பத்துப்பாட்டு - சிறப்புக் காட்சிகள்


   1.திருமுருகாற்றுப்படை - அருவிக் காட்சி
   2.பொருநராற்றுப்படை - யாழ்க் காட்சி
   3.சிறுபாணாற்றுப்படை - திங்கள்மறைப்புக் காட்சி
   4.பெரும்பாணாற்றுப்படை - காடைப்பறவைக் காட்சி
   5.முல்லைப் பாட்டு - பாசறைக் காட்சி


   6.மதுரைக் காஞ்சி - மின்னல் காட்சி
   7.நெடுநல்வாடை - யவனர்க் காட்சி
   8.குறிஞ்சிப்பாட்டு - மலர்க் காட்சி
   9.பட்டினப்பாலை - வெண்மீன் காட்சி
   10.மலைபடுகடாம் - இசைக்கருவிகள் காட்சி
 
பத்துப்பாட்டு - பத்துக் கட்டுரைகள்
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
                                              2.பொருநராற்றுப்படை - யாழ்க் காட்சி

						மணம் கமழ் மாதரை மண்ணி அன்ன


	பொருநன் என்பவன் போர்க்களத்திலோ, ஏர்க்களத்திலோ பாடி, அங்குள்ளோரை மகிழ்வித்துப் பரிசில் பெறுபவன். ஒரோவழி, ஓர் அரசனையோ, 
வள்ளலையோ பாடிப் பரிசில் பெறுவதும் உண்டு. 
	கரிகால் பெருவளத்தானைப் பாடி, அவனிடம் பரிசில் பெற்றுத் திரும்பும் ஒரு பொருநன், வழியில் தன்னைப் போன்ற இன்னொரு 
பொருநனைக் கண்டு, காவிரி பாயும் சோழநாட்டுக் கரிகால் மன்னனைப் பாடி, அவனிடம் தான் பெற்ற பரிசில் விபரத்தைக் கூறி, அவனிடம் 
வழிப்படுத்துவதாக அமைந்த பாடல் இது. இதனைப் பாடியவர் புலவர் முடத்தாமக் கண்ணியார். இவர் ஒரு பெண்பாற்புலவர் என்று கூறுவாரும் உண்டு.
	இப்பாடலில் காவிரியின் வெள்ளச் சிறப்பு, சோழநாட்டு மக்களின் வாழ்க்கை முறை, அந்நாட்டு வளமும், அழகும், கரிகால் மன்னனின் 
வெற்றிச் சிறப்பு, கொடைச் சிறப்பு ஆகியவை விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.
	பாட்டின் தொடக்கத்தில் இந்தப் பொருநர்கள் வைத்திருக்கும் யாழ் என்னும் இசைக்கருவியைப் பற்றிய விரிவான செய்திகள் அழகுற 
விவரிக்கப்பட்டுள்ளன.

	
	
	யாழ் என்பது ஒரு நரம்பிசைக் கருவி. அது பல வடிவங்களில் இருந்துள்ளது. அதன் உருவத்தைப் பொருத்து அதிலுள்ள நரம்புகளின் 
எண்ணிக்கை வேறுபடும். பேரியாழ் (21 நரம்புகள்), மகரயாழ் (19 நரம்புகள்), சகோட யாழ் (14 நரம்புகள்), செங்கோட்டு யாழ் (7 நரம்புகள்) என யாழ் 
நான்கு வகைப்படும். மேலும் இந்த யாழை வாசிக்கும் மக்கள் வாழும் நிலப்பகுதியின் பெயராலும் அது அழைக்கப்படும். மலைப்பகுதியும், 
மலைப்பாங்கான பகுதியும் குறிஞ்சி நிலம் என்று அழைக்கப்படும். இதன் மக்கள் வாசிக்கும் யாழ் குறிஞ்சி யாழ் எனப்படும். மழையும் வேறு வளமும் 
இல்லாத நிலம் பாலை எனப்படும். பாலை நில மக்கள் வாசிக்கும் யாழ் பாலை யாழ் எனப்படும். பண்டைய நாட்களில் ‘இராகம்' என்பதை ‘பண்' என்று
அழைப்பர். இதுவும் குறிஞ்சிப்பண், பாலைப்பண் என்று பல்வேறு வகைப்படும்.
	யாழ் இன்றைக்கு நம்மிடம் இல்லை. அதன் பரிணாம வளர்ச்சிதான் வீணை என்று கூறுகிறார்கள். யாழைப் பற்றி இலக்கியங்களில் 
காணப்படும் குறிப்புகளையும், சில செவி வழிச்செய்திகளையும் வைத்து, கற்பனையில் உருவாக்கப்பட்ட பலவகையான யாழ் வகைகளை 
இணையதளங்களில் காணலாம்.

