 
காட்டுப்பசுக்கள் வெறிக்கும். முதலில் இந்தக் காட்டுப்பசு தன் வெறிப்பை அடக்குகிறது. இது பக்குவப்பட்ட முதிய ஆ – மூதா - ஆயிற்றே. 
எனவே அப் பசுவால் இது முடியும். சினங்கழி மூதா என்ற இரு சொற்களின் ஆழத்தைக் கவனித்தீர்களா? இதுதான் சங்கச் சொல்வளம். 
இப்போது இந்த சினங் கழிந்த மூதாவின் உள்ளத்தில் இரக்கம் சுரக்கிறது. அந்தப் பரிவின் காரணமாகப் பால் சுரக்கிறது. 
சரி, இதனை அந்த மான்குட்டிக்கு எவ்வாறு தெரிவிப்பது? அந்த மான் குட்டியும் காட்டுப்பசுவைக் கண்டு நடுங்கிக்கொண்டிருக்கலாம். 
அந்தப் பசு தனக்காக மடியில் பால் இறக்கியிருக்கிறது என்று எவ்வாறு அதற்குத் தெரியும்? அந்தக் காட்டுப்பசு மெல்ல அந்த மான் குட்டியின் 
அருகில் செல்கிறது. மிரண்டு விலகும் குட்டியை மேலும் நெருங்கிச் செல்கிறது. முதலில் மான் குட்டியின் அச்சம் நீங்குகிறது. பின்பு 
மெதுவாகத் தன் மடியை அந்த மான்குட்டியின் வாயருகே கொண்டுசெல்கிறது. முதலில் மான்குட்டிக்குப் புரியவில்லை. தன் மடியை வைத்து 
அந்தக் குட்டி மானின் முகத்தை தடவிக்கொடுக்கிறது. ‘கிண்’ணென்ற அந்தத் தொடுதலில் சுகித்துப்போன மான்குட்டி தானாக வாய்வைத்துக் 
காம்பைச் சுவைக்க ஆரம்பிக்கிறது. இதுதான் மடுத்து ஊட்டுதல். சினங்கழி மூதா கன்று மடுத்தூட்டும் என்ற நான்கு சீர்களுக்குள் 
ஒரு குறும்படத்தை ஓடவிட்டிருக்கும் சங்கப் புலவரின் திறத்தை வியப்பதா? அவருக்கு ஈடு கொடுத்துச் சொற்களை வழங்கியிருக்கும் 
தமிழின் மாண்பை எண்ணி நெஞ்சு விம்முவதா?

7. அயில்

	சிலர் திருமண விருந்து போன்ற நிகழ்வுகளில் நன்றாகச் சாப்பிட்டு வரும்போது, எதிரே வருபவர் 
“நல்லா மூக்கு முட்டச் சாப்டாச்சா?” என்று கேட்கிற வழக்கம் உண்டு. அதுதான் அயிலுதல். 

	சோழன் கரிகால் பெருவளத்தானை நாடிச் சென்ற பொருநருக்குக் கிடைத்த விருந்துணவு பற்றி அறிய ஆசையா? இதோ பாருங்கள்.

	-------- ---------- ------- பதன் அறிந்து
	துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின்
	பராஅரை வேவை பருகு என தண்டி
105	காழின் சுட்ட கோழ் ஊன் கொழு குறை
	ஊழின்ஊழின் வாய் வெய்து ஒற்றி
	அவையவை முனிகுவம் எனினே சுவைய
	வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ		
	மண் அமை முழவின் பண் அமை சீறியாழ்
110	ஒண் நுதல் விறலியர் பாணி தூங்க
	மகிழ் பதம் பல் நாள் கழிப்பி ஒரு நாள்
	அவிழ் பதம் கொள்க என்று இரப்ப முகிழ் தகை
	முரவை போகிய முரியா அரிசி
	விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல்
115	பரல் வறை கருனை காடியின் மிதப்ப
	அயின்ற காலை பயின்று இனிது இருந்து
	கொல்லை உழு கொழு ஏய்ப்ப பல்லே
	எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி
	உயிர்ப்பிடம் பெறாஅது ஊண் முனிந்து - பொருநராற்றுப்படை 102 -119

