பத்துப்பாட்டு - சிறப்புக் காட்சிகள்


   1.திருமுருகாற்றுப்படை - அருவிக் காட்சி
   2.பொருநராற்றுப்படை - யாழ்க் காட்சி
   3.சிறுபாணாற்றுப்படை - திங்கள்மறைப்புக் காட்சி
   4.பெரும்பாணாற்றுப்படை - காடைப்பறவைக் காட்சி
   5.முல்லைப் பாட்டு - பாசறைக் காட்சி


   6.மதுரைக் காஞ்சி - மின்னல் காட்சி
   7.நெடுநல்வாடை - யவனர்க் காட்சி
   8.குறிஞ்சிப்பாட்டு - மலர்க் காட்சி
   9.பட்டினப்பாலை - வெண்மீன் காட்சி
   10.மலைபடுகடாம் - இசைக்கருவிகள் காட்சி
 
பத்துப்பாட்டு - பத்துக் கட்டுரைகள்
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
                                              1.திருமுருகாற்றுப்படை - அருவிக் காட்சி

							இழும் என இழிதரும் அருவி

	முருகன்பாற் சென்று, அவரிடம் அருள் பெற்ற ஒருவர், அப்பெருமானின் சிறப்புகளை எடுத்தோதி மற்றவரையும் அவரிடம் ஆற்றுப்படுத்துவதே 
இந்நூல். இதனை இயற்றிவர் நக்கீரர். இவர் சங்க கால நக்கீரர் அல்ல என்றும், இந்நூல் காலத்தால் மிகவும் பிற்பட்டது என்றும் சில ஆய்வாளர்கள் 
கூறுவர். இது சைவ இலக்கியமான பன்னிரு திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் தொகுக்கப்பட்ட பிரபந்தங்களுள் ஒன்றாகும்.

	இந்நூல் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் என்ற திருச்செந்தூர், திரு ஆவினன் குடி என்ற பழனி, திருவேரகம், பழமுதிர்சோலை ஆகிய 
இடங்களின் சிறப்புகளைப் பற்றி விரிவாக எடுத்தோதுகிறது. நூல் முழுதும் முருகப்பெருமானின் சிறப்பியல்புகள் விதந்தோதப்படுகின்றன. திருவேரகம் 
என்பது கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலை என்ற ஊர் என்பர். ஆனால் இது துளுநாட்டைச் சேர்ந்த குமாரமலை என்ற மலையில் இருக்கும் 
குமார சேத்திரம் என்ற ஊர் என்றும், அக்கோயில் இப்போது குக்கெ சுப்பிரமணியர் கோவில் என்று அழைக்கப்படுகிறது என்றும் ஆய்வாளர் 
கூறுகின்றனர்.

	பாடலின் இறுதியில், பழமுதிர்சோலை என்னுமிடத்தில் உள்ள ஓர் ஆறு பெருக்கெடுத்து அருவியாக வந்துவிழும் அழகிய காட்சி 21 
அடிகளில் மிகச் சிறப்பாக வருணிக்கப்பட்டுள்ளது. முதலில் பாடல் வரிகளைப் பார்ப்போம்.

	ஓர் அருவியைப் பார்க்கும்போது உங்களுக்கு என்னவெல்லாம் தோன்றும்? அது எங்கிருந்து வருகிறது, என்னவெல்லாம் சுமந்துகொண்டு 
வரும், இனியும் என்ன என்ன செய்யப்போகிறதோ என்றெல்லாம் தோன்றலாம். பழமுதிர்சோலையில் விழும் அருவியைப் பார்த்த நக்கீரனாருக்கு 
என்னவெல்லாம் தோன்றியது எனப் பாருங்கள்.

	பல உடன்
	வேறு பல் துகிலின் நுடங்கி, அகில் சுமந்து
	ஆர முழு முதல் உருட்டி, வேரல் 
	பூ உடை அலங்கு சினை புலம்ப, வேர் கீண்டு
	விண் பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த	
	தண் கமழ் அலர் இறால் சிதைய, நன் பல
	ஆசினி முது சுளை கலாவ, மீமிசை
	நாக நறு மலர் உதிர, யூகமொடு
	மா முக முசுக் கலை பனிப்ப, பூ நுதல்
	இரும் பிடி குளிர்ப்ப வீசி, பெரும் களிற்று
	முத்து உடை வான் கோடு தழீஇ, தத்துற்று,
	நல் பொன் மணி நிறம் கிளர, பொன் கொழியா,
	வாழை முழு முதல் துமிய, தாழை
	இளநீர் விழுக் குலை உதிரத் தாக்கி,
	கறிக் கொடி கரும் துணர் சாய, பொறிப் புற
	மட நடை மஞ்ஞை பல உடன் வெரீஇ,
	கோழி வயப் பெடை இரிய, கேழலொடு
	இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன
	குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம்	
	பெரும் கல் விடர் அளை செறிய, கரும் கோட்டு
	ஆமா நல் ஏறு சிலைப்ப, சேணின்று
	இழுமென இழிதரும் அருவி
	பழமுதிர்சோலை மலை - திரு 295 - 317

	இப்போது ஒவ்வொரு சொற்றொடருக்கும் தனித்தனியே பொருள் காண்போம்.

