பத்துப்பாட்டு - சிறப்புக் காட்சிகள்


   1.திருமுருகாற்றுப்படை - அருவிக் காட்சி
   2.பொருநராற்றுப்படை - யாழ்க் காட்சி
   3.சிறுபாணாற்றுப்படை - திங்கள்மறைப்புக் காட்சி
   4.பெரும்பாணாற்றுப்படை - காடைப்பறவைக் காட்சி
   5.முல்லைப் பாட்டு - பாசறைக் காட்சி


   6.மதுரைக் காஞ்சி - மின்னல் காட்சி
   7.நெடுநல்வாடை - யவனர்க் காட்சி
   8.குறிஞ்சிப்பாட்டு - மலர்க் காட்சி
   9.பட்டினப்பாலை - வெண்மீன் காட்சி
   10.மலைபடுகடாம் - இசைக்கருவிகள் காட்சி
 
பத்துப்பாட்டு - பத்துக் கட்டுரைகள்
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
                                              5.முல்லைப் பாட்டு - பாசறைக் காட்சி

						புலித் தொடர் விட்ட புனை மாண் நல் இல்

	
	பத்துப்பாட்டு நூல்களுள் ஐந்தாவதாக இருப்பது முல்லைப் பாட்டு. இது ஓர் அகத்திணைப் பாட்டு - அதாவது பெயர் தெரியாத ஒரு 
தலைவன், தலைவி ஆகியோரிடையே உள்ள அன்புப்பிணைப்பைப் பற்றியது. அதில், முல்லை என்பது பிரிந்து சென்றிருக்கும் தலைவனின் வரவை 
எதிர்நோக்கிக் காத்திருக்கும் தலைவியின் நிலையைக் கூறுவது. முல்லைப்பாட்டின் தலைவன் ஓர் அரசன். அவன் போர்மேல் சென்றிருக்கிறான். 
அந்தக் காலத்தில் கார்காலம் தொடங்கினால் போர் நிறுத்தப்பட்டு, இரு படையினரும் தத்தம் நாட்டுக்குத் திரும்புவர். காலையில் பயணம் 
தொடங்கினால் மாலைக்குள் வீடு வந்து சேருவர். ஒரு கார்காலத் தொடக்கத்து மாலை நேரத்தில் தலைவன் இன்னும் வீடு திரும்பவில்லையே 
என்று கவலையுடன் காத்திருக்கும் தலைவியாகிய அரசியின் நிலையைக் காட்டும் வண்ணம் பாடல் தொடங்குகிறது. இதனைப் பாடியவர் 
காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார். பத்துப்பாட்டில் மிகக் குறைந்த அடிகளைக் (103 அடிகள்)கொண்டது இப்பாடல்.
	பாடலின் தொடக்கத்தில் பிரிவுத்துயரால் வாடும் தலைவியின் நிலையைக் காட்டிய புலவர், அடுத்து ஒரு பின்னோக்குக் காட்சியாக 
(Flash back), போர்மேற் சென்ற தலைவன் முதலில் தன் படைகளுக்கும், தனக்கும் பாசறை வீடுகளைக் கட்டிக்கொள்வதைக் காட்டுகிறார். இதில் 
மன்னனான தலைவனுக்குச் சிறப்பான முறையில் பலத்த கட்டுக்காவலுடன் பள்ளியறையுடன் கூடிய ஒரு படைவீடு யவனர்களால் சிறப்பாக 
அமைக்கப்படுவதைப் புலவர் நன்கு விரித்துக் கூறுகிறார்.

	1. மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை
	2. மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து
	3. வலி புணர் யாக்கை வன்கண் யவனர்
	4. புலித் தொடர் விட்ட புனை மாண் நல் இல்
	5. திரு மணி விளக்கம் காட்டி திண் ஞாண்
	6. எழினி வாங்கிய ஈர் அறை பள்ளியுள்
	7. உடம்பின் உரைக்கும் உரையா நாவின்
	8. படம் புகு மிலேச்சர் உழையர் ஆக - முல் 59 - 66

1,2,3. மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை,மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து வலி புணர் யாக்கை வன்கண் யவனர் - கசை 
என்கிற சாட்டை சுற்றிய, மடங்கிப் புடைக்குமாறு நெருங்கக் கட்டின உடையையும், சட்டையையும் அணிந்த அச்சம் வரும் தோற்றத்தையும், 
வலிமை கூடின உடம்பினையும் உடைய கடுமையான யவனர்,

4. புலித் தொடர் விட்ட புனை மாண் நல் இல் - புலிச் சங்கிலி விடப்பட்ட, அலங்கரிப்பு சிறப்பாக அமையப்பெற்ற அழகிய நல்ல குடிலில்,