	இதன் பொருள்:-

	-------- ---------- ------- காலமறிந்து,
	அறுகம் புல் கட்டுக்களை கவ்வித்தின்ற செம்மறிக்கிடாயின் அழகிய புழுக்கப்பட்ட(இறைச்சியின்)
	பெரிய (மேல்)தொடை நெகிழ வெந்ததனைத் ‘உண்பாயாக' என்று வற்புறுத்தி,
	இரும்புக் கம்பியில் (கோத்துச்)சுடப்பட்ட கொழுத்த இறைச்சிகளாகிய பெரிய தசைத் துண்டுகளை	105
	மாற்றி மாற்றி வாயின் (இடத்திலும் வலத்திலும்)(அத்தசைகளின்)வெப்பத்தை ஒற்றியெடுத்து,
	புழுக்கினவும் சுட்டனவும் ஆகிய அவற்றை(த் திகட்டிப்போய்) வெறுக்கிறோம் என்கையில், இனிமையுடைய
	வெவ்வேறான பல வடிவினையுடைய தின்பண்டங்களைக் கொணர்ந்து (எங்களை)இருத்தி,
	மார்ச்சனை அமைந்த முழவினோடே பண் (நன்கு)அமைந்த சிறிய யாழையுடைய
	ஒளிவிடும் நெற்றியையுடைய விறலியர் தாளத்திற்கேற்ப ஆட,			110
	(இவ்விதமாய்)மகிழ்கின்ற செவ்வியைப் பலநாளும் பெற்றுக்கழித்து, ஒருநாள்,
	‘சோற்று உணவை(யும்) கொள்வாயாக' என்று வேண்ட, (முல்லை)அரும்பின் தன்மையையுடைய
	(தீட்டப்படாத அரிசியிலுள்ள)வரி நீக்கப்பெற்ற(தீட்டிய) உடையாத(முழு) அரிசியின்
	விரல் என்னும்படி நெடுகின, ஒரே அளவு அமைந்த, (பருக்கை பருக்கையான)சோற்றையும்,
	பருக்கைக் கற்கள் போன்று பொரித்த பொரிக்கறிகளையும், தொண்டையில் மிதக்கும்படி   115
	அயின்ற(உண்ட) பொழுதின், இடையறாது பழகி இனிதாக உடனுறைந்து,
	கொல்லை நிலத்தில் உழுத கொழுப் போன்று, (எம்)பற்கள்
	பகலும் இரவும் இறைச்சியைத் தின்று (முனை)மழுங்கி,
	மூச்சு விடுவதற்கும் இடம்பெறாமையால், அவ்வுணவுகளை வெறுத்து,

	இன்றைக்கு நாம் மூக்குமுட்ட என்பதை அன்றைக்குக் காடியின் மிதப்ப என்கிறார் புலவர். காடி என்பது தொண்டைக்குழி. 
வயிறு நிறைந்து, வயிற்றுக்குச் செல்லும் உணவுக் குழாயும் நிறைந்து, தொண்டைக்குழியில் மிதந்துகொண்டிருக்கிறதாம் உணவு. இவ்வாறு, 
இனிமேலும் வயிற்றில் இடமில்லை என்று சொல்லும் அளவுக்கு உட்கொள்ளுதலே அயில்தல். 

	மலைக்காட்டில் ஒரு சுனை. அதன் கரையில் ஒரு பெரிய மாமரம். அதில் பழுத்துத் தொங்கிக்கொண்டிருந்த ஒரு இனிய கனி, 
தானாக உதிர்ந்து, கீழே உள்ள பாறை மீது விழுந்து தெறித்துக் கிடக்கிறது. அதினின்றும் ஒழுகிய தீஞ்சாறு பாறையின் ஒரு பள்ளத்தில் 
தேங்கிக் கிடக்கிறது. மாம்பழம் இலைகளைத் தட்டிக்கொண்டு உதிரும்போது ஏற்பட்ட சலசலப்பில் அதிர்ந்துபோன வண்டுக்கூட்டங்கள் 
கலைந்து பறந்து சென்றபோது அவற்றின் வாயினின்றும் ஒழுகிய பூந்தேன் அந்த மாம்பழச் சாற்றுக் குட்டையில் கலக்கிறது. அந்த மாமரத்தின் 
அருகில் ஒரு பலா மரம். அதில் பழுத்த ஒரு பழம், நெகிழ்ந்து பிய்த்துக்கொண்டு கீழே விழுகிறது. விழுந்த பழத்தின் மணமிக்க சுளைகள் 
கனிந்து சாறாகி அந்த மாம்பழச்சாறு + தேன் கலந்த கலவையில் கலக்கிறது. இவ்வாறு பாறைக் குட்டையில் ஊறிக்கொண்டிருக்கும் 
அந்தத் தெளிந்த கலவையை ஒரு மயில் பார்க்கிறது. அதற்கு நல்ல தாகம். நீர் என்று நினைத்து அந்த ஊறலை உறிஞ்சி உறிஞ்சி 
முழுவதுமாகக் குடித்துவிடுகிறது. அப்புறம் என்ன! போதை மயக்கத்தில் தள்ளாடித் தள்ளாடி நடக்கிறதாம் – எப்படி? கழைக்கூத்தாடிச் 
சிறுமி கயிறு மீது காலை மாற்றி மாற்றி வைத்து சாய்ந்து சாய்ந்து நடப்பாளே அது போலவாம்! இந்த மாதிரி வயிறு முட்டக் குடிப்பதுவும் 
அயில்தல்தான்.