பல உடன், வேறு பல் துகிலின் நுடங்கி - பலவும் ஒன்றாகச் சேர்ந்த, வேறு வேறான பல துகில் கொடிகளைப் போன்று அசைந்து
(பல்=பல, துகில்=துணி, துணியினால் செய்யப்பட்ட கொடி, துகிலின்=கொடியைப் போல, நுடங்கு=அசைந்தாடு)

மலையில் விழும் அருவி, அந்த இடத்திற்கு வருவதற்கு முன்னர், மலையில் ஒரு நீண்ட பாதையில் ஓடிவரும். அப்பாதையில் சிறுசிறு பாறைகள் 
இருக்கலாம். அவற்றின் மீது ஏறி இறங்கி அலை அலையாக அதன் நீர் ஓடி வருகிறது. இவ்வாறு அலை அலையாக நீர் ஓடி வருவதை ‘நுடங்கி' 
வருகிறது என்று புலவர் கூறுகிறார். சுதந்திர நாள், குடியரசு நாள் போன்ற நாள்களில் பள்ளிகளில் கொடியேற்றுவார்கள் அல்லவா! அல்லது 
தலைநகரில் தலைவர்கள் கொடியேற்றுவதை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். ஏற்றப்பட்ட கொடிகள் காற்றில் அசைந்து ஆடுவதுதான் 
‘நுடங்குதல்' எனப்படுகிறது. சிற்றூர்களில் கண்மாயில் வேட்டியைத் துவைத்து கரை மேல் நின்று கைகளில் அதன் நுனிகளைப் பிடித்துத் தூக்கிக் 
காற்றில் உலர்த்துவார்கள். அப்பொழுது அந்த வேட்டி அலை அலையாக எழுந்து விழுந்து அசைந்தாடுவதைத்- தான் ‘நுடங்குதல்' என்கிறோம். 
இவ்வாறு ஒரு வேட்டி அல்ல, பல வேட்டிகள் நுடங்கி அசைவது போல அந்த ஆறு ஓடிவருகிறதாம்.

	
     
அகில் சுமந்து - அகிலைச் சுமந்துகொண்டு,
 
(அகில்=சந்தன மரம் போன்று மலையில் வளரும் மணம் மிக்க மரம்)

அகில் மரத்தின் கட்டைகளை ஒரு மணம் கொடுக்கும் பொருளாக மக்கள் பயன்படுத்துவர். அதைத் தீயிலிட்டால் வரும் புகை மணமுள்ளதாக 
இருக்கும். எனவே, பெண்கள் குளித்துவிட்டுத் தங்கள் கூந்தலுக்கு அகில்புகை ஊட்டுவது வழக்கம். எனவே, அது ஒரு விலையுயர்ந்த பொருளாக 
மதிக்கப்படும். அகில் மரம் பார்ப்பதற்குப் பெரியதாகத் தோன்றினாலும், அதன் நிறையளவு குறைந்துள்ளதாகவே இருக்க வேண்டும். அதனால்தான் 
அது மரமாக இருந்தாலும் நீரில் மிதந்து வருகிறது. ஆற்றில் மிதந்து வரும் அகில் என்பதற்குப் பதிலாக, அகிலைச் சுமந்து வரும் ஆறு என்று புலவர் 
ஆற்றை முன்னிலைப்படுத்திப் பாடியிருக்கும் நயம் கவனிக்கத்தக்கது.
 
ஆர முழு முதல் உருட்டி - சந்தனமரத்தின் முழு அடிமரத்தைப் புரட்டித் தள்ளிக்கொண்டு,
(ஆரம் = சந்தன மரம், முழு முதல் = முழுமையான அடிமரம்)

அகிலைப் போல அல்லாமல், சந்தனமரம் நிறை அதிகமுள்ளதாக இருக்கவேண்டும். எனவே, அது நீரில் மிதக்க முடியாது. எனவே, நீருக்குள் பாதியும் 
வெளியில் பாதியும் குறுக்குவசமாகக் கிடக்கும் சந்தன மர அடிக்கட்டைகளை ஆற்று நீர் தன் வேகத்தால் உருட்டிக்கொண்டே வருகிறது. 
 
வேரல், பூ உடை அலங்கு சினை புலம்ப, வேர் கீண்டு - சிறுமூங்கிலின், பூவையுடைய அசைகின்ற கொம்பு வருந்த, வேரைப் பிளந்து,
(வேரல்=ஒரு வகை மூங்கில், உடை=உடைய, அலங்கு=மேலும் கீழும் அசை, சினை=கிளை,கொம்பு, புலம்பு=வாடு, கீண்டு=பிள)

வேரல் என்பது சாதாரண மூங்கில் போல் தடிமனாக இல்லாமல், தட்டைக்குச்சி போல், ஆனால், கெட்டியாக இருக்கும். சிற்றூர்களில் அதை வெட்டி 
வேலியாகக் கட்டுவார்கள். ஆற்றின் கரையோரத்தில் இந்த மூங்கில் வளர்ந்து நிற்கும். அதன் கிளைகளில் பூக்கள் பூத்திருக்கும். ஆற்று நீரின் 
வேகத்தில் கரை ஓரங்கள் அரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். அவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாகக் கரையோரங்கள் கரையும் போது, கரையோர 
மூங்கிலின் வேர்கள் வெளிப்படும். எனவே வேர்களின் பிடிப்பு தளர ஆரம்பிக்கும். அப்போது மூங்கிலின் கிளைகள் மேலும் கீழுமாக ஆட ஆரம்பிக்கும்.
அவ்வாறு ஆடுவதையே ‘அலங்குதல்' என்கிறோம். 