	யாழின் உறுப்புகள்

	யாழின் உறுப்புகளாகப் புலவர் இங்கே குறிப்பிடுவன: பத்தல், தோல், போர்வை, ஆணி, தண்டு, வார்க்கட்டு. முதலில் யாழைப்பற்றிய 
இவரது வருணனையைப் பார்ப்போம்.

	1. குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல்	
	2. விளக்கு அழல் உருவின் விசியுறு பச்சை
	3. எய்யா இளம் சூல் செய்யோள் அம் வயிற்று
	4. ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல
	5. பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை
	6. அளை வாழ் அலவன் கண் கண்டு அன்ன
	7. துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி
	8. எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி	
	9. அண்நா இல்லா அமைவரு வறு வாய்	
	10.பாம்பு அணந்து அன்ன ஓங்கு இரு மருப்பின்
	11.மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும்	
	12.கண்கூடு இருக்கை திண் பிணி திவவின்
	13.ஆய் தினை அரிசி அவையல் அன்ன
	14.வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்
	15.கேள்வி போகிய நீள் விசி தொடையல்
	16.மணம் கமழ் மாதரை மண்ணி அன்ன
	17.அணங்கு மெய் நின்ற அமைவரு காட்சி - பொரு 4 - 20

1. குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல் - (மானின்)குளம்பு (பதிந்த) இடத்தைப் போன்று பகுக்கப்பட்ட (இரண்டு பக்கமும் தாழ்ந்து நடுவுயர்ந்த)பத்தல்;
(குளப்பு=குளம்பு; கவடு=பிளவு; பத்தல்=யாழின் குடம் போன்ற ஓர் உறுப்பு)

வீணைக்குக் குடம் போன்றது யாழின் பத்தல். அதன் மேல்பகுதி, மானின் குளம்புத் தடம் போன்று இருபுறமும் தாழ்ந்து, நடுவில் உயர்ந்து இருக்கும். 
குடம் போன்ற இந்த அமைப்பு, ஒரே வார்ப்பாகச் செய்யப்பட்டு, மேல்பக்கம் ஒன்றுசேர்க்கப்பட்டுள்ளது. எனவே, அதன் பொருத்துவாய் சற்று 
உயர்ந்திருக்கும். இதற்குப் புலவர் கையாண்டுள்ள உவமை கருத்தைக் கவர்கிறது. மான் குளம்புத் தடத்துக்கும் யாழின் பத்தலின் மேல்பாகத்துக்கும் 
என்ன ஓர் ஒப்புமை, பாருங்கள்!

	

2. விளக்கு அழல் உருவின் விசியுறு பச்சை - விளக்குப் பிழம்பின் நிறமுடையதும் இறுக்கமாக இழுத்துப் போர்க்கப்பட்டதும் ஆகிய தோல், 
(அழல்=தீக்கொழுந்து; விசி=இறுகக் கட்டுதல்; பச்சை=தோல்)

குடம் போலுள்ள பத்தலை, விளக்கின் நெருப்பு நிறத்தைப் போன்ற பொன்னிறத் தோலினால் இழுத்து இறுக்கமாக மூடுவார்கள். 