	பழு மிளகு உக்க பாறை நெடும் சுனை
	முழு முதல் கொக்கின் தீம் கனி உதிர்ந்தென
	புள் எறி பிரசமொடு ஈண்டி பலவின்
190	நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல்
	நீர் செத்து அயின்ற தோகை வியல் ஊர்
	சாறு கொள் ஆங்கண் விழவுக்களம் நந்தி
	அரி கூட்டு இன் இயம் கறங்க ஆடுமகள்
	கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல் – கபிலரின் குறிஞ்சிப்பாட்டு – 187 – 194

	இதன் பொருள்:-

	பழுத்த மிளகு சிந்திக்கிடக்கின்ற கற்பாறை(சூழ்ந்த) நீண்ட சுனையில்,
	பருத்த அடிமரத்தைக்கொண்ட மாமரத்தின் இனிய பழங்கள் உதிர்ந்தனவாக,
	(அது கேட்ட)வண்டுகள் (திடுக்கிட்டுப் பறக்க, அதனால்)சிதறிய தேன் கலந்த, பலாமரத்தின்
	(நன்கு பழுத்து)கட்டு விட்டு உதிர்ந்த நறிய பழத்தில் உண்டான தெளிந்த கள்ளை	190
	நீரென்று கருதிப் பருகிய மயில் – அகன்ற ஊர்களில்
	விழாக் கொள்ளுதற்குரிய அவ்விடங்களில் விழாக்களத்தில் மிகுதியாக
	அரித்தெழும் ஓசையைக் கூட்டி ஒலிக்கும் இனிய இசைக்கருவிகள் ஒலிக்க, (கழைக்கூத்து)ஆடுகின்ற பெண்
	கயிற்றில் நடக்கும் செயற்பாங்கைப் போல் – தளர்ந்த நடை நடக்கும் மலைச்சாரல்களில்

	ஆக மிகுந்த ஆவலுடன், பரபரப்பின்றி, நிதானமாக, வேண்டிய அளவு, ஒரு புதிய சூழ்நிலையில் ஒரு புதுமை உணவை 
உட்கொள்ளுதல்தான் அயிலுதல். 

8. ஆர்தல்

	மாடுகள் புல்லை மேய்வது அவற்றின் தினசரி உணவுக்காக. நீர்ப்பறவைகள் அங்குமிங்கும் பறந்துசென்று மீனைக் கவர்ந்து 
உண்ணுவதுவும் அவற்றின் அன்றாட உணவுத் தேவைக்காக. வண்டுகள் மலர்விட்டு மலர்தாவிப் பறந்து பறந்துசென்று தேனைச் சேகரிப்பதுவும் 
அவற்றின் அன்றாடத் தேவைக்காக. அப்போது அவற்றுக்குத் தேவையான உணவு கிடைத்தால் அவை வயிறார உண்ணுமல்லவா! 
அதுதான் ஆர்தல்.

	ஓய் நடை முது பகடு ஆரும் ஊரன் - நற் 290/3
	மான் இன பெரும் கிளை மேயல் ஆரும்
	கானக நாடன் வரவும் இவள் - ஐங் 217/2,3
	நாரை நிரை பெயர்த்து அயிரை ஆரும்
	ஊரோ நன்று-மன் மரந்தை - குறு 166/2,3
	வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர - அகம் 46/6

	எனவே ஆர்தல் என்பது வழக்கமான உணவை மன நிறைவு கொள்ள உட்கொள்ளுதல்.

9. கெண்டுதல்

	கெண்டுதல் என்பதற்குத் தோண்டுதல் அல்லது கல்லுதல் என்ற ஒரு பொருள் உண்டு. 