5. திரு மணி விளக்கம் காட்டி - அழகுடைய மாணிக்க மணி விளக்கை எரியவைத்துத், 

5,6 திண் ஞாண் எழினி வாங்கிய ஈர் அறை பள்ளியுள் - திண்ணிய கயிற்றில் திரைச்சீலையை வளைத்த இரு அறைகள் உள்ள படுக்கை அறையுள்,

7,8 உடம்பின் உரைக்கும் உரையா நாவின் படம் புகு மிலேச்சர் உழையர் ஆக -
உடம்பை ஆட்டிச் சைகையினால் பேசும், பேசாத நாவினையுடைய சட்டை போட்ட மிலேச்சர் அருகில் உள்ளோராக -

	பாசறையின் மற்ற பகுதிகளையெல்லாம் மன்னனின் படைவீரர் அமைக்க, மன்னன் தங்குமிடத்தை மட்டும் யவனர் கட்டினர் என்று 
புலவர் கூறுகிறார். யவனர் என்போர் இன்ன நாட்டினர் என்று திட்டமாகக் கூறமுடியவில்லை. அயோனியர் (Ionians) எனப்படும் கிரேக்கராகவோ 
அல்லது உரோமையராகவோ (Romans) இருக்கலாம். கிரேக்கர்கள் கி.மு 3-ஆம் நூற்றாண்டு அளவில் கீழைநாடுகளோடு கடல்வணிகத் தொடர்பு 
கொண்டிருந்தனர் என்றும், அதன் பின்னர் கி.பி 2-ஆம் நூற்றாண்டு வரை உரோமையர் நம் நாட்டுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர் என்றும் 
வரலாற்றறிஞர்கள் கூறுவர். 

	மூன்று அடிகளில் யவனர்களைப் பற்றிய ஒரு முழுத்தோற்றத்தைப் புலவர் விவரித்துள்ளார். 

	மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை என்று யவனரின் உடை கூறப்படுகிறது. மறி என்பதற்குத் தலைகீழாகு என்று பொருள்.
எரி மறிந்து அன்ன நாவின் (சிறு 196) என்பதில் ‘தீச்சுடர் தலைகீழாக இருப்பதைப் போன்ற நா' என்று பொருள் கொள்ளப்படுகிறது. எனவே 
தலைகீழாகத் தொங்கிப் புடைத்துக்கொண்ட உடையை அவர்கள் உடுத்தியிருந்தனர். அதன் மேல் இடுப்பைச் சுற்றிக் கயிற்றை இறுகக் கட்டியுள்ளனர். 
அக் கயிறு மத்திகை எனப்படுகிறது. இதற்குக் குதிரையை விரட்டும் சாட்டை அல்லது கசை (whip) என்று பொருள். 

	