விண் பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த தண் கமழ் அலர் இறால் சிதைய - வானத்தை முட்டிநிற்கும் உயர்ந்த மலையில் சூரியனைப் போன்று 
(தேனீக்கள்)செய்த குளிர்ச்சியானதும் மணக்கின்றதுமான விரிந்து பரந்த தேன்கூடு கெட,
(பொரு=மோது; நெடு வரை=உயரமான மலை; தொடு=கட்டு,சேர்; தண்=குளிர்ந்த; கமழ்=மணம்வீசு; பரிதி=சூரியன்;அலர்=பரந்த; இறால்=தேன்கூடு)

தேன் குடித்திருப்பீர்கள். தேனீக்கள் என்ற ஒரு வகை வண்டுகள் பல விதமான பூக்களில் உள்ள தேனை உறிஞ்சிக் கொண்டுவந்து தமது வீட்டில் 
சேர்த்துவைக்கும். தேனீக்களின் வீடுதான் தேன்கூடு அல்லது தேனடை எனப்படும். இந்தத் தேன்கூட்டில் நிறைய சிறுசிறு அறைகள் இருக்கும். இந்த 
அறைகளில்தான் தாங்கள் கொண்டுவந்த தேனை அந்த வண்டுகள் சேமித்து வைக்கும். அவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துவைப்பதைத் 
‘தொடுத்தல்' என்று கூறுகிறார் புலவர். உதிரியான பூக்களை ஒவ்வொன்றாக எடுத்து நாரில் கோத்துச் சரமாக ஆக்குவதைப் ‘பூத்தொடுத்தல்' 
என்கிறோம். அந்த மாதிரிதான் தேனீக்களும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேனைக் கொண்டுவந்து சேர்த்துத்தான் தங்கள் தேன்கூட்டை உருவாக்குகின்றன
என்ற பொருளில்தான் ‘தொடுத்த' என்ற சொல்லால் ஆசிரியர் குறிக்கிறார். இவ்வாறாக, ஒரு கருத்துக்கு மிகப் பொருத்தமான சொல்லைத் 
தெரிந்தெடுத்துப் பயன்படுத்துவதை ஆங்கிலத்தில் ‘Diction' என்கிறோம். இந்த diction-இல் சங்கப்புலவர்கள் கைதேர்ந்தவர்கள். எனவே சங்கப் 
பாடல்களைப் படிக்கும் போது ஒவ்வொரு சொல்லும் ஏன், எதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூர்ந்து நோக்கினால் அதற்கான காரணத்தை 
அறிந்து மகிழலாம். இதுவே கவிதை இன்பம் எனப்படும். இந்தக் கவிதை இன்பத்தைச் சங்கப் பாடல்கள் வாரி வாரி வழங்குகின்றன.

பொதுவாகத் தேனீக்கள் தங்கள் தேன்கூட்டை மரங்களின் கிளைகளில் கட்டும். இதிலிருந்து கிடைக்கும் தேன் கொம்புத்தேன் எனப்படும். சில சமயம் 
தேனீக்கள் உயரமான இடங்களில் உள்ள இடுக்குகளில் கூடக் கூடு கட்டுவது உண்டு. சில கோவில்களின் உயரமான கோபுரங்களில் இவ்வாறான 
கூட்டைக் காணலாம். மலைகளிலும் உயரமான பாறை இடுக்குகளில் தேன்கூடு கட்டப்படலாம். இந்தத் தேனை மலைத் தேன் என்று கூறுவர். 
இப்பாடலில் வரும் ஆறு ஓடும் மலை வானத்தையே முட்டிப்பார்க்கும் அளவுக்கு உயரமானது. இதைத்தான் புலவர் ‘விண் பொரு நெடு வரை' 
என்கிறார். தேன்கூடுகள் வட்டமாகக் கட்டப்படும். இதையே ‘சூரியனைப் போன்று கட்டப்பட்ட' என்கிறார். உயரமான மலையில் இருப்பதால் 
தேன்கூடு குளிர்ச்சியுடன் இருக்கும். அகில், சந்தனம் போன்ற மணமுள்ள மரங்களின் பூவிலிருந்து பெறப்பட்ட தேனால் இது கட்டப்பட்டதால், 
இது ‘தண் கமழ் இறால்' எனப்பட்டது. இத் தேன்கூடு ஒரு பூ மலர்ந்தது போல் தோற்றம் அளிப்பதால் இது ‘அலர் இறால்' என்றும் கூறப்படுகின்றது.

ஒரு தேன்கூட்டுக்கு எத்தனை அடைமொழிகள் என்று பாருங்கள். ஒவ்வொன்றும் அதன் சிறப்பை எடுத்துக் கூறுவது மட்டும் அன்றி அதனை 
அப்படியே படம் பிடித்துக் காட்டுவதைப் போல் அமையவில்லையா? இதைத்தான் அறிஞர்கள் ‘சொல் ஓவியம்' - அதாவது, சொற்களால் 
வரையப்பட்ட ஓவியம் - என்கிறார்கள். இது மாதிரி சொல்லோவியங்கள் தீட்டுவது சங்கப் புலவர்களுக்குக் கைவந்த கலை ஆகும். இவ்வாறு 
மலையின் உச்சியில் கட்டப்பட்ட தேன்கூடு சிதைகின்ற அளவுக்கு அந்தக் காட்டாறு அடித்துப் புரண்டுகொண்டு வருகிறது எனப் புலவர் கூறுகிறார்.

