பத்துப்பாட்டு - சிறப்புக் காட்சிகள்


   1.திருமுருகாற்றுப்படை - அருவிக் காட்சி
   2.பொருநராற்றுப்படை - யாழ்க் காட்சி
   3.சிறுபாணாற்றுப்படை - திங்கள்மறைப்புக் காட்சி
   4.பெரும்பாணாற்றுப்படை - காடைப்பறவைக் காட்சி
   5.முல்லைப் பாட்டு - பாசறைக் காட்சி


   6.மதுரைக் காஞ்சி - மின்னல் காட்சி
   7.நெடுநல்வாடை - யவனர்க் காட்சி
   8.குறிஞ்சிப்பாட்டு - மலர்க் காட்சி
   9.பட்டினப்பாலை - வெண்மீன் காட்சி
   10.மலைபடுகடாம் - இசைக்கருவிகள் காட்சி
 
பத்துப்பாட்டு - பத்துக் கட்டுரைகள்
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
                                              6.மதுரைக் காஞ்சி - மின்னல் காட்சி

							மின்னு நிமிர்ந்து அனையர்


	புலவர் மாங்குடி மருதனார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியது இப்பாடல். பத்துப்பாட்டு 
நூல்களுள் மிக அதிகமான அடி எண்ணிக்கை (782) கொண்ட பாடல் இது. காஞ்சி என்பது நிலையாமையைக் குறிக்கும். மிக அதிகமான போர் 
வெற்றிகளைப் பெற்றுச் சீரும் சிறப்புமாக இருந்த பாண்டியன் நெடுஞ்செழியன், மிகவும் செருக்குற்று தன்னை மீறிய நிலைக்குச் சென்றுவிடக்கூடாது 
என்று எண்ணிய புலவர் மருதனார், இவ்வுலகத்து நிலையாமையை அவனுக்கு உணர்த்தி, அதனால் தன் பெயர் இவ்வுலகில் நிலைத்து 
வாழ்வதற்கான செயல்களைச் செய்க என்று அறிவுறுத்தும் வண்ணம் பாடப்பட்டது இப்பாடல். மாங்குடி மருதனார் பாண்டியன் அவைக்களத்தில் 
தலைமைப் புலவராக இருந்தவர்.
	இப்பாடலில் பாண்டியனின் வெற்றிச்சிறப்புகளும், பாண்டிய நாட்டின் பல்வேறு வகை வளங்களும் மிகச் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. 
அன்றைய மதுரை நகரின் அமைப்பும், மதுரை மக்களின் வாழ்க்கை முறையும் மிக விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இப்பாடலில், 
மதுரை மக்கள் விடியல், காலை, நண்பகல், மாலை, முன்னிரவு, முதல் யாமம், இடையாமம், கடையாமம் ஆகிய நேரங்களில் எவ்வாறு இருந்தனர் 
என்பதைத் திரைப்படமாக உருவாக்கிக் காண்பிக்கிறார் புலவர். விடியலில் இளம்பெண்கள் எவ்வாறு இருந்தனர், என்ன செய்தனர் என்பதைப் புலவர் 
எவ்வாறு வருணிக்கிறார் பாருங்கள்.
	முதலில், இந்த இளம் மங்கையர் எவ்வாறு துயில் எழுகிறார்கள் என்று காட்டுகிறார் புலவர்.