3,4,5 -  எய்யா இளம் சூல் செய்யோள் அம் வயிற்று ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை-
அறியப்படாத இளைய கருவையுடைய சிவந்தவளின் அழகிய வயிற்றின்மேல் மென்மையான மயிர் ஒழுங்குபடக் கிடந்த தோற்றத்தைப் போல, 
இரண்டு தலைப்பையும் கூட்டித் தைத்த, பொதியைக் கொண்ட போர்வை

(எய்யா=மற்றவரால் அறியப்படாத; செய்யோள்=சிவந்த மேனியள்; ஐது=மெல்லிய; பொல்லம் பொத்துதல்=இரண்டு தலைப்பினையும் 
இழுத்துச் சேர்த்து மூட்டுதல்; பொதி=மூடை; போர்வை=உறை)
	
	தோல் மீது பத்தலை வைத்து, தோலின் இரண்டு பக்கங்களிலும் உள்ள இரண்டு ஓரங்களையும் இழுத்துக் கட்டுவார்கள். இழுத்துக் கட்டப்பட்ட 
தோலில் வாய் பிளந்திருக்கும் நடுப்பகுதியை இறுக்கமாக இணைத்துத் தைப்பார்கள். அதுதான் பொல்லம் பொத்துதல். அப்போது அது ஒரு 
துணிப்பொதியைப் போலிருக்கும். இக்காட்சி, கருவுற்றிருக்கும் ஒரு இளம்பெண்ணின் வயிறைப் போல் இருந்ததாகப் புலவர் கூறுகிறார். இணைப்புத் 
தையல் அவள் வயிற்றின் நடுவில் இருக்கும் மெல்லிய மயிரைப் போலிருந்ததாம்.

	

	கருவுற்றுச் சிறிது காலமே ஆகியிருக்கும் பெண்ணின் வயிறு ஓரளவேதான் புடைத்திருக்கும் என்பதால் மற்றவர்கள் எளிதில் 
கண்டுபிடிக்க முடியாது. அந்த நேரத்தில்தான் வயிற்றின் நடுவில் உள்ள மயிர் ஒழுங்கு தெரியும் என்பதால் ‘எய்யா இளஞ்சூல்' என்று புலவர் 
கூறுகிறார். பத்தலை மூடிய தோல் பொன்னிறமானதால் செய்யோள் வயிறு என்கிறார். 

	

6,7. அளை வாழ் அலவன் கண் கண்டு அன்ன துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி - வளையில் வாழ்கின்ற நண்டின் கண்ணைக் கண்டது போன்ற
(இரண்டையும் சேர்க்கத் திறந்த)துளைகள் மறைய முடுக்கிய ஆணி (அளை=நண்டு வளை; அலவன்=நண்டு; துரப்பு=ஆணியை உட்செலுத்துதல்; 
தூர்தல்=துளைகளை மூடல்)
	போர்வையின் வாயை இருபுறமும் சேர்த்துத் தைப்பதற்குத் துளைகள் போடப்பட்டிருக்கும். இந்தத் துளைகளில் ஆணிகள் 
செருகப்பட்டிருக்கும். இந்த ஆணிகளின் தலை நண்டுக் கண்களைப் போல் இருந்தது.

	

8,9. எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி அண்நா இல்லா அமைவரு வறு வாய் - (அமாவாசை கழிந்த)எட்டாம் நாள் (தோன்றும்) திங்களின் வடிவில், 
உள்நாக்கு இல்லாத (நன்றாக)அமைதல் பொருந்திய வறிய வாய்,
(அண்நா=உள்நாக்கு; வறு வாய்=ஒன்றுமில்லாத வாய்)
	எட்டாம் நாள் திங்கள் ஏறக்குறைய அரைவட்ட வடிவில் இருக்கும். யாழின் பத்தர் ஒரு குடம் போன்று இருக்கும். அதன் வாய் வட்ட 
வடிவில் இருக்கும். ஒரு மர உருளியை எடுத்து, மயில் போலோ, யாளி போலோ அல்லது மீன் போலோ வடிவமைப்பார்கள். எனவே, அதன் வயிற்றுப்
பகுதி உருண்டு திரண்டு குடம் போல் இருக்கும். இதுவே பத்தல். இந்தப் பத்தல் உள்ளீடற்றதாக (hollow) இருக்கவேண்டும். எனவே, பத்தரின் 
மேற்பகுதியில் வட்டமாக ஒரு திறப்பு வைப்பார்கள். இதுவே அதன் வாய்.  இந்த வட்டத்தில் முழுவதுமாகக் குடையாமல், அதன் பாதியை மட்டும் 
ஆழமாக உளியால் குடைந்தெடுப்பார்கள். இதன் வழியாகவே மற்றப் பாதி மரமும் குடையப்படும். எனவே அந்தக் குடம் பாதி மூடப்பட்ட வாயைக் 
கொண்டதாக இருக்கும். திறந்திருக்கும் இந்த அரைவட்ட வாய்தான் எட்டாம் நாள் திங்கள் போலிருப்பதாகப் புலவர் கூறுகிறார். நமது வாயின் 
உட்பகுதியில் உள்நாக்கு அமைந்திருக்கும். ஆனால் இது உள்நாக்கு இல்லாத வெறும் வாய் என்ற புலவரின் கூற்று, அவர் இந்த உவமையை எவ்வளவு
கவனமாகக் கையாளுகிறார் என்பதையும் ஒரு நகைச் சுவை உணர்வோடு இதனைக் கூறுகிறார் என்பதையும் வெளிப்படுத்தும்.