நன் பல, ஆசினி முது சுளை கலாவ - நல்ல பல ஆசினிகளுடைய முற்றிய சுளை தன்னிடத்தே கலக்க,
(ஆசினி=ஒருவகைப் பலா, முது=நன்கு பழுத்த, கலாவ=கலக்க)

பொதுவாகப் பலா மரங்கள் அவற்றின் கிளைகளிலும் மரத்தின் அடிப்புறத்திலும் காய்கள் காய்க்கும். அவை பழுத்தும், பறிப்பார் இல்லாததால், 
பழங்களை, வெள்ள நீர் மோதித் தாக்க, அவை பிளந்து, அவற்றின் சுளைகள் வெளி வந்து ஆற்று நீரோடு கலந்தன. 

மீமிசை, நாக நறு மலர் உதிர - (மலையின்)உச்சியில் சுரபுன்னை மரத்தின் நறிய மலர்கள் உதிர
‘மீ' என்றாலும், ‘மிசை' என்றாலும் ‘மேலே' என்றுதான் பொருள். எனவே ‘மீமிசை' என்பது ஒருபொருட்பன்மொழி எனப் படித்திருப்பீர்கள். இங்கே 
‘மீமிசை' என்பது மிகவும் உயரமான இடத்தில் என்ற பொருளில் வருகிறது. நாகம் என்ற சுரபுன்னை மரத்தின் பூக்கள் நறுமணம் உள்ளவை. அப் 
பூக்கள் உதிர்ந்து ஆற்று நீரோடு கலக்கின்றன.

யூகமொடு, மா முக முசு கலை பனிப்ப - கருங்குரங்கோடு, கரிய முகத்தையுடைய முசுக்கலைகளும் நடுங்க,
(யூகம்=கருங்குரங்கு, மா=கரிய, முசு=நீண்ட வாலுள்ள குரங்கு வகை (langur), கலை=ஆண் குரங்கு, பனிப்ப=குளிரால் நடுங்க)

‘யூகம்' என்பது ‘ஊகம்' என்றும் அழைக்கப்படும். இதன் உடல் முழுதும் கறுப்பாக இருக்கும். ‘முசு' என்ற நீண்ட வால் குரங்கின் முகம் மட்டும் 
கறுப்பாக இருக்கும். அதன் ஆண்குரங்கு ‘கலை' எனப்படும். இந்த யூகங்களும், முசுக்கலைகளும் ஆற்று வெள்ளத்தின் நீர்த்திவலைகள் மேலே 
படிவதால் குளிரடைந்து நடுங்கின.

	
 
பூ நுதல், இரும் பிடி குளிர்ப்ப வீசி - புள்ளிகள் கொண்ட நெற்றியையுடைய, கரிய பெண் யானை குளிரும்படி வீசி,
(பூ=புகர்,யானையின் நெற்றியில் உள்ள புள்ளிகள், நுதல்=நெற்றி,மத்தகம், இரும்=கரிய, பிடி=பெண்யானை)

யானையைப் பார்த்திருப்பீர்கள். அதன் நெற்றியைக் கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா? அடுத்த முறை (தள்ளி நின்று) பாருங்கள். அதன் நெற்றியில் 
சிறுசிறு புள்ளிகள் இருக்கும். இதனைப் ‘புகர்' என்று கூறுவர்.

‘பிடி' என்பது பெண் யானை என்றால் ஆண் யானைக்கு என்ன பெயர்? ‘களிறு' என்பதாகும். ‘இரும்' என்பது ‘கரிய', ‘கறுப்பான' எனப் பொருள் தரும். 
யானை கறுப்பாகத் தானே இருக்கும். அப்படி என்றால் ‘கறுப்பு யானை' என்று கூறக் காரணம் என்ன? சங்கப் புலவர்கள் ஒரு சொல்லைத் 
தேவையில்லாமல் கூறமாட்டார்கள். மலைகளில் திரியும் யானைகளின் உடம்பில் தூசு படிந்திருக்கும். நெடுநாள் படிந்திருக்கும் தூசுகளின் 
காரணமாக யானையின் உடம்பு மண் நிறமாக மாறியிருக்கும். இந்த யானைகள் நிறைய நீர் உள்ள நீர்நிலைகளைக் கண்டால் மகிழ்ச்சியடைந்து, 
தங்கள் துதிக்கையினால் நீரை வாரித் தங்கள் உடம்பின் மேல் தூவிக் குளிக்கும். அப்போது அவை தூசு நீங்கிப் ‘பளிச்' என்று காணப்படும். அப்போது 
அவை கன்னங்கரேல் என்று இருக்கும். அவற்றின் நெற்றியின் புள்ளிகளும் தெளிவாகத் தெரியும். இதைத்தான் ‘பூ நுதல் இரும் பிடி' எனப் புலவர் 
கூறுகின்றார். அவ்வாறு ஆற்றில் குளித்துவிட்டு ஒரு பெண் யானை வெளியேறுகிறது. அப்போது, வேகமாக வரும் ஆற்று நீர் நீருக்கு மேல் சிறிது 
நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு பாறையின் மேல் ‘சல்' என்று மோதியதால், நீர்த்திவலைகள் யானையின் மேல் தெறித்து விழுகின்றன. ‘சலீர்' என்று 
தன் மேல் வீசப்பட்ட குளிர்ந்த நீரினால் யானையின் உடம்பு சிலிர்த்து நடுங்குகிறது. இதைத்தான் புலவர், ‘பூ நுதல் இரும்பிடி குளிர்ப்ப வீசி' என்று 
கூறுகிறார்.