	1. இல்லோர் 
	2. நயந்த காதலர் கவவுப் பிணித் துஞ்சி
	3. புலர்ந்து விரி விடியல் எய்த விரும்பிக்
	4. கண்பொரா எறிக்கும் மின்னுக்கொடி புரைய
	5. ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலித்
	6. திண் சுவர் நல் இல் கதவம் கரைய - மது 662-667

1,2. இல்லோர், நயந்த காதலர் கவவுப் பிணித் துஞ்சி - மகளிர், (தாங்கள்)விரும்பின (தம்)கணவருடைய முயக்கத்தின் பிணிப்பால் துயில்கொண்டு,

3. புலர்ந்துவிரி விடியல் எய்த - (பொழுது)புலர்ந்து (கதிர்)விரிகின்ற விடியற் காலத்தைப் பெறுகையினாலே, 

3,4 விரும்பிக், கண்பொரா எறிக்கும் மின்னுக்கொடி புரைய - விருப்பத்தால், கண்களைத் தாக்கிக் கூசவைக்கும் மின்னல்கொடியைப் போன்று				

5. ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி - ஒளிரும் பொன்னாலான மின்னுகின்ற (காலில் அணியும்)நகைகள் ஒலிக்க (வெளியே)வந்து

6. திண் சுவர் நல் இல் கதவம் கரைய - திண்ணிய சுவர்களையுடைய நல்ல இல்லங்களின் கதவுகள்(திறக்கப்படுவதால்) கிரீச்சிட,

	தெழித்தல் என்பது ‘சலங், சலங்’ என்று ஒலி எழுப்புதல். காலில் அணியும் கொலுசு, சிலம்பு போன்ற நகைகளும் பொன்னால் 
செய்யப்படும் அளவுக்கு அவர்கள் செல்வர் வீட்டு மகளிர். இந்தத் தங்கக் கொலுசுகளும், சிலம்புகளும் மேலும் கீழும் அசைந்து மின்னல் கொடியைப் 
போல மின்னிக் கண்களைக் கூசவைக்கின்றனவாம். இந்த மின்னல் கொடி என்பதனைக் மனதில் குறித்துவைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அதனை 
மீண்டும் பார்ப்போம். 
	கதவம் கரைய என்று புலவர் கூறுவதை உற்று நோக்குங்கள். அந்தக் காலத்துக் கதவுகள் மிகவும் திண்மையானவை. மிகவும் 
திண்மையான மூன்று பலகைகளை நெட்டுவாக்கில் வைத்து, அவற்றில் குறுக்குவாக்கில் மேலே, கீழே, நடுவே என்று மூன்று மிகவும் தடிமனான 
சட்டங்களை முடுக்கிக் கதவுகள் செய்வார்கள். அந்தக் காலத்துக் கீல்கள் இரும்புப் பட்டையால் ஆனவை. நீளமான இரும்புப் பட்டைகளை கதவுக்குக்
குறுக்காகத் தைத்து , கதவு ஒழுங்கில்  குழாய் போல் மடக்கிவிட்டிருப்பார்கள். கதவு நிலையில் ‘ட’ வடிவில் தடித்த இரும்புக் கொக்கியைத் 
தைத்து, அந்தக்  குழாயை அந்தக் கொக்கிக்குள் இறக்கியிருப்பார்கள். கதவைத் திறக்கும்போது, அந்த இரும்புக் குழல் கொக்கிக்குள் சுழன்று காக்கை 
கரைவதைப் போல் ’கர கர’ என்று ஒலியெழுப்பும். இதனையே புலவர் கதவம் கரைய என்கிறார்.
	கதவைத் திறந்து வெளியே வந்த மங்கையர் என்ன செய்வார்கள்? முதலில் முற்றத்தில் இருக்கும் செத்தைகளைப் பெருக்குவார்கள். 
இந்தச் செல்வர் வீட்டு முற்றத்தில் என்னென்ன செத்தைகள் கிடக்கின்றன என்று புலவர் காட்டுகிறார் பாருங்கள். 