	கவலை கெண்டிய அகல் வாய் சிறு குழி - குறு 233/1

	என்கிறது குறுந்தொகைப் பாடல். கவலை என்பது ஒருவகைக் கிழங்கு. கரடிகள் ஈசல் புற்றுக்குள் கையைவிட்டு ஈசல்களைத் 
தோண்டியெடுக்குமாம். எதற்கு? உண்பதற்குத்தானே! எனவே, தோண்டியெடுத்து உண்ணுதலுக்கும் கெண்டுதல் என்ற பெயர் உண்டு. 

	கொடு விரல் உளியம் கெண்டும்
	வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே - அகம் 88/14,15

	தோண்டுதல் மட்டுமல்ல, கிண்டுதல், கிளறுதல், அறுத்துக்கூறாக்கல் போன்றவையும் கெண்டுதலின் வகைகளே. மழைபெய்து 
முடித்தபின்னர், ஈரமணலைத் தன் கூரிய நகங்கொண்ட கால்களால் கிளறித்தோண்டி, ஒரு மண்புழுவைப் பிடித்துவைத்துக்கொண்டு 
‘கொக் கொக்’-கென்று தன் பேடையை அழைக்குமாம் சேவல். 

	காமரு தகைய கான வாரணம்
	பெயல் நீர் போகிய வியல்நெடும் புறவில்
	புலரா ஈர்மணல் மலிரக் கெண்டி
	நாள் இரை கவர மாட்டித்
	தன் பெடை நோக்கிய பெருந்தகு நிலையே – நற்றிணை 21: 8 – 12

	வாரணம் என்பது கோழி. பகைப் புலத்தே படையெடுத்துச் சென்று ஆநிரைகளைக் கவர்ந்துகொண்டுவந்து, அந்த வெற்றியைக் 
கொண்டாட ஊர் மன்றத்தில் கொழுத்த விடையைக் கொன்று அறுத்துத் தின்பதை,

	கேளா மன்னர் கடிபுலம் புக்கு
	நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி
	இல் அடு கள்ளின் தோப்பி பருகி
	மல்லல் மன்றத்து மதவிடை கெண்டி
	மடிவாய்த் தண்ணுமை நடுவண் சிலைப்ப - பெரும்பாணாற்றுப்படை 140-144

	என்றவிடத்து, மதவிடை கெண்டி என்பதற்கு வலியையுடைய ஏற்றை அறுத்துத் தின்று என்று பொருள் கொள்கிறார் 
பெருமழைப்புலவர். 

	எனவே, தோண்டி உண்ணல், அறுத்து உண்ணல், கிளறி/கிண்டி உண்ணல் ஆகியவை கெண்டுதல் என்னப்படும்.

10. கைத்தல்

	சங்க இலக்கியங்களில் இரண்டே இடங்களில் இச் சொல் கையாளப்பட்டுள்ளது. இவ்விரண்டிடத்தும் அது யானைகளுக்குக் 
கவளம் ஊட்டிவிடுதலையே குறிக்கிறது.

	தேம்படு கவுள சிறுகண் யானை
	--------- --------------- --------------- ---------------- 
	கவை முள் கருவியின் வடமொழி பயிற்றிக்
	கல்லா இளைஞர் கவளம் கைப்ப - முல் 36

	காழோர், கடும் களிறு கவளம் கைப்ப - மது 658,659

	கையில் எடுத்து ஊட்டிவிடுவதால் இச் சொல் உருவாயிருக்கக்கூடும்.

11. நுகர்தல்

	மிகப் பரவலாக இன்றைக்கும் புழக்கத்திலிருக்கும் இச் சொல் பலவகைகளில் அன்றைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 
நுகர்தல் என்பது மகிழ்ச்சியோடு ஒன்றனைத் துய்த்தல். அது ஓர் அனுபவம். “நன்றாக அனுபவித்துச் சாப்பிட்டேன்” என்கிறோமே 
அது. (சாப்பிட்டு அனுபவிப்பது என்பது வேறு!!) நாம் ஒருபொருளை உட்கொள்ளும்போது, அதன் மணத்தால் நம் நாசி மகிழ்கிறது; 
அதன் தோற்றத்தால் கண் மகிழ்கிறது; அதைத் தொடும்போது மேனி மகிழ்கிறது; உண்பதற்கு முன்னரேயே நாக்கு மகிழ்ந்து உமிழ்நீர் 
சுரக்கிறது. “ஆகா, ஆகா” என்ற சொல் கேட்டு செவியும் மகிழ்கிறது. இவ்வாறு ஐம்புலன்களும் மகிழும்வண்ணம் நாம் ஒரு பொருளை 
உட்கொள்ளுவதே நுகர்தல் ஆகும். இவ்வாறு உட்கொள்ளும் பொருள் காதலி சமைத்த சுவையுண்டியாகவும் இருக்கலாம். சில வேளைகளில் 
காதலியாகவேயும் இருக்கலாம். 

