பிற கட்டுரைகள் - 24. சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள் - கட்டுரைத்தொகுப்பு

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

   பிறகட்டுரைகள் ( 1 - 22)    23.என்னே தமிழின் இளமை - கட்டுரைத் தொகுப்பு

   1. சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள் - 1
   2. சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள் - 2
   3. சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள் - 3

   4. சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள் - 4
   5. சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள் - 5
   6. சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள் - 6

 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.

 
சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள்
 4 - வன் பறை, கடும் பறை


கூட்டமாகவும், ஒன்றிரண்டாகவும், தனியாகவும் பறவைகள் பறப்பது ஓர் இனிய காட்சி. ஒவ்வொரு நேரத்திலும் அவை 
ஒவ்வொருவிதமாகப் பறக்கின்றன. அதை உற்று நோக்கி, அதற்கேற்ற சொற்களைப் பயன்படுத்துவதில் சங்கப் புலவர்கள் 
வல்லவர்கள் பறவைகள் பறப்பதைப் பறை என்றார்கள் அவர்கள். இந்தப் ‘பறை’களின் வகைகளைப் பற்றி அவர்கள் 
கூறியிருப்பதையே இந்தக் கட்டுரைத் தொடரில் ஆய்ந்துவருகிறோம். 1.நிரைபறை, 2.மென்பறை ஆகியவற்றை முதற் 
கட்டுரையிலும், 3.வா(வு)ப்பறை, 4.துனைபறை ஆகியவற்றை இரண்டாம் கட்டுரையிலும் 5.குறும்பறை, 6.நோன்பறை 
ஆகியவற்றை மூன்றாம் கட்டுரையிலும் கண்டோம். 

இங்கு இன்னும் சில வேறு வகைப் ‘பறை’களைப் பற்றிக் காண்போம்.

7. வன்பறை

வல் பறை வன்பறை ஆனது. வல் என்பதற்கு வலிமை என்ற பொருள் இருந்தாலும், விரைவான, மிகுந்த கடுமையான 
என்ற பொருளும் உண்டு. விரைவாக அம்பு எய்யும் ஓரி என்னும் மன்னன் / வள்ளல் வல் வில் ஓரி என்று 
அழைக்கப்பட்டான். கடுமையுடன் சேர்ந்த விரைவு கொண்ட ஒரு பறத்தல் எப்படி இருக்கும்?

பொருள் ஈட்டுவதற்காகத் தலைவியை விட்டுப் பிரிந்த தலைவன் ஒருவன், தான் செல்லும் ஒரு வறண்ட பாலை நில 
வழியில், ஒரு யா மரத்தைப் பார்க்கிறான். அதன் உச்சியில் ஒரு கிளையில் அமர்ந்திருக்கும் பருந்து தன் சீழ்க்கையிடும் 
குரலில், தன் பெடையை அழைப்பதைக் கேட்கிறான். அப்போது அவனுக்குத் தன் தலைவியின் நினைவு மிக, அவன் 
பிரிவுத்துயரத்தால் ஏங்குவதை ஓர் அழகிய பாடலால் புலவர் மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் கூறுவதைப் 
பாருங்கள்.

கவை முறி இழந்த செந்நிலை யாஅத்து
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த வன் பறை
வீளைப் பருந்தின் கோள் வல் சேவல்
வளை வாய்ப் பேடை வரு திறம் பயிரும் – அகம் 33:3 – 6

இதன் பொருள்:

கிளைகளில் தளிர்களை இழந்த செங்குத்தான நிலையினை உடைய யா மரத்தில், 
ஒன்றாக மிக உயர்ந்துள்ள ஒரு கிளையில் இருந்த விரைந்த பறத்தலை உடைய 
சிள்ளென்று ஒலிக்கும் பருந்தின், தன் இரையைக் கொள்ள வல்ல ஆண்பறவை, 
வளைந்த வாயினை உடைய தனது பேடையைத் தன்னிடன் வரும்படி அழைக்கும்.
 
இங்கு, உயரமான ஒரு மரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் ஆண்பருந்தையே புலவர் காட்டினாலும், அதனை வன்பறைச் 
சேவல் என்கிறார். 