	1. வானம் நீங்கிய நீல் நிற விசும்பின்
	2. மின்னு நிமிர்ந்து அனையர் ஆகி நறவுமகிழ்ந்து
	3. மாண் இழை மகளிர் புலந்தனர் பரிந்த
	4. பரூஉக் காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு
	5. பொன் சுடு நெருப்பின் நிலம்உக்கு என்ன
	6. அம்மென் குரும்பை காய்படுபு பிறவும்
	7. தருமணல் முற்றத்து அரி ஞிமிறு ஆர்ப்ப
	8. மென்பூச் செம்மலொடு நன்கலம் சீப்ப
	9. இரவுத் தலைப்பெயரும் ஏம வைகறை - மது 678-686

	இப்பொழுது புலவர் கூறுவது, முந்தைய நாள் இரவில், தூங்கும் முன்னர், சில மகளிர் தம் கணவருடன் ஊடல் செய்த காட்சி.

1,2. வானம் நீங்கிய நீல் நிற விசும்பின் மின்னு நிமிர்ந்து அனையர் ஆகி - மேகங்கள் இல்லாமற்போன நீல நிற விசும்பில் மின்னல் நிமிர்ந்து 
நிற்பதைப் போன்றவராகி,

2,3,4. நறவுமகிழ்ந்து, மாண் இழை மகளிர் புலந்தனர் பரிந்த பரூஉக் காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு - மது அருந்திக் களித்த, சிறந்த 
அணிகலன்களை அணிந்த மகளிர் (தம் கணவருடன்) ஊடியவராய், (கோபங்கொண்டு) அறுத்து எறிந்த பெரிய முத்துக்களையுடைய 
முத்துமாலையினின்றும் சிதறிய முத்துக்களோடு

5,6. பொன் சுடு நெருப்பின் நிலம்உக்கு என்ன அம்மென் குரும்பை காய்படுபு பிறவும் - பொன்னை உருக்குகின்ற நெருப்புச் சிந்தின நிலம் போல், 
அழகிய மென்மையான இளம் பாக்குக்காய் விழுந்து, பிறவும் (விழுந்து கிடக்க),

7. தருமணல் முற்றத்து அரி ஞிமிறு ஆர்ப்ப - கொண்டுவந்து இட்ட மணலையுடைய (அந்த)முற்றத்தில் வண்டுகளும் ஞிமிறுகளும் ஆரவாரிக்க,

8. மென்பூச் செம்மலொடு நன்கலம் சீப்ப - மெல்லிய பூவின் வாடல்களுடன் நல்ல அணிகலன்களையும் கூட்டித்தள்ள,

9. இரவுத் தலைப்பெயரும் ஏம வைகறை - இராக்காலம் இடம்மாறிச் செல்கின்ற (எல்லாவுயிர்க்கும்)பாதுகாவலாகிய விடியலில்