	இங்குக் காட்டப்பட்டுள்ள மாதிரிப் படங்களில், இருப்பவர்கள் உரோம வீரர்கள். முதல் படத்தில் இன்றைக்குப் பெண்சிறுமிகள் அணியும் 
அங்கி (gown) போன்ற ஒரு உடையை அவர்கள் அணிந்திருப்பதைக் காணலாம். இதனை உரோமர்கள் டியூனிக் (Tunic) என்பர். குழந்தைகளுக்கு 
அங்கி போடும்போது, கைகளை உயர்த்தித் தலை வழியாகக் கீழிறக்கிப் போடுவது, அல்லது கால்கள் வழியாக மேலே இழுத்துப் போடுவது என 
இரண்டு விதமாகப் போடலாம். ஒருவேளை வீரர்கள் என்பதால், கண்களை எப்போதும் மூடாத வண்ணம், கால்வழியாக அங்கியை அவர்கள் 
அணிந்திருக்கலாம். அல்லது, அங்கியின் பெரிய திறப்புக் கீழேயும், தலைக்கான சிறிய திறப்பு மேலேயும் இருந்ததினால், அங்கி தலைகீழாய்த் 
தொங்குவது போல் தோன்றியிருக்கிறது அன்றைய தமிழர்களுக்கு! இந்த அங்கியின் மேல் இடுப்பைச் சுற்றி இறுகக் கயிறு கட்டியிருப்பர். இந்த 
அங்கியின் மேல் அவர்கள் இறுக்கமான சட்டை அணிந்திருப்பர். அதுவே இங்கு மெய்ப்பை எனப்படுகிறது. அன்றைய தமிழர்கள் சட்டை அணியும் 
பழக்கம் இல்லாதவர்கள். துணிகளை வெட்டிக் கையினால் தைக்கும் பழக்கம் நம்மில் இருந்ததில்லை. ஆண்களுக்கு, இடையில் ஒரு கோவணம், 
இடுப்பில் ஒரு வேட்டி, மேலே ஒரு துண்டு, அவ்வளவுதான். மன்னர்கள் மூடாத தம் மார்பில் அணிகலன்கள் அணிந்திருப்பர். பெண்களுக்குச் 
சேலை, மார்க் கச்சு அவ்வளவுதான். ஏழைப் பெண்களுக்குச் சேலை மட்டும்தான். இன்றைக்கும் கிராமங்களில் சட்டையில்லாமல் வெறும் சேலை 
மட்டும் அணிந்த பாட்டிமார்களைக் காணலாம். எனவே, வெட்டித் தைத்த ஆடைகள் அணிந்த மேல்நாட்டினரை நமது ஆட்கள் வியப்போடு 
பார்த்திருக்கின்றனர். அவர்களின் ஆடை இலக்கியங்களின் இடம்பெறும் அளவுக்குப் புதுமையாக இருந்திருக்கிறது. 
	யவனர்கள் இயற்கையிலேயே நல்ல உயரம் கொண்டவர்கள், வலிமை மிக்க உடம்பைப் பெற்றவர்கள். ஒழுங்கான உடற்பயிற்சி மூலம் 
தசைகளை இறுக்கிக் கொண்டவர்கள். இதையேதான் புலவர் வலிபுணர் யாக்கை என்கிறார். பொதுவாக இந்தியர்களும், குறிப்பாகத் தமிழர்களும் 
இயற்கையில் இரக்க குணம் மிகுந்தவர்கள். இளகிய மனம் படைத்தவர்கள். யாரிடமும் மிகக் கடுமையாக நடந்துகொள்ளமாட்டார்கள். ஒருசில 
விதிவிலக்குகள் எதற்கும் உண்டு. ஆனால் இன்றைக்கும் மேல்நாட்டினர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். உடன்பிறப்பே என்றாலும், அவர்கள் 
வீட்டிற்குச் சென்றால், முன்னரே அறிவித்து, அனுமதி வாங்கித்தான் செல்லவேண்டும். பெற்றவர்கள் கூடப் பிள்ளைகளிடம் காசுகொடுத்துச் 
சாப்பிடும் கதைகள் அங்கு உண்டு. எந்த விதியையும் யாருக்காகவும் விட்டுத்தரவோ, தளர்த்தவோ மாட்டார்கள். இது அன்றைக்கும் மேல்நாட்டார் 
குணமாக இருந்திருக்கிறது. இத்தகைய கண்டிப்புடன் கூடிய கடுமையைத்தான் வன்கண் என்று புலவர் குறிப்பிடுகிறார்.
	யவனர்கள் கலைத் தொழிலில் வல்லவர்கள். மிகவும் திருத்தமான முழுமை(perfection) கொண்ட சிலைகளை வடிப்பதில் 
கைதேர்ந்தவர்கள். ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் அவர்கள் வடித்த ஒப்பற்ற சிலைகள் இன்றைக்கும் காக்கப்படுகின்றன. சிலைகள் மட்டுமல்ல, 
கட்டடக் கலையிலும் மிக உயர்ந்த இடத்தை அடைந்திருந்தனர். எந்தப் பொருளையும் கலை உணர்வோடு மிக நேர்த்தியாகவும் செம்மையாகவும் 
செய்வதில் வல்லவர்கள். 

	யவனர், ஓதிம விளக்கின் - பெரும் 316,317
	யவனர் இயற்றிய வினை மாண் பாவை - நெடு 101

	என்று பிற இடங்களிலும் காணலாம். குறிப்பாக, கயிறுகளால் குடில்கள் (tent) அமைப்பதில் அவர்கள் சூரர்கள். அவர்களைக் கொண்டு 
மன்னனுக்கு அழகான ஒரு குடில் அமைக்கப்படுகிறது. இதனையே புனை மாண் நல் இல் எனப் புலவர் கூறுகிறார். 

	

