பிற கட்டுரைகள் - 24. சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள் - கட்டுரைத்தொகுப்பு

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

   பிறகட்டுரைகள் ( 1 - 22)    23.என்னே தமிழின் இளமை - கட்டுரைத் தொகுப்பு

   1. சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள் - 1
   2. சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள் - 2
   3. சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள் - 3

   4. சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள் - 4
   5. சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள் - 5
   6. சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள் - 6

 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.

 
சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள்
 5 - நொ பறை, நிவக்கும் பறை


பறை என்பதைக் கொட்டு, முரசம் ஆகிய தோல் இசைக்கருவிகள் என்ற பொருளில்தான் புரிந்துகொண்டிருக்கிறோம். பற 
என்ற சொல்லின் அடியாகப் பிறந்த ‘பறை’, பறத்தலைக் குறிக்கும். அது பறப்பதற்கு உதவும் சிறகுகளையும், பறக்கும் 
பறவைகளையும் குறிக்கும். ஆனால் பறத்தல் என்ற பொருளில் கையாளும்போதுதான், சங்கப் புலவர்கள் எத்துணை 
கைதேர்ந்தவர்கள் எனத் தெரிய வருகிறது. பறவைகள் பறந்தன என்று சொல்லிவிட்டுப் போகாமல், அவை பறக்கின்ற 
தன்மைகளை நுணுக்கமாகக் கவனித்து, அவற்றை அழகிய சொற்களால் குறிக்கும் சங்கப் புலவர்களின் சொல்திறம் நம்மை 
வியக்கவைக்கிறது. இந்தப் ‘பறை’களின் வகைகளைப் பற்றி அவர்கள் கூறியிருப்பதையே இந்தக் கட்டுரைத் தொடரில் 
ஆய்ந்துவருகிறோம். 1.நிரைபறை, 2.மென்பறை ஆகியவற்றை முதற் கட்டுரையிலும், 3.வா(வு)ப்பறை, 4.துனைபறை, 
5.குறும்பறை, 6.நோன்பறை, 7.வன்பறை, 8.கடும்பறை  ஆகியவற்றை அடுத்தடுத்த கட்டுரைகளிலும் கண்டோம். இங்கு 
இன்னும் சில வேறு வகைப் ‘பறை’களைப் பற்றிக் காண்போம்.

9.  நொ பறை

உங்களுக்கு ஏகப்பட்ட பசி. வெளியில் சென்றுதான் சாப்பிடவேண்டிய நிலை. உங்கள் கால்கள் வலுவானவை. எனவே 
நடையாகவே கிளம்பிவிட்டீர்கள். உணவு கிடைக்கக்கூடிய ஒவ்வொரு இடமாகச் சென்று பார்க்கிறீர்கள். எல்லாக் கடைகளும் 
மூடி இருக்கின்றன, அல்லது அவற்றில் உணவு ஒன்றும் இல்லை. அடுத்த கடை – அடுத்த கடை – என்று ஒவ்வொன்றாய்ப்
போய்ப் பார்த்தும், ஒன்றிலும் உணவில்லை. உற்சாகமாய்க் கிளம்பும்போது இருந்த உங்கள் நடை இப்போது எப்படி இருக்கும்.
நொந்த நடை – வாட்டமுள்ள நடை – வருத்தமான நடை – மெலிந்த நடை – தளர்ந்த நடை – களைத்த நடை - இவை 
எல்லாமே உங்கள் நடைக்குப் பொருந்தும்தானே! 

பகல் எல்லாம் மரத்தில் தொங்கிக்கொண்டு இருந்துவிட்டு, மாலை வந்தவுடன், பழுத்த மரங்களை நோக்கிப் பறந்து சென்ற 
வௌவால் ஒன்று, ஒன்றும் கிடைக்காமல் தேடித்தேடி – களைப்புற்று – வருத்தமுற்று – நொந்துபோய் – பறக்குமே 
அதுதான் நொ பறை.

பகல் எல்லாம் வீட்டு வேலைகளில் ஆழ்ந்துவிட்டு, மாலை வந்தவுடன், தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற தலைவனை 
எண்ணி ஏங்குகிறாள் தலைவி. அவள் மனம் பழுத்த மரமான தலைவனை நோக்கிப் பறந்து செல்கிறது. அவள் மனம் 
என்ன செல் பேசியா (cell phone)? Tower – Tower ஆகத் தொட்டுத் தொட்டுச் சென்று தலைவனை அடைய! 
பறந்து பறந்து வாடிப்போன நொ பறை வாவலைப் போல, எண்ணி எண்ணி மெலிந்துபோன அவள் மனம் நொந்துபோகிறது.
இதை வெளிப்படையாக இல்லாமல், உள்ளுறை உவமமாகக் குறிப்பிடும் புலவரின் நுண்ணிய திறன்தான் என்னே!