	முந்தின நாள் மாலையில், கணவனும் மனைவியும் புதுமணல் பரப்பிய முற்றத்தில் அமர்ந்து உரையாடிக்கொண்டிருக்கின்றனர். பகலின் 
உழைப்பால் நேர்ந்த களைப்புத் தீர சிறிது நறவு அருந்தியிருக்கின்றனர். பேச்சு திசைமாறி, பிணக்கம் ஏற்பட்டு ஊடலாய் உருவெடுக்கிறது. மனைவி 
தன் கழுத்தில் கிடந்த முத்து மாலையை அறுத்து எறிகிறாள். முத்துக்கள் சிதறியோடுகின்றன. கணவனும் தன் கையில் உள்ள தாம்பூலத்தட்டைத் 
தூக்கி எறிகிறான். வெற்றிலை, பாக்கு ஆகியவை பரந்து சிதறுகின்றன.
	இந்தக் காட்சியைச் சொல்லவந்த புலவர், மனைவியின் திடீர்க் கொந்தளிப்பை விளக்க ஓர் உவமையைக் கையாள்கிறார்.
	வானம் நீங்கிய நீல் நிற விசும்பின் மின்னு நிமிர்ந்து அனையர் ஆகி - மேகங்கள் இல்லாமற்போன நீல நிற விசும்பில் மின்னல் நிமிர்ந்து
நிற்பதைப் போன்றவராகி,
	இங்கு, வானம், விசும்பு என்ற இரு சொற்களுக்குமே ஆகாயம் என்ற பொருள் உண்டு. எனினும் ஒரே அடியில் வந்துள்ள இரண்டு 
சொற்களுக்கும் இதே பொருள் கொள்ளல் ஆகுமா? இந்த இரண்டு சொற்களுக்குமே மேகம் என்ற பொருளும் கொள்ளலாம். வானம் நீங்கிய நீனிற 
விசும்பின் மின்னுநிமிர்ந் தனையராகி .. என்ற சொற்றொடர் எல்லா உரைகாரர்களையும் சற்றுச் சிந்திக்கவைத்துள்ளது. இதற்கு நேரான, 
எளிமையான பொருள், ‘மேகங்கள் தன்னை விட்டு அகன்றுபோன நீல நிற ஆகாயத்தில் மின்னல் எழுந்து நிற்பதைப் போல’ என்பதுதான். 
ஆனால், மேகம் இல்லாத நீல நிற ஆகாயத்தில் மின்னல் எப்படித்தோன்றும்? எனவேதான் உரைகாரர்கள் இங்குத் தடுமாற்றம் கொள்கிறார்கள். 
	‘ஆகாயம் தனக்கு வடிவு இன்று என்னும் தன்மை நீங்குதற்கு மேகபடலத்தால் நீலநிறத்தையுடைய ஆகாயத்தின் கண்ணே மின்னு 
நுடங்கின தன்மையினை உடையராய்’ என்று நச்சினார்க்கினியர் கூறுகிறார். இது ஏதோ வலிதில் பொருள் கொள்ளும் வண்ணம் அமைந்துள்ளது. 
மேலும் மின்னு நிமிர்ந்து அனையர் என்ற தொடருக்கு மின்னு நுடங்கின தன்மை என்ற பொருள் எப்படி வரும்? நிமிர்தல் என்பது நேராக நிற்றல். 
நுடங்குதல் என்பது மடங்கி வளைதல்.
	இனி, ‘வானம் பிளக்குமாறு நீலநிற முகிலிடத்தே நுடங்கும் கொடி மின்னலை ஒத்த தன்மையுடையராய்’ என்று பெருமழைப்புலவர் 
உரைகாணுகிறார். ’நீங்கிய’ என்பதற்குப் ’பிளக்க’ என்ற பொருள் எவ்வாறு பொருந்தும் எனத் தெரியவில்லை. இங்கும் ’நிமிர்தல்’ என்பதற்கு 
’நுடங்குதல்’ என்று பொருள்கொள்கிறார் உரைகாரர்.
	ஒரு மின்னலுக்கு இத்தனை அடைமொழிகளைக் கொடுக்கிற புலவர் தேவையில்லாமல் அப்படிக் கூறியிருக்கமாட்டார். ஆனால் இந்த 
இரண்டு உரைகளுமே, பாடல் குறிப்பிடும் ஊடலைக் குறித்த சூழலை விளக்குவதாக இல்லாமல், அந்த அடியில் உள்ள சொற்களுக்கு மட்டும் 
உரைகாணும் முயற்சியே என்று தெரிகிறது.
	இப்போது, வானம் நீங்கிய நீனிற விசும்பின் என்பதைப் புரிந்துகொள்ள, முதலில் மின்னல்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதைப் 
பற்றித் தெரிந்திருக்கவேண்டும். அதைச் சுருக்கமாகக் காண்போம். மின்னல் என்பது ஒரு மின்சாரப்பாய்ச்சல். இது மூன்று வகைப்படும். 

1. மேகத்திலிருந்து தரைக்குப் பாய்வது (Cloud To Ground-CTG) 
2. மேகத்திலிருந்து மேகத்துக்குப் பாய்வது (Cloud To Cloud-CTC) 
3. தரையிலிருந்து மேகத்திற்குப் பாய்வது (Ground To Cloud-GTC). 