	

பெரும் களிற்று, முத்து உடை வான் கோடு தழீஇ - பெரிய ஆண்யானையின், முத்தை உடைய வெண்மையான கொம்புகளைத் தழுவி,
(வான்=வெண்மை, கோடு=கொம்பு,யானையின் தந்தம், தழீஇ=தழுவி)

பெண் யானைகள் குளித்துக் கொண்டிருக்க, தலைவனான ஆண் யானை காவல் இருக்கும். நீருக்குள்ளிருந்தும் ஆபத்து வரலாம் என்பதால் சிறிதளவு 
ஆழத்தில் நின்றுகொண்டிருக்கும் ஆண் யானையின் வெண்மையான தந்தங்களைத் தொட்டுக்கொண்டு ஆற்று நீர் விரைந்து ஓடும். ஆண் 
யானைகளின் தந்தங்களில் முத்துப் போன்ற உருண்டைகள் உருவாகியிருக்கும் என்று பழைய இலக்கியங்கள் கூறுகின்றன. இதனையே புலவரும் 
‘முத்து உடை வான் கோடு' என்கிறார்.

தத்துற்று - தத்துதல் அடைந்து -- 

‘தத்துதல்' என்றால் என்ன? ‘தவளை நடந்து சென்றது' என்று நாம் கூறுவதில்லை. காரணம், நடப்பது என்றால் ஒவ்வொரு காலாக அடியெடுத்து 
வைப்பதுதான். ‘தவளை தத்திச் செல்கிறது' என்றுதான் கூறுகிறோம். காரணம் அது நான்கு கால்களையும் ஒருசேரத் தூக்கித் தாவித் தாவிச் செல்லும்.
சிறு சிறு தாவல்களாக நடப்பதையே ‘தத்துதல்' என்கிறோம்.

சிற்றூர்களில், கண்மாய் போன்ற அகன்ற நீர்ப்பரப்புகளில், ஒரு சிறிய பானை ஓட்டை எடுத்து, நீரின் மேற்பரப்பைத் தொட்டுக்கொண்டு போவது போல் 
சிறுவர்கள் வேகமாக வீசி எறிவதுண்டு. நீர்ப்பரப்புக்கு ஏறக்குறைய இணையாக, மிகவும் குறுகிய கோணத்தில் வீசப்படும்அந்த ஓடு, நீர்ப்பரப்பில் பட்டு,
பின்னர் சற்று எழும்பி, சிறிது தொலைக்குப் பின்னர் மறுபடியும் நீர்ப்பரப்பில் பட்டு, பின்னர் சற்று எழும்பி, இவ்வாறாக தாவித் தாவிச் செல்லும். 
இதைத்தான் ‘தத்துதல்' என்கிறோம். வளைந்தும் நெளிந்தும் வேகமாக வரும் ஆற்று நீர் ஆண் யானையின் தந்தங்களில் பட்டு அவற்றின் மேல் ஏறி 
இறங்கி வருகின்றது. இதைத்தான் புலவர் ‘தத்துதலுற்று' என்கிறார்.

ஆழமற்ற சில இடங்களில் ஆற்றுப் படுகையில் கிடக்கும் பரல் கற்களின் மீதும் நீர் தவழ்ந்து வரும்போது ஏறி இறங்கி வரும். அப்போதும் நீர் 
தத்திவருகிறது எனலாம். எனினும், தண்ணீர் தானாகத் தத்துவது கிடையாது. வேகமாக வரும்போது அதற்கு ஏற்படும் குறுக்கீடுகளினால் அது 
தாவித் தாவி வர நேரிடுகிறது. எனவேதான் புலவர் ‘நீர் தத்துதலுறுகிறது' என்று செயப்பாட்டு வினையில் (passive voice) கூறுகிறார்.
 
	

நல் பொன் மணி நிறம் கிளர  - நல்ல பொன்னும் மணியும் நிறம் விளங்கும்படி செய்து,
(பொன், மணி - விலையுயர்ந்த கற்கள், கிளர்தல் - மின்னுதல்)

ஆற்றுநீர் பெருங்கற்களை உடைத்து அவற்றை உருட்டிக்கொண்டு வருவதால் அவை கூர் மழுங்கி அழகிய சிறு கூழாங்கற்களாய் மாறும். அந்தக் 
கூழாங்கற்களின் இடையே அங்கங்கே பொன்னும் மணியுமான விலையுயர்ந்த கற்கள் மின்னிக்கொண்டிருக்கும். 

பொன் கொழியா - (பொடியான) பொன்னைத் தெள்ளி,

கொழித்தல் என்பது என்ன? உங்கள் வீட்டில் வயதான பாட்டிமார் இருந்தால் அவர்களைக் கேளுங்கள். செய்து காட்டச் சொல்லுங்கள். அந்தக் காலத்தில்
அரிசி இப்போது கிடைப்பது மாதிரி சுத்தமாக இருக்காது. எனவே சுளகில் கொட்டி, முதலில் புடைத்து, உமி போன்ற தூசிகளை நீக்கிவிட்டுப் பின்னர் 
அரிசியைக் கொழிப்பார்கள். இவ்வாறு கொழிப்பதற்கு, சுளகை இரு கைகளிலும் ஏந்திப் பக்கவாட்டில் இருபக்கமும் ஆட்டுவார்கள். அப்போது குருணை, 
சிறு கற்கள் போன்ற நுண்ணிய பொருள்கள் ஒதுங்கும், முழு அரிசி தனியாக வரும் ‘சுளகு' என்பதை ‘முறம்' என்றும் கூறுவார்கள். இரண்டிற்கும் 
வடிவத்தில் சிறு வேறுபாடு உண்டு. மணலில் விளையாடும் சிறுவர்கள் உள்ளங்கையில் சிறிதளவு மணலை எடுத்து பக்கவாட்டில் கையை ஆட்டி 
ஆட்டிக் கற்களை, நீக்கி மாவு போன்ற மணலைப் பெறுவார்கள். அதற்குக் குறுமணல் (fine sand) என்று பெயர். அவ்வாறு செய்வதை ‘தெள்ளுதல்' 
என்பார்கள். இக்காலத்தில் பேரூர்களிலும் பட்டணங்களிலும் வாழ்கின்ற சிறுவர்கள் எவ்வளவு இனிய அனுபவங்களை இழந்திருக்கிறார்கள் என்று 
உணர்ந்திருப்பீர்கள். 