	சோழன் நலங்கிள்ளி படையெடுத்துச் செல்லும்போது, போருக்குச் செல்கிறோமே என்ற பதட்டம் சிறிதும் இல்லாது, படைவீரர்கள் 
மகிழ்ச்சியுடன் செல்வார்களாம். முன்னணிப் படையினர் இளம் நுங்கையும் அதன் சாற்றையும் உறிஞ்சி ருசித்து உண்டவாறே செல்வார்களாம். 
நடுவிற் செல்வோர், பழுத்த பனம்பழத்தைக் கடித்துச் சுவைத்தவாறே செல்வார்களாம். கடைசி அணியினர், பனங்கிழங்கை நுகர்ந்துகொண்டே 
செல்வார்களாம் என்கிறார் ஆலத்தூர் கிழார்.

	தலையோர் நுங்கின் தீஞ்சேறு மிசைய
	இடையோர் பழத்தின் பைங்கனி மாந்த,
	கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடு கிழங்கு நுகர – புறநானூறு 225: 1-3
	
	சுட்ட அல்லது வேகவைத்த பனங்கிழங்கை எப்படி உண்ணவேண்டும் தெரியுமா? முதலில் பக்குவமாக அதன் மேல்தோலை 
நீக்கவேண்டும். பின்னர் அதன் வாயைப் பிளந்து நடுவிலுள்ள தண்டை நீக்கவேண்டும். அந்தத் தண்டின் தலைப்பகுதி இளங்குருத்தாக 
இனிமையாக இருக்கும். முடிந்தால் சப்பித் தின்னலாம். கொக்கு வாய் போன்று பிளந்த கிழங்கை இரண்டு மூன்றாக ஒடித்துப் பிசிறாக வெளிப்படும் 
நார்களை உரித்தெடுக்கவேண்டும். அப்போதே உங்களுக்கு நாவில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும். பின்னர் ஒடித்தெடுத்த மாப்போன்ற பகுதியைக் 
கடித்துக் கடித்துத் தின்னவேண்டும். இதனையே நுகர என்கிறார் புலவர்.

	இளவேனில் காலம் யாருக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும்? துணையுடையோருக்கு. அதுமட்டும் அல்ல. தம் துணையின் 
நெருக்கத்தைப் பெற்று மகிழ்வோருக்கே அது காமர் வேனில் என்கிறார் விற்றூற்று மூதெயின்னார்.

	காமர் வேனில் மன் இது
	மாண் நலம் நுகரும் துணையுடையோர்க்கே – அகநானூறு 37: 18,19

	தம் துணையின் நலத்தை நுகர்கிறார்களாம்! 

	கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
	ஒண்தொடி கண்ணே உள - குறள் 111:1

	என்று அந்த இன்ப நுகர்ச்சியை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறார் நம் ஐயன். 

	அருவியில் குளித்து மகிழ்வதுகூட ஒருவித நுகர்ச்சிதான் என்கிறது மலைபடுகடாம்.

	அருவி நுகரும் வான் அரமகளிர் - மலை 294

12. நுங்குதல்

	இந்த நுங்குதல் என்ற சொல்லும் மொங்குதல் என்ற பேச்சுவழக்கில் இன்றும் மக்களால் பயன்படுத்தப்படுகிறது. 
இதற்குச் சரியான பொருள் devour = eat immoderately, beyond reasonable limits, eat greedily என்று கொள்ளலாம். அப்படியே மொத்தமாக 
விழுங்குதல் என்றும் சொல்லலாம். 

	மாலையில் மலைக்குப் பின்னால் மறையும் சூரியன், தான் மறையும்போது, தனக்கு முன்னே இருக்கின்ற பகல்பொழுதை 
அப்படியே ஒரே விழுங்காக விழுங்கிவிடுகிறதாம். அதனால்தான் ஞாயிறு மறைந்த சில நொடிகளில் இருள் கவிந்துவிடுகிறது.