	யவன வீரர்களின் போர்ப்பாசறைக் குடில், அவர்களின் தலைவனுக்கான அலங்கரிக்கப்பட்ட குடில் ஆகியவற்றின் மாதிரிப்படங்கள் 
இங்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய நல்ல இல்லம் தான் அன்றைய மன்னனுக்கும் உருவாக்கப்பட்டது போலும்.
	இவற்றோடு கூட புலித்தொடர் விட்ட புனைமாண் நல்லில் என்றும் புலவர் கூறுகிறார். இந்தப் ’புலித்தொடர் விட்ட’ என்பதற்கு 
விளக்கமான உரைகள் இல்லை. புலிச்சங்கிலி விடப்பட்ட என்று நச்சினார்க்கினியர் சொல்லிச் செல்கிறார். பாடலின் எல்லா அடிகளுக்கும் பொருள், 
கருத்துரை, அகல உரை என்று விளக்கமாகவும், விவரணமாகவும் எழுதுகின்ற பெருமழைப்புலவரும் ‘புலிச்சங்கிலி விடப்பட்டு’ என்று மட்டும் 
சொல்லிச் செல்கிறார். ஏனைய உரையாசிரியர்களும் இதனையொட்டியே இதற்குப் பொருள் கூறியிருக்கிறார்கள். வேறு விளக்கங்கள் இல்லை. 
திரு. இரகுநாதன் மட்டும் தனது ஆங்கில மொழிபெயர்ப்பில் ‘This is nowhere explained; probably the chain was made of linked parts in the 
likeness of tiger' என்று கூறுகிறார். 
	இந்தப் புலித்தொடர் என்பதற்கும்,யவன வீரர்களுக்கும் - குறிப்பாக உரோம வீரர்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கவேண்டும் எனத் 
தோன்றியது. இது பற்றிய தேடலில், புலிக்கண் கல் (tiger eye gem) என்ற ஆபரணக்கல்லான ஒரு விலையுயர்ந்த கல் ஒன்றைப்பற்றிய குறிப்பில் 
இந்தக் கல்லால் செய்யப்பட்ட அணிகலன்களை உரோமப் போர்வீரர்கள் அணிந்திருந்தனர் என்று அறியமுடிகிறது. ஆபரணக்கல் பற்றிய களஞ்சியம் 
(encyclopaedia of gems) ஒன்றில் ‘Tiger Eye is used for focusing the mind. It is said that Tiger Eye offers protection during travel, 
strengthens convictions and confidence. Roman soldiers wore tiger's-eye for protection in battle.' என்ற குறிப்பு காணப்படுகிறது. 

	

	எனவே, யவனர்களால் உருவாக்கப்பட்ட அந்தக் குடிலின் வாசலில், அவர்கள் தங்கள் நம்பிக்கைக்கு ஏற்றபடி, மன்னனின் பாதுகாப்பிற்காக
ஒரு புலிக்கண் சங்கிலியைத் தொங்கவிட்டிருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது. அது, முழுவதும் புலிக்கண் கல்லால் ஆன சங்கிலியாகவோ அல்லது 
ஒன்றிரண்டு புலிக்கண்கற்களைப் பதித்த தங்கச் சங்கிலியாகவோ இருந்திருக்கலாம். எனவே, இந்த மாதிரியான சங்கிலியைத் தான் புலவர் 
புலித்தொடர் என்று கூறியிருப்பார் எனக் கொள்ளலாம்.
	யவனர் வடித்த அந்த இல்லில் திருமணி விளக்கம் இருந்தது. அதுவும் யவனர் விளக்காக இருக்கலாம். 

	

	அன்றைய யவனர் வடித்த இரண்டு இரவு விளக்குகளின் மாதிரிகள் இங்கே உள்ளன. இவற்றைப் போல் அவ் விளக்கு இருந்திருக்கலாம்.
அரசனின் அந்த இல்லம் இரண்டு பகுதிகளால் ஆனது. நடுவில் திரைச்சீலையால் தடுக்கப்பட்டுள்ளது. அந்தத் திரைச்சீலைகளை, வேண்டுமானால் 
திறந்துகொள்ள வலுவான கயிறுகள் இருந்தன. இதையே புலவர், திண் ஞாண் எழினி வாங்கிய ஈரறைப் பள்ளி எனக் கூறுகிறார். இதனுள் 
நாவினால் பேசாமல் சைகையினால் பேசும் மிலேச்சர்கள் காவல் காத்து நின்றனர். அவர்கள் படம் என்று கூறப்படும் ஒருவித ஆடையை 
அணிந்திருந்தனர். இந்த உடை யவனரின் மெய்ப்பையினின்றும் வேறுபட்டதாக இருந்திருக்கவேண்டும். மிலேச்சர்கள் என்போர் இன்றைய 
பாக்கிஸ்தான் பகுதியில் உள்ள பெலுச்சிஸ்தான் என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பெலுச்சியர் என்ற சொல்லே மிலேச்சர் என்றானது 
என்றும் உரைகாரர் கூறுவர். 

	

	படத்தில் மிலேச்சம் என்று கூறப்படும் பலுச்சிஸ்தான் என்ற பகுதியும், அங்கு வாழும் சில பழங்குடி மக்களும் (tribes) காட்டப்பட்டுள்ளனர். 
இவர்களின் முழு அங்கியான ஆடையே படம் என்று கூறப்பட்டிருக்கிறது எனலாம். சிலர் வாயை மூடியுள்ளதையும் காணலாம். உடம்பின் உரைக்கும் 
உரையா நாவின் என்ற கூற்றின்படி பாடலில் கூறப்பட்டுள்ள மிலேச்சர் மொழி தெரியாத காரணத்தால் அல்லது வாயைத் துணியால் 
மூடிக்கொண்டதால் வாய் பேசாதவராக - சைகைகளில் மட்டும் பேசுபவராக இருந்திருக்கலாம்.