	
 
கரை ஓரத்தில் வரும் ஆற்று நீர் கரையை மோதி மோதித் தாக்கும், கடற்கரையின் அலைகள் கரையைத் தாக்குவது போல. ஆனால் அவ்வளவு 
ஆவேசமாக அல்ல. மேலும் கடலைப் போல் நேரே தாக்காமல், ஆற்று நீர் கரையைப் பக்கவாட்டில் அலைத்துக்கொண்டே இருக்கும். அவ்வாறு 
அலைக்கும் போது ஆற்று மணல் கொழிக்கப்பட்டு குறுமணல் நீர் ஓரம் படியும். அந்தக் குறுமணலில் தங்கத் துகள்கள் இருக்கும். இப்பொழுதும் சில 
குளத்தங்கரைகளில் சிலர் மணலைக் கொழித்துத் தங்கம் சேகரிப்பார்கள். எனவே ‘கொழி' என்பதை ‘waft ashore as fine sand by the waves' என்று 
கூறலாம். திருமுருகாற்றுப்படையில் கூறப்படும் ஆறு இவ்வாறு கரையெங்கும் பொன்னைக் கொழித்துக்கொண்டே வருகிறது என்கிறார் ஆசிரியர்.

வாழை முழு முதல் துமிய - வாழையின் பெரிய முதல் துணிக்கப்பட,
(துமி=துணி,வெட்டித் துண்டாக்கு,வெட்டப்பட்டுத் துண்டாகு)

முழுமுதல் என்பது முழுமையான அடிமரம். கடுமையான வேகத்தில் ஆற்றுவெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. அதனால், வாழைமரங்களை 
அடியோடு சாய்த்து விடுகிறது. அதுதான் முழுமுதல் துமிக்கப்படுதல்.

தாழை, இளநீர் விழு குலை உதிரத் தாக்கி - தென்னையின் இளநீரையுடைய நன்கு பருத்த குலைகள் உதிர மோதி
(தாழை=தென்னை மரம், விழு=சிறந்த)

முற்றிய தென்னங்காய்களைப் பிளந்துதான் தேங்காய் எடுக்கிறார்கள். தென்னங்காய்கள் முற்றுவதற்கு முன்னர் உள்ள பருவத்தில் அவற்றை 
இளநீர்க்காய்கள் அல்லது இளநீர் என்கிறோம். அவற்றின் பருப்பு முற்றாமல் இருக்கும். அதனை இளம்பருப்பு என்கிறோம். இந்தத் தென்னங்காய்கள் 
கொத்துக்கொத்தாகக் காய்க்கும். அதனைத் தென்னங்குலை என்பார்கள். ஆற்றோரத்தில் உள்ள தென்னைமரங்களில் சில ஆற்றுப் பக்கமாக நீண்டு 
வளைந்து, ஓடுகின்ற நீரைத் தொட்டுக்கொண்டு இருக்கும். வெள்ளம் பெருக்கெடுக்கும் போது உயர்ந்து வரும் நீர்ப்பெருக்கு அத் தென்னை மரங்களின் 
குலைகளைத் தாக்கும். அதனால் அதிர்ந்து போய் அந்தக் காய்கள் ஆற்றின் மேலேயே உதிர்ந்து விழும். 

கறிக் கொடி கரும் துணர் சாய - மிளகுக் கொடியின் கரிய கொத்துக்கள் சாய - (கறி = மிளகு, துணர் = கொத்து)

மிளகு கொடியில் காய்க்கும். அதுவும் கொத்துக்கொத்தாகத்தான் காய்க்கும். இந்தக் கொத்துக்குத் ‘துணர்' என்று பெயர். மிளகுக் கொடிகள் உயரமான 
மலைப்பாங்கான இடங்களில்தான் வளரும். கொடி என்பதால் ஏதாவது மரம் அல்லது கொம்பைச் சுற்றிக்கொண்டு தானே அது படர வேண்டும்! 
மரமே சாயும்போது மரத்தில் படர்ந்த கொடிகளும் அதனோடு சேர்ந்து சாயத்தானே வேண்டும்!
     
பொறிப் புற, மட நடை மஞ்ஞை பல உடன் வெரீஇ - பொறியையுடைய முதுகினையும் மடப்பத்தினையுடைய நடையினையும் உடைய மயில்கள் 
பலவற்றோடே அஞ்சி,
(புறம் = முதுகு, மஞ்ஞை = மயில், வெரீஇ - வெருண்டு)

அடித்துக்கொண்டு வரும் வெள்ளத்தால் ஆற்றின் கரையில் உள்ள எத்தனை பொருள்கள் நிலைகுலைகின்றன என்று பார்த்தோம். இந்த 
நிலைகுலைவின் போது ‘சடார்', ‘மடார்' என்ற பேரொலிகள் உண்டாவது இயற்கைதானே! திடீரென்று ஏற்படும் இந்தச் சத்தத்தால் கரையோரத்தில் 
கூட்டமாய் இருக்கும் மயில்கள் பயந்து ஓட ஆரம்பிக்கின்றன. வெறும் மயில்கள் என்று சொல்லாமல் அவற்றை ஒரு சொல்லோவியமாக வரைந்து 
காட்டுகிறார் புலவர். மயிலின் பின்பக்கம் நீண்டிருக்கும் தோகைகளில் கண் போன்ற ஒரு அமைப்பு இருக்கும். அதனைப் ‘பொறி' என்பார்கள். 