	அகன் ஞாலம் விளக்கும் தன் பல்கதிர் வாயாகப்
	பகல் நுங்கியது போல படுசுடர் கல் சேர - கலி 119/2

	என்கிறது கலித்தொகை. மாலைச் சூரியனின் விரிந்த கதிர்கள் மேலும், கீழும், முன்பக்கமும் திறந்த வாய்போல விரிந்து நீளும். 
சூரியன் மறைய மறைய அக் கதிர்கள் வாயை மூடிப் பகலை விழுங்கிவிடுகின்றனவாம். அதுதான் நுங்குதல். பொதுவாக வாய் நிறைய 
பொருளை வைத்து, மென்று, அதக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குவோம். அப்படியில்லாமல், வாய் நிறையப் பொருளை வாங்கி, 
ஒரே அமுக்காக அமுக்கி விழுங்குவதுதான் நுங்குதல். வாயில் நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, ஊற்றும்போதே குடித்துக்கொண்டும்தான் 
இருப்போம். அப்படியின்றி, வாய் கொள்ளும் அளவுக்கு நீரை வாங்கி, ஒரே மடக்காகக் குடித்தலும் நுங்குவதுதான். 
இவ்வாறு நூறு நூறு குடம் கள்ளைக் கும்பகருணன் நுங்கியதாகக் கம்பர் கூறுகிறார்.

	வானத்தில் பூத்தெழுந்த முழுநிலவு திடீரென்று கருத்து ஒளிமங்கிப்போய் விடுகிறது. இன்றைக்கு நமக்குத் தெரியும் 
அது நிலாமறைப்பு என்ற சந்திர கிரகணம். அன்றைக்கு அனைவருமே அச் சமயத்தில் நிலவை ஓர் அரவு விழுங்கிவிடுவதாக நினைத்தனர். 
வாய்பிளந்து வரும் அரவு, வட்ட நிலவை ஒரே வாயில் அடக்கி விழுங்குகிறதாம். அரவு நுங்கு மதி என்று இதனை நம் ஆன்றோர் 
பாடிச் சென்றுள்ளனர்.

	அரவு நுங்கு மதியின் ஐயென மறையும் - அகம் 114/5

	அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப - அகம் 313/7

13. மிசைதல்

	நுகர்தல் என்ற சொல்லின் கீழ்,

	தலையோர் நுங்கின் தீஞ்சேறு மிசைய

	என்ற தொடரைப் பார்த்தோம். முன்னணிப் படையினர் நுங்கின் இனிமையான சேற்றை உண்டுகொண்டே சென்றார்களாம். 
இந்த இடத்தில்தான் மிசைய என்ற சொல்லைக் கையாள்கிறார் புலவர். நுங்கு மிசைய என்று கூறவில்லை. நுங்கின் தீஞ்சேறு மிசைய என்கிறார். 
அது என்ன தீஞ்சேறு? 

	நுங்கு சாப்பிடுவது எப்படி என்று தெரியுமா? நல்ல இளங்காயை எடுத்து, கூரிய கத்தியால் அதன் தலையை மேலாகச் சீவிவிட 
வேண்டும். அப்போது மூன்று கண்கள் வெளிப்படும். அவற்றின் ஓரங்களைச் செதுக்கிவிடவேண்டும். பின்னர் கைப் பெருவிரலை அந்தக் கண்களில் 
ஒன்றில் ‘பொதக்’-கென்று புதைக்கவேண்டும். அப்படியே மெல்ல விரலைக் குழி விளிம்பிற்குள் சுற்றி வழிக்கவேண்டும். அப்போது காயையும் 
சிறிது சுழற்றிக்கொள்ளவேண்டும். உள்ளிருக்கும் இளம் சதைப்பகுதி உடைபட்டு, நுங்குத்தண்ணீருடன் கலக்கும். அதுதான் புலவர் கூறும் தீஞ்சேறு. 
அப்படியே தூக்கி உதட்டில் சாய்க்கவேண்டும். உள்ளிருக்கும் பெருவிரலால் அத் தீஞ்சேற்றை உதட்டுப்பக்கம் தள்ளவேண்டும். உதட்டைக் குவித்து 
தீஞ்சேற்றை உறிஞ்சி இழுக்கவேண்டும். உறிஞ்சி இழுத்ததைச் சுவைத்துச் சப்பி, உள்ளுக்குள் விழுங்கவேண்டும். இதுதான் மிசைதல் அல்லது 
இதைப் போன்றது. 