	

	இந்தப் பத்தலைத்தான் தோலினால் மூடி, வாயைத் தைத்து உறை அமைப்பார்கள். இப்பகுதியில்தான் நரம்புகள் கட்டப்படும்.

10. பாம்பு அணந்து அன்ன ஓங்கு இரு மருப்பின் - பாம்பு தலையெடுத்தது போன்ற ஓங்கிய கரிய தண்டு,
(அண=தலையை உயர்த்து; அன்ன=போன்ற; இரு=கரிய; மருப்பு= விலங்கின் கொம்பு)
	பத்தலின் மேல், மாட்டுக் கொம்பு போன்ற ஒரு வளைவான தண்டு இருக்கும். இதுவே தலையை உயர்த்திய பாம்பு போல் இருப்பதாகப் 
புலவர் கூறுகிறார். இது பெரும்பாலும் கறுப்பாக இருக்குமாதலால் இரு மருப்பு எனப்பட்டது.

	

	இந்த உவமை எத்துணை மிகச் சரியாக ஒப்புமை ஆகிறது என்பதை படத்தின் மூலமாகக் கண்டு களியுங்கள்.

11,12. மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும், கண்கூடு இருக்கை திண் பிணி திவவின் - கருநிறப்பெண்ணின் முன்கையில் அணியப்பட்ட அழகிய 
வளையலை ஒத்ததும், (ஒன்றோடொன்று)நெருங்கி இருக்கின்றதும், திண்ணிய பிணிப்பையுடையதும் ஆகிய வார்க்கட்டு; 
(ஆய்=அழகிய; தொடி=வளையல்; கண்கூடு=நெருக்கமாக இரு; திவவு= யாழ்த் தண்டிலுள்ள நரம்புக்கட்டு)

	

	பத்தலிலிருந்து நரம்பை இழுத்துத் தண்டின் மேல்பகுதியில் கட்டுவார்கள். தண்டின் அப்பகுதி, ஒரு பெண்ணின் முன்கையைப் போலிருக்கும்.
அத் தண்டு கரிய நிறமாதலால், மாயோள் முன்கை என்றார் புலவர். சில பெண்கள் கைகளில் ஒன்றிரண்டு வளையல்களே அணிந்திருப்பர். ஆகையால் 
அவை இடம் விட்டு இருக்கலாம். ஆனால், யாழில் நிறைய நரம்புகள் இருப்பதால் அவை நெருக்கமாக அமைந்திருக்கும். கைவளையல்கள் ஓரளவு 
‘தொள தொள' என்றிருக்கும். ஆனால் இந்த நரம்புகள் அப்படி இல்லாமல் இறுக்கமாகக் பிணிக்கப் பட்டிருப்பதால் திண்பிணி திவவு என்றார்.