இத்தனையும் தெரிந்திருந்தால்தான் நொ பறையும் புரியும், அதைச் சொல்லும் அகப்பாடலும் நன்கு புரியும். இந்தப் 
பாடலைப் படியுங்கள்.

தாஅ அம் சிறை நொ பறை வாவல் 
பழுமரம் படரும் பையுள் மாலை 
எமியம் ஆக ஈங்குத் துறந்தோர் 
தமியர் ஆக இனியர் கொல்லோ 
ஏழூர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த 
உலைவாங்கு மிதிதோல் போலத் 
தலைவரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே – குறுந்தொகை 172

இதன் பொருள்:

வலிமையுடைய அழகிய சிறகையும், மென்மையாகப் பறத்தலையும் உடைய, வௌவால்கள்,  
பழுத்த மரங்களை நினைத்துச் செல்லும், துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில், 
நான் தனித்தவளாய் இருக்க, ஈங்கு (எம்மை வைத்துப்) பிரிந்த தலைவர்,
தாம் தனித்தவராய் இருக்கவும்,  இனியவர் ஆவாரோ? 
ஏழு ஊரிலுள்ளார்க்குப் பொதுவாகிய தொழிலின் பொருட்டு,ஓர் ஊரின்கண் அமைத்த,
உலையில் சேர்த்த துருத்தியைப் போல, எல்லையை அறியாமல், வருந்தும் என் நெஞ்சம். 

நொ பறை என்பதை மென்மையான பறத்தல் என்று உரைகள் கூறினாலும், அந்த மென்மை என்பது மெலிவு, வாட்டம், 
வருத்தம், களைப்பு போன்ற எல்லாவற்றையும் உள்ளடக்கியது என்பதை முழுப்பாடலையும் படித்த பின்னரே புரியும்.

		

10.  நிவக்கும் பறை

இது பறவைகளின் மேலெழும் பறத்தல். பெரும்பாலான நீர்ப்பறவைகள் பறந்து மேலே எழ நினைக்கும்போது, சிறிது தூரம் 
தரையிலோ, நீர்ப்பரப்பிலோ, வேகமாக ஒடி, பின்னர் மெதுவாக மேலே எழும். தரையில் வாழும் பறவைகள் சிலவும் 
அவ்வாறே மேலெழும். ஆனால், குருவி போன்ற குறுஞ்சிறகுப் பறவைகள், தாம் இருந்த இடத்திலிருந்தே, கால்களைக் 
கீழே அழுத்தி, இறக்கைகளை விரித்து அடித்து மேலே எழக் கூடியவை. இதையே பறை நிவத்தல் என்கிறோம். 
பெருஞ்சிறகுப் பறவைகளில், பருந்து, கழுகு போன்றவையும் ஓடி எழமாட்டா. அவையும் நின்ற இடத்திலிருந்தே உயர 
எழும் ஆற்றல் படைத்தவை.

பருந்துகள் பொதுவாக உயரமான மர உச்சிகளிலோ, உயர்ந்த கட்டடங்களின் துருத்துமுனைப் பகுதிகளிலோ ஓய்வெடுக்கும்
பின்னர் பறக்க நினைக்கும்போது, நின்ற இடத்திலிருந்து ஒரு குதி குதிக்கும். அப்போது இறக்கைகள் விரித்தவண்ணம் 
இருப்பதால், அவை கீழே விழமாட்டா. மாறாக, இறக்கைகளை வலுவாக அடித்து மேலே எழும். இதையெல்லாம் உற்றுப் 
பார்த்த சங்கப் புலவர் கூறுவதைப் பாருங்கள்.