	இப்பொழுது வேறு சில மிசைதல்களைக் காண்போம்.

	காட்டுப்பக்கம் செல்லும் கூத்தர்கள், அங்கே வேடர்களால் அம்பெய்யப்பட்டுத் தப்பி ஓடிவந்த ஒரு காட்டுப்பன்றி செத்துக்கிடப்பதைக் 
காண்கிறார்கள். அவர்களுக்கோ நல்ல பசி. அங்கே முற்றிக் காய்ந்த மூங்கில்கள் ஒன்றோடொன்று மோதி நெருப்புத் தோன்றியிருக்கிறது. 
அந்தத் தீயில் பன்றியை மேலாக வாட்டுகிறார்கள். மேல் மயிரை வழித்துவிடுகிறார்கள். பின்னர் நன்றாக வேகவைக்கிறார்கள். 
அது கொழுத்த காட்டுப்பன்றி அல்லவா! கொழுப்பு வெந்து உருகி ஊனெல்லாம் பரவி சொதசொதவென்றிருக்கும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் 
பிய்த்துச் சூடாற்றி, வாய்க்குள் வைத்துச் சப்பிச்சப்பி மென்று சாப்பிட்டால் அது மிசைதல்தானே!

	கழுதில் சேணோன் ஏவொடு போகி
	இழுதின் அன்ன வால் நிணம் செருக்கி
245	நிறம் புண் கூர்ந்த நிலம் தின் மருப்பின்
	நெறி கெட கிடந்த இரும் பிணர் எருத்தின்
	இருள் துணிந்து அன்ன ஏனம் காணின்
	முளி கழை இழைந்த காடு படு தீயின்
	நளி புகை கமழாது இறாயினிர் மிசைந்து – மலைபடுகடாம் 243 – 249

	இதன் பொருள்:-

	காவற்பரண் மீது உயரத்தில் இருப்பவன் ஏவிவிட்ட அம்போடு ஓடிப்போய்,
	வெண்ணெய் போன்ற வெண்மையான கொழுப்பு (அம்பு தைத்த இடத்தில்)மிகுதியாய் வெளிவர,
	மார்பில் புண் ஏற்பட்டு, மண் தின்ற (மண்ணைத்தோண்டியதால் தேய்ந்துபோன)கொம்போடு, 245
	வழியை விட்டு விலகிக் கிடக்கின்ற, கரிய சொரசொரப்புள்ள கழுத்தினையுடைய,
	இருட்டை வெட்டிப்போட்டதைப் போன்ற காட்டுப்பன்றியைக் கண்டால்,
	காய்ந்துபோன மூங்கில்கள் (ஒன்றோடொன்று)உரசிக்கொண்டதால் காட்டில் உண்டான தீயில்
	அடர்ந்த புகை வீசாமல், வாட்டி மயிர்போக வழித்துவிட்டு (வெந்ததை)உண்டு,

	தீயில் வாட்டிய பன்றியைக் கூத்தர்கள் எவ்வாறு உட்கொண்டிருப்பார்கள் என்பதை மிசைந்து என்ற அந்த ஒரு சொல்லை 
வைத்துக் கற்பனைசெய்துகொள்ளலாம்.

	தலைவனோடு காட்டுவழியில் உடன்போக்குச் செல்கிறாள் தலைவி. காட்டு வழியில் பசியாற என்ன இருக்கும்? 
ஒரு நெல்லி மரம் இருக்கிறது. அதில் நிறையக் காய்கள் இருக்கின்றன. பசிக்கு எல்லாமே ருசிதானே! பல காய்களை அவன் பறித்துத் தருகிறான். 
இருவரும் ஒரு மரநிழலில் அமர்ந்து அந்தப் பச்சை நெல்லிக்காயை விருப்புடன் கடித்துக் கடித்துத் தின்கிறார்கள்.

	பைம் காய் நெல்லி பல உடன் மிசைந்து
	செம் கால் மராஅத்த வரி நிழல் இருந்தோர் - ஐங் 381/1,2

	இருப்பது காதலனுடன். தந்தது அவன் பறித்த நெல்லிக்காய். உவகையுடன் அவள் தின்கிறாள். அதிலொன்றை அவள் எடுத்து 
அவனிடம் நீட்ட, வாயில் அதை வாங்கிய காதலனும் மகிழ்ச்சிபொங்க உண்கிறான். இவ்வாறு அந்தப் பசிநேரத்தில் அவர்கள் இருவரும் 
பல காய்களை உண்டு மகிழ்கிறார்களாம். அவர்கள் உண்ணுகின்ற அழகையும் வருணிக்க மிசைந்து என்ற சொல்லைப்போடுகிறார் புலவர்.