13,14,15. ஆய் தினை அரிசி அவையல் அன்ன வேய்வை போகிய விரல் உளர் நரம்பின் கேள்வி போகிய நீள் விசி தொடையல் -
ஆய்ந்தெடுத்த தினை அரிசியின் குற்றலைப் போன்ற (யாழ் நரம்பின் குற்றமாகிய) வேய்வை போக விரலால் அசைக்கும் நரம்பின் இசை முற்றுப் 
பெறுமாறு இழுத்துக்கட்டிய விசித்தலையுடைய தொடர்ச்சி
	
	ஆய் தினை என்பதற்கு, அழகிய தினை, (சிறு கல், சொங்கு போன்றவற்றைத் தேடிப் பொறுக்கி எடுத்து நீக்கி) ஆய்ந்தெடுத்த தினை அல்லது
மிகவும் நுணுகிய தினை என்றெல்லாம் பொருள்கொள்ளலாம். நெல்லுக்கு உமி போன்று, தினை போன்ற தானிய மணிகள் ஒரு மெல்லிய 
புறத்தோலால் மூடப்பட்டிருக்கும். 
	பழங்காலத்தில் அரவை இயந்திரங்கள் கிடையாது. எனவே, தானியங்களை, உரலில் போட்டு, உலக்கையால் குற்றி அத் தோலைத் தனியே 
பிரிப்பார்கள். பின்பு அதை அள்ளி, சுளகில் போட்டுப் புடைத்துத் தேவையற்ற பகுதியை நீக்குவார்கள், இன்றும் அவ்வாறு செய்பவர்கள் உண்டு. 
இப்போது இதனைக் கைக்குத்தல் அரிசி என்பர். அன்றைய நாட்களில் எல்லாமே கைக்குத்தல் அரிசிதான். இப்படி எடுக்கப்பட்ட தினையரிசியைத்தான் 
அவையல் என்கிறார் புலவர். உரலில் போட்டுக் குற்றுவது அவைப்பது ஆகும். அவ்வாறு அவைத்து எடுக்கப்பட்டதை அவையல் என்கிறோம். 
வேய்வை என்பது யாழ் நரம்பிலுள்ள குற்றம். மூளையிலிருந்து உணர்வுகளை எடுத்துச்செல்லும் நாளங்களை நரம்புகள் என்கிறோம். விலங்குகளின் 
உடலிலிருந்து எடுக்கப்படும் நரம்புகளைத்தான் யாழில் கட்டி மீட்டுவார்கள். அந்த நரம்புகளை நன்றாகத் தேய்த்துத்தேய்த்து வேண்டிய அளவுக்கு 
நுண்ணியதாக ஆக்குவார்கள். நரம்புகள் சிலவற்றில் அங்கங்கே சிறியதாகப் புடைப்புகள் இருக்கும். இவை சிறிய உருண்டைகளாக இருக்கும். இவற்றைப் 
பிசிர் அல்லது சிம்பு என்று கூறுவர். இவற்றைத்தான் வேய்வை என்கிறார் புலவர். இந்தப் பிசிர், தினையரிசியைப் போல் இருப்பதாகக் கூறும் புலவரின்
உவமைநயம் எண்ணி எண்ணி இன்புறத்தகுந்தது. பிசிர்தட்டிய நரம்புகளிலிருந்து வரும் ஓசை இனிமையுள்ளதாக இருக்காது. இவையுள்ள நரம்புகள் 
குற்றமுள்ள நரம்புகளாகும். எனவே நரம்புகளை நன்கு தேய்த்துப் பிசிர்களை அகற்றுவதையே, வேய்வை போகிய நரம்பு என்கிறார். உளர் என்பதற்கு, 
நீவு அல்லது கோது என்று பொருள். பறவைகள் ஈரத்தில் நனைந்து விட்டால், தங்கள் அலகுகளைச் சிறகுகளுக்குள் விட்டு நீவிவிடும். இதைக் 
கோதிவிடுதல் என்றும் கூறுவர். அவ்வாறே பொருநன் தன் யாழின் நரம்புகளைத் தடவிக்கொடுக்கிறான் என்பதனையே விரல் உளர் நரம்பின் 
என்கிறார் புலவர். ஏதேனும் ஒரு துறையை முற்றும் கற்றுணர்ந்தவர்களைத் துறைபோகிய புலவர் என்பர். கற்றுப் பெறும் அறிவு கல்விஞானம் ஆகும்.
கேட்டுப் பெறும் அறிவு கேள்விஞானம் ஆகும். இரண்டையும் பெற்றவர்களைத்தான் கல்வி, கேள்விகளில் சிறந்தோர் என்பர். இன்றைக்கும் கிராமத்துக்
கலைஞர்கள் தங்கள் இசையறிவை எந்த நூலையும் படித்துத் தெரிந்துகொள்வதில்லை. அன்றைய பொருநரும் அப்படியே. சிறுவயதிலிருந்தே 
பெரியோர்கள் நரம்புகளைக் கட்டுவதைப் பார்த்துப் பார்த்தே ஒருவர் நரம்புகளை எந்த அளவுக்கு இழுத்துக்கட்டவேண்டும் என்பதைத் 
தெரிந்துகொள்கிறார். விசி என்பது இறுக்கிக் கட்டுவதைக் குறிக்கும். தொடையல் என்பது தொடர்ச்சியான ஒரு அமைப்பு. இன்றைக்கிருக்கும் 
நரம்பிசைக்கருவிகளில் ஒவ்வொரு நரம்புக்கும் ஒரு திருகு இருக்கும். அதன் மூலம் ஒரு நரம்பை மட்டும் இறுக்கவோ, தளர்த்தவோ முடியும். ஆனால்,
யாழில், ஒரே நரம்பைக் கீழேயுள்ள துளைகளில் கோத்தும், மேலேயுள்ள கொம்பில் சுற்றியும் தொடர்ச்சியாக இழுத்துக்கட்டுவார்கள். இதைத்தான் 
புலவர், கேள்வி போகிய நீள் விசி தொடையல் என்கிறார். 