மயிலின் இறக்கைகள் அதன் முதுகுப் புறத்தையும் உடலின் பக்கவாட்டையும் மறைத்திருக்கும். அந்தப் பகுதியிலும் புள்ளி புள்ளியாக இருக்கும். 
இதனையும் ‘பொறி' என்பர். மொத்தத்தில் மயிலின் மேற்பகுதி புள்ளிகளால் நிறைந்திருக்கும். எனவே அதனைப் ‘பொறிப் புற மயில்' என்று ஆசிரியர்
குறிப்பிடுகிறார். மயில் நடந்து போவதைப் பார்த்திருக்கிறீர்களா? அந்த நடையை ‘மட நடை' என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அச்சம், மடம், நாணம், 
பயிர்ப்பு  என்ற நான்கும் இளம்பெண்களின் பண்புகள் என இலக்கியங்கள் கூறுகின்றன. இதில் ‘மடம்' என்பது ‘அறியாமை (ignorance, folly)', 
பேதைமை, கபடமின்மை(credulity), மென்மை (delicacy) என்றெல்லாம் பொருள் தரும். இந்த மடப்பம் பொருந்திய பெண்கள் நடப்பது போல மயில்கள்
நடப்பதால் அவற்றை மட நடை மயில் என்கிறார். 

‘வெருள்' என்பதற்கு ‘மிரள்' என்று பொருள். ஜல்லிக்கட்டுகளில் அவிழ்த்துவிடப்படும் காளைகள் பெரும் கூட்டத்தைப் பார்த்தும், அந்தக் கூட்டத்தினர்
எழுப்பும் ஆரவாரத்தைக் கேட்டும் திகைத்துப் போய் அங்குமிங்கும் ஓடுவதையே ‘மிரளுதல்' என்கிறோம். மரங்கள் சரிவதைப் பார்த்தும், அவை 
ஏற்படுத்தும் ஒலியைக் கேட்டும் மயில்கள் மிரட்சிகொள்வதையே புலவர் ‘வெரீஇ' என்கிறார்.

கோழி வய பெடை இரிய - கோழியின் வலிமையுடைய பேடைகள் விழுந்தடித்து ஓட,
(வயவு=வலிமை, பெடை=பறவைகளில் பெண், இரி=பயந்தோடு)

கோழி என்பது பொதுப் பெயர். பெடை என்பது பெட்டைக் கோழியைக் குறிக்கும். அது குஞ்சாக இருந்து முட்டையிடும் பருவம் அடையும்போது 
அதனை விடைக்கோழி என்பர். அப்போது அது வலிமையுள்ளதாக இருக்கும். அதனையே புலவர் ‘வயப் பெடை' என்கிறார். பறவைகள் அமர்ந்திருக்கும்
ஒரு மரத்தருகே, ‘துடும்' என்று ஒரு துப்பாக்கி ஒலித்தால், திடுக்கிட்ட பறவைகள் பயந்துபோய் தங்கள் சிறகுகளை எவ்வளவு பலமாக அடிக்க 
முடியுமோ அவ்வளவு பலமாக அடித்து, எவ்வளவு விரைவாகப் பறக்க முடியுமோ அவ்வளவு விரைவாகப் பறந்து செல்வதையே ‘இரிதல்' என்கிறோம்.
அதாவது, திடுக்கிட்டு விழுந்தடித்துக் கொண்டு ஓடுவதுதான் இது. மயில்களை வெருட்டிய காட்சிகளும் ஓசைகளும் அங்கு மேய்ந்துகொண்டிருந்த 
காட்டுக் கோழிகளையும் திடுக்கிட வைத்திருக்கும். குஞ்சுகளும் வயதான கோழிகளும் வேகமாக ஓடி மறைய, இளம் கோழிகள் தங்கள் 
இறக்கைகளைப் ‘பட பட' வென்று அடித்துக்கொண்டு ‘கெக் கெக் கெக்' என்று பெரும் சத்தத்தைப் போட்டுக்கொண்டு ஓடுவதையே ‘வயப் பெடை 
இரிய' என்ற சொற்களால் படம் பிடித்துக் காட்டுகிறார் புலவர்.
 
	

கேழலொடு - ஆண் பன்றியுடன்

இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் பெரும் கல் விடர் அளை செறிய - கரிய 

பனையின் - (உள்ளே)வெளிற்றினையுடைய - புல்லிய செறும்பை ஒத்த கரிய நிறத்தையுடைய மயிரினையுடைய உடம்பினையும் 
வளைந்த அடியினையுமுடைய கரடி பெரிய கல் வெடித்த முழைஞ்சில் சேர,

வெளிறு=உள்வயிரம் அற்ற தன்மை, சாய்=சிம்பு, அன்ன=போல, குரூஉ=நிறம், யாக்கை=உடம்பு, குடா=வளைவு, அடி=பாதம், உளியம் = கரடி, 
விடர்= வெடிப்பு, அளை = குகை, (cavern)