பருந்து (common Kite) என்பது இன்றைக்கு நகர்ப்புறங்களில் சிட்டுக்குருவிகளைப் போல் ஏறக்குறைய 
காணாமற்போய்விட்ட ஒரு பறவையாகும். சிற்றூர்களில் இது மிக அதிகமான உயரத்தில் வட்டமிட்டவாறே மெதுவாகப் 
பறந்துகொண்டு திரிவதைக் காணலாம். தன் சிறகுகளைக்கூட, எப்போதாவது சிலமுறை அசைத்துக்கொண்டு, விரிந்த 
இறக்கைகளுடன் ஏறக்குறைய ஒரு Glider விமானம் போன்று மெதுவாக வட்டமிட்டுக்கொண்டே இருக்கும். ஊருக்கு 
வெளிப்பக்கம் உள்ள திறந்தவெளிகளில் வளைகளை விட்டு வெளியே ஓடும் சிறு எலிகளையோ, ஊருக்குள் தெருக்களில் 
தம் தாய்க் கோழியுடன் குப்பைகளில் மேய்ந்துகொண்டிருக்கும் குஞ்சுகளையோ கண்டால், மிகுந்த வேகத்துடன் 
வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல், படு வேகமாகப் பாய்ந்து, கீழிறங்கித் தனது இரையைத் தன் கால்களினால் 
கவ்விக்கொண்டு மீண்டும் உயரே செல்லும் வன்மை படைத்தது பருந்து. இதனையே புலவர் கோள் வல் சேவல் என்றும், 
இது அவ்வாறு பறக்கும் திறன் உடையது என்பதைக் குறிக்க வன்பறைப் பருந்து என்றும் கூறுகிறார். இது, நாம் முன்பு 
கண்ட துனை பறை ஆகாது. துனை பறை என்பது இறக்கைகளை வேகமாக அடித்தவண்ணம் விரைந்து பறப்பது. 
வன்பறை என்பது அம்புபோல் விரைவாகப் பாய்வது. 

		

8. கடும்பறை 

கடு அல்லது கடும் என்பதற்குப் பல பொருள் உண்டு. கடும் பசி, கடும் கோபம், கடும் வேகம் ஆகிய சொற்களில் வரும் 
கடும் என்ற சொல் மிக்க என்ற பொருளைத் தரும். 

கடும் பரிப் புரவிக் கைவண் பாரி - அகம் 78/22

என்பதற்கு ‘மிக்க விரைவினையுடைய குதிரையையும் கைவண்மையையுமுடைய பாரியின்’ என்று உரை சொல்கிறது. 

துனைபரி துரக்கும் துஞ்சாச் செலவின் – அகம் 9/16

என்பதற்கு விரைந்து செல்லும் குதிரைகளை வலியாற் செலுத்தி மேலும் மேலும் முடுக்கின்ற என்று உரை சொல்லுகின்றது.
வேகமாகப் படிக்கும்போது இவற்றுக்கிடையே வேறுபாடு தெரியாது. துனை என்பது விரைவு; கடும் என்பது மிக்க விரைவு. 
கடும் பரிக் குதிரைகள் இன்னும் வேகமாகப் போக முடியாது. ஆனால் துனை பரிக் குதிரைகளை இன்னும் வேகமாகச் 
செலுத்த முடியும். எனவேதான் துனை பரி துரக்கும் என்று புலவர் கூறியுள்ளார். துரக்கும் என்பதற்கு மேலும் 
முடுக்கிவிடும் என்று பொருள். எனவே, நாம் முன்பு பார்த்த துனை பறை என்பது வேகமாகப் பறத்தலைக் குறிக்கும். 
இப்போது காண்பது மிக வேகமான பறத்தல். Express இரயிலுக்கும் Super fast இரயிலுக்கும் உள்ள வேறுபாடு இது. அப்படி
மிக வேகமான பறத்தல் எப்படி இருக்கும்? தும்பி எனப்படும்.

தேனீக்கள் அவ்வாறு பறக்குமாம். எப்படி என்று பார்ப்போம்.

தெய்வங்கள் விரும்பும் மலர்களைத் தும்பிகள் மூசுதல் இல்லை; அவ்வாறு செய்தால் அவை தம் சிறகுகளை இழக்கும் 
என்பது சங்க கால நம்பிக்கை. அப்படி ஒரு தும்பியைப் பதிற்றுப்பத்து காட்டுகிறது.

மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய
கடும் பறைத் தும்பி சூர் நசைத் தாஅய்ப்
பறை கண்ணழியும் பாடு சால் நெடுவரை – பதிற்றுப்பத்து 67 : 19 – 21

இதன் பொருள்.:

பூத்திருக்கும் காந்தள் பூவை நீங்காது படிந்து, தாது உண்ட
விரைந்து பறத்தலை உடைய தும்பி, (அப் பூ)தெய்வத்தால் விரும்பப்படுவதாதலால்
தன் பறக்கும் திறமையை இழக்கும் பெருமை கொண்ட நெடிய மலை

தாதுண்ணும் தும்பி எவ்வாறு விரைந்து பறக்கும்? ஒருவேளை, விரைந்து பறக்கும் இயல்பை உடைய தும்பி தாதுண்ண 
வருகிறது என்ற பொருள் கொள்ளலாம். அதற்குத் துனை பறைத் தும்பி என்றலே பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

கடும் பறை என்பதற்கு வலிமையான சிறகுகள் என்ற பொருள் கொண்டு, தனது சிறகுகள் வலைமையானவை என்ற 
செருக்குக் கொண்டு, தும்பி தெய்வம் விரும்பும் பூவை ஊதியது;  எனவே தன் பறக்கும் திறனை இழந்தது என்று 
வேறோர் உரையும் கூறுகிறது. ஆனால், இது நமது எண்ணத்தைத் தும்பியின் மீது ஏற்றிச் சொல்வது போல் 
இருக்கிறதல்லவா?