16. மணம் கமழ் மாதரை மண்ணி அன்ன அணங்கு மெய் நின்ற அமைவரு காட்சி -  (புது) மணக்கோலப் பொலிவுள்ள மாதரை ஒப்பனைசெய்து 
கண்டாற் போன்ற, (யாழ்க்குரிய) தெய்வம் நிலைத்துநின்ற (நன்கு)அமைந்து வரப் பெற்ற தோற்றம்,
	மொத்தத்தில், மணக்கோலம் பூண்ட ஒரு பெண்ணை ஒப்பனை செய்தது போல அந்த யாழ் விளங்கியது. மண்ணுதல் என்பது 
அலங்கரித்தலைக் குறிக்கும். அணங்கு என்பது இங்கே இல்லுறை தெய்வத்தைக் குறிக்கும். அந்தத் தெய்வமே குடிகொண்டிருக்கும் யாழ் என்கிறார் 
புலவர். ஒப்பனை மிகச் சிறப்பாக அமைந்தால், ‘இன்று நன்றாக அமைந்துவந்திருக்கிறது' என்று இன்றும் நாம் கூறுவது வழக்கம். அவ்வாறு நன்றாக 
அமைந்துவந்த தோற்றம் என்பதனையே அமைவரு காட்சி என்கிறார் புலவர். பல சொற்களின் நேர்ப்பொருள்கள் தமிழில் காலங்காலமாக மாறாமல் 
இருக்கின்றன. சில சொற்றொடர்கள் தங்களுக்குரிய நேர்ப்பொருளோடு கூடுதலான பொருளையும் கொண்டிருக்கும். அந்தப் பொருள் காலங்கள்தோறும் 
மாறலாம் அல்லது சில ஆண்டுகளில் மறைந்துபோகலாம். ஆனால் வெகுசில சொற்றொடர்களே காலங்காலமாகத் தம் குறிப்புப் பொருளையும் 
சுமந்துகொண்டு நிலைத்து நிற்கின்றன. அத்தகைய சொற்றொடர்களில் இதுவும் ஒன்று.

	ஒரு யாழின் பல உறுப்புகளையும் புலவர் மிகவும் அழகாக விளக்கியிருப்பது அந்த யாழையே நம் கண்முன் நிறுத்துவது போலிருக்கிறது. 
இப்போது நாம் இழந்துவிட்ட யாழை மீட்டுருவாக்கம் செய்வதற்கு இந்த வருணனை மிகவும் உதவியாக இருக்கும்.