	இந்த மின்சாரப் பாய்ச்சலின் போது ஏற்படும் அதிக அளவு வெப்பத்தினால் அதன் பாதையில் உள்ள காற்று விரிவடைந்து வெடிப்பதே 
இடி. இவற்றில் முதல் இருவகைப் பாய்ச்சல்களே பெரும்பாலும் நடப்பன. முதல் வகைப்பாய்ச்சல் தரையில் பெரும் சேதத்தைப் பிறப்பிக்கும். இது 
வானத்தில் இருக்கும் ஒரு மேகத்தின் அடிப்பாகத்தில் (நன்றாகக் குறித்துக்கொள்க - மேகத்தின் அடிப்பாகத்தில்) தொடங்குகிறது. கீழே 
இறங்கும்போது, தலைகீழாய்த் தொங்கும் ஒரு மரம் போல பல கிளைகளாகப் பிரிந்து இறங்குகிறது. அதன் ஒரு கிளை தரையை நெருங்கும்போது 
தரையிலிருந்து எழுகிற ஒரு மின்னூட்டம், அதைப் பற்றிக்கொள்ள, அப்போது ஏற்படும் தொடுகையினால் மின்சாரப்பாதை முழுமையாகி, மின்சாரம்
முழு வேகத்தில் தரையில் பாய்கிறது. பின்னர், அதே பாதையில் திரும்பப் பாய்ந்து மேகத்தைத் தாக்குகிறது (return stroke). இதைத்தான் இடி 
விழுகிறது என்கிறோம். இரண்டாம் வகை மின்னலும் இதைப் போன்றதே. ஆனால் ஒரு மேகத்துக்கும் இன்னொரு மேகத்துக்கும் இடையே இது 
நடக்கிறது. எனவே, நமக்கு ஆபத்து இல்லை. வானத்தில் நல்ல வாணவேடிக்கையைப் பார்க்கலாம். மூன்றாவது வகை (GTC) அரிதாக நடப்பது. 
மிகவும் உயரமான ஒரு மேகம் இதற்கு வேண்டும். அதன் உச்சிப்பகுதிக்கும், (குறித்துக்கொள்க - மேகத்தின் உச்சிப் பகுதி) தரையில் உள்ள ஒரு 
மிகவும் உயரமான இடத்திற்கும் மின்தொடுகை (electrical contact) ஏற்படுகிறது. இதனால், முதல் வகை மின்னலுக்கு எதிரிடையாக மின்சாரம் 
பாய்கிறது. அதாவது, தரையிலிருந்து புறப்படும் ஒரு மின்னூட்டம் பல கிளைகளாகப் பிரிந்து நிமிர்ந்துநிற்கும் (மின்னு நிமிர்ந்தன்ன - நினைவுக்கு 
வருகிறதா?) மரம்போல் எழுகிறது. அதன் ஒரு முனை மேகத்தின் உச்சியை எட்டும்போது மின்னோட்டம் ஏற்பட்டு, முழுமையாகி, திருப்புத் 
தாக்குதலாகத் தரையை நோக்கி முழுவேகத்தில் பாய்கிறது. எனவே, இந்த வகை மின்னலில் திருப்புத் தாக்கம் தரையைத் தாக்குவதால் பாதிப்பு 
மிக அதிகமாக இருக்கும். இந்த வகை மின்னலுக்கு, பாதிக்கப்படும் இடம் மேகத்திற்கு நேர் கீழே இருக்கவேண்டியது இல்லை. மேகத்தைவிட்டு 
மிக அதிக தொலைவிலுள்ள இடத்தில்கூட மின்னல் பாயமுடியும். இது 10 மைல் அளவுக்குக்கூட இருக்கலாம். அந்த இடத்தில் மேகமூட்டம்கூட 
இருக்கவேண்டியது இல்லை. வானம் தெளிவாக நீலநிறத்தில் இருக்கலாம். எங்கோ மழை பெய்வதாக நாம் எண்ணிக்கொண்டிருக்கையில், ஒரு மரம்
எழுவதுபோல் கீழிருந்து மின்னல் ஏறி, நம் இடத்தில் மிகவேகமாக இடி விழும். இதற்குப் பல தருணங்கள் அமையவேண்டும். மேலிருக்கும் மேகம் 
மிக உயரத்தில் இருக்கவேண்டும். அது உயர்ந்து நிற்கவேண்டும். அதன் உச்சி மூக்குப்போல் நம்மைநோக்கி நீட்டிக்கொண்டிருக்கவேண்டும். தரையில் 
மிக உயரமான ஒரு அமைப்பு இருக்கவேண்டும். அப்போது நீலவானத்தில் (நீல் நிற விசும்பில்) மின்னல் எழுந்து உயர்வதைப் (மின்னு நிமிர்ந்து) 
பார்க்கலாம். புலவர் இத்தகைய மூன்றாம் வகை மின்னலைத்தான் குறிப்பிடுகிறார் என்று தோன்றுகிறது.