	வள்ளல் ஒருவனிடம் பரிசில் பெற்றுமீளக் காட்டு வழியில் பசிதாகம் பொறுத்துக்கொண்டு ஒரு பாணர்கூட்டம் களைப்புடன் 
ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறது. அப்பொழுது அங்கு வருகிறான் ஒரு வேட்டைக்காரன். அவனைக் கண்டதும் எழுவதற்கு முயன்ற 
அவர்களைக் கையைக்காட்டி அமர்த்துகிறான். நெய்யிழுது போன்ற வெண்மையான கொழுப்பையுடைய இறைச்சியை, தானே தீயைக் 
கடைந்து பக்குவமாகச் சுடுகிறான். அனைவரும் உண்டு மகிழுங்கள் என்று எடுத்தெடுத்துக் கொடுக்கிறான். அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? 
அமிழ்தத்தையே பெற்று உண்பதுபோல அவர்கள் மிக்க ஆவலுடன் சுட்ட கறி தின்று சுடுபசி தீர்கிறார்களாம்.

	செல்வத் தோன்றல் ஓர் வல்வில் வேட்டுவன்
	தொழுதனென் எழுவேன் கைவித்து இரீஇ
	இழுதின் அன்ன வால் நிணக் கொழும் குறை
	தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டு நின்
	இரும்பேர் ஒக்கலொடு தின்ம் எனத் தருதலின்
	அமிழ்தின் மிசைந்து காய்பசி நீங்கி – புறநானூறு 150:7 – 14

	பசிக்குக் கிடைத்த ருசியான உணவை அவர்கள் எவ்வாறு ரசித்து உண்டிருப்பார்கள் என்பதை மிசைந்து என்ற 
ஒரு சொல்லால் கோடிகாட்டுகிறார் புலவர்.

14. மெல்லுதல்

	இன்றைக்கு நாம் மெல்லுதல் என்று சொல்வதைச் சங்க இலக்கியங்கள் மெல்குதல் என்று கூறுகின்றன. 
வாய்க்குள் ஒரு பொருளைப் பற்களுக்கிடையே வைத்துக் கடித்து அரைப்பதையே மெல்லுதல் என்கிறோம். பொதுவாக மனிதர்கள் 
ஒரு பொருளைக் கடித்து மென்று விழுங்கிவிடுவோம். ஆனால் பெருவாரியான விலங்குகள் கடித்த பொருளை மென்றுகொண்டே இருக்கும். 
அதனையே மெல்குதல் என்கின்றன சங்க இலக்கியங்கள். அவசரம் அவசரமாக மேய்ந்துவிட்டு, பின்னர் ஓரிடத்தில் படுத்துக்கொண்டு 
ஆற அமர வயிற்றுக்குள் அரைகுறையாக அரைத்து அனுப்பியதைக் கவளம் கவளமாக மீண்டும் வாய்க்குள் கொண்டுவந்து நன்றாக மென்று 
மீண்டும் விழுங்குவதையே அசைபோடுதல் என்கிறோம். 

	ஒரு காட்டுமான் தன் அன்புக் காதலியை எவ்வாறு கவனித்துக்கொள்கிறது என்று பாருங்கள்.

	இருதிரி மருப்பின் அண்ணல் இரலை
	செறியிலைப் பதவின் செங்கோல் மென்குரல்
	மறியாடு மருங்கின் மடப்பிணை அருத்தி
	தெள்ளறல் தழீஇய வார்மணல் அடைகரை
	மெல்கிடு கவுள துஞ்சுபுறம் காக்கும் – அகநானூறு 34:4-8

	பதவு என்பது அருகம்புல். இது கிடைப்பது அரிது. அப்படிக் கிடைத்த அருகம்புல்லைத் தன் இளம் மனைவியை மேயவிட்டு, 
குளிர்ந்த நீர்சூழ்ந்த கரையருகே தூங்கவைத்துக் காவல் காக்கிறதாம் ஆண்மான். அப்படிக் காக்கும்போது, தான் மேய்ந்ததை மீண்டும் வாய்க்குள் 
கொண்டுவந்து கன்னத்தில் ஒதுக்கி அசைப்போட்டுக்கொண்டிருக்கிறதாம். கவுள் என்பது உள்வாய்க் கன்னம்.