………………   ………………. கதநாய் வடுகர்
வில் சினம் தணிந்த வெருவரு கவலைக்
குருதி ஆடிய புலவு நாறு இரும் சிறை
எருவைச் சேவல் ஈண்டு கிளைத் தொழுதி
பச்சூன் கொள்ளை சாற்றிப் பறை நிவந்து
செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும் – அகம் 381 : 7 – 12

இதன் பொருள்:

சினம் பொருந்திய நாயினையுடைய வடுகர், 
தமது வில் வேட்டையின் வெகுளி நீங்கிய அச்சம் வரும் கவர்த்த நெறிகளில்,
குருதி படிந்த புலால் நாறும் பெரிய சிறகினையுடைய
ஆண் பருந்தினது, கிளையுடன் கூடிய கூட்டம்,
பசிய ஊனின் மிகுதியைத் தெரிவித்துப் பறந்தெழுந்து,
செவ்வானம் போல விசும்பினை அழகு செய்யும், 

பாலை நிலத்தில் பாதைகள் பலவாறாக கிளைத்துப் பிரியும். அவற்றில் வரும் வழிப்போக்கர்களை, வடுகர்கள் வில்லால் 
வீழ்த்துகிறார்கள். இவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டே ஆங்காங்கே மர உச்சிகளில் பருந்துக் கூட்டங்கள் 
காத்துக் கிடக்கின்றன. யாரோ ஒருவர் இறந்து வீழ்வதைப் பார்த்த இந்தப் பருந்துகள் மேலே நிவந்து எழுகின்றன. உயரே 
எழுந்த பறவைகள் அந்த இடத்தை வட்டமிட்டவாறே பறந்துகொண்டிருக்கும். அப்படி எழும்போது அவை ஒருமித்த குரலில் 
உரத்துக் குரலெழுப்பும். இந்தக் காட்சியைத்தான் புலவர் இங்கு வருணிக்கிறார்.

		

பறவைகள் சாய்வாக மேலெழுவதை உகத்தல் என்பர். பொதுவாக நீர்ப்பறவைகள் இவ்வாறு எழும். சில வேளைகளில் 
போகும் இடத்தைப் பொருத்து பருந்துகளும் சாய்வாகப் பறந்து எழலாம். இதனையே,

பருந்து இருந்து உகக்கும் பல்மாண் நல் இல் – மதுரைக்காஞ்சி 502 கூறுகிறது. 

அப்படி இன்றி, நின்ற இடத்திலிருந்து பறவைகள் மேலெழுவது நிவத்தல். உகத்தல், நிவத்தல் ஆகிய இரண்டிற்கும் 
அகராதிகள் உயர்தல் என்ற ஒரே பொருளைத்தான் தருகின்றன. ஆனால் அவற்றுக்கிடையே இருக்கும் நுணுக்கமான 
வேறுபாட்டைப் பறவைகளின் இந்தப் பறத்தல் நமக்கு வெளிப்படுத்துகிறது.

		

இரை மேய்ந்து திரும்பும் ஓர் அன்னப் பறவைக் கூட்டம் பறந்துபோய்க் கொண்டிருக்கிறது. திடீரென்று, வானம் 
இருட்டுகின்றது. மேகங்கள் கூடுகின்றன. மின்னல் வெட்டுகிறது. மழையும் தூர ஆரம்பிக்கிறது. உள்ளூர்ப் பறவைகள் 
கீழிறங்கி எங்காவது ஒளிந்துகொள்ள நினைக்கும். இந்த அன்னப் பறவைகள் இன்னும் நெடுந்தொலைவு செல்லவேண்டுமே.
தூரலால் இறகுகள் நனைந்ததினால், அவைகளால் பறக்க முடியவில்லை. எனவே பறந்த வண்ணம் அவை இறக்கைகளை
வேகமாக அடித்து நீர்த்துளிகளை  உதிர்க்கின்றன. அதனால், இறக்கைகள் வேகமாக அடிக்க, பறந்துகொண்டிருக்கும் 
பறவைகள் இன்னும் உயரே எழும்புகின்றன. 

மின்னுச்செய் கருவிய பெயல் மழை தூங்க
விசும்பு ஆடும் அன்னம் பறை நிவந்தாங்கு – குறுந்தொகை 205: 1-2

என்ற குறுந்தொகை அடிகளும் இதனையே கூறுகின்றன. அன்னங்கள் நீர்ப்பறவைகள். எனவே அவை மேலே எழும்போது 
ஓடிப் பின்னர் சாய்வாகவே எழும். ஆனால், இந்தப் பறவைகள் ஏற்கனவே வானத்தில் பறந்துகொண்டிருப்பவை ஆயிற்றே. 
எனவே, அவை சடுதியில் இறக்கைகளை வேகமாக அடித்து நிவந்து மேலே எழுகின்றன. விசும்பு ஆடும் அன்னம் என்று 
புலவர் எத்துணை கவனத்துடன் சொற்களைக் கையாள்கிறார் பாருங்கள்.!