	

	கண்பொரா எறிக்கும் மின்னுக்கொடி என்று புலவர் முதலில் குறிப்பிடுவது இரண்டாம் வகை மின்னல் - யாருக்கும் தீங்கு 
விளைவிக்காமல் கண்ணைப்பறிக்கும் காட்சியாவது. மின்னு நிமிர்ந்தன்ன என்று இப்போது அவர் குறிப்பிடுவது மூன்றாம் வகை மின்னல் - 
கீழிருந்து மேல்நோக்கிக் கிளைவிட்டு எழுவது. ஊடல் கோபத்துடன் ‘விருட்'டென்று எழுந்து நிற்பது. நம் புலவர் இதையெல்லாம் 
தெரிந்துவைத்துத்தான் இந்த உவமையைக் கையாண்டிருக்கிறார் என்பதைவிட, இந்த மூன்றாம் வகை மின்னலையும் தெரிந்துவைத்திருக்கிறார் 
எனலாம்.

	

	இதில் இன்னொரு வியக்கத்தக்க தற்செயல் ஒற்றுமை காணப்படுகிறது (accidental similarity). இந்த மூன்றாம் வகை மின்னலின் 
இன்னொரு வடிவம்தான் Bolt from the blue. Thunderbolt from the blue sky என்பதன் சுருக்கம் இது. அதாவது, நீல் நிற விசும்பின் இடிமின்னல்.
ஆங்கிலத்தில் இது ஒரு மரபுத்தொடர்(idiom). நாம் எதிர்பாராத நேரத்தில் மிக விரைவாக ஓர் அதிர்ச்சிதரும் நிகழ்ச்சி நடந்தால் அதனை இவ்வாறு 
கூறுகிறோம் (If something happens unexpectedly and suddenly, it is a bolt from the blue). 
	கணவனும் மனைவும் மகிழ்ச்சியுடன் உரையாடிக்கொண்டிருக்கும் பின்மாலைப் பொழுதில், ஏதோ ஒரு காரணத்திற்காக மனைவி 
ஊடல்கொள்கிறாள். அது முற்றிப்போய், தான் அணிந்திருக்கும் பொன் நகைகள் மின்னலாய்ப் பளிச்சிட, ‘விருட்'டென்று எழுந்து, தன் கழுத்தில் 
இருக்கும் முத்தாரத்தை அறுத்து எறிகிறாள். கணவனுக்கு அவள் தரும் அதிர்ச்சி Bolt from the blue தானே!
	பாடல் அடிகளின் சூழலையும் மனத்தில் கொண்டு, இத்தனை உண்மைகளையும் ஒருசேரப் பார்க்கும்போதுதான் வானம் நீங்கிய நீல் நிற 
விசும்பின் மின்னு நிமிர்ந்த அனையர் என்ற உவமையின் முழுப்பொருளும் நன்கு விளங்கும்போல் தோன்றுகிறது.