நன்றாக முதிர்ந்த தேக்கு மரத்தின் உட்பகுதி இறுகிப்போய் கெட்டியாக இருக்கும். அதனைப் பிளப்பது கடினம். அதனை வயிரம் பாய்ந்த கட்டை 
என்பார்கள். பனை மரக்கட்டை வெளிப்புறத்தில் இரும்பு போல் கெட்டியாக இருக்கும். ஆனால் அதனைப் பிளப்பது எளிது. காரணம் அதன் உட்பக்கம் 
குழல்போல் இருக்கும். எனவே பனைமரத்தை வெளிற்றுமரம் (coreless tree) என்பார்கள். இருப்பினும் அதன் உட்புறத்தில் நீள நீளமான சிம்புகள் 
இருக்கும். இதனைச் ‘சிறாம்பு, செறும்பு அல்லது சாய்' என்றும் கூறுவர். ஆங்கிலத்தில் இதனை fibre எனலாம். ஆனால் இந்தச் சிம்பு, இரும்புக் கம்பி 
போல் உறுதியாக இருக்கும். ஒரு கரடியின் உடம்பிலிருக்கும் முடி இந்தச் சிம்பு போல இருக்கும். இதனையே ‘இரும் பனை வெளிற்றின் புன் சாய் 
அன்ன குரூஉ மயிர்' கரடி என்கிறார் புலவர்.

மிகவும் ஒல்லியான, ஆனால் கெட்டியான தண்டினையுடைய தாவரத்தையே ‘புல்' என்கிறோம். ‘புல் சாய்' என்பதே இலக்கண விதிப்படி ‘புன் சாய்' 
என்றானது. கரடியின் பாதம் வளைந்து இருக்கும். இதுவே இங்கு ‘குடா அடி' எனப்படுகிறது. 

வங்கக் கடல் பகுதியை ‘வங்காள விரிகுடா' என்பர். வங்கக் கடலின் கரைப்பகுதி தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா எனக் கீழிருந்து மேலே சென்று மேற்கு 
வங்காளம், வங்க தேசம் ஆகிய பகுதிகளில் வளைந்து மியான்மர், மலேசியா எனக் கீழிறங்கும். இந்தப் பெரும் வளைவையே ‘குடா' என்கிறோம். 
கரடியின் கால்களும் இவ்வாறு குழிவாக வளைந்து இருக்கும் என்பதால் அதனைக் குடா அடி உளியம் என்கிறார் புலவர். மீண்டும் புலவரின் 
இன்னொரு சொல்லோவியம் இங்கு அருமையாகத் தீட்டப்பட்டுள்ளது. மலையில் பெரிய பாறைகளில் வெடிப்புகள் காணப்படும். அவை சிறிய 
குகைகள் போன்று இருக்கும். மயில்களையும் கோழிகளையும் வெருட்டி ஓட வைக்கும் சத்தத்தால் பன்றிகளும், கரடிகளும் சிறிய வாயுள்ள 
குகைகளுக்குள் நெருக்கியடித்துக் கொண்டு ஓடி ஒளிந்துகொள்கின்றன. 

கரும் கோட்டு, ஆமா நல் ஏறு சிலைப்ப - கரிய கொம்பினையுடைய ஆமாவினுடைய நல்ல ஏறுகள் முழங்க,
(கோடு=கொம்பு, ஆமா=காட்டுப்பசு, ஏறு=காளை, சிலைத்தல்=செருமி முழக்கமிடுதல்)

இத்தனையையும் பார்த்துக்-கொண்டிருந்தது காட்டுப்பசு இனத்தின் ஒரு காளை. தன்னுடைய ‘கரேர்' என்ற கொம்புகளைத் தூக்கியவாறு சுற்றும் 
முற்றும் நோட்டம் விட்டது. முரட்டு இனம் ஆயிற்றே. எந்தச் சலசலப்புக்கும் அது அஞ்சவில்லை. எதனையும் எதிர்கொள்ளும் மனத் துணிவுடன் தன்
தலையை உயர்த்திப் பெரிதாக முழக்கம் இட்டது. 
 
	

சேணின்று, இழுமென இழிதரும் அருவி - உயரத்தினின்றும் ‘இழும்’ என்னும் ஓசைபடக் குதிக்கும் அருவி, (சேண்=மிக்கதூரம், 
இழிதரும் = இறங்கும்)

இவ்வாறான விளைவுகளை எல்லாம் ஏற்படுத்திக்கொண்டு, விரைந்து ஓடி வந்த ஆறு, செங்குத்தான ஒரு மலைச்சரிவை அடைகிறது. அங்கிருந்து 
‘டமார்' என்று பெருத்த ஓசையுடன் அது அருவியாகக் கீழே கொட்டுகிறது. அதைத்தான் இழுமென இழிதரும் அருவி என்று அதன் ஓசையுடன் நம் 
கண்முன் காட்டுகிறார் புலவர். 

	
 
இப்படிப்பட்ட அருவியை உடைய மலைகளைக் கொண்ட பழமுதிர்சோலைக்கு உரிய முருகன் என்று ஆசிரியர் இப்பாடலை முடிக்கிறார்.

பார்த்தீர்களா? ஓர் ஆறு வந்து அருவியாய்க் கொட்டுகிறது என்று கூறவந்த புலவர் நக்கீரர் எத்தனை காட்சிகளை நம் கண் முன் கொண்டுவந்து காட்டி,
அதனை ஓர் உயிர்ப்புள்ள ஓவியமாகத் தீட்டியிருக்கிறார்! இதுதான் சங்கச்செய்யுளின் மாண்பு - சங்கப்புலவரின் சிறப்பு.