ஊது என்பதற்குத் (வண்டு)தேன் குடி என்ற பொருள் உண்டெனினும், ஒலியெழுப்பு (hum) என்ற பொருளும் உண்டு. 
கீழ்க்கண்ட அடிகளைக் கவனியுங்கள்.
 
ஊது வண்டு இமிரும் கோதை மார்பின் - நற் 187/8 
வரி வண்டு ஊதலின் புலி செத்து வெரீஇ - நற் 249/6
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே - குறு 260/2 
வண்டு தாது ஊத தேரை தெவிட்ட - ஐங் 494/1 
சுரும்பு ஆர்க்கும் குரலினோடு இரும் தும்பி இயைபு ஊத - கலி 123/2
வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப இரும் தும்பி இயைபு ஊத - கலி 127/3
சுரும்பு இமிர்பு ஊத பிடவு தளை அவிழ - அகம் 304/11

மற்ற ஒலிகளோடு தும்பிகளும் இயைந்து ஊத - வண்டு ஊதுவதால், அதன் ஒலி புலியின் உறுமல் என்றெண்ணி அஞ்ச – 
என்று பொருள்தரும் அடிகளில் ஊது என்பது ஒலி எழுப்பு என்ற பொருள்தானே தருகிறது. அடுத்து, தும்பிகள் ஊதுவதால் 
மலர்கள் மலர்கின்றனவாம். எப்படி? மலர்ந்த பூக்களில்தான் தும்பிகள் தேன் உண்ணும். எனவே, இங்கு ஊதுதல் தேன் 
குடித்தல் ஆகாது – ஒலி எழுப்புதலே. தும்பிகள் எவ்வாறு ஒலி எழுப்பும்? பெரும்பாலான பறவைகள் தம் 
தொண்டையினின்றும் குரல் எழுப்பி, அலகின் மூலமாய் வெளிவிடும். தும்பிகளின் இறக்கைகள் வேகமாய் 
அசைக்கப்படும்போது அவை எழுப்பும் ஒலியையே தும்பிகளின் ‘ரீங்காரம்’ என்கிறோம். இவ்வாறு இறக்கைகள் 
வேகமாய் அசைக்கப்படும்போது, அவற்றினின்றும் காற்று வேகமாக வெளிக்கிளம்புகிறது. இதனால் மலரும் தறுவாயில் 
இருக்கும் போதுகள் மலர்ந்துவிடும் என்பதையே, ‘சுரும்பு இமிர்பு ஊத பிடவு தளை அவிழ’ என்கிறார் புலவர். 

இதை நன்கு புரிந்துகொள்ள தும்பிகளின் இறக்கைகளின் அமைப்பைத் தெரிந்திருக்கவேண்டும்.

ஏனைய பறவைகளைப் போலன்றி, வண்டினங்களுக்கு நான்கு இறக்கைகள் உண்டு – வலப்பக்கம் மேல் கீழாய் இரண்டும் 
அவ்வாறே இடப்பக்கமும் – கொஞ்சம் பெரியதும் சிறியதுமாய் (Bees all have two pairs of wings, the hind pair being 
the smaller of the two). இவை நொடிக்குப் பத்து முதல் பதினைந்து அடி தூரம் பறக்கும் (They can fly ten to fifteen feet
per second). இதுதான் துனை பறை. ஆனால் அவை தம் சிறகுகளை நொடிக்கு 230 தடவை அடிக்கின்றன (honeybee flaps 
its wings 230 times every second). இத்துணை விரைவாகச் சிறகுகள் அசைவதால்தான் அவற்றினின்றும் (ரீங்காரம்)
ஒலியும் எழுகிறது – காற்றும் உருவாகிறது. இதுவே கடும் பறை.

		

மேலும், ‘மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய’ என்ற தொடரில் உள்ள 'மாறாது' என்ற 
சொல்லில்தான் புலவர் பொடிவைத்திருக்கிறார். தும்பி, மலரின் மீது அசையாமல் (மாறாது) அமர்ந்திருக்கும்போது, தம் 
சிறகுகளை எவ்வளவு வேகமாக அசைத்துக்கொண்டிருக்கிறது என்பதை இரண்டாம் படம் தெளிவாகக் காட்டுவதைப் 
பார்க்கலாம். இதுவேதான் கடும்பறை என்றும் உணரலாம்.